Thursday, September 15, 2011

யாருடைய மகாபாரதம்?

சஷிகாந்த் இயக்கியுள்ள ‘கேளாய் திரௌபதை!’ என்ற ஆவணப்படத்தைப் பார்க்கச் சென்றிருந்தேன். இரண்டு மணி நேரம் ஓடும் இந்தப் படம் மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது.

வட ஆற்காட்டில் செஞ்சி நகருக்கு அருகில் எச்சூர் என்ற கிராமத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை(யாவது) நடக்கும் மகாபாரதக் கூத்தை ஆவணப்படுத்தியுள்ளது இந்தப் படம்.

மகாபாரதக் கூத்து என்றால் ஒரு நாள் மாலையில் ஆரம்பித்து அன்று இரவே நடந்து முடிந்துவிடும் ஒன்றல்ல இது. 20 நாள்கள் தொடர்ந்து நடக்கும் கூத்து இது. காலையில் வில்லிபுத்தூராரின் பாரதம் பிரசங்கமாக நடக்கும். மாலை தொடங்கி இரவு முழுதும் தெருக்கூத்து பாணியில் அதே கதை அரங்கேறும். இதில் பார்வையாளர்களும் பங்கேற்பாளர்களே. அதே நேரம் கதைக்கு நாயகியான திரௌபதி அம்மனாக இருக்கும் கோவில் திருவிழாவும் சேர்ந்துகொள்கிறது.

படத் திரையிடலுக்குமுன் பேசிய ஆஷிஸ் நந்தி, இந்தியப் பாரம்பரியத்தில் மகாபாரதம் (+ ராமாயணம்) வகிக்கும் இடத்தைப் பற்றி விரிவாகவே பேசினார். அதைப் பற்றி முழுவதும் எழுதத் தொடங்கினால் அதுவே பெருமிடத்தைப் பிடித்துக்கொள்ளும் என்பதால் தவிர்த்துவிடுகிறேன். இரண்டே இரண்டு புள்ளிகளை மட்டும் சொல்கிறேன்.

யூ.ஆர்.அனந்தமூர்த்தியும் ஏ.கே.ராமானுஜனும் கன்னட ராமாயணம் பற்றிச் சொல்லும்போது அதன் சிறப்புத் தன்மையாக ஒரு குறிப்பிட்ட சம்பவத்தைச் சொல்வார்களாம். ராமன் காட்டுக்குப் போகக் கிளம்புகிறான். சீதை உடன் வருவதாகச் சொல்கிறாள். ராமன் மறுத்து, ‘நீயோ அரச குமாரி, காட்டு வாழ்க்கை கடினமானது, எனவே அரண்மனையில் சுகமாக இரு. நான் போய்விட்டு வந்துவிடுகிறேன்’ என்கிறான். சீதை அதை மறுத்துத் தானும் என் காட்டுக்கு வந்தே ஆகவேண்டும் என்பதற்குக் காரணங்களை அடுக்குகிறாள். இது அனைத்து ராமாயணங்களிலும் வருவதுதான். ஆனால் கன்னட ராமாயணத்தில் சீதை இந்தக் காரணங்களையெல்லாம் சொல்லிவிட்டு, மற்றுமொரு காரணத்தையும் சொல்கிறாளாம். ‘பிற ராமாயணங்களில் எல்லாம் சீதையும் உன்னுடன் காட்டுக்கு வருகிறாள். எனவே அதற்காகவாவது நீ என்னையும் உடன் அழைத்துச் செல்லவேண்டும்.’ “You are in the epic and the epic is in you” என்றார் நந்தி.

அதற்கு இணையாக செஞ்சி தெருக்கூத்தில் இரண்டு இடங்களைச் சுட்டலாம். திரௌபதியை துச்சாசனன் அவமதிக்கவேண்டும். ஆனால் அந்த ஊருக்கே திரௌபதி அம்மன்தான் கடவுள். அவளை வேசி என்றெல்லாம் அழைக்கவேண்டும். எனவே தன் பாத்திரம் தொடங்குமுன் துச்சாசனன் திரௌபதியிடம், இனி வரப்போகும் உரையாடலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறான். பிறகு, ‘ஏய் வேசி திரௌபதி’ என்று அவளை மிக அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் திட்டத் தொடங்குகிறான்.

