Thursday, December 31, 2009

NHM இணையக் கடையில் அஞ்சல் செலவு offer

கடந்த சில மாதங்களாக NHM.in கடையில் புத்தகங்கள் வாங்கினால், இந்தியாவுக்குள் அனுப்பவேண்டும் என்றால், ரூ. 250-க்குமேல் வாங்குபவர்களுக்கு அஞ்சல் செலவு இலவசம் என்று சொல்லியிருந்தோம். சென்னைக்கு வெளியில் என்றால் பதிவு அஞ்சல்மூலம் மட்டுமே இந்த இலவசச் சேவையைத் தருவோம். கூரியரில் அனுப்பவேண்டும் என்றால் அதற்கு தனிச் செலவாகும்.

இந்தச் சலுகையை மேம்படுத்தி, இப்போதிலிருந்து, ரூ. 150-க்கு புத்தகம் வாங்குபவர்களுக்கே அஞ்சல் செலவு இலவசமாகத் தர முடிவு செய்துள்ளோம்.

புத்தாண்டில் எங்கள் வாசகர்கள் இந்த முடிவை வரவேற்பார்கள் என்று நம்புகிறோம்.

கிழக்கு பதிப்பகம் மற்றும் நியூ ஹொரைஸன் மீடியா சார்பாக ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

லண்டன் டயரி - இரா.முருகன்

இந்த ஆண்டு நான் வேலை செய்த புத்தகங்களில் ரசித்து ரசித்துப் படித்தது இரா.முருகனின் லண்டன் டயரி. லண்டனில் பல மாதங்கள் தங்கியிருக்கிறேன். தெருக்களில் தனியாகச் சுற்றியிருக்கிறேன். நாள் முழுமைக்குமான அல்லது வார இறுதிக்கான தரையடி ரயில் டிக்கெட் எடுத்து ஊர் சுற்றியிருக்கிறேன். ஆனால் எப்போதும் ஒரு எழுத்தாளனின் பார்வையில் நகரைப் பார்வையிட்டது கிடையாது; மக்களைப் பார்த்தது கிடையாது. அவர்களை மனத்தளவிலாவது குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது கிடையாது.

ஆரம்பத்தில் வியக்கவைத்த கட்டடங்கள்கூட ஒரு கட்டத்தில் பிரமைகள் அகன்று சாதாரணமான இடங்களாகத் தோன்ற ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் மெஷின் போல பாடிங்க்டன் ரயில் நிலையத்துக்குச் சென்று, அங்கே கிடைக்கும் விதவிதமான சூப் கிண்ணங்களை வாங்கிக்கொண்டு, குறிப்பிட்ட பாதையைத் தேர்ந்தெடுத்து, ரயிலில் ஏறி, ரயில் மாறி, இறங்கவேண்டிய இடம் வந்ததும் இறங்கி, கூட்ட நெரிசலில் கரைந்து ஒரு புள்ளியாகி, அலுவலகம் சென்று, வேலையை முடித்து, மீண்டும் அதே பாதையைப் பின்பற்றி, மீண்டும் வசிக்கும் ஹோட்டல் வந்து, மீண்டும்...

இரா.முருகனின் புத்தகத்தை எடிட் செய்ய எடுத்தபோது நான் எங்கோ விட்டு வந்திருந்த லண்டன் மீண்டும் நினைவுக்கு வர ஆரம்பித்தது. இது தினமணி கதிரில் தொடராக வந்தபோது படித்திருந்தேன். ஆனால் விட்டு விட்டு (சில வாரங்கள் ஊர்ப் பயணத்தில் நிஜமாகவே விட்டுப்போய்) படித்ததில் அதே அனுபவம் வாய்க்கவில்லை. இப்போது மொத்தமாகப் படித்ததில் ஒரு முழுமை கிடைத்தது. லண்டனையே பார்த்திராதவர்கள் இந்தப் புத்தகத்தை எப்படிப் புரிந்துகொள்வார்கள்? தெரியவில்லை. புத்தகத்தைப் படித்த யாராவதுதான் சொல்லவேண்டும்.

லண்டனில் தனது நடைப்பயணங்களை முன்வைத்து இரா.முருகன் எழுதியதுடன், கூடவே தன் இயல்பான நகைச்சுவை நடையில் லண்டனின் வரலாற்றையும் தனியாகப் பின்னர் கொடுத்திருந்தார். ஆனால் அது தனியாகப் பின்னால் ஒட்டவைத்தால் சரியாக வரும் என்று எனக்குத் தோன்றவில்லை. எனவே அந்த வரலாற்றைப் பல துண்டங்களாகப் பிய்த்து ஒவ்வொரு அனுபவ அத்தியாயத்துக்கு முன்னதாக ஒரு துண்டாகச் சேர்த்தேன். இப்போது எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் பா.ராகவனுக்கு அந்த அளவுக்குப் பிடிக்கவில்லை. கடைசியில் எனது மாற்றத்தை இரா.முருகனுக்கு அனுப்பி அவரது ஒப்புதலும் பெற்றபிறகு புத்தகமானது.

வேண்டிய படங்கள் சேர்க்கப்பட்டு, புத்தகம் உயிர்பெறத் தொடங்கியது. ஈஸ்ட் ஹாம் படம் ஒன்று தேவை. கிரிதரன் உதவினார். ஒரு வார இறுதியில் ஈஸ்ட் ஹாம் சென்று பல படங்களைக் கிளிக்கி அனுப்பிவைத்தார். அதிலிருந்து ஒரு படத்தை எடுத்துக்கொண்டோம்.

ஆக, இது வரலாறா? ஒரு தனி மனிதன் உலகின் பெரு நகரம் ஒன்றில் பெற்ற அனுபவங்களா?

இரண்டும் கலந்தது. இனிமையானது.

இதை ஸ்காட்லாந்து டயரி (அல்லது எடின்பரோ டயரி?) என்றல்லவா சொல்லவேண்டும் என்று கேட்டார் கிரிதரன். ஏனெனில் இதில் உள்ள அனைத்தும் எடின்பரோவில் வசித்த காலத்தில் இரா.முருகன் எழுதியவை. ஆனால் இது லண்டன் பற்றிய டயரி அல்லவா? ஒவ்வொரு வார இறுதியும் எடின்பரோவிலிருந்து லண்டன் வந்து சுற்றியபின் அவர் எழுதியது.

எந்த டயரியாக இருந்தாலும் சரி, இந்த நடையில் எழுதினால், படித்துக்கொண்டே இருக்கலாம்!

புத்தகத்தை வாங்க.
.

கர்நாடக சங்கீதம்: ஓர் எளிய அறிமுகம்

சென்ற மாதம், மகாதேவன் ரமேஷ் எழுதிய A Gentle Introduction to Carnatic Music என்ற புத்தகம் பற்றி என் வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அப்போது இந்தப் புத்தகத்தை தமிழில் கொண்டுவர விருப்பம் என்று தெரிவித்திருந்தேன். ஆனால் அது இவ்வளவு விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

அந்தப் பதிவைப் பார்த்த உடனேயே பிரிட்டனில் வசிக்கும் கிரிதரன் ராஜகோபாலன் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். உடனேயே அவருக்கு மகாதேவன் ரமேஷின் புத்தகத்தை பி.டி.எஃப் கோப்பாக்கி அனுப்பிவைத்தேன். கிரிதரன் ஒவ்வொரு நாளும் ஒரு சாப்டராக மொழிமாற்றி எனக்கு அனுப்பிவைப்பார். நானும் அன்றன்றைக்கே அதனை எடிட் செய்துவிடுவேன்.

இப்படி இரண்டு வாரங்களுக்குள்ளாக அந்தப் புத்தகத்தை எடிட் செய்து முடித்து, தமிழ் வெர்ஷனை மகாதேவன் ரமேஷுக்கு பி.டி.எஃப் கோப்பாக அனுப்பினேன். ஃபோன் மூலமாகவே மாற்றங்களைச் செய்தோம்.

