Tuesday, February 28, 2012

எந்த மின்சாரம் ‘நல்லது’?

கூடங்குளம் அணு மின் நிலையம் கூடாது என்பதையொட்டி ஏகப்பட்ட விவாதங்கள் நடக்கின்றன. அதிலிருந்து மின்சாரம் பற்றிய விரிவான விவாதமும் நடக்கிறது.

அணு மின்சார உற்பத்தி மிகுந்த ஆபத்தானது; உயிரைக் குடிக்கக்கூடியது என்பது முதன்மையான வாதம். இதில் உண்மை இல்லாமல் இல்லை. அனைத்துவிதமான மின் உற்பத்திகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இப்போதைக்கு அணு மின் உற்பத்தியில்தான் ஆபத்து அதிகம். அணுக்கழிவுகளை என்ன செய்வது என்ற கேள்வியும் பெரிய கேள்வியே. அணுக் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்த முடியுமா; பெரும் தவறு நேர்ந்துவிட்டால் அந்த விபத்தின் விபரீதம் எப்படி இருக்கும்; காலாகாலத்துக்கும் மக்களும் பிற விலங்குகளும் புல் பூண்டுகளும் அந்த இடத்தில் முளைத்து உயிர்வாழ முடியுமா; எத்தனை சதுர கிலோமீட்டர் விஸ்தீரணத்துக்குப் பிரச்னை இருக்கும் என்பன போன்ற கேள்விகளை அணு மின் எதிர்ப்பாளர்கள் மக்கள்முன் வைத்தபடி உள்ளனர்.

எஸ்.பி.உதயகுமார் இப்போது அணு மின் நிலையத்துடன் அனல் மின் நிலையத்தையும் எதிர்க்க ஆரம்பித்துவிட்டார். இது அவருடைய கூட்டாளிகளாக இப்போது இருக்கும் பிறருக்கு ஏற்புடையதா என்று தெரியவில்லை. இரு நாள்களுக்குமுன் சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியபோது உதயகுமார், அணு, அனல் மின் நிலையங்களுக்கு மாற்றாக பிற மின் உற்பத்தி முறைமைகளை முன்னெடுக்கவேண்டும் என்றார்.

அனல் மின் நிலையங்களின் நேரடி ஆபத்து குறைவுதான். நிலையம் வெடித்துச் சிதறினால் அதிக உயிரிழப்பு இருக்காது. கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும். ஆனால் அனல் மின் நிலையங்களால் நீர், நிலம், காற்று மாசுபடுகின்றன. எப்படிப்பட்ட அனல் மின் நிலையமாக இருந்தாலும் புகை வெளியே வரும். கரியினால் இயங்கக்கூடிய நிலையமாக இருந்தால் (இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்துமே) கரித்தூள், புகை, சாம்பல் ஆகியவை காற்றைத் தொடர்ந்து மாசுபடுத்துகின்றன. கரிச் சுரங்கத்தால் ஏற்படும் நில அழிப்பு, காற்றில் பரவும் மாசு ஆகியவை மற்றொரு பக்கம்.

புனல் (நீர்) மின் நிலையங்களுக்காக அணைகளைக் கட்டவேண்டியிருப்பதால், பெருமளவு நிலப்பரப்பு அழிக்கப்பட்டு, அங்குள்ள மக்கள் இடம் பெயர்க்கப்படுகின்றனர். மேலும் இவற்றால் கிடைக்கும் மின்சாரம், அனல்/அணு மின் நிலையங்கள் உருவாக்குவதைவிடக் குறைவாகவே இருக்கும்; ஆண்டு முழுதும் ஒரே அளவிலும் இருக்காது. பராமரிப்புக்கு என்று அவ்வப்போது நிறுத்தவேண்டியிருக்கும். 100 ஆண்டுக் காலகட்டத்தில் அணைகளின் கட்டுமானம் பலவீனம் அடைவதால் மாற்று ஏற்பாடுகளைச் செய்யவேண்டியிருக்கும்.

இந்த மூன்றைத் தவிர வேறு எந்த வழியிலும் பெருமளவு மின்சாரத்தை ஒரே இடத்தில் தயாரிக்க முடியாது. இதனை மின் ஆலை எதிர்ப்பாளர்கள் வெளியே சொல்வதில்லை. காற்றாலை, சூரிய ஒளி, இப்போது அனைவரின் பேராதரவையும் பெற்றுள்ள கடலலை ஆகிய வழிகள் எங்கெல்லாம் எப்படியெல்லாம் இயங்குகின்றன என்பது பற்றி இவர்கள் உங்களுக்குச் சொல்லமாட்டார்கள்.

காற்றாலையை நாடெங்கிலும் நம்ப முடியாது. காற்று தொடர்ந்து வீசக்கூடிய பகுதிகள் எவை என்று சில வரைபடங்களைப் பார்த்திருப்பீர்கள். அதில் தமிழகம் கொஞ்சம் புண்ணியம் செய்துள்ளது. இங்கே, குறிப்பாகத் தென் தமிழகத்தில் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் ஆண்டு முழுதும் உற்பத்தி என்றால் இந்த வகையில் முடியாது.

சூரிய ஒளி மின்சாரம் என்பது எளிதானதொரு விஷயமல்ல. இதுவரையில் நாம் சொன்ன வகையிலிருந்து மாற்றம் கொண்டது. புனல், அனல், அணு, காற்றாலை ஆகியவற்றில் சுழலும் இயக்கத்திலிருந்தும் மின்காந்தத்திலிருந்துமாக ஜெனரேட்டர் கோட்பாட்டின்படி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ஆனால் சூரிய ஒளியில் ஃபோடோவோல்டாயிக் முறைப்படி மின்சாரம் தயாரிக்கப்படவேண்டும்.

சூரிய ஒளி மின் நிலையங்கள் பொதுவாக 25 மெகாவாட் அளவில்தான் இருக்கும். வெகு சில இடங்களில்தான் 100 மெகாவாட், 200 மெகாவாட் என்ற நிலையை அடைய முற்பட்டுள்ளனர். 550 மெகாவாட் நிலையம் ஒன்றை கலிஃபோர்னியாவில் அமைத்துவருகின்றனர் என்று விக்கிபீடியா சொல்கிறது. இவற்றை அமைக்க வேண்டிய இடமும் வெகு அதிகம். மக்களே வசிக்காத பாலைவனத்தில்தான் இது சாத்தியம்.

(இத்துடன் ஒப்பிடும்போது அனல்/அணு மின் நிலையங்கள் எல்லாம் இன்று சுமார் 3000 மெகாவாட் அல்லது அதற்குமேல் என்று நிறுவப்படுவதைப் பாருங்கள்!)

மொத்தமாக ஓரிடத்தில் 100 மெகாவாட் சூரிய மின் நிலையம் என்று அமைக்காமல், ஒவ்வொரு வீட்டின் மொட்டை மாடியிலும் அமைப்பதாகக் கொண்டால், அதற்கான முதலீட்டை ஒவ்வொரு வீடும் செய்யவேண்டுமா அல்லது அரசே அதன் செலவில் ஒவ்வொரு வீட்டின் மொட்டை மாடியிலும் அமைத்துக் கொடுத்துவிட்டு நம்மிடம் காசு வசூலித்துக்கொள்ளுமா?

ஜியோதெர்மல் மின்சாரம் என்பது அமெரிக்காவிலும் பிலிப்பைன்ஸிலும் நியூசிலாந்திலும் ஓரளவு பயன்பாட்டில் இருக்கிறது. இந்தியாவில் ஏன் இது இதுவரையில் முயற்சி செய்யப்படவில்லை என்று தெரியவில்லை. ஆனால் பொதுவாகவே சூரிய ஒளியும் சரி, ஜியோதெர்மலும் சரி, சிறு திறன் மின் நிலையங்களாகத்தான் இருக்க முடியும் (இப்போதைய தொழில்நுட்பத்தை வைத்துப் பார்க்கும்போது).

எனவே நம் இப்போதைய மின் தேவையைக் கருத்தில் கொண்டு பார்த்தால், சிறுசிறு மின் நிலையங்கள்மீது தனியார் பலருக்கும் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். அரசு அமைப்புகள்தான் இதில் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டலாம். (சூரிய ஒளி மின் நிலையங்களில் சில தனியார் அமைப்புகள் இறங்கியுள்ளன.)

என் கருத்து:

எதிர்காலத்தை மனத்தில் வைத்துப் பார்த்தால், சூரிய ஒளி மின்சாரம்தான் சரியானது என்று தோன்றுகிறது. ஆனால் உதயகுமார் போன்றோர், இன்று அணு/அனல் மின் நிலையங்களுக்கு மாற்றாக இதனை முன்வைப்பது அறிவு நேர்மையற்றது. இன்னும் 20-30 ஆண்டுகள் வேலை செய்து, நிறைய முதலீடுகளைச் செய்தால்தான் நமக்கு வேண்டிய அளவு சூரிய ஒளி மின்சாரம் கிடைக்கப் போகிறது.

ஆனால் அந்த இடைப்பட்ட காலத்தில் எல்லோரும் நாசமாகப் போகட்டும் என்று விட்டுவிடலாமா? மின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே உள்ளன. நம் நாட்டில் பெரும்பாலானோருக்கு குறைந்தபட்ச மின்சாரம்கூட இன்னும் கிடைக்கவில்லை. பொருளாதார வளர்ச்சிக்கு மின்சாரம் மிக மிக முக்கியம். அடிப்படை வாழ்வாதாரத்துக்கே இன்று மின்சாரம் முக்கியம்.

அனல், அணு மின்சாரத்தை விட்டால் அடுத்த 20-30 ஆண்டுகளுக்கு வேறு வழியே இல்லை. மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மின்சாரம் இல்லாவிட்டால் சாத்தியமே இல்லை. அனல் மின் நிலையங்களை அதிகரிக்கவேண்டும். அணு மின் நிலையங்களையும் உருவாக்கவேண்டும். மின் தேவையை ஓரளவுக்காவது சரிக்கட்டவேண்டும். அதே நேரம் மக்களுக்கு அபாயம் ஏற்படக்கூடாது. அதே நேரம், சூரிய ஒளி, ஜியோதெர்மல் மின்சாரத்தில் முதலீட்டை எப்படி அதிகரிப்பது என்று யோசிக்கத் தொடங்கவேண்டும்.

ஆனால், அணு மின்சார பயம் என்பதைத் தாண்டி, அனல் மின்சாரமும் கூடாது என்று மேலும் மேலும் நெருக்கடிகளை அதிகரிக்க உதயகுமார் முயல்கிறார். இது எந்தவிதத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடியது?

சுஜாதா புத்தகங்கள்

கடந்த இரண்டு ஆண்டுகளாக மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய புத்தகங்களைப் பதிப்பித்து வருகிறோம். நாங்கள் வெளியிட்ட முதல் புத்தகம் ஜனவரி 2010-ல் வெளியானது.

நிதியாண்டுக் கணக்கின்படி, விற்பனை நிலவரம் இவ்வாறு:

2009-10: மொத்தம் வெளியிட்டது 5 புத்தகங்கள். மொத்தம் விற்பனை ஆனது: சுமார் 3,700 பிரதிகள்.

2010-11: மொத்தம் வெளியிட்டது 73 புத்தகங்கள் (மேலே உள்ள ஐந்தையும் சேர்த்து). மொத்தம் விற்பனை ஆனது: சுமார் 52,000 பிரதிகள்

2011-12: மேலும் 7 புத்தகங்கள் வெளியிட்டதைச் சேர்த்து மொத்தம் 80 புத்தகங்கள். மொத்தம் இதுவரையில் விற்பனை ஆனது: சுமார் 45,000 பிரதிகள்.

