புத்தகக் காட்சி ஆரம்பித்து நேற்றோடு மூன்று நாள்கள் முடிந்துவிட்டன. சென்ற ஆண்டு, 14 நாள்கள் நடந்தது விற்பனை. இந்த ஆண்டு 11 நாள்கள்தான். சென்ற ஆண்டுகளில், அனைத்து நாள்களிலும் காட்சி வளாகத்திலேயே இருந்திருக்கிறேன். பல நாள்கள் கல்லாப்பெட்டியில் உட்கார்ந்திருக்கிறேன். இந்த ஆண்டு ஓரிரு நாள்களுக்கு மேல் போகப்போவதில்லை. கடந்த மூன்று நாள்களில் வெள்ளி அன்று மட்டும் மாலை நான்கைந்து மணி நேரம் அங்கே இருந்தேன்.
முக்கியமாகச் சொல்லவேண்டியது அருண் வைத்தியநாதனுடன் சந்திப்பு. அச்சமுண்டு, அச்சமுண்டு படத்தை முடித்துவிட்டு, ரிலீஸுக்காகக் காத்திருக்கிறார். ஏப்ரல் மாதமாகும் என்றார்.
அருணுக்கு சினிமா மீது தீவிரமான காதல் என்பது சொல்லாமலேயே தெரியும். வணிக சினிமா, கலை சினிமா என்று தனித்துப் பார்க்காமல், பொதுஜனங்களுக்காக நல்ல சினிமா எடுக்கவேண்டும் என்று ஆசைப்படுபவர். அதற்காக, தனது வேலையை விட்டுவிட்டு இரண்டு வருடமாக உழைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.
தமிழ் சினிமா எப்படி எடுக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதில் திட்டமிடுதல் குறைவு என்பது நன்றாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களில் UTV-யின் World Movies சானலில் நிறைய அந்நிய நாட்டுப் படங்கள் காணக் கிடைக்கின்றன. அடிப்படை ஒழுங்கு, கதை சொல்லும் திறன், காட்சியமைப்புகளின் நம்பகத்தன்மை ஆகியவற்றை ஒரு பார்வையாளனால் அறிந்துகொள்ளமுடிகிறது. இவை எவையுமே பட்ஜெட் சார்ந்த விஷயங்கள் அல்ல. சொல்லப்போனால் பட்ஜெட்டைக் குறைக்கும் விஷயங்கள்.
ஆனால், தமிழ் சினிமாவில், இந்த ஒழுங்கைப் பற்றியும் நம்பகத்தன்மையைப் பற்றியும் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அதனால்தான் நாம் போற்றும் ராதாமோகன்கூட சின்னச் சின்ன விஷயங்களில் கோட்டை விடுகிறார்.
‘வேட்டையாடு, விளையாடு’வில் கமலுக்கு அமெரிக்க விசா எவ்வளவு எளிதில் கிடைப்பதாகக் காட்டப்படுகிறது என்றும், மறுபக்கம் அமெரிக்கத் தூதரகத்தில் எப்படி சிங்கியடித்து விசா வாங்கவேண்டும் என்பதை அமெரிக்கா சென்றுள்ள எவருமே அறிவார் என்றும் சொன்னார் அருண். தமிழ்ப் படம் எடுப்பவர் யாரும் இதுபோன்ற லாஜிக் ஓட்டைகளைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. இது மனோபாவம் சார்ந்த பிரச்னை. ‘இது போதும்’ என்ற நினைப்பு. இது மணி ரத்னத்தில் ஆரம்பித்து, கமல் வழியாகப் பரவி, ஷங்கரில் நிலைகொண்டு, தமிழ்த் திரையுலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்துகிறது.
