Wednesday, September 28, 2011

பாதுகாப்பான அணு மின்சாரம்

இன்றைய தமிழ்பேப்பரில் நான் எழுதியுள்ள கட்டுரை.

அணு மின்நிலையம் வேண்டுமா, கூடாதா என்பது பற்றி தொடர்ந்து விவாதங்களை எழுப்பும்முகமாகப் பல கட்டுரைகளை தமிழ்பேப்பரில் வெளியிட உள்ளோம். நாளை முக்கியமான இரு கட்டுரைகள் வெளியாகவுள்ளன.

Tuesday, September 27, 2011

2ஜி, சுவாமி, சிதம்பரம், இராசா, கனிமொழி

வெகு நாள்களுக்குப் பிறகு 2ஜி பற்றி எழுதுகிறேன். என் கருத்தில் இப்போதும் மாற்றமில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் இல்லாமல் கொடுத்ததால் நஷ்டம் ஏதும் வந்துவிடவில்லை என்றே தொடர்ந்து சொல்லிவந்துள்ளேன். இப்போதும் அப்படியே.

சுவாமி என்ன வாதிடுகிறார்? இராசா தனியாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் அமைச்சரவை, இரு அமைச்சர்கள் அடங்கிய குழுவை நியமித்து, முடிவை அவர்களே எடுக்குமாறு கூறியது. அந்த இரு அமைச்சர்கள் அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதமபரமும் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.இராசாவும். எனவே ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடாமல் சும்மா கொடுத்ததால் நஷ்டம் ஏற்பட்டது என்றால் அதற்கு இருவருமே காரணம். எனவே இராசாவைப் போலவே சிதம்பரத்தையும் விசாரித்து ஜெயிலுக்கு அனுப்புங்கள் என்கிறார் சுவாமி.

நியாயமான வாதம்தான். இதனால்தான் அரசு ஆரம்பத்திலிருந்தே, ஒரே குரலில் பேசியிருக்கவேண்டும். ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடாததால் நஷ்டம் ஏதும் இல்லை என்று அடித்துச் சொல்லியிருந்தால் இத்தனை கூத்தும் தேவையே இல்லை. கொள்கை முடிவு. அவ்வளவுதான். ஆனால், இந்தக் கொள்கை முடிவை எடுக்க அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் லஞ்சம் தரப்பட்டது என்று நிரூபணம் ஆனால் அல்லது ஏதோவிதத்தில் பணம் கைமாறியுள்ளது என்றால் அப்போதுதான் குற்றம் நடந்திருக்கிறது என்று ஆகிறது. அந்த நோக்கில் விசாரணை நடந்தால், வழக்கின் நடைமுறையும் வேறுவிதமாகச் சென்றிருக்கும்.

பின்னால் வந்த நிதியமைச்சர் பிரணவ் முகர்ஜி, சிதம்பரம் ஏலம் விடாதது தவறு என்று சொன்னால், அதனால் பெரிய சிக்கல் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. முகர்ஜியின் கருத்து தவறு என்று சிதம்பரத்துக்குத் தோன்றலாம். சிதம்பரத்தின் கருத்து தவறு என்று முகர்ஜிக்குத் தோன்றலாம்.

தினம் தினம் சுவாமி ஏதோ புது ஆவணங்களை எடுத்துக் காண்பித்து அடித்து ஆடுகிறார். அதனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் அரசுத் தரப்பு விழிக்கிறது. இதில் பாவம், சிக்கிக்கொண்டவர்கள் இராசாவும் கனிமொழியும்தான். அவர்களை இன்னமும் சிறையில் வைத்திருக்க என்ன முகாந்திரம் உள்ளது என்றே தெரியவில்லை. கூப்பிட்டால் தினம் தினம் நீதிமன்றத்துக்கு வந்து வாதாட அவர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். ஊரைவிட்டு ஓடிப் போய்விடுகிறவர்கள் மாதிரித் தெரியவில்லை. பின் எதற்குச் சிறை?

நாளை அவர்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை என்று முடிவானால், சிறை நாள்களைத் திருப்பித் தரமுடியுமா நீதிமன்றத்தால்?

கலைஞர் தொலைக்காட்சி விவகாரத்தில் சிக்கல் இல்லாமல் இல்லை. பணம் எதற்காகவோ அங்கே உள்ளே வந்துள்ளது. அதனை விசாரிக்கலாம்; கடுமையான அபராதம் போடலாம். ஆனால் லட்சம் கோடிகள் கையாடப்பட்டதாகச் சொல்லி, இருவரைச் சிறையில் வைத்து, கடைசியில் வழக்கே பிசிபிசுத்துப் போகும்போலத் தோன்றுகிறது. இன்றுவரை வலுவான வழக்கு ஏதும் என் கண்ணுக்குத் தெரியவில்லை.

சுவாமி மட்டும் ஆனால் அயராது போராடுகிறார். அந்த ஒரு விடாமுயற்சிக்காக மட்டும் அவரைப் பாராட்டலாம்.

Monday, September 26, 2011

உள்ளாட்சித் தேர்தல்

சமீபத்தில் இரண்டு அரசியல்வாதிகளிடம் பேசிக்கொண்டிருந்தேன். இருவரும் அஇஅதிமுக கிடையாது. இந்தமுறை உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை ஏதும் இருக்காது என்றே அவர்கள் கருத்து தெரிவித்தனர். வெற்றிபெறுவதில் அஇஅதிமுகவுக்கு எந்தப் பிரச்னையும் இருக்கப்போவதில்லை என்பதால் வன்முறையில் இறங்கமாட்டார் என்றும் அது அவருடைய இமேஜுக்கு இழுக்காகிவிடும் என்று இப்போது ஜெயலலிதா கருதுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆனாலும் வாக்குப்பதிவு மந்தமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அஇஅதிமுக 1, திமுக 2 என்று முடிவுகள் வரும் என்பது முடிவாகிப்போன விஷயம். தமிழகத்தின் நம்பர் 3 யார் என்பது இந்தத் தேர்தலில் தெரியப்போகிறது. தேமுதிகவும் கம்யூனிஸ்டுகளும் சேர்ந்த கூட்டணி 3 என்று வைத்துக்கொண்டால், காங்கிரஸுக்கு எத்தகைய மரண அடி விழப்போகிறது என்பதைப் பார்க்கவேண்டும்.

சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு ஃபுட்கிங் சரத்பாபு சுயேச்சையாகப் போட்டிபோடுகிறார். சைதை துரைசாமி எளிதில் ஜெயித்துவிடுவார் என்றே தோன்றுகிறது.

வார்டு கவுன்சிலர் இடத்துக்கு சுயேச்சையாக நிற்பது பற்றிச் சில மாதங்களுக்குமுன் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால், இடையில் வீடு மாற்றி வேறு இடத்துக்குக் குடிபோக முடிவெடுத்தேன். இந்த மாதக் கடைசியில் வீடு மாறியிருப்பேன். புது வீடு இருக்கும் வார்டில் தேர்தலுக்கு நின்றால்தான் உபயோகமாக இருக்கும். ஆனால் அந்தப் பகுதியில் இன்னும் யாரையுமே தெரியாது. இரண்டு வாக்குக்குமேல் தேறாது! எனவே இம்முறை தேர்தலில் நிற்கப்போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். அடுத்த உள்ளாட்சித் தேர்தல் இன்னும் ஐந்தாண்டுகள் கழித்து. அப்போது பார்க்கலாம்.

Saturday, September 24, 2011

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே

என் மொபைல் போன் கேமராவால் இன்று பிடித்த சில சுவரொட்டிகள்:




கேமரா போன் இருக்கிறது. கழகத் தொண்டர்கள் இருக்கிறார்கள். எனவே அவ்வப்போது அம்மா சுவரொட்டிகள் இந்தப் பதிவில் காணக் கிடைக்கும்.

தூக்கு தண்டனை எதிர்ப்புக் கூட்டம் இன்று


கிழக்கு பதிப்பக அலுவலகத்துக்கு எதிரே உள்ள ஹேமமாலினி திருமண மண்டபத்தில் இன்று ‘தூக்கு தண்டனை எதிர்ப்புக் கூட்டம்’ என்ற தட்டியைப் பார்த்தேன். வைகோ, திருமாவளவன், நல்லகண்ணு, ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி போன்ற அரசியல்வாதிகளும் பழ. நெடுமாறன், கொளத்தூர் மணி போன்ற தமிழ் உணர்வாளர்களும் கலந்துகொள்கிறார்கள். பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கலந்துகொள்கிறார். 4.00 மணிக்கு.

அடுத்ததாகத்தான் அஇஅதிமுக தலைமை அலுவலகம் உள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கு இடம் கேட்டு நிற்கும் வெள்ளை-வெள்ளை சீருடைக் கூட்டம் ஒன்றும் நிற்கிறது.

சென்னை, பாடியில் கிழக்கு புத்தக அதிரடி விற்பனை

கிழக்கு அதிரடி புத்தக விற்பனை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

தள்ளுபடி புத்தகங்கள் மட்டுமே கிடைக்கும். (இந்த இடத்தில் புதிய புத்தகங்களோ, ரெகுலர் புத்தகங்களோ கிடைக்கா. அவை வேண்டுமென்றால் புத்தகக் கடைகளுக்கோ இணையத்துக்கோ செல்லுங்கள்.)

முகவரி:

S.P.C. திருமண மாளிகை
(பாடி தபால் நிலையம் அருகில்)
269, எம்.டி.எச். ரோடு,
பாடி, சென்னை 600 050
Ph: 95000 45609

தேதி: செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 2 வரை

Thursday, September 22, 2011

இந்தியப் பொருளாதாரம் - யூகங்கள்

  • பணவீக்கம் உயர்ந்துகொண்டே போகிறது.
  • பெட்ரோல் விலை மீண்டும் ஏறியுள்ளது.
  • வட்டி விகிதம் உயர்ந்துகொண்டே போகிறது.
  • பங்குச் சந்தை யோயோ மாதிரி அப்படியும் இப்படியும் அலைபாய்கிறது. ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறது. (இன்று காலையிலிருந்து இதுவரை சென்செக்ஸில் கிட்டத்தட்ட 700 புள்ளிகள் சரிவு!)
  • தங்கம் விலை கிடுகிடுவென ஏறுகிறது.
  • டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்துகொண்டே போகிறது.
இதுதவிர உலகில் பல நாடுகளின் பொருளாதாரம் மந்தமாகலாம் என்று சொல்கிறார்கள். சில நாடுகள் கிட்டத்தட்ட திவால் நிலையில் உள்ளன. வேலையில்லாதோர் சதவிகிதம் அமெரிக்காவிலும் வேறு சில மேலை நாடுகளிலும் மிக மிக அதிகமாக உள்ளது.

இதனால் எல்லாம், இந்தியாவின் ஏற்றுமதி பெருமளவு பாதிக்கப்படப்போகிறது. அதன் விளைவாக இந்தியாவில் முக்கியமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல பாதிக்கப்படப்போகின்றன.

அடுத்த இரண்டு ஆண்டுகள் எப்படி இருக்கப்போகிறது?

என் யூகங்கள்:
  • இந்தியாவில் பணவீக்கம் குறையும்.
  • உலக அளவில் பெட்ரோல் விலை குறையப்போவதால், இந்தியாவிலும் பெட்ரோல் விலை குறையும்.
  • தங்கம் தொடர்ந்து ஏறும்.
  • பணவீக்கம் ஓரளவுக்குக் குறைந்ததும் வட்டி விகிதமும் குறையும்.
  • பங்குச் சந்தை பொதுவாக மந்தமாகவே இருக்கும். ரொம்பவும் ஏறாது, ரொம்பவும் குறையாது. ஆனால் இப்போது இருப்பதைவிடக் கொஞ்சம் அதிகமாகி இருக்கும். சென்செக்ஸ் 18,000 வரை போகலாம். 19,000-ஐயும் தொடலாம். ஆனால் 20,000-ஐயெல்லாம் தாண்டாது.
  • தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறையவே பாதிக்கப்படுவார்கள்.
  • டாலருக்கு நிகராக ரூபாய் அதிகரிக்கும். இப்போது 48.சொச்சம் என்று இருப்பது, 45, 44, ஏன் 43 வரை போகலாம்.
  • இந்திய ஜிடிபி ஆண்டுக்கு 8% என்ற அளவில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வளரும்.
[சமீபத்தில் இங்கிலாந்துக்குப் போன இந்திய கிரிக்கெட் டீம் 2-1 என்று டெஸ்ட் போட்டித் தொடரை வெல்லும் என்று ஆரூடம் சொல்லியிருந்தேன். ஆனால் இங்கிலாந்து 4-0 என்று வென்றது. அந்த அளவுக்கு மோசமாக இந்த ஆரூடங்கள் இருக்காது என்று நினைக்கிறேன். பார்ப்போம்.]

Tuesday, September 20, 2011

கூடங்குளம் அணு உலைகள்

கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து இடிந்தகரையில் கடந்த சில நாள்களாக மக்கள் உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர். எப்போதும் மாறிவரும் அரசியல் சூழலில் திடீரென முதல்வர் ஜெயலலிதா, மக்களைத் திருப்திப்படுத்தி அவர்களை ஏற்றுக்கொள்ளவைக்கும்வரை வேலையை நிறுத்திவையுங்கள் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அணு மின்சாரத்தைப் பொருத்தமட்டில் நமக்குமுன் பல தரப்புகள் உள்ளன.

1. அணு மின்சாரம் என்பது வேண்டவே வேண்டாம். அதில் உள்ள ஆபத்துகள் மிக அபாயகரமானவை. எதிர்காலச் சந்ததியினரைக் கடுமையாகப் பாதிக்கக்கூடியவை. அணுக் கழிவுகளை அப்புறப்படுத்துவது கடினம். சிறு விபத்து என்பது தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். உலகம் எங்கிலும் அணுப் பிளவு அல்லது சேர்க்கை வாயிலாக மின்சாரம் உற்பத்தி செய்வது தடைசெய்யப்படவேண்டும். வளர்ந்த நாடுகள் பலவும் (கடைசியாக ஜெர்மனி) அணு மின்சாரத்திலிருந்து பின்வாங்க முடிவெடுத்துவிட்டது. ஜப்பானின் ஃபுகுஷிமா விபத்துக்குப் பிறகும்கூடவா நாம் அணு மின்சாரம் வேண்டும் என்று கேட்பது? எனவே உடனடியாக கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடுவிடுவதே சிறந்தது. அதுமட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பிற அணு மின் நிலையங்களையும் உடனடியாக மூடவேண்டும்.

2. அணு மின்சாரம் வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்கட்டும். கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைக்கக்கூடாது. ஏனெனில் அங்கு அணு மின் நிலையம் அமைக்க ஆரம்பித்ததிலிருந்து ஒரே குழப்படி மட்டும்தான். இவ்வாறு 1980-களிலிருந்தே இந்த அணு மின் நிலையத்துக்கு எதிராகப் போராடிவந்தவர்கள் முன்வைக்கும் 13 காத்திரமான கருத்துகள் இங்கே. எஸ்.பி. உதயகுமார் போன்றோரை அலட்சியப்படுத்திவிட முடியாது. அவர்களது கருத்துகள் ஆணித்தரமானவை.

3. அணு மின்சாரம் வேண்டும். முக்கியமாக மின் பற்றாக்குறை, வளர்ச்சி தடைபடுதல் போன்றவை தாண்டி, இன்றைக்கு அணு மின்சாரம் ஒன்றால்தான் ‘சுத்தமான’ (மாசு குறைவான) மின்சாரத்தை வழங்கமுடியும். அனல் மின்சாரம் தயாரிப்பதால் புகை, சாம்பல் போன்றவை வெளியாகின்றன. கரியமில வாயுவினால் பூமி சூடாதல் அதிகமாகிறது. இப்படியே போனால், கடல் மட்டம் அதிகமாகி உலகின் பல பகுதிகள் மூழ்கிவிடும் அபாயம் உள்ளது. ஆனால் மின்சாரத் தேவையோ அதிகமாகிக்கொண்டே போகிறது. அணு மின்சாரம் ஒன்றால் மட்டுமே இதனைச் சாத்தியப்படுத்த முடியும். - இப்படிச் சொல்கிறது ஒரு தரப்பு.

4. அணு மின்சாரம் தேவையே இல்லை. மரபுசாரா முறைகள்மூலம் - உதாரணமாக சூரிய ஒளி, காற்றாலை, ஜியோதெர்மல் ஆகியவை மூலமாகவெல்லாம் மின்சாரத்தைத் தயாரிக்கலாம். டிரான்ஸ்மிஷன் நஷ்டத்தைக் குறைத்தாலே போதும். மேலும் மக்கள் தம் தேவையைக் குறைத்துக்கொள்ளவேண்டியது அவசியம். இவற்றையெல்லாம் செய்வதன்மூலம், அணு மின்சாரம் இல்லாமலேயே, வேண்டிய அளவு மின்சாரத்தைப் பெறலாம். எனவே அணு மின்சாரம் அவசியமா, தேவையா என்ற கேள்விக்கு இப்போது பதில் சொல்லவேண்டியது இல்லை. - இது ஒரு தரப்பு.

***

முழு விவாதத்துக்குள் இறங்குவதற்குமுன் மூன்று விஷயங்களைப் பற்றிப் பேச விரும்புகிறேன்.

1. பொதுவாகவே வளர்ச்சி என்பதை முன்வைக்கும் பொருளாதார வலதுசாரிகள், பொதுமக்களின், அதுவும் முக்கியமாக ஏழை எளிய மக்களின் கஷ்டங்களைப் பற்றி அதிகமாகக் கவலைப்படுவதில்லை. இது வருத்தம் தரக்கூடியது. மக்களுக்கு அடுத்துதான் நாட்டு வளர்ச்சி, கார்பொரேட் நிறுவனங்களின் வளர்ச்சி எல்லாமே என்பது என் கருத்து. கூடங்குளம் விஷயத்தில் மட்டுமல்ல, பொதுவாக வளர்ச்சி என்பதற்காக ஏழை மக்கள் தரவேண்டிய விலை இந்தியாவில் மிக அதிகமாக இருக்கிறது. பெருமளவு இடப்பெயர்ச்சி இல்லாமல் பெரும்பாலான வளர்ச்சித் திட்டங்கள் இந்தியா போன்ற மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ள இடங்களில் சாத்தியமே இல்லை. இந்த இடப்பெயர்ச்சியைக் கவனமாகக் கையாளவேண்டியது அவசியம். ஆனால் எனக்குத் தெரிந்தவரையில் இந்தியாவில் எந்த மாநில அரசும் மத்திய அரசும் இதனை ஒழுங்காகச் செய்ததே இல்லை.

ஏகப்பட்ட வாக்குறுதிகள் கொடுக்கப்படுகின்றன. பிறகு மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இதனால் அரசின்மீது மக்களுக்கு எந்த நம்பிக்கையும் வருவதே இல்லை. சட்டம் இயற்றி நிலத்தைக் கையகப்படுத்திக்கொள்ள எளிதாக முடியும் அரசுகளுக்கு இழப்பீட்டை கௌரவமான முறையில் தரத் தெரிவதே இல்லை.

2. பொது விவாதம். அரசின் செய்கைகள் பற்றி அரசு ஒருபோதும் வெளிப்படையாகப் பேசுவதே இல்லை. மேலும் பொதுக்களத்தில் அரசின் கொள்கைகளை எதிர்ப்பவர்களை அழைத்து அவர்கள் பேச இடம் தருவதே இல்லை. பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை உடனடியாக நிவர்த்தி செய்வதே இல்லை. அரசியல்வாதிகளையும் சமூகத் தலைவர்களையும் கூட்டி உட்காரவைத்து பலாபலன்களை விவாதிப்பது இல்லை.

மொத்தத்தில் ஏழை மக்களை நம் அரசுகள் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. அவர்களது வாழ்வாதாரம் பற்றியோ மாற்று ஏற்பாடுகள் பற்றியோ ஒருவித ஏளனத்துடன்மட்டுமே அணுகுகின்றன.

3. கார்பொரேட் செயல்பாடுகள்: அணு உலைகள் அமைப்பது தொடர்பாகப் பல்லாயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தங்கள் கை மாறலாம் என்ற நிலையில் இதிலிருந்து லாபம் பெற நினைக்கும் பெருநிறுவனங்கள் நடந்துகொள்ளும் முறை மோசமானதாக உள்ளது. அணு உலைகளால் அனைவருக்குமே ஆபத்து என்று பலர் சொல்லிக்கொண்டிருக்கும்போது, அணு உலைகளால் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதில் தம்முடைய நஷ்டம் எவ்வளவு குறைவாக இருக்குமாறு ஒப்பந்தம் போடுவது என்று இந்த நிறுவனங்கள் லாபி செய்கின்றன. அதற்கு அமெரிக்க அரசும் பிரான்சு அரசும் தம்மால் முடிந்த அளவுக்கு இந்திய அரசின் கைகளை முறுக்கப் பார்க்கின்றன. தம் நாட்டில் எம்மாதிரியான செயல்பாடுகளை இந்த அரசுகள் அணு உலை நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றனவோ அந்த அளவுக்காவது பிற நாடுகளிலும் அவற்றின் செயல்பாடுகள் இருக்கவேண்டும் என்ற குறைந்தபட்ச தார்மிக நிலையை எடுக்கக்கூட இவர்கள் தயாராக இல்லை. இதுபோன்ற நேரங்களில் நம் மத்திய அரசும் வலுவாக நடந்துகொள்வது இல்லை.

இதைப் பார்க்கும் யாருக்குமே நம் அரசின்மீது நம்பிக்கை வைக்கத் தோன்றாது. போதாக்குறைக்கு சில பத்தாண்டுகளாக போபால் விஷவாயுக் கசிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் போய்ச் சேராமல் இருக்கிறது.