ஆக, இதுவரையில் நாங்கள் மட்டுமே, இரண்டே ஆண்டுகளில், சுமார் ஒரு லட்சம் சுஜாதா புத்தகங்களை விற்பனை செய்துள்ளோம். சுஜாதாவின் புத்தகங்களை திருமகள் நிலையம் (+ விசா), உயிர்மை, விகடன் ஆகியோரும் பதிப்பிக்கிறார்கள். தமிழ்ப் பதிப்புலகில் எழுத்தாளர் சுஜாதா ஒரு மாபெரும் சாதனை.

2012-13-ல் கிழக்கு பதிப்பகம் வாயிலாக மேலும் பல - நீங்கள் இதுவரை கண்டிராத - சுஜாதா புத்தகங்களை வெளியிடுவோம்.

எழுத்தாளர் சுஜாதா புத்தகங்களை இணையத்தில் வாங்க

Friday, February 24, 2012

கை கால் முளைத்த காற்றா நீ?

மதுரை மீனாட்சி கோவிலில் உள்ள அருங்காட்சியகத்தில் பார்த்த வெண்கலச் சிலை. சிவனும் அருகில் தேவியும். சிவனின் வலக்கையைப் பார்த்தால், வாகனமான ரிஷபத்தின்மீது அழகாக வைத்திருப்பதாகத் தோன்றுகிறது. காளையைக் காணவில்லை. அந்த முகத்தையும் அந்தத் தலையலங்காரத்தையும் பாருங்கள். ஒயிலாகக் கால் மாற்றி நிற்பதைப் பாருங்கள். எடையே இல்லாமல் மிதப்பதுபோல் இல்லை?


சற்றே நெருங்கிப் பாருங்கள்.


எப்படி இந்த முகத்தில் அந்தக் கலைஞனால் இந்த பாவத்தைக் கொண்டுவர முடிந்தது?

Sunday, February 19, 2012

மாகறல்

உத்தரமேரூரிலிருந்து காஞ்சீபுரம் செல்ல 24 கிமீதான் என்பதால் வைகுண்டநாதப் பெருமாள் கோவிலுக்குச் சென்று அதனையும் உத்தரமேரூர் சுந்தர வரதராஜர் கோவிலையும் ஒப்பிட்டுப் பார்த்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் ஒரு வளைவில் திரும்பும்போது திடீர் என்று வலப்பக்கம் ஒரு கோவில் தென்பட்டது.

மதிலைத் தாண்டி கருவறையின் பின்பக்கம் தெரிந்தது. கஜபிருஷ்ட வடிவம். மிகச் சில கோவில்களே அப்படிப்பட்டவை என்பதால் அப்படியே வண்டியை நிறுத்தி இறங்கிச் சென்றோம். எந்தக் கோவில், எந்த ஊர் என்று எதுவும் தெரியாது. மாகறல் என்று எழுதியிருந்தது. மாகறலீசுவரர் என்பது சிவனுக்கான பெயர்.


மிகச் சிறிய ஊரின் மிக அழகிய கோவில், மிக அழகான முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கோவிலின் இடப்பக்கம் ஒரு காவல் நிலையம், புதிதாக சிகப்பு வண்ணம் பூசிக்கொண்டிருந்தது. கோவில் வாசலில் சில பையன்கள் பம்பரம் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

கோவில் குருக்கள் அப்போதுதான் லிங்கத்தின் ஆடையைக் களைந்து, நீரில் ஒரு எலுமிச்சையைப் பிழிந்து அபிஷேகம் செய்வித்தார். லிங்கம் மிக நூதன வடிவில் இருந்தது. கதையை விளக்கினார் குருக்கள். ராஜேந்திர சோழனுக்கு பொன் உடும்பு வடிவில் காட்சி கொடுத்தாராம் சிவன். உடும்பைத் துரத்திப் பிடிக்கச் சென்றான் சோழன். உடும்பு போக்குக் காட்டி ஓடி ஒளிந்து திடீரென ஒரு புதருக்குள் சென்று மறைந்துகொண்டது. அதன் வால் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது.

அந்த உடும்பு வால் வடிவுதான் லிங்கம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற ஸ்தலம்.

புதுக்கோட்டை பயணத்தின்போது இரும்பாநாடு என்ற இடத்தில் (அந்தப் பகுதியிலேயே இருக்கும் ஒரே ஒரு) கஜபிருஷ்ட வடிவிலான கருவறையைப் பார்த்தோம் என்று எழுதியிருந்தேன். அதேபோன்ற, அதேமாதிரியான அழகான அரைவட்ட வடிவம். ஐந்து கோஷ்டங்கள். ஒவ்வொரு கோஷ்டத்திலும் என்ன இருக்கவேண்டும் என்ற திட்டவட்டமான முடிவில் மிகச் சரியாக இருந்தன என்றாலும் தட்சிணாமூர்த்தி நிச்சயம் பின்னர் செய்யப்பட்ட, இந்தக் கோஷ்டத்துக்குள் பொருந்தாத சிறிய ஒரு சிலை. ஒரிஜினல் காணாமல் போயிருக்கவேண்டும்.






ராஜேந்திர சோழன் கட்டினானோ இல்லையோ, குலோத்துங்கன் காலக் கல்வெட்டு இருக்கிறது; எனவே குறைந்தது குலோத்துங்க சோழன் காலத்ததாகவாவது இருக்கவேண்டும். ஒரிஜினல் சோழர் கோவிலைச் சுற்றி, எப்போதும்போல பிற்கால நாயக்க மன்னர்கள் உருவாக்கியிருக்கும் பெரும் மண்டபங்கள், தூண்கள், புதிய சந்நிதிகள் (அம்பாள், நவக்கிரகங்கள், பிற) ஆகியவற்றைக் காணலாம்.



கஜபிருஷ்டக் கருவறை மேல் சுதையால் எழுப்பப்பட்டிருக்கும் விமானத்தில் நவீன சுதை + ஆயில் பெயிண்ட் கொஞ்சம் பார்க்க அசிங்கமாகத்தான் உள்ளன. வேறு வழியில்லை!

வழியை மாற்றிய சிவனைப் பார்த்துவிட்டு, வைகுண்டநாதரைப் பார்க்காமல் சென்னை திரும்பிவிட்டோம். மீண்டும் ஒருமுறை காஞ்சீபுரம் செல்லவேண்டும்.

உத்தரமேரூர் - 2

பராந்தக சோழன் காலக் கோவிலுக்கு முற்காலத்திய விஷ்ணு கோவில் அதே தெருவில் சற்றுத் தொலைவில் உள்ளது. அதுதான் மக்கள் கூட்டமாகச் செல்லும் கோவில். சுந்தர வரதராஜப் பெருமாள் கோவில். மிக விசேஷமான கோவில். காஞ்சிபுரம் வைகுண்டப்பெருமாள் கோவிலின் மாதிரியில் அமைக்கப்பட்டது. இங்கே மொத்தமாக ஒன்பது கருவறைகள் விஷ்ணுவுக்கென்று உள்ளன.


இந்தக் கோவில் தண்டிவர்மப் பல்லவன் காலத்தில் கட்டப்பட்டது என்கிறார் நண்பர் கோபு.

கோவில் கருவறையே மூன்று அடுக்குகளால் ஆனது. தரைத் தளத்தில் நான்கு கருவறைகள். அதில் கிழக்கு பார்த்திருக்கும் முதன்மைக் கருவறைக்குத்தான் அர்த மண்டபம். அங்கே விஷ்ணு, திருமகள், நிலமகளுடன் நின்ற திருக்கோலத்தில் உள்ளார் (படம் எடுக்கவில்லை.) சுற்றி பிற மூன்று திசைகளையும் பார்த்தபடியான மூன்று கருவறைகளில் இரண்டில் நின்ற திருக்கோலம், ஒன்றில் அமர்ந்த திருக்கோலம்; அதன்மீது தலை விரித்த நாகம். அனைத்திலும் ஸ்ரீதேவி, பூதேவி உண்டு.




இரண்டாம் நிலையில் இதேபோல நாற்திசைகளையும் பார்த்தபடியான நான்கு கருவறைகள். அதற்குச் செல்ல கீழிருந்து மாடிப்படிகள் உள்ளன. இங்கே கிழக்கு பார்த்த முதன்மைக் கருவறையில் அமர்ந்த திருக்கோலத்தில் விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி. சுற்றுப்புறக் கருவறைகளில் தெற்கில் கிருஷ்ணனும் அருகில் அருச்சுனனும், மேற்கில் யோக நரசிம்மர், வடக்கில் பூவராகர். (இந்த நிலையில் எதையும் படமெடுக்கவில்லை.) இரண்டாம் நிலையிலிருந்து மூன்றாம் நிலைக்குச் செல்ல குறுகிய படிகள். சற்றே ஆகிருதியானவர்கள் மேலே ஏறிச் செல்வது கடினம்.

மூன்றாம் நிலையில் ஒரேயொரு கருவறை. இதில் கிடந்த திருக்கோலத்தில் அநந்தசயனப் பெருமாள். நாபியிலிருந்து பிரமன். காலடியில் கையில் வாள் ஏந்திய மது, கைடபர்கள். தரையில் மார்க்கண்டேய மகரிஷி. அவருடைய தலைமீது விஷ்ணுவின் கை படுகிறது. காலடியில் பூதேவி. தெற்குச் சுவரை ஒட்டி பிரமன் நிற்கிறார். வடக்குச் சுவரை ஒட்டி கையில் மழுவும் மானும் ஏந்திய சிவன். (வைஷ்ணவ வெறிக்கு ஏற்ப சிவன் நெற்றியில் நாமத்தைப் பரக்கச் சாத்தியிருக்கிறார்கள். சைவக் கோவில்களில் விஷ்ணுவுக்கு நெற்றியில் பட்டை போடுவதில்லை!)



இம்மாதிரியான அமைப்புக்கு ஏற்றாற்போல கோவில் விமானம் மிகவும் புதியதொரு மாதிரியில் நட்சத்திர அமைப்பில் உள்ளது. இதற்கு அஷ்டாங்க விமானம் என்று பெயர் என்று சென்ற மாத தமிழ்ப் பாரம்பரிய நிகழ்ச்சியில் பேசும்போது ஸ்ரீதரன் கூறினார்.


இக்கோவிலில் தரைத் தளத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள மூன்று விஷ்ணு சந்நிதிகளுக்கும் மேலே படியில் ஏறிச் செல்லவேண்டும். அந்தப் படிகளின் கீழ்ப்புறம் மூன்று புடைப்புச் சிற்பங்களைக் காணலாம். இவற்றில் ஆச்சரியமான, என்னவென்று கண்டுபிடிக்க முடியாத இரண்டு சிற்பங்களைப் பார்த்தேன்.

முதலில், கண்டுபிடிக்க எளிதான சிற்பம். கஜலக்ஷ்மி சிற்பம். அகலம் குறைவாக உள்ள இடத்திலும் இரண்டு யானைகள் ஒன்று குட நீரை தாமரைமேல் அமர்ந்திருக்கும் லக்ஷ்மிமேல் சேர்க்க, மற்றொரு யானை குடத்தை வாங்கி மேலே எடுத்துச் செல்லத் தயாராக உள்ளது. இதன் லேண்ட்ஸ்கேப் வடிவத்தை மாமல்லபுரம் வராக மண்டபத்திலும் ஆதிவராக மண்டபத்திலும் மிக அழகாகக் காணலாம். கீழே இரு பக்தர்கள். ஒருவர் கைகூப்பி நிற்க, மற்றவர் கையில் இரு கையிலும் இரு மலர்களுடன் காணப்படுகிறார். இந்தச் சிற்பத்துக்கு மேலாக உள்ள மகர தோரண வேலைப்பாடு மிக அருமையாக உள்ளது. இது தெற்குப் பக்கம் உள்ளது.



