கடந்த இரண்டு நாள்களாக பஞ்சாபில் - முக்கியமாக ஜலந்தரில் - மக்கள் தெருவுக்கு வந்து போராடுவதைப் பார்த்திருப்பீர்கள். தெருவில் போகும் வண்டிகளை அடித்து உடைத்து, டயர்களைக் கொளுத்தி, ரயில்களைக் கொளுத்தி, ஒரே நாசம்.
மதப் பொறுக்கித்தனம் உலகமயமாவதின் விளைவு இது. ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் ஒரு குறிப்பிட்ட சீக்கிய இனப்பிரிவின் குருத்வாராவில் பிரசங்கம் நடந்துகொண்டிருக்கும்போது ஆயுதம் தாங்கிய சிலர் உள்ளே நுழைந்து தாக்கி, துப்பாக்கியால் சுட்டுள்ளனர். விளைவாக இரு குருமார்களில் ஒருவர் இறந்துவிட்டார். மற்றொருவர் நிலை கவலைக்கிடம்.
இந்தத் தகவலை முதலில் செய்தியில் கேட்டதும், ஏதோ ஆஸ்திரிய நியோ-நாஸிகள்தான் இந்தியர்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனரோ என்று நினைத்தேன். ஆனால் அடிதடி, சகோதரர்களுக்கு இடையே என்று பின்னர் தெரிந்தது. கொன்றவனும் சீக்கியனே, கொல்லப்பட்டவனும் சீக்கியனே.
நாம் இங்கே தெரிந்துகொள்ளவேண்டியது - சீக்கியர்கள் என்பது ஒரு தனிப்பெரும் குழு அல்ல என்பதை. அவர்களுக்குள்ளும் பல பிரிவுகள் உள்ளன. சாதி வித்தியாசங்கள் உள்ளன. மதத் தத்துவ வித்தியாசங்கள் உள்ளன.
குரு நானக், இந்து மதத்திலும் இஸ்லாத்திலும் உள்ள பல கெட்ட விஷயங்களை ஒதுக்கிவிட்டு இரண்டிலும் உள்ள நல்ல விஷயங்களையும் ஒன்றுசேர்த்து, சீக்கிய மதத்தை உருவாக்க முனைந்தார். ஆனால் இன்றோ சீக்கிய மதம், இரண்டிலும் உள்ள கெட்ட விஷயங்களை மட்டுமே தன்னகத்தே கொண்டுள்ளது.
சீக்கியர்களிடையே சாதி வித்தியாசம் இருக்கக்கூடாது என்று நானக்கும் அவரது வழி வந்த அனைத்து குருமார்களும் இதை வலியுறுத்தியுள்ளனர். ஆனால் உண்மையில் பஞ்சாபில் சீக்கியர்களிடையே சாதிகள் நல்ல வலுவாகவே உள்ளன. பூட்டாசிங் என்ற காங்கிரஸ்காரர் தலித் சீக்கியர் என்ற கோட்டாவுக்குள்தான் காங்கிரஸில் இடம் பெறுவார். அதென்ன ‘தலித் சீக்கியர்’ ? இந்தியாவில் இஸ்லாம், கிறிஸ்துவம், சீக்கியம் என்று எல்லாமே சாதியில் சிக்கித் தவிக்கின்றன.
இஸ்லாத்தில் doctrinal விஷயங்களை முன்வைத்து சகோதரக் கொலைகள் நடப்பது வாடிக்கை. இன்றுவரை சுன்னி, ஷியா முஸ்லிம்கள் ஒருவரை அடித்துக்கொண்டு கொலை செய்துகொள்வதைப் பார்த்திருப்பீர்கள். பாகிஸ்தானில் ஈராக்கிலும் எப்போதும் இது நடப்பதைப் பார்க்கலாம். அதேபோன்ற நிலை் சீக்கியர்களிடையேயும் உள்ளது.
