Tuesday, January 06, 2009

நான் எடிட் செய்த புத்தகம் - 4: கலீஃபா உமர் இப்ன் அல்-கத்தாப்

உமர்: செங்கோல் இல்லாமல் கிரீடம் இல்லாமல்

இந்தப் புத்தகம் பற்றி நான் ஏற்கெனவே எழுதிவிட்டேன். முதல் பகுதி இங்கே.

இஸ்லாத்தில் விபசாரம் செய்த பெண்ணை கல்லால் அடித்துக் கொல்லுதல் வழக்கம். ஆனால், உமரின் வாழ்க்கையில் நடந்ததாகச் சொல்லப்படும் இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள். விபசாரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை உமர் முன் அழைத்து வருகின்றனர். அப்போது அங்கு அலியும் இருக்கிறார்.
அந்தப் பெண்ணிடம் கலீபா கேட்டார்: ‘இக்குற்றத்தை நீ செய்தாயா?’

‘செய்தேன்.’

அந்தப் பெண் ஒப்புக்கொண்டாள். திருமணமானவள். கல்லெறிந்து கொல்வதுதான் அதற்கான தண்டனை. திருமணமாகாத பெண்ணாக இருந்தால் பகிரங்கமான கசையடி கொடுத்துத் தவிர்த்துவிடலாம். தகுந்த தண்டனைக்கு உத்தரவு இடப்பட்டது.

தண்டனை மேடைக்கு அவளைக் கொண்டுபோக ஆயத்தமான போது அலி கூறினார்: ‘குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால்...’

கலீபா கேட்டார்: ‘என்ன... சொல்ல வந்ததை நிறுத்தி விட்டீர்கள்?’

‘எனக்கு ஒரு வேண்டுகோள் உள்ளது.’ அலி தெளிவுபடுத்தினார். ‘இச்செயலைச் செய்ய அவளைத் தூண்டியது எதுவென அறிந்து கொள்ளக்கூடிய பொறுப்பு நமக்கு உள்ளது.’

‘சரிதான்.’ கலீபா உடன்பட்டார். அப்பெண்ணிடம் விசாரித்தார். ‘எதற்காக இந்தக் கொடிய செயலைச் செய்தாய்?’

‘நான் அபலை. என் அயல்வாசியின் வீட்டில் நிறைய ஒட்டகங்களும் குடிநீரும் உள்ளன. நானும் என் குழந்தைகளும் தண்ணீர் இல்லாமல் தவித்தோம். உடலில் நீர்த்தன்மை குறைந்து, தொண்டை வறண்டு மயங்கி விழும் நிலை ஏற்பட்டபோது, தண்ணீருக்காக அவனிடம் மன்றாடினோம். எனது உடலைத் தரவேண்டும் என்றான். இல்லாவிட்டால் ஒரு துளி தண்ணீரைக்கூடத் தரமுடியாது என்று உறுதியாக மறுத்துவிட்டான். இறுதியில் என் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஒருபோதும் விரும்பாத...’

அந்த வார்த்தைகளை முடிக்காமல் அப்பெண் வாய்விட்டு அழுதாள். அதைக் கேட்டக் கலீபாவின் கண்கள் நனைந்தன. குரல் நெகிழ குர்ஆனின் ஒரு பகுதியைப் படித்தார். ‘எவரேனும் ஒருவன் நீதிக்குப் புறம்பானது எனத் தெரியாமல், மனப்பூர்வமாக அல்லாமல், ஒரு செயலைச் செய்தால் அவன் தவறிழைத்தவன் அல்லன். இறைவன் மிகப் பொறுமைசாலியாகவும் இரக்க குணம் படைத்தவனாகவும் உள்ளான்.’

பிறகு, அப்பெண்ணிடம் சொன்னார்: ‘சகோதரி! உண்மையான குற்றவாளி நீ அல்ல. நீ நிரபராதி. உன்னைக் குற்றத்திலிருந்து விடுவிக்கிறேன்.’

இத்துடன் முடிந்துவிடவில்லை. தண்ணீர் தராமல் அவளைத் தீய செயலுக்குத் தூண்டிய ஆளை வரவழைத்து விசாரணை நடத்தி நீதியின் மொழியில் தண்டித்தார்.
ஆனால் எந்த அளவுக்கு நடைமுறையில் இதுபோன்ற தீர்ப்பு கூறல் இஸ்லாமிய நாடுகளில் நடக்கின்றன என்று தெரியவில்லை.

கலீஃபா உமர், தொழுகை நடந்துகொண்டிருக்கும்போது யூதன் ஒருவனால் குத்தப்பட்டு, உயிர் இழக்கும் தருவாயில் உள்ளார். அவர் இறந்தவுடன் முகமது, முதல் கலீஃபா அபுபக்கர் ஸித்திக் ஆகியோருக்கு அருகில் தன்னை அடக்கம் செய்யவேண்டும் என்பது உமரின் விருப்பம். ஆனால் அந்த நிலம் முகமதுவின் துணைவியருள் ஒருவரான ஆயிஷாவுக்குச் சொந்தமானது. ஆயிஷா இதற்கு ஏற்கெனவே அனுமதி அளித்திருந்தார். ஆனாலும் இறக்கும் நிலையில் தன் மகனை அனுப்பி, மீண்டும் ஆயிஷாவிடம் அனுமதி பெறுமாறு கேட்டுக்கொள்கிறார்.

