Thursday, July 29, 2010

நேர்த்தி

என் மேஜை என்றுமே நேர்த்தியாக இருந்தது கிடையாது. அதனை அவ்வப்போது ஒழுங்குபடுத்த முனைவேன். விரைவில் குப்பைக் காடாகி விடும். பின் அதையே பெருமையாகச் சொல்லிக்கொள்ள ஆரம்பித்தேன். அலுவலகம் வருவோரிடம், ‘மன்னியுங்கள், என் மேஜை கொஞ்சம் தாறுமாறாகத்தான் இருக்கும்’ என்று ஆரம்பிப்பேன். அவர்களும் கொஞ்சம் இரக்கத்துடன், பரவாயில்லை என்று மன்னிப்பார்கள். உண்மையில், என் மேஜையை எப்படி ஒழுங்காக்குவது என்பது எனக்குத் தெரியவில்லை. அதுதான் என் பிரச்னை. ஆனால் அந்தப் பிரச்னையின் ஆழத்துக்குச் சென்று அதனை நேர்த்தியாக வைத்துக்கொள்வது எப்படி என்பதை ஆராய என் மனம் விரும்புவதில்லை.

இதே சிக்கல் என் கணினியிலும் தொடர்கிறது. சில பல ஃபோல்டர்கள் இருக்கும். அவற்றில்தான் கோப்புகளை வைக்க விரும்புவேன். ஆனால் நாளடைவில் டெஸ்க்டாப்பில் குப்பை கூளங்கள் சேர்வதுபோல் கோப்புகள் சேரும். பின் ஒரு சுபயோக சுபதினத்தில் Stray Files என்று பெயர்கொண்ட ஃபோல்டரில் குறிப்பிட்ட தேதியிட்ட சப்-ஃபோல்டரில் அனைத்து கோப்புகளையும் கடாசிவிடுவேன். அடுத்த சில நாள்கள் டெஸ்க்டாப் நன்றாக இருக்கும். பிறகு மீண்டும் இதே கதைதான்.

அலுவலகத்துக்காக ஒரு பயணம் மேற்கொண்டால் உடனடியாக செலவுக் கணக்கை எழுதித் தருவது கிடையாது. கடைசி நிமிடத்தில் இருக்கும் ரசீதுகளை எடுத்து எழுதித்தருவேன். சிறிய தொகை என்றால், அந்த ரசீதுகளை சேர்த்துகூட வைக்கமாட்டேன்.

இதெல்லாம் சாதாரண விஷயங்கள்தானே என்றால் உண்மைதான். ஆனால் இவையெல்லாம் நம் அலுவலகப் பணிகளையும் வீட்டுப் பணிகளையும் பாதிக்கின்றன என்றே நினைக்கிறேன். சுத்தம், நேர்த்தி ஆகியவை நம் உடலோடு ஒட்டிக்கொள்பவை. வீட்டில் மட்டும் சுத்தம், வெளியில் அழுக்கு என்று இருக்கமுடியுமா? அதுபோல ஒரு செயலில் நேர்த்தி இல்லை என்றால், மற்றொரு செயலை நேர்த்தியாகச் செய்யமுடியுமா என்று தெரியவில்லை.

உங்கள் மேஜையை ஒழுங்காக வைத்துக்கொள்வது எப்படி என்று யாராவது ஒரு புத்தகம் எழுதித்தர விரும்புகிறீர்களா?

Monday, July 26, 2010

திருநெல்வேலிக்கே அல்வா!

நாடு நாடாகப் போய் புத்தகம் விற்பதுதான் என் தொழில். இம்முறை சவுதி அரேபியா. அங்கு நான் போவது இதுதான் முதல் முறை. அங்கே என்ன புத்தகங்களை விற்கலாம் என்று தெரியாது. இருந்தாலும் அது ஒரு முஸ்லிம் நாடு என்பதால் இஸ்லாமியப் புத்தகங்களை விற்கலாமே என்று தோன்றியது. எனவே இந்தியாவில் யார் யாரெல்லாம் ஆங்கிலத்தில், உருதுவில், அரபியில் இஸ்லாமியப் புத்தகங்கள் அச்சிட்டு வெளியிடுகிறார்கள் என்று தேடி, அவர்களிடமிருந்து சாம்பிள்களைப் பெற்றுக்கொண்டேன். இஸ்லாமியப் புத்தகங்கள் தவிர வேறு எதையும் கையில் எடுத்துக்கொள்ளவில்லை.

சுற்றி வளைத்து ரியாதில் போய் இறங்கினேன். ஆனால் என் லக்கேஜ் எதுவும் வந்துசேரவில்லை. இரண்டு நாள்கள் ஓட்டலில் சும்மா உட்கார்ந்திருக்க வேண்டியதாயிற்று. என் பெட்டிகளில்தான் சாம்பிள் புத்தகங்கள் இருந்தன. கடைசியாக பெட்டிகள் வந்து சேர்ந்ததும் சில புத்தகங்களை எடுத்துக்கொண்டு, ஊரிலேயே இருந்த மிகப் பெரிய புத்தகக் கடை ஒன்றுக்குச் சென்றேன்.

அங்கே ஒரு பாகிஸ்தானிய ஊழியர் இருந்தார். அவரிடம் புத்தகங்களைக் காட்டினேன். அவர் தன்னால் முடிவுகள் எடுக்கமுடியாது என்றார். அதே நேரம், என்னிடம் இருந்த புத்தகங்களை அந்தக் கடை வாங்குவதற்குச் சாத்தியங்களும் இல்லை என்றார். கடைசியில் எனது தொல்லை தாங்கமுடியாமல் மாடியில் இருக்கும் ஷேக்கிடம் சென்று நேராகப் பேசுமாறு அனுப்பினார்.

அந்த ஷேக்தான் புத்தகக் கடை முதலாளி. நான் அவரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டார். இந்தியா என்றேன். கையில் இருந்த புத்தகங்களைக் காட்டினேன். எல்லாம் இஸ்லாமியப் புத்தகங்கள். அவருக்கு ஒரே ஆச்சரியம். இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கிறார்களா என்று கேட்டார். ஆமாம், எங்கள் நாட்டில்தான் உலகிலேயே இரண்டாவது அதிக முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்றேன்.

அவரால் நம்பமுடியவில்லை. உடனே தன் நண்பர் ஒருவருக்கு போன் போட்டார். இங்க ஒருத்தன் வந்து இந்தியாலதான் உலகத்துலயே ரெண்டாவது அதிக முஸ்லிம்கள் இருக்காங்கன்னு சொல்றான், உண்மையா என்றார். உண்மைதான் என்று அந்தப் பக்கத்திலிருந்து பதில் வந்திருக்கவேண்டும். 1947-ல் எல்லா முஸ்லிம்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பிவிட்டீர்கள் என்று நினைத்தேனே என்றார். பொறுமையாக விளக்கினேன். ஓ, அப்படியானால் பாகிஸ்தானுக்கு அடுத்து உங்கள் நாட்டில்தான் முஸ்லிம்கள் அதிகமா என்றார்.

இல்லை சார், உலகிலேயே மிகப்பெரிய முஸ்லிம் நாடு இந்தோனேசியா; அடுத்து இந்தியா என்றேன். அப்படியானால் பாகிஸ்தான் எந்த இடத்தில் வருகிறது என்றார். மூன்றாவது பங்களாதேசம், நான்காவது இடத்தில்தான் பாகிஸ்தான் வருகிறது என்றேன்.

அவருக்கு ஒரே ஆச்சரியம். நான் கொண்டுவந்த புத்தகங்களைப் பார்வையிட்டார். இத்தனை இஸ்லாமியப் புத்தகங்கள் இந்தியாவில் அச்சிடுகிறார்களா என்றார். ஆனால் கொஞ்சம் நேரம் கழித்து உதட்டைப் பிதுக்கினார். பையா, நீ இங்கு வந்தது சந்தோஷம்; ஆனால் நீ கொண்டுவந்த எந்தப் புத்தகத்தையும் நான் வாங்கமுடியாது என்றார்.

சவுதியில் கடுமையான சென்சார்ஷிப் உண்டாம். அதுவும் மதப் புத்தகம் என்றால் ஒவ்வொரு பிரதியிலும் அவர்களது இஸ்லாமிய பிராண்டுக்கு உட்பட்டுத்தான் கருத்து இருக்கிறதா என்று பார்த்து, பின்னரே அனுமதிப்பார்களாம். இதற்கென்றே மத போலீஸ் என்று உள்ளதாம். அந்தத் தலைவலியை ஏற்றுக்கொள்ள புத்தகக்கடை ஷேக் தயாராக இல்லை.

என் முகத்தில் ஒரே ஏமாற்றம். இவ்வளவு நாள் கழித்து, வந்த முதல் கடையிலேயே இப்படி. இனி பிற கடைகளிலும் இதே பிரச்னைதான் இருக்கும்.

ஷேக்குக்கு என்ன தோன்றியதே தெரியவில்லை. தன் உதவியாளரை அழைத்தார். இந்தப் பையனுக்கு 5,000 டாலருக்கு ஆர்டர் கொடு, என்ன புத்தகங்களை வேண்டுமானாலும் கொடுக்கட்டும் - இஸ்லாமியப் புத்தகங்கள் தவிர என்று சொல்லிவிட்டார்.

உதவியாளர் என்னை அழைத்துச் சென்றார். 5,000 டாலர் ஆர்டர் எல்லாம் சரி, ஆனால் புத்தகங்களை முதலில் அனுப்பவேண்டும்; அவை விற்றால்தான் பணம் தரப்படும் என்று கறாராகச் சொல்லிவிட்டார்.

உடனே அங்கிருந்து பல்கலைக்கழகத்துக்கு ஓடினேன். அங்குள்ள நூலகரிடம் அறிவியல், தொழில்நுட்பத் துறையில் அவர்களுக்குக் கொடுக்கப்படும் ரெஃபரன்ஸ் புத்தகங்களின் பட்டியலை வாங்கிக்கொண்டேன். இந்தியா திரும்பினேன்.

என் அலுவலகத்தில் உட்கார்ந்துகொண்டு, ரெஃபரன்ஸ் புத்தகங்களைப் பார்வையிட்டேன். Fundamentals of Fluid Mechanics - James Sullivan என்று இருந்தால், அதே பெயரில் இந்திய எழுத்தாளரின் புத்தகம் இருக்கிறதா என்று பார்ப்பேன். பெயர் மாறக்கூடாது. Fundamentals of Fluid Mechanics - Gupta என்று ஒன்று எப்படியும் இருக்கும். இப்படி ஒரு பட்டியலைத் தயாரித்தேன். அந்தப் பட்டியலை எடுத்துக்கொண்டு சேர்மனின் அனுமதி பெற்று புத்தகத்துக்கு இரண்டு சாம்பிள் என்று எடுத்து, 5,000 டாலருக்கான ஆர்டரைப் பூர்த்தி செய்து அனுப்பிவைத்தேன்.

விற்குமா, விற்காதா என்று தெரியாது. எனவே அந்த விஷயத்தை அத்தோடு மறந்துவிட்டேன். சில வாரங்கள் ஓடியிருக்கும். திடீரென சவுதி அரேபியாவிலிருந்து போன் கால். அப்போதெல்லாம் வெளிநாடுகளிலிருந்து போன் வருவதே ஆச்சரியம்தான். போனை எடுத்தால் நம்முடைய புத்தகக்கடைக்காரர். உடனே சவுதி வாருங்கள் என்றார். எதற்கு என்றேன். நீங்கள் கொடுத்த புத்தகமெல்லாம் காலி. ஏகப்பட்ட ஆர்டர்கள் வர ஆரம்பித்துவிட்டன. மாணவர்களுக்கு உங்களுடைய புத்தகங்கள் மிகவும் பிடித்துள்ளதாம். வந்தால் பெரிய ஆர்டரை வாங்கிக்கொண்டு செல்லலாம் என்றார்.

இப்படித்தான் எதையோ விற்கப்போய் இந்திய பாடப்புத்தகங்களுக்கான மார்க்கெட் சவுதியில் இருப்பதைக் கண்டுபிடித்தேன். அந்த இஸ்லாமியப் புத்தகங்களுக்கு என்ன ஆனது என்கிறீர்களா? அதற்கும் ஒரு மார்க்கெட் கிடைத்தது. ஆனால் சவுதியில் அல்ல. வேறு ஓர் இடத்தில். அந்தக் கதை அடுத்து!

=======

சுகுமார் சென்னின் அனுபவங்கள் - முந்தைய பதிவுகளாக

புத்தகமா, விஷப் புகையா?
அத்தனை ஆர்டர்களும் உனக்குத்தான்!
.

Saturday, July 24, 2010

சூரிய கதிர், சொல்வனம் கட்டுரைகள்

சீனா-இந்தியா பற்றி சென்ற சூரிய கதிர் இதழில் நான் எழுதியது: முத்துமாலையா? விஷப்பாம்பா?

பாகிஸ்தான்-இந்தியா பற்றி சொல்வனம் இதழில்: பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை சாத்தியமா?
.

சென்னை தியாகராய நகரை மாற்றமுடியுமா?

கிழக்கு மொட்டைமாடியில் நேற்று இரவு ராஜ் செருபல் பேசியதன் ஒளிப்பதிவு.

சென்னை தியாகராய நகரின் நெரிசல் இப்படியேதான் இருக்குமா? அல்லது இன்னும் மோசமாகுமா? உலகில் வளர்ந்த நாடுகளில் எப்படி நகரங்கள் சிறப்பாக வடிவமைக்கப்படுகின்றன? ஏன் இந்தியாவில் இத்தனை பிரச்னைகள்? நகரின் ஒரு பகுதியை மாற்றுவது என்றால், அங்கு இருக்கும் தெரு வியாபாரிகளை தூக்கி எறிவது என்றாகுமா? மக்களுக்குத் தேவை நல்ல நடைபாதைகளா அல்லது கார் ஓடும் வீதிகளா? நகரைத் திட்டமிடுதல் என்றால் என்ன? நம் மாநகராட்சியால் இதனைச் சாதிக்கமுடியுமா? மக்கள் இதுபோன்ற மாற்றங்களை ஏற்றுக்கொள்வார்களா? அடையாறு எல்.பி (லேட்டிஸ் பிரிட்ஜ்) சாலையில் என்ன நடக்கிறது?

இப்படி பல கேள்விகள். நிச்சயமாக என் மனத்தை மாற்றிய ஒரு முக்கியமான நிகழ்வு இது.

Friday, July 23, 2010

மேலையூர் சீனிவாசா மேல்நிலைப் பள்ளியில்...

