நல்லி குப்புசாமி செட்டியாரின் ஆதரவில் சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள் தொகுப்பு 3 வெளியீடு சென்ற வாரம் நடந்தது. தமிழக வாசகர்களின் ஆதரவில்லாமையே சாரு போன்ற கலக எழுத்தாளர்களையும் கூட புரவலர்களை நாட வைத்துள்ளது. எந்த அளவுக்கு சாருவின் எழுத்துகள் நடராஜன், நல்லி செட்டியார் ஆகியோருக்குப் பிடிக்கும்? இருவரும் வாய் ஓயாது சாருவின் எழுத்தைப் பிடிக்கும் என்று சொன்னாலும் "சைவமாக நடந்துகொண்டால்தான் மேற்கொண்டு எங்களது ஆசீர்வாதம் உனக்கு இருக்கும்" என்பது போல சாருவை பயமுறுத்தி இருக்கின்றனர் என்பது வெளிப்படை.
சாரு தனது ஏற்புரையில் சோழா ஷெரட்டன் பாரில் உட்கார்ந்து கொண்டு டீ குடிக்கிறார். ஆனாலும் மது அருந்துவது பற்றி அங்கும் இங்கும் பேசிவிடுகிறார். பிரபஞ்சனுக்கு மேற்படி "சைவ" விஷயம் ஏற்கெனவே தெரியும்போல. அதனால் தனது பேச்சில் "நாம் எல்லோரும் மது அருந்துகிறோம்.... சரி வேண்டாம், நான் மது அருந்துகிறேன், மது அருந்துவதா குற்றம்?" என்று கேள்வி கேட்டு விளாசினார். பள்ளிக்குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கும் ஆசிரியர்கள் நரகத்துக்குப் போவார்கள் என்றார். கோணல் பக்க்கங்களில் வந்த சில கட்டுரைகளைப் பற்றிப் பேசினார். அதில் ஒன்று பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் பெண் குழந்தைகளை வன்கொடுமை செய்த ஆசிரியர் பற்றியது. பாண்டிச்சேரி வழக்கப்படி அப்படியான ஆசிரியர்களை என்ன செய்வார்களாம்? பள்ளி விட்டு மற்றொரு பள்ளிக்கு மாற்றுவார்களாம். அதனால் டிரான்ஸ்பர் வேண்டுபவர்கள் செய்யவேண்டிய ஒரே வேலை.... அதுதான். அல்லது, அட் லீஸ்ட் மற்றொரு வாத்தியாரை வைத்து இவர் மீது மொட்டைக் கடுதாசி எழுத வைப்பது. சாருவின் மற்றொரு கட்டுரையில் வந்த ஒரு செய்தியை வைத்து முன் பின் தெரியாத இருவர் மணமான பின்னர் முதலிரவில் கொள்ளும் உறவைப் பற்றி சற்று காட்டமாகப் பேசினார். அது வன்புணர்ச்சிக்குச் சமம் என்றார்.
கோணல் பக்கங்கள் - 3 சாருவின் சொந்தக் காசில் வெளியாகிறது. தயாரிப்பு உதவி உயிர்மை மனுஷ்யபுத்திரன். இவர் பேசும்போது சாரு போன்ற எழுத்தாளர் ஒருவருக்கென புத்தகப் பதிப்பாளர் யாரும் இல்லாதது சோகமான நிகழ்வு என்றார். சாருவின் அடுத்த கட்டுரைத் தொகுதியை உயிர்மை வெளியிடப்போவதாகவும் தெரிவித்தார். சாரு தன் கட்டுரைகளில் சுய பச்சாதாபம் பேசும், பணத்துக்கான யாசிக்கும் பகுதிகளைத் தவிர்க்கலாம் என்பது தனது அபிப்ராயம் என்றார்.
எந்தவிதக் கவலைகளுமின்றி பேசுபவர்கள் நடராஜனும் நல்லி செட்டியாரும். அவர்கள் தங்களுக்குத் தோன்றியதைப் பேசலாம். ஆஃப்டர் ஆல் கேட்பவர்களுக்குத்தான், ஒரு கீரைவடை, ஒரு ஜாங்கிரி, ரவா கிச்சடி, தேங்காய் சட்னி, நல்ல காபி, ஓர் ஐஸ்கிரீம் நல்லி செட்டியார் தயவில் கிடைத்துள்ளதே. நடராஜன் அவருக்கு நண்பர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர். இலக்கியம் செழிக்கட்டும்.
