காந்தியின் நினைவு தினத்துக்கு மூன்று தினங்களுக்கு முன் பிரிட்டனின் கார்டியன் செய்தித்தாளில் மைக்கல் கானலன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இந்தியாவில் பெண்கள் இன்று படும் துயரங்களுக்கெல்லாம் காரணம் காந்திதான் என்பது அந்தக் கட்டுரையின் சாராம்சம். (
Women suffer from Gandhi's legacy)
இதை முன்வைத்து மருதன் தன் வலைப்பதிவில்
காந்தியின் பெண்கள் என்று எழுதினார். அடுத்து ரவிபிரகாஷ் அந்த கார்டியன் கட்டுரையை காந்தியால் துயருறும் பெண்கள் என்று தமிழில் மொழிபெயர்த்தார்: (
ரவிபிரகாஷ் |
மருதன்). ரவிபிரகாஷின் மொழியாக்கத்தில் சில பிழைகள் உள்ளன.
காந்தியின் கருத்துகள் காரணமாக இந்தியாவில் பெண்கள் இன்றும் துயர் உறுவதாகச் சித்திரிக்கும் மைக்கல் கானலனைப் போல காந்தியால் இன்று இந்தியாவில் இந்துக்கள் துயர் உறுகிறார்கள் என்று பலர் சித்திரிக்கிறார்கள். இன்னும் பலர் இந்தியாவில் உள்ள அனைவருமே காந்தியால் துயர் உறுகிறார்கள் என்று சித்திரிக்கிறார்கள்.
ஒருவேளை இவை அனைத்துமே உண்மையாக இருக்கலாம். இந்தக் கருத்துகளை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம். ஆனால் வலுவான பகுத்தறிவின் பின்னணியிலும் இயங்கியல் பொருள்முதல்வாதப் பின்னணியிலும் வந்திருக்கும் நாம் அப்படியே பிறர் சொல்வதை ஏற்பது நியாயமா? கொஞ்சம் ஆழ்ந்து உண்மை என்ன என்று கண்டறிய வேண்டுமல்லவா? மைக்கல் கானலன் என்ற வெள்ளைக்காரர்கூட காந்தியை அப்படி இப்படி படித்து எதையோ எழுதிவிடுகிறார். நம்மவர்கள் எந்த இடத்தில் காந்தி இப்படியெல்லாம் சொன்னார், எழுதினார் என்பதைக் கண்டறியவேண்டுமல்லவா?
மீண்டும் சாராம்சத்துக்கு வருவோம். காந்தி பெண்கள் பற்றிச் சொன்ன கருத்துகள் என்று மருதன் கானலனைப் படித்து முன்வைப்பவை இவை:
1) ஒரு பெண் பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்தப்பட்டால், தாக்கப்பட்டால் அதற்குக் காரணம் அந்தப் பெண்தான்.
2) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண் தனது மனிதத்தன்மையை இழந்துவிடுகிறார்.
3) ஒரு தகப்பன், தன் குடும்பத்தின் மானத்தைக் காக்க, பாலியல் வன்முறைக்கு ஆளான தன் மகளைக் கொன்றுபோடலாம்.
மருதன் இதற்கான ஆதாரங்களை காந்தியின் எழுத்துகளிலிருந்தே எடுத்து முன்வைப்பதாகச் சொல்கிறார். அவர் எவ்வளவு தூரம் காந்தியைப் படித்துள்ளார், எவ்வளவு எளிதில் இவற்றை முன்வைக்கப் போகிறார் என்று தெரியவில்லை. எனவே என்னால் முடிந்த அளவு அவருக்கு உதவி செய்யலாம் என்றிருக்கிறேன்.
கானலன் முதலில் குறிப்பிடுவது டால்ஸ்டாய் பண்ணையில் காந்தி ஒரு சோதனை செய்தபோது நடைபெற்றது. வழக்கம்போல, காந்தியே இந்தச் சம்பவத்தை தனது ‘தென்னாப்பிரிக்காவில் சத்தியாக்கிரகம்’ என்ற புத்தகத்தில் 35-ம் அத்தியாயத்தில் விரிவாகக் குறிப்பிடுகிறார். அதன் தமிழாக்கத்தை இங்கே தருகிறேன்.
