Tuesday, July 08, 2014

ரயில் நிலையங்களைப் பராமரிப்பது குறித்து

ரயில்களையும் ரயில் நிலையங்களையும் பராமரிப்பது அவ்வளவு கடினமான காரியம் அல்ல. இதற்குச் செலவும் அதிகம் பிடிக்காது. நம்முடைய மனநிலை மாறவேண்டும். அவ்வளவுதான்.

முதலில் எல்லா வண்டிகளிலும் கழிப்பறைகள் திறந்தவையாக இருக்கக்கூடாது. கழிவுகளை ஒன்று சேர்த்து, ஒரு டாங்கில் போய் விழுமாறு செய்து, இறுதி நிலையத்தில் அவற்றைத் தனி வண்டிகொண்டு அப்புறப்படுத்தினால் போதும். பெருநகரங்களில் கழிவுநீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புடன் பொருத்தி, கழிவுகளை வெளியேற்றலாம். சிறு நகரங்களில் அம்மாதிரியான கட்டமைப்பு வரும்வரையில் கழிவகற்றி வண்டிகள் கொண்டு அப்புறப்படுத்தலாம்.

எல்லா ரயில் நிலையங்களிலும் பணம் கொடுத்துப் பயன்படுத்தும் கழிப்பறைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். இந்திய மக்களுக்குக் கழிப்பறைகளைப் பயன்படுத்தத் தெரியாது. ஏனெனில் பெரும்பாலானோர் வீடுகளில் கழிப்பறைகளே கிடையாது. இருப்போர் வீட்டிலும் பலர் அதனைப் பயன்படுத்துவதில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் அவற்றைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில்லை.

எனவே கழிப்பறைகளைக் கட்டிவைத்தாலே அவற்றை நம் மக்கள் சுத்தமாகப் பயன்படுத்துவார்கள் என்று நான் நம்பவில்லை. கட்டிவைப்பதுடன் நில்லாமல், அவற்றைப் பணியாளர்களைக் கொண்டு சுத்தப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். என்றாவது ஒருநாள் மக்கள் கழிப்பறையைச் சுத்தமாகப் பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையை நாம் இழந்துவிடக்கூடாது.

எச்சில் துப்புவது, கையில் உள்ள குப்பைகளைக் கீழே போடுவது, அகலப் பரப்பி உட்கார்ந்துகொண்டு புளியோதரையையும் பிரியாணியையும் பிரித்து, கீழெல்லாம் சிந்தி, சாப்பிட்டு, அங்கேயை கை கழுவி, வாய் கொப்பளித்து, ஏவ் என்று பெரும் ஏப்பம் விட்டு, அப்படியே ஒரு அழுக்குத் துண்டை விரித்து, சற்றே சாய்ந்து உறங்கும் மக்கள் நாம். தட்டுமுட்டுச் சாமான்கள் ஒரு பக்கம், உருகி ஓடும் பனிப்பாளத்திடையே மூக்கைத் தாக்கும் மீன்கூடைகள் ஒரு பக்கம், கட்டுக்கட்டாக வார மாத இதழ்கள் ஒரு பக்கம், சாக்கில் சுற்றிய இரு சக்கர மோட்டார் வாகனங்கள் ஒரு பக்கம், இன்னுமா இவற்றைப் பயன்படுத்துகிறார்கள் என்று நம்மை அதிசயிக்கவைக்கும் தகரப் பெட்டிகள் ஒரு பக்கம் என்று நம் ஊர் ரயில் நிலையங்களுக்கும் சுத்தத்துக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாதுதான். ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் தரையைக் கூட்டிக்கொண்டே இருக்கவேண்டும். துடைத்துக்கொண்டே இருக்கவேண்டும். குப்பைக்கூடைகளை மேலும் அதிகப்படுத்தவேண்டும். கண்ணில் தென்படும் குப்பைகளையெல்லாம் சுகாதார ஊழியர்கள் தொடர்ந்து எடுத்துக் குப்பைக்கூடையில் போட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அதைப் பார்த்து சில மக்களாவது வெட்கப்பட்டு, குப்பைகளைச் சரியான இடத்தில் போட நேரிடலாம்.

