Friday, September 28, 2012

பாய்ஸ் டவுன்

சில்ட்ரன்ஸ் டவுனில் சில குழந்தைகள்
இரு நாள்களுக்குமுன் மதுரை சென்றிருந்தபோது பேராசிரியர் ரெங்கசாமியுடன் பாய்ஸ் டவுன் என்ற நிறுவனத்துக்குச் சென்றோம். பாய்ஸ்டவுன் என்பது ஆதரவற்றோர் இல்லம். ஆதரவற்ற குழந்தைகளை எடுத்து வளர்க்கும் இடம். ஆதரவற்ற என்றால் பல நேரங்கள் தாய், தந்தை இருந்தும் வறுமை காரணமாகப் பிள்ளைகளை வளர்க்க முடியாத நிலை இருந்தால், அப்படிப்பட்ட பிள்ளைகளையும் எடுத்து வளர்க்கிறார்கள். ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், அவர்கள் படித்து ஏதோ ஒருவிதத்தில் வாழ்க்கைக்கான பொருளை ஈட்டும் காலம் வரை ஆதரவளிக்கிறார்கள்.

இதைப்போன்ற அமைப்புகள் பல நாடு முழுதும் இருக்கலாம். ஆனால் பாய்ஸ் டவுனை ஏற்படுத்தியவரின் கதை சுவாரசியமாக இருந்தது. ஜோ ஹோமன் என்ற கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் உருவாக்கிய அமைப்பு இது. பிரிட்டிஷ்காரரான இவர் கத்தோலிக்கத் திருச்சபையில் சேர்ந்து, உலகெங்கும் உள்ள பிற மத மக்களிடையே சுவிசேஷத்தை எடுத்துச் செல்லவும் அவர்களை மதம் மாற்றவும் அனுப்பப்பட்டார். பிரிட்டன், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் ஆசிரியராக இருந்தபின், இந்தியாவில் மதுரையில் கல்வி கற்றுத்தரவும் மதம் மாற்றவும் அனுப்பப்பட்டார்.

இவர் 1960-களில் இந்தியா வந்தபோது மதம் மாற்றுவதைவிட மக்களின் ஏழைமையைப் போக்குவதே முக்கியம் என்று புரிந்துகொண்டார். தன் சக பாதிரியார்களின் மதமாற்ற அணுகுமுறையை எதிர்க்கலானார். இதனால் அவர்கள் ஒன்றுசேர்ந்து இவரை மீண்டும் பிரிட்டனிலிருந்து அழைத்துக்கொள்ளுமாறு செய்துவிட்டனர். பிரிட்டனில் சில மாதங்கள் பணியாற்றியவர், அங்கு கிடைத்த ஊதியத்தையும் நண்பர் ஒருவர் கொடுத்த பணத்தையும் எடுத்துக்கொண்டு மீண்டும் இந்தியா கிளம்பிவிட்டார். கத்தோலிக்க ஆர்டரிலிருந்து விலகி, மதமாற்ற எண்ணம் இல்லாமல் இந்தியர்களுக்காக ஒரு ஆதவற்றோர் இல்லம் தொடங்குவது அவருடைய இலக்காக இருந்தது.

கப்பல் வழியாகக் கொழும்பு வந்து, அங்கிருந்து தரை வழியாக யாழ்ப்பாணம் சென்று, யாழ்ப்பாணத்திலிருந்து திருச்சிக்கு விமானம் வழியாகவும் அங்கிருந்து மதுரைக்குத் தரை வழியாகவும் பயணம் செய்யவேண்டும். கையில் இருந்த 200 பவுண்டை டிரான்சிஸ்டர் ரேடியோக்களாக வாங்கிக்கொண்டார். அக்காலத்தில் இந்த ரேடியோக்களுக்கு இந்தியாவில் பெரும் தேவை இருந்தது. அவற்றின்மீது பெரும் சுங்கவரி விதிக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்தது. ஆனால் இந்த ரேடியோக்களை கஸ்டம்ஸ் தாண்டி எடுத்துச் சென்று சந்தையில் விற்றால் கிடைக்கும் பணம் அதிகமாக இருக்கும். அதனைக் கொண்டு ஆதரவற்றோர் இல்லம் அமைப்பது எளிது.

திருச்சியில் கஸ்டம்ஸ் அதிகாரியைச் சரிக்கட்டி, வெளியேறி, மதுரை வந்து டிரான்சிஸ்டர் ரேடியோக்களை விற்றுக் கிடைத்த பணத்துடன், திருமங்கலம் அருகே தன் நண்பர்கள் கொடுத்த தரிசு நிலத்தில் ஆதரவ்ற்றோர் இல்லத்தை ஹோமன் ஆரம்பித்துவிட்டார்.

அது இன்று விரிவாகி, சில்ட்ரன்ஸ் டவுன், பாய்ஸ் டவுன், கர்ல்ஸ் டவுன் என்ற பெயரில் சுமார் பத்து இடங்களில் உள்ளது. சுமார் 850 பேர் அங்கே சேர்ந்து வசிக்கிறார்கள், படிக்கிறார்கள். சில்ட்ரன்ஸ் டவுன் என்ற இடங்களில் 5-10 வயதுக் குழந்தைகள் (இரு பாலர்) இருப்பார்கள். இவர்களுக்கு தாதித் தாய்கள் உண்டு. குழந்தைகளை வளர்ப்பது, உணவிடுவது, அருகில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவது ஆகியவை தினசரி வேலைகள். 10 வயதைத் தாண்டி உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்ததும் அவர்கள் ஆண்களாக இருந்தால் பாய்ஸ் டவுன், பெண்களாக இருந்தால் கர்ல்ஸ் டவுன்.

ஆண்களை 10-வது வரை படிக்கவைப்பார்கள். பெண்களை 12-வது வரை. ஆண்கள் பத்தாவது படித்தபின், நல்ல மதிப்பெண் இருந்தால் பாலிடெக்னிக். இல்லாவிட்டால் ஐடிஐ. பத்தாவது பாஸ் செய்ய முடியாவிட்டால் ஓராண்டுத் தொழில்பயிற்சி (ஆட்டோ மெக்கானிக், கார் டிரைவிங் போல்). இப்படிக் கற்று முடித்ததும் எப்படியாவது வேலையில் சேர்த்து, அவர்கள் வாழ்க்கை வசதியாகச் செல்லுமாறு பார்த்துக்கொள்கிறார்கள்.

ஜோ ஹோமன் இன்று 80 வயதுக்கும் மேற்பட்டவர். தினசரி வேலைகளைப் பார்ப்பதில்லை. பெரும்பாறை என்ற இடத்தில் இப்போது வசிக்கிறார். இந்தத் தொண்டமைப்பின் செயலராகத் தற்போது இருப்பவர் பேரா. நாராயண் ராஜா என்பவர். இவர் மதுரை சமூக அறிவியல் கழகம் என்ற கல்லூரியில் பிரின்சிபலாக இருந்து ஓய்வு பெற்றவர். பேரா. ரெங்கசாமியும் இதே கல்லூரியில்தான் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

பேராசிரியர் ரெங்கசாமியும் பேராசிரியர் நாராயண் ராஜாவும்
ஒவ்வொரு பாய்ஸ் டவுன் இடமும் சில ஏக்கர்களில் மரம் செடி கொடிகளுடன் விஸ்தாரமாக உள்ளது. ஆடு, கோழிகள் வளர்க்கிறார்கள். எளிமையான கட்டடங்கள். நான் சென்றிருந்தபோது காலாண்டு விடுமுறை காரணமாக பெரும்பாலான மாணவர்கள் வீடுகளுக்குச் சென்றிருந்தனர். அவர்களுக்கு ஏதேனும் உறவினர்கள் இருக்கிறார்கள். ஒரு சில்ட்ரன்ஸ் டவுனில் நான்கைந்து குழந்தைகள் வீடு செல்லாமல் அங்கேயே இருந்தனர்.

அடுத்த தீபாவளி விருந்து
பாய்ஸ் டவுன் இருப்பிடங்கள் அனைத்திலும் இந்துக் கோயில் (போன்ற அமைப்பு) உள்ளது. விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகைகள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. முக்கியமாக தீபாவளியின்போது மாணவர்களின் உறவினர்களையும் வரவழைத்து ஆடு அடித்து, கறி சோறுடன் பெரும் விருந்துக் கொண்டாட்டமும் நிகழ்கிறது. இதெல்லாம் 1960-களிலிருந்தே தொடர்ந்து நடந்துவருவதாம்.

எந்தப் பகுதியில் இந்த இல்லங்கள் உள்ளனவோ அப்பகுதியில் உள்ள மக்களையும் ஈடுபடுத்தி, அவர்களுடைய ஆலோசனைகளையும் கேட்டுக்கொள்கிறார்கள். இவ்வொரு இல்லத்திலும் ‘மாணவர்கள் பாராளுமன்றம்’ நடைபெறுகிறது. அவர்கள்தான் இல்லத்தை நடத்திச் செல்வதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.

இந்த அமைப்புக்கான நிதி பெரும்பாலும் பிரிட்டனிலிருந்து வருகிறது. ஜோ ஹோமன் சாரிட்டி என்ற பிரிட்டிஷ் அமைப்பு நிதி திரட்டி, அதனை இந்திய அமைப்புக்கும் இதேபோன்ற அவர்களுடைய தாய்லாந்து அமைப்புக்கும் அனுப்புகிறது. ஒரு காலத்தில் பாய்ஸ் டவுனின் 100% நிதி பிரிட்டனிலிருந்து வந்துகொண்டிருந்தது. இப்போது உள்ளூரில் நிதி திரட்டத் தொடங்கியுள்ளனர். இப்போது சுமார் 20-25% நிதியை உள்ளூரிலேயே திரட்டிக்கொள்கிறார்கள். கிராம மக்கள் பலர், பணமாக இல்லாவிட்டாலும் உடல் உழைப்பாகவும் உதவுகிறார்கள்.

பாய்ஸ் டவுன் இந்தியாவின் இணையத்தளம்

நீங்கள் மதுரைப் பகுதியில் இருந்தால், பாய்ஸ் டவுன் அமைப்புக்கு எந்தவிதத்தில் உதவ முடியும் என்று பாருங்கள். உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் பணம் கொடுத்து உதவலாம்.

அவர்களைத் தொடர்புகொள்ள:

General Secretary
Boys Town Society,
Tirumangalam – 625 706
Ph. No: 04549-294473 / 294493
btsindia@yahoo.com

Thursday, September 27, 2012

ரயில் டிக்கெட் வித்தவுட்

இன்று காலை கிண்டி ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் என்னைப் பிடித்துவிட்டார். என்னிடம் சரியான டிக்கெட் இல்லை என்றும் நான் அபராதம் கட்டவேண்டும் என்றும் சொன்னார்.

என்னிடம் கோவில்பட்டியிலிருந்து சென்னை எழும்பூர் செல்வதற்கான டிக்கெட் இருந்தது. நான் தாம்பரத்தில் இறங்கி புறநகர் மின்சார ரயிலில் ஏறி கிண்டி நிலையம் வந்து இறங்கியிருந்தேன். என் டிக்கெட் எப்படிச் செல்லுபடியாகாது என்று கேட்டேன்.

