Tuesday, January 29, 2013

எப்படியெல்லாம் பிறரைப் புண்படுத்தலாம்?

முணுக் என்றால் எல்லோருக்கும் கோபம் வந்துவிடுகிறது. காவல் நிலையம் சென்று கைது செய்யச் சொல்லிப் புகார் கொடுக்கிறார்கள். இல்லை என்றால் நேராக நீதிமன்றம் சென்று வழக்கே தொடுத்துவிடுகிறார்கள்.

இப்போது நான் இப்படிச் சொல்கிறேன் என்று வைத்துக்கொள்வோம்: ‘வக்கீல்கள் எல்லாம் தம் கட்சிக்காரர்களை ஏமாற்றிப் பணம் பிடுங்குகிறார்கள். வழக்கு முடிவதில் அவர்களுக்கு விருப்பம் இல்லை.’ இப்படி நான் சொல்வதை வைத்து என்மீது வழக்கு தொடுக்கமுடியுமா? சரி, இதைக் கொஞ்சம் நீட்டிப்போம்.

பள்ளிக்கூட ஆசிரியர்கள் எல்லோரும் தகுதியற்றவர்கள். அவர்கள் வகுப்புகளில் ஒழுங்காகப் பாடம் நடத்துவதில்லை.

மருத்துவர்கள் ரத்தம் உறிஞ்சிகள். உயிரைக் காப்பாற்றுகிறார்களோ இல்லையோ, பணத்தைப் பிடுங்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

காவல்துறையைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் லஞ்சம் வாங்குகிறார்கள். சட்டம் ஒழுங்கு குலைவதற்கு இவர்களே காரணம்.

அரசியல்வாதிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்கள் எல்லோருமே ஊழல் பெருச்சாளிகள். இந்த நாடு குட்டிச்சுவராகப் போனதற்குக் காரணமே அரசியல்வாதிகள்தான்.

மேலே உள்ள கேரிகேச்சர் எல்லாமே நாம் தினம் தினம் பேசுவதுதானே? ஒரு குறிப்பிட்ட தொழில்துறை பற்றிய ஒரு பிம்பம் நமக்குத் தோன்றுவதற்குக் காரணம் என்ன? நம்மில் ஒரு சிலரின் தனிப்பட்ட அனுபவங்கள். பின் அவை பதிவு செய்யப்பட்டு, கை, கால், மூக்கு, காது வைக்கப்பட்டு இதழ்களில் கதைகளாக, ஜோக்குகளாக, திரைப்படங்களில் பாத்திரங்களாக ஆகி, பெரும்பாலும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகிறது. அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாலேயே மீண்டும் மீண்டும் reinforce செய்யப்படுகிறது.

பிற அடையாளங்களுக்கு வருவோம். சாதி, மதம், பாலினம்.

பெண்கள் என்றால் பின்புத்திக்காரர்கள், பசப்பு வார்த்தை பேசிக் காதலித்து ஏமாற்றுபவர்கள், துய்ப்பதற்கான பண்டங்கள் என்பதாகவே திரைப்படங்கள் இன்றுவரை அவர்களைக் காட்டிவருகின்றன. இன்றும் நாயக மையப் படங்கள் அனைத்திலும் குத்தாட்டத்துக்கும் தொட்டுக்கொள்ளவும் மட்டும்தான் நாயகியின் தேவை உள்ளது.

திரைப்படங்களில் காமெடி பாத்திரங்களாக பார்ப்பனர்கள் பயன்பட்டு வந்துள்ளனர். பிற சாதிக்காரர்களைக் குறிப்பிட்டுக் கேலி செய்துவிட முடியாது தமிழகத்திலே. தலித்துகள் அடையாளப்படுத்தப்படுவார்கள். ஆனால் அவர்களின் சாதி குறிப்பிட்டுச் சொல்லப்படுவதில்லை. சேரிகள் எரிக்கப்படுவதாகக் காட்டப்பட்டாலும் அது அடையாளம் தெரியாத ‘ஏழை’ சேரியாக இருக்குமே தவிர, பள்ளர்கள், பறையர்கள் அல்லது அருந்ததியர்கள் என்று தெளிவாகப் புரிந்துகொள்ளும்படி இருக்காது. அதே சமயம் பார்ப்பனர்கள் உயர்ந்தோராகக் காட்டப்படுவதையும் காணலாம். தேவர் சாதியினரும் உயர்வாகக் காட்டப்படுகிறார்கள். மற்ற சாதிகளை எளிதில் ஒரு திரைப்படத்தில் என்னால் கண்டுகொள்ள முடிந்ததே இல்லை.

மதம் சார்ந்து பார்த்தால், இந்து மதத்தின் பல்வேறு கூறுகளைக் கேலி பேசுவது தமிழ்த் திரைப்படங்களில் எப்போதுமே நடந்துவந்துள்ளது. அவற்றில் பல வரவேற்கக்கூடியவையும்கூட. ஆரம்பகாலத்தில் வில்லன்கள் கிறிஸ்தவர்களாகச் சித்திரிக்கப்பட்டிருந்தனர். அதேபோல குறையாடை அணிந்து உடலைக் குலுக்கும் பெண்ணுக்கு ரீட்டா என்று பெயரும் கழுத்தில் சிலுவையும் இருக்கும். ஸ்மக்லிங் செய்பவர்கள் கட்டாயம் முஸ்லிம்களாக இருப்பர்.

இவை எல்லாமுமே சமுதாயத்தில் பரவலாக இருக்கும் ஸ்டீரியோடைப்கள்தாம். அதனாலேயே இவை உண்மை அல்ல. இந்த ஸ்டீரியோடைப்கள் அவ்வப்போது மாற்றம் அடைவதையும் பார்க்கிறோம். இந்த ஸ்டீரியோடைப் பாத்திரப் படைப்பு நம்மைத் தனிப்பட்ட முறையில் கேலி செய்வதுபோலத் தோன்றினால் நமக்குக் கோபம் வருவது இயல்பே. அதனால் நம் மனம் புண்படுவதும் ஓரளவுக்கு நியாயமே.

***

வார்த்தைகளால் பிறரைப் புண்படுத்தவே கூடாது என்று சட்டமெல்லாம் இயற்றமுடியுமா? நாத்திகம் என்பது அனைத்து மதங்களுக்கும் எதிரானது. நாத்திகக் கூற்றுகள் பொதுவாக அனைத்து மத நம்பிக்கையாளர்களையும் புண்படுத்தத்தான் செய்யும். தமிழகத்தில் குறிப்பாக திராவிட இயக்கம் என்பது முழுக்க முழுக்க இந்து மதத்துக்கு எதிரானது. அதேபோல திராவிட இயக்கத்தவர் மற்றும் பெரியார் பற்றிய தீவிர இந்துக்களின் கருத்துகள் அவ்வியக்கத்தோரைக் கடுமையாகப் புண்படுத்தும். இரு சாராரும் மற்றவரைப் புண்படுத்துவதில் சளைத்தவர்கள் அல்லர். எனக்குத் தெரிந்த பல இந்துக்கள் முஸ்லிம்களைப் பற்றி மிக மோசமான அபிப்ராயம் கொண்டவர்கள். எனக்கு நிறைய முஸ்லிம்களை நெருக்கமாகத் தெரியாது. எனவே இந்துக்களைப் பற்றி அவர்களிடம் எம்மாதிரியான கருத்துகள் உள்ளன என்பது அவ்வளவாகத் தெரியாது. இந்த இரு மதங்களும் பல தளங்களில் எதிரெதிர் கருத்துகளைக் கொண்டவை. எனவே இம்மதங்களைப் பின்பற்றுவோர் மாற்று மதத்தவர்மீது எதிர்மறை அபிப்ராயம் கொண்டிருப்பது இயற்கையே. இவற்றையெல்லாம் மீறித்தான் இம்மதங்களைச் சேர்ந்தோரிடையே நட்பும் சில நேரங்களில் காதலும் ஏற்படுகிறது.

திரைப்படம் ஒரு கதையைச் சொல்ல முற்படுகிறது. அந்தக் கதையில் நிஜப் பாத்திரங்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களுடைய பல்வேறு அடையாளங்கள் மொன்னையாக்கப்பட்டாலும் ஒருசில அடையாளங்கள் அவசியமாகின்றன. கூரிய வித்தியாசங்களை ஒட்டுமொத்தமாக மொன்னையாக ஆக்கிவிட முடியாது. மாறாக வித்தியாசத்தை அதிகப்படுத்திக் காட்ட சில அடையாளங்களைக் கூர்மையாக்க வேண்டியிருக்கும். உதாரணமாக, காதல் திருமணப் பிரச்னையை அதிகப்படுத்திக் காட்ட பார்ப்பன - கிறிஸ்தவ அல்லது பார்ப்பன - தலித் காதலர்கள் காட்டப்படுகிறார்கள். பார்த்தவுடனேயே வித்தியாசங்கள் பட்டென்று புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும் என்று ஒரு வெகுஜன இயக்குநர் யோசிக்கிறார்.

***

இதெல்லாம் இருக்கட்டும். முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாக ஒரு படத்தில் காட்டலாமா, கூடாதா? அப்படிக் காட்டுவதால் முஸ்லிம் சமுதாயத்தை அவமதிப்பதாக ஆகுமா? சமீபத்தில் வந்த துப்பாக்கி படத்தில் காஷ்மீரைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவன் (எனவே முஸ்லிம்...) மும்பையில் ஒரு பெரிய தீவிரவாத ஸ்லீப்பர் செல் நெட்வொர்க்கை வைத்திருக்கிறான். அந்த ஸ்லீப்பர் செல் நெட்வொர்க்கில் இருப்போர் அனைவரும் இயல்பாகவே, முஸ்லிம்கள். இதற்கு வராத எதிர்ப்பு ஏன் கமல் ஹாசன் உருவாக்கியுள்ள விஸ்வரூபம் படத்துக்கு வந்துள்ளது? ஏற்கெனவே படம் திரையிடப்பட்டு அதிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின்படி, ஆஃப்கனிஸ்தானில் உள்ள தாலிபன் தீவிரவாதிகளும் அவர்களுடைய செயல்களும்தான் கதையின் களம் என்று தெரியவருகிறது. இதில் தமிழ்நாட்டு முஸ்லிம்களுக்கு என்ன பெரிய பிரச்னை இருக்கமுடியும்? அப்படியே பிரச்னைகள் இருந்தாலும் இந்தப் படத்தால் தமிழகத்தில் உள்ள மத இணக்கச் சூழல் கெட்டுவிடும் என்று சொல்லும் அளவுக்கு என்ன இருக்கிறது?

இப்போது ஏட்டிக்குப் போட்டியாக ஆதிபகவன் படம் இந்துக்களை அவமதிக்கிறது என்பதாக ஆரம்பித்துள்ள விவகாரத்தால், இனி எல்லாப் படங்களுமே இதுபோன்ற சிக்கல்களுக்கு உள்ளாகும் நிலைக்குத் திரையுலகத்தைத் தள்ளியுள்ளது. வேலை வெட்டி இல்லாதவர்கள் நீதிமன்றம் போய் எந்தப் படத்தையும் தாமதப்படுத்தலாம்.

இதைத் தாண்டி, ஜெயலலிதா, ஜெயா டிவி கோணம் என்றெல்லாம் வேறு சொல்கிறார்கள். தமிழக அரசு வழக்கறிஞர் வாதங்களைப் படிக்கும்போது சின்னப்புள்ளைத்தனமாகத்தான் தெரிகிறது.

கமலுக்கு என் அனுதாபங்கள். ஒரு தொழிலதிபராக எண்ணற்ற கோடிகளை முடக்கித் தொழில் செய்யும்போது இதுபோன்ற சோதனைகளை எதிர்கொள்வது எளிதல்ல. இந்தப் படம் ஏதோ ஒருவிதத்தில் அவருக்கு லாபம் தரவேண்டும் என்ற எண்ணம் தலைதூக்குகிறது. பொதுவாக தமிழ் சினிமாப் படங்களை நான் இப்படி அணுகுவதில்லை. ஆனால் இப்போது நடக்கும் அரசியல்தனமான காய் நகர்த்தல்கள் அராஜகமாகத் தெரிகிறது.

