Tuesday, October 25, 2011

கிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்களுடன் சந்திப்பு

நேற்று, கிண்டி பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு என்.எஸ்.எஸ் மாணவர்களிடம் பேசினேன். நானே கொண்டுசென்றிருந்த ரெகார்டரை ஒரே இடத்தில் வைத்து ஒரே ஆங்கிளில் பிடித்த வீடியோ. ஆடியோ தரம் சுமார்தான். மைக்கிலிருந்து சற்றுத் தொலைவில் நின்றபடிப் பேசியதால் ரெகார்டிங் அப்படி ஆகியிருக்கிறது. பொறுத்தருள்க.

Sunday, October 23, 2011

2ஜி குற்றப்பத்திரிகை

நேற்று முழுதும் தொலைக்காட்சியையோ இணையத்தையோ பார்க்கமுடியாமல் இருந்தது. இன்று காலையில் ஹிந்து செய்தித்தாளில் வந்திருந்த விரிவான தகவலைப் பார்த்தேன்.

ஆ.இராசா, சித்தார்த்த பெஹூரா, ஆர்.கே.சந்தோலியா என்ற மூன்று அமைச்சர், அரசு அலுவலர்கள், கனிமொழி, சரத்குமார், யூனிடெக், ஸ்வான், ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர்மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து 2ஜி வழக்கு நவம்பர் 11 முதல் நடைபெறும் என்று சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது.

இதனை அடுத்து, நாளை கனிமொழிக்கு பெயில் கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன். இராசாவுக்கு பெயில் கொடுப்பார்களா என்பது சந்தேகம். மற்ற அனைவருக்கும் கிடைத்துவிடலாம்.

கடைசியாக 1.75 லட்சம் கோடி என்பதெல்லாம் வழக்குக்கு உதவாத விஷயங்கள் என்பதை சிபிஐ நீதிமன்ற நீதிபதி சாய்னி ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பது கவனிக்கப்படவேண்டும். ஸ்வானின் ஷாஹித் பால்வா வழியாக கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த பணம் மட்டுமே இராசாமீதான லஞ்சக் குற்றச்சாட்டுக்கு வலுவாகத் துணைநிற்பது. இராசா வேறுவகையில் பணம் பெற்றாரா, கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் வழியாக இராசாவுக்குப் பணம் வந்ததா, சாதிக் பாட்சா விஷயம் என்ன, யூனிடெக், ஸ்வான் தவிர பிறர் இராசாவுக்கோ, அவருடைய உறவினர்களுக்கோ, பினாமிகளுக்கோ, திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தாருக்கோ பணம் கொடுத்தார்களா என்பது பற்றி சிபிஐ விசாரித்ததாகவே தெரியவில்லை.

இந்தக் காரணங்களுக்காகவே வழக்கு சரியாக விசாரிக்கப்படவில்லை என்று சொல்லவேண்டும். 1.75 லட்சம் கோடி என்ற ஹைப்பிலிருந்து சிபிஐயின் 30,000 கோடி ஊழல் என்பதற்குத் தாவி, இப்போது 200-250 கோடி என்ற அளவுக்கு வந்து சேர்ந்துள்ளது.

இரண்டு, மூன்று வழக்குகளாக இதனைப் பிரித்து நடத்தினால் உபயோகமாக இருக்கும். ரிலையன்ஸ்-ஸ்வான், எஸ்ஸார்-லூப், யூனிடெக், (டாடா?) ஆகியோர் செய்துள்ள கார்பொரேட் முறைகேடுகள். டாடா தவிர்த்து பிறர்மீது வலுவான சாட்சியங்கள் உள்ளன. அவர்களைத் தனியாக விசாரித்து, கடுமையான அபராதங்கள் விதித்து, சில மாதங்கள் சிறைத்தண்டனை கொடுத்து, முடித்துவிடலாம்.

அடுத்து இராசா, பெஹூரா, சந்தோலியா ஆகிய பொது ஊழியர்கள். இவர்கள்மீது இரண்டு குற்றச்சாட்டுகள்: முதலாவது - சட்டத்தை வளைத்து, திருத்தி, முறைகேட்டில் ஈடுபடுவதன்மூலம் சில கார்பொரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாக நடந்துகொண்டது. இரண்டாவது - நேரடியாகவோ மறைமுகமாகவோ லஞ்சமாகப் பணம் பெற்றுக்கொண்டது. இதில் முதலாவதற்கு நிறையச் சாட்சியங்கள் உள்ளன. அதற்கான தண்டனை அதிகமாக இருக்கமுடியாது. இரண்டாவதற்கான சாட்சியங்கள் மிக வலுவாக இல்லை. இங்கு கலைஞர் தொலைக்காட்சி விவகாரம் மட்டுமே வலுவாக இருப்பதுபோலத் தோன்றுகிறது; ஆனால் அதுவும் சட்டம் எதிர்பார்க்கும் வலுவில் இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.

