Monday, November 21, 2005

ஹைதராபாத், பெங்களூர் கிரிக்கெட் ஆட்டங்கள்

சென்னையில் இப்பொழுது மீண்டும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம். மழை கடுமையாக உள்ளது. நேற்றிரவு முதற்கொண்டே தெருவில் தண்ணீர் தேங்குமளவுக்கு மழை. இன்று சில பள்ளிகளுக்கு விடுமுறை.

நாளை இந்தியா - தென்னாப்பிரிக்கா மூன்றாவது கிரிக்கெட் ஒருநாள் போட்டி இருக்குமா என்பது சந்தேகமே.

முதல் இரண்டு ஆட்டங்கள் நடந்தபோதும் நான் ஊர்சுற்றும் வேலையில் இருந்துவிட்டேன். அதனால் இரண்டையும் சேர்த்து சுருக்கமாக இங்கே.

இலங்கையை 6-1 என்ற கணக்கில் ஜெயித்த இந்திய அணியும் தொடர்ந்து 19 ஒருநாள் போட்டிகளில் தோற்காமல் இருந்த தென்னாப்பிரிக்க அணியும் மோதும் ஆட்டம். இந்த ஆட்டத்தில் இந்தியா கவனமாக ஆடவேண்டும் என்ற நிலை. தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் இலங்கை வீச்சாளர்களை விட திறமை வாய்ந்தவர்கள். தென்னாப்பிரிக்க தடுப்பாளர்கள் உலகிலேயே மிகச்சிறந்த பந்து தடுப்பாளர்கள்.

இந்தியாவின் முன்னணி மட்டையாளர்கள் அனைவருமே ரன்கள் பெற்றிருந்தாலும் புதுப் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் கவனம் இருக்கவேண்டும். டாஸில் ஜெயித்த தென்னாப்பிரிக்கா அணித்தலைவர் க்ராம் ஸ்மித் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். ஷான் போலாக், மகாயா ந்டினி இருவருமே எடுத்த எடுப்பிலேயே இந்திய வீரர்களைத் திக்குமுக்காடச் செய்தனர். ஐந்து ரன்களுக்குள் முதல் மூன்று விக்கெட்டுகள் போயின. திராவிட் - நின்று விளையாட வேண்டியவர் - சற்றும் எதிர்பாராத விதமாக இறங்கி வந்து பந்தைத் தடுக்கு முயற்சி செய்து பந்தை முழுவதுமாக விட்டு ஸ்டம்பை இழந்தார். 'சூப்பர் சப்' கம்பீர் உள்ளே வந்து அதிகம் ரன் அடிக்காமல் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ஆக 12வது ஓவரில் இந்தியா 35-5.

யுவராஜ் சிங்கும் இர்ஃபான் பதானும் ஜோடி சேர்ந்து மேற்கொண்டு விக்கெட் இழக்கமால் ரன்கள் சேர்த்தனர். ரன்கள் வேகமாக வரவில்லை. ஆனால் இந்தியர்களுக்கு வேறு வழியில்லை. நன்றாக விளையாடிக் கொண்டிருந்த பதான் ஆஃப் ஸ்பின்னர் போத்தாவின் பந்துவீச்சில் அவுட்டானபோது 46 ரன்கள் பெற்றிருந்தார். பதான் இந்தியாவின் முக்கியமான ஆல்ரவுண்டராக வருவார்.

யுவராஜும் தோனியும் சேர்ந்து சிறிது வேகமாக ரன்கள் சேர்த்தனர். தோனி தென்னாப்பிரிக்காவின் சிறப்பான பந்து தடுப்பால் ரன் அவுட் ஆனார். பந்துத் தடுப்பாளர்களை ஏமாற்றிவிட்டு ஒரு ரன் பெறுவது, பந்துகளை அவுட்ஃபீல்டில் அடித்துவிட்டு வேகமாக ஓடு இரண்டு ரன்கள் பெறுவது - இரண்டுமே தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சுலபமானதல்ல. ஒருவர் விடாமல் தென்னாப்பிரிக்காவின் பந்துத் தடுப்பாளர்கள் வேகமாக ஓடு பந்துகளை அழகாகத் தடுக்கிறார்கள். அதே கையுடன் பந்தைப் பொறுக்கி, விக்கெட் கீப்பருக்கு எறிகிறார்கள். பலமுறையும் ஸ்டம்பை நேராகக் குறிவைத்தே அடித்துத் தாக்குகிறார்கள். தோனிக்குப் பிறகு அகர்கர் யுவராஜுடன் ஜோடி சேர்ந்து ரன்கள் பெற்றார். இப்பொழுது ரன்கள் பெறும் வேகம் இன்னமும் அதிகமானது. ஆனாலும் 220ஐ இந்தியா எட்டுமா என்பதே சந்தேகமாக இருந்தது.