19-ம் நாள் அன்று துரியோதனனும் பீமனும் சண்டை போடுகிறார்கள். ஊரெல்லாம் துரியோதனனை அடித்து விரட்டியபடி வருகிறான் பீமன். 20-ம் நாள், இறுதி நாள், நடைபெறப்போகும் சண்டைக்காக தரையில் துரியோதனன் மண் உருவத்தைக் கலைஞர்கள் உருவாக்கியபடி உள்ளனர். அந்த இடத்துக்கு வரும்போது பீமன் துரியோதனனிடம் சொல்கிறான்: ‘அதோ பார், உன் உருவத்தை அங்கே உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அங்குதான் நான் உன்னை நாளை வதம் செய்யப்போகிறேன். இன்று இது போதும்’ என்றுவிட்டுச் செல்கிறான்.

நந்தி சொன்ன மற்றொரு விஷயம் இந்தக் கூத்தில் எப்படி Brechtian distancing உடைந்துபோகிறது என்பது. பகாசுரனுக்கும் பீமனுக்குமான சண்டையின்போது பீமன் ஒரு வண்டியை எடுத்துக்கொண்டு ஊரெல்லாம் சுற்றி ஒவ்வொரு வீடாக உணவுப் பண்டங்களை வாங்கி எடுத்துவந்து சமைத்து உண்டு, பகாசுரனுடன் சண்டையிட்டு அவனைக் கொல்கிறான். இங்கு கிராம மக்கள் நாடகத்துக்கு உள்ளேயே வந்துவிடுகிறார்கள். கிராம மனிதர்கள் மட்டுமல்ல, கிராம மாடுகள்கூட. அஞ்ஞாதவாசத்தின்போது பாண்டவர்கள் அங்கு ஒளிந்துள்ளார்கள் என்பதை சகுனி யூகித்தவுடன் ஆநிரை கவர்தல் நிகழ்கிறது. அப்போது கிராம மாடுகளைக் கொண்டே இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.

காலை முதல் மாலை வரை நிகழும் கதைப் பிரசங்கத்தின்போது மக்கள் எந்த அளவுக்கு ஈடுபடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு சாமியே வந்துவிடுகிறது. திரௌபதி வஸ்திராகரணம் நிகழும்போது பல பெண்கள் நிலைகுத்தி சாமியாடுகிறார்கள். ஒரு கட்டத்தில் கதை சொல்பவருக்கே இந்நிலை ஏற்படுகிறது. தெருக்கூத்தின் இறுதிச் சண்டையில் பீமன் துரியோதனன் மண் உருவத்தின் தொடையைப் பிளக்கும்போது துரியோதனன் பாத்திரத்தை ஏற்பவர் மூர்ச்சையே ஆகி அந்த மண் சிலைமீதே விழுந்துவிடுகிறார். அவரை நான்கு பேர் அங்கிருந்து தூக்கிக்கொண்டு போகவேண்டியுள்ளது.

***

பீஷ்மர், கிருபர், சல்லியன், அஸ்வத்தாமா, கிருதவர்மன் ஆகிய ஐவராக அந்த ஊரின் ஐந்துபேர் தங்களை ஆவாகனம் செய்துகொண்டு கையில் காப்பு கட்டிக்கொள்வதுடன் நிகழ்வு ஆரம்பமாகிறது. குத்தை யார் செய்யப்போவது, பிரசங்கத்தை யார் செய்யப்போவது என்று நாள் குறித்து, ஆள் குறித்து ஆரம்பிப்பதிலிருந்து ஆவணப்படம் அந்த ஊருக்குள் நுழைந்து நடக்கும் அனைத்தையும் நமக்குக் காண்பிக்கிறது.

மாற்றி மாற்றிக் காட்சிரூபமாக பிரவசனத்தையும் தெருக்கூத்தையும் கொண்டுவருவதில் இயக்குனரும் எடிட்டரும் மிக அற்புதமாக இயங்கியுள்ளனர். தெருக்கூத்தில் வரும் ஒரு நிகழ்வு வில்லிபுத்தூரார் பாரதத்தில் இருப்பதில்லை. கர்ணன் தன் இறுதிப் போருக்குப் போகுமுன் தன் மனைவியான பொன்னீலி என்பவளுடன் ஓர் உரையாடலை நடத்தி அவளிடம் தாம்பூலம் பெற்றுச் செல்வதாகப் போகிறது தெருக்கூத்து. ஆனால் காலையில் கதை சொல்பவர் அதை விட்டுவிடவே கிராம மக்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். கதைசொல்லியும் அசராமல், தெருக்கூத்து என்பது பாமரர்களுடையது; அதில் இருக்கும் இடைச்செருகல்கள் எல்லாம் தவறு; பாண்டித்யம் உள்ள வில்லிபுத்தூரார் கதையில் இல்லை என்றால் இல்லைதான் என்று பதிலடி கொடுக்கிறார்.