அடுத்து, மேலே உள்ளதுடன் இணையும் கலைஞர் தொலைக்காட்சி ஷாஹித் பால்வா கம்பெனியிடமிருந்து “கடன்” பெற்ற விவகாரம். நேரடியாகப் பார்த்தால் இதனை லஞ்சம் என்பதுடன் இணைக்கமுடியும் என்றாலும் சட்டரீதியாக இதனை நிரூபித்தல் மிக மிகக் கடினம். கிரிமினல் வழக்குக்குத் தேவையான ரிகர் இதில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதன் காரணமாக கனிமொழி, சரத்குமார் கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் பலவீனமானது. இராசாவும் கனிமொழியும் சரத்குமாரும் சேர்ந்து கான்ஸ்பிரசியில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கு வலுவான சாட்சியங்களைக் கொண்டுவரவேண்டும். காகிதங்கள், ஒலிப்பதிவுகள், கூட இருந்து பார்த்தோரின் சாட்சியங்கள் ஆகியவை தேவைப்படும். இராசா பால்வாவிடம் இப்படி கலைஞர் தொலைக்காட்சியில் பணம் போட்டால்தான் உனக்குத் தேவையான உரிமங்களைத் தருவேன் என்று சொன்னதற்கு சாட்சியங்கள் வேண்டும். வெறும் சர்கம்ஸ்டான்ஷியல் எவிடென்ஸை வைத்துக்கொண்டு இதனை நிரூபிக்கமுடியுமா என்று தெரியவில்லை.

***

நாட்டின் மிக முக்கியமான ஊழல் வழக்கு என்று கட்டம் கட்டப்பட்ட இது, மிகச் சாதாரணமான ஒரு வழக்கு என்ற பெருமையை மட்டுமே பெறப்போகிறது.

இதன் மிகப்பெரும் காசுவாலிட்டிகள் 3ஜி, 4ஜி நெட்வொர்க்கும்தாம். அடிமட்ட மக்களுக்கான பிராட்பேண்ட் இணைய இணைப்புக்கான கட்டணம் மிக அதிகமாக ஆகும். புதிய தொலைத்தொடர்புக் கொள்கை (2011) பற்றி முழுமையாக நான் பார்க்கவில்லை. ஆனால் ஸ்பெக்டரத்தை சந்தை மாதிரியில் விலைக்கு அளிப்பது (அதாவது ஏதோ ஒருவிதத்தில் அதிகக் கட்டணம் வசூலிப்பது) என்று அதில் சொல்லப்படுவது இந்தியாவுக்கு நல்லதல்ல என்பதை மட்டும் என்னால் இப்போதைக்குச் சொல்லமுடியும்.

இந்தப் பிரச்னைக்கு யார் அடிப்படைக் காரணம்? ஒருவரை என்று குற்றம் சாட்டமுடியாது.
தயாநிதி மாறனின் முரட்டுத்தனம்.
இராசாவின் திருட்டுத்தனம்.
இவர்கள் இருவரையும் முற்று முழுதாக ஆதரித்த கருணாநிதியின் பிடிவாதம் மற்றும் முட்டாள்தனம்.
இதனைக் கண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொண்ட மன்மோகன் சிங்கின் கையாலாகாத்தனம்.
இது தன் பிரச்னை அல்ல என்று கைகழுவிவிட்ட சோனியா காந்தியின் அசட்டுத்தனம்.
இவை அனைத்தும் சேர்ந்து இன்று பாதிப்புக்கு உள்ளாவது, இந்தியாவின் தொலைத்தொடர்புக் கொள்கையே. இதன் விளைவுகள் அடுத்த பத்தாண்டுக்கு இந்தியாவில் எதிரொலித்துக்கொண்டே இருக்கும்.

Tuesday, October 18, 2011

நேற்றைய சென்னை மாநகராட்சித் தேர்தல்

கிண்டியிலிருந்து கோபாலபுரம் வந்து வாக்களிக்கவேண்டியிருந்தது. அடுத்த தேர்தலுக்குள் வாக்குச் சாவடி மாற்றியிருப்பேன்.

நிறைய வருத்தங்கள். சென்ற சட்டமன்றத் தேர்தலில் இருந்த கூட்டம் இப்போது இருக்கவில்லை. சென்னை மாநகராட்சிக்கு வெறும் 48% வாக்குப் பதிவுதான் நடந்துள்ளது என்பது கடும் சோகம். இதற்கு முழுக்காரணம் வீட்டுக்குள்ளிருந்து சாக்கியம் பேசும் மிடில் கிளாஸ் ஆசாமிகள்தான் என்பது தெளிவு. இன்னொரு முறை அவர்கள் நீட்டி முழக்கினால் அவர்கள் வீட்டில் சாக்கடைத் தண்ணீரைக் கொண்டுவந்துதான் கொட்டவேண்டும். நான் தெருவில் பார்த்தவரை கீழ்த்தட்டு மக்கள்தான் அதிகமாக வாக்களிக்கச் சென்றுகொண்டிருந்தனர்.

அடுத்து, வாக்குச் சாவடி மேனேஜ்மெண்ட். அடையாளச் சீட்டைக் காண்பித்தாலே போதும், உடனே வாக்களிக்க அனுப்பிக்கொண்டிருந்தனர். தேர்தல் அடையாள அட்டையைக் காண்பிக்கச் சொல்லவே இல்லை. நானாகக் காண்பித்தும் அதனைப் புறக்கணித்தனர். எனக்கு முன்னால் ஒரு இளைஞர் எந்தவித அடையாள அட்டையும் இல்லாமல் வாக்களிக்கச் சென்றார். யாருமே, சாவடி ஏஜெண்டுகள்கூட, கண்டுகொள்ளவில்லை.