அகர்கர் அவுட்டானதும் ஹர்பஜன் வந்தார். இப்பொழுது யுவராஜ் வேகமாக அடித்து ரன்கள் சேர்த்தார். தன் சதத்தை எட்டுவதற்கு சற்று முன்னரே நொண்ட ஆரம்பித்தார். திராவிடுக்கு இதுபோன்ற தொல்லைகள் எப்பொழுதுமே உண்டு. உடலிலிருந்து வியர்வை அதிகமாக வெளியேறுவதாலும் தசைப்பிடிப்பு (cramps) அதிகமாவதாலும் வெகுநேரம் பேட்டிங் செய்யும்போது கஷ்டப்படுவார். ஆனால் யுவராஜ் போன்ற இளைஞர்கள் இந்த மாதிரி கஷ்டப்படுவது ஏனென்று புரியவில்லை. ஆனாலும் கொஞ்சம் சுதாரித்து சதத்தைப் பெற்றார். உடனேயே ரன் அவுட். 122 பந்துகளில் 103 ரன்கள் (10x4, 3x6). தென்னாப்பிரிக்காவின் ஆஃப் ஸ்பின்னர் ஜான் போத்தாவை மிகவும் எளிதாக விளையாடினார். வேகம் குறைவாகப் பந்துவீசும் லாங்கவெல்ட், நெல் ஆகியோரையும் பிரச்னையின்றி விளையாடினார்.

ஹர்பஜன் கடைசி ஓவர்களில் ந்டினியையும் நெல்லையும் அடித்து விளாசினார். கடைசி மூன்று ஓவர்களில் 16, 10, 12 என்று ரன்கள் வந்தன. ஹர்பஜன் 17 பந்துகளில் 37* (4x4, 2x6). ஒருவழியாக இந்தியாவின் எண்ணிக்கை ஐம்பது ஓவர்களில் 249/9 என்றானது.

காலையில் 35/5 என்று இருந்தபோது ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்று இருந்த நிலை மதியம் கணிசமாகவே மாறியிருந்தது. ஆனாலும் இந்த ஸ்கோர் போதுமானதில்லைதான்.

தென்னாப்பிரிக்காவின் ஸ்மித் ஆரம்பத்திலிருந்தே மிகவும் ஆவேசமாக விளையாடினார். எப்படியாவது பந்துவீச்சாளர்களை கதிகலங்கச் செய்யவேண்டும் என்று இருந்தது அவரது ஆட்டம். பதான் அவருக்குப் பந்து வீச நிறையத் தடுமாறினார். நல்ல வேளையாக மறுமுனையில் அகர்கர் இரண்டு விக்கெட்டுகளை விரைவாகப் பெற்றார். டி வில்லியர்ஸ் எல்.பி.டபிள்யூ. ஆண்டாங் ஆஃப் ஸ்டம்புக்கு மிக வெளியே செல்லும் பந்தை ஓங்கி வெட்டி அடித்தார். அதை ஸ்லிப்பில் நின்ற திராவிட் நன்றாகப் பிடித்தார். ஸ்மித், நன்றாக விளையாடிக் கொண்டிருந்தவர், ஆர்.பி.சிங்கின் பந்தை ஸ்டம்பை நோக்கி இழுத்து அவுட்டானார்.

இந்தியா காலையில் சூப்பர் சப் கம்பீரை பேட்டிங் செய்யக் கொண்டுவந்ததால் முரளி கார்த்திக்கினால் பந்து வீச முடியவில்லை. பதானும் மிகவும் மோசமாகப் பந்து வீசியதால் இந்தியா சேவாக், டெண்டுல்கர் ஆகியோரை நம்ப வேண்டியிருந்தது. ஆர்.பி.சிங் மிக நன்றாக வீசினார். ஹர்பஜனும் கடந்த ஒரு மாதமாக வீசிக்கொண்டிருப்பதைப் பல ரன்கள் எதையும் தராமல் அற்புதமாக வீசினார். ஜாக் கால்லிஸ், ஆஷ்வெல் பிரின்ஸ் இருவருமே மெதுவாக ரன்கள் சேர்த்தனர். அடுத்தடுத்து பிரின்ஸ், பவுஷர் இருவரும் அவுட்டானாலும் கால்லிஸ், கெம்ப் இருவரும் ஜோடி சேர்ந்து 49வது ஓவரில் இந்திய எண்ணிகையைத் தாண்டினர்.

