Saturday, March 31, 2012

மின்சாரம்

* ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் மின்வெட்டு அதிகமானது. மின்சார விலை நாளை முதல் அதிகரிக்கிறது.

* ஜெயலலிதாவுக்கு நான் வக்காலத்து வாங்கவேண்டியதில்லை. அவருடைய நடவடிக்கைகள் பொதுவாக எனக்குப் பிடிக்காது. ஆனால் இந்த மின்சார விஷயத்தில் அவர் செய்ததை நான் முழுதும் ஆதரிக்கிறேன்.

* கடந்த திமுக ஆட்சியின்போதும், இப்போது இருப்பதைப்போல மின் பற்றாக்குறை இருந்தது. ஆனால் அப்போது வெளியிலிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்பட்டது. மக்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் விற்கப்பட்ட விலையோ குறைவு. விளைவு, மின் வாரியத்துக்குக் கடுமையான  நஷ்டம்.

* ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் அதிக விலைக்கு வெளியிலிருந்து மின்சாரம் வாங்குவது நிறுத்தப்பட்டது. அதன் விளைவுதான் அதிகரித்த மின் வெட்டு.

* மின் வாரியம் ஒரு யூனிட்டுக்குக் கொடுக்கும் சராசரி விலை எவ்வளவு என்பதைக் கணித்து, அதனை அடிப்படையாக வைத்து விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதிலும்கூட அனைத்து வீடுகளுக்கும் மானியம் கொடுக்கப்படுகிறது.

* கொள்முதல் விலை யூனிட்டுக்கு சுமார் 5.75 ரூபாயாம். ஆனால் முதல் 200 யூனிட்டுக்கு ரூ. 3, அடுத்த 300 யூனிட்டுக்கு ரூ. 4 என்று ஒவ்வொரு வீட்டுக்கும் மானியம் கொடுக்கப்படுகிறது. இதற்குமேல் பயன்படுத்துபவர்களுக்கும், எந்த லாபமும் இன்றி, அடக்க விலைக்கேதான் விற்கிறார்கள். இதில் எப்படிக் குறை காண முடியும்?

* சில பன்னாட்டு நிறுவனத் தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட் ரூ. 2.50 அல்லது ரூ. 3.00 (அல்லது இப்படிப்பட்ட குறைவான அளவில்) என்று தடையில்லாத மின்சாரம் தருவதாக தமிழக அரசு ஒப்பந்தம் போட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இது எனக்குப் பிரச்னையாகத் தெரியவில்லை. இதுபோன்ற ஒப்பந்தம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு என்றுதான் இருக்கும். அதன்பின், சந்தை விலைக்கு விற்பார்கள். இப்படியான மானியம் கொடுத்தால்தான் அந்த நிறுவனம் தமிழகத்தில் தன் ஆலையை நிறுவும். ஆலை வந்தால்தான், வேலை வாய்ப்புகள் மட்டுமின்றி வரி வருமானமும் கிடைக்கும். அந்தக் காரணத்துக்காக குறைந்த விலை மின்சாரத்தை இந்நிறுவனங்களுக்கு அரசு தருவதை நான் ஆதரிக்கிறேன்.

* மின்வெட்டைத் தடுக்க, மிக வேகமாக அடுத்த 10,000 மெகாவாட் அளவுக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஆலைகளை நிறுவுவதைத் தவிர வேறு வழியே இல்லை. மேலும் மின்சாரத்தை அதிகமாக உற்பத்தி செய்யும்போது, அதன் கொள்முதல் விலை குறையவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் யுடிலிடி (நீர், மின்சாரம் போன்றவை) விலைகளைப் பொருத்தவரை அவை கீழ்நோக்கிப் போனதாகச் சரித்திரம் இல்லை. வேகமாக மேல்நோக்கிப் போகாமல் இருந்தால் போதும்.

* பணவீக்கம் என்பதையும் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். பெட்ரோல் விலை ஏறுகிறது. கரியின் விலை ஏறுகிறது. ஆனால் மின்சாரம் மட்டும் ஆண்டாண்டாக அதே விலைக்கே கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லை.

Thursday, March 29, 2012

ஒரு மாணவனின் மரணம்

இன்று காலை தி ஹிந்துவில் படித்த ஒரு செய்தி என்னை மிகவும் பாதித்தது. [He fought poverty only to choose death]

மணிவண்ணன் என்ற இந்தப் பையனை எனக்குக் கொஞ்சமாகத் தெரியும். சில மாதங்களாக கிண்டி பொறியியல் கல்லூரி (அண்ணா பல்கலைக்கழகம்) என்.எஸ்.எஸ் மாணவர்கள் சிலருடன் சேர்ந்து சில பணிகளை மேற்கொண்டிருக்கிறேன். அவ்வை சண்முகம் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் மாணவர்களைச் சந்திப்பதற்காக ஒரு நாள் ஒதுக்கியிருந்தோம். அண்ணா பல்கலை மாணவர்கள் சிலரை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் முன் கொண்டுவந்து நிறுத்தி, ‘இவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்று பாருங்கள்; இவர்களைப் போலவே நீங்களும் சாதிக்கலாம்’ என்று சொல்லி மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதுதான் இதன் நோக்கம்.

என்.எஸ்.எஸ் மாணவர்கள் பலரும் மிக நன்றாகப் பேசினார்கள். பெரும்பாலும் வறுமையான பின்னணியிலிருந்து வந்துள்ளவர்கள். பெரும்பாலும் கிராமப்புறத்திலிருந்து வந்துள்ளவர்கள். மிகச் சாதாரணப் பள்ளிகளில் படித்துவிட்டு வந்துள்ளவர்கள். எப்படி, தமக்கு முன் இருந்த தடைகளையெல்லாம் மீறித் தம்மால் சாதிக்க முடிந்தது என்பதை அந்த மாணவர்கள் விளக்க, பள்ளி மாணவர்கள் நிஜமாகவே மிகுந்த ஆர்வத்துடன் கேட்டனர். (அப்போது எடுத்த வீடியோ துரதிர்ஷ்டவசமாக அழிந்துபோய்விட்டது.)

ஆனால் பேசிய மாணவர்களிலேயே எங்களை மிகவும் அதிகமாக பாதித்தது மணிவண்ணன்தான். மிகுந்த தன்னம்பிக்கையுடன் பேசினான் அவன். தன் வாழ்க்கைக் கதையை விரிவாக எடுத்துச் சொன்ன அந்த மாணவன், தன் வாழ்க்கையில் படித்து முன்னேற தனக்கு உறுதுணையாக இருந்தது மூன்று விஷயங்கள் என்றான்.

மூன்றாம் வகுப்பு படிக்கும்போது தாய்க்கும் தந்தைக்கும் சண்டை வந்து பிரிந்துபோயினர். பணம் இல்லாததால், அடுத்த இரண்டு வருடங்கள் படிக்காமல் வீட்டிலேயே இருந்திருக்கிறான். அந்த வயதிலேயே செங்கல் சூளைகளில் வேலை செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த அபூர்வா ஐ.ஏ.எஸ், குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுக்க எடுத்துக்கொண்ட முயற்சியால் பள்ளியில் மீண்டும் சேர்ந்து படிக்க ஆரம்பித்திருக்கிறான். அந்த நிகழ்ச்சி அவன் மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. தானும் ஒரு கலெக்டராக வரவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறான். இது முதல் தூண்டுதல்.

ஆனாலும் படிப்பில் அதிக ஆர்வம் செலுத்தவில்லை. விளையாட்டு, ஊர் சுற்றுதல். ஆனால் பரீட்சை எழுதினால் மதிப்பெண்கள் மட்டும் வந்துவிடும். ஒருமுறை அவனுடைய நெருங்கிய நண்பன் அவனிடம் சொன்னானாம்: ‘நான் எத்தனையோ முயற்சி செய்து கஷ்டப்பட்டுப் படிக்கிறேன். ஆனால் படிப்பு ஏறுவதில்லை, மதிப்பெண்ணும் வருவதில்லை. நீயோ முயற்சி எடுப்பதில்லை; ஆனால் மதிப்பெண் வாங்குகிறாய். என்னால் நினைத்தாலும் கலெக்டராக வரமுடியாது. ஆனால் நீ மட்டும் ஆர்வத்துடன் படித்தால் உன்னால் கலெக்டர் ஆகமுடியும். அப்படி நீ கலெக்டர் ஆனால் நான் உன் கார் டிரைவராக வரவேண்டும். பெருமையுடன் உனக்கு கார் ஓட்டவேண்டும்.’ இது மணிவண்ணனைப் பாதித்த இரண்டாவது தூண்டுதல். அன்று தொடங்கி மிகுந்த முயற்சி எடுத்துப் படித்திருக்கிறான்.

பின்னர் அதே மாவட்டத்துக்கு கலெக்டராக வந்த அமுதா ஐ.ஏ.எஸ் ஊக்கம் கொடுத்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பில் 1167 மதிப்பெண் பெற்றிருக்கிறான். அவர் கொடுத்த ஊக்கம் மூன்றாவது தூண்டுதல்.

இவற்றையெல்லாம் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எடுத்துச் சொன்ன மணிவண்ணன், அந்த மாணவர்களாலும் பெரிதாகச் சாதிக்க முடியும் என்றான்.

அன்றைய கலந்துரையாடலிலேயே அனைவரையும் மிகவும் பாதித்த பேச்சு மணிவண்ணனுடையதுதான்.

