Tuesday, May 31, 2016

ரசாயன வண்ணச் சாயங்கள்

1856-ம் ஆண்டுதான் முதன்முதலாக நூல் இழைகள்மீது ஏற்றப்படும் வண்ணச் சாயங்கள் இயற்கையான உயிரினங்கள்மூலமாகத் தயாரிக்கப்படாமல் சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்டு தொழிற்சாலையில் தயாரிக்கப்படத் தொடங்கியது.

1856-க்குமுன்பாக மிகச் சில வண்ணங்கள்தான் ஆடைகள் தயாரிப்பில் பயன்பட்டன. அவுரி  (Indigofera Tinctoria) செடியிலிருந்து ஆழ்நீல வண்ணம். வோட் (Isatis Tinctoria) செடியிலிருந்து இளநீல வண்ணம், மஞ்சள் (Curcuma Longa) செடியிலிருந்து, அதேநிற வண்ணம், மேடர் (Rubia Tinctorum) என்ற செடியிலிருந்து சிவப்பு வண்ணம். கொச்சினீல் (Dactylopius Coccus) என்ற பூச்சியிலிருந்து சிவப்பு வண்ணம். இப்படிச் சில வண்ணங்களை மட்டுமே கொண்டு, பருத்தி, பட்டு, கம்பளி இழைகளுக்குச் சேர்த்து, நெய்து துணிகளை உருவாக்குவார்கள்.

1856-க்கு முன்னதாகவே ஆய்வகங்களில் ஒருசில வண்ணங்கள் உருவாக்கப்பட்டாலும் பெரும் தொழிற்சாலைகளில் அவற்றை யாரும் உருவாக்க முனையவில்லை. தொழில்ரீதியாக அது சாத்தியப்படும் என்று யாரும் நினைக்கவில்லை.

ஆனால் 1856-ல் வில்லியம் பெர்கின் என்ற பிரிட்டனைச் சேர்ந்த 18 வயதான, வேதியியல் மாணவர் ‘மாவ்’ என்று அழைக்கப்பட்ட இளஞ்சிவப்பு வண்ணத்தை ஆய்வகத்தில் உருவாக்கினார். இதனை உருவாக்க அவர் எடுத்துக்கொண்டது நிலக்கரித் தார்க் கழிவை. கிட்டத்தட்ட அந்தச் சந்தர்ப்பத்தில்தான் உயிரிகள் அனைத்தும் கரிம வேதிப்பொருள்களால் ஆனவை என்பதும், பெட்ரோலியம், நிலக்கரி ஆகியவை, உயிரிகள் பூமிக்கடியில் புதைந்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆகி, உருமாறியவை என்பதும் தெரியவந்திருந்தது. ஆனால் வேதிவினைகள் குறித்து ஆழ்ந்த கருத்துகள் இன்னமும் தோன்றியிருக்காத காலம். மெண்டலீவ் இன்னமும் தன் வேதி அட்டவணையை உருவாக்கியிருக்கவில்லை. அணு பற்றிய கொள்கைகள் தெளிவாகியிருக்கவில்லை. ஆனால் தாவரத்திலிருந்தோ, விலங்கிலிருந்தோ பெறப்படும் பொருள்களை, நிலக்கரி அல்லது பெட்ரோலியக் கழிவிலிருந்து தொடங்கி, சில வேதிவினைகள்மூலம் பெற்றுவிடக்கூடும் என்ற கருத்து உருவாகியிருந்தது.

பெர்கின், வண்ணச்சாயம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. மலேரியா நோய்க்கு மருந்தான க்வினைன் என்பது சிஞ்சோனா என்ற மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்பட்டுவந்தது. இதனை ஆய்வகத்தில் தயாரிக்க முடியுமா என்ற முயற்சியில் பெர்கின் ஈடுபட்டபோது, அகஸ்மாத்தாக உருவானதுதான் இந்தச் சிவப்புநிறப் பொடி. இந்தப் பொடியைச் சுத்திகரித்து வண்ணச் சாயமாக மாற்றி சாயத்தொழிலில் ஈடுபட்டிருந்த ஒருவரிடம் கொடுத்துப் பார்த்ததில் அவர், இது ‘பத்தரை மாற்றுத் தங்கம்’ என்று சொல்லிவிட்டார்.