விதிப்புத்தகத்தை எடுத்துக் காட்டினார். பக்கம் 281-ல், விதி எண் 20-ல் நான் செய்தது தவறு என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரயில் பயணத்தில் ஒரு குறிப்பிட்ட ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் அந்த ரயிலைத் தவிர வேறு எதிலும் பயணம் செய்யக்கூடாது; முக்கியமாகப் புறநகர் ரயில்களில் பயணம் செய்வதற்கு அனுமதியில்லை என்று அந்த விதியில் போடப்பட்டிருந்தது.

இதே நீங்கள் டிக்கெட் கவுண்டரில் மதுரையிலிருந்து சென்னை எழும்பூர் என்று சொல்லி டிக்கெட் வாங்கிக்கொண்டு, பதிவு செய்யப்படாத கம்பார்ட்மெண்டில் ஏறி தாம்பரம் வந்து இறங்கி, அங்கே மின் ரயிலில் ஏறி கிண்டி வந்தால் நீங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லையாம். ஆனால் முன்பதிவு செய்துவிட்டால் போச்சு. நீங்கள் தனியாக மின் ரயிலுக்கான டிக்கெட் வாங்கவேண்டும்.

எனவே என் தவறுக்காக, 250 ரூபாய் அபராதமும் தாம்பரத்திலிருந்து கிண்டி வருவதற்காக 5 ரூபாயும் சேர்த்து 255 ரூபாய் கட்டினேன். (ரசீதைப் பெற்றுக்கொண்டேன்.)

அதேபோல எழும்பூரிலிருந்து மதுரைக்கோ, திருச்சிக்கோ நீங்கள் முன்பதிவு டிக்கெட் வாங்கியிருந்தால், நீங்கள் கிண்டியில் அல்லது பறங்கிமலையில் வசித்தால், தாம்பரம் சென்று ஏறிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தால் கிண்டி-தாம்பரம் தனியாக டிக்கெட் வாங்கிக்கொண்டுதான் செல்லவேண்டுமாம்.

ஆனால் இது மிகவும் அபத்தமான விதி என்று தோன்றுகிறது; இதனைப் பற்றி ரயில்வே அமைச்சகத்துக்கு எழுதப்போகிறேன் என்று சொன்னேன். டிக்கெட் பரிசோதகர்மீது எந்தக் குற்றமும் இல்லை. இருக்கும் விதிகளின்படி அவர் நடந்துகொள்கிறார். விதிகள் மாறவேண்டுமானால், அது அமைச்சகத்தின் கைகளில்தான் இருக்கிறது.

உங்கள் கருத்து என்ன? முன்பதிவு செய்தபின் இஷ்டத்துக்கு இறங்கி, வெவ்வேறு ரயில்கள் மாற்றிச் செல்வது வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லாதிருக்கலாம். ஆனால் கடைசிக் கட்டத்தில் தாம்பரத்தில் இறங்கி புறநகர் ரயில் மாற்றி நான்கு ஸ்டேஷன்கள் தாண்டி வந்து இறங்குவது தவறு என்றா உங்களுக்குத் தோன்றுகிறது? ஏன் ரயில்வே அமைச்சகம் இப்படிப்பட்ட ஒரு அபத்தமான விதியைக் கொண்டுவந்தது? எப்போதுமுதல் கொண்டுவந்தது? கையில் பெட்டிகளுடன் குழந்தை குட்டிகளுடன் பயணிகள் தாம்பரத்தில் இறங்கி வெளியே சென்று டிக்கெட் வாங்கிக்கொண்டு மீண்டும் நிலையத்துக்கு உள்ளே வந்து பயணத்தைத் தொடரவேண்டும் என்றா ரயில்வே அமைச்சகம் எதிர்பார்க்கிறது?

Monday, September 24, 2012

அசோகமித்திரன் 82


எழுத்தாளர் அசோகமித்திரனின் 82-வது பிறந்தநாளை முன்னிட்டு விருட்சம் அழகியசிங்கர் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் 22 செப்டெம்பர் 2012 அன்று மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது. சுமார் 20 பேர் பேச அழைக்கப்பட்டிருந்தனர். சச்சிதானந்தம் தலைமை தாங்க, எழுத்தாளர்கள் முதுபெரும் எழுத்தாளர்கள் சா.கந்தசாமி, ஞானக்கூத்தன் ஆகியோரும் அசோகமித்திரன் புத்தகங்களைப் பதிப்பித்துவரும் கிழக்கு பதிப்பகம் (சார்பில் நான்), காலச்சுவடு (சார்பில் தேவிபாரதி) ஆகியோரும், உயிர்மையின் மனுஷ்ய புத்திரன், கல்கியின் வெங்கடேஷ், அசோகமித்திரனின் எழுத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் கல்யாணராமன், நிறைய எழுத்தாளர்கள், நண்பர்கள், வாசகர்கள் ஆகியோரும் ஆளுக்கு ஓரிரு வார்த்தைகள் பேசினர். ரவி சுப்ரமணியன் தான் பேசும்போது அசோகமித்திரனைக் கொஞ்சம் மிமிக்ரி செய்தார். (ரசிக்கத்தக்கதாக இருந்தது.)

நான் மூன்று மணி நேரம் அரங்கில் உட்கார்ந்துவிட்டு, வேறொரு வேலை இருப்பதால் கிளம்பிவிட்டேன். அசோகமித்திரன் பேசுவதைக் கேட்கவேண்டும், ஒளிப்பதிவு செய்து வலையில் ஏற்றவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் முடியவில்லை.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சாஹித்ய அகாதெமிக்காக அம்ஷன் குமார் எடுத்திருந்த அசோகமித்திரன் குறும்படம் போட்டுக் காட்டப்பட்டது. ஏற்கெனவே பார்த்த குறும்படம்தான் என்றாலும் மீண்டும் பார்க்கும்போது அசோகமித்திரனை ஃப்ரெஷாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

ஒரு பதிப்பாளன் என்பதைவிட அசோகமித்திரனின் வாசகன் என்றவகையில்தான் நான் பேசமுடியும். திரும்பத் திரும்பப் பலமுறை அவருடைய சிறுகதைகளை, குறுநாவல்களைப் படித்துக்கொண்டே இருப்பேன். இப்போதும் செய்கிறேன். அவருடைய நாவல்களில் ஒருசில என்னை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுபவை. சில எனக்குப் பிடிக்காதவை. தண்ணீர், கரைந்த நிழல்கள், 18-வது அட்சக்கோடு, ஒற்றன் - மிக அற்புதமானவை. மானசரோவர் எனக்குப் பிடிக்கவில்லை. ஒற்றன் அசோகமித்திரனின் ஆகச்சிறந்த படைப்பு என்பது ஒரு வாசகனாக என் அபிப்ராயம். (இப்போது காலச்சுவடு பதிப்பு. இதனைப் பதிப்பிக்கமுடியாதது என் வருத்தம்.) அவருடைய கட்டுரைகள் அனைத்தையும் பலமுறை படித்திருக்கிறேன்.

தமிழ் எழுத்துப் பரப்பில் அசோகமித்திரனின் இடம் இது என்றெல்லாம் சொல்லும் விருப்பமோ தகுதியோ எனக்கில்லை. ஆனால் நானும் அசோகமித்திரனின் பதிப்பாளன் என்று சொல்லிக்கொள்வதில் நிச்சயமாகவே பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அசோகமித்திரனின் புத்தகங்கள் (எனக்குத் தெரிந்து) கலைஞன் பதிப்பகம் வாயிலாகவும் நர்மதா பதிப்பகம் வாயிலாகவும் வெளிவந்தன. அவருடைய சிறுகதைகள் இரு பெரும் தொகுதிகளாக கவிதா பதிப்பகம் வாயிலாக வெளிவந்தன. இப்போது அவற்றைப் பிய்த்து பல சிறுகதைத் தொகுதிகளாக கவிதா வெளியிட்டுள்ளது. அவருடைய கட்டுரைகளையெல்லாம் தொகுத்து இரு பெரும் தொகுதிகளாக கிழக்கு பதிப்பகம் வெளியிட்டது. தொடர்ந்து கிழக்கு அவருடைய பல்வேறு நூல்களைக் கொண்டுவந்துள்ளது. அனைத்தும் இப்போது அச்சில் உள்ளன. காலச்சுவடு ஒற்றன், தண்ணீர் ஆகிய நாவல்களை கிளாசிக் பதிப்புகளாகக் கொண்டுவந்தது. அவருடைய புதிய சிறுகதைகளை ஒரு பதிப்பாகக் கொண்டுவந்தது.

அசோகமித்திரனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் பத்தை அம்ருதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கிழக்கு பதிப்பகம் ஒரு பத்துக் கதைகளை ஒலிப்புத்தகமாக வெளியிட்டுள்ளது.

அசோகமித்திரனின் சில படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகியுள்ளன. அதில் மூன்றை நாங்கள் வெளியிட்டுள்ளோம். கரைந்த நிழல்கள் (Star-Crossed), இன்று (Today), தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (Men, Women and Mice ). கல்யாணராமனின் மொழிபெயர்ப்பில் இரு நாவல்கள்: ஒற்றன் (Mole!), மானசரோவர் (Manasarovar), சில சிறுகதைகள் (Sand and Other Stories) வெளியாகியுள்ளன. தவிர அவருடைய சிறுகதைகள் பல மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளன. அவை கீழ்க்கண்ட பெயர்களில் ஆங்கிலத்தில் வந்துள்ளன: The Colours of Evil, A Most Truthful Picture and Other Stories. லட்சுமி ஹோல்ம்ஸ்ட்ராம் அவருடைய தண்ணீர் (Water) நாவலையும் சில சிறுகதைகளையும் (My Father's Friend) மொழிபெயர்த்துள்ளார்.

மலையாளம் முதற்கொண்டு சில இந்திய மொழிகளில் அசோகமித்திரனுடைய புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

அசோகமித்திரனின் படைப்புகள் (பெரும்பாலானவை) வாங்க

ஆங்கிலப் புத்தகங்களை வாங்க (அமேசான்)

Sunday, September 23, 2012

பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு ஒரு வக்காலத்து

பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஏழைகளின் வயிற்றில் அடிக்கின்றன என்று புலம்புபவர்கள், ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் 1970-களிலும் 1980-களிலும் எப்படிப்பட்ட நிலையில் வாழ்ந்தனர் என்று ஆராய்ந்து பார்த்தால், எந்த அளவுக்குக் கடந்த முப்பது ஆண்டுகளில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்வார்கள். என்னென்னவோ ஸ்பூரியஸ் தரவுகளை வைத்துக்கொண்டு அன்று உண்டதைவிட இன்று குறைந்த அளவு தானியங்களையே மக்கள் உண்கின்றனர் என்பதைத் தாண்டி இடதுசாரிகளால் வேறு எதையும் பேச முடிவதில்லை.

இன்று தமிழகத்தின் எந்த ரேஷன் கடையிலும் சென்று பாருங்கள். அரிசி கொட்டிக்கிடக்கிறது. உண்மையிலேயே தரையில் சிந்திச் சீரழிகிறது. கேரளாவுக்குக் கடத்திச் செல்லப்பட்டதுபோக மீதி அரிசி இது. இலவச அரிசி, ஒரு ரூபாய் அரிசி, இரண்டு ரூபாய் அரிசி என்று ஒரு மாதம் முழுக்க ஒரு குடும்பத்துக்குத் தேவையான அரிசி இலவசமாக அல்லது இரண்டு மணி நேரக் கூலியில் கிடைத்துவிடுகிறது.

