தமிழ் உரைநடை இலக்கியத்தின் எதிர்காலம்
|
நீல.பத்மநாபன் |
நீல.பத்மநாபன் தலைமை தாங்க, தமிழில் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் பற்றிய ஒரு அமர்வு துவங்கியது. நீல.பத்மநாபன் மலையாளத் த்வனியோடு தமிழில் பேசினார். தான் ஒரு சிறு தளத்திலேயே இயங்கிக் கொண்டிருந்ததாகவும், அதன் பின்னர் மொழி, நடை, உத்திகள் ஆகியவற்றில் நிறைய வளர்ச்சி வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
|
எஸ்.ராமகிருஷ்ணன் |
எஸ்.ராமகிருஷ்ணன் நாவல்கள் பற்றிப் பேச வந்தார். இரா.முருகன் இந்திரா பார்த்தசாரதியின் 'கிருஷ்ணா கிருஷ்ணா'வைப் பற்றிப் பேசுகையில் குந்தர் கிராஸின் (Gunther Grass) கிராப் வாக் (Crabwalk) நாவலின் நடையோடு ஒப்பிட்டு, இ.பா அந்த நடையை விட மேலேறிச் சென்றுள்ளார் தன் நாவலில் என்று குறிப்பிட்டார். ராமகிருஷ்ணன் இதைப் பிடித்துக் கொண்டு தமிழில் நாவல்களே சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை, அதிலும் குந்தர் கிராஸோடு தமிழ் எழுத்தாளர் ஒருவரை ஒப்பிடுவது மகா பாவம் என்ற முறையில் பேச ஆரம்பித்தார். குந்தர் கிராஸ் எப்படி 16 (??) நாவல்களை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் எழுதி, இந்தியாவைப் பற்றிக் கூட (ஷோ யுவர் டங் - Show your tongue) ஒரு நாவல் எழுதியுள்ளார் என்றார். அதன் பின்னர் பல வேற்றுமொழி நாவலாசிரியர்கள் பற்றி ஒருசில எடுத்துக்காட்டுகள் கொடுத்த பின்னர் இந்தியாவிலேயே வங்காளம், மராத்தி ஆகிய மொழிகளுக்கு ஈடாக தமிழில் நாவல்கள் இல்லை என்றார். தமிழில் சிறந்த நாவல்கள் என்றால் உடனடியாக மூன்று நாவல்களைக் குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றும் கிடைக்காது என்றும், அந்த ஓரிரண்டு நாவல்களைச் சொல்வதற்கே அருகில் உள்ள இரண்டு பேருடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் சொன்னார்.
தமிழன் தன் வாழ்க்கை முறையினைப் பற்றி தமிழ் நாவல்களில் அதிகம் விளக்கவில்லை; அரசியலைப் பின்னணியாகக் கொண்ட நாவல்கள் தமிழில் இல்லை; வாய்வழிக் கதைகள், புராணங்களை தமிழ் நாவலாசிரியர்கள் 'மீள்-பார்வையில்' மீண்டும் சொன்னதில்லை என்று குற்றச்சாட்டுக்களாக அடுக்கினார். நோபல் பரிசு பெற்ற போர்ச்சுகீசிய நாவலாசிரியர்
ஹோசெ சரமாகோவின் (Jose Saramago) நாவலான "யேசு கிறிஸ்துவின் பார்வையில் வேதாகமம்" (The gospel according to Jesus Christ), கிரேக்க எழுத்தாளர் நிக்கோஸ் கசன்சாகிஸின் (Nikos Kazantzakis) "யேசு கிறிஸ்துவின் கடைசிச் சபலம்" (The last temptation of Christ) போன்ற நாவல்கள் தமிழில் இல்லை என்றார். துருக்கிய எழுத்தாளர் ஓர்ஹான் பாமுக்கின் (Orhan Pamuk) "என் பெயர் சிகப்பு" ('My name is red'. சில இடங்களில் 'Call me crimson' என்றும் வெளியாகியுள்ளது போல அறிகிறேன்) என்னும் நாவலைப் பற்றி சிலாகித்துப் பேசினார். (பேசும்போது எகிப்திய எழுத்தாளர் என்று தவறாகச் சொன்னார்.)
எஸ்.ராமகிருஷ்ணனின் பேச்சு எதிர்மறையாகவே இருந்தது. அரங்கில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளுமாறு தமிழ் நாவல்களில் என்ன குறைவு, உலக நாவல்களில் என்ன நிறைவு, எப்படி தமிழ் நாவலாசிரியர்கள் இந்த இடைவெளியை நிரப்ப முயற்சிக்கிறார்கள், அல்லது முயற்சிக்க வேண்டும் என்று பேசியிருந்திருக்கலாம். என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் பட்டியல் போடுவது தவறான முயற்சி. ராமகிருஷ்ணனின் பேச்சுக்கு
இரா.முருகனின் எதிர்வினை ராயர்காபிகிளப்பில் வந்துள்ளது.
|
பா.ராகவன் |
அடுத்துப் பேச வந்த ரெ.கார்த்திகேசு இப்படி சூடு வைக்கவில்லை. ஆனால் சிறுகதைகள் எங்கே போகப்போகின்றன என்பது பற்றி ஜோசியம் சொல்ல ஆரம்பித்து விட்டார். தான் கி.ராஜநாராயணனிடம் பேசியபோது அவரிடம் 'சிறுகதைகள் எங்கே போகப்போகின்றன' என்று கேட்டதற்கு அவர் பதிலாக 'எப்படிச் சொல்லமுடியும்?' என்று சொன்னார் என்ற ரெ.கா, தைரியமாக கணிக்க ஆரம்பித்தார். ஒருசில கணிப்புகள் "தமிழில் வெகுஜன இதழ்கள் சிறுகதைகளை தொட்டுக்கொள்ள வைத்திருக்குமே தவிர, வளர்க்காது, ஆனால் ஒரேயடியாக வெட்டிவிடாது. அச்சுத்தொழில் வளர்ச்சியினால், சிற்றிதழ்கள் பெருகும்; புத்தகங்கள் வெளியாவதும் பெருகும்; அதனால் சிறுகதைகள் அவற்றின் மூலம் பெருகும். இணையம் மூலம் பல புதிய சிறுகதை எழுத்தாளர்கள் வருவர். சிறுகதைகளுக்கென்றே இதழ்கள் நிறைய வரும். "
கடைசியாகப் பேசிய ராகவன் கட்டுரை இலக்கியம் பற்றி தன் கருத்துகளைச் சொன்னார்.
அவற்றை அவரது வலைப்பதிவிலேயே காணலாம்.
No comments:
Post a Comment