மேற்குப் பக்கத்தில் ஆண், பெண் இருவர். இவர்கள் கடவுளர்கள் அல்லர். எனவே ஒருவேளை இந்தக் கோவிலைக் கட்டிய பல்லவ அரசன், அரசியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.


வடக்குப் பக்கத்தில் ஒரு முனிவர் தவம் செய்துகொண்டிருக்கிறார். மேலே உள்ள மகர தோரணத்தின் இடையிலும் மினியேச்சராக உட்கார்ந்து தவம் செய்யும் முனிவர் ஒருவரும் அவருக்கு அருகில் ஒற்றைக் காலில் தவமிருக்கும் இரு முனிவர்களும் காணப்படுகிறார்கள். (காண்க: விஜயின் பதிவு.)



விஜய் தன் பதிவில், இந்த முனிவர் பிருகு என்று குறிப்பிடுகிறார். அதே நேரம் ஒரு குடை மேலே இருப்பதால் சமண உறவுடைய காட்சியோ என்றும் சந்தேகம் வருகிறது. சமண ஐகனோகிராபியில் தீர்த்தங்கரர்கள் தலைமீது முக்குடையும் ஆசிரியர்கள் தலைமீது ஒரு குடையும் இருக்கும். ஆனால் இந்தக் கோவில் மிகத் தெளிவாக ஒரு விஷ்ணு கோவில்தான். வேறு எங்கும் சமணத்துடனான தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.

இந்தக் கோவிலில் பல்லவ கிரந்தத்திலும் தமிழிலும் சுற்றுச் சுவரில் பல்வேறு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை சொல்லும் கதை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

***

இங்கிருந்து உடனடியாக காஞ்சிபுரம் சென்று அங்கே வைகுண்டப்பெருமாள் கோவிலை மீண்டும் ஒரு முறை பார்க்கவேண்டும் என்று கிளம்பினேன். ஆனால் வழியில் ஓர் உடும்பு பிடித்துக்கொண்டது.

(அடுத்த பதிவில்...)

உத்தரமேரூர் - 1

சென்னைக்கு மிக அருகில் இருந்தாலும் நான் இதுவரையில் உத்தரமேரூர் சென்றதில்லை. அங்கே வைகுண்டநாதப் பெருமாள் கோவில் என்ற பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்ட சிறு கோவில் உள்ளது. அதன் சுற்றுப்புறம் முழுதும்தான் குடவோலை முறை பற்றிய கல்வெட்டுகள் உள்ளன. சதுர்வேதி மங்கலம் என்ற பார்ப்பனக் குடியிருப்பில் உள்ள மக்கள் தமக்காக உருவாக்கிக்கொண்ட தேர்தல் வரைமுறைகள்தாம் இவை. யார் தேர்தலில் போட்டியிடலாம், அந்தத் தேர்தலில் யாருக்கு வாக்குரிமை என்பதில் தொடங்கி, எம்மாதிரியான துணைக்குழுக்கள் உள்ளன, அவை எப்படி நிர்வாகம் செய்யும் என்ற பலவும் இந்தக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இந்திய தொல்லியல் துறை (ஏ.எஸ்.ஐ) கட்டுப்பாட்டில் இந்தக் கோவில் உள்ளது.



வழிபாடு உண்டு. ஆனால் காலையில் சிறிது நேரத்துக்கு மட்டும் என்று ஒரு பட்டர் வந்துவிட்டுப் போவார் போலும்.

நான் சென்றபோது சந்நிதி பூட்டப்பட்டிருந்தது.

தொடக்க காலச் சோழர் கோவில் மாதிரியில் கருவறையும் அர்தமண்டபமும் சேர்ந்த பகுதி. அதன்முன் பிற்காலத்தில் (நாயக்கர்) இணைக்கப்பட்ட மகாமண்டபம் ஒன்று (நேர்த்திக் குறைவானது). இந்தக் கோவில் முழுமையுமே சற்றே உயர்த்தப்பட்ட ஒரு பீடத்தின்மீது கட்டப்பட்டுள்ளது.


சோழர் காலத்தில் சிவன் கோவிலின் சுற்றுப்புறக் கோட்டங்களில் (கோஷ்டங்கள் = பிறைகள்) எந்தெந்த தெய்வம் காணப்படும் என்பது பெருமளவு நிறுவப்பட்டிருந்தது. கருவறை மட்டுமாக இருக்கும் பட்சத்தில் மூன்று கோட்டங்கள் மட்டுமே இருக்கும். கருவறை கிழக்கு பார்த்து இருந்தால் தெற்கு கோட்டத்தில் சிவன், மேற்கு கோட்டத்தில் விஷ்ணு, வடக்கு கோட்டத்தில் பிரம்மா இருப்பார். (எ.கா: திருக்கட்டளை.)

கருவறையும் அர்த மண்டபமும் இணைந்திருக்கும் கோவிலாக இருந்தால், ஐந்து கோட்டங்கள் இருக்கும். தெற்கில் இரண்டு, மேற்கில் ஒன்று, வடக்கில் இரண்டு. இவற்றில் தெற்கில் கணபதியும் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் விஷ்ணு (அல்லது பின்னர் லிங்கோத்பவர்), கிழக்கில் பிரம்மா, துர்கை ஆகியோர் இருப்பர். (எண்ணற்ற உதாரணங்கள். இன்று கிட்டத்தட்ட எந்த சிவன் கோவிலுக்குப் போனாலும் இப்படித்தான் இருக்கும்.)

ஆனால் விஷ்ணு கோவில் கோட்டங்களில் எந்தெந்தப் பிரதிமைகள் இருக்கும்? தெரியவில்லை.

உத்தரமேரூர் வைகுண்டப்பெருமாள் கோவிலின் கோஷ்டங்களில் எல்லாம் வெறுமையாக இருந்தன. அதேபோல விமானம், கிரீவம் ஆகிய பகுதிகளில் விஷ்ணுவின் அவதாரங்களும் கருடனும் மட்டும்தான். அடிப்பக்கம் கருங்கல்லாலும் மேல் பக்கம் சுதையாலும் கட்டப்பட்ட கோவில் இது.


சிற்பங்கள் அதிகம் பேசும்படி இல்லை என்றாலும் இதன் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கல்வெட்டுகளுக்காகவே இங்கு ஒருவர் சென்று வரவேண்டும். நாகசாமி இந்தக் கல்வெட்டுகளை முறையாக விளக்கி எழுதிய ஒரு புத்தகம் உள்ளதாம். அதனை நான் இதுவரை பார்த்ததில்லை.

(இன்னும் ஒரு பாகம் உள்ளது)

Monday, February 13, 2012

பிரம்மகிரி மலையேற்றம்

நண்பர் சந்துருவுடன் நான், பாரம்பரியச் சின்னங்கள் உள்ள சில இடங்களுக்குச் சென்றுள்ளேன். மகேந்திரவர்மன் வழியில், மாமல்லபுரம், சமீபத்தில் புதுக்கோட்டை போன்றவை. அவருக்கு ஊர் சுற்றுவதும் மலை ஏறுவதும் பொழுதுபோக்கு. ஆனால் எனக்கு அப்படியல்லவே. இந்த ஆண்டு ஜூன் மாதம் இமயமலை செல்கிறோம், வருகிறாயா என்று கேட்டார். மலை ஏறிச் செல்வது என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் ஆசை மட்டும் உண்டு. சரி, அதற்கு முன்னதாக, சின்னதாக, பிரம்மகிரி என்ற இடத்துக்குப் போகலாம் என்றார். வெறும் 1600 மீட்டர் உயரம்தானாம்.

போய்த்தான் பார்ப்போமே என்று முடிவெடுத்தேன்.

ஒரு முழ நீளப் பட்டியலைக் கொடுத்தார். என்ன முதுகுப் பை, என்ன கண்ணாடி, உணவு, உடை, காலணி, அது, இது என்று நீளமான பட்டியல். பின்னொரு பதிவாக அந்தப் பட்டியலையே இடுகிறேன்.

வருவோர் அனைவரும் சந்துருவின் நண்பர்கள். ஆனால் பெரும்பாலானோர் ஒருவரை ஒருவர் இதற்குமுன் பார்த்ததில்லை. அனைவருக்கும் தெரிந்த ஒரே நபர் சந்துருதான்.

வெள்ளி இரவு பெங்களூரு செல்லும் ரயிலில் ஏறினோம். சனி அதிகாலை 4.00 மணிக்கு பெங்களூரு வந்தடைந்தோம். அந்த ஊரிலிருந்தே சேர்பவர்கள் சேர்ந்துகொண்டனர். மார்ஸ் அட்வென்ச்சர்ஸ் என்ற கம்பெனிதான்  ஏற்பாடுகளைச் செய்பவர்கள். வேன், உணவு, கூட உதவி, வழிகாட்டுதல் எல்லாம் அவர்கள்தான். காமேஷ்தான் நிறுவன முதலாளி. அவருடன் சுனில், மது என்ற இரு ஊழியர்கள். பயணத்தில் ஈடுபட்டோர் நாங்கள் மொத்தம் 11 பேர். ஆக மொத்தம் 14 பேர் குழுவில் இருந்தோம். உணவுப் பொருள்கள், சமைக்க வேண்டிய அடுப்பு ஆகியவற்றை அவர்கள் எடுத்துக்கொண்டு வந்தனர். பிற அனைத்தையும், படுப்பதற்கான படுக்கையையும், குடிநீரையும் நாங்களேதான் எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். போர்ட்டர் வசதி கிடையாது. அவரவர் உடல் எடையுடன் குறைந்தது 7-8 கிலோ சேர்ந்துகொண்டது.


பெங்களூருவிலிருந்து கோனிகொப்பல் சென்று அங்கே காலையுணவை முடிக்கும்போது மணி 9.00 இருக்கும். அங்கிருந்து இருப்பு நீர்வீழ்ச்சி இருக்கும் இடத்தைச் சென்று சேரும்போது மணி 10.30. எங்கள் மலைப் பயணம் அங்கிருந்து ஆரம்பமானது. இது ரிசர்வ் ஃபாரஸ்ட் என்பதால் கர்நாடக வனத்துறையிடமிருந்து எழுத்துமூலம் அனுமதி பெற்று, ஒரு வனத்துறை ஊழியர் உடன் வரும்போதுதான் செல்லமுடியும். இந்த அனுமதி கிடைக்கவே பல மாதங்கள் தாமதம் ஆனதாம். விலங்குகளுக்கான இனவிருத்திப் பருவம் என்பதால் வனத்துறை அனுமதி தரவில்லை. (தாமதம் ஆனதால்தான் என்னால் இதில் கலந்துகொள்ள முடிந்தது!)

வனத்துறை அலுவருடன் சேர்ந்து 15 பேர் கிளம்பினோம்.