ஆனாலும் ஒரு 18 வயதுப் பையன் தைரியமாக இதனைக் கையில் எடுத்துக்கொண்டு, தொழிலில் இறங்க முடிவுசெய்தது மகா ஆச்சரியம். யாரும் முதலீடு செய்ய முன்வரவில்லை. ஆனால் அந்தப் பையனின் தந்தை - கப்பல் கட்டும் தொழிலில் இருந்தவர் - முதலீடு செய்ய முன்வந்தார். அண்ணனும் தொழிலில் கூட்டு சேர்ந்தார். மிகப் பெரிய லாபம் ஈட்டினார்கள். 

வில்லியம் பெர்கினின் இந்த வண்ணச் சாயக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் ரசாயன வண்ணங்களைத் தயாரிக்கக் கடும் போட்டி நடைபெற்றது. ஜெர்மனி ஆழ்நீல வண்ணத்தை உருவாக்கியது. அது இந்தியாவின் அவுரிப் பயிர்களையும் வர்த்தகத்தையும் ஒட்டுமொத்தமாக அழித்தது. காந்தியடிகள் இந்தியாவில் ஈடுபட்ட முதல் பெரும் பிரச்னை, அவுரி பயிரிட்ட இந்திய விவசாயிகளுக்கும் அதனை வாங்கி வர்த்தகம் செய்ய ஒப்பந்தம் செய்துகொண்டு, பின்னர் ஜெர்மனியின் கண்டுபிடிப்பினால் பின்வாங்கிய பிரிட்டிஷ் வர்த்தகர்களுக்கும் இடையேயான பிரச்னையில் சமரசம் ஏற்படுத்த முயற்சித்தது. நாளடைவில் இயற்கை வண்ணச் சாயம் என்ற ஒன்று முற்றிலுமாகக் காணாமல் போனது.

நிலக்கரி, பெட்ரோலியக் கழிவிலிருந்து வண்ணச் சாயங்கள் மட்டுமல்ல, ஆண்டிபயாடிக் என்ற நோய்க்கொல்லி மருந்துகளையும் கண்டுபிடிக்கலாம் என்பதை நோக்கி அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் இறங்கின. சல்ஃபா வகை மருந்துகளைக் கண்டுபிடித்ததன்மூலம் கெர்ஹார்ட் டோமாக் (Gerhard Domagk) இந்தத் துறையைத் தொடங்கிவைத்தார். இன்னொரு பக்கம் அம்மோனியாவைத் தயாரிக்கும் முயற்சியில் ஹேபர் ஆய்வகத்தில் வெற்றிபெற, பாஷ் அதனைப் பெருமளவில் தொழிற்சாலையில் தயாரிக்கும் முறையை உருவாக்கினார். இவ்வாறாக செயற்கை உரங்கள் உருவாக்கப்படலாயின. லேக்கர் என்னும் இயற்கைப் பிசின், மின்கடத்தாப் பொருளாகப் பயன்பட்டது. அதற்கு மாற்றாக பேகிலைட் என்னும் செயற்கைப் பொருள் உருவாக்கப்பட்டது. அதன்பின் பிளாஸ்டிக் வகைகள் உருவாக்கப்பட்டன. நைலான், பாலியெஸ்டர் போன்ற செயற்கை இழைகள் உருவாக்கப்பட்டன. 

இப்படியாக எதிர்பாராத வகையில் உருவான வண்ணச் சாயம் ஒன்றிலிருந்து மாபெரும் ரசாயனத் தொழிற்சாலைகள் உருவாகின. இவை சுற்றுச் சூழலுக்குக் கேடுகளை விளைவித்தன. உணவுப் பொருள்களில்கூட இவ்வகைச் சாயங்கள் கலக்கப்பட்டன. மக்களின் எதிர்ப்பை அடுத்து தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கட்டுப்படுத்தப்பட்டன. உணவு மற்றும் மருந்து ஆகியவற்றில் நிறையக் கட்டுப்பாடுகள் உருவாகின. ஆனாலும் இன்றும் இத்தொழிற்சாலைகள் பிரச்னைகளுக்கு உரியவையாக இருப்பதைப் பார்க்கிறோம். இப்பொருள்கள் பலவற்றுக்கும் பக்கவிளைவுகள் இருப்பதையும் காண்கிறோம்.