நிறுவனமயமாக்கப்பட்ட சீக்கிய மதத்தைக் கட்டுப்படுத்துவது அகால் தக்த் எனப்படும் குழு. பெரும்பாலும், இந்தக் குழுவுக்கும், அகாலி தளம் கட்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும். காங்கிரஸ் கட்சி இடையில் புகுந்து தன்னால் முடிந்த அளவு குழப்பத்தை விளைவிக்கப் பார்க்கும். இப்படித்தான் 1970-களின் இறுதியில் ஆரம்பித்த ஒரு பிரச்னை காலிஸ்தான் என்ற சீக்கியப் பிரிவினை வாதத்தை வளர்த்தது.
இந்து மதத்தில் எந்த நேரத்திலும் ஏதாவது ஒரு புது சாமியார் கிளம்புவார். ஒரு மடத்தை அமைப்பார். அவருக்கு சீடர்கள் கிடைப்பார்கள். ஆனால் அதே காரியம் சீக்கிய மதத்திலோ நடந்தால் அகால் தக்த் கோபம் அடையும். அது பெரும் வன்முறையில் போய் முடியும்.
1920-களில் நிரங்காரிகள் என்று ஓர் அமைப்பு உருவானது. 1978-ல் இந்த அமைப்பின் சில கிரந்தங்கள் - சமய நூல்கள் - தடை செய்யப்படவேண்டும் என்று மைய நீரோட்ட சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அழைப்பு விடுத்தனர். சில அமைப்புகள் தெருப் போராட்டத்துக்கு அழைக்க, ஒரு பெரும் கூட்டம் அமிர்தசரஸில் உள்ள நிரங்காரிகளின் மடத்தைச் சுற்றி வளைத்தது. நிரங்காரிகள் உள்ளிருந்து துப்பாக்கியால் சுட, சீக்கியர்கள் பலர் இறந்தனர். அங்கு தொடங்கிய கலவரம்தான் பிந்த்ரன்வாலே உருவாக்கப்பட்டு, பாகிஸ்தான் இடையில் புகுந்து குழப்பி, ஆபரேஷன் புளூ ஸ்டார் நிகழ்ந்து, இந்திரா காந்தி படுகொலையிலும், டில்லி சீக்கியப் படுகொலைகளிலும் முடிந்தது.
2007-ல் டேரா சச்சா சவுதா என்ற அமைப்பின்மீது மைய நீரோட்ட சீக்கியர்கள் தாக்குதல் நடத்தினர். நல்ல வேளையாக இந்தக் கலவரம் 1978 போலச் செல்லவில்லை. டேரா சச்சா சவுதா காங்கிரஸுக்கு ஆதரவு தரும் அமைப்பு என்பதை மனத்தில் கொள்ளவும். ஆனால் 2007-ன் காங்கிரஸ், இந்திரா காந்தியின் காங்கிரஸ் போல நடந்துகொள்ளாமல், சற்று முதிர்ச்சியுடன் நடந்துகொண்டது. ஆனாலும் இன்றுவரை அகால் தக்தும், அகாலி தளமும், சச்சா சவுதா அமைப்பை அழித்துவிடவேண்டும் என்ற மனநிலையில்தான் உள்ளன. பெரும்பாலான ‘கீழ் சாதி’ மக்களோ, சச்சா சவுதா போன்ற அமைப்பையே நாடுகின்றனர். ‘மேல் சாதி’ பிடியில் இருக்கும் அகால் தக்தின் குருத்வாராக்களுக்கு அவர்கள் செல்வதில்லை.
இப்போது 2009-ல் நடக்கும் கலவரங்களும் இதேமாதிரியானவையே. டேரா சச்சா சவுதாவை அகால் தக்த் நேரடியாகத் தாக்கியது. டேரா சச்கண்ட் பல்லான், தலித் மக்களின் ஆதரவு பெற்ற அமைப்பு. ஆனால் அகால் தக்துக்கும், சில தீவிரவாத சீக்கியர்களுக்கும் இந்த அமைப்பைக் கண்டால் ஆகவில்லை. அதன் விளைவுதான் வியன்னாவில் நடந்த தாக்குதலும் கொலையும். அதன் விளைவுதான் பஞ்சாபின் தலித்கள் தெருவில் இறங்கிப் போராடுவதும்.
