சனிக்கிழமை (12/2/2005) அன்று அசோகமித்திரனின் ஐம்பதாண்டு கால எழுத்துப்பணியைப் பாராட்டி ஒரு விழா நடந்தது.
இதுபோன்று ஒரு விழா நடத்த வேண்டும் என்று முடிவு செய்தது பிரபஞ்சன், கவிதா, முரளிதரன் ஆகியோர். கடவு இலக்கிய அமைப்பைச் சேர்ந்தவர்கள். முரளிதரன் இந்திய டுடே தமிழ் இதழில் வேலை செய்பவர். அவர் பேட்டியெடுத்த போதுதான் அசோகமித்திரனிடம் "உங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைத்துள்ளதா" என்று கேட்டிருக்கிறார். அதைப்பற்றி நேற்று பேசும்போது அசோகமித்திரன் தான் உண்மையிலேயே ஓர் அங்கீகாரத்தைத் தேடி ஆதங்கமாக எதையும் குறிப்பிடவில்லை என்றும் அவற்றைத் தான் விரும்புபவனில்லை என்றும் குறிப்பிட்டார்.
பிரபஞ்சன் ஆரம்பித்து வைத்த காரியத்தை நிறைவாக முடித்த திருப்தி நிச்சயம் எங்களுக்கு உண்டு. கிட்டத்தட்ட நிகழ்ச்சியில் யார் எதைப் பற்றிப் பேச வேண்டும் என்பது கடவு இலக்கிய அமைப்பின் மூலம் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. சுந்தர ராமசாமி, ஆ.இரா.வேங்கடாசலபதி, ஞானக்கூத்தன், பால் சக்கரியா ஆகியோர் கலந்துகொள்வதைப் பற்றியும் முன்னரே முடிவு எடுக்கப்பட்டு விட்டது.
தமிழ் இலக்கியச்சூழலில் யார் மனதையும் புண்படுத்தாத வண்ணம் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்தோம். அனைவருக்கும் அனுப்பினோம். அல்லது அப்படி நடந்ததாகவே நினைத்தும் கொண்டோம். ஆனால் கடைசிவரை பலருக்கு அழைப்பிதழ் சென்றே சேரவில்லை என்பது புரிந்தது. கடந்த சில தினங்களாக யாரிடமிருந்தாவது தொலைபேசி அழைப்பு வந்தால் அது பொதுவாக "எனக்கு இன்னமும் அழைப்பிதழ் வந்து சேரவில்லையே" என்பது பற்றித்தான். அதைத் தொடர்ந்து யாரிடமிருந்தாவது தொலைபேசி அழைப்பு வந்தவுடனே நாங்களே கேட்கும் முதல் கேள்வியும் "என்ன சார், அழைப்பிதழ் வந்ததா" என்பதுமாகத்தான்.
அசோகமித்திரன் என்ற கலைஞனுக்கு ஒரு வாழ்த்து நிகழ்ச்சி நடக்கையில் "அழைப்பிதழாவது, மண்ணாவது, அந்தக் கலைஞன் எனக்கும் சொந்தம், அவரது எழுத்து என்னையும் பாதித்துள்ளது, நீ கூப்பிடா விட்டாலும் நான் வருவேன்" என்று பலர் வந்து கலந்து கொண்டனர். ஃபில்ம் சேம்பர் ஆடிட்டோரியம் நிறைந்து இருந்தது.
பெரிய திரையில் அம்ஷன் குமாரின் அசோகமித்திரன் பற்றிய ஆவணப்படத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஆவணப்படத்தில் சா.கந்தசாமி அசோகமித்திரனின் கதைகளில் தஞ்சாவூர் மண்ணின் மணம் பற்றிப் பேசும்போது திடீரென்று ஒலிச்சத்தம் நின்றுபோனது. அலறியடித்துக்கொண்டு வீடியோ இணைப்பையும் ஸ்பீக்கரையும் தட்டிக் கொட்ட, இரண்டு நிமிடங்களில் ஆடியோ மீண்டும் வந்து தர்மசங்கடத்தைத் தவிர்த்தது.
