Wednesday, November 30, 2011

அந்நிய நேரடி முதலீடு - 2/n

உற்பத்தியாளர் - சி & எஃப் - மொத்த விற்பனையாளர் - சில்லறை விற்பனையாளர் - நுகர்வோர் என்ற இந்த மாபெரும் சங்கிலி, நவீன வணிக யுத்தி. பாரம்பரியமாகப் பொருள்கள் உருவாக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வந்ததிலிருந்து மாற்றம் பெற்ற ஒன்று. ஆனால், மேல்நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது என்று சொல்லமாட்டேன்.

ஒரு காலத்தில் இந்தியாவும் சீனாவும் மாபெரும் உற்பத்தி நிலையங்களாகச் செயல்பட்டன. இந்தியர்கள்போல பருத்தித் துணி நூற்று, அதில் சாயம் சேர்த்து, டிசைன்களைச் செய்யும் நுட்பம் உலகில் எங்கும் இருக்கவில்லை. அதனால்தான் டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியும் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியும் இந்தியா வந்து அந்தத் துணிகளை வாங்கிச் சென்றன. பின் நிலைமை மாறியது.

தொழில்நுட்பம், வணிகத் திறன், முதலீடு, சந்தை ஆகிய நான்கும் சரியாக அமைந்தால்தான் அங்கே லாபம் சாத்தியமாகும். இன்று மிகச் சில துறைகள் தவிர்த்து, தொழில்நுட்பத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். ராக்கெட் தொழில்நுட்பம், அணுத் தொழில்நுட்பம் மற்றும் சில அதி உயர் நுட்பங்கள் தாண்டி அனைத்தும் இன்று இந்தியாவில் ஓரளவுக்கு இருக்கின்றன என்று சொல்லலாம். ஆனால் 1990-களுக்கு முந்திவரை இந்தியாவில் சொந்தமாக கார்கள் தயாரிக்கத் திறன் கிடையாது. இரு சக்கர மோட்டார் வாகனங்கள் தயாரிப்பிலும் சரியான திறன் கிடையாது. அதனால்தான் தொழில்நுட்ப உறவுகளை ஏற்படுத்திக்கொண்டோம். மாருதி சுசுகி, டிவிஎஸ் சுசுகி, ஹீரோ ஹோண்டா, இப்படி.

ஆனால் இன்று நம் கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு உலகின் பல மூலைகளிலிருந்தும் வேண்டிய தொழில்நுட்பத்தை வாங்கிக்கொள்ளலாம்.

அடுத்து வணிகத் திறன். இதுவும் ஒன்றும் பெரிய விஷயமல்ல. நம் நாட்டிலேயே கடந்த மூன்று பத்தாண்டுகளில் விற்பனைத் திறன் படைத்த பல எக்சிகியூட்டிவ்கள் உருவாகியுள்ளனர். விளம்பர ஏஜென்சிகள் (பெரும்பாலும் அந்நிய நாட்டு நிறுவனங்களின் கிளைகள்!) உருவாகியுள்ளன.

இப்போது முதலீட்டுக்கு வருவோம்.

இந்தியாவில் எக்கச்சக்கமாகப் பணம் இருக்கிறது. ஆனால் எல்லாம் புளிப் பானைக்குள் வைக்கப்பட்டிருக்கும் பணம். இந்தியர்கள் ரிஸ்க் எடுக்கும் முதலீடுகளில் தம் பணத்தைப் போடுவதே இல்லை. அதற்கான பாரம்பரியம் வெகு சில சாதிக் குழுக்களில் மட்டுமே இருந்தது. தமிழ் பதிப்புலகம் பெரும்பாலும் செட்டியார்களின் கைகளிலேயே இன்றும் இருப்பது ஏன்? அவர்கள்தான் அதில் முதலீடு செய்யத் தயாராக இருந்தார்கள்.

ஏழை பாழைகள் எல்லாம் தம் பணத்தைக் கொண்டு பெரும் முதலீடு ஒன்றில் இறக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. பணம் படைத்தவர்களைப் பற்றித்தான் என் கருத்தே. மாறாக, 16-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே இங்கிலாந்தவர்களும் டச்சுக்காரர்களும் ஜாயிண்ட் ஸ்டாக் கம்பெனிகளை உருவாக்கி, பணத்தை முதலீடு செய்து, பெரும் வணிகத்தில் இறங்கினார்கள். தொழில்முனைய விரும்பும் எவருக்கும் அந்தப் பணம் கிடைத்தது. இந்தியாவில் பார்சிகள், செட்டியார்கள், மார்வாடிகள், குஜராத்தி மேமோன்கள் போன்ற சில சாதிக் குழுக்களிடையே மட்டும்தான் இது சாத்தியமானதாக இருந்தது.

இந்தியாவில் சுதந்தரத்துக்குப் பிறகு 1990-கள் வரை, பணம் படைத்தவர்கள் மட்டுமே நிறுவனங்களை உருவாக்க முடிந்தது. அவர்களுக்கு ஞானம் உள்ளதா என்பதெல்லாம் முக்கியமில்லை. விஷயம் தெரிந்த நான்கைந்து பேரை அடிமை வேலையாளாகக் குறைந்த சம்பளத்துக்கு வைத்துக்கொண்டால் போதும்.

இது பெரியளவில் மாறத் தொடங்கியதே 1990-களின் பிற்பகுதியில்தான். அமெரிக்காவின் சிலிகான் வேலியை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கே வென்ச்சர் கேபிடல் பணம் 1970-களிலிருந்து வெள்ளமெனப் பாய்ந்தது. புத்துணர்ச்சி மிக்க இளைஞர்கள், தம் ஐடியாக்களை மட்டுமே முன்வைத்து, முதலீட்டாளர்களின் ரிஸ்க் கேபிடலை எடுத்துக்கொண்டு பல புதிய கம்பெனிகளை உருவாக்கினார்கள். 10-க்கு 9 தோற்றுப்போயின. ஆனால் வெற்றி பெற்ற ஒவ்வொன்றும் மாபெரும் நிறுவனமாக ஆனது.

இன்று இந்தியர்கள் அஞ்சி நடுங்கும் வால்மார்ட்டோ டிஸ்னியோ கோககோலாவோ சிறுவாட்டுப் பணத்தால் வளர்ந்துவிடவில்லை. முதலீட்டாளர்களின் ரிஸ்க் முதலீட்டால்தான் வளர்ந்தன.

இதனை மேலும் புரிந்துகொள்ள முதலீடுகளைப் பற்றிய முழுமையான புரிதல் முதலில் அவசியம். அடுத்து அதனைப் பார்ப்போம்.

அந்நிய நேரடி முதலீடு - 1/n

இந்தியாவில் பெரும்பாலான விவாதங்களை ஒரு தரப்பு படுவேகமாகக் கடத்திக்கொண்டு போய்விடுகிறது. எதிர்த் தரப்பு தன் வாதத்தை வைப்பதற்கு முன்னால் முதல் தரப்பு மாபெரும் குண்டுகளைத் தூக்கிப் போட்டுவிடும். எதிர்த் தரப்பால் செய்யக்கூடிய ஒரே விஷயம், பதுங்கு குழிக்குள் டபார் என்று பாய்ந்து ஒளிந்துகொள்வது மட்டுமே.

கூடங்குளத்தை எடுத்துக்கொண்டால், அணுக் கதிர்வீச்சில் கோடி பேர் சாவார்கள், நாடே நிர்மூலமாகிவிடும் என்று ஒரு தரப்பு சொல்லிவிட்டால், எதிர்த் தரப்பு காலி. இல்லை, நடக்காது என்றால் எப்படி என்று நிரூபி என்பார்கள். அணு மின்சாரத்தின் நன்மைகள் பற்றியெல்லாம் பேச இங்கு இடமே கிடையாது. முதல் தரப்பின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலேயே காலம் கழிந்துவிடும். முல்லைப் பெரியாறு என்றால் ஒரு தரப்பு, 35 லட்சம் மக்களின் உயிரே போய்விடும் என்று ஆரம்பிக்கும். பதில் பேசுவதற்குள் சினிமா காண்பித்து, அணை 3-டியில் உடைந்து, மக்கள் நீரில் மிதந்துகொண்டிருப்பார்கள்.

இப்போது சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு. 40 லட்சம் மக்களை அல்லது 4 கோடி மக்களை அழிக்கப்போகிறது அணு குண்டு. எப்படி என்பதெல்லாம் கவலையில்லை. விவசாயிகள் ஒழிந்தார்கள். எதிர்ப்பேச்சு இல்லை. அண்ணாச்சி கடைகள் காலி. ம்ஹூம், என்ன பதில் சொல்வது?

எனவே நான் என் கருத்துப் போரை ஆரம்பித்துவிட்டேன். தமிழ்பேப்பரில் நான் எழுதிய கட்டுரை இதோ. ஆனால் அது போதாது. பல தெளிவுகள் தேவை. எனவே இந்த நீண்ட தொடர் உரையாடலில் தினமும் கொஞ்சமாவது எழுதப்போகிறேன்.

முதலில் ரீடெய்ல் டிரேடிங் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம்.

உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையே யாராவது இருக்கவேண்டும். பெரும்பாலான உற்பத்தியாளர்கள் நேரடியாக நுகர்வோரை அணுகத் தெரியாதவர்கள் அல்லது அணுக விரும்பாதவர்கள். மேலும் நுகர்வோரை அணுக, அதற்கான கட்டுமானம் தேவை. அந்தக் கட்டுமானத்தைத்தான் மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும், ஸ்டாக்கிஸ்டுகளும் வழங்குகிறார்கள்.

மொத்த வியாபாரி பெரும்பாலும் நேரடியாக நுகர்வோருக்கு விற்கமாட்டார். அவரிடமிருந்து பெரும்பாலும் சில்லறை வியாபாரிகள்தான் வாங்குவார்கள். பின் அவர்கள் நுகர்வோருக்கு நேரடியாக விற்பார்கள். இதில் C&F agents (carrying & forwarding) என்று சிலர் இருப்பார்கள். இவர்கள் பொருள்களைக் கிடங்குகளில் வைத்திருப்போர் மட்டுமே. உற்பத்தியாளரே மொத்த அல்லது சில்லறை வியாபாரிகளைப் பிடித்து, அவர்களிடம் பொருள்களை விற்றுவிட்டு, சி&எஃப் எஜெண்டிடம் சொல்லி, யாருக்கு அனுப்பவேண்டுமோ அவர்களுக்கு அனுப்பச் சொல்லிவிடுவார். பொருள்களை வைத்திருந்து, அனுப்புவதற்கு இவர்களுக்கு ஒரு கட்டணம் தரப்படும்.

இந்தக் கட்டுமானம் இல்லாமல் இன்று இந்தியாவில் பெரும்பாலும் எந்தப் பொருளுமே விற்பனைக்கு வருவதில்லை என்று சொல்லிவிடலாம். இதில் எவையெல்லாம் அடங்கும்?
  1. காய்கறி, பழம்
  2. அரிசி, பருப்பு, உப்பு, மிளகாய் வற்றல் போன்ற மளிகை சாமான்கள்
  3. குளியல் சோப், இத்யாதிகள்
  4. மர, இரும்புச் சாமான்கள், பாத்திரம் போன்ற வீட்டு உபயோகப் பொருள்கள்
  5. மின்னணுப் பொருள்கள் (டிவி, ஃப்ரிட்ஜ், கம்ப்யூட்டர்...)
  6. புத்தகங்கள்
  7. மியூசிக் குறுந்தட்டுகள், டிவிடிகள்
ஐடியா கிட்டத்தட்டப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த மாதிரியிலிருந்து சில வேறுபாடுகளும் உள்ளன.

1. பாரம்பரியச் சந்தை முறை: கிராமங்களில் இன்றும் இது தொடர்கிறது. காய்கறி, மளிகைப் பொருள்கள், சில கைவினைப் பொருள்கள் ஆகியவை உற்பத்தியாளர்களாலேயே சந்தைக்கு (உழவர் சந்தை, கிராமச் சந்தை) கொண்டுவரப்பட்டு, நுகர்வோருக்கும் ஏஜெண்டுகளுக்கும் நேரடியாக விற்கப்படுகின்றன.

2. நேரடி விற்பனை முறை: எந்த இடைத்தரகரும் இல்லாமல், இணையம் வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும், நேரடி விற்பனையாளர் மூலமாகவும் நுகர்வோருக்கு விற்பனை செய்வது. டெல் கம்ப்யூட்டர்கள், யுரேகா ஃபோர்ப்ஸ் வேக்கும் கிளீனர், அக்வா கார்ட் வாட்டர் ஃபில்ட்டர் போன்றவை.

3. கம்பெனி ஷோரூம்/ஏஜென்சி: இரு சக்கர, நான்கு சக்கர வண்டிகள் விற்பனைச் செயல்பாடு இப்படித்தான் நடக்கிறது. உற்பத்தியாளர் நேரடியாக தன் ஏஜென்சிகளை சிலருக்கு மட்டும் கொடுக்கிறார். சரக்கை நேராக அங்கே அனுப்புகிறார். இதெல்லாம் பெரும்பாலும் அதிக விலை கொண்ட பொருள்களுக்கு மட்டுமே கட்டுப்படியாகும். இந்த ஷோரூம்களில் சில காட்சிப் பொருள்கள் மட்டும் இருக்கின்றன. புக்கிங் செய்ததும், சில நாள்கள் கழித்து, வேண்டிய பொருள்கள் ஷோரூமுக்கு வந்து பின் நுகர்வோருக்குப் போகின்றன. இங்கு, விற்பனைக்குப் பிறகான சேவை முக்கியமாகிறது.

(கொஞ்சம் கொஞ்சமாகத் தொடரும்)

கிழக்கு பாட்காஸ்ட்: இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு (1)

ராமச்சந்திர குஹாவின் இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு (பாகம் 1), புத்தகத்தைப் பற்றி இன்றைய பாட்காஸ்டில் நானும் பிரசன்னாவும் பேசுகிறோம்.

இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பாகத்தைப் பற்றிய பாட்காஸ்ட் நாளை வெளியாகும்.Tuesday, November 29, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: ஜெயமோகனின் அண்ணா ஹசாரே

நேற்றைய காஷ்மீர் பாட்காஸ்டுக்குப் பிறகு இன்று இன்னும் கொஞ்சம் தொழில்நுட்ப முன்னேற்றம். இன்று நானும் பிரசன்னாவும் ஜெயமோகனின் அண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம் என்ற புத்தகத்தைப் பற்றிப் பேசியிருக்கிறோம். அதன் வீடியோ இங்கே:
நாளை வேறு ஒரு வீடியோவுடன் சந்திக்கிறோம். இன்னும் பல தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன்.

Monday, November 28, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: காஷ்மீர் - முதல் யுத்தம்

கிழக்கு பதிப்பகத்தின் சில புத்தகங்களைப் பற்றிய சில உரையாடல்களை வீடியோ பாட்காஸ்டாக வெளியிட இருக்கிறோம். அந்த வரிசையில், இப்போது அச்சுக்குச் சென்றுள்ள காஷ்மீர் - முதல் யுத்தம் என்ற புத்தகம் பற்றிய பாட்காஸ்ட் இதோ.


Friday, November 25, 2011

விக்கிமீடியா காமன்ஸ் பரிசுப் போட்டி

கடந்த சில தினங்களாக விக்கிமீடியா காமன்ஸ் தளத்தில் அசையும், அசையாப் படங்கள், ஒலிக்கோப்புகள் ஆகியவற்றைச் சேர்ப்பதற்கான ஒரு போட்டி நடந்துவருகிறது.

முதல் பரிசு $200, இரண்டாம் பரிசு $100, மூன்றாம் பரிசு $50. சில ஆறுதல் பரிசுகளும் உண்டு. முழு விவரம் இங்கே.

தமிழ்-தமிழர் குறித்த புகைப்படங்கள், அசைபடங்கள், நிலப்படங்கள், வரைபடங்கள், ஒலிக்கோப்புகள், நிகழ்பட/காணொளிகள் என எவற்றை வேண்டுமானாலும் விக்கிமீடியா காமன்ஸ் விதிகளுக்கு உட்பட்டு சமர்ப்பிக்கலாம்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவின் ஓர் அம்சம்தான் விக்கிமீடியா காமன்ஸ். எந்த அளவுக்கு எழுத்தால் ஆன விளக்கங்கள் முக்கியமோ, அதே அளவுக்கு முக்கியம் வரைபடங்கள், போட்டோக்கள், வீடியோக்கள் ஆகியவை. இன்று அனைவரும் நம் கையில் மொபைல் கேமரா ஒன்றை வைத்திருக்கிறோம். அவற்றைக் கொண்டு மிக முக்கியமான ஆவணங்களை நாம் உருவாக்கலாம். எழுதுவதுகூடக் கடினமானது. ஆனால் படம் பிடிப்பது கடினமல்ல. இந்தப் படங்களால் என்ன நன்மை என்று நினைத்துவிடாதீர்கள். உங்கள் ஊர் தேர்த் திருவிழா, இயற்கைக் காட்சி, விலங்குகள், பறவைகள், பயிர்கள், செடிகொடிமரங்கள், ஆடு, மாடு, முக்கியமான மனிதர்கள் (எழுத்தாளர்கள், நடிகர்கள், கலைத்துறையினர், அரசியல்வாதிகள், தொழில்துறைத் தலைவர்கள்), மேப்கள், விளக்கப் படங்கள் எனப் பல நமக்குத் தேவையாக உள்ளன.

பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவியல் அல்லது கணிதப் பாடம் நடத்தும்போது எழுத்தோடு சேர்த்து கூடத் தரும் விளக்கப்படம் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை அறிவீர்கள். இவற்றைக்கூட நீங்கள் தரமாகத் தயாரித்து சரியான ஃபார்மட்டில் விக்கிமீடியா காமன்ஸில் சேர்க்கலாம்.

பரிசைத் தாண்டி, நம் பங்களிப்பால் எத்தனை ஆயிரம் மாணவர்களும் சாதாரண மக்களும் அறிவைப் பெறப் போகிறார்கள் என்பதைச் சிந்தியுங்கள்.

Sunday, November 20, 2011

விக்கி கான்ஃபரன்ஸ் இந்தியா ஜூரி விருதுகள்

விக்கி இந்தியா மாநாடு சற்றுமுன் நிறைவுபெற்றது. ஒவ்வொரு இந்திக் மொழி விக்கிபீடியாவிலும் அதிகப் பங்களிப்பு செய்தவர்கள் பாராட்டப்பட்டனர். இறுதியில் ஜூரி விருதுகள் என்று மூன்று கொடுத்தார்கள். முதலாக செங்கைப் பொதுவன்.


இவரை நான் முதலில் பார்த்தது, மத்திய செம்மொழி தமிழ் நிறுவனத்தில். தமிழ் எப்படி எழுதுவது என்று அவர் கேட்டு, என்.எச்.எம் ரைட்டரை நிறுவச் சொல்லிக்கொடுத்தேன். இவருக்கு வயது 76. கைகள் நிற்காமல் ஆடிக்கொண்டே இருக்கும். தம்ளரைப் பிடித்துக்கொள்ள முடியாது. அவருக்குத் தேநீர் கொடுக்கும்போது, இரு கைகளுக்கு இடையில் கைக்குட்டையைப் பிடித்துக்கொண்டு அதற்கிடையில் தேநீர்க் கோப்பையைப் பிடித்துக்கொண்டுதான் குடிப்பார். உணவு உண்ணும்போது அவருடைய மனைவி உதவினால்தான் அவரால் உண்ணமுடியும்.

அப்படிப்பட்டவர் எப்படி விக்கிபீடியாவுக்குப் பங்களிக்கிறார் என்பது ஆச்சரியமே.

அடுத்து விருது பெற்றவர், அனிருத் என்ற ஹிந்தி விக்கிபீடியா பங்களிப்பாளர். இவர் கண் பார்வையற்றவர்.


இவர் ஹிந்தி விக்கிபீடியாவுக்கு இதுவரையில் பங்களித்திருப்போரில் ஏழாவது இடத்திலும், இப்போது பங்களிப்போரில் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறார் என்றார்கள். மிகுந்த ஆச்சரியம்தான்!

விக்கி கான்ஃபரன்ஸ் இந்தியா (படங்கள்)

இப்போது நடந்துகொண்டிருக்கும் அரங்கும் மும்பை பல்கலைக்கழகக் கட்டடங்களும்.மும்பை மைதானத்தில் கிரிக்கெட்

இன்று காலை, சில நிமிடங்களுக்குமுன் எடுத்தது. மும்பை பல்கலைக்கழகம் (ஃபோர்ட்) எதிராக உள்ள மைதானம்.


Friday, November 18, 2011

கல்வி உரிமை என்ற பெயரால் - 4

5. கல்வி வாய்ப்பை நம் பிள்ளைகளுக்கு அதிகமாக வழங்கவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்?

முதலில் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவேண்டும். அதற்கான ஒரு வெள்ளை அறிக்கையையும் நாம் பார்ப்பதில்லை. தன் குப்பைகளைப் பற்றிக் கவலைப்படாத ஓர் அரசுதான் தனியார் கல்வி நிறுவனங்களைத் தண்டிக்கப் பார்க்கிறது. தம் பள்ளிகளை சாக்கடையாக வைத்திருக்கும் ஓர் அரசு, அதனைச் சீர் செய்ய ஒரு துரும்பையும் கிள்ளிப் போடுவதில்லை. புதிதாக அரசு, பள்ளிகளை உருவாக்கவேண்டாம். இருக்கும் பள்ளிகளை சீரும் சிறப்புமாக வைத்தாலே, நல்ல கல்வியை வழங்கமுடியும். இதற்குப் பணமும் தேவை, மனமும் தேவை. ஆனால் ஊழல் மலிந்த அரசுத் துறையால் இதனைச் சாதிக்க முடியும் என்று நான் நம்பவில்லை.

என்ன செய்யலாம்?

அமெரிக்காவில் இருக்கும் சார்ட்டர் பள்ளிகளைப் போல நாம் உருவாக்கலாம். இவை தனியார் பள்ளிகள் அல்ல என்பதைக் கருத்தில் கொள்ளவும். இவை பொதுப் பணத்தில் இயங்கும் பொதுப் பள்ளிகள். ஒரு பள்ளியை நிர்வகிக்க ஐந்து அல்லது பத்தாண்டுகள் மட்டுமே ஒரு குறிப்பிட்ட லாப நோக்கில்லாத அமைப்பிடம் கொடுக்கவேண்டும். அந்தப் பள்ளி குறிப்பிட்ட இலக்குகளை அடையவேண்டும். தன்னிச்சையாக ஆசிரியர் மாற்றம், நியமனத்தில் ஊழல் போன்றவற்றையெல்லாம் செய்ய முடியாது. முடிந்தவரை அந்தந்தப் பகுதிகளில் உள்ள, அந்தந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களைக் கொண்ட ஒரு கூட்டுறவுச் சங்கத்திடம் பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பைத் தரலாம். மிகச் சிறந்த ஆசிரியர்கள் அடங்கிய கூட்டமைப்பிடம் பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பைத் தரலாம். என்.ஜி.ஓக்களிடம் இந்தப் பொறுப்பைத் தரலாம். அரசுக்கு ஒரு தலைவலி குறையும். அதே நேரம் கொடுத்த காசுக்கு அதிக மகசூல் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ளலாம்.

இரண்டாவதாக, தனியார் பள்ளிகளை அதிகமாக்கவேண்டும். அதற்கு சட்டத்தில் மாறுதல்களைக் கொண்டுவரவேண்டும். நாம் தொடர்ந்து சொல்லி வருவதைப்போல கல்வித்துறையில் லாபம் சம்பாதிப்பதில் தவறு இல்லை என்ற மாறுதலைக் கொண்டுவந்தால், நிஜமாகவே நல்லவகையில் கல்வி அளித்து அதிலிருந்து லாபம் சம்பாதிக்க விரும்பும் நேர்மையான தொழில்முனைவோர் பலரும் கல்வித்துறைக்கு வருவார்கள். இன்று கல்வித்துறையில் உள்ள தனியார் அனைவரும் அநியாய வழிகளில், சட்டத்துக்குப் புறம்பான வழிகளில்தான் பணத்தை ‘அள்ளுகிறார்கள்’. ஆனால் கொள்கை அளவில்கூட இந்த லாபம்+கல்வி என்பதை யாரும் பரிசீலிப்பதில்லை.

6. ஆங்கிலம் + தமிழ்: இன்று ஆங்கிலக் கல்விமீதான மோகத்துக்குக் குறைவே இல்லை. இனி குறையப்போவதும் இல்லை. இதன் விளைவு, மானவர்களுக்கு இரண்டு மொழிகளும் ஒழுங்காகச் சொல்லித் தரப்படுவதில்லை. அவர்களால் தமிழிலும் எழுத முடிவதில்லை, ஆங்கிலத்திலும் எழுத முடிவதில்லை. தமிழ் வழிப் பள்ளிகளில் மாணவர்கள் குறைந்தபட்சம் நல்ல தமிழில் எழுதப்பட்டதை மனப்பாடம் செய்து சிறப்பாக ஒப்பிக்கவாவது செய்கிறார்கள் (நானே நேரில் பார்த்திருக்கிறேன்). ஆனால் ஆங்கிலப் பள்ளிகள் பெரும்பாலானவற்றில் ஆசிரியர்களின் ஆங்கிலமே தாங்க முடிவதில்லை. இதில் மாணவர்களை என்ன சொல்வது?

முத்துக்குமரன் கமிட்டி கொடுத்த சமச்சீர் கல்வி அறிக்கையில் இரு மொழிகளுக்கும் செலவிடப்படவேண்டிய நேரம் அதிகம். ஆனால் எந்தப் பள்ளியும் இன்று அதனை விரும்புவதில்லை. தமிழிடமிருந்து நேரத்தைத் திருடி, அறிவியல், கணிதம் நடத்தவே அவர்கள் முற்படுகிறார்கள். மொழியின் புரிதலின்றி, பிறவெல்லாம் வீணே என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை.

ஆனால், இந்தக் குழப்பத்துக்கு எப்படி விடை காண்பது என்று தெரியாமல் குழம்புகிறேன்.

(முற்றும்)

கல்வி உரிமை என்ற பெயரால் - 3

மொத்தத்தில், என் பார்வையில் பல பிரச்னைகள் தென்படுகின்றன.

1. பொதுமக்கள் அரசுப் பள்ளிகள்மீதான நம்பிக்கையை இழந்து பல காலம் ஆகிறது. இதற்கு நாம் பொதுமக்களைக் குற்றம் சொல்லிப் பிரயோசனமில்லை. பிரச்னை அரசுப் பள்ளிகளை நடத்தும் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுடையது.

2. அரசுப் பள்ளிகளுக்கு என மிக அதிகமாகச் செலவிடப்படுகிறது. ஆனால் இந்தச் செலவில் மிகப் பெரும்பான்மை ஆசிரியர் ஊதியத்தில் போய்விடுகிறது. அருகில் உள்ள எந்த அரசுப் பள்ளியையும் சென்று பார்வையிடுங்கள். மோசமான கட்டடம், போதிய வசதிகள் இல்லாமை, நல்ல குடிநீர் இல்லாமை, கழிப்பறைகள் சரியாக இல்லாமை போன்றவைதான் கண்ணில் படுகின்றன.

3. தனியார் பள்ளிகள் உசத்தியில்லை. ஆனால் நிச்சயமாக அடிப்படைக் கட்டுமானங்கள் அங்கே இந்த அளவு மோசமில்லை. தனியார் பள்ளிகளை மூன்றாகப் பிரிக்கலாம். நல்ல, போதிய இடம் + நிறையக் கட்டணம் வாங்கும், நல்ல ஆசிரியர்களைக் கொண்டிருக்கும் வசதியான பள்ளிகள். போதிய இடம் இல்லாத, சுமார் கட்டணம் வசூலிக்கும், சுமாரான ஆசிரியர்களைக் கொண்ட பள்ளிகள். மூன்றாவதாக, மோசமான ஆசிரியர்களைக் கொண்ட, மக்களை ஏமாற்றும் பள்ளிகள். முதல் பள்ளிகளில் சேர்ந்து படிப்பதையே பெரும்பாலானோர் விரும்புவர். ஆனால் அதற்கான கட்டணத்தை எல்லோராலும் செலுத்தமுடியாது. அங்குதான் கல்வி உரிமைச் சட்டம் சில ஏழைகளுக்காவது உதவும். அரசுப் பள்ளிகளில் படிப்பதைவிட, இரண்டாம் நிலைப் பள்ளிகளில் சேர்ந்து படிப்பதுகூடத் தேவலாம். ஆனால் மூன்றாம் நிலை தனியார் பள்ளிகளில் படிப்பதைவிட அரசுப் பள்ளிகளில் படிக்கலாம்.

இன்றைய தேதியில் ஓரளவு விவரம் அறிந்த பெற்றோர் தம் பிள்ளைகள் ஆங்கில மீடியத்தில் படிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது துரதிர்ஷ்டவசமானது, ஆனால் மாற்ற முடியாத ஒன்று. இதனால்தான், மோசமான மூன்றாம்தர ஆங்கில மீடிய தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிப்பதே மேல் என்று பெற்றோர்கள் முடிவெடுத்திருக்கக்கூடும். இதனை மாற்ற ஒரே வழி அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதே.

4. கல்வி உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளைக் கடுமையாக நெருக்கும் என்பது என் கருத்து. தனியார் பள்ளிகள் செய்வது சரியா, தவறா என்ற கேள்வி தனியாக விவாதிக்கப்பட்டவேண்டியது. முதலில் கட்டணங்களைக் கட்டுப்படுத்துவது என்ற முறையில் ஏற்கெனவே தனியார் பள்ளிகள் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. அடுத்து, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் இத்தனைப் பள்ளிகளும் தம் கட்டுமானத்தை அதிகரிக்கவேண்டும். அதற்கான பணம் அவர்களிடம் கட்டாயம் இல்லை. இதில் பல பள்ளிகள், சரியான இடவசதி இல்லாத காரணத்தால் மூடப்படவேண்டும். உண்மையில் இந்தப் பள்ளிகள் ஆரம்பிப்பதற்கே அனுமதி தந்திருக்கக்கூடாது. இவற்றை மூடவேண்டுமானால் அரசு எந்த மாதிரியான மாற்று ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்பதை யோசித்திருக்கிறதா என்று தெரியவில்லை. அடுத்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலானோர் சரியான தகுதிச் சான்றிதழ் பெற்றவர்கள் இல்லை. இவர்கள் அனைவரும் பி.எட் அல்லது இணையான படிப்பை முடித்து, தகுதித் தேர்வு ஒன்றை எழுதி அதற்கான சான்றிதழ் பெறவேண்டும். இது குறிப்பிட்ட காலத்துக்குள் நடக்கக்கூடிய காரியமாக எனக்குத் தெரியவில்லை. அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களுமே இதில் தடுமாறப் போகிறார்கள்.

உதாரணத்துக்கு, முதல் CTET தேர்வில் இந்தியா முழுவதிலுமாகத் தேர்வு எழுதியவர்களில் 12% பேர்தான் பாஸ் செய்திருக்கிறார்கள். நம் ஆசிரியர்களுக்கு தேர்வு வைக்கத்தான் தெரியுமே தவிர, தேர்வு எழுதி பாஸ் செய்யத் தகுதி இருப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் நம் ஆசிரியர்கள் பலரும், CTET அல்லது TNTET என்ற தேர்வு தம்மை வந்து தாக்கப்போகிறது என்று தெரிந்தால் கலங்கிப் போய்விடுவார்கள். நிச்சயமாகப் போராட்டம் வெடிக்கும் என்றே கணிக்கிறேன்.

இடையில் சமச்சீரா, இல்லையா என்ற ஸ்பெஷல் பிரச்னை தமிழகத்தில் மட்டும் எழுந்தது.

இதற்கு மேலாக, 25% ஒதுக்கீட்டை நிர்வகித்து, அதில் குழப்பம் ஏற்படாமல் பள்ளியை நடத்தி, அரசு இந்த 25% மாணவர்களின் கட்டணத்தை எப்போது தருகிறதோ அப்போது பெற்றுக்கொண்டு, அதற்கு யார் யாருக்கு எத்தனை வெட்டவேண்டுமோ அதை வெட்டி...

கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் ஒரு தனியார் பள்ளியைக் கட்டி நிர்வகிக்க மாட்டேன்! எனக்கு வேண்டாம் இந்தத் தலைவேதனை.

(தொடரும்)

கல்வி உரிமை என்ற பெயரால் - 2

இப்போது சில கேள்விகளுக்கு வருவோம்.

1. அரசுப் பள்ளிகள் மோசமானவை; தனியார் பள்ளிகள் சிறப்பானவை என்பதால்தான் மக்கள் அவற்றில் சேர அலைமோதுகிறார்கள். ஆனால் தனியார் பள்ளிகளின் கட்டணம் மிக அதிகமாக இருப்பதால் ஏழைகளால் இது முடிவதில்லை. எனவே இந்தச் சட்டம் அந்தச் சமத்துவத்தைக் கொண்டுவருகிறது.

இந்த விவாதத்தை கஜேந்திரபாபுவும் கருணாகரனும் ஏற்றுக்கொள்ளவில்லை. அரசுப் பள்ளிகள் மோசம் என்று சொல்லக்கூடாது. தனியார் பள்ளிகள் சிறப்பானவை என்றும் சொல்லக்கூடாது. ஆனால் இட ஒதுக்கீடும் வேண்டும். ஏன் என்றால் அது அவர்களுடைய சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டியாம். ஆனால் தனியார் பள்ளிகளில் சேர மக்கள் ஏன் அலைமோதுகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல அவர்கள் விரும்பாமல் டாட்ஜ் செய்துவிட்டனர்.

2. தனியார் பள்ளிகளில் மக்கள் சேர விரும்புவதன் காரணம் அங்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கிறார்கள் என்பதுதானே? அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் சரியாகச் சொல்லித் தரப்படுவதில்லையே.

கஜேந்திரபாபு உடனடியாக, ‘ஆங்கிலம் தேவையே இல்லை’ என்று சொல்லிவிட்டார். ‘ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான். மொழி என்பதற்கும் அறிவு என்பதற்கும் தொடர்பில்லை’ என்று சரியாகவே சொன்னார். ஆனால் மக்கள் ஏன் ஆங்கிலப் பள்ளிகளை விரும்புகிறார்கள் என்பதைப் பற்றிப் பேசாமல் மறுபடி ஒரு டாட்ஜ். ஆங்கிலம் தேவையே இல்லை என்றால், ஏன் ஆங்கில மீடியத்தில் பாடம் சொல்லித்தரும் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு வேண்டும் என்று வற்புறுத்தல்?