காவல்துறையினர் பெயருக்கு, சும்மா நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவித அவசர உணர்வோ, எச்சரிக்கை உணர்வோ இல்லை.

ஆளாளுக்கு சாவடிக்குள் வந்துபோய்க்கொண்டிருந்தனர். யாரோ ஒரு கரைவேட்டிக்காரர் தேர்தல் அலுவலருக்கு சாப்பாடு (சரவணபவன்) வாங்கிக் கொடுத்தார். இது வரைமுறைக்குள் வராத ஒன்று. ஆனால் அந்தத் தேர்தல் அலுவலரே சொந்தக் காசு கொடுத்து உணவு வாங்கி வரச் சொல்லியிருந்திருக்கலாம். தெரியவில்லை.

வாசலில் ஒரு அம்பாசடர் வண்டியில் பத்து பேருக்குமேல் திணிக்கப்பட்டு உட்கார்ந்திருந்தனர். என்ன காரியத்துக்காக என்று தெரியவில்லை. என்ன காரியமாக இருந்தாலும் அது நல்ல காரியம் என்று நினைக்கத் தோன்றவில்லை. பின்னர் வேறு ஓரிடத்தில் சுமார் 17-18 வயது மதிக்கத்தக்க பல இளைஞர்கள் ஒரு டாடா மேஜிக் வண்டியில் திணிக்கப்பட்டு எங்கோ கொண்டுசெல்லப்பட்டுக்கொண்டிருந்தனர். இந்தக் காரியத்தின் நோக்கமும் நல்லதாக இருக்காது என்றே பட்டது.

ஆங்காங்கு வன்முறை நிகழ்வுகள் நடந்துள்ளதாகப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. சென்ற 2006 அளவுக்கு இல்லை என்றாலும் இந்த வன்முறை மிக மோசமானது. இதற்கு ஜெயலலிதா அரசுதான் பொறுப்பேற்கவேண்டும். ஆனால் வன்முறையில் திமுகவும் ஈடுபட்டுள்ளதாகச் சில செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரே ஆசுவாசம், எல்லா இடங்களிலும் வன்முறை இன்றி, ஓரளவுக்கு நல்லதாகவே தேர்தல் நடந்துமுடிந்ததுதான். சென்னை என்ற அவமானச் சின்னத்தைத் தாண்டி, பிற இடங்களில் அதிகமாகவே வாக்குப்பதிவு நடந்துள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது.

Friday, October 14, 2011

வெறும் காற்றிலிருந்து சுத்தமான குடிநீர்

நேற்று திருவான்மியூரில் இந்திய நுகர்வோர் சங்கத்தின் (கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா) தேசிகன், ராஜன் ஆகியோருடன் ஒரு சந்திப்பு. இடையில், நீர் சுத்திகரிக்கும் கருவிகள் பற்றிப் பேச்சு வந்தது. அக்வா கார்ட் (யுரேகா ஃபோர்ப்ஸ்) சேவை சரியாக இல்லை; எனவே இந்துஸ்தான் லீவரின் ப்யூர்-இட் வாங்கியுள்ளேன் என்றேன். விலை கொஞ்சம் அதிகமான, ஆனால் காற்றிலிருந்தே நீரை உறிஞ்சி சுத்திகரித்துத் தரும் வாட்டர் ப்யூரிஃபையர் ஒன்று உள்ளது, மெட்ரோ வாட்டர் சப்ளையே தேவையில்லை என்றார் தேசிகன். அதனை அவர்கள் இப்போது நீரின் தரத்துக்காகப் கன்ஸ்யூமர் அசோசியேஷன் பரிசோதித்துவருகிறது.

அந்தக் கருவியைப் பார்க்கமுடியுமா என்று ஆர்வத்துடன் கேட்டேன். இங்கேயேதான் பால்கனியில் இருக்கிறது என்றார் தேசிகன். அதற்குமுன் அதிலிருந்து கிடைக்கும் நீர் ஒரு கப் கொண்டுவந்து கொடுத்தார்கள். குடித்துப் பார்த்தேன். நல்ல நீர்.

ஆகாய கங்கை என்பதுதான் அந்தக் கருவியின் பெயர்.

இதன் உட்கருத்து மிக எளிதானது. காற்றில் எப்போதுமே ஈரப்பதம் உள்ளது. கடலோரப் பகுதிகளில் - அதாவது சென்னை போன்ற நகரங்களில் இந்த ஈரப்பதம் மிக அதிகமாகவே உள்ளது. ஒரு மழை பெய்தபிறகு அடிக்கும் வெயிலில் வியர்வை சொட்டச்சொட்ட நாம் திண்டாடக் காரணம் இந்த மிக அதிகமான ஈரப்பதமே. ஆற்றங்கரை நகரங்களிலும்கூட ஈரப்பதம் இருக்கும். ஆனால் கடற்கரை நகரங்கள்தான் இதில் உச்சம்.