நாள் முழுவதுமாக நடந்த நிகழ்ச்சியில் சில நிமிடங்களை மட்டும் இங்கே சேர்த்துள்ளேன். மற்றொரு சமயம் விரிவாக எழுதமுடிந்தால் எழுதுகிறேன்.



.

Tuesday, July 20, 2010

தமிழகத்தில் ஓவியங்கள் - புத்தக வெளியீடு

வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த, பல ஆயிரம் ஆண்டுகள் புராதனமான, குகை ஓவியங்கள் தமிழகத்தில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?

சிற்பங்களைப் பார்த்திருப்பீர்கள். கல்லில் வடித்த அவை (ஓரளவுக்கு) அழியாத் தன்மை கொண்டவை. ஆனால் அதே அளவுக்கு தமிழகக் கோவில்களில் ஓவியங்களும் இருந்திருக்கின்றன. அவற்றில் பல இப்போது இல்லை. இயற்கை அழிவு ஒருபக்கம். அந்த ஓவியங்களின் சிறப்பை அறியாத பிற்கால நிர்வாகிகள் அவற்றின்மீது மூடத்தனமாக சுண்ணாம்பு அடிப்பது, பிற ஓவியர்களைக் கொண்டு அவற்றின்மீது தரமற்ற ஓவியங்களை வரைவது என்று நாசம் செய்துவிட்டனர். பல இடங்களில் கோவில்களே அழிந்துபோய்விட்டன.

எஞ்சியுள்ள சில ஓவியங்களைக் கொண்டு தமிழக ஓவியங்கள் பற்றிய ஒரு வரலாற்றுப் புத்தகத்தை எழுதியுள்ளார் பேராசிரியர் ஜோப் தாமஸ். Paintings in Tamil Nadu - A History என்ற இந்தப் புத்தகத்தை நியூ ஹொரைஸன் மீடியா நிறுவனம் (ஆங்கிலத்தில்) வெளியிடுகிறது. திருநெல்வேலிக்காரரான ஜோப் தாமஸ் தற்போது அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தின் டேவிட்சன் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார்.

இந்தப் புத்தக வெளியீட்டு விழா, திங்கள் கிழமை, 26 ஜூலை 2010 அன்று எல்டாம்ஸ் ரோடில் உள்ள சி.பி. ஆர்ட் ஃபவுண்டேஷன் அரங்கில் நடைபெறுகிறது. நந்திதா கிருஷ்ணா புத்தகத்தை வெளியிட, தியோடர் பாஸ்கரன் பெற்றுக்கொள்கிறார். தொடர்ந்து, ஜோப் தாமஸ் தமிழக ஓவியங்கள் பற்றிய ஒரு காணொளிப் பேச்சை வழங்குகிறார்.

ரூ. 300 மதிப்புள்ள இந்தப் புத்தகம் அரங்கில் ரூ. 250-க்கு விற்பனைக்குக் கிடைக்கும். மொத்தம் 256+32 பக்கங்கள்; இதில் 32 பக்கங்கள் வண்ண ஓவியங்கள், ஆர்ட் பேப்பரில்.

[இனி வரும் நாள்களில் இந்தப் புத்தகத்தை தமிழில் கொண்டுவரவும் முயற்சிகள் மேற்கொள்வோம்.]

விழித்திரு - ஒளிமயமான எதிர்காலம்

22 ஜூலை 2010, வியாழக்கிழமை அன்று மேலையூர் (பூம்புகார்) சீனிவாசா மேல்நிலைப் பள்ளியில் நானும் கிழக்கு பதிப்பகத்தைச் சேர்ந்த சிலரும் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடுகிறோம்.
படித்தே தீரவேண்டிய தமிழ் நூல்கள் - முகில்

அறிவியல் அறிஞர்களை அறிந்துகொள்வோம் - முத்துக்குமார்

+2க்குப் பிறகு என்ன செய்யலாம்? மேற்படிப்பு + வேலை வாய்ப்பு - பத்ரி சேஷாத்ரி

கம்ப்யூட்டரைத் தெரிந்துகொள்ளுங்கள் - நாகராஜன்
அக்கம்பக்கத்தில் இருக்கும் பிற பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் வரலாம் என்று சொல்கிறார்கள்.

தி.நகரில் போக்குவரத்துப் பிரச்னை - தீர்வு என்ன?

சென்னை தியாகராய நகரில் குண்டூசியிலிருந்து பட்டுப் புடைவை வரை எல்லாமே விற்கிறார்கள். வாங்குவதற்கு என்று கூட்டம் கூட்டமாக மக்கள் அங்கு போகிறார்கள். ஆனால் அந்த இடத்துக்குப் போக நேரிடுபவர்கள், அல்லது அந்த வழியாக மேற்கு மாம்பலம் போன்ற பகுதிகளுக்குச் செல்பவர்களின் நிலையை யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

பிதுங்கி வழியும் பேருந்துகள், திடீரென வழியைக் கடக்கும் ஒரு மக்கள் கூட்டம், புழுதி, இரைச்சல், கோபத்தில் கொதிக்கும் வாகன ஓட்டுநர்கள்.

இது போக்குவரத்து நெரிசல் என்பதையும் தாண்டி, போக்குவரத்து நரகம் என்ற வகைக்கு வந்துவிடுகிறது.

நம்மில் பலர் தினம் தினம் இந்த நரகத்தை அனுபவிக்கிறோம்.

இந்தப் பிரச்னையை விளக்கி, இதற்கான தீர்வுகள் என்ன என்பதைப் பற்றிப் பேச வருகிறார் ராஜ் செருபல் (Raj Cherubal), சென்னை சிடி கனெக்ட் என்ற அமைப்பின் திட்ட இயக்குனர்.

நாள்: வெள்ளிக்கிழமை, 23 ஜூலை 2010
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை

Sunday, July 18, 2010

தமிழ்ப் பாரம்பரியக் குழுமம் பேச்சுகள் - ஒளித்துண்டு

ஜூன், ஜூலை மாதம் தமிழ்ப் பாரம்பரியக் குழுமம், சென்னை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளுக்கான ஒளித்துண்டை இந்தப் பதிவில் கொடுத்துள்ளேன்.

ஜூன் மாதம், எஜ்ஜி உமாமகேஷ் தனது வடகிழக்கு இந்திய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.



MP4 கோப்பை இறக்கிக்கொள்ள

*

ஜூலை மாதம், அரவிந்த் வெங்கட்ராமன், http://www.ancientvoice.wikidot.com/ என்ற தளத்தை அறிமுகம் செய்தார். ஜிஜித் நாதுமுரி ரவி என்பவர் உருவாக்கியுள்ள இந்தத் தளத்தில் மகாபாரதத்தை பல குறுக்குவெட்டுத் தளங்களில் கொடுத்துள்ளார். ஒவ்வொரு பாத்திரமாக அணுகலாம்; ஒவ்வொரு ராஜ்ஜியமாக, ஒவ்வொரு ஆறு, மலை, கடவுள் என. ஒருவரது பெயர் மகாபாரதத்தில் எங்கெல்லாம் வருகிறது; அவருடன் கூட யாரெல்லாம் வருகிறார்கள் என்று கண்டுபிடிக்கலாம். இதற்குமேல் நீங்களே அங்கே சென்று ஆராய்ச்சிகள் செய்துகொள்ளுங்கள்.



MP4 கோப்பை இறக்கிக்கொள்ள
.

Saturday, July 17, 2010

எழுத்துகளின் கதை - முதல் மூன்று பகுதிகள்

இதுநாள்வரை veoh.com போன்ற பாடாவதி தளங்களில் வீடியோவை இணைத்துக்கொண்டிருந்தேன். இப்போது இரண்டு பெரும் மாற்றங்களைச் செய்துள்ளேன். ஒன்று, H.264 codec பயன்படுத்தி நசுக்கிய ஒளித்துண்டு. எனவே சுமார் 1 மணி நேரம் வரும் வீடியோக்கள் எல்லாம் வெறும் 60-80 மெகாபைட்டுக்குள் வந்துவிடுகின்றன. அடுத்து அவற்றை archive.org தளத்தில் ஏற்றி, அங்கிருந்து ஒளி ஓடை வடிவில் வருமாறு செய்துள்ளேன். உருப்படியான அகலப்பாட்டை இருந்தால், எளிதாகப் பின்பற்ற முடியும்.

பேராசிரியர் சுவாமிநாதன் இதுவரை கொடுத்துள்ள மூன்று பேச்சுகளும் கீழே:







MP4 கோப்பைத் தரவிறக்கிக்கொள்ள விரும்பினால், இங்கே இருந்து பெற்றுக்கொள்ளவும்: ஒன்று | இரண்டு | மூன்று
.

பதிப்பு - காப்பு உரிமை: புத்தகம் பேசுது சிறப்பு மலர்

தமிழில் முதன் முதலாக பதிப்பு - காப்பு உரிமையைப் பற்றிப் பேசுகிறது புத்தகம் பேசுது சிறப்பு மலர். விலை ரூபாய் 80/- இதில் வெளிவந்துள்ள என் கட்டுரையை பதிவில் கொடுத்துள்ளேன். பிற கட்டுரைகளைப் படிக்க,சிறப்பு மலரை வாங்குங்கள். விரும்புவோர் தொடர்புகொள்ளவேண்டிய முகவரி:

K. Nagarajan
Bharathi Puthakalayam
421, Anna Salai
Teynampet
Chennai - 600 018
# 044-24332424
thamizhbooks@gmail.com

தமிழா? ஆங்கிலமா?

நேற்று ஒரு மாநகரத்தின் இரு மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர்களுடன் கலந்துரையாடினேன். [பள்ளிகளின் பெயர்கள், விவரங்கள் வேண்டாம்.]

முதல் பள்ளி நகருக்குள் உள்ளது. நல்ல பெயர் எடுத்த பள்ளி. நல்ல வசதிகள். பள்ளியில் ‘கிளப்’ தொடக்கவிழாவுக்காக அழைத்திருந்தனர். தமிழில் பேசவேண்டுமா, ஆங்கிலத்தில் பேசவேண்டுமா என்று கேட்டேன். ‘ஆங்கிலம்’ என்று ஏகோபித்த குரலில் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் கேட்டுக்கொண்டனர். சரி, அவர்கள் விதி என்று முடிந்தவரை எளிமையான சொற்கள், முடிந்தவரை மெதுவாக என்று ஆங்கிலத்தில் உரையாடினேன். பொதுவான விஷயங்கள்தான். 9, 11 வகுப்பு மாணவர்கள். எனவே மேற்படிப்பு, ஆராய்ச்சி, என்னவெல்லாம் படித்தால் என்ன சாதிக்கலாம் போன்றவை.

பெண்கள் கவனித்துக் கேட்டனர். ஆனால் ஆண்கள் பகுதியில் நிறையவே சலசலப்பு. என்னடா, நம்மை இப்படிக் கொண்டுவந்து மதிய நேரத்தில் ஒர் ஆசாமி பிளேடு போடுகிறாரே என்று நினைத்தார்களோ என்னவோ. மற்றொருபக்கம் ஆங்கிலம் சரியாகப் புரியாததும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக மொழிகள் பற்றி பேச்சை ஆரம்பித்தேன். கல்லூரியில் (ஐ.ஐ.டி) ஆங்கிலம் பேசத் தெரியாமல் நான் தடுமாறியது; அதனால் நண்பர்களைப் பெறமுடியாமல் சில மாதங்கள் திண்டாடியது; மொழியின் முக்கியத்துவம்; நன்கு பேசத் தெரிதல், நன்கு எழுதத் தெரிதல், படித்துப் புரிந்துகொள்ளல் போன்ற மென்திறன்கள் எனப் பலவற்றைப் பற்றி (ஆங்கிலத்தில்தான்) பேசினேன். ஆங்கிலமும் நன்கு தெரிந்துகொள்ளவேண்டும், தமிழிலும் நல்ல திறமை வேண்டும் என்பதை வலியுறுத்தினேன்.

கேள்வி பதில் நேரத்தில் மாணவிகள் ஆர்வத்துடன் கேள்வி கேட்க முற்பட்டனர். உடைந்த ஆங்கிலம்தான். அதற்கிடையே பள்ளி முதல்வர், கேள்விகளைத் தமிழிலும் கேட்கலாம் என்று அனுமதித்தார். ஆனாலும் பிள்ளைகள் ஆங்கிலத்திலேயே (தட்டுத் தடுமாறி) கேள்விகளைக் கேட்டனர். நான் பதில்களை தமிழில் தர ஆரம்பித்தேன். ஆனாலும் கேள்விகள் ஆங்கிலத்தில்தான் வந்தன. ஆண்கள் பகுதியில் இருந்து கேள்விகளே வரவில்லை. ஆசிரியர்கள் தூண்டத் தூண்ட அவர்கள் தலையை வேகமாக கால்களுக்கு இடையில் புதைத்துக்கொண்டனர். ஐஐடிக்கும் பிற பொறியியல் கல்லூரிகளுக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு பெண் கேட்டார். மற்றொரு பெண், அமெரிக்காவில் போய்ப் படிக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்.

***

மதியம் வேறொரு பள்ளி. இது ஊருக்கு வெளியே நல்ல தொலைவில் இருந்தது. பெரும்பாலும் வேளாண்மைத் தொழில் செய்வோரின் பிள்ளைகள்தான் அங்கு படிக்கிறார்கள் என்றார் முதல்வர். ஆடம்பரம் இல்லாமல்தான் நிகழ்ச்சி ஆரம்பித்தது. மின் வெட்டு காரணமாக மைக் இல்லை. 9, 10, 11, 12 வகுப்பு மாணவர்கள். இங்கும், தமிழில் பேசவா, ஆங்கிலத்தில் பேசவா என்று கேட்டேன். ஆங்கிலம் என்றனர் பிள்ளைகள் ஜோராக. ஒருசில குரல்கள் தமிழ் என்று அமிழ்ந்து ஒலித்தன. நீங்கள் என்ன சொன்னாலும் சரி, தமிழில்தான் பேசப்போகிறேன் என்றேன். சில கதைகளுடன் ஆரம்பித்தேன். இங்கும் காலையில் நடந்த பல்லவிதான். ஆனால் நிறையக் கதைகள் சொன்னேன். மிகுந்த ஆர்வத்துடன் கேட்டனர். அமைதியாக இருந்தனர்.

