Wednesday, July 30, 2003

ஸ்டார் நியூஸும், ஊடகங்களில் அன்னிய நாட்டவர் முதலீடும்

ஸ்டார் நியூஸ் ஹிந்தி செய்தித் தொலைக்காட்சி சானல் பற்றி அண்மையில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் இந்திய அரசு உள்நாட்டிலிருந்து செய்தித் தொலைக்காட்சி சேவையை அளிக்க விரும்புபவர்கள் நேரடியாக ஒளிக்காட்சிகளை (video) செயற்கைக்கோள் மேலேற்றலுக்கான (satellite uplinking) அனுமதி தருவதற்கான விதிமுறைகளை உருவாக்கியது. அதன்படி எதாவது ஒரு நிறுவனம் உள்நாட்டிலிருந்து செயற்கைக்கோள் மேலேற்றம் செய்ய விரும்பினால், அந்த நிறுவனத்தில் 26% க்கு மேல் வெளிநாட்டவர் முதலீடு செய்திருக்கக் கூடாது என்று வரையறுத்தது.

ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி சானல், ஆஸ்திரேலியாவில் பிறந்து தற்பொழுது அமெரிக்கக் குடியுரிமை பெற்றவரான ரூப்பர்ட் மர்டாக் என்பவரில் கட்டுக்குள் இருக்கும் நியூஸ் கார்ப்பொரேஷன் என்னும் நிறுவனத்தினுடையது. இந்த தொலைக்காட்சி சானல் ஆரம்பித்தது முதல் மார்ச் 2003 வரை இதற்கு நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது நியூ டெல்லி டெலிவிஷன் (NDTV) என்னும் பிரணாய் ராய் என்ற புகழ் பெற்ற தொலைக்காட்சியாளரின் நிறுவனம் ஆகும். ஆனால் ஏப்ரல் முதல் ஸ்டார் நிறுவனமே தனது வேலையாட்கள் மூலம் இந்தத் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒளிபரப்ப ஆரம்பித்தனர். இதற்கு பின்னர் தான் அரசின் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்த விதிமுறை வெளியானவுடன், மத்திய அரசு இந்த விதிமுறைகளுகளோடு ஒத்திசையுமாறு ஸ்டார் நிறுவனத்துக்கு மூன்று மாத அவகாசம் கொடுத்தது.

உள்நாட்டிலிருந்து செயற்கைக்கோள் மேலேற்றுதல் என்பது செய்தித் தொலைக்காட்சிகளுக்கு மிகவும் அவசியமானது. இதன்மூலம்தான் உடனுக்குடன் நேரடி செய்தி வாசிப்பு (Live News) நடத்த முடியும். இல்லாவிட்டால் ஒளிநாடாக்களாக வெளிநாட்டுக்கு (சிங்கப்பூர் அல்லது ஹாங்-காங்) அனுப்பி 2-3 மணி நேரத்திற்கு அப்பால்தான் செய்திகளை வாசிக்க முடியும். உள்நாட்டிலிருந்து ஒளிபரப்பும் போட்டி நிறுவனங்கள் பார்வையாளர்களையும், அதனால் வரும் விளம்பரப் பணங்களையும் அள்ளிக்கொண்டு போய்விடும்.

அரசு ஏன் 26% என்ற உச்ச வரம்பை வைத்தது? செய்தித் தொலைக்காட்சிகள் இந்தியரது கையில் இல்லாவிட்டால் இந்திய அரசுக்கு எதிராகவும், வெளிநாட்டு அரசுக்கு ஆதரவாகவும் செய்திகள் வழங்கப்படும், மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளையும் என்றெல்லாம் அரசு கருதியிருக்கலாம். பொதுமக்களுக்கு இதுவரை சரியான காரணம் எடுத்துக் கூறப்படவில்லை. மேலும் செய்தித்தாள் நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களின் கையில்தான் இதுவரை இருந்து வந்திருக்கிறது. வெளிநாட்டு முதலீடு இங்கு இதுவரை மறுக்கப்பட்டு வந்தது. இப்பொழுதுதான் இதில் 26% வரை வெளிநாட்டவர் பங்கு பெறலாம் என்று அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதனால் செய்தித் தொலைக்காட்சி நிறுவனங்களை செய்தித்தாள் நிறுவனங்களோடு ஒப்பிட்டு இரண்டிலும் 26% சதவீதம்தான் வெளிநாட்டவரது பங்குரிமை இருக்க வேண்டும் (தற்போதைக்கு) என்று அரசு கருதியிருக்கலாம்.

இந்த அரசு விதிமுறையோடு மூன்று மாத கால அவகாசம் வந்தவுடன் ஸ்டார் நிறுவனம் ஒரு சில இந்தியர்களுடன் பேசி அவர்களைத் தன் செய்தித் தொலைக்காட்சி நிறுவனத்துக்குப் பங்குதாரர்களாக ஆக்கி, தனது பங்கை 26%க்கு குறைக்க முயற்சி செய்தது. இது நடக்கும் வரை அரசிடம் ஒவ்வொரு வாரமாக கால அவகாசம் கேட்டு நீட்டித்து வந்தது.

கடைசியாக, குமார மங்கலம் பிர்லா (பெரிய தொழிலதிபர்), சுஹேல் சேத் (விளம்பர நிறுவனமான ஈக்வஸ் உரிமையாளர்), மாயா அலக் (ப்ரிட்டானியா நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனரின் மனைவி, மற்றும் நாடக ஈடுபாட்டாளர்) போன்றோரைப் பங்குதாரராகக் கொண்டு வந்தனர். ஆனால் போட்டி நிறுவனங்கள் இது ஓர் கண்துடைப்பு வேலை என்றும், எந்த ஒரு பங்குதாரரும் ஸ்டார் நிறுவனத்தை விட அதிக அளவு பங்கு வாங்காததால், ஸ்டார் நிறுவனமே முழு ஆளுகையைத் தன் கையில் வைத்துள்ளது என்றும், மற்றவர்கள் ஸ்டாரின் கைப்பாவை என்றும் குற்றம் சொல்லின.

இதைப் பற்றிய மீதியைப் பின்னர் பார்க்கலாம்.

மழைநீர் சேமிப்பு

தமிழக அரசு ஆகஸ்டு 31, 2003 க்குள் சென்னையில் உள்ள வீடுகள் அனைத்திலும் மழைநீர் சேமிப்புக்கான அமைப்பினை (Rain water harvesting unit) கட்டாயமாக அமைக்க வேண்டும் என்று அவசர ஆணை (ordinance) பிறப்பித்துள்ளது. மிகவும் அவசியமான ஒன்று என்றாலும் இது போன்ற "துக்ளக்" சட்டங்கள் நடைமுறைக்கு ஒவ்வாதன. வெறும் 40 நாட்கள் அவகாசம் கொடுத்து விட்டு அத்தனை வீடுகளிலும் இது நடைபெற வேண்டுமென்றால், அது எப்படி சாத்தியம்? கிட்டத்தட்ட 99% வீடுகளில் இதுபோன்ற ஆணை அமலுக்கு வந்ததே தெரியாது.

