(சுதேசி செய்திகள் இதழில் இதன் சுருக்கப்பட்ட வடிவம் வெளியானது.)
*
பல அரசியல் மேடைகளிலும் இன்று உலகமயமாக்கல் பற்றி பேசப்படுகிறது. சிலர் உலகமயமாக்கலை வில்லனாகக் காண்பித்து இன்று நம் நாட்டில் உள்ள ஏழ்மை, ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை இதன் காரணமாகத்தான் என்கிறார்கள். வேறு சிலரோ உலகமயமாக்கல்தான் நம் நாட்டை மேற்சொன்ன பிரச்னைகளிலிருந்து விடுவிக்கும், நாட்டுக்கு வளம் சேர்க்கும் என்று சொல்லி உலகமயமாக்கலை கடவுள் ஸ்தானத்துக்கு உயர்த்தி வணங்குகிறார்கள்.
பொதுமக்களுக்கோ உலகமயமாக்கல் என்றால் என்ன என்பது விளக்கமாகப் புரிவதில்லை. அதனால் அது நல்லதா, கெட்டதா என்ற கேள்விக்கு சரியான விடை சொல்லமுடியாமல் தடுமாறுகிறார்கள். நம் மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் பல நிலைப்பாடுகள் நமக்கு நன்மை தரக்கூடியனவா அல்லது தீமை தரக்கூடியனவா என்று கண்டுபிடிக்கமுடியாமல் தடுமாறுகிறார்கள்.
உலகமயமாக்கல் (Globalization) என்பது பொருளாதார, சமூக, அரசியல், பண்பாட்டுத் தளத்தில் அனைத்து நாடுகளும் அனைத்து மக்களும் ஒரே நிலையை நோக்கிச் செல்வதைக் குறிக்கிறது.
*
நாட்டின் பல பகுதிகளுக்கு இடையேயான தொடர்புகள் அதிகரிக்க அதிகரிக்க ஒரு நாடு முழுவதிலும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான பொருளாதாரச் சூழல் நிலவ ஆரம்பிக்கிறது. பிஹாரில் சிமெண்ட் அல்லது வாழைப்பழம் தட்டுப்பாடு என்றால் வெகு சீக்கிரமாகவே அந்த விஷயம் பரவி, தமிழகத்திலிருந்து இந்தப் பொருள்கள் பிஹாருக்கு அனுப்பப்படுகின்றன. பஞ்சாபில் கோதுமை விளைச்சல் எக்கச்சக்கம் என்றால் தமிழகத்திலும் விரைவிலேயே கோதுமை விலை குறையவேண்டும்.
ஆனால் இதெல்லாம் இப்படி நடப்பதில்லையே என்று நீங்கள் கேட்கலாம். இவை நடக்கவேண்டும் என்றால் இந்தப் பகுதிகளுக்கிடையே நல்ல போக்குவரத்து வசதிகள் வேண்டும். தகவல் தொடர்பும் வேண்டும். எங்கு எதற்குப் பற்றாக்குறை, எங்கு எது கொட்டிக்கிடக்கிறது என்ற தகவல் வியாபாரிக்குக் கிடைக்கவேண்டும். இதில் ஏதேனும் ஒரு தொடர்பு சரியாக இல்லை என்றால் சமநிலை உருவாகாது. ஒரு நாடு நன்றாக வளர வளர, சமநிலைப்படுத்தப்பட்ட பொருளாதாரம் உருவாகும்.
சமநிலைப்படுத்தப்பட்ட பொருளாதாரம் தொடர, நாடெங்கும் ஒரே மாதிரியான அரசியல் சூழல் தேவை. இந்தியா போன்ற தேசத்தில் மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு சட்டதிட்டங்கள் இருந்தால் குழப்பம் பெருகும். மதிப்புக் கூட்டு வரி போன்றவை, நாடு தழுவிய சந்தையில் குழப்பத்தைக் குறைக்க உதவி செய்கின்றன. பொருளாதாரமும் அரசியலும் பின்னிப் பிணைந்திருப்பதால் நாடெங்கிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அரசியல் சூழலும் நிலவும். அரசாங்கமும் குறிப்பிட்ட பொருளாதாரக் கொள்கை, பணக் கொள்கை ஆகியவற்றைப் பின்பற்றும்.
