Saturday, August 20, 2005

ஈரோடு புத்தகக் கண்காட்சி

வைணவர்களுக்கு கோயில் என்றாலே திருவரங்கம் என்பதுபோல புத்தகத் தொழிலில் இருக்கும் எங்களுக்கெல்லாம் புத்தகக் கண்காட்சி என்றாலே பொங்கல் நேரத்தில் வரும் சென்னை புத்தகக் கண்காட்சிதான்.

ஆனால் சென்னையையும் தாண்டி மக்கள் வசிக்கிறார்கள். தமிழகத்தின் பல ஊர்களிலும் அவ்வப்போது புத்தகக் கண்காட்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வோர் ஊரிலும் யார் யார் இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்கிறார்கள்?
  1. பெரும்பாலும், ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப், இன்னபிற லாபநோக்கில்லாத தனியார் தொண்டு அமைப்புகள், நெய்வேலியில் நிலக்கரி நிறுவனம்
  2. சில ஊர்களில் கல்யாண மண்டப சொந்தக்காரர்கள் (ஆடியிலும் மார்கழியிலும் சும்மா இருக்கும் கல்யாண மண்டபத்திலிருந்து பணம் சம்பாதிக்க ஆடித் தள்ளுபடிகளும் புத்தக, கைவினைப் பொருள்கள் கண்காட்சியும்)
  3. பாரதி புத்தகாலயம், காந்தளகம், தினமணி+அநுராகம்
  4. சில ஆங்கிலப் புத்தக விநியோகஸ்தர்கள்
சேலத்தில் புத்தகக் கண்காட்சியை நடத்துபவர் ஒரு கல்யாண மண்டப சொந்தக்காரர். ஒரே நேரத்தில் மண்டபத்தில் புத்தகங்கள், கைவினைப் பொருள்கள், குறைந்த விலைப் புடைவைகள், ஊதுபத்தி, பாச்சை உருண்டை என்று எல்லாம் விற்பனையாகும். வருடத்துக்கு இரண்டு முறை நடத்துகிறார் - அதாவது ஆடி, மார்கழியில் கல்யாணங்கள் நடைபெறாத நேரத்தில். கடந்த சில வருடங்களாகவே நடந்துவரும் இந்தக் கண்காட்சியில் புத்தகப் பதிப்பாளர்கள் அனைவரும் கலந்துகொள்வதில்லை. கலந்துகொள்பவர்கள் அனைவரும் ஆங்கிலம், தமிழ் என இரண்டிலும் பொதுவாகப் பல புத்தகங்களை விற்பனை செய்பவர்கள். புத்தக விற்பனைக்கு என மொத்தமாக 25 நிறுவனங்கள் வந்திருந்தன. பொதுமக்கள் ஓரளவுக்குத்தான் வருகின்றனர். பெரிய அளவில் மக்களை ஈர்க்கக்கூடிய அளவுக்கு இந்தக் கண்காட்சியில் எதுவுமில்லை.

ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக இருந்தது ஈரோடு. இதுதான் ஈரோட்டில் முதன்முறையாக நடக்கும் புத்தகக் கண்காட்சி. இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது மக்கள் சிந்தனைப் பேரவை என்ற இயக்கம். அதன் தலைவர் ஸ்டாலின் குணசேகரனும் பிற தன்னார்வலர்களும் மிக நல்ல முறையில் திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது. இங்கும் ஒரு கல்யாண மண்டபத்தைத்தான் வாடகைக்கு எடுத்திருந்தனர்.