பின்னர் கேள்வி நேரம் ஆரம்பித்தது. தமிழ் என்பதால் பயம் இல்லாமல் பேசினார்கள். விஞ்ஞானி என்றால் என்ன தோற்றம் உங்கள் மனக்கண்ணில் வருகிறது என்ற கேள்வியில் ஆரம்பித்தேன். ஆண்கள், பெண்கள் இருவருமே, ஒரு கோட் போட்ட ஆண், தடிக் கண்ணாடி, வெள்ளைப் பரட்டைத் தலை என்ற ரீதியில்தான் பதில் சொன்னார்கள். பின் அங்கிருந்து, ஏன் விஞ்ஞானி என்றால் பெண் உருவம் மனத்தில் தோன்றுவதில்லை என்று தூண்டினேன். அப்படியே அறிவியல் பற்றிப் பேச ஆரம்பித்தோம்.

ஒரு பையன் எழுந்திருந்து, ‘பிளாக்ஹோல் என்பது நிஜமாகவே உள்ளதா?’ என்று கேட்டான். அங்கிருந்து கிராவிடி, பிளாக்ஹோல், நட்சத்திரங்கள், அணுச்சேர்க்கை, கிராவிடி எப்படி ஒளியை வளைக்கிறது, ஏன் பிளாக்ஹோல் என்ற பெயர் வந்தது போன்றவற்றைப் பற்றி உரையாடல் நடந்தது. அதிர்ச்சியான பல விஷயங்களைக் கேட்டு மாணவர்கள் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தனர். மற்றொரு மாணவர் எரிமலையிலிருந்து எப்படி கொதிக்கும் குழம்பு வெளியே வருகிறது என்று கேட்டார். ஒரு மாணவி, பூமி அழிந்துவிடுமா என்று கேட்டார். பிக் பேங் கோட்பாடு பற்றி விளக்கினேன். சூரியன் ஒரு கட்டத்தில் செயல் இழக்கத்தான் போகிறது; நாமாகவே அதற்குள் பூமியை (அதாவது உயிர்களை) அழித்திருக்காவிட்டால், ஒரு கட்டத்தில் பூமி, பிற சூரியக் குடும்பக் கோள்கள் அனைத்தும் சூரியனால் விழுங்கப்பெற்றுவிடும் என்று விளக்கினேன்.

இப்படியே நேரம் போனதே தெரியாமல் இரண்டு மணிநேரம் பேசியிருப்போம். மாணவர்கள் அனைவருமே ஆர்வத்தோடு பங்குகொண்டனர். அப்போது கரடிபோல் உள்ளே நுழைந்த ஆசிரியை ஒருவர், பஸ் கிளம்பிவிடும் என்றும் அதில் வீட்டுக்குச் செல்பவர்கள் உடனே கிளம்பிவிடுவது அவர்களுக்கு நன்மை பயக்கும் என்றும் விளக்கினார். வருத்தத்தோடு சில மாணவர்கள் வெளியேற, மீண்டும் உரையாடல் தொடர்ந்தது.

அதன்பிறகு நான் களைத்து உட்கார, கல்லூரி முதல்வர் மெதுவாக மாடி ஏறிவந்து நன்றி சொல்ல, கூட்டம் கலைந்தது.


I rest my case, your honour!

Thursday, July 15, 2010

புத்தகத் திருட்டு, நம்பிக்கைத் துரோகம்

(இது கிழக்கு பதிப்பகம் பற்றிய பதிவல்ல!)

மே மாதத்தில் மலேசியா சென்றிருந்தபோது அங்கே உமா பதிப்பகம் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் சோதிநாதன் என்பவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். மிகவும் வருத்தத்தில் இருந்தார். அவர் சொன்ன கதையை இங்கே எழுதப்போகிறேன். இந்தக் கதையில் சில பெயர்களைக் குறிப்பிட முடியும் (செய்தித்தாளில் தகவல்கள் வந்துள்ளன; தமிழகக் காவல்துறை கிரிமினல் வழக்கு பதிவுசெய்து, நடவடிக்கை எடுத்துள்ளது என்பதால்); வேறு சில பெயர்களைக் குறிப்பிட முடியாது (சட்டக் காரணங்களுக்காக. சிவில் வழக்கு நிலுவையில் உள்ளது, எனவே முடிவாகாத நிலையில் சிலவற்றைக் குறிப்பிடுதல் மானநஷ்ட வழக்குக்கு வழிவகை செய்யும் என்பதால்). எனவே பின்னூட்டத்தில் அந்தக் குறிப்பிடாத பெயர்கள் யார் யார் என்று யூகித்து வருபவற்றை அனுமதிக்கமாட்டேன்.

***

சோதிநாதன் மலேசியாவில் பள்ளி ஆசிரியராக இருந்தவர். உமா பதிப்பகம் என்பதை ஏற்படுத்தி மலேசியாவில் தமிழ்ப் புத்தகங்களை விற்பது, புதிய புத்தகங்களை தமிழ், மலாய், ஆங்கில மொழிகளில் அச்சிட்டு விற்பது ஆகிய தொழில்களில் ஈடுபட்டு வருகிறவர்.

பல மாதங்களுக்குமுன் தமிழகத்திலும் மயூரா பதிப்பகம் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். அதில் வேலை செய்ய என்று ஒரு தமிழ்நாட்டு நபரை வேலைக்கு நியமித்துள்ளார். உள்ளூரில் இருவரை அந்த நிறுவனத்து இயக்குனர்களாக நியமித்துள்ளார். இந்த நபருக்கு தன் செலவிலேயே திருமணம் செய்வித்ததாகவும் சொல்கிறார் சோதிநாதன். ஆனால் இந்த நபர் இயக்குனர்களின் கையெழுத்தை ஃபோர்ஜரி செய்து, வங்கிக் கணக்குகளை மாற்றிக்கொண்டு, மலேசியாவிலிருந்து வரும் பணம் அனைத்தையும் முற்றிலுமாக சுருட்டுக்கொண்டு ‘மயூரா பதிப்பகம்’ என்ற நிறுவனமே தன்னுடையது என்கிறார்போல செய்துள்ளார் என்பது சோதிநாதனின் குற்றச்சாட்டு.

உமா பதிப்பகம் வண்ணச் சிறுவர் புத்தகங்கள் பலவற்றைத் தயாரித்திருந்தது. அவற்றை இந்தியாவில் மயூரா பதிப்பகம் என்ற பெயரில் விற்பனை செய்ய முடிவெடுத்திருந்தது. அவற்றை தனதாக ஆக்கிக்கொண்ட இந்த நபர், அந்தப் புத்தகங்களையும் விற்பனை செய்து அதிலிருந்து வந்த வருமானத்தையும் சுருட்டிக்கொண்டாராம். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துக்கும் புத்தகங்களை சப்ளை செய்து அந்தப் பணத்தையும் பார்த்துள்ளார் என்றார் சோதிநாதன்.

விஷயம் தெரியவந்ததும் சோதிநாதன் சென்னை காவல்துறையில் வழக்கு பதிவுசெய்ய முயற்சி செய்துள்ளார். நயமாகப் பேசிய ஒரு பெண் போலீஸ் அதிகாரி, சோதிநாதனிடமிருந்து சோனி பிரேவியா டிவி வாங்கிக்கொடு, நோகியா மொபைல் போன் வாங்கிக்கொடு என்றெல்லாம் சொல்லிவிட்டு, கடைசியில் வழக்கு ஏதும் பதிவு செய்யாமல், சமரசமாகப் போகுமாறு அறிவுரை கொடுத்துள்ளார். அடுத்து அந்த இடத்துக்கு வந்த ஒரு காவல் அதிகாரி, மலேசியாவரை சென்று பைசா கொடுக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். பைசா கொடுத்தால்தான் எஃப்.ஐ.ஆரே பதிவு செய்வேன் என்று கூறியுள்ளார். ஆனால் அந்தக் கட்டத்தையெல்லாம் தாண்டி, இப்போது அந்த நபர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அந்த நபர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.

அது தொடர்பான செய்தி நக்கீரன் | மாலைமலர்

***

இது இப்படி இருக்க, சென்னையிலிருந்து ஒரு பதிப்பாளர், மலேசியாவில் சோதிநாதன் அலுவலகத்தில் அவரைச் சந்தித்துள்ளார். தமிழகத்தில் தங்களது அச்சகத்திலேயே புத்தகங்களை அச்சடித்தால் மிகக் குறைவான செலவில் செய்துமுடிக்கலாம் என்று சொல்லி, கிட்டத்தட்ட 50 புத்தகங்களை அச்சடித்துத் தருவதாக அவற்றின் சாஃப்ட் காபியை வாங்கிக்கொண்டு வந்துள்ளார். ஒவ்வொன்றிலும் 1,500 பிரதிகள் அச்சடிக்க இத்தனை காசு ஆகும் என்று கையெழுத்தாகியுள்ளது.

சில மாதங்கள் ஆகியும் புத்தகங்கள் மலேசியாவுக்கு வரவில்லை. கேட்டால், பாதிப் பணம் முன்பணம் வந்தால்தான் வேலை ஆரம்பிக்கப்படும் என்று சொல்லியுள்ளார்கள். பாதிப்பணம் அனுப்பப்பட்டுள்ளது. அப்படியும் வேலை ஆகவில்லை. மீதிப்பணமும் வந்தால்தான் என்றுள்ளனர். அதுவும் அனுப்பப்பட்டுள்ளது. அதன்பின்னும் வேலை நடக்கவில்லை. கேட்டால், இந்தப் பணம் போதாது; மேலும் கொஞ்சம் நெகடிவ் எடுக்க என்று ஆகும் என்று சொல்லி அந்தப் பணத்தையும் பெற்றுக்கொண்டபின், ஓரிரு மாதங்கள் கழித்து புத்தகங்கள் மலேசியா சென்றுள்ளன.

எல்லாம் 1,500 பிரதிகள் இருந்தும், ஒரு புத்தகம் மட்டும் 3,000 பிரதிகள் இருந்தன. ஆச்சரியம் அடைந்து சோதிநாதன் சம்பந்தப்பட்ட பதிப்பகத்திடம் பேச, அவர்கள், இது பிழையாக நடந்துள்ளது என்றும் அதற்காக அதிகத் தொகை எதுவும் வசூலிக்கப்படவில்லை என்றும் சொல்லியுள்ளனர்.

ஓரிரு மாதங்களில் கொழும்புவில் புத்தகக் கண்காட்சி. அதில் பங்கேற்கச் சென்ற சோதிநாதனுக்கு அதிர்ச்சி. அங்கே அவருடைய புத்தகங்கள் அனைத்தும் ஒரு கடையில் தொங்கிக்கொண்டிருந்தன. ஆனால் அவரோ இலங்கைக்கு எதையும் இன்னும் ஏற்ற்மதி செய்யவில்லை. புத்தகத்தைத் திறந்துபார்த்தால் ‘உமா பதிப்பகத்தின் அனுமதியுடன் விற்பனை செய்யப்படுகிறது’ என்று உள்ளே எழுதியுள்ளது; புத்தகத்தில் காணப்படும் லோகோ, சென்னையைச் சேர்ந்த இந்தப் பதிப்பகத்துடையது.

சோதிநாதன் சம்பந்தப்பட்ட பதிப்பகத்துடன் தொடர்புகொண்டுள்ளார். முதலில் இதுமாதிரி ஒன்று நடக்கவே இல்லை என்று மறுத்த நிறுவனத்தினர், பின்னர் ஒப்புக்கொண்டு, விற்பனையாகும் புத்தகங்களுக்கு ராயல்டி கொடுத்துவிடுகிறோம் என்று சொல்லியுள்ளனர். சோதிநாதன் ஒப்புக்கொள்ளாமல் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு சென்னையில் வாய்தா வாய்தாவாக முன்னேறிக்கொண்டிருக்கிறது.

இது சோதிநாதன் தரப்பு வாதம். எதிர்த் தரப்பின் வாதம் என்னவென்று எனக்குத் தெரியாது.

***

தமிழ்ப் பதிப்புத் துறையில் இதுபோல இதற்குமுன் பெரிய அளவு குற்றச்சாட்டுகள், பிரச்னைகள் வந்துள்ளதாக எனக்கு நினைவில்லை.

Sunday, July 11, 2010

புத்தகப் பதிப்புத் துறையில் உரிமங்கள்

[புத்தகம் பேசுது காப்புரிமை சிறப்பிதழுக்காக மார்ச் 2010-ல் எழுதப்பட்டது. சிறப்பிதழ் இந்த மாதம்தான் வெளியானது.]

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் ஜெர்மனி நாட்டில் உள்ள ஃப்ராங்ஃபர்ட் நகரில் ஒரு நிகழ்வு நடக்கும். மிகவும் கோலாகலமான ஒரு திருவிழா. புத்தகக் காட்சி என்றுதான் அதற்குப் பெயர். ஆனால் அங்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து புத்தகங்களை வாங்குவார்கள் என்று நினைக்காதீர்கள்.

சொல்லப்போனால் ஐந்து நாள்கள் நடக்கும் அந்த நிகழ்வின்போது புத்தகங்களை யாருமே விற்கமாட்டார்கள். ஆனாலும் அங்கு வியாபாரம் நடக்கும். வருமானம் கிடைக்கும்.

அங்கு எதை வாங்குகிறார்கள், விற்கிறார்கள்? யார் வாங்குகிறார்கள், விற்கிறார்கள்?

இந்தக் கண்காட்சிக்கு trade fair என்று பெயர். அதாவது தொழில் செய்பவர்களுக்கு உள்ளேயே நடந்துகொள்ளும் வர்த்தகம். ஒரு புத்தகப் பதிப்பாளர் இன்னொரு புத்தகப் பதிப்பாளருக்கு விற்பார். அவர் விற்பது பல உரிமைகளை. அவை என்னென்ன என்று பார்ப்போம்.

பிற புவிப் பகுதிகளில் அச்சிட்டு விநியோகிக்கும் உரிமை (Reprint Rights)

அமெரிக்காவில் ஒரு பதிப்பாளர் ஒரு புத்தகத்தை ஆங்கிலத்தில் அச்சிட்டு விற்று வருகிறார். அவருக்கு இந்தியாவிலோ பிரிட்டனிலோ ஆஸ்திரேலியாவிலோ கிளை நிறுவனங்கள் கிடையாது. ஆனால் இந்த நாடுகளிலும் ஆங்கிலப் புத்தகங்கள் பெருமளவு விற்பனையாகின்றன. இந்த நாடுகளில் நல்ல சந்தை உள்ளது என்பது அவருக்குத் தெரியும். ஆனால் புத்தகங்களை அமெரிக்காவில் அச்சிட்டு, ஏற்றுமதி செய்து பிரிட்டனுக்கு அனுப்பி, அங்கே விநியோகம் செய்து பணத்தை வசூலிப்பது அவருக்குக் கடினமான செயல். இந்த நிலையில் அவர் என்ன செய்கிறார்? தான் பதிப்பித்த நூலை எந்தவிதமான மாற்றமும் செய்யாமல் அப்படியே, அதே போன்ற தாளில், அதேபோன்ற கட்டுமானத்தில் அச்சிட்டு, அந்தந்த நாடுகளுக்கு ஏற்ற விலையில் விற்பனை செய்ய யாராவது தயாராக இருக்கிறாரா என்று பார்க்கிறார்.