இந்த அரசியல் பொருளாதாரச் சூழலில் வாழும் மக்கள், ஊடகங்களில் ஒரே மாதிரியான கேளிக்கைகளைப் பார்க்கத் தொடங்குவர். ஒரே மாதிரியான விருப்பு வெறுப்புகளைப் பேணத் தொடங்குவர். ஒரே மாதிரியான பொருள்களை நுகர்வர். எனவே விரைவில் நாடெங்கிலும் சமநிலைப்படுத்தப்பட்ட சமூக, கலாசார சூழல் நிலவும் என நினைப்பது நியாயம்தான்.
சரி, இந்தக் கொள்கைகள் நாடு விட்டு நாடு பரவி, உலகமே ஒரே மாதிரியான அரசியல், பொருளாதார, சமூக, கலாசார சூழலைக் கொண்டதாக இருக்குமா? இது சாத்தியம்தானா? அப்படி ஒரு நிலையை நோக்கி உலக நாடுகள் பலவும் செல்வதைத்தான் உலகமயமாக்கல் என்று சொல்கிறோம்.
இந்த நிலை எவ்வாறு சாத்தியப்படுகிறது?
இதுவும் பொருளாதாரத்தில் இருந்துதான் தொடங்குகிறது.
*
உலகு தழுவிய வியாபாரம் எத்தனையோ நூற்றாண்டுகளாக நடந்து வருவதுதான். ஓர் இடத்தில் இல்லாத பொருள்களை, இருக்கும் நாட்டிலிருந்து எடுத்து வந்து விற்று காசாக்குவது எப்பொழுதுமே இருந்துள்ளது. கிரேக்கர்களும் யவனர்களும் தமிழகத்தில் வர்த்தகம் செய்துள்ளனர். அரேபியக் குதிரைகளை தமிழக அரசர்கள் வாங்கியுள்ளனர். தமிழர்கள் கப்பலில் சென்று கீழை ஆசிய நாடுகளில் வணிகம் செய்துள்ளனர்.
ஆனால் நிகழும் யுகத்தில் இவை அனைத்துமே மிக எளிதாக்கப்பட்டுள்ளன. பண்டமாற்று முறையிலிருந்து, விலை மதிப்புள்ள தங்கம் போன்றவற்றால் பொருள்களை விற்பது வாங்குவதிலிருந்து, காசோலை, அந்நியச் செலாவணி போன்றவைக்கு வந்து, முழுக்க முழுக்க இண்டெர்னெட் மூலம் பணத்தை ஒரு நாட்டின் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடிக்கு அனுப்புவது என்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இது நிதித்துறையில் நடந்துள்ள புரட்சி.
அதே நேரம் தொலைத்தொடர்பின் தாக்கத்தால் உலகின் ஒரு மூலையில் இருப்பவர் அடுத்த மூலையில் இருப்பவருடன் ஒரே நொடியில் பேசலாம், விடியோ கான்ஃபரன்சிங் மூலம் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டே உரையாடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. உலகின் எந்தக் கோடியில் நடக்கும் நிகழ்வும் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் மூலம் அடுத்த விநாடியே உலகெங்கும் காணக்கிடைக்கின்றன. இது தொலைத்தொடர்பில் நடந்துள்ள புரட்சி.
ஒரு நாட்டின் சந்தைக்குத் தேவையான எந்தப் பொருளையும் வேறு எந்த நாட்டில் வேண்டுமானாலும் உற்பத்தி செய்து அவற்றைப் பெரும் கப்பல்களில் ஏற்றி அனுப்பிவைக்கலாம்; வேண்டுமானால் மறுநாளே கிடைக்கும் வண்ணம் விமானத்தில் ஏற்றி அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது போக்குவரத்து மற்றும் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள புரட்சி.