முதல் தேவை இதுதான். இதற்குச் செலவழித்ததுபோக, அடுத்து, கொஞ்சமாவது ரயில்களின் வேகத்தைக் கூட்டுவதற்குச் செலவழிக்கலாம். இதனால் ஏழை மக்களுக்கும் பலன், நடுத்தர வர்க்கத்தவருக்கும் பலன். வேகத்தைக் கூட்டினால் கட்டணத்தைக் கூட்டவேண்டும் என்று அவசியம் இல்லை. வேகத்தைக் கூட்டத் தடையாக இருப்பது எது என்பதைக் கண்டறிந்தால், பெரும்பாலும் அது ரயில்வே டிராக்கின் தரம் மற்றும் ஆளில்லா லெவல் கிராசிங் என்று இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இவற்றைச் சரி செய்தால் எரிபொருள் திறன் அதிகமாகி உண்மையில் செலவுகள் குறையும் என்பது என் கருத்து.

அதிவேக ரயில்களும் அவசியமே. சென்னையிலிருந்து பெங்களூரு, அங்கிருந்து மும்பை, அங்கிருந்து அகமதாபாத், அங்கிருந்து ஜெய்ப்பூர், அங்கிருந்து தில்லி, அங்கிருந்து லக்னோ, அங்கிருந்து போபால் என்று ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்தையும் இணைக்கும் அதிவேக ரயில்களால் நாட்டின் மக்கள் அனைவருமே பலன் பெறுவர். இந்த அதிவேக (நம்மூரில் அதிவேகம் என்றால் மணிக்கு 100 கிமீ, தடையில்லாமல் போனாலே போதும்!) ரயில் நெட்வொர்க்கை முழுதும் தனியார்மூலமே செய்வதுதான் சரியானது. என்னை விட்டால், ரயில் நிலையங்களையும்கூடத் தனியாரே செய்துவிடலாம் என்பேன். இந்த அதிவேக ரயில் நிலையங்கள் வழியாக எந்தத் தனியார் நிறுவனமும் ரயில்களை ஓட்டலாம். டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்துக்கொள்ளலாம். கட் ரேட் சர்வீஸா, ஃபைவ் ஸ்டார் சர்வீஸா என்று அவர்களே தீர்மானித்துக்கொள்ளலாம்.

அரசு, இப்போது இருக்கும் ரயில்வேயின் தரத்தை எப்படி முன்னேற்றுவது, எப்படி ரயில் வண்டிகளின் எண்ணிக்கையைக் கூட்டுவது, எப்படி பாதுகாப்பை அதிகப்படுத்துவது, எப்படி சுகாதாரத்தை உயர்த்துவது என்பதில் கவனம் செலுத்தினாலே போதும்.

Wednesday, July 02, 2014

ஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...

ஜெயமோகனின் பதிவை முதலில் படித்துவிடுங்கள்.

சில ஆண்டுகளுக்குமுன் என் தந்தைக்கும் இப்படியாகத்தான் மாரடைப்பு ஏற்பட்டது. அவரும் கடுமையான நீரிழிவு நோய்க்காரர். உணவுக் கட்டுப்பாடும் கிடையாது, மருந்து எடுத்துக்கொள்வதும் கிடையாது என்று தான் போனபோக்கில் நடந்துகொள்பவர்.

கடுமையான மாரடைப்பு வந்து ஒரு நாள் முழுதும் அல்லல்பட்டிருக்கிறார். ஆனால் என் பெற்றோர்கள் இருவரும் வாயுக் கோளாறு, பித்தம் என்றெல்லாம் வாய்க்கு வந்ததைச் சொல்லியபடி நாளைக் கழித்திருக்கிறார்கள். உணவு போகவில்லை. உயிரும் போகவில்லை. ஓரிரு நாள்கள் இப்படியே திண்டாடியபின், ஏதோ போலி மருத்துவரைப் போய்ப் பார்த்து, அவர் காளான் மாத்திரை என்று ஏதோ ஃப்ராட் சமாசாரத்தைத் தலையில் கட்டி, அதையும் சில நாட்கள் தின்று, நிலைமை மோசமாகிக்கொண்டேதான் இருந்திருக்கிறது.