பில்ம் சேம்பர் ஆடிட்டோரியத்தில் மேடையில் போட நாற்காலிகள் கிடையாது. நாம்தான் வெளியிலிருந்து கொண்டுவர வேண்டுமாம்! (வேறு யாராவது இங்கு நிகழ்ச்சி ஏதேனும் நடத்த முனைந்தால் இதை மனதில் வைத்திருக்கவும்!). எங்கள் அலுவலகத்தில் வைத்திருந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் சரியாக ஏழு. மீதம் உள்ளவை கணினி முன் அமர ஏதுவான சக்கரங்கள் வைக்கப்பட்டிருக்கும் இருக்கைகள். மேடையில் அமர வேண்டியவர்கள் ஏழு பேர். நல்ல வேளை. நிகழ்ச்சி தொடங்குமுன் நாற்காலிகளைக் கொண்டுவந்து விட்டோம். இந்த நாற்காலிகள் மேடையில் அமர்வதற்கு மிகவும் வசதியான இருக்கைகள் அல்ல. வந்திருந்த அனைவரும் பொறுமையாக அமர்ந்திருந்தனர். அவர்களிடம் இதற்கென தனியாக மன்னிப்பு கேட்க வேண்டும்!
நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தவனாதலால், எப்பொழுதும்போல அரைக் கால்சட்டை அணிந்திருப்பதை விடுத்து முழுக் கால்சட்டை அணிந்திருந்தேன்.
ஆவணப்படம் முடிந்தவுடன் டீ, காபி, சமோசாவுக்கென ஒரு சிறு இடைவேளை விடலாம் என்று நினைத்திருக்க, விருந்தினர்கள் அதற்குள்ளாக மேடையேறி விட்டனர். அதனால் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் வெளியே செல்ல விரும்பாமல் சற்று தயக்கத்துடன் உள்ளேயே உட்கார்ந்திருந்தனர். சிறிது தூண்டுதலுக்குப் பிறகு வெளியே வந்து ருசிபார்த்தனர். சாதாரணமாக இலக்கியக் கூட்டங்களில் வழங்கும் நீர்த்துப்போன காப்பி அல்ல:-) பிரமாதமான காப்பி. (டீயை நான் ருசி பார்க்கவில்லை). சமோசாவும் மிக நன்றாக இருந்தது என்றுதான் நினைக்கிறேன்.
எஸ்.வைதீஸ்வரன் கூடியிருந்தவர்களை வரவேற்றார். அத்துடன் அசோகமித்திரனுடனான தன் நட்பு, அவரது எழுத்துகள் பற்றிய தன் எண்ணங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டார். அடுத்து பிரபஞ்சன் மிகச் சுருக்கமான தலைமையுரை ஆற்றி, பேச வந்திருக்கும் சிறப்புப் பேச்சாளர்களைப் பேச அழைத்தார்.