அப்படி ஒரு கூட்டாளி கிடைத்துவிட்டால் அவரிடம் மறு-அச்சாக்கும் உரிமையையும், அப்படி அச்சிட்ட புத்தகங்களை குறிப்பிட்ட சில புவிப் பகுதிகளில் மட்டும் விற்கும் உரிமையையும் விற்கிறார்.

பெரும்பாலான அமெரிக்கப் புத்தகங்களும் பிரிட்டன் புத்தகங்களும் அப்படித்தான் இந்தியாவுக்கு வருகின்றன. இந்திய ரூபாய் மதிப்பில் குறைந்த விலையிலேயே கிடைக்கின்றன. கணினித் துறை, பொதுவாகவே கல்வித் துறை என்று மட்டுமின்றி பொதுவான புத்தகங்கள், கதைகள், அ-புதினங்கள் என்று அனைத்துமே இந்த வகையில் இந்தியாவுக்கு வரத்தொடங்கியுள்ளன.

இது ஒருவழிப் பாதையும் அல்ல. இந்தியப் பதிப்பாளர்கள் இந்தியாவில் விநியோகித்துவரும் ஆங்கிலப் புத்தகங்களுக்கு அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் சந்தை தேடலாம். ஆப்பிரிக்க நாடுகளிலும் சிங்கப்பூர், மலேசியாவிலும் சந்தை தேடலாம்.

ஏன், வரும் நாட்களில் தமிழகத்தின் பதிப்பாளர்கள் இலங்கையில் உள்ளவர்களுக்கு அந்த நாட்டில் மட்டும் விற்கக்கூடிய வகையில் மறு-அச்சாக்கும் உரிமைகளை விற்கலாம்.

மொழிமாற்றும் உரிமை (Translation Rights)

மிகப் பெரிய வாய்ப்புகள் என்று பார்த்தால் அது மொழிமாற்றல் துறையில்தான் இருக்கிறது. ஃப்ராங்ஃபர்ட் நகரில் பெரிய அளவு தொழில் இதில்தான் நடக்கிறது. ஆங்கிலப் புத்தகங்களின் மொழிமாற்றல் உரிமையை பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிய, இத்தாலி, ரஷ்ய மொழி முதற்கொண்டு உலகின் பல்வேறு மொழியைச் சேர்ந்தவர்களும் வாங்குகிறார்கள். அதேபோல பிரெஞ்சு, ஸ்பானிய மொழிப் பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட விரும்பும் பதிப்பாளர்களை நாடுகிறார்கள்.

உலகிலேயே பல மொழிகள் பெருமளவில் புழங்கிவரும் ஒரே நாடு இந்தியாதான்! இந்தியாவின் பல்வேறு மொழிகளைச் சார்ந்த பதிப்பகங்களும் ஃப்ராங்ஃபர்ட் நகர் வந்து இந்திய மொழிகளுக்கு மொழிமாற்றும் உரிமையை போட்டி போட்டு வாங்குகின்றன.

ஃப்ராங்ஃபர்ட் போன்றே, தில்லியில் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனவரி மாதத்தில் உலகப் புத்தகக் கண்காட்சி ஒன்று நடக்கிறது. சமீபத்தில் 2010 ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் இந்தக் கண்காட்சி நடைபெற்றது. இங்கும் இந்தியப் பதிப்பாளர்கள் ஒன்றுகூடி அவர்களுக்குள் பேசிக்கொண்டு தமிழிலிருந்து இந்திக்கும், ஆங்கிலத்திலிருந்து மலையாளத்துக்கும் மொழிமாற்றும் உரிமைகளை விற்று, வாங்கினர்.

மொழிமாற்ற உரிமையைப் பெற ஃப்ராங்ஃபர்ட்டுக்கோ தில்லிக்கோதான் செல்லவேண்டும் என்றில்லை. இருந்த இடத்திலிருந்தே பெறலாம். ஆனால் ஒரு முறையாவது முகத்தை நேரில் காட்டி, பேசுவது அவசியம். நீங்கள் யார், உங்கள் பதிப்பகம் என்னென்ன புத்தகங்களை மொழிபெயர்த்துள்ளது, யார் யாருடன் உறவு வைத்துள்ளீர்கள் என்பதை எதிராளி அறிந்துகொள்வது அவசியம்.

ஃப்ராங்ஃபர்ட் அல்லது தில்லி சென்றுவந்தால் பெரும்பாலான உலகப் பதிப்பாளர்களின் தொடர்பு முகவரி உங்களுக்குக் கிடைக்கும். இன்று மின்னஞ்சலிலேயே சகல விஷயங்களையும் செய்துமுடிக்கக்கூடிய நிலை வந்துள்ளது.

மறு-அச்சாக்க உரிமை அல்லது மொழிமாற்ற உரிமை ஒப்பந்தங்கள்

உங்களுக்கு மறு அச்சாக்கம் அல்லது மொழிமாற்றம் ஆகியவற்றில் ஏதோ ஒன்றில் விருப்பம் என்று வைத்துக்கொள்வோம். இந்த உரிமங்களைப் பெற என்ன செலவாகும்? எத்தனை ஆண்டுகளுக்கு இந்த உரிமைகள் கிடைக்கும்?

பொதுவாக இந்த உரிமங்கள் மூன்று அல்லது ஐந்து ஆண்டுக் காலத்துக்கு என்று தரப்படும். நல்லபடியாகத் தொழில் நடக்கிறது என்றால் மேலும் மேலும் பல ஆண்டுகளுக்கு இந்த உரிமங்களை நீட்டித்துக்கொள்ள முடியும்.

பொதுவாக இந்த உரிமங்களைப் பெற முன்பணம் (advance) தரவேண்டும். இது பொதுவாக இரண்டு வகைப்படும். குத்துமதிப்பான ஒரு முன்பணம், அல்லது ஏதோ ஒரு கணக்கீட்டை முன்வைத்து. குத்துமதிப்பு என்பது ஒரு எழுத்தாளரின் அல்லது அந்தப் புத்தகத்தின் மதிப்பைப் பொருத்து இருக்கும். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அல்லது ஹாரி பாட்டர் வரிசைப் புத்தகங்களை எழுதிய ஜே.கே.ரௌலிங், டா விஞ்சி கோட், தி லாஸ்ட் சிம்பல் போன்ற புத்தகங்களை எழுதிய டான் பிரௌன் போன்றவர்கள் என்றால் கணிசமான அளவு முன்பணம் வைக்கவேண்டி வரும். டாலர் மதிப்பில் சொல்வதானால், இந்திய மொழிகள் என்று எடுத்துக்கொண்டால், குறைந்தது 2,000 அமெரிக்க டாலர் முதற்கொண்டு 5,000, 10,000 அமெரிக்க டாலர் என்று செல்லும் (1 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை).

ஆனால் பொதுவாக எல்லாப் புத்தகங்களின் உரிமங்களை வாங்குவதற்கும் இந்த அளவுக்குப் பணம் தரவேண்டும் என்பதில்லை. ஒரு எளிதான கணக்கைப் போட்டுப் பார்த்து, எவ்வளவு முன்பணம் தரவேண்டும் என்பதைத் தீர்மானிக்கமுடியும்.

முதல் அச்சில் 1,000 பிரதிகள் அடிக்க உள்ளீர்கள் என்று வையுங்கள். புத்தகத்தின் விலை ரூ. 200 இருக்கலாம் என்று எடுத்துக்கொள்ளுங்கள். பேப்பர்பேக் எனப்படும் சாதா அட்டைக்கு 7.5% ராயல்டி தந்தால் போதுமானது. கெட்டி அட்டை என்றால் 10% ராயல்டியை எதிர்பார்ப்பார்கள். சாதா அட்டை என்றால் முதல் அச்சின் ராயல்டி தொகை ரூ. 15,000/-

நீங்கள் மொழிமாற்றல் உரிமையைப் பெறுவதாக இருந்தால் இந்தத் தொகையை மட்டும் முன்பணமாகத் தருகிறேன் என்று பேசிப் பார்க்கலாம். எதிராளி அதனை ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம். (நாங்கள் கிழக்கு பதிப்பகத்துக்காக அப்படிப் பல புத்தகங்களுக்குச் செய்துள்ளோம்.) சிலர் குறைந்தது 2,000 பிரதிகளுக்காவது முன்பணம் தரவேண்டும் என்று எதிர்பார்த்து, அதைக் கேட்பார்கள். அப்படியானால் மேற்படி புத்தகத்துக்கு ரூ. 30,000/- முன்பணம் தரவேண்டும்.

வேறு சிலர் முன்பணம் பற்றிக் கவலைப்படாமல் கூட இருக்கலாம். ஒவ்வோர் ஆண்டும் கணக்கெடுத்து, எத்தனை புத்தகங்கள் விற்றுள்ளனவோ அந்த ராயல்டி தொகையைக் கொடுத்தால் போதும் என்று அவர்கள் ஒப்பந்தம் போடலாம்.

அடுத்து, ஒப்பந்தம். கட்டாயமாக ஒரு தாளில் முக்கியமான ஷரத்துகளை எழுதி இரு பக்கமும் கையெழுத்திடுவது அவசியம். பொதுவாக நீங்கள் அமெரிக்க, பிரிட்டானிய பதிப்பாளர்களிடம் அல்லது இந்தியாவில் உள்ள ஆங்கிலப் பதிப்பாளர்களிடம் பேசுகிறீர்கள் என்றால் அவர்களே ஒப்பந்த முன்வரைவை உங்களுக்கு அனுப்பிவிடுவார்கள். அதில் ராயல்டி சதவிகிதம், கணக்கெடுக்கும் காலம், முன்பணம், எத்தனை ஆண்டுகளுக்கு இந்த உரிமம் போன்ற பல தகவல்களும் இருக்கும். அதில் உங்களுக்கு ஏதேனும் ஷரத்து சரியாக இல்லை என்று தோன்றினால் நீங்கள் எதிராளியிடம் அது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த ஷரத்தை மாற்ற முயற்சி செய்யலாம்.

ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் முன்பணம் தரவேண்டி இருந்தால், அதுவும் எதிராளி வேறு நாட்டில் இருந்தால், நீங்கள் டாலரில் அல்லது பவுண்டில் பணம் செலுத்தவேண்டி இருக்கும். அதற்கு இந்தியாவில் வரி பிடித்தம் செய்யவேண்டி இருக்கும். இதற்கான தகவல்களை உங்கள் ஆடிட்டரிடமும் வங்கியிடமும் பேசித் தெரிந்துகொள்ளுங்கள்.

ஒப்பந்தம் காலாவதி ஆகும் தேதியைக் கவனமாக நினைவில் வைத்திருங்கள். அந்தக் காலகட்டத்துக்குள் நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் அச்சடித்து விற்கலாம். (சில ஒப்பந்தங்களில் எத்தனை பிரதிகள் மொத்தமாக நீங்கள் அச்சாக்கலாம் என்பதற்கும் ஒரு வரையறை இருக்கலாம்.) காலம் முடிவதற்குள் ஒப்பந்தத்தை நீட்டிக்கும் செயலிலும் நீங்கள் இறங்கலாம்.

மொழிமாற்றல் செய்வதாக இருந்தால் அதற்கான செலவு உங்களுடையதே. ஆனால் சில நேரங்களில் இலக்கியப் படைப்புகளாக இருந்தால் (கவிதை, கதை) சில நாடுகளில் அரசுகள் மொழிமாற்றத்துக்கு என மானியம் கொடுக்கிறார்கள். உதாரணமாக பிரெஞ்சு, டச்சு, ஜெர்மன் மொழியிலிருந்து இந்திய மொழி எதற்காவது நாவல்களை மொழிமாற்றம் செய்யும் உரிமையை நீங்கள் பெற்றால், மொழிமாற்றத்துக்கான மானியம் ஏதேனும் கிடைக்குமா என்று அந்தந்த நாட்டின் தூதரகங்களை நீங்கள் தொடர்புகொண்டு கேட்டுப் பார்க்கலாம். இந்த நாடுகளில் இருக்கும் பதிப்பகங்களே அது தொடர்பான தகவல் இருந்தால் உங்களுக்குத் தெரிவித்துவிடுவார்கள்.

ஃப்ராங்ஃபர்ட்டில் இந்த நாடுகளின் அரச நிறுவனங்களே தனியாக ஸ்டால் அமைத்து மொழிமாற்றத்துக்குத் தாங்கள் உதவித்தொகை அளிப்பதைத் தெரிவிக்கின்றன.

சித்திரக் கதைகள் உரிமம்

உள்ளதிலேயே எளிதானது என்று ஒருவகையில் பார்த்தால் அது சித்திரக் கதைகளின் எழுத்துகளை மட்டும் மொழிமாற்றி அதே படங்களுடன் அச்சிடுதல். சிறு குழந்தைகளுக்கான வண்ணப் புத்தகங்கள், வண்ண அல்லது கறுப்பு/வெள்ளை காமிக்ஸ் புத்தகங்கள் போன்ற பலவும் இப்படிக் கிடைக்கின்றன.

இந்தப் புத்தகங்களுக்கான மொழிமாற்ற உரிமங்களைப் பற்றிப் பேசும்போது ஒரிஜினல் படங்களை எந்த வழியில் பெறப்போகிறீர்கள் என்பதைப் பற்றியும் பேசவேண்டும். சில நேரங்களில் இந்தப் புத்தகங்களில் ஒரிஜினல் பதிப்பாளர்கள் படங்களை உங்களுக்குத் தர மறுக்கலாம். மாறாக நீங்கள் மொழிமாற்றிய எழுத்துகளை அவர்களிடம் கொடுத்தால், அவர்கள் அந்த எழுத்துகளை படங்களுடன் சேர்த்துப் பதியவைத்து, அவர்களே அச்சிட்டு, புத்தகங்களாக உங்களுக்குக் கொடுப்பார்கள்.

