Wednesday, August 31, 2005

விஜயேந்திர கஸ்தூரி ரங்க வரதராஜ ராவ் (1908-1991)

[18-06-2014 அன்று எடிட் செய்யப்பட்டது]

காஞ்சிபுரத்தில் பிறந்து தமிழகத்தில் சில வருடங்கள் பள்ளிக் கல்வி படித்து, மும்பையில் கல்லூரிக் கல்வி வரை படித்து, கேம்பிரிட்ஜ் பல்கலையில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்று, கல்வித்துறையில் பல வருடங்கள் ஆசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி, Delhi School of Economics-ஐத் தோற்றுவித்து, பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணிபுரிந்து, திட்டக்குழு உறுப்பினராக இருந்து, பின் காங்கிரஸ் சார்பாக பெல்லாரி (கர்நாடகா) தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகி, இந்திரா காந்தி அமைச்சரவையில் தரைப் போக்குவரத்து/ கப்பல் போக்குவரத்து அமைச்சராகவும், கல்வி அமைச்சராகவும் பணியாற்றிய VKRV ராவ் பற்றி நான் இதுவரையில் கேள்விப்பட்டிருக்கவில்லை.

அவரது முடிவுபெறாத சுயசரிதை நூல் சென்ற வாரம் கையில் கிடைத்தது.

பொதுவாக அறிவுஜீவிகள், தங்கள் கடைசிக்காலத்தில் அரசியலில் ஈடுபட்டது கிடையாது. சில விதிவிலக்குகள் உண்டு. இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஒருவர். மன்மோகன் சிங் ஒருமுறை தேர்தலில் நின்று தோற்றுப்போனார். அதன்பின் தேர்தலிலேயே நிற்காமல், மாநிலங்கள் அவை உறுப்பினராக - அதுவும் அசாம் வழியாக - வரவேண்டிய நிலைதான் அவருக்கு இருந்தது.

VKVR ராவ், மன்மோகன் சிங் போன்றவர்களுக்கு முன்னோடி. ராவ், தன் இளமைப் பருவத்தில் மிகக்கொடிய வறுமையைச் சந்தித்திருக்கிறார். அவரது தந்தையார் ஒரு ஜோதிடர். ஊர் சுற்றி. சரியான வருமானம் இல்லாதவர். ஆனால் தனது பல மகன்கள்/மகள்களில் இவர்தான் மிகப் பிரகாசமாக ஜொலிப்பார் என்று கணித்தாராம் (ஜோதிடத்தின் மூலமா, அல்லது வேறு உள்ளுணர்வின் வழியிலா என்று தெரியவில்லை). ராவ் கேட்டதும் விரும்பியதும் அவருக்குத் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருந்தது. சில காலம் தமிழகத்தில் கழித்தபின்னர் மும்பை சென்று அங்கு உயர்நிலைக் கல்வி கற்றார். சில கல்வி அறக்கட்டளைகள் அளித்த நன்கொடைதான் முழுக்க முழுக்க அவருடைய கல்விக் கட்டணத்துக்கும் உடைகளுக்கும் உதவியது. பள்ளிக் கல்வியை முடித்ததும் மும்பையிலேயே பொருளாதாரத் துறையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். “பிரிட்டிஷ் இந்தியாவில் வரிவிதித்தல்” என்ற தலைப்பில் ஒரு மிக முக்கியமான ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதினார்.

கேம்பிரிட்ஜ் பல்கலையில் சேர விரும்பினார். ஆனால் முனைவர் படிப்புக்காக இல்லாமல் மீண்டும் இளநிலைப் படிப்பில் சேர்ந்தார். அதற்குக் காரணம், தான் பொருளாதாரத் துறையில் இன்னமும் நிறையக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று அவர் நினைத்ததே. தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலையில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

இந்தியா வந்ததும் முதலில் ஆந்திரா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகவும், பின்னர் அகமதாபாத்தில் ஒரு கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார். பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியில் அமர்ந்தார். அந்த நேரத்தில் கொல்கொத்தாவில் கடும் பஞ்சம் காரணமாக ஏகப்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதனால் ராவ் தன் பல்கலைக்கழக வேலையிலிருந்து அனுமதி பெற்று, தேசிய உணவுப் பொருள் விநியோக வாரியத்தில் மூன்று வருடங்கள் வேலை செய்தார்.

பின் மீண்டும் தில்லி பல்கலைக்கழகம் வந்து London School of Economics போன்றே Delhi School of Economics என்ற, தனித்து இயங்கும் பொருளாதாரக் கல்விக்கழகத்தை நிர்மாணித்தார். இந்தியாவில் பொருளாதார உயர்கல்விக்கு வித்திட்டவரே ராவ்தான். இந்தியாவிலேயே முதலாவதாக இவரிடம்தான் பொருளாதார முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மாணவர்கள் சேர்ந்து படித்தனர். பல முக்கியமான பொருளாதார ஆசிரியர்களைத் தேடிப் பிடித்துவந்து தில்லி பொருளாதாரக் கழகத்தை இவர் பலப்படுத்தினார். பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆனார். துணைவேந்தர் பதவியை விட்டு விலகுவதற்கு முன்னால் Institute of Economic Growth (IEG) எனப்படும் கல்விக்கூடத்தை நிர்மாணித்தார்.

நேரு காலத்தில் திட்டக்குழுவில் உறுப்பினர் ஆனார்.

காங்கிரஸ் சற்றே ஆட்டம் கண்டிருந்த நிலையில், கட்சிக்குப் பலம் சேர்க்கவேண்டுமானால் அறிவுஜீவிகள் கட்சியில் சேரவேண்டும் என்று காமராஜ் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப ராவ் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அப்போதைய கர்நாடக முதல்வர் நிஜலிங்கப்பாவின் வேண்டுகோளின்படி கர்நாடகாவின் பெல்லாரி தொகுதியில் நின்றார். அங்கு போட்டியிட்ட சுதந்தரா கட்சி வேட்பாளரைத் தோற்கடித்தார். முதலில் இந்திரா காந்தி இவரை கேபினெட்டில் சேர்த்துக்கொண்டு வர்த்தக அமைச்சரகத்தைத் தருவதாகச் சொன்னார். ஆனால் பல குழப்பங்களுக்குப் பிறகு இரும்பு/எஃகு என்றாகி பின் கடைசியாகத் தரைப்போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து அமைச்சகம்தான் இவருக்குக் கிடைத்தது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு கேபினெட் மாற்றம் ஏற்பட்டபோது இவருக்குக் கல்வி அமைச்சகம் கிடைத்தது.

கல்வி பொதுப் பட்டியலில் இருப்பது. இப்போது மனிதவள மேம்பாட்டு அமைச்சரகத்தின்கீழ் வந்துவிட்டது. ஆனால் அப்போது கல்வி, தனி அமைச்சரகமாக இருந்தது. சிறந்த கல்வியாளரான ராவால் கல்வி அமைச்சராக இருந்தும் கல்வித் துறைக்கு உருப்படியாக ஒன்றுமே செய்ய முடியவில்லை. அடுத்த தேர்தல், வங்கதேசப் போரைத் தொடர்ந்து நடந்தது. அதிலும் ராவ் தன் தொகுதியில் வென்றார். ஆனால் இம்முறை இந்திரா காந்தி அவருக்கு அமைச்சர் பதவி எதையும் தரவில்லை.

ராவ் இதனைத் தனக்கு சாதகமாகவே எடுத்துக்கொண்டார். இந்த நிலையைப் பயன்படுத்திக்கொண்டு 1972-ல் Institute of Social and Economic Change (ISEC) என்னும் கல்விக்கூடத்தை பெங்களூரில் தொடங்கினார்.

அத்துடன் தேர்தல் எதிலும் பங்குகொள்ளாமல் அரசியலை விட்டு விலகினார்.

இந்தியாவின் தேசிய வருமானத்தை சரியாகக் கணிக்க, ராவ் 1930-களிலேயே ஒரு முறையை உருவாக்கினார். பின்வரும் வருடங்களில் அவரது முறைதான் பின்பற்றப்பட்டது. வரி விதித்தல் குறித்து தொடக்கம் முதலாகவே ஆராய்ச்சி செய்த ராவ், சோசியலிசத்தால் ஈர்க்கப்பட்டு நாட்டில் மக்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும் வண்ணம், அதிகம் சம்பாதிப்பவர்கள்மீது மிக அதிகமாக வரி விதிக்கவேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார். இதன் விளைவாக 1950-1980களில் இந்தியாவில் தொழில் வளர்ச்சி வெகுவாகப் பாதிக்கப்பட்டது. வரி ஏய்ப்பு பெருகியது.

ஆனால் ராவ் விவசாய வருமானத்தின்மீது வரி விதிக்கவேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவராக இருந்தார். அரசியல்வாதிகளோ அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ராவும்கூட, தேர்தலில் நிற்கும்போது தனது கொள்கையைச் சற்றே மாற்றிக்கொண்டு விவசாய வருமானத்தின்மீது வரி விதிக்கவேண்டியதில்லை என்று சொல்லிவிட்டார்.

ஒரு நிலைக்குமேல் ராவ் பொருளாதார ஆராய்ச்சிகளில் அதிகமாக ஈடுபடவில்லை. கல்லூரி முதல்வர், பல்கலைக்கழகத் துணைவேந்தர், கேபினெட் அமைச்சர், கல்விக்கூடங்களை நிர்மாணிப்பவர் என்று அவருடைய வாழ்க்கை செல்லத் தொடங்கியதால், ஆராய்ச்சி பின்னுக்குத் தள்ளப்பட்டது. இல்லாவிட்டால் பின்னால் வந்த அமர்த்யா சென் போல ராவும் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றிருக்கக்கூடும்.

இந்தியாவில், இந்தியர்களுக்குப் பயன்படுமாறு இருக்கவேண்டும் என்பதற்காக சர்வதேச நிதியம், ஐ.நா சபை ஆகியவற்றிலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் தனக்குக் கிடைத்த வேலை வாய்ப்புகளைத் தூக்கி எறிந்தவர் இவர்.

இன்று இவர் பேர் சொல்லும் வகையில் பொருளாதாரத் துறையில் மூன்று கல்விக்கூடங்களும் ஆராய்ச்சிச் சாலைகளும் உள்ளன.

The partial memoirs of VKRV Rao, Edited by SL Rao, Oxford University Press, 2002, Pages: 288, Hardbound, Price: Rs. 1,300

Tuesday, August 30, 2005

9/11 தாக்குதல் சந்தேகங்கள்

9/11 முடிந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. இதைக் காரணம் காட்டியே ஆப்கனிஸ்தான், ஈராக் மீது படையெடுத்த ஜார்ஜ் புஷ், நியோகான்கள், இன்னமும் அடுத்து யாருடன் சண்டை போடலாம் என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே அமெரிக்காவில் சிலர் 9/11 அல்-கெய்தாவினால் மட்டும்தான் நிகழ்த்தப்பட்டதா அல்லது அதிலும் நியோகான்கள் கைவரிசை உண்டா என்னும் சந்தேகத்தினை எழுப்பியுள்ளனர். இதற்கென ஓர் இணையத்தளத்தை உருவாக்கி தங்களுக்குள்ள சந்தேகங்களை அங்கு எழுப்புகின்றனர். இந்தச் சந்தேகங்களை முன்வைக்கும் Confronting the Evidence என்னும் டிவிடியைத் தயாரித்து இலவசமாக அளிக்கின்றனர்.

பிரான்ஸில் இருக்கும் வலைப்பதிவு வாசகர் ரவியா இந்த டிவிடியை வாங்கி எனக்கு அனுப்பி வைத்திருந்தார் (ஃப்ரெஞ்சு சப்டைட்டில்களுடன் கூடியது!). டிவிடி வந்த சில நாள்கள் கொஞ்சம் அசிரத்தையாக இருந்துவிட்டேன். பின் பொழுதுபோகாத ஒரு வார இறுதியில் இந்த டிவிடியைப் போட்டுப் பார்த்ததில் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். பல உலக நிகழ்வுகளில் உள்ளதாகச் சொல்லப்படும் Conspiracy theoryகள் பலவற்றையும் கேட்டு, புறந்தள்ளியிருந்தாலும், இந்தக் குறிப்பிட்ட டிவிடி நிஜமாகவே அதிர வைத்தது. கிட்டத்தட்ட 2.30 மணிநேரம் ஓடும் இந்த விடியோவை நடுவில் நிறுத்த யாருக்கும் மனது வராது.

இதை நான் பா.ராகவனுக்கும் போட்டுக் காண்பித்தேன். அதன் தொடர்ச்சியாக ராகவன் இந்த வார விகடனில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். படித்த வாசகர்கள் பலரும் டிவிடியின் பிரதி கிடைக்குமா என்று விகடன் அலுவலகத்தை முற்றுகை இடுவார்கள் என நினைக்கிறேன்.

இந்த டிவிடியில் என்ன உள்ளது என்பதை மேற்படி இணையத்தளத்திலேயே பார்க்கலாம். சுருக்கமாக:

1. பெண்டகனில் மோதியதாகச் சொல்லப்படும் விமானம் (போயிங் 757) நிஜமாகவே மோதியிருந்தால் அது ஏற்படுத்தியதாகச் சொல்லப்படும் துளையைவிடப் பெரிதான ஒரு துளையை ஏற்படுத்தியிருக்கவேண்டும். எனவே இந்தத் துளை/சேதம் வேறுவகையில் ஏற்படுத்தப்பட்டிருக்கவேண்டும். அப்படியானால் அந்த விமானத்துக்கு என்ன நடந்தது? அதில் இருந்தவர்கள் என்னவானார்கள்? பெண்டகன் அருகில் போயிங் விமானத்தின் எந்த பாகங்களுமே கிடைக்கவில்லையாமே? விமானம் மோதினால் அதில் உள்ள எரிபொருள் பற்றி எரியும்போது அருகில் இருக்கும் எதுவுமே பிழைக்காது. ஆனால் விடியோ படங்களைக் கூர்ந்து கவனித்தால் அருகில் ஒரு மேஜை, நாற்காலி, அதன்மேல் திறந்தபடி இருக்கும் புத்தகம் என்று பலவும் எரியாமல் உள்ளன. விமானத்தின் கறுப்புப்பெட்டி கூட எரிந்து காற்றோடு காற்றாகிப் போனதாகச் சொல்லும் நிர்வாகம், உடல்கள் அனைத்தும் கிடைத்தன என்றும் அவற்றின் அடையாளங்கள் காணப்பட்டு ஒவ்வொருவரும் யார் யார் என்று கண்டறியப்பட்டனர் என்றும் சொல்கிறார்களே, அது எப்படி?

2. உலக வர்த்தக மையக் கட்டடம் விமானங்கள் மோதியதால் சிதறி விழுந்ததா அல்லது வெடி வைத்துத் தகர்க்கப்பட்டதா? இதுபற்றி நிறைய உரையாடல், சாட்சியங்கள் டிவிடியில் உள்ளன.

3. உ.வ.மை விழுந்தபின்னர் அங்குள்ள தடயங்கள் அவசர அவசரமாக அகற்றப்பட்டதற்குக் காரணமென்ன?