தான் 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை எடுத்துக்கொண்டு போய் தன் தாயிடம் காட்டி சந்தோஷப்பட்டபோது தன் மகன் என்ன செய்திருக்கிறான் என்பதுகூட அந்தத் தாய்க்கு முழுமையாகப் புரியவில்லை. ‘ஏதோ பாஸ் பண்ணிட்டியேப்பா’ என்று சொல்லி மகிழ்ந்திருக்கிறார். அதை மிக இயல்பாக மாணவர்களுக்குச் சொல்லிக் காட்டி, தான் எப்படிப்பட்ட பின்னணியிலிருந்து வந்தவன் என்பதைக் கோடி காட்டியிருந்தான் மணிவண்ணன். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவன் என்று நினைக்கிறேன்.

தான் தமிழில் நிறையக் கவிதைகள் எழுதி வைத்திருப்பதாகவும் அவற்றை விரைவில் புத்தகமாகக் கொண்டுவரப்போவதாகவும் என்னிடம் சொன்னான். இந்த மாணவனைப் பல பள்ளிகளுக்கும் அழைத்துச் சென்று பேசவைக்கவேண்டும் என்று நானும் சத்யாவும் பேசிக்கொண்டிருந்தோம்.

நேற்றைக்கு முதல் நாள் மணிவண்ணன் தூக்கில் தொங்கிவிட்டான். அர்ரியர்ஸ் நிறைய உள்ளது என்றும் எதோ காதல் விவகாரம் என்றும் சொல்கிறார்கள். அவனுக்குத் தெரிந்த ஒரு மூத்த மாணவரிடம் இன்று காலை பேசினேன். மருத்துவமனைகளில் ரத்தம் கேட்டால், முதலில் போய் நிற்பானாம். இவனே பணம் சேர்த்து மூன்று மாணவர்களைப் பள்ளிக்கூடத்தில் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறானாம். இன்னும் பலப் பல நல்ல விஷயங்கள்.

எனக்கு இருக்கும் வருத்தங்கள் இரண்டு.

1. இவ்வளவு தன்னம்பிக்கையுடன், இவ்வளவு சாதித்துள்ள இந்த மாணவன், தனக்கு இருக்கும் கஷ்டத்தைப் பற்றி ஏன் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை? உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு அவனுக்கு என்ன ஆகிவிட்டது? இந்தக் கல்லூரிகள் ஏன் உளவியல் கவுன்சிலர்களை வைத்து மாணவர்களுடன் தொடர்ந்து பேசச் செய்யக் கூடாது?

2. மணிவண்ணனை பல மாநகராட்சிப் பள்ளிகளுக்கும் அழைத்துச்சென்று ரோல் மாடல் என்று காட்டவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இனி அடுத்து யாரைத் தேடிப் பிடிப்பது?

புத்தக வெளியீடு: சரஸ்வதி: ஒரு நதியின் மரணம்

மிஷல் தனினோ ஆங்கிலத்தில் எழுதி பெங்குவின் வெளியீடாக வந்திருந்த "Saraswati: The Lost River" என்ற புத்தகத்தின் தமிழாக்கத்தை நாளை கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது.

அந்த விழாவின் அழைப்பிதழைக் கீழே காண்க. அனைவரும் வருக.


Thursday, March 22, 2012

Lose-Lose deal

ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இன்று நடந்த வாக்கெடுப்பில், போரின்போது இலங்கை மனித உரிமைகளுக்கு எதிராக நடந்துகொண்டதாக அந்நாட்டைக் கண்டித்து, அந்நாடு மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று அமெரிக்கா கொண்டுவந்திருந்த தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. பெரும்பான்மை நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. சில நாடுகள் இந்தத் தீர்மானத்தை எதிர்த்தன.

இந்தியா முக்கியமாக இந்தத் தீர்மானத்தை ஆதரித்தது. பொதுவாக இந்தியா இலங்கையின் பக்கம் இருக்கும். ஆனால் இம்முறை தமிழகக் கட்சிகளின் இடைவிடாத நெருக்குதலால் இந்தியா வேறு வழியின்றி இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளது. ஆனால் தெளிவான ஒரு வெளியுறவுக் கொள்கை இல்லாத காரணத்தால் இந்த வாக்களிப்பால் இந்தியாவுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை. அதே சமயம் இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடைக்கப்போவதில்லை.

திமுகவைத் திருப்திப்படுத்த என்று இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. ஆனால் இதற்காக திமுகவைத் தவிர யாரும் அரசைப் பாராட்டப் போவதில்லை. இலங்கை கோபித்துக்கொண்டுவிடக் கூடாதே என்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அவசர அவசரமாக வெளியிட்ட அறிக்கையைப் படிக்கும் எந்தத் தமிழுணர்வாளரும் இந்திய அரசை எப்போதும் திட்டுவதுபோலத் தொடர்ந்து திட்டுவார். அதே சமயம் அந்தக் கடிதத்தை சாதாரண சிங்களவர் யாரும் பார்க்கப் போவதே இல்லை. இலங்கை அரசோ, இந்தியா தன்னை முதுகில் குத்திவிட்டது என்று கோபத்தில் இருக்கும். எனவே இலங்கை அரசும் இலங்கையின் மக்களும் இந்தியாவை எதிரியாகப் பாவிப்பார்கள். சில வன்முறை நிகழ்வுகளும் நடக்கலாம்.

இந்திய அரசு எந்தவிதமான முடிவையும் எடுத்திருக்கலாம். இலங்கையை ஆதரிப்பது என்ற முடிவை எடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதனால் என்ன விளைவுகள் வந்தாலும் அதனை எதிர்கொள்வது என்று யோசித்திருக்கவேண்டும். உதாரணமாக திமுக ஆட்சியிலிருந்து விலகினால் அதற்கு பதிலாக என்ன செய்வது என்பதை யோசித்திருக்கவேண்டும்.

மாறாக, நிஜமாகவே மனம் உறுத்தி, மனித உரிமையை முன்வைப்பதாக முடிவெடுத்திருக்கலாம். அப்படியென்றால், தெளிவாக, ஆணித்தரமாக தன் வழியைத் தான் மாற்றிக்கொள்வதாகச் சொல்லியிருக்கலாம். முதலில் நாட்டு மக்களிடம் தன் வழிமாற்றத்தைப் பற்றித் தெளிவாகச் சொல்லிவிட்டு, அதற்கு ஏற்றாற்போல மாறப்போகும் புவி அரசியல் விளையாட்டில் எப்படிக் காய் நகர்த்துவது என்பதைத் தெளிவாக யோசித்திருக்கலாம்.

இப்படி இதையும் செய்யாமல், அதையும் செய்யாமல், எல்லோருக்கும் முன் ஜோக்கராக நிற்பதே இந்த அரசுக்கு வாடிக்கை ஆகிவிட்டது.

Wednesday, March 21, 2012

கூடங்குளம் போராட்டம்

நான் அணு மின் நிலையங்களை ஆதரித்தே வந்திருக்கிறேன். இன்றைய நிலையில் நமக்கு அணு மின்சாரம் அவசியத் தேவை என்று கருதுகிறேன். ஆனால் உடனடியாகவே சூரிய ஒளி மின்சாரம் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு, அணு, அனல் மின் நிலையங்களைக் குறைக்க அல்லது நீக்க வகை செய்வது சரியான பாதையாக இருக்கும் என்றும் நம்புகிறேன்.

இப்போது மாநில அரசு, கூடங்குளம் மின் நிலையத்தை ஏற்றுக்கொண்டுவிட்டது. ஆனால் அதனைச் செயல்படுத்த உச்சபட்ச பலத்தைப் பிரயோகிக்கும் என்று தெரிகிறது. கடுமையான போலீஸ் குவிப்பு இதனைத்தான் காட்டுகிறது. அணு மின் நிலையங்களை எதிர்க்கும் சாதாரண மக்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பர். அதுவும் முக்கியமாக மீனவர்கள்.

எந்த மின் நிலையமாக இருந்தாலும் அது பெருமளவு சூடான நீரைக் கடலுக்குள் அனுப்பத்தான் செய்யும். அப்படிச் செய்யும்போது அந்தப் பகுதியில் மீன் வளம், கடல்சார் உயிரின வளம் பாதிக்கப்படத்தான் செய்யும். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதற்கான மாற்று பற்றியும் மீனவர்களுக்கான இழப்பீடு பற்றியும் யாரும் அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் 500 கோடி ரூபாய் பேக்கேஜில் மீனவர் வாழ்வு தொடர்பான தெளிவு ஏதும் இல்லை. சாலைகள் போடுவதாலோ, கோல்ட் ஸ்டோரேஜ் கட்டுவதாலோ, நேரடியாக வாழ்வாதாரம் இழக்கும் மீனவர்களுக்கு நன்மை ஏதும் வந்துவிடாது.

உதயகுமார் போன்றோர் தங்கள் முக்கிய இலக்காக அணு உலையை நிறுத்துவது தொடர்பாகத்தான் போராடினர். இன்னமும் போராடிக்கொண்டிருக்கின்றனர். மீனவர்கள் சார்பாகப் போராடி இழப்பீடு வாங்கிக் கொடுக்க அவர்களால் இனி முடியாது. அதற்கு வேறு யாரேனும் தலைமை தாங்கவேண்டியிருக்கும்.

இந்த அணு உலை எனக்கு ஏதோ ஒருவிதத்தில் உறுத்தலாகவே உள்ளது. அது அணு உலை பாதுகாப்பு பற்றி அல்ல. அங்குள்ள மக்களுக்கான நியாயமான இழப்பீடு பற்றியது.

Monday, March 19, 2012

கட்டற்ற பாலியல் சுதந்தரம்

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ‘நண்பேன்டா’ என்றொரு நிகழ்ச்சியில் நான் பங்கெடுக்கிறேன். வாரா வாரம் ஞாயிறு மாலை 7.30 முதல் 8.00 மணி வரை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது. இதன் மறு ஒளிபரப்பு திங்கள் இரவு 9.30-10.00 மணிக்கும் செவ்வாய் மதியமும் உண்டு.

