Sunday, November 27, 2005

குறும்படங்கள் பற்றி...

மொத்தம் பார்த்த 6 படங்களை மூன்று குழுக்களாகப் பிரிப்பேன். உமேஷ் குல்கர்னி இயக்கிய கிர்னி, ரிக் பாசுவின் Pre Mortem இரண்டும் - டாப் கிளாஸ். அடுத்து ரிக் பாசுவின் 00:00, முத்துக்குமாரின் பர்த்டே. அடுத்து அஜிதாவின் The Solitary Sandpiper, மாமல்லனின் இடைவெளி.

கடைசி இரண்டிலும் கதை எனக்குச் சரியாகப் புரியவில்லை. ஒருவேளை பிறருக்குப் புரிந்திருக்கலாம்.

முதலில் கிர்னி. இந்தப் படம்தான் கடைசியாகக் காண்பிக்கப்பட்டது. ஆனால் மனதை விட்டு இப்பொழுதும் நீங்கவில்லை. பூனா அல்லது மும்பையில் (இடம் சரியாகப் புரியவில்லை) உள்ள ஓர் ஏழைக்குடும்பம். உதிர்ந்து கொட்டவிருக்கும் அடுக்ககத்தில் வசிக்கும் அந்தக் குடும்பத்துக்கு சம்பாதிக்கும் தந்தை இல்லை. தாய் தன் ஒற்றை மகன், வயதான தந்தை (அல்லது மாமனார்) ஆகியோரைக் காக்கவேண்டும். வேலை ஏதும் கிடைக்காத நிலையில் வீட்டில் மாவரைக்கும் இயந்திரம் ஒன்றைக் கொண்டுவருவதன் மூலம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார். பள்ளிக்கூடம் போகும் சின்னப்பையன் மனதை அந்த மாவரைக்கும் இயந்திரத்தின் (கிர்னி) சத்தம் எப்படி பாதிக்கிறது என்பதுதான் கதை. சின்னப்பையனின் காதுகளின் கிர்னியின் சத்தம் எப்பொழுதும் ரீங்கரிக்கிறது.
தாய்க்கு மாவரைக்க உதவி செய்வதில், மாவுப் பாத்திரங்களை அதற்குரியவர் வீடுகளுக்குக் கொண்டு கொடுப்பதில், அவர்களிடமிருந்து பணம் வசூலிப்பதில் ஈடுபடுகிறான் சின்னப்பையன். தன் வயதொத்த பையன்களுடன் விளையாட முடிவதில்லை. பள்ளியில் பாடம் நடக்கையில் பையனால் அதைக் கவனிக்க முடிவதில்லை. தூங்கி வழிகிறான். வீட்டுப்பாடம் செய்யாததனால் பள்ளியில் தண்டனைக்கு ஆளாகிறான். பிற சிறுவர்களின் கேலிக்கு ஆளாகிறான். அவனது புத்தகங்கள், நோட்டுகளில் மாவு படிந்திருப்பதை வைத்து அவற்றைத் தூக்கிப்போட்டு விளையாடும் பிற பையன்களின் சேட்டைகள் சின்னப்பையனின் மனதை வெகுவாகப் பாதிக்கின்றன.

அன்றுதான் தாய் அந்த மாவு இயந்திரத்தின் கடைசி இன்ஸ்டால்மெண்டைக் கட்ட வங்கி சென்றிருக்கிறார். வீடு திரும்பிய பையன் வெறி பிடித்தவன் போல அந்த கிர்னியை நொறுக்கி தான் வசிக்கும் மாடியிலிருந்து கீழே தள்ளி முடிக்கிறான். அதே நேரம் அந்த மாவு இயந்திரத்தைத் தன் முழுச் சொந்தமாக்கிக்கொண்ட பெருமை முகம் கொள்ளாமல் தாய் வீட்டுக்குள் நுழைகிறாள். உள்ளே கண்ணில் கண்ணீருடன் பையன் சுவரோடு சேர்ந்து நின்று கொண்டிருக்கிறான்.

25 நிமிடங்களுக்குள் இந்தப் படத்தில் தாய், மகன் இருவரது முகங்களும் எத்தனை எத்தனை கதைகளைச் சொல்லிவிடுகின்றன? ஓர் ஓரத்தில் வயதான, படுக்கையோடே கிடக்கும் அசையாத கிழவர் மாறாத ஏழைமைக்கு ஒரு குறியீடு போலக் காட்சியளிக்கிறார்.