4. சம்பவம் நடக்கப்போகும் நாள் முன்கூட்டியே புஷ் அரசுக்குத் தெரியுமா? அன்று ஏதோ காரணங்களால் அமெரிக்கப் போர் விமானங்கள் பலவும் அலாஸ்கா, கனடா வான்வெளியில் போர்ப்பயிற்சிக்கென அகற்றப்பட்டதாகவும், இருக்கும் விமானங்களும் கடத்தப்பட்ட விமானங்களைத் தாக்காவண்ணம் குழப்பமளிக்கும் தகவல்கள் தரப்பட்டதாகவும் சில கருத்துகள் நிலவுகின்றன. FAA சரியாக நடந்துகொள்ளவில்லை என்று அதன்மீது வேண்டுமென்றே குற்றம் சுமத்தப்படுகிறது.

5. 9/11 கடத்தல்காரர்கள் என்று சொல்லப்படுபவரில் நான்கு பேர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனராம்! (இதுபற்றிய பிபிசி செய்தி இதோ!) அப்படியானால் யார்தான் இந்தக் கடத்தலைச் செய்தது?

6. நியோகான்கள் 'புது பேர்ல் ஹார்பர்' ஒன்று நடந்தால்தான் அமெரிக்கப் பாதுகாப்புக் கொள்கை தாங்கள் விரும்பியவாறு மாற்றம் அடையும் என்றும் சொல்லியுள்ளனர். (Rebuilding America's Defenses, Strategy, Forces and Resources for a new century (PDF), Page 51) உ.வ.மை தான் அந்தப் 'புது பேர்ல் ஹார்பரா'?

அமெரிக்காவில் பெரும்பான்மை மீடியாக்களில் இந்த விவகாரம் பற்றி அவ்வளவாகத் தகவல்கள் ஏதும் இல்லையாமே?

(சென்னையில் இருப்பவர்களுக்கு - வேண்டுமென்றால் இந்த டிவிடியைச் சில படிகள் எடுத்து வைக்கிறேன். விரும்புபவர்கள் என்னிடமிருந்து பெற்றுக்கொண்டு பார்க்கலாம். புது டிவிடி பிளேயர்களில் பார்க்கலாம். கணினியில் விண்டோஸ் மீடியா பிளேயரில் divx என்னும் pluginஐ நிறுவிப் பார்க்கலாம். டிவிடி வேண்டுபவர்கள் தனியஞ்சல் அனுப்புங்கள். பின்னூட்டம் இட வேண்டாம்.)

Sunday, August 28, 2005

புத்தகங்கள் பற்றி குடியரசுத் தலைவர் கலாம்

தில்லி, பிரகதி மைதானில் 11வது புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்து குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை: Celebrate the Book, the Author and the Reader

ஒரு புத்தகப் பதிப்பாளராக, குடியரசுத் தலைவர் சொல்லிய பலவும் சந்தோஷத்தைத் தருகிறது. ஒரு விஷயம் - முழுவதுமாகத் தெரியாததால் - சற்றே யோசிக்க வைக்கிறது.
குடியரசுத் தலைவர் மாளிகையின் நூலகத்தில், இந்நாட்டின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் பல நூல்களும் சுதந்தரத்துக்கு முந்தைய ஆட்சியாளர்கள் விரும்பிச் சேர்த்த நூல்களும் உள்ளன. இதுவரையில் குடியரசுத் தலைவர்களாக இருந்தவர்களும் பல நூல்களை இந்த நூலகத்தில் சேர்ப்பித்துள்ளனர். இந்த நூல்களை உலகில் உள்ள அனைவரும் அடையுமாறு செய்வதே எங்கள் நோக்கம். இந்த நோக்கத்தை அடைய குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள நூல்களை முழுவதுமாக டிஜிடைஸ் செய்யத் தொடங்கியுள்ளோம். இதுவரையில் கிட்டத்தட்ட 7,000 புத்தகங்கள், 50 லட்சம் பக்கங்களை டிஜிடைஸ் செய்துள்ளோம். கூடிய விரைவில் இவற்றை இணையத்தில் சேர்ப்பிக்க உள்ளோம்.
ஒரு வாசகனாக சந்தோஷம் அடைய வைக்கும் செய்தி இது. அதே நேரம் இந்த கணினிமயமாக்கல் நடக்கும்போது காப்புரிமைகள் மீறப்படாமல் இருக்கும் என்று நம்புவோம்.

நம் நாட்டில் புத்தகங்கள் பலவும் அனைவருக்கும் படிக்கக் கிடைக்கவேண்டும். அதே நேரம் ஏதாவது வழியில் நியாயமான அளவு பணம் பதிப்பாளருக்கும் எழுத்தாளருக்கும் சென்று சேரவேண்டும். மத்திய/மாநில அரசுகள் ஒன்றுசேர்ந்து புதிதாகப் பதிப்பாகும் அத்தனை புத்தகங்களும் இணையம் வழியாகக் கிடைக்கப்பெறும் ஒரு டிஜிட்டல் நூலகத்தில் சென்று சேருமாறு செய்யலாம். இந்த நூலகத்திலிருந்து பக்கங்களைப் படிக்க அனைத்து "குடிமக்களுக்கும்"* உரிமை உண்டு. ஆனால் எந்தப் புத்தகத்தில் எத்தனை பக்கங்கள் படிக்கப் பெறுகின்றன என்பதை வைத்து பதிப்பாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை சென்று சேருமாறு செய்யலாம். அதிலிருந்து ராயல்டி தொகை எழுத்தாளருக்குப் போய்ச் சேரவேண்டும். சில நேரங்களில் சில எழுத்தாளர்கள் பதிப்புரிமை தரும்போது அச்சுப் புத்தகங்களுக்கான பதிப்புரிமையை மட்டும்தான் தருவார்கள். (கிழக்கு பதிப்பகத்தின் ஓர் எழுத்தாளர் அச்சு உரிமையை மட்டும்தான் எங்களுக்குக் கொடுத்துள்ளார். பிறர் அனைவரும் கணினி/இணையம் வழியாக எழுத்துக்களை விற்பனையாக்கும் உரிமையையும் கொடுத்துள்ளனர்.) அப்படியாயின், அரசு நேரடியாக எழுத்தாளரிடமிருந்தே கணினியாக்கும் உரிமையைப் பெற வேண்டியிருக்கும்.

அதே நேரம் காப்புரிமை விட்டுப்போன பல நூல்கள் இருக்கின்றன. அவற்றை யார் வேண்டுமானாலும் அச்சிலோ, இணையத்திலோ படி எடுக்கலாம்.

---

அரசு வரி வருமானத்தில் உருவாகும் இந்தத் திட்டம் உலக மக்கள் அனைவருக்கும் போய்ச்சேரவேண்டுமா அல்லது நாட்டு மக்களுக்கு மட்டும்தானா என்ற கேள்விகள் எழலாம். உலகத்துக்கு எனப் பொதுவாகப் போவதே சரியானது. இந்தியாவில் தயாராகும் எழுத்துகள் பலவும் இந்திய மொழிகளிலேயே இருக்கும்போது அதைப் பயன்படுத்தும் வெளிநாட்டவர் பெரும்பாலும் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து சென்றவராகத்தான் இருப்பார். ஆங்கிலப் புத்தகங்களை அனைவருமே உபயோகிக்க முடியும்.

Wednesday, August 24, 2005

பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு...

சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து பல விவாதங்கள் எழுந்துள்ளன.

தீர்ப்பின் சில முக்கிய அம்சங்கள்:

* தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டியதில்லை.
* அரசு தன்னுடைய இட ஒதுக்கீட்டுக் கொள்கையை தனியார் கல்லூரிகள் மீது திணிக்க முடியாது.
* அரசு தனியார் கல்லூரிகளின் கட்டணங்கள் இவ்வளவுதான் என்று விதிக்க முடியாது. (ஆனால் தனியார் கல்லூரிகளின் கட்டணங்களைக் கட்டுப்படுத்த என்று கமிட்டி/வாரியம் ஒன்றைக் கொண்டுவரலாம்.)
* அரசினால் தனியார் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை முறையைத் தீர்மானிக்க முடியாது. தனியார் கல்லூரிகள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு நுழைவுத் தேர்வை நடத்திக்கொள்ளலாம். இந்த நுழைவுத் தேர்வு/சேர்க்கை முறையைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் அரசுகள் கமிட்டி/வாரியங்களை ஏற்படுத்தலாம்.

இந்தத் தீர்ப்பை ஒருமனதாக வழங்கும்போது நீதிபதிகள் அரசியல் நிர்ணயச் சட்டத்தையும் TM பாய் தீர்ப்பில் 11-நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பையும் விட்டு விலகாத வண்ணம் தீர்ப்பு அளிக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. நீதிபதிகள் சில இடங்களில் மத்திய மாநில அரசுகள் சரியான முறையில் சட்டங்களை இயற்றாத காரணத்தால் நீதிமன்றம் இருக்கும் சட்டங்களை வைத்து தீர்ப்புகளை வழங்கவேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் தீர்ப்பு வந்த நாள் முதலாக அரசியல்வாதிகள் நீதிபதிகளைக் குறை சொல்லியும், இந்தத் தீர்ப்பை மாற்றும் வண்ணம் சட்டம் இயற்றுவோம் என்று சூளுரைத்தும் வருகின்றனர். இதன் விளைவாக அரசியல்வாதிகள் தங்களுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் ஒரு பெரிய போராட்டம் நடப்பதைப் போலக் காட்டிக்கொள்ள முனைகின்றனர். இது உச்ச நீதிமன்ற நீதிபதி லாஹோதியினை வருந்த வைத்துள்ளது. "வேண்டுமானால் நீதிமன்றங்களையே இழுத்து மூடிவிடுங்கள்" என்று அவர் சொல்லும் அளவுக்கு "confrontation", "precipitation" போன்ற வார்த்தைகளை கட்சித் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் அவர்களது வக்கீல்களும் பிரயோகித்து வருகின்றனர்.

இப்படியான நிலைமையில் சரியான விவாதங்கள் நிகழ முடியாது.

தனியார் கல்லூரிகளை எந்த அளவுக்குக் கட்டுப்படுத்தவேண்டும் என்பது பற்றி சட்டங்கள் இயற்றப்படவில்லை. எனவே சட்டங்கள் தேவை. இதைத்தான் நீதிமன்றமும் சொல்லியுள்ளது. ஆனால் அப்படி இயற்றப்படவேண்டிய சட்டங்கள் எப்படி இருக்கவேண்டும்?

1. தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு நியாயமானது. அதில் கிட்டத்தட்ட அனைவருமே ஒற்றுமையான எண்ணத்தை வைத்துள்ளனர். நீதிபதிகள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் என்று சித்திரிக்கப்படுவது நியாயமல்ல. நீதிபதிகள் எதற்கும் சார்பானவர்களும் இல்லை, எதிரானவர்களும் இல்லை. சரியான சட்டம் இல்லாதவரை தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டினைத் திணிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றுதான் அவர்களது தீர்ப்பு சொல்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதன் மூலம் இதனைச் சரி செய்ய முடியும். அப்படிச் செய்யும்போது கவனமாகச் செய்தால் அந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து யாரும் மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்காமல் செய்யமுடியும். அவசரகதியாகச் செய்தால் அதனால் யாருக்கும் நன்மையில்லை.

2. தனியார் கல்லூரிகளின் நுழைவுத் தேர்வுகள், சேர்க்கை முறையை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல்: அரசு இயற்றும் சட்டங்கள் மூலமாக இதைக் கட்டுப்படுத்த முடியாது என்றே தோன்றுகிறது. அப்படி ஏதேனும் கட்டுப்பாடு வந்தால் அது உச்ச நீதிமன்றம் சென்று தோல்வியைத்தான் தழுவும்! அவ்வாறு செய்யாமல் தனியார் கல்லூரிகளிடமே சேர்க்கை முறையை விட்டுவிடலாம். ஆனால் அந்தச் சேர்க்கை முறை நியாயமான வகையில் செயல்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஒரு குழுவை நியமித்தால் போதுமானது என்று தோன்றுகிறது.

3. கல்விக் கட்டணத்தைத் தீர்மானித்தல்: இதுவரையில் கல்விக் கட்டணங்களை அரசே தீர்மானித்து வந்தது. இதைத் தனியார் கல்லூரிகள் கடுமையாக எதிர்த்தன. இவ்வாறு கட்டணத்தைத் தீர்மாணிக்கக்கூடிய அதிகாரம் அரசுக்குக் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இப்பொழுது கொண்டுவரும் சட்டத்திருத்தத்தில் அரசு தனியார் கல்லூரிகளின் கட்டணங்களைத் தீர்மானிக்காமல், TRAI போன்ற கட்டுப்பாட்டு வாரியம் ஒன்றின் மூலமாக கட்டணத்தைக் கட்டுப்படுத்தினால் போதும்.

அதாவது ஒரு செமஸ்டருக்கு ரூ. 13,000 தான் (ஒரு பேச்சுக்கு) கட்டணம் வைக்கலாம் என்று சொல்லாமல், ஒவ்வொரு கல்லூரியையுமே கட்டணத்தைத் தீர்மானிக்கச் சொல்லலாம். ஆனால் ஒவ்வொரு கல்லூரியும் அந்தக் கட்டணத்தை முன்கூட்டியே கட்டுப்பாடு வாரியத்திடம் அளிக்க வேண்டும். எதனால் அதிகக் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பது வெளிப்படையாக இருக்கவேண்டும். அதாவது ஒரு கல்லூரி தான் உலகத் தரத்தில் நூலக வசதி கொடுக்கப்போவதாகவும் அதற்கென வருடம் ரூ. 2,500 அதிகமாக வசூலிக்கப்போகிறேன் என்றும் சொன்னால் அது ஏற்கக்கூடியதாக இருந்தால் அதற்கான அனுமதி தரப்படவேண்டும். அதேபோல முழுவதுமாக ஏர்கண்டிஷன் செய்யப்பட்டதாகக் கல்லூரி அறைகள் இருக்கும் என்றும் அதற்காக வருடத்துக்கு ரூ. 10,000 அதிகம் வசூலிக்கப்போகிறோம் என்றும் ஒரு கல்லூரி சொன்னால் அது ஏற்கக்கூடியதாக இருந்தால் அதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

மாணவர்கள் தங்களுக்கு வேண்டிய கல்லூரியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்போது அந்தக் கல்லூரியின் கட்டணம் தமக்குக் கட்டுப்படியாகுமா என்பதையும் முடிவுசெய்துகொள்ளலாம். அமெரிக்காவில் தனியார் கல்லூரிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கட்டணத்தை வசூலிக்கிறார்கள். அதை யாரும் கட்டுப்படுத்துவதில்லை. நாளடைவில் இந்தியாவிலும் கல்லூரிக் கட்டணத்தைக் கட்டுப்படுத்த என்று யாரும் இருக்கக்கூடாது. ஆனால் இன்று அப்படிச் சொன்னால் என்னை அடிக்கவருவார்கள்.