அதேபோல இங்கும், நீங்கள் இந்தியப் பதிப்பாளராக இருந்தால், உங்கள் உரிமங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க அரிய வாய்ப்பு உள்ளது. ஃப்ராங்ஃபர்ட்டில் இந்தியப் பதிப்பாளர்கள் சிலர் சிறுவர் புத்தகங்களின் உரிமங்களை ஸ்வீடன், நார்வே, பெல்ஜியம், நெதர்லாந்து, ருமேனியா, பல்கேரியா போன்ற நாடுகளில் உள்ள பதிப்பகங்களுக்கு விற்பதை நான் பார்த்தேன். அத்துடன் இந்தியாவில் அச்சாக்கும் செலவு குறைவாக இருப்பதால், இந்தப் புத்தகங்களை அச்சிட்டுத் தரும் ஒப்பந்தத்தையும் இந்த இந்திய நிறுவனங்கள் பெறுகின்றன.

உங்கள் சித்திரக் கதை இந்தியாவில் 3000 அல்லது 4000 பிரதிகள் மட்டுமே விற்கக்கூடும். ஆனால் ஒரேயடியாக ஜெர்மனியின் ஒரு பதிப்பகம் மூலம் அதன் ஜெர்மன் மொழிபெயர்ப்புக்கு 50,000 பிரதிகளுக்கான ஆர்டர் கிடைக்கக்கூடும்.

ஜெர்மனி மட்டுமல்ல, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரலில் லண்டனில் இதேபோன்ற டிரேட் கண்காட்சி நடக்கிறது. இத்தாலியில் பொலோனா என்ற இடத்தில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் குழந்தைகளுக்கான புத்தகங்கள் காட்சி நடக்கிறது. இதுவும் தொழில்துறையினருக்கானதே.

எழுத்தாளர், ஏஜெண்ட்

இந்தக் கூட்டங்களின்போது எழுத்தாளர்களுக்கான வாய்ப்புகளும் கிடைக்கின்றன. பொதுவாக மேலை நாடுகளில் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு ஏஜெண்ட் இருப்பார். இந்த ஏஜெண்ட்தான் பதிப்பாளர்களுடன் தொடர்புகொண்டு, தன் எழுத்தாளர்க்கு நல்ல ஒரு ‘டீல்’ வாங்கித்தருவார். அதாவது நல்ல ராயல்டி, நல்ல முன்பணம். இந்தியாவில்கூட ஆங்கில எழுத்தாளர்களுக்கு என்று ஏஜெண்ட்கள் வர ஆரம்பித்துவிட்டனர்.

பிற மொழிகள் இன்னும் அந்த நிலைக்கு உயரவில்லை.

அச்சகங்கள், தாள் உற்பத்தி செய்பவர்கள்

ஃப்ராங்ஃபர்ட், தில்லி போன்ற இடங்களில் மாபெரும் அச்சகங்கள், தாள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆகியவை ஸ்டால் அமைத்து, வாடிக்கையாளர்களைப் பிடிக்கும் வேலைகளையும் செய்கின்றன.

மின்-புத்தகங்கள், இணைய விற்பனை

கடந்த நான்கைந்து வருடங்களாகவே ஃப்ராங்ஃபர்ட்டில் அமேஸான் போன்ற இணையக் கடைகள் மட்டுமின்றி கூகிள், மின் புத்தகப் படிப்பான்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகியவையும் வருகின்றன. இதன்மூலம் இணையத்தில் பதிப்பாளர்களுக்கு நிறைய வருமான வாய்ப்புகள் உருவாகின்றன. இம்முறை தில்லியிலும் பல மின் புத்தகப் படிப்பான் நிறுவனங்கள் காட்சியில் கலந்துகொண்டன. வரும் ஆண்டுகளில் இந்தத் துறையில் பதிப்பாளர்களுக்குப் பெரும் வாய்ப்புகள் காத்துள்ளன.

மின் புத்தக உரிமம் என்பது தனியாகப் பிரிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். அப்படியானால் அந்த உரிமம் யார் கையில் இருக்கும் என்பது ஒரு பெரிய கேள்வி. எழுத்தாளரிடமா, பதிப்பாளரிடமா? எழுத்தாளர் தன் படைப்புக்கான மின் புத்தக உரிமத்தைத் தானே தனியாக மற்றொரு நிறுவனத்துக்கு விற்கமுடியுமா?

அல்லது பதிப்பாளர், எழுத்தாளரிடம் ஒப்பந்தம் செய்துகொள்ளும்போது அச்சுப் புத்தக உரிமையுடன் மொழிமாற்றல் உரிமை, மின் புத்தக உரிமை ஆகியவற்றையும் சேர்த்தே எழுதி வாங்கிக்கொள்ள வேண்டுமா?

இந்தக் கேள்விகள் தொடர்பாக மேலை நாடுகளில் கடுமையான போட்டிகள் ஏற்பட்டுள்ளன. விரைவிலேயே இந்தியாவிலும் இது தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டு விவாதங்கள் நடைபெறும்.

***

மொத்தத்தில் பதிப்புத் துறையில் உள்ள பல்வேறு உரிமங்களை முழுமையாகப் புரிந்துகொள்வது பதிப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கு வருமானத்தை அதிகரிக்க உதவும். அதற்கு முக்கியம் உலக அளவில் நடக்கும் டிரேட் புத்தகக் காட்சிகளில் பங்குபெறுதல்.

புத்தகமா, விஷப் புகையா?

கடிதத்தைப் பிரித்துப் பார்த்ததுமே எனக்கு ஒரே சந்தோஷம். ரஷ்யாவிலிருந்து பெரிய ஆர்டர் வந்திருந்தது. கொஞ்ச நஞ்சமல்ல. 50,000 பிரதிகளுக்கான ஆர்டர்.

எடுத்துச்சென்று என் சேர்மனிடம் காட்டினேன். மலர்ந்த அவரது முகம், ஒரு விநாடியில் சுருங்கிவிட்டது. இது நடக்காது என்றார். ஏன் என்றேன். அந்த அகராதி, பிரிட்டன் பதிப்பாளர் ஒருவருடையது. அவர்களுடைய இந்தியக் கிளைமூலம் குறைந்த விலைப் பதிப்பாக அச்சிட்டு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாள், பங்களாதேசம் ஆகிய நாடுகளில் மட்டும் விற்கிறார்கள். அதை வேறு எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்யமுடியாது.

நான் போய் அந்த நிறுவனத்திடம் பேசிப்பார்க்கிறேன் என்றேன். முடிந்தால் செய் என்றார்.

அகராதி நிறுவனத்தின் இந்திய மேனேஜரிடம் சென்று ஆர்டர் பற்றிய விவரத்தைச் சொன்னேன். எந்த நாடு என்று சொல்லவில்லை. அந்நிய நாடு ஒன்றிடமிருந்து 5,000 பிரதிகளுக்கு ஆர்டர் வந்துள்ளது என்றேன். உடனடியாக, முடியாது என்று சொன்னார். இல்லை, நீங்கள் உங்கள் தலைமை அலுவலகத்துடன் பேசிவிட்டு பதில் சொல்லுங்கள் என்றேன்.

அடுத்த நாள் போனபோது, பிரிட்டனும் முடியாது என்று சொன்னதாகச் சொன்னார். இப்போது கொஞ்சமாக எண்ணிக்கையை உயர்த்தினேன். 10,000 வேண்டும் என்கிறார்கள் என்றேன். நான் இருக்கும்போதே லண்டனுக்கு போன் போடச் சொன்னேன். லண்டன் விடாக்கண்டனாக இருந்தது. வேண்டுமானால் லண்டனிலிருந்து நேரடியாக வாங்கிக்கொள்ளவேண்டியதுதானே என்றார்கள். லண்டன் விலை ஒத்துவராது; இந்திய விலைதான் வேண்டும் அவர்களுக்கு என்பதை வலியுறுத்தினேன். கணக்கு போட்டுப் பார்த்துவிட்டு, 10,000 என்றால் முடியாது என்று சொன்னார்கள்.

அதைத்தான் நானும் எதிர்பார்த்தேன். எடுத்த எடுப்பிலேயே நான் 50,000 என்று சொன்னால் ஆரம்பமே புஸ் என்று போயிருக்கும். அடுத்த நாள் போய், 25,000 பிரதிகள் வேண்டும் என்றால் முடியுமா என்றேன். இப்போது கணக்கெல்லாம் போட்டுப் பார்த்தவர்கள் ஓகே சொன்னார்கள். பின்னர் இரு நாள்கள் கழித்து 50,000 பிரதிகள் என்று பேசி, எங்களுக்கு நல்ல டிஸ்கவுண்ட் கிடைக்குமாறு செய்துகொண்டேன். இறுதியாக ஆர்டர் போடும்போதுதான் ஷிப்மெண்ட் போகவேண்டியது ரஷ்யா என்ற தகவலைக் கொடுத்தேன்.

குறிப்பிட்ட தினத்துக்குள் 50,000 பிரதிகளையும் தயார்செய்து கப்பல் வழியாக அனுப்ப அகராதி நிறுவனமே ஒப்புக்கொண்டது. கப்பலிலும் அனுப்பிவிட்டார்கள் என்ற தகவல் கிடைத்தது.

சில வாரங்கள் கழித்து ரஷ்யாவிலிருந்து டெலக்ஸ் வந்திருந்தது. நிலைமை தீவிரம்; உங்கள் கிரேட்டைத் திறக்கும்போது அதிலிருந்து கிளம்பிய ஏதோ நாற்றம் காரணமாக எங்கள் பணிப்பெண்கள் மூன்று பேர் மயங்கி விழுந்துவிட்டார்கள்; உங்கள் பார்சல்கள் அனைத்தும் குவாரண்டைனில் கிடப்பில் உள்ளது.

இது என்னடா பிரச்னை என்று ஆடிப்போய்விட்டேன். உடனடியாக டெலக்ஸை எடுத்துக்கொண்டு சேர்மனிடம் விரைந்தேன். தம்பி, நீ பிரச்னையைச் சரி செய்யவில்லை என்றால், உனக்கு வேலை இல்லை என்பதை ஞாபகம் வைத்துக்கொள் என்று அன்புடன் சொன்னார். நேராக அகராதி நிறுவன இந்திய மேனேஜரிடம் சென்றேன். அவரிடம், அய்யா, நாம் இந்தப் பிரச்னையை நேர் செய்யவில்லை என்றால் எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் வேலை போய்விடும் என்றேன்.

எங்கே புத்தகங்களை அச்சடித்தார் என்று கேட்டேன். கொல்கத்தாவில் உள்ள சரசுவதி பிரிண்டர்ஸ் என்ற உயர்தர நிறுவனத்தில்தான் என்றார். நேராக கொல்கத்தா சென்றேன். அங்கே பிரிண்டர்களிடம் பேசியதில், அவர்கள் தாங்கள் வேலை செய்த அச்சு இயந்திரங்கள், பயன்படுத்திய இங்க் ஆகியவற்றைக் காட்டினார்கள். அவற்றில் ஏதும் பிரச்னை இருக்க வாய்ப்பில்லை. கொஞ்ச நேரம் கழித்து எங்கே பைண்டிங் செய்தார்கள் என்று கேட்டேன். 50,000 பிரதிகள் என்பதால் பத்து பேரிடம் பிரித்துக் கொடுத்து பைண்டிங் செய்ததாகவும், செய்த இடம் எந்தத் தெருவில் உள்ளது என்பதையும் சொன்னார்கள்.

நேராக அங்கே விரைந்தேன். விஷயம் என்ன என்பது ஓரளவுக்குப் புரிந்துவிட்டது. கொல்கத்தாவில் அது அடைமழை நேரம். பைண்டிங் செய்ததும் காயவைக்கவேண்டும். ஆனால் ஆர்டரை அனுப்ப நேரம் இல்லாது போயிருக்கும். எனவே காயாத புத்தகங்களை அப்படியே வைத்துக் கட்டி அனுப்பியிருப்பார்கள். விசாரித்தபோது, அதுதான் நடந்துள்ளது என்பது தெரிந்துபோனது.

ஈரமான பைண்டிங் கொண்ட 50,000 புத்தகங்கள் ஒரு கிரேட்டில். அவை கொஞ்சம் கொஞ்சமாகக் காயும்போது, அவற்றிலிருந்து கிளம்பும் ஒருவித வாயு சேர்ந்துபோய், கிரேட்டைத் திறக்கும்போது பிரச்னை ஏற்படுத்தியிருக்கவேண்டும். ஆனாலும் அதில்போய் மயங்கி விழும் அளவுக்கு ரஷ்யப் பெண்கள் அவ்வளவு மென்மையானவர்களா என்பதில் எனக்குச் சந்தேகம்.

எந்தப் பசையைப் பயன்படுத்தினார்கள் என்று கேட்டேன். ஃபெவிகால் நிறுவனத்துடையது என்றார்கள். நேராக அந்தப் பசையை வாங்கிக்கொண்டு தேசிய வேதியியல் பரிசோதனைச் சாலைக்கு வந்து அவர்களிடம் கொடுத்து நடந்ததைச் சொல்லி, அதனைச் சோதனை செய்து ஒரு சான்றிதழ் தருமாறு கேட்டுக்கொண்டேன். இந்தப் பசையில் உயிரை மாய்க்கும் ஒன்றும் இல்லை என்று எழுதிக்கொடுத்தார்கள்.

அந்தச் சான்றிதழுடன் நேராக ரஷ்யா சென்றேன். ஒடெஸா என்ற துறைமுகத்தில்தான் அகராதிகள் கிடந்தன. அங்கே போய் சான்றிதழைக் கொடுத்தாலும் அங்குள்ள அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். வேண்டுமானால் நீயே திறந்துகொள் என்று கடைசியாக அனுமதி கொடுத்தனர். என்னுடன்கூட யாரும் வரவில்லை. உயிரெல்லாம் போகாது என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. இதற்குள் புத்தகங்கள் அங்கு இருந்து மேலும் பல வாரங்கள் ஆகிவிட்டன. எனவே நான் போய்த் திறந்தபோது ஒரு பிரச்னையும் இல்லை. நான் உயிருடன் இருப்பதைப் பார்த்த பின்னரே சில ரஷ்யர்கள் அருகில் வந்தனர்.

பின் ஒரு பிரச்னையும் இல்லாமல் புத்தகங்களை பார்ட்டியிடம் கொடுக்கமுடிந்தது. அதற்கான பணமும் வந்துசேர்ந்தது. என் வேலையும் பிழைத்தது.

ஒரு ஆர்டர் கிடைத்தால் மட்டும் போதாது. ஒரு விற்பனையாளன் அந்த ஆர்டர் பத்திரமாக கஸ்டமர் கைக்குச் சேரும்வரை அதைப் பின்தொடரவேண்டும். அதேபோல எந்த சிக்கல் வந்தாலும் அதைச் சரி செய்யத் தெரிந்திருக்கவேண்டும்.

