இன்று காலை பங்களாதேஷ் விளையாடிய அற்புதமான கிரிக்கெட், மாலை மயங்கும் நேரத்தில் கிளப் கிரிக்கெட்டை விட மோசமான நிலைக்குப் போயிருந்தது. வெளிச்சம் குறைவான ஒரே காரணத்தால் மட்டும்தான் இன்றே இந்தியாவால் வெற்றி பெற முடியவில்லை.
இன்று ஆட்டத்தின் மூன்றாம் நாள். மொஹம்மத் அஷ்ரஃபுல் - தன் முதல் டெஸ்டிலேயே 18வது வயதில் சதமடித்தவர், அணித்தலைவர் ஹபிபுல் பஷாருடன் இந்தியப் பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்க ஆரம்பித்தார். இந்தியப் பந்துவீச்சாளர்கள் காலையில் சட்டென்று சில விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்தை சீக்கிரம் முடித்து விடலாம் என நினைத்திருக்கலாம். நடக்கவில்லை. இரண்டாம் நாள் மாலை விழுந்த மூன்று விக்கெட்டுகளுமே சுழற்பந்து வீச்சாளர்கள் (கும்ப்ளே 2, ஹர்பஜன் 1) பெற்றது. ஆனால் இன்று காலை முதற்கொண்டே கங்குலி பதான், கான் இருவரையும் பந்துவீச வைத்தார். அஷ்ரஃபுல் இருவரையும் வெளுத்து வாங்கினார்.
கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கழித்து சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீச வந்தனர். கும்ப்ளே வந்தவுடனேயே அருமையான பந்து மூலம் பஷாரை ஸ்டம்பிங் செய்ய வைத்தார். தொடர்ந்து வந்த அஃப்தாப் அஹ்மத் கொடுத்த ஆதரவில் அஷ்ரஃபுல் அருமையாக விளையாடினார். இப்பொழுது சுழற்பந்து வீச்சாளர்களையும் பின்னி எடுத்துவிட்டார். காலையில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் பதானின் அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் அஷ்ரஃபுல் அடித்த இரு பிரமாதமான கவர் டிரைவ்கள். திராவிட் கூட இப்படியொரு அடியை அடித்திருக்க முடியாது! புத்தகத்தில் எப்படிச் சொல்லப்பட்டிருக்குமோ, அப்படியே, தலையை ஆட்டாது, சற்றே முட்டி போட்டு, மட்டையை நேராகப் பிடித்து, பந்தை செலுத்தி அடித்தார். மூன்றாவது பந்து, கால் திசையில் வந்ததை, தூக்கி மிட்விக்கெட் மேல் அடித்து நான்கு.
கான் வீசிய பவுன்சர் ஒன்றை ஃபைன் லெக் மேல் ஹூக் செய்த சிக்ஸ், ஹர்பஜன் பந்தை மிட் ஆன் மேல் அடித்த சிக்ஸ், பின் மைதானத்தைச் சுற்றிலும் ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் அடித்த நான்குகள் என ரன்கள் குவிந்தவண்ணம் இருந்தன. அஷ்ரஃபுல் துணையுடன் காலை இரண்டு மணிநேரங்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு பங்களாதேஷ் அடித்த ரன்கள் 120!
ஆனால் மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் சரிவு ஆரம்பம். அந்தச் சரிவுக்கு முன்னர் அஷ்ரஃபுல் ஹர்பஜனை அடுத்தடுத்து இரண்டு நான்குகள் அடித்து தன் இரண்டாம் சதத்தைப் பெற்றார். கும்ப்ளே மீண்டும் வந்து அஃப்தாப் அஹ்மதை எல்.பி.டபிள்யூ ஆக்கினார். ஏற்கனவே இரண்டு முறை அஃப்தாபை கும்ப்ளே அவுட்டாக்கியிருந்தார். நடுவர்தான் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை! அவுட்டான பந்திற்கு இரண்டு பந்துகள் முன்னால் கூட அஃப்தாபுக்கு எல்.பி.டபிள்யூ கொடுத்திருக்கலாம். அடுத்த ஓவரிலேயே மஞ்சுரல் இஸ்லாம் ஜாகீர் கானிடம் எல்.பி.டபிள்யூ ஆனார். இது ஜாகீர் கானின் 100வது விக்கெட்.