3. அரசுப் பள்ளிகளில் கட்டுமானம் மோசமாக இருக்கிறது. டாய்லட் வசதி சரியில்லை. வகுப்புகள் சரியில்லை. உட்கார பெஞ்சு இல்லை. கரும்பலகை பல்லிளிக்கிறது... ஆனால் தனியார் பள்ளிகள் உடனடியாகத் தங்களுடைய கட்டுமானத்தை உலகத் தரத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டுமாம்.

அரசுப் பள்ளிகள்மீது அரசு எக்கச்சக்கமாகச் செலவழிக்கும் பணம் எங்கே போகிறது? அதுபற்றி எந்த விவாதமும் இல்லை. ஆனால் தனியார் பள்ளிகள் மிக உயர்ந்த தரத்திலான கட்டுமானத்தை உடனே உருவாக்கவேண்டுமாம். ஆனால் தனியார் பள்ளிகளின் கட்டணம் கட்டுப்படுத்தப்பட வேண்டுமாம். இது எப்படி ஒரே நேரத்தில் சாத்தியம்?

4. அரசுப் பள்ளிகள்மீது அரசு மேற்கொண்டு செலவழித்து அவற்றை உயர்தரத்துக்குக் கொண்டுசெல்லாமல் தனியார் பள்ளிகளில் மேலே சொன்ன முறையில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு எதற்குப் பணம் செலவழிக்கவேண்டும் - என்று சிலர் கேட்பதை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முன்வைத்தார்.

உடனேயே, அந்த மாதிரிக் கேட்பவர்கள் எல்லாம் ஏழைகளுக்கு எதிரானவர்கள் என்ற கோஷத்தை கஜேந்திரபாபு எழுப்பினார். கல்வி உரிமைச் சட்ட மசோதாவின் ஆரம்பக் காலத்திலிருந்தே இப்படிச் சிலர் சொல்லிவருவதாகவும், அவர்களெல்லாம் ஏழை மக்கள் நல்ல கல்வியைப் பெற்றுவிடக்கூடாது என்பதில் குறியாக இருப்பவர்கள் என்றும் அவர் கருத்தை வைத்தார்.

5. இப்படி குலுக்கல் முறையில் சேர்க்கப்படும் மாணவர்கள் பிற மாணவர்களுடன் படிப்பில் சமமாக இருக்கமுடியுமா அல்லது மிகவும் திண்டாடுவார்களா என்பது அடுத்த கல்வி.

இதை மறுத்த கருணாகரன் சொன்னது: ‘மாணவர்கள் ஒன்றாம் வகுப்பில்தானே சேரப்போகிறார்கள்; பின் என்ன பிரச்னை?’

அதாவது மாணவர்கள் எல்லாம் வெறும் ஆசிரியர்களின் முயற்சியாலேயே அனைத்தையும் படித்துத் தெரிந்துகொள்கிறார்கள் என்பது இதன் உட்கருத்து. ஆனால் உண்மையில் நடப்பதே வேறு. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அவரவர் பெற்றோர்தான் அதிக அளவு படிப்பில் பங்களிக்கின்றனர். அப்படிச் செய்யமுடியாத பெற்றோர்களின் குழந்தைகள் நிஜமாகவே திணறுகின்றன. அவர்கள் ட்யூஷன் வகுப்புகளுக்குத் துரத்தப்படுகின்றனர். அங்கே சிலர் பிழைக்கின்றனர். எனவே ஆசிரியர்களை மட்டுமே நம்பி அனுப்பப்படும் பிள்ளைகள் வகுப்பில் பெரும்பாலும் பின்தங்கியவர்களாகவே இருப்பார்கள். சென்சிடிவிடி இல்லாத ஆசிரியர்கள் இந்தப் பிள்ளைகளை அசிங்கமாகத் திட்டிப் பேசுவார்கள். அவர்கள் செய்வது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஆனால் இவையெல்லாம் நடக்கப்போகின்றன. இவற்றை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்?

6. குலுக்கலுக்கு யார் தகுதியானவர்? பொருளாதாரரீதியிலா அல்லது இங்கு சாதிரீதியான இட ஒதுக்கீடு உண்டா?

தமிழகத்தில் எது நடந்தாலும் அடிப்படையில் சாதிரீதியிலான இட ஒதுக்கீடு இருந்தே ஆகவேண்டும். எனவே இங்கும். ஆனால் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளில் இவை தெளிவாக இல்லை என்றார் ஒருவர். இல்லையில்லை, மிகத் தெளிவாக இருக்கிறது என்றார் இன்னொருவர்.

(அப்படியானால் நிச்சயம் தெளிவாக இல்லை என்றே எடுத்துக்கொள்ளவேண்டும்!)

(தொடரும்)

கல்வி உரிமை என்ற பெயரால் - 1

நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ‘நேர்படப் பேசு’ நிகழ்ச்சியில் Right To Education சட்டத்தின் விதிகளை தமிழக அரசு, அரசிதழில் (கெஜட்) வெளியிட்டது தொடர்பான ஒரு விவாதம் நடைபெற்றது. பிரின்ஸ் கஜேந்திரபாபு, கருணாகரன், விஜயன் ஆகியோர் பங்குபெற்றனர். இதில் பிரின்ஸ் கஜேந்திரபாபு ‘கல்வி ஆலோசகர்’ என்ற பெயரில் அறியப்படுபவர். பொதுவாக இவர் பங்கெடுத்துள்ள அனைத்துத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தனியார் கல்வி நிலையங்களுக்கு எதிரான ஒரு நிலையை எடுப்பவர். கருணாகரன் - எனக்குப் பரிச்சயம் இல்லாதவர். இடதுசாரிப் பார்வை கொண்டவராகத் தெரிந்தார். விஜயன் என்பவர் தனியார் பள்ளிகளின் ஏதோ ஓர் அமைப்பின் நிர்வாகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். எனவே இவரே ஒரு தனியார் பள்ளியை நடத்துபவர் என்று நினைக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியைப் பற்றிய விமரிசனம் என்பதைக் காட்டிலும் இந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு சில விஷயங்களை ஆராய முற்படுகிறேன்.

அதற்குமுன், இந்தச் சட்டம் மக்களுக்கு என்ன உரிமையைத் தர முற்படுகிறது என்று மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்.

இந்தச் சட்டம் தனியார் பள்ளிக்கூடங்களைக் கட்டுப்படுத்துகிறது. மக்களுக்கு, குறிப்பாக, ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சில உரிமைகளைக் கொடுக்கிறது. இனிமேல் தனியார் பள்ளிகள், ஒன்றாம் வகுப்பில் தாம் உள்ளே எடுத்துக்கொள்ளும் எண்ணிக்கையில் 25%-ஐ ஒதுக்கீடு செய்யவேண்டும். இந்த 25% இடங்களில் அந்தப் பள்ளியின் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏழை/பிற்படுத்தப்பட்ட மக்கள் லாட்டரி முறையில் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும். ஒவ்வொரு தனியார் பள்ளியும் கட்டாயமாக இதனைச் செய்தாகவேண்டும். அத்துடன் ஒவ்வொரு தனியார் பள்ளியும் தம் உள்கட்டுமானத்தை ஒரு குறிப்பிட்ட தரத்துக்கு உயர்த்தவேண்டும். அப்பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரும் குறைந்தபட்சம் ஆசிரியப் பயிற்சிச் சான்றிதழ், பி.எட் அல்லது இணையான படிப்பைப் படித்திருக்கவேண்டும். அத்துடன் CTET அல்லது TNTET போன்ற மத்திய/மாநில தகுதித் தேர்வு ஒன்றை எழுதி 50%-க்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றுத் தேறியிருக்கவேண்டும்.

இதுதான் சாரம் என்று வைத்துக்கொள்வோம். இதற்குமேல், தமிழக அரசின் சட்டங்களான சமச்சீர் கல்விச் சட்டம், கட்டண நிர்ணயச் சட்டம் போன்றவையும் பொருந்தும்.

எந்தப் பள்ளியைத் தேர்ந்தெடுப்பது என்ற உரிமை மாணவருக்கு (எனவே பெற்றோருக்கு) உண்டு. குலுக்கலில் அவர் பெயர் பதிவாகிவிடும். ஒரு பள்ளி ஒதுக்கியுள்ள இடங்கள் 10 என்றால், 10-க்கும் மேற்பட்டோர் இந்தக் குலுக்கல் முறையில் அந்தப் பள்ளியில் சேர விருப்பம் தெரிவித்திருந்தால், குலுக்கலில் முதலில் வரும் 10 பேர்கள் மட்டுமே அந்தப் பள்ளிக்கு அனுப்பப்படுவார்கள். மீதிப் பேர் வழக்கம்போல காசு கொடுத்துத் தனியார் பள்ளிகளில் அல்லது காசு கொடுக்காமல் அரசுப் பள்ளியில் சேரவேண்டியதுதான்.

(தொடரும்)

Thursday, November 17, 2011

கேப்டன் கோபிநாத்தின் - வானமே எல்லை - புத்தக வெளியீடு

நேற்று மாலை, ஸ்பென்ஸர் பிளாசா லாண்ட்மார்க் புத்தகக் கடையில் கேப்டன் கோபிநாத்தின் 'Simply Fly' என்ற புத்தகத்தின் தமிழாக்கம் “வானமே எல்லை” வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் முழு வீடியோ கீழே:

புத்தகத்தை வாங்க 


Wednesday, November 16, 2011

பெங்களூரு புத்தகக் கண்காட்சி: 18-27 நவம்பர் 2011

இந்த ஆண்டு பெங்களூரு புத்தகக் கண்காட்சி, 18 நவம்பர் முதல் 27 நவம்பர் வரை நடக்கிறது. கிழக்கு பதிப்பகம் இதில் கலந்துகொள்கிறது.

கடை எண்கள்: 124, 125, 126

இடம்:

பேலஸ் மைதானம்
காயத்ரி விஹார் (மேக்ரி சர்க்கிள் அருகில்)
பெல்லாரி ரோடு
பெங்களூரு

தொடர்புக்கு:

காளிபாண்டியன், 95000-45608


முன்பதிவு:

சாரு நிவேதிதாவின் ‘எக்ஸைல் ’ நாவலுக்கு முன்பதிவு செய்துகொள்ள இங்கே பணம் செலுத்தலாம். புத்தகம் வெளியாகும் அன்று உங்களுக்குத் தபாலில் கிடைக்கும்.

ஹெலிகாப்டரில் பிறந்தநாள் - கேப்டன் கோபிநாத்

[இன்று வெளியாக இருக்கும் கேப்டன் கோபிநாத்தின் ‘வானமே எல்லை’ புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி - சுருக்கப்பட்டது. புத்தக வெளியீடு நிகழ்ச்சி ஸ்பென்சர் பிளாஸா லாண்ட்மார்க் புத்தகக் கடையில் புதன்கிழமை, 16-11-2011 அன்று, மாலை 6.30 மணிக்கு நடக்கும். அனைவரும் வருக.]

எனக்கு வரும் எல்லாத் தொலைபேசி அழைப்புகளையும் நான் பெரிதும் மதிப்பேன். புதிய அழைப்பு என்றால், புதிய மனிதருடனான அறிமுகம் என்று அர்த்தம். ஒருநாள் காவ்யா என்ற இளம் பெண் தொலைபேசியில் பேசினார். ஹெலிகாப்டருக்கு வாடகை எவ்வளவு என்று கேட்டார். பறக்கும் நேரத்தையும் காத்திருக்கும் நேரத்தையும் பொருத்தது என்றேன். சுமார் மூன்று மணி நேரப் பயணம் என்றால் ஒரு லட்சத்திலிருந்து ஒன்றரை லட்சம் ஆகும் என்று சொன்னேன். அதைக் கேட்டதும் அவருடைய குரலில் ஒரு சோகம் கவ்வியதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

மிகவும் தயக்கத்துடன், அரை மணி நேரத்துக்குக் கிடைக்காதா என்று கேட்டார். அரை மணி நேரத்துக்கு என்றாலும் முழு நாளையும் அதற்கென ஒதுக்கத்தான் வேண்டியிருக்கும். சரி எங்கு போகவேண்டும் என்று கேட்டேன். கூர்க் என்றார். அப்படியானால், கூர்குக்குப் போக வரும் செலவையும் அவரே கொடுக்க வேண்டியிருக்குமே என்றேன். அந்தப் பெண்ணுக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது.

அந்தப் பெண்ணைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது. அவர் படிக்கிறாரா? எங்காவது வேலை பார்க்கிறாரா? எதற்காக ஹெலிகாப்டர் தேவைப்படுகிறது? அந்தப் பணத்தை எப்படிக் கொடுப்பார்? அந்தப் பெண் சொன்ன கதையைக் கேட்டதும் நெகிழ்ந்து போய்விட்டேன். அந்தப் பெண், தன் அப்பாவின் அறுபதாவது பிறந்த நாளுக்கு அவருக்கு ஓர் இன்ப அதிர்ச்சி தர விரும்புகிறாராம். ஹெலிகாப்டரில் அப்பாவைப் பறக்கவைக்க விரும்புகிறாராம்.

காவ்யா சிறு பெண்ணாக இருந்தபோது ஒரு நாள் அவருடைய அப்பா மிகவும் உற்சாகத்துடன் வீட்டுக்கு வந்தாராம். என்ன விஷயம் என்று கேட்டபோது, நான் இன்று ஹெலிகாப்டரில் வந்தேனே என்று குழந்தைபோல் குதூகலித்தாராம். என்ன விஷயம் என்றால், அவரும் முதலமைச்சர் குண்டு ராவும் நண்பர்களாம். எதேச்சையாக இருவரும் சந்தித்திருக்கிறார்கள். அவர் தன் ஹெலிகாப்டரில் காவ்யாவின் அப்பாவை அழைத்துவந்திருக்கிறார். அதைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்த காவ்யாவின் அப்பா சிறிது நேரம் கழித்து ஏக்கப் பெருமூச்சுடன் சொல்லியிருக்கிறார்: ‘இது என் முதல் ஹெலிகாப்டர் பயணம் மட்டுமல்ல. இதுவே கடைசியாகவும் இருக்கும்.’

அப்பா அப்படிச் சொன்னது காவ்யாவின் மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அன்றே தன் அப்பாவை எப்படியாவது மறுபடியும் ஹெலிகாப்டரில் பறக்க வைக்கவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார். அன்று தொடங்கி, தனக்குக் கிடைக்கும் காசு அனைத்தையும் சேமித்து வந்திருக்கிறார். இப்போது அவருடைய அப்பாவுக்கு அறுபதாவது வயது நெருங்கிவிட்டிருக்கிறது. பிறந்த நாள் பரிசாக ஹெலிகாப்டர் பயணத்தை ஏற்பாடு செய்யத்தான் என்னிடம் வந்திருக்கிறார்.

அந்தப் பெண்ணுக்கு எப்படியும் உதவ வேண்டும் என்று தீர்மானித்தேன். கூர்கில் மடிகேரி என்ற ஊரில் அவர்கள் வசித்துவந்தார்கள். மடிகேரிக்கு ஹெலிகாப்டரைக் கொண்டுபோய் அப்பாவை அசத்தவேண்டும்; அங்கிருந்து அவரை பெங்களூருக்கு ஹெலிகாப்டரில் பறக்க வைக்கவேண்டும் என்பதுதான் அந்தப் பெண்ணின் ஆசை. ஒரு மணி நேரப் பயணத்துக்கு எவ்வளவு வாடகை என்பதைச் சொன்னேன். பயண நேரம் எவ்வளவு என்பதையும் சொன்னேன்.

‘ஒன்று, அவரை பெங்களூருக்குக் கொண்டுவரலாம். அல்லது வெறுமனே பத்து இருபது நிமிடங்கள் வானில் பறக்க வைக்கலாம். எது என்பதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள். மொத்த வாடகையில் ஐம்பது சதவிகிதம் தள்ளுபடி தருகிறேன்’ என்று சொன்னேன். நான் சொன்ன தொகை அவரைப் பொருத்தவரை அப்போதும் மிகவும் அதிகமாக இருந்திருக்கிறது. இருந்தும் உறுதியாக, ‘இன்னும் ஒரு வருடத்துக்குள் அந்தப் பணத்தை எப்படியும் சேமித்துவிடுவேன். அதன் பிறகு உங்களை வந்து பார்க்கிறேன்’ என்று சொன்னார். அதன் பிறகு வேறு வேலைகளில் ஈடுபடலானேன். அவரை மறந்தேவிட்டேன்.

சிறிது காலம் கழித்து திடீரென்று ஒரு பெண்ணிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. என்னைத் தெரிகிறதா என்று கேட்டார். முதலில், எனக்கு யார் என்று தெரியவில்லை. ‘நான்தான் காவ்யா! என் அப்பாவுக்காக ஹெலிகாப்டர் வேண்டும் என்று கேட்டிருந்தேனே?’ என்று நினைவுபடுத்தினார்.

நாங்கள் பேசிப் பல மாதங்கள் ஆகிவிட்டிருந்தன. காவ்யாவுக்குத் திருமணம் ஆகிவிட்டிருந்தது. அவருடைய கணவரும் மாமனாரின் ஆசையை நிறைவேற்றித் தர முன்வந்திருந்தார். காவ்யாவிடம் சொன்னேன்: ‘இதோ பார். மடிகேரிக்கு ஹெலிகாப்டரில் போய் இறங்கிக்கொள். வாருங்கள், சும்மா வெளியே போய்விட்டு வருவோம் என்று உன் அப்பாவை வாசலுக்கு அழைத்து வா. காரிலோ அல்லது ஆட்டோவிலோ எங்கோ போகக் கூப்பிடுகிறாள் என்று நினைத்து வருவார். வாசலில் இருக்கும் ஹெலிகாப்டரைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சியில் மூழ்குவார். எங்களுடைய சிறிய பரிசாக உங்களை காவிரி ஆற்றின் மேலாகப் பறக்கவைக்கிறோம்’ என்று சொன்னேன்.