இந்த ஈரப்பதத்தை உறிஞ்சி, பிழிந்து, கசடுகளை நீக்கினால் நல்ல நீர் தயார்.

பிற வாட்டர் ஃபில்ட்டர்களை எடுத்துக்கொண்டால், அவற்றுக்கு நீர் சோர்ஸ் தேவை. கார்பொரேஷன் நீர் குழாய் வழியாக வரவேண்டும். அல்லது நிலத்தடி நீர் வேண்டும். ஆனால் இந்த ஆகாய கங்கை கருவிக்கு அப்படி ஏதும் தேவையே இல்லை. இது வெறும் கருத்து மட்டுமல்ல. நிஜமான கருவி. நான் பார்த்த கருவி ஒரு நாளைக்கு சுமார் 40 லிட்டர் நீரைத் தருகிறது. இதனை வைக்க இடம் வேண்டும். மின்சாரத்தால் இயங்குவது. இதேபோன்ற கருவியின் உயர் வெர்ஷனில் 100-120 லிட்டர் நீரைக்கூடப் பெறமுடியும் என்று நினைக்கிறேன். 40 லிட்டர்வரை ஒரு நாளுக்குத் தரும் கருவியின் விலை கிட்டத்தட்ட 30,000 ரூபாய் இருக்கும் என்கிறார்கள். ஒரு லிட்டர் நீருக்கு ஆகும் செலவு என்று பார்த்தால் ரூ. 1.25 முதல் ரூ. 1.50 வரை இருக்கலாம் என்கிறார்கள்.
இந்தக் கருவியைத் தயாரித்துள்ளவர் சென்னை ஐஐடியில் படித்த ஷாம்சுந்தர் என்ற ஒருவர் என்று சொன்னார்கள். நான் இவரைச் சந்தித்ததில்லை. சந்தித்து இந்தக் கருவியை எப்படியெல்லாம் சந்தைப்படுத்தலாம் என்பது தொடர்பாகப் பேச விரும்புகிறேன். சந்தித்ததும் அதனைப் பற்றியும் எழுதுகிறேன்.

இந்தக் கருவியால் என்ன லாபம்?

நல்ல நீரை மக்களுக்கு அளிக்க அரசு நிறையச் செலவழிக்கிறது. ஆனால் இந்த நீரின் பலன்கள் பெரும்பாலும் பணம் படைத்தோருக்கே செல்கிறது. ஒரு வீடு என்றால் ஒரு நாளைய தேவை என்பது சில நூறு லிட்டர்கள். குடிக்க, சமையல் செய்ய மட்டுமல்ல, குளிக்க, துணி துவைக்க, வீடு துடைக்க அல்லது கழுவ, கார், டூவீலர் துடைக்க.

ஆனால், பெரிய பெரிய அலுவலகங்களுக்கு குடிதண்ணீர் அல்லது பாண்ட்ட்ரி சமையல் வேலைகளுக்கும் பாத்திரம் கழுவவும் மட்டுமே நீர் தேவைப்படும். அதனை இந்தக் கருவியால் (அல்லது கருவிகளால்) பெற்றுக்கொள்ள முடியும். கருவிச் செலவு அதிகமானாலும், அவர்கள் மாநகராட்சி/நகராட்சி மீது அழுத்தம் தரவேண்டியதில்லை என்று ஆகிவிடும். அதனால் நிலத்தடி நீர் பெருமளவு பாதுகாக்கப்படும்.

பணக்காரர்கள் தம் வீடுகளில் இந்தக் கருவிகளைப் பொருத்திக்கொள்வதன்மூலம் பொது நீர் வளம்மீதான தங்கள் ஆதிக்கத்தைக் குறைக்கலாம். பெரிய பெரிய ஆடம்பர அடுக்ககங்கள் இந்தக் கருவிகள் பலவற்றைப் பொருத்துவதன்மூலம் மெட்ரோ வாட்டர் தேவையைக் கடுமையாகக் குறைக்கலாம்.

இதன் விளைவாக, மெட்ரோ வாட்டர் போன்ற அமைப்புகள் கீழ் மத்தியதர மக்களை அல்லது ஏழைகளை நோக்கித் தங்கள் சேவையை விரிவுபடுத்தலாம். இதனால் அனைவருக்கும் நல்ல குடிநீர் என்பது நிஜமாகவே சாத்தியப்படும்.

அம்மா போஸ்டர்






சைதை துரைசாமிக்கு ஆதரவாக.

நிச்சயமாக இவர் சென்னை மேயர் தேர்தலில் ஜெயித்துவிடுவார் என்று தோன்றுகிறது. என் வாக்கு இவருக்கே.