உலகின் பல பாகங்களிலும், செயற்கையிலிருந்து விலகி மீண்டும் இயற்கையான பொருள்களை நாடிச் செல்லும் பயணம் தொடங்கியுள்ளது. இயற்கை விவசாயம், இயற்கை உணவு, இயற்கை இழைகள், இயற்கை வண்ணங்கள் போன்றவைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

நான் ஏற்கெனவே ஹேபர்-பாஷ் + உரங்கள் பற்றியும் டோமாக் + மருந்துகள் பற்றியுமான இரண்டு அற்புதமான புத்தகங்களைப் படித்திருந்தேன். இரண்டுமே தாமஸ் ஹேகர் எழுதியவை. The Alchemy of Air: A Jewish Genius, a Doomed Tycoon, and the Scientific Discovery that Fed the World but Fueled the Rise of Hitler என்பது ஹேபர், பாஷ் கதையைச் சொல்வது. The Demon Under the Microscope: From Battlefield Hospitals to Nazi Labs, One Doctor's Heroic Search for the World's First Miracle Drug என்பது டோமாக்கின் கதையைச் சொல்வது.

இந்தப் புத்தகங்கள் அளவுக்கு அறிவியலையும் வாழ்க்கையையும் எளிதாகவும் அருமையாகவும் சொல்லிச் செல்வது கடினம் என்று எண்ணியிருந்தேன். சைமன் கார்ஃபீல்ட் எழுதியுள்ள Mauve: How One Man Invented a Colour that Changed the World அந்தத் தரத்தில் நின்று வில்லியம் பெர்கினின் கதையையும் வண்ணங்களின் ரசாயனத்தையும் சொல்லிச் செல்கிறது.

அறிவியல் ஆர்வம் உள்ள பள்ளி மாணவர்கள் இந்த மூன்று புத்தகங்களையும் படிக்கப் பரிந்துரைப்பேன்.

Friday, May 20, 2016

ஹயெக், பணவீக்கம், பிட்காயின், சுவாமி, ராஜன்

பிரெடெரிக் அகஸ்ட் ஹயெக் (FA Hayek) பற்றிய ஓர் அருமையான அறிமுகப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன். ஹயெக் எழுதியவற்றைப் படிக்கத் தொடங்குமுன் இந்த அறிமுகப் புத்தகத்தைப் படித்துவிடலாம் என்று எடுத்திருந்தேன். Eamonn Butler எழுதிய Friedrich Hayek: The Ideas and Influence of the Libertarian Economist என்ற புத்தகம் இது.

பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவது பற்றிப் பேசும் ஹயெக், பொதுவாகவே வரலாற்றைப் பார்க்கும்போது, அரசுகள் தங்களிடம் இருக்கும் ஏகபோக அதிகாரமான பணம் அச்சிடுவதை வைத்துக்கொண்டு மக்களைக் கொள்ளையடித்து, ஏய்க்கிறார்கள் என்கிறார். அதற்கு என்ன மாற்று இருக்கிறது?

ஒரேவழி, அரசுகளிடம் இருக்கும் பணத்தை அச்சிடும் ஏகபோக அதிகாரத்தை நீக்கி, பணம் வெளியிடுவதையும் போட்டிச் சந்தைக்குள் கொண்டுவரவேண்டியதுதான் என்று படுதைரியமான யோசனையை "Choice in Currency and Denationalisation of Money" என்ற ஆக்கத்தில் முன்வைக்கிறார். இதைப் படித்த உடனேயே பிட்காயின்தான் (Bitcoin) என் நினைவுக்கு வந்தது. அதுவும் சமீபத்தில்தான் சடோஷி நாகாமோட்டோ தான்தான் என்று ஆஸ்திரேலியர் ஒருவர் சொன்னதாகச் செய்திகள் வேறு வந்திருந்தன. ஓராண்டுக்குமுன் வாங்கிப் படிக்காமல் இருந்த Nathaniel Popper எழுதிய “Digital Gold: Bitcoin and the Inside Story of the Misfits and Millionaires Trying to Reinvent Money" என்ற புத்தகம் நினைவுக்கு வந்தது. கூடவே, ஹயெக்-பிட்காயின் கனெக்‌ஷன் நமக்கே தோன்றுகிறது என்றால் இதைப்பற்றி வேறு பலரும் சிந்தித்திருப்பார்களே என்று நினைத்து இணையத்தைத் தேடினேன்.