ஆகாஷ் கங்கா என்னும் அமைப்பின் இணைய தளத்தில் மழைநீர் சேமிப்பு பற்றிய விவரங்கள் தெரிய வரும். சென்னைக் குடிநீர் வாரியத்தின் இணையப் பக்கத்திலும் இது பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம்.

Monday, July 28, 2003

புலிநகக் கொன்றை மற்றும் இதர பல

பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய "Tiger Claw Tree" (Penguin Publishers) என்னும் ஆங்கிலப் புதினத்தின் தமிழாக்கம் "புலிநகக் கொன்றை" (காலச்சுவடு பதிப்பகம் - அவரே தமிழாக்கியுள்ளார்) சனி அன்று வாங்கினேன். இதன் ஆங்கிலப் பதிப்பை விமரிசைக்கையில் அசோகமித்திரன், "ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்" என்று பாராட்டியுள்ளார். நான் ஏற்கனவே ஆங்கில நாவலைப் படித்தமையால், அது இன்னும் மனசில் அழியாமல் இருந்தமையால், தமிழில் படிக்கத் தயக்கம். நேற்று ஒருவகையில் ஆரம்பித்துவிட்டேன்.

நாங்குநேரி - நம்மாழ்வார் பிறந்த ஊர், மதுரகவி ஆழ்வார் தொண்டு செய்த ஊர் - ஜீயருக்கு மடப்பள்ளியில் புளியோதரை செய்து போடும் சமையற்காரருக்கு மகளாகப் பிறந்த பொன்னம்மாளின் கதையாக நீண்டு வளரும் இந்தக் கதையில், தமிழகத்தின் வரலாறும் விரிவடைகிறது. முழுக் கதையையும் மீண்டும் தமிழில் படித்துவிட்டு என் சிறு விமரிசனத்தை இங்கு வைக்கிறேன்.

கூடவே இன்னும் பல புத்தகங்களை வாங்கினேன். முக்கியமாக மா.கிருஷ்ணனின் (அ.மாதவையாவின் புதல்வர்) 'மழைக்காலமும், குயிலோசையும்' புத்தகமும் வாங்கினேன். இந்தப் புத்தகத்தைப் பற்றியும், கிருஷ்ணனைப் பற்றியுமான ராமச்சந்திர குஹாவின் கட்டுரை The Hindu இதழிலிருந்து இதோ.

பொன்விழி பற்றிய விமரிசனம்

நான் தமிழோவியம் இணைய இதழில் எழுதி வெளிவந்த பொன்விழி தமிழ் OCR பற்றிய கட்டுரையின் சுட்டி இதோ. இதனை சற்று விரிவாக்கி, இன்னும் சில உதாரணங்களோடு இந்தப் பக்கத்தில் இடுகிறேன் (இந்த வாரக் கடைசியாகலாம்.).

Wednesday, July 23, 2003

தமிழில் OCR

OCR என்றால் Optical Character Recognition - அதாவது படமாக உள்ள எழுத்துக்களை, கணினி மூலம் ஆராய்ந்து, கணிவடிவிற்கு மாற்றுவது - எழுத்துருக்களை அடையாளம் காண்பது ஆகும்.

அச்சிட்ட புத்தகம் ஒன்று வாங்குகிறீர்கள். அது கணினி வடிவில் இருந்தால், பிறரோடு கருத்து பரிமாற உதவியாயிருக்கும். யாஹூ குழுமங்களில் மேற்கோள் காட்டலாம், விமரிசனம் எழுதலாம். கணினி மூலம் பல கோப்புகளுக்கிடையே ஒரு குறிப்பிட்ட சொல்லை மட்டும் தேடலாம்.

நீங்கள் ஒரு scanner-ஐ (ஒளி மூலம் தாளில் உள்ளதை கணினிப் படமாக மாற்ற உதவும் கருவி) வாங்கினால், அதனோடு ஆங்கில எழுத்துகளை கண்டறியும் மென்பொருளும் கூடவே தரப்பட்டிருக்கும். இதன் மூலம் தினம் வரும் செய்தித்தாளை, ஆங்கிலப் புத்தகத்தில் இருக்கும் பக்கங்களை சுலபமாக scan செய்து, OCR செய்து, கணினி வடிவிற்குக் கொண்டு வந்துவிடலாம்.

தமிழில் இந்த வசதிகள் குறைவு. நேற்று 'பொன்விழி' என்று ஒரு மென்பொருளை வாங்கினேன். இது சென்னையைச் சேர்ந்த 'குரு சொலுஷன்ஸ்' என்னும் நிறுவனத்தால் விற்கப்படுகிறது. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி வி. பாலசுப்ரமணியன், 17/10 வாசுதேவ புரம், மேற்கு மாம்பலம், சென்னை 600 033, தொலைபேசி எண் +91-44-2473 1048, மின்னஞ்சல் vengba@hotmail.com.

இந்த மென்பொருளைப் பற்றிய தகவல்களை அடுத்த கட்டுரையில் காண்க.

Tuesday, July 22, 2003

இன்றைய செய்திகள்

தமிழ் நாட்டு அரசு அலுவலர் வேலை நிறுத்தம் பற்றிய உச்ச நீதிமன்றத்தின் கருத்து: ஏன் மதிப்புக்குறிய நீதிபதிகள் வேலை நிறுத்தம் செய்வது சட்டத்துக்குப் புறம்பானது (illegal) என்று கருதுகின்றனர்? UK, France போன்ற நாடுகளில் இது போன்றில்லையே?

செல்பேசி நிறுவனங்களின் கூட்டமைப்பு (COAI) 'ஒருமித்த அனுமதி' (Unified license) க்கு மறுப்பு தெரிவித்துள்ளது. 'ஒருமித்த அனுமதி' பற்றி TRAI (தொலைதொடர்பு நிறுவனங்களின் சேவைகளை நெறிப்படுத்தும் நிறுவனம்) ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதன்மீதான விமரிசங்களை வரவேற்று உள்ளது. செல்பேசி நிறுவனங்கள் GSM என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த, நேற்று வந்த ரிலையன்ஸ் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் இரண்டும் CDMA முறையிலான செல்பேசிகளை 'limited mobility' என்ற தொலை தொடர்புக் கொள்கை மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட 'basic telecom license' இல் உள்ள ஓட்டையைக் காரணம் காட்டி விற்க ஆரம்பிக்க, இதனால் TRAI, TDSAT மற்றும் உச்ச நீதிமன்றம் வரை வழக்குகள் போடப்பட, கடைசியாக இந்த 'ஒருமித்த அனுமதி' என்னும் கொள்கையை TRAI கொண்டுவர ஆசைப்படுகிறது. இதை COAI எதிர்ப்பது எதிர்பார்த்ததே. இதற்கு முடிவு என்னவென்றுதான் தெரியவில்லை.