அடுத்தது, வேலைத் திட்டத்துக்கான ஒழுங்கு. இது முழுக்க முழுக்க நிர்வாகம் தொடர்பானது. இதுதான் படம், இதுதான் கதை, இதுதான் திரைக்கதை, இதுதான் ஷூட்டிங் ஸ்கிரிப்ட் என்றானதும், இந்தப் படத்தில் யார் நடிக்கவேண்டும், எந்தெந்தத் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேவை, ஏன், பட்ஜெட் எவ்வளவு, அவர்கள் கொடுக்கும் நேரம் எப்படி என்பதைக் கண்டறிந்து, முழுமையான செயல் திட்டம் ஒன்றை உருவாக்கி, அவர்கள் அனைவரையும் கட்டி மேய்த்து, படத்தை உருவாக்கித் தருதல். இந்தப் புரிதல் இல்லாமலேயே, அல்லது ‘பரவாயில்லை, பார்த்துக்கொள்ளலாம்’ அல்லது ‘இது போதும்’ என்ற எண்ணத்திலேயே அனைத்துப் படங்களும் எடுக்கப்படுகின்றன. பண விரயம் ஆகிறது.
எனக்கு வாசு என்றொரு நண்பர் இருக்கிறார். விளம்பரப் படங்கள் உருவாக்கித் தருவார். சில நேரங்களில் பெரிய பட்ஜெட் படங்களில் (சிவாஜி போன்று) புரடக்ஷனில் வேலை செய்வார். அவரிடம் நான் பலமுறை சொல்லியிருக்கிறேன், புரடக்ஷன் நிர்வாகம் என்றொரு ‘அவுட்சோர்சிங்’ துறைக்கு நிறைய எதிர்காலம் உண்டு என்று. இன்று தனித்தனியாக, உதிரியாக இருக்கும் பல திறமைகளையும் ஒரு குடையின்கீழ் வழங்கும் நிறுவனம் இருந்தால், பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் நிம்மதியாகப் படம் தயாரிக்க முடியும். மாற்றாக, இன்று தயாரிப்பாளர்கள் பலரும் இயக்குனர்களை நம்பிப் பணத்தை ஒப்படைக்க, பல நேரங்களில் இயக்குனர்களின் இயலாமையாலும் சில நேரங்களில் இயக்குனர்களின் திருட்டுத்தனத்தாலும் பணம் விரயமாகி, படம் நாசமாகிறது.
இந்த அடிப்படைகள் சரியாக இல்லாததால்தான், தமிழ் சினிமா, செயல் திறன் இன்றித் திண்டாடுகிறது. அடுத்தது, விநியோகம் மற்றும் மார்க்கெட்டிங். இங்கும் ஏமாற்றமே. பிரமிட் சாயிமீரா நிறுவனத்திடமிருந்து, நிறைய எதிர்பார்த்தேன். இந்தத் துறையில் கார்பொரேட் நிர்வாகத்தைக் கொண்டுவருவார்கள் என்று. ஆனால் நான் இதுவரை கேள்விப்பட்டது திருப்தியாக இல்லை. சன் குழுமம் இப்போது விநியோகத்தில் இறங்கி, விளம்பரத்தில் அடித்து நொறுக்குகிறது. ஓரிரு அதிரடிப் பாடல்கள், அவற்றை விடாது ஒளிபரப்புவதன்மூலம், மக்களை முணுமுணுக்க வைப்பது. இது நீண்டநாள் நோக்கில் உபயோகமாக இருக்குமா என்று தெரியவில்லை. நல்ல பிராடக்ட் இல்லாமல் விளம்பரம் மட்டும் செய்தால் அதனால் பலன் இருக்குமா என்று தெரியவில்லை.
தினகரன் எண்ணிக்கையில் ஏறி, அதே எண்ணிக்கையைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதற்கும், குங்குமம் ஏறியும் தங்காமல் விழுந்ததற்கும் என்ன காரணம் என்று ஆராயவேண்டும்.
***
அருணுடன் பேசும்போது அவர் ஒரு முழுப் படத்தைத் தயாரிக்க என்னவெல்லாம் செய்தார் என்பதை ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடிந்தது. சினிமா தொழில்நுட்பம் எனக்கு அந்நியம். எனவே கலர் கரெக்ஷன், சவுண்ட் மிக்ஸிங் போன்ற பல விஷயங்களில் என்னவெல்லாம் நடக்கும் என்று தெரியாது; ஆனால் அவையெல்லாம் முக்கியம் என்று தெரிகிறது. எளிமையாக, ஒரு படம் எடுக்கும்போது என்னவெல்லாம் தொழில்நுட்பம் பயன்படுகிறது என்று அருண் ஒரு புத்தகம் எழுதினால் நன்றாக இருக்கும்.