காவ்யாவுக்கு அந்த யோசனை பிடித்திருந்தது.

காவ்யாவின் அம்மாவிடமும் சகோதரியிடமும் இந்தத் திட்டத்தைச் சொல்லி ரகசியமாக வைத்துக்கொள்ளச் சொன்னோம். அவர்களும் பயண ஏற்பாடுகளை அப்பாவுக்குத் தெரியாமல் செய்தனர். காவ்யாவும் அவருடைய கணவரும் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் மடிகேரிக்குப் போய் நின்றார்கள். அப்பாவை வாசலுக்கு அழைத்து வந்தார்கள். வாசலில் நிற்கும் ஹெலிகாப்டரைப் பார்த்ததும் கிட்டத்தட்ட அவருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டது என்று சிரித்தபடியே பின்னர் சொன்னார் காவ்யா. நடு வானில் கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். காவிரி மேலாகப் பறந்தார்கள்.

கூர்கில் இருப்பவர்களுக்கு காவிரி ஒரு புனித நதி. அதை வலம் வந்து அந்தப் பிறந்த நாளைக் கொண்டாடினார்கள். யாருமே வாழ்வில் அப்படி ஒரு பிறந்த நாளைக் கொண்டாடியிருக்க முடியாது. நாங்கள் வெறும் ஒரு ஹெலிகாப்டர் கம்பெனி நடத்தவில்லை என்ற மன நிறைவு அடைந்த தருணங்களில் அதுவும் ஒன்று.

புத்தகத்தை வாங்க

Tuesday, November 15, 2011

பங்களாதேசப் போர் - கேப்டன் கோபிநாத்

[நாளை வெளியாக இருக்கும் கேப்டன் கோபிநாத்தின் ‘வானமே எல்லை’ புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி - சுருக்கப்பட்டது. புத்தக வெளியீடு நிகழ்ச்சி ஸ்பென்சர் பிளாஸா லாண்ட்மார்க் புத்தகக் கடையில் புதன்கிழமை, 16-11-2011 அன்று, மாலை 6.30 மணிக்கு நடக்கும். அனைவரும் வருக.]

1971 செப்டெம்பர்-அக்டோபரில் ஆர்ட்டிலரி பள்ளியில் நான் இருந்தபோது பங்களாதேச விடுதலைப் போராட்டம் ஆரம்பித்தது. பயிற்சி பாதியில் நிறுத்தப்பட்டு சிக்கிம் மாநிலத்துக்கு அனுப்பப்பட்டேன்.

தேவ்லாலியில் இருந்து பாக்தோக்ராவுக்கு ரயிலில் போனேன். பிறகு அங்கிருந்து காங்டாக்குக்கு ஜீப்பில் போனேன். முதலில் சீன எல்லையில் எங்கள் படை முகாம் இட்டிருந்தது. பிறகு அங்கிருந்து காங்டாக்குக்கு இடம் மாறியிருந்தது. போருக்குத் தயாராகும்படி உத்தரவுகள் தரப்பட்டன. எங்கும் ஒரே பதட்டம், பரபரப்பு.

உண்மையில் கிழக்கு பாகிஸ்தானில் அப்போது நடந்தது ஓர் உள்நாட்டுப் போர்தான். பாகிஸ்தான் ராணுவம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையால் ஏராளமான அப்பாவிகள் இந்தியாவுக்கு அகதிகளாக வந்து குவிந்தனர். சுமார் ஒரு கோடி பேர் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் குடியேறினர். இந்திய ராணுவமும் பாகிஸ்தான் ராணுவத்தை அகற்றுவதற்கு, முக்தி வாஹினி என்ற அமைப்புக்கு தேவையான ராணுவப் பயிற்சியைத் தந்துவந்தது.

முதல் கட்டத் தாக்குதலுக்குப் பிறகு நம் படைகள் மின்னல்போல் ஊடுருவின. எதிரிகள் சுதாரிக்க நேரம் கொடுக்கக்கூடாது என்பதே எங்களுடைய இலக்கு.

கிழக்கு பாகிஸ்தானின் ஆறுகள், நீரோடைகள்மீது கட்டப்பட்டிருக்கும் பாலங்களைத் தகர்ப்பதன் மூலம் எதிரிகளுக்குப் பொருட்கள் கிடைப்பதைத் தடுப்பதே எங்கள் நோக்கம். இதன்மூலம் பாகிஸ்தானிய படைப்பிரிவு ஒவ்வொன்றும் தனிமைப்படுத்தப்பட்டது. முதலில் தீவிரமாகத் தாக்கியவர்கள், விரைவிலேயே தப்பி ஓடவேண்டிய நிலை வந்துவிட்டது. அவர்களுடைய தோல்விக்கு முக்கியக் காரணம் தார்மிக வலிமை இல்லாது போனதுதான். உள்ளூர் மக்களிடமிருந்து அவர்களுக்குத் துளிக்கூட ஆதரவில்லை. ஆனால், நம் ராணுவத்துக்கோ, கிழக்கு பாகிஸ்தான் மக்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.

நான் பீரங்கிப் பிரிவில் இருந்தேன். இரவும் பகலும் விடாமல் சுட்டபடி முன்னேறிக்கொண்டிருந்தோம். ஒரே ஒரு முறை எதிரியை வெகு அருகில் சந்திக்க வேண்டிவந்தது. பாகிஸ்தான் படையினர் நாங்கள் இருந்த பகுதிக்குள் ஊடுருவியிருக்கும் தகவலை எங்கள் கமாண்டர் மேஜர் பாக்கர் சிங் சொன்னார். என் படைப்பிரிவுதான் எளிதில் தாக்குதலுக்கு ஆளாகும் நிலையில் இருந்தது. சிறிது காலத்துக்கு முன்புதான் பாகிஸ்தானிய வீரர்கள் நிறையக் கண்ணிவெடிகளை வழியில் பதித்து வைத்திருந்தனர். நம் வீரர்கள் சிலர் அதில் மாட்டி இறந்திருந்தனர். ஆயுதங்களும் சிதைந்துபோயிருந்தன.

அக்டோபர் மாதவாக்கில் கிழக்கு பாகிஸ்தானுக்குள் நுழைந்தோம். பிரதான போர் இரண்டு வாரங்கள் மட்டுமே நீடித்தது. பாகிஸ்தானின் முக்கியப் படையைச் சுற்றி வளைத்தோம். ஜெனரல் மானேக்‌ஷா, பாகிஸ்தான் வீரர்களுடன் ரேடியோவில் பேசினார். அவர்களைச் சரணடைய வற்புறுத்தினார்.

பாகிஸ்தான் ராணுவம் எல்லாப் பக்கங்களிலும் வளைக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய மன தைரியம் முற்றாகக் குலைந்துபோயிருந்தது. நாங்கள் மட்டும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டிருந்தால் நவீன வரலாற்றிலேயே மிக மோசமான ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியிருக்கும்.

சரணடையும் படலம் வந்தது. திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிபோல் அது இருந்தது. கிழக்கு பாகிஸ்தானில் இருந்த பாகிஸ்தானின் ராணுவ கமாண்டர், தன் படைகளுடன் பொது நிகழ்ச்சி ஒன்றில் சரணடைய வைக்கப்பட்டார். அவர்கள் வசம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சரணடைந்த வீரர்களை இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்த போர்க் கைதிகள் முகாம்களுக்கு அனுப்பினோம். உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய சரணடைவு நிகழ்ச்சி அது. சுமார் ஒரு லட்சம் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தார்கள்.

பங்களாதேசம் என்று பெயர் மாற்றம் பெற்ற அந்த நாட்டிலிருந்து அதன் பிறகு நாங்கள் வெளியேறினோம். என்னுடைய படைப் பிரிவு சிக்கிமுக்குப் போனது. தினஜ்பூர், ரங்பூர் வழியாக சிக்கிம் வரையிலான பாதையில் மக்கள் எங்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். ‘இந்திரா காந்தி வாழ்க! இந்திய ராணுவம் வாழ்க! மானேக்‌ஷா வாழ்க!’ என்று மக்கள் தெருக்களில் இறங்கி உற்சாகத்துடன் கோஷங்கள் போட்டார்கள்.

நகரங்கள், ஊர்கள், ஏன் சிறு கிராமங்களில்கூட சுதந்தரத்தை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். விவசாயிகள், சாதாரண மக்கள், கல்லூரிப் பெண்கள், குழந்தைகள் என எல்லாரும் மாலை மரியாதையுடன் எங்களை வரவேற்றனர். நட்பின் அடையாளமாக எங்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.

புத்தகத்தை வாங்க

Monday, November 14, 2011

ஜாஃபர்கான்பேட்டை மாணவர்களுடன் சந்திப்பு

இன்று குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு சென்னை பள்ளிகள் என்று இப்போது அழைக்கப்படும் மாநகராட்சிப் பள்ளிகள் அனைத்திலும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அதில் ஜாஃபர்கான்பேட்டை பள்ளிக்கு நான் சென்றிருந்தேன். சியோசா (CIOSA) அமைப்பின் பிரசன்னாவும் ‘நம்ம சென்னை’ (முன்னாள் காலச்சுவடு) அரவிந்தனும் அழைத்ததன்பேரில் அங்கு சென்றிருந்தேன். ஜெயா டிவியின் ஆசிரியர் குழுவில் இருக்கும் சிவலிங்கமும் அங்கே இருந்தார். இவருக்கு இந்தப் பள்ளியுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதை அவர் பேசும்போது அறிந்துகொண்டேன். பள்ளியின் தலைமையாசிரியர் முனியன், பிற ஆசிரியர்கள் அன்புடன் வரவேற்றனர்.

நான் செல்லும்போது ஒரு மாணவி ஜவாஹர்லால் நேருவின் வாழ்க்கையை விவரித்துக்கொண்டிருந்தார். பின்னர் சிவலிங்கம் பேசினார். தொடர்ந்து நானும் பேசினேன். இடையே பள்ளியின் தலைமையாசிரியரும் பேசினார். வீடியோ கீழே:
சென்னை பள்ளி மாணவர்கள் சந்திக்கும் சவால்கள், பிற ஆங்கில மீடிய, தனியார் பள்ளிகளின் மாணவர்கள் சந்திக்கும் சவால்களிலிருந்து முற்றிலும் வேறானவை. குடும்பச் சூழல், பெற்றோர்களின் படிப்பு, பெற்றோர்கள் வீட்டுக்குக் கொண்டுவரும் வருமானம், வாழிடத்தில் உள்ள வசதிகள் ஆகிய அனைத்துக் குறைபாடுகளையும் மீறி, நன்கு படித்து, நல்ல மதிப்பெண் பெற்று, நல்ல பழக்கங்களுடன் வெளியேறி, நல்ல வேலையைப் பெற்று, நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டிய நிலையில் அம்மாணவர்கள் உள்ளனர். சிறிது சறுக்கினாலும் சிஸ்டம் அவர்களை வெளியே தள்ளவே முயல்கிறது. இவற்றையெல்லாம் மீறி, மாரிச்செல்வம்போல இந்த மாணவர்கள் சாதனை செய்யவேண்டும்.

இதற்கு நாம் எவ்வகையில் பங்களிக்கலாம் என்பதுதான் நம்முன் இருக்கும் கேள்வியே.

ஏர் டெக்கான் கேப்டன் கோபிநாத்தின் புத்தக வெளியீடு

கேப்டன் கோபிநாத் ஆங்கிலத்தில் எழுதி வெளியான சுயசரிதை நூல் Simply Fly.

கிழக்கு பதிப்பகம் இந்நூலின் தமிழாக்கத்தை வெளியிடுகிறது, வானமே எல்லை என்ற தலைப்பில். இந்தப் புத்தகம் தயாராகிச் சில மாதங்கள் ஆகியிருந்தாலும், கோபிநாத்தே புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்பதால் புத்தகத்தை அச்சிடாது இருந்தோம். வரும் புதன் கிழமை, சென்னை ஸ்பென்சர் பிளாஸாவில்,  மாலை 6.30 மணிக்கு, கேப்டன் கோபிநாத் முன்னிலையில் யுனிவெர்செல் செல்பேசி விற்பனைச் சங்கிலி உரிமையாளர் சதீஷ் பாபு புத்தகத்தை வெளியிட, ட்ரைஜின் டெக்னாலஜிஸ் ல்மிடெட் நிறுவனத்தில் சேர்மன் ஆர். கணபதி புத்தகத்தைப் பெற்றுக்கொள்கிறார். அவர்கள் இருவரும் பேசுவார்கள். அதன்பின் கேப்டன் கோபிநாத்தும் தன் வாழ்க்கைப் பயணம் பற்றிப் பேசுவார்.

கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை மிக சுவாரசியமானது. நாளையும் மறுநாளும் அவரது புத்தகத்திலிருந்து சில பகுதிகளை எடுத்து என் பதிவில் போடுகிறேன். (புத்தகத்தை வாங்க...)


*** ஏர் டெக்கான்-தான் இந்தியாவின் முதல் மலிவுக் கட்டண விமானச் சேவை நிறுவனம். விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் நிறுவனம் ஏர் டெக்கானை வாங்கி, அதனை கிங்ஃபிஷர் ரெட் என்று பெயர் மாற்றி, சமீபத்தில் இழுத்து மூடிவிட்டது. இப்போது மல்லையாவின் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமே, தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அரசின் நிதியுதவி தேடிச் சென்றுள்ளது.

*** கோபிநாத்தின் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான டெக்கான் 360 (http://deccan360.in/) என்பதும் நிதி நெருக்கடியில் உள்ளது.

Sunday, November 13, 2011

ரஜினியின் பன்ச் தந்திரம் - ராஜ் டிவியில்

இன்றுமுதல் ரஜினியின் பன்ச் வசனங்கள் - தொழிலுக்கு வாழ்க்கைக்கும் - ராஜ் டிவியில் தொடராக ஆரம்பிக்கிறது. முதல் மூன்று எபிசோட் ஞாயிறு காலை 12 மணிக்குத் தொடங்கி வெளியாகும். இந்த கர்ட்டன் ரெய்சருக்கு அடுத்து ஷோ ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை அன்று வெளியாகும் என்று அறிகிறேன். இந்த நிகழ்ச்சி, பி.சி.பாலசுப்ரமணியன், ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் எழுதி கிழக்கு பதிப்பகம் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ள புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. (புத்தகத்தை வாங்க: தமிழில் | ஆங்கிலத்தில்)


‘நம்ம கிராமம்’ - இணையத்தளங்களுக்கான போட்டி

நேற்று மதியம் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். பேராசிரியர் அஷோக் ஜுன்ஜுன்வாலாவின் RTBI (Rural Technology and Business Incubator) என்ற குழுவின்கீழ், இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் தனக்கென ஒரு இணையத்தளத்தை நடத்துமாறு எப்படித் தூண்டலாம் என்பது தொடர்பான ஒரு முயற்சி இது.

இந்தியாவில் சுமார் 6.5 லட்சம் கிராமங்கள் உள்ளன. இவற்றில் சிலவற்றில் மிகக் குறைவாக 500 மக்களே வசிக்கின்றனர். சிலவற்றில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வசதிகளில் நிறைய வேறுபாடுகள். எனவே முதல் முயற்சியாக, ஒரு முன்னோடித் திட்டமாக தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தை எடுத்துக்கொண்டு, அங்கு குறைந்தது 50 கிராமங்களுக்கு, அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டு இணையத்தளம் உருவாக்கும் போட்டி ஒன்றை நடத்துவது என்று முடிவு செய்தனர்.

ஆர்.டி.பி.ஐ குழுவினர், இந்தப் பகுதியில் உள்ள பொறியியல் அல்லது கலை/அறிவியல் கல்லூரிகள் பலவற்றையும் தொடர்புகொண்டு இந்தப் போட்டி பற்றி விளக்கியுள்ளனர். அதையடுத்து 55 குழுக்கள் உருவாகின. ஒரு குழுவில் 3 பேர். இதில் ஒருவராவது அவர்கள் எந்த கிராமத்துக்காக இணையத்தளத்தை உருவாக்குகிறார்களோ அந்த கிராமத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும்.

அதையடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் ஜூம்லா CMS-ல் எப்படி ஓர் இணையத்தளத்தை உருவாக்குவது என்று பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான கலை/அறிவியல் கல்லூரி மாணவர்கள் கணினியைப் பயன்படுத்துவதில் புதியவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பொறியியல் கல்லூரிகளில்கூட மிகப் பெரிய வசதிகள் இருப்பதாகச் சொல்லிவிட முடியாது.

இப்படி உருவாக்கப்பட்ட 55 தளங்களையும் பரிசீலித்து டிசைன், அதில் உள்ள தகவல்கள், கூகிள் வரைபடத்தில் அவர்கள் ஏற்றியிருக்கும் இடம் சார்ந்த தகவல்கள், படங்கள் போன்றவற்றின் அடிப்படையில் 10 தளங்களைத் தேர்ந்தெடுக்கவேண்டியது நீதிபதிகளான எங்கள் பொறுப்பு. இந்தக் குழுவில் ஐஐடி மெட்ராஸ் எலெக்ட்ரிகல், கம்ப்யூட்டர் சயன்ஸ் பேராசிரியர்கள் சிலர், தொழில்துறையிலிருந்து சிலர், ஐஐடி மாணவர் ஒருவர் (கல் செக்) என்று இருந்தோம்.

