இப்போது இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் நடந்துகொண்டிருப்பது முழு யுத்தம். இன்னமும் போர் நிறுத்தம் அமுலில் உள்ளதாக யாருமே நினைக்கவில்லை.
தமிழ்ச்செல்வன் மற்றும் சில புலிகளின் முக்கியஸ்தர்கள்மீது இலங்கை விமானங்கள் குண்டுவீசித் தாக்குதல் புரிந்துள்ளது. அத்துடன் வெளிப்படையாகவே மேலும் இதேபோன்று தாக்குதல் நடத்தி புலிகளின் தலைமையை அழிப்போம் என்று இலங்கை அரசு சொல்லியுள்ளது.
படைகளின் பலம், கடந்த பல மாதங்களாக நடைபெற்று வரும் போரின் வெற்றி தோல்விகள் ஆகியவை, இப்போது நடக்கும் போரில் சிங்களர் பக்கமே கை ஓங்கி உள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
இந்த நிலையில் இலங்கை அரசு சமாதானத்தை நோக்கி தனது கரத்தை நீட்டாது. சமாதானத்தை நோக்கிப் போக, விடுதலைப் புலிகளின் தன்மானமும் இடம் கொடுக்காது. கடந்த ஒவ்வொரு தடவையும் சமாதானத்தை நோக்கிச் சென்றபோது புலிகளின் கையே (மிகக் குறைவான அளவுக்கு) மேலோங்கி நின்றது. சிங்கள அரசும் ராணுவமும் மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாது குழம்பிய நிலையில் இருந்தபோதே அமைதியை நோக்கிய பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டனர்.
-*-
இரு தரப்பினருமே எதிரிகளின் தலைமையை அல்லது முக்கியஸ்தர்களைத் தாக்கி அழிப்பதில் மும்முரமாகவே இருந்துள்ளனர். விடுதலைப் புலிகள் பலமுறை இலங்கை அரசின் அமைச்சர்களை, முக்கியஸ்தர்களை தற்கொலைப் படை மூலம் அழித்துள்ளனர். பிரேமதாச, ரஞ்சன் விஜெரத்னே, லலித் அதுலத்முதலி, காமினி திஸ்ஸநாயகே, குணரத்னே, லக்ஷ்மண் கதிர்காமர் ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். சந்திரிகா குமாரதுங்க மயிரிழையில் கொல்லப்பட்டிருந்திருப்பார்.
நேரடியான போரல்லாது தற்கொலைப் படையால் ஏவி அழிக்கப்பட்ட ராணுவ துணைத்தளபதி பரமி குலதுங்க. கொலையிலிருந்து தப்பியவர் தற்போது ராணுவத் தலைவராக இருக்கும் சரத் ஃபொன்சேகா.
அதேபோல இலங்கை ராணுவம் போரில் நேரடியாகக் கொல்லாமல் பல விடுதலைப் புலிகளின் தலைவர்களை நிச்சயமாகக் கொன்றிருக்கும். இதற்கான தகவல்கள் சீராகக் கிடைக்கவில்லை. விடுதலைப் புலிகளின் தரப்பில் குழப்பத்தை ஏற்படுத்த இலங்கை ராணுவம் முயன்றதில் பெற்ற வெற்றி கருணா.
இந்த நேரடி மற்றும் மறைமுகமான சண்டைகளில் எது நியாயம், எது அநியாயம் என்பது முற்றிலுமாக மறைந்துவிட்டது.
-*-
தமிழ்ச்செல்வன் கொலையை முதலில் கேள்விப்பட்டதும் எனக்கு இது அநியாயம் என்றுதான் தோன்றியது. போர்க்கோலம் பூணாத - குறைந்தபட்சம் இந்த நேரத்தில் போர்க்கோலம் பூணாத - ஒருவரை; பிற நாடுகளுடனும் அரசியல் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தும் ராஜதந்திரப் பிரமுகரை குறிப்பிட்டு, குறிவைத்து, விமானங்களை அனுப்பிக் கொலை செய்வது முறையா? அந்த வகையில் இலங்கை அரசு கட்டாயமாகக் கண்டிக்கப்படவேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
மிகவும் மோசமான சண்டைகளுக்கு ஊடாகவும் சில குறைந்தபட்ச நாகரிகங்களைக் கடைப்பிடிப்பது இரு தரப்பினருக்கும் தேவையானது. ராணுவ இலக்குகள் என்று அறியப்பட்ட இலக்குகளைத் தவிர்த்து, பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்துவது அநாகரிகமானது என்பதை அனைவருமே ஒப்புக்கொள்வர்.
பல நேரங்களில் போர் நடக்கும் அதே நேரத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளும் நடக்கின்றன என்பதை நாம் பார்த்திருக்கிறோம். போர் நடந்துகொண்டிருக்கும் அதே நேரத்தில் சிங்களப் பகுதிகளிலும் சரி, தமிழ்ப் பகுதிகளிலும் சரி, சிவிலியன் நிர்வாகம் நடக்கிறது. அந்த நிர்வாகத்தின் அதிகாரிகள்மீது தாக்குதல் நடத்தப்படுவது அநாகரிகமான செயல் என்பதை இரு தரப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
-*-
தமிழர்களுக்கு இனியும் ஃபெடரல் கூட்டாட்சி முறை என்பது நடைமுறை அளவில் ஒத்துவராத விஷயம். சிங்களர்களிடமிருந்து கனிவான அணுகுமுறை இனி வரப்போவதில்லை. விடுதலைப் புலிகளின் அணுகுமுறைமீது நமக்கு எவ்வளவுதான் விமரிசனங்கள் இருந்தாலும் இன்றைய தினத்தில் நமது ஆதரவு அவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தேவை.
இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், இதற்கான ஒருமித்த கருத்தை உருவாக்க பல முயற்சிகள் எடுக்கப்படவேண்டும்.
முக்கிய எதிர்க்கட்சியான அஇஅதிமுக விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலையை மட்டுமே எடுக்கக்கூடியது. ஆனால் மற்ற அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்க முடியும். தமிழக காங்கிரஸ் தனியான ஒரு கொள்கையை எடுக்கக் கூடியதல்ல. மத்திய காங்கிரஸ் என்ன சொல்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடியதே.
எனவே பிற கருத்துருவாக்கங்களை முன்வைக்காமல் தனித் தமிழீழம் என்ற நிலையை இந்தியா ஏற்றுக்கொள்ளுமாறு செய்ய விடுதலைப் புலிகளும் தமிழகக் கட்சிகளும் முன்வரவேண்டும்.
இதற்கான சில வழிமுறைகள்:
1. விடுதலைப் புலிகள் offense அன்பதை விடுத்து defense என்ற நிலைக்கு மாறவேண்டும். இன்று சிங்கள அரசின் கையே ஓங்கியுள்ளது. 'சரியான பதிலடி கொடுப்போம்' என்று பேசுவது அபத்தம். நாலைந்து தற்கொலைத் தாக்குதல்களால் ஒன்றும் பெரிதாக நடந்துவிடாது. இலங்கை விமானப் படை தொடர்ந்து தமிழர் பகுதிகளில் தாக்குதல் நடத்திகொண்டே இருக்கும்.
அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று சொல்லி பேச்சுவார்த்தை மேசைக்குத் தயாராக வேண்டும். இதன்மூலமும் சர்வதேச அழுத்தம் மூலமும் தமிழர் பகுதிகளில் வான்வழித் தாக்குதல் நடைபெறாவண்ணம் செய்யவேண்டும்.
2. இன்று விடுதலைப் புலிகளுக்கான பெருமளவு ஆதரவு தமிழகத்தின் தமிழ் தேசியவாதிகளிடமிருந்தே வருகிறது. இது வருத்தம் தரத்தக்க வகையில் தனித் தமிழீழத்துக்கு எதிரானதாகவே இருக்கும். தமிழ் தேசியம் பேசுபவர்கள்தான் மத்திய அரசுக்கு கிலியூட்டக்கூடியவர்கள். தமிழகத்தைத் துண்டாக்கி, ‘அகண்ட தமிழ்நாடு' என்ற கருத்தை முன்வைப்பவர்கள் என்று அவர்களைக் காரணம் காட்டி மத்திய அரசை பயமுறுத்த சில திறமையான பத்திரிகையாளர்களும் அறிவுஜீவிகளும் முன்வருவர்.
இதை மாற்றவேண்டுமானால் விடுதலைப் புலிகள் தங்களது ஆதரவை இந்திய மைய நீரோட்டக் கட்சிகளிடமிருந்து பெற வேண்டும். இதில் சில கட்சிகள் தமிழகத்துக்கு வெளியே உள்ள பிற மாநிலக் கட்சிகளாக இருக்கலாம். உதாரணத்துக்கு தெலுகு தேசம், ஜனதா தளம் (செகுலர் மற்றும் இதர சில்லறைகள்), பிஜு ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியோருடன் புலிகள் தொடர்பு கொண்டு, தங்களது நிலையை விளக்கவேண்டும்.
3. பாரதீய ஜனதா கட்சி, கம்யூனிஸ்டுகள் ஆகியோரோடு நேரடித் தொடர்பு தேவை. இந்தக் கட்சிகள் விடுதலைப் புலிகளுக்குப் பரிந்து பேசினால்தான் இந்தியா ஒருமித்த கருத்தை நாடாளுமன்றத்தில் உருவாக்கும். இந்திய நேரடியாக யுத்த தளவாடங்களை அனுப்பி விடுதலைப் புலிகளுக்கு உதவ வேண்டும் என்பதில்லை. இந்திய நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக ஒரு சீரிய விவாதம் வந்தால் அதுவே நல்லது. இலங்கையில் தமிழர்கள் நலன் என்பது தனித் தமிழீழத்தில்தான் சாத்தியமாகும் என்பது பற்றி இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு விவாதம் நடந்தால் அதை உலகம் கூர்ந்து கவனிக்கும்.
-*-
விடுதலைப் புலிகள் இனியும் தமது சொந்த முயற்சியால், படை பலத்தால் தனி ஈழத்தைப் பெறக்கூடும் என்று என்னால் நம்பமுடியவில்லை.
எவ்வளவு விரைவில் பிரபாகரனுக்கும் இந்த எண்ணம் தோன்றும் என்பதை வைத்தே அடுத்து என்ன நடக்கும் என்பதைச் சொல்லமுடியும்.