நிகழ்ச்சியில் நான், திமுகவின் புகழேந்தி, பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோருடன் ஒரு விருந்தினர் கலந்துகொள்வார். நேற்றைய நிகழ்ச்சியின்போது திருநங்கை ரோஸ் வெங்கடேசன் கலந்துகொண்டார். அவர் ‘பாலியல் சுதந்தரக் கட்சி’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்க இருக்கிறார்.

ரோஸ் பேசியதன் சாரம்: எப்படி பிற உரிமைகள் மனிதர்களுக்கு உள்ளதோ அதேபோன்று கட்டற்ற பாலியல் உரிமையும் மனிதர்களுக்கு வேண்டும். யாரும் யாருடனும் பாலுறவு கொள்ள அனுமதி வேண்டும். குடும்பம் என்னும் அமைப்பு வலுக்காட்டாயமாக உருவாக்கப்பட்ட ஒன்று. பெண்களை அடிமைப்படுத்தும் அமைப்பு இது. பாலியல் சுதந்தரம் என்றால் ஒருபால், இருபால் சேர்க்கையாளர்கள், திருநங்கைகளுக்கு மட்டுமல்ல, உண்மையில் பெண்கள் நம் நாட்டில் பாலியல்ரீதியில் நசுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கும், ஏன் பெரும்பான்மையான ஆண்களுக்குமே பாலியல் சுதந்தரத்தைக் கொடுப்பதுதான் ஏற்படுத்தப்போகும் அமைப்பின் நோக்கம்.

சாராம்சப்படுத்துதலில் நிறையப் பிரச்னைகள் உள்ளன. அவரது வார்த்தைகளை என் பார்வையில் நான் எழுதுகிறேன். அதில் என் சாய்வுகளும் சேர்ந்துதான் இருக்கும். பார்க்க முடியுமானால் இன்று நிகழ்ச்சியைப் பார்க்கவும்.

குடும்பம் என்ற அமைப்பு செயற்கையானது என்பதில் எனக்குச் சந்தேகம் ஏதும் இல்லை. ஆனால் இந்த அமைப்பு ஒரு பக்கச் சார்புடையது, ஆண்களுக்கு மட்டுமே சாதகமானது என்று நான் கருதவில்லை. அப்படியான ஓரிடத்திலிருந்து தொடங்கிய குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றத் தாழ்வுகள் குறைக்கப்பட்டு, ஒருவித சம நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. நிறைய மாற்றங்கள் இன்னும் தேவை. ஆனால் குடும்பத்தைக் குலைத்துவிட்டு அந்த இடத்தில் வேறு எந்த மாதிரியைக் கொண்டுவருவது என்பதை மாற்றுக் கருத்துடையவர்கள் முன்வைக்கவேண்டும்.

ரோஸ் பேசும்போது, பாலுறவின் நோக்கம் என்பதே வம்சவிருத்தி என்பதாக எடுத்துக்கொள்வது தவறு, செயற்கையானது என்றார். நான் அதனை மறுத்தேன். பரிணாம உயிரியல் பார்வையில் பாலுறவின் ஒரே நோக்கம் வம்சவிருத்திதான். பாலினப்பெருக்கம் செய்யும் எல்லா உயிரினங்களுக்கும் இதுதான், இது ஒன்று மட்டும்தான் நோக்கமே. மரபணு ஒவ்வொன்றுமே தன்னைப் பிரதியெடுத்து பிற மரபணுக்களை விடத் தன் பிரதிகளே உலகில் அதிகம் பரவவேண்டும் என விரும்புகின்றது என்பது ரிச்சர்ட் டாக்கின்ஸின் கருத்து.

மனித இனத்தில் மட்டும்தான் பாலுறவு என்பதில் வம்சவிருத்தி பெருமளவு பின்தள்ளப்பட்டு உடல்/மன சுகம் என்பது முன்வைக்கப்படுகிறது. இதுவும்கூட பரிணாம உயிரியலின் புரிதலுக்கு உட்பட்டு விளக்கக்கூடிய ஒன்றுதான்.

இந்தியா போன்ற நாடுகளில், பெருகும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த ஒருபால் சேர்க்கையை ஆதரிக்கவேண்டும் என்பதுபோல் ரோஸ் பேசினார். மேலும் பெண் கல்வி, பிள்ளை பெறுதலில் பெண்ணுக்கான முழுச் சுதந்தரம் ஆகியவற்றையும் வலியுறுத்தினார்.

வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் மக்கள்தொகை குறைவதும் வளரும் நாடுகளில் பெரும்பாலும் மக்கள்தொகை அதிகமாவதும், அதில் பொருளாதார வளர்ச்சியின், பெண் கல்வியின் பங்கு என்ன என்பதை நாம் காணவேண்டும். பெண்கள் பெரும்பாலும் பிள்ளை பெறும் இயந்திரமாகத்தான் இருந்துவந்துள்ளனர். ஆனால் கல்வி அறிவு அதிகரிக்க அதிகரிக்க பெரும்பாலான நாடுகளில் பெண்கள், எப்பொது, எவ்வளவு குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது என்பதைத் தம்மிச்சையாகவே முடிவெடுக்கின்றனர். இது முழுமையாக இல்லை. எனவே இந்த உரிமையைக் கோரிப் பெறுவது முதல் தேவை.

என் கருத்தில், கட்டற்ற பாலியல் சுதந்தரம் என்பது பெண்களுக்கு எதிராகத்தான் போய் முடியும். ஆண்கள் இதனை புதிய சுரண்டல் வாய்ப்பாகவே பார்ப்பார்கள். மேலும் பெண்கள் மற்றும் பாலியல் சிறுபான்மையினருக்கான உரிமைகளை முன்னெடுக்க ஓர் அரசியல் கட்சி ஒத்துவரும் என்று எனக்குத் தோன்றவில்லை; தேவை சில சமூக இயக்கங்கள்.

மொத்தத்தில் நல்லதொரு விவாதம். முடிந்தால் பாருங்கள்.

[பழைய நிகழ்ச்சிகள் யாவும் யூட்யூப் போன்ற இடத்தில் இல்லை. பழைய நிகழ்ச்சிகள் அனைத்தின் வீடியோக்களையும் கேட்டிருக்கிறேன். கிடைத்தால் அவற்றை இணையத்தில் சேர்க்கப் பார்க்கிறேன்.]

Friday, March 09, 2012

ராஹுல் திராவிட்

காவஸ்கர், விஷ்வநாத், வெங்க்சர்க்கார், மொஹீந்தர் அமர்நாத், சந்தீப் பாடில், கபில்தேவ் ஆகியோர் நான் கிரிக்கெட் பார்த்து ரசித்த முதல் தலைமுறை (மட்டை) ஆட்டக்காரர்கள். அடுத்து என் நினைவில் பதிந்தவர்கள்  கிருஷ் ஸ்ரீகாந்த், சஞ்சய் மஞ்ச்ரேகர், மொஹம்மத் அசாருத்தீன். அடுத்து தன்னந்தனியாக உள்ளே இறங்கியவர் வயதில் மிகவும் இளையவரான சச்சின் தெண்டுல்கர். இன்னமும் ஆடிக்கொண்டிருக்கிறார். அடுத்த கட்டத்தில் உள்ளே வந்தவர்கள்தாம் ராஹுல் திராவிடும் சவுரவ் கங்குலியும். அதன்பின் விவிஎஸ் லக்ஷ்மண், விரேந்தர் சேவாக், யுவராஜ் சிங், மொஹம்மத் காயிஃப், மஹேந்திர சிங் தோனி, இப்போதைய நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி என்று பலர் வந்துள்ளனர்.

இந்த நீண்ட கிரிக்கெட் பாரம்பரியத்தில், சச்சின் தெண்டுல்கரையும் சேர்த்து அனைத்து பேட்ஸ்மன்களிலும் நான் மிகவும் மதிப்பது ராஹுல் திராவிடைத்தான். அவர் இன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நாம் பார்க்கும் மட்டை ஆட்டக்காரர்கள் அனைவரும் நம் மனத்தில் சில பிம்பங்களை விதைத்திருப்பார்கள். அது உண்மையோ இல்லையோ, அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் நம் மனத்தில் அந்த பிம்பம்தான் தெரியும்.

தெண்டுல்கர் ஆடும்போதெல்லாம் அடுத்த பந்திலேயே இவர் அவுட் ஆகிவிடுவாரோ என்ற பயத்துடனேயே இருப்பேன். ஆனால் ராஹுல் திராவிடைப் பார்க்கும்போதெல்லாம் இவரை நிச்சயமாக யாராலும் அவுட் ஆக்கமுடியாது என்று நிம்மதியாக இருப்பேன்.

ராஹுல் திராவிடின் வெற்றிகளைவிட அவருடைய தோல்விகளிலிருந்தே அதிகம் கற்றுக்கொள்ள முடியும். எத்தனையோ தினங்கள் அவருடைய கையும் காலும் நினைத்த திசைக்குப் போகாமல் இருக்கும். அப்போதெல்லாம் அவருடைய முகத்திலிருந்து கொட்டும் வியர்வையும் அவருடைய முகத்தில் தெரியும் ஆழ்ந்த கவனமும் ஆச்சரியம் தரும். அது தன்னுடைய நாள் இல்லை என்றாலும் அன்று தன் விக்கெட்டை எளிதில் விட்டுக்கொடுக்கக்கூடாது என்று நின்று போராடும் அந்தக் குணம் எனக்கு மிகவும் பிடித்தது.