என் எதிர்ப்பைப் பதிவு செய்ய இந்தப் படத்தை இரண்டு தடவையாவது தியேட்டர் சென்று பார்ப்பது என்று முடிவு செய்துள்ளேன்.

தனக்குப் பிடிக்காததை உடனடியாகத் தடை செய்யவேண்டும்; சம்பந்தப்பட்ட நபர்களைச் சிறையில் தள்ளவேண்டும் என்றெல்லாம் யோசிக்கும் முட்டாள்களே! நாளை உங்களுக்கே இதே நிலைமை ஏற்படலாம். முற்றுமுழுதான கருத்துச் சுதந்தரம்தான் நமக்கு ஒரே நம்பிக்கை. அது நமக்குப் பிடிக்காத கருத்தாக இருந்தாலும் சரி. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வோம். தடையால் அல்ல.

Wednesday, January 23, 2013

சென்னை புத்தகக் காட்சி - கிழக்கின் டாப் செல்லர் பட்டியல்

இன்றோடு சென்னை புத்தகக் காட்சி முடிவுறப் போகிறது. நேற்றைய நிலவரத்தின்படி, கிழக்கு பதிப்பகம் வெளியிட்டு எங்கள் ஸ்டால்களில் மட்டுமான விற்பனையைக் கணக்கில் எடுத்துக்கொண்டதில் அதிகம் விற்ற புத்தகங்கள் என்ற பட்டியல் இதோ. மேலே உள்ளது அதிகம் விற்றுள்ளது. கீழே செல்லச் செல்ல விற்பனை எண்ணிக்கை குறைவு. இந்தப் பட்டியலில் இன்றைக்குப் பிறகு சில மாறுதல்கள் இருக்கலாம். நாங்கள் வாங்கி விற்கும் பிறர் பதிப்புத்துள்ள புத்தகங்களை இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை.

இந்த ஆண்டில் இதுவரை நாங்கள் அதிகம் விற்றிருப்பது மதன் எழுதிய ‘கிமு கிபி’தான்.
 1. கிமு கிபி
 2. மோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி
 3. குமரிக் கண்டமா சுமேரியமா: தமிழரின் தோற்றமும் பரவலும்
 4. பிரபல கொலை வழக்குகள்
 5. மோட்டார் சைக்கிள் டைரி
 6. ராஜராஜ சோழன்
 7. ஸீரோ டிகிரி
 8. ஜாலியா தமிழ் இலக்கணம்
 9. திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும்
 10. ஸ்ரீரங்கத்து தேவதைகள்
 11. ஜப்பான்
 12. அக்பர்
 13. சே குவேரா: வேண்டும் விடுதலை
 14. ஹிட்லர்
 15. கோணல் பக்கங்கள் - பாகம் 1
 16. இட்லியாக இருங்கள்
 17. இரண்டாம் உலகப் போர்
 18. முதல் உலகப் போர்

Friday, January 18, 2013

புத்தகக் காட்சியில் இன்று

சுமார் இரண்டு மணி நேரம் சுற்றினேன். விகடன் ஸ்டாலில்தான் நான் பார்த்ததிலேயே நிறைய புதுப் புத்தகங்கள் வந்துள்ளன என்று நினைக்கிறேன். நிறையப் புத்தகங்கள் டெமி 1/4 சைஸில் அகலமாக இருந்தன: பாரதியார் கவிதைகள், உ.வே.சாவின் என் சரித்திரம், பல்வேறு (லேப்டாப்/ஃபேஸ்புக்/ஆன்லைனில்...) A-Z புத்தகங்கள் என்று.

நான் வாங்கியது ஓவியர் சில்பியின் ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ இரண்டு தொகுதிகள், கெட்டி அட்டை. ஒவ்வொன்றும் டெமி 1/4 சைஸில் சுமார் 500 பக்கங்கள். ஆனாலும் இரு தொகுதியும் சேர்த்து ரூ. 550/- மட்டுமே. அதன்பிறகு டிஸ்கவுண்ட்! எப்படிக் கட்டுப்படி ஆகிறது என்று ஒரு பதிப்பாளராக எனக்குப் புரியவில்லை. மிக அற்புதமான கலெக்‌ஷன். சில்பியின் ஓவியங்கள் பாதுகாத்து வைக்கப்பட வேண்டியவை. கற்சிலைகளை அப்படியே வெறும் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறார்.

விகடனில் நிறைய பியர்சன், சேஜ் புத்தகங்கள், மால்கம் கிளாட்வெல், குர்சரண் தாஸ், தேவதத்த பட்னாயக், ரேஷ்மி பன்சால் ஆகியோரின் புத்தகங்கள் என்று நிறைய மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன.

விகடன் இயர் புக் 2013, 125 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இன்னமும் புரட்டிப் பார்க்கவில்லை.

***

நண்பர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரனிடம் NHM Reader பற்றி விளக்கிச் சொன்னேன். விரைவில் ஆவி, பேய்க் கதைகளையெல்லாம் மின் புத்தகங்களாக நீங்கள் படிக்கலாம்!

***

சாத்தான்குளம் அப்துல் ஜப்பாரைப் பார்த்தேன். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். இரண்டு புத்தகங்களை மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறாராம். அவருடைய எழுத்தைப் பார்த்து யாராலும் டைப் அடிக்க முடியாது என்பதால் அப்படியே பேசி ரெகார்ட் செய்துவிடுகிறாராம். அதனை ஒரு நண்பரிடம் மின்னஞ்சல் செய்ய, அவர் டைப் செய்து அனுப்பிவிடுவாராம்.

ஒலி=>பிரதி மாற்றி மென்பொருள் தமிழுக்கு வந்தால் இதுபோன்ற பலருக்கு மிக மிக உதவிகரமாக இருக்கும்.

***

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறையில் பணியாற்றும் ஜெய்சக்திவேலைச் சந்தித்தேன். ஜெய்சக்திவேல் வானொலித் துறையில் அனுபவம் வாய்ந்தவர். இன்று ‘தி ஹிந்து’வில் ஒரு சீனப் பெண்மணி தமிழில் புத்தகம் எழுதியிருப்பது பற்றி வந்த செய்தியைக் குறிப்பிட்டார். அந்தப் பெண் சீன வானொலியின் தமிழ்ச் சேவையில் பணி செய்பவர். அந்தப் புத்தகம் கௌதம் பதிப்பகம் என்ற நிறுவனத்தின் வெளியீடாக வந்துள்ளது. புரட்டிப் பார்த்தேன். பிழைகள் ஏதும் தென்படவில்லை. இவரைப் போன்றவர்களை தமிழகப் பத்திரிகைகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

***

என்.சி.பி.எச்சில் சில சுவாரசியமான புத்தகங்கள் கண்ணில் தென்பட்டன. மற்றுமொரு நாள் நேரம் செலவழித்துச் சுற்றவேண்டும். ‘மார்க்ஸியப் பார்வையில் வைணவம்’ என்ற புத்தகத்தைப் பார்த்தேன். புரட்டிப் பார்த்ததில் அவ்வளவாகக் கவரவில்லை. எங்கு பார்த்தாலும் செல்வராஜின் ‘தோல்’ புத்தகம்தான் கண்ணில் பட்டது.

***

நடுவில் சன் டிவியிலிருந்து குட்டியாக ஒரு ‘பைட்’ கேட்டார்கள். தொண்டை கரகரவென்று குரலே எழும்பாமல் கட்டிக்கொண்டிருந்தது. மெதுவாகப் பேசி முடித்தேன்.

***

உயிர்மை மனுஷ்யபுத்திரனுடன் மின் புத்தகங்கள், அச்சுப் புத்தகங்கள் பற்றி நிறைய உரையாடினேன். புதிய தலைமுறை ஒன்று முழுவதுமாகவே மின்னணுச் சாதனங்களுடன் தம் வாழ்க்கையைக் கழிக்கப்போகும் நேரத்தில் தமிழ்ப் பதிப்பாளர்கள் மின் புத்தகத்தைக் கட்டாயம் கையில் எடுத்தாகவேண்டும் என்றார். அச்சுப் புத்தகங்களுக்கான சந்தை என்ற ஒன்று தொடர்ந்து இருக்கும் என்றார். மின் புத்தகங்கள் மீது அவர் பெரும் நம்பிக்கையைக் காட்டினார். மின் புத்தகங்களை ஒரு பெரும் இணைய வாசகர் கூட்டம் படிக்கும் என்றே அவரைப் போல நானும் நம்புகிறேன்.

இரு தினங்களுக்குமுன் தமிழினி வசந்தகுமார், இந்த மின் புத்தகப் படிப்பான்கள் வந்துவிட்டால் அச்சுப் புத்தகங்களின் கதி என்னவாகும் என்பதாகக் கொஞ்சம் விசனப்பட்டார். அவரும் ராஜ சுந்தர்ராஜனும் அருகருகே உட்கார்ந்திருக்க, மின் புத்தகம் எப்படி வேலை செய்யும் என்று செயல்விளக்கம் செய்து காட்டினேன். பதிப்பாளர்களின் தேவையே இல்லாது போய்விடுமோ என்று கேட்டார் வசந்தகுமார்.

நான் அப்படி நினைக்கவில்லை. ஒரு நல்ல பதிப்பாளர்/எடிட்டர் என்பவர் வெறும் ஒரு ஃபைனான்சியர் அல்லர். அவர் சில தேர்வுகளைச் செய்கிறார். புத்தக உருவாக்கத்தில் எழுத்தாளருடன் சேர்ந்து பங்களிக்கிறார். பிரதியைச் செப்பனிடுகிறார். அப்படி ஏதும் நடைபெறவில்லை என்னும் பட்சத்தில்தான், எழுத்தாளர் தானே நேரடியாக வாசகரைச் சென்றடைய நினைக்கலாம். மிகச் சில எழுத்தாளர்களால் மட்டுமே அது முடியும் என்று நான் நினைக்கிறேன்.

சத்யா தொடர்ந்து பதிப்பாளர்களைச் சந்தித்து, NHM Reader பற்றி விளக்கிக்கொண்டிருக்கிறார். நானும் பிரசன்னாவும் பதிப்பாளர்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். என் கருத்தில், 2013-ல் தமிழ் மின் புத்தகங்கள் மிகப் பிரபலமாக ஆகப் போகின்றன. பல்வேறு நிறுவனங்கள் இந்தக் களத்தில் குதிக்கப்போகிறார்கள். இதனால் எழுத்தாளர்களும் வாசகர்களும் பலன் அடைவார்கள் என்றே நம்புகிறேன்.

குமரிக்கண்டமா, சுமேரியமா: தமிழரின் தோற்றமும் பரவலும்

இந்தியா என்பது ஒற்றை தேசமா இல்லை பல தேசிய இனங்களின் கூட்டா என்ற கேள்வி ஒரு பக்கம் பலராலும் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இது ஓர் அரசியல் கேள்வி. இந்தியாவுக்கான அரசியல் அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்க இந்தக் கேள்விக்கான பதில் முக்கியம். பல மொழிகள் பேசப்பட்டாலும் கலாசாரம் பெரும்பாலும் ஒன்றே என்று சிலர் பதில் சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஒரு சிறு பிராந்தியப் பகுதியிலும்கூட கலாசாரக் கூறுகளில் எக்கச்சக்கமான வித்தியாசங்கள் இருப்பதைக் காணலாம். மதம் என்று எடுத்துக்கொண்டாலும் சிறுசிறு வித்தியாசங்களின் தொடங்கி மாபெரும் வேற்றுமைகள் உள்ளன. நான்கு வர்ணங்கள், லட்சம் சாதிகள், வர்ணத்துக்கு வெளியிலான தீண்டத்தகாத சாதிகள், தோல் நிறத்தில் வேறுபாடு, உருவ அமைப்பில் வேறுபாடு என்று கருத்துரீதியாகவும் உடற்கூறுரீதியாகவும் இந்தியாவில் எக்கச்சக்க வேற்றுமைகள். வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்று சிலர்; ஒற்றுமையே கிடையாது - எல்லாம் வேறு வேறு என்று சிலர்.

