Friday, January 23, 2004

நேற்றைய இந்தியா-ஆஸ்திரேலியா போட்டி

நேற்றே எழுத வேண்டுமென்று இருந்தது தள்ளிப்போய்விட்டது.

லக்ஷ்மண், யுவ்ராஜின் அபாரமான ஆட்டம், கில்கிறிஸ்டின் அதிரடித் தாக்குதல், மழை, இந்தியப் பந்து வீச்சாளர்களின் பிரமாதமான பந்து வீச்சு, பாலாஜியின் கடைசி ஓவரில் லீயின் அசுரத் தாக்குதல் சிக்ஸர். அருமையான ஆட்டம். ஒருநாள் பிரியர்கள் எதிர்பார்த்த விருந்து.

தொடக்கத்திலிருந்து தொடங்குவோம். டாஸ் வென்ற கங்குலி சொல்லிவைத்தாற்போல் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். லீ முதலில் ஒரு பந்தை விலாவில் குத்துமாறு வீசி, அடுத்த பந்தை ஆஃப் ஸ்டம்பிற்கு வெகு வெளியே வீச, கங்குலி அதை ஒத்தி கில்கிறிஸ்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். பார்த்திவ் படேல் அவ்வப்போது நன்றாகவும், மற்ற நேரங்களில் தடுமாறியும் விளையாடிக் கொண்டிருந்தார். கில்லஸ்பியின் அளவுக்கு அதிகமாக வீசப்பட்ட ஒரு பந்தை அருமையாகக் கவர் திசையில் நான்காக அடித்தார். மற்றுமொரு அளவு குறைந்து வந்த பந்தை, சிறிதும் பயமின்றி ஹூக் செய்தார். சரியாக மட்டையில் படாவிட்டாலும், பந்து விக்கெட் கீப்பருக்கு மேல் பறந்து சென்றது. இவ்வளவு குள்ளமாக இருக்கும் ஒருவர் பயமின்றி ஹூக் செய்வது பார்க்க அழகாக இருந்தது. எதிர்ப்பக்கத்தில் லக்ஷ்மண் சிறிதும் கவலையின்றி நிதானமாக ரன்களைக் குவித்துக் கொண்டிருந்தார். ஆனால் கில்லஸ்பியின் ஏழாவது ஓவரின் கடைசிப் பந்தில் (அத்துடன் அவரது ஸ்பெல் முடிந்திருக்கும்) தேவையின்றி ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே போனதைத் தட்டி கில்கிறிஸ்டிடம் கேட்ச் கொடுத்தார். அப்பொழுது அணியின் எண்ணிக்கை 63, 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு.

அடுத்து திராவிட் உள்ளே நுழைந்தபோது கூட்டத்தில் ஒரு பகுதியினர் "மஞ்சள் எச்சில்" விவகாரத்தினால் திராவிடை எதிர்த்து சப்தமெழுப்பினர். அதனலோ என்னவோ, திராவிட் ஏதோ வெறியுடன் ஆடுவது போல் இருந்தது. ஹார்வேயின் ஓவரில் கடைசி இரண்டு பந்துகளை அநாயாசமாகப் பாயிண்ட் திசையிலும், நேராக ஒரு ஸ்டெரெயிட் டிரைவாகவும் அடித்தார். அடுத்த பிக்கெல் ஓவரில் தான் சந்தித்த முதல் பந்தைக் கவர் திசையில் அடித்து நான்கைப் பெற்றார். ஆறு பந்துகளில் மூன்று நான்குகள் சேர்த்து, பனிரெண்டு ரன்களுடன் நிதானமான விளையாட்டிற்கு மாறியிருக்கலாம். ஆனால் விதி - அடுத்த பந்தை கில்கிறிஸ்டிடம் கேட்ச் கொடுக்க வைத்தது. சாதாரணமாக இப்படிப்பட்ட பந்துகளை திராவிட் ஆட்ட ஆரம்பத்தில் வெளியே போகுமாறு விட்டிருப்பார். ஸ்கோர் 80/3.