ஆனால் கிட்டத்தட்ட 90 புத்தகப் பதிப்பாளர்களையும் விற்பனையாளர்களையும் ஒருங்கே கொண்டுவந்திருந்தார்கள். பொதுவாக சென்னைக் கண்காட்சி தவிர பிற இடங்களுக்குப் போகாத சாகித்ய அகாதெமி, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் போன்றவர்களையும் பல முன்னணி தமிழ்ப் பதிப்பாளர்களையும் அழைத்து வந்திருந்தனர். பத்து நாள்களிலும் மாலை நேரத்தில் சிறப்புப் பேச்சாளர்களை அழைத்துப் பேச வைத்திருந்தனர். இதனால் நல்ல கூட்டமும் வந்திருந்தது. கடைகளுக்கு வந்த பார்வையாளர்களும் நிறையப் புத்தகங்களை வாங்கினர். ஊரின் பெரிய மனிதர்கள், முக்கியப்பட்டவர்கள், பிரபலங்கள் என்று அத்தனை பேரையும் விடாது கண்காட்சிக்கு வரவைத்திருந்தனர். நகரின் முக்கிய நிகழ்ச்சியாக இந்தக் கண்காட்சியை விளம்பரப்படுத்தியிருந்தது வரவேற்கத்தக்கது. இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்பதைத் தெரியாத மக்களே ஈரோட்டில் இல்லை என்று கூடச் சொல்லலாம்!

ஈரோடு, சேலம் இரண்டுமே படிப்பறிவில் பின்தங்கிய மாவட்டங்கள்தான். இரண்டு நகரங்களுக்கும்/ மாவட்டங்களுக்கும் பொருளாதார அளவில் என்ன வித்தியாசங்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஈரோட்டில் நடந்த கண்காட்சி சிறப்பாக அமைந்ததற்கு முழுக்காரணம் இதை நடத்திய நிர்வாகிகள் சிறப்பான முறையில் திட்டமிட்டுச் செயல்படுத்தியதே.

காந்தளகம், தினமணி/அநுராகம் போன்றோர் நடத்தும் கண்காட்சிகள் ஒரே நேரத்தில் பரவலாக பல ஊர்களில் நடக்கின்றன. ஆனால் அவர்கள் எல்லாப் புத்தகங்களையும் முன்னிறுத்துவதில்லை. ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் உள்ளவர்களை மட்டும்தான் முன்னிறுத்துகின்றனர். அதேபோல பாரதி புத்தகாலயம் நடத்தும் கண்காட்சிகளில் அவர்களே பலரிடமிருந்து புத்தகங்களை வாங்கித் தாங்களே விற்கிறார்கள். இங்கு செய்திறன் குறைவு. கண்காட்சியைப் பிரபலப்படுத்துவது கடினம். அதற்கு நிறைய பேர் சேர்ந்து உழைக்கவேண்டும். அதற்கு ஒரு தன்னார்வ அமைப்பின் ஆதரவு தேவை.

இதைத்தவிர சில ஆங்கில/தமிழ் புத்தக விநியோகஸ்தர்கள் தனியாகவோ அல்லது மூன்று, நான்கு பேர் சேர்ந்தோ ஒரு கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து மொத்தமாகப் புத்தகங்களைக் குவித்து விற்பனை செய்கிறார்கள். சில நகரங்களில் நல்ல விற்பனை உள்ளது என்று கேள்விப்படுகிறேன். ஆனால் பொதுவாக இந்தக் கண்காட்சிகளில் அதிகம் விற்பனையாவது குழந்தைகள் புத்தகங்கள் (கலர் அடிக்கும் புத்தகங்கள், குட்டிக் கதைகள்), ஆங்கிலக் கதைப் புத்தகங்கள் போன்றவை. தமிழ் விற்பனை குறைவுதான்.

ஈரோடு போன்று பிற மாவட்டத் தலைநகரங்களில் நன்றாகப் புத்தகக் கண்காட்சிகளை அமைக்கமுடியும் என்று தோன்றுகிறது. அந்தந்த நகரங்களில் ஸ்டாலின் குணசேகரன் போன்றவர்களும் மக்கள் சிந்தனைப் பேரவை போன்ற இயக்கங்களும் தேவை.

ஈரோடு புத்தகக் கண்காட்சி பற்றிய செல்வராஜின் பதிவு

5 comments:

  1. //ஒரே நேரத்தில் மண்டபத்தில் புத்தகங்கள், .........பாச்சை உருண்டை என்று எல்லாம் விற்பனையாகும்.//

    :-) மெல்லிய நகைச்சுவை இழையோட எழுத ஆரம்பித்து விட்டீர்கள்!

