நேற்று இயல்பியல் பேராசிரியர் அனந்தனைச் சந்தித்து வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு இப்போது 74 வயது ஆகிறது. சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் வேலை செய்து ஓய்வுபெற்றவர். முற்றிலும் புதிய முறையில் இயல்பியல் புத்தகம் ஒன்றை எங்களுக்காக எழுதிக்கொண்டிருக்கிறார். ஆங்கிலத்தில் முதலில் இந்தப் புத்தகம் அடுத்த மூன்று/நான்கு மாதங்களில் வெளியாகும். பின்னர் தமிழாக்கம் வெளியாகும்.
சென்னையில் Physics Society என்று தொடர்ந்து 38 வருடங்கள் நடத்திவந்துள்ளார். இயல்பியலை சந்தோஷமாகக் கற்பது என்பதுதான் இந்தக் குழுவின் நோக்கம். சென்னையில் படித்த பலர் இவரைப் பற்றியும் இந்த சொசைட்டி பற்றியும் கேள்விப்பட்டிருக்கலாம்.
இவர் 1951-ல் எஸ்.எஸ்.எல்.சி முடித்ததும், மேற்கொண்டு படிக்கவைக்க இவரது தந்தையால் முடியவில்லை. சில நாள் வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்துள்ளார். அப்போதுதான் நிறைய அறிவியல் புத்தகங்களைப் படித்தாராம். பின்னர் அரசு வேலை ஒன்று கிடைத்துள்ளது. சுமார் ஏழு ஆண்டுகள் திருச்சியில் ரெவின்யூ டிபார்ட்மெண்டில் வேலை செய்துள்ளார். அந்த ஏழு ஆண்டுகள்தான் தன் வாழ்க்கையிலேயே முற்றிலும் உபயோகமில்லாதவை என்று கருதுகிறார்.
1958-ல் திடீரென மேற்கொண்டு படிக்கவேண்டும் என்று முடிவுசெய்தார். ஆனால் உற்றார் உறவினர் அனைவரும் வேலையை விட்டுவிட்டு படிக்கப் போய், வீணாகிப் போகாதே என்று எச்சரித்துள்ளனர். அந்த எச்சரிக்கைகளை மீறினார். ஆனால் தமிழகத்தில் உள்ள எந்தக் கல்லூரியும் ஏழு ஆண்டுகள் படிப்பிலிருந்து விலகி இருந்த ஒருவருக்கு பி.யூ.சியில் இடம் தர விரும்பவில்லை. அப்போதெல்லாம் தொலைநிலைக் கல்வி கிடையாது. கடைசியில் திருப்பதியில் ஒரு கல்லூரியில் பி.யூ.சி படிக்க இடம் கிடைத்தது.
அனந்தன் கையெழுத்துப் பத்திரிகை நடத்தியுள்ளார். பத்திரிகைகளுக்குக் கதைகள் எழுதி அனுப்புவது வழக்கம். இவரது ஆர்வம் அறிவியல் படிக்கவேண்டும் என்பது. ஆனால் மேற்படிப்பில் அறிவியல் கிடைக்குமா என்று சந்தேகம். ரேடியோ அலைகள் தொடர்பான சிலவற்றை யோசித்துக்கொண்டிருந்த இவர், தன் வாழ்நாளில் எப்படியும் அறிவியல் ஆராய்ச்சியார் ஆகப்போவதில்லை என்று முடிவுசெய்து, குறைந்தபட்சம் தன் கருத்துகளை ஒரு கதையாகவாவது எழுதிவிடலாம் என்று முடிவுசெய்துள்ளார்.
ரேடியோ அலைகள் தொடர்பான தன் கருத்துகளை ஒரு கதைக்குள் புகுத்தி அதை ஆனந்தவிகடனுக்கு அனுப்ப, அது 1958-ல் அல்லது 1959-ல் விகடனில் பிரசுரமாகியுள்ளது. அதைப் படித்த பலரும் இவருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். (விகடன் அலுவலகத்தில் கேட்டு இவரது முகவரியைப் பெற்றிருக்கவேண்டும்.) அப்போது இவர் திருப்பதியில் பி.யூ.சி படித்துவந்தார். அப்படி இவருக்குக் கடிதம் எழுதிய ஒருவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயல்பியல் பிரிவில் ஆராய்ச்சி மாணவராக இருந்த நாகராஜன் என்பவர். விரைவில் இருவருக்கும் இடையில் கடிதப் போக்குவரத்து ஏற்பட்டது.