இந்தியாவின் பேட்டிங் சுதாரித்துக்கொண்டாலும் பவுலிங் ஓரிரு மாற்று குறைவாகவே இருந்தது. அதனால் முதல் சுற்றில் வெற்றி தென்னாப்பிரிக்காவுக்கு.

இரண்டாவது ஆட்டத்தின் நிலைமை தலைகீழ். பெங்களூரில் திராவிட் டாஸ் ஜெயித்து முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். இது பகல்-இரவு ஆட்டம். இரண்டாவது இன்னிங்ஸில் பனி காரணமாக பந்துவீச்சாளர்கள் சிரமப்பட நேரிடும் என்பதால் டாஸ் ஜெயிப்பவர் முதலில் பந்துவீசுவார் என்பதே முன்னரே தீர்மானிக்கப்பட்டது.

இம்முறை பதான் எடுத்த எடுப்பிலேயே ஃபார்முக்கு வந்துவிட்டார். அடுத்தடுத்து தன் முதல் நான்கு ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளைப் பெற்றார். முதல் ஓவரில் டி வில்லியர்ஸ் கால்திசையில் வந்த பந்தை ஸ்கொயர் லெக்கில் நின்ற ஹர்பஜன் சிங் கையில் கேட்சாக அடித்தார். பதானின் மூன்றாவது ஓவரில் ஸ்டம்புக்கு நேராக வந்த பந்தை கால் திசையில் தட்டி ஆட முயன்று பந்தைக் கோட்டை விட்டதில் ஸ்மித் எல்.பி.டபிள்யூ. பதானின் நான்காவது ஓவரில் எங்கோ ஆஃப் ஸ்டம்புக்கு வெகு வெளியில் சென்ற பந்தை ஜாக் கால்லிஸ் துரத்திச் சென்று தோனியிடம் கேட்ச் கொடுத்தார். தென்னாப்பிரிக்கா 20/3.

இந்தியாவின் பிற பந்துவீச்சாளர்கள் தென்னாப்பிரிக்காவின் கழுத்தை நெறிக்க ஆரம்பித்தனர். ரன்கள் எங்கிருந்து வரும் என்றே தெரியவில்லை. அகர்கர், பதான் இருவருமே ரன் அடிக்கும் பந்துகளை வீசவேயில்லை. ஆர்.பி.சிங்கின் பந்துவீச்சு சற்று சுமார்தான். எனவே திராவிட் ஸ்பின்னர்களை அழைத்தார். ஹர்பஜன் சிங் - இந்த சீசனின் இந்தியாவின் தலைசிறந்த பந்துவீச்சாளர் இவர்தான்! - இங்கும் ரன்கள் தரவில்லை. ஆடுகளம் ஸ்பின்னுக்கு சாதகமாக இருந்ததால் கார்த்திக் 10-4-16-0 என்ற அளவில் பந்துவீசியிருந்தார். இது போதுமே திராவிடுக்கு... மிச்ச ஓவர்களை சேவாக், யுவராஜ் ஆகியோரை வைத்து வீசவைத்தார். விக்கெட்டுகளும் சரமாரியாக விழுந்தன.

ஆண்ட்ரூ ஹால், ஆஷ்வெல் பிரின்ஸ் ஆகிய இருவரும்தான் 30ஐத் தாண்டினர். சேவாக், ஹர்பஜன் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளைப் பெற்றனர். யுவராஜ் சிங்குக்குக் கூட ஒரு விக்கெட் கிடைத்தது. கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் அகர்கர் ஒரு விக்கெட்டைப் பெற்றார். தென்னாப்பிரிக்காவால் ஐம்பது ஓவர்களில் 169/9 என்ற ஸ்கோரை மட்டுமே எடுக்க முடிந்தது.

உணவு இடைவேளைக்குப் பின் தென்னாப்பிரிக்கா மிக அற்புதமாகப் பந்துவீச்சைத் தொடங்கியது. சேவாகின் மோசமான ஃபார்மை மனதில் வைத்து கம்பீர் (சூப்பர் சப்), டெண்டுல்கரை தொடக்க ஆட்டக்காரர்களாக அனுப்பினார் திராவிட். முதல் மூன்று ஓவர்களில் ஒரு ரன்னும் இல்லை. அதில் கம்பீர் அவுட்டாகியிருக்க வேண்டும். ஒரு நிச்சயமான எல்.பி.டபிள்யூவை நடுவர் ஜெயப்பிரகாஷ் கொடுக்கவில்லை.