நல்லி செட்டியார் தான் சேர்த்துவைத்த புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து முடிக்கும் வரை தனக்கு ஆயுள் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நாஞ்சில் நாடன் பேசும்போது மார்க்கண்டேயன் கேட்ட வரம் போலுள்ளதே என்றார். இப்பொழுதெல்லாம் தான் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களை பிறரிடம் தந்துவிடுவதாகவும், அப்படியும் சில புத்தகங்களைப் பிறருக்குத் தரமுடியாது இருப்பதாகவும், எக்காலத்திலும் படிக்கக் கூடியதாக இருப்பதாகவும் அவற்றுள் சாருவின் அனைத்து எழுத்துகளும் அடக்கம் என்றும் சொன்னார். நாஞ்சில் நாடன் சக எழுத்தாளர்களை நிறையவே புகழ்கிறார்.
சாருவின் எழுத்துகள் முக்கியமானவைதான். ஆனால் அவை கலக எழுத்துகள். நிகழ்காலத் தமிழ்ச் சமூகத்தின் ஒழுக்கவியலை கேலிபேசும் எழுத்துகள். தயிர்வடை சென்சிபிலிட்டி உள்ள வாசகர்களைக் கலங்க அடிக்கும் எழுத்துகள். சாருவுக்கு நிறைய தைரியம். ஜே.ஜே.சில குறிப்புகள் வெளியாகி தமிழ் படைப்புச் சூழலில் தனியிடம் பெற்றபோது விடாமல் அதைக் கண்டனம் செய்து எழுதிய கட்டுரைகளை யாருமே பிரசுரிக்காமல் போனதால் அதையே தனியான ஒரு சிறுபுத்தகமாக வெளியிட்டவர். சுந்தர ராமசாமி கலந்துகொண்ட கோவையில் நடந்த ஒரு கூட்டத்தில் சாரு ஜே.ஜேயை விமரிசிக்க சு.ரா சொன்னாராம்: "நான் இந்த நாவலை நிவேதிதாவுக்காக எழுதவில்லை. நான் இந்த நாவலை எழுதிக்கொண்டிருந்தபொழுது நிவேதிதா என்ற ஆளைப் பற்றியே எனக்குத் தெரியாது." சாரு இதனால் எல்லாம் கலங்கிவிடப்போகிறவரில்லைதான்.
சமீபத்திய கட்டுரை ஒன்றில் அவரே சொல்கிறார்: "நான் ஒரு subversive எழுத்தாளன். என்னைப் போன்ற எழுத்தாளர்கள் பல்வேறு நாடுகளில், நாடு கடத்தப்பட்டார்கள் அல்லது சிறையில் அடைக்கப்பட்டார்கள் அல்லது (சில சமயங்களில்) கொல்லவும் பட்டார்கள். ஆனால் நான் எழுதிக்கொண்டிருக்கும் சிறு பத்திரிகைச் சூழலில் இருந்துதான் எனக்கு அச்சுறுத்தல் வந்ததே தவிர இதுவரை அரசு அச்சுறுத்தல் ஏதும் இருந்ததில்லை. காரணம்: என்னைப் பற்றி அரசுக்கோ தமிழ்ச் சமூகத்துக்கோ தெரியாது. 200 பேருக்கு மட்டுமே இலவசமாக அனுப்பப்படும் பத்திரிகையில் எழுதும் ஒருவனைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்?" ஜீரோ டிகிரியின் அபாரமான விற்பனைக்கப்புறமும் சாரு இவ்வளவு அவையடக்கத்துடன் பேசக்கூடாது!