முதலில் சுந்தர ராமசாமி. நீண்ட தன் பேச்சில் பல இடங்களில் அரங்கமெங்கும் சிரிப்பலைகளைப் பரவ விட்டார். அசோகமித்திரனின் எழுத்துகளை ஏன் திராவிட இயக்கத்தினரும், முற்போக்கு எழுத்தாளர்களான இடதுசாரி எழுத்தாளர்களும் புறக்கணிக்கின்றனர் என்று கேட்டார். திராவிட இயக்கத்தவரது புறக்கணிப்பையாவது புரிந்து கொள்ளலாம் - அதற்கு இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட காரணங்கள் இருக்கலாம், ஆனால் ஏன் இடதுசாரிகள் புறக்கணிக்கின்றனர் என்பது தனக்கு விளங்கவில்லை என்றார். "அசோகமித்திரனின் எழுத்துகளில் மனிதநேயம், மனிதன் இந்த சமூகத்தில் இடைவிடாது படும் துக்கம் ஆகியவை இழைந்தோடுவதைப் பற்றிப் பேசினார். அசோகமித்திரனின் எழுத்துகளில் வன்முறை என்பது அறவே இருக்காது. ஒரு கத்தி கூட வந்தது கிடையாது. ஓரிடத்தில் அருவாள் மனை வருகிறது - காய்கறி நறுக்க. மற்றோரிடத்தில் கத்தரிக்கோல் வருகிறது - துணி வெட்ட. அவ்வளவுதான்." என்றார்
அசோகமித்திரனின் நடை பற்றியும் எழுத்துகளில் ஒளிந்திருக்கும் craft பற்றியும் சற்று விளக்கினார். உரத்துப் பேசாத, அலங்கார ஆடம்பரங்கள் இல்லாத நடை. திரைச்சீலையை சற்றே - வெகு சற்றே - விலக்கி, சீலைக்குப் பின்னால் இருப்பவர்கள் நடைமுறையை சிறிதும் பாதிக்காத வகையில் பார்த்து, அதை வார்த்தைகளில் வடிப்பதில் சமர்த்தர் என்றார். வரிக்கு வரி கேள்விகள் கேட்கும், அதன்மூலம் பல்வேறு சாத்தியங்களை வெளிக்கொணரும் அசோகமித்திரனின் நடையை சுந்தர ராமசாமி அப்படியே ஒரு உதாரணத்தை முன்வைத்து பேசிக்காட்டினார்.
சிலருக்கு சுந்தர ராமசாமி பேசியது தவறாகக் கூடத் தோன்றியது (
பார்க்க: பிரகாஷின் பதிவு) என்று கேள்விப்பட்டேன். சிலர் உடனேயே நிறுத்தியிருக்கலாம், இவ்வளவு தூரம் இழுத்தடித்திருக்க வேண்டியதில்லை என்றும் சொன்னார்கள். ஆனால் அரங்கில் பலர் விழுந்து விழுந்து சிரித்தனர்.
சுந்தர ராமசாமி, நவீனத் தமிழ் எழுத்துகளை பாடமாக வைப்பதாக அரசு யோசித்தால், அந்தத் துறைக்கு சரியான இயக்குனர் அசோகமித்திரனாகத்தான் இருக்க முடியும் என்றும், அனைவரும் அசோகமித்திரனை தவறாமல் படிக்க வேண்டும் என்றும் பேசி முடித்தார்.
வெங்கடாசலபதி பேசும்போது திராவிட இயக்கச் சார்பில் இருந்தாலும் தான் அசோகமித்திரனைப் புறக்கணிக்கவில்லை என்றார். மேலும் அசோகமித்திரன் மிகவும் அறியப்பட்ட தமிழ் எழுத்தாளர் என்றும், சில நாள்கள் முன்னர் ராமச்சந்திர குஹாவிடம் பேசிக்கொண்டிருக்கையில் இருவரும் தீவிரமாக அசோகமித்திரனின் எழுத்துகளைப் பற்றிப் பேசியதையும், தொடர்ந்து யார் மூலமாக குஹா அசோகமித்திரனைப் பற்றிக் கேள்விப்பட்டார் என்றதற்கு குஹா, ஷ்யாம் பெனகல் மூலம் என்றும் பதில் சொன்னாராம். அசோகமித்திரனின் பாதிப்பு எப்படி அடுத்த தலைமுறைக்கு வந்திருக்கிறது என்று பார்க்கும்போது கிட்டத்தட்ட அடுத்த தலைமுறையைச் சேர்ந்த தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் அனைவருமே தமது முதல் சிறுகதைத் தொகுதிகளுக்கு அசோகமித்திரனிடமிருந்து முன்னுரை வாங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
ஞானக்கூத்தன் அசோகமித்திரனின் கட்டுரைகளைப் பற்றிப் பேசினார். படைப்புலகில் புனைவுகளுக்கு எந்த அளவுக்கு அசோகமித்திரன் நேரம் செலுத்தினாரோ, அதே அளவுக்கு பிறர் எழுதியதைப் படிப்பதிலும் செலுத்தினார் என்றார். அசோகமித்திரன் தனது கட்டுரைகளில் கிட்டத்தட்ட 160 தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களது படைப்புகளைப் பற்றியும் எழுதியுள்ளார் என்றும், அதைத் தவிர பிறமொழி எழுத்தாளர்கள் (ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன்) பலரைப் பற்றியும் அவர் எழுதியது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் சொன்னார். அவர் எழுதியதை வைத்துப் பார்க்கையில், அசோகமித்திரன் தோராயமாக 1,50,000 பக்கங்கள் படித்திருக்க வேண்டும் என்று தான் கணக்கிடுவதாக ஞானக்கூத்தன் சொன்னார்.