ஆங்கில வெர்ஷனில் கர்நாடக இசையின் சில நுட்பங்களை விளக்க, ‘பா பா பிளாக் ஷீப்’ பாடலையும், ‘ரூப்பு தேரா மஸ்தானா’ பாடலையும் பயன்படுத்தியிருப்பார். தமிழ் வெர்ஷனில் ரூப்பு தேராவுக்கு பதிலாக தமிழ்ப் பாடல் ஒன்று வேண்டும் என்று கேட்டிருந்தேன். அதற்காக ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ என்ற இளையராஜா இசையில் அமைந்த திரைப்பாடலைப் பயன்படுத்தினார். அதற்காக பல இடங்களில் மாற்றங்கள் செய்யவேண்டியதாயிற்று. அனைத்தையும் தொலைபேசி மூலமாகவே செய்தோம்.

இந்தப் புத்தகம் இப்போது அச்சாகிக்கொண்டிருக்கிறது. நாளை முதல் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.

கிழக்கின் தொழிலில் இணையம் எப்படிப் பயன்படுகிறது என்று ரவிசங்கர் கேட்டிருந்தார். இது ஓர் உதாரணம். இருவரும் சென்னையிலேயே இருந்தாலும், மகாதேவன் ரமேஷை நான் நேரில் சந்தித்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகின்றன. கிரிதரனை எனக்கு யார் என்று தெரியாது. வலைப்பதிவிலும் ட்விட்டரிலும் ‘பார்த்தது’தான். (ஆனால் அவர் என் மனைவி வழியில் எனக்கு உறவினர் என்று இப்போது கண்டுபிடித்துள்ளார்! ஆனாலும் அவர் முகம் எனக்கு ஞாபகத்தில் இல்லை.) கிரிதரனும் மகாதேவன் ரமேஷும் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை. ஆனால் வெகு குறைவான காலகட்டத்தில் இந்தப் புத்தகத்தின் தமிழாக்கத்தைக் கொண்டுவந்திருக்கிறோம்.

வாத்யார்: எம்.ஜி.ஆர் வாழ்க்கை

எம்.ஜி.ஆர் ஒரு விசித்திர மனிதர். மேலோட்டமாகப் பார்க்கும்போது எனக்கு அவர் ஒரு கோமாளியாக மட்டுமே தெரிந்தார். நாகப்பட்டினத்தில் என் வீட்டுச் சுவரில் யாரோ ஒட்டிவிட்டுப் போயிருந்த எம்.ஜி.ஆர் போஸ்டர்களை நான் கிழித்து எறிய, அதனால் கடும் ஆவேசம் கொண்ட சில ரசிகர்களின் கெட்ட பேச்சுகளுக்கு ஆளாகியிருக்கிறேன்.

ஐந்தாம் வகுப்பு வரை நான் படித்த பள்ளியில் கருணாநிதி, கலியமூர்த்தி என்று இரு தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என் வகுப்பில் இருந்தனர். தினம் தினம் கலைஞர் கருணாநிதியையும் நடிகர் சிவாஜி கணேசனையும் திட்டித் தீர்ப்பதுதான் அவர்கள் வேலை. அவர்கள் இன்றும் எம்.ஜி.ஆரை வழிபடும் பக்தர்களாகவே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

தமிழ்ச் சினிமாக்களில் எம்.ஜி.ஆர்தான் முதல் கமர்ஷியல் ஹீரோ. அவரைப் போட்டுப் படம் எடுத்தால் வெற்றி நிச்சயம். ஆனால் அவர் ஆரம்பத்தில் ஒரு ஹீரோவாக நடிப்பதற்கே எண்ணற்ற ஆண்டுகள் ஆயின என்பது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. இன்றைக்கு முதல் படத்திலிருந்தே தாங்கள்தான் உலக மகா ஹீரோ என்ற நினைப்புடன் நடிக்கும் அரை வேக்காட்டு அபத்த நடிகர்களை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டால் மலைப்பே ஏற்படுகிறது.

தனிப்பட்ட முறையில் எந்த எம்.ஜி.ஆர் படத்தையும் முழுதாக உட்கார்ந்து என்னால் பார்க்க முடிந்ததில்லை. அவர் படங்கள் வேறு யாருக்காகவோ எடுக்கப்பட்டுள்ளன என்று விட்டுவிடுவேன்.

அரசியல் தளத்தில் எம்.ஜி.ஆர் எனக்குத் தனித்துத் தெரிந்தார். அவரால் எப்படி அந்தக் கட்டத்தில் ஒரு கட்சியை உருவாக்க முடிந்தது என்பதில் எனக்குப் பெருத்த ஆச்சரியம். கருணாநிதி தீவிரமான கட்சி அரசியலில் ஈடுபட்டு, கட்சியில் அமைப்புரீதியாக ஆதிக்கம் செலுத்தினார். ஆனால் எம்.ஜி.ஆர் நிதி திரட்டுவது, பிரசாரங்களில் ஈடுபடுவது, சினிமாவில் திமுக கொடி, சின்னம், கருத்து ஆகியவற்றைப் புகுத்துவது என்ற அளவில்மட்டுமே இருந்து வந்தார். திமுகவிலிருந்து நீக்கப்பட்டதும், கட்சியில் செல்வாக்குள்ள யாருமே எம்.ஜி.ஆர் தரப்புக்கு வரவில்லை. நாஞ்சில் மனோகரன், கே.ஏ.மதியழகன் தவிர. இவர்களுடனும் தன் கூடவே இருக்கும் ஆர்.எம்.வீரப்பனுடனும் சேர்ந்து எம்.ஜி.ஆர் ஒரு முழு அரசியல் கட்சியை உருவாக்கியிருந்தார். அது பெரும் ஆச்சரியம்தான்.

எம்.ஜி.ஆர் ஒரு முதலமைச்சராக எப்படிப் பணியாற்றினார் என்று தெளிவான பதிவுகள் இல்லை. ஆனால் என் சிறு வயதில், எம்.ஜி.ஆருக்கு எதிராக மக்கள் பேசி நான் கேட்டதே இல்லை. ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதும் அவர் மேல் ஒட்டியதே இல்லை. பாராட்டுகள் எல்லாம் எம்.ஜி.ஆருக்குப் போகும்; இழிசொற்கள் எல்லாம் பிற அதிமுகவினருக்கும் அதிகாரிகளுக்கும் போகும். எப்படி அப்படி ஒரு தெய்வம் போன்ற இமேஜை அவரால் உருவாக்க முடிந்தது என்பது மாபெரும் ஆச்சரியம்தான்.

என்றாவது, யாராவது ஒருவர் எம்.ஜி.ஆரின் நிர்வாகத் திறன் பற்றி ஒரு புத்தகம் எழுதக்கூடும். தமிழகத்தில் பெரும்பாலான இடங்களுக்கு நல்ல சாலை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தது எம்.ஜி.ஆர்தான் என்று ஏதோ காரணத்தால் நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். அது உண்மையா என்று தெரியவில்லை. எம்.ஜி.ஆர் அவ்வப்போது ‘அண்ணாயிசம்’ என்று தன் ‘கொள்கை’களை விளக்க முற்பட்டாலும், அடிமனத்தில் மக்கள் வாழ்வில் மலர்ச்சி ஏற்படவேண்டும் என்று நினைத்த ஒரு மக்கள் தலைவர் என்ற எண்ணமும் என் மனத்தில் ஏற்பட்டுள்ளது.

அவர் தன் வாழ்நாளில், ஏதோ ஒருவிதத்தில் பெரும்பான்மையான தமிழர்களைப் பாதித்திருந்தார். அவர் நோயில் படுத்திருந்த காலத்தில், அந்த உடல்நிலையில் அவர் நிர்வாகத்துக்குச் சற்றும் லாயக்கற்றவர் என்பதைச் சிறிதும் உணராமல் மக்கள் அவருக்கு வாக்களித்தனர். சாதாரண ஏழை மக்களின் நெஞ்சத்தை அவர் தொட்டிருக்காவிட்டால் இதைச் சாதித்திருக்கமுடியாது. அவரது மறைவின்போது சென்னையில் நடந்த கலாட்டாக்களை நான் நேரில் பார்த்தேன். (அப்போது நான் சென்னை ஐஐடியில் படித்துக்கொண்டிருந்தேன். சைக்கிளை எடுத்துக்கொண்டு அண்ணா சாலையில் முட்டாள்தனமாக சுற்றினேன். பைத்தியம் பிடித்த ரசிகர்கள் யாராவது என்னை நையப் புடைத்திருக்கக்கூடும்! நல்லவேளையாக எந்தச் சேதாரமும் இன்றி ஹாஸ்டலுக்குத் திரும்பி வந்துவிட்டேன்!)