ஏனெனில் முன்னர் அவர் அனுமதி பெற்றபோது, அவர் ஆட்சியாளராக இருந்தார். அதனால் அதிகாரத்துக்குக் கட்டுப்படும் வகையில் ஆயிஷாவிடமிருந்து அனுமதி கிடைத்திருக்கலாம். ஆனால் இப்போதோ அவர் சாதாரண மனிதன்.

ஆயிஷாவிடமிருந்து அனுமதி கிடைக்கிறது: ‘அனுமதி என்றோ தரப்பட்டுவிட்டதே! ஒரு காம்பில் மலர்ந்த மூன்று மலர்கள். அவை மலர்வதும் உதிர்வதும் ஒருசேர இருக்கவேண்டும். ஒருபோதும் வாடாத, ஒரு போதும் நறுமணம் குன்றாத பூக்கள்! அந்த நறுமணம் என்றென்றும் இவ்வுலகில் மட்டுமல்ல, பரலோகத்திலும் நன்மையாக, சிநேகமாக, தியாகமாக, விடுதலையின் வழியாக வியாபிக்கவேண்டும்.’

***

இந்தப் புத்தகம் குறித்து நான் ஒன்றைச் சொல்லமுடியும். மலையாளத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதே தெரியாத அளவுக்கு நிர்மால்யா வேலை செய்திருக்கிறார். அவர் விட்டிருந்த இடத்தை நான் சரி செய்துள்ளேன். இதை நான் உறுதியாகச் சொல்லமுடியும்.

பொதுவாக மொழிமாற்றல் புத்தகங்களில் மிகப்பெரிய சவாலே இதுதான். நாங்கள் ஏற்கெனவே கொண்டுவந்திருந்த ‘உயிர்ப் புத்தகம்’ என்ற புத்தகத்தை மீண்டும் எடிட் செய்து, இப்போது கொண்டுவந்துள்ளேன். அதில் ஆங்காங்கே ‘மொழிமாற்றம்’ என்று தெரியும் இடங்களையெல்லாம் சரி செய்துள்ளேன்.

இதுவரையில் நாங்கள் வெகு சில மொழிபெயர்ப்பு நூல்களையே செய்துள்ளோம். அவை எதிலுமே எனக்கு முழு திருப்தி என்று சொல்லமுடியாது. ஆனால் வரும் ஆண்டு, 2009-ல் நிறைய (கடுமையான வேலை வாங்கக்கூடிய) நூல்கள் இப்படி மொழிமாற்றத்தில் வரும். உதாரணம் - எஸ்.முத்தையாவின் Madras Rediscovered, ராமச்சந்திர குஹாவின் India After Gandhi, பல்லவி அய்யரின் Smoke and Mirrors, பராக் ஒபாமாவின் Dreams From My Father, பிறவும். இப்படி... அவற்றைப் படிக்கும்போது தமிழிலேயே எழுதப்பட்ட உணர்ச்சியைத் தோற்றுவித்தால்தான், அந்த மொழிபெயர்ப்பு சிறந்தது என்று ஏற்றுக்கொள்ளலாம். அதை அடைகிறோமா என்று பார்ப்போம்.

3 comments:

  1. மொழிமாற்று என்பது சிறப்பாக வர வேண்டுமென்றால் எழுதப்பட்ட மூல பதிப்பிற்கு நேர்மையாக இருக்க கூடாது என்பது என் கருத்து. கருவும் ஆசிரியர் கொண்டு வர முயன்ற தாக்கமும் தான் மொழிபெயர்ப்பாளனின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.

    ReplyDelete
  2. //ராமச்சந்திர குஹாவின் India After Gandhi//

    ஆகா!..நன்றி நன்றி :). இந்தப்புத்தகத்தைப் படித்தபோது இது போன்ற புத்தகத்தை( இந்த லிஸ்ட்டில் நிறையப் புத்தகங்கள் உள்ளன) தமிழில் எழுத யாரும் இல்லையே என்ற ஏக்கமும், வருத்தமும் இருந்தது..உங்களின் மொழிபெயர்ப்பு நூல் இதை நிவர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்..இந்தப்புத்தகம் வெளிவரும் போது நானே 10 புத்தகங்கள் வாங்கி நண்பர்களுக்குப் பரிசளிக்கப்போகிறேன்.

    ReplyDelete
  3. கோபாலன் ராமசுப்பு: இந்தப் புத்தகம் தமிழில் இரண்டு பாகங்களாக வரும். ஏனெனில் மொழிமாற்றம் செய்தபின் குறைந்தபட்சம் 1300 பக்கங்களாகவது வரும் என்று நினைக்கிறோம். ஏற்கெனவே 30% மொழிமாற்றம் முடிந்துவிட்டது. குஹாவிடம் பேசியபோது, நேரு காலம் வரை ஒரு பாகமாகவும், அதற்கு அடுத்த பகுதியை மற்றொரு பாகமாகவும் கொண்டுவரலாம் என்றார்.

    இந்தப் புத்தகம் தமிழ் தவிர, ஒரியா மொழியிலும் மலையாளத்திலும் மாற்றம் கண்டுவருகிறது. இன்னும் ஹிந்தியில் யாரும் ஆரம்பிக்கவில்லை. இந்திய மொழிகளில் முதலாவதாகத் தமிழில் கொண்டுவந்துவிடவேண்டும் என்பது என் விருப்பம்.

    ReplyDelete