ஜப்பானிலேயே மோசமான விபத்து ஏற்படும் அளவுக்குப் பாதுகாப்புக் குறைவு உள்ளதென்றால், இந்தியா போன்ற நாட்டில் கார்பொரேட் நிறுவனங்கள் எப்படி நடந்துகொள்ளும் என்பது நமக்குத் தெரியாதா என்கிறார்கள் பலரும். அந்த அளவுக்கு கார்பொரேட் நிறுவனங்கள்மீது நமது நம்பிக்கையின்மை வளர்ந்துள்ளது.

***

இப்படிப்பட்ட சூழலில், அணு மின்சாரம் என்பது நமக்குத் தேவையா? தேவை என்றால் எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்? அவற்றை நாம் எப்படி நம்புவது? நம் அரசையும் கார்பொரேட் பன்னாட்டு நிறுவனங்களையும் நாம் எப்படி நம்புவது? பாதிக்கப்படப்போகும் மக்களுக்கு என்ன இழப்பீடு?

முக்கியமாக கூடங்குளத்தில் நிறுவப்பட்டு விரைவில் இயக்கப்படப்போகும் ரஷ்ய அணு உலைகள் பாதுகாப்பானவைதானா?

(தொடரும்)

Sunday, September 18, 2011

நுகர்வோர் பாதுகாப்பு

Consumers Association of India என்ற அமைப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு நடக்கும் லாபநோக்கில்லா அமைப்பு. நுகர்வோர் விழிப்புணர்வை அதிகப்படுத்துதல், நுகர்வோருக்கு ஏதேனும் பிரச்னை இருந்தால் அதனை எப்படி அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லுதல் என்று ஆலோசனை தருதல், அரசு அமைப்புகளுடன் பேசி நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை இறுக்குதல் போன்றவை. இந்த அமைப்பின் அறங்காவலர்களுள் முக்கியமானவர், இந்த அமைப்பைத் தோற்றுவித்த நிறுவனர்களுள் ஒருவர் இப்போது 80 வயது ஆகும் தேசிகன். நான் இவரை நன்கு அறிவேன். (இவரைப் பற்றி அதிகம் வெளியே தெரியாதது... மங்கையர் மலர் என்ற பத்திரிகையை ஆரம்பித்தது இவரும் இவரது மனைவியும்தான். பின்னர்தான் இந்தப் பத்திரிகை கல்கி குழுமத்துக்கு விற்கப்பட்டது. இன்று கல்கி குழுமத்திலிருந்து வெளியாகும் அதிமுக்கியமான, அதிகம் விற்பனையாகும் பத்திரிகை மங்கையர் மலர்தான்.)

நேற்று கோட்டூர்புரம் பிர்லா கோளரங்க வளாகத்தில் இருக்கும் அறிவியல் நகரத்தின் அரங்கில் இந்திய நுகர்வோர் சங்கத்தின் சார்பில் 10 கையேடுகள் அடங்கிய தொகுப்பு ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத் தொகுப்பு பற்றிப் பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

இந்தப் பதிவில், நேற்று நடந்த நிகழ்வில் கலந்துகொண்ட மத்திய அரசின் நுகர்வோர் இலாகா செயலர் ராஜிவ் அகர்வால், இ.ஆ.ப, தேசிகன் ஆகியோர் பேசியது பற்றி மட்டும்.

நுகர்வோராகிய நாம், நமது உரிமைகள் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதே இல்லை. 1980-களில் அதிகபட்ச விலை (MRP) என்பதை பேக்கேஜ்களில் அச்சிடுவது தொடர்பான போராட்டம் பற்றி தேசிகன் பேசினார். சில நாடுகளில் விற்பனை வரி தனி என்று போடப்பட்டிருக்கும். ஆனால் இந்தியாவில் அப்படி இருந்தால் விற்பனை வரி வசூலிக்கப்படும்; அரசிடம் போய்ச் சேரவே சேராது. அதனால் விற்பனை வரியை தயாரிப்பாளரிடமிருந்து வசூலித்துவிடலாம் என்பதால் ‘வரிகளும் சேர்த்து’ என்ற முறைதான் இந்தியாவில் வழக்கில் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வரி. கோல்கேட் என்ன செய்தது என்றால், உள்ளதிலேயே எந்த மாநிலத்தில் அதிகமான வரியோ அதனை பற்பசைப் பாக்கெட்டில் போட்டு வசூலித்துவிட்டு அந்தந்த மாநிலம் கேட்கும் வரிபோக மீதியைத் தன் பைக்குள் போட்டுக்கொண்டது. எனவே அதிகபட்ச வரி என்பதைச் சேர்க்காமல் சராசரி வரி என்பதைக் கணக்கிடவேண்டும் என்று கோரப்பட்டது. ஹிந்துஸ்தான் (யூனி)லீவர் போன்ற ஒருசில நிறுவனங்கள் வெளிப்படையாக இதற்கான கணக்குகளைக் காண்பித்தன என்றார் தேசிகன்.

நுகர்வோர் சங்கம் இப்போது செல்பேசி அப்ளிகேஷன் ஒன்றைச் செய்துள்ளதாகவும் அதனை விரைவில் வெளியிடப்போவதாகவும் அவர் சொன்னார். நீங்கள் ஏதேனும் கடையில் கலப்படம் நடப்பதைப் பார்க்கிறீர்கள் அல்லது நுகர்வோராக உங்களை அவர்கள் ஏமாற்றுவதாகத் தெரிகிறது என்றால், அந்த மொபைல் செயலி மூலமாக உடனேயே புகார் கொடுக்கலாம். அந்த புகார் நுகர்வோர் சங்கத்துக்கு வந்து உடனடியாக சம்பந்தப்பட்ட அரசுத் துறைக்குச் செல்லும். ஏழு நாள்களுக்குள் உங்கள் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு முதல் பதில் கிடைக்க வழி செய்யப்படும் என்றார். (நுகர்வோர் சங்கத்தில் நீங்கள் உறுப்பினராக வேண்டும் என்று நினைக்கிறேன். உறுதி செய்துவிட்டுச் சொல்கிறேன்.)

ராஜிவ் அகர்வால் பேசும்போது தங்கத்துக்கு ஹால்மார்க் முத்திரை கொண்டுவரப்பட்ட கதையை நினைவுகூர்ந்தார். இந்தியாவில் விற்கப்படும் தங்கம் எதுவுமே சரியான காரட் சுத்திகரிப்பு கொண்டதல்ல. இதனால் நுகர்வோர் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டே வந்துள்ளனர். இப்போதுள்ள சட்டத்தினால் அனைத்து நகைக்கடைக்காரர்களையும் ஹால்மார்க் தங்கத்தை மட்டுமே விற்கவேண்டும் என்று வற்புறுத்த முடியாது. எனவே புதிய சட்டம் கொண்டுவரும் முயற்சியில் அரசு உள்ளது என்றும் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இந்தச் சட்டம் வந்துவிடும் என்றும் சொன்னார் அகர்வால்.

பொதுமக்களின் பேராசையாலேயே அவர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றனர் என்றார் அவர். பான்ஸி ஸ்கீம் (Ponzi Scheme) எனப்படும் ஏமாற்றுவித்தை பற்றி விரிவாகப் பேசினார். ஆயிரம் ரூபாய் கொடு, ஒரு மாதத்துக்குள் அதை இரண்டாயிரம் ரூபாயாக ஆக்கித்தருகிறேன் என்பார்கள்; இது எந்தக் கட்டத்திலும் சாத்தியமல்ல என்றாலும் மக்கள் இதுபோன்ற அறிவிப்புகளை நம்பி ஏமாந்துபோகின்றனர் என்றார். மும்பையைச் சேர்ந்த ஸ்பீக்ஏசியா என்ற நிறுவனத்தைப் பற்றிப் பெயர் குறிப்பிடாமல் பேசினார். இப்போது சம்பந்தப்பட்ட இந்த நிறுவனத்து அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காசு கொடுத்து உறுப்பினராகு; சில கருத்துக் கணிப்புகளில் ஈடுபடு; உனக்கு மாதாமாதம் காசோலையாக வந்து குவியும் என்று ஊரை ஏமாற்றி உலையில் போட்டது இந்த நிறுவனம். சுமார் 2,000 கோடி ரூபாய் வரையில் சுருட்டியுள்ளனராம். சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு நடந்துவரும் நிறுவனம் இது. (தமிழ்ப் பத்திரிகைகள் யாரும் இதைப்பற்றிப் பேசியதாகத் தெரியவில்லை.)

நிதி முதலீடு என்று வரும்போது பொதுமக்கள் பெருமளவு ஏமாற்றப்படும் நிலை இருந்தால் நுகர்வோர் துறையால் பெரிதாக ஒன்றையும் செய்யமுடியாது என்றார் அகர்வால். அவர்களும் காவல்துறையிடம்தான் சென்று புகார் கொடுக்கமுடியுமாம். புகார்களைத் தாங்களே ஏற்று நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்க, சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்றார்.

***

ஒரு நுகர்வோராக நாம் பல வழிகளிலும் ஏமாற்றப்படலாம். அப்படிப்பட்ட நிலையில் நம் உரிமைகள் என்னென்ன, எம்மாதிரியான வழிகளில் நம்மை ஏமாற்றியுள்ள நிறுவனங்கள்மீது வழக்கு தொடுக்கமுடியும், யாரிடம் புகார் செய்யலாம், ஏமாறாமல் இருக்க என்னென்ன முன்னெச்சரிக்கைகளை எடுத்துக்கொள்வது போன்றவற்றை நாம் அனைவருமே அறிந்துகொள்வது முக்கியம்.

வரும் நாள்களில் இந்தப் பத்து கையேடுகளிலும் எம்மாதிரித் தகவல்கள் உள்ளன, அவை எப்படி நமக்குப் பயன் தரும் என்பதை விளக்குகிறேன்.

ஐஐடி/ஐஐஎம் கல்வியின் விலை

நான் ஐஐடி சென்னையில் (IIT Madras) பி.டெக் படித்தபோது (1987-1991) ஆண்டு டியூஷன் கட்டணம் ரூ. 200/- (இருநூறு மட்டுமே). அந்தக் கட்டத்திலேயே அது மிகவும் குறைவான கட்டணம். அரசாங்க மானியம் தரப்பட்டதால்தான் இப்படிக் குறைவான கட்டணத்தை வசூலித்தனர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, இப்போது ஆண்டுக்கு ரூ. 50,000/- (ஐம்பதாயிரம் மட்டுமே) என்று உள்ளது என்று சென்ற வாரம் மிண்ட் செய்தித்தாளில் பார்த்தேன். இந்தக் கட்டணத்தை நான்கு மடங்காக உயர்த்தப்போவதாக அந்தச் செய்தி சொன்னது. அதாவது ஆண்டுக்கு ரூ. இரண்டு லட்சம்.

இது பற்றிப் பேசியிருந்த அமைச்சர் கபில் சிபல், ஒரு மாணவருக்கு நான்கு ஆண்டுகளுக்குக் கல்வி கற்றுத்தர ஆகும் செலவு கிட்டத்தட்ட ரூ. எட்டு லட்சம் என்றும் அதனால் இப்போதைக்கு ஒவ்வொரு மாணவருக்கும் தரப்படும் மானியம் ரூ. ஆறு லட்சம் என்றும் சொல்லியிருந்தார்.

உயர் கல்விக்கு மானியம் தருவது அவசியமா, கூடாதா என்று கட்டாயம் ஒரு விவாதம் தேவை.

சமீபத்தில் ஐஐஎம் பெங்களூரு (IIM Bangalore) சென்றிருந்தேன். அங்குள்ள மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது இரண்டு ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணம் மட்டும் சுமார் 15 லட்ச ரூபாய் என்றனர். பெரும்பாலான மாணவர்கள் கல்விக் கடன் பெற்றே படிக்கின்றனர். எனவே படிப்பு முடிந்தவுடன் மிக அதிகச் சம்பளத்தை யார் தருவார்கள் என்று பார்த்து வேலையை எடுத்துக்கொள்கின்றனர்.

அந்த மாணவர்கள் என்னை அழைத்திருந்தது தொழில்முனைவோர் தொடர்பான ஒரு கருத்தரங்குக்கு. தொழில்முனைவோர், வென்ச்சர் கேபிடல்காரர்கள் என்று பலர் அங்கு வந்திருந்தனர். சுவையான விவாதங்கள் நடைபெற்றன. என்னவோ நாளைக்கே நாற்பது பேர் தனியாக startup நிறுவனங்களை ஆரம்பித்துவிடுவார்களோ என்று நினைத்தேன். ஆனால் தனியாக மாணவர்களிடம் பேசியபோது யாருக்குமே உடனடியாகத் தொழில் தொடங்க விருப்பம் எதுவும் இல்லை என்பது புரிந்தது. தொழில் தொடங்கினால் கைக்கு உடனே பைசா வராது. மாறாக இன்வெஸ்ட்மெண்ட் பேங்க் அல்லது கன்சல்ட்டிங் வேலைக்குப் போனால் ஆண்டுச் சம்பளம் 20 லட்ச ரூபாய் அல்லது அதற்குமேல் கிடைக்கும். இரண்டு வருடத்தில் கடனை அடைத்துவிட்டு, பின்னர் சொத்து சேர்த்துத் தொழில் தொடங்கலாம் என்பது இவர்கள் கருத்து.

ஆனால் வேலைகளை எடுத்துக்கொண்டார்கள் என்றால் கூடவே செலவு பிடிக்கும் பழக்கங்களையும் கற்றுக்கொள்வார்கள். ஆடம்பரக் கார் வாங்குவார்கள். செலவற்ற, சிக்கனமான வாழ்க்கைக்கு மீண்டும் வர மனது மறுக்கும். இவர்கள் யாருமே தொழில்முனைவோர் ஆகப்போவது இல்லை என்று தோன்றியது.

தொழில்நுட்பக் கல்வி தர செலவு அதிகமாகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. நான்கு ஆண்டுகளுக்கு எட்டு லட்ச ரூபாய் என்றால் அதைக்கூட ஏற்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் இரண்டு ஆண்டுகள் மேலாண்மைக் கல்விக்குப் பதினைந்து லட்ச ரூபாய் என்பது மிக அதிகம் என்று தோன்றுகிறது.

பணம் பிடுங்குவதே குறியாக இருக்கும் தனியார் கல்லூரிகளில் கேபிடேஷன் கட்டணம் என்ற பெயரில் அநியாயம் நடப்பது ஒருபக்கம் என்றால் இங்கே அரசு நடத்தும் கல்லூரிகளிலேயே கன்னாபின்னாவென்று கட்டணம் வசூலிப்பது நியாயமா? கொடுப்பதற்கு ஆள் இருக்கிறார்கள்; உனக்கென்ன பிரச்னை என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அதிகக் கட்டணம் காரணமாக மனிதவளம் முற்றிலும் தவறான திசையிலேயே செலுத்தப்படுகிறதே? இதனால் நாளடைவில் நஷ்டம் நமக்குத்தான்.

***

தரமான கல்வியை சரியான கட்டணத்தில் மாணவர்களுக்குத் தரவேண்டும். அரசு மானியங்கள் இருக்கக்கூடாது. அந்தக் கல்வியைப் பெற மாணவர்கள் கண்டபடிக் கடன் வாங்கி, தம் வாழ்க்கை முறையையே மாற்றிக்கொள்ளவும் கூடாது. அதிகச் சம்பளம்தான் முக்கியம் என்று யோசிக்காமல் தொழில்முனைதலில் ஈடுபடவேண்டும் அல்லது குறைந்த சம்பளமும் அதிகத் தாக்கமும் உள்ள வேலைகளையும் எடுத்துக்கொள்ள முற்படவேண்டும். இதனை எப்படிச் சாதிப்பது? உங்களிடம் எதேனும் கருத்துகள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

Saturday, September 17, 2011

இலங்கையில் கிழக்கு பதிப்பக ஷோரூம்

கிழக்கு பதிப்பக ஷோரூம், கொழும்பிலிருந்து கடுநாயக விமான நிலையம் செல்லும் வழியில் உள்ள வத்தளை என்ற இடத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

முகவரி: எண் 209, 1/1, நீர்கொழும்புச் சாலை, வத்தளை

தொடர்புகொள்ள: டியூக், +94714441234
மின்னஞ்சல்: lnenterprises.plc@gmail.com

சில படங்கள் இங்கே:




Friday, September 16, 2011

உணவின் வரலாறு - தொலைக்காட்சித் தொடராக

பா.ராகவன் எழுதி பத்திரிகைத் தொடராக வெளிவந்து பின்னர் கிழக்கு பதிப்பகத்தின்வாயிலாகப் புத்தகமாக வெளியானது உணவின் வரலாறு. இப்போது அது புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வாரா வாரம் தொடராக வெளிவருகிறது.

இதுபற்றிய பா. ராகவனின் அறிவிப்பு இங்கே.

புத்தகத்தை வாங்கிக் கையில் வைத்துக்கொண்டு தொலைக்காட்சித் தொடரைப் பாருங்கள்.

Thursday, September 15, 2011

யாருடைய மகாபாரதம்?

சஷிகாந்த் இயக்கியுள்ள ‘கேளாய் திரௌபதை!’ என்ற ஆவணப்படத்தைப் பார்க்கச் சென்றிருந்தேன். இரண்டு மணி நேரம் ஓடும் இந்தப் படம் மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது.

வட ஆற்காட்டில் செஞ்சி நகருக்கு அருகில் எச்சூர் என்ற கிராமத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை(யாவது) நடக்கும் மகாபாரதக் கூத்தை ஆவணப்படுத்தியுள்ளது இந்தப் படம்.

மகாபாரதக் கூத்து என்றால் ஒரு நாள் மாலையில் ஆரம்பித்து அன்று இரவே நடந்து முடிந்துவிடும் ஒன்றல்ல இது. 20 நாள்கள் தொடர்ந்து நடக்கும் கூத்து இது. காலையில் வில்லிபுத்தூராரின் பாரதம் பிரசங்கமாக நடக்கும். மாலை தொடங்கி இரவு முழுதும் தெருக்கூத்து பாணியில் அதே கதை அரங்கேறும். இதில் பார்வையாளர்களும் பங்கேற்பாளர்களே. அதே நேரம் கதைக்கு நாயகியான திரௌபதி அம்மனாக இருக்கும் கோவில் திருவிழாவும் சேர்ந்துகொள்கிறது.

படத் திரையிடலுக்குமுன் பேசிய ஆஷிஸ் நந்தி, இந்தியப் பாரம்பரியத்தில் மகாபாரதம் (+ ராமாயணம்) வகிக்கும் இடத்தைப் பற்றி விரிவாகவே பேசினார். அதைப் பற்றி முழுவதும் எழுதத் தொடங்கினால் அதுவே பெருமிடத்தைப் பிடித்துக்கொள்ளும் என்பதால் தவிர்த்துவிடுகிறேன். இரண்டே இரண்டு புள்ளிகளை மட்டும் சொல்கிறேன்.

யூ.ஆர்.அனந்தமூர்த்தியும் ஏ.கே.ராமானுஜனும் கன்னட ராமாயணம் பற்றிச் சொல்லும்போது அதன் சிறப்புத் தன்மையாக ஒரு குறிப்பிட்ட சம்பவத்தைச் சொல்வார்களாம். ராமன் காட்டுக்குப் போகக் கிளம்புகிறான். சீதை உடன் வருவதாகச் சொல்கிறாள். ராமன் மறுத்து, ‘நீயோ அரச குமாரி, காட்டு வாழ்க்கை கடினமானது, எனவே அரண்மனையில் சுகமாக இரு. நான் போய்விட்டு வந்துவிடுகிறேன்’ என்கிறான். சீதை அதை மறுத்துத் தானும் என் காட்டுக்கு வந்தே ஆகவேண்டும் என்பதற்குக் காரணங்களை அடுக்குகிறாள். இது அனைத்து ராமாயணங்களிலும் வருவதுதான். ஆனால் கன்னட ராமாயணத்தில் சீதை இந்தக் காரணங்களையெல்லாம் சொல்லிவிட்டு, மற்றுமொரு காரணத்தையும் சொல்கிறாளாம். ‘பிற ராமாயணங்களில் எல்லாம் சீதையும் உன்னுடன் காட்டுக்கு வருகிறாள். எனவே அதற்காகவாவது நீ என்னையும் உடன் அழைத்துச் செல்லவேண்டும்.’ “You are in the epic and the epic is in you” என்றார் நந்தி.

அதற்கு இணையாக செஞ்சி தெருக்கூத்தில் இரண்டு இடங்களைச் சுட்டலாம். திரௌபதியை துச்சாசனன் அவமதிக்கவேண்டும். ஆனால் அந்த ஊருக்கே திரௌபதி அம்மன்தான் கடவுள். அவளை வேசி என்றெல்லாம் அழைக்கவேண்டும். எனவே தன் பாத்திரம் தொடங்குமுன் துச்சாசனன் திரௌபதியிடம், இனி வரப்போகும் உரையாடலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறான். பிறகு, ‘ஏய் வேசி திரௌபதி’ என்று அவளை மிக அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் திட்டத் தொடங்குகிறான்.

19-ம் நாள் அன்று துரியோதனனும் பீமனும் சண்டை போடுகிறார்கள். ஊரெல்லாம் துரியோதனனை அடித்து விரட்டியபடி வருகிறான் பீமன். 20-ம் நாள், இறுதி நாள், நடைபெறப்போகும் சண்டைக்காக தரையில் துரியோதனன் மண் உருவத்தைக் கலைஞர்கள் உருவாக்கியபடி உள்ளனர். அந்த இடத்துக்கு வரும்போது பீமன் துரியோதனனிடம் சொல்கிறான்: ‘அதோ பார், உன் உருவத்தை அங்கே உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அங்குதான் நான் உன்னை நாளை வதம் செய்யப்போகிறேன். இன்று இது போதும்’ என்றுவிட்டுச் செல்கிறான்.

