இன்று மக்கள் தொலைக்காட்சியில் விவசாயம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். கரூரில் ஒரு விவசாயியின் பண்ணையைப் படம் பிடித்துக் காட்டினர். இந்தப் விவசாய முறையை கலப்புப் பண்ணை (Mixed farming) என்று அழைத்தனர்.
இவர் நிலத்தில் புல் வளர்க்கிறார். கோகோ-2 ரகப் புல் என்றார். புல் பார்க்க கரும்புத் தோகை மாதிரி இருந்தது. அந்தப் புல்லை மாடுகளுக்குக் கொடுக்கிறார். மாடு கறக்கும் பால், அதிலிருந்து கிடைக்கும் தயிர், நெய், மாட்டின் சாணி, மூத்திரம் ஆகியவற்றைக் கலந்து பஞ்சகவ்யம் தயாரிக்கிறார்.
இந்தப் பஞ்சகவ்யத்தை கோழித் தீவனத்துடன் கலந்து கோழிக்குக் கொடுக்கிறார். கோழியின் கழிவில், ஒருவித ‘ஈ’ முட்டை இடுகிறது. அந்த முட்டைகள் புழுக்கள் ஆகின்றன. அந்தப் புழுக்களை உணவாகப் போட்டு, கலர் மீன்கள் வளர்க்கிறார்.
அவரது பண்ணையில் ஒரு குளம் உள்ளது. அந்தக் குளத்தில் மீன்கள் வளர்கின்றன. அந்தக் குளத்தில் ஒருவித பாசி வளர்க்கிறார். அதற்கு ஏதோ பெயர் சொன்னார். மனத்தில் வாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்தப் பாசியை கோழி, மாடுகள் தீவனத்துடன் கலக்கிறார்.
பிறகு, கோழி எச்சம், வைக்கோல், புல் கழிவுகள் ஆகியவற்றைச் சேர்த்து, அதில் காளான் விதைகளைக் கலந்து காளான் (Mushroom) வளர்க்கிறார். காளான் அறுவடை செய்து மீதமான கழிவுகளை உரமாகப் பயன்படுத்துகிறார்.
மீன் வளர்க்கும் குளம், தொட்டியில் உள்ள கழிவு நீரை, செடி, மரங்களுக்குப் பாய்ச்சுகிறார். தென்னை, அதற்கு அருகில் வாழை, அதற்கு அருகில் காய், பழச் செடிகளை வளர்க்கிறார்.
கோழி எச்சக் கழிவுகளில் மண்புழு வளர்க்கிறார். அந்த மண்புழுவின் கழிவு மீண்டும் உரமாகப் பயன்படுகிறது.
கோழி, மாடு, மீன் என அனைத்துமே நல்ல லாபம் தருவதாகச் சொல்கிறார். உதாரணமாக, காளான் பயிரிட ஆகும் செலவு 25 ரூபாய். காளானை அறுவடை செய்து விற்றால் அவருக்குக் கிடைப்பது 125 ரூபாய். இதற்கு ஆகும் காலம் வெறும் 15 நாள்கள்!
கவனியுங்கள்... இவர் ரசாயன உரமே பயன்படுத்துவதில்லை. எல்லாமே முற்றிலும் இயற்கை எருக்களைப் பயன்படுத்தும் இயற்கை விவசாயம் (Organic Farming). நடக்கும் ஒவ்வொரு செயலும் இயற்கையாக நடக்கும் உயிரியல் சுழற்சி. இந்த நிகழ்ச்சியை ஐந்தாம் வகுப்பு செல்லும் என் மகள் பார்த்துவிட்டு, ஏன் இவையெல்லாம் அவர்கள் பள்ளிப் பாடப் புத்தகத்தில் வருவதில்லை என்று கேட்டாள். உணவு உற்பத்தியுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் சேர்ந்து மனத்துக்கு சந்தோஷமாக இருந்தது. இவர் தண்ணீரையும் அதிகமாகச் செலவுசெய்வதில்லை.
எப்போது தொலைக்காட்சியில் பார்த்தாலும் அழுது வடிந்தபடி இருக்கும் விவசாயிகள், “அரசுதான் தங்களுக்கு உதவவேண்டும்” என்று புலம்பும் விவசாயிகளுக்கு நடுவில், இந்த நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சி அளித்தது.