தமிழகத்தில் சாப்பிட உணவு இல்லை என்று யாராவது இன்று சொல்லமுடியுமா? அதையும் மீறிப் பிச்சைக்காரர்கள் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். அதற்குக் காரணம், அமைப்புரீதியான பிரச்னைகள். அவர்களுக்கு வீடு இருக்காது, ரேஷன் கார்டு இருக்காது. இவற்றை எப்படிப் பெற்று, பசியாறிக்கொள்வது என்று தெரியாது. அல்லது மஃபியாக்களின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். இவை அனைத்துமே அரசினால் தீர்க்கப்படக்கூடிய எளிய பிரச்னைகள்.

வெறும் அரிசியை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி உயிர்வாழ்வது என்று நீங்கள் கேட்கலாம். முடியாது. ஒப்புக்கொள்கிறேன். அதற்கு வேலை செய்து சம்பாதிக்கவேண்டும். இன்று அமைப்புசாரா வேலைகள் எக்கச்சக்கமாகக் கிடைக்கின்றன. அவற்றைச் செய்வதற்குத்தான் தமிழகத்தில் ஆள்கள் இல்லை. அதனால்தான் மணிப்பூரிலிருந்து சர்வர்களும் பிகாரிலிருந்து கட்டடக் கூலிகளும் வருகிறார்கள்.

இன்று விவசாயக் கூலி வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. விவசாயக் கூலிகளுக்கு நாளுக்கு 75 ரூபாய்க்குமேல் கொடுக்க நிலம் வைத்திருப்பவர்களுக்குக் கட்டுப்படி ஆவதில்லை. ஏனெனில் விவசாயக் கொள்முதல் விலை மிகக் குறைவாக உள்ளது. இடுபொருள் செலவு அதிகமாகியுள்ளது. விவசாயம் செய்வது என்பது ‘வாய்க்கும் வயிற்றுக்கும்’ என்ற நிலையில் உள்ள subsistence விவசாயிகளால் இனியும் முடியாது. பெருவிவசாயம் மட்டுமே இனி சாத்தியம். வளர்ந்த நாடுகள் அனைத்திலும் இதுதான் நடந்துள்ளது. இந்தியாவிலும் இதுதான் இனி நடக்கப்போகிறது. அதற்கான சட்டதிட்ட மாறுதல்கள் தேவை. கார்பரேட் விவசாயம், கூட்டு விவசாயம் (கூட்டுறவும் ஒருவகையில் கார்பரேட் மாதிரிதான்), பங்குச்சந்தையில் பங்குப்பணம் அல்லது கடன் பணம் திரட்டி விவசாயம், அந்நிய முதலீட்டில் விவசாயம் ஆகியவை நடப்பதை நாம் பார்க்கப்போகிறோம்.

அரசிடம் லாபி செய்து கொள்முதல் விலையை அதிகரிப்பது அல்லது பொதுச்சந்தையில் அதிக விலைக்கு விற்க முயற்சி செய்வது என்பதுதான் விவசாயம் செய்வோரின் நோக்கங்களாக இருக்கவேண்டும். மாறாக இலவச மின்சாரம் கொடு, உரத்தைக் குறைந்த விலையில் கொடு, கடனை ரத்து செய் என்று தொடர்ந்து அரசிடம் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தால் அரசு கொள்முதல் விலையை அடிமட்டத்திலேயே வைத்துக்கொண்டிருக்கும்.

வளர்ச்சி என்பது உற்பத்தித் தொழில் துறையிலும் சேவைத் துறையிலும் மட்டும்தான் சாத்தியம். இவை இரண்டுக்கும் நிதி மூலதனம், கட்டுமானம் ஆகியவை மிக அதிகமாகத் தேவை. தமிழகம் இப்போது மின் பற்றாக்குறையில் திண்டாடுகிறது. 12 மணி நேர அறிவிக்கப்படாத மின்வெட்டு என்பது அடுத்த ஓராண்டுக்காவது இருக்கப்போகிறது. மாறி மாறி கழக அரசுகள் காசுக்கு வாக்குகளை வாங்கிக்கொண்டும் திராவிட, தமிழ் இன உணர்ச்சிகளை விற்றுக்கொண்டும் இருந்தபோது இந்தியாவின் வேறுசில மாநிலங்கள் மின் கட்டுமானத்தில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தன. மனித வாழ்வுக்கு மின்சாரம் இன்றியமையாததாக ஆகிவிட்டது. நாம் இனி காந்திய மாதிரியில் குடிசைகளில் இருந்துகொண்டு மின்சாரம் பயன்படுத்தாமல், தொழிற்சாலைகளைக் கட்டாமல், கையால் நூல் நூற்று, ஈர்க்கால் இலை தைத்து வாழ்க்கை நடத்தப்போவதில்லை. பெட்ரோல், பிளாஸ்டிக், உலோகம், மின்சாரம், பொருள் உற்பத்தி, டிவி, இணையம், கணினி, செல்பேசி என்று வாழ்க்கை வசதிக்கான பொருள்களால் நம்மை நிரப்பிக்கொண்டுதான் வாழப்போகிறோம்.

இதற்குத் தேவையான அடிப்படை முதலீடு இந்திய அரசிடம் இல்லை. இந்திய அரசின் முதலீட்டில் இவை இயங்குவதையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தேவையான முதலீடு இந்திய மக்களிடம் இருக்கிறது. ஆனால் முதலிடும் மனோபாவம் இந்தியர்களிடம் இல்லை. பணத்தைப் பெட்டியில் போட்டுவைப்பது அல்லது வங்கியில் போட்டுவைப்பது. வங்கிகளும் இந்தப் பணத்தைத் தம்மிஷ்டத்துக்கு முதலிட முடியாது. இந்தியப் பங்குச்சந்தை சிறியது. இந்திய நிதி நிறுவனங்கள் - இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஆகியவை - மிகச் சிறியவை. இந்தியாவில் தனியார் பென்ஷன் ஃபண்ட் மிக மிகச் சிறியது. இவையெல்லாம் ஆரம்பித்து, நன்கு பெரிதானால் இந்தியா அந்நிய முதலீட்டைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

ஆனால் இது இப்போதைக்கு நடக்காது என்பதால் நாம் அந்நிய முதலீட்டைப் பெருமளவு நம்பியிருக்கிறோம். அடுத்தவனிடம் காசு கேட்டால் அவன் சொல்வதற்குக் கொஞ்சமாவது தலை ஆட்டவேண்டும். அவனுக்குப் பிடித்த துறையில்தான் அவன் முதலீடு செய்ய வருவான். ‘அமெரிக்க அடிமை’, ‘நாட்டை விற்கும் நயவஞ்சகன்’ என்று எதுகை மோனையோடு நாட்டின் பிரதமரைத் தூற்றுவதை விடுத்து, நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுசெல்லும் நல்ல திட்டங்கள் என்று எழுந்து நின்று கை தட்டுவோம்.

டீசல் விலை

டீசல் விலை ஏற்றம் கண்டு பலர் கொதித்துப்போயுள்ளனர். உண்மையில் இந்த விலையேற்றம் தாமதமாக வந்துள்ளது. பலமுறை பெட்ரோலின் விலை ஏற்றப்பட்டபோதெல்லாம் டீசல் விலை ஏற்றப்படவேயில்லை. அல்லது மிகக் குறைவாக ஏற்றப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலையை ஏற்றவேண்டுமா என்பதிலேயே சில கேள்விகள் உள்ளன. அதீதமான வரிவிதிப்பு காரணமாகவே பிற நாடுகளைவிட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. என்னைக் கேட்டால் இந்த விலையைக் குறைக்க MGNREGA போன்ற ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் (என்ன அற்புதமான பெயர்! வேலையே நடக்காத ஒன்றின் பெயர் வேலை வாய்ப்புத் திட்டம்) செய்யப்படும் வீண் செலவுகளைக் குறைக்கலாம் என்பேன். இடதுசாரிகள் வேறு மாதிரி பேசுவார்கள். தொழில்துறைக்கு அள்ளித்தரும் பல லட்சம் கோடி சலுகைகளைக் குறைத்து வரிகளாக விதித்துத் தள்ளினால், பெட்ரோல் விலையைக் குறைத்துவிடலாம் என்பார்கள். இன்னும் சிலர், 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டு, கரியை ஏலம் விட்டால் எத்தனை கோடிகோடி பணம் வேண்டுமானாலும் கிடைக்கும் என்பார்கள்.

வரி அதிகம் என்பது உண்மைதான். ஆனால் அதிலுமே சமநிலையற்ற தன்மை நிலவுகிறது என்பதும் உண்மை.

டீசல், பெட்ரோல் இரண்டையும் கச்சா எண்ணெயிலிருந்து உற்பத்தி செய்ய, கிட்டத்தட்ட ஒரே செலவுதான் ஆகிறது. ஆனால் டீசல் விலை குறைவு. ஏனெனில் டீசல்தான் விவசாயிகளுக்கும் போக்குவரத்துத் துறையினருக்கும் மிக அவசியம். டீசல் அடிப்படைப் பொருளாகவும் பெட்ரோல் ஆடம்பரப் பொருளாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் லாரிகள் மட்டுமல்ல, மெர்சிடிஸ் பென்ஸ் காரும் டீசலில் ஓடுகிறது, வோல்வோ பஸ்ஸும் டீசலில் ஓடுகிறது.

பெட்ரோல் விலையை 10 ரூபாய் ஏற்றி, டீசல் விலையை 1 ரூபாய் ஏற்றும் நிலைக்கு பதிலாக, டீசல் விலையை மட்டும் 5 ரூபாய் ஏற்றியதால் நாடே கொந்தளித்துள்ளது.

ஆனால் இந்த விலை ஏற்றத்தாலும் வேறு சில காரணங்களாலும் ஏற்றிய விலை விரைவில் இறங்கும் என்று கருதுகிறேன்.

ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்கள், கடந்த ஒரு வருடத்தில்
நன்றி: http://www.x-rates.com/graph/?from=USD&to=INR&amount=1
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் சுமார் 10% வீழ்ந்துள்ளது. (கிட்டத்தட்ட 16% வீழுந்து பின்னர் வீழ்ச்சி குறைந்துள்ளது.) டீசல் விலையேற்றம் 10%-க்கும் குறைவே.

தொடர்ந்து சீர்திருத்தங்களைச் செய்வதன்மூலம் அந்நியச் செலாவணியை இந்தியாவுக்குள் பாய்ச்ச முடியும். அதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும். இழந்த 10%-ஐ மீட்டாலே, டீசலில் விலை மீண்டும் பழைய இடத்துக்கே சென்றுவிட முடியும். பெட்ரோலின் விலையையும் குறைக்கலாம்.

மமதா மத்திய ஆட்சியிலிருந்து விலகி இந்தியாவுக்கு மிகப் பெரும் உதவி செய்திருக்கிறார்.

Friday, September 21, 2012

முஸ்லிம்களின் குற்றம் அல்லது குற்றமின்மை

Innocence of Muslims என்ற தலைப்பில் ஒரு படத்தின் டிரெய்லர் காட்சி யூட்யூபில் வந்தது. அதனால் உலகத்தில் எங்கும் முஸ்லிம்கள் கொந்தளித்துள்ளனர். லிபியாவில் அமெரிக்கத் தூதரகத்தின்மீது மக்கள் தாக்குதல் தொடுத்து அமெரிக்கத் தூதரைக் கொன்றுவிட்டனர். நேற்று இஸ்லாமாபாத்தில் வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ள பகுதியில் பெரும் மக்கள் கூட்டம் சூழ்ந்துகொண்டது. நிலைமைக் கட்டுக்குள் வைக்க, ராணுவம் அழைக்கப்படவேண்டியிருந்தது. சென்னை அண்ணா சாலையில் அமெரிக்கத் தூதரகம் உள்ள பகுதியில் தினமும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சென்னையின் காவல்துறை ஆணையர் மாற்றப்பட்டுள்ளார். தென் மாவட்டங்களில் அடக்குமுறையை வெற்றிகரமாகச் செய்து காண்பித்துள்ள ஒருவர் புதிய ஆணையராக ஆகியுள்ளார்.