ரிக் பாசுவின் Pre Mortem இன்றைய நவீன இந்தியாவைப் பற்றிய கதை. படு வேகமாக நடக்கும் இந்தக் கதையில் பல விஷயங்கள் தொடப்படுகின்றன. கால் செண்டரில் பாப் என்ற பெயரை வைத்துக்கொண்டு டெக்சாஸ் வாடர் வொர்க்ஸ் கஸ்டமர் சர்வீசுக்காக அழைப்புகளை ஏற்பவன். அவனது 'வாடர்' உச்சரிப்பைச் சரி செய்யும் மேலதிகாரி. சதா வேலை வெலையென்று இருக்கும் கம்ப்யூட்டர் நிபுணன். அவனது இயந்திரமயமான வாழ்க்கையை வெறுக்கும் பொறுமையில்லாத மனைவி, ஒரு வீடியோப் படத்தை வைத்துவிட்டு வீட்டைவிட்டு ஓடிப்போகிறாள். கால் செண்டர் ஆசாமி இரட்டை வாழ்க்கை, தனிமை ஆகியவற்றால் உந்தப்பட்டு மனம் குலைந்து நவீன இயேசு கிறிஸ்துவாக தன்னைச் சிலுவையில் அறைந்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாகச் சொல்வதோடு அதனை வெப்கேம் வழியாக உலகெங்கும் காண்பிக்கப்போவதாகவும் அறிவிக்கிறான். அதனைப் பற்றி பத்திரிகையில் எழுத விரும்பும் ஒரு பெண் இதழாளர் - முதலில் நியூஸ் என்ற காரணத்துக்காக மட்டுமே அதனைப் பின்தொடர்ந்தாலும் பின் அந்தத் தற்கொலையைத் தடுக்க விரும்புகிறாள். கடைசியாக சில திருப்பங்களுடன் தற்கொலை தடுக்கப்படுகிறது.

மேற்சொன்ன இரண்டு படங்களும் படமாக்கப்பட்ட விதம் அற்புதமாக இருந்தது. திரைக்கதையின் அடர்த்தி, எடிடிங்கின் தரம், சினிமடோகிராபியின் தரம், நடிப்பு, லொகேஷன், கலை - எல்லாமே வியக்கத்தக்க வகையில் இருந்தன.

பிற படங்கள் பற்றி பிறகு எழுதுகிறேன்.

7 comments:

  1. கிர்னி மாதிரி சில படங்களைப் பார்த்திருக்கிறேன். அதனால் அது என்னை அத்தனை கவரவில்லை. ( ரொம்ப ஸ்ட்ரெய்ட்டா இருந்து :-) ) 00:00 தான் என்னோடோ முதல் சாய்ஸ்.. ரொம்ப சூட்சுமான விஷயம். படத்துல வர அந்த நாலு ஜோடிப் பாத்திரங்களையும் ரிகலக்ட் செஞ்சுப் பார்த்தால், சட்டுன்னு புரியவரும்... பக்கத்து ரூமில் இருந்து வர வினோதமான முக்கல் முனகல் சத்தத்தை கேட்கிற ஒரு விடலை, குறட்டை விடுகிற கணவனை எழுப்ப முயற்சி செய்து , முடியாமல், கண்ணாடி தம்ளரில் பக்கத்து ரூம்காரனுக்கு சிக்னல் குடுக்கும் மாது, மொபைல் போனில் கேம் ஆடும் சின்னப் பெண்ணை கடிந்து கொள்ளும் ஒருவன், கர்ப்பம் என்று தெரிந்ததும் கழட்டி விடப்பார்க்கும் ஒரு dude :-).. எல்லாமே mismatch.. கடேசில என்ன ஆகுது? தாழ்வான இடத்தை நோக்கி தண்ணி பாயுது :-). இந்த விஷயத்தை, ஜெயமோகன் மாதிரி முப்பது பக்கத்துல எழுதலாம். ஆனால், wrik basu வோட விஷ¤வல்ஸ் சில நிமிஷங்களில் அதைச் சொல்லிடுது.. இன்னும் நல்லா எடுத்திருக்கலாம் தான்.. இருந்தாலும், மிக நல்ல முயற்சி..

    pre-mortem நல்ல படம்... ஆனால், அந்தப் படத்தை உருவாக்கினவங்க, கொஞ்சம் பெரிய கைங்க.. ஹீரோவோ நடிச்சவன், மராத்திய தியேட்டர் ஆசாமி... டிப்ளமா பசங்க படங்க கூட அதை ஒப்பிட முடியாது..