நந்தி சொன்ன மற்றொரு விஷயம் இந்தக் கூத்தில் எப்படி Brechtian distancing உடைந்துபோகிறது என்பது. பகாசுரனுக்கும் பீமனுக்குமான சண்டையின்போது பீமன் ஒரு வண்டியை எடுத்துக்கொண்டு ஊரெல்லாம் சுற்றி ஒவ்வொரு வீடாக உணவுப் பண்டங்களை வாங்கி எடுத்துவந்து சமைத்து உண்டு, பகாசுரனுடன் சண்டையிட்டு அவனைக் கொல்கிறான். இங்கு கிராம மக்கள் நாடகத்துக்கு உள்ளேயே வந்துவிடுகிறார்கள். கிராம மனிதர்கள் மட்டுமல்ல, கிராம மாடுகள்கூட. அஞ்ஞாதவாசத்தின்போது பாண்டவர்கள் அங்கு ஒளிந்துள்ளார்கள் என்பதை சகுனி யூகித்தவுடன் ஆநிரை கவர்தல் நிகழ்கிறது. அப்போது கிராம மாடுகளைக் கொண்டே இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.

காலை முதல் மாலை வரை நிகழும் கதைப் பிரசங்கத்தின்போது மக்கள் எந்த அளவுக்கு ஈடுபடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு சாமியே வந்துவிடுகிறது. திரௌபதி வஸ்திராகரணம் நிகழும்போது பல பெண்கள் நிலைகுத்தி சாமியாடுகிறார்கள். ஒரு கட்டத்தில் கதை சொல்பவருக்கே இந்நிலை ஏற்படுகிறது. தெருக்கூத்தின் இறுதிச் சண்டையில் பீமன் துரியோதனன் மண் உருவத்தின் தொடையைப் பிளக்கும்போது துரியோதனன் பாத்திரத்தை ஏற்பவர் மூர்ச்சையே ஆகி அந்த மண் சிலைமீதே விழுந்துவிடுகிறார். அவரை நான்கு பேர் அங்கிருந்து தூக்கிக்கொண்டு போகவேண்டியுள்ளது.

***

பீஷ்மர், கிருபர், சல்லியன், அஸ்வத்தாமா, கிருதவர்மன் ஆகிய ஐவராக அந்த ஊரின் ஐந்துபேர் தங்களை ஆவாகனம் செய்துகொண்டு கையில் காப்பு கட்டிக்கொள்வதுடன் நிகழ்வு ஆரம்பமாகிறது. குத்தை யார் செய்யப்போவது, பிரசங்கத்தை யார் செய்யப்போவது என்று நாள் குறித்து, ஆள் குறித்து ஆரம்பிப்பதிலிருந்து ஆவணப்படம் அந்த ஊருக்குள் நுழைந்து நடக்கும் அனைத்தையும் நமக்குக் காண்பிக்கிறது.

மாற்றி மாற்றிக் காட்சிரூபமாக பிரவசனத்தையும் தெருக்கூத்தையும் கொண்டுவருவதில் இயக்குனரும் எடிட்டரும் மிக அற்புதமாக இயங்கியுள்ளனர். தெருக்கூத்தில் வரும் ஒரு நிகழ்வு வில்லிபுத்தூரார் பாரதத்தில் இருப்பதில்லை. கர்ணன் தன் இறுதிப் போருக்குப் போகுமுன் தன் மனைவியான பொன்னீலி என்பவளுடன் ஓர் உரையாடலை நடத்தி அவளிடம் தாம்பூலம் பெற்றுச் செல்வதாகப் போகிறது தெருக்கூத்து. ஆனால் காலையில் கதை சொல்பவர் அதை விட்டுவிடவே கிராம மக்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். கதைசொல்லியும் அசராமல், தெருக்கூத்து என்பது பாமரர்களுடையது; அதில் இருக்கும் இடைச்செருகல்கள் எல்லாம் தவறு; பாண்டித்யம் உள்ள வில்லிபுத்தூரார் கதையில் இல்லை என்றால் இல்லைதான் என்று பதிலடி கொடுக்கிறார்.

மகாபாரதம் எனும் மாபெரும் கதையில் பாஞ்சாலி சபதம், அரவான் களப்பளி, கர்ண மோட்சம், அருச்சுனன் தபசு என்று நீண்டு செல்லும் ஒவ்வொரு பகுதியும் அற்புதமாகப் படத்தில் வந்துள்ளன. அருச்சுனன் தபசு ஒரு மாஸ்டர்பீஸ். இங்கே சிவனும் பார்வதியும் சாதாரண வேடர்கள் அல்லர். மாறாக தமிழகத்தின் நாடோடிக் குழுவான நரிக்குறவர்கள். இதில் நரிக்குறவச் சிவனாக வருபவர் கலக்கிவிடுகிறார். அவரது மொழியும் நடையுடை பாவனைகளும் அற்புதம். முக்கியமாக மொழி. முதல்முறையாக கதை சடாரென பாமர மொழிக்கு மாறுகிறது. அதுவரையில் தெருக்கூத்துக் கலைஞர்கள் அனைவருமே செந்தமிழில் பேசுகின்றனர். கட்டியக்காரர்கள் மட்டுமே பேச்சுவழக்கில் பேசுகின்றனர். ஆனால் நரிக்குறவச் சிவன் சர்வசாதாரணமாக கிராமப் பாமர வழக்கும் நரிக்குறவ வழக்கும் கலந்து பேசுகிறார்.

‘பன்னி சூத்துல அம்பு விட்டேன்’ என்பதிலிருந்து ஆரம்பித்து, பிய்த்து உதறுகிறார் சிவன். ‘ஓத்தா’ என்பதெல்லாம் சர்வசாதாரணமாகப் புழங்குகிறது. அதே நேரம் 60 அடிப் பனைமரத்தின் உச்சியிலிருந்து தவம் செய்துகொண்டிருக்கும் அருச்சுனனின் மொழி அதே சுத்தமான மொழி. நரிக்குறவச் சிவன், ‘உங்கம்மா ஊரையெல்லாம் ஓத்து’ (அல்லது கிட்டத்தட்ட இதைப் போன்று) என்று ஆரம்பிக்கும்போது அருச்சுனனோ, ‘என் தாய் எமனைப் புணர்ந்து தருமனைப் பெற்றெடுத்தாள், தேவேந்திரனைப் புணர்ந்து என்னைப் பெற்றெடுத்தாள்’ என்று அதனைச் சமனமாக்குகிறார். ஒரு கட்டத்தில் நரிக்குறத்தி பார்வதி, அருச்சுனனை ஒருவழி பண்ணிவிட முடிவெடுத்து அந்த 60 அடிப் பனை மரத்தின்மீது ஏற முயற்சி செய்ய, புடைவை அவிழ்ந்துகொள்ள, சிவன் ‘ஏய் மூடுடி, மூடுடி, போஸ்ட் பாக்ஸ் தொறந்துருச்சு’ என்று சொல்ல, ஸ்லாப்ஸ்டிக்தான் என்றாலும் அந்த நேரத்தின் தீவிரத்தை முற்றிலுமாக மாற்றிவிடுகிறது கூத்து. அடுத்த நொடிக்குள்ளாகவே நரிக்குறவன் போய் புலித்தோலை அரைக்கசைத்த சிவனாகக் காட்சியளித்து ஆயுதங்களை வழங்கி, கூத்து அடுத்த கட்டம் நோக்கிச் செல்கிறது.

***

ஒரு சிற்றூரின் மிக முக்கியமான ஒரு நிகழ்வை, தமிழகப் பாரம்பரியத்தின் மிக முக்கியமான ஒரு கூறை இந்த அளவுக்குச் சிறப்பாக ஆவணப்படுத்த முடியுமா என்றால் முடியும் என்று சொல்லிச் செய்துகாட்டியிருக்கிறார் சஷிகாந்த்.

ஆவணப்படத்தில் எம்.டி.முத்துக்குமாரசாமி, நா. முத்துசாமி ஆகியோர் இடையிடையே வருகின்றனர். விளக்கம் தருகின்றனர்.

நவீன நாடக இலக்கியம் அல்லது நாட்டார் கலையின் பல்வேறு வரைமுறைகளுக்குள் இந்தக் கூத்தை, இந்த 20 நாள் நிகழ்வை அடக்கிவிடமுடியுமா என்று தெரியவில்லை. பிரமிப்பு மட்டுமே மிஞ்சுகிறது.

ஒரு கிராமத்தின் எளிய மக்கள், தம் பாரம்பரியம் தொடரவேண்டும் என்பதற்காகவும் மழை பொழியவேண்டும் என்பதற்காகவும் நடத்தும் ஒருவித யாகம் இது. (மழையும் பிளந்துகட்டுகிறது.) அரவான் முகத்தையும் காளி சிலையையும் செய்து எடுத்துக்கொண்டு, அங்கீகரிக்கப்படாத வழியில் வரும்போது மழை கொட்டி, மரம் விழுந்து அவர்களை மீண்டும் பாரம்பரிய வழிக்கே துரத்துகிறது என்று ஆவணப்படத்தில் வருவது அமானுஷ்யமா அல்லது அகஸ்மாத்தானதா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

கிராம இளைஞர்கள் இந்தக் கூத்தைத் தொடர்ந்து நடத்துவோம் என்கிறார்கள். கூத்தாடிகள் எதிர்காலத்திலும் இருப்பார்களா என்ற கேள்விக்கு விடை சொல்லமுடியுமா?

***

குறைகள் என்று சொன்னால், கூத்து நடிகர்களின் பேச்சை ஒலிப்பதிவு செய்தது இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம். சப் டைட்டிலிங் இன்னும் தெளிவாக இருக்கலாம். சில இடங்களில் சப் டைட்டில் படிப்பதற்குள்ளாகக் கடந்துபோய்விடுகிறது. காட்சி மாற்றத்தின்போதும் பல இடங்களிலும் பின்னணியாக இருக்கும் மாமல்லபுரத்தின் மகிஷாசுர மர்த்தினி வதம் காட்சி பொருந்தவில்லை. மாமல்லபுரத்தின் அருச்சுனன் தபசு படத்தை அதற்குப் பதிலாகப் போட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

மற்றொன்று... இதே ஆவணப்படத்தைச் சுருக்கி, ஒரு 1 மணி நேர வெர்ஷன், ஒரு 30 நிமிட வெர்ஷன் என்று செய்வது நலம் பயக்கும். எத்தனை பேர் பொறுமையாக உட்கார்ந்து 2 மணி நேரம் பார்ப்பார்கள் என்று தெரியவில்லை.

***

இறுதியாக ஒரு வார்த்தை. கிராமத்தில் குறிப்பிட்ட சாதியினர் குறிப்பிட்ட நிகழ்வுகளை நடத்துகிறார்கள். முக்கியமான மூன்று சாதிகள்தான் (கோனார், வன்னியர், முதலியார்?) பெரும்பான்மைக் கூத்தை நடத்துவது என்றாலும் அனைத்து சாதியினருமே பங்கெடுக்கிறார்கள். ஆனால்... தலித்துகள்? சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஆநிரை கவர்தல் நிகழ்வை (கர்ண மோட்சம் என்கிறார் கவிராஜன். இருக்கலாம்.) நடத்துவது அவர்களாக இருந்துள்ளது. ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் அந்த வழக்கம் ஒழிந்துபோயுள்ளது.

இந்தச் செய்தியையும் போகிற போக்கில் காட்டிச் செல்கிறார் சஷிகாந்த். அதன்மீது எந்த ஒரு அவதானிப்பையும் செய்யாமல் ஆவணப்படுத்துவதோடு முடிக்கிறேன்.

Wednesday, September 14, 2011

சாதிச் சழக்குகள் தொடர்பாக

பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் குருபூசையை முன்னிட்டு பள்ளர்கள் பெருமளவு எண்ணிக்கையில் திரண்டபோது நடந்த களேபரத்தின் முடிவாக காவல்துறை துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியதில் பலர் கொல்லப்பட்டனர். அதுபற்றி நான் இதுவரை இரு பதிவுகள் எழுதியுள்ளேன். அந்தப் பதிவுகளில் வந்துள்ள பின்னூட்டங்கள் என் புரிதலை மேம்படுத்தியுள்ளது.

யுவகிருஷ்ணாவின் இந்தப் பதிவிலும் ராஜசுந்தரராஜனின் இந்தப் பின்னூட்டத்திலும் ஒரு குரல் தென்படுகிறது. எப்போதெல்லாம் பார்ப்பனர் அல்லாதோர் தமக்குள்ளாகச் சாதிக் கலவரத்தில் ஈடுபடுகிறார்களோ அப்போதெல்லாம் பார்ப்பனர்கள், “பாத்தேளா, பாத்தேளா, நாங்கள்ளாம் ஷொன்னோமோன்னோ, இவாள்ளாந்தான் இப்டி அடிச்சுப்பா, வெட்டிப்பா, கொன்னுப்பா, நாங்கள்ளாம் யாரையும் ஒண்ணுமே ஷெய்றதில்லே. நாங்கள்ளாம் ஜாதி வித்யாசமே பாக்கறதில்லே” என்று சொல்லி நழுவப் பார்ப்பார்கள் என்பதுதான் இந்தக் கருத்து. நான் அப்படிப்பட்டவனா, இல்லையா என்பதை நீங்களே சீர்தூக்கிப் பார்த்துக்கொள்ளுங்கள். என் பதிவுகள் தொடரும். என் பார்வையில் குறைபாடுகள் இருக்கலாம். பலரும் சொல்வதுபோல ஏசி அறையில் சென்னையில் உட்கார்ந்துகொண்டுதான் நான் என் பதிவுகளை எழுதுகிறேன். களப்பணி ஆற்றுவன் அல்லன் நான். ஆனால் மேற்கொண்டு தரவுகள் கிடைக்கும்போது என் பார்வையை அவற்றுக்கு ஏற்றார்போல் மாற்றியபடியேதான் உள்ளேன். என் பதிவுகள் என் புரிதலை விசாலப்படுத்திக்கொள்ளவே. அது பிறருக்கு ஞானத்தை அளிக்கவென்றல்ல.

தமிழகத்தின் வளர்ச்சியைப் பெருமளவு பாதிக்கக்கூடியவையாக நான் கருதுவது இந்த சாதிச் சழக்குகளை. அது தலித் சாதியினருக்கும் பிறருக்கும் இடையிலாக இருக்கலாம். இருவேறு தலித் சாதியினருக்கு இடையே இருக்கலாம். இருவேறு தலித் அல்லாத சாதியினருக்கு இடையே இருக்கலாம். பார்ப்பனர்களுக்கு இதில் பங்கு இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். மொத்தத்தில் இந்தச் சாதிப் பிரச்னைகளால் மனிதவள மேம்பாடு குறைகிறது. கூட்ட குணம் காரணமாக பொதுச்சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்பது மட்டுமல்லாமல் அரசு இயந்திரம்மீது கடுமையான அழுத்தம் செலுத்தப்படுகிறது. உயிர்ச்சேதம் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட சாதியினரைத் தவிர்த்து பிற அனைத்துச் சாதியினரும் பீதியில் ஆழ்த்தப்படுகிறார்கள். மதவாதச் சக்திகள் உள்ளே நுழைய இடம் கிடைக்கிறது. தீவிரவாதம் வளர இடம் உருவாகிறது. பொருளாதார முன்னேற்றம் என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு, ரவுடிகள் ராஜ்ஜியம் கோலோச்சுகிறது.

எனவே இந்த சச்சரவுகள் தவிர்க்கப்படவேண்டும். அதெல்லாம் அரசின் வேலை என்பதாக இல்லாமல், இந்தச் சச்சரவுகள் ஏன் ஏற்படுகின்றன என்று காரணத்தைத் தேடிப் புரிந்துகொண்டு அவற்றைத் தவிர்க்கும் உபாயங்களைக் குறைந்தபட்சம் இணையத்திலாவது விவாதிப்பது அவசியம் என்று நான் கருதுகிறேன். அனானிமஸாக பின்னூட்டம் இட்டுள்ள பலரும் ஏன் அப்படிப் பெயரை மறைத்துச் செய்யவேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. ஆனாலும் அப்படியாவது சில தகவல்கள் கிடைப்பது பயனுள்ளதாகத் தெரிகிறது.

நண்பர் ஒருவர், இதில் மதத்தின் பங்கு குறித்து நான் ஒன்றுமே எழுதவில்லையே என்று கேட்டார். எனக்குத் தெரிந்தால்தானே எழுதுவதற்கு? ஜான் பாண்டியன் என்ற பெயரிலேயே க்ளூ இருக்கிறது என்றார். இதில் கிறிஸ்தவ மிஷனரிகள் பங்கு ஏதேனும் இருந்தால் அதுபற்றி சம்பவம் நடக்கும் இடத்தில் உள்ளவர்கள்தான் எழுதவேண்டும், விவாதிக்கவேண்டும். இதுவரையில் நமக்குத் தெரிந்து இரண்டு கோணங்கள்தான் உள்ளன.

1. ஏற்கெனவே தேவர்-பள்ளர் சாதியினரிடையே இருக்கும் பிளவு. அது முத்துராமலிங்கத் தேவர் குருபூசை -எதிர்- இம்மானுவேல் சேகரன் குருபூசை என்று ஆகி, அதற்கேற்றவாறு தனிப் பரிமாணம் கொள்கிறது. இதன் அடியில் இம்மானுவேல் கொலை வழக்கு நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருக்கிறது.

2. அதிமுக, திமுக கட்சிகள் குறிப்பிட்ட சாதியினரின் வாக்குவங்கியை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கில், பிளவுகளைத் தூண்டி, அதிகப்படுத்தி, அதன்மூலம் பிரச்னையைக் குவிமையம் கொள்ளச்செய்ய வைப்பது. இது இப்போதைக்கு ஒரு கருதுகோள் மட்டுமே. சாட்சியங்கள் இல்லை.

இதுதவிர வேறென்ன கோணங்கள் உள்ளன என்பதையும் ஆராய்தல் அவசியம். அதே நேரம் இந்தப் பிளவுகளை எப்படிப் பூசுவது, எப்படி சமூக நல்லிணக்கத்தை இந்தச் சமூகங்களுக்கு இடையே கொண்டுவருவது என்பது பற்றியும் நாம் பேசவேண்டும். அது அரசியல் தளத்தில் நடைபெறப்போகிறதா, ஆன்மிகத் தளத்தில் நடைபெறப்போகிறதா? தில்லியில் அரசுக்கும் அண்ணா ஹசாரேவுக்கும் இடையில் சமாதானம் பேச ஆசைப்பட்ட சாமியார்கள்போல யாரேனும் ஆன்மிகத் தலைவர் திடீரென முளைத்து இதனைச் செய்யப்போகிறாரா? இல்லாவிட்டால் வேறு ஏதேனும் பெரிய சமூகத் தலைவர் இங்கே உள்ளாரா? அய்யாவழி அமைப்போ வேறு ஏதேனும் சைவ மடமோ இதனைச் செய்யப்போகிறதா? அல்லது கிறிஸ்தவ/இஸ்லாமிய அமைப்பு ஏதும் இதனைச் செய்யப்போகிறதா?

உங்கள் கருத்துகளை எழுதுங்கள். நன்றி.

Tuesday, September 13, 2011

பரமக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக

Manufacturing complicity: Paramakudi killings

மிக அருமையாக எழுதப்பட்டுள்ள கட்டுரை. இந்தத் தளத்தில் உள்ள பிற கட்டுரைகளும் மிக அழுத்தமாக, தெளிவாக, கூர்மையாக எழுதப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஒரு பெரிய கலவரம் நிகழ்ந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. குறைந்தது 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை அதற்குமேலும் இருக்கலாம்.

ஆனால் பத்திரிகைச் செய்திகள் என்ன சொல்கின்றன. இதில் பாதிக்கப்பட்ட தரப்பு எது? தூண்டிவிட்ட தரப்பு எது? உண்மையில் இத்தனை ஆயிரம் மக்கள் ஒரே இடத்தில் குவிவது பல இடங்களிலும் நடப்பதுதானே? ஆனாலும் பதட்டம் ஏற்படுமாறு விட்டுவிட்டு, துப்பாக்கிச்சூடு வரை போயிருக்கவேண்டுமா? பதட்டம் ஏற்படாமல் இருக்க என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன?

முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் படித்த அறிக்கை நியாயமானதா? காவல்துறை செயல்பாடுகளை முழுவதுமாக அவர் ஆமோதித்துள்ள நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையிலான விசாரணை கமிஷனிடமிருந்து ஏதேனும் உருப்படியான ரிப்போர்ட் கிடைக்கும் என்று நம்பலாமா?

கடைசியாக, நாம் எவ்வளவு கற்காலத்தில் இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள இந்த Facebook சுட்டியைப் பாருங்கள்.

Monday, September 12, 2011

சரஸ்வதி ஆறு, சிந்து நாகரிகம், ஆரியர்கள்

சென்ற வார இறுதியில் மிஷன் தனினோ சரஸ்வதி ஆறு பற்றி தமிழ் பாரம்பரியக் குழுமம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசினார். பேச்சு ஆங்கிலத்தில். அதன் காணொளி கீழே.

சுருக்கமாக:

* சரஸ்வதி ஆற்றின் கரையில்தான் ரிக் வேதம் எழுதப்பட்டிருக்கவேண்டும். வேறு எந்த ஆற்றையும்விட மிக அதிகமாக அந்த ஆற்றின் பெயரே குறிப்பிடப்படுகிறது.

* சரஸ்வதி ஆறு கொஞ்சம் கொஞ்சமாக வற்றிச் சுருங்கியுள்ளது. காரணங்கள் பல. மாபெரும் சமவெளிப் பகுதியான இந்தப் பகுதியில் பெரும் நிலநடுக்கங்களால் மேடு பள்ளம் பெருமளவு மாற்றம் கொள்ளும். அப்போது ஆறுகளின் பாய்ச்சல் பகுதியில் பெரும் மாற்றம் ஏற்படும். அப்படித்தான் சட்லெஜும் யமுனையும் திசை மாறியுள்ளன. முன்னர் சரஸ்வதிக்கு நீர் தந்துகொண்டிருந்த சட்லெஜ் சிந்துவுடன் சேர்ந்துகொண்டது. அதேபோல் சரஸ்வதியில் வந்துசேர்ந்த யமுனை திசை மாறி கங்கையுடன் சேர்ந்துகொண்டது. விளைவு: சரஸ்வதி வற்றத்தொடங்கியது.