மேற்கண்ட படம் யூட்யூபில் இப்போதும் காணக்கிடைக்கிறது. இன்று காலையில்தான் நான் பார்த்தேன். மிக மோசமான லோ பட்ஜெட் படம். பழங்காலத் தமிழ்ப் படங்களில் பின்னால் திரைச்சீலை கட்டி வைத்திருப்பதுபோல் பாலைவனம் என்பது நிலையான ஓர் ஓவியம்.

எகிப்தில் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களைக் கொலை செய்வதிலிருந்து தொடங்குகிறது. மனித குலத்தில் "X"-ஐச் சேர்த்தால் அது விஷக் கிருமியாகிறது; அந்த விஷக் கிருமியை நீக்கினால் அது மீண்டும் மனிதன் ஆகிவிடும் என்று பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மருத்துவர் தன் மகளுக்குச் சொல்கிறார். அந்த X எது? அதுதான் இஸ்லாம், அதுதான் முகமது என்பதாகக் கதை விரிகிறது.

கதீஜா கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஒரு கிழவர், டோராவையும் புதிய ஏற்பாட்டையும் கொஞ்சம் திரித்து, கலந்து முகமதுவிடம் கொடுக்க அது குரான் ஆகிறதாம். முகமது வெட்டு, குத்து, கொல்லு என்கிறார். சிறுவர்களையும்கூட.

முகமதுவைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் முஸ்லிம்களை நிஜமாகவே கோபம் கொள்ளவைக்கும். முகமது அறிமுகப்படுத்தப்படும் காட்சியில், தந்தை யார் என்று தெரியாதவர் என்பதற்கான ஆங்கில வசைச் சொல் கொண்டே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் அவரை அழைக்கின்றனர். கதீஜா - முகமது ஈடுபடும் ஒரு காட்சி, முகமது வேறொரு பெண்ணுடன் உறவுகொள்ளும்போது அவருடைய இரண்டு மனைவிகள் செருப்பை எடுத்துக்கொண்டு வந்து அவரை ஓடவிட்டு அடிப்பது, 120 வயதான ஒரு கிழவி முகமதுவுக்கு எதிராகப் பேசுகிறார் என்பதற்காக அவருடைய இரண்டு கால்களையும் இரு வேறு ஒட்டகங்களில் கட்டி அவற்றை எதிரெதிர் திசையில் நடக்கச் செய்து அவரைக் கிழித்துக் கொல்வது, முகமதுவையும் அவருடைய தோழர் உமரையும் ஒரு பாலினச் சேர்க்கையாளர்கள் என்று சொல்வது, இப்படி அவதூறுகள், வேண்டுமென்றே புண்படுத்தவேண்டும் என்று உருவாக்கப்பட்ட மலினமான காட்சிகள்.

மேலை நாடுகளின் கருத்துரிமை, பேச்சுரிமைப் பாரம்பரியப்படி, இதுபோன்ற படங்கள், புத்தகங்கள், கார்ட்டூன்கள் ஆகியவை அனுமதிக்கப்பட்டவை. இயேசு திருமணமானவரா, இல்லையா என்பதை மிக நாசூக்காகப் பத்திரிகைகளில் அலசுகிறார்கள். நிறுவன கிறிஸ்தவத்துக்குக் கடுமையான கோபத்தைத் தரக்கூடிய விஷயம் இது. ‘பிஸ் கிறைஸ்ட்’ என்ற புகைப்படம் (சிறுநீரில் முங்கிவைக்கப்பட்ட சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து) அமெரிக்காவின் பல இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. நான் படித்த கார்னல் பல்கலைக்கழகத்திலும் (1990-களின் ஆரம்பத்தில்) காட்சிக்கு வந்தது. நான் சென்று பார்த்தேன். வாசலில் சில மாணவர்கள் ஓவியத்துக்கு எதிராகத் தட்டிகளை ஏந்தியபடி நின்றுகொண்டிருந்தனர். அவ்வளவுதான்.

‘இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ படத்தை எடுத்தது யார், இதற்கு நிதியுதவி செய்தது யார் என்பதில் பல புரளிகள் உடனடியாகக் கிளம்பி, யூதர்கள் மேல் கை காட்டப்பட்டுள்ளது. அனைத்துக்கும் அமெரிக்கா காரணம் என்று அந்த அரசின்மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் தலையிட்டு சம்பந்தப்பட்ட படத்தை யூட்யூபிலிருந்து நீக்கவேண்டும், படம் எடுத்தவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடப்படுகிறது.

அமெரிக்காவின் சட்டதிட்டங்கள், நடைமுறைகள் ஆகியவற்றின்படி இதையெல்லாம் செய்ய முடியாது. அப்படியானால் நான்கைந்து அமெரிக்கத் தூதரகங்களை எரித்து, தூதர்களைக் கொன்று, கலவரம் செய்தாவது இவற்றைச் சாதிப்போம் என்றால் இந்தப் படம் கட்டமைக்கும் வகைமாதிரி பிம்பங்களுக்கு மேலும் வலு சேர்ப்பதாகிவிடும்.

Ignore and proceed.

[இப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் வெகுவாக சென்சார் செய்யப்படலாம்.]

Monday, September 17, 2012

பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி, கொழும்பு


கொழும்பில் 18 முதல் 26 செப்டெம்பர் 2012 வரை நடக்கும் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் எங்களுடைய இலங்கை புத்தக இறக்குமதியாளர் ‘புக்வின்’ கலந்துகொள்கிறார். கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் J 413 இலக்கமுள்ள கடையில் கிடைக்கும்.
 


எங்கள் விநியோகஸ்தரைத் தொடர்புகொள்ள

டியூக் மோகன்
புக்வின் பிரைவேட் லிமிடெட்
209 1/1, நீர்கொழும்புச் சாலை
வத்தளை, இலங்கை
தொ.பே: +94 112941234
மின்னஞ்சல்: bookvinsrilanka@gmail.com

கிழக்கு புத்தகங்கள் இலங்கையில் கிடைக்கும் இடங்கள்: மட்டக்கிளப்பு, சிலாபம், கொழும்பு, கனிமுல்லா, ஹட்டன், கண்டி, நுவரேலியா, யாழ்ப்பாணம், கந்தானை, கிரிபதகோடா, ரகமா, திரிகோணமலை, வவுனியா மற்றும் கிளிநொச்சி.

Thursday, September 13, 2012

PublishingNext கருத்தரங்கம்

கோவாவில் PublishingNext என்று ஒரு கருத்தரங்கு, வெள்ளி, சனி (14, 15 செப்டெம்பர்) இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இந்தியாவிலிருந்து பல பதிப்பாளர்கள் கலந்துகொள்கிறார்கள். கிழக்கு பதிப்பகத்திலிருந்து நானும் சத்யாவும் கலந்துகொள்கிறோம்.

ஞாயிறுதான் சென்னை திரும்பிவருகிறேன்.  அதுவரையில் என் பதிவுக்கு வரும் பின்னூட்டங்களை அவ்வப்போது பிரசுரித்தபடி இருப்பேன். ஆனால் பதில் எழுதமுடியாமல் போகலாம். நேரம் மற்றும் இணைய இணைப்பைப் பொருத்து, முடிந்தவரை பதில்களை எழுத முற்படுகிறேன்.


தகவலுக்காக

Saurav Jha: The Upside Down Book Of Nuclear Power என்ற புத்தகத்தின் தமிழாக்கத்தைப் பதிப்பிக்கும் வேலையில் இறங்கியுள்ளேன். கிழக்கு பதிப்பகம் வெளியீடாக இந்தப் புத்தகம் விரைவில் வரும். இது அணு உலைகளுக்கு ஆதரவான புத்தகம். இன்னும் எடிட்டிங் வேலைகள் பாக்கியுள்ளன. பாதிவரைதான் வந்திருக்கிறேன். இம்மாத இறுதிக்குள்ளாகவாவது என் வேலையை முடித்து அச்சுக்கு அனுப்ப அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்வேன்.
 
இதை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறேன்.

அணு மின் உலைகள் கூடாது என்று நன்றாக, தெளிவாக, சரியாக, தகவல் பிழைகள் ஏதுமின்றிக் கருத்துகளை முன்வைக்கும் புத்தகம் ஏதேனும் இருந்தால் அதனையும் தமிழாக்கம் செய்து பதிப்பிக்கத் தயாராக உள்ளேன்.

கதிர்வீச்சு - சிறு அறிமுகம்

கூடங்குளம், கல்பாக்கம் பற்றியும் இந்தியாவின் பல்வேறு அணு மின் உலைகள் பற்றியும் பேச்சு வரும்பொது கதிரியக்கம் பற்றியும் கதிர்வீச்சு பற்றியும் பேச்சு வரும். அதில் புரியாத பல விஷயங்கள் இருக்கும்.

கதிர்வீச்சில் இரண்டு வகை உண்டு. ஒன்று நிறையுள்ள பொருள்கள் அடங்கிய ‘கதிர்’. இவற்றில் ஆல்ஃபா, பீட்டா கதிர்கள் அடங்கும். இவைதவிர நியூட்ரான் கதிர்கள், புரோட்டான் கதிர்கள் ஆகியவையும் சாத்தியம். மற்றொருவகைக் கதிரில் வெறும் ஆற்றல் மட்டும்தான் உண்டு. நிறையுள்ள பொருள் எதுவும் அதில் இல்லை. காமா கதிர்கள் என்று இவற்றுக்குப் பெயர்.

ஆல்ஃபா கதிர்கள் என்பவை அடர்த்தியான ஹீலியம் உட்கருக்களைக் கொண்டவை. அடர்த்தியானவை என்பதனாலேயே காற்றில் அதிக தூரம் இவற்றால் செல்லமுடியாது. எனவே அதன் மூலம் எங்கிருக்கிறதோ அதற்கு அருகிலேயேதான் இதன் செயல்பாடும் இருக்கும். வானில் பரவும்போது எலெக்ட்ரான்களைப் பெற்றுக்கொண்டு ஹீலியம் அணுக்களாக மாறி, வானில் மேலே மேலே எழும்பிக் காணாமல் போய்விடும். பீட்டா கதிர்கள் என்றால் எலெக்ட்ரான்கள் அடங்கியவை. இந்த இரண்டு கதிர்களாலும், நம் உடலின் மேல் தோலைத் தாண்டி உடம்புக்குள் நுழைய முடியாது. ஆனால் நாம் உட்கொண்ட பொருள் உடலுக்கு உள்ளிருந்து ஆல்ஃபா, பீட்டா கதிர்களை வெளிவிடும்போது நிச்சயமாக பாதிப்பு உண்டு. காமா கதிர்கள் என்பவை மின்காந்த அலைகள் கொண்ட கதிர்கள்.