ராஹுல் டெஸ்ட் ஆட்டக்காரர். அதற்கான சரியான டெம்பரமண்ட் - மனநிலை வாய்த்தவர். அவருடைய ஆரம்பக் காலங்களில் அவர் அடிக்கும் ஸ்ட்ரோக்குகள் நேராக தடுப்பாளர்கள் கைக்குப் போய்க்கொண்டே இருக்கும். பிளேஸ்மெண்ட் கிடைக்க மிகவும் கஷ்டப்படுவார். பின்னர் மிகுந்த பிரயாசைக்குப் பிறகு அதில் வெற்றி கண்டார். தடாலடியாக நான்கு ஷாட்கள் அடித்து ஃபோரும் சிக்ஸுமாக ஜனங்களுக்குக் கிளுகிளுப்பூட்டும் ஆசாமி அல்லர் திராவிட். அவருடையது காபி புக் கிரிக்கெட் என்று சொல்லப்படுவது. இப்படித்தான் ஒருவர் இந்த ஆட்டத்தை, இந்த ஸ்ட்ரோக்கை ஆடவேண்டும் என்று புத்தகத்தில் எழுதிவைத்திருந்தால் அது எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட ஆட்டம் திராவிடுடையது.

திராவிடின் ஃபிட்னெஸ் அபாரமானது. ஆனால் பல ஆட்டங்களில் 400 பந்துகளுக்குமேல் நின்று ஆடும்போது கிராம்ப்ஸ் வந்து திண்டாடியுள்ளார். ஆனாலும் வலியைப் பொறுத்துக்கொண்டு எப்படியாவது நின்று ஆடி முடித்துவிட்டுத்தான் உள்ளே வருவார்.

ஒரு நாள் ஆட்டம் அவருக்குப் பிடிபட நாளானது. தெண்டுல்கர் போல இயல்பான ஜீனியஸ் அல்லர் திராவிட். எனவே ஆரம்பத்தில் அவருக்கு ஒரு நாள் போட்டிகளில் அவ்வளவாக இடம் தரப்படவில்லை. பின்னர் சிறிது சிறிதாக ஒரு நாள் போட்டிகளிலும் தன் இடத்தை வலுப்படுத்திக்கொண்டார். ஆனாலும் பல நேரங்களில் அவரால் ஒரு நாள் போட்டிக்குத் தேவையான அதிரடி ரன் சேகரிப்பைத் தர முடியாமல் போயுள்ளது. அப்போது அணியிலிருந்து நீக்கப்படுவார். பின்னர் வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் வரும். அங்கு ஒரு நாள் போட்டிகளில் விளையாட பிற flat wicket bullies-ஆல் முடியாது என்பதால் மீண்டும் திராவிடை ஒரு நாள் போட்டிக்கான அணியில் சேர்த்துவிடுவார்கள். அப்படித்தான் சமீபத்திய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது நடந்தது. இதுபோல் மீண்டும் நடக்கக்கூடாது என்பதால்தான் அவர் தான் இனி ஒரு நாள் போட்டிகளில் விளையாடப்போவதில்லை என்று அறிவித்தார்.

சமீபத்திய ஆஸ்திரேலியப் பயணம் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிக மோசமாகவே இருந்தது. மீண்டும் மீண்டும் ஆடுகளத்தின்மீதெல்லாம் குற்றம் சுமத்திப் பிரயோசனமில்லை. ஒரு டெஸ்ட் தொடருக்கான முன்பயிற்சி இல்லாமல், ஏதோ பீச் கிரிக்கெட் விளையாடப் போவதுபோலப் போனால் உருப்பட முடியாது. ஆனால், தனிப்பட்ட முறையில் திராவிடுக்கு இந்தப் பயணம் மிக மோசமாக இருந்தது. ரன்கள் வராதது பெரிய விஷயமில்லை; அதற்கு முந்தைய இரண்டு தொடர்களில் மேற்கிந்தியத் தீவுகளிலும் இங்கிலாந்திலும் பட்டையைக் கிளப்பியிருந்தார். அவராலேயே தாங்க முடியாதது அவர் தொடர்ந்து கிளீன் போல்ட் ஆகிக்கொண்டே இருந்தது. அப்படியானால் உங்கள் ஸ்டம்ப் எங்கே இருக்கிறது என்ற புரிதல் உங்களிடம் இல்லை என்று பொருள்.

அந்த நேரத்தில்தான் திராவிடுக்கு இது தோன்றியிருக்கவேண்டும். பிறர் நம்மைக் கேவலமாகத் திட்டுவதற்குமுன் நாமே அணியிலிருந்து விலகிவிடுவது சிறந்தது!

அதன்படி மிகச் சரியான ஒரு முடிவை எடுத்திருக்கிறார் ராஹுல் திராவிட். அவரைப் போன்ற திறனும் அறிவும் உள்ள ஒரு கிரிக்கெட்டரைப் பார்ப்பது கடினம்.

ஆனால் இந்திய கிரிக்கெட் அணியில் அவரைப் பெரும்பாலும் மோசமாகவே நடத்தியுள்ளனர். ஆரம்பத்தில் அணியில் சரியான ஓரிடத்தை அவருக்குத் தரவில்லை. அவருடைய நியாயமான இடம் நம்பர் 3. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னிடத்தை அவர் ஸ்தாபித்ததும், திடீரென அவரை ஓப்பனிங் எல்லாம் விளையாடச் சொன்னார்கள். அணிக்காகப் பொறுத்துக்கொண்டு அதனைச் செய்தார். ஒருநாள் போட்டிகளில் பேலன்ஸ், மண்ணாங்கட்டி என்று அவரை விக்கெட்கீப்பிங் செய்யச் சொன்னார்கள். அதையும் செய்தார்.

சுமாரான கேப்டனாக இருந்தார். இருக்கும் அணியை வைத்துக்கொண்டு அவரால் முடிந்ததைச் செய்தார். ஆனால் கேப்டனாக இருக்கும்போது தன்னால் மேற்கொண்டு ஃபார்மைத் தக்கவைத்துக்கொள்ளக் கஷ்டமாக இருக்கிறது என்று தோன்றியவுடனேயே பதவியை விட்டெறிந்துவிட்டார்.

என்னைப் பொருத்தமட்டில், நான் பார்த்து ரசித்த கிரிக்கெட்டர்களில் முதன்மையானவர் திராவிட்தான் என்பேன். டெஸ்ட் கிரிக்கெட் அழிந்துகொண்டிருக்கும் இந்நாள்களில் இனி திராவிட் போல ஒருவர் உருவாகப்போவதில்லை.

Monday, March 05, 2012

இட ஒதுக்கீடு - உள் ஒதுக்கீடு - முழு ஒதுக்கீடு

திராவிட இயக்கம் தொடர்பாக ஏற்கெனவே எழுதிய இரு பதிவுகளை முதலில் படியுங்கள்.  திராவிட இயக்கத்தின் 100-வது ஆண்டு விழா | திராவிட இயக்கம் x பார்ப்பனர்கள்

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வாராவாரம் ஒளிபரப்பாகும் ‘நண்பேன்டா’ என்ற விவாத நிகழ்ச்சி ஒன்றில் நானும் கலந்துகொள்கிறேன். அதில், முஸ்லிம் இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் ஒன்று நடைபெற்றது. வரும் ஞாயிறு அன்று இரவு 7.30-க்கு ஒளிபரப்பாகும். (நேற்று திராவிட இயக்கம் தொடர்பான விவாதம் நடைபெற்றது.)

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இட ஒதுக்கீடு என்பதற்குப் பெரும் ஆதரவு உள்ளது. இதற்கு ஒரு முக்கியக் காரணம், சென்னை மாகாணத்தில்தான் இது முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. வேறு சில இடங்களில் இதற்குமுன்னரேயே இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் சட்டம் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டு, தொடர்ந்து விரிவாக்கப்பட்டு, இன்று மொத்த இட ஒதுக்கீடு 69% என்ற ஒரு நிலை தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது.

இதன் பின்னர்தான் உச்ச நீதிமன்றம் மண்டல் கமிஷன் தொடர்பான தீர்ப்பு ஒன்றில் ஒட்டுமொத்த இட ஒதுக்கீடு 50%-ஐத் தாண்டக்கூடாது என்று சொன்னது. எனவே ஒவ்வோர் ஆண்டும் தமிழக அரசு நீதிமன்றம் சென்று தாற்காலிகமாக 69% இட ஒதுக்கீட்டைத் தொடர அனுமதி பெற்றவண்ணம் உள்ளது.

தமிழகத்தின் 69% இட ஒதுக்கீட்டில், 18% அட்டவணை சாதியினருக்கு (தலித்துகளுக்கு), 1% பழங்குடியினருக்கு, 50% பிற்படுத்தப்பட்டவர்களுக்கு. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம், கிறிஸ்தவ சமூகங்கள் உண்டு. முந்தைய பதிவு ஒன்றில் கூறியபடி, பார்ப்பனர்கள் மற்றும் சில சாதிகள் தவிர்த்து கிட்டத்தட்ட அனைவருமே இட ஒதுக்கீட்டின்கீழ் வருவார்கள். (சுமார் 87% மக்கள் தொகைக்கு 69% இட ஒதுக்கீடு என்கிறது விக்கிபீடியா.)

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் பலன் பெறுவது பெரும்பாலும் முன்னேறிய சாதிகளே என்றும் தங்களுக்காகத் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்றும் வன்னியர்கள் போராட்டத்தில் இறங்கினர். அப்போதுதான் மருத்துவர் ராமதாஸ் பிரபலம் அடைந்தார். அதன்பின்னர் அவர் பாட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கினார். பின்னர் 50% பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் 20% தனியாக எடுக்கப்பட்டு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டது. வன்னியர்கள் இப்பிரிவுக்குள் வந்தனர்.

கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் தனி இட ஒதுக்கீடு கேட்டதால், சென்ற ஆட்சியில் இரு சமூகத்துக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கான 30% ஒதுக்கீட்டிலிருந்து ஆளுக்கு 3.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. விரைவில், கிறிஸ்துவர்கள் இந்த ஒதுக்கீடு தங்களுக்கு வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்துவிட்டனர். ஏனெனில் 30%-ல் உள் ஒதுக்கீடு இல்லாமலேயே அவர்களுக்கு 3.5%-ஐவிட அதிக இடங்கள் கிடைத்துவந்தன. 3.5% உள் ஒதுக்கீடு என்பது அவர்களுக்கு ஆதரவானதாக இல்லை. ஆனால், முஸ்லிம்கள் 3.5% இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்திவருகின்றனர். சொல்லப்போனால், அதைவிட அதிக இடங்கள் வேண்டும் என்று கேட்கின்றனர்.

அட்டவணை சாதியினருக்கான 18% ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு என்று 3% உள் ஒதுக்கீடு தரப்பட்டது. இதற்கு பிற தலித் சாதிகளிடமிருந்தும் அரசியல் கட்சிகளிடமிருந்தும் முதலில் எதிர்ப்பு வந்தது. பின்னர் எதிர்ப்புகள் பின்வாங்கிக்கொள்ளப்பட்டன. ஆக இன்றைய ஒட ஒதுக்கீட்டு நிலை இவ்வாறு உள்ளது:

1. அட்டவணை சாதிகள்: 18%. அதில் 3% அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீடு
2. பழங்குடியினருக்கு: 1%
3. பிற்படுத்தப்பட்டோருக்கு: 30%. அதில் 3.5% முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு
4. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு: 20%

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயலர் பேராசிரியர் ஹாஜா கனி, விவாதத்தின்போது, அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப மொத்த இடங்களைப் பிரித்துக் கொடுத்துவிடலாமே என்றார். இதைத்தான் பெரியாரும் சொன்னதாக அவர் சொன்னார்.

ஓப்பன் கோட்டா எனப்படும் மீதமுள்ள 31% இடத்துக்கு அனைவரும் போட்டியிடுவதாக இப்போது உள்ளது. ஆரம்பத்தில் பிற சாதியினர் (இட ஒதுக்கீடு இல்லாதவர்கள்) இந்த இடத்தில் பெரும்பான்மையைப் பிடித்துக்கொண்டனர். அப்படி இருப்பதால், பார்ப்பனர்கள், தம்முடைய சுமார் 3% மக்கள் தொகையைவிட அதிக இடங்களைக் கைப்பற்ற முடிகிறது என்பது சிலரது வாதம்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில் வெளியாகியுள்ள பொறியியல், மருத்துவக் கல்லூரி இடங்களைப் பார்க்கும்போது, பிற்படுத்தப்பட்ட சாதியினர் பலரும் இந்த 31% இடத்தில் பெரும் பங்கைப் கைப்பற்றியுள்ளது தெரிகிறது.

மொத்தத்தில் அவரவர் சாதித் தொகைக்கு ஏற்ப அவரவருக்கு இட ஒதுக்கீடு தரவேண்டும் என்னும் கருத்தைப் பலர் முன்வைக்கிறார்கள். உதாரணமாக, ஹாஜா கனி போன்றோர்.

மத்திய அரசின் கல்வி நிலையங்களிலும் வேலைகளிலும் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, அட்டவணைப் பிரிவினருக்கும் (15%) பழங்குடிகளுக்கும் (7.5%) மட்டும்தான் முதலில் இட ஒதுக்கீடு இருந்தது. வி.பி.சிங் பிரதமராக இருக்கும்போது மண்டல் கமிஷன் பரிந்துரையை முன்வைத்து இதர பிற்பட்ட சாதிகளுக்கு என்று 27% இட ஒதுக்கீடு தரப்பட்டது. நிறைய வழக்குகளுக்குப் பிறகு இந்த இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பின்போதுதான் கிரீமி லேயர், மொத்த இட ஒதுக்கீடு 50%-ஐத் தாண்டக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கிரீமி லேயர் என்றால், இட ஒதுக்கீட்டைப் பெற, சம்பந்தப்பட்ட நபருடைய குடும்ப வருமானம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் இருக்கக்கூடாது; அவருடைய பெற்றோர்கள் குறிப்பிட்ட தரத்துக்கு மேற்பட்ட அரசு வேலைகளில் இருக்கக்கூடாது.

இந்த கிரீமி லேயர் என்ற பொருளாதார அடிப்படையை தமிழகம் ஏற்க மறுக்கிறது. அதற்கு அரசியலமைப்புச் சட்ட ஆதரவு இல்லை என்பது பலரது கருத்து. Ad hoc-ஆக இந்தக் கருத்தையும் 50% உச்ச வரம்பையும் உச்ச நீதிமன்றம் புகுத்திவிட்டதாகச் சிலர் சொல்கிறார்கள். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் மாற்றம் கொண்டுவரும்வரை, இதுதான் செல்லுபடியாகும். ஆனால் நான் முன்பே சொன்னதுபோல, இதுநாள்வரை தமிழகத்தில் இது செல்லுபடி ஆகவில்லை.

ஓப்பன் கோட்டா என்பதே இருக்கக்கூடாது; ஒவ்வொரு சாதிக்கும் அவரவர் தொகைக்கு ஏற்றவாறு இட ஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்பதை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் உள் ஒதுக்கீடு என்பது தேவையில்லை. ஒரு குறிப்பிட்ட சாதியில் தகுதியான நபர் யாரும் இல்லை என்றால் அந்த இடங்கள் அடுத்து யாருக்குப் போகவேண்டும் என்பதற்குத் தெளிவான விதிகள் தேவைப்படும். மேலும் 4,000 - 5,000 சாதிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒவ்வொருவருக்கும் இட ஒதுக்கீடு என்று பார்த்தால், வெறும் 4 அல்லது 5 இடங்கள் காலியாக இருக்கும்போது எப்படி அவை நிரப்பப்படும் என்பதில் பெரும் குழப்பங்கள் இருக்கும். இதற்கும் தெளிவு தேவை.

அடுத்து தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. அரசு வேலைகள் குறைந்துகொண்டே வரும் நிலையில், பெரும்பாலான புதிய வேலைகள் தனியார் துறையில் உருவாகும்போது அங்கு இட ஒதுக்கீடு இல்லையென்றால் சமூக நீதி என்ற வார்த்தைக்கே இடமில்லை என்பது இதன் ஆதரவாளர்கள் முன்வைக்கும் கருத்து. தனியார் நிறுவனங்கள் இதனை வரவேற்பதில்லை. அரசும் இப்போதைக்கு இது தொடர்பாக ஒரு சட்டத்தைக் கொண்டுவருவதாகத் தெரியவில்லை.

இட ஒதுக்கீடு அவரவர் சாதி விகிதாசாரப்படி ஏற்படுமாயின், பார்ப்பனர்கள் மட்டுமின்றி பல சாதிகளுக்கும் இழப்பு ஏற்படும். இன்று பிற்படுத்தப்பட்டோரில் சில முன்னேறிய சாதிகள்தாம் பெருமளவு இடத்தைக் கைப்பற்றுகின்றன. பாட்டாளி மக்கள் கட்சி சமீபத்தில் வெளியிட்ட ஒரு கோப்பு, இது தொடர்பான சில புள்ளிவிவரங்களை முன்வைக்கிறது.

மதரீதியான இட ஒதுக்கீட்டை பாஜக எதிர்க்கிறது. மத மாற்றத்தை உந்தும் ஒரு சக்தியாக அது விளங்கும் என்பது பாஜகவின் வாதம். எனவே இட ஒதுக்கீடு வேண்டுமென்றால் கூடவே மதமாற்றத் தடைச் சட்டமும் கொண்டுவரப்படவேண்டும் என்கிறது அக்கட்சி.

திராவிட இயக்கத்தின் மிகப் பெரும் சாதனை இட ஒதுக்கீடு. அந்த இயக்கத்தின் 100-ம் ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தின்போது, கீழ்க்கண்ட தலைப்புகளில் தீவிரமான விவாதங்கள் நடைபெறும்:
 1. ஓப்பன் கோட்டா என்பது ஒழிக்கப்பட்டு, சாதி விகிதாசார இட ஒதுக்கீடு கொண்டுவரப்படவேண்டுமா?
 2. மதங்களுக்கென தனி இட ஒதுக்கீடு தரலாமா? அதற்கும் மதமாற்றத் தடைச்சட்டத்துக்கும் என்ன தொடர்பு?
 3. தனியார் கல்விக்கூடங்களில் படிப்புகளுக்கும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளுக்கும் இட ஒதுக்கீடு வேண்டுமா? அப்படியானால் எம்மாதிரியான இட ஒதுக்கீடு?
 4. இடங்களுக்கு மட்டும்தான் ஒதுக்கீடா அல்லது புரமோஷன் போன்றவற்றுக்கும் இட ஒதுக்கீடு தேவையா?
 5. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் இடங்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதிகள், பிரதமர், முதல்வர், ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகிய இடங்களுக்கும் ஒதுக்கீடு தேவையா?

Saturday, March 03, 2012

Fiscal Deficit

இந்த ஆண்டு இந்திய அரசு எதிர்பார்த்ததைவிட அதிகமான நிதிப் பற்றாக்குறையை (fiscal deficit) காண்பிக்கும் என்று தெரிகிறது. பொறுப்பே இல்லாமல் செலவழிப்பது ஒரு பக்கம் (MGNREGA, UIDAI), வருமானத்தை அதிகரிப்பதற்கான அடிப்படைக் கட்டுமானங்களை உருவாக்காதது மறு பக்கம் என்று திக்குத் தெரியாமல் விழிக்கிறது அரசு.