நான்காவது ஓவரில்தான் சில ரன்கள் கிடைத்தன. அதில் ஒன்று வானளாவ தர்ட்மேனில் கம்பீர் அடித்த நான்கு. எட்டு ஓவர்களில் இந்தியா 13/0. இது ஒன்றும் மோசமில்லை. பதினைந்து ஓவர்கள் அமைதியாக விளையாடினால் பின்னர் ரன்கள் தானாகக் கிடைக்கும். ஆனால் டெண்டுல்கர் போலாக்கை மிட் ஆன் மேல் அடிக்கப்போய் மட்டை திரும்பியதால் சரியாக அடிகக் முடியாமல் ராபின் பீட்டர்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து திராவிட் வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வந்தது இர்ஃபான் பதான். நிச்சயமாக பிஞ்ச் ஹிட்டராக இல்லை.

பதான் அமைதியாக விளையாட, மறுபுறம் கம்பீர் எல்லாப் பந்துகளையும் அடிக்கப்போனார். நிறைய பந்துகள் மட்டையில் மாட்டின. சில மாட்டவில்லை. ரன்கள் வந்துகொண்டிருந்தன.

போலாக், ந்டினி ஆகியோரின் மாற்றுப் பந்துவீச்சாளர்கள் அவ்வளவு சரியாக வீசவில்லை. ஆண்ட்ரே நெல் வாய் ஓயாமல் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். கம்பீர் விடவில்லை. ஒரு முறை கம்பீர் நெல்லின் பந்தை அடிக்க, அது விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் தலைக்கு மேலாக எல்லைக்கோட்டுக்குச் சென்றது. நெல் கம்பீரிடம் அதைப்பற்றிப் பேச, கம்பீர் பதிலுக்குப் பேச, நடுவர்கள் இடையிடவேண்டியிருந்தது. இதனால் கம்பீருக்கு எந்த பாதிப்பும் இல்லை. நெல்லின் பந்துவீச்சுதான் மோசமாகப் போனது.

சிறிது சிறிதாக இந்தியாவின் ரன் ரேட் அதிகரித்தது. ஆனால் கம்பீரும் பதானும் தென்னாப்பிரிக்காவின் பந்துத் தடுப்பாளர்களைச் சரியாக எடைபோடவில்லை. பதான் பந்தை கவர் திசைக்குத் தள்ளிவிட்டு ஒரு ரன் எடுக்கப்போனார். ஓடிவந்த ஆண்டாங் பந்தை விக்கெட் கீப்பர் பவுஷரிடம் கொடுக்க கம்பீர் ரன் அவுட் ஆனார்.

நான்காவதாக உள்ளே வந்தவர் சேவாக். இவர் வரும்போது நெல்லும் போத்தாவும்தான் பந்து வீசிக்கொண்டிருந்தனர். இந்தப் பந்துகளை எதிர்கொள்வதில் சேவாகுக்கு எந்த சிரமமும் இல்லை. எளிதாக ரன்கள் பெற்றார். மீண்டும் ஒரு ரன் அவுட் வந்துதான் இந்த ஜோடியைப் பிரித்தது. சேவாக் பந்தை கால்திசையில் தட்டிவிட்டு ஓட, ஆண்டாங் மீண்டும் பந்தை எடுத்து ஸ்டம்பைத் தட்டி பதானை ரன் அவுட்டாக்கினார். பதானின் நெல்லின் பந்தில் நேராக லாங் ஆஃப் மீது அடித்த சிக்ஸ் நினைவில் நிற்கும்!

அடுத்து திராவிட் உள்ளே வந்தார். கொஞ்சம் off-colour. ஆனால் சேவாக் முழு ஃபார்மில்.

ஆண்டாங் பந்தில் திராவிட் ரிடர்ன் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஓர் ஓவர் கழிந்து அடுத்த ஆண்டாங் ஓவரில் சேவாகும் யுவராஜ் சிங்கும் மூன்று பவுண்டரிகளை அடித்து ஆட்டத்தை முடித்துவிட்டனர். சேவாக் 62 பந்துகளில் 77* (11x4).

முதல் ஆட்டத்தில் யுவராஜுக்கும், இரண்டாவது ஆட்டத்தில் பதானுக்கும் ஆட்ட நாயகன் விருதுகள். மூன்றாவது ஆட்டத்தின் நாயகன் மழைதான்!

முதல் ஆட்டம் ஸ்கோர்கார்ட் | இரண்டாம் ஆட்டம் ஸ்கோர்கார்ட்

1 comment:

  1. சுருக்கமே இவ்வளவு விரிவாக இருக்கிறதே! அப்ப விரிவாக என்றால்...

    ReplyDelete