தொலைத்தொடர்பு புரட்சியின் விளைவாக உருவானது அவுட்சோர்சிங் எனப்படுவது. ஒரு நாட்டுக்குத் தேவையான சேவைகளை அடுத்த நாட்டில் இருந்துகொண்டு செய்வது.
இவை அனைத்தும் சேர்ந்து பொருளாதாரத் துறையில் உலகமயமாக்கலை வேகமாக்கின.
ஆனால் இவை அனைத்தும் ஒழுங்காக நடக்க அரசியல் துறையில் நிறைய மாறுதல்கள் தேவைப்பட்டன. ஒவ்வொரு நாட்டின் அரசுகளும் தங்களுக்கென்றே வெவ்வேறு கொள்கைகளை வைத்திருந்தன. ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் பெருமளவு வர்த்தகம் செய்யவேண்டுமானால் அவை இரண்டுக்கும் இடையே அந்நியச் செலாவணி மாற்றம் தாராளமாக நடக்கவேண்டும். தடையின்றி அந்நியச் செலாவணி பெறுவதை கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிட்டி என்போம்.
ஆனால், ஒரு நாட்டில் வங்கி வட்டி விகிதம் குறைவாக இருக்கலாம்; இன்னொரு நாட்டில் அதிகமாக இருக்கலாம். இது அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சேமிப்பு விகிதம், பணவீக்கம் ஆகிய பல விஷயங்களைப் பொறுத்தது. அந்நியச் செலாவணியைத் தடையின்றி மாற்றிக்கொள்ள முடியும் என்றால், இரு நாடுகளுக்கிடையே வட்டி விகிதம் மிகவும் வித்தியாசமாக இருந்தால் அந்த ஓட்டையைப் பயன்படுத்தி பலர் லாபம் பெற முடியும். எனவே இந்நிலையில் உலகமயமாகும் நாடுகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மானிட்டரி பாலிசியை உடையனவாக இருக்கவேண்டும்.
*
நாடுகளுக்கிடையே தடையற்ற வர்த்தகத்தைக் கொண்டுவரும் தாராளமயமாக்கல் கொள்கை, உலகமயமாக்கலின் அடிப்படைக் கொள்கையாகும். இதன்படி எந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு பொருளையும் இன்னொரு நாட்டில் தடையின்றி, மேலதிக வரியின்றி விற்கலாம்.
ஆனால் இயல்பில் நாடுகளுக்கிடையே பெரும் வித்தியாசங்கள் உள்ளன. அதனால்தான் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என்ற பிரிவுகளை நாம் காண்கிறோம். சில நாடுகள் இயற்கை வளம் பொருந்தியவை. சில நாடுகளோ, உணவுப்பொருள்கள் முதற்கொண்டு இறக்குமதி செய்யும் நிலையில் உள்ளவை. சில நாட்டு மக்கள் இருப்பதை வைத்து சந்தோஷம் பெற முயல்பவர்கள். வேறு சில நாட்டு மக்களோ உலகின் அத்தனை வளங்களையும் தாங்களே அனுபவிக்க ஆசைப்படுபவர்கள்.
இந்த அடிப்படையான மனித, நாட்டு வேறுபாடுகளைக் கண்டுகொள்ளாமல், உலகமயமாதலை நோக்கிச் செல்லும்போது வலுவான நாடுகள், வலுவற்ற நாடுகளை அச்சுறுத்துகின்றன. அமெரிக்கா, இந்தியாவின் பட்ஜெட் எப்படி இருக்கவேண்டும், யாருக்கு மான்யம் தரவேண்டும், தரக்கூடாது, எந்தப் பொருளுக்கு எவ்வளவு இறக்குமதி வரி (tariff) வைக்கவேண்டும் என்றெல்லாம் பேசத் தலைப்படுகிறது. ஆனால் அதே சமயம், தன் நாட்டின் நலன்களைக் கவனமாகப் பாதுகாத்துக்கொள்ள விழைகிறது.