இந்தத் தளங்கள் யாவுமே இப்போது பொதுவெளியில் கிடையாது. இவை அனைத்துமே ஐஐடி மெட்ராஸ் இண்ட்ரானெட்டில் மட்டுமே உள்ளவை. முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 10 தளங்களுக்கும் மேலும் ஒரு மாதம் அவகாசம் உள்ளது. அந்த நேரத்தில் இவர்கள் தத்தம் தளங்களை மேலும் சீரமைக்கலாம். அடுத்த மாதம் இந்தக் குழுவினர் அனைவரும் தத்தம் தளங்களை முன்வைத்து ஒரு பிரசெண்டேஷன் செய்யவேண்டும். அதில் வெற்றிபெறுவோருக்கு பணப் பரிசு உண்டு.

அந்தக் கட்டத்துக்குப் பிறகு இந்தத் தளங்கள் பொதுப் பார்வைக்குக் கொண்டுவரப்படும் என்று நினைக்கிறேன்.

ஆனால் அத்துடன் இந்தத் திட்டம் நின்றுவிட்டால் யாருக்கும் உபயோகமில்லை. ஒரு தளம் தினம் தினம் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். இந்தத் தளங்களுக்கு யார் உரிமையாளர்? இந்தத் தளத்தில் சர்ச்சைக்குரிய தகவல் இடம் பெற்றால் என்ன ஆகும்? உள்ளூர்ப் பிரச்னைகள் எந்த ரூபத்தில் வெளியே தரப்படும்? சர்ச்சைகள் தாண்டி, இந்தத் தளத்தின்மூலம் இந்த கிராமத்தின் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்? பிறருக்கு என்ன பயன்? இந்தத் தளங்களை வடிவமைத்து உருவாக்கிய கல்லூரி மாணவர்கள் படித்துப் பட்டம் பெற்று வேலை தேடி வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டால் யார் மேற்கொண்டு இதனைப் பராமரிப்பது?

இணையத்தளமா, விக்கியா? கிராமத் தளம் என்பதற்கு எது சரியான தொழில்நுட்பம்? இணையப் பெருவெளியில் இவை துண்டு துண்டாக எங்கோ சிதறியிருக்கவேண்டுமா அல்லது ஏதேனும் ஒரு குடையின்கீழ் இருக்கவேண்டுமா? எந்த அளவுக்கான சுதந்தரத்துடன் இவை இயங்கவேண்டும்? (அதாவது பல்வேறு அரசு அமைப்புகள் இவற்றைக் கைப்பற்ற முயற்சி செய்யுமா? இதில் அரசியல் தலையீடுகள் எப்படி இருக்கும்?) இந்தத் தளங்கள் உள்ளூர் சண்டியர்களை உயர்த்திக் காட்டவென்று கைப்பற்றப்பட்டுவிடுமா?

ஒரு கிராமத்துக்கு ஒரு தளம்தான் இருக்கவேண்டும் என்றில்லை! ஆனால் ஒரு தளமாவது இருக்கவேண்டும். நாங்கள் பார்த்த சில தளங்களை மாணவர்கள் மிக நன்றாகச் செய்திருந்தனர் என்றாலும் பல குறைகள் இல்லாமல் இல்லை. தேர்வு செய்யப்பட்ட தளங்கள் அனைத்துமே தமிழ்/ஆங்கிலம் என்று இரு மொழிகளிலும் இருந்தது நல்ல செய்தி. ஆனால் தமிழ்/ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுத்தின் தரம் குறைவாக இருந்தது. எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் மலிந்திருந்தன. இதுவும் புரிந்துகொள்ளக்கூடியதே. இன்றைய கல்விமுறைமீதான விமரிசனம்தான் இது. கதை சொல்லும் திறனிலும் முன்னேற்றம் தேவை. அழகான வடிவமைப்பு என்பதில் மேலும் தேர்ச்சி தேவை. ஆனால் இதில் பெரும்பாலானோர் முதன்முதலாகக் கணினியைப் பயன்படுத்துபவர்கள் என்பதைக் கவனிக்கவேண்டும். இணையம், மின் வசதி ஆகியவையே மிகவும் சிக்கலான நிலையில்தான் கிராமங்களில் உள்ளன. போட்டி என்ற உந்துதலே இவர்கள் அனைவரையும் மிகுந்த பிரயாசையுடன் இதில் ஈடுபடச் செய்துள்ளது. இடையில் கல்லூரிப் பரீட்சையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி இந்தத் தளங்களுக்குப் பெரும் தேவை இருக்கின்றன என்று சொல்லலாம். மதுரை சமூக அறிவியல் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ரங்கசாமி இதுபற்றிப் பேசிக்கொண்டே இருப்பார். அதனால்தான் என் ட்விட்டர் தகவலைப் பார்த்ததும், இது தொடர்பாக மேலும் விவரங்கள் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார். அடுத்த மாத நிகழ்ச்சிக்கு அவரை அழைக்குமாறு ஆர்.டி.பி.ஐ-க்குப் பரிந்துரைக்கிறேன்.

சாரு நிவேதிதாவின் நாவல் - எக்ஸைல்

சாரு நிவேதிதாவின் நாவல் ‘எக்ஸைல்’ கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளிவருகிறது.


புத்தகத்தை முன்பதிவு செய்ய: https://www.nhm.in/shop/978-81-8493-204-1.html

Friday, November 11, 2011

உத்தப்புரம் கோவில் நுழைவு: மகிழ்ச்சியும் அதிர்ச்சியும்

இன்று காலை தி ஹிந்து செய்தித்தாளில் பார்த்த ஒரு செய்தி மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன் அதிர்ச்சியையும் அளித்தது. செய்தியைவிட இரண்டு படங்கள் கதையைத் தெளிவாகச் சொல்கின்றன.

உத்தப்புரம் கிராமத்தில் தலித்துகள் தங்கள் பகுதிகளுக்குள் நுழையக்கூடாது என்பதற்காக ஒரு சுவரையே எழுப்பியிருந்தனர் ஆதிக்க சாதியினர். கம்யூனிஸ்டுகள் முன்னின்று நடத்திய பலத்த போராட்டங்களுக்குப் பின், நிர்வாகம் தலையிட்டு அந்தச் சுவரை உடைத்துத் தள்ளியது. இப்போது அதே கிராமத்தில் முத்தாலம்மன் கோவிலில் தலித்துகள் நுழைந்து வழிபாடு நடத்தியுள்ளனர். அப்படி உள்ளே நுழைந்த தலித்துக் குடும்பங்களின் முகத்தில் தென்பட்ட மகிழ்ச்சிதான் முதல் படம்.


அதே செய்தியில் தென்பட்ட அடுத்த படம்தான் அதிர்ச்சியைக் காண்பிக்கிறது. ஆதிக்க சாதி மக்களின் முகத்தில் தென்படும் அதிர்ச்சி, பதட்டம் இரண்டையும் அந்தப் படம் பயங்கரமாகக் காட்டுகிறது.

இந்த நிலையில் அந்த கிராமத்தில் தலித்துகளின் நிலை எப்படி இருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் வந்துவிடக்கூடாதே என்று பயமாகவும் இருக்கிறது.

Wednesday, November 09, 2011

ஸ்பாட் ஃபிக்ஸிங் - பாகிஸ்தான் கிரிக்கெட்

மூன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் ஒன்று சிறைத்தண்டனை அளித்துள்ளது. சல்மான் பட், அப்போது பாகிஸ்தான் கேப்டனாக இருந்தார். அவருக்கு 30 மாதம் சிறைத்தண்டனை. முகமது ஆசீஃபுக்கு 12 மாதம். முகமது ஆமீருக்கு 6 மாதம்.

கிரிக்கெட்டைத் தீவிரமாகப் பார்த்து வருவோருக்கு இந்த வழக்கு ஆதியோடு அந்தமாகப் புரிந்திருக்கும். நான் ஒன்றும் புதிதாகச் சொல்லப்போவதில்லை.

ஆகஸ்ட் 2010-ல் இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தது பாகிஸ்தான் அணி. லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஒரு டெஸ்ட் போட்டியின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங் என்ற கெட்ட காரியத்தைச் செய்தார்கள் என்பதுதான் இவர்கள்மீதான குற்றச்சாட்டு. அது என்ன கெட்ட காரியம்?

இங்கிலாந்தில் பெட்டிங் என்பது சட்டபூர்வமானது. எதன்மீதும் பெட் கட்டலாம். ஐஸ்வர்யா ராய்க்கு ஆண் குழந்தை பிறக்குமா, பெண் குழந்தை பிறக்குமா? உலக அழகிப் போட்டியை யார் வெல்வார்? ஐ.பி.எல்.லில் கடைசி நான்கு இடத்தை யார் அடைவார்கள்? இப்படி ஒரு நிகழ்வின் முடிவுமீதான பெட்டிங் என்பது ஒன்று. இது சாதாரண பெட்டிங்.

ஆனால் அது மட்டுமல்ல. சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் சைதை துரைசாமி வென்றுவிடுவார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெல்வார்? அதற்கென்று ஒரு ஸ்பெஷல் வகை பெட்டிங் உள்ளது. அதன் பெயர் ஸ்ப்ரெட் பெட்டிங் என்பது. அவர் 5,00,000 - 5,50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார் என்று சரியாகக் கணித்தால் உங்களுக்குப் பணம். மாறாக, 7,50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார் என்றோ, 2,50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார் என்றோ நீங்கள் தவறாகக் கணித்திருந்தால் நீங்கள் பெட் கட்டிய பணம் காலி. இதை கிரிக்கெட்டுக்கு எப்படி எடுத்துச் செல்வது? இந்தியா எத்தனை ரன் வித்தியாசத்தில் ஜெயிக்கும் என்பதுமீதான பெட்டாகப் பாருங்கள்.

இதற்கும் அடுத்த கட்டமாக ஒரு பெட்டிங் உள்ளது. அதுதான் ஸ்பாட் பெட்டிங். ஒரு பெரும் நிகழ்வில் நடக்கும் பலப்பல சிறு நிகழ்வுகள்மீது பெட் கட்டுவது. மொத்தம் எத்தனை நோ-பால்கள் வீசப்படும்? ஆட்டத்தில் முதல் ஓவரை யார் போடுவார்கள்? சச்சின் 100-வது செஞ்சுரியை அடிப்பாரா, மாட்டாரா? சச்சின் கேட்ச் கொடுத்து அவுட் ஆவாரா அல்லது எல்.பி.டபிள்யூ ஆவாரா?

இங்குதான் ‘ஃபிக்ஸிங்’ நடைபெற வாய்ப்புகள் அதிகம். பொதுவாக, ஓர் ஆட்டத்தை வெல்ல அல்லது தோற்க, பலரது ஈடுபாடும் தேவை. ஒற்றை ஆள் மட்டுமே ஒரு கிரிக்கெட் ஆட்டத்தை வெல்வது அல்லது தோற்பது கடினம். பலரைச் சேர்த்துக்கொண்டு கெட்ட காரியம் செய்வது கடினம். யாராவது ஒருவர் லீக் அவுட் செய்துவிட்டால் கோவிந்தா.

எனவேதான் ஸ்பாட் ஃபிக்ஸிங் எளிது. உதாரணமாக, ஒரு கேப்டனை மட்டும் கைக்குள் போட்டுக்கொண்டால் போதும். யார் முதல் ஓவரை வீசுவது என்பதைத் தீர்மானிப்பது கேப்டன் மட்டும்தான். அதேபோல ஒருவருக்கு அடுத்து யார் பேட்டிங் செய்யப் போகவேண்டும் என்பதைத் தீர்மானிப்பதும் கேப்டன்தான். எனவே கேப்டனுக்குக் கொஞ்சம் பைசாவைத் தள்ளிவிட்டு, நாம் சொல்கிற ஆளை முதல் ஓவர் வீசச் சொன்னால், அதை முன்கூட்டியே தெரிந்திருப்பதால் பெட்டிங்கில் பணத்தைப் போட்டு நல்ல காசு பார்க்கலாம். சரி, மேலும் மேலும் கெட்ட காரியங்கள் செய்யவேண்டும் என்றால்? அதையும் கேப்டனே பார்த்துக்கொள்வார். அவருக்கு நல்ல கனமாகப் பைசல் செய்துவிட்டால் போதும்.

உதாரணமாக, முதல் ஓவர் வீசும் ஒரு பந்துவீச்சாளரை அழைத்து, அடுத்தடுத்து மூன்று நோ-பால் வீசு என்று சொல்லி, அவருக்குக் கொஞ்சம் தனியாக செட்டில் செய்துவிட்டால் முடிந்தது.

நீங்கள் 18 வயதுதான் ஆனவர் என்றால் உங்களுக்கு தென் ஆப்பிரிக்காவின் ஹன்ஸி குரோன்யேவைத் தெரிந்திருக்காது. அற்புதமான விளையாட்டு வீரர். மிக நன்றாக பேட்டிங் செய்வார். சுமாராகப் பந்துவீசி சில விக்கெட்டுகளையும் கைப்பற்றுவார். எல்லா தென்னாப்பிரிக்க வீரர்களையும் போல மிக அருமையாக ஃபீல்டிங் செய்வார். அணியில் கேப்டன் ஆனார். தென்னாப்பிரிக்க அணியை உச்சத்துக்குக் கொண்டுசென்றார். ஒரு நாள் போட்டிகளில் நெருப்புபோல் விளையாடுவார்கள். மிகவும் தெய்வ பக்தி கொண்ட கிறிஸ்தவர்.

ஆனால், அவர் இந்த ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஒரு பெரும் முன்னோடி என்று தெரியவந்ததும் உலகே அதிர்ந்துபோனது. நீதிமன்றத்தில் அவரே இதனை ஒப்புக்கொண்டார். கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டார். பின்னர் மர்மமான முறையில் ஒரு விமான விபத்தில் பலியானார்.

சல்மான் பட் அதே காரியத்தைத்தான் செய்திருக்கிறார். ஆனால் காரியம் முடிந்தவுடனேயே பிடிபட்டுவிட்டார். ஏனெனில் நடந்தது ஒரு ‘ஸ்டிங்’ ஆபரேஷன். இந்தக் கெட்ட காரியர்கள் எல்லோருமே ஒரு தரகர் மூலமாகத்தான் பணம் பெறுவார்கள். அப்படிப்பட்ட ஒரு தரகரை ட்ராப் செய்ய முடிவெடுத்தது நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் என்ற பத்திரிகை. இதில் நகைமுரண் என்னவென்றால் இந்தப் பத்திரிகையே ஒரு கழிசடைப் பத்திரிகை. ரூப்பர்ட் மர்டாக்கின் இந்தப் பத்திரிகை செய்யாத கெட்ட காரியமே கிடையாது. வேறு ஒரு சர்ச்சையில் (ஃபோன் ஹேக்கிங்) சிக்கிய இந்தப் பத்திரிகை இப்போது மூடப்பட்டுவிட்டது.

இந்தப் பத்திரிகையின் நிருபர் ஒருவர் மஸர் மஜீத் என்ற தரகருக்குப் பணம் கொடுத்து அவரோடு பேசியவற்றையெல்லாம் ரகசியமாக டேப் செய்துவிட்டார். இந்தத் தரகர், சல்மான் பட்டை அழைத்து பாதிப் பணத்தை அவரிடம் கொடுத்து, மூன்று நோ-பால்கள் வீச ஏற்பாடு செய்தார். அதே மாதிரி நடந்தது. உடனே நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் நிருபர் இந்த விஷயத்தைத் தன் பத்திரிகையில் எழுத, ஸ்காட்லண்ட் யார்ட் இதை கிரிமினல் கேஸாகப் பதிவு செய்து, விசாரணை நடத்த, இறுதியில் மூன்று பாகிஸ்தான் வீரர்கள்மீதும் வழக்கு தொடுத்து, நடத்தி, தண்டனை கொடுத்து, ஜெயிலுக்கும் அனுப்பிவிட்டார்கள். (இந்திய நீதிமன்றங்கள்தான் தண்டம். பிற நாடுகளில் அப்படியல்ல!)

***

இதில் நாம் கேட்கவேண்டிய கேள்விகள் பல உள்ளன.

1. பாகிஸ்தானிகள் மட்டும்தான் கெட்ட காரியம் செய்கிறார்களா? பிற நாட்டவர்கள்?
2. கிரிக்கெட் என்றாலே சூதாட்டம்தானா? டிவி பார்க்கும் நாமெல்லாம் மடையர்களா? இந்திய அணியில் என்னவெல்லாம் நடக்கிறது என்று யாருக்குத் தெரியும்?
3. பெட்டிங், மேட்ச் பிக்ஸிங் ராக்கெட் எந்த அளவுக்கு விளையாட்டுப் போட்டிகளில் புரையோடிப் போயுள்ளது? இதனைச் சுத்தம் செய்வது சாத்தியம்தானா?
4. இதற்குப் பேராசை மட்டும்தான் காரணமா? நேர்மை, கண்ணியம் போன்றவையெல்லாம் இன்று காற்றில் பறக்கவிடப்படுவது ஏன்?
5. கிரிக்கெட்டில் மட்டும்தான் நேர்மை போன்றவை அவசியமா? தனி வாழ்வில்? தொழில்துறையில்? அரசியலில்?

