இதைப்பற்றி சில நாள்களாகவே எழுத நினைத்திருந்தேன். தேசிய உணர்வுக்கு அடுத்த விஷயம் யார் நம்மவர், யார் அந்நியர் என்பதைப் பற்றியது. இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது. இது மிகவும் நுணுக்கமான ஒரு விஷயம். கொச்சைப்படுத்தாமல் கவனமாக விவாதிக்க வேண்டியது.
பணக்கார நாடுகள் அனைத்துமே சட்டத்துக்குப் புறம்பான குடியேற்றங்களைக் கட்டுப்படுத்தத் தீவிரமாக முனைந்து வருகின்றன. அப்படியும் உயிர் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் அமெரிக்காவுக்குள் புகும் மெக்சிகோ நாட்டவர் ஏராளம். அதீத அமெரிக்க வலதுசாரிகள் அப்படி உள்ளே வருபவர்களைக் காட்டிக்கொடுக்கத் தன்னார்வத் தொண்டர்களை நியமிப்பதும், மனிதநேயர்கள், அப்படி நாட்டின் எல்லையைக் கடந்துவருபவர்கள் குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் சாவதைத் தடுக்க தண்ணீர்த் தொட்டிகளை அமைப்பதும் அமெரிக்காவின் தென் மாநிலங்களில் இன்றும் நடந்து வருகிறது. மேற்கு ஐரோப்பிய நாடுகள் அதனதன் வலதுசாரிக் கூக்குரலுக்குத் தகுந்தாற்போன்று சட்டப்புறம்பான குடியேற்றங்களைக் கட்டுப்படுத்த முனைகின்றனர். சமீபத்தில் லண்டன் மாநகரில் போலீஸாரால் நிகழ்த்தப்பட்ட தவறான டீ மெனெசிஸ் கொலையைக்கூட சரியாக்கும்விதமாக பிரிட்டன் உள்துறை அந்த பிரேசில் மனிதர் சட்டத்துக்குப் புறம்பாக நாட்டிலே தங்கியிருக்கலாம் என்று ஒரு செய்தியைக் கசியவிடுகிறது.
நம்மவர், அந்நியர் என்பது மொழியால், இனத்தால், மதத்தால், இன்னும் பல்வேறு காரணிகளால் அடையாளப்படுத்தப் படுகிறது.
இந்தியாவில் வெளிநாட்டவர் சட்டம் 1946 (Foreigners' Act 1946) என்பதுதான் 1983 வரையில் நாடு முழுவதற்குமாக "அந்நியரை எப்படி நடத்துவது" என்பதை வரையறுத்தது. இந்தச் சட்டம் வெள்ளையர் ஆட்சியின்போது உருவாக்கப்பட்டது என்பதை நினைவில் வைத்திருப்போம். இந்தச் சட்டத்தின்படி காவல்துறையினர் யாரையாவது அந்நியர் என்று தீர்மானித்து மேற்படி சட்டத்தின்படி வழக்கு தொடுத்தால், குற்றம் சாட்டப்பட்டவர்தான், தான் இந்தியர் என்பதை நிரூபிக்கவேண்டும். அப்படி நிரூபிக்காவிட்டால் அவரை நாடுகடத்தலாம்.
எப்படி ஒருவர் தன்னை இந்தியர் என்று நிரூபிக்க முடியும்? இந்திய பாஸ்போர்ட், இந்தியாவில் பிறந்ததற்கான பிறப்புச் சான்றிதழ், அல்லது சுதந்தரத்துக்கு முன்பாக இப்பொழுதைய இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பிறந்ததற்கான சான்றிதழ் + நாட்டுப் பிரிவினை போது இந்தியாவுக்குள் வந்திருக்க வேண்டும்(?), ரேஷன் அட்டை, இந்தியாவில் சொத்து வைத்திருப்பதற்கான சான்று, இந்தியத் தேர்தல்களில் வாக்களித்ததற்கான சான்று, வாக்காளர் அடையாள அட்டை - தெரியவில்லை, இப்படிப் பலவற்றில் எதை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளும் என்று எங்கும் சரியாக வரையறுக்கப்படவில்லை.
ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், 2001-ல் தில்லியைச் சேர்ந்த அபு ஹனீஃப் என்னும் வங்க மொழி பேசும் முஸ்லிம் மீது தில்லி போலீஸ் அவர் "அந்நியர்" என்றும் அவரை பங்களாதேஷுக்கு நாடு கடத்த வேண்டும் என்றும் வழக்கு தொடுத்தது. அபு ஹனீஃப், தன்னிடம் கடந்த 15 வருடங்களாக இந்திய பாஸ்போர்ட் உள்ளது, 15 வருடங்களாக தில்லியில் வாக்களித்து வருகிறார், ரேஷன் கார்ட் உள்ளது, ஆனாலும் தன்னை காவலர்கள் பணம் கேட்டு நச்சரித்து நாடு கடத்துவேன் என்று தொல்லை செய்கிறார்கள் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அவரது முறையீட்டில், அசாமில் அமலில் இருக்கும் IMDT Act 1983ஐ தில்லிக்கும் நீட்டிக்கவேண்டும், தான் இந்தியரா, இல்லையா என்பதை ஒரு தீர்வாயம் (டிரிப்யூனல்) மூலம் தீர்மானிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால் உச்ச நீதிமன்றம் அவரது வழக்கைப் பரிசீலிக்கும் முன்னர், IMDT Act 1983 செல்லுபடியாகுமா, ஆகாதா என்பதைப் பற்றியே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அதைப் பரிசீலித்தபின்னர் இவரது வழக்கை எடுத்துக்கொள்வதாகவும் பதில் சொல்லிவிட்டனர்.
ஜூலை 12, 2005-ல், உச்ச நீதிமன்றம் IMDT Act 1983 செல்லுபடியாகாது, அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது இந்தச் சட்டம் என்று அதை ரத்து செய்தது.
IMDT சட்டம் 1983 என்பது என்ன? இது அசாமை மட்டுமே மனத்தில் வைத்துக் கொண்டுவந்த சட்டம். அசாமில் பிரிட்டிஷ் ஆட்சி காலம்தொட்டே அசாமியரல்லாதவர் குடியேற்றம் நடந்துவந்திருக்கிறது. அசாமியர்கள் பொதுவாகவே சோம்பேறிகள் என்று பெயர்பெற்றவர்கள். (முதலில் அசாமியர்கள் என்றாலே அதுவே பல இனக்குழுக்கள், மொழி பேசுபவர்கள் சேர்ந்த கலவை.) பிரிட்டிஷ்காரர்கள் அசாமைப் பார்த்தவுடன் அங்கு தேயிலைத் தோட்டங்களும், காப்பி எஸ்டேட்களும் நிர்மாணிக்க முடிவுசெய்ய, அந்தத் தோட்டங்களில் உழைக்க மத்தியப் பிரதேசத்தில் சாந்தால் பழங்குடியினர் முதல் பிஹாரிகள், வங்காளிகள் எனப் பலரும் கொண்டுசெல்லப்பட்டனர். இப்படி அங்கு சென்ற வேலைக்காரர்களுக்கு உணவு வேண்டுமே? அதற்காக நெல் பயிரிட இன்னும் பல வங்காளிகள் (ஹிந்து + முஸ்லிம்) சென்றனர். அசாமியர்களுக்கு வியாபாரம் செய்யவும் ஆர்வம் இல்லாததால், பிரிட்டிஷ் தூண்டுதலில் பேரில் மார்வாடிகள் பலரும் அங்கு சென்றனர்.
அதன்பின்னர் 1960களில் கிழக்கு பாகிஸ்தான் கொடூரச் செயல்களின்போது பல கிழக்கு பாகிஸ்தானிய, வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் அசாம் முதலான பல வடகிழக்கு மாநிலங்களில் எக்கச்சக்கமாகக் குடியேறினர். இதன் முடிவாகத்தான் 1971-ல் மற்றுமொரு இந்தியா-பாகிஸ்தான் போர் நடந்து பங்களாதேஷ் என்ற நாடு உருவானது.