இட ஒதுக்கீட்டிலோ அல்லது அல்லாமலோ வரும் மாணவர்களால் கல்விக் கட்டணத்தைக் கொடுக்கமுடியாது என்ற நிலை வருமானால் அரசு மான்யமாகவோ கடனாகவோ மாணவர்களுக்கு உதவி செய்யலாம். அதை விடுத்து தனியார் கல்லூரிகளில் இவ்வளவுதான் கட்டணம் இருக்கவேண்டும் என்று முடிவு செய்தால் பல கல்லூரிகள் (1) இழுத்து மூடுவார்கள் அல்லது (2) சட்டத்துக்குப் புறம்பாக, அடாவடித்தனம் மூலம் ரசீது கொடுக்காமல் பணம் வசூலிப்பார்கள். இரண்டுமே நாட்டுக்குக் கெடுதல்.

சத்யா கல்விக்கட்டணம் பற்றி Financial Express-ல் எழுதியுள்ள கட்டுரை இங்கே: State control over fee cap is simply untenable

Monday, August 22, 2005

ஈரோடு புத்தகக் கண்காட்சியில் வாங்கியவை

1. வெற்றிப்படிகள், வானதி திருநாவுக்கரசு, வானதி பதிப்பகம், முதல் பதிப்பு: ஜூலை 1997, இப்பொழுதைய பதிப்பு: மூன்றாம் பதிப்பு, நவம்பர் 2000, பக்: 418, விலை ரூ. 75

வானதி பதிப்பகத்தைத் தோற்றுவித்த திருநாவுக்கரசு செட்டியாரின் சுயசரிதை. வாழ்க்கை வரலாறுகள் என்ற வகையில் மோசமாக எழுதப்பட்டது. திடீரென வாழ்க்கைக் கதையிலிருந்து தான் சந்தித்த மனிதர்கள் என்று தாவுகிறது. சொல்லாமல் விடப்பட்டது நிறைய. தமிழின் மிக முக்கியமான பதிப்பகத்தை உருவாக்கியவர் இன்னமும் கவனமாக தனது வாழ்க்கைக் கதையை எழுதியிருக்கலாம். இந்தத் துறையில் ஈடுபட விரும்பும் பலருக்கும் உதவியாக இருந்திருக்கும். ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆனாலும் நிறைய சுவையான செய்திகள் கிடைக்கின்றன.

ஆங்கில மொழியாக்கத்திலும் இந்தப் புத்தகம் கிடைக்கிறது. ஆங்கில மொழியாக்கம் கேவலமாக இருக்கிறது.

2. சோளகர் தொட்டி, ச.பாலமுருகன், வானம் வெளியீடு, முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2004, இப்பொழுதைய பதிப்பு: மூன்றாம் பதிப்பு, மார்ச் 2005, பக்: 240, விலை ரூ. 100

பவானியை ஒட்டிய காடுகளில் வசிக்கும் பழங்குடியினரின் வாழ்க்கை, இந்தப் பழங்குடிகளை எவ்வாறு 'நாகரிக' மாந்தர்கள் சுரண்டுகின்றனர், சந்தன, தந்தக் கடத்தல் வீரப்பனால் அலைக்கழிக்கப்படும் பழங்குடியினர், பின் தமிழக, கர்நாடக காவல்துறையினரால் சீரழிக்கப்படும் பழங்குடியினர் என்று ஆவணமாக இருக்கும் நாவல். கதை என்னும் வடிவத்தில் ஏகப்பட்ட குறைகள் இருந்தாலும் பின்னணியில் இருக்கும் உண்மை உயிரை உலுக்குகிறது. நாம் மனிதர்களாக நடந்துகொள்ளாததற்கு என்ன காரணம் என்று யோசிக்க வைக்கிறது.

நண்பர்கள் மூலம் இலவசமாகக் கிடைத்தவை:

3. வானம் வசப்படும், கவிஞர் செல்ல கணபதி, விஜயா பதிப்பகம், முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2000, என்னிடம் இருக்கும் பதிப்பு: இரண்டாம் பதிப்பு, அக்டோபர் 2001, பக்: 112, விலை ரூ. 25

பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தை உருவாக்கிய பழனியப்பா செட்டியாரின் வாழ்க்கை வரலாறு. முழுமையான வரலாறு என்று சொல்வதை விட அவசரமாக எழுதப்பட்ட புகழுரை என்று சொல்லலாம். நிறைய விஷயங்கள் விடுபட்டுள்ளன. ஆனால் பல சுவையான விஷயங்கள் இங்கும் கிடைக்கின்றன. ஐயம்பெருமாள் கோனார் - பழனியப்பா செட்டியார் நட்பு, சிறுவர் புத்தகங்களை உருவாக்குவது. அதற்கும் மேல்.

எத்தனை பேருக்குத் தெரியும், பழனியப்பா செட்டியார் Asian Bearing Limited எனும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார் என்று? GMC Tiles Limited? சுமாரான படிப்பறிவு இருந்தாலும், புத்தக லாபத்தைப் பிற பொறியியல் துறைகளில் தைரியமாக முதலீடு செய்தவர். இவரைப் பற்றி அதிகமாக, முழுமையாகத் தெரிந்துகொள்ள ஆவலைத் தூண்டுகிறது!

மேற்குறிப்பிட்ட மூன்றையும் படித்து முடித்துவிட்டேன்.

படிக்க வேண்டியது:

4. Nano, The next revolution, Mohan Sundara Rajan, National Book Trust, 2004, Pages: 192, Price: 75, ISBN 81-237-4305-X

சென்னைக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

இன்று சென்னைக்குப் பிறந்தநாள்! ஆமாம்... 1639, ஆகஸ்ட் 22 அன்று விஜயநகர அரசிடமிருந்து சில இடங்களை ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி வாடகைக்கு எடுத்துக்கொள்வதற்காக, விஜயநகர ஆட்சியின் கவர்னரும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் ஆண்டிரு கோஹெனும் ஒப்பந்தம் செய்துகொண்டனர். அதன்படி இப்பொழுது ஃபோர்ட் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை இருக்கும் இடத்தில் சுமார் மூன்று ஸ்கொயர் மைல் அளவுள்ள இடம் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனிக்குக் கிடைத்தது. தொடர்ந்து சில மாதங்கள் வேலைகளுக்குப் பின்னர் ஏப்ரல் 1640-ல் ஃபோர்ட் செயிண்ட் ஜார்ஜ் உருவானது (சிறிய அளவில்).

அதன்பின் சிறிது சிறிதாகச் சென்னை மாநகரம் உருவானது. சென்னை வரலாற்றாளர் முத்தையாவின் பார்வையில் நவீன இந்தியாவே இந்தச் சமயத்திலிருந்துதான் தொடங்குகிறது.

இந்த நாளை முன்னிட்டு சென்னை ஆல் இந்தியா ரேடியோ 107.1 MHz பண்பலை வானொலியில் சென்னையின் வரலாறு பற்றி இன்று காலை சிலருடன் நேர்காணல்கள் நடந்தன. வரலாற்றாளர் எஸ்.முத்தையா, கிரிக்கெட் (தமிழ்) வானொலி வர்ணனையாளரும் ஓய்வு பெற்ற இ.ஆ.ப-வுமான வி.ராமமூர்த்தி, எழுத்தாளர் மூ.சு.சம்பந்தம், மைலாப்பூர் டைம்ஸ் பத்திரிகையின் நிறுவன ஆசிரியர் வின்செண்ட் டிசோசா ஆகியோர் பேசினர். (இடையிடையே அபத்தமான தமிழ் சினிமாப் பாடல்களும் சில விளம்பரங்களும் வந்தன, அவற்றைத் தணிக்கை செய்து விட்டேன்.) இந்த நேர்காணல்களில் அசோகமித்திரனும் பங்குபெறுவதாக இருந்தது. ஆனால் அவர் கடந்த சில தினங்களாக எங்கோ சென்றுள்ளார். (எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் விமரிசன அரங்கிலும் பங்குபெறுவதாக இருந்தவர் திடீரென காணாமல் போய்விட்டார்.)

நேர்காணல் ஒலித்துண்டு (4.2 MB, 35 நிமிடங்கள், விண்டோஸ் மீடியா பிளேயர், ஆல் இந்தியா ரேடியோவிடம் அனுமதி பெறாமல் இங்கு இடுகிறேன்.)

அமேசானில் சிறுகதைகள் விற்பனை

India Uncut தளத்திலிருந்து: iPodding literature

அமேசான்.காம் பிரபல ஆங்கில எழுத்தாளர்களிடமிருந்து சிறுகதைகளைப் பெற்று அவற்றை 49 செண்ட் வீதம் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாம். சிறுகதைத் தொகுப்புகள் சரியாக வியாபாரமாகததால் இந்த முறையில் ஓரளவுக்கு வருமானம் வரும் என்று எதிர்பார்க்கிறார்களாம்.

தமிழிலும் கூடச் சிறுகதைத் தொகுப்புகள் அவ்வளவாக விற்பனை ஆவதில்லை. அதுவும் அதிகம் அறியப்படாத எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகளை விற்பது கடினமான காரியமாக உள்ளது. ஒருவேளை இப்பொழுதைக்கு தமிழ்ச் சிறுகதைகளின் எதிர்காலமும் இப்படியாகத்தான் இருக்குமோ?

சிறுகதை ரூ. 2.50 ?

Saturday, August 20, 2005

எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் விமரிசனம் ஒலித்துண்டுகள்

இன்று வரவிருந்த விமரிசகர்களில் சிலரால் (அசோகமித்திரன், பிரபஞ்சன், ஆனந்த்) பல்வேறு காரணங்களால் வரமுடியவில்லை.

முதலில் ந.முத்துசாமி பேசினார். [24.4 நிமிடங்கள், விண்டோஸ் மீடியா பிளேயர், 2.97 MB]
தொடர்ந்து நாஞ்சில் நாடன் பேசினார். [23.13 நிமிடங்கள், விண்டோஸ் மீடியா பிளேயர், 2.79 MB]
அடுத்து சா.தேவதாஸ் தான் எழுதி வந்திருந்த கட்டுரையை வாசித்தார். [14.48 நிமிடங்கள், விண்டோஸ் மீடியா பிளேயர், 1.78 MB]

கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு எஸ்.ராமகிருஷ்ணன் பதில் சொல்வதாக இருந்தது. ஆனால் யாரும் எதையும் கேட்கவில்லை. அதனால் பொதுவாகத் தன் எழுத்துகள் மீது இருக்கும் கேள்விகளுக்கு எஸ்.ராமகிருஷ்ணன் விடை அளிக்குமாறு பேசினார்; அது தொடர்ந்து இந்த கூட்டத்தின் ஏற்புரையாக முடிந்தது. [51 நிமிடங்கள், விண்டோஸ் மீடியா பிளேயர், 6.12 MB]

எஸ்.ராமகிருஷ்ணன் நூல் விமரிசன அரங்கு

மீண்டும் ஞாபகப்படுத்த இந்தப் பதிவு. இன்று சென்னையில் இருந்தால், நேரம் இருந்தால் தவறாமல் சென்னை அண்ணா சாலையில் (ஸ்பென்சர் அங்காடிக்கு எதிராக) புக்பாயிண்ட் அரங்கில் எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகளை வைத்து நடக்கவிருக்கும் விமரிசன அரங்குக்கு வருகை தரவும். அங்கு சந்திப்போம். நேரம் மாலை: 5.30 மணி.

ஈரோடு புத்தகக் கண்காட்சி

வைணவர்களுக்கு கோயில் என்றாலே திருவரங்கம் என்பதுபோல புத்தகத் தொழிலில் இருக்கும் எங்களுக்கெல்லாம் புத்தகக் கண்காட்சி என்றாலே பொங்கல் நேரத்தில் வரும் சென்னை புத்தகக் கண்காட்சிதான்.

ஆனால் சென்னையையும் தாண்டி மக்கள் வசிக்கிறார்கள். தமிழகத்தின் பல ஊர்களிலும் அவ்வப்போது புத்தகக் கண்காட்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வோர் ஊரிலும் யார் யார் இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்கிறார்கள்?
  1. பெரும்பாலும், ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப், இன்னபிற லாபநோக்கில்லாத தனியார் தொண்டு அமைப்புகள், நெய்வேலியில் நிலக்கரி நிறுவனம்
  2. சில ஊர்களில் கல்யாண மண்டப சொந்தக்காரர்கள் (ஆடியிலும் மார்கழியிலும் சும்மா இருக்கும் கல்யாண மண்டபத்திலிருந்து பணம் சம்பாதிக்க ஆடித் தள்ளுபடிகளும் புத்தக, கைவினைப் பொருள்கள் கண்காட்சியும்)
  3. பாரதி புத்தகாலயம், காந்தளகம், தினமணி+அநுராகம்
  4. சில ஆங்கிலப் புத்தக விநியோகஸ்தர்கள்
சேலத்தில் புத்தகக் கண்காட்சியை நடத்துபவர் ஒரு கல்யாண மண்டப சொந்தக்காரர். ஒரே நேரத்தில் மண்டபத்தில் புத்தகங்கள், கைவினைப் பொருள்கள், குறைந்த விலைப் புடைவைகள், ஊதுபத்தி, பாச்சை உருண்டை என்று எல்லாம் விற்பனையாகும். வருடத்துக்கு இரண்டு முறை நடத்துகிறார் - அதாவது ஆடி, மார்கழியில் கல்யாணங்கள் நடைபெறாத நேரத்தில். கடந்த சில வருடங்களாகவே நடந்துவரும் இந்தக் கண்காட்சியில் புத்தகப் பதிப்பாளர்கள் அனைவரும் கலந்துகொள்வதில்லை. கலந்துகொள்பவர்கள் அனைவரும் ஆங்கிலம், தமிழ் என இரண்டிலும் பொதுவாகப் பல புத்தகங்களை விற்பனை செய்பவர்கள். புத்தக விற்பனைக்கு என மொத்தமாக 25 நிறுவனங்கள் வந்திருந்தன. பொதுமக்கள் ஓரளவுக்குத்தான் வருகின்றனர். பெரிய அளவில் மக்களை ஈர்க்கக்கூடிய அளவுக்கு இந்தக் கண்காட்சியில் எதுவுமில்லை.

ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக இருந்தது ஈரோடு. இதுதான் ஈரோட்டில் முதன்முறையாக நடக்கும் புத்தகக் கண்காட்சி. இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது மக்கள் சிந்தனைப் பேரவை என்ற இயக்கம். அதன் தலைவர் ஸ்டாலின் குணசேகரனும் பிற தன்னார்வலர்களும் மிக நல்ல முறையில் திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது. இங்கும் ஒரு கல்யாண மண்டபத்தைத்தான் வாடகைக்கு எடுத்திருந்தனர்.

ஆனால் கிட்டத்தட்ட 90 புத்தகப் பதிப்பாளர்களையும் விற்பனையாளர்களையும் ஒருங்கே கொண்டுவந்திருந்தார்கள். பொதுவாக சென்னைக் கண்காட்சி தவிர பிற இடங்களுக்குப் போகாத சாகித்ய அகாதெமி, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் போன்றவர்களையும் பல முன்னணி தமிழ்ப் பதிப்பாளர்களையும் அழைத்து வந்திருந்தனர். பத்து நாள்களிலும் மாலை நேரத்தில் சிறப்புப் பேச்சாளர்களை அழைத்துப் பேச வைத்திருந்தனர். இதனால் நல்ல கூட்டமும் வந்திருந்தது. கடைகளுக்கு வந்த பார்வையாளர்களும் நிறையப் புத்தகங்களை வாங்கினர். ஊரின் பெரிய மனிதர்கள், முக்கியப்பட்டவர்கள், பிரபலங்கள் என்று அத்தனை பேரையும் விடாது கண்காட்சிக்கு வரவைத்திருந்தனர். நகரின் முக்கிய நிகழ்ச்சியாக இந்தக் கண்காட்சியை விளம்பரப்படுத்தியிருந்தது வரவேற்கத்தக்கது. இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்பதைத் தெரியாத மக்களே ஈரோட்டில் இல்லை என்று கூடச் சொல்லலாம்!