அவரது படம் ரிலீஸாகட்டும்.
விண்திகழ்க!
4 hours ago
நம் ஊர் படங்கள் பல வகை மக்களை போய் சேருவதால் அந்த அமெரிக்கா விசா போன்ற விஷயங்களை விவரமாக சொல்லாமல் கூட போயிருக்ககூடும்.கதையில் கமல் அமெரிக்கா போகனும் - அவ்வளவு தான்.
ReplyDeleteஏன்,அருண் கூட சீர்காழியில் இருந்து அமெரிக்கா போனதை விலா வாரியாக சொன்னால், நான் கூட கேட்பேனோ மாட்டேனோ! :-)
சினிமா (தமிழ்) பற்றிய ஒரு புத்தகம் "களவு தொழிற்சாலை" யில் அங்கிருக்கும் நிலவரத்தை விரிவாக ஒருவர் அலசியிருக்கிறார்(பெயர் மறந்துவிட்டது - பிஸ்மி?)
நல்லவர்கள் அரசியலுக்கு வருவதில்லை வந்தாலும் நல்லவர்களாக இருப்பதில்லை என்று ஒரு அறிஞர் சொன்னார். சினிமாவும் அது போலத்தான். ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஈகோ சிஸ்டத்தில் நம்மை இணைத்துக் கொள்கிறோம் என்றால், நாம் கற்பனை செய்த மாற்றங்களைக ஒரேயடியாகக் கொண்டு வந்து விடமுடியாது. [பப்ளிஷிங் துறை உள்பட :-) ]அந்த மாடலை நிரூபிக்க, சில பல வெற்றிகள் அவசியமாகிறது. பிரமிட் சாய்மீரா செய்த பெரிய மடத்தனத்துக்குப் பிறகு ( குசேலன் நூறு கோடி கொடுத்து வாங்கியது), கார்ப்பரேட் என்றாலே, சினிமா இண்டஸ்ட்ரியில் ஒரு குண்ஸாகப் பார்க்கிறார்கள். கோலிவுட்டுக்கு வெற்றிகள் தான் முக்கியம். படம் எவ்வளவு அருமையாக அல்லது மோசமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கும், படத்தின் வெற்றிக்கும் தொடர்பில்லை.
ReplyDeleteசொல்ல விட்டுப் போனது,
ReplyDeleteஅருண் வைத்தியநாதனுக்குப் பாராட்டுக்கள் மற்றும் ஆல் தி பெஸ்ட்டு. படம் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
//வேட்டையாடு, விளையாடு’வில் கமலுக்கு அமெரிக்க விசா எவ்வளவு எளிதில் கிடைப்பதாகக் காட்டப்படுகிறது என்றும், மறுபக்கம் அமெரிக்கத் தூதரகத்தில் எப்படி சிங்கியடித்து விசா வாங்கவேண்டும் என்பதை அமெரிக்கா சென்றுள்ள எவருமே அறிவார் என்றும் சொன்னார் அருண். தமிழ்ப் படம் எடுப்பவர் யாரும் இதுபோன்ற லாஜிக் ஓட்டைகளைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை.//
ReplyDeleteசரியான விஷயத்தைச் சொல்லும் கட்டுரையில் தவறான உதாரணம். ஒரு படத்தின் இரண்டரை மணி நேரத்தில் எவையெவை விவரித்துக் காண்பிக்கப்படும் என்பது அப்படத்தின் 'வகை'யைப் (genre) பொறுத்தது. வே.வி படம் ஒரு குற்றவியல் மர்மப்படம். அதில் குற்றங்கள்/குற்றவாளிகளின் சித்தரிப்பு, துப்புத்துலக்குபவரின் பாத்திரப்படைப்பு, motivation, துப்புத்துலக்கும் தந்திரங்கள் போன்றவைகளே பிரதானம். விசா க்யூவில் நிற்பதையெல்லாம் காட்ட முடியாது. மேலும், அது போன்ற காட்சிகள் கமலின் பாத்திர ஆளுமையைக் குறைக்கும், திரைக்கதையைத் தொய்வடையச் செய்யும்.