நாஞ்சில் நாடன் சொன்னார்: சமகால எழுத்தாளனுக்கு படைப்பிலக்கியம் தவிர பிறவற்றிலும் ஈடுபடவேண்டிய கட்டாயம் இருக்கிறது. வெறுமனே கதை, கவிதை மட்டும் எழுதிவிட்டுப் போய்விடாமல் சமகால இலக்கிய, சமூக, அரசியல் நிகழ்வுகள் மீதான எண்ணங்களைப் பதிவு செய்வதில் சாரு ஈடுபட்டிருக்கிறார். சாரு எதைப்பற்றி வேண்டுமானாலும் கருத்து சொல்கிறார். எவ்வளவு controversial-ஆக இருந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. சொல்லப்போனால், அது controversial-ஆக இல்லாவிட்டால்தான் அவர் கவலைப்படுவதாகத் தெரிகிறது. சாருவின் இருப்பே அவரது எதிர்ப்பின் காரணமாகத்தான் என்று தோன்றுகிறது. "I oppose, therefore I am"
சாரு ஏற்புரையில் சொன்ன சில விஷயங்கள் - நிறைய exaggerations இருந்தாலும் - சிந்திக்க வைத்தவை. தான் உயிர்மையில் கோணல் பக்கங்கள் மூன்றாம் தொகுதிக்கு ஒரு விளம்பரம் எடுத்திருந்ததாகவும், இதுவரை வந்தது ஒரேயொரு Money Orderதான் என்றும் சொன்னார். உயிர்மை சுமார் 5,000 பிரதிகளாவது விற்கும் என்றும், காலச்சுவடு 10-15,000 பிரதிகளாவது விற்கும் என்றும் தாம் எதிர்பார்த்ததாகவும், சமீபத்திய காலச்சுவடு இதழ் ஒன்றில் 1,000வது சந்தாதாரராக கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லகண்ணு சேர்ந்திருப்பதாக வந்த செய்தி தன்னை அதிர்ச்சியடையச் செய்ததாகவும் சொன்னார். கேரளாவில் இதுபோன்ற இலக்கியப் பத்திரிகைகள் 1 லட்சம் பிரதிகள் வரை விற்பதாகச் சொன்னார். அவரது கண்ணாயிரம் பெருமாளும் etc. etc. என்னும் தொடர் நாவல் இப்பொழுது மலையாளத்தில் (கேரள கவுமுதி?) தொடராக வருவதாகவும், பக்கத்துக்கு ரூ. 500 என்று சன்மானம் கிடைப்பதாகவும் சொன்னார். அதற்காகவே, வேண்டுமென்றால் மலையாளத்திலேயே எழுதத் தயாராக இருப்பதாகவும் சொன்னார். ஆனால் தமிழில் சிறு பத்திரிகைகளில் எழுதுவதற்கோ, ஒரு கட்டுரைக்கு தான் ரூ. 2,000 வீதம் செலவு செய்வதாகச் சொன்னார்.
தான் யாசிப்பேன், அதை விடப்போவதில்லை, ஆனால் காசுக்காக தன் கொள்கைகளை மாற்றிக்கொள்ளமாட்டேன் என்று முடித்தார்.
தமிழ்ச்சூழல் மோசமானதுதான். கேரளாவில் படிப்பறிவு 90%க்கும் மேல். தமிழகத்தில் 74%தான். தமிழில் விகடன், குமுதம் ஆளுமை ரொம்ப அதிகம். நடுத்தர இதழ்கள் மிகவும் குறைவு. அமுதசுரபி, கலைமகள், புதிய பார்வை போன்றவை 10,000 பிரதிகள் மட்டும்தான் விற்கின்றன. சிற்றிதழ்கள் 3,000 தாண்டினால் அதிகம். மஞ்சள்பொடி, மசாலாப்பொடி இதழ்கள், சினிமா செய்திகளின் தாளிப்புடன் லட்சக்கணக்கில் விற்கின்றன.
இவை மாற வெகுநாள் பிடிக்கும். பல வருடங்கள் ஆகலாம்.
அதுவரையில் சீரியஸ் வாசகர்கள் சாரு நிவேதிதா போன்றவர்களுக்கு தீவிர ஆதரவு தரவேண்டும். கோணல் பக்கங்கள் - 3 ஐ வாங்குவது அதற்கு உதவி செய்யும்.
பி.கு: விழா தொகுப்பாளர் திவ்யகஸ்தூரி பற்றி நிறைய சொல்லவந்து அடக்கிக்கொள்கிறேன்.
நாராயணன் பதிவு
// விழா தொகுப்பாளர் திவ்யகஸ்தூரி பற்றி நிறைய சொல்லவந்து அடக்கிக்கொள்கிறேன்.//
ReplyDeleteஅடடா, நீங்க சொல்வீங்கன்னு நான் எதுவும் எழுதாம இருந்தேனே ;-)))))
//தயிர்வடை சென்சிபிலிட்டி உள்ள வாசகர்களைக் கலங்க அடிக்கும் எழுத்துகள்//
ReplyDeleteஇது என்னமோ உண்மை போலத்தான் தோன்றுகின்றது.
//அது controversial-ஆக இல்லாவிட்டால்தான் அவர் கவலைப்படுவதாகத் தெரிகிறது. சாருவின் இருப்பே அவரது எதிர்ப்பின் காரணமாகத்தான் என்று தோன்றுகிறது. "I oppose, therefore I am"
//
உண்மையோ உண்மை.