ஈரோடு, சேலம் இரண்டுமே படிப்பறிவில் பின்தங்கிய மாவட்டங்கள்தான். இரண்டு நகரங்களுக்கும்/ மாவட்டங்களுக்கும் பொருளாதார அளவில் என்ன வித்தியாசங்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஈரோட்டில் நடந்த கண்காட்சி சிறப்பாக அமைந்ததற்கு முழுக்காரணம் இதை நடத்திய நிர்வாகிகள் சிறப்பான முறையில் திட்டமிட்டுச் செயல்படுத்தியதே.

காந்தளகம், தினமணி/அநுராகம் போன்றோர் நடத்தும் கண்காட்சிகள் ஒரே நேரத்தில் பரவலாக பல ஊர்களில் நடக்கின்றன. ஆனால் அவர்கள் எல்லாப் புத்தகங்களையும் முன்னிறுத்துவதில்லை. ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் உள்ளவர்களை மட்டும்தான் முன்னிறுத்துகின்றனர். அதேபோல பாரதி புத்தகாலயம் நடத்தும் கண்காட்சிகளில் அவர்களே பலரிடமிருந்து புத்தகங்களை வாங்கித் தாங்களே விற்கிறார்கள். இங்கு செய்திறன் குறைவு. கண்காட்சியைப் பிரபலப்படுத்துவது கடினம். அதற்கு நிறைய பேர் சேர்ந்து உழைக்கவேண்டும். அதற்கு ஒரு தன்னார்வ அமைப்பின் ஆதரவு தேவை.

இதைத்தவிர சில ஆங்கில/தமிழ் புத்தக விநியோகஸ்தர்கள் தனியாகவோ அல்லது மூன்று, நான்கு பேர் சேர்ந்தோ ஒரு கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து மொத்தமாகப் புத்தகங்களைக் குவித்து விற்பனை செய்கிறார்கள். சில நகரங்களில் நல்ல விற்பனை உள்ளது என்று கேள்விப்படுகிறேன். ஆனால் பொதுவாக இந்தக் கண்காட்சிகளில் அதிகம் விற்பனையாவது குழந்தைகள் புத்தகங்கள் (கலர் அடிக்கும் புத்தகங்கள், குட்டிக் கதைகள்), ஆங்கிலக் கதைப் புத்தகங்கள் போன்றவை. தமிழ் விற்பனை குறைவுதான்.

ஈரோடு போன்று பிற மாவட்டத் தலைநகரங்களில் நன்றாகப் புத்தகக் கண்காட்சிகளை அமைக்கமுடியும் என்று தோன்றுகிறது. அந்தந்த நகரங்களில் ஸ்டாலின் குணசேகரன் போன்றவர்களும் மக்கள் சிந்தனைப் பேரவை போன்ற இயக்கங்களும் தேவை.

ஈரோடு புத்தகக் கண்காட்சி பற்றிய செல்வராஜின் பதிவு

Thursday, August 18, 2005

இட ஒதுக்கீடுகள் பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

கடந்த சில நாள்களாக உச்ச நீதிமன்றம் சென்ற வாரம் வெளியிட்ட தீர்ப்பு மீதான சர்ச்சைகள் பல தளங்களிலும் எழுந்துள்ளன. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பற்றி முழுமையான தகவல்களைப் பெறாமலேயே நீதிபதிகளின் செயலுக்கு உள்ளர்த்தம் கற்பிக்கும் பதிவுகளும் வந்துள்ளன. தமிழகத்தின் சமூகநீதிக் காவலர்கள் - முக்கியமாக ஜெயலலிதா - மிகவும் அபத்தமான தீர்வுகளை முன்வைக்கிறார்கள்.

ரவி ஸ்ரீநிவாஸ் தனது பதிவில் மூன்று பகுதிகளாக இதுபற்றி எழுத ஆரம்பித்தார். ஆனால் முதல் பகுதிக்குப் பின் நிறுத்திக்கொண்டார். இப்பொழுது அவரது பதிவில் முதல் பகுதி கூடக் காணக் கிடைக்கவில்லை.

இந்த என் நீண்ட பதிவு நடந்தது என்ன என்பதை நான் புரிந்துகொண்ட அளவுக்கு விளக்கவும், அடுத்த கட்டம் என்னவாக இருக்கவேண்டும் என்ற என் கருத்துக்களைச் சொல்லவும் மேற்கொள்ளும் ஒரு முயற்சி.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு முழுமையாக ஆன்லைனில் கிடைக்கிறது. அதை இரண்டு மூன்று முறைகள் படித்தபின்னரே இதை எழுதுகிறேன். நான் மற்றபடி சட்ட வல்லுனர் அல்லன்.

-*-

2002-ல் TMA பாய் Vs கர்நாடக அரசு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் பதினொரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ஒரு தீர்ப்பை அளித்தது. ஆனால் அந்தத் தீர்ப்பிலேயே சில குழப்பங்களும் உள்-முரண்பாடுகளும் இருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்தனர். இந்தத் தீர்ப்பை ஒட்டி பல உயர் நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் வந்தன. இதையெல்லாம் (இஸ்லாமிய அமைப்பு மற்றும் பிற Vs கர்நாடக அரசு மற்றும் பிற) ஒன்றாகக் கவனிக்க ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்புச்சட்ட பெஞ்ச் அமர்ந்தது. 'இஸ்லாமிய அமைப்பு' தீர்ப்பில் ஐந்து நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பில் 'பாய்' வழக்கு தீர்ப்பை மேலும் புரியவைப்பதற்காக சில விளக்கங்களைக் கொடுத்தனர்.

உச்ச நீதிமன்ற வழக்கப்படி பதினொரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்சின் தீர்ப்பை ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் மாற்றமுடியாது. 'இஸ்லாமிய அமைப்பு' தீர்ப்பில் மேலும் சில குழப்பங்கள் இருந்தன என்பதால் மேலும் பல வழக்குகள் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வந்தன. அவையனைத்தையும் எடுத்துக்கொண்டு (இனாம்தார் மற்றும் பிறர் Vs மஹாராஷ்டிரா அரசு மற்றும் பிற) இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் முன் வந்தது. இதை விசாரிக்க ஏழு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் நிறுவப்பட்டது.

'இஸ்லாமிய அமைப்பு' தீர்ப்பு தன் சக்தியை மீறி 'பாய்' தீர்ப்புக்கு எதிரான சிலவற்றைத் தமது தீர்ப்பில் கூறியுள்ளனர் என்றும் அவை செல்லுபடியாகாது என்றும் பல வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இப்பொழுதைய 'இனாம்தார்' தீர்ப்பில் நீதிபதிகள் எங்கெல்லாம் 'பாய்' தீர்ப்பை 'இஸ்லாமிய அமைப்பு' தீர்ப்பு தாண்டியுள்ளதோ அவற்றை மட்டும் நீக்கியுள்ளனர். அதைத் தாண்டி, சுயநிதிக் கல்லூரிகளில் - முக்கியமாக சுயநிதி பொறியியல்/மருத்துவக் கல்லூரிகளில் - அரசு தனது மாணவர் சேர்க்கைக்கான கொள்கைகளைத் திணிக்க முடியுமா, முடியாதா என்ற கேள்விக்கும் விடை கொடுத்துள்ளனர்.

இந்த ஏழு நீதிபதி பெஞ்ச் தீர்ப்பில், 'பாய்' தீர்ப்பில் சில முரண்பாடுகள் உள்ளதாகச் சொன்ன நீதிபதிகள், அதைத் தங்களால் நிவர்த்தி செய்யமுடியாது என்றும் பதினொன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய பெஞ்சால் மட்டுமே 'பாய்' தீர்ப்பின் சில குறைபாடுகளைச் சரிசெய்யமுடியும் என்றும் சொல்லியுள்ளனர்.

'பாய்' தீர்ப்புக்குப் பிறகு வந்த 'இஸ்லாமிய அமைப்பு' தீர்ப்பில்தான் நீதிபதிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் இரண்டு கமிட்டிகள் உருவாக்கப்படவேண்டும் (தாற்காலிகமாகவாவது), ஒவ்வொரு கமிட்டியும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் இயங்கும், அதில் இன்னமும் நான்கு உறுப்பினர்கள் இருப்பார்கள், அவர்கள் சுயநிதிக் கல்லூரிகளில் சேர்க்கையையும் கல்விக் கட்டணத்தையும் கட்டுப்படுத்துவார்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் சுயநிதிக் கல்லூரிகளில் இருக்கும் இடங்களை அரசும் கல்லூரி நிர்வாகமும் பங்குபோட்டுக்கொள்ளும் என்றெல்லாம் சில வழிமுறைகளை வழங்கியிருந்தனர்.

-*-

தற்போதைய வழக்கில் நீதிபதிகள் நான்கு கேள்விகளை முன்வைத்து அதற்கான விடைகளைப் பெற முனைகின்றனர். அப்படி விடைகளைக் காண, தங்களுக்கு மேலாக அவர்கள் இரண்டு விஷயங்களைத்தான் வைக்கின்றனர்: ஒன்று - அரசியலமைப்புச் சட்டம், மற்றது பதினொரு நீதிபதிகள் அமர்ந்து கொடுத்த 'பாய்' தீர்ப்பு. இப்பொழுது கொடுத்துள்ள தீர்ப்பு மேற்படி இரண்டையும் மீறக்கூடாது என்னும் கட்டுப்பாடுகள் நீதிபதிகளுக்கு உள்ளது.

மேலும் இந்த வழக்கில்தான் முதன்முறையாக மாநில அரசுகளின் இட ஒதுக்கீட்டு முறையை சுயநிதிக் கல்லூரிகள் மீது திணிக்கமுடியுமா என்ற கேள்வி எழும்புகிறது. பாய் வழக்கிலும் இஸ்லாமிய அமைப்பு வழக்கிலும் இந்தக் கேள்வி வெளிப்படையாக எழும்பவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

என்னென்ன கேள்விகளை நீதிபதிகள் எடுத்துக்கொள்கிறார்கள்?

1. சுயநிதிக் கல்லூரிகளில் (சிறுபான்மைக் கல்லூரிகளோ அல்லது பெரும்பான்மையினர் நடத்தும் கல்லூரிகளோ) எந்த அளவுக்கு அரசு மாணவர் சேர்க்கையைக் கட்டுப்படுத்த முடியும்? எந்த அளவுக்கு அரசு தனக்கென சில இடங்களை எடுத்துக்கொள்ளமுடியும்? எந்த அளவுக்கு தன்னுடைய இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மேற்படிக் கல்லூரிகள் மீது திணிக்கமுடியும்? (மூன்றுமே சற்றே விலகிய வெவ்வேறு கேள்விகள்.)

2. சுயநிதிக் கல்லூரிகள் (சிறுபான்மை அல்லது பெரும்பான்மை) தங்கள் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை விதிகளைத் தாங்களே உருவாக்கிக் கொள்ள முடியுமா? அல்லது 'இஸ்லாமிய அமைப்பு' தீர்ப்பின்படி கட்டாயமாக அரசு நடத்தும் நுழைவுத் தேர்வு அல்லது சுயநிதிக் கல்லூரிகளின் கூட்டமைப்புகள் நடத்தும் நுழைவுத்தேர்வு என்று இரண்டில் ஏதோ ஒன்றின் வழியாக மட்டும்தான் மாணவர்களைத் தேர்வு செய்யமுடியுமா? இது எந்தவிதத்தில் 'பாய்' தீர்ப்பின்படி செல்லுபடியாகும்?

3. 'இஸ்லாமிய அமைப்பு' தீர்ப்பு, சுயநிதிக் கல்லூரிகள் எத்தனை கட்டணம் வசூலிக்கலாம் என்பதற்காகச் சில வரைமுறைகளைக் கொடுத்தது. அந்த பெஞ்சுக்கு அப்படியான வரைமுறைகளைக் கொடுக்கக்கூடிய சக்தி உண்டா?

4. 'இஸ்லாமிய அமைப்பு' தீர்ப்பின்படி, மத்திய, மாநிலச் சட்டங்கள் இயற்றப்படும்வரையில் ஒவ்வொரு மாநிலத்திலும் இரண்டு கமிட்டிகளை ஏற்படுத்தி அதில் ஒன்று மாணவர் சேர்க்கையையும் மற்றொன்று கட்டணத்தையும் கட்டுப்படுத்தும் என்று சொன்னது செல்லுபடியாகுமா?

வழக்கு நடக்கும்போது பல்வேறு மாநிலங்களில் இருக்கும் சுயநிதிக் கல்லூரிகளின் அமைப்புகளுக்காக ஹரீஷ் சால்வே, அஷோக் தேசாய், ஃபலி நாரிமன், ராஜீவ் தவான், U.U. லலித் ஆகியோர் வாதாடுகின்றனர். கேரள மாநில அரசுக்காக K.K.வேணுகோபால், கர்நாடக அரசுக்காக T.R.அந்தயார்ஜுனா, தமிழ் நாடு அரசுக்காக P.P.ராவ் ஆகியோர் வாதாடுகின்றனர்.

இறுதியில் தீர்ப்பில் மேற்படி கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளிக்கிறார்கள்.

1) (சிறுபான்மை/பெரும்பான்மை) சுயநிதிக் கல்லூரிகளில் தங்களுக்கென சில இடங்களை ஒதுக்கவேண்டும் என்று அரசுகள் கேட்பது நியாயமல்ல. அதைப்போலவே சுயநிதிக் கல்லூரி நிர்வாகங்கள் இப்படித்தான், இவர்களைத்தான் கல்லூரியில் சேர்க்கவேண்டும் என்று வரைமுறைகளைக் கொடுப்பதற்கும் மாநில அரசுகளுக்கு உரிமை கிடையாது - ஆனால் சுயநிதிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நியாயமாக, வெளிப்படையாக, மெரிட் முறையில் இருக்கவேண்டும்.

இந்தத் தீர்ப்பைக் கொடுக்கும்போது இதற்கு முன் வந்துள்ள 'பாய்' தீர்ப்பிலும் அதற்கு முன் வெளியான 'கேரளா கல்வி மசோதா' மீதான தீர்ப்பிலும் எந்த இடத்திலும் மாநில அரசுகள் சுயநிதிக் கல்லூரிகளின் சேர்க்கை முறையைக் கட்டுப்படுத்தலாம் என்று சொல்லப்படவில்லை என்பதைக் குறிப்பிடுகிறார்கள். அதைப்போலவே 'பாய்' தீர்ப்பில் எங்குமே அரசுகள் சுயநிதிக் கல்லூரிகளிடமிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள இடங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் சொல்லப்படவில்லை என்பதையும் நீதிபதிகள் குறிப்பிடுகிறார்கள்.

