'ப்ரவாஸி பாரதீய திவஸ்' எனப்படும் 'வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தினம்' தற்போதைய மத்திய அரசால் பெரும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தக் கொண்டாட்டத்தில் உருப்படியாக எதுவும் வெளிநாட்டில் வாழும் இந்திய மற்றும் இந்திய வம்சாவளியினருக்குக் கிடைப்பதைப் போலத் தெரியவில்லை.
இன்று இந்த மூன்று நாள் விழாவின் முதல் நாளில் முழங்கப்பட்டவை:
1. ஒருசில நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும்
2. வெளிநாட்டு இந்தியரின் பிள்ளைகள் இந்தியாவில் படிக்க வரும்போது அவர்களுக்கு இந்தியர்களுக்கான கட்டணமே வசூலிக்கப்படும்.
3. வளைகுடா மற்றும் தென்கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் கட்டாயக் காப்பீடு எடுத்துக்கொள்ள வேண்டும்
4. இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய இருந்த கூரை $100 மில்லியன் விலக்கப்படுகிறது.
5. இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் விவசாயத்துறையில் ஈடுபட முடியாது என்ற தடை விலக்கப்படுதல்
இவற்றைப் பார்க்கும்போது இது எதனாலும் வெளிநாட்டில் வசித்துக் கொண்டு இந்தியாவிற்கு ஆண்டிற்கு 55,000 கோடு ரூபாய்களைக் கொடுக்கும் இந்தியர்களுக்கு எந்தவித உருப்படியான சலுகைகளும் வழங்கப்படவில்லை என்றே புரிகிறது. (4) மற்றும் (5) முழுக்க முழுக்க இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள். (3) இலவசமாக எதுவும் கொடுப்பது போலத் தெரியவில்லை. (2) முதலில் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்து படிக்கும் இந்தியக் குழந்தைகளுக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதே அயோக்கியத்தனம். அதை நீக்குவது என்னவோ பெரிய சாதனை போலக் காட்டப்படுகிறது. (1) மூலம் ஓரளவுக்கு, ஒருசில நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு ஏதோ கொஞ்சம் உதவி என்று சொல்லலாம். அதன் பிறகு 250 கோடி ரூபாய்கள் செலவில் தில்லியின் ஏதோ அலுவலகம் அமைக்கப்படும் என்கிறார் பிரதமர். அதனால் யாருக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை.
வெளிநாட்டுக்குப் படிக்கப் போகும் மாணவர்களுக்கோ, வளைகுடா, தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கு வேலைக்குப் போகும் ஊழியர்களுக்கோ எந்த உதவியும் நேரிடையாக அரசு செய்வது போலத் தெரிவதில்லை. சிங்கப்பூரிலும், மலேசியாவிலும், வளைகுடா நாடுகளிலும் ஏமாற்றுக்காரர்களின் பிடியில் மாட்டிக்கொள்ளும் அப்பாவித் தொழிலாளர்களைக் காப்பாற்ற தீவிரமான நடவடிக்கை எதுவும் அரசு எடுப்பதாகத் தெரிவதில்லை. வெளிநாட்டில் நல்ல பணம் ஈட்டியவர்களை இந்தியாவிற்கு வரவழைத்து அவர்கள் இந்தியாவில் தொழில் நடத்துவதற்கு என்று எந்த சிறப்புச் சலுகையும் இந்திய அரசு தருவதில்லை. வெளிநாட்டில் உயர் கல்வி கற்ற, மற்றும் இந்தியாவில் இல்லாத தொழில்களில் பயிற்சி உள்ளவர்களை இந்தியாவிற்கு வரவேற்று இந்திய நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் விதமாக வெளிநாட்டு இந்தியர்களுக்கும், இந்திய நிறுவனங்களுக்கும் இடையில் ஒரு இடைத்தரகர் வேலையைக் கூட இந்திய அரசு செய்வதில்லை.
இப்படி உப்புச்சப்பில்லாத ஒரு விஷயத்திற்கு ஏன் ஊரைக் கூட்டிக் காசைக் கரியாக்க வேண்டும்? அதற்கு ஏன் டிரினிடாட், மலேசியா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளின் ஆட்சியில் இருக்கும் பெருந்தலைகள் வந்து தங்கள் நேரத்தை வீணாக்குகிறார்கள்?
[பி.கு: இதுதான் என்னை இன்று பிபிசி வானொலி தமிழோசை நிகழ்ச்சியில் நேர்முகம் செய்தபோது நான் சொன்னது. இன்றோ, நாளையோ வரலாம்.]
சேலம் புத்தகக் கண்காட்சியில் இன்றும் இருப்பேன்
5 hours ago
No comments:
Post a Comment