அவர் மறைந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அவரது நினைவு நாள் அன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.

வாத்யார் என்றாலே பொதுமக்களுக்கு அவர் ஒருவர்தான். (இந்தப் பெயர் ஏன் வந்தது?)

===

எம்.ஜி.ஆர் பற்றிய முத்துக்குமாரின் புத்தகத்தில் ஓரளவுக்கு முழுமையான சித்திரம் உருவாகியிருக்கிறது என்று நினைக்கிறேன். ஆயினும் நிறைய விடுபடல்கள் உள்ளன. முத்துக்குமார் தனது இரண்டாவது எடிஷனில் நிறையச் சேர்க்கக்கூடும்.

முத்துக்குமாரின் எழுத்தில் நல்ல முதிர்ச்சி வந்துள்ளது.

தீவிர திமுக அனுதாபியான முத்துக்குமார் எம்.ஜி.ஆரை நேர்மையாகவே கையாண்டுள்ளார். முத்துக்குமார் கருணாநிதி வாழ்க்கை வரலாறு எழுதினால் எப்படி இருக்கும் என்று பார்க்கவேண்டும்.

[மேலே நான் எம்.ஜி.ஆர் பற்றி எழுதியதற்கும் எம்.ஜி.ஆர் புத்தகத்தில் உள்ளதற்கும் சம்பந்தம் ஏதும் இல்லை. எம்.ஜி.ஆர் புத்தகத்தைப் பற்றி சொல்ல நினைத்தேன். கூடவே எம்.ஜி.ஆர் பற்றி எனக்குத் தோன்றியதையும் உடன் எழுதிவிட்டேன்.]

புத்தகத்தை வாங்க
.

Wednesday, December 30, 2009

விளம்பர மாயாஜாலம்

மார்க்கெட்டிங் மாயாஜாலம் என்ற புத்தகத்தை சதீஷ் கிருஷ்ணமூர்த்தி எழுதி கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. இப்போது அதனைத் தொடர்ந்து விளம்பர மாயாஜாலம் என்ற புத்தகம். அதில் அட்டையில் ஆப்பிள் என்றால், இதில் ஆரஞ்ச்!

இதை நான் ரசித்தபடியே எடிட் செய்தேன். நிறைய சிரிக்க வைத்த வசனங்கள். கொஞ்சம் tough சப்ஜெக்ட் என்றாலேயே எழுத்தாளர்களுக்கு பயம் வந்துவிடுகிறது. இதை வாங்கிப் படிப்பார்களா என்று தயக்கம். அதனாலேயே ஒரு defensive attitude காரணமாக கொஞ்சம் சிரிப்பை அதிகமாகக் கொடுத்துவிடுகிறார்கள். ஆனாலும் அதனால் குறை ஒன்றும் இல்லை.

தொலைக்காட்சி விளம்பரங்களைக் கண்டாலே டென்ஷனாகி, அடுத்த சானல் போவார்கள் ஒரு சிலர். ஆனால் ஒரு சிலர் விளம்பரங்களை ரசித்துப் பார்ப்பார்கள். நான் விளம்பரங்களை ரசிக்கும் ஜாதி. பல விளம்பரங்கள் கண்றாவியாக இருக்கும். முக்கியமாக சன் நியூஸில் காணப்படும் பல ‘லோக்கல்’ விளம்பரங்கள். முறுக்குக் கம்பிகளுக்கு வரும் விளம்பரங்கள் அனைத்தையும் கொளுத்தவேண்டும். ரசனை இல்லாமல் கழுத்தறுக்கும் வெரைட்டி அவை. ஆனால் எக்கச்சக்கமாகக் காசு செலவு செய்து எடுக்கப்படும் பல ‘அகில இந்திய’ விளம்பரங்களும் கழுத்தறுவைதான்.

இந்த மேலோட்டமான புரிதல் தாண்டி, விளம்பரங்கள் என்னென்ன காரணங்களுக்காக எடுக்கப்படுகின்றன, அவை வெற்றி பெறுகின்றனவா என்று ஆராயப் போனால், சுவாரசியமான ஒரு புது உலகம் கிட்டுகிறது. அந்த உலகத்துக்குள் எப்படிச் செல்வது என்பதை சதீஷ் கிருஷ்ணமூர்த்தி காண்பித்துக் கொடுக்கிறார்.

இது ஓர் அறிமுகப் புத்தகம் மட்டுமே. அடுத்த எடிஷனில் மேலும் மேம்படுத்தப்படலாம். ஆனாலும் இதன் 130-சொச்சப் பக்கங்களில் தொலைக்காட்சி விளம்பரம், ரேடியோ விளம்பரம், அச்சு விளம்பரம் என்று பலவற்றைப் பற்றிய கோட்பாடுகள் முதல், விளம்பரங்களின் வீச்சு, அவற்றின்மூலம் சாதிக்கக்கூடிய விஷயங்கள் என்று பலவும் தெரியக் கிடைக்கிறது.

கடைசி அத்தியாயம், ஒரு fictitious பொருளுக்கு விளம்பரம் உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மோட்டார் பைக் பிராண்ட் அதிகம் விற்பதில்லை. அந்த நிறுவனத்தின் தலைவர் தன் விளம்பர ஏஜென்சியிடம் தன் கவலையைத் தெரிவிக்கிறார். அங்கு தொடங்கும் உரையாடல், அங்கிருந்து விளம்பர ஏஜென்சிக்கு வந்து, அங்கு விளம்பரங்கள் உருவாக்கப்படுவதை கொஞ்சம் அலசுகிறது.

புத்தகத்தின் ஹைலைட் இந்த அத்தியாயம் என்று நிச்சயமாகச் சொல்வேன்.

விளம்பரத் தொழிலில் இருப்பவர்கள், எம்.பி.ஏ படிப்பு படிப்பவர்கள், சிறு தொழில் நடத்துபவர்கள் என அனைவருக்கும் உபயோகமான புத்தகம்.

Tuesday, December 29, 2009

இலங்கை இறுதி யுத்தம்

நிதின் கோகலே என்.டி.டி.வி நிருபர். இலங்கையில் நான்காம் ஈழப்போர் நடந்த நேரம் அதைத் தன் தொலைக்காட்சிக்காகப் பின்பற்றிவந்தார். அதற்குமுன் கார்கில் போர் நடந்த நேரம் நேரடியாக அதனை ‘கவர்’ செய்தார்.

அவர் கார்கில் பற்றியும் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இப்போது இலங்கை யுத்தம் பற்றியும் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தின் தமிழாக்கத்தை கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது.

தமிழகத்தில் உள்ளவர்களுக்கு இலங்கைப் பிரச்னை ஓரளவுக்காவது தெரியும். 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றி தோல்வி என்று நிர்ணயிக்கமுடியாத ஒரு போராட்டத்தில் திடீரென கடந்த இரண்டு வருடங்களில் என்ன மாற்றம் ஏற்பட்டது? எப்படி இலங்கை ராணுவத்தால் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கமுடிந்தது?

இந்தக் கேள்வியை முன்வைக்கும் நிதின் கோகலே பதிலை ஆராய்கிறார். அவரது பதிலை, அவரது புத்தகத்தை கீழ்க்கண்ட சாரமாகக் கொடுக்கலாம்.

1. பிரபாகரன் விக்ரமசிங்கே தோற்று, ராஜபக்ஷே ஜெயிக்கக் காரணமாக இருந்தது.

2. மகிந்த ராஜபக்ஷே, அமெரிக்காவில் இருந்த தன் தம்பி கோதபாய ராஜபக்ஷேவை இலங்கைக்கு அழைத்து பாதுகாப்புச் செயலராக ஆக்கியது.

3. இருவரும் சேர்ந்து சரத் ஃபொன்சேகாவை ராணுவத் தளபதி ஆக்கியது. (ஃபொன்சேகாவும் கோதபாயவும் சேர்ந்து ராணுவத்தில் பணியாற்றியிருந்தனர்.)