மகாபாரதம் எனும் மாபெரும் கதையில் பாஞ்சாலி சபதம், அரவான் களப்பளி, கர்ண மோட்சம், அருச்சுனன் தபசு என்று நீண்டு செல்லும் ஒவ்வொரு பகுதியும் அற்புதமாகப் படத்தில் வந்துள்ளன. அருச்சுனன் தபசு ஒரு மாஸ்டர்பீஸ். இங்கே சிவனும் பார்வதியும் சாதாரண வேடர்கள் அல்லர். மாறாக தமிழகத்தின் நாடோடிக் குழுவான நரிக்குறவர்கள். இதில் நரிக்குறவச் சிவனாக வருபவர் கலக்கிவிடுகிறார். அவரது மொழியும் நடையுடை பாவனைகளும் அற்புதம். முக்கியமாக மொழி. முதல்முறையாக கதை சடாரென பாமர மொழிக்கு மாறுகிறது. அதுவரையில் தெருக்கூத்துக் கலைஞர்கள் அனைவருமே செந்தமிழில் பேசுகின்றனர். கட்டியக்காரர்கள் மட்டுமே பேச்சுவழக்கில் பேசுகின்றனர். ஆனால் நரிக்குறவச் சிவன் சர்வசாதாரணமாக கிராமப் பாமர வழக்கும் நரிக்குறவ வழக்கும் கலந்து பேசுகிறார்.

‘பன்னி சூத்துல அம்பு விட்டேன்’ என்பதிலிருந்து ஆரம்பித்து, பிய்த்து உதறுகிறார் சிவன். ‘ஓத்தா’ என்பதெல்லாம் சர்வசாதாரணமாகப் புழங்குகிறது. அதே நேரம் 60 அடிப் பனைமரத்தின் உச்சியிலிருந்து தவம் செய்துகொண்டிருக்கும் அருச்சுனனின் மொழி அதே சுத்தமான மொழி. நரிக்குறவச் சிவன், ‘உங்கம்மா ஊரையெல்லாம் ஓத்து’ (அல்லது கிட்டத்தட்ட இதைப் போன்று) என்று ஆரம்பிக்கும்போது அருச்சுனனோ, ‘என் தாய் எமனைப் புணர்ந்து தருமனைப் பெற்றெடுத்தாள், தேவேந்திரனைப் புணர்ந்து என்னைப் பெற்றெடுத்தாள்’ என்று அதனைச் சமனமாக்குகிறார். ஒரு கட்டத்தில் நரிக்குறத்தி பார்வதி, அருச்சுனனை ஒருவழி பண்ணிவிட முடிவெடுத்து அந்த 60 அடிப் பனை மரத்தின்மீது ஏற முயற்சி செய்ய, புடைவை அவிழ்ந்துகொள்ள, சிவன் ‘ஏய் மூடுடி, மூடுடி, போஸ்ட் பாக்ஸ் தொறந்துருச்சு’ என்று சொல்ல, ஸ்லாப்ஸ்டிக்தான் என்றாலும் அந்த நேரத்தின் தீவிரத்தை முற்றிலுமாக மாற்றிவிடுகிறது கூத்து. அடுத்த நொடிக்குள்ளாகவே நரிக்குறவன் போய் புலித்தோலை அரைக்கசைத்த சிவனாகக் காட்சியளித்து ஆயுதங்களை வழங்கி, கூத்து அடுத்த கட்டம் நோக்கிச் செல்கிறது.

***

ஒரு சிற்றூரின் மிக முக்கியமான ஒரு நிகழ்வை, தமிழகப் பாரம்பரியத்தின் மிக முக்கியமான ஒரு கூறை இந்த அளவுக்குச் சிறப்பாக ஆவணப்படுத்த முடியுமா என்றால் முடியும் என்று சொல்லிச் செய்துகாட்டியிருக்கிறார் சஷிகாந்த்.

ஆவணப்படத்தில் எம்.டி.முத்துக்குமாரசாமி, நா. முத்துசாமி ஆகியோர் இடையிடையே வருகின்றனர். விளக்கம் தருகின்றனர்.

நவீன நாடக இலக்கியம் அல்லது நாட்டார் கலையின் பல்வேறு வரைமுறைகளுக்குள் இந்தக் கூத்தை, இந்த 20 நாள் நிகழ்வை அடக்கிவிடமுடியுமா என்று தெரியவில்லை. பிரமிப்பு மட்டுமே மிஞ்சுகிறது.

