தென் ஆப்பிரிக்கா 305 & 222, இந்தியா 411 & 120/2; இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2 டெஸ்ட்கள் அடங்கிய போட்டித்தொடரையும் இந்தியா 1-0 என்ற கணக்கில் வென்றது.
இன்று காலை இந்தியா மிச்சமிருக்கும் தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட்டுகளை எவ்வளவு சீக்கிரம் கைப்பற்றும் என்பதுதான் கேள்வியாக இருந்தது. முக்கியம் கால்லிஸ் விக்கெட். நேற்று மாலை போலவே ஹர்பஜன் சிங் அற்புதமாகப் பந்துவீசினார். அவர் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் ஒரு விக்கெட் விழும்போல இருந்தது. ஆனால் கும்ப்ளே வருத்தம் தரக்கூடிய வகையில், சரியாக வீசவில்லை.
காலையில் நான்காவது ஓவரில் இந்தியாவுக்கு எதிர்பாராத வகையில் கால்லிஸ் விக்கெட் கிடைத்தது. ஹர்பஜன் பந்தை மிதக்க விட்டார். கால்லிஸ் முன்னால் இறங்கி வந்து பாதி தடுத்தும், பாதி அடித்தும் விளையாட எத்தனித்தார். ஆனால் பந்து உள்புற விளிம்பில், எதிர்பாராத விதத்தில் பட்டு பந்துவீச்சாளர் கைக்கே மிக எளிதான கேட்சாக வந்தது. கால்லிஸ் 98 பந்துகளில் 55, 4x4, தென் ஆப்பிரிக்கா 183/6. உள்ளே வந்த போலாக் தட்டித் தடவித்தான் விலையாடினார். ஆனால் மறுமுனையில் டி ப்ருயின் மிக நன்றாகவே விளையாடினார். கால்லிஸ் அவுட்டானதற்குப் பின்னர் ஆறு ஓவர்கள் கழித்து மீண்டும் ஹர்பஜன் ஓவரில் இந்தியாவிற்கு நிறைய அதிர்ஷ்டம் அடித்தது. ஹர்பஜனின் முதல் பந்தில் போலாக் முன்வந்து தடுத்தாடினார். பந்தை ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் நின்ற கம்பீர் பிடித்தார். ரீப்ளேக்களில் பார்க்கும்போது பந்து மட்டையில் பட்டதுபோலவே தெரியவில்லை. ஆனால் நடுவர் ஹார்ப்பர் இதை அவுட் என்று தீர்மானித்தார். போலாக் 6, தென் ஆப்பிரிக்கா 193/7. ஒரு பந்து விட்டு, மூன்றாவது பந்தில் புதிதாக உள்ளே வந்த ஆண்டாங் பந்தை ஸ்வீப் செய்யப்போய், கையுறையால் தட்டி விக்கெட் கீப்பர் கார்த்திகிடம் கேட்ச் கொடுத்தார். ஆண்டாங் 0, தென் ஆப்பிரிக்கா 193/8.
அதற்கடுத்த ஓவரின் இரண்டாவது பந்தில் கும்ப்ளே வீசிய லெக் பிரேக் தாமி சோலிகிலேயின் தடுப்பாட்டத்தை மீறி ஸ்டம்பைத் தகர்த்தது. சோலிகிலே 1, தென் ஆப்பிரிக்கா 194/9. ஆனால் டி ப்ருயின், எண்டினியுடன் ஜோடி சேர்ந்து இந்தியப் பந்துவீச்சாளர்களை படுத்தினார். கடைசி விக்கெட்டுக்கு ஒரு வழியாக 28 ரன்கள் வந்ததும், எண்டினி, கும்ப்ளே வீசிய ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே விழுந்த லெக் பிரேக்கை அடிக்கப்போய், ஸ்லிப்பில் நின்ற திராவிட் இடம் கேட்ச் கொடுத்தார். இது கும்ப்ளேயின் 434ஆவது விக்கெட். இத்துடன் கபில் தேவ் எடுத்த விக்கெட்டுகள் எண்ணிக்கையை கும்ப்ளே அடைந்தார்.
இந்தியா வெற்றிபெற 117 ரன்கள் தேவை. இதுபோன்ற இலக்குகள் இரண்டுங்கெட்டான். 'சீ இவ்வளவுதானா' என்று விட்டுவிடவும் முடியாது, 'நிச்சயமாகப் பெறமுடியாது' என்று கடையை இழுத்துமூடவும் முடியாது. விக்கெட்டுகள் இரண்டு-மூன்றுக்கு மேல்போகாமல் 70-80 எடுத்துவிட்டால் சுலபம். ஆனால் 30க்குள் நான்கு விக்கெட்டுகள் போய்விட்டால் தடுமாற்றம்தான். சேவாக், கம்பீர் இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினர். சேவாக் 10 ரன்கள் எடுத்த நிலையில் எண்டினியின் சற்றே எழும்பிய பந்தில் இரண்டாம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்தியா 15/1.