    நீங்களும், செல்வராஜூம் கொடுத்துள்ள தகவல்களுக்கு நன்றி. சென்னையல்லாமல், மற்ற இடங்களிலும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப் படுகின்றன என்பது நல்ல முன்னேற்றம்.

    ஒவ்வொரு முறை புத்தகக் கண்காட்சி பற்றி நீங்கள் எழுதும் போதெல்லாம், தமிழ்நாட்டில் வசிக்கவில்லையே என்று ஏக்கமாய் இருக்கிறது.

    நன்றி - சொ. சங்கரபாண்டி

    ReplyDelete
  2. >>>இதைத்தவிர சில ஆங்கிலஃதமிழ் புத்தக விநியோகஸ்தர்கள் தனியாகவோ அல்லது மூன்றுஇ நான்கு பேர் சேர்ந்தோ ஒரு கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து மொத்தமாகப் புத்தகங்களைக் குவித்து விற்பனை செய்கிறார்கள். சில நகரங்களில் நல்ல விற்பனை உள்ளது என்று கேள்விப்படுகிறேன். ஆனால் பொதுவாக இந்தக் கண்காட்சிகளில் அதிகம் விற்பனையாவது குழந்தைகள் புத்தகங்கள் (கலர் அடிக்கும் புத்தகங்கள்இ குட்டிக் கதைகள்)இ ஆங்கிலக் கதைப் புத்தகங்கள் போன்றவை. தமிழ் விற்பனை குறைவுதான்.<<<


    நகர்புற நடுத்தர வர்க்கம் நுகர்வுத்திறன்மிக்க வர்க்கமாகும்.இதன் கற்கைமொழி ஆங்கிலமாக இருக்கும்போது,ஆங்கில நூற்கள்தாம் அதிகம் விற்கப்படும்.அவ்வண்ணம் தமது வாரீசுகளுக்காக வர்ணம்தீட்டும் புத்தகங்களையும் அதுவேண்டப்பழகிப் போயிருக்கிறது.இது கிராமப்புறங்களில் சாத்தியமாகா!அங்கு ஒரு அப்பியாசக் கொப்பி வேண்டவே திண்டாட்டமாகும்போது வர்ணம்தீட்டுவது எங்கே? எதுவெப்படியோ சிறிது சிறிதாய் தாய்மொழியழிவு நிகழ்ந்தே வருகிறது.இதை அன்நிய மூலதனம் கச்சிதமாகக் காரியமாற்றிச் செய்து வருகிறது.வருங்காலத்தில் முகமிழந்த -வேரற்ற ஒருகலவையாகத் தமிழ் மக்கள் உழைப்பார்கள்.அங்கே அவர்கள் தீண்டத்தகாத அடிமைகளாய்-இனக்குழுவாய் இருப்பார்கள்.பெரு தேசிய இனமாக -பொருளாதார வலுவுள்ளவொரு இனமாக ஐரோப்பியர்கள் இருப்பார்கள்.அவர்களிட்ட இசையை,மொழியை,கலாச்சாரத்தை நுகரும் "கலாச்சார அடிமைகளை"இன்றைய மூன்றாமுலகம் இப்போது தயார் செய்கிறது.

    ஸ்ரீரங்கன்

    ReplyDelete
  3. /// பாச்சை உருண்டை ///

    பாச்சான் உருண்டைன்னு எங்க ஊர்ல சொல்லுவோம்

    ReplyDelete
  4. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் (NCBH) வருடம் தோறும் தமிழ்நாடு முழுவதும் அவர்களுடைய கிளைகள் உள்ள ஊர்களில் புத்தக கண்காட்சி நடத்துவதை விட்டுவிட்டீர்களே...

    //பாச்சான் உருண்டைன்னு எங்க ஊர்ல சொல்லுவோம்//

    அந்துருண்டைன்னும் சொல்றது உண்டு.

    ReplyDelete
  5. http://www.hindu.com/2005/08/22/stories/2005082201090200.htm

    ReplyDelete