Thursday, May 07, 2009

குடும்ப அரசியல் (Dynasty politics)

இன்று NDTV விவாதத்தின் கருப்பொருளாக இருந்தது “குடும்ப அரசியல் பற்றி மக்கள் கவலைப்படுகிறார்களா இல்லை கண்டுகொள்வதில்லையா”.

மூன்று ‘அரசியல் பிள்ளைகள்’ - ஷீலா தீக்ஷித்தின் மகன் சந்தீப் தீக்ஷித், காலம் சென்ற ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட், ஜஸ்வந்த் சிங்கின் மகன் மானவேந்திர சிங் ஆகியோர் பங்கேற்றனர். என்.ராம், ஷோபா டே என்ற இரு பத்திரிகையாளர்கள் (ஒன்றுக்கும் உதவாத) கருத்துகளைச் சொன்னார்கள்.

சந்தீப் தீக்ஷித் வெளிப்படையாகவே ஒன்றை ஒப்புக்கொண்டார். இன்றைய அரசியல் சூழலில் அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு அரசியலில் நுழைவது எளிதாக உள்ளது.

அரசியல்வாதிகளின் பிள்ளைகள் அரசியலில் நுழையவே கூடாது என்று சொல்வது நியாயமல்ல. ஆனால் அதே சமயம், ஏன் சினிமாவில் இல்லையா, தொழில்துறையில் இல்லையா, அரசியலில் மட்டும் ஏன் இதனை எதிர்க்கவேண்டும் என்ற அபத்தமான கேள்வி எழுப்பப்பட்டது. அடுத்த அபத்தம், அமெரிக்காவிலும்தான் குடும்ப அரசியல் உண்டு என்று கஷ்டப்பட்டுத் தேடிய கென்னடி குடும்பம் உதாரணமானது. (கிளிண்டன் குடும்பம், புஷ் குடும்பம் என்றெல்லாம் டக்கென்று யாரும் யோசிக்கவில்லை.)

தொழில்துறையிலோ, சினிமாவிலோ போட்டிகள் சமதளத்தில் நடைபெறுகின்றன. முன்போல இப்போது இல்லை. பணம் இல்லாதவர்களாலும் இன்று பணத்தைச் சம்பாதிக்கமுடிகிறது. சினிமா குடும்பத்திலிருந்து வந்தால்தான் சினிமாவுக்குள் நுழையமுடியும் என்பது இப்போது இல்லை. எத்தனை சினிமாக்களை வேண்டுமானாலும் எடுக்கமுடியும். எத்தனை தொழில் நிறுவனங்களை வேண்டுமானாலும் உருவாக்கலாம், யாரும் தடுக்க முடியாது. ஆனால் இன்று கட்சிகளின் நடப்பது என்ன? ஒவ்வொரு கட்சியும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் கைக்குள்தான் உள்ளது. (பாஜக போன்ற ஓரிரு கட்சிகள் தவிர்த்து.)

சினிமாவிலோ, தொழில்துறையிலோ சொல்வதுபோல, இஷ்டம் இல்லை என்றால் வேறு கட்சியை நீயே ஆரம்பித்துக்கொள் என்று அரசியலில் சொல்லமுடியாது. சொல்லப்போனால், இப்படி ஒருவரோடு ஒருவர் முறைத்துக்கொண்டு நூறு கட்சிகளை உருவாக்கியதன் விளைவுதான் குழப்பமான அரசியல் நிலையை இன்று நாட்டில் உருவாக்கியுள்ளது.

சந்தீப் தீக்ஷித் ஒருவர்தான் உட்கட்சி ஜனநாயகம் பற்றிப் பேசினார்.

அமெரிக்க அரசியல் கட்சிகள் ‘பிரைமரி’ முறையை ஒழுங்காகப் பின்பற்றுகின்றன. அது நகராட்சி வார்ட் தேர்தலாகட்டும், குடியரசுத் தலைவர் தேர்தலாகட்டும். இந்தியாவில் இந்த முறை இல்லாதவரை, அரசியல்வாதிகளின் பிள்ளைகள் எத்தனைதான் தகுதியற்றவர்களாக இருந்தாலும் பதவிகளைக் கைப்பற்றுவார்கள். எப்போது கட்சி உறுப்பினர்களுக்கு தங்கள் கட்சியின் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முழுமையான அதிகாரம் உள்ளதோ, எப்போது மேலிடம் என்ற ஒன்று தன்னிச்சையாக நடக்கமுடியாத நிலை வருமோ, அப்போதுதான் இந்திய ஜனநாயகம் ‘வயதுக்கு வரும்’.

பிரைமரிக்கு இணையான நிலை இந்தியக் கட்சிகளிடையே வந்துவிட்டால், குடும்ப அரசியல் பற்றி யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள்.