முதல் ஒரு மணி நேரத்திலேயே எனக்கு உயிர் போய்விட்டது. நகரவாசி, சுகவாசியான எனக்கு முதல் சில நிமிடங்கள் இருந்த பரவசம் போய், காலில் வலி எகிறிவிட்டது. சில நாள்களாக நடைப்பயிற்சி எல்லாம் செய்துவருகிறேன் என்றாலும் திடீர் திடீர் என மேலும் கீழுமாக பூமி மாறி மாறிச் சென்றதில் உடல் மீதான அழுத்தத்தைச் சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. முகமெல்லாம் ஜிவ்வென்று சூடாக ஆரம்பித்தது. மூச்சு இரைக்க ஆரம்பித்தது. இதே வேகத்தில் போனால் இதயம் வெடித்துவிடும் என்று தோன்றியது.

எதற்காக இந்தப் பயணத்தில் வர ஒப்புக்கொண்டோம் என்று ஆகிவிட்டது. பேசாமல் அப்படியே திரும்பிவிடலாமா என்றுகூடத் தோன்றியது. அஜந்தா, எல்லோரா என்றாலாவது ஏறிச் சென்றால் இறுதியில் ஏதேனும் சிற்பங்களை, ஓவியங்களையாவது பார்க்கலாம். இங்கே ஏறி முடித்தபின் என்ன இருக்கும்? ஏறுவதும் இறங்குவதும்தான் நோக்கம் என்றால், இவ்வளவு கஷ்டப்பட்டு அதனைச் செய்துதான் ஆகவேண்டுமா? வழியில் எங்கேயாவது உட்கார்ந்துவிட்டால் பிறருக்கு அதனால் தொல்லைகள் தரவேண்டியிருக்குமே? கேம்ப் சைட் இருக்கும் இடம் வரையிலாவது போய்விட முடியுமா? திரும்பிவிடுவது இன்னும் மேலானது ஆயிற்றே?

பின்னர் பிறருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்களும் இதேமாதிரி யோசித்ததாகச் சொன்னார்கள். நாங்கள் நான்கு பேர் முதல்முறை இப்படிப்பட்ட டிரெக்கிங்கில் செல்பவர்கள். அதில் என்னுடைய ஃபிட்னெஸ் லெவெல்தான் படு மோசம் என்பது என் கருத்து.

தர்பூசணியைக் கீறினால் கொட்டும் தண்ணீர் மாதிரி வியர்த்து வழிந்துகொண்டிருந்தேன். தலை லேசாகக் கிறுகிறுக்கத் தொடங்கியது. கையோடு கொண்டுவந்திருக்கும் குளுகோஸ், எலெக்ட்ரால் எல்லாவற்றையும் உட்கொள்ளவேண்டிய நேரம் இதுவோ என்று தோன்றியது. மருத்துவமனையில் அட்மிட் செய்யவேண்டும் என்றால் இன்ஷூரன்ஸ் கார்ட் எடுத்து வந்திருக்கிறேனா என்று தொட்டுப் பார்த்துக்கொண்டேன்.

அதே நேரம், கொஞ்சம் கொஞ்சமாகத் தடவித் தடவி நடக்க ஆரம்பித்தேன். பிறரும் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது கொஞ்சம் மன தைரியம் ஏற்பட்டது. அதே நேரம் ஒரு நான்கைந்து பேர் சர்வ சாதாரணமாக நடந்து சில கிலோமீட்டர்கள் முன்னால் சென்றுவிட்டனர். அதைப்பற்றிக் கவலைப்படாமல் மெதுவாக நடந்துசெல்லலாம் என்று சந்துருவும் சுரேஷும் சொல்ல, அவர்களுடன் பொறுமையாக ஆங்காங்கே உட்கார்ந்து உட்கார்ந்து இளைப்பாறிக்கொண்டு முன்னேறினேன். அவ்வப்போது இனிப்பு மிட்டாயை வாயில் அடக்கிக்கொண்டதில் வேண்டிய சர்க்கரை உடலுக்குக் கிடைத்தது.

முதல் நாள் நோக்கம், சரி பாதி தூரத்தில் இருக்கும் நரிமலை (நரிமலே) ஓய்வகத்துக்குச் செல்வது. பிறகு அன்று வேறு எந்த வேலையும் கிடையாது. அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்து வெறும் கையுடன் பிரம்மகிரி உச்சிக்குச் சென்றுவிட்டு கீழே இறங்கிவந்து ஓய்வகத்தில் இருக்கும் பொருள்களை எடுத்துக்கொண்டு கீழே இறங்கிச் செல்லவேண்டும். வேனில் ஏறி பெங்களூரு ரயில் நிலையத்தை அடையவேண்டும். இரவு ரயிலை விட்டுவிடக் கூடாது.

நரிமலை ஓய்வகத்தை அடைய முதல்படி உயிரைக் கையில் தக்க வைத்துக்கொள்ளவேண்டும். பல தடுமாறல்களுக்குப் பின், நாங்கள் முதலில் அடைந்தது ஒரு நீரோடையை. உடைகளையெல்லாம் களைந்து, தண்ணீரில் விழுந்து இளைப்பாறிய பின்னர்தான் ஓரளவுக்கு உயிர் மீண்டுவந்தது. கால்கள் சோர்வுற்றுதான் இருந்தன. ஆனாலும் வேண்டிய அளவு நேரம் கையில் இருக்கிறது என்ற தெம்பு இருந்தது. அது வரையில் சுமார் 3 கிலோமீட்டர்கள்தான் ஏறி வந்திருப்போம். இன்னும் 2 கிலோமீட்டர் நடந்தால் நரிமலை. கையோடு கொண்டுவந்திருந்த ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழங்களை உண்டு பசியாறினோம். கொஞ்சம் கிராண்ட் ஸ்வீட்ஸ் முறுக்குகள், ஸ்வீட்டும் சேர்ந்துகொண்டன.


தொடர்ந்து நடந்தோம். நான் பெரும்பாலும் கடைசியில்தான் இருந்தேன். ஓரளவுக்கு சமதரை, பின் சடார் என் உயரும் பகுதி என்று கொஞ்சம் கொஞ்சமாகத் தாண்டி ஓய்வகம் வந்து சேர்ந்தோம்.


வந்தவுடனேயே சோர்வெல்லாம் பறந்துபோயிற்று. மலையேறுதலில் பெரும் பகுதி மனத்தில்தான் இருக்கிறது. மனம் நினைத்தால் உடலை என்னவேண்டுமானாலும் செய்யவைக்கும்.

ஓய்வகம் என்பது வெறும் ஒரு கல் கட்டடம். அங்கே ஏற்கெனவே யாரோ வந்திருந்த தடம் இருந்தது. ஒரு குழு காலையே கிளம்பி அங்கே வந்துவிட்டு, பிரம்மகிரி உச்சியை நோக்கிச் சென்றிருக்கிறார்கள். எங்களுடைய பொருள்களையெல்லாம் வைத்துவிட்டு கால்களை நீட்டி உட்கார்ந்தோம். காமேஷ், சுனில், மது ஆகியோர் உடனேயே தேநீருக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். நீரஜ், தினேஷ் ஆகியோர் சுள்ளிகள் பொறுக்கிக் கொண்டுவர, நான் காய்கறிகளை நறுக்க முற்பட்டேன். சோறு, சாம்பார், அப்பளம் மெனு. தங்குமிடத்துக்குப் பின்பக்கம் அடுக்களை ஷெட் ஒன்று இருந்தது. அங்கே இரண்டு கோட்டை அடுப்புகள் இருந்தன. அங்கேயே சில பாத்திரங்கள் இருந்தன. அவற்றைச் சுத்தம் செய்வதற்குள் சுரேஷும் ஆதித்யாவும் சென்று இரண்டு பிளாஸ்டிக் குடங்களில் நீர் கொண்டுவந்தனர்.

சோறு வடிக்க நீர் கொதிக்க ஆரம்பித்தது. காய்கறிகளும் நறுக்கி முடிக்கப்பட்டபின், கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் சோறும் சாம்பாரும் ஆகி முடித்தன. இதற்கிடையில் தேநீர் தயாரித்த கேஸ் ஸ்டவ்வில் எண்ணெய் சுடவைத்து அதில் அப்பளம் பொறிக்கப்பட்டது.


மாலை சுமார் 5.30 மணி அளவில் சாப்பிட ஆரம்பித்தோம். அதுபோன்றதொரு சுவையான உணவை வாழ்நாளில் உண்டிருக்கமாட்டோம் என்று தோன்றியது. இருள் கவிவதற்குள் சுள்ளிகள், மரக்கட்டைகளைப் பொறுக்கிக் கொண்டுவந்து தீயை ஆரம்பித்தனர். அதைச் சுற்றி நாற்காலிகளைப் போட்டுக்கொண்டு கால் நீட்டி அமர்ந்து வெறும் கதைகளைப் பேசிக்கொண்டிருந்தோம்.

மேலும் ஒருமுறை பால் இல்லாத் தேநீர், வறுகடலை, பொட்டுக்கடலை என்று சாப்பிட ஏதேனும் செய்துகொண்டே இருந்தனர். மற்றொரு முறை பால் இல்லாத் தேநீர்.

அவரவர் தூக்கம் வர வர அறைக்குள் சென்று படுத்துக்கொண்டனர். பிரம்மகிரிக்குச் சென்ற ஐவர் அடங்கிய குழுவும் அவர்களுடன் சென்றிருந்த வனத்துறை அலுவலரும் திரும்பிவந்தனர். இரவு நாங்கள் தூங்கச் சென்றபின்னும் வாசலில் அவர்கள் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் இரவை அங்கேயே கழித்துவிட்டு மறுநாள் காலை அங்கிருந்து கீழே இறங்கிச் செல்வார்கள். நாங்கள் அதிகாலையிலேயே எழுந்திருந்து மலை உச்சிக்குப் போகவேண்டும்.

எனக்குத் தூக்கம் அவ்வளவு எளிதாக வரவில்லை. வெளியே பேச்சுச் சத்தம் தொல்லைப்படுத்தியது. பின்னர் ஓசை அடங்கியதும், என் சோர்வும் அயற்சியும் சேர்ந்து என்னைத் தூக்கத்தில் ஆழ்த்தின.

மறுநாள் அதிகாலை வெளியே ஒதுங்கப்போன ஒரு நண்பர், தொலைந்துபோய், பயத்தில் ‘உதவி’ என்று கத்த, சடசடவென ஏழெட்டுப் பேர் எழுந்திருந்து டார்ச் லைட்டுகளை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினர். வெளிச்சம் தெரியவே அவர் வந்து சேர்ந்துகொண்டார். கிட்டத்தட்ட அனைவருமே எழுந்துவிட்டனர். பல் தேய்த்து, அவரவர் இயற்கைக்கு ஒதுங்கி, தயார்ப்படுத்திக்கொள்வதற்குள் (பால் இல்லாத்) தேநீர் தயாரானது.

இப்போது கிட்டத்தட்ட அனைவருமே மிகத் தயாரான நிலையில் இருந்தோம். முதுகில் இருந்த சுமார் 7-8 கிலோவை மேலே தூக்கிக்கொண்டு செல்லவேண்டியதில்லை. எங்கள் 11 பேரில் ஒருவர் மட்டும் தொடைப் பகுதியில் தசைப் பிடிப்பு காரணமாக மேலே வரப்போவதில்லை என்று சொல்லிவிட்டார். 10+3+1 = 14 பேர் மட்டும் மேல் நோக்கிக் கிளம்பினோம். அப்போது மணி 7.30 இருக்கும்.