Tuesday, November 08, 2011

புரட்சி, கணிதம், புரட்சி: எவரிஸ்த் கலுவா (1811-1832)

 (அம்ருதா இதழில் இந்த மாதம் வெளியானது)

கணித மேதைகளோ, விஞ்ஞானிகளோ பொதுவாக, தமது ஆராய்ச்சிகளுக்குள்ளே மூழ்கியிருப்பார்கள்; சுற்றி நடக்கும் விஷயங்களில் அவ்வளவாக ஈடுபடமாட்டார்கள் என்பது பொதுக் கருத்து. சில விதிவிலக்குகள் உண்டு. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒரு கட்டத்துக்குப் பிறகு அரசியலில் மிகத் தீவிரமாக மூழ்கிவிட்டார். அதன் விளைவாக உண்மையில் அவருடைய ஆராய்ச்சி பெரிதும் தடைப்பட்டது.

ஆனால், பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் இப்படி பொது விவகாரங்களில் தலையிடுவதில்லை. அவர்களுக்கும் வலுவான கருத்துகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதை வெளியே சொல்ல அவர்கள் முற்படுவதில்லை.
எவரிஸ்த் கலுவாவின் வாழ்க்கை அப்படியாக இல்லை. 20 வயது என்பது சாவதற்கான வயதா என்ன? அதுவும் நோய் நொடி வந்து சாகவில்லை இந்த பிரெஞ்சு இளைஞர். ஏழைமையில் சிக்கி, உணவுக்கு வழியில்லாமல் சாகவும் இல்லை. துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் கதைக்குப் பின்னர் வருவோம்.

முதலில் எவரிஸ்ட் கலுவா வாழ்ந்த காலத்தையும் அப்போதைய பிரான்ஸையும் பற்றிப் பார்ப்போம். உலகில் முதன்முறையாக, முடியாட்சிக்கு மாற்றாகக் குடியாட்சியைக் கொண்டுவருவதுபற்றித் தீவிரமான விவாதம் எழுந்து அது புரட்சியில் முடிந்தது என்றால் அது பிரான்ஸில்தான். அதற்கு முன்பு வரை எந்த நாட்டிலுமே இந்தமாதிரியான ஒரு தீவிர புரட்சிகரக் கருத்து முன்வைக்கப்படவில்லை. இங்கிலாந்தில் மன்னருக்கும் மக்களுக்கும் இடையில் தொடர்ந்து நடைபெற்றுவந்த போராட்டமும் சமரசமும் காரணமாக அதிகாரம் ஓரளவுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும்கூட இன்று 21-ம் நூற்றாண்டிலும் இங்கிலாந்தில் (பிரிட்டனில்) அரச வம்சம் தொடர்ந்துவருகிறது. பிரெஞ்சுப் புரட்சியோ, மாறாக, அமெரிக்காவுக்குக் குடியாட்சி முறையை அளித்ததோடு உலகெங்கும் குடியாட்சி முறை வரக் காரணமாக இருந்தது.

1792-ல் பிரான்ஸ் ஒரு குடியாட்சி நாடு என்று பிரகடனப்படுத்தப்பட்டு, பதினான்காம் லூயி மன்னன் கில்லட்டினில் வைத்து கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டான். ஆனால் அதற்கடுத்த பல பத்தாண்டுகளில் உண்மையான குடியாட்சி அந்நாட்டு மக்களுக்குக் கிட்டிவிடவில்லை. உடனடியாக அவர்களுக்குக் கிடைத்தது ராபஸ்பியர் என்ற கொடுங்கோலனின் சர்வாதிகார ஆட்சிதான். சில பல குழப்பங்களுக்குப் பிறகு 1799-ல் நெப்போலியன் கைக்கு ஆட்சி வந்தது. ஆனால் மக்களை ஏமாற்றிய நெப்போலியன் தன்னையே ஒரு மன்னனாக முடிசூட்டிக்கொண்டு பிரான்ஸைப் பல்வேறு போர்களுக்குக் கொண்டுசென்று இறுதியில் 1815-ல் வாட்டர்லூ போரில் தோல்வியடைந்து சிறை வைக்கப்பட்டான். பிரான்ஸ் மீண்டும் பழைய முடியாட்சிக்குத் திரும்பியது. பதினெட்டாம் லூயி என்பவன் அரசனான்.

இந்த வரலாற்றுக் கட்டத்தின்போதுதான் எவரிஸ்த் கலுவா பிறக்கிறார். எவரிஸ்த்தின் தந்தை  நிகோலா-கேப்ரியல் குடியாட்சி முறையை ஆதரிப்பவர். லிபரல் கட்சி என்ற கட்சியின் உள்ளூர்த் தலைவர். குழப்பமான அரசியல் சூழ்நிலையில், நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டு எல்பா தீவுக்குத் துரத்தப்பட்டு பதினெட்டாம் லூயி மன்னனாக அமர்த்தப்பட்டபோது நிகோலா-கேப்ரியல் தன் கிராமத்தில் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கலுவா, வீட்டிலேயே தன் தாயிடமே கல்வி பயின்று வளர்ந்தார். நெப்போலியன் போர் வெறி பிடித்தவன்தான். ஆனால் போரை ஜெயிக்க அறிவியல் முக்கியம் என்பதை உணர்ந்தவன். அவன் காலத்தில் அறிவியலுக்கும் கணிதத்துக்கும் நிறையச் செலவழிக்கப்பட்டது. லெஜாந்த்ர, லக்ராஞ்ச், கஷி, ஃபூரியே, பாஸ்ஸான் போன்ற மாபெரும் கணித மேதைகள் பிரெஞ்சு அறிவியலை ஆண்ட காலகட்டம் அது.

நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல, ஒவ்வொரு கணித மேதைக்கும் சிறு வயதில் அந்தத் துறையில் செல்வதற்கான உத்வேகத்தைக் கொடுப்பது ஒரு புத்தகமே. ஜியாமெட்ரி பற்றி லெஜாந்த்ர எழுதிய ஒரு புத்தகம் 14 வயதுச் சிறுவன் கலுவா கையில் கிடைத்தது. கணிதப் புத்தகங்களை எளிதாகப் படித்துமுடித்தபின் அடுத்து சுடச்சுட கணிதத் துறையில் வெளியாகும் ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிக்க ஆரம்பித்தான் கலுவா.

18, 19-ம் நூற்றாண்டிலேயே இது சாத்தியமாகியிருக்கிறது. இன்று 21-ம் நூற்றாண்டில் நம் இந்தியக் குழந்தைகள் இப்படி மேதைகளின் புத்தகங்களையெல்லாம் படிக்கிறார்களா, புதிதாக வெளியாகும் கணித ஆராய்ச்சிக் கட்டுரைகளையெல்லாம் படிக்கிறார்களா என்று கவனியுங்கள். பள்ளிக்கூட ஆசிரியர்கள் இதற்கெல்லாம் முயற்சி எடுத்தால்தான் இது சாத்தியமாகும்.

கலுவாவை இரண்டு விஷயங்கள் ஈர்க்க ஆரம்பித்தன. ஒன்று தந்தையின் அரசியல். மற்றொன்று கணிதம்.

பதினெட்டாம் லூயிக்குப் பிறகு அவனது சகோதரன் பத்தாம் சார்லஸ் அந்தக் கட்டத்தில் மன்னனாக இருந்தான். ஆனால் மன்னராட்சியை மீண்டும் ஒழிப்பது என்ற ரிபப்ளிகன் (குடியாட்சி) சித்தாந்தம் மாணவர்களை உந்தியது. கலுவா கல்லூரிக்குச் செல்ல முடிவெடுத்தபோது இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று இகோல் பாலிதெக்னீக் என்ற உயர்ந்த கல்விக்கூடம். மற்றொன்று அதைவிடக் கீழே இருந்த இகோல் நார்மால் என்ற கல்லூரி. கலுவா போன்ற புத்திசாலி மாணவனுக்கு ஏற்ற இடம் இகோல் பாலிதெக்னீக் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், கலுவா இளரத்தம். நேர்முகத் தேர்வில் கொஞ்சம் கரடுமுரடாக நடந்துகொண்டான். கணக்குகளைப் படிப்படியாகப் போடாமல் நேராக விடையை எழுதினால் சாதாரண ஆசிரியர் ஒருவருக்குச் சந்தேகம் வரத்தானே செய்யும்? இகோல் பாலிதெக்னீக்கில் இடம் கிடைக்காமல் போகவே இகோல் நார்மாலில் சேர்ந்தான் கலுவா.

இது ஒருவிதத்தில் சோகமே. ராமானுஜனின் கணிதத் திறமையை கும்பகோணம் கலைக்கல்லூரியாலோ பச்சையப்பன் கல்லூரியாலோ புரிந்துகொள்ள முடியவில்லை. அதற்கு கேம்பிரிட்ஜ் செல்லவேண்டியிருந்தது. அதேபோலத்தான் அந்தக் காலத்தின் மிகச் சிறந்த கணித மேதைகள் இகோல் பாலிதெக்னீக்கில்தான் வேலை பார்த்தனர். அங்கே சென்றிருந்தால் கலுவா எங்கேயோ போயிருக்கலாம். ஆனால் விதி விடவில்லை.

எனவே அரசியல் பிடித்துக்கொண்டது.

இதற்குச் சற்று முன்னர்தான், கலுவாவின் தந்தை, சில அரசியல் பிரச்னைகளால் தற்கொலை செய்துகொண்டார். இகோல் நார்மாலில் சேர்ந்த கலுவா, ரிபப்ளிகன் எண்ணம் கொண்ட மாணவர்களுடன் சேர்ந்து போராட்டங்களில் இறங்கி புரட்சி செய்யத் தொடங்கினான்.

அப்போது மன்னராக இருந்த பத்தாம் சார்லஸ் நாடு முழுவதிலும் நடத்திய தேர்தலில், இறந்த கலுவாவின் தந்தை உறுப்பினராக இருந்த லிபரல் கட்சி வென்று பெரும்பான்மை இடங்களைப் பெற்றது. அவர்களின் நோக்கமே மன்னராட்சியை ஒழிப்பது. எனவே பத்தாம் சார்லஸ் மன்னர், லிபரல் கட்சியை அடக்கத் தீர்மானித்து, பல சட்டங்களை அறிவித்தார். உடனே நாடு புரட்சியில் மூழ்கியது. அப்போதும் புரட்சிக்கு முன் நின்றவர்கள் மாணவர்கள்தாம். அதிலும் கலுவா பற்றிக் கேட்கவா வேண்டும்?

இகோல் பால்தெக்னீக் மாணவர்கள் தெருவில் இறங்கினர். இகோல் நார்மால் மாணவர்களும் தெருவில் இறங்கி வேலை நிறுத்தம் செய்ய முயன்றனர். ஆனால், பிரச்னை வரக்கூடாது என்று தீர்மானித்த இகோல் நார்மால் இயக்குனர், மாணவர்களை கல்லூரியில் வைத்துப் பூட்டிவிட்டார். கலுவா இதனை எதிர்த்து உள்ளூர்ப் பத்திரிகையில் கடுமையான ஒரு கடிதத்தை வெளியிட்டான். உடனே இயக்குனர் கலுவாவைக் கூப்பிட்டு அந்த ஆண்டோடு கல்லூரியை விட்டு வெளியே போ என்று கல்த்தா கொடுத்துவிட்டார்.

‘போடா நீயும் உன் கல்லூரியும்!’ என்ற கலுவா, அந்த ஆண்டென்ன, அந்த நாளுடன் போகிறேன் என்று வெளியே கிளம்பிவிட்டார். கிளம்பி, ரிபப்ளிகன் எண்ணம் கொண்ட இளைஞர்கள் உருவாக்கிய பீரங்கிப் படையில் சேர்ந்துவிட்டார். ரிபப்ளிகன் படைகளும் மக்களும் நிகழ்த்திய ஜூலை புரட்சியில் பத்தாம் சார்லஸ் தோற்கடிக்கப்பட்டு துரத்தப்பட்டார். பதினெட்டாம் லூயி மன்னரின் ஒன்றுவிட்ட சகோதரனான லூயி பிலிப் என்பவர் மன்னரானார்.

இது ஒரு குழப்பமான காலகட்டம். மக்கள் மன்னர்களை வெறுத்தனர் என்றாலும் மாற்று ஏற்பாடுகள் ஏதும் இல்லை. எனவே யாரோ ஒருவர் மன்னராகிக்கொண்டே இருந்தார். ஆனால் புரட்சிகர மாணவர்கள் தங்கள் புரட்சிகரக் கருத்துகளை முன்வைத்தபடியே இருந்தனர். புது மன்னர் லூயி பிலிப்புக்கு புரட்சிகர மாணவர்களால் ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்த அமைச்சர்கள், கலுவா பங்கேற்ற பீரங்கிப் படையைக் கலைத்தனர்.

கலுவாவின் படையில் இருந்த பல அதிகாரிகள், மன்னராட்சியைக் குலைக்கச் சதி செய்தனர் என்று சொல்லி கைது செய்யப்பட்டனர். வழக்கின்போது அவர்கள்மீது குற்றம் ஏதும் இல்லை என்று அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அப்படி விடுவிக்கப்பட்டதைக் கொண்டாட ஒரு விருந்து நடைபெற்றது. அதில் கலுவா நடந்துகொண்ட செய்கையைக் கண்ணுற்ற உளவாளிகள், இந்தப் பையன் மன்னரைக் கொல்லவேண்டும் என்று சொல்கிறான் என்று முடிவுகட்ட, அடுத்த நாள் கலுவா கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டான். அந்த வழக்கில் கலுவா பின்னர் விடுவிக்கப்பட்டான்.

பின்னர் பாஸ்டில் தினக் கொண்டாட்டத்தின்போது தனது பீரங்கிப்படைச் சீருடையை அணிந்துகொண்டு துப்பாக்கிகளுடன் கலுவா கலந்துகொண்டான். தடைசெய்யப்பட்ட படையின் சீருடையை அணிந்தது, ஆயுதங்கள் வைத்திருந்தது ஆகியவற்றுக்காக கலுவா மீண்டும் கைது செய்யப்பட்டு, சில மாதங்களைச் சிறையில் கழித்தபின் விடுதலை செய்யப்பட்டான்.

இதெல்லாம் புரட்சி, அரசியல், போர், சிறை பற்றியது. ஆனால் நாம் கணித மேதைகளைப் பற்றியல்லவா பேசுகிறோம்? இந்தப் பையன் கணிதத்தில் என்ன சாதித்தான் என்பது பற்றிப் பார்க்கவேயில்லையே? ஆச்சரியம் என்னவென்றால் இவன் புரட்சி செய்துகொண்டிருக்கும்போது கணிதம் செய்ய எப்படி நேரம் கிடைத்தது என்பதுதான்.

குவாட்ராடிக் ஈக்வேஷன் - இருபடிச் சமன்பாடு என்பது பள்ளிக்கூடக் கணிதத்தில் வரும் ஒன்று.


என்ற சமன்பாட்டைத்தான் இருபடிச் சமன்பாடு என்போம். இந்தச் சமன்பாட்டில் x-ன் விடை என்ன என்பதை a, b, c ஆகியவற்றைக்கொண்டு எழுதலாம்.

கொஞ்சம் கணிதம் தெரிந்தவர்கள் இதன் விடையை


என்று எழுதிவிடுவார்கள். சரி, முப்படிச் சமன்பாட்டுக்கான (அதாவது a x3 + b x2 + c x + d = 0) விடைகளையும் இப்படியே எழுதிவிட முடியுமா? நான்குபடிச் சமன்பாட்டுக்கு? ஐந்துபடிச் சமன்பாட்டுக்கு?

கலுவா ஒரு டீனேஜ் பையனாக இருக்கும்போதே இதனை அழகாகக் கையாண்டார். அவர் கல்லூரியில் சேர்வதற்கு முன்னதாகவே இது தொடர்பாக அவர் இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி அறிவியல் அகாடெமிக்கு அனுப்பினார். கட்டுரைகளை ஆராய்ந்த கஷி, இரண்டு கட்டுரைகளையும் ஒன்றாக்கி, சில மாற்றங்களைச் செய்தால் பிரசுரிக்கலாம் என்று சொல்லியிருந்தார். பின்னர் கலுவா, கஷி சொன்னபடி மாற்றங்கள் செய்து அனுப்பிய கட்டுரை, ஃபூரியே கைக்குக் கிடைத்தது. ஆனால் அடுத்த சில நாள்களிலேயே ஃபூரியே இறந்துவிட, இந்தக் கட்டுரை தொலைந்துபோனது.

கலுவா பின்னர் அதிகாரபூர்வ வழிகளை நம்பவே இல்லை. புரட்சி நடந்தபோதும், பின்னர் சிறையில் இருந்தபோதும் அவர் கணித ஆராய்ச்சியில் தன் நேரத்தைச் செலவிட்டார். நான்குபடிகளைத் தாண்டிய எந்த பலபடிச் சமன்பாட்டுக்கும், அதன் கெழுக்களைக் கொண்டு விடைகளை எழுதிவிட முடியாது என்ற மிக முக்கியமான கருத்தை அவரது ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டின.

20 வயதே முடிந்திருந்த கலுவா பட்டம் ஏதும் பெறவில்லை. எந்த வேலையும் அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனால் ஏதோ காதல் விவகாரத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறார்போலத் தெரிகிறது. அத்துடன் அவரது அரசியல் சார்பும் அவருக்குச் சாதகமாக இல்லை. அந்தக் காலத்தில் ‘ஜெண்டில்மேன்’ என்போர் தமது கௌரவத்துக்கு இழுக்கு வந்துவிட்டால் ‘ஒண்டிக்கு ஒண்டி’ என்ற ட்யூயல் சண்டைக்கு எதிராளியை அழைப்பார்கள். ஆளுக்கு ஒரு துப்பாக்கி (அதற்கு முந்தைய காலத்தில் வாள்) எடுத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட தூரம் சென்று ஒருவரை ஒருவர் குறிபார்த்துச் சுடவேண்டும். செத்தவர் செத்தார், பிழைத்தவர் பிழைத்தார்!