Wednesday, October 12, 2011

மாறன் சாம்ராஜ்ஜியத்தில் ரெய்டு

திங்கள்கிழமையன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ‘புதுப்புது அர்த்தங்கள்’ காலை நிகழ்ச்சிக்காக ஜென்ராம் என்னை அழைத்திருந்தார். மற்றொரு விருந்தினர் ஞாநி. செய்தித்தாள்களில் வந்தவற்றை அலசும் நிகழ்ச்சி. ஏற்கெனவே அதில் இருமுறை கலந்துகொண்டுள்ளேன். நேரலை ஒளிபரப்பு முடிந்து வெளியே வரும்போது நியூஸ் பகுதியிலிருந்து பரபரப்பாக அங்கு வந்தனர். ‘மாறன் வீட்டில் ரெய்ட். அது தொடர்பான லைவ் கவரேஜில் கலந்துகொள்ள முடியுமா?’ என்று கேட்டனர். எனக்கு அலுவலகம் செல்ல நேரமாகிக்கொண்டிருந்தது. இருந்தாலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி 2ஜி பற்றியும் மேக்சிஸ்-ஏர்செல் பற்றியும் என் கருத்துகளைச் சொன்னேன்.

நிகழ்ச்சி நடக்கும்போது குருமூர்த்தி, சோ ராமசாமி, தா.பாண்டியன், டி.ராஜா, சௌந்திரராஜன் என்று பலர் தொலைபேசி வழியாகக் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரிவித்தபடி இருந்தனர். கம்யூனிஸ்டுகள் அல்லது கட்சி சாராதவர்கள் தவிர மீதி யாருமே கருத்து சொல்லத் தயாராக இல்லை என்று தெரிகிறது. அஇஅதிமுகவில் அம்மா தவிர மீது எல்லோரும் டம்மி. திமுகவில் பலருக்கு உள்ளூர ஆனந்தம் என்றாலும் வெளிப்படையாகச் சொல்லமுடியாது. காங்கிரஸ் இதைப்பற்றி எதையுமே சொல்லத் தயாராக இல்லை. தமிழ்நாட்டில் பாஜகவினருக்கு பதிலாக குருமூர்த்தியும் சோவும் பேசிவிட்டனர்.

***

ரெய்டு தொடர்பான தகவல்கள் மிகச் சொற்பமே. விலாவரியாக இன்னமும் யாரும் இந்தக் கதையை விளக்கவில்லை. ரெய்டு நடைபெற்றது மேக்சிஸ்-ஏர்செல் விஷயம் தொடர்பாக மட்டும்தானா அல்லது தயாநிதி மாறன் வீட்டில் இருந்த சட்டவிரோதமான தொலைபேசி இணைப்பகம் தொடர்பானதா? அல்லது இரண்டையும் பற்றியதா?

சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் என்றால் அது 2ஜி வழக்குடன் சேர்ந்து வராது. அதற்கெனத் தனி வழக்கு ஒன்று பதிவு செய்யவேண்டும். ஆனால் அந்தக் குற்றச்சாட்டு உண்மையென்றால் அதில் தண்டனை பெற்றுத்தருவது எளிது.

மாறாக, மேக்சிஸ்-ஏர்செல் விஷயத்தில் வலுவான வழக்கு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இங்கும் சந்தர்ப்ப சூழ்நிலை, பாதிக்கப்பட்டவரின் (சிவசங்கரனின்) வாக்குமூலம் என்று போனால், வழக்கு நிற்குமா என்று தெரியவில்லை.

தயாநிதி மாறன் உண்மையிலேயே திட்டம் தீட்டி, சிவசங்கரனை மிரட்டி, உரிமம் தராமல் அலைக்கழித்து, பின் மேக்சிஸ் ஏர்செல்லை வாங்கியவுடனேயே அனைத்து உரிமங்களையும் தந்திருக்கலாம். ஆனால் அதனை எப்படி சந்தேகத்துக்கு இடமின்றி, சாட்சியங்களுடன் ஒரு வழக்காடுமன்றத்தில் நிரூபிப்பது? அதுதான் சிக்கலே.

அடிப்படையில் தயாநிதி மாறனுக்குத் தொலைத்தொடர்புத் துறையே கொடுக்கப்பட்டிருக்கக்கூடாது. Conflict of interest என்று தெரிந்தும் தயாநிதி மாறனுக்கு இந்தத் துறையைக் கொடுத்து மன்மோகனும் காங்கிரஸும் திமுகவின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்ததுதான் மிகப் பெரிய குற்றம். ஆனால் அதற்கு சட்டரீதியில் தண்டனை எதையும் கொடுக்கமுடியாது. வாக்களிக்கும்போதுதான் தண்டனை கொடுக்கமுடியும்.

கொட்டிவாக்கம் ராஜுடன் ஒரு பேட்டி

தமிழ்பேப்பரில் இன்று வெளியாகியுள்ள பேட்டி - ராஜ் செருபால், சென்னை மாநகராட்சித் தேர்தலுக்கான கொட்டிவாக்கம் வார்டு வேட்பாளர்

இவருக்காக வாக்குகள் சேகரிக்க நான் சென்றது பற்றிய பதிவு இங்கே.

Tuesday, October 11, 2011

2011 நோபல் பரிசுகள்

தமிழ்பேப்பரில் இன்று நோபல் பரிசுகள் பற்றி மூன்று கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

2011 மருத்துவ நோபல் பற்றி - மருத்துவர் விஜய்
2011 இயற்பியல் நோபல் பற்றி - அருண் நரசிம்மன்
2011 வேதியியல் நோபல் பற்றி - அருண் நரசிம்மன்

Sunday, October 09, 2011

தேர்தல் பிரசாரம்

இன்று காலை நானும் சத்யாவும் கொட்டிவாக்கம் தொகுதியில் ராஜ் செருபால்  சார்பில் பிரசாரத்தில் ஈடுபட்டோம். சத்யா ஏற்கெனவே இரண்டு நாள்கள் பிரசாரத்துக்குச் சென்றிருந்தார். நான் போவது இதுதான் முதல் முறை.