ஒரு கிராமத்தின் எளிய மக்கள், தம் பாரம்பரியம் தொடரவேண்டும் என்பதற்காகவும் மழை பொழியவேண்டும் என்பதற்காகவும் நடத்தும் ஒருவித யாகம் இது. (மழையும் பிளந்துகட்டுகிறது.) அரவான் முகத்தையும் காளி சிலையையும் செய்து எடுத்துக்கொண்டு, அங்கீகரிக்கப்படாத வழியில் வரும்போது மழை கொட்டி, மரம் விழுந்து அவர்களை மீண்டும் பாரம்பரிய வழிக்கே துரத்துகிறது என்று ஆவணப்படத்தில் வருவது அமானுஷ்யமா அல்லது அகஸ்மாத்தானதா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

கிராம இளைஞர்கள் இந்தக் கூத்தைத் தொடர்ந்து நடத்துவோம் என்கிறார்கள். கூத்தாடிகள் எதிர்காலத்திலும் இருப்பார்களா என்ற கேள்விக்கு விடை சொல்லமுடியுமா?

***

குறைகள் என்று சொன்னால், கூத்து நடிகர்களின் பேச்சை ஒலிப்பதிவு செய்தது இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம். சப் டைட்டிலிங் இன்னும் தெளிவாக இருக்கலாம். சில இடங்களில் சப் டைட்டில் படிப்பதற்குள்ளாகக் கடந்துபோய்விடுகிறது. காட்சி மாற்றத்தின்போதும் பல இடங்களிலும் பின்னணியாக இருக்கும் மாமல்லபுரத்தின் மகிஷாசுர மர்த்தினி வதம் காட்சி பொருந்தவில்லை. மாமல்லபுரத்தின் அருச்சுனன் தபசு படத்தை அதற்குப் பதிலாகப் போட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

மற்றொன்று... இதே ஆவணப்படத்தைச் சுருக்கி, ஒரு 1 மணி நேர வெர்ஷன், ஒரு 30 நிமிட வெர்ஷன் என்று செய்வது நலம் பயக்கும். எத்தனை பேர் பொறுமையாக உட்கார்ந்து 2 மணி நேரம் பார்ப்பார்கள் என்று தெரியவில்லை.

***

இறுதியாக ஒரு வார்த்தை. கிராமத்தில் குறிப்பிட்ட சாதியினர் குறிப்பிட்ட நிகழ்வுகளை நடத்துகிறார்கள். முக்கியமான மூன்று சாதிகள்தான் (கோனார், வன்னியர், முதலியார்?) பெரும்பான்மைக் கூத்தை நடத்துவது என்றாலும் அனைத்து சாதியினருமே பங்கெடுக்கிறார்கள். ஆனால்... தலித்துகள்? சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஆநிரை கவர்தல் நிகழ்வை (கர்ண மோட்சம் என்கிறார் கவிராஜன். இருக்கலாம்.) நடத்துவது அவர்களாக இருந்துள்ளது. ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் அந்த வழக்கம் ஒழிந்துபோயுள்ளது.

இந்தச் செய்தியையும் போகிற போக்கில் காட்டிச் செல்கிறார் சஷிகாந்த். அதன்மீது எந்த ஒரு அவதானிப்பையும் செய்யாமல் ஆவணப்படுத்துவதோடு முடிக்கிறேன்.

12 comments:

  1. வருந்துகிறேன். முந்திய தினமே இத் திரையிடலுக்கு வந்துதீரவேண்டும் என்று நினைவிற் குறித்திருந்தேன். அப்படி ஒரு முக்கிய அலுவலும் நேற்று வந்து நேரவில்லை. எப்படி மறந்து போனேன்?

    பத்ரியின் முந்தைய பதிவுகளில் தொந்தரவு பட்டிருந்தேன் என்று சொல்லவும் வெட்கமாக இருக்கிறது. மன்னிக்கவும்.

    உங்கள் பதிவை வாசித்ததில், மிக அருமையான, முக்கியமான ஒரு படத்தைத் தவறவிட்டுவிட்டேன் என்று தெளிகிறது. 'உப பாண்டவம்' முன்னுரையில் எஸ்.ராமகிருஷ்ணன் இப் பகுதியில் நிகழும் இக் கூத்து பற்றிச் சொல்கிறார். ஆனால், உங்கள் இப் பதிவை வாசித்த பிறகுதான் அதன் வியப்பிற்குரிய பரிமாணம் ஓரளவுக்குப் புரிந்து... ஓ, சென்னையில் இருந்தும்... இந்த வாய்ப்பு யாருக்குக் கிட்டும்!