இந்தியா எனும் நாடும் ஒரே மாதிரியான மக்களைக் கொண்டதல்ல. இங்கு ஏழை, பணக்காரர்கள் வித்தியாசம் அதிகம். வறுமைக்கோட்டுக்குக் கீழே பல கோடி மக்கள் உள்ளனர். தடையற்ற வர்த்தகம்தான் இந்தியாவின் ஏழைகளுக்கு சோறு போடப்போகிறது என்று அமெரிக்கா சொல்கிறது என்ற ஒரே காரணத்தால் இந்தியா தடையற்ற வர்த்தகத்தை வரவேற்கக்கூடாது.
அரசின் கொள்கைகள் பெரும்பாலும் ஏழை மக்களால் முன்னெடுத்துச் செல்லப்படுவதில்லை. சொல்லப்போனால் ஏழை மக்களுக்கு தங்களுக்கு ஆதரவான கொள்கைகள் எவை, அவற்றை எப்படிச் செயல்படுத்துவது ஆகிய விஷயங்கள் தெரிவதில்லை. கொள்கைகளைச் செயல்படுத்துபவர்களோ, மிடில் கிளாஸ் அல்லது பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்களுக்கு ஆதரவானவற்றை மட்டுமே செயல்படுத்துகிறார்கள்.
உலகமயமாக்கத்தின் பல கூறுகள் வளரும் இந்தியாவுக்கு இடைஞ்சலைக் கொடுக்கக்கூடியவை. சில கூறுகள் இந்தியாவுக்கு சாதகமானவை. இந்திய அரசின் நோக்கம் உலகமயமாக்கமலை உள்வாங்கிகொள்வதன்று. பெரும்பான்மை இந்திய மக்களுக்குச் சாதகமானவற்றைச் செய்வது.
உதாரணத்துக்கு விவசாயத்தை எடுத்துக்கொள்வோம். இந்தியாவின் விவசாயமும் அமெரிக்காவின் விவசாயமும் வெவ்வேறு கோடியில் இருப்பவை. அமெரிக்காவில் மிகச்சிலரே விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொருவரும் பெரும்பணக்காரர். அவர்கள் பெருமளவு உற்பத்தி செய்துவிட்டால் பொருள்களின் விலை அதலபாதாளத்துக்குச் சென்றுவிடுமே என்று பயந்து அமெரிக்க அரசு, பொருள்களை விளைவிக்காமல் இருக்க அவர்களுக்கு மான்யம் கொடுக்கிறது! இந்தியாவில், பெரும்பான்மை மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். வெகு சிலரைத் தவிர அனைவரும் படிப்பு குறைவான ஏழை விவசாயிகள். ஒவ்வொரு துளி நிலத்திலும் விளைவித்தாலும் நஷ்டத்தில் இயங்குபவர்கள். எனவே அமெரிக்காவின் விவசாயக் கொள்கையும் இந்தியாவின் விவசாயக் கொள்கையும் எந்நாளும் ஒன்றாக இருக்க முடியாது.
திடீரென இந்தியா அமெரிக்காவைப் போன்றோ, அல்லது அமெரிக்கா இந்தியாவைப் போன்றோ விவசாயத்தில் மாறிவிட முடியாது.
இதைப்போலத்தான் மருந்துத் தொழிலும். அமெரிக்காவில் அனைவரும் மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்ளவேண்டும். அந்தக் காப்பீட்டில் மருந்துக்கான கட்டணமும் உண்டு. அங்குள்ள மருந்துக் கம்பெனிகள் தலைவலி மாத்திரையைக்கூட அதீத விலைக்கு விற்கின்றன. பொதுமக்கள் அதைப்பற்றி ஆரம்ப காலங்களில் அவ்வளவாகக் கவலைப்படவில்லை. ஆனால் நாளடைவில் மருந்து விலைகள் ஏறிக்கொண்டேபோக, இன்சூரன்ஸ் பிரீமியமும் ஏறிக்கொண்டே போனது.