எனவே 'இஸ்லாமிய அமைப்பு' தீர்ப்பில் சுயநிதிக் கல்லூரிகளின் இடங்களை அரசுக்கும் கல்லூரி நிர்வாகத்துக்குமாகப் பங்குபோட்டுக்கொள்ளலாம் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது, அது 'பாய்' தீர்ப்புக்கு எதிரானது என்றும் முடிவெடுக்கிறார்கள்.

2) ஒற்றைச் சாளர முறைப்படி சுயநிதிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை செய்வது நலம். இது மாணவர்களின் வசதி கருதி செய்யப்படுகிறது. இது முறையான சட்டமாக்கப்படாத வரையில், 'இஸ்லாமிய அமைப்பு' தீர்ப்பில் உருவாக்கப்பட்ட கமிட்டிகள் மூலம் மாணவர் சேர்க்கையைக் கட்டுப்படுத்தலாம் - 'மெரிட்' பாதிக்கப்படக்கூடாது என்பதால்.

3) எல்லாக் கல்லூரிகளும் தங்களுக்கான கட்டணங்களைத் தனித்தனியாகத் தீர்மானிக்கலாம். அதாவது மாநில அரசு இதுதான் கட்டணம் என்று தனது கருத்தைத் திணிக்கமுடியாது. ஆனால் கல்லூரிகள் சுட்டும் கட்டணத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டியதில்லை. அதைக் கட்டுப்படுத்தலாம் (அதாவது இந்தக் கட்டணம் நியாயமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது). நன்கொடை என்ற பெயரில் கொள்ளையடிக்கக் கூடாது.

4) 'இஸ்லாமிய அமைப்பு' தீர்ப்பின்படி உருவாக்கப்பட்ட கமிட்டிகள் மாணவர் சேர்க்கையையோ கட்டணத்தையோ கட்டுப்படுத்துவது தவறாகாது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்டிகிள் 30(1), ஆர்டிகிள் 19(1)(g) ஆகியவற்றுக்கு எதிரானதல்ல. 'பாய்' தீர்ப்புக்கும் எதிரானதல்ல. ஆனால் இதுபோன்ற கமிட்டிகளை அமைப்பது தாற்காலிகமான முடிவாகத்தான் இருக்கவேண்டும். நிரந்தரமான முறையை அந்தந்த மாநில அரசுகள் ஏற்படுத்தும் வரையில் வேறு வழியின்றி நீதிமன்றங்கள் தாற்காலிக நடைமுறையை ஏற்படுத்தவேண்டியிருக்கிறது.

ஆனால் இப்படி ஏற்படுத்தப்பட்ட கமிட்டிகள் தமது சக்திக்கு மீறி அடாவடித்தனமாக நடந்துகொண்டால் அவற்றை நீதிமன்றங்களில் எதிர்க்க முடியும்.

ஆக, 'இஸ்லாமிய அமைப்பு' தீர்ப்பின்படி உருவான கமிட்டிகள் இருக்கலாம். ஆனால் 1)ல் சொன்னபடி மாநில அரசுகள் சுயநிதிக் கல்லூரிகளில் தமக்கென சில இடங்களைத் தக்கவைத்துக்கொள்வதும் தம்முடைய இட ஒதுக்கீட்டுக் கொள்கையை சுயநிதிக் கல்லூரிகள் மீது விதிப்பதும் ஏற்கக் கூடியதல்ல, அவை மட்டும் ரத்து செய்யப்படுகிறன.

-*-

எதிர்பார்த்தபடியே பல்வேறு அரசியல் கட்சிக்களும் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் இதைச் சரிக்கட்டும் விதமாக சட்டங்கள் இயற்றுவோம் என்றும் சத்தம் போடுகின்றனர். இது... சற்றும் யோசிக்காமல் சொல்லப்படுவது. நினைத்தமாதிரி சட்டமன்றங்களிலோ நாடாளுமன்றத்திலோ சட்டங்கள் இயற்றினால், அவை அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டால் அவற்றை மீண்டும் உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துக்கொண்டுவந்து ரத்து செய்யமுடியும்.

இந்த விஷயத்தை நாம் முதலில் தமிழகத்தின் கோணத்தில் மட்டும் பார்ப்போம்.

தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது என்று பிராமணர்களோ, பிள்ளைமார்களோ அல்லது பிற FC ஜாதியினரோ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவில்லை.

தமிழகத்தில் மிகப்பெரும்பான்மையான சுயநிதி பொறியியல் கல்லூரிகளை நடத்துவது FC ஜாதியில்லாத BC, MBC ஜாதியினர் அல்லது பிற மதத்தவர்கள்.

தமிழகத்தில் ஒரு கட்சி விடாது (பாஜக வாயைத் திறக்கவில்லை) அனைவருமே இட ஒதுக்கீடு இருக்கவேண்டும் என்றுதான் கூறுகின்றனர்.

ஜேப்பியார் போன்ற அரசியல்வாதி + பல சுயநிதிக் கல்லூரிகளின் சொந்தக்காரர் + சுயநிதிக் கல்லூரிகளின் சங்கத் தலைவர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால் அரசு தங்களது செயல்பாட்டில் தலையிடுவதை விரும்பவில்லை. அவ்வளவே. ஜேப்பியார் இந்தத் தீர்ப்பைப் பற்றி தினத்தந்தியில் சொல்லியிருந்த கருத்து: "நாங்கள் அரசுக்கு குறிப்பிட்ட இடங்களைத் தரத் தயாராக இருக்கிறோம், ஆனால் அந்த இடங்கள் முழுமையாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றால் அரசு அந்த இடங்களுக்கான கட்டணத்தை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும்."

ஆக ஜேப்பியாருக்கும் பிற சுயநிதிக் கல்லூரி உரிமையாளர்களுக்கும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் சமூக நீதிக்கு எதிராகச் செல்ல விருப்பமில்லை. காசு கையில் வந்துவிட்டால்.

அதேபோல தமிழகத்தின் டெமொகிராபியைப் பார்க்கும்போது பிராமணர்களோ, பிற FC ஜாதியினரோ மிகக் குறைவு. அவர்களை மட்டும் வைத்துக்கொண்டு எந்தப் பொறியியல் கல்லூரியும் காலம் தள்ள முடியாது. இந்த வருடம் 25,000க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன, யாரும் எடுத்துக்கொள்ளாமல். அதனால் பார்ப்பனரோ, செட்டியாரோ, பள்ளரோ, அருந்ததியாரோ - யார் வேண்டுமானாலும் சீட்டை எடுத்துக்கொள்ளலாம் - காசைக் கொடுத்துவிட்டு என்றுதான் அனைத்து சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளும் சொல்கின்றன.

அவர்களைப் பொறுத்தவரையில் இடங்கள் முழுவதுமாக நிரப்பப்படவேண்டும். ஆனால் தமிழக அரசின் நுழைவுத் தேர்வை அவர்கள் பொருட்படுத்தப் போவதில்லை. அவர்களே ஒரு நுழைவுத் தேர்வை நடத்துவார்கள் (அல்லது நடத்தாமலும் போகலாம்). தமிழக அரசு வேண்டுமானால் தனது கைக்குள் இருக்கும் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வை நடத்தலாம் அல்லது நடத்தாமல் போகலாம். சொல்லப்போனால் அரசின் 60% மதிப்பெண்கள் என்னும் கட்டுப்பாடு தமிழக சுயநிதிக் கல்லூரிகளுக்குப் பிரச்னையாக உள்ளது. மேற்படி உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் +2வில் பாஸானால் போதும், பொறியியல் கல்லூரிகளில் சேரலாம் என்றாகிறது. இதனால் வரும் வருடங்களில் அதிகமான பொறியியல் இடங்கள் எடுத்துக்கொள்ளப்படலாம்.

சரி, தமிழகத்தில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவருக்கு மேற்படி தீர்ப்பினால் ஏதேனும் நஷ்டமா? அப்படியொன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. SFI, DYFI போன்ற சங்கங்கள் நேற்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்தன. சில மாணவர் தலைவர்கள் இந்தத் தீர்ப்பினால் ஏழை, நடுத்தர(!) மாணவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் என்று சொன்னார். எப்படி என்று எனக்குப் புரியவில்லை. யாராவது விளக்கிச் சொன்னால் புரிந்துகொள்வேன். நீ ஏழையோ, நடுத்தரமோ, என்ன ஜாதியோ முக்கியமில்லை. சுயநிதிக் கல்லூரிகளைப் பொறுத்தவரையில் கையில் டப்பு வைத்திருந்தால் சீட்டு. அவ்வளவுதான். அதுவும் FC ஜாதியில்லாதவர்கள் நடத்தும் அத்தனை கல்லூரிகளிலும் தங்களுக்கு ஏதோவொரு வகையில் கெடுதல் வரப்போகிறது என்று தமிழத்தில் அனைவரும் ஏன் எதிர்பார்க்கிறார்கள் என்று புரியவில்லை.

-*-

தமிழகம் தாண்டிப் பார்த்தால், பல மாநிலங்களிலும் தமிழகம் அளவுக்கு பொறியியல் இடங்கள் இல்லை. அங்கு நிறையப் போட்டிகள் உள்ளன. அதனால் சில குழப்பங்கள் இருக்கும். ஒவ்வொரு மாநிலமும் தனக்கு ஏற்ப சில சட்டங்களைக் கொண்டுவந்தாகவேண்டும். அதிலும் சில மாநிலங்களில் அப்படிக் கொண்டுவரும் சட்டங்கள் உச்ச நீதிமன்றத்தில் தீவிரமாக எதிர்க்கப்படும். முக்கியமான வழக்குகள் அனைத்தையும் கவனித்தால் அவை கர்நாடக அரசை எதிர்த்து, மஹாராஷ்டிரா அரசை எதிர்த்து என்று எழுப்பப்பட்டவையே.

சரி, ஒட்டுமொத்தமாக இந்தப் பிரச்னையே எழாதவகையில் என்ன செய்யலாம்?

ஜெயலலிதா இரண்டு முட்டாள்தனமான யோசனைகளை முன்வைக்கிறார். ஒன்று: கல்வியை State listக்கு மாற்றுங்கள், Concurrent listஇலிருந்து எடுத்துவிடுங்கள். இது அபத்தமானது. இது ஏற்பட்டால் AICTE, UGC முதல் MCI போன்ற பல்வேறு அமைப்புகள் இருப்பதைத் தகர்க்கும். IIT, IISc, IIM இருக்க முடியாது. இன்னமும் பல குழப்பங்களை விளைவிக்கும். உயர் கல்வியில் மத்திய அரசின் பங்கு முக்கியமானது. மாநிலங்களுக்கு என்று கல்வியை முழுமையாக விட்டுக்கொடுக்க முடியாது. தமிழக அரசையே உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் கடந்த 50 வருடங்களில் உருப்படியான எந்த உயர் கல்வி அமைப்பையும் இந்த அரசு ஏற்படுத்தவில்லை.

இரண்டாவது: தமிழகத்தில் இருக்கும் தனியார் கல்லூரிகளை அரசே எடுத்துக்கொள்ள வேண்டிவரும் என்று சூளுரை. இது படு அபத்தமானது. 'இனாம்தார்' தீர்ப்பில் வரிக்கு வரி கல்விக் கூடங்களை தேசியமயமாக்க முடியாது என்று சொல்கின்றனர் நீதிபதிகள். ஆர்ட்டிகிள் 19(1) படி யார் வேண்டுமானாலும் கல்விக்கூடங்களை அமைக்கமுடியும். ஆர்ட்டிகிள் 30(1) படி சிறுபான்மையினர் தமக்கு வேண்டிய கல்விக்கூடங்களை அமைத்துக்கொள்ள முடியும். ஆக அரசியலமைப்புச் சட்டங்களை மீறினால் ஒழிய ஜெயலலிதாவின் நினைப்பு சாத்தியமல்ல. எதையாவது உளறி, அதன்மூலம் தான்தான் திமுகவை விட சமூக நீதியில் அதிகம் நாட்டம் வைத்திருப்பதாகக் காண்பிக்கவேண்டும் இவருக்கு.

-*-

முதலில் எந்தெந்த மாநிலங்களில் பிரச்னைகள் இல்லையோ அங்கெல்லாம் மாநில அரசுகள் சுயநிதிக் கல்லுரிகளுடன் கலந்துபேசி (நிச்சயமாக தமிழகத்தில் இதச் செய்யமுடியும்), ஓர் ஒப்பந்தம் மூலமாக இட ஒதுக்கீட்டைக் கொண்டுவரமுடியும். தமிழகத்தில் பிரச்னை இத்துடன் எளிதாக முடிந்துவிடும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

ஆனால் இந்திய அளவில் சட்டங்களை இயற்றுவதுதான் பல மாநிலங்களில் ஒத்துவரும். மத்தியில் உள்ள அரசு எல்லா மாநிலங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய அளவில் சட்டம் இயற்றமுடியுமா, அதே சமயம் அந்தச் சட்டம் ஏற்கெனவே உள்ள அரசியலமைப்புச் சட்டத்துடன் ஒத்துவரக்கூடியதாக இருக்குமா என்று கவனமாகப் பரிசீலிக்கவேண்டும். Knee-jerk reaction இல்லாமல் சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து அடுத்த கல்வியாண்டுக்குள் சட்டங்களைக் கொண்டுவர ஆவண செய்ய வேண்டும்.

இந்திய அளவில், தனியார் நடத்தும் சுயநிதிக் கல்லூரிகளில் - முக்கியமாக பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் - இட இதுக்கீடு அவசியமானது என்பதே என் கருத்து.

ஆனால் மேற்படித் தீர்ப்பை வழங்கியதற்காக நீதிபதிகள் உள்ளூர ஜாதிவெறி பிடித்தவர்கள் என்று அர்த்தம் கற்பிப்பது நியாயமற்ற செயல்.

Tuesday, August 16, 2005

இளையராஜா திருவாசகம் பற்றி மேலதிகத் தகவல்கள்

புதிய காற்று என்னும் பத்திரிகையின் ஆகஸ்ட் மாத இதழில் நா.மம்மது என்னும் தமிழ் இசை ஆராய்ச்சியாளர் "இளையராஜா சிம்பொனி - சமூகப் பார்வை" என்று ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.

கட்டுரையைத் தொடங்கும்போது இவ்வாறு ஆரம்பிக்கிறார்:
'தகுதி, திறமை' என்ற வைதீக மாயைகளை உடைத்து வெற்றி கண்டவர்கள் சமூகத் துறையில் இரட்டைமலை சீனிவாசனும் அயோத்தி தாசரும் என்றால் கலைத்துறையில் இளையராஜா.
இளையராஜா ஏதோ ஒரு செய்தித்தாளுக்குக் கொடுத்த பேட்டியில் "இனியும் ஓதுவார்களை நம்பிப் பயனில்லை" என்று சொன்னதாகச் சொல்லி, அதை முன்வைத்து தன் கட்டுரையை விரிக்கிறார் ஆசிரியர்.

இளையராஜாவின் சினிமா இசையில் எங்கெல்லாம் ஓதுவார்கள் காத்து வளர்த்த தமிழ்ப்பண் இடம் பெறுகிறது என்ற நீண்ட ஒரு பட்டியலைத் தருகிறார்.

"'புலையன்' என்ற சொல் உங்கள் இதயத்தைக் கசக்கிப் பிழியவில்லையா?" என்று கேள்வி எழுப்புகிறார்.