அசோகமித்திரன் சினிமா பற்றி எழுதியுள்ள கட்டுரைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் பழைய காலம் முதல் ரஜினி-கமல் வரை அசோகமித்திரன் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். அதைப்போலவே உலக சினிமாக்கள் பற்றி எண்ணற்ற கட்டுரைகள் எழுதியுள்ளார். பல உலக சினிமாக் கலைஞர்களைப் பற்றியும், உலக இலக்கியங்கள் பற்றியும் தமிழ் மக்களுக்கு சரியான அறிமுகத்தைக் கொடுத்தவர் அசோகமித்திரன் என்றார்.
நகுலனின் கவிதை (முலை, துவாரம் போன்ற சொற்களைக் கொண்டு அமைத்தது) ஒன்றை விமர்சித்து, அதே கவிதையை, அதே பொருள் அமையுமாறு, மேற்படி சொற்களை விலக்கி அசோகமித்திரன் எழுதியதை விவரித்த ஞானக்கூத்தன் அசோகமித்திரனின் படைப்புலகத்தில் வன்முறை இல்லாததைப் போலவே, காமம் இல்லாததைப் போலவே ஷாக் வேல்யூ சொற்களும் கிடையாது. ஆனால் வலிமையில் சற்றும் குறைந்தது அல்ல என்று முடித்தார்.
பால் சக்கரியாவின் உரை ஆங்கிலத்தில் அமைந்திருந்தது. தான் மூன்று வருடங்களுக்கு முன்னர்தான் அசோகமித்திரனைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரது தண்ணீர் கதையின் ஆங்கில வடிவத்தைப் படித்ததாகவும், ஆங்கில வடிவத்திலேயே கட்டிப்போடும் விதத்தில் அமைந்திருந்த அந்தக் கதை மூல வடிவத்தில் எப்படி இருந்திருக்கும் என்று வியந்து போனதாகவும் குறிப்பிட்டார்.
ராஜஸ்தானில் நீம்ரானா கோட்டையில் நடைபெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர் மாநாட்டில் (பிப்ரவரி 2002) கலந்துகொண்டபோது தான் அசோகமித்திரனை முதலில் சந்தித்ததாகவும், இப்படி மெலிந்த தேகம் கொண்ட இவர் இந்த மாநாடு முடியும்வரைக் கூட தாங்குவாரா என்று தான் பயந்துபோனதாகவும் தேவைப்படும்போதெல்லாம் தான் அசோகமித்திரனுக்குக் கைத்தாங்கலாக இருந்து அவரைக் கவனித்துக்கொண்டதாகவும், ஆனால் அசோகமித்திரன் அந்தக் கூட்டத்தில் பேசத்தொடங்கியதும் அதைக் கண்டு தான் பிரமித்துப்போனதாகவும் சொன்னார். "Then I realised.... don't underestimate a frail looking Tamil writer!"