விவசாயத்திலும் மூளையைப் பயன்படுத்தி, முதலீட்டை கவனமாகப் போட்டு, உழைப்பைச் சரியாக அளித்தால், அங்கும் நல்ல லாபம் பார்க்கலாம் என்று தெரிகிறது.
பன்றி வளர்க்கும் என் ஆசையுடன் இந்த மாதிரி கலப்புப் பண்ணை நடத்தும் ஆசையும் இப்போது சேர்ந்துகொண்டுள்ளது.
பெங்களூர் இலக்கியத் திருவிழா
2 hours ago
i also watched,,its a very good method.
ReplyDeleteசிறந்த உத்திகள். பகிர்தலுக்கு நன்றி. இது காணொளிப் படமாக கிடைத்தால் நல்லது.
ReplyDeletei am expecting a post abt election results and lankan issue.y keeping mum ?
ReplyDeleteIntegrated Farming என்று அழைக்கப்படும் இது பசுமைப்புரட்சிக்கு பிறகு இந்தி்யாவில் மறைந்து இப்பொழுது வளர்ந்து் வருகிறது. இதனை பற்றி பசுமை விகடனில் அடிக்கடி வருகிறது. பகிர்தலுக்கு நன்றி.
ReplyDeleteஎல்லாமே முற்றிலும் இயற்கை முறையில் இயங்கும் உயிரியல் சுழற்சி.
ReplyDeleteஇதுலதான் உட்குத்தோ? அதான் யதா யதாயம்பாங்களே? அதா?
ஒரு மாதம் முன்பு வரை நானும் என் சக்பணியாளர்களிடம்/உறவினர்களிடம் விவசாயம் பற்றி, விவசாயத்தை ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக, லாபம் தரும் தொழிலாகச் செய்யமுடியுமா என்பது பற்றி கருத்துக்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
ReplyDeleteஇப்போதிருக்கும் சூழலில், விவசாயத்தில் நிறைய கஷ்ட நஷ்டம் இருக்கிறதென்றும், அதிகபட்சாமாக உணவுக்கும் உடைக்கும் மட்டுமே கியாரான்டி கிடைக்கும் என்றும் சொல்கின்றனர். எவ்வளவோ முயன்று பார்த்தும் ஒன்றும் கதைக்கே ஆகாததால்தால், ப்ரோக்ராமராக இருப்பதே மேல் என்று இந்த தொழிலுக்கு வந்துவிட்டதாகக் கூறுகின்றனர். மேலும் ஒருவர் என்ன சொன்னார் என்றால், அதிக அளவு ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே லாபம் கிடைக்கும் என்கிறார்.
அப்புறம் நியூ காரிசான் மீடியா பற்றி, புத்தகம் வெளியிடுவதையே ஒரு கார்ப்பரேட் தொழிலாக்கி வெற்றியடைய முடிந்ததைப் பற்றி, ஏன் விவசாயத்தில் அது முடியாது என்பது பற்றி, அதிக முதலீடு (பல கோடிகள்) இருந்தாலும் என்னென்ன சிக்கல்கள் இதில் வரும் என்பது பற்றி கொஞ்சம் விவாதித்தோம். ஒரு அளவுக்குப் பிறகு, நாந்தான் ப்ராக்டிகலாக யோசிக்காமல், "முயன்றால் எதுவும் முடியும்" என்று பேசிக்கொண்டே இருக்கிறேனோ என்று தோன்றியதால் பின்பு நிறுத்திவிட்டேன்.
பதிவுப்பின்னூட்டமிட்டுப் பலகாலங்கள் ஆகிவிட்டதால் சற்றே பெரியதாக, தொடர்பில்லாமல் எழுதிக்கொண்டே போகிறேன் (இல்லாவிட்டால் இன்னும் நன்கு பெரியதாக, தொடர்பில்லாமல் எழுதி இருப்பேன் என்பது வேறு விஷயம்).