4. தரைப்படைத் தளபதி ஃபொன்சேகா, விமானப்படை தளப்தி வசந்த கரனகோடா, கடற்படைத் தளபதி ரோஷன் குணதிலக ஆகிய மூவரும் சேர்ந்து பெரும் பொருட்செலவில் தங்கள் படைகளை மாற்றி அமைத்தல், நிறையப் பேரை வேலைக்குச் சேர்த்தல். ஒரு கட்டத்தில் இலங்கை ராணுவம் தனது எண்ணிக்கையை கிட்டத்தட்ட மும்மடங்கு உயர்த்தியிருந்தது.

5. கோதபாய ராஜபக்ஷே உலகெங்கும் சென்று ஆயுதங்கள் வாங்குதல். (இந்தியா உதவவில்லை; ஆனால் சீனா பெருமளவு உதவியுள்ளது - கடனாகவே கொடுத்துள்ளது.)

6. கருணா புலிகள் அமைப்பிலிருந்து விலகுதல்.

7. இந்தியாவின் கடற்படை, இலங்கைக் கடற்படைக்கும் பெருமளவு உதவி புரிந்து, கடற்புலிகளை அழிக்க வழி செய்தது.

8. ஃபொன்சேகா மீதான புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் ஃபொன்சேகா பிழைத்தல். தொடர்ந்து மாவிலாறு பிரச்னையில் முழுப் போரின் ஆரம்பம்.

9. கிழக்கில் போர் வெடித்து கொஞ்சம் கொஞ்சமாக கிழக்கு முழுமையையும் இலங்கை ராணுவம் கைப்பற்றுதல்.

இந்தக் கட்டத்தில் புலிகளை முழுமையாக அழிக்க திட்டம் தீட்டப்பட்டு சில மாதங்களிலேயே செயல்படுத்தப்பட ஆரம்பித்தனர். அதன்பின், புலிகளால் மீண்டும் வலுவான நிலைக்கு வரமுடியவே இல்லை.

இந்தப் புத்தகம் போரை வெறும் போராக மட்டுமே பார்க்கிறது. உயிர் இழப்புகளைப் பற்றி ஆங்காங்கே சில கவலைகள் தெரிந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் கடைசி நேரத்தில் புலிகள் மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தியதனால் மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களையும் அதே காரணத்தாலேயே புலிகள் தோல்வியை நோக்கித் தள்ளப்பட்டதையும் விரிவாகப் பேசுகிறது.

இறந்தது பிரபாகரன்தான் என்று அடித்துச் சொல்கிறார் நிதின் கோகலே. அதற்கு மாற்றுக் கருத்துகள் பல இருந்தாலும், கோகலே அதைப்பற்றி அதிகம் விவரிப்பதில்லை.

கிழக்குப் போர், வடக்குப் போர் தவிர, முதல் மூன்று ஈழ யுத்தங்கள், இந்திய அமைதிப் படைக்கு எதிரான போர், கூடவே தமிழ்நெட், டிஃபென்ஸ்.எல்கே தளங்களுக்கு இடையேயான ஊடகப் போர் ஆகியவற்றைப் பற்றியும் தொட்டுச் செல்கிறார்.

இந்திய அதிகாரிகள், அமைச்சர்களின் நிலைப்பாடுகள், இலங்கை-இந்திய உறவு ஆகியவை பற்றியும் புத்தகத்தில் நிறையத் தகவல்கள் உள்ளன.

Monday, December 28, 2009

எமர்ஜென்ஸி: ஜே.பியின் ஜெயில் வாசம்

இந்தப் புத்தகக் கண்காட்சியின்போது அறிமுகமாகும் ஒரு புத்தகம் ஜே.பி எமர்ஜென்ஸி காலகட்டத்தில் சண்டிகரில் சிறையில் இருந்ததைப் பற்றிய ஒரு புத்தகம்.

அப்போது சண்டிகரின் மேஜிஸ்திரேட்டாகவும் மாவட்ட ஆட்சியராகவும் இருந்தவர் எம்.ஜி.தேவசகாயம் என்ற தமிழர். (இப்போது சென்னையில் வசிக்கிறார்.) இவர் ஆங்கிலத்தில் எழுதி Roli Books வாயிலாக வெளியாகியிருந்த JP in Jail என்ற புத்தகத்தின் தமிழாக்கம்தான் இது. ஆனால் ஒரு வித்தியாசம். பொதுவான தமிழாக்கங்களைப் போல் இல்லாமல், தமிழ்ப்படுத்தியபின் தேவசகாயமே முழுவதுமாகப் புத்தகத்தைப் படித்துவிட்டு, பல இடங்களில் மாறுதல்களையும் செய்து தந்தார். ஆங்கிலத்தைவிடத் தமிழில் புத்தகம் நேரடியாக அவரது உள்ளத்தைப் பேசுகிறது என்றார்.

உண்மையில், எமர்ஜென்ஸி தமிழகத்தில் அவ்வளவு உச்சத்தில் இல்லை. அதன் காரணமாகத்தான் எமர்ஜென்ஸிக்குப் பிறகு காங்கிரஸால் தமிழகத்தில் எளிதில் வெற்றிபெற முடிந்தது. ஆனால் வட மாநிலங்களில் எமர்ஜென்ஸி வெறியாட்டம் மிகக் கடுமையாக இருந்தது. தனி மனிதன் பாதிக்கப்படுவது ஒரு விஷயம். அதைவிடக் கொடுமை ஒரு ‘சிஸ்டம்’ அழிக்கப்படுவது.

ஒரு தனி மனிதனை இரவோடு இரவாகக் கைது செய்தால் யாரிடம் சென்று முறையிடுவது? யாரிடமும் முறையிட முடியாது. தனிப்பட்ட விரோதம் காரணமாக சில காங்கிரஸ் அரசியல்வாதிகள், நிர்வாகிகளின் துணையோடு பலரைப் பழிவாங்கியதும் இந்தக் காலத்தில் நடந்தது. எதிர்க் கேள்வி கேட்க யாருமே இல்லை.

இந்தப் புத்தகம் எமர்ஜென்ஸியில் என்னவெல்லாம் நடந்தது என்பதை விளக்கும் புத்தகம் அல்ல. அந்தக் காலகட்டத்தில் ஜே.பி என்ற தனி நபர் எந்தக் காரணமும் காட்டப்படாமல் ஜெயிலுக்குள் தள்ளப்படுகிறார். அந்தக் கட்டத்தில் அவர் வாழ்க்கையில் தினம் தினம் என்ன நடந்தது, இந்திரா காந்தி தரப்பிலிருந்து என்னென்ன சமரச முயற்சிகள் நடைபெற்றன, ஜே.பியின் எண்ண ஓட்டங்கள் எப்படி இருந்தன, ஜே.பியைக் கொலை செய்ய முயற்சி நடைபெற்றதா, கடைசியில் ஜே.பி ஏன் விடுதலை செய்யப்பட்டார் போன்ற விவரங்களை தேவசகாயம் தருகிறார். ஒரு மேஜிஸ்திரேட்டாக, ஜே.பியின் சிறைவாசத்துக்கு தேவசகாயம்தான் பொறுப்பாக இருந்தார். எனவே கிட்டத்தட்ட தினம் தினம் ஜே.பியோடு தொடர்பில் இருந்தார்.

ராம்கி இந்தப் புத்தகத்தை தமிழாக்கம் செய்வதன்மூலம் ஆங்கிலம்->தமிழ் மொழிமாற்றல் துறைக்கு வருகிறார். இதற்குமுன் ரஜினி, ஜெயலலிதா போன்ற சில வாழ்க்கை வரலாறுகளை எழுதியவர், நன்கு சரளமாகத் தமிழில் படிக்கக்கூடிய வகையில் இந்தப் புத்தகத்தில் பணியாற்றியுள்ளார். தேவசகாயம் தனிப்பட்ட முறையில் ராம்கியின் தமிழாக்கத்தை வெகுவாகப் பாராட்டினார்.