அதன்பின் நடந்தது அற்புதமான ஆட்டம். யுவ்ராஜ் சிங் தன் வாழ்க்கையில் இதுவரை இப்படியொரு இன்னிங்ஸை விளையாடியதில்லை. தொடக்கத்தில் மெதுவாக விளையாடினாலும், விடாது அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒன்றுகளைப் பெற்றுக் கொண்டிருந்தார். சளைக்காமல் லக்ஷ்மணும் ஈடுகொடுத்தார். அவ்வப்போது யுவ்ராஜ் காத்திரமாக ஒரு நான்கைப் பெற்றுக் கொண்டிருந்தார். இவரது 'வேகன் வீல்' (ஓட்டங்கள் எடுத்துள்ளதை வரைந்த சக்கரம்) படத்தைப் பார்க்கையில் மைதானத்தின் ஒரு மூலையை விடாது ரன் எடுத்துள்ளது தெரிய வரும். 80களில் இருக்கும்போது லக்ஷ்மணின் எண்ணிக்கையைத் தாண்டிய யுவ்ராஜ் ஒருநாள் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை எட்டினார். (99இலிருந்து 103க்குப் போன அந்த ஒரு ஷாட் தான் அவரது இன்னிங்ஸிலியே அழுக்கான ஷாட்! 'ஃபிரெஞ்சு கட்', ஸ்டம்பிற்கு வெகு அருகாமையில் சென்று எல்லைக் கோட்டைக் கடந்தது.) சதத்தைத் தாண்டியபின் பேட்டை நழுவ விட்டு விட்டு, வானத்தை நோக்கி இருகைகளையும் உயரத் தூக்கி ஆட்டி, ஒரு சிறுபிள்ளைக்கே உரித்தான சந்தோஷத்தைக் காட்டிக் கொண்டார். 49ஆவது ஓவரில் 'கடைசி ஓவர் ஸ்பெஷலிஸ்ட்' ஹார்வேயை த்வம்சம் செய்து விட்டார். முதலிரண்டு பந்துகளில் ஆளுக்கொரு ரன் கிடைத்தது. மூன்றாவது பந்து மிட்விக்கெட் திசையில் ஆறு, நான்காவது பந்து டீப்-பேக்வார்ட்-ஸ்கொயர்-லெக் திசையில் நான்கு, ஐந்தாவது பந்து நேராக லாங்-ஆன் திசையில் ஆறு, ஆராவது பந்து கவர் திசையில் நான்கு என்று அந்த ஓவரில் 22 ரன்கள் கிடைத்தன.

இதற்கிடையில் லக்ஷ்மண் சிறிதே தடுமாறி தன் சதத்தை எட்டினார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தன் ஆளுமையை லக்ஷ்மண் மீண்டும் வெளிப்படுத்தினார். கடைசி ஓவரில் யுவ்ராஜ் தன் விக்கெட்டை இழந்தாலும், 296 ஓட்டங்களை இந்தியா எடுக்க அவரது இன்னிங்ஸே முக்கியக் காரணமாயிருந்தது.

இந்திய இன்னிங்ஸில் மழையினால் சிறிது ஆட்டம் தடைப்பட்டாலும், அதனால் அப்பொழுதைக்கு ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை. ஆனால் முன்னிரவில் மழை வலுப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகத் தெரிந்தது.

ஆஸ்திரேலியா கில்கிறிஸ்ட், காடிச் ஆகியோருடன் இன்னிங்ஸைத் துவக்கியது. அகர்கார் முதல் ஓவரிலிருந்தே தாறுமாறாகப் போட ஆரம்பித்தார். பதானும் துல்லியமாகப் பந்து வீசுவதை விட கில்கிறிஸ்ட் ஆக்ரோஷமாகத் தாக்கும் வண்ணம் அளவுக்கு அதிகமாகவோ, அல்லது ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில், அடிக்கும் அளவிலோ பந்து வீசினார். கில்கிறிஸ்ட் ஏதோ அவசரமாக பஸ் பிடித்து வீட்டுக்குப் போக வேண்டியவர் போல அடிக்கத் தொடங்கினார். முதலிரண்டு ஓவர்களில் தலா ஆறு ரன்கள், அடுத்த இரண்டு ஓவர்களில் தலா பனிரெண்டு ரன்கள், ஏழாவது ஓவரில் 50 தாண்டப்பட்டது. இதற்கிடையில் காடிச் தானும் அடிக்கப்போய் பதானின் பந்தை மிட்-ஆனில் இருக்கும் கங்குலியிடம் சுளுவாகக் கேட்ச் கொடுத்தார். எண்ணிக்கை 24/1. கில்கிறிஸ்டும், பாண்டிங்கும் எளிதாக ரன்களைக் குமிக்க ஆரம்பித்தனர். அகர்காருக்குப் பதில் வந்த பாலாஜி நான்கு நல்ல பந்துகளுடன், ஒன்றைக் குப்பையாக வீச, கில்கிறிஸ்ட் அதனை கவர் திசையில் பறக்கடித்தார். பாலாஜி அணியின் பத்தாவது ஓவரை வீச ஆரம்பித்த போது மழை கொட்டத் தொடங்கியது.