* சிந்து-சரஸ்வதி நாகரிகம் என்றே இதனை அழைக்கவேண்டும். அகழ்வாராய்ச்சியில் எங்கெல்லாம் இந்த நாகரிகம் பரவியிருந்தது என்பதைக் காணமுடிகிறது. ஆரம்பகால நாகரிக இடங்கள் மிக அதிகமாக இருப்பது சரஸ்வதியில்தான். முற்றிய (மெச்சூர்) நாகரிக இடங்கள் ஏதும் சரஸ்வதி படுகையில் கிடையாது; மாறாக சிந்துவின் கரையில் உள்ளன.

* ஆரியப் படையெடுப்பு அல்லது குடியேற்றம் என்ற கருதுகோள் பற்றிய ஒரு சுருக்கமான விவாதம்.

* ஓர் ஆறு வாக்கின் கடவுளாதல்.

* கேள்வி பதில்கள்



தென் தமிழ்நாட்டில் தலித்துகள்மீது துப்பாக்கிச்சூடு

தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் சாதிக்கலவரம் பற்றிய அறிக்கைகளில் சாதிப் பெயர்கள் ஏதும் வரக்கூடாது என்பது கவனமான ஒரு முடிவு.

சனிக்கிழமை அன்று பழனிகுமார் என்ற பிளஸ் 1 படிக்கும் மாணவர் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் பச்சேரி என்ற தனது கிராமத்துக்கு வரும் வழியில் வழிமறித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்த மாணவர் தலித் சாதியினர் என்றும் இவரை தேவர் சாதியினர் வழிமறித்துக் கொன்றிருக்கிறார்கள் என்பதையும் ஒருவர் யூகிக்கலாம்.

இம்மானுவேல் சேகரன் - முத்துராமலிங்கத் தேவர் பற்றி ஓரளவுக்கு நாம் கேள்விப்பட்டிருப்போம். தேவர் சாதியினர் குருபூசை என்ற பெயரில் ஒவ்வோர் ஆண்டும் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. (அவரது பிறந்த தினமும் இறந்த தினமும் ஒன்றே: அக்டோபர் 30.) இந்த தினத்தன்று கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளின் அரசியல்வாதிகளுமே பசும்பொன் என்ற அவர் பிறந்த ஊருக்குச் சென்று மலர் தூவி தேவர் சாதி வாக்குவங்கிக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துவிட்டு வருவது வழக்கம்.

அந்த வாரம் முழுவதுமே இந்தப் பகுதி பதட்டமாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நான் இந்தப் பகுதியில் வாழ்ந்ததில்லை; குறிப்பிட்ட இந்த மாதம், நாள் இந்தப் பகுதிக்குச் சென்றதுமில்லை.

சாதிப் பெருமை பேசுவது ஒரு பக்கம் இருந்துவிட்டுப் போகட்டும். தமிழ்நாட்டில் அனைத்து முக்கிய சாதிகளுமே சங்கங்களையும் கட்சிகளையும் உருவாக்கி நடத்திவருகின்றன. ஆனால் தென் தமிழ்நாட்டில், முக்கியமாக தேவர்கள் சாதியைப் பொருத்தமட்டில், சாதிப் பெருமை சாதி வெறியாகி, தலித் சாதியினரைத் தாக்கிக் கொல்வதில் போய்த்தான் முடிகிறது.

எப்படி முத்துராமலிங்கத் தேவர், தேவர் சாதியினரின் அடையாளமாகத் திகழ்கிறாரோ அதேபோல தென் தமிழ்நாட்டில் இம்மானுவேல் சேகரன் தலித்துகளின் நாயகர் என்ற இடத்தில் உள்ளார். இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளை (11 செப்டெம்பர்) கொண்டாடிவரும் தலித்துகள், இந்த ஆண்டு இந்த தினத்தை இம்மானுவேல் சேகரன் குருபூசை என்ற பெயரிலேயே கொண்டாட முற்பட்டுள்ளனர். (இதற்கு முந்தைய வருடங்களில் இந்தப் பெயர் இருந்ததாக நினைவில்லை.)

ஒரு தலித் பள்ளி மாணவன் கொல்லப்பட்டது, இம்மானுவேல் சேகரன் குருபூசை என்ற இரண்டு கொந்தளிப்பான நிகழ்வுகளோடு மற்றொன்று சேர்ந்துகொண்டுள்ளது. கொலைக்குற்றத்துக்காகச் சிறைக்குப்போய் இந்த ஆண்டு சிறையிலிருந்து வெளியேவந்த ஜான் பாண்டியன் என்ற தலித் தலைவர் இந்த நிகழ்ச்சிக்கு வர முற்பட்டுள்ளார். அவர் வந்தால் கலவரம் அதிகமாகும் என்று நினைத்த காவல்துறை அவரை வழியிலேயே மடக்கி preventive detention-ல் வைத்துள்ளது. ஆனாலும் மக்கள் கொந்தளிப்பு காரணமாக காவல்துறை வண்டிகள் தாக்கப்பட, இதுபோன்ற நேரங்களில் காவல்துறை நடந்துகொள்வதுபோல அவர்களும் நடந்துகொள்ள பரமக்குடி அருகே நிகழ்த்தப்பட்ட காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். [ஹிந்து | தினமணி]

கொல்லப்பட்ட அனைவரும் தலித்துகள்தான் (தேவேந்திர குல வெள்ளாளர்கள்?) என்று நாம் யூகிக்கலாம். செய்தித்தாள்கள் இந்தத் தகவலை நமக்குச் சொல்வதில்லை.

ஆக 6 தலித்துகள் கொலை அல்லது சாவு. தலித்துகள் அரசமைப்பைத் தமக்கு எதிரானதாகக் கருத மற்றுமொரு காரணம். தேவர் சாதியினருக்குத் தம் குலப்பெருமையை மீண்டும் நிலைநாட்டிய கௌரவம். ஜான் பாண்டியன் போன்ற ரவுடித் தலைவர்களுக்கு தலித் தலைமையைக் கைப்பற்றிக்கொள்ள மற்றுமொரு வாய்ப்பு.

சிவில் சமூகத்துக்கு இதனை எதிர்கொள்வது எப்படி என்றே தெரிவதில்லை. தேவர் சாதியினர் (முக்குலத்தோர்) என்றாலே சரக்கென்று கத்தியை உருவி எதிராளியை (பெரும்பாலும் தலித்துகளை) போட்டுத்தள்ளும் வீர வம்சம் என்று சினிமாக்களும் தொடர்ந்து உருவேற்றி உருவேற்றி சில தலைமுறைகளே அழிந்துபோயுள்ளன.

இதே பகுதிகளில், தென் தமிழ்நாட்டில், ஐந்து பஞ்சாயத்துகளில் தலித்துகள் பஞ்சாயத்துத் தலைவர்களாக ஆக அனுமதிக்கப்படாமை, அப்படி மீறி ஆவோர் கொல்லப்படுதல், தொடரும் பதட்டம் என்பது வாடிக்கையாக இருக்கிறது. கல்வி, பிற மனித வளர்ச்சிக் காரணிகள் ஆகியவற்றில் இந்தியாவிலேயே முன்னணியில் இருக்கும் தமிழகத்தில் 2011-லும் மாற்றமே இல்லாமல் நடக்கும் தலித் விரோதத் தாக்குதல்கள் வருத்தத்தைத் தருகின்றன. இதே பிரச்னை, சென்னை சட்டக் கல்லூரி வரை வந்து தொலைக்காட்சியில் நேர்முக ஒளிபரப்பாக ஆகியதை நாம் பார்த்திருக்கிறோம். சில கேள்விகள் எழுகின்றன.
  1. தேவர் சாதியினர் மட்டும் அதீதமான தலித் விரோத மனப்பான்மை கொண்டிருப்பது ஏன்? (பொதுவாகவே அனைத்து சாதியினரும் இதே எண்ணத்தைக் கொண்டிருந்தாலும், மிக அதிகமாக இது வன்முறையாக வெளிப்படுவது தென் தமிழகத்தில், தேவர் சாதியினர் அதிகமாக இருக்கும் இடங்களில்தான்.)
  2. தலித்துகள் எந்தவிதத்தில் தேவர் சாதியினரின் பொருளாதார பலத்துக்குச் சவாலாக இருக்கிறார்கள்?
  3. இதே பகுதிகளில் பெரும்பான்மையாக இருக்கும் மற்றொரு சாதியினரான நாடார்கள் ஒருவித buffer-ஆக இருந்து இந்தக் கலவரங்களைத் தடுக்க வாய்ப்புகள் ஏதேனும் உண்டா?
  4. தென் தமிழகத்தில் பெருமளவு பரவியிருக்கும் கிறிஸ்தவ மிஷன்களால் இந்தப் பிரச்னை குறைய வாய்ப்பே இல்லையா?
  5. தேவர் சமூகத்தினர் கல்வி அறிவைப் பெருக்கிக்கொள்ளும்போதும்கூட இப்படி நூற்றாண்டுக்கு முந்தைய இனக்குழு வெறி ஏன் குறைவதில்லை? தேவர் சமூகத்துக்குள்ளாக இந்த வெறிக்கு எதிரான குரல்கள் ஏன் எழுவதே இல்லை?
  6. வட தமிழகத்தில் வன்னியர்-தலித் உறவு ஏற்பட்டு நிலைமை ஓரளவுக்குச் சீராக ஆவதுபோல ஏன் தென் தமிழகத்தில் ஏற்படுவதில்லை?

Sunday, September 11, 2011

மிக்ஸி

[ஜூலை 2009-ல் எழுதியது, சில மாற்றங்களுடன்.]

ஆங்கிலத்தில் ‘மிக்ஸ்’ என்றால் கலப்பது என்று பொருள். ஆனால் இந்த மிக்ஸி என்னும் கருவி அதற்குமேல் பல காரியங்களைச் செய்கிறது. மின்சாரம் முழுமையான பயன்பாட்டுக்கு வந்தபின் உருவாக்கப்பட்ட பல வீட்டு உபயோகக் கருவிகளில் இந்த மிக்ஸியை முக்கியமானது என்று சொல்லலாம்.


இதுபோன்ற கலக்கும் கருவி ஆரம்பத்தில், முட்டையை உடைத்து அதன் கருவை நன்கு அடித்துக் கலக்க என்று உருவாக்கப்பட்டது. அங்கிருந்து வளர்ச்சி பெற்று, பழங்களை அரைத்து ஜூஸ் உருவாக்கக்கூடியதாக மாற்றம் பெற்றது. பின் தயிர் கடைய, மாவு அரைக்க, உலர் தானியங்கள், பருப்புகள் ஆகியவற்றை அரைக்க என்று பரிமாண வளர்ச்சி அடைந்துள்ளது.

அடிப்படையில் இந்தக் கருவியில் இருப்பது இரண்டு முக்கியமான பாகங்கள்: ஒரு மின்சார மோட்டார், பிளேடு (Blade) எனப்படும் பல்சக்கரம்.

மின்சார மோட்டார் என்ற கருவிக்குள் மின்சாரம் செல்லும்போது அதில் உள்ள ரோட்டார் எனப்படும் உருளை வேகமாகச் சுழல ஆரம்பிக்கும். செலுத்தப்படும் மின்சாரத்தைக் கட்டுப்படுத்துவதன்மூலம் இந்த ரோட்டாரின் வேகத்தைக் கூட்டலாம், குறைக்கலாம். சுழலும் இந்த உருளையுடன் பல் சக்கரத்தை இணைத்தால் மிக்ஸி, ஜ்யூசர், ஃபுட் பிராசஸர் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் கருவி தயார்.

அடுத்தது இந்தப் பல் சக்கரம். உங்கள் வீட்டு மிக்ஸி ஜாடிகளை எல்லாம் எடுத்து அதில் உள்ள பல் சக்கரங்களைப் பாருங்கள். அவற்றில் ஒருவித சிம்மெட்ரி (சீரொருமை) இருக்கும். இரண்டு பற்கள் இருந்தால் அவை எதிரெதிராக 180 டிகிரி தள்ளி இருக்கும். மூன்று பற்கள் இருந்தால் 120 டிகிரி தள்ளி ஒவ்வொன்று என்று இருக்கும். பற்கள் எப்படி நீட்டிக்கொண்டிருக்கின்றன, அவற்றின் ஓரம் எப்படி கூர்மையாக அல்லது ரம்பத்தின் முனைபோல உள்ளது என்பதைப் பார்வையிடுங்கள்.

இந்தப் பல் சக்கரம்தான் பொருள்களை வெட்டுகிறது; அரைக்கிறது; கரைக்கிறது. இந்தச் சக்கரம் ஒரு ஜாடிக்குள் இருக்கும். அந்த ஜாடிக்குள் பொருள்களைப் போட்டு மூடியபிறகே, மோட்டாரை இயக்குவோம். மோட்டார் இயங்கும்போது பல்சக்கரம் அதிவேகத்தில் சுழலுகிறது.

பல்சக்கரத்தில் மாட்டிய பொருள்கள் - திடமாக இருந்தாலும் சரி, திரவமாக இருந்தாலும் சரி - தூக்கி அடிக்கப்படுகின்றன. இந்தக் கட்டத்தில் ஒரு முக்கியமான இயல்பியல் அடிப்படையை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். கனம் குறைந்த பொருள்கள் மையப்பகுதியிலேயே சுற்றிக்கொண்டிருக்கும். ஆனால், கனம் அதிகமான பொருள்கள் வெளிப்புறத்தை நோக்கிச் செல்லும். இது ‘மைய விலகு விசை’ காரணமாக நடக்கிறது.

பருப்பை அரைத்துப் பொடியாக்கும் எண்ணத்துடன் வறுத்த துவரம் பருப்பை மிக்ஸியில் போடுங்கள். கனமான முழுப் பருப்பும் படு வேகத்தில் பல்சக்கரத்தில் அடிபட்டு சுவற்றில் மோதி மீண்டும் உள்ளே திருப்பி அடிக்கப்பட்டு, மீண்டும் பல் சக்கரத்தில் மோதும். இப்படி நடக்கும்போது அது தெறித்து உடையும். அப்படி உடைவதில் பெரிய துகள்கள் மீண்டும் மீண்டும் வேகமாகச் சுவற்றில் மோதி உள்ளே வந்து உடைபடும். சிறிய துகள்கள் மையப்பகுதியிலேயே இருக்கும்.

மிக்ஸியால் என்ன சாதிக்கமுடியும் என்பது அதன் பல்சக்கரங்களின் வடிவமைப்பு சார்ந்தது. தக்காளி ஜூஸ் போட மிக எளிதான இரண்டு பல்களைக் கொண்ட சக்கரம் போதும். ஆனால் தோசைக்கு மாவரைக்க இந்தப் பல் சக்கரம் போதாது. சொல்லப்போனால், மிக்ஸியில் தோசை அரைப்பதைவிட கிரைண்டர் எனப்படும் கல் உரலில் அரைப்பதுதான் சரி.

அம்மா (அல்லது அப்பா!) சமையலறையில் வேலை செய்யும்போது எட்டிப் பாருங்கள். மிளகு, துவரம் பருப்பு, மிளகாய் ஆகியவற்றை வறுத்து, அதனை ஒருவிதமான ஜாடியில் போட்டு மிக்ஸியில் அரைத்தெடுத்து அந்தப் பொடியை ரசத்தில் சேர்ப்பார். மறுபக்கம் இஞ்சி, பூண்டு, வதக்கிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நீர் சேர்த்து இன்னொரு ஜாடியில் அரைத்து சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள ஒரு சைட் டிஷ் செய்வார். உலர்ந்த பொருள்களை பொடியாக அரைக்க ஒருவிதமான பல் சக்கரம் தேவை. ஈரமான பொருள்களை விழுதாக, துவையல்போல அரைக்க சற்றே வேறு விதமான பல் சக்கரம் தேவை.

பொதுவாக அமெரிக்காவில் விற்கப்படும் மிக்ஸி அல்லது ஃபுட் பிராசஸரைக் கொண்டு இந்தியச் சமையலுக்குத் தேவையான அரைத்தல்களைச் செய்வது எளிதல்ல. இந்தியாவில் இந்தியச் சமையலுக்கென பிரத்யேகமாக மிக்ஸிகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் வலு அதிகமான மோட்டார் இருக்கும். பலவித வேகங்களில் சுழலும் மோட்டார் இது. பல்சக்கரங்களும் அதற்கெனப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

மிக்ஸி புழக்கத்துக்கு வருவதற்குமுன்னர், இந்திய அம்மாக்களும் பாட்டிகளும் அம்மியைப் பயன்படுத்தினர். இன்று அம்மி, கல்லுரல், உரல்-உலக்கை ஆகிய சாதனங்கள் காணாமல் போய்விட்டன. அவற்றுக்கு பதிலாக மிக்ஸி, கிரைண்டர் போன்ற மின் இயந்திரங்கள் வந்துவிட்டன. இதனால் சமையல் அறையில் வேலை நிச்சயம் எளிதாக ஆகியுள்ளது.

Friday, September 09, 2011

அரசு கேபிளின் செயல்முறை

அரசு கேபிள் பற்றி எழுதியபிறகு கேபிள் துறையில் ஈடுபட்டுள்ள சிலரிடம் பேச்சுக்கொடுத்து மேலும் சில விஷயங்களைக் கேட்டறிந்தேன். அரசின் நோக்கம் சன் குழுமத்தை நசுக்குவது என்று மட்டும்தான் உள்ளது என்பதையும் அதையும்கூட நியாயமான வழியில் செய்யாமல் முறையற்ற வழியில்தான் மேற்கொண்டுள்ளது என்பதையும் அறிந்துகொண்டேன். சன் குழுமமே முறையற்ற வழியில்தானே இதுவரை நடந்துகொண்டுள்ளது என்று சிலர் சொல்லலாம். அநியாயத்தை நியாயத்தின் வழியில்தான் எதிர்க்கவேண்டுமே ஒழிய மற்றுமொரு அநியாய வழியால் அல்ல.

சன் குழுமத்தின் சுமங்கலி கேபிள் விஷன் சில முக்கியமான நகரங்களில் மட்டும்தான் உள்ளது. இந்த நகரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. டி.ஆர்.பி (TRP) எனப்படும் டெலிவிஷன் ரேட்டிங்கைக் கணக்கிட உதவும் பீப்பிள்மீட்டர் (TAM Peoplemeter) கருவிகள் தமிழகத்தின் சில நகரங்களில் உள்ள சில வீடுகளில்தான் பொருத்தப்பட்டுள்ள. அந்த நகரங்களில்தான் சுமங்கலி கேபிள் விஷன், கேபிள் விநியோகம் செய்கிறது. அந்த நகரங்களின் கேபிள் சந்தையின் மிகப் பெரும்பான்மை சுமங்கலி கையில்தான் இதுவரை இருந்துவந்தது. இதன் வாயிலாக தன் எதிரி சானல்கள் விநியோகிக்கப்படுமா, படாதா, சானல் வரிசையில் எந்த இடத்தில் இருக்கும், தரம் எப்படியிருக்கும் போன்றவை அனைத்தும் சன் குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.

சுமங்கலி இருக்கும் நகரங்களில், அதற்குப் போட்டியாக கேபிள் சேவையை அளித்துவந்த பல நிறுவனங்களை சன் குழுமம் அநியாய வழிகளில் துரத்தி அடித்திருக்கிறது. சென்னையில் ஹாத்வே கேபிளை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். கேபிளை வெட்டுதல், எதிரி நெட்வொர்க்கில் சேர்ந்திருப்போரை அடியாட்களைக் கொண்டோ அதிகார பலம் கொண்டோ மிரட்டுதல் ஆகியவை நிகழ்ந்தேறியுள்ளன.

சன் குழுமம் அநியாயம் செய்தபோதெல்லாம் அதனை அடக்கி வழிக்குக் கொண்டுவர நம்முடைய பலவீனமானதும் அநியாயமானதுமான அரசியல் அதிகார அமைப்பால் முடியவில்லை. இப்போது அதே பலவீனமான, அநியாயமான அரசியல் அதிகார அமைப்பே சன் குழுமத்துக்கு எதிராகத் திசை திருப்பப்பட்டிருக்கிறது.

முதலில் அரசு கேபிள் அமைப்பு இந்த கேபிள் விநியோகத்தில் தானும் ஒரு பிளேயர் என்பதாக இல்லாமல், தான் மட்டும்தான் பிளேயராக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. கேபிள் ஆபரேட்டர்கள் மிரட்டப்பட்டு, அரசு கேபிளில் இணையுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளனர். மறுத்த சிலர்மீது பொய் வழக்குகள் போடப்பட்டு (எ.கா: தீண்டாமை தடைச் சட்டம் முதற்கொண்டு சாதா குற்றவியல் வழக்குகள்) சிறையில் தள்ளப்படுகின்றனராம்.

கடைசி மைல் கேபிள் ஆபரேட்டர்களுக்கு இரண்டு பக்கமும் அடி வாங்கவேண்டிய நிலைமை. ஒரு பக்கம் அரசை எதிர்க்க முடியாத நிலைமை. மறுபக்கம் மக்கள் விரும்பும் சானல்களைத் தரமுடியாத நிலைமை. ஏனெனில் அரசு கேபிள், சன் குழுமத்திடம் பேச்சுவார்த்தை நடத்தவே இல்லை. இன்றுதான் கட்டண சானல் கம்பெனிகளுக்குக் கடிதம் எழுதி, பேச்சுவார்த்தைக்கே அழைத்திருக்கிறார்களாம். அதிலும் சன் குழுமத்துக்கு அழைப்பு போகவில்லையாம். அரசு கேட்டு, சன் குழுமம் தரவில்லை என்றால் அதனை எதிர்கொள்வது என்பது வேறு. ஆனால் கூப்பிடவேயில்லை என்றால் நோக்கம் வேறு என்று புரிகிறது.

