நாகபட்டினத்தில் நான் வசித்தது ஒரு ஓட்டு வீட்டில். அன்றைய காலத்தின் வீடுகளுக்கே உரிய வடிவம். நடுவில் திறந்த சதுர வடிவிலான முற்றம் (முத்தம் என்று அழைக்கப்படும்). நான்கு பக்கமும் சுற்றி தாழ்வாரம், அதற்கு அடுத்து கூடம். பல வீடுகளில் கூடமும் நான்கு பக்கங்கள் இருக்கும். ஆனால் எங்கள் வீட்டில் இரண்டு பக்கத்தில் மட்டும்தான் இருந்தது. வீடு வடக்கு தெற்கானது. தெற்கு பார்த்த வாசல், வடக்கில் கொல்லை. கூடம் கிழக்கிலும் மேற்கிலும்தான். கூடத்தின் இரு முனைகளிலும் அறைகள். வட எல்லைகளில் அச்சாக இரு பக்கமும் சமையலறை போன்ற பகுதி. அறை என்றால் இரட்டை அறையானது. சமையல் அறைக்கு முன்பகுதி அறைக்கு காமிரா அறை என்று பெயர். அங்குதான் அரிசி டின் இருக்கும். பெரிய இரும்பு டின். அங்குதான் ஆராதனைக்குரிய பெருமாள் விக்கிரகங்களும் சாளக்ராமங்களும் இருக்கும்.
வாசலின் இரு பக்கமும் திண்ணைகள் உண்டு. எங்கள் வீட்டில் ஒரு பக்கம் திண்ணை சற்று பெரிதாகவும், மற்றொரு பக்கம் திண்ணை சிறிதாகவும் ஆக்கப்பட்டிருந்தது. திண்ணை இழந்திருந்த பகுதி ஒரு அறையாக உருவெடுத்திருந்தது.
வாசலிலிருந்து பார்த்தால் முற்றமும், தொடர்ந்து தாழ்வாரப் பகுதியும், பிறகு ரேழி தாண்டி கொல்லையும், கொல்லையில் இருக்கும் கிணறும் நேராகத் தெரியும். கிணறைச் சுற்றி கொஞ்சமாக தரையில் சிமெண்டு போடப்பட்டிருக்கும். சுற்றி மண் தரையில் வாழை, தென்னை மரங்கள், சில பல செடிகள், அதில் முக்கியமாக செம்பருத்திச் செடி, பின் மதில் சுவர்கள். ஒரு கோடியில் கழிவறை இருக்கும். கழிவறைக்கு வந்து மலத்தை எடுத்துச் செல்ல துப்புறவுப் பணிப்பெண்கள் வர கொல்லைக் கதவு ஒன்றும் இருக்கும். எங்கள் வீடு தெருக்கோடி என்பதால் கொல்லைக் கதவு மேற்குச் சுவரில் இருந்தது.
ஆரம்பத்தில் திண்ணைப் பகுதியை உள்ளடக்கி வெளிக் கதவுகள் எவையும் கிடையாது. திண்ணை தாண்டிதான் கதவே. பின்னர்தான் திண்ணையை உடைத்து வெளியேயும் கேட் போட்டோம்.
கூடம், தாழ்வாரம், அறைகள் அனைத்தின்மேலும் ஓடுகள்தான். ஓடுகள் முற்றத்தில் வந்து சரியும். அதேபோல, வெளிச்சுவர்கள் மேலாகவும் சரியும். எனவே நடுவே சுமாராக, கூடமும் தாழ்வாரமும் பிரியும் இடத்தில்தான் மிக உயரமாக எழும்பி இருக்கும். நல்ல மழை பெய்யும்போது முற்றத்தில் நான்கு மூலைகளிலிருந்தும் நீர் ஒரு பரவளையப் பாதையில் வந்து கொட்டும். மழை மிகவும் கடுமையாக இருக்கும்போது மூலை விட்டத்தின் இரு பக்கங்களிலிருந்தும் கொட்டும் தாரைகள் ஒன்றை ஒன்று தொடும் அளவுக்குப் போய்விடும்.