ராஜ் கொட்டிவாக்கம் தொகுதியில் (வார்ட் எண் 183) சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு நிற்கிறார். சில மாதங்களுக்குமுன் ராஜ், நான், சத்யா, இன்னும் சிலர் சேர்ந்து வெவ்வேறு தொகுதிகளில் நிற்கலாம் என்று பேசிக்கொண்டிருந்தோம். பல்வேறு காரணங்களால் நாங்கள் பலரும் கழன்றுகொண்டோம். ராஜ் மட்டும் நிற்கிறார்.

ராஜ், சிடிகனெக்ட் என்ற லாபநோக்கில்லா அமைப்பில் பணி புரிகிறார். ஒரு நகரம் சரியாகத் திட்டம் தீட்டாத காரணத்தால் மக்களுக்குத் தரவேண்டிய அடிப்படை வசதிகளைச் சரியாகத் தருவதில்லை. இருக்கும் இடத்துக்குள் அந்த வசதிகளை எப்படிச் செய்துதருவது என்பதை ஆராய்கிறது சிடிகனெக்ட். போக்குவரத்து நெரிசலா? எப்படியான சிறு சிறு மாறுதல்களைச் செய்தால் நெரிசலைக் குறைக்கலாம்? தெருவோரத்தில் மக்கள் நடக்க ஏன் மாநகராட்சி வசதிகளைச் செய்துதருவதில்லை? அதனை எப்படி மக்களின் ஈடுபாட்டுடனேயே நடைமுறைப்படுத்தலாம்? தெருவோர வியாபாரிகளைப் பொதுவாகத் துரத்துவதையே ஆட்சியாளர்கள் நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எந்த அளவுக்கு ஒரு உள்ளூர்ப் பொருளாதாரத்துக்கு உபயோகமானவர்கள், அவர்களுக்கு எப்படிப்பட்ட வசதிகளைச் செய்துகொடுக்கலாம்; அதே நேரம் பாதையில் நடக்கும் மக்களுக்கும் பிரச்னையில்லாமல் எப்படிச் செய்யலாம்? இதுபோன்ற பல விஷயங்கள், நீர், குப்பை என்று மக்களுக்குத் தேவையான பலவற்றைப் பற்றியுமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர் ராஜ்.

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் ஒன்றில் தி.நகர் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி ராஜ் விரிவாகவே பேசியிருந்தார்.

***

காலையில் சுமார் 8 மணிக்கு ராஜை அவர் வீட்டில் சந்தித்து துண்டுப் பிரசுரங்களைச் சேகரித்துக்கொண்டோம். வரைபடத்தில் ஏற்கெனவே கவர் செய்திருந்த பகுதிகளைக் குறியிட்டிருந்தார். அதுபோக இன்று பார்க்கவேண்டிய தெருக்களைக் குறித்துக்கொண்டு நானும் சத்யாவும் கிளம்பினோம். முதலில் ஒவ்வொரு வீட்டுக்கும் இருவருமே போய்க் கதவைத் தட்டிப் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தோம். மிடில் கிளாஸ், லோவர் மிடில் கிளாஸ், ஏழை மக்கள் என்று கலந்துகட்டிய பகுதி. பக்கிங்காம் கால்வாய்க்கும் கிழக்குக் கடற்கரைச் சாலைக்கும் இடைப்பட்ட பகுதி. களத்துமேட்டுத் தெரு, வெங்கடேச நகர் பகுதிகளில் சில பல தெருக்களிலும் சந்துகளிலும் வீடு வீடாகச் சென்றோம்.

மக்கள் அனைவருமே நின்று நாங்கள் பேசியதைக் கேட்டனர். பலரும் எங்களை வீட்டுக்கு அழைத்து தண்ணீர் கொடுத்தனர். காபி குடிக்கிறீர்களா என்று கேட்டனர்.

இந்தப் பகுதிக்கு நீங்கள் ஒருமுறை சென்றால் தெரியும். திறந்த சாக்கடை. ஆங்காங்கே குளம் குட்டையாக நீர் தேங்கி பல்வேறு உயிரினங்கள் பல்கிப் பெருகுகின்றன. குப்பைகள் எடுக்கப்படுவதே இல்லை. சாலைகள் சரியாக இல்லை. டீ வீலர், ஃபோர் வீலர் என்று எதுவாக இருந்தாலும் ஒரு மாதத்தில் பஞ்சர் ஆகிவிடும் அல்லது சஸ்பென்ஷன் போய்விடும். அனைத்து வீடுகளுக்கும் ஒழுங்காகக் குடிநீர் வருவதில்லை. இப்படிப் பலவிதப் பிரச்னைகள்.

