இன்று காலை (இந்திய நேரம் 5.00-6.30 மணி?) சுமத்ரா, இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா அருகில் கடல் - இங்கெல்லாம் தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்த நில அதிர்வுகள் இந்தியாவில் வங்காள விரிகுடாக் கடலோரங்களில் ஏற்பட்டுள்ளது. பெரும் அலைகள் 7.30 - 8.30 அளவில் கடலோரக் கரைகளைத் தாண்டி உள்ளே வந்து விட்டது.
தமிழகக் கடலோர கிராமங்கள், சென்னை நகரம் சேர்த்து, இதில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் நான் இருப்பது கடல் கரையிலிருந்து நான்கு கிலோமீட்டர்கள் தள்ளி. முதலிரண்டு கிலோமீட்டர்களுக்குள்ளாக இருக்கும் மீனவர் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றவர்கள், கடலோரங்களில் காலைக்கடன்கள், குளியலுக்காகச் சென்றவர்கள், மெரீனாவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர்கள், ஜாக்கிங் வந்தவர்கள் என பலரும் தண்ணீரில் அடித்துக்கொண்டு போகப்பட்டுள்ளார்கள்.
அதிகாரப்பூர்வமான செய்திகள் இன்னமும் வரவில்லை. ஆனால் சென்னையில் மட்டுமே குறைந்தது 100க்கு மேற்பட்டவர் இறந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன். தமிழகம் முழுவதுமாக கிட்டத்தட்ட 500 சாவுகள் இருக்கலாம்.
சென்னைக் கடற்கரை அருகே வசிக்கும் பலர் பீதியில் அலறியடித்துக்கொண்டு கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு ஆட்டோ, கார், கால்நடையாகவே என்று கடற்கரையிலிருந்து கிளம்பி ஊரில் உள்ளே சென்றனர். என் வீட்டில் இருந்தபடியே மக்கள் அலறியடித்துக்கொண்டு செல்வதைக் காண முடிந்தது.
உயிர்ச்சேதம் இருந்தாலும், இது பெரும்பீதி ஏற்படுத்தக்கூடிய ஒரு நிகழ்ச்சி இல்லை. கடலோரத்தில் பெரும் அலைகள் இன்றுமட்டுமல்ல, அடுத்த இரண்டு நாள்களும் இருக்கத்தான் செய்யும்.
காலை முழுவதும் முடிந்தவரை நண்பர்களைக் கூப்பிட்டு பயப்பட வேண்டாம் என்று சொல்லவேண்டிய ஒரு நிலை.
===
மாநகர நிர்வாகம், எதிர்பார்த்தது போலவே, நிலைகுலைந்த நிலையில்தான். தொலைக்காட்சிகளில் அதிகாரபூர்வமான செய்தி எதுவும் இல்லை. சென்னை நகர (ஆக்டிங்) மேயரிடமிருந்து எந்த அறிவிப்பும் இல்லை. மாநில முதல்வரிடமிருந்து ஆசுவாசம் அளிக்கும் எந்தச் செய்தியும் இல்லை. மாநகரக் காவலதுறை கமிஷனரிடமிருந்து எந்த அறிவிப்பும் இல்லை.
சன் நியூஸ் அவ்வப்போது பழைய தண்ணீர் வந்த கிளிப்களைக் காண்பிக்க, அதில் அடித்துக்கொண்டு மிதக்கும் சில பிணங்கள் பார்ப்போரை இன்னமும் பீதியில்தான் ஆழ்த்தியிருக்கும். இந்தப் படங்கள் காண்பிக்கப்பட்டவுடனேயே இன்னமும் சில தொலைபேசி அழைப்புகள் வெளி மாநிலத்தில் இருக்கும் உறவினர்களிடமிருந்து வரத்தொடங்கியது.
பாதிப்புகள் உண்டு. ஆனால் பீதி வேண்டாம். கடலையொட்டி இருப்போர்/இருந்தோர் தவிர பிறருக்கு எந்த பாதிப்பும் இல்லை. கடல் கொந்தளித்து உள்ளே வந்து நகரை அழிக்கப்போவதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வேண்டிய உதவிகள் செய்வதும், கடலோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுசென்று இன்னமும் ஒரு வாரம் உணவு கொடுத்துக் கவனித்துக்கொள்வதும்தான் இப்பொழுதைய உடனடித் தேவை.
சென்னை விமானநிலைய ஓடுதளத்தில் விரிசல் விழுந்திருப்பதால் இன்று சென்னையிலிருந்து பறக்கவிருந்த விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வெண்முரசு 75, புதுவையில் நான்
7 hours ago
அன்புள்ள பத்ரி,
ReplyDeleteசன் தொலைக்காட்சியின் தகவல்கள் பீதியை அதிகரிங்கின்றனவே ஒழிய மக்களை சாந்த படுத்த எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. அதன் ஒலிப்பரப்புகளில் நேர்மை இருப்பதாக தெரியவில்லை. வரிந்து கட்டிக் கொண்டு அரசின் இயலாமையை மையப் படுத்துகிறதே, ஒழிய அதன் நோக்கம் கேள்விக்குரியதே.
By: narain
செய்திகளுக்கு நன்றி பத்ரி.
ReplyDeleteதொடர்ந்து இங்கே தகவல் தர வேண்டுகிறேன்
இப்பொழுது நிறையவே அமைதி ஏற்பட்டுள்ளது சென்னையில். இழப்பின் முழு விவரம் இன்று இரவுக்குள் கிடைத்துவிடும்.
ReplyDeleteகடலோரங்களைத் தவிர தெருக்களில் மக்கள் நடமாட்டம் மீண்டும் ஆரம்பித்துவிட்டது. மக்கள் முகங்களில் கலக்கமும் குறைந்துள்ளது.
நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் எழுதுங்கள்.
ReplyDeletebbc reports 500 people died in TamilNadu @ 4:13 EST
ReplyDeleteஅன்புள்ள பத்ரி,
ReplyDeleteதயவுசெய்து தொடர்ந்து தகவல் அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.
என்றும் அன்புடன்,
துளசி.