இவற்றை முதன்மைக் கதிர்வீச்சு என்று வைத்துக்கொண்டால், இரண்டாம்நிலைக் கதிர்வீச்சு அடுத்து உருவாகும் வாய்ப்புகள் உண்டு. இந்த முதன்மைக் கதிர்கள் வானில் பரவும்போது அங்கே உள்ள பல்வேறு தனிமங்களுடன் ஊடாடுகின்றன. அப்போது சில தனிமங்களின் சில ஐசோடோப்புகள் கதிரியக்கத் தன்மை கொண்டவையாக மாறுகின்றன. அவை தொடர்ந்து கதிர்வீச்சை வெளிப்படுத்தும். இவைதான் இரண்டாம்நிலைக் கதிர்வீச்சு.

அடுத்ததாக, அணுப்பிளவு ஏற்படும்போது, கதிர்வீச்சு ஒரு பக்கம் இருக்க, ஒரு பெரிய அணு இரண்டு சிறு அணுக்களாக உடைகிறது. அப்படி உருவாகியுள்ள சிறு அணுக்களும் கதிர்வீச்சு கொண்டவையாக இருக்கும். அவை நம் உடலுக்குள் சேரும்போது பிரச்னை பெரிதாக மாறும்.

உதாரணமாக யுரேனியம் நம் உடலில் இருப்பதில்லை. நம் உடலில் பெரும்பாலும் ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், கார்பன் ஆகியவைதான் உள்ளன. இவைதவிர இரும்பு, அயோடின், சோடியம், பொடாசியம், பாஸ்பரஸ், கால்சியம் என்று ஏகப்பட்ட பிற தனிமங்களும் சிறு அளவில் உள்ளன. உதாரணமாக, ஒவ்வொரு ரத்தச் சிகப்பணுவிலும் இரும்பு உள்ளது. எலும்பில் கால்சியம் உள்ளது. கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பியில் அயோடின் உள்ளது.

யுரேனியம் பிளக்கும்போது அயோடின்-131 என்ற ஒரு குறிப்பிட்ட அயோடின் ஐசோடோப் உருவாகிறது. சாதாரணமாக நிலையான அயோடின் ஐசோடோப் என்பது அயோடின்-127. இந்த அயோடின்-131-ல் நான்கு நியூட்ரான்கள் அதிகமாக உள்ளன. இந்த (கெட்ட) அயோடின் காற்றில் சேரச் சேர, இது கொஞ்சம் கொஞ்சமாக மனித உடலை நோக்கி வந்து சேருகிறது.

யுரேனியக் கதிர்வீச்சு அதிகமான நாகசாகி, ஹிரோஷிமா, செர்னோபில் ஆகிய இடங்களில் இதுதான் நடந்தது. கழுத்தில் உள்ள தைராய்ட் சுரப்பியின் செல்களில் அயோடின் இருக்கும் என்று சொன்னேன் அல்லவா? நாளடைவில் இந்தப் பகுதியில் உள்ள மக்களின் கழுத்துகளில் அயோடின்-127-க்குப் பதில், அயோடின்-131 அதிகமாகச் சேர்ந்துவிடும்.

இந்த அயோடின்-131 பீட்டா கதிர்வீச்சை வெளிப்படுத்தும். அப்படி ஆகும்போது இவை இருக்கும் செல்கள் அழிகின்றன. அதனால் அயோடின்-131 அதிகமானவர்களுக்கு தைராய்டு கேன்சர் கட்டாயம் வரும். செர்னோபில் விபத்தில் இது நன்றாகவே கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மாற்று மருந்துகள் உண்டு. உதாரணமாக, காற்றில் அயோடின்-131 அதிகமாகியுள்ளது என்று தெரிந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயோடின்-127 அடங்கிய உப்பை/மாத்திரையை அதிகமாக உட்கொள்ளவேண்டும். அதன் காரணமாக அயோடின்-131 நம் உடலின் உள்ளே புகாமல் வெளியேற ஆரம்பிக்கும்.

***

ஐசோடோப் என்றால் என்ன என்று விரைவாகப் பார்த்துவிடுவோம். ஒரு குறிப்பிட்ட தனிமத்தின் உட்கருவில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் புரோட்டான்கள் இருக்கும். ஒரு புரோட்டான் என்றால் ஹைட்ரஜன் அணு. இரண்டாவது புரோட்டான் வந்துவிட்டால் அது ஹீலியம். ஆனால் உட்கருவில் நியூட்ரான் என்ற துகளும் உள்ளது. உட்கருவில் நியூட்ரானின் எண்ணிக்கை பொதுவாக புரோட்டானின் எண்ணிக்கைக்கு நெருங்கியதாக, பல நேரங்களில் இணையானதாக இருக்கும். ஆனால் ஒரே தனிமத்தின் சில அணுக்களில் மட்டும் நியூட்ரான் எண்ணிக்கை மற்ற அணுக்களிலிருந்து மாறுபட்டதாக இருக்கும். ஆனாலும் அந்த அணுக்கள் யாவும் வேதியியல் பார்வையில் ஒரே மாதிரியாகவே இயங்கும். இப்படிப்பட்ட, ஒரே புரோட்டான் எண்ணிக்கையைக் கொண்ட, ஆனால் வெவ்வேறு நியூட்ரான் எண்ணிக்கையைக் கொண்ட அணுக்களை அந்தக் குறிப்பிட்ட தனிமத்தின் வெவ்வேறு ஐசோடோப்புகள் என்கிறோம். அயோடின் தனிமத்துக்கு அயோடின்-123, அயோடின்-127, அயோடின்-129, அயோடின்-131 என்ற நான்கு ஐசோடோப்புகள் உண்டு. அனைத்தின் அணுக்களிலும் 53 புரோட்டான்கள். ஆனால் நியூட்ரான்களின் எண்ணிக்கை முறையே 70, 74, 76 மற்றும் 78. இதில் அயோடின்-127 என்பதுதான் நிலையானது. மற்றவை எங்கேயோ அணுப்பிளவு நடக்கும்போதுதான் உருவாகும். அதில் அயோடின்-131 மனிதர்களுக்கு ஆபத்தானது.

சில தனிமங்களின் சில ஐசோடோப்புகள்தான் கதிரியக்கத் தன்மை கொண்டவை. உதாரணமாக ஹைட்ரஜன் ஐசோடோப்புகளில் புரோட்டியம், டியூட்டிரியம் ஆகியவை கதிரியக்கத் தன்மை கொண்டவையல்ல. டிரிட்டியம் மட்டும்தான். யுரேனியத்தின் பல்வேறு ஐசோடோப்புகளும் கதிரியக்கத் தன்மை கொண்டவை. ஆனால் மிக மென்மையான கதிரியக்கம்.

கதிரியக்கம் வேகமானதா, குறைவானதா என்பதைப் புரிந்துகொள்ள அரை ஆயுள் என்ற எண்ணிக்கை அவசியம். இது ஒவ்வொரு ஐசோடோப்புக்கும் பிரத்யேகமானது. இது சுவாரசியமான ஒன்று. ஒரு ஐசோடோப்பின் அரை ஆயுள் பத்து நிமிடம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த ஐசோடோப்பை பத்து கிராம் எடுத்து ஒரு தட்டில் வையுங்கள். பத்து நிமிடம் கழித்துப் பார்த்தால் பத்து கிராமில் பாதி அளவு (ஐந்து கிராம்) கதிரியக்கம் ஆகி, வேறு தனிமங்களாக ஆகியிருக்கும். இன்னும் பத்து நிமிடம் கழித்து மீதியுள்ள ஐந்து கிராம் பொருள், அதில் பாதி ஆகியிருக்கும். இன்னும் பத்து நிமிடம் கழித்து மேலும் பாதி... 10, 5, 2.5, 1.25 என்று குறைந்துகொண்டே போகும். ஆனால் எப்போதும் இருப்பதில் பாதி. அதனால்தான் இதற்கு அரை ஆயுள் என்று பெயர்.

சில பொருள்களுக்கு அரை ஆயுள் காலம் மிக மிக அதிகம். பல பில்லியன், பல டிரில்லியன் ஆண்டுகள் என்று இருக்கும். வேறு சிலவற்றுக்கு சில நாள்கள் அல்லது சில நிமிடங்கள்.

இயற்கையிலேயே கதிரியக்கத் தன்மை கொண்ட பொருள்கள் சில உள்ளன. அதே நேரம் செயற்கையாகக் கதிரியக்கத் தன்மை புகுத்தப்பட்ட பொருள்களையும் தயாரிக்க முடியும். அணு உலைகளில் நிகழ்வது இந்த இரண்டாவது விஷயம். யுரேனியம்-238 என்ற ஐசோடோப்பை எடுத்து அதன்மீது நியூட்ரான்களை அடித்தால், அது புளூட்டோனியம்-239 ஆக மாறி, பின் அது மேலும் உடைந்து, அதிலிருந்து மேற்கொண்டு நில நியூட்ரான்கள் வெளியே வந்து அவை அருகில் இருக்கும் யுரேனியம்-238-ஐத் தாக்கி, இப்படித் தொடர்ந்து நடப்பதுதான் சங்கிலி வினை.

இயற்கையிலேயே கதிரியக்கத் தன்மை கொண்ட பொருள்களைக் கடவுளே வந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது. ஜாதுகுடாவில் நாம் தோண்டாவிட்டாலும் அங்கே உள்ள யுரேனியம் கதிர்வீச்சை வெளிப்படுத்திக்கொண்டேதான் இருக்கிறது. பூமிக்கு அடியில் இருந்தாலும் அங்கிருந்து கதிர்வீச்சு வெளியேறிக்கொண்டுதான் இருக்கும். அது அருகில் இருக்கும் நீரை மாசுபடுத்துக்கொண்டுதான் இருக்கும்.

அணு உலைகளை நடத்துவதன் காரணமாக மட்டும்தான் கதிர்வீச்சு என்ற அபாயம் உருவாவதுபோலப் பலரும் சொல்வது தவறு. நம் பூமியில் இயற்கையிலேயே கதிர்வீச்சை வெளிப்படுத்தும் பொருள்கள் பல உள்ளன. பிரபஞ்சத்தில் பல இடங்களில் இவை இந்த விநாடியில் உருவாகிக்கொண்டேதான் உள்ளன.

மனிதன் அணு உலைகளில் இவற்றைச் செயற்கையாகவும் உருவாக்கிக்கொண்டிருக்கிறான். பொதுவாக, செயற்கையாக எதை உருவாக்கினாலும் அது ஏதோ பிரச்னைகளை ஏற்படுத்தத்தான் செய்யும். ஏனெனில் சமநிலை என்பது வேகமாக மாறுகிறது. ஆனால் அணுக் கழிவுகள் என்பது மனிதனால் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது என்பதுபோலப் பேசுவது தவறு. படிம எரிபொருளை எரித்து நாம் இதுகாறும் உருவாக்கியுள்ள எச்சங்களைவிடக் குறைவானவைதான் அணுக் கழிவுகள். இவற்றைக் கவனமாகக் கையாளவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் பூமிக்கு அடியில் புதைத்துவைத்தாலும் விடாது கருப்பு என்று இவை நம்மை வந்து துரத்தும் என்பதெல்லாம் மிகையான கூற்றுகள்.

கதிரியக்கப் பொருளை அடர்த்தியாக்க அடர்த்தியாக்க, அதன் கதிரியக்கம் அடர்த்தியாக இருக்கும். நீர்த்துப்போக வைக்கும்போது கதிரியக்கமும் நீர்த்துப்போகும்.