    ReplyDelete
  2. நல்ல பதிவு. நிகழ்ச்சியைத் தவறவிட்ட என் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளது. நன்றி. மிகவும் சரளமாக எழுதிச் செல்கிறீர்கள். எழுத்தாளரின் கருத்துக்களைத் துருத்தாமல் பாலில் சர்க்கரைபோலக் கலந்து சொல்லும் நுட்பம் இதில் கூடியிருக்கிறது.

    அன்புடன்

    அரவிந்தன்

    ReplyDelete
  3. இந்த ஆவணப்படம் இணையத்தில் கிடைக்கிறதா? ஆமெனில் சுட்டி கொடுங்கள். எனக்குப் பொதுவாகவே ஒரு சந்தேகம்.. எவ்வளவு கஷ்டப்பட்டு இப்படிப்பட்ட ஆவணப்படங்களை எடுக்கிறார்கள்..ஆனால் இவையெல்லம் மக்களைச் சென்றடைகிறதா? ஆமெனில், எப்படி?

    இணையப் பயன்பாட்டாளர்கள் தவிர பிறருக்கு எப்படி இந்த படங்கள் போய்ச் சேருகிறது எனத் தெரிந்துகொள்ள ஆவல்.

    ReplyDelete
  4. ராஜசுந்தரராஜன்: மீண்டும் இந்தப் படத்தை திரையிடலாம். சஷிகாந்த் தெரிந்தவர்தான். எனவே இதனை ஏற்பாடு செய்வது கடினமல்ல. ஆனால் குறுவட்டாக விற்குமாறு செய்யமுடியுமா என்று தெரியவில்லை. அதற்கான சந்தை உள்ளதா, சந்தைப்படுத்தலில் உள்ள சிக்கல்கள் ஆகியவற்றைப் பார்க்கவேண்டும். ஏதேனும் சானலில் இந்தப் படம் காட்டப்பட வாய்ப்புண்டா என்பதும் தெரியவில்லை.

    கானகம்: படமே இப்போதுதான் முதல் திரையைக் காண்கிறது. இதனை இணையத்தில் ஏற்றச் சாத்தியம் உண்டா என்று தெரியவில்லை. கேட்டுச் சொல்கிறேன்.

    ReplyDelete
  5. விடுபட்ட சிலவற்றை எழுதவேண்டும். முக்கியமாக இந்த கிராமத்தின் பெரிசுகள் முதல் பலருக்கும் மகாபாரதம் அத்துப்படியாக உள்ளது. யயாதி, புரு, என்று ஆரம்பித்து பல்வேறு பெயர்கள், பாத்திரங்கள், சம்பவங்கள் என்றெல்லாம் விளக்கமாகச் சொல்கிறார்கள்.

    பகாசுர வதத்துக்கு ஊர் மக்கள் அரிசி, பருப்பு கொடுப்பதுபோல திரௌபதி ஆடை உரிப்புக்குத் தேவையான புடைவைகளையும் மக்களே வழங்குகிறார்கள்.

    ReplyDelete
  6. நல்லது. இன்னொரு வாய்ப்பு வருமாயின் தவறவிடமாட்டேன். நன்றி.

    //விடுபட்ட சிலவற்றை எழுதவேண்டும்.// எழுத வேண்டும், விரிவாக.

    ReplyDelete
  7. அது ''ஆநிறை'' அல்ல, 'ஆநிரை'

    ReplyDelete
  8. ஆநிரை - சரி செய்துவிட்டேன். வேறு சில ஸ்பெல்லிங் தவறுகளையும் சரிசெய்துள்ளேன். நன்றி.

    ReplyDelete
  9. நல்ல பதிவு! Is it possible to upload few clips in youtube?

    ReplyDelete
  10. கூறை => கூற்றை
    -spellchecker

    ReplyDelete
  11. it should be recoreded as is. for 20 days, if it comes to around 60 hrs.
    it will definitely be better than the epic killer- Mahabarat and Ramayan from DD.
    Though there might still be renewed demand for stage things, some one should package and market it.

    ReplyDelete
  12. Dear Badri,

    Thanks for this post on Echur's Mahabharatham. My father was from Echur and i have grown up hearing these stories from my grand mother. If my memory serves me right, these bharatham (as my grandmother used to call it) were stopped for a while in late 80's and early 90's. They were revived later.

    I should get this documentary and send it over to my Uncle (my fathers brother who is 75) and he would love to see it. Is there any way one can get this?

    With Regards
    Narasimhan

    ReplyDelete