Monday, July 21, 2003

தக்ஷிண சித்ரா

நான், மனைவி, குழந்தையோடு சனிக்கிழமை அன்று தக்ஷிண சித்ரா சென்றிருந்தோம். குழந்தையை Funimals என்னும் சிறார்களுக்கான நிறுவனத்தில் சேர்த்திருந்தேன். நான்கே வயதான அவள், மற்ற சிறுவர்களுடன் தக்ஷிண சித்ரா செல்லவேண்டியிருந்தது, ஆனால் கடைசி நேரத்தில் குழந்தை அழுது ரகளை செய்ய, நானும், மனைவியும் அவர்களோடு சேர்ந்து த.சி சென்றோம். குழந்தையின் ரகளைக்கு நன்றி.

த.சி சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ளது. இந்த இடம் என்னவென்றே இதுநாள் வரை எனக்குத் தெரிந்ததில்லை.

தென் மாநிலங்களின் கலைகளும், வாழும் மக்களின் பழக்க வழக்கங்களும் மறைந்துவிடா வண்ணம் அவைகளைப் போற்றிப் பாதுகாப்பதற்காகவும், மேலும் வளர்ப்பதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ள ஓர் மையமே த.சி ஆகும்.

இங்கு கிட்டத்தட்ட 4 மணி நேரம் செலவு செய்ததில் தமிழ்நாடு சம்பந்தப்பட்டவைகளை மட்டும் பார்த்ததில்:


 • சைக்கிள் வித்தை: கிராமங்களில் சைக்கிள் (மிதிவண்டி) வைத்துக்கொண்டு பலவித வித்தைகளைச் செய்து பிழைப்பவர் உண்டு. அதை இருவர் இங்கு செய்து காட்டினர். சைக்கிளை மிதித்தவாரே கீழிருந்து தண்ணீர் நிரம்பிய குடத்தை வாயால் கவ்வி எடுத்து, ஒரு சுற்று சுற்றிவிட்டு, மீண்டும் கீழே வைப்பது; கைகளால் மிதிப்பானை சுழற்றிக்கொண்டே சுற்று வருவது; ஒரு சைக்கிள் டயரானால் ஆன வலையத்தில் சைக்கிளோடு தானும் புகுந்து வெளி வருவது; மற்றொருவரை தன் முதுகில் சுமந்து, கைகளால் கைப்பிடியைத் தொடாமல் சுற்றுவது என்று பல வித்தைகள்.
 • தெருக்கூத்து: திரௌபதியை அவளது அண்ணன் சொத்துக்கு ஆசைப்பட்டு துரியோதனனிடம் கடத்திக்கொண்டு வரப்போக, பீமனிடம் உதை வாங்குவது பற்றிய கதை. ஆட்டம், பாட்டம், வசனம், இசை என்று அமர்க்களமாய் இருந்தது, ஒரு முப்பது நிமிடங்களுக்கு.
 • பொம்மலாட்டம்: இது நிழல் பொம்மலாட்ட வகையைச் சேர்ந்தது. கிருஷ்ண லீலையில் பூதனையை வதம் செய்தது.
 • ஆட்டம்: ஒயிலாட்டம், கரகாட்டம், காவடியாட்டம் போன்றவை: தவில் தாளம் போட சிறுமியர் அதற்கு ஏற்ப ஆட்டமாடுவது.
 • குயவர் ஒருவர் பானை, குவளை செய்து காண்பிப்பது.
 • பம்பரம், ஓவியங்கள் வரைவது, துணி வேலைப்பாடு, மர வேலைப்பாடு, தோரணம் செய்வது என்று பல்வேறு நிகழ்ச்சிகள்.


நேரம்தான் போதவில்லை. இன்னும் மற்ற மாநில விஷயங்களையும் பார்க்க வேண்டும்.

நாட்டுப்புறத்தில் புழங்கும் பல்வேறுவிதமான வீடுகளைக் கட்டி வைத்து இப்படித்தான் இருக்கும் அந்தணரின் வீடு, இப்படித்தான் இருக்கும் செட்டி நாட்டு வீடு என்று காட்டுகிறார்கள். ஓர் மூலையில் ஒரு சிறிய தேரும் நிற்கிறது. பிறந்தது முதல் சென்னையின் கான்கிரீட் காடுகளுக்கிடையே வாழ்ந்து வரும் குழந்தைகளுக்கு இது ஒரு நல்ல படிப்பினைக் கொடுக்கும் இடம்.

Friday, July 18, 2003

தமிழில் மொசில்லா

மொசில்லா என்பது இணையத் தளங்களை மேய (browse) உதவும் மென்பொருள். நீங்கள் என் வலைப்பூவை (weblog/blog), மொசில்லாவில் பார்த்தால் கொஞ்சம் குழப்பமாகத்தான் தெரியும். Windows XPஇல் பார்த்தால் கொ, கோ, கௌ, கை ஆகியவை குதறப்பட்டு, வரிசை மாறி இருக்கும். மொசில்லா 1.4இல் இது சரிபடுத்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். Windows 98, அல்லது அதற்குக் கீழே என்றால், அவை யூனிகோட் என்றால் அறியாதவை.

முகுந்தராஜ் என்பவர் மொசில்லாவிற்கு தமிழ் localisation செய்துள்ளார். இதன் மூலம் மொசில்லாவின் கட்டளை menu தமிழிலேயே இருக்கும். இதற்கு யூனிகோட் செயல்படும் கணினி தேவை (Win2k, Win XP, Linux). இதைப்பற்றிய செய்தி இந்தக் கட்டுரையில். என்னுடைய கணினித் திரை எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை இங்கு பார்க்கவும்.

இங்கு இணைய யாஹூ குழுமம் ராயர் காபி கிளப் காட்சியளிப்பது TSCII என்னும் தகுதர வரிவடிவில். அது யூனிகோட் அல்ல.

Tuesday, July 15, 2003

மூன்று விரல்கள்

நேற்றுத்தான் வந்தது இரா.முருகன் எழுதிய மூன்று விரல்கள் புத்தகம் மானசரோவரிலிருந்து. (ரூ 145 புத்தகத்துக்கு ரூ 40 போஸ்டல் சார்ஜ் வாங்குவது அநியாயம். அதுவும் சென்னைக்குள்ளேயே).

களம் மிகவும் சுவாரஸியமானது. புறத்திலிருந்தே ஆனால் வெகு அருகாமையில் பார்த்து வந்தது. என் தங்கை கணவன், என் மனைவியின் அண்ணன், அவனது மனைவி, என் மனைவியின் தங்கை, அவளது கணவன் என்று எல்லோரும் சாஃப்ட்வேர். நானும் லாப்டாப் தூக்கிக்கொண்டு அலைவதால் என்னைக்கூட எல்லோரும் IT/சாஃப்ட்வேர் என்றுதான் நினைக்கிறார்கள்.

நேற்று இரவு படிக்க ஆரம்பித்து இதுவரை 25 அத்தியாயங்கள் படித்திருக்கிறேன். நகைச்சுவை வழிந்தோடுகிறது எல்லாப் பக்கங்களிலும். சுதர்சனின் ஒவ்வொரு எண்ண ஓட்டங்களையும் அற்புதமாய்ப் படம் பிடிக்கிறார். மிகச் சரளமான நடை. பெயர்க்காரணம் அருமை. எல்லோரும், முக்கியமாக சாஃப்ட்வேர் என்ஜினியர்கள் அந்த மூன்று விரல் கொண்டு, அந்த மூன்று பட்டன்களை சொடுக்கி வாழ்க்கையை மீண்டும், மீண்டும் திரும்ப மாற்றிக்கொள்ளலாமா என்று ஏங்குவது உண்மையே.