வீட்டின் கூரை ஓடுகளால் ஆனது. கூரையைத் தாங்குவது மரத்தால் ஆன தூண்களும் உத்தரங்களும். உத்தரங்களுக்குக் குறுக்கே மர ரீப்பர்கள் அடிக்கப்பட்டு, அவற்றின்மீதுதான் ஓடுகள் உட்காரவைக்கப்படும். கடுமையான புயல் வீசும்போது ஓடுகள் அப்படியே பறந்துவிடும். நல்ல மழை பெய்தால், என்னதான் ஓடுகள் நெருக்கமாக இருந்தாலும் தண்ணீர் ஒழுக ஆரம்பித்துவிடும்.
சுவர்கள் செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டவையே. செங்கற்களை காரையில்தான் பதிய வைப்பார்கள். மேல் பூச்சுக்கு மட்டும்தான் சிமெண்ட். ஆரம்பகாலத்தில் இவை அனைத்தும் களிமண்ணாலேயே பிணைக்கப்பட்டு, சுவரில் பூசுவதும் களிமண்ணாகவே இருந்திருக்கவேண்டும். பின்னர் காரை (சுண்ணாம்பு) பயன்பட்டிருக்கவேண்டும். பிறகு சிமெண்ட் கொஞ்சம் கொஞ்சமாக நுழைய ஆரம்பித்துள்ளது. நான் வசித்த வீட்டில் தரையும் சுவர் மேல்பூச்சும் சிமெண்ட்தான். தரை வழவழ என்று இருக்காது. சொரசொரப்பாகவே இருக்கும். கீழே விழுந்து முட்டியைப் பேர்த்துக்கொண்டால் அப்படியே வழட்டிவிடும். சில பகுதிகளில் சிமெண்ட் பால் ஊற்றி, அதில் சில வண்ணங்களைச் சேர்த்துக் குழைத்து பூசியிருப்பார்கள். அங்கே தண்ணீர் தரையில் சிந்தியிருந்தால் வழுக்கும்.
வாசல்கள் எல்லாமே மரத்தால் ஆனவை. சிக்கல் என்னவென்றால் முழுவதுமான ஃபிரேமும் மரத்தால் ஆனதால், தரையில் நிலப்படி இருக்கும். சிறுவர்கள் தடபுடவென்று ஓடமுடியாது. நன்கு தடுக்கிவிடும். நான் ஒருமுறை கீழே விழுந்து தாவாங்கட்டையைப் பேர்த்துக்கொண்டிருக்கிறேன். அப்போது ஒரு பல் அடிவாங்கியது, இன்றும் தனி வண்ணத்தில் தெரிகிறது. தாடையிலும் ஒரு பெரிய தழும்பு உண்டு.
அதேபோல வாசலை ஏதோ நாலடிக்காரர்கள் உள்ளே நுழைவதற்காக மட்டுமே வைத்திருப்பார்கள். குனிந்துதான் உள்ளே நுழையவேண்டும். அதிலும் நான் வளர்ந்தபின் மண்டையை உடைத்துக்கொண்டிருக்கிறேன்.
கொஞ்சம் கொஞ்சமாக, நான் வசிக்கும்போதே என் வீட்டில் பல மாற்றங்கள் நிகழந்தன. ஒட்டுமொத்தமாக இடித்துவிட்டு வேறு கட்டடத்தைக் கட்டவில்லை. அந்த அளவுக்கு என் தந்தை சம்பாதிக்கவில்லை. கொல்லைத் தோட்டத்தில் ஒரு பகுதி அழிக்கப்பட்டு, சமையல்கட்டுடன் சேர்க்கப்படு, என் தாய்க்குப் பிடித்தமான அளவுக்கு சமையலறை விரிவாக்கப்பட்டது. புதிதாக வாங்கப்பட்ட கேஸ் அடுப்பு, பின்னர் வந்துசேர்ந்த கிரைண்டர், மிக்ஸி (ஆனால் நாகபட்டினத்தில் நாங்கள் இருந்தவரை கடைசிவரை ரெஃப்ரிஜிரேட்டர் வரவேயில்லை) ஆகியவற்றுக்கும், அப்போதும் தேவைப்பட்ட அம்மி, கல்லுரல் ஆகியவையும் அந்தச் சமையல் அறையில் நுழைந்தன. அதற்குமுன் இருந்த சமையலறையில் தேள்கள் குடித்தனம் இருக்கும். ஓடுகள் விறகடுப்பின், கரி அடுப்பின் கரியால் அண்டக்காக்கை நிறத்தில் இருக்கும். ஆனால் சமையலறை விரிவாக்கத்தின்போது அந்த இடம் ‘ஒட்டப்பட்டது’.