    தமிழ்ப்படங்கள் ரொம்ப ஏமாற்றத்தை தந்தது... ஒரு ஷாட்டிலே சொல்லலாங்கிற விஷயத்தை எல்லாம் நீள நீளமா voice over போட்டு... ஹ்ம்ம்ம்... நாம இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டி இருக்கு....

    மத்த படங்களைப் பத்தியும் எழுதுங்க... பின்னூட்டப் பொட்டியிலே வந்து ஜாய்ன் பண்ணிக்கிடுறேன்...

    ReplyDelete
  2. பத்ரி, குறும்படங்களுக்கு சென்சார் கிடையாதா? ஒரு சில படங்களின் வசனங்களை வைத்து கேட்கிறேன்?

    ReplyDelete
  3. 00:00 பற்றி அடுத்த பதிவில் வரும்.

    கண்ணாடி தம்ளர் சிக்னல் தற்செயலாக நடக்குது. அது பின் ஆசையா மாறி அடங்காமப் போகுது.

    இந்தப் படத்தை ஏன் விளக்கமா உங்க பதிவுல எழுதக்கூடாது?

    ===

    விஜய்: சென்சார் பொதுவில் சினிமா தியேட்டர்களில் திரையிடப்படும் படங்களுக்கு மட்டும்தான் தேவை.

    ReplyDelete
  4. பத்ரி,

    நானும் குறும்படங்களை பார்த்தேன். இதுதான் இது போன்ற குறும்பட விழாக்களில் என் முதல் அனுபவம். ஆனால் மழை குறுக்கிட்டதால் 20 நிமிடம் தாமதமாகி முதல் படத்தை(The Solitary Sandpiper) பார்க்க இயலவில்லை.

    கிர்னி,premortem , 00.00 மூன்று படங்களும் ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது. பிறந்த நாள் OK ரகம் தான். உண்மையில் மாமல்லனின் "இடைவெளி" பார்க்கும் போது நமக்கு பொருத்தமில்லாத இடத்துக்கு வந்து விட்டோமோ என்ற உணர்வு மேலொங்கியது உண்மை. உங்கள் பதிவை பார்த்தபின் எனக்கு என் ரசனையின் மேல் கொஞ்சம் நம்பிக்கை வந்தது நிஜம்(!!!!!!).

    Pre-mortemமில் தொலைக்காட்சியை pause செய்வது போலவும்,PC monitor OFF செய்தால் ஒலி நின்று போவது போலவும் வரும் காட்சிகள் அறிவியல் ரீதியான இயக்குனரின் கற்பனையை காட்டுகிறதா இல்லை பொதுவாக காட்சியின் நீளம் கருதி குறும்படங்களில் வரும் வழக்கமான நிகழ்வுகள் தானா??

    மொத்தத்தில், கிர்னியில் அந்த சிறுவனின் நடிப்பும், காட்டப்பட்ட உணர்வுகளும், கிர்னியின் சத்தமும், 00.00வில் வரும் அந்த கண்ணாடி வழி மொழியும் நல்ல அனுபவத்தை தந்தது நிஜம்.

    தகவலுக்கு நன்றி.

    --விக்னேஷ்

    ReplyDelete
  5. //,PC monitor OFF செய்தால் ஒலி நின்று போவது போலவும் வரும் காட்சிகள் அறிவியல் ரீதியான //

    கவனிச்சேன். எந்த மழுப்பலும் இல்லாமச் சொல்லலாம். அது தப்புதான்.

    //மாமல்லனின் "இடைவெளி" பார்க்கும் போது நமக்கு பொருத்தமில்லாத இடத்துக்கு வந்து விட்டோமோ என்ற உணர்வு மேலொங்கியது உண்மை.//

    வருகின்ற குறும்படங்கள் பலவும், 'பயமுறுத்துவதற்காகவே' எடுக்கப்படுகின்றன. ' இடைவெளி' யும் அது போலத்தான். அந்தப் படத்தின் காட்சிகள் உங்கள் நினைவில் இருந்தால், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். காட்சி முடிவில் தான் அந்த ஆண்கள் இருவரும் ஒரே அறையில் வசிப்பவர்கள் என்று புரிகிறது. இந்த விஷயத்தை ஆடியன்ஸிடம் இருந்து மறைத்து ஒன்றும் ஆகப்போவதில்லை. முதலிலேயே, இதை ஒரு காட்சி மூலமாகச் சொல்லிவிட்டிருந்தால், இவன் யாரு, அவன் யாரு.. அவனுக்கும் இவனுக்கு என்ன தொடர்பு என்று குழம்பி, படத்தை கோட்டை விடமாட்டார்கள். படம் முடிந்ததும். ' இந்த எளவை மொதல்லயே சொல்லித் தொலைக்கறதுக்கு என்ன?' என்று கோபம் வரும்.