ஐயங்கார் பாஷையில் ஒரு சில சறுக்கல்கள் அங்கங்கே. சாற்றமுதுக்கு திருமப்பாறுதல்தான் சந்தியா கேட்பதாக சுதர்சனுக்குத் தோணவேண்டுமே ஒழிய ரசத்துக்கு தாளித்துக் கொட்டுவது அல்ல. (அது அய்யர் பாஷை அண்ணா!) புஷ்பா கத்திரிக்காய் கரமேது (கறி அமுதின் திரிபு) பற்றிப் பேச வேண்டும், கறியைப் பற்றி அல்ல.

108ஆவது திருப்பதி ஸ்ரீவைகுண்டமே ஆனாலும் வழக்கில் பரமபதம் என்றுதான் நான் கேட்ட அவ்வளவுபேரும் சொல்வர். ஏனெனில் திருவைகுண்டம் என்று இந்நாட்டிலேயே ஒரு திருப்பதி உள்ளது, அத்தோடு இதைக் குழப்பிக் கொள்ளக்கூடாது பாரும்.

பட்டாபி என்னும் பட்டர் அய்யரா, அய்யங்காரா? கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. ருத்ரம், சமகம் எல்லாம் சொன்னால், முன்னவர். பேர் என்னவோ பின்னவர் போல் உள்ளதே?

படித்துமுடித்து விட்டு மற்றவை...

Monday, July 14, 2003

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உரை

குடியரசுத் தலைவர் திரு. ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் FeTNA தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழாவினைத் துவக்கி வைத்து ஆற்றிய உரை
ஜூலை 5, 2003

வாழ்த்துக்கள்

வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் ஆண்டுவிழாவில் தமிழர்கள் மட்டுமின்றி எல்லா இந்தியர்களையும் தொடர்புகொள்வதில் அளவிலா மகிழ்ச்சியடைகிறேன்.

அதுவும் தமிழ்நாட்டு பள்ளி பிள்ளைகளுக்காக உலகப் புகழ்பெற்ற ப்ரொபஸர் டேவிட் கோல்ட்ஸ்டெயினுடைய மெக்கானிக்கல் யுனிவர்ஸ் அன்ட் பியான்ட் என்ற அறிவியல் சொற்பொழிவை தமிழாக்கம் செய்யும் முயற்சியை இந்த தருணத்தில் துவக்கி வைப்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

இன்று நீங்கள் வாழ்ந்துவரும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காவின் சுதந்திர தினம். இந்த சுதந்திர தினத்தில் உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

நாளும் கோளும்

ஏறக்குறைய 2000 தமிழர்கள் இங்கு குழுமியுள்ளீர்கள். உங்களிடம் இந்த தருணத்தில் சில விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நீங்கள் எல்லாரும் அமெரிக்காவில் சென்று பணியாற்றி வருகிறீர்கள். அதைப்போல நான் சயின்டிஸ்ட்டாக இந்தியாவில் பணியாற்றி வந்தேன். பிறகு அண்ணா யுனிவர்ஸிட்டியில் புரொபஸராக பணியாற்றினேன். அங்கு ஏராளமான மாணவர்களை சந்தித்து உரையாற்றுவேன். ஒரு வாரத்தில் பத்து வகுப்புகள் எடுத்து வந்தேன். பிறகு என்னை பிரஸிடென்ட் ஆக நாமினேட் செய்தார்கள். இந்த பிரஸிடென்ட் ஆகும் வைபவத்தை கோ-ஆர்டினேட் செய்ய ஒரு மந்திரியை நியமித்தார்கள். நான் சென்னையில் இருக்கும்போது அந்த மினிஸ்டர் டெல்லியிலிருந்து போன் செய்து சொன்னார் "கலாம்ஜி உங்கள் preference என்ன? எந்த நல்ல நேரத்தில் இந்த நல்ல காரியத்தை செய்ய உத்தேசித்துள்ளீர்கள். உங்கள் astrologer யாரையாவது contact செய்கிறீர்களா?" என்று கேட்டார். நான் சொன்னேன் "பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணிநேரம் பிடிக்கிறது. அவ்வாறு சுற்றிக்கொண்டே சூரியனைச் சுற்றுகிறது. அவ்வாறு சூரியனைச் சுற்றிவர அதற்கு 365 நாள் பிடிக்கிறது. அதுபோல சூரியன் கேலக்ஸியைச் சுற்றுகிறது. ஆகவே time என்பது இந்த நடைமுறையை குறிக்கும் ஒரு நிகழ்ச்சி. அவ்வாறு இந்த இரணடு நிகழ்ச்சியும் நடைபெறும் வரை எனக்கு எல்லா நேரமும் நல்ல நேரமே. டைம் ஒரு astronomical நிகழ்ச்சியே தவிர astrological நிகழ்ச்சி இல்லை என்றேன்." அந்த அமைச்சருக்கு ரொம்ப ச்ந்தோஷம். இதை பத்திரிக்கை நியூஸாக கூட கொடுத்துவிட்டார். இவ்வாறாக நான் ஜூலை 25ம் தேதி 2002ம் ஆண்டு ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டேன்.

ஆகவே பூமி சூரியனை சுற்றுவது போல சூரியன் கேலக்ஸியை சுற்றி வருகிறது. அதற்கு 250 மில்லியன் வருடங்கள் ஆகிறது. இது போன்ற இயற்கை நிகழ்வுகளை எல்லாம் அறிய முயற்சிகள் தொடர்ந்து வருகின்றது. முதலில் நியூட்டன் புவியீர்ப்பு சக்தி மற்றும் laws of motion என்ற தத்துவங்களைச் சொன்னார். பிறகு வந்த மாக்ஸ்வெல் electro magnetic theory கொடுத்தார். அதன் பிறகு வந்த சுப்ரமணியம் சந்திரசேகர், "சந்திரசேகர் லிமிட்" என்று சொல்லப்படுகிற தனது தத்துவத்தை உப்யோகப்படுத்தி நட்சத்திரங்களின் life எத்தனை நாள் என்று கண்டுபிடித்தார். அவர் கருத்துப்படி நமது சூரியன் 10 பில்லியன் ஆண்டுகள் ஒளிரும். ஏறக்க்குறைய சமகாலத்தவரான ஐன்ஸ்டீன் தனது ரிலேடிவிடி தியரி கொடுத்தார். அதன் பிறகு ஸ்டீபன் ஹாக்கிங் அவருடைய 'காலம் ஒரு சுருக்கமான சரித்திரம்' என்ற தத்துவ புத்தகத்தின் மூலமாக இந்த கருத்துகளை அனைத்தையும் ஒன்றிணைத்து கேலக்ஸிகள் இயங்குவதை விளக்கிச் சொல்ல முயன்றார். அவர் கடைசியாக தம்முடைய தியரியில் இறைவனுக்கு ஒரு உருவம் கொடுத்து யூனிஃபைட் தியரி உருவாக்க முயற்சித்தார். இது ஒரு பெரிய துறை. இதை அறிவதின் மூலம் உலகம் எப்படி உருவானது என்றும், நாம் ஏன் பிறந்தோம்? எப்படி பிறந்தோம்? எப்படி வாழ்வோம் என்பதை அறிய வாய்ப்பு உள்ளது.