ஃபோர்ப்ஸில் வந்த ஒரு கட்டுரையின் வழியே 2012-ல் ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) வெளியிட்டிருந்த Virtual Currency Schemes (pdf) என்ற ஓர் ஆவணம் கிடைத்தது.

அதில் இ.சி.பி, இவ்வாறு சொல்கிறது:
The theoretical roots of Bitcoin can be found in the Austrian school of economics and its criticism of the current fiat money system and interventions undertaken by governments and other agencies, which, in their view, result in exacerbated business cycles and massive inflation.
பிட்காயின் அல்லது வர்ச்சுவல் கரன்சி பற்றி எனக்கு ஆர்வம் அதிகம் இல்லாமல் இருந்தது. அவை குறித்த ஓர் அச்சமும் இருந்துவந்தது. ஆனால் ஹயெக், சந்தை அடிப்படையிலான கரன்சி பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இப்போது வந்துள்ளது. இந்த வார இறுதிக்கான அசைன்மெண்ட், மேலே உள்ள அனைத்தையும் படித்து முடிக்கவேண்டும்:-)

ஹயெக்கின் மிக முக்கியமான அறிவுரையே, பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பது. பணவீக்கத்தைப் போல ஒரு நாட்டை அழிப்பது வேறு ஒன்றுமில்லை என்கிறார் ஹயெக். பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க மானிட்டரி பாலிசி, அவ்வப்போது வட்டி விகிதத்தைச் சற்றே அதிகமாக வைத்திருக்கவேண்டியது அவசியம். ஆனால் இது தொழில்துறைக்குச் சிரமத்தைத் தரும். மந்தமான தொழில் நிலைமையை மாற்ற வட்டி விகிதத்தைக் குறைப்பதை ஹயெக் கடுமையாக எதிர்த்தார். தேவையின்றி வட்டிவிகிதத்தை மத்திய வங்கி குறைக்கும்போது அது எந்த அளவுக்குப் பணப் புழக்கத்தை அதிகரித்து, விரைவில் மக்களுக்குப் பயன் ஒன்றுமே இல்லை என்றாகி, பெரும் நாசத்தையும் விளைவிக்கும் என்று ஹயெக் விளக்குகிறார். நாட்டின் பொருளாதாரம் மந்தமாக இருந்தால் அரசு பணத்தைக் கடன் வாங்கிச் செலவிடுவதால் பொருளாதாரத்தை உந்த முடியும் என்று ஜான் மேனார்ட் கீன்ஸ் சொன்னதையும் ஹயெக் கடுமையாக எதிர்த்தார்.

வட்டி விகிதம் குறையவேண்டும் என்றுதான் நானும் இதுவரை நினைத்துவந்தேன். ஆனால் ஹயெக் வட்டிவிகிதம் பற்றிச் சொல்லியுள்ளதைப் பார்க்கும்போது, நம் நோக்கம் குறைவான வட்டிவிகிதம் அல்ல, குறைவான பணவீக்கம் + அதற்கு ஏற்ற வட்டிவிகிதம் என்பதே என்பது புரிய ஆரம்பித்துள்ளது.

இதைத்தான் நம் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் முன்வைக்கிறார். இதைத்தான் சுப்ரமணியன் சுவாமி கடுமையாகச் சாடுகிறார். ராஜன் வட்டிவிகிதத்தைக் குறைக்காததுதான் இந்தியப் பொருளாதாரம் மந்தமாக இருக்கக் காரணம் என்கிறார் சுவாமி. எனவே ராஜனைப் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்கிறார் சுவாமி.