நாகராஜன் வேறொரு விஷயமாக ஆந்திரா சென்றிருந்தபோது அனந்தனைப் போய்ப் பார்த்துள்ளார். பி.எஸ்சி மேற்படிப்புக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்தால், தான் இடம் வாங்கித் தருவதாகச் சொல்லியுள்ளார். அதேபோல அனந்தன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி, பின்னர் எம்.எஸ்சி இயல்பியல் படித்தார்.
பட்டப்படிப்பின்போது, வகுப்பில் நிறையக் கேள்விகள் கேட்பாராம். இதனால் ஆசிரியர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். இந்தப் பையன் வகுப்பில் ரொம்பத் தொல்லை கொடுக்கிறான் என்று ஸ்டாஃப் ரூமில் பேச்சு வந்துள்ளது. அதைக் கேட்ட நாகராஜன், அனந்தனிடம், “ஏனப்பா இப்படித் தொல்லை கொடுக்கிறாய்?” என்று விசாரிக்க, அன்றுமுதல் வகுப்புகளில் கேள்வியே கேட்பதில்லை என்று அனந்தன் முடிவுசெய்துள்ளார்.
படித்து முடித்தபின், அனந்தன் ஆசிரியர் வேலை தேடி, பின் இயல்பியல் பாடம் நடத்தும் ஆசிரியரானார். கடனெழவே என்று பாடம் நடத்தாமல் மாணவர்கள் இயல்பியலைச் சந்தோஷமாக ரசித்துப் படிக்கவேண்டும் என்பதற்காக பாடங்களை மிகவும் சுவாரசியமாக்கினார். அத்துடன் problem solving என்பதை கவனமாக முன்வைத்தார். சும்மா, புத்தகத்தில் உள்ள விஷயங்களை உருப்போடுவதால் பிரயோஜனம் கிடையாது அல்லவா? ஆனால், நமது கல்லுரிக் கல்விமுறையில் எக்கச்சக்கக் குறைபாடுகள்.
அதனால்தான், தனியாக பிஸிக்ஸ் சொசைட்டி என்பதை உருவாக்கினார். புத்திசாலிப் பையன்கள்/பெண்கள் அங்கே குழும ஆரம்பித்தனர். ஆனால் அப்படி அங்கு வருபவர்கள் எல்லோரும் அறிவியலை நாடி ஓடாமல், எஞ்சினியரிங் படிக்கச் சென்றனர். பலர் ஐஐடி சென்றனர். ஆனாலும் இவர் மனந்தளராமல் ஒவ்வோர் ஆண்டும் இயல்பியலை சில பத்து மாணவர்களிடமாவது கொண்டுசேர்த்தார்.
இன்று வயதான நிலையில் அவரது மாணவர்கள் பலரும் அவரை புத்தகம் எழுதச் சொல்லி நெருக்கியுள்ளனர். அதனால் அவர் தன் முதல் புத்தகத்தை எழுதுகிறார். இந்தப் புத்தகம் முழுக்க முழுக்க உரையாடலாக இருக்கும். ஆசிரியர் ஒருவரிடம் மாணவர்கள் உரையாடுவதன்மூலம் இயக்கவியல் விளக்கப்படும். கேள்வி கேட்பது என்பதை மிக முக்கியமானதாக இந்தப் புத்தகம் முன்வைக்கும்.
இந்தப் புத்தகம் மூலமும், மேலும் சில புத்தகங்கள் மூலமும், கல்விக்கான புத்தகங்களில் நாங்கள் காலடி எடுத்துவைக்கிறோம்.
பேராசிரியர் அனந்தனிடம் எப்போது வேண்டுமானாலும் இயல்பியல் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். நேற்று வெகுநேரம் மில்லிகனின் Oil Drop சோதனை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். மின்னணுவின் மின்னூட்டம் என்ன என்று கண்டறியும் சோதனை. இதைக் கண்டுபிடித்ததற்காக மில்லிகனுக்கு 1923-ல் நோபல் பரிசு கிடைத்தது.
மின்னணு பற்றி அறிவியல் வலைப்பதிவுக்காக ஒரு விரிவான பதிவை எழுதிக்கொண்டிருக்கிறேன். தாம்சன், மில்லிகன், ரூதர்ஃபோர்ட் என்று தொடரும் ஒரு பயணம். விரைவில் அந்தப் பதிவை வெளியிடுகிறேன்.
சேலம் புத்தகக் கண்காட்சியில் இன்றும் இருப்பேன்
6 hours ago
பத்ரி, அருமையான மனிதர் பற்றி அற்புத தகவல்கள்.
ReplyDeleteபுத்தகம் நன்கு வெளி வர வாழ்த்துகள்.
