மத்திய அரசின் கேபினட் இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவாக 'சமூகப் பாதுகாப்புத் திட்டம்' ஒன்றினை உருவாக்குவதற்கு முதற்படியாக, முறைசாரா தொழிலாளர்களுக்காக ஒரு திட்டத்தினைக் கொண்டுவந்துள்ளது. இந்தத் திட்டத்தை ஒரு சட்டமாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் முன்னர் முன்னோடியா இந்தியா முழுவதிலுமிருந்து ஐம்பது மாவட்டங்களில் இரண்டு வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தப் படும். அதன்பின்னர் ஒரு சட்டம் கொண்டுவரப்படலாம். இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் கிட்டத்தட்ட 37 கோடி முறைசாரா தொழிலாளர்களுக்கு நன்மை ஏற்படலாம். ஆனால் அதற்குள்ளாகவே செய்தித்தாள்கள் என்னவோ இந்த 37 கோடி தொழிலாளர்களும் இப்பொழுதே நன்மை அடைந்துவிட்டதாக கோஷம் போட ஆரம்பித்து விட்டன. தினமலர் "முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு! 37 கோடி பேருக்கு மத்திய அரசு சலுகை" என்கிறது. உள்ளே செய்திகளிலும் நிறைய தவறுகள் உள்ளன. தி ஹிந்துவும் "The Union Cabinet today approved the Social Security Scheme for workers of the unorganised sector that will benefit 370 million workers." என்கிறது. தினமணி "37 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு" என்கிறது. "Govt. in election mode, Safety net for more workers" என்கிறது பிசினஸ் ஸ்டாண்டர்ட்.
இதில் கவனிக்கப்பட வேண்டியது இந்தத் திட்டம் வெறும் முன்னோடித் திட்டம் மட்டுமே. இது உருப்படியாக நடக்குமா என்பதே சந்தேகம். உருப்படியாக நடக்க வேண்டுமானால் மாநில அரசுகள் இந்தத் திட்டத்தில் ஈடுபட வேண்டும். இதில் மத்திய அரசின் பங்கு என்ன, மாநில அரசுகளின் பங்கு என்ன என்பது எனக்குப் புரியவில்லை.
முதலில் இந்த முன்னோடித் திட்டம் என்ன சொல்கிறது? முறைசாராத் தொழிலாளர்கள் யார்?
எந்த ஒரு நிறுவனத்தில் 20க்குக் கீழாக ஊழியர்கள் இருக்கின்றனரோ, அந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வைப்பு நிதி (Provident Fund - PF), ஊழியர் காப்பீடு (Employee State Insurance - ESI) ஆகியவற்றை அவ்ழங்க வேண்டியதில்லை. அதாவது என் வீட்டில் ஒரு சமையற்காரர், வண்டி ஓட்டுனர் ஆகியோர் உள்ளனர். நான் அவர்களுக்கு இதுவரையில் PF, ESI என்று எதுவும் செலுத்த வேண்டியிருந்ததில்லை. தெருவோரப் பெட்டிக்கடை, தையல் கடை, தெருவோரத்தில் இஸ்திரி போடுபவரிடம் வேலை பார்க்கும் சிறுவன் ஆகியோருக்கு PF, ESI கிடையாது. ஒரு புத்தக அச்சகத்தில் 10 பேர் வேலை செய்தாலும் அவர்கள் யாருக்கும் PF, ESI கட்ட வேண்டியது அச்சக உரிமையாளரின் கடமையில்லை.
இப்பொழுது மத்தியக் கேபினட் முடிவின்படி ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் முறைசாராத் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் 18-35 வயதுக்குக் கீழ் இருந்தால் ரூ. 50ம், அதற்கு மேல் இருந்தால் ரூ. 100ம் கட்ட வேண்டும். உரிமையாளர்கள், 35க்குக் கீழுள்ளவர்களுக்கு ரூ. 100ம், அதற்கு மேல் இருந்தால் ரூ. 200ம், மத்திய அரசின் ஊழியர் வைப்பு நிதி அலுவலகத்திடம் கட்ட வேண்டும். மத்திய அரசு இந்தத் தொகைக்கு மேல் ஊழியரின் ஊதியத்தில் 1.16% தொகையை (குறைந்த பட்சம் ரூ. 20.88 (1800இல் 1.16%), அதிக பட்சம் ரூ. 75.40 (6500இல் 1.16%)) மாதத்திற்கு சேர்க்கும். இப்படி சேர்ந்த தொகையை வைத்து ஊழியர் ஓய்வடைந்தால் அல்லது வேலை செய்ய முடியாத அளவிற்கு உடல் ஊனமடைந்தால், மாதத்திற்கு ரூ. 500 ஓய்வூதியமாக வழங்கும். அவரது இறப்பிற்குப் பிறகு கணவன்/மனைவிக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ ஓய்வூதியம் தொடரும். ரூ. ஒரு லட்சம் அளவிற்கு ஆயுள் காப்பீடும் வழங்கப்படும்.
நல்ல திட்டம். எப்படி நடைமுறைப்படுத்தப் படுகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
அமரன் - ஒரு மகத்தான படைப்பு
4 hours ago
No comments:
Post a Comment