    இந்தப் படம், ஆத்மாநாமின் ஒரு கவிதையை ஒட்டிப் படமாக்கப் பட்டிருக்கிறது. ஆத்மாநாம் கவிதை என்று மட்டுமில்லை, நல்ல கவிதை, படிமங்களை உள்ளடக்கியதாக இருக்கும். கவிதை, மேல்போக்காக ஒரு சில விஷயங்களைச் சொல்கிறது. ஆழ்ந்து படித்தால் வேறு சில அர்த்தங்களை தருகிறது.அது போலத்தான் இந்தப் படமும். கை ஒடிந்து மாவுக்கட்டு போட்டிருக்கிற ஒரு ஓவியன், அவனுக்கு குழந்தைகளுக்கு வாத்தியாராக இருக்க ஆசை. சிகரட்டு பிடிப்பான். மாட்டினி ஷோவுக்கு காலையிலேயே போய் உட்கார்ந்து கொள்வான். இன்னொருவன், காதலியிடம் கோபித்துக் கொண்டிருப்பவன். கனவில், சம்போகத்துக்கு முயற்சி செய்து திடுக்கிட்டு எழுந்து கொள்பவன். இவர்கள் இருவரும் ஒரே அறை வாசிகள். கை ஒடிந்தவனுக்கு, ரூம்மேட்டுடன் தற்பால் புணர்ச்சியில் ஈடுபடுவது போன்ற கனவு வருகிறது. அவர்கள் இருவரும் அப்படிப்பட்டவர்களா? தெரியாது. இந்தக் காட்சிகளை, ஆத்மாநாம் போன்ற கவிஞர், எழுத்திலே மிக அழகாகச் சொல்லி இருக்கக் கூடும். அதே impact க்கு மாமல்லன் போன்ற ஆரம்ப நிலை கலைஞர்கள் ரொம்பவும் மெனக்கெட்டிருக்க வேண்டும். செய்ய வில்லை.

    எதற்காக, குறும்படம் எடுப்பவர்கள், கவிதையைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள் என்று புரியவில்லை. எத்தனையோ, நல்ல சிறுகதைகள் இருக்கின்றன.

    ReplyDelete
  6. விக்னேஷ்: ப்ரி மார்டெமில், அது விடியோ, அதனால் பாஸ் செய்ய முடியும். மனைவி விட்டுவிட்டுப்போன விடியோ.

    ஆனால் மானிடரை ஆஃப் செய்தால் சத்தம் கேட்காமல் இருக்குமாறு செய்வது தவறு. எடிடிங்கில் கவனிக்கவில்லை.

    ReplyDelete
  7. மாமல்லனின் Distance வெவ்வேறு மனநிலைகளில்(தளங்களில்) உள்ள ஓவியன்,இளைஞன்,இளைஞி மாநகரத்தில் வாழ்கிறார்கள்
    என்பதை சொல்லுகிறது.Inspiration இல்லாத கால கட்டதில் உள்ள கையொடிந்த(படிமம்) ஒவியனுக்கு கனவுகள்,டீ கடை ,தம்,மேட்னி சினிமா
    இளைஞனுக்கு காதல் ,டீ கடை ,தம்,Internet.இளைஞிக்கு பார்டைம் காதல் ,வேலை,முயற்சிகள்,T.V பார்த்தல் என்று வாழ்க்கை நகருகிறது.
    ஓவியன் குழந்தைகள் வரைந்த படங்கள் மூலம் தன்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயற்ச்சிக்கிறான்.இளைஞி வெளிநாடு செல்லுகிறாள்.
    இளைஞன் விரக்தியில் அலைகிறான்.



    இதில் ஆத்மநாமின் கவிதைகள் visual ஆக சொல்லவில்லை ,கையாளப்படுவது மட்டுமே.

    Editing, frame compostion, கனவு காட்சிகள் படமாக்காபட்ட விதம் அருமை.


    ஜபருல்லா

    ReplyDelete