வரலாறு, மானுடவியல், சமூகவியல், மொழியியல் துறை நிபுணர்கள் இந்தியாவின் இந்தப் பல்வேறு வண்ணங்களை ஆராய்ந்தபடி இருக்கிறார்கள். இவர்களால் ஒருசில பெரும் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டு, கேள்விக்குள்ளாக்கப்பட்டு வந்தபடி உள்ளது.

இந்தியாவின் இரு பெரும் இனங்கள் ஆரியர்களும் திராவிடர்களும்; இதில் ஆரியர்கள் கைபர், போலன் கணவாய் வழியாக பரத கண்டத்துக்குள் நுழைந்து, இங்கு வசித்துவந்த திராவிடர்களுடன் போரிட்டு, அவர்களைத் தெற்கு நோக்கித் துரத்திவிட்டனர் என்பது ஒரு கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின்படி, ஆரியர்கள் வெளுப்புத் தோல் கொண்டவர்கள், உயரம் அதிகமானவர்கள், இந்தோ-ஆரிய குடும்ப மொழியான சமஸ்கிருதம் பேசியவர்கள், குதிரைகளை வைத்திருந்தவர்கள். திராவிடர்கள் குள்ளமானவர்கள், கருத்த நிறத்தவர், தமிழ் அல்லது புரோட்டோ-தமிழ் மொழி பேசியவர்கள்.

தமிழர்கள் (திராவிடர்கள்) என்று எடுத்துக்கொண்டால், கடலில் மூழ்கிப்போன குமரிக் கண்டம் என்று தென்புலத்திலிருந்து வந்தவர்கள், ஆரியர்கள் வருகைக்குமுன் இந்தியா முழுமையிலும் வசித்தவர்கள் என்பது தமிழ் ஆராய்ச்சியாளர்கள் ஒருசிலரது கருத்து.

சிந்துவெளி நாகரிகத்தின் முத்திரை எழுத்துகள் தொடர்பான ஆராய்ச்சிக்குப் பிறகு, சிந்துவெளிப் பகுதி நாகரிகம் திராவிட நாகரிகமே என்பதாக சில அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இல்லை இல்லை, சிந்து சரசுவதி நதி நாகரிகம் என்பது முழுமையாக ஆரிய நாகரிகம்; இந்த ஆரியர்கள் இந்தியாவுக்குப் படையெடுத்தெல்லாம் வரவில்லை; அவர்கள் சரசுவதி நதிக்கரையில் வாழ்ந்த மண்ணின் மைந்தர்கள்; சரசுவதி நாகரிகம்தான் வேத நாகரிகம்; அவர்கள்தான் லோத்தால், தோலாவிரா போன்ற நகரங்களை (பின்னர் மொஹஞ்சதாரோ, ஹரப்பாவையும்) கட்டினார்கள்; வேத உபநிடதங்களையும் எழுதினார்கள்; சரசுவதி வற்றிப்போனதால் சிந்துவையும் கங்கையையும் நோக்கி நகர்ந்தார்கள் என்கிறார்கள் சிலர்.

இன்று ஆரியர்களைப் பற்றியும் நமக்குத் தெளிவான தகவல்கள் இல்லை; திராவிடர்களைப் பற்றியும் தெளிவான தகவல்கள் இல்லை. ஆனாலும் இவை குறித்த தகவல்கள் நம்முடைய பாடப்புத்தகங்களில் சர்வ சாதாரணமாக, முற்று முழுதான உண்மைகளைப் போல உலா வருகின்றன.

இவற்றுக்கிடையில், பா. பிரபாகரன் வலுவான ஒரு கோட்பாட்டை முன்வைக்கிறார். முதலில் தமிழர்களின் தோற்றம் குறித்து தற்போது பரவலாக இருக்கும் கோட்பாடுகளை ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு ஆராய்கிறார். அவை ஏன் தவறானவை என்று தன் கருத்துகளை ஆணித்தரமாக வைக்கிறார்.

குமரிக்கண்டம் என்ற ஒன்று கன்னியாகுமரிக்குத் தெற்கே இருக்கச் சாத்தியமே இல்லை என்று விளக்கியதற்குப் பிறகு, இன்றைய தமிழர்களின் தோற்றுவாய் மத்திய தரைப் பகுதியான (இன்றைய ஈராக்) சுமேரியம்தான் என்கிறார். அதற்கு வலு சேர்க்கும் வகையில் சுமேரிய நாகரிகம் பற்றி விரிவாக விளக்குகிறார். சுமேரியர்கள் சுட்ட களிமண்ணில் எழுதிவைத்துவிட்டுச் சென்ற பல விஷயங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்தும் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை இன்று படிக்கமுடியும்; பொருள் புரிந்துகொள்ள முடியும். அனைத்தும் இணையத்தில் ஒரு தொகுப்பாகக் கிடைக்கின்றன. அவற்றை ஆராய்வதோடு தமிழ் இலக்கியங்களில், முக்கியமாக இறையனார் அகப்பொருள் உரையில் சொல்லியுள்ள விஷயங்கள், சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளவை, சமஸ்கிருத புராணங்களில் சொல்லப்பட்டுள்ளவை ஆகியவற்றோடு ஒப்புநோக்கி, இந்த முடிவுக்கு வருகிறார் பிரபாகரன்.

சுமேரிய சுடுமண் ஓடுகளில் மெலூஹா, தில்முன் என்று இரு இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தூரத்தில் உள்ள இந்த நாடுகள் (பகுதிகள்) சுமேரியத்துடன் வர்த்தகத்தின் ஈடுபட்டிருந்தன. மெலூஹாதான் சிந்து சரசுவதி நாகரிகம் என்று கிட்டத்தட்ட அனைவருமே சொல்கின்றனர். Immortals of Meluha என்னும் தொடர் வெகுஜனக் கதை வெளியாகி இந்தியாவில் விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது. தில்முன் என்பது பஹ்ரைன் அல்லது அதற்கு அருகில் உள்ள பகுதி என்பதாகச் சிலர் சொல்கின்றனர். ஆனால் பிரபாகரனின் கருத்து, தில்முன் என்பது தமிழகம்தான் என்பது. அதற்கான ஆதாரங்களை பிரபாகரன் முன்வைக்கிறார்.

பிரபாகரனின் கருத்தின்படி, திராவிடர்கள், ஆரியர்கள் என இருவருமே சுமேரியத்திலிருந்து இந்தியா வந்தவர்கள். திராவிடர்கள் நீர்வழியாகக் கப்பல்களில் வந்து இன்றைய கேரளக் கடற்கரையில் இறங்கினர்; ஆரியர்கள் தரை வழியாகப் பல கலப்புகளைச் சந்தித்தபடி வடமேற்கு எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தனர்.

பிரபாகரன் முன்வைக்கும் கோட்பாட்டை நீங்கள் உங்கள் அரசியல் சமூகக் கருத்துகளுக்கு ஏற்ப ஆதரிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம். ஆனால் அவருடைய சுவாரசியமான எழுத்தை நிராகரிக்க முடியாது. சுமேரிய நாகரிகம், கிரீட் தீவில் நிலவிய மினோயன் நாகரிகம், தமிழகக் கதையாடல்கள், சிந்துவெளி நாகரிகம், இந்த எல்லா இடங்களிலும் நிலவிய நம்பிக்கைகள், கடவுள்கள், வழக்கங்கள் ஆகியவற்றை மிக சுவாரசியமாகத் தொகுத்துக் கொடுத்துள்ளார் பிரபாகரன். அவற்றிலிருந்து அவற்றுக்கு இடையேயான தொடர்புகள் எப்படி இருந்திருக்கலாம் என்ற தன் ஊகத்தையும் அழகாக முன்வைக்கிறார். நிறைய படங்கள் கொண்டுள்ளது இந்தப் புத்தகம்.

தொழில்முறை வரலாற்று ஆராய்ச்சியாளர் அல்லர் பிரபாகரன். கப்பல் போக்குவரத்து லாஜிஸ்டிக்ஸ் துறையில் பல ஆண்டுகால அனுபவம் வாய்ந்தவர். லாஜிஸ்டிக்ஸ்: ஓர் எளிய அறிமுகம் என்ற புத்தகத்தை கிழக்கு பதிப்பகத்துக்காக எழுதியவர். தமிழர்களின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையை முதலில் இவர் செம்மொழி மாநாட்டில் சமர்ப்பித்தார். அந்தக் கட்டுரை சிறிது சிறிதாக வளர்ந்து இன்று ஒரு புத்தகமாக மாறியுள்ளது.

புத்தகத்தை வாங்க

விலை ரூ. 125

Wednesday, January 16, 2013

மௌனத்தின் அலறல்

இந்தியப் பிரிவினை என்பது நமக்கு நன்கு தெரிந்த ஒரு வரலாற்று நிகழ்வு. இதை வெறும் புள்ளிவிவரங்களாகவும் அரசியல் நிகழ்வுகளாகவும் பலரும் பதிவு செய்துள்ளனர். சிலர் கதைகளாகவும் பதிவு செய்துள்ளனர். குஷ்வந்த் சிங்கின் பாகிஸ்தான் போகும் ரயில் அப்படிப்பட்ட ஒரு கதைப் பதிவு. அதனை சென்ற ஆண்டு கிழக்கு பதிப்பகம் தமிழாக்கம் செய்து கொண்டுவந்திருந்தது. இந்தியப் பிரிவினை பற்றிய ஒரு வரலாற்றுப் புத்தகத்தையும் கிழக்கு முன்னதாகக் கொண்டுவந்திருக்கிறது.

ஆனால் ஊர்வஷி புட்டாலியா எழுதியுள்ள புத்தகம் சற்றே வித்தியாசமானது. இது மக்களின் குரல்கள்மூலம் பிரிவினையின்போது நடந்த நிகழ்வுகளை முன்வைக்கிறது. ஊர்வஷி புட்டாலியாவை நான் நன்கு அறிவேன். பெண்ணியவாதி. சிறு பதிப்பாளர். எழுத்திலும் புத்தகப் பதிப்புத் துறையிலும் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவருபவர்.

பிரிவினையின்போது எண்ணற்ற மக்கள் வீடிழந்தனர். கொல்லப்பட்டனர். பெண்கள் முக்கியமாகத் திருடப்பட்டனர். வன்கலவிக்குப்பின் கொல்லப்பட்டனர். பலர் அடிமைகளாக தன்னை நாசம் செய்தவனுடனேயே வசித்து பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு இருக்கவேண்டியிருந்தது.

ஊர்வஷி இதுபோல பாதிக்கப்பட்டு உயிருடன் இருக்கும் பலரைச் சந்தித்து, அவர்களுடைய கதைகளைச் சொல்வதன்மூலம் பிரிவினையின்போது என்ன நடந்தது என்பதை நம்மைப் புரிந்துகொள்ள வைக்கிறார்.

இன்று, 2012-13-ல்கூட பல நகரங்களில் பெண்கள் தைரியமாக வெளியே போகமுடிவதில்லை. கடுமையான பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆண்கள் கூட்டமாகச் சேர்ந்து மிருகங்கள்போல தனியான பெண்கள்மீது விழுந்து தாக்குகிறார்கள். பிரிவினையின்போது இந்த வெறிகொண்ட கூட்டங்கள் (இரு பக்கத்திலுமே) எப்படி நடந்துகொண்டிருக்கும் என்று நீங்கள் ஓரளவுக்கு ஊகிக்கலாம். உண்மை அதைவிடப் பதைபதைப்பானது.

மௌனமாகக் கிடந்த அலறல்களை இந்தப் புத்தகம் ஓரளவுக்கு வெளிக்கொணர்கிறது. The Other Side of Silence என்று ஆங்கிலத்தில் வெளியான இந்தப் புத்தகத்தை கே.ஜி. ஜவர்லால் மிக நேர்த்தியாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

புத்தகத்தை வாங்க

பக்கங்கள்: 352
விலை: ரூ. 250/-

Tuesday, January 15, 2013

இந்தியன் ஆவது எப்படி?