வருமானத்தை அதிகரிக்க அரசு எடுத்திருக்கும் முடிவுகள்:

1. அரசு நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்றல் (disinvestment). ஓ.என்.ஜி.சி பங்குகளை விற்க முயன்று, சரியான விலை இல்லாத காரணத்தால் வாங்க யாரும் இன்றி, கடைசியாக பொதுத்துறை நிறுவனங்களை வற்புறுத்தி அதே பங்குகளை வாங்கவைத்திருக்கிறது அரசு. ஓ.என்.ஜி.சி பங்குகளை அதிகம் வாங்கியிருப்பது எல்.ஐ.சிதான். நானும் நீங்களும் செலுத்தும் இன்ஷூரன்ஸ் பிரீமியம் தொகை நாசம் ஆகாமல் இருக்க வேண்டிக்கொள்வோம்.

2. பொதுத்துறை நிறுவனங்களை அதிக டிவிடெண்ட் கொடுக்கச் சொல்லுதல்.

3. மறைமுக வரிகளை (ஆயத்தீர்வை, சுங்கத் தீர்வை, விற்பனை வரிகள்) அதிகரிப்பது.

ட்விட்டர் விவாதம் ஒன்றில் வருமான வரி முற்றிலும் நீக்கப்பட்டு, எல்லாமே மறைமுக வரிகளாக (விற்பனை வரி/மதிப்புக் கூட்டு வரி) மாற்றப்படவேண்டும் என்பதுபோல மருத்துவர் புரூனோ சொன்னார். இது எனக்கு ஏற்புடையதில்லை. நேரடி வருமான வரி மிக முக்கியமான ஒன்று. மறைமுக வரிகள் அனைத்துமே நுகர்வைப் பெருமளவு குறைப்பவை. எனவே பொருளாதாரத்தைப் பாதிப்பவை. ஒரு பொருள் 2 ரூபாய் என்றால் அதனை வரிகளால் 6 ரூபாயாக ஆக்குவது சந்தையைப் பாதிக்கும். வேலை வாய்ப்பைப் பாதிக்கும். பற்றாக்குறை உள்ள மூலப்பொருள்களுக்கு மட்டும்தான் இப்படிச் செய்யவேண்டும். உதாரணமாக பெட்ரோல்மீது வேறு வழியின்றி கடுமையான வரிகள் விதிப்பதை நான் ஆதரிக்கிறேன். ஆனால் பிளாஸ்டிக்மீதோ இரும்பின்மீதோ இன்றைக்கு அப்படிச் செய்யவேண்டிய அவசியம் இல்லை.

தனிநபர் வருமான வரி என்பது தெளிவான ஒன்று. ஒரு குறிப்பிட்ட வருமானத்துக்குமேல் உள்ளவர்களால் வரி கட்டியபின் மீதம் உள்ள வருமானத்தில் தம் வாழ்க்கையைப் பராமரிக்க முடியும். அதி ஏழைகளால் இதனைச் செய்யமுடியாது. அதே நேரம் அதிக வருமானம் உள்ளோருக்கு மிக அதிகமான வரிகளை விதித்தால் பொருளாதார முனைப்பைக் குறைப்பதாகிவிடும். அதே நேரம், இந்தியாவில் வருமான வரி கட்டுவோரின் சதவிகிதம் மிக மிகக் குறைவு. விவசாயிகள், தனியாகத் தொழில் செய்வோர் (மருத்துவர்கள், வழக்கறிஞர்கள்...), சிறு முதலாளிகள் என்று பலரும் எப்படியாவது வருமான வரியை டாட்ஜ் செய்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போது இருக்கும் வருமான வரி நியாயமானது என்பதுதான் என் கருத்து. கடந்த 10 ஆண்டுகளில் தனி நபர் செலுத்தவேண்டிய வருமான வரி என்பது குறைந்துகொண்டேதான் வந்துள்ளது என்பதை என்னை வைத்தே உதாரணமாகச் சொல்லமுடியும். ஒரு கட்டத்தில் வருமானத்தில் 25%-ஐ வரியாகக் கட்டிய நான், இன்று சுமார் 15%-ஐத்தான் கட்டுகிறேன். இதில் மேற்கொண்டு சலுகை தரவேண்டிய அவசியமே இல்லை.

மருத்துவர்கள், வக்கீல்கள், சிறு முதலாளிகள், சுயதொழில் செய்வோர் என அனைவரையும் வரி கட்டவேண்டுமோ இல்லையோ, கட்டாயம் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தாவது ஆகவேண்டும் என்று அரசு சட்டம் கொண்டுவரவேண்டும். அதேபோல விவசாய வருமானத்துக்கும் வரி விதிக்கவேண்டும். விவசாயமும் பிற தொழில்களைப் போலத்தான். இங்கும் செலவுகளைக் கழித்துக்கொண்டு லாபத்தில்தான் வரி கேட்கிறோம். அதுவும் standard deductions எல்லாவற்றையும் கழித்துக்கொண்டு, குறிப்பிட்ட அளவைத் தாண்டினால்தான் வரி என்று வரப்போகிறது.

அதே நேரம், MGNREGA போன்ற பண விரயத்தைக் கட்டாயம் தவிர்க்கவேண்டும். நிதி ஆதாரம் ஏதும் இல்லாமல் அனைவருக்கும் உணவு போன்ற திட்டங்களைவேறு தீட்ட ஆரம்பித்துவிட்டார்கள். இவற்றையெல்லாம் மாநில அரசுகளிடம் விட்டுவிடவேண்டும். அதற்கு ஏற்றாற்போல மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தரும் மானியத்தை அதிகரித்துவிட்டுப் போங்கள். இப்படி மத்திய அரசு தேவையின்றி மக்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரில் மாநிலங்களின் வேலைகளில் தலையிடுவது ஆபத்தானது. RSBY போன்ற சுகாதாரத் திட்டத்திலும் மத்திய அரசு நேரடியாக ஈடுபடக் கூடாது. இதைச் செயல்படுத்துவது முழுவதுமே மாநில அரசுகளின் கையில் இருக்கவேண்டும்.

சோனியா காந்தி, தனக்கென தனி ஒரு குழுவை உருவாக்கிக்கொண்டு அரசுக்கு வெளியில் அமர்ந்துகொண்டு பைத்தியக்காரத்தனமான திட்டங்களைத் தீட்டிப் பணத்தை வீணடிக்கிறார். இந்தப் பணத்தை எப்பாடு பட்டாவது திரட்டிக் கொண்டுவரவேண்டியது நிதியமைச்சரின் வேலையாகிறது. இதனால் தேவையின்றி ஃபிஸ்கல் டிஃபிசிட் அதிகமாகிறது.

இந்த ஒரு காரணத்துக்காகவே காங்கிரஸ் அரசை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்கவேண்டியது அவசியமாகிறது.

அடுத்ததாக திட்டக் குழு என்ற அமைப்பைக் கலைக்கவேண்டியதும் அவசியமாகிறது. மத்திய திட்டக் குழு என்ற ஒன்று இருப்பதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில திட்டக் குழு என்ற ஒன்று உள்ளது. இவர்கள் தனியாகப் பணம் ஒதுக்கிக்கொண்டு, தனியாகத் திட்டம் தீட்டி, planned, unplanned என்று இரண்டு கணக்குகளை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த அமைப்பால் இன்று என்ன லாபம் உள்ளது என்று எனக்குப் புரியவில்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் மத்திய நிதியிலிருந்து இவ்வளவு சதவிகிதம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். அதன் அடிப்படையில் பணம் ஒவ்வோர் ஆண்டும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. அது தவிர, திட்டக் குழு முன் ஒவ்வொரு மாநில முதல்வரும் நின்று கையேந்த, சிரித்த முகத்துடன் மாண்டேக் சிங் அலுவாலியா, ‘வைத்துக்கொள்ளுங்கள் இந்தப் பணத்தை!’ என்று ஒரு அமவுண்டைத் தருகிறார். இது எதற்காக?

மாறாக, திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு, ஒவ்வொரு மாநிலத்துக்கும் தரப்படவேண்டிய பணத்தை recalibrate செய்துவிடுவோம். ஆண்டாண்டு இது தடையின்றி நடக்கும். இது மக்கள் தொகை அடிப்படையில் இருக்கும். இது தவிர, ஒவ்வொரு மாநிலமும் தனக்கு வேண்டிய வரிகளை மதிப்புக் கூட்டு வரியாக விதித்துக்கொள்ளலாம்.

தம் வருவாயைக் கொண்டு ஒவ்வொரு மாநிலமும் ஒழுங்காக நிர்வாகம் செய்யவேண்டும். அப்போதுதான் உண்மையான federal அமைப்பை நாம் அடைவோம்.