தண்ணீர் ஆங்கிலப் புத்தகத்திலிருந்து தன்னை அசரவைத்த சில வரிகளைப் படித்தார்.
அசோகமித்திரனின்
Sand and other stories என்னும் மூன்று குறுநாவல்களின் ஆங்கில மொழியாக்கத்துக்கு பால் சக்கரியா முன்னுரை எழுதியுள்ளார்.
ஏற்புரையில் அசோகமித்திரன் படைப்பு பற்றிய தன் எண்ணங்களைச் சொன்னார். தன் எழுத்துகளில் வன்முறை என்பது துளியும் இல்லை என்பதை சுந்தர ராமசாமி சரியாக அவதானித்துள்ளார் என்றார். அதேபோல ஆண்-பெண் இடையேயான உடலுறவு சார்ந்த எந்த விஷயத்தைப் பற்றியும் தான் எழுதியதில்லை. அதை எழுதத் தோன்றியதில்லை என்றார். தன் எழுத்துகளை பிறர் படிக்க வேண்டும் என்று தான் என்றுமே வற்புறுத்தியதில்லை என்றும் அவ்வாறு பிறரை வற்புறுத்துவது கூட ஒருவகையில் வன்முறைதான் என்றும் சொன்னார். கணையாழி நடத்தியபோது பக்கங்கள் மீதியிருக்கும்போதெல்லாம் அதை நிரப்ப எழுதியவைதான் இப்பொழுது வெளியான கட்டுரைத் தொகுப்புகளில் உள்ளவற்றும் பலவும் என்றார். பத்திரிகை நடத்துபவர்களுக்குத்தான் இது புரியும் என்றார்.
தனக்கு அங்கீகாரம் இல்லை என்றோ, அது தேவை என்றோ, விருதுகள், பட்டங்கள் ஆகியவை வேண்டுமென்றோ தான் என்றுமே ஆசைப்பட்டதில்லை என்றார். இதற்கிடையில் அசோகமித்திரனுடன் ஜெமினி ஸ்டுடியோவில் சமையலறையில் வேலை செய்த மணியன் என்பவர் மேடையேறி பொன்னாடை போர்த்தி, பை நிறைய பட்சணங்கள் கொடுத்தார். விருது தேவையில்லையே தவிர பட்சணங்கள் என்றால் அதை மறுக்க மாட்டேன் என்று சந்தோஷமாக வாங்கிக்கொண்டார்!
அசோகமித்திரன், ஜெமினி மெஸ் மணியன், பை நிறைய பட்சணம். பின்னால் நிழல் போல பிரபஞ்சன். பட்சணம் அசோகமித்திரனிடம் பத்திரமாகப் போய்ச்சேர்ந்ததா அல்லது பிரகாஷ் அதை தானே லவட்டிக்கொண்டு சென்றாரா என்பது தெரியவில்லை.விருட்சம் அழகியசிங்கர் நன்றியுரையுடன் விழா இனிதே முடிந்தது.
அதைத் தொடர்ந்து முக்கியஸ்தர்களை அவரவர் வீடுகளுக்கு, தங்குமிடங்களுக்குக் கொண்டுசேர்க்க வேண்டியிருந்தது.
இந்த நிகழ்ச்சி முழுதும் (2.5 மணிநேரங்கள்) விடியோ எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு டிவிடிகள் அல்லது மூன்று விசிடிகள். அசோகமித்திரன் கட்டுரைத் தொகுதிகளை வாங்கும் நல்ல மனிதர்களுக்கு இலவசமாக இந்நிகழ்ச்சி விடியோ தரப்படும்;-) அசோகமித்திரன் கட்டுரைத் தொகுதிகளை 10% தள்ளுபடியில் வாங்க
காமதேனு.காம். சென்னைக்குள் டெலிவரி சார்ஜஸ் கிடையாது.