இந்தியாவிலோ மருந்துக்கு என்று எந்தக் காப்பீடும் கிடையாது. அனைத்து மக்களுக்கும் பயன்படும் விதத்தில் மருந்துக் கம்பெனிகள் குறைந்த விலையில் மருந்துகளை விற்கின்றன. ஆனால் காப்புரிமை (பேடண்ட்) போன்ற சட்டங்களை வைத்துக்கொண்டு மருந்துகளின் விலையை உலகெங்கும் ஏற்ற அமெரிக்க மருந்து நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன. மருந்து விலையைக் குறைப்பதன்மூலம் உலகெங்கும் குறைந்த விலை மருந்துகளை விற்று லாபம் பெற முயற்சி செய்கின்றன இந்திய மருந்து நிறுவனங்கள்.
ஆக இரண்டு நாடுகளிலும் ஒரே மாதிரியான சட்டங்கள், செயல்பாடுகள் இருக்க சாத்தியம் இல்லை. ஆனாலும் அமெரிக்கா, இந்தியாவின் சட்டதிட்டங்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று தொல்லை கொடுக்கிறது.
பண்டைய இந்திய சமுதாயம், கடன்கள் வாங்குவதைத் தவிர்க்க விரும்பியது. சேமிப்பை வலியுறுத்தியது. ஆனால் அமெரிக்கா கடன்கள்மூலம் செலவுகளைப் பெருக்கி, பொருளாதாரத்தை வளப்படுத்த முனைகிறது. இரண்டும் இரு கோடிகள். இரண்டு நாடுகளிலும் ஒரே மாதிரியான நிதிக்கொள்கை இருப்பது சாத்தியமல்ல. இந்தியாவில் அதிக வட்டிவிகிதம் இல்லாவிட்டால் பணவீக்கம் அதிகமாகி ஏழைகள் பாதிக்கப்படுவர். அமெரிக்காவில் வட்டிவிகிதம் குறைவாக இல்லாவிட்டால் மக்கள் பொருள்கள் வாங்குவது குறைந்து, வேலைகள் குறைந்து பல ஏழைகள் நடுத்தெருவுக்கு வருவர்!
உலகமயமாக்குதல் மூலம் உலகமே ஒரே பொருளாதாரச் சந்தையாக, உலகமே ஒரே நாடாக, ஒரே அரசின்கீழ் இருப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று. இதன் விளைவாக ஒரே கலாசாரம் (அது நுகர்வுக் கலாசாரமா, சேமிப்புக் கலாசாரமா என்பது ஒருபக்கம் இருக்கட்டும்), ஒரே உலக சமுதாயம் என்ற நிலை ஏற்படும் என்றால் அதனால் உலகின் பல நாகரிகங்கள் அழிவுபட்டுப் போகும். அதுவும் நல்லதற்கல்ல.
எனவே ஒவ்வொரு நாடும் தனித்தனி பொருளாதாரத் தீவாக இருப்பது அவசியமாகிறது. சில நாடுகள் ஒன்றிணைந்து ஒரு பொருளாதார மண்டலத்தை உருவாக்கலாம். அவ்வாறு உருவாக அந்த நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு இடையே ஒத்த கருத்துகள் இருக்கவேண்டும். ஓரளவுக்கு இது ஐரோப்பாவில் நிலவுகிறது. ஆனால் ஐரோப்பியப் பொருளாதார மண்டலத்திலும் பல உட்பூசல்கள் உள்ளன.