Thursday, March 01, 2012

திராவிட இயக்கம் x பார்ப்பனர்கள்

பார்ப்பனர்கள் மீதான திராவிட இயக்கத்தின் வெறுப்புக்கான காரணங்களாக இவற்றைப் பார்க்கலாம். இது அன்றும் இருந்தது, இன்றும் பெரும்பாலும் தொடர்கிறது.
 1. பெரும்பான்மைக் கோவில்களை, கருவறைகளைத் தம் கட்டுப்பாட்டில் பார்ப்பனர்கள் இன்றுவரை வைத்திருப்பது.
 2. சமஸ்கிருத வேதத்தை முதன்மையாக வைத்திருப்பது. வைணவர்களும் சைவர்களும் திவ்வியப் பிரபந்தத்தையும் சைவத் திருமுறைகளையும் வழிபாட்டில் வைத்திருந்தாலும், அர்ச்சனை முதல் பிற சடங்குகளுக்கு சமஸ்கிருதத்தையே முன்வைப்பது.
 3. பூணூல் அணிவது; தம் சம்பிரதாயத்தால் தம்மை மட்டும் பிரித்துக் காட்டுவது.
 4. தாம் உயர்ந்தோர், பிற அனைவரும் தாழ்ந்த வர்ணத்தினரான சூத்திரர்கள் என்பதைப் பார்ப்பனர்கள் தொடர்ந்து வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் காட்டிக்கொண்டே இருந்தது; இன்றும் ஓரளவுக்கு இருப்பது.
 5. தீட்டு, ஆசாரம், அனுஷ்டானம் போன்ற கொள்கைகளை முன்வைத்து தம்மைத் தவிரப் பிறரை அசுத்தமானவர்களாக, புனிதமற்றவர்களாக பார்ப்பனர்கள் காட்டுவது.
 6. இந்து மதத்தின் வேதம், தர்ம சாத்திரங்கள், புராணம் ஆகியவற்றின் காவலர்களாக இருப்பதன்மூலம் பார்ப்பனர்கள் தமக்கெனத் தனி உயர் இடத்தை உருவாக்கி, பிறரைக் கீழே வைத்திருப்பது.
 7. கலை, கல்வி என அனைத்தையும் தமக்கானவையாகக் காட்டி பிறருடைய சாதனைகளை மதிக்காமல், தம்முடைய சாதனைகள் தவிர அனைத்தும் பொருட்டல்ல என்பதுபோன்ற நிலையை ஏற்படுத்திவைத்தல்.
 8. பிற சாதிகள்மீது காட்டப்படும் பொதுவான அலட்சிய மனோபாவம்.
இதன் விளைவாக, திராவிட இயக்கம் வெறுக்கும் அனைத்தின் மொத்த உருவகமாக பார்ப்பனர்கள் காணப்பட்டனர். இது பெரியாரின் தலைமையில் முழுமையாக உரு திரண்டது. பார்ப்பனர்கள் எதையெல்லாம் மதிப்பாகக் காட்டுகிறார்களோ அதையெல்லாம் மறுதலிப்பது என்பதே திராவிட இயக்கத்தின் முழுநேர வேலையானது.

எனவேதான், வேதங்கள் என்பவை குப்பை; புராணங்கள் என்பவை அசிங்கமும் ஆபாசமும் நிறைந்தவை; சமஸ்கிருதம் என்பது செத்த மொழி; இந்து மதம் என்பது மோசமான கற்பிதங்கள் நிறைந்த, சக மனிதனைத் தாழ்மையுறச் செய்யும் அவமானகரமான மதம்; இவற்றை முன்னிறுத்தும் பார்ப்பனன் ஓர் அந்நியன், ஒரு வந்தேறி, வெறுக்கத்தக்கவன் போன்ற கருத்தாக்கங்கள் முன்வைக்கப்பட்டன.

மாறாக தமிழ் பழமையும் இளமையும் ஒருங்கே கொண்ட மொழி; தொல் தமிழர் மதம் என்பது இயற்கையை வழிபடும் சீர்திருத்த மதம்; தொல் தமிழர் சமுதாயம் சமத்துவமானது, சாதிகளற்றது; தமிழர் சமுதாயத்தின் அனைத்துச் சீர்குலைவுகளுக்கும் காரணமானது பார்ப்பனர்கள் வெளியிலிருந்து கொண்டுவந்த சிந்தனைகள், மதம், மொழி ஆகியவையே என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்டது.

மிகச் சிறிய கூட்டமான பார்ப்பனர்கள் கொண்டிருக்கும் ஆதிக்கத்தைக் குலைப்பது எப்படி? கம்யூனல் ஜி.ஓ தொடங்கி இன்றுவரை தொடரும் விரிந்த இட ஒதுக்கீட்டை, பெரும் வெற்றியாகச் சொல்லலாம். இது பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைப் படிப்படியாகக் குறைத்தது என்பதோடு பிற சாதிகளைப் பெருமளவு முன்னுக்குக் கொண்டுவந்தது.

கோவில்களில் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் போடப்பட்டது. ஆனால் இது நடைமுறையில் இன்னமும் பெரிதாகச் செயலில் இல்லை.

பார்ப்பன புரோகிதர்கள் தலைமையில் நடக்கும் சாதிச் சடங்குகளை முழுமையாக எதிர்த்தல், மறுத்தல் என்பது அடுத்த உத்தி. இது ஓரளவுக்குத்தான் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் ஐயர் வைத்து நடக்கும் திருமணங்கள், யாகங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் பார்ப்பனர்கள்மீது பிற சாதியினருக்கு ஒரு காலத்தில் இருந்த பயபக்தி பெருமளவு குறைந்துவிட்டது அல்லது முற்றிலும் போய்விட்டது.

ஊடகங்கள் - முக்கியமாக சினிமா - வாயிலாக பார்ப்பன வழக்கங்களை, குடுமியை, பூணூலை, பார்ப்பனப் பேச்சுவழக்கைத் தொடர்ந்து கேலி செய்தபடியே இருப்பது. ஊர்ப் பொதுக்கூட்டங்களில் பார்ப்பனர்களைப் பற்றி அசிங்கமாகப் பேசுவது.

ஆட்சி அதிகாரம் கைக்கு வந்தபிறகு, வேறு வகைகளிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கிராமக் கணக்குப்பிள்ளை வேலை பிதுரார்ஜிதமாக வந்ததை மாற்றியது, நிலம் குத்தகைதாரர்களுக்கே என்ற சட்டம் ஆகியவை பார்ப்பனர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கவென்றே செய்யப்பட்டது என்று பார்ப்பனர்கள் நம்புகிறார்கள்.

இதே நேரம், இயல்பாகவே பார்ப்பனர்கள் திராவிட இயக்கத்தை எதிர்த்தனர். திமுகவை எதிர்த்தனர். இன்றுவரை கருணாநிதியை பெரும்பாலான பார்ப்பனர்கள் எதிர்த்து வாக்களிப்பது தொடர்கிறது. பார்ப்பனர்கள் ஆரம்பத்தில் காங்கிரஸையும், அடுத்தும் எம்ஜிஆரையும் இன்று அஇஅதிமுக அல்லது பாஜகவையும் ஆதரிப்பது ஆச்சரியம் தருவதில்லை.

பார்ப்பனர்களின் பார்வையில் தமக்கு ஏற்பட்ட மிகப்பெரும் இழப்பாக அவர்கள் பார்ப்பது இட ஒதுக்கீடுதான்.

தமிழகத்தின் அதீத இட ஒதுக்கீடு பார்ப்பனர்களை மட்டும் பாதிக்கவில்லை. சைவப் பிள்ளைமார்களையும் சேர்த்தே பாதித்தது. (சௌராஷ்டிரர்கள் போன்ற சில வகுப்பினரும் இதில் உண்டு என நினைக்கிறேன். இது தொடர்பான முழுமையான தகவல்கள் என்னிடம் இல்லை.) இவர்கள் தவிர பிற அனைத்துச் சாதிகளும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கப்பட்டனர். ஆனாலும் இன்று இட ஒதுக்கீட்டின் பிரதம எதிர்ப்பாளர்களாக வெளிப்படையாக இருப்பது பார்ப்பனர்கள் மட்டுமே.

பொதுவாக இட ஒதுக்கீடு என்று வரும்போது 2,000 ஆண்டுகளாகக் கல்வி மறுக்கப்பட்டது என்று ஒரு ஸ்டேட்மெண்ட் வரும். அதில் எந்த ஒரு நியாயமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

கல்வி என்று இங்கு சொல்லப்படுவது வேலை வாய்ப்புக்கான கல்வி என்றால், அது பிரிட்டிஷ் ஆட்சிமுறை கொண்டுவந்த நவீனக் கல்விதான். அதற்குமுன் முஸ்லிம்கள், மராட்டியர்கள், தெலுங்கர்கள் என்று பலர் தமிழகத்தை ஆண்டுவந்தனர். அதற்குமுன் தமிழ் அரசர்கள். இவர்கள் எவர் காலத்திலும் தமிழகத்தில் பிராமணர்கள் தவிர யாரும் கல்வியே கற்கக்கூடாது என்று இருந்ததாகத் தெரியவில்லை.

18-ம் நூற்றாண்டு வரையிலும் நமக்குக் கிடைத்த புலவர்களின் பெயர்களைப் பார்த்தால் அதில் பல்வேறு சாதியினரும் இருப்பதாகத் தெரிகிறது. அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு புத்தகத் தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களைப் பார்த்தால் (19-ம் நூற்றாண்டு, 20-ம் நூற்றாண்டின் தொடக்கம்) அதில் பார்ப்பனர் தவிர்த்துப் பிறர் எழுதியுள்ளவைதான் கிட்டத்தட்ட அனைத்துமே.

16-ம் நூற்றாண்டு முதல் 19-ம் நூற்றாண்டு வரை, சைவ மடங்களே பெரும் கல்விக்கூடங்களாக விளங்கின. அவற்றில் பார்ப்பனர்கள் படித்தனர் என்றாலும் பார்ப்பனர் அல்லாதோரே பெருமளவு இருந்தனர். தலைமைப் பதவி பார்ப்பனர் அல்லாதோரிடமே இருந்தது.

எனவே 2,000 ஆண்டு கல்வி மறுக்கப்பட்ட என்ற பரப்புரையைத் தவிர்த்துத்தான் இதனைப் பார்க்கவேண்டும். நிச்சயமாக பல சாதியினர் கல்வி கற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டிருந்தால் அது பிராமணர்கள் குற்றம் இல்லை. வேதம் தவிர்த்த தமிழ்க் கல்வி, எழுதுதல், படித்தல், தமிழ் இலக்கணம், பா இயற்றுதல் போன்ற பலவும் புழக்கத்தில் இருந்தன. சித்தர்கள் அனைவருமே பார்ப்பனர் அல்லாதோர்தான். அவர்கள் அனைவரும் சுயம்புவாகவா கற்றுக்கொண்டனர்? 19-ம் நூற்றாண்டின் இணையற்ற தமிழறிஞர் ராமலிங்க வள்ளலார், பார்ப்பனர் அல்லாதவர். அவருடைய சீரிய ஆதரவாளர்கள் பெரும்பாலானோர் முதலியார்கள். தமிழகத்தின் செட்டியார்கள் பெரும் கல்விப் பரம்பரையையும் அத்துடன் அதற்கு இணையான செல்வத்தையும் கொண்டிருந்தவர்கள்.