அதன்பின்னர், அதாவது 1971-க்குப் பிறகு பங்களாதேஷ் பகுதியிலிருந்து இந்தியாவுக்குள் வந்த யாருக்கும் இந்தியக் குடியுரிமை தரக்கூடாது என்று முடிவானது. 1971-க்கு முன் வந்த பல அகதிகள் மீண்டும் பங்களாதேஷுக்குப் போக விரும்பவில்லை. மேலும் 1971-க்குப் பிறகும் கூட பங்களாதேஷிலிருந்து பலர் சரியான பாதுகாப்பில்லாத எல்லைக்கோட்டைத் தாண்டி அசாம் வந்து வாழத்தொடங்கினர். அசாமில் நிலம் வாங்குவது எளிதாக இருந்தது. அசாமியர்களே காசுக்காகவும் உழைப்பில் விருப்பம் இல்லாததாலும் தமது நிலத்தை பங்களாதேஷிலிருந்து வந்த குடியேறிகளுக்கு விற்றனர். அசாம் போன்ற செழிப்பான பிரதேசம் இந்தியாவிலேயே எங்கும் இல்லை. முஸ்லிம் குடியேறிகள் மிகக்கடினமாக உழைத்து மூன்று போகம் பயிர் செய்து சம்பாதித்த பணத்தையெல்லாம் மேலும் நிலம் வாங்கவும், பங்களாதேஷில் இன்னமும் இருக்கும் தம் உறவினரை அழைத்து அசாமில் குடியேற்றவும் பயன்படுத்தினர்.
இது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்காவுக்குப் போய்க் குடியேறும் இந்தியர்கள் செய்வதுதானே?
ஆனால் எண்ணிக்கைகள் பிரச்னையானது. பல அசாம் கிராமங்கள் முழுக்க முழுக்க வங்காள மொழி பேசுபவர்களால் நிறைந்தது. மொத்தத்தில் அசாமின் இரண்டே இரண்டு மாவட்டங்கள் தவிர பிறவற்றில் அசாமிய மொழி பேசுபவர்கள் சிறுபான்மையினராகப் போகும் அபாயம் ஏற்பட்டது.
இந்திரா காந்தியும், முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதும் தமது சொந்த அரசியல் லாபங்களுக்காக பங்களாதேஷ் எல்லையோர கிராமத்தவர் பலரை தேர்தல் நாளன்று எல்லைக்கோட்டைத் தாண்டி வந்து தம் கட்சிக்கு வாக்களிக்குமாறு செய்தனர். அப்படிச் செய்வதற்குப் பிரதியுபகாரமாக அவர்களுக்கு அசாமிலேயே தங்க இடம், ரேஷன் கார்டு வசதிகள் செய்து தந்தனர்.
இந்த நேரத்தில்தான் வெளிநாட்டவர் சட்டம் 1946க்குப் பதிலாக, இந்திரா காந்தியின் அரசு 1983-ல் IMDT சட்டம் 1983 என்ற சட்டத்தைக் கொண்டுவந்தது. இந்த சட்டம் நாடு முழுவதற்குமே பொருந்தினாலும், அசாம் மாநிலத்துக்கு மட்டும்தான் notify செய்யப்பட்டிருந்தது. இந்தச் சட்டம் வரும்வரை அசாமில் யார் வேண்டுமானாலும் ஒருவரை அந்நியர் என்று சொல்லி காவல்துறை மூலமாக அவரை பங்களாதேஷுக்கு நாடு கடத்த முடியும். அதைத் தவிர்க்க குற்றம் சாட்டப்பட்டவர்தான், 'தான் இந்தியர்' என்று நிரூபிக்க வேண்டும். ஆனால் IMDT சட்டப்படி, ஒரு தீர்வாயத்தை உருவாக்க வேண்டும். அந்தத் தீர்வாயத்தில் குற்றம் சாட்டுகிறவரோ, காவலர்களோ குற்றம் சாட்டப்பட்டவரை அந்நியர் என்று நிரூபிக்கவேண்டும்.
இது பங்களாதேஷிலிருந்து வந்த அகதிகளுக்குச் சாதகமானது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
இதன் விளைவாகத்தான் All Assam Students Union உருவானது. அசாம் கன பரிஷத் கட்சி உருவானது. உல்ஃபா தீவிரவாத இயக்கம் உருவானது. அதைத் தொடர்ந்து இரண்டு முறை அசாம் கன பரிஷத் அசாமில் ஆட்சியைப் பிடித்தது. உல்ஃபாவுக்கு எதிராக என்று இன்னமும் சில தீவிரவாத இயக்கங்கள் தோன்றின. வங்க மொழிபேசும் முஸ்லிம்களைப் பாதுகாக்கவென்று சில தீவிரவாத இயக்கங்கள் தோன்றின. போடோ இன மக்களுக்காக, கர்பிகளுக்காக, சாந்தால்களுக்காக என்று அங்குப் போகிற, வருகிற அனைவருமே கையில் AK47 துப்பாக்கி மொழி பேசுகிறவர்களாக ஆனார்கள்.