ஒட்டு என்றால் நடுவில் உத்தரங்கள் போட்டு, குறுக்காக பல மரக்கட்டைகளை வைத்து, ஒரு ஓரத்திலிருந்து நன்கு சலித்த சுண்ணாம்பில் ஒட்டப்பட்ட பட்டையான சுட்ட ஓடுகளை ஒட்டிக்கொண்டே வருவார்கள். பிறகு மேலும் கீழும் சிமெண்ட் பூசப்படும். நாங்கள் இருந்தவரை நாகப்பட்டினம் வீட்டில் ரீஇன்ஃபோர்ஸ்ட் காங்கிரீட் வரவில்லை. இப்போதெல்லாம் தூண்களும் காங்கிரீட், உத்தரங்களும் காங்கிரீட். செங்கற்களுக்கு இடையில் சிமெண்ட், சுவரின் மேல்பூச்சு சிமெண்ட். தரையில் டைல்ஸ் அல்லது கிரானைட் அல்லது மார்பிள் அல்லவா? அப்போதெல்லாம் மொசாயிக் என்ற தொழில்நுட்பம் நுழைந்திருந்தது. தரையில் எதையோ பதித்து, வழவழ என்று இழைத்துக்கொட்டுவார்கள். பிறகுதான் அது அவுட் ஆஃப் ஃபேஷன் ஆனது.
வீட்டில் வேலை நடக்கும்போதெல்லாம், தலைமைக் கொத்தனார், தலைமைத் தச்சர், அவர்கள்கீழே வேலை செய்யும் பல வேலையாட்கள், சித்தாள்கள், இடை இடையே அவர்கள் வேலையை நிறுத்திவிட்டு, ஒருவரை அனுப்பி வாங்கிக்கொண்டுவந்து தின்னும் வடை, குடிக்கும் டீ, ஒதுங்கிச் சென்று அடித்துவிட்டுவரும் பீடி என்று ஜெயகாந்தன் கதைப் பின்னணியில் இருக்கும். தச்சர்கள் வேண்டிய உத்தரங்களை, ரீப்பர்களை, தூண்களை உருவாக்குவார்கள். நமக்கு வேண்டும் என்றால் உட்கார நாற்காலிகள், மேஜைகளையும் செய்துதருவார்கள். அலமாரிகளைச் செய்வார்கள், ஜன்னல்களுக்கான கதவுகளைச் செய்வார்கள். பிறகுதான் காங்கிரீட் ஸ்லாப்கள் அமைக்கப்பட்டு ராட்சச ஸ்டோரேஜ் இடங்கள் உருவாக ஆரம்பித்தன. தச்சர்கள் காணாமல் போக ஆரம்பித்தனர்.
நாகபட்டினத்தின் உப்புத் தண்ணீரைக் கொண்டு செய்த சுவர்களும் தரைகளும் மழைக்காலத்தில் ஊற ஆரம்பித்துவிடும். அப்போதெல்லாம் வீடு கட்ட நல்ல தண்ணீர் கொண்டுவர வழியே இல்லை. இப்போது ஒருவேளை சாத்தியமோ என்னவோ. மழைக்காலத்தில் தரையில் சாக்குகளை விரித்துவைப்பது ஒன்றுதான் வழி. மேலிருந்து ஒழுகும் நீரையும் எடுத்துக்கொள்ளும், கீழிருந்து ஊறும் நீரையும் எடுத்துக்கொள்ளும்.
மார்கழி மாதத்தில் என்னவோ பெரிய குளிர் என்று என் தந்தை சாக்குப் படுதா கொண்டு முற்றத்தின் திறந்த வெளியை எல்லாம் மறைப்பார்.