நான் சமீபத்தில் படித்த புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்தது பவன் வர்மா எழுதிய 'Becoming Indian' என்ற ஆங்கிலப் புத்தகம். இவர் எழுதி சில ஆண்டுகளுக்குமுன் வெளியாகியிருந்த 'Being Indian' என்ற புத்தகத்தையும் படித்துள்ளேன்.

பவன் வர்மா, இந்திய மனநிலையை ஆராய்கிறார். நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட இந்திய கலாசாரம் எவ்வாறு காலனிய காலத்தில் மனத்தளவில் அடிமையானது என்பதை ஆராய்வதுதான் அவருடைய நோக்கம். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவின் பெரும்பகுதியைத் தன்வசப்படுத்தியதும், இப்பகுதியை ஆட்சி செய்யவேண்டிய கட்டாயம் அதற்கு ஏற்பட்டது. அதன் ஆட்சிக்காலத்தின் முற்பகுதியில் இந்தியா வந்த பல ஆட்சியாளர்களும் சமஸ்கிருத மொழி, இந்திய கலாசாரம் ஆகியவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்கள். இந்தக் கீழையியல் விரும்பிகள் இந்திய கலாசாரத்தின் தொன்மையை மிகவும் மதித்தனர். இந்தியாவைப் பொருளாதாரரீதியில் சுரண்டி தம்முடைய கம்பெனிக்கு வளம் சேர்க்கவேண்டும் என்பதி அடிப்படை நோக்கமாக இருந்தாலும் அதே நேரம் இங்குள்ள கலாசாரத்தை ஆங்கிலத்துக்குக் கொண்டுசென்று, அதன்மூலம் உலகம் முழுதும் கொண்டுசேர்க்கவேண்டும் என்பதும் அவர்களுடைய விருப்பமாக இருந்தது. வாரன் ஹேஸ்டிங்ஸ் முதற்கொண்டு இந்தப் பணியில் ஈடுபட்டனர்.

இன்று நாம் நம்முடைய தொன்மைகளாக உணர்ந்திருக்கும் வேதங்கள், உபநிடதங்கள், தத்துவ இலக்கியங்கள், பகவத் கீதை, சமஸ்கிருத இலக்கணமான அஷ்டாத்யாயீ, இதிகாசங்களான ராமாயண மகாபாரதம் தொடங்கி, தமிழ், தெலுங்கு முதலான எண்ணற்ற மொழிகளுக்கு அகராதிகள், இலக்கணப் புத்தகங்கள், இவற்றில் உள்ள பல்வேறு இலக்கியங்களுக்கான ஆங்கில மொழியாக்கம் என்று பிரிட்டிஷ்காரர்களுடைய கொடை மிக நீண்டது. இன்று நாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பிரமி எழுத்துகளை மீண்டும் படிக்கச் சொல்லிக்கொடுத்தது கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரி ஒருவரே. இந்தியாவின் பல்வேறு புராதன கலாசாரச் சின்னங்களான கோவில்கள், சிந்து-சரசுவதி நதிக்கரை நகரங்கள், அசோகரின் தூண்கள் என அனைத்தையும் அவற்றின் உண்மையான பொருள் என்ன என்பதோடு நமக்குச் சுட்டிக்காட்டியது ஆங்கிலேயர்களே.

ராஜராஜன் என்ற அரசன் இருந்து தஞ்சைப் பெரிய கோவில் என்ற மாபெரும் படைப்பை உருவாக்கியதையும், அசோகர் என்ற பேரரசர் தன் பரந்து விரிந்திருந்த சாம்ராஜ்ஜியத்தின் ஒரு கோடி முதல் மறு கோடி வரை எண்ணற்ற தூண்களைக் கட்டித் தன் கட்டளைகளைப் பிறப்பித்திருந்ததையும், பல்லவர்கள் மாமல்லபுரம் என்ற மாபெரும் சிற்ப நகரை நிர்மாணித்திருந்ததையும், உலகப் புகழ்பெற்ற இந்திய ஓவியங்கள் அடங்கிய அஜந்தா குகைகளையும் மீள்கண்டெடுத்து நமக்குத் தந்தது பிரிட்டிஷாரே.

ஆனால் கிழக்கிந்தியக் கம்பெனியின் பிற்காலத்தில் வந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், இந்தியக் கண்டுபிடிப்புகளும், இலக்கியங்களும், கலைகளும் குப்பைகள், எவற்றுக்கும் உதவாதவை என்ற கருத்தைக் கொண்டிருந்தார்கள். மெக்காலேயை இதற்குப் பெரிய உதாரணமாகச் சொல்லலாம். கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியில் இந்தியர்கள் எம்மாதிரியான கல்வியைக் கற்கவேண்டும் என்பதை முடிவெடுப்பதில் அவர் முக்கியமானவராக இருந்தார். வெகு சில நாட்களே அவர் இந்தியாவில் தங்கியிருந்தாலும் அவர் விட்டுச் சென்ற தாக்கம் இன்றளவும் இந்தியர்களைப் பாதித்துவருகிறது.

ஆங்கில மொழி, ஆங்கிலேயர்கள் தூக்கிப் பிடித்த விழுமியங்கள் என்று தொடங்கிய அந்தக் கல்விமுறை இன்று இந்தியர்களைத் தன் கிடுக்கிப் பிடியில் வைத்துள்ளது. தன் பாரம்பரியம் என்பதே கீழானது, தன் எஜமானர்களாகிய ஆங்கிலேயர்களின் பாரம்பரியமும் கலாசாரமும் மொழியுமே உயர்ந்தவை என்ற கருத்து இந்தியர்கள்மீது திணிக்கப்பட்டது; இந்தியர்களும் விரும்பி இதனை ஏற்றுக்கொண்டார்கள்.

இந்நிலையில் இந்தியா என்பது என்ன, இந்தியர் என்பவர் யார், காலனியத்தால் வெற்றிகொள்ளப்பட்ட ஒரு நபர் மீண்டும் இந்தியன் ஆவது எப்படி என்பதை ஆராய முற்படுகிறது இந்த நூல்.

நூலாசிரியர் பவன் வர்மா, தற்போது பூட்டானுக்கான இந்தியத் தூதராக உள்ளார். இந்திய அயல்துறை பணியில் இருப்பவர். சைப்ரஸ் நாட்டுக்கான இந்தியத் தூதராக இருந்துள்ளார்.

இந்தியாவின் சமூக வரலாற்றை பொதுமக்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு எளிமையாகக் கொடுத்துள்ளார். இந்தப் புத்தகத்தைத் தமிழாக்கம் செய்திருப்பவர் எஸ். கிருஷ்ணமூர்த்தி.

புத்தகத்தை வாங்க

பக்கங்கள்: 384
விலை ரூ. 250

அணு மின்சாரம்: அவசியமா, ஆபத்தா

கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக நாட்கணக்கில் கூடங்குளம்/இடிந்தகரை பகுதியில் போராட்டம் நடந்துவருகிறது. எஸ்.பி.உதயகுமார் தலைமை ஏற்று நடத்திவரும் இந்தப் போராட்டம், மிக முக்கியமானது. அணு மின் நிலையங்கள் அமைப்பதற்கு எதிரான இயக்கங்கள் இந்தியா முழுதும் ஆங்காங்கே நடந்துவருகின்றன.

அணு மின் நிலையங்கள் ஆபத்தானவை, அந்தப் பகுதியையே அழித்துவிடக் கூடியவை, அணுக் கழிவுகளை எப்படி அப்புறப்படுத்தி அழிப்பது என்பது தொடர்பாக அறிவியலாளர்களிடம் எந்தத் தீர்வும் இல்லை, கல்பாக்கம் உட்பட்ட இந்திய அணு மின் நிலையங்களில் தொடர்ந்து பல விபத்துகள் நடந்துவருகின்றன; ஆனால் அவை மூடி மறைக்கப்படுகின்றன, மூன்று மைல் தீவுகள், செர்னோபில், ஃபுகுஷிமா போன்ற விபத்துகள் இந்தியாவில் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம், அணு எரிபொருள்களுக்கான கச்சா தாதுக்களை வெட்டி எடுக்கும் இடங்களிலும் அவற்றைப் பண்படுத்தும் இடங்களிலும் ஏகப்பட்ட அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றெல்லாம் அணு உலை எதிர்ப்பாளர்கள் பேசிவருகிறார்கள்.

அணு உலை எதிர்ப்புப் புத்தகங்கள், கையேடுகள் எனத் தமிழில் ஏகப்பட்டவை வெளியாகியுள்ளன. இந்தப் புத்தகக் கண்காட்சியிலும்கூட இதுதான் நிலை.

இதற்கு மாறாக, இந்திய அணு சக்தித் துறையானது பொதுமக்களிடம் பேசுவதே இல்லை. அவர்களுடைய நோக்கமே, ‘எங்களுக்குத் தெரியும், எல்லாம் சரியாக உள்ளது. எனவே வாயை மூடிக்கொண்டு உங்கள் வேலையைப் பாருங்கள்’ என்பதாகவே உள்ளது துரதிர்ஷ்டமே.

சௌரவ் ஜா எழுதி இரு ஆண்டுகளுக்குமுன் வெளியான The Upside Down Book of Nuclear Power என்ற புத்தகம் அணு சக்திக்கு ஆதரவான ஒன்று. அணு சக்திக்கு எதிரான புத்தகத்தை எழுதிவிடுவது சுலபம். ஆனால் ஆதரவாக ஒரு புத்தகத்தை எழுதுவது என்பது மிக மிகக் கடினம் என்பதையே அவ்வாறு வெளியாகியுள்ள புத்தகங்களின் எண்ணிக்கையை வைத்தே சொல்லிவிடலாம். முந்தைய புத்தகங்கள் படிப்போரின் உணர்ச்சிகளை மட்டுமே தீண்டக்கூடியவை. ஆனால் பிந்தைய புத்தகங்கள் நடுநிலையுடன் இந்தச் சிக்கலை அணுகவேண்டும். அணு சக்தித் துறையில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்ற உண்மையை முன்வைக்கவேண்டும். ஃபுகுஷிமாவில் ஏன் விபத்து நடந்தது என்று விளக்கியாகவேண்டும். அதேபோன்ற பிரச்னைகள் இந்தியாவில் ஏற்படாமல் இருக்க என்னவெல்லாம் செய்யப்பட்டுள்ளது என்று விளக்கவேண்டும். அப்படியே இந்திய அணு உலைகளில் ஏதேனும் விபத்து ஏற்பட்டாலும் அந்த விபத்தின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று சொல்லவேண்டும். அணுக் கழிவுகளை என்னதான் செய்வது என்று பேசியே ஆகவேண்டும். உண்மையில் அணுக்கழிவுகள் என்றால் என்ன என்பதிலிருந்து ஆரம்பிக்கவேண்டும்.

சௌரவ் ஜா இதனை மிக அழகாகக் கையாள்கிறார். ஆற்றல் துறை ஆலோசகராக இருக்கும் இவர் எழுதிய முதல் புத்தகம் இது என்பது ஆச்சரியத்தைத் தருகிறது.

நான் அணு சக்தித் துறையின் தலைவனாக இருந்தால், இந்தப் புத்தகத்தை வேண்டிய பிரதிகள் வாங்கி, அணு சக்தி குறித்து பயம் கொள்வோர் அனைவருக்கும் இலவசமாக விநியோகிப்பேன். அப்படி நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் கம்மி என்பதால் அணு சக்தியில் ஆர்வம் கொண்டோர் இந்தப் புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்கிப் படித்தாகவேண்டும். இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு பெரும் அறிவியல் அறிவு ஏதும் தேவையில்லை. படிக்க எளிதான மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது; மொழிமாற்றமும் எளிதாகவே உள்ளது.

இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிப்பவர்கள், படித்தபின் புத்தகத்தை உங்கள் நண்பர்களுக்குக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்.