அரசு கேபிள் மட்டும் ஒழுங்காக இயங்க முன்வந்திருந்தால் இப்போது நிகழ்ந்திருப்பதுபோல பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டிருக்காது.
  1. முதலில் அடாவடி செய்வதை அரசு கட்டாயமாக நிறுத்தவேண்டும். காவல்துறையும் கலெக்டர்களும் வெட்கமே இல்லாமல் இதற்குத் துணைபோவது அசிங்கம். முக்கியமாக, பொய் வழக்கு போடுதல், மிரட்டுதல் போன்ற அசிங்கங்கள் உடனடியாக நிறுத்தப்படுதல் வேண்டும்.
  2. அரசு கேபிள் கொண்டுவருவது சந்தையில் தேர்வை அதிகப்படுத்தவே; எந்த நிறுவனத்தையும் அழிக்க அல்ல என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும். முக்கியமான பீப்பிள்மீட்டர் நகரங்கள் ஒரு சானல் குழுமத்தினர் கையில் இருப்பது விளம்பரதாரர்களுக்கு நல்லதல்ல. உண்மை நிலையை என்றுமே அவர்களால் அறியமுடியாது. போட்டியாளர்கள் பிழைப்பதும் கடினம். எனவே மாற்று வேண்டும். அந்த மாற்று தனியாரிடமிருந்து வருவதே சரியானது. அது ஏற்படாமல் சன் குழுமம் இதற்குமுன் தடுத்திருப்பதால் அதன் கொட்டத்தை அடக்க என்று மட்டுமே அரசு கேபிள் இயங்கவேண்டும்.
  3. அனைத்து சானல்களும் - குறைந்தபட்சம் பெரும்பான்மைத் தமிழர்கள் பார்க்கும் சானல்களாவது - கிடைக்குமாறு செய்துவிட்டுத்தான் சேவையையே ஆரம்பித்திருக்கவேண்டும்.
இங்கே பிரச்னை, ஓர் அரசின் செயல்முறை பற்றியது. அரச அதிகாரத்தை எப்படி, எதற்காகப் பயன்படுத்தவேண்டும் என்பது பற்றியது. தனிப்பட்ட முறையில் நமக்கு சன் குழுமத்தின்மீது எத்தகைய கருத்து இருந்தாலும், தமிழக அரசு இப்போது நடந்துகொள்ளும் விதம் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. சம்பந்தப்பட்ட நபர்கள் இதனைப் பெரிய அளவுக்கு எடுத்துக்கொண்டு போகாவிட்டால் காட்டாட்சிதான் விளைவாக இருக்கும்.

Thursday, September 08, 2011

பிரெஷர் குக்கர்

[ஆகஸ்ட் 2009-ல் எழுதியது. குழந்தைகளுக்காக. இதனை முன்னதாக என் பதிவில் சேர்த்ததாக நினைவு. இப்போது தேடிப் பார்த்ததில் கிடைக்கவில்லை என்பதால் மறுபதிவு.]

அரிசிச் சாதம் சாப்பிடும் நம் அனைவர் வீட்டிலும் பிரெஷர் குக்கர் இல்லாமல் இருக்காது. உண்மைதானே? ஆனால், இந்தியா தவிர பிற நாடுகளில் இந்தச் சமையல் கருவி அவ்வளவாக உபயோகத்தில் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்களா? ஏன், நம் இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் அரிசிச் சோறை அவ்வளவாகச் சாப்பிடாத இடங்களிலேயே இந்த குக்கரை நீங்கள் பெரிதும் பார்க்கமுடியாது.

 இந்த பிரெஷர் குக்கரில் அரிசி தவிர, துவரம் பருப்பு, பிற பருப்புகள், உருளைக் கிழங்கு, இன்னபிற கிழங்குகள், சுண்டலுக்கான பல்வேறு பயறு வகைகள் ஆகியவற்றை உங்கள் அம்மா சமைப்பதைப் பார்த்திருப்பீர்கள். இந்த பிரெஷர் குக்கரில் என்னதான் நடக்கிறது? எதற்காக நம் அம்மாக்கள் அதை விரும்பி வாங்கி வீட்டில் வைத்துள்ளார்கள்? இதில் அபூர்வமான அறிவியல் பொதிந்துகிடக்கிறது என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

ஒரு பொருளைச் சமைக்கவேண்டுமானால் அதற்கு வெப்பத்தைக் கொடுக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். அரிசியை நீர் விட்டு வேகவைத்தால் சாதமாகிவிடும். முதலில் நீர் பொங்க ஆரம்பிக்கும். அந்தப் பொங்கும் நீரில்தான் அரிசி வேகும். பொதுவாக கடல் மட்டத்தில் நீரின் கொதிநிலை 100 டிகிரி செண்டிகிரேட் என்று இருக்கும்.

ஆக, அரிசி இந்த 100 டிகிரி செண்டிகிரேட் நீரில் கொதிபடுகிறது. திறந்த பானையில் கொதிக்கும் நீரால் இந்த வெப்பத்தைத் தாண்டிச் செல்லமுடியாது. இதற்கு மேல் நீங்கள் நெருப்பை - சூட்டை - அதிகப்படுத்தினாலும், நீரின் வெப்பம் ஏறவே ஏறாது! மாறாக நீர் நீராவியாகி பாத்திரத்திலிருந்து வெளியேறத் தொடங்குகிறது. இந்த 100 டிகிரி நீரில் கொதிக்க அரிசிக்கு அதிக நேரம் ஆகிறது. இன்னும் வேகமாக அரிசியைக் கொதிக்கவைக்க என்ன செய்யலாம்? எப்படியாவது நீரின் கொதிநிலையை அதிகப்படுத்த வேண்டும். அது ஒன்றுதான் வழி.

நீரின் கொதிநிலை அதன் அழுத்தத்தைச் சார்ந்தது. கடல் மட்டத்தில் (அதாவது சென்னையில்) இருக்கும்போது நீரின் கொதிநிலை 100 டிகிரி செண்டிகிரேட். ஆனால் பெங்களூருவில்? ஊட்டியில்? 93 அல்லது 95 டிகிரி செண்டிகிரேடிலேயே நீர் கொதிக்க ஆரம்பித்துவிடும். இமயமலைமீது ஏறிக்கொண்டே போனால், நீர் அங்கே 70 டிகிரியிலேயேகூட கொதிக்க ஆரம்பிக்கும். இதனால் வெங்கலப் பானையில் அல்லது மண் பானையில் அரிசி பொங்கும்போது, சென்னையில் எடுக்கும் நேரத்தைவிட ஊட்டியிலும் பெங்களூருவிலும் அதிக நேரம் எடுக்கும்! (சோதனை செய்து பாருங்கள்.)

இதற்குக் காரணம், உயரம் அதிகமாக அதிகமாக அழுத்தம் (பிரெஷர்) குறைந்துகொண்டே போவதுதான். பிரெஷர் குறையக் குறைய கொதிநிலை குறைகிறது. அப்படியானால், பிரெஷர் அதிகமானால்? சரியாக யோசித்துவிட்டீர்கள். அழுத்தம் அதிகமானால், நீரின் கொதிநிலையும் அதிகமாகும்.

சரி, அழுத்தத்தை எப்படி அதிகரிப்பது? அதைத்தான் பிரெஷர் குக்கர் செய்கிறது. பிரெஷர் குக்கரில் முக்கியமாக மூன்று பாகங்கள் உள்ளன. ஒன்று கேஸ்கெட் எனப்படும் ரப்பர் வளையம். இரண்டாவது சேஃப்டி வால்வ் எனப்படும் பகுதி. மூன்றாவது, விசில்.

பிரெஷரை அதிகப்படுத்துவது இந்த கேஸ்கெட்தான். கீழ்பாகம், மேல்மூடி ஆகியவற்றுக்கு இடையே கேஸ்கெட் பொருத்தப்படுகிறது. மேல்மூடியின் உட்புறம் கேஸ்கெட்டைப் பதியவைத்து கீழ்ப்பகுதியோடு வைத்து அழுத்திப் பூட்டுகிறோம். குக்கரின் உள்ளே நீர் கொதிக்க ஆரம்பித்ததும், கொஞ்சம் நீர், நீராவி ஆகிவிடுகிறது. திறந்த பாத்திரமாக இருந்தால் இந்த ஆவி வெளியேறிவிடும். ஆனால் பிரெஷர் குக்கரில் இந்த ஆவியால் வெளியேற முடியாது. கேஸ்கெட் சற்றே அகலமாகி, இடைவெளியை நிரப்பி, இந்த நீராவி வெளியேறிவிடாமல் தடுத்துவிடுகிறது. இதனால் ஆவி உள்ளேயே தங்கி உள்ளே இருக்கும் நீரின் அழுத்தத்தை அதிகரிக்கிறது. அழுத்தம் அதிகமாக அதிகமாக, நீரின் கொதிநிலை அதிகமாகிறது. மேலும் மேலும் வரும் நீராவி, அழுத்தத்தை அதிகமாக்கிக்கொண்டே போகிறது.

இப்படி அழுத்தம் அதிகமாகிக்கொண்டே போனால் என்ன ஆகும்? பாத்திரம் வெடித்துச் சிதறிவிடும். அப்படி ஆகாமல் தடுக்கத்தான் இருக்கிறது விசில். விசில் என்பது தடியான ஒரு குண்டு எடை. இந்த எடை ஒரு மெல்லிய துளைக்கு மேலாக வந்து உட்கார்ந்து கொள்கிறது. இந்த விசிலைப் போடாவிட்டால், நீராவி இந்தத் துளைவழியாக வெளியேறிவிடும். ஆனால் விசிலை அந்த ஓட்டையின்மீது வைத்துவிட்டால் நீராவி, விசிலை மேலே தூக்க முயற்சி செய்யும். ஆனால் ஆரம்பத்தில் அதனால் முடியாது. காரணம், விசில் கனமாக உள்ளது. அழுத்தம் அதிகமாக அதிகமாக, நீராவி விசிலை மேலே தள்ளுகிறது. இதனால் அந்தத் துளை வழியாகக் கொஞ்சம் நீராவி வெளியேறுகிறது. குக்கருக்குள் இருக்கும் அழுத்தம் கொஞ்சம் குறைகிறது. உடனே விசில் கீழே விழுந்துவிடுகிறது. இப்படி ஒரு ‘ரிலீஸ்’ இருப்பதால், குக்கருக்குள் இருக்கும் அழுத்தம் ஓரளவுக்கு மேல் செல்லாமல் இருக்கிறது. பாத்திரமும் வெடிப்பதில்லை.

அப்படியும் ஏதோ பிரச்னை காரணமாக நீராவியால் வெளியேற முடியவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். அதாவது விசில் பகுதியில் உள்ள துளையில் பருப்போ அரிசியோ சிக்கிக்கொள்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் சேஃப்டி வால்வ் எனப்படும் பகுதி இயங்கும். பாத்திரத்தின் பிற பகுதிகளைப் போல அல்லாமல், இது மட்டும் சற்றே இலகுவான உலோகத்தால் ஆனதாக இருக்கும். நீராவி மிகவும் அதிகமான அழுத்தத்தை உருவாக்கிவிட்டால், இந்தப் பகுதி பிய்ந்து வெளியே அடிக்கும். இதனால் ஏற்படும் ஓட்டை வழியாக நீராவி முழுதும் வெளியேறிவிடும். பாத்திரமும் சமையலறையில் வேலை செய்யும் நம் அம்மாவும் பிழைப்பார்கள். சமையலறைக் கூரை மீதுதான் சாதமும் பருப்பும் அடித்துச் சிதறியிருக்கும்!

இப்படி பிரெஷர் குக்கர், உள்ளே இருக்கும் அழுத்தத்தை அதிகமாக்குவதால், நீரின் கொதிநிலை 125 டிகிரி செண்டிகிரேட்வரை செல்கிறது. இதனால் அரிசி, பருப்பு, கிழங்குகள் ஆகியவை வேகமாகச் சமைக்கப்படுகின்றன. ஆனால், இதில் வேறு ஒரு பிரச்னை உள்ளது. பசிக்கிறது என்று உடனடியாக குக்கரைத் திறக்கமுடியாது. அமைதியாக உட்கார்ந்து, உள்ளே உள்ள நீராவி முழுதும் வெளியேறும் வரை பொறுமையாக இருக்கவேண்டும்.

ஆனாலும், பசிக்கு வேகமாகச் சோறிட, பிரெஷர் குக்கரைவிட்டால் வேறு வழியில்லை. குழம்புக்கு பருப்பு வேகவைக்க, பிரெஷர் குக்கர் வேகத்துக்கு வெறும் திறந்த பாத்திரத்தால் ஈடுகொடுக்கவே முடியாது.

மங்காத்தா

ஹாலிவுட் ரேஞ்சுக்குத் தமிழில் படங்களே இல்லையே என்ற ரசிகர்களின் குறையைப் போக்க வந்துள்ளது மங்காத்தா. பாடல்களில் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. விளையாடு மங்காத்தா பாடலுக்கு அஜித் தொப்பையைக் குலுக்கி ஆடுவதைவிட தியேட்டரில் இருக்கும் தாத்தா பாட்டிகள் அதிகமாக ஆடுகிறார்கள்.

ஒளிப்பதிவு அபாரம். அதுவும் முக்கியமாக கோவா காட்சிகள் எங்கேயோ போய்விடுகின்றன.

ஒரு சிக்கலான கதையை எப்படி எடுத்துக்கொண்டு போகப்போகிறார் வெங்கட் பிரபு என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் சீட் நுனிக்கே வந்துவிடுகிறார்கள். மக்கு ரசிகர்களுக்குக் கதை புரியாமல் போய்விட்டால் என்ன ஆவது என்பதால் ஆங்காங்கே ஃபிளாஷ்பேக், கதை நாயகர்களே கதையை அவ்வப்போது விளக்கிச் சொல்வது, கடைசி சீனில் வெகுநேரம் அர்ஜுனும் அஜீத்தும் போனில் பேசி விளங்கவைப்பது போன்ற தைரியமான சில முயற்சிகளை வெங்கட் பிரபு கையாண்டுள்ளார்.

பிரேம்ஜி அமரனின் நகைச்சுவை வசனங்கள் அருமை. ஐஐடி கோல்ட் மெடலிஸ்ட் என்றால் சும்மாவா. ஒவ்வொருமுறை அவர் வயிறு கலங்கும்போதும் நம் வயிறு குலுங்குகிறது. ‘நூடுல்ஸ் தலையா’ என்பது கவுண்டமணி-செந்தில் ஜோடி தமிழுக்கு வழங்கிய பல சொற்களுக்குப் பிறகு இப்போது கிடைத்திருக்கும் அருமையான வசைச் சொல்.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது லட்சுமி ராயை. சும்மா குலுக்கித் தளுக்கி நடனம் மட்டும் ஆடிவிட்டுப் போய்விடுவார் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அந்த எதிர்பார்ப்பில் மண். கதையின் மிக முக்கியமான திருப்பமே இவரிடமிருந்துதான் வருகிறது. அதைச் சூசகமாக உணர்த்துவதற்காகவே, ஆரம்பத்திலேயே ரயில் நிலையத்தில் ஒரு காட்சியை ஏற்பாடு செய்கிறார் வெங்கட் பிரபு. அந்தக் காட்சி மட்டும் இல்லையென்றால் ரசிகர்கள் குழம்பிப் போய்விடுவார்கள்.

அர்ஜுன் வேடம் மிக முக்கியமானது. அவர் கடைசிவரையில் வேடம் போடுகிறார் என்பதை யாராலும் கண்டுபிடித்திருக்கவே முடியாது.

திரிஷா குடும்பப் பாங்குள்ள பெண்ணாக நடித்திருக்கிறார். ஒரேயொரு முறை கொஞ்சமாக தண்ணி போடுகிறார் என்றாலும் அது தவிர பாந்தமாக உடையுடுத்தி நடிக்கிறார். இனி குணசித்திர வேடங்களாக அவருக்கு வந்து குவியும் என்பதில் ஐயமே இல்லை.

பணம் என்பது பேய்; அது மனிதர்களுக்கு இடையிலான அன்பை முறித்து, கொலையில் கொண்டுபோய்ச் சேர்க்கும் என்ற அற்புதமான தத்துவம் படத்தில் ஊடுபாவாகச் சொல்லிக்காட்டப்படுகிறது. நண்பனே நண்பனைக் கொல்வது, காதலித்து ஏமாற்றுவது, காதலியின் தந்தையிடமிருந்தே கொள்ளையடிப்பது, தேசத் துரோகி ஆவது, காவல்துறையின் உள்ளேயே இருந்து ஏமாற்றுவது, பத்துப் பதினைந்து ஆண்டுகளாகச் சோறு போட்டு வேலை கொடுத்திருக்கும் முதலாளியின் பணத்தை ஆட்டையைப் போடுவது - இத்தனையும் எதற்காக? பணத்துக்காக. இந்த உலகமே பிழைப்புவாதத்தை நோக்கிச் செல்கிறது, இல்லையில்லை சென்றுவிட்டது, இனி இந்த உலகத்துக்கு விடிவே இல்லை என்பதை முகத்தில் அறைந்தார்போலச் சொல்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

கடைசியாக நம்ம தல. இது அவருக்கு ஐம்பதாவது படம் என்றதிலிருந்தே நாடே உணர்ச்சிக் கொந்தளிப்பில் மூழ்கியிருந்தது. பட ஆரம்பத்தில் அவர் நடித்த ஐம்பது படங்களிலிருந்தும் ஸ்டில்ஸ் காட்டப்படுகின்றன. மீசைகூட முளைக்காத இளம் பருவத்திலிருந்து தாடி, நரை, தொப்பை வரை அஜீத் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சியை மிக அழகாகக் காட்டியுள்ளனர்.

படத்தில் சில குறைகள் இல்லாமல் இல்லை. நாட்டில் குடியரசுத்தலைவர் ஒரு டம்மி, ஏன், பிரதமரே ஒரு டம்மி என்பது சிறு குழந்தைக்குக்கூடத் தெரியும். இருந்தும் குடியரசுத் தலைவரிடம் நேரடியாக ரிப்போர்ட் செய்யக்கூடிய ஒரு காவலர் குழு - அதன் தலைவர் ஒரு ஏ.சி.பி (அசிஸ்டண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ்) என்பது கொஞ்சம் நெருடுகிறது. அதேபோல துப்பாக்கி கிராஸ்ஃபயரில் வயிற்றில் மட்டும் ஒரு தாமிரத் தகடை வைத்துக்கொண்டால் எளிதில் உயிர் தப்பிவிடலாம் என்று சொல்வதை ஒருவித கவித்துவ பீலா என்று எடுத்துக்கொள்ளலாம். இதற்குமேல் லாஜிக்கை ஆராய்ந்தால் ஹாலிவுட் படங்கள்கூட ஊத்திக்கொள்ளும்; ஐவரி மெர்ச்சண்ட் படங்களும் சத்யஜித் ரே படங்களும் மட்டுமே பிழைக்கும் என்பதால் விட்டுவிடுவோம்.

சென்சாரில் U/A சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். படம் பார்க்க ஏகப்பட்ட சிறுவர் சிறுமியர் வந்திருந்தனர். படத்தில் ஓரிடத்தில் ஆண்-பெண் ஜோடி உடையில்லாமல் மெத்தையில் புரளுவதை (சிறிது நேரம்தான்!) காட்டுகிறார்கள். அது தவிர கோவா குலுக்கு டான்ஸ், டப்பாங்குத்து டான்ஸ், ஆரம்ப நைட்கிளப் டான்ஸ், அஜீத்துக்குமுன் லட்சுமி ராய் உடையை அவிழ்த்துப்போட்டு மாற்றிக்கொள்வது என்று கலக்கலாகப் பல காட்சிகள் உள்ளன. மேலும் கெட்ட வார்த்தைகள் நிரம்பி வழிகின்றன. இதற்கு U/A என்பது, தமிழகம் எந்த அளவுக்கு முன்னேறி அமெரிக்காவின் தரத்தை அடைந்துவிட்டது என்பதையே காட்டுகிறது.

மங்காத்தா: பாருங்க, பாருங்க, பார்த்துக்கிட்டே இருங்க.

Wednesday, September 07, 2011

இறுதிமூச்சு வரை கணக்கு: லியோனார்ட் ஆய்லர் (1707-1783)

[அம்ருதா செப்டெம்பர் இதழில் வெளியான என் கட்டுரை.]

கணித மேதைகளைப் பற்றிப் படிக்கும்போதும் அவர்கள் செய்துள்ள கணித ஆராய்ச்சிகளைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும்போதும் அவர்கள் நிஜ உருவத்தில் எப்படி இருந்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பார்ப்பேன். அப்படி யோசித்ததில், பாசமான ஒரு தாத்தாவாக, அன்புடன் நம்மை அழைத்து, அருகில் அமரவைத்து, நமக்குக் கதை சொல்பவராகவே ஆய்லரின் முகம் எனக்குத் தோன்றும்.

ஆய்லர் 76 ஆண்டுகள் வாழ்ந்தார். முதல் மனைவி இறக்கும்போது ஆய்லருக்கு வயது 63. அவர்களுக்கு மொத்தமாக 13 குழந்தைகள் பிறந்தன. அவற்றில் 8 குழந்தைகள் இளமைப் பருவத்திலேயே இறந்துபோய்விட்டன. ஆய்லரைச் சுற்றி எப்போதுமே குழந்தைகள் இருந்தனர். அவர் தன் மடியில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு, தூளியில் ஒரு குழந்தையை ஆட்டியபடியே கணக்கு போடுவாராம். அவருக்கு 31 வயது ஆகும்போது ஒரு கண்ணில் பார்வை போய்விட்டது. பின்னர் 61 வயதில் இரண்டாவது கண்ணிலும் பார்வை போய்விட்டது. இரு கண்களிலும் பார்வை தெரியாமல் அவர் 15 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். அப்போதும், தன் பிள்ளைகளின் உதவியுடன் கணக்கு போட்டபடியே இருந்தார்.