சுவாமியா, ராஜனா என்றால், ராஜன்தான் சரி என்று தோன்றுகிறது. எனவே சுவாமியின் அவதூறுகள் குறித்துக் கவலைப்படாமல் ராஜனுக்கு இன்னொருமுறையும் மோதி பதவி நீட்டிப்பு செய்யவேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது.

Wednesday, May 18, 2016

மருத்துவ நுழைவுத் தேர்வு - சில குறிப்புகள்

நியூஸ்7 தொலைக்காட்சியில் நேற்று இரவு நடந்த விவாதத்தில் கலந்துகொண்டேன். முழுமையாகப் பலவற்றைப் பேச முடியவில்லை. சில குறிப்புகள் இங்கே:

(1) ஒற்றை மருத்துவ நுழைவுத் தேர்வு - NEET - நியாயமற்றது. அது பல மொழிகளில் இருந்தாலுமே. இது எதிர்க்கப்படவேண்டியதற்கான முதன்மைக் காரணம், மாநிலங்களில் உரிமையில் முரட்டுத்தனமாக இது தலையிடுவதே. அதுவும், எதையும் பரிசீலிக்காமல் உச்ச நீதிமன்றம் தடாலடியாக இதுகுறித்துத் தீர்ப்பு சொல்வது கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டும்.

(2) பல மாநிலங்கள் இந்த ஒற்றை நுழைவுத் தேர்வை எதிர்க்கின்றன. தில்லி முதல்வர் கெஜ்ரிவால் இதனை வெகுவாக ஆதரிக்கிறார். தில்லி அரசு தான் ஏதும் மருத்துவக் கல்லூரிகளை நடத்துவதில்லை. பிற மாநில அரசுகள் நிறைய மருத்துவக் கல்லூரிகளை நடத்திவருகின்றன. அதுவும் இந்தியாவிலேயே தமிழக அரசுதான் அதிகபட்சமான மருத்துவக் கல்லூரிகளை நடத்திவருகிறது. தன் மருத்துவக் கல்லூரிகளை எப்படி நிரப்புவது என்பதை அதுதான் முடிவு செய்யவேண்டும். மத்திய அரசோ, சிபிஎஸ்சியோ, உச்ச நீதிமன்றமோ அல்ல.

(3) தமிழகத்தில் தற்போதைக்கு மருத்துவம், பொறியியலுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது. கவுன்செலிங் முறையில் 12-ம் வகுப்பு பாடங்களில் மதிப்பெண்கள் அடிப்படையில் இடங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. இதுதான் ‘சமூக நீதி’, ‘சமதளம்’ என்று சொல்லப்படுகிறது. அதனை நான் ஏற்கமாட்டேன். நுழைவுத் தேர்வு பணம் படைத்தவர்களுக்கும் கோச்சிங் வகுப்புகளுக்குச் செல்லக்கூடிய நகர மக்களுக்கும் மட்டுமே உகந்தது என்பதை நான் முழுமையாக ஏற்கமாட்டேன். தற்போதைய 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கிராம மக்களுக்கும் பணம் இல்லாதவர்களுக்கும் வாய்ப்புகள் முன்பு இருந்ததைவிட அதிகமாகக் கிடைத்திருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்த்து தமிழக அரசு, நுழைவுத் தேர்வு தேவையா என்பதைக் கருத்தில் கொள்ளலாம்.