அதன் காரணமாக, ராம்கிக்கே மொழிமாற்றத்தில் பெரும் ஆர்வம் வந்துள்ளது. அடுத்து ஐரம் ஷர்மிளா என்ற மணிப்பூர் போராளி பற்றிய புத்தகம் ஒன்றை ராம்கி தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். இது மார்ச் மாதத்தில் வெளியாக உள்ளது.

சமகால வரலாற்றை விரும்புபவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய நூல் எமர்ஜென்ஸி: ஜே.பி.யின் ஜெயில் வாசம்.

NHM இணையக் கடை பற்றி சில கேள்விகளுக்கு பதில்கள்

சொக்கனின் வலைப்பதிவில் இரு வாசகர்கள் NHM ஆன்லைன் கடையைப் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள், இங்கே என் பதிவிலும்:

1. NHM ஆன்லைன், இந்தியா முழுமைக்கும் (வெளிநாடுகளுக்கும்கூட) புத்தகங்களை அனுப்பும்.

2. இந்தியாவுக்குள்ளாக ரூ. 250-க்குப் புத்தகங்கள் வாங்கினால், பதிவு அஞ்சல் மூலம் தபால் செலவு ஏதும் இன்றி புத்தகங்களை அனுப்புகிறோம். (கூரியர் வழியாக வேண்டும் என்றால் அதற்கு செலவாகும்.)

3. நேரடியாக டிஸ்கவுண்ட் ஏதும் கிடையாது. ஆனால் 20 புத்தகங்கள் ஆயிரம் ரூபாய்க்கு என்று கிழக்கு புக் கிளப் என்ற வழியில் கொடுக்கிறோம். எந்த 20 புத்தகத்துக்கும் அல்ல; ஆனால் இந்த ஆஃபரில் குறிப்பிட்டுள்ள சுமார் 150-200 புத்தகங்களிலிருந்து ஏதேனும் 20 புத்தகங்களுக்கு. அவற்றை வாங்கினால் உங்களுக்கு குறைந்து 25% முதல் 50% வரை கூட டிஸ்கவுண்ட் கிடைக்கலாம். நீங்கள் தேர்வு செய்யும் புத்தகங்களைப் பொருத்தது அது.

4. மேலே சொன்ன ஸ்கீமை, 8 புத்தகங்கள் 500 ரூபாய்க்கு என்றும் extend செய்ய உள்ளோம். அது பொங்கல் தினத்தன்று அறிமுகமாகும்.

5. பரிசோதனை நிமித்தம் ரூ. 150-க்கு மேல் புத்தகம் வாங்கினாலே தபால் செலவு இலவசம் என்று சொல்லலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறோம். செய்தாலும் செய்வோம். இதனை ஆங்கிலப் புத்தாண்டு அறிமுகமாகச் செய்வதற்கும் ஒரு யோசனை உள்ளது.

6. தனியாக ஒற்றை புத்தகத்துக்கு என்று டிஸ்கவுண்ட் வருமா என்று சொல்லமுடியாது. ஆனால் சில மார்க்கெட்டிங் யோசனைகள் செய்துகொண்டிருக்கிறோம். திடீரென ஒரு குறிப்ப்ட்ட தினத்தன்று (12 மணி நேரம், 24 மணி நேரம்) எந்தப் புத்தகத்தை வாங்கினாலும் அதற்கு டிஸ்கவுண்ட் அல்லது ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்றெல்லாம் செய்யலாமா என்று யோசனை உள்ளது. இதனைச் செயல்படுத்த எஞ்சினியரிங் வேலைகள் சிலவற்றைச் செய்யவேண்டும். செய்து முடித்ததும் சொல்கிறேன்.

7. ரிவார்ட் பாயிண்ட்ஸ் என்ற முறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம். அதுபற்றியும் விரைவில் தகவல் தெரிவிக்கிறேன்.

8. நீங்கள் எந்த முகவரிக்குப் போகுமாறும் புத்தகங்களை NHM ஆன்லைனில் வாங்கலாம். புத்தகத்தை பரிசாகப் பெறுபவர் எந்தப் பணமும் கட்டவேண்டியதில்லை. நீங்கள் பணத்தைக் கட்டிவிட்டால் போதும்!

Sunday, December 27, 2009

தமிழ் பதிப்புலகம், ராயல்டி, etc. - 2

பாகம் 1

தமிழ்நாட்டில் சாதனை படைத்த புத்தகங்கள் என்று சிலவற்றைக் கடைக்காரர்கள் பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். கல்கியின் மூன்று வரலாற்றுப் புதினங்கள், சாண்டில்யனின் இரண்டு மூன்று, கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம், சுவாமி சுகபோதானந்தாவின் மனசே ரிலாக்ஸ் பிளீஸ், அப்துல் கலாமின் அக்கினிச் சிறகுகள், இப்படி. இதில் அக்கினிச் சிறகுகள் விற்பனை கொஞ்சம் இறங்கியிருக்கும் இப்போது. கல்கி நாட்டுடமையானதால் விற்பனை பரவலானாலும் தனி ஒரு பதிப்பாளருக்கு அதிகம் பலனிருக்காது. ரமணி சந்திரனின் நாவல்கள் நன்கு விற்கின்றன என்றும் கேள்விப்படுகிறேன்.

ஆனால் இவை எவற்றுக்கும் தெளிவான எண்ணிக்கை என்று தெரியாது. அக்கினிச் சிறகுகள் தமிழில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்றுள்ளன. மதனின் வந்தார்கள் வென்றார்கள் 1 லட்சத்துக்கு மேல் என்று அந்தப் புத்தகத்தின் மேலட்டையில் போட்டுள்ளனர். கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ‘அள்ள அள்ளப் பணம் 1’ 1 லட்சம் பிரதிகளைத் தாண்டியுள்ளது. மனசே ரிலாக்ஸ் பிளீஸ் நிச்சயம் 1 லட்சத்துக்கு மேல் போயிருக்கும். அர்த்தமுள்ள இந்துமதம் கடந்த பல பத்தாண்டுகளில் 4 லட்சம் கூடத் தாண்டியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

எங்களது கோட்பாட்டின்படி, இப்போதைக்கு நல்ல புத்தகம் என்றால் ஊடகங்களில் எந்தவித விளம்பரமும் செய்யாமல் ஆண்டுக்கு 20,000 பிரதிகள்வரை விற்கலாம். விகடன், குமுதம் போன்ற ஊடகங்களே வெளியிடும் புத்தகம் (அதுவும் அந்தப் பத்திரிகைகளில் தொடராக வந்தது, அதுவும் செலிபிரிட்டி ஒருவரால் எழுதப்பட்டது) என்றால் ஆண்டுக்கு 60,000 - ஒரு லட்சம் பிரதிகள் விற்கலாம். அதுவும் இரண்டு, மூன்று ஆண்டுகள் அந்த எண்ணிக்கையில் தாக்குப்பிடிக்கும். அதற்குப்பின் சறுக்கிவிடும்.

2009-ல் நாங்கள் வெளியிட்ட ‘பிரபாகரன் வாழ்வும் மரணமும்’ இதுவரையில் கிட்டத்தட்ட 15,000 பிரதிகளைத் தாண்டி விற்றிருக்கும். ஒரு முழு ஆண்டைக் கடந்தால் 20,000 பிரதிகளைத் தொடக்கூடும். இப்போது அதன் விற்பனை அதன் உச்சகட்டத்திலிருந்து கீழே இறங்கியுள்ளது. ‘பிரபாகரன் ஒரு வாழ்க்கை’ 2008-ல் வெளியானது. இதுவரையில் 20,000 தொட்டிருக்கும். அதற்கு முந்தைய ஆண்டில் கொண்டுவந்த ‘விடுதலைப் புலிகள்’ புத்தகம் இதுவரையில் அதே 20,000 என்ற கணக்கைத் தொட்டிருக்கும். இப்போது வெளியாகியுள்ள ‘ராஜிவ் கொலை வழக்கு’ ஓர் ஆண்டில் 20,000 பிரதிகளைத் தொடலாம். இரண்டு மாதங்களிலேயே 10,000 விற்றுவிடும். அதன்பின் தொடர்ந்து என்ன எண்ணிக்கையில் போகிறது என்பது பார்த்துத்தான் சொல்லமுடியும்.