நன்றி பத்ரி
நன்றி
// விழா தொகுப்பாளர் திவ்யகஸ்தூரி பற்றி நிறைய சொல்லவந்து அடக்கிக்கொள்கிறேன்//
ReplyDeleteஇந்த மாதிரி சஸ்பென்ஸ் எல்லாம் வைக்காம சீக்கிரம் யாரவது ( நராயணன்/பத்ரி) எடுத்து விடுங்கப்பா.
துளசி.
// விழா தொகுப்பாளர் திவ்யகஸ்தூரி பற்றி நிறைய சொல்லவந்து அடக்கிக்கொள்கிறேன்//
ReplyDeleteஇந்த மாதிரி சஸ்பென்ஸ் எல்லாம் வைக்காம சீக்கிரம் யாரவது ( நராயணன்/பத்ரி) எடுத்து விடுங்கப்பா.
with photo of d.k :)
எல்லாஞ்சரி.. நீங்க எத்தனை கோ.ப. புத்தகங்கள் வாங்கினீர்கள்?
ReplyDeleteவிழா தொகுப்பாளர் பற்றி எழுத போக... what a wasted effort on the post!
ReplyDeleteI thought நாஞ்சில் நாடன் was very smart when he said he hoped to read Charu in the future. Looks like he is never going to get around to actually doing it.
//எந்தவிதக் கவலைகளுமின்றி பேசுபவர்கள் நடராஜனும் நல்லி செட்டியாரும். அவர்கள் தங்களுக்குத் தோன்றியதைப் பேசலாம். ஆஃப்டர் ஆல் கேட்பவர்களுக்குத்தான், ஒரு கீரைவடை, ஒரு ஜாங்கிரி, ரவா கிச்சடி, தேங்காய் சட்னி, நல்ல காபி, ஓர் ஐஸ்கிரீம் நல்லி செட்டியார் தயவில் கிடைத்துள்ளதே. நடராஜன் அவருக்கு நண்பர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர். இலக்கியம் செழிக்கட்டும்.//
ReplyDeleteஇந்தப் பகடி எதற்கு? அவர்கள் சொன்னதைக் குறிப்பிட்டு விமர்சனம் செய்தால் பரவாயில்லை. அப்படி இன்றி, பொத்தாம் பொதுவாக கிண்டலடிப்பது அழகில்லை. கைக்காசு செலவழித்து நல்ல காரியம் செய்கிறார்.
உங்கள் சொந்தச் செலவில் இது போல ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து விட்டு (ரவா கிச்சடி, நல்ல் காபி உட்பட), இவரை தாராளமாக நக்கலடியுங்கள்.
Srikanth: செய்திருக்கிறோம், செய்வோம். உ.ம்: அசோகமித்திரன் 50. அடுத்து இன்னமும் சிலவும் வரும். மேடையில் ஏறி கன்னாபின்னாவென்று பேசுவதில்லை. இலக்கியத்துக்கான மரியாதையைக் கொடுப்போம்.
ReplyDeleteபத்ரி
ReplyDeleteசாரு விழாப் பற்றி நல்ல பதிவு. நாஞ்சில் நாடன் மற்றும் பிரபஞ்சன் நன்றாக பேசியதாக யாரோ சொன்னார்கள்.
விழா தொகுப்பாளர் திவ்ய கஸ்தூரி நல்ல தமிழில் பேசினார்களா? விழாவின் சாராம்சம் திவ்யாவிற்கு புரிந்ததா?
நன்றி
மயிலாடுதுறை சிவா...
பத்ரி,
ReplyDeleteWith all due respect,
1. நீங்கள் செய்தது 'றோம்' வகை. 'றேன்' வகையில்லை. மேலும் ஒரு பதிப்பகம் வியாபார நிமித்தம் செய்வதற்கும் ஒரு புரவலர் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது.
2. அவர் என்ன சொன்னார் என்று சொல்லாமல், 'காசு கொடுப்பது நாம் தானே' என்ற மிதப்பில் பேசினார் என்று தொனிக்கும் அளவில் எழுதியதைத் தான் ஆட்சேபிக்கிறேன். அவர் என்ன சொன்னார் என்று சொல்லுங்கள். நானும் சேர்ந்து சிரிக்கிறேன்.
அல்லது,
//இலக்கியத்துக்கான மரியாதையைக் கொடுப்போம்.//
அவர் கொடுக்கவில்லையென்றால் சொல்லுங்கள் - நானும் சேர்ந்து கோபப்படுகிறேன்.