ஏற்கெனவே இருக்கும் பிரச்னைகளுக்கு நடுவே புதிதாகப் பிரச்னைகளைக் கொண்டுவரத் தேவையே இல்லை. நமக்கு வசதிப்படும் சில துறைகளில் மட்டும் பொருளாதாரத் தடைகளை விலக்கிக்கொண்டு, பிற துறைகளில் தடைகளை வைத்திருப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது.
*
ஒரே ஒரு வரலாற்று உதாரணத்தைப் பார்க்கலாம். தொழில்புரட்சிக்குப் பிறகு பிரிட்டன் நாடுதான் உலகிலேயே இரும்பு உற்பத்தியில் தலைசிறந்து விளங்கியது. 1900 வரை இதே நிலைதான் நீடித்தது. அமெரிக்காவில் இரும்பு உற்பத்தி அப்பொழுதுதான் பெரிய அளவுக்கு உருவாகிக்கொண்டிருந்தது. அமெரிக்கா, பிரிட்டனிலிருந்து தன் நாட்டுக்கு வரும் இரும்பின்மீது வரி விதித்தது. ஆனால் பிரிட்டன் தடையற்ற வர்த்தகத்தைப் பின்பற்றி அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாட்டிலிருந்து தன் நாட்டுக்கு வரும் இரும்பின்மீது வரி விதிக்கவில்லை. நாளடைவில், அதாவது முதலாம் உலகப்போருக்கு முன், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் இரும்பு, பிரிட்டனின் இரும்புத் தொழிற்சாலைகளை முற்றிலுமாக அழித்துவிட்டது. பிரிட்டன் கடைசிவரை தன் கொள்கையிலிருந்து மாறவேயில்லை.
அதன் விளைவாக, 2007 வரை, அதாவது இன்றுவரை பிரிட்டனில் வலுவான இரும்பு நிறுவனம் ஏற்படவில்லை. அந்த நாட்டின் மிகப்பெரும் இரும்பு நிறுவனத்தை இந்தியாவின் டாடா ஸ்டீல் சமீபத்தில் விலைக்கு வாங்கியது.
பிரிட்டனை நசுக்கி, பெரும் இரும்பு சாம்ராஜ்யத்தை உருவாக்கிய அமெரிக்காவும் இன்று இந்தத் துறையில் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறுகிறது. அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்காவிலும் வலுவான இரும்பு நிறுவனம் ஒன்றுகூட இருக்காது.
அர்த்தமற்ற கொள்கைப்பிடிப்பு எந்த நாட்டுக்கும் பலன் கொடுத்ததில்லை. ஒரு குறிப்பிட்ட துறையில் தடையற்ற வர்த்தகம் இந்தியாவுக்கு சாதகமா, இந்திய மக்களுக்கு சாதகமா என்று பார்த்து, சாதகம் என்றால் மட்டும் அந்தத் துறையில் மட்டும், அதுவும் குறுகிய காலத்துக்கு மட்டும் அந்தக் கொள்கையை வைத்துக்கொள்வது நலம். இது அந்நியச் செலாவணியில் ரூபாய், டாலர் மதிப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதிலிருந்து, இறக்குமதிக்கு எந்தப் பொருளுக்கு எவ்வளவு வரி விதிக்கவேண்டும் என்பதிலிருந்து, யாருக்கு எவ்வளவு மான்யம் தரவேண்டும் என்பதைத் தீர்மானிப்பதிலிருந்து அனைத்திலும் நடைமுறைப்படுத்தவேண்டும். அதற்கு எதிராக உள்ள அனைத்து ஒப்பந்தங்களிலிருந்தும் (WTO முதலானவை) விடுபடவேண்டும்.
மொத்தத்தில் உலகமயமாதல் எந்த நாட்டுக்கும் நல்லதல்ல. ஒவ்வொரு நாடும், தன் மக்களின் நலனை முழுமையாக முன்வைத்துச் சிந்தித்துப் பார்த்தால் இது புலனாகும். இது அமெரிக்காவுக்கும் பொருந்தும், இந்தியாவுக்கும் பொருந்தும்.