காத்திருக்கிறோம்.
பகிர்விற்கு நன்றி.
யா. பெரெல்மான் என்பவர் எழுதிய சுவாரசியமான இயல்பியல் புத்தகம் Physics for Entertainment என்பதை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இதன் தமிழாக்கம் ‘பொழுதுபோக்கு பெளதிகம்’ என்ற தலைப்பில் இரு பகுதிகளாகச் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர்வரை நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில் கிடைத்தது. இப்போதும் சில நூலகங்களில் இருக்கலாம். சுமாரான மொழிபெயர்ப்பாக இருந்தாலும் படிக்கச் சுவாரசியமாக இருந்தது.
ReplyDeleteஇப்புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பின் முதல் பகுதியை பின்வரும் உரலிருந்து இறக்கிக்கொள்ளலாம்: http://www.4shared.com/file/58713930/3cd91cdc/Physics_for_Entertainment_Volume_1__Yakov_Perelman_.html
Glad to see a post on Ananthan. I was one time a regular member of Physics society sunday meetings during my BSc days. Good to know that he is authoring a book.
ReplyDeleteநான் சென்னையில் இருந்தபோது அனந்தனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். என் வாத்தியார் பஞ்சாபகேசன் கூட அவரைப் பற்றிக் கூறியதாக ஞாபகம்.
ReplyDeleteகலீலியோ எழுதிய 'Dialogues concerning two chief world systems' தமிழாக்கம் வந்தால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன்.இதுவும் உரையாடல் தொகுப்புதான்.இயற்பியல் கிளாசிக்ஸ் புத்தகம்.
வார்த்தை இதழில் Richard Feyman எழுதிய 'Surely you're joking Mr.Feyman' புத்தகத்தின் சில பகுதிகள் வந்துள்ளன, கவனித்தீர்களா?
ரெங்கதுரை: இந்தப் புத்தகம் ‘out of copyright’ கணக்கில் வருவது. எழுத்தாளர் இறந்து 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதை அழகான, இயல்பான தமிழில் (ஆங்கிலம் வழியாக) மொழிபெயர்க்க விரும்புவீர்களா? எனக்கு இந்தப் புத்தகத்தின்மீது மிகுந்த காதல் உண்டு.
ReplyDeleteவிருப்பம் இருந்தால், நேரம் இருந்தால் சொல்லுங்கள். அல்லது இந்தப் பதிவைப் படிக்கும் இயல்பியல் அறிவும் ஆர்வமும் உள்ள நண்பர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.
அதிகம் விற்காது என்றாலும், ஆர்வம் இருப்பவர்கள் இதுபோன்ற மொழிபெயர்ப்புகளில் ஈடுபட்டால் வருங்காலச் சந்ததியினருக்கு உபயோகமாக இருக்கும்.
கிரிதரன்: வார்த்தை இதழ் இன்னமும் படிக்கவில்லை.
ReplyDeleteதமிழுக்குக் கொண்டுவர வேண்டிய புத்தகப் பட்டியலில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. நீங்கள் கலீலியோ புத்தகத்தை ஒரு கை பார்க்க விரும்புகிறீர்களா? டார்வினின் மூன்று புத்தகங்கள் (ஆரிஜின், டிசண்ட் ஆஃப் மேன், பீகிள்), நியூட்டனின் பிரின்சீபியா...
//நீங்கள் கலீலியோ புத்தகத்தை ஒரு கை பார்க்க விரும்புகிறீர்களா?//
ReplyDeleteபத்ரி,கண்டிப்பாக.Challenging அனுபவமாக இருக்கும்.மீண்டும் எடுத்து படிக்க ஆரம்பிக்கிறேன்.
Learning things more practical and in interesting medium always results good. I belive, learning is not to produce what we learnt but to apply priniciples.
ReplyDeleteAnd more interestingly, physics is a subject which cant be avoided from day to day life. Understanding basic physics will help 100% to break fundamental complexities and more specifically for engineering. However I was late to recoginize it ;)
No things are complex when breaked into its fundamentals. Things are more complex when fundamentals are not understood.
"மில்லிகனின் எண்ணைத்துளி ஆய்வு", கல்லுரி நாட்களை நினைவுட்டியது. "இயல்பியல்", நல்ல தமிழாக்கம்.
ReplyDelete//விருப்பம் இருந்தால், நேரம் இருந்தால் சொல்லுங்கள். அல்லது இந்தப் பதிவைப் படிக்கும் இயல்பியல் அறிவும் ஆர்வமும் உள்ள நண்பர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.//
மொழி பெயர்ப்புக்கு ஆர்வம் பத்ரி