மீண்டும் ஆட்டம் ஆரம்பித்த போது டக்வொர்த்-லூயிஸ் முறையில் ஆஸ்திரேலியாவின் இலக்கு 34 ஓவர்களில் 225 என்று தீர்மானிக்கப்பட்டது. கில்கிறிஸ்ட் சிறிதும் தன் முறையை மாற்றவில்லை. யார் வந்து பந்து வீசினாலும் பந்து எல்லைக்கோட்டுக்கே சென்றது. மீண்டும் மழை வரும்போல இருந்ததால் ஆஸ்திரேலியா எப்படியாவது 25 ஓவர்கள் வரையிலாவது ரன்களை வேகமாகக் குவிக்க வேண்டும் என்று செல்வது போல இருந்தது. [இரண்டு அணிகளும் 25 ஓவர்களாவது விளையாடியிருந்தால்தான் அந்த ஆட்டம் முடிந்ததாகக் கருதப்படும். இல்லாவிட்டால் ஆட்டம் வெற்றி-தோல்வியின்றி முடிந்ததாக அறிவிக்கப்படும்.] கங்குலியோ, ஆட்டத்தை முடிந்த அளவு மெதுவாகக் கொண்டுபோவதற்கான வழிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு ரன்-அவுட்டை முயற்சிக்கையில் யுவ்ராஜ் சிங் கீழே விழ, அதுதான் சாக்கு என்பது போல் யுவ்ராஜுக்கு மைதானத்தின் நடுவில் வைத்தியம் நடந்தது. கோபம் கொண்ட பாண்டிங் நடுவர்களிடம் முறையிட, நடுவர் பக்னார் கங்குலியிடம் கடுப்படிக்க, இப்படியாகக் கொஞ்ச நேரம் விரயமானது.

அடுத்த ஓவரை வீச இர்ஃபான் பதான் வந்தார். இதுதான் இவரது கடைசி ஓவர். சற்றே வேகம் குறைந்து வீசப்பட்ட, ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே சென்ற இந்தப் பந்தை பாண்டிங் படேலிடம் தொட்டு கேட்ச் கொடுத்தார். ஸ்கோர் 150/2. கங்குலியின் முயற்சி ஒருவகையில் வெற்றியடைந்தது. அதற்கடுத்த பந்து பதானின் மிக அருமையான பந்து - வேகமாக வீசப்பட்டு ஆஃப் ஸ்டம்பில் விழுந்து, வீசப்பட்ட கோணத்தில் வெளியே சென்றது. புதிதாக உள்ளே வந்த ஆட்டக்காரர் மார்ட்டினால் அந்தப் பந்தை படேலிடம் கேட்ச் கொடுப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை. எண்ணிக்கை 150/3. அடுத்து முரளி கார்த்திக் வீசிய ஓவரில், சற்றே காற்றில் தூக்கி எறியப்பட்ட பந்தினை கில்கிறிஸ்ட் பந்து வீச்சாளரிடமே அடித்து கேட்ச் கொடுக்க, திடீரென ஆஸ்திரேலிய அணி சரியத் தொடங்கியது. கில்கிறிஸ்ட் 92 ரன்களுடன் ஆட்டமிழந்தார். எண்ணிக்கை 154/4.