இது தொடர்பான தொழில்நுட்பம் அனைத்தும் எனக்குத் தெரியுமா என்றால் தெரியாது. ஆனால் எதிர்ப்பாளர்கள் சொல்வதுபோல அத்தனை பெரிய ஆபத்தானதாக எனக்குத் தோன்றவில்லை. அணுக் கழிவுகளைக் கையாள்வது சாத்தியம்தான். பூமிக்கு அடியிலோ, கடலுக்கு அடியிலோ, பாலைவனத்திலோ புதைத்துவைப்பதால் மனித இனத்துக்கு எந்தக் கேடும் வந்துவிடாது என்றுதான் நான் கருதுகிறேன்.

ஆனால் இந்திய அரசுக்கு இது தொடர்பாகக் கொள்கை ஒன்று இருக்கவேண்டும், அதனை இந்திய அரசு வெளியிடவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.

[சில தவறுகளைத் திருத்தியிருக்கிறேன். இதனை மீண்டும் சரி பார்க்கவேண்டும். அப்போது மேலும் சில திருத்தங்கள் செய்ய நேரிடலாம்.]

Wednesday, September 12, 2012

சுனாமி + கதிர்வீச்சு + சோமாலியா மரணம்?

முத்துக்கிருஷ்ணன் எழுதியுள்ள நூலில், அணுக்கழிவுகள் பற்றி இப்படி ஓரிடத்தில் வருகிறது:
மேற்கத்திய நாடுகள் தங்களின் அணுக்கழிவுகளைச் சட்டவிரோதமாக சோமாலியா கடல் பகுதிகளில் கொட்டியதும், அது 2004 சுனாமியின்போது அவர்களின் கடற்கரைகளில் வந்து பெரு அலைகளால் வீசப்பட்டது. அதனால் லட்சக்கணக்கான மரணங்கள் நிகழ்ந்து அதை உலக ஊடகங்கள் காணாமல் கண்களை முடியதும் நம் காலத்தின் வரலாறு. (பக்கம் 36, 37)
லட்சக்கணக்கான (கவனியுங்கள், நூறோ, ஆயிரமோ இல்லை, லட்சம்) உயிர்கள் போயும் அதை யாருமே கவனிக்கவில்லையாம். இந்த ஹைப்பர்போலி தேவையா?

சோமாலியா நீண்ட கடற்கரையைக் கொண்டது. ஆப்பிரிக்காவின் கிழக்கு, வடக்கு முனையில் உள்ளது. சோமாலியாவின் மொத்த மக்கள்தொகை சுமார் 1 கோடி. என்னதான் இருந்தாலும் கடற்கரைப் பகுதிகளின் வசிப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கமுடியும்? கடற்கரையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் என்று வைத்துக்கொண்டால் அதிகபட்சம் 20% மக்கள்? 20 லட்சம் பேர்? அதில் ஒரு லட்சம் இறந்தார்கள் என்றாலுமே அது பெரும் அதிர்ச்சியான விஷயம் இல்லையா? அதாவது 20 பேருக்கு ஒருவர் மரணம்.

கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. தொழிற்சாலைக் கழிவுகள் என்கின்றன செய்திகள். அணுக்கழிவு என்பதற்கு என்ன ஆதாரம் என்பது அடுத்த கேள்வி. விக்கிபீடியா இவ்வாறு சொல்கிறது:
An upsurge in piracy in the Gulf of Aden and the Indian Ocean has also been attributed to the effects of the 26 December 2004 tsunami that devastated local fishing fleets and washed ashore containers filled with toxic waste that had been dumped by European fishing vessels.
அதில் கொடுக்கப்பட்டுள்ள முதல் மேற்கோளைத் தேடிச் சென்றால், சிகாகோ டிரிப்யூன், இத்தாலியிலிருந்து படகுகள் வந்து ஐரோப்பிய ஆலைக் கழிவுகளைக் கொட்டிவிட்டு மீன் பிடித்துக்கொண்டு சென்றன என்கிறது. கழிவுகளைக் கொட்டிவிட்டு மீன் பிடித்துச் சென்றுள்ளனர் என்றாலே, அது அணுக் கழிவுகளாக இருக்கச் சாத்தியம் இல்லை என்று யூகிக்கலாம் அல்லவா?

எப்படியிருந்தாலும் எந்த அடிப்படையில் “லட்சம்” அல்லது அதற்கொப்ப உயிர்கள் போயுள்ளன என்ற முடிவுக்கு ஆசிரியர் வந்துள்ளார்? சுனாமியால் சுமார் 300 பேர் இறந்துள்ளனர் என்று மட்டும்தான் தகவலே.

விஷக் கழிவுகளின் கதிர்வீச்சினால் சுமார் 300 பேர் இறந்துள்ளனர் என்கிறது ஒரு செய்தி. கதிர்வீச்சு இருந்துள்ளது என்றால் அதில் அணுக்கழிவுகளும் இருக்கலாம் என்றுதான் முடிவு செய்ய முடியும். அனைத்துமே அணுக்கழிவுகள் என்றால் அத்தனை லட்சம் டன் அணுக்கழிவுகள் எங்கிருந்து வந்திருக்க முடியும்? உலகின் அனைத்து அணு உலைகளும் சேர்ந்தாலும் அத்தனை அணுக்கழிவுகள் வந்திருக்க முடியாது. டைம்ஸ் பத்திரிகையில் ஐ.நா சூழலியல் அமைப்பின் பிரதிநிதி, கழிவுகளில் மருத்துவக் கழிவுகள் முதல் ரசாயனக் கழிவுகள் வரை இருந்தன என்கிறார்.

ஆக, விஷக் கழிவுகள் அணுக் கழிவுகள் ஆகிறது. 300 இறப்புகள், லட்சக்கணக்கான இறப்புகளாக மாறுகிறது. புத்தகத்தின் நம்பகத்தன்மை கடுமையாகக் குறைகிறது.

உயிர் குடிக்கும் யுரேனியம் சுரங்கம்?

முத்துக்கிருஷ்ணனின் புத்தகத்தில்,
உலகம் முழுவதும் யுரேனிய சுரங்கங்களில் வேலை செய்பவர்களில் 50% பேர் புற்றுநோய் தாக்கப்பட்டு இறந்துபோகின்றனர். ஆனால் இந்தியாவின் ஜாதுகுடாவில் 95% பேர் இந்தியாவை ஒளிரவைக்க மரணத்தை முத்தமிடுகின்றனர். (பக்கம் 20)
ஆதாரம் ஏதும் குறிப்பிடவில்லை. யுரேனியச் சுரங்கத்தில் கதிர்வீச்சு ரேடான் வாயு வெளியாகும். இதனால் நுரையீரல் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் உள்ளன. அதுவும் சுரங்கத்தில் வேலை செய்பவர் புகை பிடிப்பவராகவும் இருக்கும்பட்சத்தில் புற்றுநோய் அதிகம் நிகழ்கிறது. உலகின் யுரேனியச் சுரங்கங்களில் ரேடான் வாயுவை வெளியேற்றும் சாதனங்கள் பொருத்தப்பட்டு, பல்வேறு ஐ.நா அமைப்புகளின் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றினால் புற்றுநோய் அதிகரிக்க வாய்ப்புகள் இல்லை. 50% சாவு என்பது முழுப் பொய்.

நிற்க. சர்வதேசத் தரத்துடன் ஒப்பிடும்போது ஜாதுகுடாவில் நிலைமை மோசமாக இருக்கலாம். இந்திய தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் கீழ்மட்ட ஊழியர்களை நடத்துவது சரியான முறையே அல்ல. அதுவும் படிக்காத, பின்தங்கிய பகுதிகளில் உள்ள மக்களை ஈ, எறும்பைப்போலத்தான் நடத்துவார்கள். ஆனாலும் 95% இறப்பு என்பதெல்லாம் சரியே அல்ல. இதற்கும் எந்த ஆதாரமும் சொல்லப்படவில்லை.

ஜாதுகுடா பற்றிய ஆவணப்படம் ஒன்றை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். அதனைப் பார்த்துவிட்டுப் பின்னர் அதைப்பற்றியும் எழுதுகிறேன்.

செர்னோபில் விபத்தில் எத்தனை பேர் இறந்தார்கள்?

முத்துக்கிருஷ்ணன் எழுதியுள்ள நூலில், செர்னோபில் அணு உலை விபத்தில்
1984 முதல் 2004 வரையிலான காலகட்டத்தில் 9,85,000 பேர் புற்றுநோயால் இறந்துவிட்டதை ரஷ்ய அரசு அறிக்கை ஒன்றில் உறுதி செய்கிறது
(பக்கம் 22) என்கிறார்.

ஐ.நாவின் பல அங்கங்களும், ரஷ்யா, பெலாருஸ், உக்ரைன் நாட்டின் அரசுகளும் இணைந்து 2006-ம் ஆண்டு வெளியிட்ட செர்னோபில் பற்றிய முழுமையான ஆவணம் அப்படி ஏதும் சொல்லவில்லை. அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கை (பக்கம் 14, 15)
நேரடியாக
1986-ல் கதிர்வீச்சுக் காயங்களால்: 28 பேர்
பிற வகையில் ஏற்பட்ட காயங்களால்: 2 பேர்
1987-லிருந்து 2004 வரை பல காரணங்களால்: 19 பேர் (ஆனால் அனைவரும் செர்னோபில் விபத்தின் காரணமாகத்தான் இறந்தனர் என்று சொல்ல முடியாது)
மறைமுகமாக
கேன்சர் அதிகரிப்பு - மிகக் குறைவான சதவீதம்
ஆனால் தைராய்ட் கேன்சர் அதிகரிப்பு - இளைஞர்கள், குழந்தைகளிடையே இருந்துள்ளது. 4,000-க்கு மேற்பட்ட தைராய்ட் கேன்சர் நோயாளிகள் கண்டறியப்பட்டனர். அதில் 15 பேர் இறந்தனர்.
மீதத்தை நீங்களே முழுதாகப் படித்துக்கொள்ளுங்கள்.

எண்ணிக்கை ஒன்று சொல்லப்படுகிறது. அதற்கு அடிக்குறிப்பு எதுவும் இல்லை. ஆனால் ரஷ்ய அரசே அப்படிச் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. அப்படி ஏதும் இல்லை, இறப்பு என்பது 100-ஐக்கூடத் தாண்டவில்லை என்பதை நான் மேலே கொடுத்துள்ள ஆவணம் காட்டுகிறது.

100 உயிர்கள் என்றாலும் உயிர்களே. அதற்கு செர்னோபில் முழுக் காரணம். ஆனால் இல்லாத, பொல்லாத எண்ணிக்கை எதற்கு?

கன நீர் மனித உயிரை பாதிக்குமா?

அணு உலையைக் கருத்திரீதியாக எதிர்ப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஒரு சிலர் இல்லாத பொல்லாத கருத்துகளை அறிவியல் தீவிரத் தன்மையோடு கொடுத்து, ஒன்றும் புரியாதவர்களைக் குழப்பப் பார்க்கிறார்கள்.

ஞாநி, ஏன் இந்த உலைவெறி? அணு உலைகள்- வரமா, சாபமா?- ஒரு கேள்வி பதில் தொகுப்பு என்ற சிறு நூலை எழுதியிருக்கிறார். அதில் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் இங்கே எழுதுகிறேன்.