இந்த நேரத்தில் ஜனக மகாராஜாவின் அவையில் இருந்த அஷ்டவக்ரா சொன்னது - அஷ்டவக்ரா ஒரு பெரிய ஞானி - என் நினைவுக்கு வருகிறது. அவர் சொன்னார் "I am the universe and universe is my conciousness" என்றார். நான் நினைக்கிறேன் இந்த தத்துவத்தை சேர்த்து முயற்சி செய்தால் ஒரு நல்ல யூனிஃபைட் தியரி உருவாகுமோ என்ற கருத்து என் மனதில் உருவெடுத்துள்ளது.

The Creator

நான் கடந்த சில ஆண்டுகளில் ஏறக்குறைய 2,00,000 பள்ளிக்கூட குழந்தைகளைச் சந்தித்தேன். அது போல சில மாதங்களுக்கு முன் மேகாலயா சென்றபோது அங்கு ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி என்னைக் கேட்டாள் நான் கடவுளில் நம்பிக்கை கொண்டிருக்கிறேனா என்று. நான் மாணவர்களை சந்தித்த இடம் ஒரு open air theatre. நான் மேலே வானத்தைப் பார்த்தேன். ஏராளமான நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன. நான் சொன்னேன் "பூமி சூரியனைச் சுற்றுகிறது. சூரியன் கேலக்ஸியை சுற்றுகிறது. நாமிருக்கும் இந்த கேலக்ஸி யுனிவர்ஸில் ஒரு சின்ன கேலக்ஸி. நீங்கள் இரவில் இதைப் பார்க்கலாம். இதைப்போல ஏராளமான கேலக்ஸிகள் உள்ளன. நம்முடைய கேலக்ஸியிலும் நமது சூரியன் ஒரு சின்ன நட்சத்திரம். இதைவிட பெரிய பெரிய ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளன. நம்முடைய நட்சத்திரமான சூரியனிலும் ஒன்பது கோள்கள் உள்ளன. அதில் செவ்வாயையும் வியாழனையும் ஒப்பிட்டு பார்த்தால் பூமி ஒரு insignificant planet. நாம் மேலே பார்த்தால் ஆயிரமாயிரமாக தெரியும் அந்த நட்சத்திரங்களை பார் - இதையெல்லாம் ஒரு creator தான் create செய்யமுடியும். எனவே நான் ஆண்டவனை நம்புகிறேன்", என்றேன்.

இவ்வாறாக insignificant ஆக உள்ள இந்த பூமியிலும் 6 பில்லியன் மக்கள் உள்ளார்கள். நாம் நமக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்வை உபயோகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை எப்படி செய்ய முடியும். இதை நினைக்கும்போது எனக்கு அவ்வையார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது.

வானகம் திறந்து வழிவிடும்

அந்த அற்புதமான பாடலை எந்து நண்பர் திரு. செல்வமூர்த்தியுடன் - நண்பர் செல்வமூர்த்தி ஒரு பெரிய விஞ்ஞானி - அவருடன் சேர்ந்து உங்களுக்கு பாடிக் காட்ட விரும்புகிறேன்.

அரிது அரிது மானிடராதல் அரிது
அதனினும் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்தாலும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயத்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்தக் காலையில்
வானகம் திறந்து வழிவிடுமே

இந்தப் பாடல் நன்றாக இருந்ததா?

இந்தத் தருணத்தில் என் மனதில் அந்த மகா மனிதர் வள்ளுவர் நினைவுக்கு வருகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவரது அற்புதமான நூலில் எனக்கு மிகவும் பிடித்தது ஒரு குறள். அந்தக் குறள்:

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு

இதன் பொருள் என்ன? The higher you aim you will raise to that level. You will succeed. This is the message.

இரண்டு ஆசைகள்

நான் சமீபத்தில் சென்னையில் அருங்காட்சியகத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டேன். அங்கு என்னுடைய இரண்டு ஆசைகளை சொன்னேன். அதை உங்களுக்கும் சொல்கிறேன்.

அந்த ஆசைகளில் ஒன்று திருவள்ளுவர் கைப்பட எழுதிய திருக்குறள் ஓலைச்சுவடியை காணவேண்டும் என்று. அது முடியுமா? என் நண்பர்கள் பலர் அது சாத்தியமே இல்லை என்று சொல்கிறார்கள். அவ்வோலைச் சுவடிகள் கால வெள்ளத்திலே கரைந்து காற்றிலே கலந்திருக்கும் என்கிறார்கள். அது உண்மையா? இதுவா உண்மை நிலை? நான் உங்களைக் கேட்கிறேன். எனக்கு என்னவோ தோன்றுகிறது அந்த original இந்தியாவில் எங்காவது கிடைக்கும் என்று. அதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இரண்டாவதாக, அந்த கவிஞன், திருக்குறளில் எங்குமே தான் யார்? என்ன குலம்? எந்த நாடு? எந்த மதம்? என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை. மனிதனை பிளவுபடுத்தும் மதத்தையோ, நாட்டையோ அல்லது இனத்தையோ குறித்துப் பாடவில்லை. அவர் எல்லாக் குறளும் எல்லாக் காலத்துக்கும் பொருந்துமாறு பாடினார்.

இந்த மனிதனில் அறிவு ஒளியைப் பாருங்கள். அவன் எந்த சூழ்நிலையில் திருக்குறளை எழுதினான்? எந்த சூழ்நிலையில் வாழ்ந்தான்? இந்தக் காலத்தில் மனித சமூகம் பல சச்சரவுகளில், பல பிளவுகளில் வாழ்வதை காணும்போது வள்ளுவர் வாழ்ந்த காலத்தைப் பற்றிய ஆராய்ச்சி மிக முக்கியம். இந்த ஆராய்ச்சியால் நம் நாட்டில், ஏன், இந்த உலகில் ஒற்றுமையை கொண்டுவர முடியும் - என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது பெரும்பணிதானே? இந்தியாவில் உள்ள சிந்தனையாளர்களும், அமெரிக்காவில் உள்ள உங்களைப் போன்ற தமிழ் சங்கத்தினரும் சேர்ந்து இந்த முயற்சியை செய்ய வேண்டும்.