அதையடுத்து கம்பீர், திராவிடின் துணையுடன் ரன்கள் சேர்த்தார். உணவு இடவேளை நெருங்கவும், ஸ்மித் தன் சுழற்பந்துவீச்சாளரான ஆண்டாங்கைப் பந்துவீச அழைத்தார். ஆண்டாங்கின் முதல் பந்து ஃபுல் டாஸ், திராவிட் கவர் திசைக்கு அடித்து நான்கைப் பெற்றார். இரண்டாம் பந்தில் ஒரு ரன். மூன்றாம் பந்து அளவு குறைந்து வீசப்பட்டது, அதை கம்பீர் பின்னால் சென்று கவர் திசையில் அடித்து நான்கைப் பெற்றார். நான்காம் பந்தில் 2, ஐந்தாம் பந்தில் 1 ரன். ஆக உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரில் இந்தியாவிற்கு 12 ரன்கள் கிடைத்தன. இதுபோன்ற குறைந்த இலக்கு இருக்கும் நேரத்தில் 10% ரன்கள் ஒரே ஓவரில் கிடைத்தது தென் ஆப்பிரிக்காவிற்கு மிகவும் பாதகமாக அமைந்தது. அந்நிலையில் இந்தியா பத்து ஓவர்களில் 36/1 என்று இருந்தது.
இடைவேளைக்குப் பின்னர் ஸ்மித் எண்டினியை முழுமையாகப் பந்துவீச்சிலிருந்து எடுத்துவிட்டார். போலாக்கிற்கும் இரண்டே ஓவர்கள்தான் கொடுத்தார். இது முற்றிலும் எதிர்பார்க்காத ஒரு நிலை. அத்துடன் விடாது ஹால், டி ப்ருயின் ஆகியோருக்கு பதில் அரைகுறை ஸ்பின்னர் ஜாக் ருடால்ப், ஆண்டாங் ஆகியோர் கையில் பந்துவீச்சைக் கொடுத்து விட்டார். இவ்விருவரும் நிறைய ரன் எடுக்கும் வாய்ப்பைக் கொடுத்தனர். கம்பீர், ருடால்ப் பந்துவீச்சில் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே விழுந்து உள்நோக்கி வந்த பந்தை அடிக்காமல் கால் காப்பில் வாங்க நடுவர் அவர் எல்.பி.டபிள்யூ என்று தீர்மானித்தார். கம்பீர் 26, இந்தியா 60/2.
டெண்டுல்கர் உள்ளே வந்தார். ஆனால் அவருக்கு சிறிதும் கஷ்டம் கொடுக்காமல் ருடால்ப், ஆண்டாங், ஸ்மித் தானே பந்து வீசியதால் திராவிட், டெண்டுல்கர் இருவரும் மெதுவாக வேண்டிய ரன்களைச் சேர்த்தனர். டெண்டுல்கர் கடைசியில் ஸ்மித் பந்தில் ஒரு சிக்ஸ் அடித்தார். ஜெயிக்கும் ரன்களையும் அவரே ஆண்டாங் பந்துவீச்சில் நான்கின் மூலம் பெற்றார்.
ஸ்மித், தன் முன்னிலை பந்துவீச்சாளர்களிடம் பந்தைக் கொண்டுக்காததால் இந்தியா மீது எந்தவித அழுத்தத்தையும் கொண்டுவரமுடியவில்லை. ருடால்ப், ஆண்டாங் இருவருமே நிறைய ஃபுல் டாஸ் பந்துகளை வீசினர். இதெல்லாம் டெண்டுல்கர், திராவிடுக்கு அல்வா சாப்பிடுவதைப் போல.
நல்ல வெற்றி. இதற்கான முக்கிய காரணி ஹர்பஜன் சிங். அவரே ஆட்ட நாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் நாயகனாக சேவாக் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுவும் சரியான தேர்வே.
அடுத்து இந்தியா பங்களாதேஷை எதிர்த்து இரண்டு டெஸ்ட்கள் விளையாடப்போகின்றது. அப்பொழுது மேலும் ஆட்ட விவரங்களுடன் உங்களைச் சந்திக்கிறேன். அதுவரை கிரிக்கெட்டல்லாத பிற விஷயங்கள் இருக்கவே இருக்கின்றன!
சேலம் புத்தகக் கண்காட்சியில் இன்றும் இருப்பேன்
7 hours ago
No comments:
Post a Comment