அணுக்கள் பிளக்கும்போதோ சேரும்போது மூன்றுவகைக் கதிர்வீச்சுகள் நிகழ்கின்றன. ஆல்ஃபா, பீட்டா, காமா கதிர்கள். இதில் ஆல்ஃபா கதிர்கள் என்பவை ஹீலியம் அணுவின் உட்கரு (அதாவது இரண்டு புரோட்டான், இரண்டு நியூட்ரான் சேர்ந்த கனமான கோலிகுண்டு). பீட்டா கதிர்கள் என்பவை பெரும்பாலும் எலெக்ட்ரான்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். காமா கதிர்கள், எடையற்ற மின்காந்த அலைகள்.

எல்லாத் தனிமங்களின் எல்லா ஐசோடோப்புகளும் கதிர்வீச்சை வெளியிடாது. ஒரு சில ஐசோடோப்புகள் மட்டுமே வெளியிடும்.

ஹைட்ரஜனை எடுத்துக்கொண்டால் அதற்கு மூன்று ஐசோடோப்புகள் உள்ளன. அதிகம் காணப்படும் புரோட்டியம் எனப்படும் ஒரே ஒரு புரோட்டான் கொண்டது; டியூட்டிரியம் எனப்படும் ஒரு புரோட்டான், ஒரு நியூட்ரான் கொண்டது, டிரிட்டியம் எனப்படும் ஒரு புரோட்டான், இரு நியூட்ரான்கள் கொண்டது.

சாதா தண்ணீரில் புரோட்டியம்தான் அதிகம் இருக்கும். கன நீரில், புரோட்டியத்துக்கு பதில் கிட்டத்தட்ட 100% டியூட்டிரியம் இருக்கும். இதனால் கனநீரின் அடர்த்தி, சாதா நீரின் அடர்த்தியைவிட சுமார் 11% அதிகமாக இருக்கும். அவ்வளவுதான்.

இந்த டியூட்டிரியம் நிலையானது. அதாவது கதிர்வீச்சை வெளியிடாதது. கனநீரைக் கொஞ்சமாக உட்கொண்டால் மனிதர்களுக்கு ஒன்றும் ஆகாது. கனநீர் கலந்து பெயிண்ட் அடித்தால் சத்தியமாக சுவற்றுக்கு ஒன்றுமே ஆகாது. விக்கிபீடியாவில் பார்த்தீர்கள் என்றால், உடல் எடையில் உள்ள நீரில் சுமார் 25% அல்லது அதற்குமேல் கனநீர் போனால்தான் உடலுக்குப் பிரச்னை ஏற்படும் என்று போட்டிருப்பார்கள். ஒரு டம்ளர் குடித்தாலோ, அதில் பல் தேய்த்தாலோ ஒரு வித்தியாசமும் ஏற்படாது.

ஞாநி எழுதுகிறார்:

ராஜஸ்தான் உலையில் ஜூலை 1991ல் ஒரு கூடம் கட்டினார்கள். அதற்கு பெயிண்ட் அடிக்க வந்த மாதோலால் என்ற தொழிலாளி கலப்பதற்கு தண்ணீர் தேடினார். குழாயில் தண்ணீர் வரவில்லை. பீப்பாய் பீப்பாயாக கன நீர் வைத்திருந்தது. அந்தக் கதிரியக்கம் உள்ள கனநீரை தவறாக எடுத்து பெயிண்ட் அடிக்கக் கலந்தார். உலகிலேயே காஸ்ட்லியான பெயிண்ட்டிங் அதுதான். கன நீர் விலை பல லட்சம் ரூபாய்கள். வேலை முடிந்ததும் அந்த நீரிலேயே மோதிலால் முகம் கழுவினார். தகவல் தெரிந்ததும் அதிகாரிகள் வந்து பெயிண்ட் அடித்த சுவரில் கதிர்வீச்சு இருக்கும் என்பதால் அதை சுரண்டச் செய்தார்கள். மாதோலால் என்ன ஆனார் என்பது தெரியாது. கர்நாடக கைகா உலையில் 2009-ல் கதிரியக்கம் உள்ள டிரிட்டியம் கலந்த நீரைக் குடித்த 55 ஊழியர்கள் பாதிக்கப்பட்டார்கள்.

மேலே கனநீர் பற்றி உள்ளது, டிரிட்டியம் நீர் பற்றி உள்ளது. இரண்டையும் தனித்தனியாகப் பார்ப்போம்.

மாதோலாலுக்கு ஒன்றும் ஆகியிருக்காது. ஆனால் கனநீரை சும்மா யார்வேண்டுமானாலும் பயன்படுத்துமாறு வைத்திருந்த அதிகாரிகளை உதைக்கவேண்டும். பணத்தை இப்படியா வீணடிப்பது? அந்தச் சுவற்றில் கதிர்வீச்சும் இருக்காது, மண்ணாங்கட்டியும் இருக்காது. அதை அதிகாரிகள் நிஜமாகவே சுரண்டச் சொன்னார்கள் என்றால் அவர்கள் தலையில் மூளையும் இல்லை என்று சொல்லலாம். மேலும் பணம் வேஸ்ட்.

ஞாநி, அப்துல் கலாமை கனநீரால் முகம் கழுவச் சொல்கிறார். அதனால் கலாமுக்கு ஆபத்தில்லை. யுரேனியம் படுக்கையில் படுக்கச் சொல்கிறார். அது பாவம். தவறு.

அடுத்து டிரிட்டியம் நீர். டிரிட்டியம் கதிரியக்கத் தன்மை கொண்டது. ஹீலியம் ஐசோடோப்பாக மாறி, பீட்டா கதிர்களை வெளியிடும். பீட்டா கதிர்கள் நம் மேல் பட்டால் அதனால் பெரிய சிக்கல் ஒன்றும் இல்லை. ஆல்ஃபா கதிர்கள் என்றால் வேறு விஷயம். ஆனால் உட்கொண்டு, வயிற்றினுள் கதிரியக்கம் ஏற்பட்டால் அதனால் உடல் செல்கள் பாதிக்கப்படும். எனவே டிரிட்டியம் நீரை உட்கொண்டால் அதனால் கட்டாயம் பிரச்னை ஏற்படும். எனவே இது நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மேலும் கொஞ்சம் டிரிட்டியம் உள்ளே போனாலும் உயிரெல்லாம் போய்விடாது. இரண்டு வாரம் ஆஸ்பத்திரியில் இருந்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்துவிடலாம்.

பாரதியார் நினைவு தினம்

தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் மைலாப்பூர் ஆர்கே மாநாட்டு அரங்கத்தில் நேற்று பாரதியார் நினைவு தினம் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

பாரதியார் பாடல்கள் கச்சேரி, அதைத் தொடர்ந்து சென்னை கிறிஸ்தவக் கல்லுரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் பாலுசாமி பாரதியின் வாழ்க்கை பற்றிப் பேசினார்.

மிக நல்ல கச்சேரி. மிக நெகிழ்வான பேச்சு. பாலுசாமியின் உரை பற்றி மிக விரிவாக எழுதவேண்டும். உண்மையில் அந்த முழுப் பேச்சையும் எழுத்தில் கொடுக்கவேண்டும்.

நேற்றைய நிகழ்ச்சியை வீடியோவில் பார்க்கத் தவறியிருந்தீர்கள் என்றால், பதிவு செய்யப்பட்ட வீடியோ இங்கே உள்ளது.

Monday, September 10, 2012

கார்ட்டூனுக்காகக் கைது

இந்திய நாடாளுமன்றத்தையும் தேசியச் சின்னத்தையும் அவமதித்து கார்ட்டூன் வரைந்ததாக அசீம் திரிவேதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வரைந்த கார்ட்டூன்களை நான் இதுவரையில் பார்த்திருக்கவில்லை. கைது செய்தி கேட்டு இணையத்தில் தேடியதில், விக்கிபீடியாவில் இந்த இரண்டு கார்ட்டூன்களும் இருந்தன.

[விக்கிபீடியா படங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளதால் வரவில்லை. வேறு இடத்திலிருந்து லிங்க் கொடுத்துள்ளேன்.]
இப்படி கார்ட்டூன் போட்டதற்காகவெல்லாம் கைது செய்வார்களா என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் ஒருவகையில் சட்டத்தை ‘டெஸ்ட்’ செய்யவேண்டியது அவசியமாகிறது. இந்த வழக்கை வலுவான வக்கீல்கள் நடத்தி, வழக்கு தொடுக்கக் காரணமாக இருந்த மாநில அரசை சந்தி சிரிக்கவைத்து, கடுமையான அபராதம் விதிக்குமாறு செய்தால் நன்றாக இருக்கும்.

நாடாளுமன்றம், சட்டமன்றங்கள், பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என அனைவர்மீதும் நாட்டில் உள்ள யாருக்குமே நம்பிக்கை இல்லை என்பது தெளிவு. அவர்களைக் கேலி செய்யும் விதமாக உருவாக்கப்படும் கார்ட்டூன், ‘தேசம்’, ‘தேசியச் சின்னம்’, ‘தேசியக் கொடி’ ஆகிய அருவங்களைக் கேலி செய்வதாக ஆக்கி, ஏதோ அரதப் பழசான சட்டங்களைக் கையில் எடுத்து தண்டனை தரும் அளவுக்கு ஓர் அரசு செல்லுமானால் அந்த அரசு தூக்கி எறியப்படவேண்டிய ஒன்று.

முதலில் இந்த அபத்தங்களை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளவேண்டும். அதற்காக அசீம் திரிவேதி போன்றோர் சில காலம் சிறையில் இருக்கவேண்டியுள்ளது. அவருக்கு என் வந்தனங்கள்.

Friday, September 07, 2012

பாரதி நினைவு தினப் பேச்சு

11 செப்டெம்பர் 2012 அன்று மாலை, மகாகவி பாரதியின் நினைவாக, தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறது. மாலை 5.30 முதல் 7.40 வரை செல்லும் இந்த நிகழ்ச்சியில் இரண்டு பகுதிகள். முதல் ஒரு மணி நேரம், பாரதியாரின் பாடல்கள் இசைக்கச்சேரி நடைபெறும். அடுத்த ஒரு மணி நேரம், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் பேராசிரியர் பாலுசாமி, ‘பாரதி என்ற மானுடன்’ என்ற தலைப்பில் பேசுகிறார்.

இடம்: ஆர்கே கன்வென்ஷன் செண்டர், மூன்றாம் மாடி, 146, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மைலாப்பூர், சென்னை 4, போன் 2466 1130, 93810-36816

இந்த நிகழ்ச்சி, இணையம் வாயிலாக நேரடி ஒளிபரப்பாகவும் வரும். நேரில் கலந்துகொள்ள முடியாதவர்கள் இந்த இணைய முகவரியில் இதனைப் பார்க்கலாம்/கேட்கலாம்: http://www.arkayconventioncenter.in/live.aspx

Saturday, September 01, 2012

சஹாராவின் தில்லாலங்கிடி

இந்திய கிரிக்கெட்டின் வெகு நாளைய ஸ்பான்சர் என்பதால் இந்தியாவெங்கும் அறியப்பட்டுள்ள சஹாரா நிறுவனத்துக்குக் கடுமையான கண்டனம் உச்ச நீதிமன்றத்திடமிருந்து வந்துள்ளது. அதன் இரு நிறுவனங்கள் மக்களிடமிருந்து பெற்றதாகச் சொல்லப்பட்டுள்ள கிட்டத்தட்ட 25,000 கோடி ரூபாயை உடனடியாக மக்களுக்குத் திருப்பித் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சஹாரா நிறுவனம் எப்படி ஆரம்பித்தது, அதற்கான பண முதலீடுகள் யாரிடமிருந்தெல்லாம் வந்துள்ளன என்பது குறித்து சரியான தகவல்கள் யாரிடமும் இல்லை. ஒரு non-banking finance corporation (NBFC) என்ற முறையில் சஹாரா உத்தரப் பிரதேச மக்களிடமிருந்து நிறையப் பணத்தை முதலீடாகப் பெற்று, அதன்மூலம் வளர்ந்துள்ளது. அவர்களுடைய பணம் எங்கிருந்து வந்துள்ளது என்பது மட்டுமல்ல, எங்கெல்லாம் போகிறது, எப்படி புதுப்புது நிறுவனங்கள் முளைக்கின்றன என்பதும் யாருக்கும் தெரியாது.