//இவர் பேசும்போது சாரு போன்ற எழுத்தாளர் ஒருவருக்கென புத்தகப் பதிப்பாளர் யாரும் இல்லாதது சோகமான நிகழ்வு என்றார்//
ReplyDeleteyou are a publisher right ? Why can't you do this?
Because this will not bring money to your pocket..
What you are doing is business what he (Nalli) does is out of his business.
சாருநிவேதிதாவின் கோணல் பக்கங்கள் மூன்றாம் தொகுதியின் வெளியீட்டு விழாவில் நான் பேசியதாக பத்ரி எழுதியுள்ள கீழ்கண்ட வரிகள்:
ReplyDelete''சாரு தன் கட்டுரைகளில் சுய பச்சாதாபம் பேசும், பணத்துக்கான யாசிக்கும் பகுதிகளைத் தவிர்க்கலாம் என்பது தனது அபிப்ராயம் என்றார்.''
இது மிகவும் தவறானது. எழுதி வாசிக்கப்பட்ட எனது கட்டுரையில் அத்தகைய பொருள் படும் வாக்கியங்கள் எதுவுமில்லை. ஒருவேளை மைக் அரேஞ்மென்டில் ஏதாவது பிரச்சினை இருந்திருக்கலாம்.
அன்புடன்
மனுஷ்ய புத்திரன்
ஸ்ரீகாந்த், நீங்க யாரைப் பத்தி வேணா சொல்லுங்க..ஒத்துக்கிறேன்...ஆனால் நல்லி செட்டியார், ஏ.நடராசன் & கோ மட்டும் வேணாம். இந்த முறை தப்பித்துவிட்டாலும், இதற்கு முன்பு பல முறை அனுபவிச்சிருக்கேன். இவர்களிடம் நிதியுதவி பெற்றுத்தான் விழா நடக்கணும் என்பது தமிழ் இலக்கிய உலகின் தலையெழுத்து..
ReplyDeleteicarus,
ReplyDeleteஎனக்கு இவர்களது "பேச்சாற்றல்" பற்றித் தெரியாது. அதனால், காசு கொடுத்தவரைக் கிண்டல் செய்கிறாரே என்ற வருத்தத்தில் எழுதினேன்.
முன்பு மன்னர்கள், பின்னர் ஜமீந்தார்கள், இன்று முதலாளிகள் - தமிழ் மரபு தானே?
மனுஷ்ய புத்திரன்: நான் தவறாகக் சொல்லியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்கிறேன். அப்படியாக என் காதில் விழுந்ததாக நான் நினைத்திருந்தேன். நான்கு நாள்கள் கழித்து எழுதியிருந்ததால் ஏதேனும் மாறுதல்கள் என் மண்டையில் தோன்றியிருக்கலாம். மைக்கில் எந்தக் கோளாறும் இருந்திருக்க வாய்ப்பில்லை.
ReplyDelete'நினைவுகள்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்தானே திவ்ய கஸ்தூரி?
ReplyDeleteபத்ரி
ReplyDeleteமன்னிப்பு கேட்கும்படியான பிரச்சினை ஒன்றுமில்லை..சாருவை கோணல்பக்கங்களில் பல பக்கங்கள் அவை சாருவுக்கு நடந்தவை என்பதைத் தவிர வாசகனுக்கு முக்கியத்துவமில்லாதவை என்பதுதான் கட்டுரையில் இருந்த விமர்சனம்..மற்றபடி தமிழ் எழுத்தாளனுக்கு சுய பச்சாதாபம் இருந்தால் அதில் ஆச்சரியப்படவோ கண்டிக்கவோ எதுவும் இல்லை.
//விழாவின் சாராம்சம் திவ்யாவிற்கு புரிந்ததா?//
ReplyDeleteமணிக்கூண்டு, அதெல்லாம் புரியாமலா அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருப்பார்? நீங்களும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் என்று (கதை) சொன்னவராயிற்றே. அப்படித்தானோ? உலகத்திலேயே நாம மட்டும் தான் புத்திசாலின்ற நினைப்பு தேவை தானா?
//சாரு தன் கட்டுரைகளில் சுய பச்சாதாபம் பேசும், பணத்துக்கான யாசிக்கும் பகுதிகளைத் தவிர்க்கலாம் என்பது தனது அபிப்ராயம் என்றார்// பத்ரி, இப்படி ஸ்ட்ராங்கான கருத்துக்களை எழுதும்போதாவது கொஞ்சாம் சாக்கிரதையாக எழுதுங்கள்.