அவர் ரஷ்யாவில் வாழ்ந்த பெரும் பகுதி நாட்டில் கலவரம் நடந்தபடியேதான் இருந்தது. அப்போதும் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்தபடி, கணக்கு போட்டபடியே தானுண்டு, தன் வாழ்க்கை உண்டு என்று வாழ்ந்தார். பின்னர் ஜெர்மனியில் அரசனின் அவையில் இருந்தபோதும், அரசன் தன்னைத் தொடர்ந்து கேலி செய்தபடி இருந்தபோதும், அவையில் இருக்கும் பிறர் தன்னைக் கேலி செய்தபோதும் அதனால் எல்லாம் அவமானப்படுவதற்குபதில் தன் கணக்கிலேயே தன் முழு கவனத்தையும் செலுத்தினார்.

தன் கடைசி மூச்சுவரை கணக்கு ஒன்றுதான் அவருக்குப் பிரதானமாக இருந்தது.

லியோனார்ட் ஆய்லரின் தந்தை பால் ஆய்லர் சர்ச் ஒன்றில் பாதிரியார். சுவிட்சர்லாந்தில் பேசில் என்ற இடத்தில் வசித்துவந்தார். 16-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவை உலுக்கும் வகையில் கிறிஸ்தவத்தில் ஒரு மாபெரும் பிரிவு ஏற்பட்டது. சீர்திருத்தத்தைப் பேசியவர்கள் புராட்டெஸ்டண்ட் கிறிஸ்தவர்கள். உள்ளது உள்ளபடியே என்ற நிலையைப் பின்பற்றி, ரோம் நகரில் இருக்கும் போப்பின் பின் அணிவகுத்தவர்கள் கத்தோலிக்கர்கள். ஆய்லர் குடும்பத்தினர், கால்வினிசம் என்ற ஒரு குறிப்பிட்ட புராட்டஸ்டெண்ட் பிரிவைச் சேர்ந்தவர்கள். கால்வினிஸ்டுகள் தனி வாழ்க்கையில் கடுமையாக உழைக்கவேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர்கள். அதனால், சிறு வயது முதலே கடுமையான உழைப்பு என்பது லியோனார்ட் ஆய்லரின் ரத்தத்திலேயே ஊறியிருந்தது.

அந்தக் காலகட்டம் - 18-ம் நூற்றாண்டில் தொடக்கம் - கணிதத்தைப் பொருத்தமட்டில் மிக மிகச் சுவாரசியமான ஒரு கட்டம். அதற்கு முந்தைய நூற்றாண்டில்தான் ஐரோப்பாவில் கணிதம் தொடர்பான பல மாபெரும் முன்னேற்றங்கள் நிகழ்ந்திருந்தன. அதில் முக்கியமானது கால்குலஸ் என்ற நுண்கணிதம்.

17-ம் நூற்றாண்டின் இணையற்ற அறிவியல் மாமேதை, இங்கிலாந்தைச் சேர்ந்த ஐஸக் நியூட்டன். மிக முக்கியமான தத்துவவியலாளர், ஜெர்மானியரான காட்ஃப்ரெட் லீபினிட்ஸ். இருவரும் தனித்தனியாக கால்குலஸ் என்ற கணிதமுறையைக் கண்டுபிடித்திருந்தனர். நியூட்டன்தான் இதனை முதலில் கண்டுபிடித்தார்; ஆனால் லீபினிட்ஸ் நியூட்டனைக் காப்பியடிக்காமல் தானாகவே இதனை உருவாக்கினார் என்றே இன்று அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அது மட்டுமல்ல. நியூட்டன் தான் உருவாக்கியதை விளக்கமாக யாருக்கும் சொல்லித் தரவில்லை. அவரது குறியீட்டு முறைகளும் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. மாறாக லீபினிட்ஸோ சந்தோஷமாக அனைவருக்கும் தன் கண்டுபிடிப்பைச் சொல்லிக்கொடுத்தார். அப்படி அவரிடம் கால்குலஸைச் கற்றுக்கொண்ட ஒருவர் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த யாக்கோப் பெர்னோலி.

இந்த பெர்னோலியையும் இவரது குடும்பத்தையும் நாம் பின்னர் இந்தத் தொடரில் பார்க்கப்போகிறோம். இந்தக் குடும்பமும் ஆய்லரின் குடும்பமும் நெருங்கிப் பழகின.

லியோனார்ட் ஆய்லர் பிறப்பதற்கு இரு வருடங்கள் முன்னரேயே யாக்கோப் பெர்னோலி இறந்துவிட்டார். நல்லவேளையாக யாக்கோப் பெர்னோலி தன் தம்பி யோஹானஸ் பெர்னோலிக்கு கால்குலஸ் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்திருந்தார். பள்ளிக்கூடம் செல்லும் வயதானதும் ஆய்லருக்கு யோஹானஸ் பெர்னோலி ஒவ்வொரு வாரமும் ஸ்பெஷல் கணித வகுப்புகளை நடத்தத் தொடங்கினார். இப்படியாக ஆய்லருக்கு, அவரது சிறு வயது முதற்கொண்டே, அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டிருந்த ஒரு முக்கியமான கணிதத் துறையை, அது தெரிந்த வெகு சிலரில் ஒருவரிடமிருந்து  நேரடியாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆய்லரின் பிற்காலச் சாதனைகள் அனைத்துக்கும் இந்த கால்குலஸ் மிக முக்கியமானதாக இருந்தது.

பால் ஆய்லர் தன் மகனைப் பாதிரியார் ஆக்க விரும்பினார். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று லியோனார்ட் ஆய்லரும் பல்கலைக்கழகம் சென்று தியாலஜி படித்தார். 17 வயதில் பட்டம் பெற்றார். ஆனால் இந்தப் பையன் கணிதத்தில்தான் முன்னுக்கு வருவான் என்று யோஹானஸ் பெர்னோலி பால் ஆய்லரிடம் எடுத்துச் சொன்னார். அதனை பால் ஆய்லரும் ஏற்றுக்கொண்டார்.

யோஹானஸ் பெர்னோலியின் மகன்களான  டேனியல் பெர்னோலி, நிகோலாய் பெர்னோலி இருவரும் லியோனார்ட் ஆய்லரைவிட வயதில் பெரியவர்கள். இந்த மூவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்தது. டேனியலும் நிகோலாயும் அப்போது ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் இருந்த இம்பீரியல் ரஷ்யன் அறிவியல் கழகத்தில் வேலை பார்த்துவந்தனர். டேனியல் பெர்னோலி மருத்துவத்துறையில் ஆராய்ச்சி செய்துவந்தார். நிகோலாய் பெர்னோலி கணிதத் துறையில் இருந்தார். மருத்துவத் துறையில் வேலை ஒன்று காலியாக இருக்கிறது என்று டேனியல் ஆய்லரிடம் சொன்னார். உடனே 17 வயதான ஆய்லர் மருத்துவம் படிக்க ஆரம்பித்துவிட்டார்! அடுத்த இரண்டாண்டுகளில் அவர் மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.

அதே நேரத்தில்தான் நிகோலாய் பெர்னோலி இறந்துபோனார். அதனால் அவர் வகித்துவந்த கணிதப் பதவி டேனியலுக்குக் கிடைத்தது. தான் வகித்துவந்த மருத்துவ ஆராய்ச்சிப் பதவியை லியோனார்ட் ஆய்லருக்குத் தருமாறு அவர் பரிந்துரைத்தார். ஆய்லருக்கு இப்படியாக 1727-ல் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் வேலை கிடைத்தது. ஆய்லர், செயிண்ட் பீட்டர்ஸ்பர்குக்குப் போய்ச் சேர்ந்த நாள் அன்றுதான் ரஷ்ய மகாராணி முதலாம் கேதரைன் இறந்துபோயிருந்தார். நாட்டில் அன்றுமுதல் குழப்பம் ஏற்பட்டது. 12 வயதே நிரம்பிய இரண்டாம் பீட்டர் என்பவரை ஜார் மன்னராக முன்னிறுத்தி பிரபுக்கள் அடிதடியில் ஈடுபட்டிருந்தனர்.

இது ஒருவிதத்தில் ஆய்லருக்கு வசதியாகிப்போனது. மருத்துவத் துறையில் வேலைக்கு வந்திருந்த ஆய்லர், நடக்கும் குழப்பத்தைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு நண்பரான டேனியல் இருந்த கணிதத் துறையில் அவருக்கு உதவியாளராகப் போய் உட்கார்ந்துகொண்டார். இரண்டாம் பீட்டர் அடுத்த மூன்றே ஆண்டுகளில் இறந்துபோனார். அதற்குள் ஆய்லர் இயல்பியல் பேராசிரியர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்திருந்தார். 1733-ல் டேனியல் பெர்னோலி சுவிட்சர்லாந்து திரும்பிவிட, ஆய்லர் கணிதத் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது ஆய்லருக்கு வயது 26தான்!

இனி ரஷ்யாதான் தன் வாழ்க்கை என்று முடிவெடுத்த ஆய்லர், ஒரு கல்யாணத்தைச் செய்துகொண்டு நிம்மதியாக அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அடுத்தடுத்து 13 குழந்தைகள் பிறந்தன. மற்றொரு பக்கம் தனக்கே உரிய கடுமையான உழைப்பில் நாளுக்கு நாள் புதிது புதிதாகக் கண்டுபிடிப்புகள் செய்வதில் ஆய்லர் செலவிட்டார். தினசரி பாடம் சொல்லிக்கொடுக்கவேண்டிய வேலைகள் குறைவு. அரசவைக்கு யாராவது பெரிய மனிதர்கள் வந்தால் விருந்து இருக்கும். அதற்கு ஆய்லர் போன்றவர்கள் அழைக்கப்படுவார்கள். அவ்வளவுதான்.

அறிவியல் கழகத்திலேயே பதிப்பக வசதியும் இருந்தது. ஆய்லர் ஆராய்ச்சித் தாள்களை எழுதி அவரது மேசைமீது வைக்கவேண்டியதுதான். காலாண்டுக்கு ஒருமுறை அலுவலர் ஒருவர் வந்து அவற்றை எடுத்துக்கொண்டுபோய் அச்சுக்கோர்த்து புத்தகமாக ஆக்கிக் கொடுத்துவிடுவார்.

ஆய்லரின் ஆராய்ச்சிகள் அனைத்தையும் தொகுத்தால் சுமார் 80 தொகுதிகள் வருகின்றன. கணிதத்தில் ஆய்லர் அளவுக்கு எழுதிக் குவித்தவர்கள் யாருமே இல்லை.

இந்த ஆராய்ச்சிகள் அனைத்துக்கும் அடிப்படையில் கால்குலஸ் இருந்தது. கால்குலஸ் என்ற பரந்த மேய்ச்சல் நிலத்தில் கண்ணுக்குப் பட்டதெல்லாம் ஆய்லரின் உணவாயின. டிஃபரன்ஷியல் கால்குலஸ், இண்டெக்ரல் கால்குலஸ், கால்குலஸ் ஆஃப் வேரியேஷன்ஸ் என்று இன்று 11-ம் வகுப்பு தொடங்கி நடத்தப்படும் பாடங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படை ஆய்லர் உருவாக்கியதுதான். இத்துறைகளில் மாணவர்களுக்கான முதல் பாடப் புத்தகங்களை எழுதியவரும் லியோனார்ட் ஆய்லர்தான்.

1741-ல் புருஷ்யாவின் மன்னர் பிரெடெரிக் விரும்பி அழைத்ததன்பேரில் ஆய்லர் பெர்லினுக்குக் குடிபெயர்ந்தார். அங்கு இருந்தபோதுதான் ஆய்லர் இந்தப் புத்தகங்களை எழுதினார். ஆய்லர் பிரெடெரிக்கின் அரசவையில் இருந்த நேரத்தில்தான் பிரெஞ்சு எழுத்தாளரும் தத்துவவாதியுமான வோல்ட்டேர் அங்கு இருந்தார். ஆய்லருக்கு அப்போது ஒரு கண் மட்டும்தான் தெரியும். இதனால் மன்னர் பிரெடெரிக், ஆய்லரை சைக்ளாப்ஸ் என்று அழைத்து கேலி செய்வாராம். சைக்ளாப்ஸ் என்பது கிரேக்க புராணத்தில் வரும், நடு நெற்றியில் ஒரேயொரு கண் மட்டுமே இருக்கும் ஓர் ஆசாமி. எப்படித்தான் ஆய்லர் இதுபோன்ற கேலிகளைச் சகித்துக்கொண்டிருந்தாரோ!

ஒருமுறை மன்னர் பிரெடெரிக் ஆய்லரிடம் நீர் ஊற்று ஒன்றை உருவாக்கச் சொல்லியிருந்தார். ஆய்லர் தன் கணித, இயல்பியல் அறிவைத் துணையாகக் கொண்டு இத்தனை உயரத்துக்கு நீர் ஊற்றிலிருந்து எழும்பவேண்டும் என்றால், நீரை இந்த உயரத்துக்குச் சேமித்துவைக்கவேண்டும் என்றெல்லாம் கணக்கு போட்டு, அதேமாதிரி கட்டியும் கொடுத்தார். ஆனால் ஆய்லர் உராய்வைப் பற்றி சிந்திக்கவேயில்லை. இதனால் அவர் எதிர்பார்த்த உயரத்துக்கு நீர் எழும்பவில்லை. இதை வைத்துக்கொண்டு பிரெடெரிக் ஆய்லரைக் கடுமையாகக் கிண்டல் செய்துள்ளார்.

அதே நேரம் ரஷ்யாவில் ‘மாபெரும்’ கேதரைன் ஆட்சிக்கு வந்தவுடன் அவர் ஆய்லரை விரும்பி அழைக்க, உடனேயே ஆய்லர் 1766-ல் செயிண்ட் பீட்டர்ஸ்பர்குக்கு மீண்டும் சென்றுவிட்டார். ராஜ வாழ்க்கை மீண்டும் தொடங்கியது. ராணி, தனது சமையல்காரர்களில் ஒருவரையே அவர் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். கை நிறையச் சம்பளம். ஆனால் இந்த நேரத்தில்தான் ஆய்லரின் இரண்டாவது கண்ணிலும் பார்வை போனது. அதனால் எல்லாம் ஆய்லர் மனம் தளரவில்லை. அவரது ஆய்விலும் எந்தக் குறையும் இல்லை.

ராமானுஜனின் கணிதம்போல ஆய்லரின் கணிதத்தை விளக்குவது கடினம் அல்ல. இன்று நீங்கள் கணிதப் புத்தகத்தில் காணும் பெரும்பாலானவற்றை ஆய்லர்தான் முதலில் செய்தவர். கற்பனை எண்களுக்கு டி என்ற குறியீட்டைக் கொடுத்தவர் ஆய்லர்தான். வட்டத்தின் பரப்பளவையும் சுற்றளவையும் கண்டுபிடிப்பதில் தொடங்கி இன்று கணிதம் முழுதும் நீக்கமற நிறைந்திருக்கும் ‘பை’ என்பதற்கு π என்ற கிரேக்கக் குறியீட்டைப் பிரபலப்படுத்தியவரும் இவரே. கணிதத்தில் லாகரிதம் என்ற மிக முக்கியமான ஒரு விஷயத்தில் வரும் ஞு என்ற குறியீட்டைக் கொடுத்தவரும் இவரே. கணிதத்தில் மிக அழகான சமன்பாடான eiπ + 1 = 0 என்பதைத் தருவித்தவரும் ஆய்லரே. கால்குலஸ் தவிர, முக்கோணவியல், நம்பர் தியரி, முடிவிலாத் தொடர்கள் என எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆய்லர் கண்ணுக்குத் தென்படுகிறார். இதுதவிர நியூட்டன் ஆரம்பித்துவைத்த மெக்கானிக்ஸ் துறையை கால்குலஸின் அடிப்படையில் மாற்றியமைக்க மிக முக்கியமான காரணமாக இருந்தவர் ஆய்லர்.

பிரெஞ்சு அகாடெமி ஒவ்வோர் ஆண்டும் ஒரு கடினமான கணக்கைக் கொடுத்து அதைத் தீர்ப்பவருக்குப் பெரும் பரிசு அறிவிப்பார்கள். அந்தப் பரிசை ஆய்லர் 12 ஆண்டுகள் வென்றிருக்கிறார்! பூமி சூரியனைச் சுற்றுகிறது; சந்திரன் பூமியைச் சுற்றுகிறது. அப்படியானால் சூரியனிலிருந்து பார்த்தால் சந்திரனது சுற்றுப்பாதை எப்படிச் செல்லும் என்பது நியூட்டனையே அலைக்கழித்த ஒரு கணக்கு. அதனை அசாதாரணமாகச் செய்துமுடித்தவர் ஆய்லர்.

இப்படி வைத்துக்கொள்வோம். இன்று உலகில் பள்ளிக்குப் போகும் எந்தப் பிள்ளையும் ஆய்லர் செய்தவற்றில் ஒரு சிலவற்றையாவது கற்காமல் பள்ளியிலிருந்து வெளியே வரமுடியாது. பல நேரங்களில் அதனைச் செய்தது ஆய்லர்தான் என்றே அவர்களுக்குத் தெரியாது. அந்த அளவுக்கு நம் கல்வித் திட்டத்தில் ஆய்லர் நீக்கமற நிறைந்துள்ளார்.

கண் தெரியாமலேயே ஆய்லர் எப்படி 15 ஆண்டுகள் கணக்கு போட்டார் என்று ஆச்சரியமாக இருக்கிறதா? ஆய்லருக்கு ஞாபக சக்தி மிக மிக அதிகம். தனக்குக் கண் பார்வை போய்விடப்போகிறது என்பதைத் தெரிந்தகொண்டவுடனேயே தனக்கு வேண்டிய அனைத்துக் கணிதச் சமன்பாடுகளையும் வழிமுறைகளையும் முற்றிலுமாக மனப்பாடம் செய்துவிட்டார் ஆய்லர். அதன்பின் தனக்குத் தேவையான அனைத்தையும் மனத்திலேயே போட்டுவிடுவார் அவர். முடிவு தெரிந்ததும் தன் மகனை அழைத்து அவர் சொல்லச் சொல்ல அவன் தாளில் எழுதுவைக்கவேண்டியதுதான்!

ஆய்லர் தன் இறுதி நாள் வரை கணக்கு போட்டுக்கொண்டிருந்தார். 18 செப்டெம்பர் 1783 அன்று மாலை உணவை முடித்தார். அந்தச் சமயத்தில்தான் யுரேனஸ் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அதன் சுற்றுப் பாதையைக் கணக்கிடுவது எப்படி என்று வழிமுறையை அங்கு வந்திருந்த தன் நண்பரிடம் ஆய்லர் விளக்கினார். பின் தன் பேரக் குழந்தையுடன் கொஞ்சம் விளையாடினார். தேநீர் குடித்தார். உயிர் விட்டார்.

பிரெஞ்சு அகாடெமிக்காக ஆய்லரின் இறப்பை இரங்கலாக எழுதிய மார்க்கி த கண்டார்செத் இவ்வாறு எழுதினார்: ‘ஆய்லர் கணக்கு போடுவதை நிறுத்தினார். தன் மூச்சையும் நிறுத்தினார்.’

Tuesday, September 06, 2011

சன் இல்லையேல் டிவி இல்லை

அரசு கேபிள் தொடங்கியதே சன் டிவிக்குத் தொல்லை கொடுக்கத்தான். அதனால் சன் டிவி, அரசு கேபிளுக்குத் தொல்லை தருவது ஒருவிதத்தில் தொழில் தர்மமே.

கருணாநிதி ஆட்சிக்காலத்தில் பேட்ச் அப் வேலைகள் முடிந்ததும் அரசு கேபிள் முடக்கப்பட்டது. ஆங்காங்கே கேபிள்கள் வெட்டப்பட்டன. ஆனால் இப்போது ஜெயலலிதா ஆட்சி என்பதால் கேபிள் வெட்டுதல் பயன் தராது. தூக்கி ஜெயிலில் போட்டுவிடுவார்கள். ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் சக்சேனா உள்ளே இருக்கிறார்.

எனவே சன் டிவி தன்னிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதத்தை முன்வைத்துப் போராடுகிறது. சன் டிவி சீரியல்கள்தாம் அந்த ஆயுதம். சீரியல்கள் பார்க்காமல் நம் தமிழ்நாட்டுப் பெண்மணிகள் வாழ்க்கை நடப்பதில்லை என்பதால் அரசு கேபிள் வேண்டாம் என்று பல இடங்களில் மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர் என்று சன் நியூஸ் தெரிவிக்கிறது!

எல்லா கேபிள் விநியோக நிறுவனங்களுக்கும் எல்லா சானல்களும் தரப்படவேண்டுமா? உதாரணமாக, சன் டிவி தன் சானல்களை ஏர்டெல் டிடிஎச்சுக்குத் தரமாட்டேன் என்று சொல்லமுடியுமா?

இந்தப் பிரச்னைகள் எல்லாம் இதற்குமுன் ஏற்கெனவே வந்துள்ளன. டாடா ஸ்கை - சன், டிஷ் டிடிஎச் - சன் என்று இந்தப் போராட்டங்கள் இதற்குமுன் நடக்காமல் இல்லை. கொஞ்ச நாட்கள் இழுத்தடித்துவிட்டு, TRAI, TDSAT என்று போராடிவிட்டு, இறுதியில் சன் டிவி தன் சானல்களை அரசு கேபிளுக்குத் தந்துதான் ஆகவேண்டும். ஆனால் இடைப்பட்ட காலத்தில் சன் டிவி தன் ஊடக பலத்தைக் கொண்டு அரசிடம் கொஞ்சம் வாலாட்டிப் பார்க்கும்.