ஒரு நாள் ஒரு வாலிபன் இரு பெண்களை தவறான முறையில் கேலி செய்தான் என்ற விஷயம், அப்பெண்கள் மூலமாகவோ அல்லது வேறு குழந்தைகள் மூலமாகவோ எனக்குத் தெரிய வந்தது. அந்தச் செய்தி என்னை நடுங்கச் செய்தது. விசாரித்ததில் அது உண்மைதான் என்று அறிந்தேன். அந்த வாலிபனைக் கூப்பிட்டுக் கண்டித்தேன். ஆனால், அது போதவில்லை. இனி அந்தப் பெண்களை எவரும் தவறான கண்களுடன் பார்க்காமல் இருப்பதற்கான எச்சரிக்கையாகவும், தங்களுடைய பரிசுத்தத்தை எவரும் தாக்கமுடியாது என்ற தைரியம் பெண்களுக்கு வருவதற்கு அறிகுறியாகவும் அப்பெண்கள் மேனியில் ஏதாவது சின்னங்கள் இருக்கவேண்டும் என்று விரும்பினேன்.
ஸ்ரீராமனிடமிருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் பிரிந்து இருந்த சீதையை, அவள் தூய்மையின் காரணத்தால் காம, குரோதம் மலிந்த ராவணன் தொடக் கூட முடியவில்லையல்லவா? இந்தப் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கவும், அதே சமயத்தில் பாவியின் கண்கள் சுத்தப்படவும் இதைச் செய்யலாம் என்று நினைத்தேன்.
என்ன விதமான குறியை அவர்கள் அணியவேண்டும்? இப்பிரச்னையைப் பற்றி இரவு முழுவதும் உறக்கமின்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தேன். காலையில் எழுந்ததும், அந்தப் பெண்களின் அழகான நீண்ட முடியை வெட்டிவிட அனுமதிக்கும்படி மெதுவாகக் கேட்டுக்கொண்டேன். பண்ணையில் நாங்களே ஒருவருக்கொருவர் முடிவெட்டிக்கொண்டு சவரமும் செய்துகொள்வது வழக்கம். எனவே எங்களிடம் முடிவெட்டும் கருவியும் கத்தரிக்கோலும் இருந்தன.
முதலில் அப்பெண்கள் நான் சொன்னதற்குச் சம்மதிக்கவில்லை. பண்ணையில் இருந்த மூத்த பெண்களுக்கு இதைப் பற்றி ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அவர்களாலும் முதலில் முடிவெட்டுதலை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. கடைசியில் என் சொல்லை ஆதரித்தார்கள்.
அந்தச் சிறுமிகள் இருவரும் பெருந்தன்மையுள்ளவர்கள். பாவம், அதில் ஒருத்தி இப்போது உயிருடன் இல்லை; அவள் மிகவும் புத்திக் கூர்மையுள்ளவள். மற்றொருத்தி இப்போது திருமணம் ஆகி குடித்தனம் நடத்தி வருகிறாள்.
இறுதியில் அவர்கள் இருவரும் சம்மதித்ததும், நானே, என் கைகளால் அவர்கள் தலை மயிரை வெட்டினேன். பிறகு என் செய்கையின் கருத்தை வகுப்பில் விளக்கிக் காட்டினேன். அதன் மூலம் பெரிய பயன் விளைந்தது. அதற்குப் பிறகு தவறான கேலி வார்த்தை எதுவும் என் காதில் விழவில்லை. மயிர் வெட்டப்பட்ட அப்பெண்களுக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை. அவர்களுக்கு இதன் மூலம் எவ்வளவு லாபம் என்பதை யார் அறிவார்?
அந்த வாலிபர்கள் இந்தச் சம்பவத்தை இன்னும் மனத்தில் வைத்திருக்கிறார்கள் என்றும், தம் கண்களைப் பாவம் செய்வதிலிருந்து காப்பாற்றிக் கொள்கிறார்கள் என்றும் நம்புகிறேன்.