யார் சீக்கியனாக இருப்பது, யாரை சீக்கிய மதத்திலிருந்து விலக்கலாம் என்ற மிகுந்த ஆபத்தான ஆயுதம் அகால் தக்திடம் உள்ளது. எக்கச்சக்கமான சொத்துகள் அகால் தக்திடம் உள்ளன. அதனால் அகால் தக்த் அரசியலாக்கப்படுகிறது. அகால் தக்த் தலைமை ஜதேதார் யார் என்பதற்குக் கடும் போட்டிகள் நடக்கின்றன. இந்தப் போட்டிகளின் பின்னணியில் காங்கிரஸ் கட்சியும் அகாலி தளமும் பலப்பரீட்சை செய்கின்றன.
இந்தியாவின் பிற பகுதிகளில் நடப்பதுபோலவே பஞ்சாபிலும் சாதி வெறி தலைவிரித்தாடுகிறது. அதனால்தான் எதிர் அமைப்புகள் தோன்றுகின்றன. அந்த அமைப்புகள் பெறும் ஆதரவைக் கண்டு அகால் தக்த் திகிலடைகிறது. இந்த அமைப்புகளை எப்படியெல்லாம் அழிப்பது என்ற யோசனையில் பல தீவிரவாத சீக்கியர்கள் இறங்குகின்றனர்.
அகால் தக்தை அழித்துவிட்டால், யாரும் ‘மைய நீரோட்டம்’ கிடையாது என்ற நிலை வந்துவிடும். யார் வேண்டுமானாலும் சீக்கியனாகலாம். யாரும் அந்த மதத்திலிருந்து ஒருவரை வெளியேற்றமுடியாது.
அகால் தக்த் என்ற அமைப்பின் அழிவில்தான் சீக்கியர்களின் எதிர்காலமும் இந்தியர்களின் எதிர்காலமும் வளமாக இருக்கும்.
வெண்முரசு 75, புதுவையில் நான்
6 hours ago
பயனுள்ள பதிவு..தெரியாத பல விஷயங்களை அறிந்தேன்.நன்றி பத்ரி
ReplyDelete// ஆனால் உண்மையில் பஞ்சாபில் சீக்கியர்களிடையே சாதிகள் நல்ல வலுவாகவே உள்ளன. பூட்டாசிங் என்ற காங்கிரஸ்காரர் தலித் சீக்கியர் என்ற கோட்டாவுக்குள்தான் காங்கிரஸில் இடம் பெறுவார். //
ReplyDeleteஏதோ புரிகிறது :( :( :(
you are being brave! i wrote a post on Sikh vs Dera Sacha Sauda non-sense few years ago, which DNA newspaper linked on its website, and was harassed by online Sikhs for months. being a celebrity you may wanna be careful!! (hav given url of my 'famous' post. click on my name if u want.)
ReplyDeletedear badri,
ReplyDeletegood article ,more about sikh sects.
http://www.hindustantimes.com/news/specials/popup/25may09/sikh_sects.htm
Thanks Badri, Excellent Article.... விரிவாகவும், மிக எளிய நடையில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை.
ReplyDeleteசில அரை வேக்காட்டு பதிவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும்... உண்மை புரியாமல் சீக்கியர்கள்தான் உணர்வுள்ளவர்கள் தமிழர்கள் அவர்களை போல் நடந்துகொள்ள வேண்டும் என்று எழுதி வரும் பதிவர்கள் கண்டிப்பாக இந்த கட்டுரையை படிக்க வேண்டும்..
பத்ரி,
ReplyDeleteஇந்தப் பதிவை தமிழ் தெரிந்த ஒரு சீக்கியன் படித்தால் நீங்கள் ஏதாவது குருத்வாராவின் லங்கர்கானாவில் தட்டுக் கழுவ வேண்டிவரும்.