4 comments:

  1. பிரைமரி மட்டுமல்ல... அரசியலுக்கு அடிப்படைத் தேவையான சில பண்புகளை வரையறுத்து வைத்திருக்கிறார்கள். கல்லூரி / பல்கலைகழகத்தில் அரசியலில் ஈடுபட்டிருக்கிறார்களா? தலைமப் பண்பு இருக்கிறதா? விவாதங்களில் எப்படி ஈடுபடுகிறார்கள்? Organization abilities உள்ளவர்களா? எப்படி மக்களுடன் உரையாடுகிறார்கள் (connecting with people) என்றெல்லாம் அளவிட்டுத்தான் அரசியலில் அடுத்தடுத்த நிலைகளுக்கு கொண்டு செல்லப் படுகிறார்கள்.

    இந்தியாவில் ‘தலைவரின் மகனுக்கு தலைவராகும் எல்லாத் தகுதியும் இருக்கிறது’ என்ற Monarchy மனப்பாண்மை இன்னமும் இருக்கிறதோ என்னமோ.

    ReplyDelete
  2. இந்த குடும்ப வாரிசு அரசியலை பார்க்கும்பொழுது மன்னராட்சியே தேவலாம் போலிருக்கிறது. தான் தனக்கு பின் தன் மகன் என்ற‌ தொடர்கதையாக தற்பொழுதைய‌ அரசியல் உள்ளது. இதற்கு பதில் மன்னராட்சி இருந்தால் தேர்தல் செலவாவது மிச்சமாகும்

    நன்றி,
    ராம்குமரன்

    ReplyDelete
  3. ப்ரைமரி நல்ல யோசனைதான்.ஆனால் அதையும் தி.மு.க மற்றும் அண்ணா தி.மு.க கட்சித் தேர்தல் போல் ஆக்கி விடவும் வாய்ப்புள்ளது.50 ஆண்டுகளில் பெரிய மாற்றம் வரலாம் எனத் தோன்றுகிறது.

    ReplyDelete
  4. இந்தியா பெரிய நாடு; இங்கு மொழிகள், பிராந்தியங்கள், ஜாதிகள், இனங்கள், மதங்கள் மிக மிக அதிகம். இந்த ஒரு பின்னணியில் ஒரு தலைவன் உருவாவது மிக கடினம். முன்பு சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் தலைமை பொறுப்பேற்க முன்வந்ததும் பொருந்தியதும் உண்டு. அப்போது இவ்வளவு இன பேதங்கள் இல்லை. ( அதாவது சுதந்திரத்திற்கு பின் இந்த வேறுபாடுகள் விஸ்வ ரூபம் எடுத்திருக்கின்றன.)

    இப்போது ஓரளவுக்கு எல்லோரும் பட்டப் படிப்பு, சட்டம் முடித்து அரசியலுக்கு வருகின்றனர். ஹிந்தி எதிர்ப்பு என்றோ அல்லது இன்னொரு எதிர்ப்பு என்றோ பஸ் மீது கல் எரிந்து பெரிய அளவில் வருவது அவ்வளவு எளிது அல்ல. (சென்னை சட்டக் கல்லூரியில் சமீப காலத்தில் படித்திருந்தால் தடியடி, குத்து, வெட்டு போன்ற hardware பயிற்சி இருக்கலாம். ) உடுப்பி ஹோட்டல்கள் மீது கல் எரிந்து பால் தாக்ரே கட்சி ஆரம்பித்தார். (அவர் அண்ணன் மகன் கூட, அரசியல் வாரிசு தான் என்றாலும், தலைவர் ஆவதற்கு பீஹாரிகள் மீது கல் எரிந்தே கட்சியை வளர்க்க வேண்டிய சூழ்நிலை.)

    இதனால் அரசியலுக்கு வருவதற்கு இரண்டு குறுக்கு வழிகள் உள்ளன: சினிமா. ஏற்கனவே மக்களுக்கு பழகிய முகம் இருப்பதனால் ஒரு இயக்கத்தை வளர்ப்பது எளிதாகிறது. ( எம் ஜி ஆர, என் டி ஆர, ஜெயலலிதா விஜய காந்த், சிரஞ்சீவி, பெரிய அளவில் தலைவர் ஆக முடிந்தது.) இன்னொன்று வாரிசு அரசியல் தான்.

    கட்சிகள் கொள்கை அடிப்படையில் வளர்ந்தால், மக்களுக்கு படிப்பறிவு 75% க்கு மேல் போனால், படித்தவர்கள் தவறாமல் வாக்கு அளிக்கத்துவங்கினால், இவை எல்லாவற்றையும் விட ஜாதியை ஆதாரமாக வைத்து கட்சிகள் வளர்வது அறவே நின்றால் மட்டுமே தலைவர்கள் ஜனநாயக முறையில் உருவாக ஏதுவாகும்.

    ReplyDelete