இந்தப் பரிசோதனைகளைப் பற்றி நான் எழுதுவது, மற்றவர்கள் பின்பற்றுவதற்காக அல்ல. அப்படிப் பின்பற்றும் ஆசிரியர்கள் மிகுந்த ஆபத்துக்கு உள்ளாவார்கள். எவ்வளவு தூரம் ஒருவன் இவ்விஷயங்களில் செல்ல முடியும் என்பதையும் சத்தியாக்கிரகத்தின் தூய்மையையும் காட்டுவதற்காகவே இதை நான் எழுதுகிறேன்.
இந்தத் தூய்மையே வெற்றிக்கு நிச்சயமான உத்தரவாதம். இவ்விதமாகப் பரிசோதனைகளை ஆரம்பிக்குமுன் ஓர் ஆசிரியர், அந்தக் குழந்தைக்குத் தாயும் தந்தையுமாக இருந்து எந்த விதமான விளைவுகளுக்கும் தயாராகவும் இருக்க வேண்டும். மிகக் கடுமையான தவம்தான் இப்படிச் செய்ய அவரைத் தகுதியுள்ளவராக்கும்.
இந்தச் செயலைச் செய்தவர் யார் என்று பார்ப்போம். யாரோ தெருவில் போகும் ஒரு பெண்ணை தெருவில் போகும் ஓர் ஆண் சீண்டினான் என்ற காரணத்தால் அரச மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் நாட்டாமை ஒருவர், ‘அட, அந்தப் பொண்ண இழுத்துகிட்டுவாலே! அவ முடிய இழுத்து வெட்டுலே!’ என்று தீர்ப்பு கூறவில்லை.
காந்திதான் அந்தப் பெண்களுக்கும் வம்பு செய்த ஆணுக்கும் தந்தையாக இருந்தார். அவரது அரவணைப்பில்தான் அவர்கள் மூவரும் படித்துக்கொண்டிருந்தனர். காந்தியின் கஸ்டடியில் பல ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் படித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. அந்தக் குழந்தைகளின் அம்மாக்களும் அப்பாக்களும் அருகே கூட இல்லை. அப்போது, ‘நல்லா பஜனை செய்யுங்க, நானே காண்டம் வாங்கித் தரேன்’ என்றா காந்தி அவர்களிடம் சொல்லியிருக்கமுடியும்?
காந்தியின் மனம் பதைபதைத்துப்போனது. இதெல்லாம் நடந்தது 1910-களில். அதாவது இன்றைக்குச் சுமார் 100 வருடங்களுக்கு முன். அமெரிக்கா முதற்கொண்டு பிரிட்டன் வரை கட்டற்ற செக்ஸ் உறவு என்று யாருமே பேசியதில்லை. ஆனால் மனித இனம் உருவான காலந்தொட்டே அடாலசண்ட் கட்டத்தின் டெஸ்டாஸ்டெரோன் ஹார்மோன் ஆண்களைக் குரங்குகளாக்கி விடுகிறது. அப்போது இந்த ஆண்கள் செய்யும் கேலியும் கிண்டலும் இன்றும்கூட பெண்களை வதைக்கிறது.
இதற்கு என்ன தீர்வு என்று இன்று நமக்குத் தெரியுமா? ஆண்களுக்கு செக்ஸ் வேண்டும். அவர்களது இலக்குக்கு ஆளாகும் பெண்களுக்கும் அப்படியே என்றால் பிரச்னை இல்லை. அதுவும் அந்த ஆணிடமே அவர்களுக்கு ஈர்ப்பு உள்ளது என்றால் பிரச்னையே இல்லை. பிரச்னை எங்கு வருகிறது? அந்த ஆண், பிற பெண்களைத் துன்புறுத்தும்போது. அப்போது என்ன செய்யலாம்? அந்த ஆணை அடித்து நொறுக்கலாம். அல்லது சிறையில் தள்ளலாம். மருதன், ரவிபிரகாஷ் பக்கங்களில் காந்தியை எள்ளி நகையாடும் ஆண்களை அவர்களது பதின்ம வயதில் செய்த பொறுக்கித்தனங்களுக்காக ஜெயிலில் போட்டு பெண்டு நிமித்த எனக்கும்தான் ஆசை!