இந்தக் காதல் விவகாரம் காரணமாக, அந்தப் பெண்ணின் அப்போதைய காதலனை எவரிஸ்த் கலுவா ட்யூயலுக்கு அழைத்தார். குறிப்பிட்ட நாளுக்கு முந்தைய நாள், கலுவாவுக்குத் தான் பிழைக்கப்போவதில்லை என்று தெரிந்திருக்கவேண்டும். அவசர அவசரமாக, தனது கணிதக் கண்டுபிடிப்புகளையெல்லாம் தாள்களில் எழுதத் தொடங்கினார். அந்தக் குறிப்புகளின் இடையே மார்ஜினில், ‘நேரம் போதவில்லையே, நேரம் போதவில்லையே’ என்று அவர் எழுதியதும் இருக்கிறது. எழுதி முடித்து, அவற்றைத் தன் நண்பருக்கு அனுப்பிவிட்டு, காலையில் ட்யூயலுக்குப் போனார். எதிராளி சுட்ட குண்டு கலுவாவின் வயிற்றில் பாய்ந்தது. அடுத்த நாள் அவர் உயிரை விட்டார். அப்போது அவருக்கு 20 வயதே நிரம்பியிருந்தது. கணித உலகம் ஒரு மாபெரும் மேதையை இழந்திருந்தது.

Monday, November 07, 2011

அணு விஞ்ஞானி அப்துல் கலாம்!

அப்துல் கலாம் கூடங்குளம் சென்று வந்துள்ளார். அங்குள்ள அணு மின் உலை அபாயமற்றது; வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று சொல்லியுள்ளார். இது கிட்டத்தட்ட எதிர்பார்த்ததுதான். அப்துல் கலாம் அணு மின்சாரத்தின்மீது நம்பிக்கை கொண்டவர். (நானும்தான்.) எனவே அவர் மாற்றாக எதையும் சொல்லியிருக்கப்போவதில்லை.

ஆனால் பிரச்னை, அப்துல் கலாம் ஒரு அணு விஞ்ஞானியா என்பதைப் பற்றியது. அவர் அணு விஞ்ஞானி அல்லர். அப்படி அவர் தன்னை ஒருபோதும் சொல்லிக்கொண்டதில்லை. அவர் ஒரு ஏரோனாட்டிகல் பொறியாளர். ஒரு கட்டத்தில் இந்தியாவின் அணு ஆயுதச் சோதனைத் திட்டத்துக்குத் தலைமை தாங்கியுள்ளார். அது மட்டுமே அவரை அணு விஞ்ஞானி ஆக்கிவிடாது. எனவே ஊடகங்கள் அவரை அணு விஞ்ஞானி என்று அழைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

அப்படியானால், அப்துல் கலாமால் அணு சக்தி பற்றிய விஷயங்களையும் அது தொடர்பான அபாயங்களையும் புரிந்துகொள்ள முடியாது என்றா சொல்வது? இல்லை! நல்ல அறிவியல் புரிதல் கொண்ட எவராலுமே அணு சக்தி, அதன் ஆற்றல், அதன் அபாயங்கள், அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் போன்ற பலவற்றைப் புரிந்துகொள்ள முடியும். மேலும், அணு ஆயுதச் சோதனைத் திட்டத்துக்குத் தலைமை தாங்கிய ஒருவருக்குக் கட்டாயம் இதுபற்றி நல்ல புரிதல் இருந்தாகவேண்டும்.

அந்த மட்டத்தில், அவரை அணு விஞ்ஞானி என்று அழைக்காமல் போகலாமே தவிர, கூடங்குளத்தில் பிறர் சொல்வதுபோல ஆபத்து என்பதெல்லாம் இல்லை என்று அவர் சான்றிதழ் கொடுத்தால் கட்டாயம் ஏற்றுக்கொள்ளலாம் என்பது என் கருத்து.

கலாம் அல்லர் அரசியல்வாதி. அவர் குஜராத் கலவரம் பற்றி என்ன சொன்னார், இலங்கைப் படுகொலை பற்றி என்ன சொன்னார் என்றெல்லாம் கேட்பவர்கள்தான் அரசியல்வாதிகள்! அறிவியல், தொழில்நுட்பம் மூலம் உலகை நல்லபடியாக மாற்றமுடியும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கும் கலாம், அது தொடர்பான விவாதங்களில்தான் பங்கெடுக்க விரும்புகிறார் என்பது வெளிப்படை. பிற விஷயங்களில் கருத்து சொல்ல அவர் தயங்குகிறார். எனவே, அதில் அவர் கருத்து என்ன, இதில் அவர் கருத்து என்ன என்று தோண்டிப் பார்க்காமல், அணு சக்தி தொடர்பாக அவர் நியாயமான கருத்தை முன்வைக்கக்கூடியவரா என்பதை மட்டும்தான் பார்க்கவேண்டும்.

அவரை நம்பாதவர்கள், அவரை அரசவைக் கோமாளி என்று சாடுபவர்கள் சாடிவிட்டுப் போங்கள்.

Sunday, November 06, 2011

ஏ.கே ராமானுஜனின் ராமாயணக் கட்டுரை - 1

(யாரிடமும் இதனை மொழிபெயர்க்க அனுமதி வாங்கவில்லை. துண்டு துண்டாக இந்தக் கட்டுரையைத் தமிழில் மொழிபெயர்த்துப் போடப்போகிறேன். உங்கள் வாசிப்பு அனுபவத்துக்காக...)

முன்னூறு ராமாயணங்கள்: மொழிபெயர்ப்பு தொடர்பாக ஐந்து எடுத்துக்காட்டுகளும் மூன்று சிந்தனைகளும்
ஏ.கே.ராமானுஜன்

எத்தனை ராமாயணங்கள்? முன்னூறு? மூவாயிரம்? சில ராமாயணங்களின் இறுதியில், ‘எத்தனை ராமாயணங்கள்தான் உள்ளன?’ என்ற கேள்வி ஒன்று கேட்கப்படும். சில கதைகளில் அதற்கான பதிலும் இருக்கும். இதோ ஒன்று.

ஒரு நாள் ராமர் அரியணையில் அமர்ந்திருக்கும்போது அவருடைய மோதிரம் கீழே விழுந்துவிட்டது. அது பூமியைத் தொட்டதும், தரையைத் துளைத்துக்கொண்டு உள்ளே சென்று மறைந்துவிட்டது. போயே போய்விட்டது. அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான அனுமன், அவருடைய காலடியில்தான் இருந்தான். ‘என் மோதிரம் தொலைந்துவிட்டது. கண்டுபிடித்து எடுத்துவா’ என்று ராமர் அனுமனிடம் சொன்னார்.

அனுமனால் எத்தனை சிறிய துளைக்குள்ளும் புகுந்து செல்ல முடியும். மிக மிகச் சிறியதாகவோ, மிக மிகப் பெரியதாகவோ தன் உடலை ஆக்கிக்கொள்ள முடியும். எனவே, தன் உடலைக் குறுக்கிக்கொண்டு அந்தத் துளைக்குள் சென்றான்.

அவன் கீழே கீழே போய் பாதாளத்தில் விழுந்தான். அங்கே பல பெண்கள் இருந்தனர். ‘அதோ பார், சின்னக் குரங்கு! மேலேயிருந்து விழுந்துள்ளது’ என்று சொல்லி, அவனைப் பிடித்து ஒரு தட்டில் வைத்தனர். பாதாளத்தில் வசிக்கும் பூதங்களின் அரசனுக்கு மிருகங்களைத் தின்பதில் பிரியம் அதிகம். எனவே அனுமன், அவனுக்கான உணவாக, காய்கறிகளுடன் சேர்த்து அனுப்பிவைக்கப்பட்டான்.

பாதாளத்தில் இதெல்லாம் நடந்துகொண்டிருந்தபோது, ராமர் பூமியில் தன் அரியணையில் அமர்ந்திருந்தார். அப்போது வசிஷ்டரும் பிரம்மனும் அவரைக் காண வந்தனர். ‘உன்னுடன் தனிமையில் பேசவேண்டும். அதனை யாரும் கேட்கக்கூடாது, நம் பேச்சுக்கு இடையூறும் வரக்கூடாது. ஒப்புக்கொள்வாயா?’ என்றனர்.

‘சரி, பேசுவோம்’ என்றார் ராமர்.

‘நாம் பேசிக்கொண்டிருக்கும்போது யாராவது உள்ளே வந்தால் அவர்களுடைய தலை துண்டிக்கப்படவேண்டும் என்று ஓர் உத்தரவைப் போடு’ என்றனர்.

‘சரி, அப்படியே ஆகட்டும்’ என்றார் ராமர்.

வாயிலைக் காக்க யார் நம்பகமான ஆசாமி? மோதிரத்தை எடுக்க அனுமன் கீழே போயிருக்கிறான். லட்சுமணனைவிட வேறு யாரையும் ராமன் அதிகமாக நம்புவதில்லை. எனவே லட்சுமணனை அழைத்து வாயிலருகே நிற்கச் சொன்னார். ‘யாரையும் உள்ளே அனுமதிக்காதே’ என்று ஆணையிட்டார்.

லட்சுமணன் வாயிலில் நிற்கும்போது விஸ்வாமித்திரர் அங்கே வந்து, ‘ராமனை உடனே பார்க்கவேண்டும். மிக மிக அவசரம். ராமன் எங்கே?’ என்று கேட்டார்.

‘உள்ளே போகாதீர்கள். அவர் சிலருடன் மிக முக்கியமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்’ என்றான் லட்சுமணன்.

‘என்னிடமிருந்து ராமன் அப்படி எதை மறைக்கப் போகிறான்? நான் உடனே உள்ளே போகவேண்டும்’ என்றார் விஸ்வாமித்திரர்.

‘அப்படியானால் நான் உள்ளே போய் அவருடைய அனுமதியைப் பெற்று வருகிறேன்’ என்றான் லட்சுமணன்.

‘சரி, போய்க் கேட்டுவிட்டு வா!’

‘ராமன் வெளியே வரும்வரை நானே உள்ளே போக முடியாது. கொஞ்சம் பொறுங்கள்.’

‘உடனே உள்ளே போய் நான் வந்திருப்பதை அறிவிக்காவிட்டால், என் சாபத்தினால் அயோத்தி ராஜ்ஜியத்தையே எரித்துச் சாம்பலாக்கிவிடுவேன்’ என்றார் விஸ்வாமித்திரர்.

லட்சுமணன் யோசித்தான். ‘நான் உள்ளே போனால் நான் சாகவேண்டும். ஆனால் நான் போகாவிட்டால், இந்த முன்கோபக்காரர் ராஜ்ஜியத்தையே எரித்துவிடுவார். அனைத்து மக்களும் அனைத்து உயிரினங்களும் செத்துப்போவார்கள். எனவே நான் ஒருவன் மட்டும் உயிர் துறப்பது சிறந்தது.’

எனவே, உள்ளே சென்றான்.

‘என்ன விஷயம்?’ என்றார் ராமர்.

‘விஸ்வாமித்திரர் வந்திருக்கிறார்.’

‘உள்ளே அனுப்பிவை.’

விஸ்வாமித்திரர் உள்ளே சென்றார். அதற்குள் பிரத்யேகப் பேச்சுகள் முடிவடைந்திருந்தன. ‘இந்தப் பூவுலகில் நீ வந்த வேலை முடிந்துவிட்டது. ராமாவதாரத்தை விடவேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்த உடலை விடுத்து, வானுலகம் வந்து கடவுள்களுடன் சேர வா’ என்று ராமரிடம் சொல்வதற்காகத்தான் பிரமனும் வசிஷ்டரும் வந்திருந்தனர்.

இதற்குள் லட்சுமணன் ராமரிடம், ‘அண்ணா, நீ என் தலையை வெட்டவேண்டும்’ என்றான்.

‘ஏன் தம்பி? எங்கள் பேச்சுதான் முடிந்துவிட்டதே? மேலே சொல்வதற்குத்தான் எதுவும் இல்லையே? எனவே உன் தலையை ஏன் வெட்டவேண்டும்?’ என்றார் ராமர்.

‘அப்படி நீ செய்யக்கூடாது. நான் உன் தம்பி என்பதால் நீ என்னை விட்டுவிட்டதாக ஆகிவிடும். அது உன் பெயருக்கு இழுக்கல்லவா? உன் மனைவி என்பதற்காக சீதையை விட்டுக்கொடுத்தாயா? அவளைக் காட்டுக்கு அனுப்பினாயே. என்னையும் நீ தண்டிக்கவேண்டும். நான் கிளம்புகிறேன்’ என்றான் லட்சுமணன்.

லட்சுமணன், விஷ்ணுவின் படுக்கையான ஆதிசேஷனின் அவதாரம். அவனுடைய நேரமும் முடிந்திருந்தது. அவன் நேராக சரயு நதிக்குச் சென்று ஆற்றில் இறங்கி மறைந்தான்.

லட்சுமணன் தன் உடலை விடுத்ததும், ராமர் உடனேயே வீடணன், சுக்கிரீவன், இன்னபிற தொண்டர்கள் அனைவரையும் அழைத்தார். தன் இரட்டை மகன்களான லவனுக்கும் குசனுக்கும் பட்டாபிஷேகம் செய்துவைத்தார். பின்னர் அவரும் சரயு நதியில் இறங்கினார்.

இது நடந்துகொண்டிருக்கும்போது அனுமன் பாதாளத்திலேயே இருந்தான். பூத அரசனிடம் அவனை எடுத்துச் சென்றபோது, அவன் தொடர்ந்து ராம, ராம, ராம என்று ராம நாமத்தை ஜபித்துக்கொண்டிருந்தான்.

‘நீ யார்?’ என்றான் பூத அரசன்.

‘அனுமன்.’

‘அனுமனா? நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்?’

‘ராமரின் மோதிரம் துளைக்குள் விழுந்துவிட்டது. அதை எடுத்துப்போக வந்திருக்கிறேன்.’

பூத அரசன் சுற்றும் முற்றும் பார்த்து ஒரு தட்டைக் காண்பித்தான். அதில் பல ஆயிரம் மோதிரங்கள் இருந்தன. அவை அனைத்தும் ராமரின் மோதிரங்கள். அரசன் அந்தத் தட்டை அனுமனிடம் கொண்டுவந்து கொடுத்து, ‘உங்களுக்கு வேண்டிய ராமரின் மோதிரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றான்.

ஆனால் அந்த மோதிரங்கள் அனைத்தும் ஒரேமாதிரியாக இருந்தன. அனுமன் குழம்பிப்போனான். ‘இவற்றில் எது அந்த மோதிரம் என்று எனக்குத் தெரியவில்லையே’ என்றான்.

‘இங்கு எத்தனை மோதிரங்கள் உள்ளனவோ, அத்தனை ராமர்கள் இருந்துள்ளனர். நீங்கள் பூமிக்குத் திரும்பும்போது ராமர் அங்கே இருக்க மாட்டார். ராமரின் இந்த அவதாரம் நிறைவு பெற்றுவிட்டது. ராமாவதாரம் நிறைவு பெறும்போது அவருடைய மோதிரம் கீழே விழுந்துவிடும். நான் அவற்றைச் சேகரித்து வைத்துக்கொள்வேன். நீங்கள் இப்போது போகலாம்’ என்றான் பூத அரசன்.

எனவே அனுமன் விடைபெற்றுச் சென்றான்.

ஒவ்வொரு ராமருக்கும் ஒரு ராமாயணம் உள்ளது என்பதைக் குறிப்பிடவே இந்தக் கதை பொதுவாகச் சொல்லப்படுகிறது.(1) கடந்த இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளில், எத்தனை ராமாயணக் கதைகள் புழக்கத்தில் உள்ளன; தெற்காசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் அவற்றின் செல்வாக்கின் வீச்சு எவ்வளவு என்பது ஆச்சரியம் தரக்கூடியது. ராம காதை எவ்வளவு மொழிகளில் உள்ளது என்பதே வியக்க வைப்பது: அசாமி, பாலினீஸ், வங்காளி, கம்போடியன், சீன, குஜராத்தி, ஜாவனீஸ், கன்னடம், காஷ்மிரி, கோடானீஸ், லாவோஷியன், மலாய், மராத்தி, ஒரியா, பிராக்ருதம், சம்ஸ்கிருதம், சந்தாலி, சிங்களம், தமிழ், தெலுங்கு, தாய், திபெத்தியன் ஆகியவற்றுடன் பல மேற்கத்திய மொழிகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்! கடந்த பல நூற்றாண்டுகளில் இந்த மொழிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட விதத்தில் ராம காதை சொல்லப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் மட்டும் 25 அல்லது அதற்கும் மேற்பட்ட கதைகள், பல்வேறு வகைகளில் (காவியம், புராணம்...) சொல்லப்பட்டிருக்கிறது. இவற்றுடன், செவ்வியல் வடிவிலும் நாட்டார் வடிவிலுமாகச் சேர்த்து, நாடகம், நாட்டியம், பிற நிகழ்கலைகள் என்று பார்த்தால் ராமாயணங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகிவிடும். இவற்றுடன் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள், முகமூடி நாடகங்கள், பொம்மலாட்டம், நிழலாட்டம் என்று தெற்காசிய, தென்கிழக்காசிய கலாசாரங்களில் இருப்பனவற்றையும் சேர்க்கவேண்டும். (2) ராமாயண ஆராய்ச்சியாளரான கேமி பல்க், 300 விதமான ராமாயணங்களைக் குறிப்பிடுகிறார். (3) முன்னதாக, 14-ம் நூற்றாண்டில்கூட, கன்னடக் கவிஞரான குமாரவியாசன், பூமியைத் தாங்கிக்கொண்டிருக்கும் சர்ப்பம் ராமாயணக் கவிகளின் பாரத்தைத் தாங்காமல் முனகுவதாகக் கேள்விப்பட்டு, மகாபாரதத்தை எழுதுவது என்று முடிவெடுத்தார். இந்தக் கட்டுரையில் நான் பயன்படுத்தியிருக்கும் ஏகப்பட்ட தகவல்களுக்காக, பல அறிஞர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும். இந்தத் தகவல்களை, எனக்காகவும் பிறருக்காகவும், ஒருவிதத்தில் ஒழுங்குபடுத்த முனைகிறேன். அதன்மூலம், எப்படி வெவ்வேறு கலாசாரங்களிலும் மொழிகளிலும் மதப் பின்னணியிலும் புழங்கும் இந்த நூற்றுக்கணக்கான கதையாடல்கள் ஒன்றோடு ஒன்று உறவுகொண்டுள்ளன என்பதையும் எது மொழியாக்கத்தின்போது அப்படியே கையாளப்படுகிறது, எது மொழியாக்கத்தின்போது சற்றே மாற்றப்படுகிறது, எது முற்றிலுமாக, தலைகீழாக மாறுகிறது என்பதையும் எடுத்துக்காட்ட முற்படுகிறேன்.