கொஞ்சம் மேலே போய், கொஞ்சம் கீழே வந்து என்றாலும் பெரும்பாலும் சமதளம். எனவே வேகமாகவே நடந்தோம். முதல் நாள் சுமார் 5 கிலோமீட்டர் மட்டும்தான் நடந்திருந்தோம். ஆனால் இன்று உச்சியை அடைய 6 கிலோமீட்டர் நடக்கவேண்டும். பின் 11 கிலோமீட்டர் கீழ்நோக்கிச் செல்லவேண்டும். பிரம்மகிரி உச்சி என்பது கடைசி ஒரு கிலோமீட்டர் மட்டும் சடார் என மேல் நோக்கிச் செல்வது. அதுவரையில் கஷ்டம் இல்லாமல் சென்றவர்கள், இப்போது நிஜமாகவே திண்டாடிவிட்டோம். ஒருவர் மேலே வரமுடியாமல் அமர்ந்துவிட்டார். அவருடன் இன்னொருவரும் வனத்துறை ஊழியரும் கீழேயே இருந்துவிட்டனர். 11 பேர் மட்டும் மேலே சென்றோம். அதில் மூவர் இதில் மிகுந்த பயிற்சி உடையவர்கள். மிச்சம் எட்டு பேரில் சிலர் பலமுறை மலை ஏறியவர்கள். என்னையும் சேர்த்து மூவர் மிகவும் கஷ்டப்பட்டோம்.

புஸ் புஸ் என்று மூச்சு விட்டுக்கொண்டே, வழுக்கிவிடாமல், கால் தடுக்கிவிடாமல், அடி அடியாக முன்னேறினோம். கடைசியாக மலை உச்சியை அடைந்தபோது சப்பென்று இருந்தது. அங்கே ஒன்றுமே இல்லை! சிறு திட்டு. சுற்றி பனி போர்த்திருந்தது. The journey is the reward என்பார்களே. அதேதான். மலை உச்சியை அடைந்தால் அங்கே யாரும் காத்துகொண்டு இருக்கப்போவதில்லை. யாரும் பதக்கம் தரப்போவதில்லை. அந்த மலை உச்சியை, தரையிலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் இருப்பதை அடைவதும் அதை அடைய எடுத்துக்கொள்ளும் முயற்சியும் மட்டுமே பரிசு. அடைந்தபின், அதேபோல இன்னொரு உச்சியை நோக்கிச் செல்லவேண்டும்.

ஏறி, அங்கே உட்கார்ந்து, ஆப்பிள், ஆரஞ்சு, மிட்டாய்கள் என்று கொஞ்சம் சக்தியை வரவழைத்துக்கொண்டோம்.


இறங்குவது எளிதல்ல என்பது அப்போதுதான் தெரிந்தது. முக்கியமாக, அந்த சடார் இறங்குமுகம் பகுதியில். பாதை அவ்வளவு நன்றாக இல்லை. எனவே செடிகளை மிதித்துக்கொண்டு கீழே இறங்கினோம். இங்கும் சிலர் பயமே இல்லாமல் சடசடவென இறங்க, நான் வழக்கம்போலக் கடைசியாக, மெதுவாக இறங்கினேன். என் ஷூவில் நல்ல க்ரிப் இருந்தது. ஆனால் மனத்தில் இருந்த பயம் அதைவிட அதிகமாக இருந்தது. சில இடங்களில் உட்கார்ந்து உட்கார்ந்து இறங்கவேண்டி இருந்தது.

அந்தச் சரிவிலிருந்து இறங்கியபிறகு பிரச்னை ஏதும் இல்லை. அங்கிருந்து நரிமலை ஓய்வகத்துக்கு மிக விரைவாகச் சென்றுவிட்டோம்.

மேலே ஏறும்போது ஓரிடத்தில் புலியின் கழிவைப் பார்த்தோம். ஒரு நாள்தான் ஆகியிருக்கும். அதேபோல யானைகள் இருந்த தடயம் எங்கும் இருந்தது. கீழிருந்து மேல்வரை எங்கு பார்த்தாலும் யானை லத்திகள். நீரும் சேறுமாக இருந்த சில இடங்களில் யானை, காட்டெருமைகளின் கால் அல்லது குளம்புத் தடங்கள் இருந்தன. ஆனால் எந்த மிருகமும் கடைசிவரை கண்ணில் படவில்லை. புலியோ, யானையோ கண்ணில் படாமல் இருந்ததே நலம். அவை நம்மைத் துரத்துக்கொண்டு வந்தால், தப்பிக்க வாய்ப்பே இல்லை. வேறு குரங்கு வகைகள், மான் வகைகள், பறவைகள், தவளைகள் என்று அவையும் கண்ணில் படவில்லை. ஆங்காங்கே பறவைகள் சத்தம் கேட்டது. சில குருவிகள் சட்டென்று பறப்பதைக் காண முடிந்தது. அவ்வளவுதான்.


மலை உச்சியிலிருந்து காட்டைப் பார்க்கும்போது ஏற்படும் அனுபவம் அலாதியானது. பச்சை என்பது ஒரு வண்ணம் அல்ல. ஏசியன் பெயிண்ட்ஸின் கலர் கார்டில் இருக்கும் அத்தனை பச்சைகள், அதற்கும் மேல் எங்கும் விரவியிருப்பதைக் காணலாம். எந்த கேமராவாலும் அவற்றைப் பிடிக்க முடியாது. பூக்கள் பூக்க ஆரம்பிக்கவில்லை. எனவே ஆங்காங்கே கொஞ்சம் பழுப்பு, கொஞ்சம் வெள்ளை தவிர பிற வண்ணங்களை அதிகமாகக் காண முடியவில்லை. தரையில் நாம் செல்லும் பாதையைத் தவிர எங்கு பார்த்தாலும் உயிர் ததும்பிக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது. விதவிதமான செடி வகைகள், மரங்கள், கொடிகள், ஃபெர்ன்கள், காளான்கள், எறும்புகள், பிற பூச்சிகள், நீர்ப்பூச்சிகள், அவற்றின் ரீங்காரங்கள்.

சிக்கல் ஏதும் இன்றி மீண்டும் நரிமலையை அடைந்தோம். வந்த உடனேயே சமையலை ஆரம்பித்தோம். நூடுல்ஸ், எலுமிச்சை சாதம், மாம்பழ ஃப்ளேவர் டாங்.


 உடனேயே கீழ்நோக்கி இறங்கவேண்டும் என்பதால் அதிகம் சாப்பிடவில்லை. நாங்கள் கிளம்பத் தயாராகும்போது ஒரு பெண்கள் கல்லூரியிலிருந்து சுமார் 20 இளம் பெண்கள் அங்கே வந்து சேர்ந்தனர். (படம் எடுக்கவில்லை!)

இப்போது முதுகில் சுமையுடன் கீழ்நோக்கி நடக்க ஆரம்பித்தோம். நடுவில் ஒரு பாறையில் நின்றுகொண்டு குழுவாகப் படம் எடுத்துக்கொண்டோம்.


முதல் நாள் குளித்த ஓடைக்கு வந்தபோது அங்கே நிற்காமல் கீழ்நோக்கிச் செல்ல முடிவெடுத்தோம். கீழே இருப்பு நீர்வீழ்ச்சியில் குளித்துக்கொள்ளலாம் என்பது திட்டம். ஆனால் அங்கு எக்கச்சக்கமான கூட்டம் இருக்கும் என்பதை அப்போது எதிர்பார்க்கவில்லை.

வழியில் எங்குமே நிற்கவேண்டிய தேவை இருக்கவில்லை. கொஞ்சம் கடினமாக இருந்தாலும், இப்போது ஓரளவுக்குப் பழக்கம் ஏற்பட்டுவிட்டதாலும், வீட்டுக்குத் திரும்பச் செல்கிறோம் என்ற நினைப்பாலும், வேகமாக நடக்க முடிந்தது.

மேலே ஏறும்போது தொடையிலும் கீழ்க்காலிலும் அடிக்காலிலும் அழுத்தம் அதிகம். கீழே இறங்கும்போது முட்டிக்காலில் கடும் அழுத்தம் தரவேண்டியிருக்கிறது. சரியான ஃபிட்னெஸ் இல்லாத என்னைப் போன்றவர்களுக்கு இது மிக மிகக் கடினம். அடுத்த டிரெக்கிங் போவதற்குமுன் உடலின் எடையையும் குறைக்கவேண்டும், தொடை, கால் தசைகளுக்கு நிறையப் பயிற்சியும் கொடுக்கவேண்டும்.


பச்சைப் பாம்பு ஒன்றைப் பார்த்ததுதான் ஒரே புதுமை. எந்த அசம்பாவிதமும் இன்றி இருப்பு நீர்வீழ்ச்சிக்கு வந்து சேர்ந்தோம். கால்கள் இரும்புபோலக் கனத்தன. ஓரடி கூட இனி நடக்கமுடியாது என்ற நிலையில் நீர்வீழ்ச்சியில் குளிக்க இடம் தேடினோம். மேலே ஏகப்பட்ட ஆண்களும் பெண்களும் நிறைந்திருந்தனர். எனவே கீழே தேங்கியிருந்த நீர்ப் பகுதியில் அமிழ்ந்துகொண்டோம். அப்போது மணி மதியம் 2.00. ஒரு மணி நேரம் இளைப்பாறுதலுக்குப்பின், வேனை நோக்கி நகர்ந்தோம்.

சரியாக 3.00 மணிக்குக் கிளம்பி, இடையில் ஓரிடத்தில் தேநீருக்காக நிறுத்தினோம். நாகர்ஹோல் காடுகள் வழியாக வண்டியில் செல்லும்போது சாலை ஓரத்தில் பல மான்கள், தந்தம் உள்ள ஆண் யானை ஒன்று ஆகியவற்றைப் பார்த்தோம். படங்கள் எடுக்கவில்லை. ராம்நகர் என்ற இடத்தில் காமத் உணவகத்தில் வட கன்னட இரவுச் சாப்பாடு சாப்பிட்டோம். பெங்களூரு ரயில் நிலையம் வந்து சேர்ந்தபோது மணி இரவு 10.30!

வேனில் வரும்போது ராஜபாட்டை படம், ஷங்கர் நாக் எடுத்த இரண்டு கன்னடப் படங்கள் (சங்கிலியானா) ஆகியவற்றைப் பார்த்தபடி வந்தோம். (அதற்குள் ராஜபாட்டை டிவிடியில் வந்துவிட்டதா?)

இரவு சுமார் 12.00 மணிக்கு மைசூரிலிருந்து வரும் ரயிலில் ஏறி, இன்று திங்கள் காலை சுமார் 7.30 மணிக்கு சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் வந்துசேர்ந்தோம்.

மார்ஸ் அட்வென்ச்சர்ஸின் காமேஷ் (98866-64666), மிகச் சிறப்பாக இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கு தனிப்பட்ட நன்றி. பயணத்தின்போது கிடைத்த பல புதிய நண்பர்களுக்கும், பயணத்தை இனிமையாக ஆக்கியதற்காக நன்றி.

அடுத்து இமயமலையில் உள்ள பிரம்மதள் (3400 மீட்டர்) செல்வேனா? பொறுத்திருந்து பார்க்க!

நான் எடுத்த அனைத்துப் புகைப்படங்களையும் காண

Friday, February 10, 2012

செல்ஃபோனில் ஆபாசப் படம்

தமிழ்பேப்பரில் நான் இன்று எழுதிய கட்டுரை: 
பாலுணர்வைத் தூண்டும் அசையும் அல்லது அசையாப் படங்களை, அதற்குரிய வயது வந்தவர்கள் பார்ப்பதில், என்னைப் பொருத்தமட்டில் தவறு ஏதும் இல்லை. இந்த ஆபாசப் படங்களைப் பார்த்தால் அவர்கள் கெட்டவர்களாகத்தான் இருக்கவேண்டும், இவர்களை அமைச்சர்களாக ஆக்கியதே தவறு என்று புனிதர்கள் பலரும் கொந்தளிப்பது கோமாளித்தனமாக இருக்கிறது.
 ...