பொதுவாக அரசு இதுபோன்ற தொழில்களில் ஈடுபடுவதை நான் ஆதரிப்பவன் அல்லன். ஆனால் இந்த விஷயத்தில் அரசின் தலையீடு தேவை என்று நம்புகிறேன். வலுவான தொழில்முறை எதிரிகளையெல்லாம் சன் குழுமம் சாம, தான, பேத, தண்டத்தைப் பயன்படுத்தித் துரத்திவிட்டது. அப்படிப்பட்ட உருவாகியுள்ள ஒரு மொனாபொலி எந்தத் துறைக்குமே நன்மை செய்யப்போவதில்லை. அந்த மொனாபொலியைத்தான் அரசு உடைக்க முயல்கிறது. மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல, மாறாக சன் டிவியை, திமுகவின் ஆதார பலத்தை அசைக்கவேண்டும் என்பதற்காகவே. பொதுவாகவே இதுபோன்ற விஷயங்களை நளினமான முறையில் செய்வதற்கு அரசு நிறுவனங்களுக்குத் தெரியாது. மேலும் ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் திமுக (அல்லது மாறனுக்கு நட்பான கட்சி) ஆட்சிக்கு வந்தால், அரசு கேபிள் கந்தரகோலமாகிவிடும்.

ஆனால் என் நம்பிக்கை, அதற்குள்ளாக குறைந்தபட்சம் இன்னுமொரு தரைவழி கேபிள் நிறுவனம் தமிழகம் முழுக்கக் கால் பதித்திருக்கும் என்பதே. அப்படி ஆனால்தான் சன் குழுமத்தில் கேபிள் மொனாபொலியைக் கட்டுப்படுத்த முடியும். டிடிஎச் என்பது கொஞ்சம் விலை அதிகமானதாகவே தெரிகிறது.

நிஜமாகவே கேட்கிறேன்... இந்த சன் டிவி சீரியல்களைப் பார்க்காவிட்டால் என்னதான் ஆகும்? அப்படி என்னதான் அந்த சீரியல்களில் உள்ளது?

வெட் கிரைண்டர்

இன்று மிண்ட் செய்தித்தாளில் வெட் கிரைண்டர் (Wet Grinder) பற்றி ஒரு செய்தி வந்துள்ளது. தமிழக அரசின் இலவசங்களால் யாருக்கு நன்மை, யாருக்குத் தீமை என்பதை ஓரளவுக்கு விரிவாகவே அலசுகிறது. இணையத்தில் சுட்டியைக் கண்டுபிடிக்க முடியாததால் இங்கே கொடுக்கவில்லை. அந்தச் செய்தியிலிருந்து சில குறிப்புகள்:
  • ஜெயலலிதாவின் அரசு, ஆண்டு வருமானம் ரூ. 15,000-க்குக்கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றைக் கொடுப்பதாகத் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தது. அதன்படி, இந்த ஆண்டு 25 லட்சம் குடும்பங்களுக்கு இவற்றை வழங்க, ரூ. 1,250 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
  • கிரைண்டர்களை வழங்க 8 நிறுவனங்கள் டெண்டரில் வெற்றி பெற்றுள்ளன. அவற்றில் 5 கோயம்புத்தூரைச் சேர்ந்தவை, இரண்டு சென்னை, ஒன்று ஈரோட்டைச் சேர்ந்தவை.
  • வீடுகளுக்கு இலவசமாகவே கிரைண்டர்கள் கிடைத்துவிடும் என்பதால் கடைகளில் காசு கொடுத்து கிரைண்டர்கள் வாங்குவது பயங்கரமாகக் குறைந்துவிட்டது. சென்ற ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு இதுவரையில் 70% குறைவாகத்தான் விற்பனை நடந்துள்ளதாம்.
  • இதற்குமுன் இலவச டிவி திட்டம் வந்தபோதும் 2006-07-ல் தொலைக்காட்சி விற்பனை கடுமையாகச் சரிந்தது - 50% சரிந்தது.
  • டெண்டரில் ஜெயித்தவர்கள், பெரிய முதலீடு செய்து உற்பத்தியைப் பெருக்கும் முயற்சியில் உள்ளனர். ஆனால் டெண்டரில் வெற்றிபெறாத கிரைண்டர் தயாரிப்பாளர்கள் எல்லோரும் கடுமையான நஷ்டத்தில் உள்ளனர். இப்போதைக்கு வெளி மாநில ஆர்டர்கள் மட்டுமே அவர்களுக்கு வருகின்றனவாம்.
  • இந்தப் பிரச்னையைத் தாண்டி அவர்களது உண்மையான பயமே சீனர்கள்மீதுதான். சீனா மட்டும் வெட் கிரைண்டர் விஷயத்தில் இறங்கிவிட்டால் தாங்கள் எல்லாம் கடையைச் சுருட்டிக்கொண்டு போய்விடவேண்டியதுதான் என்கிறார்கள் இந்தத் தயாரிப்பாளர்கள்.

Monday, September 05, 2011

சமச்சீர் மற்றும் இன்னபிற

[கல்வித்துறையில் பணியாற்றும் ஆலோசகர் ஒருவர் இன்று எங்கள் அலுவலகத்துக்கு வந்திருந்தார். பல ஊர்களுக்கும் சென்று ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்துபவர் இவர். இவருடன் நடந்த உரையாடலில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்தப் பதிவு.]

சமச்சீர் புத்தகங்கள் கையில் கிடைத்து, பாடங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன. முந்தைய மாநில வாரியக் கல்விப் புத்தகங்களுடன் ஒப்பிடும்போது சமச்சீர்ப் புத்தகங்கள் கடினமாக இருப்பதாகப் பல ஆசிரியர்கள் நினைக்கிறார்களாம். இப்படித் திடீரென மாற்றம் கொண்டுவந்துள்ளது அவர்களுக்குப் பெருத்த சிரமத்தைத் தந்துள்ளது. பாடங்கள் புதுவகையாக இருப்பதால் ஆசிரியர்கள் ஒருவிதப் பதற்றத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்தப் பதற்றம் மாணவர்களையும் தொற்றிக்கொண்டுள்ளது. அதன் விளைவாகப் பெற்றோர்களும் பதற்றத்தில் இருக்கின்றனர்.

முக்கியமாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இருக்கும் பதற்றம் தனிப்பட்டது. ஆண்டிறுதிப் பரீட்சை எப்படி இருக்கும், அதில் எந்த மாதிரியான கேள்விகள் வரும் என்பதுதான் இவர்களது பதற்றத்துக்குக் காரணம். முந்தைய ஆண்டுக் கேள்வித்தாள்களை அடிப்படையாகக் கொண்டே பல மாணவர்கள் பரீட்சைக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்வார்கள். ஆனால் அப்படி இந்தமுறை செய்ய இயலாது. எவ்வளவு விரைவில் அரசு மாதிரி வினாத்தாள்களை வெளியிடுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்த மாணவர்களின் பதற்றம் குறையும்.

***

ஹையர் செகண்டரி மாணவர்களுக்குக் கணினிகள் வழங்கப்படும் அதே நேரம் ஆசிரியர்களுக்குக் கணினிகள் வழங்குவதைப் பற்றி அரசு சிந்திக்கவில்லை. சிறு நகரங்களில் இருக்கும் பல தனியார் பள்ளிகள், ஸ்மார்ட்போர்ட், எக்கச்சக்கமான கணினி மென்பொருள்கள் என்றெல்லாம் வாங்கி வைத்திருந்தாலும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு அவற்றைப் பயன்படுத்தத் தெரிவதில்லை. தனியார் பள்ளி ஆசிரியர்கள் நிலையே இப்படி என்றால் அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் கணினியை முறையாகப் பயன்படுத்தி அதன்மூலம் கல்வியை எப்படி மேம்படுத்துவது என்று அரசு யோசித்தமாதிரியே தெரியவில்லை. கணினியைக் கொடுத்தால் மட்டும் போதும் என்று நினைக்கிறார்களா?

***

தம் பிள்ளைகளின் படிப்புமீது பெற்றோர் அதீத முதலீடு செய்கின்றனர். தம் சக்திக்குமீறிய கட்டணத்தை வசூலிக்கும் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கின்றனர். பிள்ளைகள் கோட், டை, ஷூ அணிந்து செல்வதை சிறு நகரங்களில் உள்ள பெற்றோர்கள் மிகவும் விரும்புகின்றனர். தம் பிள்ளைகள் ‘ஷட் அப்’ என்று தம்மை ஆங்கிலத்தில் திட்டினாலும், ஆங்கிலம் பேசுகிறானே என்று அகமகிழ்ந்துபோகின்றனர்.

மொத்தத்தில் ஆங்கிலம் ஒன்றுதான் தம் பிள்ளைகளின் எதிர்காலத்தை உறுதிசெய்யும் என்று தமிழ்ப் பெற்றோர்கள், அதுவும் குறிப்பாக சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள பெற்றோர்கள், உறுதியாக நம்புகின்றனர். ராஜபாளையம் போன்ற சிறு ஊர்களிலும் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கப் பல நிறுவனங்கள் உள்ளன. தஞ்சாவூரில் (என்று நினைக்கிறேன்) ஒரு லோக்கல் கேபிள் சானலே ஆங்கிலம் கற்றுக்கொடுக்க என்று உள்ளதாம். எந்தத் தரத்தில் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.

ஏதேனும் ஒரு பள்ளி சிறப்பாக ஆங்கிலம் கற்றுக்கொடுக்கிறது என்ற பெருமையைப் பெற்றுவிட்டால் போதும்; உடனடியாக மக்கள் கூட்டம் அந்தப் பள்ளியை நோக்கிப் படையெடுக்கிறது. அந்தப் பள்ளியில் நுழைவதே மிகக் கடினமாக ஆகிவிடுகிறது.

***

தாய் தமிழ்ப் பள்ளிகள் என்ற பெயரில் பல இடங்களில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகள் மிக நல்ல கருத்துடன் ஆரம்பிக்கப்பட்டாலும் இன்று மிகுந்த பொருள் சிரமத்துக்கிடையில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் தொடக்கக் கல்வி முழுமையாகத் தமிழில் போதிக்கப்படுகிறது. பொதுவாக இரண்டாம் நிலை நகரங்களில் ஆசிரியருக்கும் ஆங்கிலம் தெரியாது; மாணவர்களுக்கும் ஆங்கிலம் தெரியாது. இதனால் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் உருப்படியாக ஒன்றும் சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை. மாறாக தாய் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் கருத்துகளை நன்கு புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு சேரும்போது அந்த ஆண்டு கொஞ்சம் சிரமப்பட்டாலும், ஏழாம் வகுப்பு வரும்போது வகுப்பில் முதலாவதாக வந்துவிடுகிறார்கள். சில ஊர்களில் தாய் தமிழ்ப் பள்ளிகளில் படித்துவிட்டு வருவோரை எந்தக் கேள்வியும் கேட்காமல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆங்கில மீடியத்தில் ஆறாவதில் சேர்த்துக்கொள்கிறார்கள். (உதாரணம்: பட்டுக்கோட்டை என்று சொன்னார் என்று நினைக்கிறேன்.)

ஆனாலும் பெற்றோர்களின் ஆங்கில மோகம் காரணமாகவும் தாய் தமிழ்ப் பள்ளிகளை நடத்துவோரின் முரட்டுத்தனமான கொள்கைப்பிடிப்பு காரணமாகவும் இந்தப் பள்ளிகள் தள்ளாடுகின்றன. (உதாரணம்: மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கிறார்கள். இதனாலும் தமிழில் மட்டுமே பாடம் சொல்லித்தருவதாலும் பல பெற்றோர்கள் தம் பிள்ளைகளை மோசமான இரண்டாந்தர ஆங்கிலப் பள்ளிகளில் கொண்டு சேர்க்கிறார்கள்!)

அண்ணா ஹசாரே, இட ஒதுக்கீடு

நேற்று உங்களில் பலர் விஜய் டிவியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சியைப் பார்த்திருக்கலாம். அந்த நிகழ்ச்சியை முன்னிட்டுத்தான் இந்த வரிசையின் முதல் பதிவை எழுதியிருந்தேன்.

நிகழ்ச்சியின்போது எழுந்த வலுவான ஒரு கேள்வி இட ஒதுக்கீட்டை முன்வைத்தது. அண்ணா ஹசாரே குழுவினர் முன்வைக்கும் லோக்பால் அமைப்பு இப்படித்தான் இருக்கும்.
  • ஒரு தலைவர், 10 உறுப்பினர்கள். (ஆக மொத்தம் 11 பேர்).
  • இவர்களில் குறைந்தபட்சம் நால்வருக்காவது சட்டப் பின்னணி இருக்கவேண்டும்.
  • இவர்களை ஒரு தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும்.
  • ஒரு ‘தேடுதல் குழு’ முதலில் சில பெயர்களைத் தேடிக் கொண்டுவரும். அதிலிருந்து 11 பேரை தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும்.
இந்த 11 பேரும்தான் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடன் சேர்ந்து ஊழல் செய்யும் பிறர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து உறுதி செய்து தண்டனை கொடுப்பார்கள்.

இந்த 11 பேரைத் தேர்ந்தெடுக்கும்போது இட ஒதுக்கீடு இருக்குமா என்ற கேள்வியை சிலர் முன்வைத்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கண்காணிக்கும் ஓர் அமைப்பு அதிகாரம் இந்த லோக்பால் அமைப்புக்கு வருமானால், அந்த அமைப்பில் இட இதுக்கீடு இல்லையென்றால், அது மேல் சாதியினரால் நிரப்பப்பட்டு, வேண்டுமென்றே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் துன்புறுத்த வழிவகுக்கும் என்பதுதான் இதன் அடிநாதம்.

இப்போதைக்கு, நாடாளுமன்றத்தையும் சட்டமன்றங்களையும் பொருத்தமட்டில், அட்டவணை சாதியினருக்கும் பழங்குடியினருக்கும் மட்டும்தான் இட ஒதுக்கீடு உள்ளது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு கிடையாது. பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. மதச் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு கிடையாது. உயர்/உச்ச நீதிமன்றங்களில் நீதிபதியாவதற்கு யாருக்குமே இட ஒதுக்கீடு கிடையாது. 

மத்திய அரசு, மாநில அரசு வேலைகளில் அட்டவணை சாதியினர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு உள்ளது. பெண்களுக்கு என்று தனி இட ஒதுக்கீடு கிடையாது.

இட ஒதுக்கீடு என்பது எல்லாத் துறைகளுக்கும், எல்லாப் பதவிகளுக்கும் அவசியமானது என்ற முடிவுக்கு நான் வந்திருக்கிறேன். இட ஒதுக்கீடு என்ற கொள்கை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தன்னம்பிக்கையை அளித்துள்ளது என்று நினைக்கிறேன். பெரும்பாலான மக்கள் மனத்தில் ஒருவித சந்தேகமும் தாம் ஒடுக்கப்படுகிறோம் என்ற கோபமும் இருக்கும்வரை இந்தியா என்ற தேசம் முன்னேறுவதற்கு வழியே இல்லை. இட ஒதுக்கீட்டினால் இந்தச் சந்தேகமும் கோபமும் ஓய்ந்துவிடும் என்றால் அத்தகைய கொள்கையை நாம் அனைவருமே விரும்பி ஏற்கவேண்டும்.

லோக்பால் முதற்கொண்டு நீதித்துறைவரை அனைத்துத் துறைகளிலும் equitable இட ஒதுக்கீடு அவசியம் என்றே நான் நினைக்கிறேன். அண்ணா ஹசாரே குழுவினர் இதனைப் புரிந்துகொள்ள முற்படவேண்டும். மாறாக, லோக்பாலைப் பொருத்தமட்டில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று சொல்வார்களேயானால், சில பகுதிகளிலிருந்து கடுமையான எதிர்ப்பை அவர்கள் சந்திக்கவேண்டியிருக்கும். அதையே காரணம் காட்டி, லோக்பால் சட்டம் நிறைவேறுவது தாமதப்படுத்தப்படலாம்; அல்லது நடக்கவே நடக்காமல் போகலாம். உதாரணத்துக்கு, பெண்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான மசோதா எப்படி அல்லல்படுகிறது என்று பாருங்கள். அதில் உள்ள பெரிய குறையாகப் பலரும் சொல்வது சாதிகளுக்கான உள் ஒதுக்கீடு இல்லாதிருப்பதுவே.

Youth for Equality போன்றவர்கள் அண்ணா ஹசாரே போராட்டத்தை ஆதரிக்கிறார்கள்; எனவே அடிப்படையில் இந்தப் போராட்டம் எந்தத் திசையில் செல்லப்போகிறது என்று நன்றாகத் தெரிகிறது என்று சில எதிர்ப்பாளர்கள் பேசுகிறார்கள். அண்ணா ஹசாரே ஒரு சாதி வெறியர் என்பதுபோலச் சித்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. மேலும் சிலர் நகைப்புக்கிடமாக, அண்ணா ஹசாரே ஏதோ ஒருவிதத்தில் பாபாசாஹிப் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தை அழிக்க முனைகிறார் என்பதுபோலத் திரிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த விஷயம் பெரிதாகப் போவதற்கு முன்னதாக இட ஒதுக்கீடு தொடர்பான தம் தெளிவான கருத்துகளை அண்ணா ஹசாரே குழுவினர் வெளிப்படுத்துவது முக்கியமாகிறது.

Sunday, September 04, 2011

இலவச மடிக்கணினிகள்

ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளைத் தருவதாக தேர்தல் அறிக்கையில் அறிவித்து அதனைச் செயல்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது.

அதன்படி, டியூயல் கோர் பெண்டியம் சிப் உடைய, நல்ல தரமான கணினிகளாகவே வாங்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கணினி ஒவ்வொன்றும் ரூ. 10,000-க்குள் கிடைக்கலாம் என்பதாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போதைய டெண்டர் தகவல்களைப் பார்க்கும்போது, முதலில் வாங்கும் 6,000 கணினிகள், ஒவ்வொன்றும் ரூ. 18,000 என்ற விலைக்கு வரும்போலத் தெரிகிறது. பின்னர் வாங்க உள்ள சுமார் 9 லட்சம் கணினிகளை ஒவ்வொன்றும் ரூ. 14,000 என்று வாங்க விரும்புகிறார்களாம்.

எதற்காக டியூயல் கோர் பெண்டியம் கணினிகளை வாங்கவேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. நெட்புக் என்று சொல்லப்படும் குறைந்த விலைக் கணினிகளை வாங்கினாலே போதுமே. இவை ஒன்றும் மோசமான கணினிகள் அல்ல. ரீடெய்ல் சந்தையில் சுமார் ரூ. 13,000 விலைக்குக் கிடைக்கும் இவற்றை மொத்தமாகக் கொள்முதல் செய்தால் ஒவ்வொன்றும் ரூ. 8,000 என்ற விலைக்கே கிடைக்கலாம். என் வீட்டில் இப்படிப்பட்ட ஒரு கணினி இருக்கிறது. அதன் செயல்திறன் அபாரம் என்றுதான் சொல்வேன். மோசமான பொருளை வாங்கித்தரக்கூடாது. ஆனால் அதே நேரம், பணத்தை வீணாகச் செலவழிக்கவும் வேண்டியதில்லை.

மற்றுமொரு காரணம் பேட்டரி. நெட்புக் அடிப்படையில் மின்சாரத்தைக் குறைவாகச் செலவழிக்கும் ஒரு சாதனம். அதன் சிப் குறைந்த சக்தி கொண்டது. இன்றைய பெரும்பாலான வேலைகள் கிளவுட் எனப்படும் இணையச் சேவை வழியாகவே நடக்கின்றன. எனவே குறைந்த சக்தி கொண்ட சிப்பே போதும். இதன் காரணமாக நெட்புக் பேட்டரி கிட்டத்தட்ட 8 மணி நேரத்துக்குமேல் வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இப்போதும் மின்வெட்டு உள்ளது, அடுத்த பல ஆண்டுகளுக்கும் இதே நிலைதான் இருக்கப்போகிறது. இப்போது தமிழக அரசு வாங்கவுள்ள கணினிகளில் பேட்டரி 2-3 மணி நேரம் இருந்தாலே அதிசயம்தான். இதுபோன்ற இடங்களில் நெட்புக் மிகவும் வசதியாக இருக்கும். அதன் எடையும் குறைவே.

***

இத்தனை லட்சம் கணினிகள் திடீரென தமிழகத்தில் கிடைத்தால் அதன் விளைவாக என்னவெல்லாம் நிகழும்? கல்வியில் எந்தவிதமான மாற்றம் ஏற்படும்? புரோகிராமிங் துறையில் பல சாதனையாளர்கள் உருவாவார்களா? அல்லது, எல்லோரும் யூட்யூப் பார்த்து, ஃபேஸ்புக்கில் நேரம் செலவழித்து, உருப்படாமல் போகப்போகிறர்களா?

Friday, September 02, 2011

அண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்

அண்ணா ஹசாரேவின் போராட்டம் ஆரம்பித்ததுமுதல் அவருக்கு எதிராக அவதூறுகள் கொட்ட ஆரம்பித்தன. அண்ணா ஹசாரேவும் அவரது குழுவினரும் முன்வைக்கும் ஜன் லோக்பால் மசோதாபற்றி எனக்கு இன்றுவரை கேள்விகள் உள்ளன. மசோதாவில் மாற்றம் தேவை என்றே நான் நினைக்கிறேன். ஆனால் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் அண்ணா ஹசாரே யார் என்ற கேள்வியில் தொடங்கி, அவரது நேர்மையைச் சந்தேகிப்பது, அவர் அந்நிய நாட்டின் கைக்கூலி என்பது, அவர் இந்தப் போராட்டத்தைச் செய்தாரா - அந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தாரா என்று கேள்வி எழுப்புவது என்ற வகையிலேயே இருந்தன.

காங்கிரஸ் அவரைத் தாக்கியது. இடதுசாரிகள், வலதுசாரிகள் இருவருமே தாக்கினார்கள். ஆரோக்கியமான விவாதம் அவசியமே. ஆனால் கடுமையான முன்முடிவுகளுடன் தாக்கிப் பேசுபவர்கள் நிஜமாகவே விவாதத்தை விரும்புகிறர்களா என்ற சந்தேகமே ஏற்படும்.