நான் கடுமையான பணியிடையே இருந்ததால் என் பெற்றோர்கள் இருக்கும் ஊருக்குப் போக முடியவில்லை. ஆனால் ஏதோ ஆபத்து என்றும் இதனை என் பெற்றோர்களின் அரைகுறை மருத்துவப் புரிதலையும் அஷ்டசூர்ணம் போன்றவற்றையும் கொண்டு தீர்க்க முடியாது என்றும் எனக்குத் தோன்றியது. உடனடியாக அவர்களை சென்னை வரச் சொன்னேன். ஆனால் அப்படி உடனேயெல்லாம் அவர்கள் வரவில்லை. அஷ்டமி, நவமி என்றெல்லாம் நாள் பார்த்து மெதுவாகத்தான் சென்னை வந்துசேர்ந்தனர். வந்த அன்றே ஒரு மருத்துவரைப் போய்ப் பார்த்தோம். அவர் சில டெஸ்டுகளை எழுதித் தந்தார். அதில் ஒன்று டிரெட்மில் டெஸ்ட்! என் தந்தை டிரெட்மில்லில் ஏறிய உடனேயே அவருடைய உயிர் போயிருக்கவேண்டும். ஆனால் ஆயுசு கெட்டி. நெஞ்சைப் பிடித்துக்கொண்டிருந்த அவரை டிரெட்மில்லிலிருந்து காப்பாற்றி மீண்டும் வீட்டுக்கு அழைத்துவந்தேன்.

அப்போதுதான் எதிர்வீட்டிலேயே இருக்கும் டாக்டர் ஒரு இதயநோய் நிபுணர் என்று தெரியவந்தது. அவர் என் தந்தையைப் பார்த்த உடனேயே, அவருக்கு ஒரு மாதத்துக்குமுன் வந்தது ஹார்ட் அட்டாக்தான் என்று சொல்லிவிட்டார். உடனேயே அவர் பணியில் இருந்த ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கச் சொன்னார். என் தந்தை விடவில்லை. மீண்டும் நாள், நட்சத்திரம் பார்த்து ஒரு வாரம் கழித்துத்தான் சேர்ந்தார். ஆஞ்சியோகிராம் எடுத்துப் பார்த்ததில் ஏகப்பட்ட இடங்களில் அடைப்பு.

எதிர்வீட்டு டாக்டரின் வழிகாட்டுதலில் அப்போலோ மருத்துவமனையில் சேர்த்து, அனுபவம் வாய்ந்த ஓர் அறுவை சிகிச்சை நிபுணர் 7 மணி நேரம் ஆபரேஷன் செய்து 7-8 இடங்களில் கிராஃப்டிங் செய்தபின் இன்றும் உயிரோடு இருக்கிறார் என் தந்தை. அதன்பின் வேறு சில உடல் பாகங்களில் பிரச்னைகள், அறுவை சிகிச்சை, மருந்துகள் என்றெல்லாம் ஆனாலும் இந்த மாரடைப்பை மட்டும் என்னால் மறக்கவே முடியாது. எவ்வளவுதான் படித்திருந்தாலும் பித்தம், கபம், வாய்வு, அஷ்டசூரணம் என்று சொல்லிக்கொண்டு, அதையும் பெரும்பாலும் தானே வீட்டில் செய்துகொள்வது, கூடவே ஜாதகம், நாள், நட்சத்திரம் என்று முற்றுமுழுதான மூடநம்பிக்கைகளை வைத்துக்கொண்டிருப்போரை என்னதான் செய்ய முடியும்?