மற்றபடி எங்களது ரெகுலர் வாழ்க்கை வரலாறுகள், அரசியல் வரலாறுகள், பொது வரலாறுகள் எல்லாம் குறைந்தது ஆண்டுக்கு 5,000 பிரதிகளாவது விற்கவேண்டும் என்று முயற்சி செய்வோம். பல நேரங்களிலும் இது நடக்கிறது. குறைந்தது நான்கு, ஐந்து ஆண்டுகள் இப்படி நடந்தால், அந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கு அந்த ஒரு புத்தகம் குறைந்தது ரூபாய் ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வருமானமாகக் கொடுக்கும். அதுதான் எங்கள் நோக்கம். (உதாரணம்: அம்பானி இதுவரையில் 20,000 பிரதிகளுக்குமேல் விற்றுள்ளது. நாராயண மூர்த்தி 15,000 பிரதிகளுக்குமேல். சே குவேரா 12,000 பிரதிகளுக்குமேல்... இப்படி.)

ஆனால், எந்தப் புத்தகத்தைத் தொட்டாலும் இப்படி சில பத்தாயிரங்கள் விற்குமா என்றால் கட்டாயம் இல்லை. சே குவேரா விற்கும் அளவு லெனின் விற்பதில்லை. லெனின் விற்கும் அளவுகூட ஹோ சி மின் விற்பதில்லை. எது, எவ்வளவு விற்கும் என்பதை முன்கூட்டியே அறிய முடியாது. ஆக, இங்கே பதிப்பாளர் ஒரு ரிஸ்க் எடுத்துதான் இறங்கவேண்டும்.

ஞாநி, ‘அறிந்தும் அறியாமலும்’ 2000 பிரதிகள் ஓராண்டில் விற்றுள்ளதாகச் சொன்னார். அது நல்ல எண்ணிக்கைதான். ஆனால் ஞாநி அந்தப் புத்தகத்தின் விற்பனையை மேலும் அதிகரிக்கலாம். அதற்கு மார்க்கெட்டிங் முயற்சிகள் சில தேவை. இப்படி ஒரு புத்தகம் விகடனில் தொடராக வந்து, பாதியில் நிறுத்தப்பட்டு, பின் முழுப் புத்தகமாக வந்துள்ளது என்ற விஷயமே தமிழ்நாட்டில் பாதிப்பேருக்குத் தெரியாது. மேலும் அந்தப் புத்தகத்தின் என்ன உள்ளது என்ற விவரமும் பலருக்குத் தெரியாது. இதனை விளம்பரங்கள்மூலம் செயல்படுத்த முடியாது. அதற்கு ஆகும் செலவு ஏராளம். ஆனால் எழுத்தாளர் தன் இணையத்தளம் மூலமாகவும், தனது பத்தி மூலமாகவும், தான் செல்லும் இடங்களில் எல்லாம் தன் புத்தகங்களைப் பற்றி நான்கு வரி (கூச்சப்படாமல்) சொல்வதன்மூலமாகவும் அப்படி ஒரு புத்தகம் உள்ளது என்பதைப் பரப்பமுடியும். அதன்மூலம் விற்பனை நிச்சயமாக அதிகரிக்கும்.

ஒரு புத்தகம் எத்தனைக்கு எத்தனை அதிகப் பிரதிகள் ஓராண்டில் விற்கிறதோ, அத்தனைக்கு அத்தனை எழுத்தாளருக்கும் வருமானம்; பதிப்பாளருக்கும் லாபம். எனவே இதனை எப்படிச் சாதிப்பது என்பதுதான் இன்று பதிப்பாளரும் எழுத்தாளரும் சேர்ந்து சிந்திக்கவேண்டிய ஒரு விஷயம்.

இனி வரும் பதிவுகளில், புத்தக விற்பனையை அதிகரிக்க கிழக்கு பதிப்பகம் என்னென்ன முறைகளைக் கொண்டுவந்துள்ளது என்று விளக்குகிறேன். இதனை நிச்சயமாக பிறர் பின்பற்றலாம்.

(தொடரும்)

தமிழ் பதிப்புலகம், ராயல்டி, etc. - 1

கீழ்க்கண்ட பதிவுகளை முதலில் படித்துவிடுங்கள்.

* ஞாநி குமுதம் ஓ பக்கங்களில் எழுதியது. (அதில் ராயல்டி, புத்தக விற்பனை ஆகியவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.)
* எழுத்தாளர்களின் ராயல்டி - பா.ராகவன்
* ராயல்டி பற்றி ஜெயமோகன்
* ராயல்டி பற்றி சாரு நிவேதிதா

முதலில் ஞாநியின் கருத்தை எடுத்துக்கொள்வோம்:
ஆனால், எழுத்தாளனுக்கு இதனால் பெரும் லாபம் வந்துவிடவில்லை. இன்னமும் ராயல்டி பத்து சதவிகிதம்தான். ராயல்டி என்பது எழுத்தாளனின் சம்பளம். நீங்கள் நூறு ரூபாய் கொடுத்து ஒரு புத்த கத்தை வாங்கினால், அதில் பத்து ரூபாய் எழுத்தாளனுக்கான ராயல்டி.

அதிலும் சில பிரசுரங்கள் ஆறு ரூபாய் ஐம்பது காசுதான் கொடுக்கும். சிலர் ஒன்றுமே தரமாட்டார்கள். ஒரு புத்தகத்தை பதிப்பாளரிடமிருந்து வாங்கி விற்கும் விற்பனையாளர்க்குத்தான் லாபம் அதிகம். 100 ரூபாய்க்கு 30 ரூபாய் வரை கிடைக்கும். அதாவது ஒரு எழுத்தாளன் தன் நூறு ரூபாய் புத்தகத்தையே பதிப்பாளரிடமிருந்து 30 சதவிகிதக் கழிவுக்கு வாங்கி தன் வாசகருக்கு 10 சதவிகித தள்ளுபடி கொடுத்து விற்றால் கூட அவனுக்கு 20 ருபாய் கிடைக்கும். புத்தகம் எழுதியதற்கு ஆறு ரூபாய் முதல் 10 ரூபாய்தான். கேரளத்தில் எழுத்தாளனுக்கு ராயல்டி 40 சதவிகிதம் வரை என்கிறார்கள்.
எனக்கும் கிழக்கு பதிப்பகம் ஆரம்பிக்கும்முன் எழுத்தாளரின் ராயல்டி என்ன இருக்கும் என்று தெரிந்திருக்கவில்லை. ராயர் காபி கிளப் அரட்டையரங்கில், “என்ன, ஒரு 20-30% இருக்குமா?” என்று கேட்டுவைத்தேன். பொங்கிக் குமுறி வெங்கடேஷ் ஒரு பதில் அனுப்பியது ஞாபகம் உள்ளது. ராகவன், இரா.முருகன் எனப் பலரும் அப்போது ராயல்டி, புத்தக விற்பனை ஆகியவை பற்றி எழுதினர்.

அந்தத் தகவல்கள் எல்லாம் உபயோகமாக இருந்தன. அவற்றையெல்லாம் கிழக்குக்கான பிசினஸ் பிளானை எழுத நான் பயன்படுத்திக்கொண்டேன்.

உலக அளவிலேயே 7.5-12.5% எந்த ரேஞ்சில்தான் எழுத்தாளர்களுக்கு ராயல்டி போகிறது. கேரளாவிலும் பெரிய எழுத்தாளர் என்றால் 15% வரை ராயல்டி போகிறது. அதற்குமேல் கிடையாது. இந்த 20-30-40% எல்லாம் கட்டுக்கதைகளே. பிசினஸ் மாடல் எதிலும் இதற்கு வாய்ப்பே இல்லை. எழுத்தாளரே முன்பணம் செலவு செய்து புத்தகம் அச்சிட்டாலும் அவருக்கு மொத்தமாக 50-55% பணம் கையில் கிடைக்கும். அதில் அச்சுக்கூலி, பேப்பர் செலவு, முதலீட்டுக்கான வட்டி என்று கழித்துப் பார்த்தால் கையில் 10-12%-க்கு மேல் மிஞ்சுவது கடினம்.