மீண்டும் அஷ்ரஃபுல், காலித் மசூதுடன் ஜோடி சேர்ந்து சில ரன்களைப் பெற்றார். புதுப்பந்து எடுக்கப்பட்டது. காலித் மசூத் துரதிர்ஷ்டவசமாக அவுட் கொடுக்கப்பட்டார், கானின் பந்து மட்டையிலே படாமலேயே ஸ்விங் ஆகி விக்கெட் கீப்பரிடம் சென்றது. ஆனால் நடுவர் அதை கேட்ச் என்று தீர்மானித்தார். தேநீர் இடைவேளை வந்தது. பங்களாதேஷ் 312/7, அஷ்ரஃபுல் 140*.
இதுவரை பங்களாதேஷ் டெஸ்ட் தரத்தில் விளையாடியது. இடைவேளையைத் தொடர்ந்ததோ படுமோசமான ஆட்டம். இடைவேளைக்குப் பின்னர் இந்தியா வீசிய இரண்டாவது ஓவர் - பதானின் முதல் ஓவரில் பவுன்சர் ஒன்றில் மொஹம்மத் ரஃபீக் இரண்டாம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார். அடுத்த பந்தில் தல்ஹா ஜுபேர் பவுல்ட் ஆனார். ஆனால் அஷ்ரஃபுல் வெறியுடன் கானின் அடுத்த ஓவரில் மூன்று நான்குகள், அடுத்த பதான் ஓவரில் ஒரு சிக்ஸ் என அடித்து, பதான் ஓவரின் கடைசிப் பந்தில் ஒரு ரன் எடுத்து அடுத்த முனைக்கு செல்ல முற்படும்போது கடைசி மட்டையாளர் நஜ்முல் ஹுசைன் ரன் அவுட் ஆனார். அஷ்ரஃபுல் 158 ஆட்டமிழக்காமல்!
ஆனால் இன்னமும் சில ஓவர்களிலேயே அஷ்ரஃபுல் ஆட்டமிழப்பார் (நடுவர் தவறால்) என அவரே நினைத்திருக்க மாட்டார். பங்களாதேஷ் 333க்கு ஆட்டமிழந்ததால் இன்னமும் 207 ரன்கள் பின்னால் இருந்தது. நான் கூட இந்தியா மீண்டும் பேட்டிங் செய்யும் என எதிர்பார்த்தேன். ஆனால் இந்தியா ஃபாலோ-ஆன் கொடுத்தது.
இரண்டாம் இன்னிங்ஸில் முதல் பந்தில் பதான் நஃபிஸ் இக்பாலை எல்.பி.டபிள்யூ செய்தார். தொடர்ந்து அடுத்த நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அதில் ஒன்று கால் திசையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச், ஆஃப் திசையில் விக்கெட் கீப்பரிடம் ஒரு கேட்ச், மூன்றாம் ஸ்லிப்பில் சேவாகிற்கு ஒரு கேட்ச், மற்றுமொரு எல்.பி.டபிள்யூ. முதல் ஐந்து விக்கெட்டுகளையும் சாய்த்த பதான் இந்தத் தொடரில் பெறும் மூன்றாவது 5-விக்கெட் இன்னிங்ஸ் இது. இதுவரை இரண்டு டெஸ்ட்களில் 18 விக்கெட்டுகள்!
கும்ப்ளே நான்கு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் பெற்றார். ஒன்று சில்லி பாயிண்டில் எளிதான கேட்ச். மற்றொன்று முதல் இன்னிங்ஸ் ஹீரோ அஷ்ரஃபுல் விக்கெட் - பந்து உள் விளிம்பில் பட்டு கால் காப்பில் பட, நடுவர் எல்.பி.டபிள்யூ எனத் தீர்மானித்தார். எட்டாவது விக்கெட் ஹர்பஜனுக்குக் கிடைத்தது. அருமையான தூஸ்ராவில் திராவிட் கைக்கு ஒரு கேட்ச்.