நிறுவனமயமாக்கப்பட்ட மதங்களில் புதிதாக ஓர் அமைப்பு/ கருத்துத் தோன்றும் போது அது நிறுவனத்திற்கெதிரான கலகமாகப் பார்க்கப்படுகிறது. இந்து மதத்தில் மதம் நிறுவனமாக்கப்பட்வில்லை.மாறாக நிறுவனமாக்கப்பட்டுள்ளன. எனவே சீக்கியத்தை அதனுடன் ஒப்பிடுவது மிகவும் எளிமைப்ப்டுத்தும் முயற்சி.
சீக்கியம் நிறுவனமயமாக்கப்பட்டது மட்டுமல்ல, regimentationக்கும் உள்ளான மதம்.
இப்போது எழுந்துள்ள பிரசினை குரு இரவிதாஸ் என்பவரைப் பற்றியது.அவர் செருப்புத் தைக்கும் தொழில் செய்யும் சமூகத்தில் பிறந்தவர். அந்த வகுப்பைச் சேர்ந்தவர் 'குரு' என அழைக்கப்படக்கூடாது என சனாதன சீக்கியர்கள் குரலெழுப்புகின்றனர்.முற்றிலும் நியாயமற்றது
Ur solution to disband akal takht is really radical.Not even the RSS would have thought on those lines and even if they have i have not read/seen any of them making similar statements !!
ReplyDeleteSri
மாலன்: குருத்வாராவில் லங்கர்கானாவில் தட்டு கழுவுவது நல்ல விஷயம். சீக்கியர்களிடம் எனக்கு மிகவும் பிடித்ததே, வருவோர் போவோருக்கெல்லாம் வயிறார உணவிடுவது. லாஹூரில் நானும் நான்கு நண்பர்களும் ஒரு குருத்வாராவுக்குப் போயிருந்தோம். எங்களது பாஸ்போர்ட்டுகளைப் பார்த்து, நாங்கள் முஸ்லிம்கள் அல்ல, இந்துக்கள்தான் என்று உறுதி செய்துகொண்டே பாகிஸ்தான் காவலர்கள் எங்களை குருத்வாரா உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.
ReplyDeleteஅங்கே இருந்த சீக்கியர்கள் மிகவும் அன்புடன் சாப்பிட அழைத்தார்கள். சிறிது நேரத்தில் உணவு தயாராகிவிடும் என்றார்கள்.
சிறிது நேரம் தத்துவ விசாரம் மேற்கொண்டபின் சாப்பிட்டிவிட்டுத்தான் கிளம்பினோம்.
ஆனால், பசியைப் போக்க இவ்வளவு ஆர்வம் காட்டும் சீக்கியர்கள், இப்படி மத விஷயங்களில் வெறிகொண்டவர்களாக நடந்துகொள்வதற்கு அடிப்படையே அகால் தக்த் என்னும் அமைப்புதான் என்பது என் கருத்து. அதனால்தான் அதை அழிக்கவேண்டும் என்று சொல்கிறேன்.
சீக்கிய மதத்தை இந்து மதத்தோடு எளிமைப்படுத்தி ஒப்பிடவில்லை. இந்து மதத்தில் திடீர் திடீர் என்று புது குருமார்கள் தோன்றலாம், ஆனால் அதனால் பிரச்னைகள் வருவதில்லை; ஆனால் சீக்கியர்களிடையே இது தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்துகிறது என்பதை மட்டும்தான் விளக்க முயற்சித்தேன்.
பத்ரி,
ReplyDeleteசாதி,அதிகார,பிறப்பு ,புவியியல் சார்ந்த (இந்த நாட்டில் பிறந்தால் மட்டும்) ஏற்றத்தாழ்வுகள் இல்லாத மதங்கள் இல்லை. மதம் என்றாலே எல்லாவிதமான ஏற்றத்தாழ்வுகளையும் கொண்ட ஒரு அதிகார அமைப்புத்தான்.
இந்து என்பது மதம் அல்ல just an virtual group.