எழுத்தாளருக்கு புத்தக விலையில் வெறும் 10% என்பது அநியாயமாகத் தோன்றலாம். ஆனால் அடிப்படையில் இது ஒன்றும் மோசமான கணக்கு என்று சொல்லமாட்டேன். ஒரு எழுத்தாளர் இந்த சதவிகிதக் கணக்கைப் பற்றி அஞ்சக்கூடாது. மாறாக தன் புத்தகத்தின் எத்தனை பிரதிகளை பதிப்பாளர் விற்றுத்தருகிறார், எப்படி ராயல்டியைத் தருகிறார் என்பதுதான் முக்கியம். எழுத்தாளரின் உழைப்பு என்பது ஒரே அளவுதான். ஆனால் அவரது உழைப்புக்கு 50% ராயல்டி என்று சொல்லிவிட்டு, வெறும் 10 பிரதிகள் மட்டும் விற்றுத்தந்தால் போதுமா? ராயல்டி சதவிகிதம் அதிகமானால் மட்டும் போதுமா என்ன? அதே நேரம், குறைந்தபட்சம் ஒரு லட்சம் பிரதிகள் விற்றுத்தருவார் பதிப்பாளர் என்றால், நான் சந்தோஷமாக 5% ராயல்டிகூட பெற்றுக்கொள்ளத் தயாராக இருப்பேன்.

புத்தக விற்பனை செய்யும் கடைக்காரருக்கு தமிழகத்தில் 30-35% கிடைக்கிறது. இதனை ராயல்டியுடன் ஒப்பிடக் கூடாது. அந்தக் கடைக்காரருக்கு நிறையச் செலவுகள் இருக்கின்றன. கடை வாடகை, பிற ஓவர்ஹெட்ஸ் என்று. மேலும் பல நேரங்களில் அவர் வாடிக்கையாளருக்கு டிஸ்கவுண்ட் தரவேண்டும். அவர் கையிலும்கூட புத்தக விலையில் 10% மிஞ்சுவதே அதிகம்.

பதிப்பாளருக்கும் அப்படியே. பொதுவாக, 35% கடைகளுக்கு, 10% எழுத்தாளருக்கு, 20-25% புத்தகக் கட்டுமானத்துக்கு (paper, printing, binding) என்று போனால் பதிப்பாளருக்கு மிஞ்சுவது 30% மட்டுமே. இதிலிருந்து fixed expenses (வாடகை, கோடவுன் செலவுகள், புத்தகத்தை கட்டி அனுப்பும் செலவுகள், மார்க்கெட்டிங், இதர செலவுகள், ‘வட்டி’ செலவு) என்று அனைத்தையும் பார்த்தால், அவர் கையில் மிஞ்சுவதும் புத்தக விலையில் 8% என்றால் அதிகமே. அதிலும் பதிப்பாளருக்கு working capital பிரச்னை கடுமையானது. கிட்டத்தட்ட 8-9 மாத வொர்க்கிங் கேபிடல் கையில் இருக்கவேண்டும். (இதைப் பற்றி தனியாக எழுதவேண்டும். எனவே இங்கு இதுமட்டும் போதும்.)

எனவே புத்தகத் தொழிலில் எழுத்தாளனை ஏமாற்றி பதிப்பாளரோ, கடைக்காரரோ அதிகப் பணம் பார்த்துவிடுவதில்லை. எழுத்தாளருக்குச் சரியாக ராயல்டி கிடைத்துவிட்டால், எழுத்தாளர் வருத்தப்பட ஒரே ஒரு இடம் மட்டும்தான் இருக்கும். அது... என் புத்தகம் வெறும் 300 பிரதி, 500 பிரதி, 3000 பிரதி மட்டும்தான் விற்குமா? ஏன் என் பதிப்பாளர் லட்சம் பிரதிகள் விற்றுத் தருவதில்லை... என்பதுதான்.

இந்த இடத்தில் வாசகர்களை மட்டும் ஒருவர் குற்றம் சொல்லமுடியாது. ஒரு புத்தகம் அதன் உச்சபட்ச விற்பனையை அடைய என்னவெல்லாம் செய்யவேண்டும்? இது மார்க்கெட்டிங் மட்டும் சார்ந்ததல்ல. புத்தகத்தின் ஆதாரக் கருத்திலிருந்து ஆரம்பித்து, புத்தகத்தின் உருவாக்கத்தில் செலுத்தப்படும் சிந்தனை, எழுத்து வடிவம், பேக்கேஜிங், உருவாக்கும் தரம், விலை என பலவற்றைப் பொருத்தது. அதற்குப் பிறகு விநியோகம், விளம்பரம் என வேறு பலவற்றையும் சார்ந்தது. அந்தக் கட்டத்தில் வாசகர்களும் பேராதரவு தந்தால் புத்தகம் பிய்த்துக்கொண்டு போகும்.

(தொடரும்)

Thursday, December 24, 2009

சாகித்ய அகாதெமி விருது 2009

இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது, கவிஞர் புவியரசுவுக்குக் கிடைத்துள்ளது. இவருக்கு ஏற்கெனவே (ஆங்கிலத்திலிருந்து?) தமிழில் மொழிமாற்றம் செய்ததற்கான சாகித்ய அகாதெமி விருது கிடைத்திருந்தது. அந்தச் சமயத்தில் இவர் கமல்ஹாசனின் மருதநாயகம் படத்துக்கு உதவுவதில் ஈடுபட்டிருந்தார். கமல்ஹாசன் ஒரு தனி பாராட்டு விழாவே நடத்தியிருந்தார்.

(ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாதெமி விருதை என் வலைப்பதிவில் குறிப்பிடக் காரணம், ஒரே tag-ல் அனைத்துத் தகவல்களும் பிற்காலத்தில் யாதேனும் ஒருவருக்குக் கிடைக்கக்கூடும் என்பதாலேயே.)

ஜெயமோகனின் பதிவு

Tuesday, December 22, 2009

கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 19: இன்ஷூரன்ஸ் பற்றி ஞானசுந்தரம் கிருஷ்ணமூர்த்தி

எல்.ஐ.சி இந்தியா நிறுவனத்தின் சேர்மனாகப் பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி பின்னர் இன்ஷூரன்ஸ் ஆம்பட்ஸ்மேனாகவும் சில காலம் பணியாற்றினார். இன்ஷூரன்ஸ் தொடர்பாக எங்கெல்லாம் பிரச்னை வரும் என்பதை நன்கு அறிந்தவர்.

அவர் முதலில் எங்களுக்கு எழுதியது தமிழில் ஆயுள் காப்பீடு பற்றிய புத்தகம். பின்னர் ஆங்கிலத்தில், மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு, வாகனக் காப்பீடு என மூன்றைப் பற்றியும் தனித்தனிப் புத்தகங்களை எழுதினார். தமிழிலும் மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு பற்றி அவர் எழுதியுள்ளவை மேனுஸ்கிரிப்டாகக் கையில் உள்ளன. சென்னை புத்தகக் கண்காட்சிக்குள் அவற்றை எடிட் செய்து கொண்டுவந்துவிட நினைத்தது நடக்கவில்லை. மார்ச் மாதத்துக்குள்ளாகவாவது கொண்டுவந்துவிடவேண்டும்.

ஆஹா எஃப்.எம் கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசியதை கீழே:



தரவிறக்கிக்கொள்ள

கிழக்கு மொட்டைமாடியில் அவர் பேசியதன் ஒலிவடிவம் இங்கே.

தொடர்புள்ள புத்தகங்கள்:

        
  

உலக இலக்கியங்கள் - எளிய தமிழில்

1600-களில் எழுத்து அச்சில் வர ஆரம்பித்த காலகட்டத்திலிருந்து 1900-ங்கள் எண்ணற்ற இலக்கியங்கள் மேற்குலகில் எழுதப்பட்டுள்ளன. நமக்கு அதிகம் தெரிந்தவை ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. பிரெஞ்ச், எஸ்பானியோல், ஜெர்மன், ரஷ்யன் முதற்கொண்டு பிற மொழிகளிலும் நிறைய எழுதப்பட்டுள்ளன.