இதுவரையில் கொட்டிவாக்கம் பஞ்சாயத்தாக இருந்த இந்த இடம் இப்போது ஒரு வார்டாக சென்னை மாநகராட்சியில் சேருகிறது. ராஜ் செருபால் போன்ற ஒருவர் கவுன்சிலராக வந்தால் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்ற எங்கள் நம்பிக்கையை அங்குள்ள அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்டதாகவே எனக்குத் தோன்றியது.

சிறிது நேரம் கழித்து வேறு இரு நண்பர்கள் சேர்ந்துகொண்டனர். ராஜும் சேர்ந்துகொண்டார். மேலும் பல வீடுகளுக்குச் சென்றோம். சுயேச்சை வேட்பாளர் இவர் என்பது அனைத்து இடங்களிலுமே வரவேற்பைத் தந்தது. சிலர் ‘படித்த ஆசாமி’ என்று வரவேற்றனர். அமெரிக்கா சென்று படித்தவர் என்பது மட்டுமின்றி குடிமைச் சமூக வேலைகளில் கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் ஈடுபட்டவர், தில்லியில் மட்டுமின்றி சென்னையிலும் கடந்த சில ஆண்டுகளாக இந்தத் துறையில் ஈடுபட்டு வருகிறவர் என்பதைச் சுட்டிக் காட்டினோம். ஒரு சிலர், இவர் ஏழை மக்களுடன், குப்பத்தில் உள்ளவர்களுடன் பேசுவாரா என்று சந்தேகத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால் குப்பம் ஒன்றுக்கு ராஜ் செருபால் சென்றபோது, அங்குள்ள இளைஞர்கள் பலரும் தன்னார்வலர்களாகப் பணியாற்ற விருப்பம் தெரிவித்தனர். அவர்களுக்குக் காசு பணம் கொடுக்க முடியாது என்பதை ராஜ் செருபால் விளக்கியபோது, அவர்கள் காசு ஏதும் தேவையில்லை என்று தெளிவாகவே கூறினர். இதுவரை காசு கொடுத்த கட்சிகள் மக்களுக்கு ஒன்றும் செய்ததில்லை என்பதை இந்த இளைஞர்கள் நன்றாகவே உணர்ந்திருந்தனர். நேற்று இரவு முழுதும் கண் விழித்து தெருவெங்கும் போஸ்டர்களை அவர்கள்தான் ஒட்டினர். 150-க்கும் ஏற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு ஒன்றைச் சேர்ந்த ஏழைப் பெண்கள் அனைவரும் ராஜ் செருபாலின் பிரசாரத்துக்கு ஆதரவு தந்து கூட வந்து வாக்கு கேட்பதாகச் சொல்லியுள்ளனர்.

வார்டு எண் 183-ல் இருக்கிறீர்களா? செயலூக்கம் கொண்ட கவுன்சிலர் உங்களுக்குத் தேவையா? தன்னார்வலராக ராஜ் செருபாலுக்கு வாக்கு சேகரிக்க விரும்புகிறீர்களா? என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Saturday, October 08, 2011

ஆப்பிளின் எதிர்காலம்

ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய இரங்கல் இல்லை இந்தப் பதிவு.

* ஆப்பிள் அற்புதமான கணினியாக இருந்தாலும் எதையெடுத்தாலும் நான்தான், நானேதான் செய்வேன் என்று தொங்கிக்கொண்டிருந்த காரணத்தால் வளரவேயில்லை. மைக்ரோசாஃப்ட் செழித்தது; பிசி பிசினஸ் வளர்ந்தோங்கியது. இன்றும்கூட ஒரு சிறு குழுவைத் தாண்டி மேகிண்டாஷ் கணினிகள் பரவவில்லை என்பது நிதர்சனம்.

* ஜாப்ஸின் உண்மையான மார்க்கெட்டிங் மாயாஜாலம் ஐபாட், ஐட்யூன்ஸில் ஆரம்பித்தது. அதுவரையில் வெறும் தொழில்நுட்ப, அழகியல் கலைஞராக இருந்தவர் பணம் பண்ணும் ஒரு மாபெரும் ஐடியாவை எடுத்தாண்டது இந்த விஷயத்தில்தான். இன்றுவரை ஆப்பிள்தான் இந்தத் துறையில் கிங். ஆனால் இனியும் அப்படி இருக்கமுடியாது. காரணத்தை அடுத்து பார்ப்போம்.

* ஐபாட், ஐஃபோன், ஐபேட் - தமிழ்கூறும் நல்லுலகின் பாஷையில் சொல்லப்போனால், ‘சான்ஸே இல்ல’. ப்ராடக்ட் இன்னோவேஷன் + மார்க்கெட்டிங் சென்ஸ் சரியான கலவையில் கலந்து செய்த வித்தை.

* ஸ்டீவ் ஜாப்ஸின் தோல்வி - புத்தகச் சந்தையைப் புரிந்துகொள்ளாதது; அமேசானின் திறனைச் சரியாகக் கணக்கிடாதது.