=======

மேலே தன்மையில் நான் விவரித்த சம்பவம், சுகுமார் தாஸ், USB Publishers and Distributors நிறுவனத்தில் வேலை செய்தபோது நடந்ததாகச் சொன்னது.

அத்தனை ஆர்டர்களும் உனக்குத்தான்!

Thursday, July 08, 2010

“அத்தனை ஆர்டர்களும் உனக்குத்தான்!”

இரான் - இராக் இரு நாடுகளுக்கும் இடையே போர் நடந்த நேரம். மனைவியிடம் இராக் போகிறேன் என்று சொன்னால் விடுவாளா? இரண்டு சிறு குழந்தைகள் வேறு. எனவே பங்களாதேஷ் போகிறேன் என்று பொய் சொல்லிவிட்டு இராக் கிளம்பினேன். நேராக இராக் செல்ல முடியாது. இரான் விமானங்கள் சுட்டு வீழ்த்திவிடும். எனவே ஜோர்டான் சென்று, அங்கிருந்து இராக்கின் பாக்தாத் நகருக்கு விமானம் ஏறினேன்.

பாக்தாத் விமான நிலையத்தில் இறங்கியபோது நள்ளிரவு மணி 12. நான் வந்திறங்கிய அந்த ஒரு விமானம் மட்டும்தான் அங்கே இருந்தது. உள்ளூர்வாசிகள் அனைவரும் இறங்கியதும் அவரவரது உறவினர்களுடன் கார்களில் ஏறிச் சென்றுவிட்டனர். நாங்கள் ஒரு ஐந்து பேர்தான் விமான நிலையத்தில் இருக்கிறோம். நான் மட்டும்தான் இந்தியன். பிற நால்வரும் வெள்ளைக்காரர்கள். சுற்றும் முற்றும் பார்த்தால் ஒரு டாக்ஸியும் இல்லை.

நான் கொஞ்சம் தைரியமாக வெளியே சென்று டாக்ஸி பிடித்துவருகிறேன் என்று சொன்னேன். வெள்ளையர்களிடம் என் பெட்டிகளை விட்டுவிட்டு வெளியே கும்மிருட்டில் சென்றேன். அந்த இரவு நேரத்தில் வெளியே குளிர் 4 டிகிரி செண்டிகிரேட். என்னிடம் குளிருக்குப் பொருத்தமான ஆடைகளும் இல்லை. அப்படி இப்படி சில நிமிடங்கள் நடந்து பார்த்தால் ஒரு டாக்ஸியின் உள்ளே ஓட்டுனர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார். அவரை எழுப்பி, அவரது திட்டுகளை சகித்துக்கொண்டு அழைத்துவந்தேன்.

வெள்ளைக்காரர்களுக்கு ஒரே சந்தோஷம். ஐந்து பேரும் வண்டியில் ஏறிக்கொண்டோம். வெள்ளைக்காரர்கள் அனைவரும் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் அறைகளை முன்னமேயே பதிவு செய்திருந்தனர். என் அலுவலகத்தில் தரும் காசில் என்னால் ஒரு சிறு ஓட்டலில்தான் அறை பதிவு செய்ய முடியும். எனவே முதலில் வெள்ளைக்காரர்களை அவரவர் ஓட்டல்களில் இறக்கிவிட்டு என் ஓட்டலை அடைந்தேன்.

வாசல் கதவு சாத்தி இருந்தது. வாசலில் துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர், துப்பாக்கி முனையில் உள்ள பயோனெட்டால் என்னைத் தடுத்து நிறுத்தினார். உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார். நான் ஏற்கெனவே அறையைப் பதிவு செய்துள்ளேன் என்று மன்றாடினேன். அவர் மசியவில்லை. வேண்டுமானால் காலையில் வா; இப்போதைக்குக் கதவைத் திறக்கமுடியாது என்றுவிட்டார். காலையிலா? இப்போது நள்ளிரவு 1.00 மணி. இன்னும் ஐந்து மணி நேரத்தை இந்தக் குளிரில் எப்படிக் கழிப்பது?

டாக்ஸிக்காரர் தொடர்ந்து ஹார்ன் அடித்துக்கொண்டிருந்தார். அவருக்கு பைசா செட்டில் செய்யவில்லை. மீண்டும் டாக்ஸியில் ஏறி அமர்ந்தேன். அருகில் உள்ள வேறு ஏதேனும் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டேன். கோபத்துடன் என்னை அழைத்துச் சென்றார். எந்த ஓட்டலுக்குச் சென்றாலும் இதே தொல்லை. உள்ளே அனுமதிக்கவே இல்லை; அல்லது அறை காலி இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.

கடைசியாக ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும் ஒரு சுற்று சுற்று வந்தோம். அங்கும் அறைகள் இல்லையாம். விஷயம் என்னவென்றால் பாஸ்ராவில் இரான் குண்டு வீசித் தாக்கியுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் பலர் பாக்தாத் வந்து ஓட்டல்களில் இருக்கும் அனைத்து அறைகளையும் ஆக்ரமித்துவிட்டனர். எனக்கோ மோசுல் நகரத்துக்குப் போகவேண்டும். அங்குள்ள பல்கலைக்கழகத்திலிருந்துதான் அழைப்பு வந்திருந்தது. அந்த நகரம் பாக்தாதிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பாக்தாதில் கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டு மோசுல் செல்லலாம் என்று நினைத்திருந்தேன். இப்போது முதலில் இரவை எங்கேயாவது கழிக்கவேண்டும். மணி 2.30 ஆகிவிட்டது.

டாக்ஸி ஓட்டுனர் கடுப்பில் இருந்தால். நள்ளிரவுத் தூக்கத்தை எனக்காக விட்டுக்கொடுத்திருந்தார். அவரிடம் சென்று, என்னை மீண்டும் விமான நிலையத்திலேயே விட்டுவிடுமாறு சொன்னேன். அங்காவது கொஞ்சம் கதகதப்பாக இருக்கும். வண்டியில் ஏறி அமர்ந்தவன் அப்படியே தூங்கிவிட்டேன்.

திடீரென விழிப்பு வந்ததும் எதோ தவறான பாதையில் செல்வதை உணர்ந்தேன். விமான நிலையத்திலிருந்து வரும்போது வழவழவென்ற பாதை. இப்போதோ, தடதடவென வண்டி ஆடிக்கொண்டே குண்டு குழிகளின்மீது சென்றது. என் திகைப்பு அடங்குவதற்குள் வண்டி ஓரிடத்தில் நின்றது. ஓட்டுனர் கன்னாபின்னாவென்று திட்டிக்கொண்டே எழுந்துவந்து என் பெட்டிகளை விட்டெறிந்தார். என்னிடம் வந்து பணம், பணம் என்றார். பயத்தில் என் பர்ஸை அவரிடம் கொடுத்தேன். அதிலிருந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு, மீதியை பர்ஸில் விட்டுவைத்து அதை என்னிடம் எறிந்துவிட்டு, என்னைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளினார். வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிட்டார்.

கும்மிருட்டு. குளிர். பயம். தூக்கம். பசி. அழுகையாக வந்தது. என் பெட்டிகளை இழுத்துப் பிடித்து என்னைச் சுற்றி வைத்துக்கொண்டு அங்கேயே தெருவில் உட்கார்ந்துவிட்டேன். எத்தனை நேரம் அப்படியே அந்தக் குளிரில் விறைத்தபடி உட்கார்ந்திருந்தேன் என்று தெரியாது.

சற்று நேரம் கழித்து சற்றுத் தள்ளி நிறைய வண்டிகள் செல்லும் சத்தம் கேட்டது. ராணுவ டாங்கிகள். போர்க்களம் நோக்கிச் செல்கின்றன போலும். அங்கே ஓடிச் சென்று உதவி கேட்கலாமா என்று நினைத்தேன். ஆனால் பயமாக இருந்தது. அவர்கள் ஏதாவது சங்கேத வார்த்தையைக் கேட்க, எனக்குத் தெரியாமல்போக, சுட்டுக் கொன்றுவிட்டார்கள் என்றால்?

இன்னும் சிறிதுநேரம் கழித்து ஒரு கார் சற்றுத் தொலைவில் வந்து நின்றது. அதன் விளக்கொளியில் அருகே ஒரு மசூதி இருப்பது தென்பட்டது. அந்த காரிலிருந்து இறங்கியவர் மசூதியை நோக்கிச் சென்றார். காலையில் மசூதியில் தொழுகை செய்ய வந்திருக்கிறார். அப்படியென்றால் மணி 5.00 ஆகிவிட்டதா?

மெதுவாக என் பெட்டிகளை ஒவ்வொன்றாக இழுத்துக்கொண்டு காருக்கு அருகில் சென்றேன். கார்க்காரர் திரும்பிவரும்போது அவரிடம் உதவி கேட்கலாம் என்று எண்ணம். அவர் திரும்பி வந்ததும் என்னைப் பார்த்து அதிர்ந்துபோனார். நான் பேயோ பிசாசோ அல்லது திருடனோ என்று நினைத்து ஓடத்தொடங்கினார். குளிரில் வெடவெடத்த என் உருவம் அவருக்கு பயத்தைக் கொடுத்திருக்கவேண்டும். ஓடாதீங்க என்று கெஞ்சினேன். மெதுவாக என்னை நோக்கி வந்தவர், என்னைத் தொட்டுப் பார்த்து நான் மனிதன்தான் என்பதை உறுதி செய்துகொண்டார்.

சைகை பாஷையில் எனக்கு ஓட்டலில் ஓர் அறைவேண்டும் என்று விளக்கினேன். வண்டியில் என்னை ஏற்றிக்கொண்டார். தன்மேல் இருந்த கோட்டை எனக்கு அணிவித்தார். மீண்டும் பாக்தாத். மீண்டும் அறை இல்லை என்ற பாட்டு. இனி என்ன செய்வது என்று என்னிடம் கேட்டார். மோசுல் போகவேண்டும் என்றேன். உனக்கென்ன பைத்தியமா என்றார். மோசுல் 300 கிலோமீட்டர். ஆனால் அவருக்கு பதில் சொல்லும் அளவுக்கு எனக்கு நினைவில்லை. அப்படியே மயங்கியிருந்தேன்.

அடுத்து நான் கண் விழித்தபோது சுட்டெரிக்கும் வெயில், நடு மதியம். வண்டி எங்கோ நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிருந்தது. வண்டிக்காரர் என்னைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தார். மோசுல், மோசுல் என்றார். அவர் மனத்தில் ஏதோ ஒன்று தோன்றியிருக்கவேண்டும். என்னை மோசுல் வரை கொண்டுவிட்டுவிடுவது என்று முடிவெடுத்திருக்கிறார். கண்களாலேயே நன்றி சொல்லிவிட்டு மீண்டும் உறங்கிப்போனேன்.

மோசுல் சென்றடைந்ததும், நேராக பல்கலைக்கழகம் போனோம். நல்லவேளையாக அங்கே நூலகருக்கு என்னை அடையாளம் தெரிந்திருந்தது. என்னய்யா, போர்க்களத்திலிருந்து வருகிறீரா என்றார். போர்க்களமா, அதெல்லாம் வெறும் ஜுஜுபி, அதைவிட மோசமான அனுபவத்திலிருந்து வருகிறேன் என்றேன். எனக்காக ஓர் அறையை வைத்திருந்தார்கள். கார்க்காரருக்கு நன்றி சொல்லி, கொஞ்சம் பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு அறைக்குச் செல்லத் திரும்பினேன்.

நில்லுங்க, உங்க அலுவலகத்திலிருந்து 300 பெட்டிங்க வந்திருக்கு; அதுல உள்ள புஸ்தகங்களை எல்லாம் எடுத்து அடுக்கி வெச்சுட்டுப் போங்க என்றார் நூலகர். அய்யா, நொந்து போயிருக்கேன், நாளைக்கு செய்யக்கூடாதா இதை என்றேன். ஆனால் நூலகர் கேட்கவில்லை. நாளைக்கு புத்தகக் கண்காட்சி ஆரம்பம்; கல்வி அமைச்சர் வருகிறார்; இதைச் செய்தே ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டார். ஓரிருவர் உதவி செய்ய வந்தனர். ஒரு பெட்டி விடாமல் பிரித்து, புத்தகங்களை அடுக்கிவிட்டு, அறைக்குப் போய் விழுந்தவன்தான். அடுத்து மறுநாள்தான் எழுந்தேன்.

உயர்கல்விப் புத்தகக் கண்காட்சியில் உலகில் பல பகுதிகளிலிருந்தும் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் வந்திருந்தனர். இரண்டு நாள்கள் ஆயின. மோசுல் அருகிலும் இரான் குண்டு வீசியிருந்தது. வெள்ளைக்கார பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் நடுங்கிப்போய்விட்டனர். மூன்றாம் நாள் காலையுணவுக்கு நான் வந்தபோது அவர்கள் யாருமே அங்கு இல்லை.

எனக்குப் பயமில்லையா என்று கேட்டார் நூலகர். முதல் நாள் எனக்கு நடந்த சம்பவத்துக்குப்பிறகு, போர்க்களத்துக்குச் செல்வதற்குக்கூட எனக்குப் பயமில்லை என்றேன். அன்றுதான் இறுதி நாள். கல்வி அமைச்சர் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். நான் ஒருவன் மட்டும்தான் அந்நியன். பேசும்போது என்னைச் சுட்டிக்காட்டி என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கு நடுக்கமாக இருந்தது. திடீரென நூலகர் என்னை விலாவில் குத்தி, மேடைக்குப் போ, மேடைக்குப் போ என்றார். எதற்கு என்றேன். அமைச்சர் கூப்பிடுறார் என்றார். நடுங்கிக்கொண்டே மேடை ஏறினேன். கல்வி அமைச்சர் என்னைக் கட்டித் தழுவினார். ஒரு பெரிய தாம்பாளத்தில் எதையோ வைத்து நீட்டினார். வாங்கிக்கொண்டேன்.

பிறகுதான் புரிந்தது. குண்டுகள் அருகில் வீசப்பட்ட நிலையிலும் தைரியமாக நான் மட்டும் அங்கே இருந்தது அவர்களுக்கு மிகவும் நெகிழ்ச்சியைத் தந்துள்ளது. எனவே பல்வேறு நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்ட ஆர்டர்களை எல்லாம் கேன்சல் செய்துவிட்டு அனைத்தையும் என் கம்பெனிக்கே கொடுத்துவிட்டார்கள்.

இப்படித்தான் உயிரைப் பணயம் வைத்து இராக்கில் நான் பெரிய ஆர்டரைப் பிடித்தேன்.