இளையராஜாவின் திருவாசக சிம்பொனியில் எங்கெல்லாம் "புலையன்" என்ற சொல் வருகிறது என்று காண்பிக்கிறார். பின் வேதம், வேள்வி, அசுரர், முனிவர் போன்ற சொற்கள் வரும் இடங்களைக் காண்பித்து இந்த வார்த்தைகள் நெருடவில்லையா, இந்த வார்த்தைகளே இல்லாத திருவாசக வரிகள் இளையராஜாவுக்குக் கிடைக்கவில்லையா என்ற கேள்வியை எழுப்புகிறார்.

பின் இளையராஜாவின் இசை தொடர்பான பல கருத்துக்களை கேள்விக்குள்ளாக்குகிறார் ஆசிரியர். முக்கியமாக இளையராஜா இசை என்பதே பக்திப் பாடல்களுக்காக என்று சொன்னதை (இளையராஜா - இசையின் தத்துவமும் அழகியலும், பிரேம்-ரமேஷுடனான உரையாடல், பக். 64-65) கேள்விக்கு உட்படுத்துகிறார் ஆசிரியர்.

கட்டுரையை முடிக்கும்போது இளையராஜா மேற்கத்திய இசையைத் தூக்கி வைப்பதை ஏற்காது, இவ்வாறு முடிக்கிறார்:
நமது மண்ணும், குடி பிறப்பும், வேரும் அருவருக்கத் தக்கதல்ல. பெருமைப் பட வேண்டியது.

நிற்பார் நிற்க, நில்லா உலகில்
நில்லோம் இனி நாம் செல்வோமே
- சிம்பொனி பாடல் 1, தாழிசை 5

போவோர் காலம் வந்தது காண்
பொய் விட்டுடையான் கழல் புகவே
- சிம்பொனி பாடல் 1, தாழிசை 1

என் அருமை நண்பர் தொ.பரமசிவனும் நானும் நண்பர்களும் மேற்கண்ட சிம்பொனி வரிகளைக் கேட்டபோது நெகிழ்ந்து போய் விட்டோம். இந்த எண்ணத்தை அகற்றி விடுங்கள். நீங்கள் பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு வாழ வேண்டும். இந்த மண்ணின் மணத்துடன், வேர்களுடன், வேர்களைத் தேடி...
-*-

நேற்று ராஜ் டிவியில், மியூசிக் அகாடெமியில் நடைபெற்ற இளையராஜா திருவாசக சிம்பொனி சிடி வெளியீட்டு விழாவின் ஒளிக்கோவையைக் காண்பித்தனர். கமல், ரஜினி, ஜெய்பால் ரெட்டி, பாரதிராஜா ஆகியோர் பேச்சுக்களிலிருந்து சில துண்டுகளும், திருப்பொற்சுண்ணம் பாடலுக்கான நாட்டியத்தையும், ஒரு பாடலை சேர்ந்திசையாக பவதாரணி + குழுவினர் பாடுவதையும் காண்பித்தனர். இடையிடையே ஒளித்துண்டுகளாக ராஜாவின் கருத்துக்களும் வந்தன.

விழா தொடக்கத்தில் குத்துவிளக்கு ஏற்றும்போது கிறித்துவப் பாதிரியார் (பெயர் நினைவில் இல்லை) மிகவும் சங்கடப்பட்டார். இளையராஜா சற்றும் யோசிக்காமல் அவரையும் ஒரு திரியை ஏற்றச் சொல்ல அவர் நழுவி, இளையராஜாவையே ஏற்ற வைத்தார். கடவுள் வாழ்த்து சமஸ்கிருத ஸ்லோக வரிகளுடன் கூடிய இளையராஜா இசையமைத்த "ஜனனி, ஜனனி, ஜகம் நீ அகம் நீ" என்னும் பாடல், பவதாரணி பாடினார்.

இந்த நிகழ்ச்சியை எவ்வளவு பேர் பார்த்தனர் என்று தெரியவில்லை. கடந்த ஒரு வாரமாகத்தான் SCVஇன் அடாவடித்தனம் நீங்கி எனது set-top boxஇல் ராஜ் டிவி சானல் கிடைக்கிறது.

Monday, August 15, 2005

கதிர்காமரின் கொலையும் இலங்கைப் போர்நிறுத்தமும்

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமர் இரு நாள்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத நபர்களால் தொலைதூரத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

பலரும் இந்தக் கொலை, இலங்கையை அமைதியிலிருந்து போருக்குக் கொண்டுசெல்லும் என்று சொல்கிறார்கள்.

ஆனால் உண்மையில் போருக்கு முதல் கட்டமாகவே விடுதலைப்புலிகள் இந்தக் கொலையைச் செய்திருப்பதாக எனக்குப் படுகிறது. அதாவது புலிகள் போர் மூளும் என்று முடிவுசெய்து, போர் நடக்கும்போது இலங்கை அரசுத் தரப்பில் யார் உயிருடன் இருப்பது தமது நலனுக்கு அதிகக் கேடு விளைவிக்கும் என்று ஆராய்ந்து, முக்கிய எதிரியாக கதிர்காமரைக் கண்டறிந்து, அதற்காகவே அவரைக் கொன்றுள்ளனர்.

-*-

ஏற்கெனவே இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான உறவு மோசமாக இருந்தது. சுனாமியை அடுத்து நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் இருவருக்கும் இடையே நிறையப் பிரச்னைகள் இருந்தன. இருவரும் இணைந்து நிவாரணத்தை மேற்கொள்ள கூட்டுக்குழு (Post-Tsunami Operational Management Structure - PTOMS) ஒன்றை நிர்மாணிக்கத் திட்டமிட்டனர். இப்படியொரு கூட்டுக்குழுவை ஏற்படுத்தாவிட்டால் இலங்கைக்கு வெளிநாட்டு நிதியுதவி கிடைக்காது என்ற நிலை. சுனாமியால் ஏற்பட்ட அழிவுகளைச் சமாளிக்க வெளிநாட்டு உதவி கிடைக்காவிட்டால் முடியாது என்பதால் கடைசியாக ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஏற்றுக்கொள்ளவரும்போது, கூட்டணி அரசின் பங்குதாரரான இடதுசாரி ஜனதா விமுக்தி பெரமுன அரசிலிருந்து விலகியது.

இலங்கையின் வலதுசாரிகளான புத்த பிட்சுக்களும் அவர்களது ஆதரவாளர்களும் எப்பொழுதுமே விடுதலைப்புலிகளுக்கு எதிராகவே இருந்திருக்கின்றனர். அவர்களும் PTOMSஐ எதிர்த்தனர்.

ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் PTOMSஐ எதிர்த்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். உச்ச நீதிமன்றமும் PTOMS ஒப்பந்தத்தின் சில ஷரத்துக்களை தாற்காலிகமாக முடக்கி வைத்தது.

ஒருபக்கத்தில் இலங்கை அரசுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்கவேண்டிய கட்டாயம். அதாவது நாடாளுமன்றச் சிக்கல்கள் (கூட்டணி), நீதிமன்றச் சிக்கல்கள் ஆகியவற்றுக்குள்ளாக வேலை செய்யவேண்டும். மறுபக்கத்தில் விடுதலைப் புலிகளுக்கு இதுபோன்ற சிக்கல்கள் கிடையாது. அமைதிப் பேச்சுவார்த்தை நேரத்தில் அரசியலமைப்புச் சட்டம், நீதிமன்றம் ஆகியவை மூலம் சிக்கல்கள் வருவதையும் அவர்கள் விரும்பவில்லை.

விடுதலைப்புலிகள் இலங்கை அரசுடன் இணைந்து செயலாற்றுவது என்பது நடக்காத காரியம் என்று முடிவு செய்திருக்கவேண்டும். நார்வே முயற்சியில் நடக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையில் தாங்கள் கேட்கும் எதுவுமே நடக்கப்போவதில்லை என்று அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது. இயற்கைப் பேரழிவு ஏற்படுத்திய அசாதாரணச் சூழலில் கூட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்குக் கூட்டுச்சேர்ந்து வேலை செய்வதே நடக்காத நிலையில், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எப்பொழுதும் அமைதி கிடைக்கும் விதமாக ஏதேனும் உடன்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரியவில்லை. அப்படி ஏதேனும் உடன்பாடு எட்டப்பட்டாலும் அதை இலங்கை நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளவேண்டும். இடதுசாரிகளும் வலதுசாரிகளும் விடுதலைப்புலிகளுடன் ஏற்படும் எந்தவிதமான ஒப்பந்தத்தையும் எதிர்ப்பார்கள் என்னும் நிலை.

இதையெல்லாம் மனத்தில்கொண்டு விடுதலைப்புலிகள் மீண்டும் தமக்கு எதைச் செய்தால் அதிகபட்சம் ஆதாயம் என்பதை முடிவெடுத்து லக்ஷ்மண் கதிர்காமர் கொலையை நிறைவேற்றி இருக்கிறார்கள். விடுதலைப்புலிகளின் மறுப்பு மீது எனக்கு நம்பிக்கை கிடையாது. இன்றுவரை ராஜீவ் காந்தி கொலையை அவர்கள் ஏற்றுக்கொண்டதில்லை. அதிகபட்சமாக துன்பியல் சம்பவம் என்றாவது பிரபாகரன் சொல்லியிருக்கிறார். ஆனால் புலி ஆதரவாளர்கள் கூற்று, சார்புநிலை அறிக்கைகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது கதிர்காமர் கொலை துன்பியல் சம்பவம் என்ற ரீதியில் கூட வருவதற்குச் சாத்தியமில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் இது கொண்டாடக்கூடிய சம்பவமாகத்தான் இருக்கிறது.

புலிகள் செய்தார்களா இல்லையா என்பது இப்பொழுதைய கேள்வி இல்லை. புலிகள்தான் செய்தனர் என்பதற்கு ஒரு வழக்குமன்றத்தில் எடுபடக்கூடிய அளவுக்கு ஆதாரங்களைத் திரட்ட முடியாது. என்னதான் இருந்தாலும் கடைசியில் புலிகளின் ஒட்டுமொத்தத் தலைவர் பிரபாகரன்தான் இதற்கான ஆணையை இட்டார் என்று ஆதாரங்களைக் கொடுக்க முடியாது. ஆனால் புலிகள்தான் செய்திருக்கவேண்டும் என்பதில் புலி ஆதரவாளர்களுக்குக் கூட ஐயமிருக்காது. அதற்கான முகாந்திரங்கள் புலிகளுக்கு மட்டும்தான் உள்ளது.

இப்பொழுதைய கேள்வி - இந்தக் கொலை எந்த விதத்தில் இரண்டு விஷயங்களைப் பாதிக்கும் என்பது:
1) அமைதிப் பேச்சுவார்த்தை
2) இலங்கைப் பிரச்னைக்கான தீர்வு

1) பிரபாகரன் இப்பொழுது நிகழும் அமைதிப் பேச்சுவார்த்தையால் எந்தப் பலனும் இல்லை என்பதாக முடிவுகட்டிவிட்டார். விடுதலைப்புலிகளாக அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகி விட்டதாக அறிவிக்கப் போவதில்லை. ஆனால் இலங்கை அரசுக்கு வரும் சில நாள்களில் தீராத தலைவலி தரும் சம்பவங்கள் நிகழும். இன்னும் சில முக்கியமான அரசியல்வாதிகள், மந்திரிகள் மீது கொலை முயற்சி நிகழலாம். இலங்கை ராணுவம் மீது சிறு சிறு தாக்குதல்கள் நிகழலாம். இலங்கை ராணுவமும் பதிலுக்கு தனது தாக்குதலை நிகழ்த்தலாம்.

இதனால் விடுதலைப்புலிகள் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டார்கள் என்பதில்லை. குறைந்தது அடுத்த மூன்று நான்கு வருடங்களுக்குப் போர்ச்சூழல்தான் என்பதாக புலிகள் முடிவு எடுத்துவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. நார்வே முதலில் நடையைக் கட்டும்.

ஏற்கெனவே இலங்கை அரசு அமைதிப் பேச்சுவார்த்தைகளைப் மீண்டும் பரிசீலிக்கப் போவதாகச் சொல்லிவிட்டது. இடது, வலது சாரிகள் அரசை நெருக்கடி கொடுத்து மீண்டும் போருக்குத் தூண்டுவார்கள் என்று நினைக்கிறேன். முதலில் low intensity conflicts - ஆங்காங்கே சிறு சிறு மோதல்களுடன் ஆரம்பித்து பின் குறிப்பிட்ட இடங்களுக்காகக் கடுமையான போர் மூளலாம்.

2) பிரச்னைக்கான தீர்வு குறைந்தது ஐந்து வருடங்களாவது தள்ளிப்போடப்படும். இந்த நேரத்தில் இந்தியா இலங்கை அரசுக்கு எந்த வகையில் ஆதரவு தரும் என்பது முக்கியமாகப்படும். இலங்கை இந்தியாவிடம் எதிர்பார்ப்பது ஆயுத உதவிகளை. அதற்காகத்தான் இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்தத்தை இலங்கை எதிர்பார்த்தது. இந்த ஒப்பந்தத்துக்கு முக்கிய காரணகர்த்தா கதிர்காமர். அமைதிப் பேச்சுவார்த்தை என்று நாள்கடத்துவதால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் முழுதாக ஏற்பட்டுவிடலாம். இப்பொழுது வைகோ போன்ற சிலரது எதிர்ப்புகளாவது இருக்கும்பட்சத்தில் உடனடியாக கதிர்காமரைக் கொல்வதன் மூலமும் போரில் ஈடுபடுவதன் மூலமும், புலிகளால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்படாமல் தடுக்க முடியும்.

போர் ஆரம்பித்துவிட்டால் தமிழகத்தில் இந்திய-இலங்கை ராணுவ ஒப்பந்தத்துக்கு எதிரான மனநிலையை மக்களிடம் ஏற்படுத்துவதன் மூலமும் விடுதலைப்புலிகள் இலங்கை அரசை நிர்பந்தத்துக்கு ஆளாக்க நினைக்கிறார்கள்.

அதே நேரம், நடந்த கொலையைக் காரணம் காட்டி, இந்தியாவில் உள்ள புலி எதிர்ப்புச் சக்திகள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் துரிதப்படுத்த எண்ணலாம். வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரையில் எந்த அளவுக்கு தமிழகக் கட்சிகளால் இந்திய அரசைக் கட்டுப்படுத்தமுடியும் என்று தெரியவில்லை. வைகோ நிச்சயம் இந்திய-இலங்கை ராணுவ ஒப்பந்தத்துக்கு எதிராக இருக்கிறார். பாமகவின் நிலைப்பாடு முக்கியமானது. திமுக வழவழா நிலை. அஇஅதிமுக ஒப்பந்தத்துக்கு ஆதரவு நிலை.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இலங்கையில் மீண்டும் போர் நடந்தால் எந்த வகையில் அது இந்தியாவை பாதிக்கும் என்று பிரதமரின் ஆலோசகர்கள் நினைக்கிறார்கள் என்பது முக்கியம். இந்தியாவின் தற்போதைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் M.K.நாராயணன், முந்தைய ஆலோசகர் J.N.தீக்ஷித் அளவுக்கு hawkish ஆக இருக்கமாட்டார்.