இதற்கிடையில் வெளிச்சம் மிக மோசமானதான் பதான், கும்ப்ளே இருவரும் வீசக்கூடாது என்பதால், டெண்டுல்கர் பந்துவீச வந்தார். மிக மோசமான லாங் ஹாப் பந்தில் மஷ்ரஃபே மொர்தாசா டீப் மிட்விக்கெட்டில் ஒரு கேட்ச் கொடுக்க, ஹர்பஜன் அதைப் பிடித்தார். ஆனால் இந்தியாவிற்கு இறுதி விக்கெட் கடைசிவரை கிடைக்கவில்லை. நாளின் கடைசி ஓவரில் டெண்டுல்கர் பந்துவீச்சில் 18 ரன்கள் பெற்றனர் பங்களாதேஷ் அணியினர்.
நாளை முதல் அரை மணிநேரத்திற்குள் ஆட்டம் முடிந்துவிடும். பங்களாதேஷுக்கு மற்றுமொரு தோல்வி. ஆனால் இன்று காலை பங்களாதேஷ் தங்களாலும் நல்ல கிரிக்கெட் விளையாட முடியும் என்பதைக் காட்டியுள்ளனர். இதைத் தொடர வேண்டும்.
உலகில் பிற பகுதிகளில் நடக்கும் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா பாகிஸ்தானை 491 ரன்கள் வித்தியாசத்தில் அடித்து நொறுக்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத் தொடரும் ஆட்டத்தில் இங்கிலாந்து முன்னிலைக்குச் சென்றுள்ளது.
சச்சிதானந்தன், கவிதைகள் மேலும் சில
11 hours ago
"ஹஸாரேயின் ஆட்டம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால் இன்றைய ராகுல் திராவிட் ஆட்டத்தைப் பார்த்தால் போதும்."
ReplyDelete"காலையில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் பதானின் அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் அஷ்ரஃபுல் அடித்த இரு பிரமாதமான கவர் டிரைவ்கள். திராவிட் கூட இப்படியொரு அடியை அடித்திருக்க முடியாது!"
போதுமே இந்த திராவிட் துதி.. தங்கள் பதிவினைப் படிக்கும் நாங்கள் அனைவரும் "திராவிட் தான் உலகிலேயே மிகச்சிறந்த மட்டையாளர், எப்படி விளையாட வேண்டும் என்பதை அறிந்தவர்" என்று வேண்டுமானால் எழுதி கொடுத்துவிடுகின்றோம். விட்டுவிடுங்கள் :-)
By: கங்குலி
இதற்குப் போய் ஏன் அய்யா கோவித்துக் கொள்கிறீர்? உண்மையைத்தானே எழுதுகிறேன்?
ReplyDeleteஇப்பொழுது இந்தியாவிற்காக விளையாடும் ஆட்டக்காரர்களில் யாரை ஹஸாரேயுடன் ஒப்பிடுவீர்கள்? சேவாக்? டெண்டுல்கர்? கங்குலி? முடியாதே?
அதைப்போல அஷ்ரஃபுல் விளையாடிய எல்லா அடிகளையும் திராவிட் விளையாட்டுடன் ஒப்பிடவில்லையே? கவர் டிரைவை மட்டும்தானே? திராவிட் நிச்சயமாக இந்த மாதிரி ஹூக் செய்ய மாட்டார். மண்டையை நகர்த்தி விடுவார்.
திராவிட் உலகின் சிறந்த மட்டையாளர் எல்லாம் கிடையாது. இப்பொழுதைக்கு இந்தியாவின் சிறந்த மட்டையாளர் - அவ்வளவே. ஆனால் உலகின் சிறந்த மட்டையாளர்கள் என சொல்லக்கூடிய ஐந்து பேரில் இப்பொழுதைக்கு திராவிட் உண்டு.