***

புத்தக ஏற்றுமதி பற்றிய ஒரு நாள் கருத்தரங்கு தில்லியில் நடைபெற்றது. அதில் பேசிய சுகுமார் தாஸ், தன் சொந்த அனுபவங்கள் சிலவற்றைச் சொன்னார். அவற்றை இங்கு வரிசையாகப் பதிவுகளாக இடப்போகிறேன். சுகுமார் தாஸ் UBS Publishers and Distributors என்ற இந்தியாவின் மிகப்பெரிய புத்தக விநியோக நிறுவனத்தில் வேலை செய்தவர். மூத்த புத்தக விற்பனையாளர்.

Tuesday, July 06, 2010

எகிப்திய எழுத்துகள் - பேரா. சுவாமிநாதன்

எகிப்திய மம்மிகள் மட்டுமல்ல எகிப்திய ஹீரோகிளஃபிக் எழுத்துமுறையும்கூட சுவாரஸ்யமானதுதான்.

சீன எழுத்துருவுக்கும் எகிப்திய எழுத்துருவுக்கும் இடையில் சில ஒற்றுமைகளைக் காணமுடியும். இரண்டும் சித்திரங்களுக்கு முக்கியத்துவத்துவம் அளிக்கின்றன. பிரமிட்களில் இதனைக் காணமுடியும்.

இன்னொன்று தெரியுமா? பொதுவாக, அனைத்து எழுத்துகளும் தொடர்ச்சியான மாற்றங்களைச் சந்தித்து வந்துள்ளன. ஆனால், எகிப்திய எழுத்துகள் கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளாக எந்தவித மாற்றமும் இன்றி பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன.

எகிப்திய எழுத்துகள் எப்படித் தோன்றின? எப்படி வளர்ந்தன?

எகிப்திய எழுத்துகள் குறித்து மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பேராசிரியர் சுவாமிநாதன் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்.

எழுத்துகளின் கதை குறித்த தொடர் உரையாடலில் இது மூன்றாவது பாகம்.

தேதி : வியாழன், 8 ஜூலை 2010
இடம் : பார்வதி ஹால்
நேரம் : மாலை 6.30

Sunday, July 04, 2010

கருடன்

சில நாள்களுக்கு முன் என் நண்பர் அஷோக் திருக்குறுங்குடி கோயில் சுவரில் இருந்த ஒரு சிற்பத்தின் படத்தைக் காண்பித்தார்.


ஒரு கழுகு - கருடனாகத்தான் இருக்கவேண்டும். ஒரு கையால் யானையின் தும்பிக்கையைப் பிடித்துள்ளது. மற்றொரு கையில் ஆமையின் கழுத்து. அலகில் ஒரு மரக்கிளை. அந்தக் கிளையிலிருந்து நீளும் சிறு சிறு கிளைகளில் சில முனிவர்கள்தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் காட்சி புராணத்தில் எங்கு வருகிறது என்று எனக்குத் தெரியவில்லை.

கருடனின் கதையைச் சிறு வயதிலேயே கேட்டிருக்கிறேன். படித்திருக்கிறேன்.

கத்ரு, வினதை என்ற தட்சனின் இரண்டு பெண்களையும் கஷ்யப முனிவர் மணந்துகொள்கிறார். கத்ரு, தனக்கு சக்தி மிக்க ஆயிரம் பாம்புகள் குழந்தைகளாகப் பிறக்கவேண்டும் என்று வேண்டுகிறாள். வினதையோ, அந்த ஆயிரம் பாம்புகளையும் விடச் சக்தி அதிகம் கொண்ட இரு குழந்தைகள் வேண்டும் என்று கேட்கிறாள். இருவரும் கேட்ட வரத்தைப் பெறுகின்றனர்.

கத்ரு ஆயிரம் முட்டைகளை இடுகிறாள்; வினதை இரண்டு முட்டைகளை. ஐநூறு ஆண்டுகள் கழித்து கத்ருவின் முட்டைகள் பொரிந்து ஆயிரம் பாம்புக் குட்டிகள் வெளியே வருகின்றன. வினதையின் முட்டைகளோ அப்படியே இருக்கின்றன. பதற்றத்தில் ஒரு முட்டையை உடைத்துப் பார்க்கிறாள் வினதை. அதில் பாதி வளர்ந்த குழந்தை ஒன்று உள்ளது. கோபம் கொண்ட அந்தக் குழந்தை வினதை அடிமை ஆவாள் என்று சபித்துவிடுகிறது. மற்றொரு முட்டையையாவது ஒழுங்காகப் பாதுகாத்தால் அதிலிருந்து பிறக்கும் தம்பி, தாயை அடிமைத்தளையிலிருந்து மீட்டெடுப்பான் என்று சொன்ன அருணன் என்ற பெயருடைய அந்தக் குழந்தை, சூரியனின் தேரோட்டியாகச் சென்றுவிடுகிறது.

ஒரு நாள், இந்திரனின் வெள்ளைக் குதிரை உச்சைசிரவஸ் வானில் செல்லும்போது கத்ருவும் வினதையும் அதனைப் பார்க்கிறார்கள். அந்தக் குதிரையின் வாலின் நிறம் என்ன என்று இருவருக்குள்ளும் வாக்குவாதம். போட்டியில் தோற்பவர் ஜெயிப்பவரின் அடிமையாகவேண்டும் என்று முடிவாகிறது. வாலின் நிறம் வெள்ளை என்கிறாள் வினதை; கருப்பு என்கிறாள் கத்ரு.

கத்ரு தன் பாம்பு மகன்களை ஏவி, குதிரையின் வாலுடன் பிணைந்து கரிய நிறமாக ஆக்குமாறு செய்கிறாள். போட்டியில் தோற்ற வினதை, கத்ருவின் அடிமை ஆகிறாள்.

மேலும் ஐநூறு ஆண்டுகள் கழித்துப் பிறக்கும் வினதையின் இரண்டாம் மகன் கருடன், அதிபயங்கர சக்தி கொண்டவனாக இருக்கிறான். தன் தாயின் அடிமை நிலையை எண்ணி வருந்தும் அவன், என்ன செய்தால் அடிமைத்தளையிலிருந்து விடுபடலாம் என்று பாம்புகளிடம் கேட்கிறான். தேவர்களிடம் இருக்கும் சாவை நெருங்கவிடாத அமிர்த கலசத்தை எடுத்துவந்து தங்களிடம் கொடுத்தால், அடிமை நிலையிலிருந்து விடுதலை தருவதாக பாம்புகள் சொல்கின்றன.

அதை ஏற்று, தேவர்களுடன் போரிட்டு, அமிர்த கலசத்தைக் கொண்டுவந்து தர்ப்பைப் புல் மீது வைத்துவிட்டு, தன் தாயின் விடுதலையைப் பெற்றுத்தருகிறான் கருடன். பாம்புகள் அமிர்தத்தைப் புசிக்க வருமுன், இந்திரன் அங்கு வந்து அமிர்த கலசத்தை எடுத்துச் சென்றுவிடுகிறான். தர்ப்பைப் புல் பட்டு பாம்புகளின் நாக்குகள் பிளந்துவிடுகின்றன; எனவேதான் அவற்றுக்கு இரட்டை நாக்கு.

*

அமர சித்திரக் கதைகள் நிறுவனத்துடன் கிழக்கு பதிப்பகம் இணைந்து சிறுவர்களுக்கான பல கதைப் புத்தகங்களைத் தமிழில் கொண்டுவருகிறது. அதில் ‘கருடன்’ கதையின் தமிழாக்கத்தை நேற்று பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அதில் ஆமை, யானை, கருடன் கதையைப் படித்தேன். பிறகு தேடிப் பார்த்ததில், மகாபாரதத்தில் இந்தப் பகுதி தெளிவாக வருவதைக் கண்டுபிடித்தேன்.

அமிர்த கலசத்தைத் தேடிப்போகும் கருடன் தன் தந்தை கஷ்யபரைச் சந்திக்கிறான். தனக்குப் பணிகள் நிறைய இருப்பதால், சத்தான உணவு வேண்டும் என்று தந்தையிடம் கேட்கிறான். கஷ்யபர் அருகில் உள்ள ஏரியைக் காண்பித்து, அங்கு ஒரு யானையும் ஆமையும் ஒன்றோடு ஒன்று சண்டை போடுவதாகவும், அந்த இரண்டையும் பிடித்துத் தின்றுகொள்ளலாம் என்று காண்பிக்கிறார்.

யார் இந்த ஆமையும் யானையும்? விபாவசு, சுப்ரீதிகா என்று இருவர் இருந்தனர். இளையவன் சுப்ரீதிகா தமையன் விபாவசுவிடம் சொத்துகளைப் பிரித்துத் தருமாறு சண்டை போட்டுக்கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் சொத்துப் பிரிவினை நடந்தாலும், அதன் பிறகும் இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர். (அம்பானி சகோதரர்கள் போல!) விபாவசு தன் தம்பியை யானையாகப் பிறக்குமாறு சபிக்கிறான். சுப்ரீதிகா, தன் அண்ணனை ஆமையாகப் பிறக்குமாறு சபிக்கிறான்.

யானையாகவும் ஆமையாகவும் ஆனபின்னும் இருவரும் கஷ்யபர் காட்டிய ஏரியில் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த இருவரையும் தின்றபின் அமிர்த கலசத்தை எடுக்கச் செல் என்று சொல்கிறார் கஷ்யபர்.

கருடன் பாய்ந்துசென்று ஒரு கையால் யானையின் தும்பிக்கையையும் மற்றொரு கையான் ஆமையின் கழுத்தையும் பிடிக்கிறான். பிறகு சாவகாசமாக இரண்டையும் தின்ன ஓர் இடத்தைத் தேடுகிறான். இப்படியே பரந்து பறந்து சென்று கடைசியில் ஒரு ஆலமரத்தில் ஏறி அமர்கிறான் கருடன்.

ஆனால் கருடனின் கனம் தாங்காமல் மரக்கிளை முறிந்து கீழே விழப்போனது. அந்த மரக்கிளைகளில் வால்கில்ய ரிஷிகள் தலைகீழாகத் தொங்கி தவம் செய்துவந்தனர். வால்கில்யர்கள் பிக்மி வகை ரிஷிகள். மிகச் சிறிய பரிமாணம் உடையவர்கள். சொல்லப்போனால் கருடன் பிறப்புகே வால்கில்யர்கள்தான் காரணம். அந்த ரிஷிகள் கீழே விழுந்துவிடக்கூடாதே என்று கருடன் பாய்ந்து அந்தக் கிளையை தன் அலகால் கவ்விக்கொள்கிறான்.

அந்தக் காட்சியைத்தான் சிற்பிகள் திருக்குறுங்குடிக் கோயில் சுவரில் வடித்துள்ளனர்.


பிறகு என்ன ஆகிறது? அலகில் கிளையுடனும், கைகளில் யானை, ஆமையுடனும் பறந்த கருடன் கந்தமாதன மலை உச்சியில் இறங்குகிறான். அங்கே ரிஷிகள் கீழே இறங்கிக்கொள்ள, மரக்கிளையை எறிந்துவிட்டு, யானையையும் ஆமையையும் உண்கிறான் கருடன்.

பிறகு தேவலோகம் சென்று தேவர்களையும் இந்திரனையும் தோற்கடித்துவிட்டு அமிர்தகலசத்தைக் கைப்பற்றி எடுத்துவருகிறான்.

அந்தக் கட்டத்தில்தான் விஷ்ணு, கருடனைப் பார்த்து வியந்து அவனைத் தன் வாகனமாக ஆக்கிக்கொள்கிறார்.

[படங்கள்: (c) அஷோக் கிருஷ்ணசாமி]

Thursday, July 01, 2010

தமிழ் இணைய மாநாடும் தமிழ் வலைப்பதிவர்களும்

தமிழ் இணைய மாநாட்டில் நடந்த பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் மற்றுமொரு குழப்பம், தமிழ் வலைப்பதிவர் சிலர் தாங்கள் அவமதிக்கப்பட்டதாக நினைத்துப் பொங்கி எழுந்தது.

என் பார்வையில் அந்த வரலாற்றைப் பதிந்துவைக்கிறேன்.

மாநாட்டுக்கான கட்டுரைகளை ஏற்பது, மறுப்பது; அமர்வுகளை உருவாக்குவது; அமர்வுகளுக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது; யாரை எந்த அமர்வில் பேசவைப்பது, எந்த வரிசையில் பேசவைப்பது என்று முடிவு செய்வது; மாநாட்டுக் கட்டுரைகள் அடங்கிய மலரில் எந்தக் கட்டுரைகள் எந்த வரிசையில் வரவேண்டும் என்று தீர்மானிப்பது - அனைத்தும் பேராசிரியர் வாசு அரங்கநாதனின் தலைமையின்கீழ் இருந்த ஒரு குழுவின் பொறுப்பு. வாசு, அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர். (நான் அந்தக் குழுவில் இல்லை.)

கட்டுரைகள் தீர்மானிக்கப்பட்டு அமர்வுகளும் முடிவாயின. அந்த நேரத்தில் நான்கு அரங்குகளில் ஒரே நேரத்தில் நான்கு அமர்வுகள் நடைபெறும் என்று முடிவாகியிருக்கிறது. ஆனால் ஐந்தாவது ஓர் அரங்கு கிடைக்கும் என்றும் அந்த அரங்கில்தான் முகப்பரங்கச் சொற்பொழிவுகள் நடக்கும் என்றும் கடைசியில் முடிவாகியுள்ளது. முகப்பரங்கத்தில் பேச சில முக்கியஸ்தர்கள் பிரத்யேகமாக அழைக்கப்பட்டிருந்தனர். முகப்பரங்கச் சொற்பொழிவுக்குப் பின் அந்த அரங்கத்தின் என்ன செய்வது என்று யாரும் ஆரம்பத்தில் யோசிக்கவில்லை.

பின்னர் அந்த யோசனை திடீரென வர, உத்தமம் உறுப்பினர்கள் சிலர் இதுகுறித்து விவாதித்துள்ளனர். (அதில் நான் இல்லை.) முடிவான தீர்மானங்கள் ஏதும் இல்லாத நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ என்பவரிடமும் உத்தமம் நிர்வாகி ஒருவர் இதுபற்றிப் பேசியிருக்கிறார். அவர்களுக்கு இடையில் என்ன பேச்சு நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஃபெர்னாண்டோ, முகப்பரங்கத்தில் யாரைக் கொண்டு என்ன செய்வது என்பதுபற்றி விரிவாகத் திட்டமிட்டு, வலைப்பதிவர்கள் பலரைக் கலந்தாலோசித்து, ஒரு முழு நிகழ்வையே முடிவு செய்துள்ளார்.