சஹாரா குழும நிறுவனமான சஹாரா இந்தியா ஃபைனான்ஷியல் கார்பொரேஷன் லிமிடெட் என்னும் NBFC, தன் செயல்பாட்டை நிறுத்தவேண்டும் என்று ரிசர்வ் வங்கி 2008-ல் ஆணையிட்டது. இதனை எதிர்த்து வழக்கு தொடுத்த சஹாரா உச்ச நீதிமன்றத்தில் தோல்வி அடைந்தது. நிறுவனத்தில் பணம் போட்டவர்கள் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ரிசர்வ் வங்கி, இந்த நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்படவேண்டும் என்று இறுதித் தீர்வை வைத்தது. அதன் தகவல்கள் இங்கே.

ரிசர்வ் வங்கி ஏன் இந்த நிறுவனத்தை இழுத்து மூட முற்பட்டது?

இந்நிறுவனத்தை ஆராய்ந்த ரிசர்வ் வங்கி, இந்நிறுவனம் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வந்ததைக் கண்டுபிடித்தது. முதலாவதாக, மக்களிடம் பெற்றுள்ள வைப்புத் தொகைக்குக் கொடுக்கவேண்டிய குறைந்தபட்ச வட்டியைக் கொடுக்கவில்லை. வைப்பு நிதி முற்றியதும் வாடிக்கையாளருக்குத் தகவல் தெரிவிக்காமல் அந்த நிதியைத் தன் சொந்தக் காரியங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டது. ஒரு வங்கியல்லாத நிதி நிறுவனம் நிதியை எம்மாதிரி நிர்வகிக்கவேண்டும் என்ற விதிமுறைகளை சஹாரா நிறுவனம் பின்பற்றவில்லை. யார் யார் வைப்பு நிதி அளித்துள்ளார்கள் என்பது பற்றிய தகவல்களை (KYC) அது சரியாக வைத்திருக்கவில்லை. (எனவே பணம் பல்வேறு அரசியல்வாதிகளுடைய அல்லது நிழலுலக நபர்களுடைய பினாமி பணமாக இருக்கலாம் என்று ரிசர்வ் வங்கி சந்தேகித்தது.)

அப்படியெல்லாம் இந்த நிறுவனம் சேகரித்திருந்த தொகை எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட 20,000 கோடி ரூபாய்!

ரிசர்வ் வங்கியின் கட்டளை சரியானது என்று உச்ச நீதிமன்றமும் சொன்னவுடன், சஹாராவுக்கு வேறு வழி இருக்கவில்லை. பணத்தை மக்களுக்குத் திருப்பித் தர ஒப்புக்கொண்டது.

ஆனால் அடுத்த தில்லாலங்கிடி வேலையில் இறங்கியது. சஹாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்பொரேஷன், சஹாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மெண்ட் கார்பொரேஷன் என்ற இரண்டு நிறுவனங்கள் மக்களிடமிருந்து புதுவகையாகப் பணம் திரட்ட முற்பட்டனர். ஏற்கெனவே மக்களிடமிருந்து வைப்பு நிதி வாங்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கியும் உச்ச நீதிமன்றமும் சொல்லிவிட்டபடியால், வேறு வகையில் பணம் பெற இவர்கள் முடிவு செய்தனர். ஒன்றும் தெரியாத அப்பாவி மக்களிடம் Optionally Fully Convetrtible Debenture என்ற வகைக் கடன் பத்திரங்களை வெளியிடுவதாகச் சொன்னார்கள்.

இந்தவகை டிபென்ச்சர்களைப் பெற்றுள்ளவர்கள், விரும்பினால் குறிப்பிட்ட காலத்தில் இந்தக் கடன் பத்திரங்களை இந்த நிறுவனத்தின் பங்குகளாக மாற்றிக்கொள்ளலாம். விரும்பாதவர்களுக்கு அவர்கள் செலுத்தியுள்ள தொகை திரும்பக் கொடுக்கப்பட்டுவிடும். அதுதவிர, இந்தக் கடன் பத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சதவிகிதம் வட்டியாக ஆண்டாண்டுக்குக் கிடைத்துக்கொண்டிருக்கும்.

இம்மாதிரியான பத்திரங்கள் வெளியிடுவதில் தவறே இல்லை. ஆனால் பொதுமக்களிடம் இந்த முறையில் பணம் சேகரிக்க, செபி (SEBI) என்ற பங்கு/கடன் பத்திர மாற்றுக் கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் சஹாரா இந்த அனுமதியைப் பெறவில்லை. அப்படிப்பட்ட அனுமதி தேவையில்லை என்று வாதிட்டது சஹாரா. இது பொதுப்பங்கு வெளியீடு என்ற வரைமுறைக்குள் வராது என்றது. ஆனால் தொடர்ந்து தீர்ப்பாயங்கள், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை அளித்துள்ள தீர்ப்புகள், இம்மாதிரியான பத்திரங்களை வெளியிடுவதைக் கட்டுப்படுத்தும் முழு உரிமை செபியிடம் உள்ளது என்பதை உறுதி செய்துள்ளன.

இங்கும் சஹாரா, யார் யார் பணம் கொடுத்துள்ளார்கள் என்ற முழு விவரத்தை அளிக்கவில்லை. அப்படிப்பட்ட விவரம் தன்னிடம் முழுமையாக இல்லை என்று சாதித்தது. அந்த விவரத்தைத் தரவேண்டிய அலுவலர்கள் விடுப்பில் போயிருக்கிறார்கள் என்றது. எனவே பணம் ‘ஒருமாதிரியான’ இடங்களிலிருந்து வந்திருக்கவேண்டும் என்பது தெளிவாகிறது. மேலும் உத்தரப் பிரதேச ஏழை மக்களுக்கு Optionally Fully Convertible Debenture என்றால் என்னவென்று தெரியும் என்று சஹாரா சாதிப்பது பெரும் ஜோக். ஹிந்து பத்திரிகையிலேயே ஓரிடத்தில் Optional, ஓரிடத்தில் Optimal என்றெல்லாம் இதன் ஸ்பெல்லிங்கைப் போட்டு சாத்துகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சஹாரா நிறுவனம் இரண்டுமுறை இதுபோன்ற சிக்கலில் மாட்டியுள்ளதைப் பார்க்கும்போது இந்தக் குழுமத்தின் அனைத்து நிறுவனங்களையும் சிபிஐ, என்ஃபோர்ஸ்மெண்ட் டைரெக்டரேட் போன்றவை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்று தோன்றுகிறது. இவர்கள் கையில் புரளும் பணம் எங்கிருந்து வந்துள்ளது, பொதுமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்களா, பினாமி பணம் யாருடையது என்பவையெல்லாம் உடனடியாகக் கண்டுபிடிக்கப்படவேண்டும்.

பெயர் தெரியாதவர்களுடைய பணத்தை அரசின் கணக்குக்கு மாற்றவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதிலிருந்து சஹாராவின் சுப்ரதோ ராயின் நண்பரும் தற்போது உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் தலைவருமான நபருக்குக் கொஞ்சம் கிலி பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.

இதுதான் ஒருவேளை காங்கிரஸ் கட்சியிடம் உள்ள துருப்புச் சீட்டோ, என்னவோ!

பத்மா சேஷாத்ரி / ஸீயோன் பள்ளிகள்


சென்ற மாதம் இரண்டு வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து இறந்துபோயின. தாம்பரத்தின் ஸீயோன் பள்ளி வாகனத்தில் சென்றுகொண்டிருந்த குழந்தை ஒன்று, பேருந்தின் ஓட்டைவழியாகக் கீழே விழுந்து அரைபட்டு இறந்துபோனது. கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியின் நீச்சல் குளத்தில் ஒரு மாணவன் மூழ்கி இறந்துபோனான்.

ஸீயோன் பள்ளியின் தாளாளர் ஓரிரு தினங்களுக்குள் கைது செய்யப்பட்டு, நேற்றுதான் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பத்மா சேஷாத்ரி பள்ளியின் தலைமை அலுவலர் கைது செய்யப்பட்ட உடனேயே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கவனக்குறைவு காரணமாக சம்பவிக்கும் மரணம் எனப்படும் வகையில் வரும் இந்தக் குற்றங்களுக்கு எது சரியான தண்டனை என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். ஆனால் இரு பள்ளிகளும் ஒரே மாதிரியாக நடத்தப்படவில்லை என்பது அனைவருக்கும் புரியவரும்.

நேற்று பத்திரிகையில் பத்மா சேஷாத்ரி பள்ளி மீதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள தகவல் இதனை மேலும் உறுதிப்படுத்தும்.

தரக்குறைவான வண்டியை ஒப்பந்தம் செய்தது ஸீயோன் பள்ளிமீதான குற்றச்சாட்டு. ஆனால் பத்மா சேஷாத்ரி பள்ளியில் நடந்துள்ளது மிகப்பெரிய குற்றம் என்பது இப்போது தெரியவருகிறது.

சி.பி.எஸ்.ஈ பள்ளிகளில் நீச்சல் என்பது கட்டாயப் பாடமில்லை என்று சி.பி.எஸ்.ஈ வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மற்றொரு பக்கம், பத்மா சேஷாத்ரி பள்ளி, மாநகராட்சி அனுமதியின்றி தன் வளாகத்துக்குள் நீச்சல் குளத்தைக் கட்டியுள்ளது. அத்துடன், இதனை அனுமதிக்குமாறு மாநகராட்சிக்கு அது அனுப்பிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆக, சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி அளிப்பதும் சட்டவிரோதமானதே என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கட்டட விதிமுறைகள் அல்லது மாநகராட்சி அனுமதிக்கு மாறாகக் கட்டடங்கள் கட்டிவிட்டு, பின்னர் அவற்றை ரெகுலரைஸ் செய்ய விண்ணப்பம் செய்வது என்பது தமிழகத்தில் தொடர்ந்து நடந்துவரும் செய்கை. பத்மா சேஷாத்ரி போன்ற பள்ளிகள் தாம் சட்டங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் என்பதாகவே நடந்துவருகிறார்கள். மாணவன் இறப்பு போன்ற ஈடு செய்யமுடியாத தவறு நேரும்போதுதான் இம்மாதிரியான தகவல்கள் வெளிவருகின்றன.

இவ்விரண்டு வழக்குகளையும் நான் தொடர்ந்து கவனித்துவரப்போகிறேன். அவற்றைப் பற்றி இங்கே எழுதவும் இருக்கிறேன்.

தமிழ்பேப்பரில் வழக்கறிஞர் சொக்கலிங்கம் எழுதிய கட்டுரை