ஸ்ரீகாந்த்: இதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். நேரம் இல்லை என்ற காரணத்தால் அபத்தமான ஒன்றைச் சொல்லலாமா? “என் காதலியைத் தேடிப் போகிறேன்.” “அப்படியா, சரி, இதோ விசா!” இது நடக்கக்கூடியதா? திறமையுள்ள திரைக்கதை எழுத்தாளர் அதே நேரத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு அந்தப் பாத்திரம், விசா வாங்கியது என்று காட்டியிருப்பார். கமல் தெருவில் வரிசையில் நிற்கவேண்டியதில்லை. பார்க்கும் வாசகனுக்கு அமெரிக்காவுக்குச் செல்ல விசா வாங்குவது எளிதானதல்ல என்று தெரியவேண்டும். அதுவும் சும்மா காதலியைத் தேடிப்போகிறேன் என்று சொல்பவனுக்கு எந்த அமெரிக்க தூதரகத்திலும் விசா கொடுக்கமாட்டார்கள் என்பது தெரியவேண்டும். ஆனால், அதெல்லாம் இந்தக் கதைக்கு அவசியமில்லை என்று பார்க்கும் நீங்களும் படமெடுக்கும் கௌதம் மேனனும் முடிவெடுத்துவிட்டால் பிறகு யார் என்ன செய்யமுடியும்?
ReplyDeleteபத்ரி, வாரணம் ஆயிரம் படத்தையும், வே.வி யையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள்.விசா பெற வேறொரு
ReplyDeleteகாரணத்தை வா.ஆவில் காட்டியிருக்கலாம்.
வே.வியில் கமல் ஒரு காவல்துறை உயரதிகாரி.அவர் அமெரிக்கா போவதற்கான
காரணமும் படத்தில் இடம் பெற்றுள்ளது.
அருணின் படம் வரட்டும்.திரைக்கதையை அப்படியே படமாக்க முடியாது.
பெயரில்லா சொன்னது போல் நீங்கள் இரண்டு படங்களைக் குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கௌதம் ஆயிரம் யானைகளைப் பற்றி எடுத்த டாகுமெண்டரிப் படத்தை நான் பார்க்கவில்லை என்பதால் உறுதியாகச் சொல்லமுடியவில்லை.
ReplyDelete//மறுபக்கம் அமெரிக்கத் தூதரகத்தில் எப்படி சிங்கியடித்து விசா வாங்கவேண்டும் என்பதை அமெரிக்கா சென்றுள்ள எவருமே அறிவார் என்றும் சொன்னார் அருண். //
ReplyDeleteகமல் அந்த படத்தில் ஒரு IPS அதிகாரி.அரசு அதிகாரிக்கு விசா வாங்குவது அவ்வளவு கடினமான விஷயமா இருக்குமா.?
அன்புடன்
அரவிந்தன்
IPS அதிகாரி என்பதற்காக கடினமாக இருக்க வேண்டும் என்பதில்லை. அதே போல் சுலபமாகவும் இருக்க வேண்டும் என்றும் இல்லை. ஏனெனில் வேட்டையாடு விளையாடுவில் கொல்லப்படுபவர்கள் வி.ஐ.பிகள் கிடையாது. அப்படியிருக்க அமேரிக்க போலீஸ்தான் அதனை விசாரனை செய்ய வேண்டும் என்று திட்டவட்டமாக விசா மறுக்க வாய்ப்புண்டு.
ReplyDelete***
பதிவிற்கு வருவோம். கிழக்கு பதிப்பகத்தின் எனது முக்கிய விமர்சனமே இந்த திட்டமிடல் தான். திட்டமிட்டு திட்டமிட்டு இயந்திரமயமாகி விட்டது படைப்புகள். We can predict the format of writing and sometimes even the content. பாராவின் சுகம் ப்ரம்மாஸ்மி இதை மாற்ற உதவுமா , தெரியவில்லை.
கலை படைப்புகள் என்பது சற்றே கட்டவிழ்த்த காளையாக இருக்க வேண்டும். நிர்வாகத்தில் திட்டமிடலை சீர் செய்ய வேண்டும் என்பதை ஏற்கிறேன். ஆனால் இவ்வாறு தீவிரமாக திட்டமிடுவது பல நேரங்களில் படத்தையோ அல்லது கலை சார்ந்த ஆக்கங்களையோ ஒரு வித பெட்டிக்குள் (predictable format) அடைத்து விடுகின்றன.