எந்தக் கோடையிலும் எங்களுக்கு மின்விசிறி தேவைப்பட்டதே கிடையாது. நாங்கள் பொதுவாக கூடத்திலோ தாழ்வாரத்திலோதான் படுத்திருப்போம். மிகக் கடுமையான கோடையில் விசிறி கொண்டு விசிறிக்கொண்டே தூங்கவேண்டும். ஆனால் தூக்கம் வந்தபின் விசிறிக்குத் தேவை கிடையாது. சிறு குழந்தைமுதல் கிழவர்கள்வரை அந்தக் கோடைக்குக் கஷ்டப்பட்டதாக நினைவில்லை. இப்போது ஏசி இல்லாமல் முடிவதில்லை.
***
ஏன் இந்தப் பெரிய நாஸ்டால்ஜிக் கட்டுரை? தொடர்கிறேன்.
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
16 hours ago
உங்களது கட்டுரை எனது தாத்தாவின் வீட்டை நினைவு படுத்தி விட்டது பத்ரி...
ReplyDeletemust read
ReplyDeletehttp://www.dinamalar.com/News_Detail.asp?Id=72473
கிட்டத்தட்ட இதே அமைப்புள்ள வீடுகள் சிலவற்றில் நானும் என் இளம்பருவத்தில் வாழ்ந்திருக்கிறேன். என் மூதாதையர் வீடும் இப்படித்தான் இருந்தது. ஆனால், பாகப் பிரிவினை செய்யும்போது வீட்டுக்கு நடுவில் குறுக்குச் சுவர் எழுப்பியிருந்தார்கள். ஒரே கிணற்றுக்கு நடுவிலும் குறுக்குச் சுவர் போகும். தேள் மட்டுமல்ல, எலித் தொந்தரவும் இப்படிப் பட்ட ஓட்டு வீடுகளில் அதிகம். பெரும்பாலும், ஓடுகள் நாட்டு ஓடுகளாக இருக்கும். சீமை ஓடுகள் பணக்கார வீடுகளில் மட்டும்தான் இருக்கும். ஸ்பெயினிலும், அமெரிக்காவிலும், சீமை ஓடுகளை மூரிஷ் டைல்ஸ் என்கிறார்கள். மெசபடோமியாவில் தோன்றிப் பின் உலகெங்கும் இந்த மூர் ரக ஓடுகள் பரவியிருக்கலாம். மழை பெய்யும் போது குடம் குடமாகப் பிடித்துக் கொண்டு தொட்டியில் கொண்டு போய் சேமித்துக் கொள்ளுவோம். இப்போது நினைத்தால் இந்த வீடுகளின் பரப்பளவு மலைப்புத் தருகிறது. எழுதுங்கள்.
ReplyDeleteNostalgic piece from an engineers point of view :) I think most of us would have lived / visited this type of a house in our childhood at some point in time.
ReplyDelete//திண்ணை தாண்டிதான் கதவே.//
ReplyDeleteஜெய்ஜாண்டிக் கதவுன்னு பெயர் பெற்ற நல்ல அகலமான நல்ல மொத்தமான அளவில் கதவுகள்
//அதில் சில வண்ணங்களைச் சேர்த்துக் குழைத்து பூசியிருப்பார்கள்.//
பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் பூக்கள் மற்றும் சிமெண்ட் கலர் சிலர் வீடுகளில் காவி நிறம் மற்றும் வெள்ளை நிறம் கலந்தது
நாகப்பட்டினம் என்றில்லை பழைய தஞ்சை மாவட்ட எல்லைக்குள் இதுதான் டிபிகல் வீடு :)
இப்போதும் கூட நகரங்களில் சில இடங்களிலும் கிராமங்களில் பல இடங்களிலும் இந்த வீடுகள் இருக்கின்ற கொஞ்சம் கொஞ்சமாய் தன் ரூபத்தினை இழந்து கொண்டிருக்கின்றன யாருக்கும் அதே வீட்டினை புதுப்பிக்கும் எண்ணம் இல்லை இடித்து வேறு வகையில் கட்டவே விரும்புகின்றனர்!