அசாம் கன பரிஷத், பாரதிய ஜனதா கட்சி இரண்டுமே IMDT சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தன. 2000-ல் AASU செயலர் உச்ச நீதிமன்றத்தில் இந்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரித் தொடங்கிய வழக்குதான் இப்பொழுது தீர்ப்பாகியுள்ளது.
IMDT சட்டமும் குறைபாடு உடையதுதான் என்றாலும், வெளிநாட்டவர் சட்டம் 1946-ம் மிகக் கடுமையானது. இந்தச் சட்டத்தை POTA, TADA ஆகியவற்றுடன் இணைத்துப் பார்க்கலாம். அதாவது குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டவர் தனது நிரபராதித் தன்மையை நிரூபிக்கவேண்டும்! அதைப்போலவே குற்றம் சாட்டப்பட்டபின்பு ஒருவர் தன் இந்தியக் குடியுரிமையை நிரூபிக்கவேண்டும் என்பது நம் நாட்டில் 100க்கு 90 பேரால் முடியாதது. இந்த நிலையில்தான் வெளிநாட்டவர் சட்டம் 1946-ஐ நாம் எதிர்க்கவேண்டும்.
அதே நேரம் IMDT சட்டம் அசாமில் ஏற்படுத்தியுள்ள கோபத்தையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்தியாவில் அந்நியர்களே வரக்கூடாது, அப்படி வருபவர்களைத் துரத்தவேண்டும் என்பது தவறான கருத்து. அதே சமயம் வடகிழக்கு மாநிலங்கள் பலவும் fragile இனக்குழு demography உடையது. அங்கு பெருத்த அளவில் ஏற்படும் எந்தவொரு குடியேற்றமும் கடும் நாசத்தை விளைவிக்கக்கூடியது. அதனால் IMDTக்கும் வெளிநாட்டவர் சட்டத்துக்கும் இடையேயான ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து அதை வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் அமல்படுத்தவேண்டும். ஆனால் பிற மாநிலங்களில் - தமிழகம் சேர்ந்து, IMDT சட்டம் போன்றதொன்று இருப்பதில் தவறொன்றுமில்லை. பிற மாநிலங்களில் வெளிநாட்டவர் சட்டம், 1946ஐ ஒழித்துவிட்டு IMDT சட்டமோ, அதைப்போன்ற வேறொன்றோ கொண்டுவரலாம்.
IMDT சட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், தெஹெல்கா கட்டுரையில் கடுமையாகச் சாடியுள்ளார். ஆன்லைனில் முழுமையாகக் கிடைக்காது. அச்சுப்பிரதி கிடைப்பவர்கள் வாங்கிப் படிக்கவும்.
IMDT சட்டம் ரத்தானதை எதிர்த்து அருந்ததி ராய், பிரஷாந்த் பூஷன் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் பற்றிய இன்றைய தி ஹிந்து செய்தி
எமர்சன் / சிறிய அறிமுகம்.
3 minutes ago
======== Quote
ReplyDeleteவடகிழக்கு மாநிலங்கள் பலவும் fragile இனக்குழு demography உடையது. அங்கு பெருத்த அளவில் ஏற்படும் எந்தவொரு குடியேற்றமும் கடும் நாசத்தை விளைவிக்கக்கூடியது. அதனால் IMDTக்கும் வெளிநாட்டவர் சட்டத்துக்கும் இடையேயான ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து அதை வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் அமல்படுத்தவேண்டும்
=============unquote
இப்படி எல்லாம் சொன்னால், உங்களுக்கு உலகளாவிய பார்வை இல்லை என்றும், இந்தியாவின் நலன் என்ற குறுகிய சுயநல வட்டத்துக்குள் இருக்கிறீர்கள் என்று முத்திரை குத்தி விடுவார்கள் பரவாயில்லையா? :-)
பரவாயில்லை. முத்திரைக்கெல்லாம் பயப்படப்போவதில்லை நான். எனக்குத் தோன்றியதை, அப்படியே எழுதத்தானே நான் என் பதிவை வைத்திருக்கிறேன்? பிறர் புகழ்வதற்காக இல்லை.