சிறு வயதிலிருந்தே விவசாயத்தில் ஈடுபட்டுவிட்டு, நன்கு படித்து (வேளாண்மைத் துறையில் அல்ல) பட்டம் பெற்றவர்களின் வாதம் என்னவென்றால், எவ்வளவு புத்திசாலித்தனமாகச் செய்தாலும் விவசாயம் ஒரு லாபகரமான தொழிலாக இருக்காது என்பதே.
இன்னும் நிறைய பேர் இது மாதிரி ஈடுபட்டால் அதிக நம்பிக்கை பிறக்கும்
Badri
ReplyDeleteI am not sure you remember it or not, as feedback to one of your post about DD, I mentioned about Vayalum Valvum. During 90-95 (prior to SUN and others), I used to watch these kind of interesting programs everyday in DD. I am not sure what is going on now, I left India 12 years ago.
Mohan
க்ருபா: விவசாயம் ஒரு நிச்சயமற்ற தொழில். திடீரென்று வானம் பொய்த்தால், திடீரென்று பயிர்களுக்கு நுண்ணுயிரிகளால் நோய் வந்தால், திடீரென்று பூச்சிகள் தாக்கி தானியங்களை/காய்களைச் சாப்பிட்டால், மண்ணில் சத்து குறைந்துகொண்டே வந்தால்... என்று பல கேள்விக்குறிகள்.
ReplyDeleteதுண்டு துண்டாக, சிறு சிறு நிலங்களாக இருந்தால் பயன் குறைவுதான். ஆனால் ஓரளவுக்குப் பெரிய நிலம், நல்ல முதலீட்டு வசதி, வாய்ப்புகளைக் கூர்ந்துநோக்குதல், சந்தையில் நல்ல விலை கிடைக்கத் தேவையான வாய்ப்புகள் ஆகியவை இருந்தால், விவசாயத்திலும் லாபம் பார்க்கமுடியும் என்று நம்புகிறேன்.
அதே நேரம், லாபத்தைக் மட்டுமே குறிக்கோளாக வைத்து, ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் மண் வளம் போய், திண்டாட்டத்தில் மாட்டவேண்டியதுதான்.
அரசுத் தரப்பில், தரமான மின்சாரம், தேவையான நீர் ஆதாரங்களை வளர்த்தல், விளைபொருட்களுக்கான நியாயமான சந்தை ஆகியவற்றைச் செய்தால் போதும். முதலீட்டுத் தேவைகளை வங்கிகள்மூலமும், பங்குச்சந்தை மூலமும், பணம் படைத்த செல்வந்தர்கள்மூலமும் பெற்றுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
மாடு - Mad cow disease
ReplyDeleteகோழி - Bird Flu
மீன் - Fisteria
(உங்கள் ஆசைக்கு) பன்றி - Swine flu
பேசாமல் பக்கத்தில் ஒரு pharamaceutical research கம்பெனியும் ஆரம்பித்தால் ஒரு integrated solution ஆகி விடும்...:-)
ஸ்ரீகாந்த்: பஞ்சகவ்யம் சாப்பிடும் கோழி, பன்றிகளுக்கு வியாதியே வராமலும் போகலாம்:-)
ReplyDeleteஉண்மைதான். இண்டென்சிவ் ஃபார்மிங்கின் பிரச்னைகள் ஏதும் வந்துவிடாமல் கவனமாக இருக்கவேண்டும்.
இன்றைய உழவர்களின் இன்றியமையாத தேவை சந்தை நுட்பங்கள்தான்.THEY NEED INTENSIVE MARKET TRAINING TO SELL THEIR PRODUCTS.ALL THE PROFITS IN AGRICULTURE GO TO THE INTERMEDIATE BUSINESS PEOPLE.
ReplyDeleteபத்ரி.. ஆச்சரியமில்லை.
ReplyDeleteபன்றியை விடமாட்டீர்கள் போல இருக்கு..
நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு..
வாழ்த்துக்கள்.
palpannai.blogspot.com
ReplyDeleteHi badri,
ReplyDeleteOrganic farming is different from natural farming.
People are confused with organic and natural way of farming. There is a book written by Subhash palekar. Please read his website also to get full clarification if you are interested in Agriculture.
Thanks.. Srinivas