* ஆப்பிளின் போட்டிக்காரன் அமேசான். ஐக்ளவுட் என்று ஆப்பிள் பேசிக்கொண்டிருக்கும்போதே அமேசான் அதனைச் செய்துமுடித்துவிட்டது. கிண்டில் ஃபயர் என்னும் கலர் டேப்ளட் ஐபேடை ஒப்பிடும்போது மிகக் குறைந்த விலை. ஆப்பிள் அதற்குப் போட்டியாக ஒன்றைச் செய்து முடிப்பதற்குள், இதுவரை ஐபேட் வாங்கியிராத உலக மக்கள் பலரும் கிண்டில் ஃபயருக்குத் தாவியிருப்பார்கள்.

* கிண்டில் ஃபயரில் என்னவெல்லாம் செய்யமுடியும்? புத்தகங்களை வாங்கி, படிக்கலாம். புத்தகம் கிளவுடில் இருக்கும். சினிமாக்களை வாடகைக்கு எடுத்துப் பார்க்கலாம். பாடல்களை இறக்கிக் கேட்கலாம். அமேசானின் கிளவுட் வழியாக வெப் பிரவுசிங் செய்யலாம். (இது எனக்குப் பிடிக்கவில்லை!) ஆப்பிள் இந்த நிலைக்கு வர கனகாலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

அடுத்த ஐந்தாண்டுகள், அமேசானின் ஆண்டுகள்.

இதில் ஆப்பிள் ஒரு லூஸர் என்றால், கூகிள் மாபெரும் லூஸர்!

Amazon > Apple > Google !

கிழக்கு பதிப்பகம் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சி - தி.நகரில்

கிழக்கு பதிப்பகத்தின் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சி மீண்டும் தி.நகருக்கு வருகிறது. அதே பழைய இடம். ஆனால் பல புதுப் புத்தகங்கள்.

தீபாவளி பர்ச்சேஸுசுக்கு என்று தி.நகர் செல்லாதோரும் உண்டா என்ன? அப்படியே ஒரு நடை நடந்து சிவா விஷ்ணு கோவிலுக்கு எதிரே எல்.ஆர்.ஸ்வாமி ஹாலில் நடக்கும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று பார்த்துவிடுங்கள்.

முன்னர் ஏப்ரல் மாதத்தில் நடந்த கண்காட்சியின்போது இல்லாத பல புத்தகங்கள் இப்போது கிடைக்கும். எனவே கட்டாயம் ஒருமுறை சென்று பார்த்துவிடுங்கள்.

இடம்: எல்.ஆர்.ஸ்வாமி ஹால், சிவா விஷ்ணு கோவில் எதிரில், சங்கர பாண்டியன் ஸ்டோர் அருகில், தி. நகர்.
நாள்: 8 அக்டோபர் முதல்.
 

நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை. 

தொடர்புக்கு: 95000 45608

Tuesday, October 04, 2011

Monday, October 03, 2011

வீடு மாற்றம்

சென்னையின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு வீடு மாற்றியுள்ளேன். புது இடம் பழைய இடத்தைவிடத் திருப்தியாக உள்ளது. பல காரணங்களுக்காக.

பழைய இடத்தில் நம்மைத் தேடி எந்தக் கடைக்காரரும் வரமாட்டார். நாம்தான் தேடித் தேடிச் சென்று வேலைகளைச் செய்துகொள்ளவேண்டும். இங்கு வந்து சேர்ந்த முதல் நாளுக்குள் பால் வாங்கித்தரும் அம்மாவும் பேப்பர்காரரும் வந்து விவரங்கள் பேசிக்கொண்டு உடனடியாகச் சேவையை ஆரம்பித்துவிட்டனர். இது என்ன பெரிய விஷயம்; எல்லா இடங்களிலும் இப்படித்தான் நடக்கும் என்று விட்டுவிட்டேன். அடுத்து சுத்திகரிக்கப்ட்ட குடிநீர். அடுத்து அரிசிக்காரர். என்ன மாதிரியான அரிசி, எத்தனை கிலோ என்று கேட்டுவிட்டு, அடுத்த நாள் காலை அனுப்புவதாகச் சொல்லிச் சென்றார். வீடு கூட்டிப் பெருக்கித் துடைக்க உடனடியாக ஒருவர் கிடைத்தார். சுற்றி காய்கறிக் கடை எங்கே, சூப்பர்மார்க்கெட் எங்கே, மருந்துக்கடை எங்கே, அவசரம் என்றால் டாக்டர் எங்கே உள்ளார் என்று ஒரு நடை நடந்துவிட்டு வந்ததில் எல்லோருமே பத்து நிமிட நடைக்குள்ளாக உள்ளனர். அதே இடத்துக்குள்ளாக ஹார்ட்வேர் கடை, ஸ்டேஷனரி கடை, இட்லிக் கடை எல்லாம்.

நடக்கவேண்டிய வேலைகள் - கார்பொரேட் சமாசாரங்களான ஏர்டெல் இணைப்பு மாற்றம், எஸ்.சி.வி கேபிள் கனெக்‌ஷன் ஆகியவை மட்டுமே. புறவேலைகளைவிட வீட்டுக்குள் நடக்கவேண்டிய வேலைகள்தான் பாக்கி.

பத்து நிமிட நடையில் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள்கூட ஒரு சூப்பர்மார்க்கெட்டில் கிடைக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

காந்தி: மனிதரா, புனிதரா, தெய்வமா?