புத்தகத்தை வாங்க

ஆசிரியர்: சௌரவ் ஜா
தமிழாக்கம்: சுந்தரேச பாண்டியன்
பக்கங்கள்: 288
விலை: ரூ. 200/-

மோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி


இந்த ஆண்டு நாங்கள் குறைவான புத்தகங்களையே கொண்டுவந்துள்ளோம். அவற்றில் சில புத்தகக் காட்சிக்கு ஒரு நாள் முன்னதாகக் கையில் கிடைத்தவையே. அவற்றுக்கான அறிமுகமாக இந்தத் தொடர் பதிவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தப் பதிவுகளில், கடந்த சென்னை புத்தகக் காட்சிக்குப் பிறகு வந்த கிழக்கின் அனைத்து புதுப் புத்தகங்களையும் பதிவு செய்வதாக உள்ளேன்.

‘மோடியின் குஜராத்’ என்ற புத்தகத்தை எழுதியவர் சரவணன் தங்கதுரை. சென்னையில் மென்பொருள் துறையில் வேலை செய்கிறார். இந்தியாவில் அரசுகள் மக்களுக்குத் தேவையான எந்த சேவையையும் முழுமையாகத் தருவதில்லை என்பதை நம் கண்கூடாகப் பார்க்கிறோம். மின்சாரம், சாலைகள், குடிநீர், வாழ்வாதாரப் பாதுகாப்பு, தரமான கல்வி, ஏழைகளுக்கான நலத்திட்டங்கள், சட்டம் ஒழுங்குப் பாதுகாப்பு என்று எதை எடுத்துக்கொண்டாலும் அது நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு இல்லை. அதற்குமேலாக லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நிர்வாகம் என்பது மழுங்கிப் போய்விட்டது. இதனால் பொதுமக்கள் ஒருவித விரக்தியில் இருக்கிறார்கள். தங்கள் வாழ்நாளில் தரமான சேவையைத் தரக்கூடிய ஓர் அரசைக் காண முடியுமா, சிங்கப்பூர் போன்றோ பல்வேறு மேலை நாடுகள் போன்றோ, வளர்ந்த ஒரு நாடாக இந்தியா என்றாவது மாறக்கூடுமா என்பதே அவர்களின் கவலையாக உள்ளது.

இந்நிலையில் குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மோடி பெருமளவு மாற்றங்களை நிர்வாகத்தில் செய்துள்ளார் என்பதை சரவணன் கேள்விப்படுகிறார். தானே சென்று போய்ப் பார்த்துவிட்டு வருவது என்று முடிவெடுக்கும் சரவணன் சில முறை அங்கு சென்று பார்க்கிறார்; மக்களிடம் பேசுகிறார்; அரசு அதிகாரிகளிடம் பேசுகிறார். அதன் தொடர்ச்சியே இந்தப் புத்தகம்.

மோடியின்மீது இந்தியாவின் பல்வேறு மதச்சார்பற்ற அறிவுஜீவிகள் கடுமையான பல குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். இந்தப் புத்தகம் அவற்றுக்கு பதில் சொல்லக்கூடியதல்ல. குஜராத்தில் சரவணன் பார்த்தவரை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா? அவை மோடியால் நிகழ்ந்துள்ளனவா? உண்மை என்பது அரசு தரும் புள்ளிவிவரங்கள் மட்டும்தான்? தரையளவில் மக்கள் என்ன நினைக்கிறார்கள்? இவற்றைத் தொகுத்து முன்வைக்கும் சரவணன், குஜராத்தின் மாதிரியைப் பின்பற்றினால் இந்தியாவின் பிற மாநிலங்களும் மிகத் தரமான சேவையை மக்களுக்குத் தரமுடியும் என்கிறார்.

மோடி பொதுஜனத் தொடர்பில் மட்டும் வல்லவரா அல்லது இந்தியா எதிர்பார்த்துக் காத்திருக்கும் வளர்ச்சியின் மெஸ்ஸையாவா? அவரவர்க்கு அவரவர் கருத்துகள். ஆனால் எதிர்ப்பாளர்கள், இந்தப் புத்தகம் முன்வைக்கும் தரவுகளையும் புள்ளிவிவரங்களையும் புறம்தள்ளிவிட்டுப் போகமுடியாது.

புத்தகத்தை இணையத்தில் வாங்க

பக்கங்கள்: 152
விலை ரூ. 100/-

Wednesday, January 09, 2013

36-வது சென்னை புத்தகக் கண்காட்சி

11 ஜனவரி முதல் 23 ஜனவரி வரை சென்னை புத்தகக் கண்காட்சி நடக்கவுள்ளது. இம்முறை புதிய இடம். நான் பார்க்கும் மூன்றாவது இடம் இது. பல ஆண்டுகள் காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் நடந்துவந்த புத்தகக் கண்காட்சி, சில ஆண்டுகளுக்குமுன் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி வளாகத்துக்குச் சென்றது. இப்போது சென்னை மெட்ரோ வேலைகள் நடந்துகொண்டிருப்பதால் போக்குவரத்தைச் சமாளிக்கமுடியாது என்ற காரணத்தால் அந்த இடம் இருந்தாலும் மாநகரக் காவல்துறையிடம் அனுமதி கிடைக்கவில்லை. எனவே நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சிக் கல்லூரித் திடலில் இம்முறை கண்காட்சி நடக்க உள்ளது.

இதுவரையில் கிடைத்த இடங்களிலேயே பிரம்மாண்டமான இடம் இதுதான். ஊருக்கு மிக நடுவில், எங்கிருந்துவேண்டுமானாலும் மக்கள் எளிதாக வந்துபோகும் வகையில் கிடைத்துள்ள இடம் ஒருவகையில் வரப்பிரசாதம் என்றே சொல்லவேண்டும்.

இம்முறை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான ஸ்டால்கள் உள்ளன. ஆனாலும் சில மாறுதல்கள். ஒரு குறிப்பிட்ட லாபி கடுமையாக வேலை செய்து, முன் கொடுத்துவந்த 400 சதுர அடி ஸ்டால்களின் அளவைக் குறைத்துள்ளது. அதன் காரணமாக இம்முறை 300 சதுர அடி ஸ்டால்தான் உள்ளதிலேயே பெரிய இடம். அதன்பின் 200 சதுர அடி, 100 சதுர அடி ஸ்டால்கள் எப்போதும்போல் உண்டு.


கிழக்கின் அரங்குகள்

சென்ற முறைபோல இம்முறையும் கிழக்கின் புத்தகங்கள் இரண்டு வெவ்வேறு (300 சதுர அடி) பிரைம் ஸ்டால் இடங்களில் கிடைக்கும். எண்களைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்: கடை எண் 115, கடை எண் 246.

கடை எண் 115, ‘New Horizon Media’ என்ற பெயரில் இருக்கும். கடை எண் 246, ‘கிழக்கு பதிப்பகம்’ என்ற பெயரில் இருக்கும். கிழக்கு பதிப்பகத்தின் அனைத்துப் புத்தகங்கள், நியூ ஹொரைஸன் மீடியா விநியோகம் செய்யக்கூடிய வைரமுத்து புத்தகங்கள், மஞ்சுள், பாரகன், ஷிவம் புக்ஸ் போன்றோரின் புத்தகங்களும் இந்த இரண்டு கடைகளிலும் கிடைக்கும்.

ஆழம் என்னும் எங்கள் அச்சு இதழுக்குச் சந்தா கட்டுவதையும் இந்தக் கடைகளில் நீங்கள் செய்யலாம். சமீபத்திய இதழை வாங்கிக்கொள்ளலாம். கூடவே சில பழைய இதழ்களையும் வாங்கலாம்.

மின் புத்தக அரங்கு

இம்முறை சென்னை புத்தகக் கண்காட்சியில் NHM Reader என்ற பெயரிலான மின் புத்தகப் படிப்பான் செயலியை அறிமுகம் செய்கிறோம். ஓரிரு ஆண்டுகளுக்குமுன் முதலில் Feedle என்ற பெயரிலும் பின்னர் NHM Reader என்ற பெயரிலும் Windows கணினிகளில் வேலை செய்யுமாறு ஒரு மின் புத்தகப் படிப்பானை சோதனை முயற்சியில் உருவாக்க ஆரம்பித்தோம். பின் அதனைத் தாற்காலிகமாக நிறுத்திவிட்டு, ஐஃபோன், ஐபேட் சந்தைக்கான மின் புத்தகப் படிப்பானில் கவனம் செலுத்த ஆரம்பித்தோம்.


இப்போது அதனை ஐஃபோனில் ரிலீஸ் செய்துள்ளோம். ஐபேட் வடிவம் அடுத்த வாரத்துக்குள் ஆப்பிள் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்று நினைக்கிறோம். எப்படியும் இம்மாத இறுதிக்குள் பல புத்தகங்களோடு இந்த மின் புத்தகப் படிப்பான் ஆப்பிள் iOS இயங்குதளங்களில் கிடைக்கத் தொடங்கும்.


ஆண்டிராய்ட் ஃபோன், டேப்லட் கணினிகளில் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதுவும் அடுத்த வாரத்துக்குள் அல்லது அதற்கடுத்த வாரத்துக்குள் கூகிள் பிளேயில் வந்துவிடலாம்.

இந்த மென்பொருளை எப்படிப் பயன்படுத்துவது, எப்படி மின் புத்தகங்களை வாங்குவது என்பதைச் செய்துகாட்ட என்று ஒரு ஒற்றை ஸ்டாலை (100 சதுர அடி) எடுத்துள்ளோம். ஸ்டால் எண் 188-ல் E-books என்ற பெயரில் இருக்கும். மின் புத்தகங்கள் பற்றி அறிந்துகொள்ள மறக்காமல் இந்த இடத்துக்கு வருகை தாருங்கள்.

டயல் ஃபார் புக்ஸ்

கடந்த பல மாதங்களாக டயல் ஃபார் புக்ஸ் என்ற பெயரில் போன் மூலம் புத்தகம் ஆர்டர் செய்து வீட்டிலேயே பெறும் சேவையை நடத்தி வருகிறோம். இதனை விளக்கும் வகையில் ஒரு ஸ்டாலை எடுத்துள்ளோம். இதுவும் ஒற்றை ஸ்டால், எண் 319. (இந்த 319, 188 கடைகளில் எந்தப் புத்தக விற்பனையும் நடைபெறாது. வெறும் செயல் விளக்கம் மட்டுமே.)

இந்தக் கடையில், எப்படி போன் மூலம் புத்தகங்களை ஆர்டர் செய்வது, ஆர்டர் செய்தால் வந்துசேர எத்தனை நாட்கள் ஆகும், ஏன் போன்ற பலவற்றையும் விளக்கிச் சொல்வோம். கூடவே, இந்தக் கடையில் ‘அலமாரி’ என்ற புதிய இதழ் ஒன்றை அறிமுகம் செய்கிறோம். இந்த இதழ், டேப்லாய்ட் வடிவிலான செய்தித்தாள் போன்றது. நான்கு பக்கங்கள், முற்றிலும் வண்ணம். இதுவும் மாதாந்திர இதழ். இதில் ஒவ்வொரு மாதமும் வெளியாகும் புதிய புத்தகங்கள் (அனைத்துப் பதிப்பகங்கள்) குறித்த செய்திகள், புத்தக அட்டைகள், புத்தகம் பற்றிய தகவல்கள், எழுத்தாளர்கள் அல்லது பதிப்பாளர்களுடனான பேட்டி போன்றவை வெளியாகும்.

புத்தகங்களை வாங்க விருப்பம் உள்ளவர்களை நோக்கி உருவாக்கப்பட்டுள்ள இதழ் இது. நீங்கள் இதன்மூலம் பயன் அடைவீர்கள் என்று நம்புகிறேன்.

எனவே நந்தனம் சென்னை புத்தகக் கண்காட்சிக்குப் பலமுறை வாருங்கள். எங்கள் அனைத்துக் கடைகளையும் ஒரு பார்வை பாருங்கள்.

115 - New Horizon Media
246 - Kizhakku Pathippagam
188 - Ebook
319 - Dial For Books

அக்கிரகாரத்தில் பெரியார் - பி.ஏ.கிருஷ்ணன்

‘நாம்’ என்ற அமைப்பு (ஜெகத் கஸ்பார்) சங்கம் 4 என்ற பெயரில் மார்கழி மாதம் பல தொடர் பேச்சுகளை ஏற்பாடு செய்துள்ளது. இதில் தொடக்கத்தில் ஒரு நாள், புதிய பொருளாதாரக் கொள்கையைத் தமிழர்கள் எப்படிப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி நான் பேசியிருந்தேன்.