எனக்கென்னவோ இரு நாடுகளுக்கும் இடையில் முழு ராணுவ உதவிக்கான ஒப்பந்தம் நடைபெறாது என்று தோன்றுகிறது. அதிகபட்சமாக இலங்கை அரசுக்கு மறைமுகமாக சில உதவிகளை இந்தியா செய்ய ஒப்புக்கொள்ளும் என்று தோன்றுகிறது.

இந்தியா தவிர்த்த பிற நாடுகள் இலங்கை அரசுக்கு ராணுவ உதவி செய்யும் என்று தோன்றவில்லை. போர் மூண்டால், பிற நாடுகள் இலங்கை அரசுக்கு வேறு வளர்ச்சிப் பணிகளுக்குக்கூட நிதி உதவி செய்யும் என்றும் எதிர்பார்க்கமுடியாது. கதிர்காமர் போன்ற அனுபவம் வாய்ந்தவர் போர் நேரத்தில் இலங்கை அரசுக்கு மிகவும் உதவியாக இருந்திருப்பார். எங்கிருந்தாவது விடுதலைப்புலிகளுக்கு உதவி வர வாய்ப்பிருக்கிறது என்றால் அந்த வழியை அடைக்க அவர்தான் முதலில் தூது சென்றிருப்பார். அதனால்தான் அவர் முதல் பலி ஆகியிருக்கிறார்.

-*-

இனி மூளும் போரில் யார் அதிகம் வெல்கிறார்கள், யார் அதிகம் இழக்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும்போது யாருக்கு யார் எவ்வளவு விட்டுக்கொடுக்க விரும்புகிறார்கள் என்று புரியவரும்.

Friday, August 12, 2005

I do it almost everyday

இப்பல்லாம் சண்டேனா ரெண்டு டைப் விளம்பரங்கள் ஜாஸ்தியாயிடுச்சு. இதுநாள் வரை ஜோதிகா தன் 50,000 கலர் RMKV புடவையை விளம்பரித்த மியூசிக் அகாடெமி வாயில் பக்கம் உள்ள பெருந்தட்டியில் ஒரு இளம்பெண் சொல்கிறார்:

"I did it only once a week. Now I do it almost every day"

எழும்பூர் போகும் வழியில் மற்றுமொரு தட்டி. அதில் ஆண், பெண் இருவரும் கை கோத்து நிற்கின்றனர், அங்கு:

"We can't wait to do it"

(ஞாபகத்தில் இருந்து எழுதுவது, சிறு மாற்றங்கள் இருக்கலாம்.)

இன்னமும் பல இடங்களில் விளம்பரத் தட்டிகள் இருக்கும் என்று நினைக்கிறேன்.

என்ன பிராண்ட், என்ன பொருள் என்று எந்தத் தகவலும் இல்லை.

====

என்னோட கெஸ் என்ன தெரியுமா?

இது ஒரு தொலைதொடர்பு நிறுவனம். போன் பண்றதைப் பத்தி சொல்லப்போறாங்க...

மோஸ்ட்லி ஏர்டெல்.

விகடன் புதுத் தொடர்கள்

இந்த வாரம் முதல் ஆனந்த விகடனில் மூன்று புதுத் தொடர்கள் தொடங்கியுள்ளன. பா.ராகவன் சில உலக அரசியல், சமூக நடப்புகள் பற்றியும், சொக்கன் சில ஆசாமிகள் பற்றியும் எழுதுகின்றனர். சொக்கன் ஒசாமா பின் லேடனில் தொடங்குகிறார்.

வைரமுத்து கருவாச்சி காவியம் என்று ஒரு கதைத் தொடரை எழுதுகிறார். (இவரது முந்தைய விகடன் தொடரான கள்ளிக்காட்டு இதிகாசம் சாகித்ய அகாதெமி பரிசு வாங்கியது.) இது ஞானபீடத்தைப் பெற்றுத் தருகிறதா என்று பார்ப்போம்.

Thursday, August 11, 2005

IMDT சட்டம் 1983 பற்றி

இதைப்பற்றி சில நாள்களாகவே எழுத நினைத்திருந்தேன். தேசிய உணர்வுக்கு அடுத்த விஷயம் யார் நம்மவர், யார் அந்நியர் என்பதைப் பற்றியது. இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது. இது மிகவும் நுணுக்கமான ஒரு விஷயம். கொச்சைப்படுத்தாமல் கவனமாக விவாதிக்க வேண்டியது.

பணக்கார நாடுகள் அனைத்துமே சட்டத்துக்குப் புறம்பான குடியேற்றங்களைக் கட்டுப்படுத்தத் தீவிரமாக முனைந்து வருகின்றன. அப்படியும் உயிர் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் அமெரிக்காவுக்குள் புகும் மெக்சிகோ நாட்டவர் ஏராளம். அதீத அமெரிக்க வலதுசாரிகள் அப்படி உள்ளே வருபவர்களைக் காட்டிக்கொடுக்கத் தன்னார்வத் தொண்டர்களை நியமிப்பதும், மனிதநேயர்கள், அப்படி நாட்டின் எல்லையைக் கடந்துவருபவர்கள் குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் சாவதைத் தடுக்க தண்ணீர்த் தொட்டிகளை அமைப்பதும் அமெரிக்காவின் தென் மாநிலங்களில் இன்றும் நடந்து வருகிறது. மேற்கு ஐரோப்பிய நாடுகள் அதனதன் வலதுசாரிக் கூக்குரலுக்குத் தகுந்தாற்போன்று சட்டப்புறம்பான குடியேற்றங்களைக் கட்டுப்படுத்த முனைகின்றனர். சமீபத்தில் லண்டன் மாநகரில் போலீஸாரால் நிகழ்த்தப்பட்ட தவறான டீ மெனெசிஸ் கொலையைக்கூட சரியாக்கும்விதமாக பிரிட்டன் உள்துறை அந்த பிரேசில் மனிதர் சட்டத்துக்குப் புறம்பாக நாட்டிலே தங்கியிருக்கலாம் என்று ஒரு செய்தியைக் கசியவிடுகிறது.

நம்மவர், அந்நியர் என்பது மொழியால், இனத்தால், மதத்தால், இன்னும் பல்வேறு காரணிகளால் அடையாளப்படுத்தப் படுகிறது.

இந்தியாவில் வெளிநாட்டவர் சட்டம் 1946 (Foreigners' Act 1946) என்பதுதான் 1983 வரையில் நாடு முழுவதற்குமாக "அந்நியரை எப்படி நடத்துவது" என்பதை வரையறுத்தது. இந்தச் சட்டம் வெள்ளையர் ஆட்சியின்போது உருவாக்கப்பட்டது என்பதை நினைவில் வைத்திருப்போம். இந்தச் சட்டத்தின்படி காவல்துறையினர் யாரையாவது அந்நியர் என்று தீர்மானித்து மேற்படி சட்டத்தின்படி வழக்கு தொடுத்தால், குற்றம் சாட்டப்பட்டவர்தான், தான் இந்தியர் என்பதை நிரூபிக்கவேண்டும். அப்படி நிரூபிக்காவிட்டால் அவரை நாடுகடத்தலாம்.

எப்படி ஒருவர் தன்னை இந்தியர் என்று நிரூபிக்க முடியும்? இந்திய பாஸ்போர்ட், இந்தியாவில் பிறந்ததற்கான பிறப்புச் சான்றிதழ், அல்லது சுதந்தரத்துக்கு முன்பாக இப்பொழுதைய இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பிறந்ததற்கான சான்றிதழ் + நாட்டுப் பிரிவினை போது இந்தியாவுக்குள் வந்திருக்க வேண்டும்(?), ரேஷன் அட்டை, இந்தியாவில் சொத்து வைத்திருப்பதற்கான சான்று, இந்தியத் தேர்தல்களில் வாக்களித்ததற்கான சான்று, வாக்காளர் அடையாள அட்டை - தெரியவில்லை, இப்படிப் பலவற்றில் எதை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளும் என்று எங்கும் சரியாக வரையறுக்கப்படவில்லை.

ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், 2001-ல் தில்லியைச் சேர்ந்த அபு ஹனீஃப் என்னும் வங்க மொழி பேசும் முஸ்லிம் மீது தில்லி போலீஸ் அவர் "அந்நியர்" என்றும் அவரை பங்களாதேஷுக்கு நாடு கடத்த வேண்டும் என்றும் வழக்கு தொடுத்தது. அபு ஹனீஃப், தன்னிடம் கடந்த 15 வருடங்களாக இந்திய பாஸ்போர்ட் உள்ளது, 15 வருடங்களாக தில்லியில் வாக்களித்து வருகிறார், ரேஷன் கார்ட் உள்ளது, ஆனாலும் தன்னை காவலர்கள் பணம் கேட்டு நச்சரித்து நாடு கடத்துவேன் என்று தொல்லை செய்கிறார்கள் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அவரது முறையீட்டில், அசாமில் அமலில் இருக்கும் IMDT Act 1983ஐ தில்லிக்கும் நீட்டிக்கவேண்டும், தான் இந்தியரா, இல்லையா என்பதை ஒரு தீர்வாயம் (டிரிப்யூனல்) மூலம் தீர்மானிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால் உச்ச நீதிமன்றம் அவரது வழக்கைப் பரிசீலிக்கும் முன்னர், IMDT Act 1983 செல்லுபடியாகுமா, ஆகாதா என்பதைப் பற்றியே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அதைப் பரிசீலித்தபின்னர் இவரது வழக்கை எடுத்துக்கொள்வதாகவும் பதில் சொல்லிவிட்டனர்.

ஜூலை 12, 2005-ல், உச்ச நீதிமன்றம் IMDT Act 1983 செல்லுபடியாகாது, அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது இந்தச் சட்டம் என்று அதை ரத்து செய்தது.

IMDT சட்டம் 1983 என்பது என்ன? இது அசாமை மட்டுமே மனத்தில் வைத்துக் கொண்டுவந்த சட்டம். அசாமில் பிரிட்டிஷ் ஆட்சி காலம்தொட்டே அசாமியரல்லாதவர் குடியேற்றம் நடந்துவந்திருக்கிறது. அசாமியர்கள் பொதுவாகவே சோம்பேறிகள் என்று பெயர்பெற்றவர்கள். (முதலில் அசாமியர்கள் என்றாலே அதுவே பல இனக்குழுக்கள், மொழி பேசுபவர்கள் சேர்ந்த கலவை.) பிரிட்டிஷ்காரர்கள் அசாமைப் பார்த்தவுடன் அங்கு தேயிலைத் தோட்டங்களும், காப்பி எஸ்டேட்களும் நிர்மாணிக்க முடிவுசெய்ய, அந்தத் தோட்டங்களில் உழைக்க மத்தியப் பிரதேசத்தில் சாந்தால் பழங்குடியினர் முதல் பிஹாரிகள், வங்காளிகள் எனப் பலரும் கொண்டுசெல்லப்பட்டனர். இப்படி அங்கு சென்ற வேலைக்காரர்களுக்கு உணவு வேண்டுமே? அதற்காக நெல் பயிரிட இன்னும் பல வங்காளிகள் (ஹிந்து + முஸ்லிம்) சென்றனர். அசாமியர்களுக்கு வியாபாரம் செய்யவும் ஆர்வம் இல்லாததால், பிரிட்டிஷ் தூண்டுதலில் பேரில் மார்வாடிகள் பலரும் அங்கு சென்றனர்.

அதன்பின்னர் 1960களில் கிழக்கு பாகிஸ்தான் கொடூரச் செயல்களின்போது பல கிழக்கு பாகிஸ்தானிய, வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் அசாம் முதலான பல வடகிழக்கு மாநிலங்களில் எக்கச்சக்கமாகக் குடியேறினர். இதன் முடிவாகத்தான் 1971-ல் மற்றுமொரு இந்தியா-பாகிஸ்தான் போர் நடந்து பங்களாதேஷ் என்ற நாடு உருவானது.

அதன்பின்னர், அதாவது 1971-க்குப் பிறகு பங்களாதேஷ் பகுதியிலிருந்து இந்தியாவுக்குள் வந்த யாருக்கும் இந்தியக் குடியுரிமை தரக்கூடாது என்று முடிவானது. 1971-க்கு முன் வந்த பல அகதிகள் மீண்டும் பங்களாதேஷுக்குப் போக விரும்பவில்லை. மேலும் 1971-க்குப் பிறகும் கூட பங்களாதேஷிலிருந்து பலர் சரியான பாதுகாப்பில்லாத எல்லைக்கோட்டைத் தாண்டி அசாம் வந்து வாழத்தொடங்கினர். அசாமில் நிலம் வாங்குவது எளிதாக இருந்தது. அசாமியர்களே காசுக்காகவும் உழைப்பில் விருப்பம் இல்லாததாலும் தமது நிலத்தை பங்களாதேஷிலிருந்து வந்த குடியேறிகளுக்கு விற்றனர். அசாம் போன்ற செழிப்பான பிரதேசம் இந்தியாவிலேயே எங்கும் இல்லை. முஸ்லிம் குடியேறிகள் மிகக்கடினமாக உழைத்து மூன்று போகம் பயிர் செய்து சம்பாதித்த பணத்தையெல்லாம் மேலும் நிலம் வாங்கவும், பங்களாதேஷில் இன்னமும் இருக்கும் தம் உறவினரை அழைத்து அசாமில் குடியேற்றவும் பயன்படுத்தினர்.

இது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்காவுக்குப் போய்க் குடியேறும் இந்தியர்கள் செய்வதுதானே?

ஆனால் எண்ணிக்கைகள் பிரச்னையானது. பல அசாம் கிராமங்கள் முழுக்க முழுக்க வங்காள மொழி பேசுபவர்களால் நிறைந்தது. மொத்தத்தில் அசாமின் இரண்டே இரண்டு மாவட்டங்கள் தவிர பிறவற்றில் அசாமிய மொழி பேசுபவர்கள் சிறுபான்மையினராகப் போகும் அபாயம் ஏற்பட்டது.

இந்திரா காந்தியும், முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதும் தமது சொந்த அரசியல் லாபங்களுக்காக பங்களாதேஷ் எல்லையோர கிராமத்தவர் பலரை தேர்தல் நாளன்று எல்லைக்கோட்டைத் தாண்டி வந்து தம் கட்சிக்கு வாக்களிக்குமாறு செய்தனர். அப்படிச் செய்வதற்குப் பிரதியுபகாரமாக அவர்களுக்கு அசாமிலேயே தங்க இடம், ரேஷன் கார்டு வசதிகள் செய்து தந்தனர்.

இந்த நேரத்தில்தான் வெளிநாட்டவர் சட்டம் 1946க்குப் பதிலாக, இந்திரா காந்தியின் அரசு 1983-ல் IMDT சட்டம் 1983 என்ற சட்டத்தைக் கொண்டுவந்தது. இந்த சட்டம் நாடு முழுவதற்குமே பொருந்தினாலும், அசாம் மாநிலத்துக்கு மட்டும்தான் notify செய்யப்பட்டிருந்தது. இந்தச் சட்டம் வரும்வரை அசாமில் யார் வேண்டுமானாலும் ஒருவரை அந்நியர் என்று சொல்லி காவல்துறை மூலமாக அவரை பங்களாதேஷுக்கு நாடு கடத்த முடியும். அதைத் தவிர்க்க குற்றம் சாட்டப்பட்டவர்தான், 'தான் இந்தியர்' என்று நிரூபிக்க வேண்டும். ஆனால் IMDT சட்டப்படி, ஒரு தீர்வாயத்தை உருவாக்க வேண்டும். அந்தத் தீர்வாயத்தில் குற்றம் சாட்டுகிறவரோ, காவலர்களோ குற்றம் சாட்டப்பட்டவரை அந்நியர் என்று நிரூபிக்கவேண்டும்.