PURA

நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? உங்களில் பலர் சிறு சிறு கிராமத்தில் இருந்து வந்திருப்பீர்கள். சிலர் நகரத்தின் அருகிலுள்ள கிராமங்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். நம் நாடு முன்னேற்றமடைந்து வளமான நாடாக மாறவேண்டும் என்றால் இந்த கிராமங்கள் செழிப்படைய வேண்டும். அதற்கு ஒரு முயற்சியாக PURA (Providing Urban facilities in Rural Areas) என்ற திட்டம் உருவாகியுள்ளது. புரொபஸர் இந்திரேசன் - அவர் ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் - I.I.T Director ஆக இருந்தவர். அவருடன் சேர்ந்து உருவாக்கியுள்ள இந்த திட்டத்தைப் பற்றி உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அத்திட்டத்தின்படி கிராமங்களை செழிப்படையச் செய்ய அங்கு நல்ல connecitivity கொடுக்க வேண்டும். முதலில் நல்ல சாலைகள் அமைக்க வேண்டும். அதில் போக்குவரத்துக்கென பஸ்களும், கல்விக்கென பள்ளிக்கூடங்களும், வைத்தியத்திற்கென மருத்துவமனைகளும் அமைத்து physical connectivity கொடுக்க வேண்டும். அதன்பிறகு Electronic connectivity கொடுக்கவேண்டும். அதாவது டெலிபோன், இண்டர்நெட் வசதிகள் கொடுக்கவேண்டும். இதன் மூலம் டெலிமெடிஸின், டெலி எஜுகேஷன், இ-கவர்னென்ஸ் போன்ற வசதிகள் ஏற்படும். நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் knowledge connectivity (அறிவு இணைப்பு) அளிக்க வேண்டும். அதாவது தொழிற்கல்வி வசதிகள் மற்றும் virtual classroom வசதிகள் செய்யவேண்டும். இவை அனைத்தும் கொடுத்தால் கிராமங்கள் செழிப்படையும். கிராமங்கள் செழிப்படைந்தால் மாநிலங்கள் செழிப்படையும். மாநிலங்கள் செழிப்படைந்தால் நம் நாடு வளமான நாடாகும். நாடுகள் செழிப்படைந்தால் உலகம் செழிப்படையும்.

இந்த முயற்சியில் நீங்களும் பங்காற்றலாம். ஒரு வளமான வலிமையான பாரதத்தை நாமெல்லாம் ஒன்றுசேர்ந்து உருவாக்க வேண்டும்.

இளம் உள்ளங்களில் பொறி ஏற்றுவோம்

இந்த நேரத்தில் எனக்கு நான் எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. அதை நண்பர் செல்வமூர்த்தி இங்கு உங்களுக்கு பாடிக் காட்டுவார்.

வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே
வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே

அறிவாற்றலும் தொழில் மாட்சியும்
எங்கள் லட்சியம் ஈட்டிடும் ஆயுதமே
சிறு லட்சியந் தனில் சிந்தனை
வீணாவதை மாபெரும் குற்ற மென்போம்

வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே

பொருள் வளமோடு நன்னெறியோடு
நம் பாரதம் உயர்ந்திட உழைத்திடுவோம்
கோடிகள் நூறாகிலும் இந்த
லட்சியச் சுடரினை பரப்பிடுவோம்

வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே

எனக்கு உங்களை எல்லாம் பார்த்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி பிறக்கிறது. நீங்கள் எல்லோரும் நன்றாக உழைத்து வாழ்வில் வெற்றியடைய இறைவன் உங்களுக்கு எல்லாம் அருள் கொடுப்பானாகுக. இப்போது உங்களில் ஒருசிலர் 8 அல்லது 4 பேர் தமிழிலேயே கேள்வி கேட்டால் நான் பதில் தர தயாராக இருக்கிறேன்.

உங்கள் எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

ஆ.ப.ஜெ அப்துல் கலாம்
5.7.2003

இது குடியரசுத் தலைவரின் இணையப் பக்கத்திலிருந்து யூனிகோடுக்கு மாற்றப்பட்டுள்ளது.

Friday, July 11, 2003

கல்யாண கலாட்டா

நேற்று ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன். காலை முதல் இரவு வரை என் ஒரே வேலை சாப்பாடு நேரத்திற்கு சாப்பாடும், அட்சதை போட வேண்டிய நேரத்திற்கு அட்சதையும்.

ஆனால் சுற்றிலும் பலர் ஓடியாடி வேலை செய்தவண்ணம் இருந்தனர். முக்கியமாகப் பட்டது சமையல்காரர்களும், பந்தியில் உணவு பரிமாறுபவர்களும்தான். அதன்பிறகு மந்திரம் ஓதும் பார்ப்பனர்.

தமிழ்நாட்டுப் பார்ப்பனர் திருமணங்கள் நிறையவே மாறிவிட்டது. சென்னை போன்ற இடங்களில் ஒரு நாள் கல்யாணம்தான் இப்பொழுதெல்லாம். முதல் நாள்தான் சில சமயம் நிச்சயதார்த்தமே. இன்னும் சிலர் முதல்நாள்தான் மாப்பிள்ளைக்குப் பூணூலும் அணிவிக்கின்றனர். பெண்கள் மட்டும் விடாது நகை, புடவை அணிந்து, மாப்பிள்ளையை வைத்து நலுங்கும், ஊஞ்சலும் விளையாடுகின்றனர். இன்னும் காசி யாத்திரைக்கு குடையும், செருப்பும் வாங்கப்படுகிறது. தேங்காய் உருட்டி, 'வாரணமாயிரம்' பாடி, அப்பளம் நொறுக்கி வண்ண, வண்ண சாத உருண்டைகளைத் தூக்கியெறிந்து, அசிங்கமான குரலில் பாட்டுப்பாடி, தாங்கமுடியாத ரகளை.

விடாது நாயனமும், தவிலும் வந்து ஏதோ பாட்டுப்பாடி, நடுவில் கை ஆட்டப்படும் போதெல்லாம் கொட்டுமேளம் கொட்டி, மாப்பிள்ளைக்கு ஒரு முடிச்சும், நாத்தனார்களுக்கு இரண்டு முடிச்சுமாக ஒரு வழியாக முடிகிறது. ஓரத்தில் கலெக்ஷன் எவ்வளவு என்று எழுத ஒரு மாமா, கையில் புத்தகமும் பேனாவுமாக. இவர் முடிந்தவரை ஏதாவது வங்கியில் வேலை பார்த்திருப்பார் (அ) பார்த்துக்கொண்டிருப்பார். வரும் வரவு ஐந்தோ, பத்தோ என்றாலும், "சோபனோ சோபமானஸ்ய" என்று ஆரம்பித்து பத்தாயிரம் கட்டி வராகன் கொடுக்கப்பட்டதாக வாத்தியார் சொன்னாலும் இந்த மாமா உண்மைகளை அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதி விடுவார்.

அன்று இரவு ரிசப்ஷன். இங்குதான் அலுவலகத்தவர்கள் வருவார்கள். ஒரு மேடையில் கோட், சூட் சகிதம் மாப்பிள்ளையும், பக்கத்தில் வட இந்திய டிசைனில் பெண்ணும் நிற்க, எல்லோரும் கியூவில் நின்று, மணமக்கள் பக்கத்தில் வந்து வீடியோ கேமராவாலும், வெறும் கேமராவாலும் கிளிக் செய்யப்பட்டு, புஃபே சாப்பிட்டு, வீட்டுக்குச் செல்வர். அழகாக பேக் செய்யப்பட்ட அன்பளிப்புகள் பின்னால் சென்று குவியும்.

