இந்தியா தோற்றது. கடைசியாக இலங்கைக்கு ஒரு வெற்றி. ஆனால் இந்த ஆட்டத்தில் இந்தியாவின் பக்கத்திலிருந்து பல நல்ல விஷயங்களை என்னால் கவனிக்க முடிந்தது. ஒரு மாறுதலுக்கு அவற்றைப் பற்றி மட்டும்தான் எழுதப்போகிறேன்.
சுருக்கமாக ஆட்டத்தைப் பற்றி. இந்தியா அணியில் மூன்று மாறுதல்களைச் செய்திருந்தது. டெண்டுல்கருக்கு பதிலாக கவுதம் கம்பீர். ஹர்பஜன் சிங்குக்கு பதிலாக முரளி கார்த்திக். இர்ஃபான் பதானுக்கு பதிலாக ஆர்.பி.சிங். ஸ்ரீசந்த், சுரேஷ் ரெய்னா அணியில். ஜே.பி.யாதவ் சூப்பர் சப். இலங்கை அணியில் கல்யாணப் பையன் ஜெயவர்தனே மீண்டும்.
இலங்கை டாஸில் வென்று முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இரவு நேரம் பனி அடர்ந்திருக்கும் என்றும் அதனால் இரண்டாம் இன்னிங்ஸில் பந்து வீசுவது கஷ்டமாக இருக்கும் என்றும் கடந்த இரண்டு ஆட்டங்களிலுமே டாஸ் ஜெயிக்கும் அணி பந்து வீசுவது வாடிக்கை. அதைத்தான் இலங்கையும் செய்தது. கம்பீர் பிரமாதமாக ஆரம்பித்தார். கடைசியில் கம்பீர், திராவிட் தவிர யாரும் ரன்கள் பெறவில்லை. இவர்கள் இருவரும் சதமடித்தனர். 285 ரன்களை 50 ஓவர்களில் பெற்றனர். இலங்கை அணிக்காக திலகரத்னே தில்ஷன், ரஸ்ஸல் ஆர்னால்ட் இருவரும் ஆறாவது விக்கெட்டுக்கு அமைதியாக விளையாடி ஆட்டத்தை ஜெயித்துக் கொடுத்தனர்.
எனக்கு இன்றைய இந்தியர்கள் ஆட்டத்தில் பல விஷயங்கள் பிடித்திருந்தன. முதலில் கவுதம் கம்பீரின் ஆட்டம். வெகு காலம் கழித்து ஒருநாள் ஆட்டம் ஆடுகிறார். பயமின்றி விளையாடினார். ஒருமுறை ஹூக் செய்யப்போய் சங்கக்காரவிடம் கேட்ச் கொடுத்தார். விடுபட்டது. அதைத்தவிர வேறெந்தத் தவறுகளும் செய்யவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களை இறங்கி வந்து அடித்தார். டிரைவ், புல், ஹூக், கட் என்று எல்லா ஷாட்களையும் நன்றாகவே விளையாடினார். பந்துக்கு ஒரு ரன்னை விட அதிகமாக அடித்துக்கொண்டிருந்தார்.
அடுத்து திராவிடின் ஆட்டம். நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது. நேற்று கடைசிவரை இருந்து மறுபக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், கால் நரம்பு இழுத்துக்கொண்டாலும் விடாது ரன்கள் பெற்றார். அவரது முதல் ஸ்டிரெய்ட் டிரைவ், கடைசி புல் (இதன் மூலம் சதத்தைப் பெற்றார்), இரண்டுமே அற்புதம். இந்திய அணியின் பந்துவீச்சின் போது இவர் பங்கேற்கவில்லை. சேவாகை தலைமையேற்க வைத்தார்.
அடுத்து சேவாகின் தலைமை. இந்தியா தோற்றாலும், சேவாக் திறமையாகவே பந்துவீச்சில் மாற்றங்களையும் தடுப்பு வியூகங்களையும் அமைத்தார். அனைவருடனும் பேசிக்கொண்டிருந்தார் - நடுவர்களுடன் கூட. மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டார். இந்தியாவின் எதிர்கால கேப்டன் இவர்தான். பந்து வீச்சாளர்களின் அனுபவக் குறைவால் இந்திய அணி தோற்க நேர்ந்தது வேறு விஷயம்.