நேற்று ஐந்து பேச்சுகள் நடப்பதாக இருந்தது. அங்கு சென்றவுடன் நான்குதான் என்று சொன்னார்கள். மற்ற பேச்சுகளைப் பற்றி நான் விரிவாக இங்கு எழுதப்போவதில்லை. எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் பெரியார் பற்றிப் பேசியதை மட்டும்தான் நான் இந்தப் பதிவில் எழுதப்போகிறேன்.

பி.ஏ.கிருஷ்ணன், எழுதிவந்திருந்த ஒரு பேச்சைத்தான் படித்தார். எனவே இந்த முழு வடிவம் எழுத்துவடிவில் கிடைக்கத்தான் போகிறது. மேலும் இந்த முழு நிகழ்ச்சியும் ஏற்பாட்டாளர்களால் வீடியோ எடுக்கப்பட்டது. எனவே இணையத்திலோ, ஏதோ தொலைக்காட்சியிலோ இந்த ஒளிப்பதிவு வெளியாகலாம்.


பி.ஏ.கிருஷ்ணன் தொடக்கத்திலேயே, ‘நான் பேசப்போவது பிராமணர்களால் பெரியார் எப்படிப் பார்க்கப்பட்டார் என்பதையே; அவருடைய வாழ்க்கையைப் பற்றி முழுதாக அல்ல’ என்றார்.

பெரியார் 1920 முதல் தொடங்கி வாழ்வின் இறுதிக்காலம் வரை தன் அரசியல் வாழ்க்கையில் யாருக்கு ஆதரவாகவும் யாருக்கு எதிராகவும் இருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டியபின், தன் வாழ்நாள் முழுதும் அவர் மாறாது வைத்திருந்த கொள்கைகள் இரண்டு என்றார். அவை:
 • பிராமணர் எதிர்ப்பு
 • கடவுள் மறுப்பு
தமிழகத்தில் பல நாத்திகர்கள் இருந்துள்ளனர், ஆனால் அவர்கள் பிராமண எதிர்ப்பாளர்களாக இருந்ததில்லை. அதேபோல பல பிராமண எதிர்ப்பாளர்கள் இருந்துள்ளனர், ஆனால் அவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தனர். பெரியார் ஒருவர்தான் தன் வாழ்க்கை முடியும்வரை இந்த இரண்டு கொள்கைகளையும் சேர்ந்தாற்போல் கடைப்பிடித்தார் என்றார் பி.ஏ.கே. இதனாலேயே அவர் பிராமணர்களால் தொடர்ந்து கவனிக்கப்பட்டார் என்றார்.

பிராமணர்கள்மீது வன்முறை

பெரியார் பிராமணர்கள்மீது வன்முறை செலுத்தவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை என்றார் பி.ஏ.கே. பெரியாரின் கருஞ்சட்டைப் படை பிராமணர்களைத் தாக்கலாம் என்ற ஒரு பயம் இருந்தது. அதுபற்றி சுதேசமித்திரனில் ஒரு தலையங்கமும் வந்திருந்தது. ஆனால் அதற்கு பதில் அளித்த பெரியார் அம்மாதிரியான எண்ணம் ஏதும் தனக்கு இல்லை; வன்முறையில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லியிருந்தார்.

அக்காலகட்டத்தில் தூத்துக்குடியில் சில பிராமணர்கள் தாக்கப்பட்டனர். ஆனால் அது திட்டமிட்டு நடந்த தாக்குதல் அல்ல. அண்ணாதுரை உடனேயே அதனை எதிர்த்து ஓர் அறிக்கையும் வெளியிட்டார்.

அரசியல் செல்வாக்கு

1967-ல் திமுக ஆட்சிக்கு வரும்வரை, பெரியாருக்குப் பெரும் அரசியல் செல்வாக்கு ஏதும் இருக்கவில்லை. அவர் சொன்னதைக் கேட்டு அதன்படிச் செய்யக்கூடிய ஆட்சி எதுவும் நடக்கவில்லை. எனவே அரசியலில் அவருடைய தாக்கம் பெரிதாக இல்லை.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்கூடப் பெரியார், திமுகவைத் தூற்றிக்கொண்டே இருந்தார். எனவே திமுகவின் வளர்ச்சியில் பெரியாரின் பங்கு என்பது குறைவுதான். சொல்லப்போனால், திமுகவின் வளர்ச்சியில் அண்ணாதுரை மட்டுமல்ல, கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோர் ஆற்றிய பங்கைவிட பெரியாரின் பங்கு  அதிகம் இல்லை என்றார் பி.ஏ.கே. ஆனால் இன்றுவரை பெரியாரைத் தமிழர்கள் நினைக்கின்றனர், போற்றுகின்றனர் என்றால் அதற்கு ஒரே காரணம் திமுகதான். திமுகதான் பெரியாரை தமிழ்நாடு முழுதும் அறியப்பட்ட ஒருவராக ஆக்கியது என்றார் பி.ஏ.கே.

குருகுலப் போராட்டம்

வ.வே.சு ஐயரின் குருகுலத்தில் இரு பார்ப்பனப் பையன்களுக்குத் தனியாக உணவு அளிக்கப்பட்டது தொடர்பான போராட்டம். இது ஒரு சிறு பிரச்னைதான் என்றும், ‘ஒரு சிறு துரும்பு பெரிய மலையாக்கப்பட்டதாகவும்’ பிராமணர்கள் கருதினர். பிராமண எதிர்ப்புக்கு ஒரு பெரும் ஆயுதமாகப் பெரியார் அதனைக் கையில் எடுத்துக்கொண்டார் என்று அவர்கள் கருதினர்.

பெரியார் பற்றி பெ.நா.அப்புசாமியின் கருத்து

பி.ஏ.கேயின் தந்தையின் நண்பர், அறிவியல் எழுத்தாளரான பெ.நா.அப்புசாமி. அவர் பிராமணர். தீவிர நாத்திகர். அவரிடம் பி.ஏ.கே பெரியாரைப் பற்றிப் பேசியுள்ளார். பிராமணர்களை நன்கு திட்டுவதற்கு பெரியார் சமஸ்கிருதத்தைப் படிக்கவேண்டும் என்று அப்புசாமி சொல்வாராம். உத்தர மீமாம்சை தவிர பிற இந்துத் தத்துவங்களுக்கு (பூர்வ மீமாம்சை, யோகம், சாங்கியம், நியாயம், வைசேஷிகம்) கடவுளே தேவையில்லை. சமஸ்கிருத இலக்கியங்கள் பிராமணர்களைக் கேலி செய்த மாதிரி யாரும் கேலி செய்ய முடியாது. பெரியாரின் கருத்துகளால் மக்களிடம் சிரிப்பை வரவழைக்கமுடியுமே தவிர அவர்களைக் கடவுள் மறுப்பாளர்களாக மாற்றமுடியாது என்றாராம் அப்புசாமி.

ஆனால் பெண் விடுதலை குறித்த பெரியாரின் கருத்துகளை பெ.நா.அப்புசாமி பெரிதும் பாராட்டினாராம். விபசாரி என்ற சொல் பெண்ணை அடிமையாகக் கருதுவதையே குறிக்கும் என்று பெரியார்தான் முதன்முதலில் முன்வைத்தார். அதேபோல பெண்ணுக்கு முழுமையான சொத்துரிமை கொடுக்கவேண்டும் என்று வெங்கடராம சாஸ்திரி என்பவர் சொன்னதை பெரியார் மிகவும் பாராட்டி எழுதியதாக அப்புசாமி சொன்னாராம்.

வெங்கடராம சாஸ்திரி என்பவர் ஒரு பார்ப்பனர். அவரை பெரியார் பாராட்டியிருப்பாரா என்று பி.ஏ.கேவுக்கு சந்தேகம். எனவே பி.ஏ.கே குடியரசு இதழ்களைத் தேடிப் பார்த்தபோது 1930-ம் ஆண்டில் ஏதோ ஒரு இதழில் பெரியார் விரிவான கட்டுரையை எழுதியிருந்தாராம். அதில் சாஸ்திரி தலைமை வகித்த ஏதோ ஒரு மீட்டிங்கில் இம்மாதிரி பெண்களுக்கான சொத்துரிமை பற்றிப் பேசியதை ஏற்றுக்கொண்டு, அவர் தொடர்ந்து இம்மாதிரியாக எழுதியிருந்தாராம். (நினைவிலிருந்து எழுதுகிறேன். சரியான மேற்கோளாக இருக்காது)
“நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் என்று ஒரு பொதுவான சிவில் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை ஆகியவற்றை வரவேற்கவேண்டும். ஆனால் முஸ்லிம்கள் இதனை ஏற்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். சாரதா சட்டம் வந்தபோது அவர்கள் இதனை எதிர்த்தனர். ஆனால் 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டு, 13-ம் நூற்றாண்டுக் கொள்கைகளை எடுத்துக்கொண்டு அதன்படிதான் மக்கள் வாழவேண்டும் என்று சொல்வது பரிகசிக்கத்தக்கது. எனவே இந்தப் பரிந்துரைகளை பார்ப்பனர்களும் பார்ப்பனர் அல்லாதவர்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.”
இந்தி எதிர்ப்பு

“இந்தி என்பது பார்ப்பன பாஷை. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் டிக்‌ஷனரியை எடுத்துப் பாருங்கள். இந்தியைத் திணிப்பது என்பதை மானம் உள்ள எவனும் ஏற்றுக்கொள்ளக் கூடாது” என்பதாக பெரியார் எழுதி, சொல்லிவந்தார். ஆனால் உண்மையில் பெரும்பாலான பார்ப்பனர்களுமே இந்தித் திணிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. காஞ்சிபுரம் பரவஸ்து ராஜகோபாலாச்சாரியார் (நீதிக் கட்சியில் இருந்த ஒரே பார்ப்பனர்) இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் வெகு தீவிரமாக இருந்தார்.

ஆனாலும் பெரியாரின் பார்வையில் இந்தி என்பது பார்ப்பன பாஷை என்பதாகவே இருந்தது.

கோவில் நுழைவு எதிர்ப்பு

இந்தப் பகுதியில் பி.ஏ.கே பேசியது எனக்கு அவ்வளவாகப் புரியவில்லை. இது தொடர்பான அடிப்படைகள் எனக்கு அவ்வளவாகத் தெரியாததுதான் காரணம். பல ஆங்கில மேற்கோள்களை அவர் இதில் படித்தார். அதில் யார் எதைச் சொன்னார்கள் என்பதில் எனக்கு அவ்வளவாகத் தெளிவாகவில்லை. இருந்தும் என் குறுகிய சம்மரி இதோ:

அனைவரும் கோவில்களில் நுழைய அனுமதிக்கும் வகையில் ராஜாஜி அரசு ‘கோவில் நுழைவு மசோதா’ ஒன்றைக் கொண்டுவர முனைந்துள்ளது. ஆனால் காஞ்சி சங்கராச்சாரியார் போன்ற சனாதனிகள் இதனை எதிர்த்தனர். பெரியார் ராஜாஜியை ஆதரிப்பதற்குபதில் சனாதனிகளை ஆதரித்தார் (என்றார் பி.ஏ.கே.). மேலும் இந்த சனாதனிகள் நீதிக் கட்சியில் சேர்ந்துகொள்ளவேண்டும் என்று பெரியார் கூறினாராம். சனாதனிகளும் பிராமணர் அல்லாதவர்களும் தங்களுக்குள் உடன்பாடு செய்துகொள்ளலாம் என்றும் இந்த சனாதனிகள் ‘அரசியல் பார்ப்பனர்களுடன்’ (அதாவது ராஜாஜி கூட்டத்துடன்) சேரக்கூடாது என்றும் பெரியார் சொன்னாராம்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கையை முஸ்லிம் லீக் முன்வைத்தபின் பெரியார் திராவிடஸ்தான் பிரிவினை கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கினார். இது தொடர்பாக பெரியாரும் ஜின்னாவும் நிறையக் கடிதப் போக்குவரத்து வைத்திருந்தனர்.