மொத்தத்தில் இந்தக் கல்யாணங்கள் எல்லாம் போரடிக்கிறது. பஞ்சாபி, மார்வாடிக் கல்யாணங்கள் மாதிரி ஒரு குதிரை ஊர்வலம், தெருவில் ஹிந்தி/தமிழ் பாட்டுக் கச்சேரி, ஆட்டம், பாட்டம் என்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

(நடந்தது மனைவியின் தமையன் கல்யாணம். மனைவி நான் எழுதுவதையெல்லாம் படிக்க மாட்டாள் என்ற நம்பிக்கைதான்.)

Monday, July 07, 2003

பாதிரியார் (Priest) - 1994

பாதிரியார் (Priest) - 1994, கதை: ஜிம்மி மெக்கவர்ன், இயக்கம்: அன்டோனியா பர்ட் (பெண்)

ஒருபாற்சேர்க்கை பற்றி விவாதம் நடக்கும்போது நினைவுகூரவேண்டிய மிக முக்கியமான படம் இது. என்னை மிகவும் பாதித்த ஒரு படம்.

கதைச் சுருக்கம்: இங்கிலாந்தில் ஒரு கிராமத்து கத்தோலிக்கத் தேவாலயத்தில் மாத்தியூ (Matthew), கிரேக் (Greg) இருவரும் பாதிரியார்கள். கத்தோலிக்க விதிப்படி பாதிரியார்கள் பிரம்மச்சாரிகளாக இருக்க வேண்டும். கிரேக் வயதில் சிறியவர், முற்போக்கு எண்ணம் கொண்டவர், கூடவே ஓர்பாற்சேர்க்கையில் நாட்டம் உள்ளவர். மாத்தியூவோ வேலைக்காரியுடன் தொடர்பு வைத்துள்ளவர்.

இதற்கு நடுவில் அந்த ஊரில் உள்ள ஒரு குடும்பத்தில், ஒரு சிறுமியை அவளது தகப்பனே விடாது பலாத்காரம் செய்து வருகிறான். (child abuse). அந்தச் சிறுமி பாதிரி கிரேக்கிடம் confession செய்யும்போது இதைப் பற்றிப் பேசுகிறாள். ஆனால் கிரேக்கினால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. கத்தோலிக்க முறைப்படி, confession-இல் சொல்லப்பட்டதை வெளியே மற்ற யாரிடமும் சொல்லக்க்கூடாது. அந்தச் சிறுமியின் தகப்பனும், தன்னுடைய confession போது அதை பற்றி வக்கிரமாகப் பேச, தவிக்கும் உள்ளத்தோடு கிரேக் அந்தக் கொடியவனை எவ்வளவோ தடுக்கப் பார்க்கிறான், இயலவில்லை. அந்தச் சிறுமியின் தாயிடம் பலவித க்ளூக்கள் கொடுத்தாலும் அவளுக்குப் புரிவதில்லை. ஒரு நாள் தாய் வீட்டுக்கு முன்னமாகச் செல்ல, அங்கே பார்க்கும் காட்சி அவளை உறைய வைக்கிறது. தகப்பனை அடித்து வீட்டை விட்டு துரத்துகிறாள். பாதிரி கிரேக் அந்தச் சிறுமிக்கு நடந்த கொடுமையை தடுத்து நிறுத்தவில்லை என்று குற்றம் சொல்கிறாள்.

இதனிடையே கிரேக்கின் ஒருபாற்சேர்க்கை நடத்தை கிராம மக்களுக்குத் தெரிந்து போகிறது. (கிரேக்கும் அவனது காதலனும் காரில் உறவு கொள்ளும்போது போலீஸ் கண்டுபிடித்து சிறையில் போடுகின்றனர்). மக்கள் அவனை வெறுக்கிறார்கள். கிரேக் ஊரை விட்டுப் போய்விட, மாத்தியூ அவனை மீண்டும் தேவாலயத்துக்கு அழைத்து வருகிறான்.

ஈஸ்டர்(?) போது அப்பம் பிட்டுக் கொடுக்க இரண்டு பாதிரிகளும் நிற்க, ஊர் மக்கள் அனைவரும் திரண்டு மாத்தியூவைத் தேர்ந்தெடுக்கிறார்கள். கண்ணில் நீர்மல்க நிற்கும் கிரேக்கைத் தேர்ந்தெடுக்கிறாள் அந்தச் சிறுமி மட்டும் - கிரேக்கிற்கு பாவ மன்னிப்பு கடவுளிடமிருந்தோ அல்லது, அந்த ஊர் மக்களிடமிருந்து கிடைக்குமோ இல்லையோ, அடிபட்டுத் துன்புறுத்தப்பட்ட அந்த குழந்தையிடமிருந்து கிடைக்கிறது. தன்னைக் காக்கத் தவித்து ஆனால் இயலாமையால் ஒன்றும் செய்ய முடியாத கிரேக்தான் அந்தக் குழந்தையின் முன் கடவுளின் வழியாகத் தோன்றுகிறான். நெஞ்சை நெகிழவைக்கும் காட்சி இது.

இந்தப் படம் கார்பெட்டுக்குக் கீழே கடாசப்பட்டுள்ள பல கேள்விகளை முகத்திற்கு முன் கொண்டுவருகிறது.

[written first in http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/9137]

Friday, July 04, 2003

விமானத்தில் உணவு

லண்டனில் மூன்று நாட்களுக்குப் பின்னர் சென்னைக்கு மறுபடி பயணம். மீண்டும் துபாய் வழியாக, மும்பை வந்து, பின்னர் அங்கிருந்து சென்னைக்கு.

துபாய் விமான நிலையத்துக்கு வந்தவுடன் நேராக எமிரேட்ஸ் ஆதரவில் "இலவச உணவு" கிடைக்குமா, என்று விசாரித்துப் பார்த்தால், "கிடையாது, நான்கு மணிநேரமாவது விமானநிலையத்தில் இருக்குமாறு இருந்தால்தான் அது" என்று பதில்.

பின்னர் அங்கிருந்து காசுக்கு விற்கும் கடையைத் தேடி ஒரு நடை, அதிலும் மெக்டானல்ட்ஸ் போன்றவற்றை விலக்கி, ஒரு இந்திய உணவுக்கடை கிடைத்தது. இந்திய உணவு என்றால் பெரும்பாலும் கிடைப்பது வடக்கில் இருக்கும் ரொட்டி, கறி வகைகளே. யாருக்காவது இட்லியும், உப்புமாவும் விற்கத் தோணாதோ? இரண்டு 'நான் ரொட்டி', கூட உருளைக் கறியும், கதம்பமாக ஒரு காய்கறிக்கூட்டும். வயிறு நிரம்பியது. இப்பொழுதெல்லாம் விமானத்தில் கிடைக்கும் உணவை சாப்பிடத் துளிக்கூடப் பிடிக்கவில்லை. இந்தியக் காய்கறி உணவு என்று சொல்லி அவர்கள் தருவது வாய்க்குள் வைக்க முடிவதில்லை. இதுவரை கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட பயணங்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பேன். விரும்பி சாப்பிடுவதுமாதிரி இதுவரை ஒருமுறை கூட இருந்ததில்லை.