ReplyDelete>>>>200 பேருக்கு மட்டுமே இலவசமாக அனுப்பப்படும் பத்திரிகையில்... ஜீரோ டிகிரியின் அபாரமான விற்பனைக்கப்புறமும் சாரு இவ்வளவு அவையடக்கத்துடன் பேசக்கூடாது!
ReplyDeleteஇதை ஒரு பகிடியாகவே சாரு கூறியிருப்பதாக கருதுகிறேன். ஒருமுறை சாரு தன்னுடைய ப்ளாக்கிற்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான வாசகர் வருவதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு கலகக்கார வாசகர் ஒருவர் அவருடைய வெப் கவுண்டர் ஸ்டடஸ்டிக்சைத்துருவியெடுத்து 200 வாசகர்கள் அவருடைய கோணல் பக்கத்தை படித்தாலே அதிகம் என நிறுவியிருந்தார்.
இந்தபதிவின் நடை குழப்பமளிப்பதாக உள்ளது - எள்ளியிருக்கிறீர்களா பாராட்டியிருக்கிறீர்களா என்று தெரியவில்லை. சுஜாதா கட்டுரையைப்போல என்று வைத்துக்கொள்ளுங்கள்!
.:dYNo:.
இந்தபதிவின் நடை குழப்பமளிப்பதாக உள்ளது - எள்ளியிருக்கிறீர்களா பாராட்டியிருக்கிறீர்களா என்று தெரியவில்லை. சுஜாதா கட்டுரையைப்போல என்று வைத்துக்கொள்ளுங்கள்!
ReplyDeleteஇந்த pinnothathin நடை குழப்பமளிப்பதாக உள்ளது - எள்ளியிருக்கிறீர்களா பாராட்டியிருக்கிறீர்களா என்று தெரியவில்லை. சுஜாதா கட்டுரையைப்போல என்று வைத்துக்கொள்ளுங்கள்!
//விழாவின் சாராம்சம் திவ்யாவிற்கு புரிந்ததா?//
ReplyDelete// மணிக்கூண்டு, அதெல்லாம் புரியாமலா அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருப்பார்? நீங்களும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் என்று (கதை) சொன்னவராயிற்றே. அப்படித்தானோ? உலகத்திலேயே நாம மட்டும் தான் புத்திசாலின்ற நினைப்பு தேவை தானா? //
LOL
// நல்லி குப்புசாமி செட்டியாரின் ஆதரவில் சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள் தொகுப்பு 3 வெளியீடு //
ReplyDelete// கோணல் பக்கங்கள் - 3 சாருவின் சொந்தக் காசில் வெளியாகிறது. தயாரிப்பு உதவி உயிர்மை மனுஷ்யபுத்திரன் //
என்னங்க பத்ரி கொயப்புறீங்களே... இரண்டாவது சரின்னா நல்லியார் எங்க வரார்...
வெளியீட்டு விழாவுக்கு மட்டும் நல்லியின் ஆதரவு என்று படித்தால் கணக்கு சரியாய் வருமோ ?
ReplyDelete//"நாம் எல்லோரும் மது அருந்துகிறோம்.... சரி வேண்டாம், நான் மது அருந்துகிறேன், மது அருந்துவதா குற்றம்?" என்று கேள்வி கேட்டு விளாசினார்.//
ReplyDeleteஒரு சின்ன ப்ளாஷ்பேக். 1994 ஆம் வருஷம் என்று நினைக்கிறேன். வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டு தலைவர்களை துகிலுரிக்கும் ஒரு 'சாட்டையடி' தொடரை ஒரு வராந்திர பத்திரிக்கையில் எழுதிக்கொண்டிருந்தார். மூன்றாவது வாரத்திலேயே, கன்னடத்திலிருந்து வந்து தமிழர்களுக்கு குடிப்பதையும், புகைப்பதையும் கற்றுக்கொடுத்த ஆசாமி என்று விளாசியிருந்தார். சம்பந்தப்பட்ட நடிகரின் படத்தைப் பார்த்து அதற்கு பின்னர்தான் பிரபஞ்சன் குடிப்பதையும், புகைப்பதையும் கற்றுக்கொண்டாரோ என்னவோ?!
அவர் என்ன திரை வெளிச்சத்தில் தலைவனை தேடி, சவால் விட்டு கொண்டு இருக்கும் இளைஞரா, கன்னட நடிகரை பார்த்து காப்பி அடிக்க ?
ReplyDelete