மேலே ஒருவர் சொன்னது போல் திரைக்கதையை அப்படியே படமாக்க முடியது. ஆனால் அவ்வாறு நெருங்க முற்படும் திரைப்படங்கள் சிறந்த படங்களாகின்றன.
//தினகரன் எண்ணிக்கையில் ஏறி, அதே எண்ணிக்கையைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதற்கும், குங்குமம் ஏறியும் தங்காமல் விழுந்ததற்கும் என்ன காரணம் என்று ஆராயவேண்டும்.//
ReplyDeleteதினகரன் 2 ரூபாய் மட்டுமே. எல்லா தமிழ்ச் செய்தித்தாள்களுமே புழுகுணிப்பத்திரிக்கைகளானபடியால், 2 ரூபாய் புழுகுக்குப்போதும் என்று மக்கள் நினைக்கிறார்கள் போலும்.
குங்குமம் இலவசங்களைக்கொடுத்தாலும் 10ரூ அதற்கு தண்டம். ஆ.வி எவ்வளவோ பரவாயில்லை. முயற்சிதால் குமுதத்தை முந்தலாம். அதற்கு கொஞ்சம் சரக்கைக் கூட்டவேண்டும்.
//பிரமிட் சாயிமீரா நிறுவனத்திடமிருந்து, நிறைய எதிர்பார்த்தேன்//
ReplyDeleteYeah !
Congrads Arun
//தினகரன் எண்ணிக்கையில் ஏறி, அதே எண்ணிக்கையைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதற்கும், குங்குமம் ஏறியும் தங்காமல் விழுந்ததற்கும் என்ன காரணம் என்று ஆராயவேண்டும்.//
ReplyDeleteகாரணம், தினகரனை வாசிக்க முடிகிறது. குங்குமத்தை வாசிக்க முடியவில்லை.
Content is King !!
So simple as it
Most of the Hollywood films have illogical screenplay and storylines.
ReplyDeleteA commonality among popular film industries.
- Cuziyam
தமிழ் சினிமாவில் எல்லாமே வியாபாரம் தான் மிஸ்டர் அருண். வேறு எந்த புண்ணாக்கும் கிடையாது..
ReplyDeleteஉங்கள் திரைப்படத்தை காண ஆவல்.
ஏமாற்ற மாட்டீர்கள் என்ற நம்பிக்கைய்யுடன்..
வாழ்த்துக்கள்
சினிமாவுக்கு வெளியே இருந்தே இவ்வளவு நுட்பமாக அதன் ஒழுங்கைப்பற்றி சொல்ல முடிகிறது உங்களால்...ஆச்சர்யம்தான்..!
ReplyDeleteஇது உண்மையுங்கூட..,சினிமாவில் இருக்கிற நான் இதைப்பற்றி புலம்புவதென்றால் நூறு பக்கங்களுக்கு புலம்பலாம். அட அவ்வளவு ஏங்க..? இறுதியில் திரையில் 14 ஆயிரம் அடியில் மக்கள் பார்க்கப்போகிற நம் திரைப்படங்களை மூன்று முதல் நான்கு லட்சம் அடியில் எடுக்கிற மேதாவி இயக்குநர்கள்தான் இப்போது இங்கே., ஆகச்சிறந்த இயக்குநர்களாக இருக்கிறார்கள்!
கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.
நம் பெரும்மதிப்பிற்குரிய எடிட்டர் ஒருவர்..!
இவனுங்க பண்ற அழிச்சாட்டியத்திற்கு அளவே கிடையாதா...? என மனம் புழுங்கிப்போய்தான் இனி இவனுங்க படத்துக்கு EDIT பண்ணமாட்டேன் என்று புது இயக்குநர்கள் பக்கமாக ஒதுங்கிவிட்டார்.
//சினிமா (தமிழ்) பற்றிய ஒரு புத்தகம் "களவு தொழிற்சாலை"//
ReplyDeleteசினிமாவைப் பற்றிய "கனவுத் தொழிற்சாலை". சுஜாதா எழுதியது. "களவு தொழிற்சாலை" என்று யாராவது எழுதியிருந்தால் அனேகமாக அது brothel ஐப் பற்றியதாக இருக்கும்.