உள்நாட்டுப் பயணங்களும் இது மாதிரியே. ஜெட் ஏர்வேய்ஸ் விமானத்தில் கொடுப்பதும் காய்ந்து வறண்டு போன எதோ ஒன்று. இந்தியன் ஏர்லைன்ஸ் உணவு தேவலாம். இத்தனைக்கும் இந்த விமானங்களுக்கு உணவு தருவது 5 நட்சத்திர அந்தஸ்து பெற்ற நிறுவனங்களாகும்! இதற்கு பதில், பேசாமல் சரவணபவனில் வாங்கித் தரலாமே?

லண்டனில் தங்கியதில், நான்கு நாட்களில் இரண்டில் ஓர் இந்திய உணவு விடுதியில் ஒட்டியாகி விட்டது. அதுவும் வடக்கிந்திய பஞ்சாபி உணவுதான். பேட்டர்ஸி என்னும் இடத்தில் ஒரு தென்னிந்திய உணவு விடுதிக்கு வழக்கமாகப் போவேன் (நேரம் இருந்தால்). இம்முறை முடியவில்லை. தமிழகத்து அம்மாமி ஒருவர் நடத்தும் உணவு விடுதி இது. நல்ல சாற்றமுது, கடைசியில் தயிர்சாதமும், சில சமயம் நெல்லிக்காய் ஊருகாயும் கூடக் கிடைக்கும். கொரமாண்டல் என்று பெயர். (சோழமண்டலத்தின் திரிபு). பறப்பன, ஊர்வன, நடப்பன போன்றவையும் கிடைக்கும். நமக்கு அதெல்லாம் ஒத்து வராது.

1996ஆலிருந்து இங்கிலாந்து சென்று வருகிறேன். ஆனால் போனமுறை (மார்ச் 2003) லண்டன் சென்றிருந்தபோது முதல்முறையாக இங்கிலாந்து நண்பர் ஒருவர் என்னை சௌளத்தால் அழைத்துச் சென்றார். பின்னர் தனியாக ஒரு சனிக்கிழமை அங்கு மீண்டும் சென்றேன். கடைத்தெருவெங்கும் நிதானமாக நடந்து சுற்றிவிட்டு, ஒன்றும் வாங்காமல், எதோ ஒரு கடைக்குச் சென்று சுமாரான இந்திய உணவை வயிற்றுக்கு இட்டு, பின்னர் ஒரு புது அனுபவம் வேண்டி, ஹிந்தி சினிமா ஒன்று பார்க்கப் போனேன். குஷி என்று ஒரு படம். தமிழில் வந்ததை ஹிந்தியில் செய்துள்ளார்கள் என்று பின்னர் அறிந்து கொண்டேன். படு மட்டமான படம். ஒரே பேத்தல். இரண்டு குழந்தைகள் வீல்-வீல் என்று கத்திக்கொண்டு ஒருவரை ஒருவர் பிறந்த உடனே 'சைட்' அடித்து விட்டு எங்கோ பிரிந்து, பின்னர் எப்படி ஒன்று சேர்கின்றனர் (வேறு என்ன?) என்பது கதையாம்.

போயும் போயும் லண்டன் வரை வந்து இந்தப் படத்தையா பார்க்க வேண்டும்.

Thursday, July 03, 2003

ஆசிரியர், அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம்

தமிழகத்தில் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதா அரசு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை ESMA சட்டத்தில் சிறையில் போட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. Industrial action என்று சொல்லப்படும் வேலை நிறுத்தத்திற்கான உரிமை எல்லா ஜனநாயக நாடுகளிலும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் தீயணைப்புத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்தனர். அவர்களை யாரும் சிறையில் போடவில்லை. போன மாதம் ஃபிரான்ஸில் தொழிலாளர்கள் பென்ஷன் சீர்திருத்தத்தை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்தனர். அவர்களையும் யாரும் சிறையில் போடவில்லை.

ESMA போன்ற சட்டங்களை (POTAவையும்தான்) ஒட்டுமொத்தமாக தூர எறிய வேண்டும். அதைப் பயன்படுத்தும் அரசினையும் அரசியல்வாதிகளையும் தூர எறிய வேண்டும்.

Tuesday, July 01, 2003

காலத்தின் சரித்திரம்

ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய "A brief history of Time - From the Big Bang to Black Holes" என்னும் படு சுவையான புத்தகத்தைப் படித்து முடித்தேன். இந்தப் புத்தகத்தை வாங்கும் போது, இது இத்தனை சுலபமாக படிக்கக் கூடியது என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒரு வெகுஜன கதையாசிரியர் எழுதிய த்ரில்லர் நாவல் படிப்பது போல் இருந்தது. கையில் எடுத்தபின் அதைக் கீழே வைக்க முடியவில்லை. ஒரு கனமான இயற்பியல் உயர்-புத்தகம் எழுதியது மாதிரி இல்லை.

அப்படி என்னதான் எழுதியிருக்கிறார்?

நீண்ட விளக்கம் பின்னர். முக்கியமான கருத்துகள் மட்டும் இப்பொழுது.

 • இந்தப் பிரபஞ்சம் (universe) எப்படி ஆரம்பித்தது? வேதாந்தம் இல்லை அய்யா! அறிவியல் மூலமாக விளக்குகிறார். "Big bang" என்று சொல்லப்படும் பெரும் வெடிப்பு (பெரும் சிதறல்?) நடந்திருக்குமா? அந்த விளக்கம் தேவையா என்றெல்லாம் விளக்குகிறார்.
 • "Black hole" என்று சொல்லப்படும் கருந்துளை என்றால் என்ன என்று ஆராய்கிறார்.
 • காலம் என்பது என்ன? அது எப்பொழுது ஆரம்பித்தது? (பிரபஞ்சம் ஆரம்பித்த போதுதான் காலமும் ஆரம்பித்தது என்பதை நன்கு விளக்குகிறார்.)
 • மனிதன் என்னும் அறிவுடைய ஒரு உயிரினம் ஏன் உருவானது?
 • அறிவியல்-புதினம் எழுதுவோருக்குப் பிடித்தமான "future-travel" அதாவது எதிர்காலம்-செல்லல் என்பது நடக்கக் கூடியதா? எதிர்காலத்தை கணிக்க முடியுமா? (எதிர்காலம்-செல்லல், எதிர்காலம்-சொல்லல், இரண்டுமே முடியாது என்கிறார் thermodynamics ஆதாரத்தில்).

இந்தப் புத்தகம் தமிழில் பொழிபெயர்க்கப் பட வேண்டும், அனைவரும் படிக்க வேண்டும், பள்ளிகளில் பாடமாகவும் வைக்கப்பட வேண்டும்.

இந்தப் பிரபஞ்சம் ஆரம்பமும் இல்லாதது, முடிவும் இல்லாதது, காலம் என்பது எப்பொழுதுமே இருந்த, இருந்து கொண்டிருக்கிற ஒன்று என்று சொல்லும் நம் வேதாந்த சிந்தனைகள், கடவுள் பற்றிய நம் இந்தியச் சிந்தனைகள் ஆகியவற்றை இதனுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும்.