இவற்றில் ஒரு சௌகரியம், இவையெல்லாம் காப்புரிமை நீங்கிய எழுத்துக்கள். இன்று உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானவை. இவற்றை ஆங்கில மூலத்தில் (அல்லது பிறமொழி மூலம் என்றால் ஆங்கில மொழியாக்கத்தில்) படிப்பதுவே சரியான செயல். ஆனால் அதற்கு முதலில் தேவை எளிமையான அறிமுகம்.

அதனைத்தான் ப்ராடிஜி புக்ஸ் மூலமாகச் செய்யத் தொடங்கியுள்ளோம். இந்த மாபெரும் படைப்புகளை 80 பக்கங்களில் எளிமையான தமிழில் சில படங்களுடன் சேர்த்து உலக கிளாசிக் நாவல்கள் (சிறுகதைகள்) என்ற பெயரில் கொண்டுவரத் தொடங்கியுள்ளோம். சார்ல்ஸ் டிக்கென்ஸும் உண்டு, ராபர்ட் லூயி ஸ்டீவன்சனும் உண்டு. ஓ ஹென்றி, மார்க் ட்வைன், வெல்ஸ், ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன், கிப்ளிங், டூமாஸ், வெர்ன் என்று இன்னும் பலரும் உண்டு.

இதைப்போன்று கிட்டத்தட்ட 24 புத்தகங்களாவது வரவுள்ள சென்னை புத்தகக் கண்காட்சியில் (ஸ்டால் எண் P-32) கிடைக்கும். எங்கோ தொலைவில் இருப்பவர்கள் கீழே உள்ள சுட்டிகளைப் பின்தொடர்ந்து இணையம் வழியாக வாங்கலாம்.

இந்த விடுமுறை காலத்தில் உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்க இதைவிட அற்புதமான பரிசு வேறெதுவும் இருக்கமுடியாது.

                                                                             

Sunday, December 20, 2009

ஆழ்வார்களின் அற்புத உலகில் பூர்வா

மாதம் மார்கழி. ஆழ்வார்களின் பாடல்களில் பலரும் மதி மயங்கியிருக்கும் காலம்.

இந்த ஆண்டு நான் ‘மேற்பார்வை’ பார்த்த புத்தகங்களில் ஒன்று ‘பூர்வா’ என்ற மாய யதார்த்த நாவல். ஆழ்வார்கள் கதைதான். ஆனால் அதையே சிறுவர்கள் ரசிக்கும்படியாக மாற்றியுள்ளார் லக்ஷ்மி தேவநாத்.

ஸ்வாமி தாத்தா என்ற ஒரு கிழவர் சாமி, கோயில், வேதாந்தம் என்று ஏதோ சொல்லி கழுத்தை அறுக்கப்போகிறாரோ என்று பயப்படுகிறாள் பூர்வா என்ற சிறுமி. ஆனால் ஸ்வாமி தாத்தாவோ சிறு குழந்தைகளையும் கவரக்கூடிய சுவாரசியமான மனிதர். அவர் வெறுமனே கதை சொல்லவில்லை. பூர்வாவை ஆழ்வார்களில் அற்புத உலகத்துக்குள் அழைத்துச் சென்றுவிடுகிறார்.

ஸ்வாமி தாத்தாவுடன் சேர்ந்து பூர்வாவும் முதலாழ்வார்கள் ஓர் அறைக்குள் ஒண்டிக்கொண்டு ஒளி விளக்காக ஸ்ரீமன் நாராயணனைத் தரிசிப்பதைப் பார்க்கிறாள். பெரியாழ்வார் பல்லாண்டு பல்லாண்டு என்று எம்பெருமானுக்குத் திருக்காப்பு இடுவதைப் பார்க்கிறாள். ஆண்டாள் திருமாலுக்கு வைத்த மாலையை அள்ளி அணிவதையும் மாலையே மணாளன் ஆக்கிக்கொள்வதையும் பார்க்கிறாள்.

விப்ரநாராயணர் ஜெயிலில் மாட்டிக்கொள்வதைக் கண்டு பதைபதைக்கிறாள். குலசேகரர் பாம்புக் குடத்தில் கைவிடுவதைக் கண்டு திகைத்துப்போகிறாள். பாணர், திருமங்கை, நம்மாழ்வார், மதுரகவி என்று அனைவர் வாழ்விலும் நடப்பதை அருகருகே இருந்து கவனிக்கிறாள். அவள்மூலம் நமக்கும் அனைத்து விஷயங்களும் தெரியவருகின்றன.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டு நல்ல பாராட்டைப் பெற்ற நூலை பத்மா நாராயணன் இயல்பான தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சொல்லப்போனால் தமிழில்தான் இயல்பாக வருகிறது. ஆழ்வார் பாசுரங்களின் சுவையே தமிழில் இருந்தால்தானே சரியாகக் கிடைக்கும்?

குழந்தைகளுக்கு ரசிக்கும்படிக் கதை சொல்ல விரும்புபவர்கள் தாராளமாக இந்தப் புத்தகத்தைக் கையில் எடுக்கலாம். சொல்லப்போனால், உங்கள் குழந்தைகளையே இந்தப் புத்தகத்தை நேரடியாகப் படிக்குமாறு தூண்டுங்கள். நிச்சயம் ரசிப்பார்கள்.

Wednesday, December 16, 2009

இனி இது சேரி இல்லை - இன்று விஜய் டிவியில்

   

இன்று புதன்கிழமை, 16-12-2009, இரவு 10.00 மணிக்கு விஜய் டிவியில் அன்னை சத்யா நகர் பற்றி ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

அன்னை சத்யா நகரில் சென்னை விலிங்டன் கார்பரேட் ஃபவுண்டேஷன் ஈடுபட்டு, சில மாற்றங்களைக் கொண்டுவந்தது பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் புத்தகங்களை நாங்கள் வெளியிட்டோம். அதுபற்றி நான் என் வலைப்பதிவில் எழுதியிருந்தேன். அதனைப் படித்து, அந்தப் புத்தகத்தை வாங்கிச் சென்ற விஜய் டிவியின் ‘நடந்தது என்ன?’ நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அதனைப் படமாக்குவது என்ற முடிவுக்கு வந்தனர்.

கடந்த நான்கு நாள்களாக அன்னை சத்யா நகருக்கே சென்று அங்குள்ள மக்களைப் பேட்டிகண்டு, இந்தத் திட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசி, ஒரு நிகழ்ச்சியைத் தயாரித்துள்ளனர். அது இன்று இரவு ஒளிபரப்பாகிறது. கட்டாயம் பார்க்கவும்.

நான் எழுதிய முந்தைய பதிவுகள்:

இனி இது சேரி இல்லை...
அன்னை சத்யா நகர்

Tuesday, December 15, 2009

கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 18: இருளர்கள் பற்றி குணசேகரன்

இந்த பாட்காஸ்ட் வானொலியில் வரப்போகிறது என்பதற்காகவே செங்கல்பட்டு அருகில் உள்ள இருளர்கள் பலர் ரேடியோப் பெட்டி வாங்கி, கூட்டமாக நின்று கேட்டார்கள் என்கிறார் குணசேகரன். சந்தோஷமாக இருக்கிறது.

இங்கேயே கேட்க:



தரவிறக்கிக்கொள்ள

Monday, December 14, 2009

கிழக்கு பதிப்பகத்தில் முதலீடு

தமிழின் முதன்மைப் பதிப்பகமான கிழக்கு பதிப்பகத்தை நடத்தும் நியூ ஹொரைசன் மீடியா (பி) லி., தனது அடுத்த கட்ட வளர்ச்சிக்காக தனிப்பட்ட முதலீட்டாளர்களை வரவேற்கிறது. இந்த முதலீடு ஈக்விட்டி (பங்குகள்) வாயிலாக இருக்கும்.

விரும்பும் "High Networth Individuals" (HNIs) என்னைத் தொடர்புகொள்ளவும். பெரும்பாலும் ஒருவர் அல்லது இருவரிடமிருந்து மட்டுமே முதலீடுகள் பெற்றுக்கொள்ளப்படலாம்.

எனது மின்னஞ்சல் முகவரி: badri@nhm.in
.