அதேபோல தமிழகத்தில் நவீனக் கல்வியை அறிமுகப்படுத்திய கிறிஸ்துவ மிஷனரிகளின் கல்விக்கூடங்களில் பார்ப்பனர்கள் மட்டும்தான் படிக்கலாம் என்று எந்த நிலையும் இருக்கவில்லை. இப்படித்தான் கல்லூரிகளிலும். ஆனாலும் அதிகமாக இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டவர்கள் பார்ப்பனர்கள்தாம் என்று தெரிகிறது. (எ.கா: சட்டநாதனின் தன்வரலாறு புத்தகத்தில் வரும் பல பகுதிகள். காலச்சுவடு வெளியீடு.)

இதன் தொடர்ச்சியாக, பிரிட்டிஷ் ஆட்சியில் வேலைகள் என்று வந்தபோது பிராமணர்களே பெருமளவு வேலைகளைக் கைப்பற்றிக்கொண்டனர் என்பது புள்ளிவிவரம் காட்டும் உண்மை. இதற்கான காரணங்கள் பல. 2,000 ஆண்டு கல்வி மறுப்பு என்ற பொய் அதற்கான காரணமாக இருக்கவேண்டியதில்லை.

பிராமணர்கள் ஆதிக்கத்தை எதிர்க்கப் புகுந்த திராவிட இயக்கம் மிக விரைவில் பார்ப்பன சாதியினர்மீது வெறுப்பைக் கக்கும் இயக்கமாக ஆகியது. இது இன்றுவரை தொடர்கிறது என்பதுதான் திராவிட இயக்கத்தில் மிகப்பெரிய குற்றமாக நான் காண்பது. வெறுப்பை மட்டுமே முன்வைத்துச் செய்யப்படும் வியாபாரம் வெகுநாள் தங்காது.

பார்ப்பனர்கள் ஆரியர்கள், வந்தேறிகள், அதாவது மண்ணின் மைந்தர்கள் அல்லர் என்ற அடிப்படையற்ற ஒரு வெறுப்புக் கருத்து இன்று இந்தியாவில், தமிழகத்தில் மட்டும்தான் வேரூன்றியுள்ளது. இது தொடர்ந்து indoctrinate செய்யப்பட்டு, முற்றும் உண்மையான ஒரு விஷயமாக “உள்ளங்கை நெல்லிக்கனியாக”, “வெள்ளிடை மலையாக” பேச்சுவழக்கில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. “ஒண்டவந்த கூட்டம் ஆட்சியைத் தன் கைக்குள் வைத்திருக்கிறது” என்பதை சர்வசாதாரணமாக அரசியல் கதையாடலில் நீங்கள் கேட்கலாம்.

இதையேதான் இன்று தமிழ்த் தேசியர்கள், பாமக போன்றோர் பேசத் தொடங்கிவிட்டார்கள், கொஞ்சம் வேறுபாட்டுடன். தமிழகத்தில் தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள் போன்றோர் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்; இவர்கள் மண்ணின் மைந்தர்கள் அல்லர்; இவர்கள் தமிழகத்தில் இருக்கலாமே தவிர ஆட்சி செய்யக்கூடாது என்று அடுத்த கட்ட வெறுப்புப் பிரசாரம் தமிழகத்தில் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது. இது திராவிட இயக்கக் கொள்கையின் நீட்சி. இது விஜயகாந்த் முதல் வைகோ முதல் இன்னும் பலர்மீது பாயப்போகிறது.

திராவிட இயக்கம் பார்ப்பனர்களை, cut to size என்பார்களே, அந்நிலைக்கு அவர்களை ‘மட்டம் தட்டி’ கொண்டுவந்து வைத்திருக்கிறது. அதே நேரம், கடந்த ஒரு நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, முழுமையான பார்ப்பன எதிர்ப்புக் கொள்கை என்பதிலிருந்து திராவிட இயக்கம் நகரவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. திமுகவைப் பிளந்து தோன்றிய அஇஅதிமுகவின் இன்றைய தலைமை ஒரு பார்ப்பனர் கையில். தேமுதிக போன்ற கட்சிகள் பார்ப்பன எதிர்ப்பைக் கொண்டிருப்பதில்லை.

பெருமளவு நீர்த்துப்போய்விட்டாலும் இன்றும் திராவிடர் கழகப் பிரசாரத்தில் பெரும்பான்மையாகவும், திராவிட முன்னேற்றக் கழகப் பிரசாரத்தில் ஓரளவுக்கும் பார்ப்பன எதிர்ப்பு (அல்லது பார்ப்பனிய எதிர்ப்பு) என்பது தொடர்கிறது. பார்ப்பனர்கள் தனித்தனியாகவும் தம் ஊடகங்கள் வாயிலாகவும் திமுக, திக எதிர்ப்பை நிகழ்த்துவதும் தொடர்கிறது.

ஆனால் இந்த எதிர்ப்புணர்வு (இரு பக்கமும்) இன்னும் எத்தனை காலத்துக்குத் தொடர்ந்து இருக்கும்?

திராவிட இயக்கத்தின் 100-வது ஆண்டு விழா

திராவிட முன்னேற்றக் கழகம், 2012-ம் ஆண்டை திராவிட இயக்கம் தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவுறும் ஆண்டாகக் கொண்டாட முடிவெடுத்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுதும், ஆண்டு முழுதும் பெரும் கொண்டாட்டங்களை நிகழ்த்தவுள்ளதாகச் சொல்லியுள்ளனர்.

தினம் தினம் சர்ச்சைகளுக்குக் குறைவில்லாத வகையில் மேடை முழக்கங்கள் எழும்புகின்றன.

திராவிட இயக்கம் என்பது பிராமணரல்லாதார் இயக்கமாகத்தான் தோன்றியது. பிரிட்டிஷ் இந்தியாவில் சென்னை மாகாணத்தில் அரசு வேலைகளில் படித்த பார்ப்பனர்களே மிகப் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பதை எதிர்த்து பார்ப்பனர் அல்லாத சில சாதியினர் ஒன்று திரண்டு உருவாக்கிய ஓர் அமைப்பு, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் கண்டது.

பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு என்பது பார்ப்பனீய எதிர்ப்பு என்றும் இந்து மத எதிர்ப்பு என்றும் பெரியாரின்கீழ் மாறியது. ஆரிய - திராவிடக் கருத்தாக்கம் அதில் புகுந்து, வடவர் எதிர்ப்பு, ஆரியர் எதிர்ப்பு என்று மாறியது. வடவர் எதிர்ப்பு என்பது இயல்பாகவே இந்தித் திணிப்பு எதிர்ப்பாக மாறியது. சுதந்தரப் போராட்டத்தின்போது அப்போராட்டத்தையே எதிர்க்கும் அல்லது தனி திராவிட நாடு கேட்கும் குரலாக மாறியது.

சுதந்தரத்துக்குப் பிறகும் மொழிவாரி மாகாணப் பிரிப்புக்குப் பிறகும், திராவிடம் என்பது தமிழ் என்ற அளவில் சுருங்கிப்போக,

இனம்: ஆரியம் x திராவிடம்
மொழி: சமஸ்கிருதம்/இந்தி x தமிழ்
மதம்: பார்ப்பனியம்/இந்து x நாத்திகம்

என்ற இருமைகள் தோன்றின.

அரசியல்ரீதியில் திராவிடத் தனி நாடு என்று தொடங்கி, தனித் தமிழ்நாடு என்றாகி, பிறகு மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்றானது.

திராவிட இயக்கத்தின் நன்மைகளாக எவற்றையெல்லாம் கூறலாம்?
 • வடமொழி கலவாத தமிழ் மொழி மறுமலர்ச்சி. தமிழை எளிமைப்படுத்துதல், மேடைப் பேச்சு என்ற பாணி.
 • வரைமுறையற்ற வகையில் நாடெங்கும் இந்தி திணிக்கப்படுவதைத் தடுத்தது
 • சீர்திருத்தத் திருமணம், பெருமளவு சாதி மறுப்பு, சமத்துவத்தை நோக்கிய தொடர் பயணம்
 • நாத்திகம் என்ற கருத்தின் பரவல். இன்று தமிழகம் அளவுக்குப் பிற மாநிலங்களில் கடவுள் மறுப்புக் கொள்கை பரவியுள்ளதாகத் தெரியவில்லை. அதன் காரணமாக மதம் சார்ந்த விஷயங்கள் மீது ஓரளவுக்கு healthy scepticism.
 • இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை வேகமாக வரவேற்றது. அதன் காரணமான வளர்ச்சி
 • இட ஒதுக்கீடு, அதன் விளைவாகக் கல்விப் பரவலாக்கம், அதன் விளைவாக மனித வள மேம்பாடு, விரைவான பொருளாதார மேம்பாடு.
 • அரசியல்ரீதியில் காங்கிரஸ் கட்சிக்கு செக். விளைவாக கூட்டாட்சியை நோக்கிய இந்தியப் பயணத்தில் முதல் அடி எடுத்து வைத்தது.
 • மாநில நலன்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தது.
இன்று திராவிட இயக்கம், முக்கியமாக திராவிட இயக்கத்தின் வாரிசுகள் தாம் மட்டும்தான் என்று சொல்லிகொள்ளும் திராவிடர் கழகம் (சமூக இயக்கம்), திராவிட முன்னேற்றக் கழகம் (அரசியல் கட்சி) ஆகியவை எந்நிலையில் உள்ளன? எதனை நோக்கிச் செல்லவேண்டும்?