ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் இன்று மூன்றாவது நாளாக மெட்ராஸ் வாரக் கொண்டாட்டத்தில், கே.ஆர்.ஏ நரசய்யா மெட்ராஸில் சாதிப் பிரச்னை என்பது பற்றிப் பேசினார்.
ஒரியண்டல் ரிசர்ச் மேனுஸ்க்ரிப்ட்ஸ் நூலகத்தில் அவர் கண்டுபிடித்த நான்கு ஆவணங்களிலிருந்து தொடங்குகிறார். அதில் இரண்டு ஓலைச் சுவடிகள், இரண்டு தாளில் அச்சடிக்கப்பட்டது. ஒரு ஆவணம் தெலுங்கில் எழுதப்பட்டது; மற்றவை மூன்றும் தமிழ். தவிர கிழக்கிந்திய கம்பெனி ஆவணங்கள், பிற புத்தகங்கள் ஆகியவற்றிலிருந்து தொகுத்து இந்த அரிய வரலாறை வழங்குகிறார் நரசய்யா.
சோழர் காலத்துக்கு முந்தைய ஆவணங்களில் வலக்கை, இடக்கை சாதிகள் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ராஜராஜ சோழன் காலத்தில்தான் நிரந்தரப் படை என்று ஒன்று உருவாகியுள்ளதாம். அதில் முன்னின்று போர் புரிந்தவர்கள் வலக்கையினர் என்றும் அவர்களுக்கு ஆயுதங்கள், தளவாடங்கள் தந்தவர்கள் இடக்கையினர் எனவும் குறிக்கப்பட்டுள்ளனர் என்பது நாகசாமியின் கூற்றாம். ஆனால் அப்போது ஒரே சாதியைச் சேர்ந்த சிலர் வலக்கையினர் என்றும் இடக்கையினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஆனால் நாளடைவில் சில சாதிகள் வலக்கை என்றும் சில சாதிகள் இடக்கை என்றும் குறிக்கப்பட்டுள்ளனர். சில சாதியினர் தங்களைத் தாங்களே வலக்கை அல்லது இடக்கை என்று கூறிக்கொள்வதும் நிகழ்ந்துள்ளது. சில சாதிகள் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு இடம் பெயர்வதும் நிகழ்ந்துள்ளது.
மெட்ராஸை கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கியதும், பெரும்பாலும் ஆந்திரப் பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் புதிய குடியிருப்புக்கு வந்துள்ளனர். ஏற்கெனவே மைலாப்பூர், திருவொற்றியூர், வேளச்சேரி போன்ற பகுதிகளில் தமிழர்கள் குடியிருந்தனர். 17-ம் நூற்றாண்டு முழுவதிலும் வெள்ளையர்களின் வெள்ளை நகருக்கு வெளியே கறுப்பர் நகரில் தமிழர்களும் தெலுங்கர்களும் குடியேறியுள்ளனர். இவர்களில் வலக்கை, இடக்கை சாதிகள் இரண்டுமே அடக்கம். இருவரும் தொடர்ந்து பூசல்களில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் ஆங்கில-பிரெஞ்சு யுத்தங்களுக்குப் பிறகு, 18-ம் நூற்றாண்டில் இந்தியர்கள் வசிக்கும் பகுதி அதிகரித்துள்ளது. முத்தயால் பேட்டை, பெத்தநாயக்கன் பேட்டை என இரு புதுப் பகுதிகள் உருவாகியுள்ளன. இதில் இடக்கையினர் ஒரு பகுதியிலும் வலக்கையினர் மற்றொரு பகுதியிலும் குடியேறியுள்ளனர். இருவரும் புழங்கும் பொதுப்பகுதியாக எஸ்பிளனேட் (பழைய கறுப்பர் நகரம் அல்லது ஜார்ஜ் டவுன்) இருந்துள்ளது. இந்தப் பகுதிகளைப் பயன்படுத்துவதில், குடியேறுவதில், கோயில் கொடை தொடர்பாக, யார் எந்த வர்ணக் கொடியை, எந்த மாதிரியான கோலைப் பயன்படுத்துவது என்பது தொடர்பாக, கோயில் மரியாதையைப் பெறுவது தொடர்பாக பிரச்னைகள் எழுந்துள்ளன.
18-ம் நூற்றாண்டு முழுவதிலும் கம்பெனியார் சமரசம் செய்துவைப்பதில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஒரு கட்டத்திலும் சமரசம் எடுபடவில்லை. இறுதியாக, கம்பெனியினர் கோயில்களைத் தமது ஆளுகைக்குள் கொண்டுவருகின்றனர். உடனடியாக 19-ம் நூற்றாண்டு ஆரம்பத்திலிருந்து இந்தப் பிரச்னைகள் முடிவுக்கு வருகின்றன. இன்றுகூட சில சாதியினர் தங்களை வலக்கை, இடக்கை என்று சொல்லிக்கொள்கிறார்களாம்.
மிகச் சுவையான வரலாறு. ஒளிப்பதிவைப் பார்க்க:
ஒளிப்பதிவைத் தரவிறக்கிக்கொள்ள
ஒலிப்பதிவை மட்டும் கேட்க
ஒலிப்பதிவைத் தரவிறக்கிக்கொள்ள
நாத்திகத்திற்கு தத்துவம் உண்டா?
9 hours ago
இது பற்றி பாலகுமாரனின் உடையாரிலும் சில குறிப்புகள் வரும் என நினைக்கிறேன்.
ReplyDeleteஆயுதங்கள், தளவாடங்கள் தயாரிப்பவர்கள் மேலும் சில சமூக அங்கீகாரங்கள் (தலைப்பாகை அணிவது, பூனூல் அணிவது) கேட்டு போராடுவதும், படைவீரர்கள் (ஏற்கெனவே இந்த அங்கீகாரங்கள் உள்ளவர்கள்) அதை எதிர்ப்பதுமாக சில சம்பவங்கள் படித்த நினைவு இருக்கிறது. வலக்கை, இடக்கை பிரிவு பற்றி எழுதியிருந்தாரா என்று தெரியவில்லை...
மிக்க நன்றி பத்ரி சார்! இந்த தகவல்களின் பின் புலத்துடன், வாத்தியாரின் "இரத்தம் ஒரே நிறம்" நாவலின் அறிமுக அத்தியாயங்களை மறுபடி படிக்க ஆவலை இருக்கிறது.
ReplyDeleteசென்னை கேசவ பெருமாள் கோயில் தானே esplanade பகுதியில் உள்ள பிரதான கோயில் ? அக்கோவில் மிகத் தொன்மையானதென நினைக்கிறேன்.
மற்றும், மதராசில், தெலுங்கு மொழி பேசும் மக்களை "கெண்டுகள்" எனக் குறிக்கும் பழக்கம் பற்றி ஏதேனும் சொல்லப்பட்டதா ?.