சனாதனக் கோட்பாடுகள்தான் சனாதனதர்மம் அல்லது மதம்.சனாதனச் சட்டங்களுக்கு கட்டுப்பட்ட அமைப்புகளில் உதாரணம்.. "காஞ்சி காமகோடி" அவர்கள் உத்தரவு இல்லாமல் புதிய சங்கராச்சாரி வர முடியாது. அப்படி வந்தால் அங்கேயும் வெட்டுக்குத்து நடக்கும்.வெட்டுக்குத்து இல்லை என்றாலும் மூன்றாவது சாமி , ஜனகல்யாண் என்று கூத்துகள் நடக்கவே செய்யும். ஜீயர் மற்றும் ஆதீனப் பீடங்களில்லும் அதிகாராச் சண்டைகள் உண்டு. எனவே இந்து மதத்தில் சாமியார்கள் யாரும் வரலாம் யாரும் யாருக்கும் எதிர்ப்பே இல்லை என்று பொதுவாக சொல்ல முடியாது.
***
//எங்களது பாஸ்போர்ட்டுகளைப் பார்த்து, நாங்கள் முஸ்லிம்கள் அல்ல, இந்துக்கள்தான் என்று உறுதி செய்துகொண்டே//
பாஸ்போர்ட்டில் மதம் சம்பந்தமான தகவல் இருக்காது. பாஸ்போர்ட்டிற்கான விண்ணப்பத்தில்கூட அப்படி இல்லை.
http://passport.gov.in/cpv/ppapp1.pdf
ஒருவேளை பழைய பாஸ்போர்ட்/விண்ணப்பங்களில் இருந்ததா? என்னுடைய பாஸ்போர்ட்டை நாளை பார்த்து உறுதி செய்ய வேண்டும்.
அப்படி இருந்தாலும் மதம்/ சாதித் தகவல்களை தர வேண்டும் என்று சட்டம் இல்லை.
சாதி உங்கள் சாய்ஸ !
http://kalvetu.blogspot.com/2007/09/blog-post.html
கல்வெட்டு: 1. இந்து மதத்தை உயர்த்திப் பிடிப்பது என் நோக்கமல்ல. ஆனால் இந்து மதத்தில் ஒரு பங்காரு அடிகளார் அல்லது ஒரு தலித் சாமியார் புது மடத்தை உருவாக்கினால், சங்கராச்சாரியாரால் ஒன்றும் செய்யமுடியாது. ராமானுஜ வைணவப் பரம்பரை பல மடங்களாக இன்று பிரிந்துள்ளது. ஒருவரும் மற்றவர் இப்படி நடக்கக்கூடாது என்று கத்தியைத் தூக்கிக்கொண்டு அலைந்ததில்லை. ஆனால் ஒரு மடத்துக்குள்ளாக சொத்துச் சண்டைகள் வருவது உண்டு. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஇன்று சீக்கியத்தில் நடக்கும் பிரச்னை வேறு. புதிதாக ஒரு மடமே, ஒரு குருவே தோன்றக்கூடாது; அப்படித் தோன்றினாலும் அவர்கள் இன்னின்னதான் செய்யலாம், இன்னின்ன செய்யக்கூடாது என்று தீவிரவாதிகள் சொல்கிறார்கள்.
2. பாகிஸ்தான் என்ற ஆதார வார்த்தையைப் படித்தீர்களா என்று தெரியவில்லை. பாகிஸ்தானில் ஒரு குருத்வாராவுக்குள் நுழைய முஸ்லிம்களுக்கு அனுமதி இல்லை. பாஸ்போர்ட்டில் மதம் இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமில்லை. ஆனால் பாஸ்போர்ட்டில் பெயர் உண்டு. ரஹீம், அப்துல், பிலால் என்று பெயர் உள்ளதா, நவீன், நாராயண், ராம், அஜய், குஷ்வந்த், மன்மோகன் என்று பெயர் உள்ளதா என்று பார்த்துவிட்டுத்தான் பாகிஸ்தான் காவலர்கள் ஒருவரை குருத்வாராவுக்குள் அனுமதிக்கிறார்கள். அங்கு உங்களுக்கு நண்பர்கள் இருந்தால் உறுதி செய்துகொள்ளவும்.