Thursday, February 09, 2012

புதுக்கோட்டை பயணம் - 7

நார்த்தாமலைப் பகுதிக்குச் செல்வதன் நோக்கம், அங்கே மேலமலையில் உள்ள விஜயாலய சோழீசுவரம், சமணர் குடகு எனப்படும் பதிணெண்கீழ் விண்ணகரம், பழியிலி ஈசுவரம் ஆகிய கோவில்களைப் பார்ப்பது; தொடர்ந்து தாயினிப்பட்டியில் பெருங்கற்காலப் புதைவிடங்களை (Megalithic burial sites) பார்ப்பது, பின் ஆளுருட்டி மலை சமணப் படுகைகள், தீர்த்தங்கரர் புடைப்புச் சிற்பங்கள், அடுத்து கடம்பர் மலையை ஒட்டியிருக்கும் மூன்று ஆலயங்களைப் பார்ப்பது.

அதன்பின் மதியம் பொழுது சாய்வதற்குள் சித்தன்னவாசல் சென்று அங்கே அறிவர்கோவில் (சித்தன்னவாசல் ஓவியங்கள் உள்ள சமணர் குகைக் கோவில்), ஏழடிப் பட்டம், நவச்சுனை ஆகியவற்றைப் பார்ப்பது.

இதுதான் இரண்டாம் நாள் திட்டம். சித்தன்னவாசல் குகைக்குச் செல்லச் சரியான நேரம் மாலைதான். ஏனெனில் மேற்குப் பார்த்திருக்கும் இந்தக் குகைக்கு உள்ளே மாலையில்தான் நல்ல வெளிச்சம் வரும். விஜயாலய சோழீசுவரத்தைக் காண அதிகாலையில் செல்லவேண்டும். தகதகவென் தங்கம் போல ஜொலிக்கும் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மேலே எழும்போது விஜயாலய சோழீசுவரம் சிறிது சிறிதாக மேலிருந்து கீழாக வெளிச்சம் பெற்று மின்னுவதைப் பார்க்கலாம்.

அதிகாலையில் மேலமலை

காலை 4.30-க்கு எழுந்து, அனைவரையும் கிளப்பிக்கொண்டு 5.30-க்கு பேருந்தில் ஏறிவிட்டோம். நார்த்தாமலைக்கு 6.00 மணிக்குள் வந்துவிட்டோம். (படங்கள் + பயணக் கட்டுரையைக் காண பூஷாவளியின் பக்கத்துக்குச் செல்லுங்கள்.)

பிக்ச்சர் போஸ்ட்கார்ட் இடம் என்பார்கள். வெளியூர் பயணம் செய்யும்போது அங்கிருந்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் போஸ்ட்கார்ட் அனுப்புவது வழக்கமாக ஒரு காலத்தில் இருந்தது. அப்போது மனத்தைக் கவரும் படமாக இருக்கும் ஒன்றாகப் பார்த்து அனுப்பினால்தானே நன்றாக இருக்கும்? அதுபோன்ற காட்சிகளாகத் தேடி, படமெடுத்து, அச்சிட்டு வைத்திருப்பார்கள். அதற்கெனவே உருவாக்கப்பட்டமாதிரி இருக்கும் இடங்களைத்தான் இப்படிச் சொல்வது வழக்கம். நார்த்தாமலையே அப்படிப்பட்ட ஓர் இடமாகத் தோன்றியது. ஒரு மாபெரும் பரப்பில் ஒரு பக்கம் அமைதியான இயற்கை ஏரி. ஆங்காங்கே நெடிதாக உயர்ந்து நிற்கும் தென்னை மரங்கள். சுற்றிலும் பசும் வயல்கள். அருகில் பசுமை மாறா உலர் வெப்ப மண்டலக் காடுகள் (Tropical Dry Evergreen Forest). நடுவில் கொண்டுவந்து வைத்ததுபோன்ற கருங்கல் மலைகள்.

அதில் ஒரு மலைதான் மேலமலை. அதில் ஏற்கெனவே சமணர் குடகு என்ற குடைவரைக் கோவில் இருந்தது. இதற்கு சமணர் குடகு என்று அவ்வூர்ப் பகுதியில் பெயர் இருந்தாலும், உள்ளே கருவறையில் சிவனுக்கு ஆவுடை உள்ளது. அதைவிட ஆச்சரியம் இதன் அர்தமண்டபத்தில் சுவரில் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாக செதுக்கப்பட்ட 12 விஷ்ணு சிலைகள். இம்மாதிரி அடுத்தடுத்து நிற்கும் மிக அழகான 12 விண்ணவர் சிலைகளை எங்குமே காணமுடியாது. ஏன் 12? இதனைப் பின்னர் பார்ப்போம்.

நாம் முதலில் பார்க்கவந்திருப்பது விஜயாலய சோழீசுவரத்தை. பதிணெண்கீழ் விண்ணகரம் குகைக்கு நேர் எதிராக உள்ள இடத்தைச் சமமாக ஆக்கி, மேற்கு நோக்கிப் பார்க்கும் இந்தக் கட்டுமானக் கோவில் முத்தரையர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் பல்லவர்களின் இறுதிக் காலமும் விஜயாலயன் தலைமையிலான சோழர்களின் ஆரம்பக்காலமுமான 9-ம் நூற்றாண்டின் இடைப்பகுதி. பல்லவர்கள்கீழ் குறுநில மன்னர்களாக இருந்துவந்த முத்தரையர்களும் கட்சி மாறிய காலம். விஜயாலயன் பெயர் இந்தக் கோவிலில் இருக்கும் கல்வெட்டுகளில் நேரடியாகக் காணப்படுவதில்லை என்றாலும் பின்னர் வெட்டப்பட்டுள்ள (அருகில் நடந்துவரும் பாதையில் உள்ள) பிற கல்வெட்டுகள் இந்தக் கோவிலை விஜயாலய சோழீசுவரம் என்றே அழைக்கின்றன.

இந்தக் கோவில் நிச்சயமாக பின்னால் கட்டப்படப் போகின்ற தொடக்ககாலச் சோழர் (Early Chola) கோவில்களுக்கெல்லாம் முன்னோடி. ஆனால் அவற்றையெல்லாம்விடப் பெரியது, பிரம்மாண்டமானது. பரிவார தேவதைகளுக்கான சந்நிதிகளை உள்ளடக்கியது. இதுவே ஒரு ஆச்சரியம். இந்தப் புதுக்கோட்டை பயணத்தில் நாங்கள் ஆரம்பகட்ட சோழர் கோவில்களையெல்லாம் பார்க்க உள்ளோம். காளியாபட்டி, விசலூர் சிறந்த உதாரணங்கள். பின்னர் மூவர் கோவிலைப் பார்க்க உள்ளோம். பின்னர் திருக்கட்டளையில் இருக்கும் சிவன் கோவிலைப் பார்க்க உள்ளோம். அங்கு பரிவார தேவதைகளுக்கான சுற்றுப்புறச் சந்நிதிகள் மிகவும் முழுமையாக இருப்பதைப் பார்க்க உள்ளோம்.

ஆனால் விஜயாலய சோழீசுவரத்திலேயே அவற்றுக்கான திட்ட வரைபடம் இருந்துள்ளதா?

***

சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மேலே எழும்ப எழும்ப தூரத்தில் விமானத்தின்மீது வெயில் படிந்து, கொஞ்சம் கொஞ்சமாகக் கீழ்நோக்கி வெளிச்சம் பரவியது. அதனை முழுதுமாகப் பார்த்துவிட்டு, மலைமேல் ஏறத் தொடங்கினோம். எங்கள் குழுவில் 80 வயதானோர் இருவர் இருந்தனர். 70-களில் இருவர். இவர்களாலேயே மெதுவாக மேலே ஏறிவிடக் கூடியதுதான் இந்த மலை.

(தொடரும்)

Monday, February 06, 2012

புதுக்கோட்டை பயணம் - 6

ஆவுடையார்கோவிலுக்குப்பின் புதுக்கோட்டை திரும்பும் வழியில் சற்றே நின்று இரும்பாநாடு என்ற இடத்தைப் பார்த்துவிட்டுச் செல்ல முடிவு செய்தோம். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோவிலில் வழிபாடு நடப்பதில்லை. பொதுவாகப் பூட்டியே கிடக்கும் கோவில் இது.

கருவறை அமைப்பில் தூங்கானை வடிவம் அல்லது கஜபிருஷ்டம் (யானையின் பின்பக்கம்) எனப்படும் அமைப்பு முறையில் கட்டப்பட்ட மிக அழகிய கோவில் இது. [மாமல்லபுர ரதங்களில் சகாதேவன் ரதத்தை ஒத்த வடிவம் இது.] வெயில் சாய்ந்து, இருள் சூழத் தொடங்கியதால் அதிகம் காண முடியவில்லை. அந்த இடத்திலும் மழை நீர் சேர்ந்து பெரும்பகுதி தரை சொதசொதவென்று இருந்தது. அப்படி சொதசொதப்பு இல்லாத இடத்தில் மாடுகளும் ஆடுகளும் தம் குளம்பை வைத்து அழுத்திவிட்டுப் போயிருந்தன. அவை ஓரளவுக்குக் காய்ந்திருந்ததால் அப்பகுதி சமதளமாக இல்லாமல் நிற்கவும் நடக்கவும் சிரமம் தந்தது.

கோவிலின் கோஷ்டங்களில் எந்தச் சிற்பமும் இல்லை.

ஆனாலும் மெல்லிய வெளிச்சத்தில் கருவறை கட்டப்பட்டிருந்த கற்களின் சிறப்பையும் அவை வெட்டப்பட்டிருந்த நேர்த்தியையும் காண முடிந்தது.

கருவறைக்குமுன் அர்தமண்டபம், அதற்குமுன் நந்தி ஒன்று இருந்தது என்று ஞாபகம். பிறர் எடுத்துள்ள படங்களைப் பார்த்து, அவற்றைச் சேர்க்கும்போதுதான் என் ஞாபகம் சரியா என்று சரிபார்க்கவேண்டும்.

***

அடுத்த நாள் (இரண்டாம் நாள்) காலை சீக்கிரம் எழுந்திருக்கவேண்டும். காலை 5.30-க்குக் கிளம்பி நார்த்தாமலை பகுதியின் மேலமலைக்குச் செல்லவேண்டும் என்று திட்டம். காலைச் சூரியன் எழும்போது மேலமலையில் உள்ள விஜயாலய சோழீசுவரத்தின்மீது அடியிலிருந்து முடி நோக்கி சிறிது சிறிதாக சூரியன் பரவும். அதனைக் காணவேண்டும் என்பது திட்டம். அப்படியானால் இரவில் விரைவாகத் தூங்கவேண்டும். காலை 4.30-க்காவது எழுந்து 40 பேரும் கிளம்பத் தயாராக இருக்கவேண்டும்.

எனவே பேருந்தில் ஏறி புதுக்கோட்டை திரும்பினோம்.

(நாள் 1 முற்றும். தொடர் தொடரும்)

Thursday, February 02, 2012

இது சுப்ரமணியன் சுவாமியின் வாரம்...