எழுத்தாளர் ஜெயமோகன், அண்ணா ஹசாரே பற்றி எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கும் தன் இணையத்தளத்தில் தெளிவான பதில்களை அளித்தார். தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். அண்ணா ஹசாரே கைது செய்யப்பட்டதும் அதற்கான கண்டனங்கள் குவிய ஆரம்பித்தன. கேள்விகளும் குவியத் தொடங்கின. பதில்களும்தான். அரசுடன் ஒப்பந்தம் ஏற்பட்டு, அண்ணா ஹசாரே விடுவிக்கப்பட்டு, அவர் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கியபோது நாடெங்கிலும் ஆதரவு பெருகத் தொடங்கியது. ஆனால் கேள்விகளுக்கோ குறைவில்லை.

ஒரு கட்டத்தில் ஜெயமோகன் அண்ணா ஹசாரே பற்றி எழுதியவற்றையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாகக் கொண்டுவர முடிவெடுத்தோம். ஆனால் புத்தக எடிடிங் நடந்துகொண்டிருக்கும்போதே மேலும் பல கேள்விகளும் கட்டுரைகளும் இணையத்தளத்தில் வெளியாகின. இறுதியில் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் முடிவடைந்ததும் அது தொடர்பான ஜெயமோகனின் கட்டுரையையும் சேர்த்து புத்தகமாகக் கொண்டுவந்துள்ளோம்.

இணையத்திலேயே படித்திருந்தாலும், அச்சில் அனைத்தையும் ஒருசேரப் படிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

புத்தகம் நாளை முதல் மதுரை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.

இணையத்தில் புத்தகம் வாங்குபவர்களுக்கு ஒரு வாரத்துக்கு மட்டும் பிரத்யேகமான சலுகையாக 30% விலைகுறைப்பு. ரூ. 80 மதிப்புள்ள புத்தகம் வெறும் ரூ. 56 மட்டுமே. இந்தச் சலுகை இணையம் வழியாக நேரடியாக வாங்குபவர்களுக்கு மட்டுமே.

புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும். .

Thursday, September 01, 2011

கருப்புப் பொருளாதாரத்தின் தாக்கம் - அருண் குமார்

[தி ஹிந்துவில் 20 ஆகஸ்ட் 2011 அன்று வெளியான கட்டுரையின் தமிழாக்கம். எழுத்தாளரின் அனுமதியுடன் மொழியாக்கம் செய்யப்பட்டு இங்கே பிரசுரிக்கப்படுகிறது. இறுதிக்கு முந்தைய பத்தியின் கடைசி இரண்டு வரிகள் இரண்டாவது முறையாக வருவதைப்போலத் தோற்றம் அளித்ததால் அவற்றை நீக்கியுள்ளேன். உள்ளே ஓரிரு இடங்களில் தமிழுக்காகவேண்டி சற்றே விளக்கமான வரிகளாக மாற்றி எழுதியுள்ளேன். -- பத்ரி]

ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்காக அண்ணா ஹசாரே மேற்கொண்டிருக்கும் உண்ணாவிரதமும் அவரை வீட்டிலேயே கைது செய்து சிறைக்குக் கொண்டுசென்றதன் விளைவாக நகரிய இந்தியாவில் ஏற்பட்ட பொதுமக்கள் எழுச்சியும் அரசை நிலைகுலையச் செய்துள்ளன. ஊழலுக்கு எதிரான மக்களின் ஆழமான உணர்வுகளை அரசியல் கட்சிகள் உணரத் தொடங்கியுள்ளன. ஜன் லோக்பால் மசோதாவுக்கான போராட்டம், பொதுமக்களின் போராட்டத்துக்கான சிவில் உரிமை நசுக்கப்படுவதை எதிர்த்தல் என இரு முக்கியமான காரணிகள் ஒன்றாகச் சேர்ந்துள்ளன. இவை ஒன்றுசேர்ந்து உருவாகியுள்ள போராட்டம், ஊழலுக்கு எதிரானதாகக் காணப்படுகிறது. இதைச் சரியான கோணத்தில் பார்க்கவேண்டும் என்றால், இந்தியாவின் கருப்புப் பொருளாதாரத்தை எதிர்கொள்வதால் சமூகத்துக்கு ஏற்படும் நன்மைகளைப் புரிந்துகொள்வது முக்கியமாகிறது.

கருப்புப் பொருளாதாரமும்தான் வேலைகளை உருவாக்குகிறது, உற்பத்தியைத் தருகிறது என்கிறார்கள் சிலர். உதாரணத்துக்கு, கருப்புப் பணத்தைக் கொண்டு சந்தையில் பல பொருள்கள் வாங்கப்படுகின்றன என்றும் அதனால் உற்பத்தி அதிகரித்து, வேலை வாய்ப்புகள் உருவாகின்றன என்றும் இவர்கள் சொல்கிறார்கள். முறைசாராத் துறையில் வேலைகளை உருவாக்குவதன்மூலம் கருப்புப் பொருளாதாரம் ஏழைகளுக்கு நன்மை செய்கிறது என்று இவர்கள் வாதிடுகிறார்கள். இன்னும் சிலரோ ஒருபடி மேலே சென்று, 2008-ல் உலகம் முழுதும் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்கத்தின் மோசமான விளைவுகளிலிருந்து இந்தியா தப்பித்ததற்குக் காரணமே இந்தியாவில் நிறைய கருப்புப் பணம் புழங்கிக்கொண்டிருந்ததுதான் என்றும் இந்தப் பணம்தான் பொருள்களுக்கு அதிகக் கிராக்கியை ஏற்படுத்தியது என்றும் சொல்கிறார்கள். சிலர் லஞ்சத்தை, அது வேலையை வேகமாகச் செய்து முடிக்க உதவுகிறது என்பதால் ‘வேகப் பணம்’ என்று சொல்லி நியாயப்படுத்துகிறார்கள். இவை அனைத்திலுமே கொஞ்சம் உண்மை கலந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆயினும் சிறுசிறு நன்மைகளைவிட ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது கருப்புப் பொருளாதாரத்தால் தீமையே அதிகமாக ஏற்படுகிறது என்பதை நிறுவ முடியும்.

லஞ்சத்தை ‘வேகப் பணம்’ என்று வைத்துக்கொள்வோம். லஞ்சம் வாங்கவேண்டும் என்பதற்காக அதிகாரவர்க்கம் முதலில் வேலையை தாமதப்படுத்தி, பொதுமக்களைத் துன்புறுத்துகிறது. வேலைகள் தாமாகவே செய்யப்பட்டுவிட்டால் ஒருவர் எதற்காக லஞ்சம் தரவேண்டும்? எனவே முதலில் செயல்திறன் குறைக்கப்படுகிறது. அதனால், பணம் கொடுக்க முடிந்தவர்களுக்குமட்டும் வேலைகள் வேகமாக நடக்கின்றன. பிறர் தொடர்ந்து துன்புறுகிறார்கள். செயல்திறனை அதிகரிப்பதற்குபதிலாக எப்படியெல்லாம் பணத்தைப் பெறலாம் என்று யோசித்தபடி நிர்வாகத்தினர் முட்டுக்கட்டைகளைப் போடுவதில் மும்முரமாக இருப்பதால் நிர்வாகமே அலங்கோலம் ஆகிவிடுகிறது. இதன் காரணமாக இடைத்தரகர்கள் என்ற சாதி உருவாகிறது. இவர்கள்மூலமாகத்தான் அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முடிகிறது. எதுவுமே வாடிக்கையாக நடைபெறுவதில்லை. வாடிக்கையாளர்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டால் யாரேனும் புகார் கொடுத்துவிடலாம் என்பதால் ஊழல் அதிகாரிகளும் இடைத் தரகர்களையே நாடுகிறார்கள். லஞ்சம் கொடுப்பவரும்கூட, நிர்வாகியை எப்படித் தொடர்புகொள்வது என்று தெரியாத காரணத்தால் இடைத்தரகர்களையே நம்பத் தொடங்குகிறார்கள்.

இந்தியாவின் கருப்புப் பொருளாதாரம் என்பது பெரும்பாலும், குழியைத் தோண்டி அதையே மீண்டும் மூடுவதற்கு ஒப்பானதாகும். அதாவது, ஒருவர் காலை நேரத்தில் ஒரு பெரிய குழியைத் தோண்டுகிறார். மற்றொருவர் இரவு நேரத்தில் அதே குழியை மூடுகிறார். மொத்தத்தில் உற்பத்தியில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால் இரண்டு சம்பளங்கள் தரப்படுகின்றன. ஆக இது, உற்பத்தி இல்லாத செயல்பாடாக ஆகிவிடுகிறது. மோசமாக உருவாக்கப்பட்ட சாலைகள் மழையின்போது அடித்துச் செல்லப்படுகின்றன. அல்லது குண்டும் குழியுமாக ஆகி மேற்கொண்டு பராமரிப்பு செய்யவேண்டியிருக்கிறது. இதனை மேலே சொன்னதற்குச் சரியான உதாரணமாகக் கொள்ளலாம். ஆக, புதிதான சாலைகளைப் போடுவதற்குபதிலாக ஏற்கெனவே இருக்கும் சாலைகளைப் பராமரிப்பதற்கே பெரும்பாலான நிதி ஒதுக்கீடு செலவாகிவிடுகிறது. வகுப்பில் ஆசிரியர்கள் சரியாகப் பாடம் சொல்லித் தராததால் மாணவர்கள் டியூஷன் வகுப்புகளுக்குச் செல்லவேண்டியிருக்கிறது. இதனால் குடும்பங்களுக்கு அதிகச் செலவு ஏற்படுகிறது. மாணவர்களும் கல்வியில் நாட்டம் இழக்கின்றனர். இதனால் அவர்களது படைப்புத் திறனும் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது.

எத்தனை லட்சம் வழக்காடுபவர்களும் அவர்களது குடும்பத்தினரும் நண்பர்களும் வழக்குரைஞர்களும் ஒவ்வொரு நாளும் நீதிமன்றங்களுக்கு வந்துபோகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். பெரும்பாலான வழக்குகள் சில நிமிடங்களுக்குமேல் தாண்டுவதில்லை. பெரும்பாலும் அடுத்த விசாரணை எந்த நாள் நடக்கும் என்று நாள் குறிக்கப்பட்டு அனைவரும் மீண்டும் வீட்டுக்குத் திரும்புகிறார்கள். நீதி கிடைத்தல் தாமதப்படுவது மட்டுமல்ல, முக்கியமாக நேரம் வீணாகிறது, வழக்குரைஞர் கட்டணம், போக்குவரத்துச் செலவு என்று பெரும் பணமும் விரயமாகிறது. சில மாதங்களுக்குள் முடியவேண்டிய வழக்குகள் பல ஆண்டுகளுக்கு இழுத்துச் செல்லப்பட்டு செலவு பலமடங்காகிறது. தாமதமான நீதியின் விலை நேரடியானது மட்டுமல்ல, மறைமுகமானதும்கூட. கருப்புப் பொருளாதாரத்தின் தாக்கத்தினாலேயே தாமதம் ஏற்படுகிறது. இதனால் நேர்மையானவர்கள்கூட நம்பிக்கை இழந்து பிற வழிகளை நாடுகிறார்கள். இதனால் சமூக நீதி சிதைந்துபோய் சமூகமே பலவீனமடைகிறது. இதன் விலையைப் பணமாகக் கணக்கிட முடியாது. ஆனால் இது மிகப் பெரியது.

வளரும் கருப்புப் பொருளாதாரத்தால், கொள்கைகள் பரந்த அளவிலும் நுண்ணிய அளவிலும் தோற்றுப்போகின்றன. பெரும் கருப்புப் பொருளாதாரம் இருக்கும் காரணத்தால், திட்டமிடுதல், பணக் கொள்கை, நிதிக் கொள்கை ஆகியவற்றால் எதிர்பார்த்த இலக்குகளை எட்டமுடிவதில்லை. கல்வி, உடல்நலம், குடிநீர் போன்றவற்றில் திட்டமிடப்பட்டுள்ள இலக்குகள் அடையப்படுவதே இல்லை. ஏனெனில் செலவு செய்தால் குறிப்பிட்ட விளைவுகள் ஏற்படும் என்ற நிச்சயம் கிடையாது. தேவையான வளங்கள் இருந்தும், செயற்கையாகப் பற்றாக்குறை ஏற்படுகிறது. பெருமளவு முதலீடுகள், உற்பத்தி குறைந்த அல்லது பயனற்ற வழிகளான தங்கம், நிலம் ஆகியவற்றில் போய்ச் சேர்கின்றன. நாட்டிலிருந்து முதலீடு வெளியே போவதால் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் குறைகிறது. அதனால் உற்பத்தியும் குறைகிறது. அந்நிய நாட்டுக்கு அனுப்பப்படும் மூலதனத்தால் இந்தியாவில் உற்பத்தி அதிகரிப்பதில்லை; மாறாக அந்தப் பணம் போய்ச்சேரும் ஏதோ ஓர் அந்நிய நாட்டில்தான் உற்பத்தி அதிகமாகிறது. ஆக, மூலதனம் குறைவாக உள்ள நாடு என்று சொல்லப்படும் இந்தியா அந்நிய நாடுகளுக்கு மூலதனத்தை ஏற்றுமதி செய்கிறது! இதனால் மூலதனத்தை ஈர்க்க அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சலுகைகளை அள்ளித் தருகிறது. இதன் வாயிலாக உள்ளே வரும் மூலதனத்தைவிட அதிகமான அளவு இழப்பு ஏற்படுகிறது. அப்படி உள்ளே வரும் அந்நிய நேரடி அல்லது அந்நிய நிதிநிறுவன மூலதனத்தின் விலையும் அதிகம். மேலும் இந்தியாவின் கொள்கைகளை சர்வதேச நிதியங்கள் கட்டுப்படுத்துவதற்கும் வழி ஏற்படுகிறது. இந்தியா சுதந்தரம் அடைந்த காலத்திலிருந்தே இந்தியாவின் கொள்கைகள் நாட்டிலிருந்து மூலதனத்தை வெளியே துரத்தும் விதமாகவே இருந்துள்ளன. இதற்காக நாம் கொடுத்துள்ள விலை மிக மிக அதிகம்.

இதற்காக நாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் கொடுத்திருக்கும் விலைதான் கொள்கைகளில் தோல்வி, பயனற்ற முதலீடுகள், மெதுவான வளர்ச்சி, அதிகமான ஏற்றத்தாழ்வு, சூழியல் பாதிப்பு, சாத்தியமானதைவிடக் குறைவான பொருளாதார வளர்ச்சி விகிதம் ஆகியவை. கருப்புப் பொருளாதாரம் மட்டும் இல்லையென்றால், 1970-களிலிருந்து இந்தியா ஆண்டுக்கு 5% அதிகமான வளர்ச்சியை அடைந்திருக்க முடியும். அப்படி ஆகியிருந்தால் இந்தியா இன்று 8 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக ஆகி, உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாக இருந்திருக்கும். ஓர் ஏழை நாடாக இல்லாது, மத்திய வருமான நாடாக இருந்திருக்கும். இதுதான் நாம் கொடுத்துள்ள விலை.

கருப்புப் பொருளாதாரத்தின் மற்றொரு விளைவு, எது வழக்கமாக இருக்கவேண்டுமோ அது வழக்கத்துக்கு மாறானதாகவும் எது வழக்கத்துக்கு மாறானதோ அது வழக்கமானதாகவும் ஆகிவிடுகிறது. எது நடக்கவேண்டுமோ அது நடக்காது; எது நடக்கக்கூடாதோ அது நடக்கும். நமக்கு 220 வோல்ட் மின்சாரம் கிடைக்கவேண்டும். ஆனால் கிடைப்பதோ 170 வோல்ட் அல்லது 270 வோல்ட். இதனால் மின்கருவிகள் சேதமடைகின்றன. அனைத்து அதிகவிலை மின்கருவிகளுக்கும் வோல்டேஜ் ஸ்டபிலைசர் (மின் நிலைநிறுத்தி) வேண்டியுள்ளது. இதனால் முதலீட்டுச் செலவும் அதிகமாகிறது; பராமரிப்புச் செலவும் அதிகமாகிறது. குழாயிலிருந்து வரும் நீர் குடிக்கத்தக்கதாக இருக்கவேண்டும். ஆனால் இருப்பதில்லை. ஏனெனில் குழாய்கள் சரியாகப் போடப்படுவதில்லை. கழிவுநீர் கலந்துவிடுகிறது. எனவே மக்கள் கையில் குடிதண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்லவேண்டியுள்ளது. வீடுகளில் குடிநீர் சுத்தம் செய்யும் கருவிகளைப் பொருத்தவேண்டியுள்ளது. அல்லது நீரைக் கொதிக்கவைக்கவேண்டியுள்ளது. இவற்றுக்கு அதிகச் செலவாகிறது. அப்படிச் செய்தும் மக்களுக்கு நோய் வருகிறது. இந்தியாவில் ஏற்படும் நோய்களில் 70%, நீரால் ஏற்படுபவை. இதனால் மருத்துவச் செலவு அதிகமாகிறது. அத்துடன், நோய் பாதிக்கப்பட்டவர் வேலை செய்யமுடியாத காரணத்தால் உற்பத்தியில் குறைவும் ஏற்படுகிறது. இதனால் பெரும்பாலும் ஏழைகளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

மருத்துவமனை வாசம் பெருமளவு வேதனையையே தருகிறது. ஏனெனில் அங்கு வேலை செய்வோர் பெரும்பாலும் அலட்சியமாகவே நடந்துகொள்கிறார்கள். பொது மருத்துவமனைகளில் கூட்டம் தாங்கமுடிவதில்லை. மருத்துவர்கள் கடுமையான வேலைப்பளுவால் அவதிப்படுகின்றனர். மருத்துவமனையில் நிலவும் சுகாதாரமற்ற சூழலால் நோயாளிகளுக்கு இரண்டாம்நிலை தொற்றுவியாதிகள் ஏற்படுகின்றன. நோயாளிகளுடன் கூட வருபவர்களுக்கும் நோய்கள் ஏற்படுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் தேவையற்ற பரிசோதனைகள் செய்யப்படுகின்றனவா அல்லது தம்மைப் பரிசோதிப்பதற்காக வரும் பெரிய நிபுணர்கள் எல்லாம் தேவையா என்ற சந்தேகம் நோயாளிகளுக்கு ஏற்படுகிறது. இத்தனைக்குப் பிறகும் நோய்கள் குணமாவதில்லை. மருந்துகள் போலியாக இருக்கலாம். ஊசி மருந்து கலப்படமானதாக இருக்கலாம். ஏழைகள் போலி மருத்துவர்களிடம் சிக்கி, அதிக டோசேஜ் ஆண்டிபயாடிக் மருந்துகளையும் ஸ்டீராய்டுகளையும் உட்கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் மீறி மக்கள் குணமடைவதற்குக் காரணம் அவர்களது உடலில் உள்ளூர இருக்கும் வலிமைதான்!

இவை அனைத்தின் விளைவாகவும், அனைத்து இடங்களிலும் தேவையைவிடச் செலவு அதிகமாக ஆகிறது. அதனால் பணவீக்க விகிதம் அதிகமாகிறது. மூதலீட்டுக்கான விலை அதிகமாக இருப்பதால், தொழிலை நிறுவும் செலவு அதிகமாகிறது.

சமூகத் தளத்தில் இதற்குக் கொடுக்கும் விலை, சமூகத்தின்மீதும் அதன் செயல்பாட்டின்மீதும் மக்களுக்கு ஏற்படும் நம்பிக்கை இழப்பு. எனவே பெரும்பாலானோர், சமூக வழியை விடுத்து தனிப்பட்ட தீர்வை நாடுகிறார்கள். அரசியல் தளத்தில் இதனால் துண்டாடல் நிகழ்கிறது. தேச அளவில் முழுமையான தீர்வுகள் கிடைக்கா என்ற காரணத்தால் மாநிலங்கள் தத்தமக்கான தீர்வுகளைக் கோருகிறார்கள். பெரிய மாநிலங்களால் அனைவருக்கும் சரியான தீர்வு கிடைக்காது; ஒரு சில அதிகக் குரலெழுப்பும் பகுதிகளுக்கு மட்டுமே வளர்ச்சி கிட்டும் என்பதால் மாநிலங்களைத் துண்டாடிச் சிறியவை ஆக்கக் கோரிக்கைகள் எழுகின்றன. ஒவ்வொரு சாதியும், சமூகமும், பகுதியும் குறுகிய நோக்கங்களைக் கொண்ட தத்தம் பிரதிநிதிகள் ஆட்சியில் இருந்தால்தான் தமக்குப் பலன் கிடைக்கும் என்று நம்புவதால் சிறு கட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகிறது. இப்படித் துண்டாகி தேசிய உணர்வு அழிபடுவதின் விலையை எப்படித்தான் கணக்கிட முடியும்?

வலுவான லோக்பால், கல்வி, உணவு, தகவல் ஆகியவற்றைப் பெறுவதற்கான உரிமை ஆகியவற்றுக்கான இயக்கங்களால், நமக்கு மிகவும் அவசியமான பொது தேசியப் பண்புகளை உருவாக்க முடியும். இவை காரணமாக நாம் இதுவரை பெரும் விலையை அளிக்கக் காரணமாக இருந்துள்ள கருப்புப் பொருளாதாரத்தை எதிர்கொள்ளத் தேவையான அரசியல் உறுதி ஏற்படலாம். ஒன்றுக்கான போராட்டம் என்பது பிறவற்றுக்கான போராட்டமும்கூட.

[The author is with the Centre for Economic Studies and Planning, School of Social Sciences, Jawaharlal Nehru University, New Delhi. This article is based on his forthcoming book, Indian Economy since Independence: Tracing the Dynamics of Colonial Disruption in Society. E-mail: arunkumar1000@hotmail.com]