பத்ரி,
ReplyDelete1: //ஆனால் இந்து மதத்தில் ஒரு பங்காரு அடிகளார் அல்லது ஒரு தலித் சாமியார் புது மடத்தை உருவாக்கினால், சங்கராச்சாரியாரால் ஒன்றும் செய்யமுடியாது. ராமானுஜ வைணவப் பரம்பரை பல மடங்களாக இன்று பிரிந்துள்ளது. //
ஏன் என்றால் இந்து என்பது ஒரு virtual தனமான ஓப்பன் சோர்ஸ் மாதிரியான ஒன்று. அதற்கு என்று சட்டதிட்டங்கள் இல்லை. ஆனால் சனாதனமான சட்டங்களுக்குள் (நிறுவனமயம்) புகுந்து கலகம் செய்தால் சீக்கியப் பிரச்சனையைவிட அதிகமாக இங்கும் நடக்கும் என்பதே எனது கருத்து.
//ஒருவரும் மற்றவர் இப்படி நடக்கக்கூடாது என்று கத்தியைத் தூக்கிக்கொண்டு அலைந்ததில்லை.//
:-))
கடந்தகால சைவ-வைணவ வாக்குவாதங்கள், சைவ சமண கழுவேற்றங்கள் நினைவில் வந்து போகிறது.
நிகழ்கால சீக்கியச் சண்டையைவிட கடந்தகால சைவ சமண கழுவேற்ற கொடுமைகள் சாதாரணமானது அல்ல. இப்போது அந்தச் கழுவேற்ற கொடுமைகள்/சண்டைகள் நீர்த்துப் போய் இருக்கலாம். ஆனால் இருந்தது என்பது உண்மை.
சீக்கியம் இப்போதுதான் கேள்வி கேட்கும் நிலைக்கு வந்துள்ளது. அதுவும் வருங்காலங்களில் பல குழுக்களாக மாறி சண்டைகள் நீர்த்துப்போகும். அதற்கு இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆகலாம்.
மதங்கள் தங்களைத் தாங்களே கேவலப்படுத்திக் கொள்வது எல்லா மதங்களுக்கும் உள்ள பொதுவான அம்சம். சீக்கியம் ஒன்றும் விதிவிலக்கல்ல.
*******************
2: //பாஸ்போர்ட்டில் மதம் இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமில்லை.//
பாஸ்போர்ட்டில் மதம் இருக்கிறதா என்பது மிகவும் முக்கியமான ஒன்று.அதாவது, இந்தியா சட்டப்படி எங்கெங்கு மத/சாதி அடையாளத்தை பதிவு செய்கிறது என்பது எனக்கு முக்கியமான ஒன்று , அதனால் அறிந்து கொள்ளக் கேட்டேன். உங்களுக்கு அது முக்கியமில்லை. நாம் உரையாடுவது யாருக்கு எது முக்கியம் என்ற தொனியில் அல்ல.
பாஸ்போர்ட்டைப் பார்த்து உங்களை முஸ்லிம்கள் அல்ல, இந்துக்கள்தான் என்று உறுதி செய்துகொண்டார்கள் என்று சொன்னதால் எப்படி என்று தெரிந்து கொள்ளக் கேட்டேன்.
அவர்கள் பாஸ்போர்ர்டில் உள்ள எந்தத் தகவலை வைத்து உங்கள் மதத்தை அறிந்தார்கள் என்று ஒரு ஆவல்.
"பெயரை வைத்தே அறிந்தார்கள்" என்று நீங்கள் இப்போது சொல்லிவிட்டதால் அதில் மேற்கொண்டு சொல்ல ஒன்றும் இல்லை.
http://manukhsi.blogspot.com/2009/05/dalit-assertion-in-punjab.html
ReplyDelete