நான் ஒரே ஒரு முறைதான் சுப்ரமணியன் சுவாமியை நேரில் பார்த்துப் பேசியிருக்கிறேன். ஹரன்பிரசன்னாவும் பத்திரிகையாளர் ஹரனும் கூட இருந்தனர். அன்று, ஏகப்பட்ட விஷயங்களைச் சொன்னார் சுவாமி. அவற்றை வெளிப்படையாக எழுதமுடியாது. எது தகவல், எது அவதூறு, எது வெறும் வதந்தி என்றெல்லாம் பிரித்துச் சொல்வது கடினம்.

அதன்பிறகு அவரிடம் நேரில் பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவர் 2ஜி பற்றிப் பேசிய ஒரு கூட்டத்துக்குப் போயிருந்தேன். அவ்வளவுதான்.

சுப்ரமணியன் சுவாமி தொடுத்த சில வழக்குகளில் இந்த வாரம் உச்ச நீதிமன்றம் வரிசையாகக் கொடுத்த தீர்ப்புகள், சுவாமியைப் புகழின் உச்சத்துக்கே கொண்டுசென்றுள்ளன என்று சொல்லலாம். அண்ணா ஹசாரே அல்ல, சுவாமிதான் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் அச்சு என்றுகூடச் சிலர் ட்விட்டரில் பேச ஆரம்பித்துவிட்டனர்.

2ஜி-யில் அரசுத் தரப்பில் ஏகப்பட்ட நடைமுறைக் குளறுபடிகள் இருந்தாலும் அதில் அரசுக்கு எந்தப் பண இழப்பும் இல்லை; ஊழல்/லஞ்சம் இருந்திருந்தால் அதுவும் சில ஆயிரம் கோடிகள் மட்டும்தான் என்பது என் கருத்து. அந்தக் கருத்துதான் இப்போதும்.

இராசா என்னதான் செய்தார் என்ற கேள்விக்கு இப்போதுவரை பதில் ஏதும் இல்லை. நமக்குத் தெரிந்தது எல்லாம் கலைஞர் தொலைக்காட்சி விவகாரம்தான். அதிலும் நீதி என்ன சொல்லப்போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஆனால், சுப்ரமணியன் சுவாமி ஒன்றைச் செய்து காட்டியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்களால் அரசின் குளறுபடிகளைச் சரியாக வெளிக்காட்ட முடியாதபோது ஒரு நீதிமன்றத்தில் அதனைக் காட்டமுடியும்; அதற்கான விடாமுயற்சியும் மதிநுட்பமும் இருந்தால் போதும் என்பதுதான் அது. நாடாளுமன்றத்தில் வெற்று அரசியல், கோஷம், வேலை செய்ய விடாமல் தடுப்பது ஆகியவை மட்டும்தான் நடக்கின்றன. வெகு குறைவாகத்தான் நேர்மையான, ஆழமான விவாதங்கள் நடைபெறுகின்றன.

நீதிமன்றத்தில் அரசின் தரப்பிலிருந்து எத்தனையோ முட்டுக்கட்டைகள் போடப்பட்டபோதும், நீதித்துறை வலுவாக நின்றதாலும், சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்து அடுக்கடுக்கான சாட்சியங்களை முன்வைத்து மிகச் சிறப்பாக விவாதம் செய்ததாலும்தான் இந்தத் தீர்ப்பு சாத்தியமாகியிருக்கிறது.

***

இந்தத் தீர்ப்பினால் பெரும் குழப்பங்கள் நடைபெறும். யூனிநார் முதற்கொண்டு நிறையப் பணத்தை முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் (அவற்றின் வெளிநாட்டுப் பங்குதாரர்கள்) மிகவும் தொல்லையில் இருப்பார்கள். ஏற்கெனவே கொடுக்கப்பட்ட உரிமத்தால் சேவை கிடைக்கப்பெற்ற மக்கள் என்ன ஆவார்கள் என்பதைப் பார்க்கவேண்டும். ஆனால் அதற்காக நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றி எழுதச் சொல்லமுடியாது. மறு பரிசீலனை செய்யச் சொல்லி நீதிமன்றம் சென்றால் இந்த நிறுவனங்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு கிடைக்காது. ஏனெனில் அவர்கள் அனைவருமே அல்லது பெரும்பாலானவர்கள் நிறையத் தவறுகளைச் செய்துள்ளனர். அதெல்லாம் வெளியே வரும்.

ஆனால் என் வருத்தமெல்லாம் இனி ஸ்பெக்ட்ரத்துக்கு என்று ஏலம், அதிகக் கட்டணம் என்று ஆகப்போகிறதே என்பதுதான். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்குப் பிறகு எந்த மத்திய அரசும் ஸ்பெக்ட்ரத்தை இலவசமாகத் தராது. அதனால் கட்டணம் கடுமையாக உயரும். வேறு வழியே இல்லை. இதன் பின்விளைவுகளை கம்யூனிஸ்ட் தோழர்கள்தான் முதலில் கண்டறிவார்கள். தெருவில் காய்கறி விற்கும் பெண்ணும் மீன்பிடிப்போரும் கட்டடத் தொழிலாளரும் கட்சியின் அடிமட்டத் தொண்டரும், அடுத்த சில ஆண்டுகளில் இந்தத் தீர்ப்பைப் பற்றி அலசத்தான் போகிறார்கள்.

***

என் பரிந்துரை: (ஆனால் யாரும் கேட்கப்போவதில்லை!)

உரிமத்தை ரத்து செய்தது எல்லாம் சரி. மிகச் சில நிறுவனங்களை மட்டும் கடுமையான சட்டதிட்டங்கள் வாயிலாகத் தேர்ந்தெடுங்கள். ஆனால் ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடாதீர்கள்; மிகக் குறைந்த கட்டணத்தையே வசூலியுங்கள்.

புதுக்கோட்டை பயணம் - 5

எம்.எல்.ஏ தந்த விருந்து

திருமெய்யம் கோட்டையைப் பார்த்தது போதும் என்று உடனடியாகக் கிளம்பி ஆவுடையார்கோவில் என்னும் பெருந்துறைக்குச் செல்லப் பேருந்தில் ஏறினோம். காரணம், அங்கே அறந்தாங்கி எம்.எல்.ஏ ராஜநாயகம் (அஇஅதிமுக) அங்கே எங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தார் என்பதுதான்.

எங்கள் வருகையை ஒட்டி, எங்கள் குழுவின் நண்பரான சதாசிவம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்), புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு முக்கிய நபர்களிடமும் எங்கள் குழுவைப் பற்றியும் நாங்கள் எதற்காக புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வருகிறோம் என்பதைப் பற்றியும் எடுத்துச் சொல்லியிருந்தார். ஐந்து எம்.எல்.ஏக்கள், ஒரு எம்.பி, மாவட்ட ஆட்சியர், புதுக்கோட்டை நகரமன்றத் தலைவர் என அனைவருக்குமே எங்களது வருகை தெரிவிக்கப்பட்டிருந்தது. அறந்தாங்கியில்தான் ஆவுடையார்கோவில் வருகிறது. எனவே ராஜநாயகம் எங்களுடன் சேர்ந்துகொள்ள விரும்பினார். கூடவே மதிய உணவு தம்முடையது என்று சொல்லிவிட்டார்.

சுமார் 2.00 மணிக்கு பசியுடன் ஆவுடையார்கோவிலை அடைந்தோம். நேராக இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் இருக்கும் வீட்டுக்கு வந்தோம். அது பழைய கால வீடு. முற்றம், தாழ்வாரம், கூடம், வாசல் திண்ணை அமைப்பைக் கொண்டது. இதுபோன்ற அச்சு அசலான வீட்டில்தான் நான் நாகப்பட்டினத்தில் வசித்தேன். இந்த வீடு திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமானதா இல்லை இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமானதா என்று எனக்குத் தெரியாது. கோவில் திருவாவடுதுறை ஆதீனத்துடையது என்று நினைக்கிறேன்.

அந்த வீட்டில் எம்.எல்.ஏ ராஜநாயகமும் அவருடைய கட்சித் தொண்டர்களும் சுற்றுப்புற பஞ்சாயத்துகளின் தலைவர்களும் எங்களை வரவேற்றனர். எங்கள் குழுவினர் (சுமார் 40 பேர்) ஒவ்வொருவராக அறிமுகம் செய்துகொண்டதும், உணவு உண்ணச் சென்றோம். பிரமாதமான உணவு என்று சொல்லி அதில் போடப்பட்ட பதார்த்தங்களை எடுத்துக்கூறி உங்கள் வயிற்றெரிச்சலைக் கிளப்ப மாட்டேன். உணவிட்டவருக்கு நன்றி.

அந்த வீட்டின் பின்புறம் ஒரு மாபெரும் குளம் இருக்கிறது. ராமநாதபுரம் சேதுபதி மன்னரால் வெட்டப்பட்டது. ‘ட’ வடிவில் இருக்கும். திருவாவடுதுறை 11-வது ஆதீனத்தின் ஜீவசமாதி அதுதான் என்று அருகில் உள்ள ஓர் இடத்தைக் காட்டினார் அருகில் நின்றுகொண்டிருந்த ஒரு பெரியவர். அப்படியே கடகடவென்று கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

கடுமையான வறட்சி. பஞ்சம். மழையே பல ஆண்டுகளாக இல்லை. இதனால் சேதுபதி மன்னர் திருவாவடுதுறை ஆதீனத்தை அந்தப் பகுதிக்கு வருமாறு வருந்தி அழைத்தாராம். கால் நடையாகவே அங்கே வந்த ஆதீனம், சில மந்திரங்களைக் கூறி, பதிகங்களைப் பாட, மழை கொட்டியதாம். உடனே கோவிலுக்கு எதிராக உள்ள அந்தப் பகுதி முழுவதையுமே ஆதீனத்துக்குக் கொடுத்துவிட்டாராம் மன்னர். பின்னர்தான் அந்தக் குளமும் வெட்டப்பட்டிருக்கிறது.

மாணிக்கவாசகரின் கதையை அந்தப் பெரியவர் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார். திருவாதவூரார் பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்து, சிவனின் திருவிளையாடலுக்கு ஆட்படுத்தப்பட்டு, நரி பரியாகி, பின் மீண்டும் நரியாகி, வைகை கரை உடைந்து, பாட்டி கொடுத்த பிட்டுக்காக ஈசன் மண் சுமந்து, பிரம்படி பட்டு, அனைவருக்கும் இறுதியில் மோட்சத்தைக் கொடுத்த கதையை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்தானே? (இல்லாவிட்டால் யாராவது ஒருவர் பின்னூட்டத்தில் விரிவாகத் தரத்தானே போகிறார்!) ஈசனால் தடுத்தாட்கொள்ளப்பட்ட மாணிக்கவாசக நாயனார், ஊரெல்லாம் சுற்றி, சிதம்பரம் சென்று, பதிகங்கள் பல பாடி, அவற்றை இறைவனே அங்கு வந்து எழுதிக் கொடுத்ததாகச் சொல்வர். இறுதியில் இறைவனோடு மாணிக்கவாசகர் ஒன்றறக் கலந்த இடம்தான் ஆவுடையார்கோவில் என்னும் திருப்பெருந்துறை.

இங்கே பிரம்மாண்டமான, மிக மிக அற்புதமான ஒரு கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

மரமா இல்லை கல்லா?