எனக்கு இப்படி ஒரு பழைய வீட்டினை - நம்ம தஞ்சை ஸ்டைல் - வாங்கி சீர் செய்து அதில் இருக்கவேண்டும் என்பது பெருத்த ஆசை :)) சொல்லாமல் மிஸ் செய்ததுன்னு பார்த்தா முற்றத்து துளசி மாடம்,தண்ணீர் வெளியேறும் சாளரம்,புகைப்போக்கி,தண்ணீர் கிணற்றிலிருந்து சமையல்கட்டிற்கு கொண்டு வர ஒரு தொட்டி போன்ற அமைப்பு (கொல்லைபக்கம் தண்ணீர் மொண்டு மொண்டு ஊத்தி விட அதை சமையலறையில் புடிச்சுக்குவாங்க) திண்ணையில் படுத்தால் தலை வைக்க வசதியாக ஒரு தலையாணை அமைப்பு ஆஹா இன்னும் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே :))))
மின்சாரம் இல்லாதபோது, முற்றத்தின் ஓரத்தில் இருக்கும் ஏதாவது ஒரு தூணில் சாய்ந்துகொண்டு ஏற்றிவைத்த காடா விளக்கில் உருவாகும் கரி உருளைகளைத் தட்டிவிடுவது ஒரு சுகம்..அதுவும் அந்த நீலா தெருவில்...!!
ReplyDelete//
ReplyDeleteஏன் இந்தப் பெரிய நாஸ்டால்ஜிக் கட்டுரை? தொடர்கிறேன். //
ஏதாவது வீடு கட்டும் ப்ராஜக்ட் ஆரம்பித்திருக்கிறீர்களா? :-)
ராமதுரை எழுதியது
ReplyDeleteஅந்தக் காலத்து வீடு பற்றி மிக நுணுக்கமாக வருணித்திருக்கிறீர்கள். சிறந்த நினைவாற்றல். அக் காலத்து வீடுகளை இக் காலத்து பாஷையில் வருணிப்பதானால் அவை கிரீன் ஹவுஸ். கோடையில் மின் விசிறி தேவைப்படவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். வீடுகள் வாசலிலிருந்து புழற்கடை வரை நீண்டு இருக்கும். காற்றோட்ட்த்துக்கு நல்ல ஏற்பாடு. மேலே ஓடுகள் என்பதால் வீட்டின் உள்ளே வெப்பம் இறங்கும். ஆனால் முற்றத்தில் உள்ள திறப்பு வழியே வெப்பம் அனைத்தும் மேலே சென்று விடும். சில வீடுகளில் இரண்டு மூன்று முற்றம் உண்டு.பின்னர் கட்டப்பட்ட தார்சு போட்ட வீடுகளில் வெண்டிலேட்டர்கள் இருந்தன. அதன் வழியே வெப்பம் வெளியேறியது. இந்தக் காலத்து வீடுகள் வெப்பம் வெளியேற வெண்டிலேட்டர் கூடக் கிடையாது.ஆகவே தான் மின் விசிறி ஏசி தேவை. நாம் இருப்பது வெப்ப மண்டலம்.சொல்லப்போனால் குடிசைகளில் உள்ளது போல ஓலைக்கூரை தான் சாலச் சிறந்தது. முன்னர் சென்னை நகரில் இருந்த சேரிகளில் நிறைய மரங்கள் இருந்த இடங்களில் மர நிழலில் குடிசைகளில் மக்கள் வாழ்ந்தார்கள். இரவில் படுக்க மட்டும் தான் குடிசை. மற்ற நேரங்க்ளில் திறந்த வெளியில் மர நிழலில் தான் அம்ர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். யாரும் யாருக்கும் தெரியாமல் எதுவும் செய்ய முடியாது.எல்லோரைப் பற்றியும் எல்லோருக்கும் தெரியும். ஆகவே தப்பு தண்டா குறைவு. குற்றங்கள் குறைவு. அன்னியர் யாரும் உள்ளே வந்து விட முடியாது. வயதுப் பெண்களுக்கு நல்ல பாதுகாப்பு. இளைஞர்கள் பெரியோருக்குத் தெரியாமல் தவறு செய்ய வாய்ப்பு குறைவு.