அடுத்து இந்தியாவின் இரண்டு இளம் வேகப்பந்து வீச்சாளர்கள். ஸ்ரீசந்த், ஆர்.பி.சிங். என்னை மிகவும் கவர்ந்தவர் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங். நல்ல வேகம். அத்துடன் நல்ல அணுகுமுறையும் கூட. குட் லென்த், அளவு குறைந்த பந்து இரண்டையும் நன்றாக வீசினார். பந்து நன்றாக எழும்பி வருகிறது. தொடக்கத்தில் ஜெயசூரியா, சங்கக்கார இருவரையுமே தடுமாற வைத்தார். சங்கக்கார விக்கெட் இவருக்குக் கிடைத்திருக்க வேண்டியது. சரியான ஸ்லிப் ஃபீல்டர் இல்லாத காரணத்தால் கம்பீர் கேட்சை விட்டார். ஸ்ரீசந்த், மோசமில்லை. ஆனால் அவ்வப்போது நான்குகளைக் கொடுத்து விடுகிறார். இருவருமே குறைவாகத்தான் ஸ்விங்கைப் பயன்படுத்துகிறார்கள்.
ஏமாற்றம்: முரளி கார்த்திக் இன்னமும் சிறப்பாகப் பந்து வீசியிருக்கலாம். ஹர்பஜன் சிங் இல்லாதது இந்தியாவின் வெற்றியைப் பாதித்தது.
அடுத்து ஃபீல்டிங். இந்தியாவின் பந்துத் தடுப்பு அற்புதமாக இருந்தது. கடந்த பதினைந்து வருடங்களாக இந்தியா விளையாடும் எண்ணற்ற ஆட்டங்களைப் பார்த்திருக்கிறேன். நேற்று போல ஒருநாள் ஆட்டத்தின் இந்தியா இதுவரை ஃபீல்டிங் செய்ததில்லை. சுரேஷ் ரெய்னா ஃபீல்டிங்கை யுவராஜ், காயிஃபை விட ஒருபடி மேலே எடுத்துச் சென்றார். வேணுகோபால ராவ் ஸ்லிப்பின் இரண்டு அற்புதமான கேட்ச்களைப் பிடித்தார். வேணுகோபால ராவ், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் மூவரும் கவர் - பாயிண்ட் திசையில் இணைந்து அற்புதமாகத் தடுத்து விளையாடினர். திராவிட் ஸ்லிப்பில், காயிஃப் அணிக்குள் என்றால் இந்திய அணியின் தடுப்பு ஒன்றின் மூலமாகவே 30 ரன்கள் சேமிக்கலாம். நேற்று தோனி கூட ஓடிச்சென்று எல்லைக்கோட்டுக்கு அருகே ஒரு பந்தைத் தடுத்தார்! கம்பீர் மோசமில்லை.
நேற்றைய ஆட்டத்தில் கார்த்திக்கு பதில் ஹர்பஜன் விளையாடியிருந்தால் இந்தியா ஜெயித்திருக்கும் என்பது என் கணிப்பு.
இப்பொழுது இலங்கையைப் பற்றி. இலங்கை மோசமான அணி இல்லை. நேற்று இந்தியா சற்றே அனுபவக் குறைவுடைய அணியைக் களமிறக்கியதாலும் திராவிடால் அணியை வழிநடத்த முடியாததாலும் இலங்கையின் வாய்ப்புகள் அதிகமாயின. தில்ஷன் நன்றாகவே விளையாடினார். ஆட்ட நாயகர் விருதுக்கு முற்றிலும் தகுதியானவர். ஆனால் சங்கக்கார, அட்டபட்டு, ஆர்னால்ட், தரங்கா என அனைவரும் அவருக்கு உதவியாக ரன்கள் சேர்த்தனர்.
காலையில் பந்துவீச்சில் முதலில் சோய்ஸாவும், பின்னர் மஹரூஃபும் அவ்வப்போது விக்கெட்டுகளைப் பெற்ற வண்ணம் இருந்தனர். தோனி பூஜ்யத்துக்கு அவுட்டாவது நடப்பதுதான். முதல் பந்து, ஸ்விங் ஆகி வந்தது. ஆனால் யுவராஜ் சிங்கின் ஃபார்ம் கவலையைத் தருகிறது. வேணுகோபால ராவ், சுரேஷ் ரெய்னா இருவருக்கும் இன்னமும் சிறிது கவனம் தேவை.
அடுத்த ஆட்டம் சுவாரசியமாக இருக்கும்.
ஸ்கோர்கார்ட்
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதிக்கு வணக்கம்
4 hours ago
இந்தியாவிற்கு, இரண்டாம் நிலை அணி (டீம் 'பி') தயார் போலத் தெரிகிறதே!?
ReplyDeleteLooks like thanu, usha and Srikanth did not write more on the Delhi blasts. So, please do not ban them. The threat that they will be banned itself works.
ReplyDeleteThanks