கோவிலுக்குள் நுழையும்போது சிவபுராணம் பாடிக்கொண்டே நுழையவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. (பாருங்கள், ஒரு கோர நாத்திக வீர வைணவனுக்கு நேர்ந்த கதியை!) எங்கள் குழுவில் வந்திருந்த பேராசிரியர் ஜம்புநாதன் புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்தவர். புதுக்கோட்டை அரசினர் கல்வியியல் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வுபெற்றபிறகு, இப்போது திருச்செங்கோடு வித்யா விகாஸ் கல்வியியல் கல்லூரி முதல்வராக இருக்கிறார். புதுக்கோட்டை முழுவதும் சைக்கிளிலேயே சுற்றிச் சுற்றி வந்தவர். பல கல்வெட்டுகள், எங்கோ தரையில் கிடந்த சிற்பங்கள், நினைவுச் சின்னங்கள் எனப் பலவற்றை முதன்முதலாகக் கண்டுபிடித்தவர். அதையெல்லாம்விட, ஒரு ஓதுவார் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

அவர் ‘நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க’ என்று ஆரம்பிக்க, அவருக்கு எங்கேனும் தடங்கல் ஏற்பட்டால் அடி எடுத்துக் கொடுக்க கையில் புத்தகத்துடன் நான். ஓரே ஒரு இடம் தவிர வேறெங்கும் தடங்கல் இல்லை.

நாங்கள் சுமார் 40 பேர், கூட எம்.எல்.ஏ, அவருடன் வந்தவர்கள் 10-15 பேர் என்று கோவிலுக்குள் நுழைந்தோம். ஏற்கெனவே சொல்லிவைத்திருந்ததால் கோவிலில் இருக்கும் ஒரு வழிகாட்டி கூடச் சேர்ந்துகொண்டார். ஒரு பக்கம் பேராசிரியர் முத்தழகன், ஒருபக்கம் வழிகாட்டி, ஒருபக்கம் பேரா. சிவராமகிருஷ்ணன் (கவின்கலைக் கல்லூரி), பேரா. சுவாமிநாதன் என்று பலரும் வழிநடத்த நாங்கள் கோவிலைக் காணத் தொடங்கினோம்.

இந்தக் கோவிலைக் காண மூன்று மணி நேரம் போதாது. இறுதியில் களைத்துச் சரிந்தபோது மேலும் பார்க்கப் பல இடங்கள் இருந்தன என்பதுதான் உண்மை.

பெரும்பாலான முன்மண்டபங்கள் எல்லாம் நாயக்கர் காலத்தவை. சிற்பிகள் விளையாடியிருக்கிறார்கள். மண்டபக் கூரைச் சரிவுக்குப் பெயர்தான் ‘கொடுங்கை’ என்பது. சிற்பிகளைக் கோவில் கட்டப் பணிக்கும்போது, ‘ஆவுடையார்கோவில் கொடுங்கையைத் தவிர’ வேறு எதைக் கேட்டாலும் செய்து தருகிறோம் என்றுதான் அதற்குப்பின் ஒப்பந்தம் போட்டுக்கொள்வார்களாம். கோவில் மண்டபங்கள் எங்கும் இந்தக் கொடுங்கைகளைக் காணலாம். உள்ளதிலேயே கடினமான கிரானைட் கல்லில் மரத்தில் செய்யக்கூடிய அனைத்தையும் செய்திருந்தார்கள். பிரிகயிறு, இரும்புப்பூண், திருகு, வளைவு, கயிறு முடிச்சு என்று இதையெல்லாம் எப்படி கல்லில் செய்தார்கள்? அதுவும் சும்மா ஓரிடத்தில் இரண்டு இடங்களில் என்றில்லை. திரும்பிய திசையெல்லாம் வளைந்து வளைந்து, நெளிந்து நெளிந்து போய்க்கொண்டே இருக்கும் நுணுக்கமான வேலைப்பாடு.

நான்கு குதிரை வீரர்கள். ஒருவர் கிரேக்க ஆடையில், ஒருவர் முகலாய ஆடையில், ஒருவர் மராத்திய ஆடையில், ஒருவர் தமிழக ஆடையுடன்.

வாசலில் மாபெரும் இரு வீரபத்திரர்கள். ரண வீரபத்திரன், அகோர வீரபத்திரன்.

சிவன், தன் மனைவி சதியின் தந்தையான தட்சனின் யாகத்தை அழிப்பதற்காக உருவாக்கிய வடிவம்தான் வீரபத்திரன். வீரபத்திரன் சிலைக்குப் பத்து கைகள் இருக்கும். தட்சனை ஒரு பக்கம் சூலத்தால் குத்திக் கொல்லும் சிற்பம். மறுபக்கம் வாளால் அறுக்க முற்படும் சிற்பம். (புராணத்தில் எப்படிக் கொல்கிறார் என்று யாருக்காவது தெரியுமா?) (இம்மார்ட்டல்ஸ் ஆஃப் மெலூஹா என்ற 21-ம் நூற்றாண்டு புராணக் கதையைப் படிப்பவர்கள் இந்தப் பாத்திரங்களை வேறு மாதிரியாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள்!)

ஆவுடையார்கோவில் வழக்கங்கள் பிற சிவன் கோவிலிருந்து சற்றே மாறுபட்டவை. பலிபீடம் கிடையாது. த்வஜஸ்தம்பம் கிடையாது. நந்தி கிடையாது. வாசலிலிருந்து நேராகப் பார்த்தால் லிங்கம் தெரியும். நடுவில் எதுவுமே மறைக்காது. சிவனுக்குப் படையல் புழங்கரிசிச் சோறின் ஆவிதான். பிற கோவில்களில் ஏற்கெனவே புழுங்கவைக்கப்பட்ட அரிசியைச் சமைக்கமாட்டார்கள். ஆசார பிராமணர்கள் புழுங்கரிசி சாப்பிட மாட்டார்கள் என்பதைக் கவனிக்க. இந்தக் கோவிலில் தீபாராதனை காட்டியபின் அந்த ஜோதியை பக்தர்களிடம் கொண்டுவந்து கண்ணில் ஒற்றிக்கொள்ளக் காட்டமாட்டார்கள். பாகற்காய் வருவலை ஈசனுக்குப் படைக்கிறார்கள்.

இந்த ஐதீகங்களையெல்லாம் அங்கு சென்றதிலிருந்து மூன்று நான்கு பேர் என்னிடம் சொல்லிவிட்டனர். கடைசியாகச் சொன்னவர் கோவிலில் உள்ள ஓர் அர்ச்சகர். அங்கே ஐந்து சாதிகளைச் சேர்ந்த அர்ச்சகர்கள் உண்டு என்றார் அவர். சிவாச்சாரியார் முதல் உவச்சர் வரை. எந்தெந்தக் கடவுளுக்கு யார் யார் பூசை செய்யவேண்டும் என்று சொன்னார். அவர் கிழக்கு பதிப்பகப் புத்தகங்களைப் படிப்பவராம். என் சட்டையைப் பார்த்துவிட்டு விசாரித்தார். பின் மகிழ்ச்சியுடன் என்னைக் கூட்டிச் சென்று கோவில் தத்துவங்களையெல்லாம் விளக்கிச் சொன்னார். சுற்றுவெளிக்கு அழைத்துச் சென்று பல விஷயங்களைக் காட்டினார். இரு சந்நிதிகளில் ஒரே நேரத்தில் நடக்கும் தீபாராதனையும் அதில் ஒன்று.

மாணிக்கவாசகர் சந்நிதியைச் சுற்றி ஓவியமாக அவரது வாழ்க்கை தீட்டப்பட்டிருந்தது. நாயக்கர் கால ஓவியங்கள். வாசலில் இரண்டு ஆதீனங்கள், இரண்டு தம்பிரான்களின் மாபெரும் சிலை வடிக்கப்பட்டிருந்தது.

கோவில் கருவறையைச் சுற்றியுள்ள சுற்றுவெளியிலும் ஏகப்பட்ட ஆளுயரச் சிற்பங்கள். மேலும் சில வீரபத்திரர்கள், காலாரிமூர்த்தி, பைரவர் சிலைகள். அவற்றை முழுமையாகப் பார்க்க நேரம் இல்லை. பொழுது சாய்ந்துகொண்டிருந்தது. அடுத்து வெளிச்சம் இருக்கும்போதே சென்றால்தான் இரும்பாநாடு என்ற இடத்தில் இருக்கும் ஒரு முக்கியமான (வழிபாடு ஏதும் நடக்காத) கோவிலைப் பார்க்கமுடியும்.

எனவே அங்கிருந்து கிளம்பி பேருந்தை நோக்கிச் சென்றோம்.

(தொடரும்)

சாரு நிவேதிதா எக்ஸைல் கூட்டம்

வரும் 4-பிப்ரவரி-2012 மதியம் 2.00 மணிக்கு சென்னை தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டடத்தில் சாரு நிவேதிதாவின் எக்ஸைல் புத்தகம் பற்றிய விமரிசனக் கூட்டம் நடைபெறுகிறது.

இதில் கலந்துகொண்டு நானும் சில நிமிடங்கள் பேசுவேன். ஒரு வாசகனாக.

அன்று முழுதும் எம்.ஏ (வைணவம்) பாட வகுப்புகள் வேறு உள்ளன. கூடவே, அன்று மாலை தமிழ் பாரம்பரியக் குழுமத்தின் மாதாந்தர நிகழ்ச்சியும் உள்ளது. எனவே முழு நேரமும் இருக்கமாட்டேன்.

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்து

இன்று பெரும் விழா காண உள்ள தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை வாழ்த்துகிறேன். எழுத்தாளர்களை அனைவரும் கொண்டாடவேண்டும்.

ஒரு பக்கம் சல்மான் ருஷ்டி இந்தியாவுக்குள் நுழையவே கூடாது என்று ஒரு கூட்டம் போராடுகிறது. காங்கிரஸ் கட்சி இதனை மறைமுகமாக எதிர்க்கிறது. மறுபக்கம் தஸ்லிமா நஸ்ரினின் புத்தகத்தை வெளியிடக் கூடாது என்று அதேபோன்றதொரு கூட்டம் கொல்கத்தா புத்தக விழாவில் ரகளை செய்துள்ளது.

அம்மாதிரியான சூழல் தமிழகத்தில் இல்லை என்றவரை மகிழ்ச்சி.

பெரும்புகழ் பெற்றுள்ள சில நபர்களைக் கொண்டு எஸ்.ராமகிருஷ்ணனுக்கு விழா நடத்த உயிர்மை முடிவு செய்ததைப் பல வாசகர்கள் ஃபேஸ்புக்கில் எதிர்த்துள்ளனர். இது தவறு. ரஜினிகாந்த், வைரமுத்து ஆகியோர் தமிழகத்தில் முக்கியமான நபர்கள். அவரவர் துறையில் பெரும் சாதனை புரிந்துள்ளவர்கள். ரஜினிகாந்தின் இலக்கியத் திறமைக்காக அவர் இந்த மேடையில் தோன்றப் போவதில்லை. எஸ்.ரா மீதுள்ள அன்பால், நட்பால் வருகிறார்.

நானும் நீங்களும் மட்டும் இலக்கியத்தில் என்ன கிழித்துவிட்டோம்? நாமெல்லாம் எஸ்.ராவை வாசகர்களாகப் பாராட்டும்போது, ரஜினியும் ஒரு வாசகராக, அல்லது எஸ்.ராவிடம் கதை கேட்டவராக, அவரைப் பாராட்ட ஏன் மேடை ஏறக்கூடாது.

எஸ்.ராவுக்கு மீண்டும் என் வாழ்த்து. பாராட்டு.