நீங்கள் வருணித்த மாதிரியிலான அந்தக் காலத்து வீடுகள் ஸ்டிரீட் ஹவுஸ்-- எப்போதும் திறந்தபடி தான் இருக்கும். இந்தக் காலத்து பிளாட்ஸ் மாதிரி எப்போதும் மூடியபடி இராது.திண்ணைகள் மல்டி பர்ப்பஸ் . தெருவில் செல்வோர் சற்றே இளைப்பாறலாம். அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் நுழையாமலேயே சற்று அமர்ந்து தெரு விவகாரம், ஊர் விவகாரம் பேசலாம் Informal club மாதிரி. கம்யூனிடி லிவிங் என்பதற்கு ஓர் உகந்த ஏற்பாடு. தெருவில் யார் வீட்டில் என்ன நடந்தாலும் தெருவில் உள்ள அனைவருக்கும் தெரிய் திண்ணைப் பேச்சுகல் உதவின. இந்த்த் திண்ணைகள் மற்றவருக்கு ஓடிப் போய் உதவி செய்வதற்கு உதவின. இன்று எதிர் flatல் யார் இருக்கிறார் என்பது தெரியாது. எதிர் வீட்டில் இருப்பவன் ப்யங்கரவாதியாக, பெண் கடத்துபவனாக, கள்ளக் கடத்தல்காரனாகக் கூட இருக்கலாம்.
அந்தக் கால வீடுகளை அந்தக் கால வாழ்க்கையை நான் glorify செய்வதாக நினைக்க வேண்டாம். போதுமான சமூகப் பாதுகாப்பு இல்லாத அப்போதைய வாழ்க்கை முறைக்கு அவை பெரிதும் உதவின. தவிர, நமது கட்டுமான முறைகள் நமது பருவ நிலைமைகளுக்கு ஒத்த முறையில் முன்னேறாமல் போய்விட்டன என்பதை இப்போதைய நிலைமை காட்டுகிறது. நான் பல ஆண்டுகளுக்கு முன் மாயவரம் சென்ற போது அங்கு ஒரு வீட்டின் சுவர்கள் நல்ல செங்கல் கட்டுமானம். தரை நல்ல தரை ஆனால் மேலே கூரை ஓலை மற்றும் நார்களால் ஆனது. வீட்டுக்குள் மின் விசிறி இல்லாமலே குளுகுளு என்று இருந்தது,வெப்ப மண்டலப் பிரதேசத்துக்கு ஏற்ற கட்டுமான முறை பற்றி ஏதேனும் ஆராய்ச்சி நடந்துள்ளதா என்று தெரியவில்லை
ராமதுரை
ஐ நல்லா இருக்கே எழுதுங்க எழுதுங்க...
ReplyDeleteanubhavam arumai. enathu thathavin veedum ipppadith thaan irunthathu. Naan ezhutha ninaithathai ellam Neengal ezhuthi vitteergal.
ReplyDelete//ஏன் இந்தப் பெரிய நாஸ்டால்ஜிக் கட்டுரை? //
ReplyDeleteசென்னையில ஃப்ளாட் வாங்கிருக்கீங்க, சரியா?
நண்பரே
ReplyDeleteநன்றி !
ஏன்
இந்த மலரும் நினைவுகள்
கட்டுரை ?
நமது பாரம்பரிய கலாச்சார கை தொழில்கள்
நன்கு வளர வேண்டும் !
நல்ல ஆரம்பம் - நலமான முடிவு
அனைவரும் பயன் பெற வாழ்த்துக்கள் !
மீனாட்சிசுந்தரம் , சென்னை 83
”வீடு” பற்றிய அருமையான நினைவலைகள். உங்கள் வீடு ஒரு டிபிகல் தஞ்சை வீடு. எங்கள் வீடும் கிட்டதட்ட இதே மாதிரிதான். ஆனால்... முற்றம் கிடையாது. சில வருடங்களுக்கு முன்பு கிராமத்திலிருகும் எங்கள் வீட்டை இடித்து விட்டு மாடர்னாக வேறு வீடு கட்டலாம் என்று அண்ணன் கூறியபோது ”வேண்டாம்” என்று கூறிவிட்டேன். காரணம்.. என் அப்பா ஒவ்வொரு செங்கல்லாகப் பார்த்த்து பார்த்து கட்டிய வீடு. வீடு கட்டி முடித்து சில மாதங்கள் கழித்து நான் பிறந்தேன். எங்கள் வீட்டிற்கும் எனக்கும் ஒரே வயது!
ReplyDelete