ஆனால் காந்திக்கு அங்கும் ஒரு பொறுப்பு இருந்தது. அவர்தான் அந்த ஆணுக்கும் பொறுப்பு. அவனைக் கூப்பிட்டுக் கண்டுக்கிறார். ஆனால் அந்தக் கண்டிப்பு, டெஸ்டோஸ்டெரான் முன் எம்மாத்திரம்? அந்தப் பையனை அந்த இடத்திலிருந்து விலக்கி அவனது வீட்டுக்கு அனுப்பியிருக்கலாம். ஆனால் அதனை காந்தி தனக்கு ஏற்பட்ட தோல்வியாகக் கருதக்கூடியவர். எனவே அப்போது தனக்குத் தோன்றிய ஒரு தீர்வை அவர் முன்வைக்கிறார். அந்தப் பெண்களைக் குரூபியாக்கும் எண்ணம் அவருக்கு இல்லை. ஓர் அடையாளம். அந்த அடையாளம் அந்தப் பெண்களைத் துன்புறுத்துவதைவிட அந்த ஆணைத் துன்புறுத்தவேண்டும். என்னால்தானே இந்தத் தொல்லை இந்தப் பெண்களுக்கு? என்னால்தானே? நான் இனி இந்தமாதிரி நடந்துகொள்ள மாட்டேன். அதே சமயம் அந்த அடையாளம் ஒரு நீங்காத வடுவாக உடலில் தெரியக்கூடாது. மனத்தில் மட்டும்தான் இருக்கவேண்டும். தீர்வு? முடி.
இன்று நாம் வேறுமாதிரி இந்தப் பிரச்னையைக் கையாண்டிருப்போம். நாமெல்லாம் மிகச் சிறந்த அறிவாளிகள்தான். காந்தி, பாவம், அந்த அளவுக்கு முன்னேறாதவர்.
ஆனாலும் அவர் அனைவரிடமும் ஒரு டெமாக்ரட் ஆக, பேசிப் பேசித்தான் முடிவெடுத்தார். இதுதான் என் கருத்து. நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்வரை நான் பொறுத்திருப்பேன்.
இன்றைய பெண்ணியவாதிகள் காட்சிதரும் தோற்றத்தைத்தான் அவர் அன்று அந்தப் பெண்களுக்குக் கொடுத்தார்.
அதற்குப்பின் தீவிரமான ஓர் எச்சரிக்கையையும் அவர் பிறருக்கு முன்வைக்கிறார். இந்த முடிவை நீங்கள் யாரும் எடுக்காதீர்கள். என்னைப் பின்பற்றாதீர்கள்! அந்தக் குழந்தைகளுக்குத் தாயும் தகப்பனுமாக நீங்கள் இல்லாவிட்டால், இதுபோன்ற முடிவை எடுக்க உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
ஆக, பொத்தாம்பொதுவாக, பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் மொட்டை அடித்துக்கொள்ளவேண்டும் என்று அவர் சொல்லவில்லை. இப்போது நாம் சில கேள்விகளை முன்வைப்போம்.
1. உங்கள் மகள், ஒரு குரங்குப் பையனின் பாலுறவுத் தொந்தரவுக்கு ஆளாகிறாள். என்ன செய்வீர்கள்?
2. உங்கள் குரங்கு மகன், பக்கத்து வீட்டுப் பெண்ணை பாலுறவுத் தொந்தரவுக்கு உள்ளாக்குகிறான். என்ன செய்வீர்கள்?
3. உங்கள் வீட்டில், உங்கள் பொறுப்புக்கடியில், உங்கள் சொந்தக்காரப் பையன் ஒருவனும் பெண் ஒருத்தியும் தங்கிப் படிக்கிறார்கள். இருவருக்கும் நீங்கள்தான் கார்டியன். அந்தப் பையன் அந்தப் பெண்ணை பாலுறவுத் தொந்தரவுக்கு உள்ளாக்குகிறான். இப்போது என்ன செய்வீர்கள்?
(தொடரும்)