இறுதிவரை, இந்த முடிவுபற்றி உத்தமம் அமைப்புக்குத் தகவல் ஏதும் செல்லவில்லை.

எனவே இந்த வலைப்பதிவர்களுக்கான அழைப்பிதழ், அடையாள அட்டை, தங்குமிடம் ஆகியவை எதுவும் முடிவாகவில்லை. (ஆனால் அடையாள அட்டைதான் பெரும் குழப்பம் என்றாகிவிட்டது என்று ஏற்கெனவே எழுதியிருந்தேன்.)

மாநாடு தொடங்கும்போது வாசுவுக்கு உதவியாளராக நான் போய்ச் சேர்ந்தேன். அவர் உருவாக்கிய மாநாட்டு நிகழ்ச்சி நிரலை வைத்துக்கொண்டு, அதில் தேவைப்படும் மாற்றங்களை அவரது மேற்பார்வையின்கீழ் செய்துதருவது; ஒவ்வொரு அரங்கத்தின் முன்னும் உள்ள கணினித் திரையில் அடுத்தடுத்து என்ன நிகழ்வுகள் நடக்கும் என்ற தகவலை அளிப்பது ஆகியவை என் வேலைகள்.

24 ஜூன் அன்று தமிழ் இணைய மாநாடு தொடங்கி மாலை நேரத்தில் சஞ்சய் காந்தி, ஓசை செல்லா இருவரும் என்னிடம் வந்தனர். ‘உத்தமம் அமைப்பு தமிழ் வலைப்பதிவாளர்களை அவமதிக்கிறது’ என்று கோபத்துடன் சொன்ன ஓசை செல்லா, இதுபற்றி பத்திரிகையாளர்களிடம் பேசப்போவதாகச் சொன்னார். எனக்குத் தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. எதுவாக இருந்தாலும் வெங்கட்டிடமோ அல்லது வாசுவிடமோ பேசுமாறு கேட்டுக்கொண்டது ஞாபகம் இருக்கிறது. வெங்கட்தான் உத்தமத்தின் தலைவர்.

வாசு, வெங்கட் இருவருக்கும் இது பற்றி ஒன்றும் தெரியவில்லை. இதற்கிடையே மதுமிதா, திலகபாமா இருவரும் என்னிடம் பேசினர். அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக விவரங்களைத் திரட்டினேன். ஓரளவுக்குத் தகவல் திரட்டியபின் பிரச்னை என்ன என்று கொஞ்சமாகப் புரிந்தது. இதற்கிடையில் வலைப்பதிவர்கள், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரிடம் பேசியுள்ளனர். அவரும் வெங்கட்டுக்குத் தகவல் தெரிவித்தார்.

பின் வாசுவின் அனுமதியுடன் நிகழ்ச்சி நிரலில் சில மாற்றங்களைச் செய்து, முகப்பரங்கில் இரு நாள்களில் சுமார் 5 மணி நேரம் இடம் கிடைக்குமாறு செய்தேன். அதற்குள்ளாக தினமலர் பத்திரிகைக்குத் தகவல் அளிக்கப்பட்டு அடுத்த நாள் அவர்கள் மகிழ்ச்சியுடன், இணைய மாநாட்டில் குழப்பம் என்று செய்தி எழுதிவிட்டனர்.

முதல் நாள் மாலையிலேயே சஞ்சய் காந்திக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, அடுத்த இரு நாள்களும் மாலை வேளையில் வலைப்பதிவர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. கலந்துகொண்ட வலைப்பதிவர்கள் அனைவருக்கும் மாநாட்டு மலரும் தரப்பட்டது.

இந்தப் பிரச்னையை வலைப்பதிவர்கள் அமைதியுடன் எதிர்கொண்டிருக்கலாம். உணர்ச்சிவசப்படுவதால் பிரச்னைகள் தீரப்போவதில்லை. எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்துபவர்கள், யாரையும் அவமதிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் நடந்துகொள்ளமாட்டார்கள்.

இங்கு முக்கியமான பாடம், உத்தமம் நிர்வாகக்குழுவினர் அடுத்த ஆண்டுகளில் என்ன செய்யக்கூடாது, எதைச் சரியாகச் செய்யவேண்டும் என்பதை institutionalise செய்யவேண்டும் என்பதே. நிர்வாகக் குழுவிலோ, மாநாட்டுக் குழுவிலோ மாற்றங்கள் இருந்தாலும் ஒரு அமைப்புக்கு என்று தனியான மெமரி தேவை.

தமிழ் இணைய மாநாடு - அனுமதிச் சீட்டுப் பிரச்னை

தமிழ் இணைய மாநாடு செம்மொழி மாநாட்டோடு இணைந்து நடத்தப்பட்டதில் ஏற்பட்ட மிகப்பெரிய பிரச்னையே லாஜிஸ்டிக்ஸ்தான். உத்தமம் அமைப்பு (INFITT) இந்த மாநாட்டை மேலும் சிறப்பாக நடத்தியிருக்கலாம் என்று சிலர் கருத்து சொன்னார்கள்.

அது எப்போதுமே உண்மைதான். இந்த மாநாட்டைப் பொருத்தவரை எனக்குப் பல குறைபாடுகள் தெரிந்தன. மாநாட்டுக் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்தது முதற்கொண்டு அரங்கில் மாநாட்டின் வெவ்வேறு அமர்வுகளை நடத்தியதிலிருந்து வந்திருந்தோருக்கு கட்டுரைத் தொகுப்பைக் கையில் முன்னமேயே கொடுப்பதிலிருந்து பலவற்றையும் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம்.

ஏன் செய்யவில்லை?

முதலாவது, இதுபோன்ற மாநாடுகளை நடத்துவதில் அனுபவம் இல்லாமை. இரண்டாவது முதல் நாள் ஏற்பட்ட அனுமதிச் சீட்டு, தங்குமிடம் தொடர்பான குழப்பங்கள், அவற்றைச் சரி செய்வதிலேயே முக்கிய நிர்வாகத்தினர் நேரம் செலவிட்டமை. மூன்றாவது, செம்மொழி மாநாடு தொடர்பாக கட்சி முதல் ஆட்சிவரை செய்யப்பட்ட கடுமையான பிரசாரத்தால் கோவையில் வந்து இறங்கிய குடியரசுத் தலைவர், அமைச்சர் பெருமக்கள் முதல் சாதாரணத் தொண்டர் வரையிலான வரலாறு காணாத கூட்டம்.

மிகப்பெரிய குழப்பம் நடைபெற்றது அனுமதிச் சீட்டில்தான். இதற்கு முந்தைய எந்த தமிழ் இணைய மாநாட்டிலும் அனுமதிச் சீட்டு என்பது பெயரளவுக்கு, ஒருவரை அடையாளம் காணமட்டுமே என்று இருந்தது. ஆனால் இந்த மாநாட்டில் யாரிடம் என்ன அடையாளச் சீட்டு உள்ளது என்பதைப் பொருத்தே நீங்கள் எந்த இடத்துக்குச் செல்லலாம் என்பதை காவலர்கள் முடிவுசெய்வார்கள். மொத்தம் ஏழெட்டு விஷயங்கள் நடைபெற்றன.
  1. பொதுமேடை ஒன்றில் பேச்சுகளும் புகழாரங்களும்
  2. 22 அரங்குகளில் செம்மொழி மாநாடு தொடர்பான அமர்வுகள்
  3. 5 அரங்குகள் தமிழ் இணைய மாநாடு தொடர்பான அமர்வுகள்
  4. தமிழ் இணையக் கண்காட்சி
  5. செம்மொழி கண்காட்சி
  6. மாநாட்டு அமர்வாளர்களுக்கு மட்டுமான இலவச சாப்பாட்டு இடம்
  7. கண்காட்சிகள், பொதுமேடைக்கு வரும் மக்களுக்கான காசு கொடுத்துச் சாப்பிடும் இடம்
  8. கொஞ்சம் தள்ளி எதிர்ப்பக்கம் புத்தகக் கண்காட்சி

முதலில் செய்யப்பட்ட ஏற்பாட்டின்படி, பொதுமக்கள் யாரும் 22+5 அரங்குகள் இருக்கும் இடத்துக்கு வரவே முடியாது. அப்படி அவர்கள் வராமல் இருந்திருந்தால், நடைபெற்ற அசிங்கங்களில் கொஞ்சம் குறைந்திருக்கும்; மாநாட்டுப் பங்கேற்பாளர்கள் மட்டுமே அசிங்கங்களில் ஈடுபட்டிருப்பர். ஆனால் அனுமதிச் சீட்டு குளறுபடி காரணமாக ஒரு கட்டத்தில் யார் வேண்டுமானாலும் அப்படி இப்படி நழுவி, அல்லது சில அதிகாரங்களைப் பயன்படுத்தி தாற்காலிக அனுமதிச் சீட்டைப் பயன்படுத்தி மாநாட்டு அமர்வுகள் நடக்கும் இடத்துக்குப் போகமுடியும் என்ற நிலை ஏற்பட்டது.

மறுபக்கம், ஆரம்பம் முதற்கொண்டே உத்தமம் சார்பில், இணைய மாநாட்டு அமர்வுகளில் யார் வரலாம் என்பது பற்றி அரசுடன் பேசினார்கள். (நான் அந்தக் குழுக்களில் இல்லை; நான் ஒரு சாதாரண தன்னார்வலர்தான் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.) ஆனால் அரசுத் தரப்பில் தெளிவாக ஒன்றைச் சொல்லிவிட்டார்கள். செம்மொழி மாநாட்டுக்கு வருகை தரும் 1,000 சொச்சம் பேர்கள் யாரும் தமிழ் இணைய மாநாட்டுக்கு வர விரும்பினால் அவர்களைத் தடுத்து நிறுத்தக்கூடாது. இந்த ஆணைக்குப் பிறகு தமிழ் இணைய மாநாட்டின் ஏற்பாட்டாளர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அங்கிருந்து இங்கு வந்து எனக்கும் ஒரு பை கொடு, பூ கொடு, பழம் கொடு என்று கேட்டால் என்னதான் செய்யமுடியும்?

தமிழ் இணைய மாநாட்டுக்கு என்று பதிவு செய்து வந்த 450 பேருடைய தேவைகளை மட்டும் கவனித்துக்கொள்வதுதான் உத்தமம் நிர்வாகிகளின் வேலை. ஆனால் அந்த வேலை மிகவும் கடினமாக ஆகிவிட்டது. இந்த அத்தனை பேருக்கும் அடையாள அட்டை தயாராகவே இல்லை. அடையாள அட்டை தயார் செய்வது கோவை கலெக்டர் கீழ் இயங்கும் ஒரு நிறுவனத்தின் வேலை. ஆனால் அவர்கள் அடையாள அட்டையைத் தயார் செய்யும்போதெல்லாம் பிற அதிகாரவர்க்கத்தினர் உள்ளே நுழைந்து தங்களுக்கு வேண்டிய அடையாள அட்டைகளை உருவாக்கி எடுத்துக்கொண்டு போனார்கள்.

கடைசியில் உத்தமம் தன்னார்வலர் தேவராஜன் என்பவர் இரவு முழுவதும் அந்த அலுவலகத்தில் வேலை செய்து தமிழ் இணைய மாநாட்டுக்கு வந்தவர்களுக்கான அடையாள அட்டையைத் தயார் செய்யவேண்டியதாயிற்று. கடைசிவரை ஒருசிலருக்கு அடையாள அட்டை கிடைக்கவில்லை. வேறு பலருக்கு இரண்டு, மூன்று அடையாள அட்டைகள் கிடைத்தன.

தமிழ் இணைய மாநாட்டுக்கு வந்த 450 பேருக்கும் இடம் ஒதுக்கியாயிற்று என்று கோவை கலெக்டர் தரப்பிலிருந்து தகவல் வந்திருந்தது. ஆனால் கலெக்டருக்கே தெரியாமல் கீழ்மட்ட ஜித்து விளையாட்டு அலுவலகர்கள் சுமார் 80 அறைகளைச் சுருட்டி அவற்றை வேறு ஆசாமிகளுக்கு ஒதுக்கிவிட்டனர். கடைசியில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தலையிட்டும்கூட அறைகள் கிடைக்கவில்லை. போனது போனதுதான். எனவே மாநாட்டுக்கு வந்திருந்தவர்களுக்கு எப்படியாவது அடையாள அட்டையையும் தங்குமிடத்தையும் ஏற்பாடு செய்யவேண்டியது நிர்வாகிகள் வேலையாகிப்போனது. அதேபோல தமிழ் இணைய மாநாட்டுக்குக் கொடுப்பதாகச் சொன்ன கார்களும் பஸ்களும் (மாநாட்டுக்கு வந்தவர்களை தங்குமிடத்திலிருந்து மாநாட்டுக்கு அழைத்துவந்து, திரும்ப அனுப்ப) வாக்குக் கொடுத்த அளவைவிடக் குறைவாகவே கிடைத்தன. அங்கும் நிர்வாகிகள் தடுமாற வேண்டியதாயிற்று.

இதனால் மாநாட்டில் கலந்துகொண்ட பலரும் உத்தமம் நிர்வாகிகளைக் குறை சொன்னார்கள். Unprofessional என்பது கடுமை குறைவான வார்த்தை. அங்கிருந்து நாலாபக்கமும் வார்த்தைகள் பறந்தன. உத்தமம் நிர்வாகிகள் லாயக்கற்றவர்கள் என்பதுதான் பலரது கருத்தாக இருந்தது. ஆனால் எவ்வளவு கடுமையான பணி அழுத்தத்தில் அவர்கள் வேலை செய்தனர் என்பது அருகிலிருந்து பார்த்த எனக்குத்தான் தெரியும்.

சென்னையில் நடந்த மாநாடு அவ்வளவு சூப்பராக இருந்தது என்றார் ஒரு அனானி. ஆமாம். அது தாஜ் கொரமாண்டல் ஓட்டலில் பொதுமக்கள் யாரும் நுழையாமல் (பொதுமக்களுக்குத் தெரியவே தெரியாது) இருந்ததால் அற்புதமாக நடந்தது.

செம்மொழி மாநாட்டுடன் இல்லாமல், அரசியல் கூட்டங்கள் நடந்த இடத்தில் இல்லாமல் தனிப்பட்ட இடத்தில் தமிழ் இணைய மாநாடு நடந்திருந்தால் இதுபோன்ற எந்த சிக்கலும் நடந்திருக்காது. ஆனால் பலருக்கும் இந்த மாநாடு பற்றி தெரிந்திருக்கவே தெரிந்திருக்காது.