சைமாண்ட்ஸும், பெவானும் ஓரளவுக்கு நிலைமையை சீர்தூக்க முயன்றனர். கங்குலியின் ஒரு பந்தை மிட்-ஆஃப் திசையின் மீது தூக்கி ரன்களுக்கு அடித்த சைமாண்ட்ஸ், அடுத்த பந்தை மிட்-விக்கெட் திசையில் தூக்கி அடித்து அகர்காரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். எண்ணிக்கை 176/5. அதற்கடுத்து கார்த்திக் வீசிய ஓவரின் முதல் பந்தில் புதிதாக உள்ளே வந்த மைக்கேல் கிளார்க் இறங்கி அடிக்க வர, சுலபமான ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பை படேல் கோட்டை விட்டார். இதுவே இந்தியாவின் தோல்விக்கு அடித்தளமாக அமைந்தது எனலாம். இந்த விக்கெட் விழுந்திருந்தால் கிட்டத்தட்ட ஆட்டம் அப்பொழுதே முடிந்திருக்கும். நிறையத் தடுமாறிய பின்னர் பெவான் கங்குலியின் இன்-கட்டர் ஒன்றில் ஸ்டம்ப்களை இழந்தார். எண்ணிக்கை 195/6. ஹார்வே ரன்-அவுட் ஆனார். எண்ணிக்கை 202/7. கிளார்க் 21 ரன்களை எடுத்தார், கங்குலியின் பந்தில் பதானியால் மிட்-ஆன் எல்லைக்கோட்டில் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். எண்ணிக்கை 210/8. அந்த 21 ரன்கள் மிக முக்கியமானவை.

பிரெட் லீயும், ஆண்டி பிக்கெலும் சேர்ந்து கடைசி இரண்டு ஓவர்கள் இருந்த போது 15 ரன்கள் எடுக்க வேண்டும். அகர்கார் 33ஆவது ஓவரை வீசினார். இவரை ஒருவேளை 34ஆவது ஓவரை வீச வைத்திருக்கலாம். 33ஆவது ஓவரில் நான்கே ரன்களை மட்டும் கொடுத்தார். கடைசி ஓவரை வீச பாலாஜி வந்தார். வெற்றி பெற எடுக்க வேண்டியது 11 ரன்கள். முதல் பந்தில் லீக்கு ஒரு ரன். இரண்டாவது பந்தில் பிக்கெலுக்கு ஒரு ரன். மூன்றாவது பந்தை லீ ஸ்வீப்பர் கவருக்குத் தட்டிவிட்டு வேகமாக ஒரு ரன்னை எடுத்து, இரண்டாவது ரன்னையும் முடித்தார். ரோஹன் காவஸ்கர் சற்றே வேகமாக அந்தப் பந்தைத் தடுத்திருக்க வேண்டும். நான்காவது பந்து... அளவுக்கு சற்று அதிகமாக, ஆஃப் ஸ்டம்பில் வீசினார் பாலாஜி. லீ தன் மட்டையைச் சுழற்றினார். பந்து மிட்-ஆஃப் திசையில் எல்லைக்கோட்டுக்கு வெளியே பறந்தது. ஆறு ரன்கள். அத்துடன் ஆஸ்திரேலியா டக்வொர்த்-லூயிஸ் இலக்கை அடைந்தது. மீதமுள்ள இரண்டு பந்துகளில் வெற்றி பெற எடுக்க வேண்டியது ஒரு ரன்னே. கங்குலி அனைத்துத் தடுப்பாளர்களையும் உள்ளே கொண்டுவந்தார். லீ பந்தை கவருக்குத் தட்டி விட, அங்குள்ள தடுப்பாளர், சற்றே தடுமாற, லீயும், பிக்கெலும் வேகமாக ஓடி ஒரு ரன்னைப் பெற்றனர்.

ஆஸ்திரேலியா இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

யுவ்ராஜ் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடுத்த ஆட்டம் இதை விடப் பரபரப்பாக இருந்தால் எத்தனை பேருக்கு அதனைத் தாங்கும் இதயம் இருக்கும் என்று தெரியவில்லை!

ஸ்கோர்போர்டு
முந்தைய இந்தியா-ஸிம்பாப்வே ஆட்டம்

No comments:

Post a Comment