(4) தனியார் மருத்துவக் கல்லூரிகளை எப்படி ஒழுங்குபடுத்துவது, எப்படி அவர்கள் அதீதமாகச் செய்யும் பணவசூலைத் தடுப்பது? NEET அதற்கு உதவும் என்று சிலர் கருதுகிறார்கள். NEET-க்குபதில், மாநில அரசு கொண்டுவரும் கட்டுப்பாட்டுக்குள் அந்தந்த மாநிலத்தின் தனியார் கல்லூரிகளின் அட்மிஷன் வரவேண்டும் என்று சொன்னால், தமிழகத்தில் அது 12-ம் வகுப்பு மதிப்பெண்ணின்கீழ் வரும். தனியார் மருத்துவக் கல்லூரிகள் இதிலிருந்து வழுக்கிச் செல்லப் பார்க்கும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின்கீழ் வருகின்றன. எனவே இக்கல்லூரிகளின் ஆள்சேர்க்கையைக் கட்டுப்படுத்தும் பொறுப்பும், கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் பொறுப்பும் இந்தப் பல்கலைக்கழகத்துக்கு இருக்கிறது. தமிழக அரசு இதனை உடனடியாகச் செய்வது நல்லது. எம்.சி.ஐயின் பொறுப்பு புதிய கல்லூரிகள் உருவாக அனுமதி தருவதும், சரியான உள்கட்டமைப்புகள் கல்லூரிகளில் உள்ளனவா என்பதைப் பரிசோதிப்பதும் மட்டுமே. மற்ற எல்லாவற்றையும் டிகிரி வழங்கும் பல்கலைக்கழகம்தான் முடிவு செய்யவேண்டும்.

(5) நுழைவுத் தேர்வு (Entrance Test) vs தரப்படுத்தப்பட்ட தகுதித் தேர்வு (Standardised Eligibility Test): இந்த வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்வதில்லை.

12-ம் வகுப்புப் பரீட்சை என்பது ஒருவரைத் தேர்ச்சி பெற்றவர் என்று சொல்லலாமா, கூடாதா என்பதைப் பரிசோதிக்க வைப்பது. எனவே அது முழு சிலபஸையும் கருத்தில் கொள்ளும். ஒவ்வொரு பரீட்சையும் 3 மணி நேரம் எடுக்கும்.

நுழைவுத் தேர்வு என்பது உங்களுக்கு என்னவெல்லாம் தெரிந்திருக்கிறது என்பதைப் பரிசோதிக்காது. 1000 இடங்கள், ஒரு லட்சம் பேர். எனவே 99,000 பேரைக் கழித்துக்கட்டவேண்டும். அதற்காக மிகக் கடுமையான கேள்விகளைக் கேட்கும். எப்படியோ 99,000 பேரைக் கழித்துக்கட்டும். இன்னொரு நுழைவுத் தேர்வை அடுத்த நாள் வைத்தால், அதே 1,000 பேருக்கு மீண்டும் இடம் கிடைக்குமா என்றால் இருக்காது.

ஆனால் தரப்படுத்தப்பட்ட தேர்வின் நோக்கம் வேறு. அனைவருக்கும் ஒரே கேள்வித்தாள் கிடையாது. ஜி.ஆர்.இ, எஸ்.ஏ.டி போன்ற அமெரிக்கத் தேர்வுகளில் இப்போதெல்லாம் கணினியில் தேர்வை எடுக்கிறீர்கள். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கேள்விகள் வரும். மாணவர்கள் வெவ்வேறு நாள்களில் தேர்வுகளை எடுக்கலாம். குறிப்பிட்ட காலகட்டத்தில் சிலமுறை நீங்கள் அந்தத் தேர்வை மீண்டும் மீண்டும் எடுத்தாலும் நீங்கள் பெறும் “ஸ்கோர்” கிட்டத்தட்ட ஒரேமாதிரியானதாகத்தான் இருக்கும். இது யாரையும் கழித்துக்கட்டச் செய்யப்படும் தேர்வல்ல. ஒரு மாணவருடைய தற்போதைய தரமதிப்பெண் என்ன என்பதைக் காட்டுவது மட்டுமே. நான் சிபிஎஸ்இ, அவன் ஸ்டேட் போர்ட் என்றெல்லாம் சண்டை போடவேண்டியதில்லை.

எனவே... நம்மூரில் நுழைவுத் தேர்வு என்ற ஒன்றைக் கடாசிவிட்டு, தரத்தேர்வு என்பதை அறிமுகப்படுத்தலாம். இதன் மதிப்பெண் புள்ளியையும், +2-வில் பெற்ற மதிப்பெண்ணையும் வேறுசிலவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு கல்லூரியும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஐயோ, இன்னொரு தேர்வா, பாவம் இந்தப் பிள்ளைகள் என்று அங்கலாய்ப்பது சரியாகத் தெரியவில்லை.