===
1. I owe this Hindi folktale to Kirin Narayan of the University of Wisconsin.

2. Several works and collections of essays have appeared over the years on the many Ramayanas of South and Southeast Asia. I shall mention here only a few which were directly useful to me: Asit K. Banerjee, ed., The Ramayana in Eastern India (Calcutta: Prajna, 1983); P. Banerjee, Rama in Indian Literature, Art and Thought, 2 vols. (Delhi: Sundeep Prakashan, 1986);J. L. Brockington, Righteous Rama. The Evolution of an Epic (Delhi: Oxford University Press, 1984); V. Raghavan, The Greater Ramayana (Varanasi: All-India Kashiraj Trust, 1973); V. Raghavan, The Ramayana in Greater India (Surat: South Gujarat University, 1975); V. Raghavan, ed., The Ramayana Tradition in Asia (Delhi: Sahitya Akademi, 1980); C. R. Sharma, The Ramayana in Telugu and Tamil: A Comparative Study (Madras: Lakshminarayana Granthamala, 1973); Dineshchandra Sen, The Bengali Ramayanas (Calcutta: University of Calcutta, 1920); S. Singaravelu, "A Comparative Study of the Sanskrit, Tamil, Thai and Malay Versions of the Story of Rama with special reference to the Process of Acculturation in the Southeast Asian Versions," Journal of the Siam Society 56, pt. 2 (July 1968): 137-85.

3. Camille Bulcke, Ramkatha : Utpatti aur Vikas (The Rama story: Origin and development; Prayag: Hindi Parisad Prakasan, 1950; in Hindi). When I mentioned Bulcke's count of three hundred Ramayanas to a Kannada scholar, he said that he had recently counted over a thousand in Kannada alone; a Telugu scholar also mentioned a thousand in Telugu. Both counts included Rama stories in various genres. So the title of this paper is not to be taken literally.

Saturday, November 05, 2011

தோற்கடிக்க முடியாதவன்

நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் இருந்தது. பொதுவாக லைவ் தொலைக்காட்சிக்குச் செல்லும்போது ஒப்பனையெல்லாம் செய்ய மாட்டார்கள். ஆனால் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒப்பனை அறை ஒன்று உள்ளது. ஒப்பனைக் கலைஞர்களும் உள்ளனர். நமக்கு மேக்கப் போடாமல் விடமாட்டார்கள்.

கண்ணுக்குக்கீழ் கருமையைப் போக்க ஏதோ மாவைப் பூசினார். முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டார். புருவத்தைச் சீராக்கினார்.

நான் சிரித்தேன். ‘நான் என்ன சினிமாக்காரனா? எனக்கு எதற்கு இந்த மேக்கப் எல்லாம்? இதனால் என்ன பிரயோஜனம்?’ என்றேன்.

‘இல்ல சார், வயசை ஒரு 15 வருஷமாவது குறைச்சுக் காட்டும்’ என்றார்.

‘அது எனக்கு எதுக்கு? வயசு ஆகிட்டுத்தானே இருக்கு? முன்னாடி தலை எல்லாம் நரைக்க ஆரம்பிச்சாச்சே’ என்றேன்.

‘வேணும்னா அதை மாத்திடலாமா?’ என்றார்.

‘வேண்டாம், வேண்டாம். நான் ரஜினி மாதிரி’ என்றேன்.

‘அவரேகூட சினிமால நரைச்ச தலையோட வந்தா நீங்க ஏத்துப்பீங்களா?’ என்றார்.

‘சினிமால எப்படி வந்தாலும் நிஜ வாழ்க்கைல நரைச்ச முள்ளு தாடி, பாதி வழுக்கை ரேஞ்சில தைரியமா வராரே? அந்த மாதிரி யாரால முடியும்? கமலால முடியுமா?’ என்றேன்.

‘கமல், ரஜினி ரெண்டு பேருக்குமே நான் மேக்கப் போட்டிருக்கேன் சார்’ என்றார்.

‘ஓ, அப்படியா? அப்ப ஏன் சினிமாவ விட்டுட்டு இப்பிடி டிவிக்கு வந்திருக்கீங்க?’ என்றேன்.

‘சினிமால ஹீரோ, கேமராமேன், டைரெக்டர் இப்படி கொஞ்சம் பேருக்கு மட்டும்தான் சார் பணம். மத்தவங்களுக்கு, தினசரி பேட்டா இல்லாட்டி வாழ்க்கை ஓடாது சார். அதுவும் பேட்டாகூடக் கட்டாயமாக் கிடைக்கும்னு சொல்லமுடியாது. குடும்பம்னு வந்தாச்சு சார், இனிமேயும் சினிமால லோல்பட முடியாதுன்னு விட்டுட்டேன்.’

‘யாரோட எல்லாம் சினிமால வொர்க் பண்ணிருக்கீங்க?’

‘கமல், ரஜினி, விக்ரம், அஜித்னு தமிழ் ஹீரோக்கள் எல்லாரோடையும் வொர்க் பண்ணிட்டேன் சார். கமல்கிட்டேருந்துதான் வேலையே ஆரம்பம்.’

‘இந்த நடிகர்கள் எல்லாம் எப்படி?’

‘ஒவ்வொர்த்தர் ஒவ்வொரு மாதிரி சார். ஆனா அஜித் மாதிரி வராது சார்.’

‘ஏம்ப்பா அப்படிச் சொல்றே?’

‘அவர் ஒருத்தர்தான் சார் மனுஷனை மனுஷனா மதிக்கிறவர். மத்தவங்க மோசம்னு எல்லாம் சொல்லலை சார். ஆனா என்னவோ அஜித் ஒருத்தர மட்டும்தான் சார் இந்த மாதிரி நான் பார்த்திருக்கேன். அவர மாதிரி இன்னொருத்தர் இனிக் கிடைப்பாரான்னு தெரியலை சார். முந்தி ஜெனரேஷன்ல ஆக்டருங்க எப்படி இருந்தாங்கன்னு எனக்குத் தெரியாது சார். ஆனா இந்த ஜெனரேஷன்ல அஜித் மாதிரி ஒரு நல்ல மனிதர் யாருமே கிடையாதுன்னு சொல்வேன் சார்!’

‘அதெப்படி அப்பா அவ்வளவு ஆழமாச் சொல்லறே? அப்படி என்ன பண்ணிருக்கார்?’

‘கூட வேலை செய்யற டெக்னீஷியன்ஸை மனுஷனா வேற யாரும் மதிச்சு நான் பார்த்ததில்லை சார். மங்காத்தா பட ஷூட்டிங் மொத நாள். இந்த ஃபால்ஸ் சீலிங் போடற போர்டை வெச்சு சுவர் மாதிரி அலங்காரம் பண்ணி, அதைத் தேச்சு தேச்சு, பொடி பொடியா உதிர்ந்து இருக்கும். அந்தப் பொடி அவர் மேல விழுந்து ஒரே அழுக்கா இருக்காரு ஆர்ட்ல செட் போடற ஒருத்தர். அஜித் அங்க உள்ள வந்து நேராப் போயி அந்த ஆளைத் தொட்டு, அப்படியே தன் கை அழுக்காறதையும் கவனிக்காம, கையைக் குலுக்கி நலம் விசாரிச்சாரு சார்.’

‘அது பெரிய விஷயமாப்பா?’

‘இல்ல சார். இங்க ஏர்போர்ட்டுக்கு முன்னாடி பழைய பின்னி மில்லுல ஷூட்டிங் சார். 14 நாள் நடந்துச்சு. சாப்பாடு சரியா இல்லை. மொத நாள் மோசமான சாப்பாடு. புரடக்‌ஷன்ல சரியாப் பாத்துக்கல. அடுத்த நாள் லைட் பாய்கிட்டப் பேசிக்கிட்டிருக்கறப்ப அவருக்குத் தெரிஞ்சிடுச்சு. உடனே அன்னிக்கு வீட்டுல மட்டன் பிரியாணிக்கு ரெடி பண்ணிக்கிட்டு வந்துட்டாரு. மட்டன் பீஸ் எல்லாம் வீட்டுலயே தயார் பண்ணிக் கொண்டுவந்துட்டாரு. அரிசி ஒரு கிலோ 190 ரூபாய் சார். அவரே சமையல் பண்ணாரு.’

‘என்னப்பா விளையாடற? அவரே சமையல் பண்ணாரா, இல்லை ஆளுகளை வெச்சு சமைச்சாரா?’

‘இல்லைங்க, அவரே சமையல். ஃப்ரீயா இருந்த டெனீஷியன்களைக் கூட்டு வெங்காயம், தக்காளி வெட்டித் தரச் சொன்னாரு. அவரே அரிசியை சோம்பு, பட்டை எல்லாம் போட்டு சமைச்சு, அப்புறம் மட்டனைச் சேர்த்து பிரியாணி செஞ்சாரு.’

‘அப்புறம் என்ன ஆச்சு?’

‘மொத நாள், எங்க யாருக்குமே பீஸ் கிடைக்கல சார். வெறும் சோறு மட்டும்தான். புரடக்‌ஷன்ல ஆளுங்க வந்து பீஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. டிஃபன் கேரியர்ல அள்ளிக்கிட்டுப் போயிட்டாங்க. அதுவும் அவரோட காதுக்கு அடுத்த நாள் போயிருச்சு. ஒருத்தரக் கூப்பிட்டு பிரியாணி எப்படி இருந்துச்சுன்னு கேட்டாரு. அவர் வந்து, ‘நல்லா இருந்துச்சு சார், ஆனா பீஸ்தான் கிடைக்கல. எங்களுக்கு யாருக்குமே கிடைக்கலை’னு சொன்னாரு. அன்னிக்கு அவரே திரும்ப பிரியாணி பண்ணினதுமே, புரடக்‌ஷன் மேனேஜரைக் கூப்பிட்டுச் சொல்லிட்டாரு: ‘இன்னிக்கு டிஃபன் பாக்ஸ் கட்டற வேலை எல்லாம் கிடையாது. ஏ, பி, சி அப்பிடின்னு எந்த வித்தியாசமும் இல்லாம, எல்லாரும் இங்கியே உக்கார்ந்து சேர்ந்து சாப்பிடட்டும்.’ அன்னிக்குத் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிஞ்சதும் அவரேதான் சார் யூனிட்டுல உள்ள அத்தனை பேருக்கும் பிரியாணி செஞ்சு போடுவாரு. ஒவ்வொரு நாளும் டேஸ்டு அதிகமாகிக்கிட்டே போச்சு சார்.’

‘அப்புறம்?’

‘அப்புறம் ஷூட்டிங்குக்கு ஹைதராபாத் போனோம் சார். அங்க சமையல் செய்ய முடியாதுங்கறதுனால, அவரோட சொந்தக் காசுல, கிரீன் பாவர்ச்சின்னு ஒரு ஹோட்டல் சார். அதுலேர்ந்து அத்தனை பேருக்கும் பிரியாணி வாங்கிக் கொடுத்தாரு. ஒரு பிரியாணிய நாலு பேர் சாப்பிடலாம். ஹைதராபாத்ல ஷூட்டிங் முடியறவரை அங்கேருந்துதான் சாப்பாடே.’

‘சாப்பாடு மட்டும்தானா?’

‘இல்ல சார். தீபாவளி சமயத்துல ஒவ்வொருத்தருக்கும் 3,000 ரூபாய்க்கு வெடி, ஆளுக்கு 500 ரூபாய் கேஷ் கொடுத்தாரு சார். அப்புறம் பொங்கல் சமயத்துல ஒவ்வொரு டெக்னீஷியனுக்கும் கால் பவுன் தங்கத்துல மோதிரம் வாங்கிப் போட்டாரு சார். வருஷப் பொறப்புக்கு...’

இப்படித் தொடர்ந்துகொண்டே போனார். கமல், ரஜினி போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் பலருக்கு உதவி செய்துள்ளதையும் சுட்டிக் காட்டினார். ஆனால் அஜித் அளவுக்குத் தான் யாரையுமே பார்த்ததில்லை என்றார்.

செட்டில், உடல் நலம் சரியில்லாமல் யாரேனும் வேலைக்கு வரவில்லை என்றால் உடனே தன் மேனேஜரை அனுப்பி, என்ன விஷயம் என்று தெரிந்துகொண்டு, உடல் நலக் குறைவுக்கு ஏற்றார்போலப் பணம் அனுப்பிவைப்பாராம். கூட வேலை செய்வோரை அண்ணே என்றுதான் அழைப்பாராம்.

மேக்கப் கலைஞரின் குரல் தழுதழுத்தது.

Tuesday, November 01, 2011

ரங்கநாதன் தெரு கடைகளுக்கு சீல்

சென்னை, ரங்கநாதன் தெருவில் முறையற்றதாகப் பல கடைகள் இயங்கிவருகின்றன. தெரிந்தே வரம்புகளைமீறி, அதிக மாடிகள் கொண்ட கட்டடங்களைக் கட்டுவது, போவோர் வருவோருக்கான பாதையை மறித்து பொருள்களை ஏற்றி இறக்கும் வண்டிகளைக் கொண்டுவருவது, வாகன நிறுத்தங்களைச் செய்துதராது இருப்பது, தீக்கு எதிரான பாதுகாப்பு ஏதும் இல்லாதது, நெரிசல்-தள்ளுமுள்ளு (ஸ்டாம்பீட்) பிரச்னைகளிலிருந்து மக்களைக் காக்க வழிமுறைகளைச் செய்யாதிருப்பது என்று பல முறைகேடுகள்.

அவ்வப்போது சென்னை பெருநகரக் குழுமம் சீல் வைக்கிறேன் என்பார்கள். பெட்டிகள் கைமாறியோ, கோர்ட்டுக்குப் போயோ அந்தக் கெடு நகர்த்தப்படும். இப்போது சீல் வைத்திருக்கிறார்கள் கடைகளுக்கு. 25 கடைகள் என்கிறது ரிப்போர்ட்.

அந்தக் கடைகளில் வேலை செய்வோருக்கு அடுத்த மாதம் சம்பளம் கிடைக்குமா கிடைக்காதா என்பதை முன்வைக்கிறது ஹிந்து பத்திரிகையில் ஒரு கட்டுரை. இந்தமாதிரி இரக்கத்தைத் தூண்டும் விதமாகவா, திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகள் நொய்யலில் கலப்பது தொடர்பான செய்தி எழுதப்படுகிறது? குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைக்கும் இடங்களில் இதேமாதிரியான இரக்கம் எடுபடுமா? ஐயோ பாவம் குழந்தைகள், இங்கு கிடைக்கும் பணம்கூட இல்லாமல் அவர்கள் பிச்சை எடுக்கத்தான் போகவேண்டியிருக்கும் என்று சொல்கிறோமா?

இப்படி எங்கெல்லாம் முறைகேடாக நிறுவனங்கள் இயங்குகின்றனவோ, அங்கெல்லாம் ஏழைகள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற முதல்வர்தான் தலையிடவேண்டும் என்ற கூப்பாடு எழுகிறது. இம்மாதிரியான அபத்தமான வேண்டுகோள்களுக்குத் தலைசாய்க்காமல், மிகவும் கடுமையுடனும் கண்டிப்புடனும் இவர்களிடம் நடந்துகொள்ளவேண்டும்.

சட்டம் என்றால் கிள்ளுக்கீரை என்று நடந்துகொள்கிறார்கள் இவர்கள். இவர்களுக்குச் சரியான பாடம் கற்பிக்கப்படவேண்டும். அப்படி நடக்குமா என்பதில் எனக்கும் பிறரைப்போலவே சந்தேகம் உள்ளது. ஏதோ சில பேட்ச் அப் நடந்து, விதவிதமான செட்டில்மெண்ட் முடிந்து, மீண்டும் பழையபடி ஜாம் ஜாம் என்று பிசினஸ் நடக்கும் என்று அனைவரும் பேசிக்கொள்கிறார்கள். இம்முறையும் அப்படியே நடந்தால் அது மிகவும் சோகமான ஒன்றாக இருக்கும்.