பெரியார், ‘திராவிடர்களும் முஸ்லிம்களும் ஒரே இனம்’ என்று தொடர்ந்து சொல்லிவந்தார். ஆங்கிலோ இந்தியர்கள் என்று சிலரை அழைப்பதைப் போல, பிராமணர்களை ஆரியோ இந்தியர்கள் என்று அழைக்கவேண்டும் என்று சொன்ன அவரே, வட நாட்டு முஸ்லிம்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களும் திராவிடர்கள்தான் என்று சொல்லிவந்தார்.

ஜின்னா பெரியாருக்கு எழுதிய கடிதத்தில், திராவிடஸ்தான் கோரிக்கையைத் தான் ஆதரிப்பதாகவும், ஆனால் இந்த விஷயத்தில் தன்னால் எதுவும் செய்யமுடியாது என்றும், இதனை தென்னிந்தியாவில் உள்ள 90% பெரும்பான்மை மக்களேதான் முடிவெடுத்துச் செய்யவேண்டும் என்றும் சொன்னார். 

திராவிடஸ்தான் அல்லது தமிழ்நாடு தனியாகப் பிரியவேண்டும் என்பதனை ராஜாஜியும் ஆதரிக்கிறார் என்று பெரியார் சொன்னாராம். (ஜே.பி.பி.மோரேயை மேற்கோள் காட்டி) “தமிழ்நாடு தனியாகப் பிரிவது தொடர்பாக... நான் ஆசாரியருடன் பேசியுள்ளேன். பிராமணர்களும் இதனை ஆதரிப்பார்கள். வட நாட்டார் ஆதிக்கத்தில் வாழ்வதை அவர்களும் விரும்பவில்லை” என்பதாகப் பெரியார் சொன்னார். ஆனால் அந்தக் கட்டத்துக்கு முன்னதாகவே ராஜாஜி காங்கிரஸுடன் சமரசம் செய்துகொண்டு மீண்டும் காங்கிரஸில் இணைந்திருந்தார். (வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை எதிர்த்து ராஜாஜி காங்கிரஸிலிருந்து பிரிந்திருந்தார்.) ஸ்வராஜ்யம் ஆறு மாதத்துக்குள்ளோ அல்லது ஆறு வருடத்துக்குள்ளோ கிடைத்தே தீரும் என்று ராஜாஜி ஏற்கெனவே சொல்லியிருந்தார். அப்படி இருக்கும்போது ராஜாஜி--பெரியார் பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது; எதனால் பெரியார் இப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை என்றார் பி.ஏ.கே. ராஜாஜியும் இது குறித்து எதையுமே சொல்லவில்லை.

பொதுவாக பெரியார் தொடர்பான விஷயங்களில் ராஜாஜி வெளிப்படையாக எதையுமே பேசியதில்லை என்றார் பி.ஏ.கே. இதற்கு உதாரணமாக மணியம்மை திருமணம் குறித்த விஷயம் பற்றிப் பேசினார். மணியம்மை திருமணம் காரணமாகவே திமுக பிரிந்து உருவானது. அதன்பின், ராஜாஜிதான் சூழ்ச்சி செய்து திராவிட இயக்கத்தை உடைக்கவேண்டும் என்பதற்காக பெரியார் மணியம்மை திருமணம் நடக்க உந்துகோலாக இருந்தார் என்று திமுக தொடர்ச்சியாகச் சொல்லிவந்துள்ளது. அதற்கு ராஜாஜி எந்தவிதக் கருத்தையும் கடைசிவரை தெரிவிக்கவில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்குமுன் ராஜாஜி பெரியாருக்கு எழுதிய கடிதத்தை வீரமணி வெளியிட்டார். அதில், இந்தத் திருமணம் வேண்டாம் என்றுதான் ராஜாஜி எழுதியிருந்தார் என்றார் பி.ஏ.கே.

திமுக ஆட்சியைப் பிடித்தபின் பெரியார்

திமுக பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை முழுதாக எடுத்துக்கொள்ளவே இல்லை. ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’, ‘பிள்ளையார் சிலையை உடைக்கவும் மாட்டோம், பிள்ளையார் கோவில் வாசலில் தேங்காயை உடைக்கவும் மாட்டோம்’ என்று திமுக பேசியது. அந்தக் காலத்தில் மூன்றுவித பிராமணர்கள் இருந்தனர்.
 1. பெரியாரை ‘அவன்’, ‘இவன்’ என்று தூற்றிய பிராமணர்கள்
 2. பெரியாரை ‘மகான்’ என்று போற்றிய பிராமணர்கள். (காஞ்சி சங்கராச்சாரியார், பெரியாரின் பேச்சைக் கேட்டுத்தான் பல்லக்கில் செல்வதை விட்டுவிட்டு கால்நடையாக நடக்க ஆரம்பித்தார் என்று சில பிராமணர்கள் எழுதினார்களாம்.)
 3. பெரியாரின் (பிராமண விரோத, கடவுள் விரோத) கருத்துகளை மட்டும் எதிர்க்கும் பிராமணர்கள்
தமிழகத்தில் பெரியாரின் இடம்

தமிழகத்தின் மிக முக்கியமான நபர் யார் என்று கேட்டால், பாமரர்களாக இருந்தால் ‘எம்.ஜி.ஆர்’ என்பார்கள். படித்தவர்கள் என்றால் கட்டாயம் ‘பெரியார்’ என்றுதான் சொல்வார்கள். அண்ணா, காமராஜ், ராஜாஜி போன்ற அனைவருமே அடுத்த கட்டம்தான்.

பெரியார் பற்றி நான் (பி.ஏ.கே) என்ன நினைக்கிறேன்

இட ஒதுக்கீடு: இந்தியாவில் ஆரம்பம் முதல் கடைசிவரை தொடர்ந்து இட ஒதுக்கீட்டுக்காகக் குரல் கொடுத்தவர் பெரியார்தான். இட ஒதுக்கீடு விளைவாகத்தான் இன்று தமிழகத்தில் கட் ஆஃப் மதிப்பெண்களைப் பார்க்கும்போது அனைத்துச் சாதியினருக்கும் (பிரிவினருக்கும்) கிட்டத்தட்ட ஒரே அளவு கட் ஆஃப் மதிப்பெண்களுக்குள் வரும் அளவு போட்டி ஏற்பட்டுள்ளது.

பிராமண சதி: எதற்கெடுத்தாலும் பிராமண சதிதான் காரணம் என்ற கருத்தை ஏற்படுத்தியவர் பெரியார். இதுபோல் வேறு யாரும் இந்த அளவுக்கு இம்மாதிரிப் பேசியதாகத் தெரியவில்லை. இன்று இணையத்தில் அல்லது பொதுவழக்கில் எதற்கெடுத்தாலும் பிராமணர்கள்தான் காரணம் என்பதுபோலப் பேசப்படுவதற்கு பெரியார்தான் காரணம். (இணையத்தில் ஐஸ்வர்யா ராயை பச்சன் குடும்பத்தில் மணந்துகொள்ளக் காரணம் பிராமண/உயர்சாதி சதி என்பதாகச் செல்லும் troll ஒன்றை பி.ஏ.கே. சுட்டிக்காட்டினார்.)

வந்தேறிகள்: இந்தியாவில் உள்ள அனைவருமே (ஆப்பிரிக்காவிலிருந்து அல்லது சுமேரியாவிலிருந்து வந்த) வந்தேறிகள்தான். ஆனால் இந்த மரபணு ஆராய்ச்சி பற்றி பெரியாருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பிராமண ஆதிக்கம்: சோழர்கள் காலத்தில் அரசு அதிகாரிகளில் 7% பேர்தான் பிராமணர்கள். ஆனால், 19-ம் நூற்றாண்டிலும் 20-ம் நூற்றாண்டின் பாதி வரையிலும் பிராமணர்கள் அரசு வேலைகளில் அவர்களுடைய சதவிகிதத்தைவிட மிக அதிக இடங்களைப் பெற்றிருந்தனர் என்பதில் சந்தேகமே இல்லை. அதனைத் தடுத்து நிறுத்தி பிராமணர் அல்லாதாருக்கான வேலைவாய்ப்புகளையும் கல்வியில் சரியான இடத்தையும் வாங்கித் தந்ததில் பெரியாருக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது. ஆனால் பிற சாதியினர் படிக்கக்கூடாது, வேலைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது என்று பிராமணர்கள் தடுத்தார்கள், சூழ்ச்சி செய்தார்கள் என்று சொல்வதில் நியாயமே இல்லை.

சாதிகள் பற்றிப் பேசுபவர்கள் இடக்கை, வலக்கை சாதிகளுக்கு இடையே நடந்த பிரச்னைகள் பற்றி யாருமே பேசுவதில்லை. அதில் பிராமணர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை.

சூத்திரன் என்ற வார்த்தை: 1925 முதல் தன் வாழ்நாள் இறுதிவரை சூத்திரன் என்ற சொல்லின் பொருள் ‘பிராமணரின் வைப்பாட்டி மகன்’ என்று மனு ஸ்ம்ருதி 445-வது ஸ்லோகத்தில் (ஸ்லோகம் எண் சரியாக நினைவில் இல்லை) உள்ளது என்று பெரியார் திரும்பத் திரும்பச் சொல்லிவந்தார். மனு ஸ்ம்ருதி தேவையற்ற ஒன்று, மிக மோசமான கருத்துகளைக் கொண்டுள்ள ஒன்று என்பதில் எனக்கு எந்த மாற்றக் கருத்தும் இல்லை.
ஆனால் ப்யூலர் (மொழிமாற்றம் 1886), வெண்டி டோனிகர் (மொழிமாற்றம் 1991) ஆகியோரின் மொழிபெயர்ப்புகளை நான் பார்த்துவிட்டேன். பெரியார் சொன்னதுபோல் எங்குமே இல்லை. எங்கிருந்து இந்த மொழிபெயர்ப்பை எடுத்தார் என்று யாராவது சொல்லமுடியுமா?

அறிவியல் தன்மை: பெரியாருக்கு அறிவியல்மீது மிகுந்த நாட்டம் இருந்தது. கடைசிவரை ஒரு குழந்தைபோல ஆர்வத்துடன் அறிவியல் முன்னேற்றங்களைப் பற்றிப் பேசியும் எழுதியும் வந்தார். ஆனால் அறிவியல் மிக முக்கியமாக மதிக்கும் objectivity என்ற தன்மை அவரிடம் சிறிதும் இல்லை. முக்கியமாக காந்தி விஷயத்தில் அவரிடம் ஆப்ஜெக்டிவிடி இல்லவே இல்லை. கடைசிவரை (காந்தி கொல்லப்பட்ட சமயத்தைத் தவிர. அப்போது இந்தியாவுக்கு காந்தி தேசம் என்று பெயர் வைக்கவேண்டும் என்று சொன்னாராம்.) அவர் காந்தியைக் கடுமையாகத் தாக்கியபடி இருந்தார். காந்தி ஜெயந்தி கொண்டாடுவது கூடாது என்றார்.

பெரியாரின் பார்வையில் பிராமணர்கள்

பெரியாரின் கடைசிப் பேச்சு (மரண சாசனம்) இணையத்தில் முழுதும் கேட்கக் கிடைக்கிறது. வாழ்நாளின் இறுதிக் கட்டத்திலும் மிகவும் passionate ஆக, அழுத்தத்துடன் அவர் பேசுகிறார். இதில் அவர் சொல்லும் பலவற்றில் பார்ப்பனர்களைப் பற்றிய இரண்டு விஷயங்கள்:

(1) பார்ப்பானைப் பார்த்தால், ‘வாப்பா தேவடியா மவனே, எப்ப வந்தே?’ என்று கேட்கவேண்டும்.