ReplyDeleteநன்றி பத்ரி, மிகவும் முக்கியமான பிரச்னை ஒன்றைப் பற்றி அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
ReplyDeletePrashant Bhushan has wriiten in outlook and it is in the web.
ReplyDeleteGood posting.
ReplyDeleteOn an unrelated topic,
Do you have any factual data for Chennai on this report ?
http://www.newstodaynet.com/11aug/ld4.htm
Is this true ?
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteநல்ல கட்டுரை, பத்ரி.
ReplyDeleteஅருந்ததி இதை ஒரு rich vs poor விஷயமாகப் பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது.
துக்ளக்கில் குருமூர்த்தி இதை ஒரு hindu vs muslim விஷயமாகப் பார்ப்பதும் வேடிக்கையாக இருக்கிறது.
இவர்கள் இரண்டு பேரையும் ஓரங்களில் நிற்க வைத்து நடுவில் நிறைய புத்தகங்களை வைக்கலாம்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இது பொன்ற பிரச்னைகளை அதிகமாக்கும். ஒரு மனிதாபிமான, நடைமுறைப்படுத்தக் கூடிய குடியேற்றச் சட்டம் அவசியம் தேவை.
BPO-ITES பற்றிக் கேட்ட அனானிமஸ்: எனக்குத் தெரிந்தவரை பிபிஓ-வில் ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்வது கடினமாகத்தான் இருக்கிறது. நியூஸ் டுடே செய்தியில் எல்லாமே உண்மையாக இருக்கலாம். பிபிஓ தொடக்கம் முதலாகவே பிற தொழில்களில் இல்லாத சில கரிசனங்கள் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட்டன. அது தேவையாக இருந்தது.
ReplyDeleteஅதாவது வீட்டிலிருந்து காரில், நல்ல பஸ்ஸில், வேனில் கூட்டிக்கொண்டுவந்து பின் வீட்டுக்கே கொண்டுவந்து விடுவது (அகாலமானாலும்...), அலுவலகத்திலேயே கோர்மே சாப்பாடு - இலவசமாக. இன்னும் பல.
ஆனாலும் பல்வேறு காரணங்களால் ஏற்கெனவே சந்தையில் இருக்கும் வேலையாள்கள் அழைப்பு மையம் போன்ற பிபிஓ தொழிலில் ஈடுபடமுடியவில்லை. (வயது, ஆங்கில உச்சரிப்புச் சிரமங்கள், வளைந்து கொடுக்காத தன்மை)
இதனால் கல்லூரிப் பிள்ளைகள்தான் வேலைக்குக் கிடைத்தார்கள். சில மாதங்களிலேயே ஆயிரம் அழைப்பு மையங்கள் தோன்றியதும் இவர்களுக்கு எங்கு சென்றாலும் வேலை கிடைத்தது, அதனால் இஷ்டத்துக்கு வேலையை விடுகின்றனர். ஆனால் இதனாலெல்லாம் வேலைகள் கிழக்கு ஐரோப்பாவுக்குப் போய்விடாது.
இங்கேயே, இந்தியாவிலேயே முதிர்ச்சியடைந்த ஊழியர்கள் கிடைப்பார்கள். இது ஒரு transition period.
ஸ்ரீகாந்த்: குருமூர்த்தி இந்தச் சட்டம் பற்றி துக்ளக்கில் கடந்த இரண்டு வாரங்களாக எழுதியதில் ஓரளவு நியாயம் உள்ளது. ஆனால் வழக்கமான வலதுசாரி சித்தாந்தம், அசாம் பிரச்னையை ஹிந்து-முஸ்லிம் என்று பார்ப்பது அவரது குறைவே. எத்தனையோ வங்காள மொழி பேசும் ஹிந்துக்கள் திரிபுரா, அசாம், மணிப்பூர் என எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்.
ReplyDeleteஅவர்களைப் பற்றிப் பேசும்போது குருமூர்த்தி பாரதியம் என்று தனிக்கரடி விடுவார்.
>>>>இங்கேயே, இந்தியாவிலேயே முதிர்ச்சியடைந்த ஊழியர்கள் கிடைப்பார்கள். இது ஒரு transition period
ReplyDeleteThanks Badri.
நல்ல கட்டுரை.
ReplyDeleteநன்றி பத்ரி,
கோர்வையாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. என்னுடைய நன்றிகள்.
ReplyDelete