(2) சுய மரியாதை இயக்கத்தின் ஐந்து கொள்கைகள்
1. கடவுள் ஒழியவேண்டும்
2. மதம் ஒழியவேண்டும்
3. காந்தி ஒழியவேண்டும்
4. காங்கிரஸ் ஒழியவேண்டும்
5. பார்ப்பான் ஒழியவேண்டும்
ஒழி, ஒழி என்றே உருவாக்கப்பட்ட ஒன்று எந்த அளவுக்கு உலகில் நிலைத்திருக்கும்? ஓரிடத்தில் பெரியார் பிராமணர்களையும் யூதர்களையும் ஒப்பிடுகிறார். இவ்வாறு சொல்கிறாராம் பெரியார்: (approximate quote) “பிராமணர்களும் யூதர்களும் ஒன்றுதான். யூதர்கள் பல நாடுகளில் இருந்தாலும் அவர்களுக்கு எந்த நாட்டின்மீதும் பக்தியில்லை. வாழும் இடத்தில் ஆட்சியாளர்களை வளைத்துக்கொண்டு தங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்கிறார்கள். அதேபோலத்தான் பிராமணர்களும். அவர்களுக்கும் நாட்டின்மீது பக்தியில்லை. அவர்களும் ஆட்சியாளர்களை வளைத்துக்கொண்டு வேண்டியதைச் சாதித்துக்கொள்கிறார்கள்.”

***

மேலும் பல விஷயங்கள் அந்தப் பேச்சில் இருந்தன. ஆனால் முடிந்தவரை crux என்னவோ அதைப் பிடித்து எழுதிவிட்டேன் என்றே நினைக்கிறேன்.

Tuesday, January 08, 2013

நான் எழுதிய பரீட்சைகள்

சென்ற ஆண்டு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைப் படிப்புமூலம் எம்.ஏ வைணவம் சேர்ந்தது பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதன் முதல் ஆண்டுப் பரீட்சைகள் சென்ற ஆண்டு (2012 ஜூன்) நடைபெற்றன. ஆனால் பரீட்சை தேதி கைக்குக் கிடைப்பதற்குமுன், இமயமலையில் பிரம்மி தால் என்ற பகுதியில் ஏறுவதற்காக நண்பர்களுடன் செல்ல முன்னதாகவே முடிவெடுத்திருந்தேன். பரீட்சையைப் பிறகு எழுதிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். பணம் கட்டியதோடு போயிற்று.

மீண்டும் அதே தேர்வுகளை டிசம்பர் 29, 30, ஜனவரி 5, 6, 12 ஆகிய தேதிகளில் சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. ஆனால் இந்தத் தேதிகளில்தான் பரீட்சை என்பது தெரிவதற்கு முன்பாகவே, உத்தமம் (INFITT) அமைப்பின் 11வது உலகத் தமிழ் இணைய மாநாட்டின் நிகழ்ச்சிக் குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தேன். அந்த மாநாடு டிசம்பர் 28-30 தேதிகளில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. எனவே முதல் இரு தேர்வுகளையும் மீண்டும் எழுதமுடியாமல் போனது. ஆனால் ஜனவரி 5, 6 தேதிகளில் நடைபெற்ற தேர்வுகளை எழுதி முடித்துவிட்டேன். 12 அன்று ஒன்று பாக்கி. சென்னை புத்தகக் கண்காட்சி ஆரம்பித்துவிடும் என்றாலும் தேர்வைக் கட்டாயம் எழுதிவிடுவேன்.

இதுதான் நான் பல ஆண்டுகளுக்குப் பின் எழுதும் ‘பொதுத் தேர்வு’. கடைசியாக இப்படிப்பட்ட ஒரு தேர்வை நான் எழுதியது 1987-ம் ஆண்டில் எழுதிய 12-ம் வகுப்புத் தேர்வு! அதன்பின் ஐஐடியிலும் கார்னல் பல்கலைக்கழகத்திலும் எழுதிய தேர்வுகள் உங்கள் வகுப்புக்கு மட்டும் நடத்தப்படும் தேர்வுகளே. அதனால் தேவையற்ற கெடுபிடிகள் எல்லாம் கிடையாது. கார்னலில் பல தேர்வுகள், திறந்த புத்தகத் தேர்வுகள் அல்லது நேர வரையறை அற்ற தேர்வுகள். மேலும் 12-ம் வகுப்புக்குப் பிறகு பக்கம் பக்கமாக எழுதவேண்டிய தேர்வுகள் எவற்றையும் நான் எழுதியதில்லை.

இங்கே பயங்கரக் கெடுபிடியாக உள்ளது. நீங்கள் பதில் எழுதும் தாள் என்பது உண்மையில் ஒரு நோட்டுப் புத்தகம் போல் உள்ளது. மேற்கொண்டு பக்கங்கள் கொடுக்கமாட்டார்களாம். அதற்குள் நீங்கள் எழுதினால் ஆயிற்று. (ஆனால் அவர்கள் கொடுப்பதற்குமேல் பக்கங்கள் தேவை இருக்கவில்லை.) ஓர் அரசாங்க அலுவலகத்தில் படிவங்களை நிரப்புவதுபோல் நிறைய எழுதவேண்டியிருக்கிறது. உங்கள் பெயர். உங்கள் ரோல் நம்பர் எண்ணிலும் எழுத்திலும். தேர்வு எழுதும் இடத்தின் பெயர், அதன் குறியீட்டு எண். உங்கள் தேர்வுப்பாடத்தின் பெயர், அதன் குறியீட்டு எண், உங்கள் பிறந்த தேதி, உங்களுக்குத் தரப்படும் கேள்வித்தாளில் உள்ள குறியீட்டு எண். அதன்பின் பதில் புத்தகத்தில் நீங்கள் கையெழுத்திட்டு அருகில் தேர்வுக் கண்காணிப்பாளரும் கையெழுத்திட வேண்டும்.

உங்கள் பதில் புத்தகத்துக்கு என்று தனியான ஒரு சீரியல் நம்பர் உள்ளது. உங்கள் அருகில் உட்கார்ந்திருப்பவருக்குத் தரப்படும் புத்தகத்தில் வேறு ஓர் எண் இருக்கும். தேர்வு எழுதுவோர் அனைவருடைய பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கும் தாளில் அவரவர் பெயருக்கு நேராக, அவரவருடைய பதில் புத்தகத்தில் உள்ள எண்ணை எழுதி, அதற்கு அருகில் ஒரு கையெழுத்து இடவேண்டும்.

இந்தப் பதில் புத்தகங்களை மதிப்பிடுவதற்கு அனுப்பும்போது உங்கள் பெயர், ரோல் நம்பர் எழுதிய பகுதியைப் பிய்த்துவிட்டு டம்மி எண் ஒன்றைக் கொடுத்து அனுப்புவார்களாம்.

*

எம்.ஏ வைணவம், தமிழ் வழிப் பாடம். நான் கையால் தமிழ் எழுதிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. உண்மையில் கையெழுத்து போடுவதைத் தவிர மீதி எதையும் கையால் எழுதுவதில்லை! இந்தப் பரீட்சைக்காக, இருக்கும் கொஞ்ச நேரத்தில் கொஞ்சமாக எழுதிப் பார்த்தேன். ஆனால் பரீட்சையில் நேர நெருக்கடியில் எழுதுவது என்பது நிஜமாகவே கடினமாக இருந்தது. கையெழுத்து சீராக வரவில்லை. ஹ, ஷ, க்ஷ போன்ற கிரந்த எழுத்துகள் எழுதக் கஷ்டமாக இருந்தன. அடித்துத் திருத்தாமல் எழுதப் பெருமுயற்சி எடுக்கவேண்டியிருந்தது. ‘சேதனன்’ என்ற வார்த்தையை எழுத முற்படும்போது, முதலில் ‘தே’ (ச போலவே த உள்ளதல்லவா?) என்று எழுதிவிட்டால் பிறகு கை backspace-ஐத் தேடுகிறது. கணினியின் கீபோர்ட் என்னும் மனத்தடையை மீறித்தான் பரீட்சை எழுதவேண்டியிருந்தது.

நான் எழுதிய முதல் தேர்வு ‘திருமங்கையாழ்வார் பாசுரங்கள்’. அடுத்தது ‘ரஹஸ்ய இலக்கியங்கள்’. இனி எழுதவேண்டிய தாள் ‘பல்வேறு வைணவ சித்தாந்தங்கள்’.

நாங்கள் பரீட்சை எழுதிய அறையில் பிற பாடங்களில் பரீட்சை எழுதுபவர்களும் உள்ளனர். ஆட்களை உட்காரவைப்பதில் பெரும் முயற்சிகள் எதையும் கண்காணிப்பாளர் செய்வதில்லை. ஒரே தாளை எழுதும் இருவர் அருகருகில் உட்கார்ந்துகொள்கின்றனர். நான் பார்த்தவரை யாரும் பிட் அடித்ததாகத் தெரியவில்லை. ஓரிருவர் அறையில் தங்களுக்குள் பேசிக்கொண்டே இருந்தனர். ஓரிருமுறை எச்சரிக்கை செய்தபிறகு அடங்கினர்.

மூன்று மணி நேரம் சேர்ந்தாற்போல ஓரிடத்தில் உட்கார்ந்து பரீட்சை எழுதியபோதுதான் ஒன்றை உணர்ந்தேன். கடந்த 20 வருடங்களில் சேர்ந்தாற்போல் ஓரிடத்தில், போனை ஆஃப் செய்துவிட்டு, பிறருடன் பேசாமல் உட்கார்ந்திருப்பது இதுதான் முதல் தடவை என்று.

கடைசி 20-30 நிமிடங்களில் கண்காணிப்பாளர் பெரும் தொல்லை செய்கிறார். இன்னும் 15 நிமிடங்கள், இன்னும் 10 நிமிடங்கள், இன்னும் 5 நிமிடங்கள் என்று சொல்லிப் பதட்டத்தை ஏற்படுத்துகிறார். ஞாயிறு அன்று தேர்வு எழுதுவோர் கண்காணிப்பாளருடன் ‘உங்க வாட்ச் தப்பு, இன்னும் 10 நிமிடம் இருக்கு’ என்றெல்லாம் சண்டை போட ஆரம்பித்துவிட்டனர். நான் எழுதி முடித்துவிட்டதால் தாளைக் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டேன். மேலும் அதிக டைம் கொடுக்கப்பட்டதா என்று தெரியாது.

சில ஆசாமிகள் இருக்கிறார்கள். வந்து ஒரு மணி நேரம் ஆவதற்குமுன்பே பதில் புத்தகத்தை ஜோராக கண்காணிப்பாளர் கையில் கொடுத்துவிட்டு ஹாயாக வெளியேறுகிறார்கள். இதற்கு ஏன் பரீட்சைக்கு வரவேண்டும் என்று தெரியவில்லை. நிச்சயமாக அவர்களால் தேர்வை ஒழுங்காக எழுதியிருக்க முடியாது.

*

[நான் முதல் தேர்வை மிக மிக நன்றாகவும், அடுத்ததை மிக நன்றாகவும் எழுதியுள்ளேன். எனக்குத் தனிப்பட்ட முறையில் இந்தத் தேர்வு முறை பிரச்னை அளிக்கவில்லை.

ஆனால் கூர்ந்து பார்த்தால், இந்தத் தேர்வு முறை என்பது சரியானதுதான என்ற கேள்வி எழுகிறது. அதுவும் முக்கியமாக ‘நீண்ட கட்டுரை’ எழுதச் சொல்லும் முறை. மொத்தமாக ஒவ்வொரு பரீட்சையிலும் அனைத்துக் கேள்விகளுக்கும் சேர்த்து 4,400 வார்த்தைகள் எழுதச் சொல்லிக் கேட்கிறார்கள். மூன்று மணி நேரத்தில் கேள்விகளைப் புரிந்துகொண்டு இத்தனை வார்த்தைகளை எழுதித் தள்ளுவது என்பது சாத்தியமா? ஒருவரது புரிதல் எவ்வளவு தூரம் என்பதைத் தெரிந்துகொள்ள வேறு பல முறைகள் இருக்கின்றனவே?

இந்தத் தேர்வுக்கு மாற்றுமுறையைக் கொண்டுவருவது மிக அவசியம் என்று நினைக்கிறேன்.