இது பங்களாதேஷிலிருந்து வந்த அகதிகளுக்குச் சாதகமானது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

இதன் விளைவாகத்தான் All Assam Students Union உருவானது. அசாம் கன பரிஷத் கட்சி உருவானது. உல்ஃபா தீவிரவாத இயக்கம் உருவானது. அதைத் தொடர்ந்து இரண்டு முறை அசாம் கன பரிஷத் அசாமில் ஆட்சியைப் பிடித்தது. உல்ஃபாவுக்கு எதிராக என்று இன்னமும் சில தீவிரவாத இயக்கங்கள் தோன்றின. வங்க மொழிபேசும் முஸ்லிம்களைப் பாதுகாக்கவென்று சில தீவிரவாத இயக்கங்கள் தோன்றின. போடோ இன மக்களுக்காக, கர்பிகளுக்காக, சாந்தால்களுக்காக என்று அங்குப் போகிற, வருகிற அனைவருமே கையில் AK47 துப்பாக்கி மொழி பேசுகிறவர்களாக ஆனார்கள்.

அசாம் கன பரிஷத், பாரதிய ஜனதா கட்சி இரண்டுமே IMDT சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தன. 2000-ல் AASU செயலர் உச்ச நீதிமன்றத்தில் இந்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரித் தொடங்கிய வழக்குதான் இப்பொழுது தீர்ப்பாகியுள்ளது.

IMDT சட்டமும் குறைபாடு உடையதுதான் என்றாலும், வெளிநாட்டவர் சட்டம் 1946-ம் மிகக் கடுமையானது. இந்தச் சட்டத்தை POTA, TADA ஆகியவற்றுடன் இணைத்துப் பார்க்கலாம். அதாவது குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டவர் தனது நிரபராதித் தன்மையை நிரூபிக்கவேண்டும்! அதைப்போலவே குற்றம் சாட்டப்பட்டபின்பு ஒருவர் தன் இந்தியக் குடியுரிமையை நிரூபிக்கவேண்டும் என்பது நம் நாட்டில் 100க்கு 90 பேரால் முடியாதது. இந்த நிலையில்தான் வெளிநாட்டவர் சட்டம் 1946-ஐ நாம் எதிர்க்கவேண்டும்.

அதே நேரம் IMDT சட்டம் அசாமில் ஏற்படுத்தியுள்ள கோபத்தையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்தியாவில் அந்நியர்களே வரக்கூடாது, அப்படி வருபவர்களைத் துரத்தவேண்டும் என்பது தவறான கருத்து. அதே சமயம் வடகிழக்கு மாநிலங்கள் பலவும் fragile இனக்குழு demography உடையது. அங்கு பெருத்த அளவில் ஏற்படும் எந்தவொரு குடியேற்றமும் கடும் நாசத்தை விளைவிக்கக்கூடியது. அதனால் IMDTக்கும் வெளிநாட்டவர் சட்டத்துக்கும் இடையேயான ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து அதை வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் அமல்படுத்தவேண்டும். ஆனால் பிற மாநிலங்களில் - தமிழகம் சேர்ந்து, IMDT சட்டம் போன்றதொன்று இருப்பதில் தவறொன்றுமில்லை. பிற மாநிலங்களில் வெளிநாட்டவர் சட்டம், 1946ஐ ஒழித்துவிட்டு IMDT சட்டமோ, அதைப்போன்ற வேறொன்றோ கொண்டுவரலாம்.

IMDT சட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், தெஹெல்கா கட்டுரையில் கடுமையாகச் சாடியுள்ளார். ஆன்லைனில் முழுமையாகக் கிடைக்காது. அச்சுப்பிரதி கிடைப்பவர்கள் வாங்கிப் படிக்கவும்.

IMDT சட்டம் ரத்தானதை எதிர்த்து அருந்ததி ராய், பிரஷாந்த் பூஷன் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் பற்றிய இன்றைய தி ஹிந்து செய்தி

Wednesday, August 10, 2005

நான் ஏன் என் நாட்டை நேசிக்க வேண்டும்? - ஜார்ஜ் மோன்பியாட்

George Monbiot வலைப்பதிவிலிருந்து: The New Chauvinism. கார்டியன் இதழில் 9 ஆகஸ்ட் வெளியானது, தி ஹிந்துவில் 10 ஆகஸ்ட் வெளியானது.

அருமையான கட்டுரை. இன்றைய தேதியில் இந்தியாவுக்கும் பொருத்தமானது.

தொடர்பாக பல விஷயங்களைச் சுட்டமுடியும். சமீபத்தில் சில தமிழ் உணர்வுக் குழுக்கள் வெளியாரை தமிழகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று குரல் எழுப்பினர். இந்தத் தமிழ் இனத்தைச் சேர்ந்த பலர் இன்று இந்தியா முழுவதும், ஏன், உலகம் முழுவதிலும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகின்றனர். கோவை ஞானி போன்ற நன்கு படித்தவர்களும் கூட தமிழகத்தில் உள்ள "மார்வாடிகள்" மீது தனி அன்பு காட்டுகின்றனர். தனது "மார்க்சியத்திற்கு அழிவு இல்லை" கட்டுரைத் தொகுதியில் பல இடங்களில் தமிழக மார்வாடிகள் தமிழகத்தில் சொத்து சேர்ப்பது பற்றிப் பேசுகிறார் கோவை ஞானி!

இந்திய தேசியத்தைக் காரணம் காட்டி இலங்கைப் பிரச்னையில் இந்திய அரசு எதை முன்வைத்தாலும் அதை அப்படியே ஏற்கவேண்டும் என்று வலதுசாரிகள் (இணையத்திலும் அச்சு ஊடகத்திலும்) சொல்கின்றனர்.

மோன்பியாட் சொல்வது போல அதீத தேசிய உணர்வுதான் பல நேரங்களிலும் நாடுகளுக்கிடையேயான போர்களை ஆரம்பித்து வைத்துள்ளது. அப்படிப்பட்ட தேசியம் தேவையே இல்லை. சர்வதேச மனிதநேயம்தான் அவசியம்.

எஸ்.ராமகிருஷ்ணன் நூல் விமரிசன அரங்கு

கிழக்கு பதிப்பகம்

எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்
நூல் விமரிசன அரங்கு

இடம்
தி புக்பாயிண்ட் அரங்கம்
160, அண்ணா சாலை, சென்னை 600 002

நாள்
20-08-2005, சனிக்கிழமை, மாலை 5.30 மணி

பங்குபெறுவோர்
அசோகமித்திரன், நா.முத்துசாமி,
பிரபஞ்சன், நாஞ்சில் நாடன்,
சா.தேவதாஸ், ஆனந்த்

ஏற்புரை
எஸ்.ராமகிருஷ்ணன்

-*-

வருக

Tuesday, August 09, 2005

தமிழகத்தில் படிப்பறிவு (Literacy)

2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள படிப்பறிவு விழுக்காட்டினை கீழே உள்ள படத்தில் காணலாம். தமிழகம் முழுவதுமாக 73.47%.


படிப்பறிவு அதிகம் உள்ள மாவட்டங்கள்:

1. கன்யாகுமரி 87.6%
2. சென்னை 85.3%
3. தூத்துக்குடி 81.5%
4. நீலகிரி 80.0%

படிப்பறிவு மிகவும் குறைவான மாவட்டங்கள்:

1. சேலம் 65.1%
2. அரியலூர் 64.1%
3. விழுப்புரம் 63.8%
4. தர்மபுரி 61.4%

கேரளா போன்று தமிழகமும் 90%+ படிப்பறிவை எட்ட வெகு காலம் பிடிக்கும். ஒன்பது மாவட்டங்களில் 70%க்கும் கீழாகவே படிப்பறிவு உள்ளது.

சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி-பெரியகுளம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் படிப்பறிவு அதிகமான விழுக்காடுகள் இருந்தாலும், இந்த மாவட்டங்களை விட ஈரோடு, சேலம் போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் புத்தக விற்பனை அதிகமாக இருக்கிறது.

சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள்

Photo © முகில்

நல்லி குப்புசாமி செட்டியாரின் ஆதரவில் சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள் தொகுப்பு 3 வெளியீடு சென்ற வாரம் நடந்தது. தமிழக வாசகர்களின் ஆதரவில்லாமையே சாரு போன்ற கலக எழுத்தாளர்களையும் கூட புரவலர்களை நாட வைத்துள்ளது. எந்த அளவுக்கு சாருவின் எழுத்துகள் நடராஜன், நல்லி செட்டியார் ஆகியோருக்குப் பிடிக்கும்? இருவரும் வாய் ஓயாது சாருவின் எழுத்தைப் பிடிக்கும் என்று சொன்னாலும் "சைவமாக நடந்துகொண்டால்தான் மேற்கொண்டு எங்களது ஆசீர்வாதம் உனக்கு இருக்கும்" என்பது போல சாருவை பயமுறுத்தி இருக்கின்றனர் என்பது வெளிப்படை.

சாரு தனது ஏற்புரையில் சோழா ஷெரட்டன் பாரில் உட்கார்ந்து கொண்டு டீ குடிக்கிறார். ஆனாலும் மது அருந்துவது பற்றி அங்கும் இங்கும் பேசிவிடுகிறார். பிரபஞ்சனுக்கு மேற்படி "சைவ" விஷயம் ஏற்கெனவே தெரியும்போல. அதனால் தனது பேச்சில் "நாம் எல்லோரும் மது அருந்துகிறோம்.... சரி வேண்டாம், நான் மது அருந்துகிறேன், மது அருந்துவதா குற்றம்?" என்று கேள்வி கேட்டு விளாசினார். பள்ளிக்குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கும் ஆசிரியர்கள் நரகத்துக்குப் போவார்கள் என்றார். கோணல் பக்க்கங்களில் வந்த சில கட்டுரைகளைப் பற்றிப் பேசினார். அதில் ஒன்று பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் பெண் குழந்தைகளை வன்கொடுமை செய்த ஆசிரியர் பற்றியது. பாண்டிச்சேரி வழக்கப்படி அப்படியான ஆசிரியர்களை என்ன செய்வார்களாம்? பள்ளி விட்டு மற்றொரு பள்ளிக்கு மாற்றுவார்களாம். அதனால் டிரான்ஸ்பர் வேண்டுபவர்கள் செய்யவேண்டிய ஒரே வேலை.... அதுதான். அல்லது, அட் லீஸ்ட் மற்றொரு வாத்தியாரை வைத்து இவர் மீது மொட்டைக் கடுதாசி எழுத வைப்பது. சாருவின் மற்றொரு கட்டுரையில் வந்த ஒரு செய்தியை வைத்து முன் பின் தெரியாத இருவர் மணமான பின்னர் முதலிரவில் கொள்ளும் உறவைப் பற்றி சற்று காட்டமாகப் பேசினார். அது வன்புணர்ச்சிக்குச் சமம் என்றார்.

கோணல் பக்கங்கள் - 3 சாருவின் சொந்தக் காசில் வெளியாகிறது. தயாரிப்பு உதவி உயிர்மை மனுஷ்யபுத்திரன். இவர் பேசும்போது சாரு போன்ற எழுத்தாளர் ஒருவருக்கென புத்தகப் பதிப்பாளர் யாரும் இல்லாதது சோகமான நிகழ்வு என்றார். சாருவின் அடுத்த கட்டுரைத் தொகுதியை உயிர்மை வெளியிடப்போவதாகவும் தெரிவித்தார். சாரு தன் கட்டுரைகளில் சுய பச்சாதாபம் பேசும், பணத்துக்கான யாசிக்கும் பகுதிகளைத் தவிர்க்கலாம் என்பது தனது அபிப்ராயம் என்றார்.

எந்தவிதக் கவலைகளுமின்றி பேசுபவர்கள் நடராஜனும் நல்லி செட்டியாரும். அவர்கள் தங்களுக்குத் தோன்றியதைப் பேசலாம். ஆஃப்டர் ஆல் கேட்பவர்களுக்குத்தான், ஒரு கீரைவடை, ஒரு ஜாங்கிரி, ரவா கிச்சடி, தேங்காய் சட்னி, நல்ல காபி, ஓர் ஐஸ்கிரீம் நல்லி செட்டியார் தயவில் கிடைத்துள்ளதே. நடராஜன் அவருக்கு நண்பர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர். இலக்கியம் செழிக்கட்டும்.

நல்லி செட்டியார் தான் சேர்த்துவைத்த புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து முடிக்கும் வரை தனக்கு ஆயுள் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நாஞ்சில் நாடன் பேசும்போது மார்க்கண்டேயன் கேட்ட வரம் போலுள்ளதே என்றார். இப்பொழுதெல்லாம் தான் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களை பிறரிடம் தந்துவிடுவதாகவும், அப்படியும் சில புத்தகங்களைப் பிறருக்குத் தரமுடியாது இருப்பதாகவும், எக்காலத்திலும் படிக்கக் கூடியதாக இருப்பதாகவும் அவற்றுள் சாருவின் அனைத்து எழுத்துகளும் அடக்கம் என்றும் சொன்னார். நாஞ்சில் நாடன் சக எழுத்தாளர்களை நிறையவே புகழ்கிறார்.

சாருவின் எழுத்துகள் முக்கியமானவைதான். ஆனால் அவை கலக எழுத்துகள். நிகழ்காலத் தமிழ்ச் சமூகத்தின் ஒழுக்கவியலை கேலிபேசும் எழுத்துகள். தயிர்வடை சென்சிபிலிட்டி உள்ள வாசகர்களைக் கலங்க அடிக்கும் எழுத்துகள். சாருவுக்கு நிறைய தைரியம். ஜே.ஜே.சில குறிப்புகள் வெளியாகி தமிழ் படைப்புச் சூழலில் தனியிடம் பெற்றபோது விடாமல் அதைக் கண்டனம் செய்து எழுதிய கட்டுரைகளை யாருமே பிரசுரிக்காமல் போனதால் அதையே தனியான ஒரு சிறுபுத்தகமாக வெளியிட்டவர். சுந்தர ராமசாமி கலந்துகொண்ட கோவையில் நடந்த ஒரு கூட்டத்தில் சாரு ஜே.ஜேயை விமரிசிக்க சு.ரா சொன்னாராம்: "நான் இந்த நாவலை நிவேதிதாவுக்காக எழுதவில்லை. நான் இந்த நாவலை எழுதிக்கொண்டிருந்தபொழுது நிவேதிதா என்ற ஆளைப் பற்றியே எனக்குத் தெரியாது." சாரு இதனால் எல்லாம் கலங்கிவிடப்போகிறவரில்லைதான்.

சமீபத்திய கட்டுரை ஒன்றில் அவரே சொல்கிறார்: "நான் ஒரு subversive எழுத்தாளன். என்னைப் போன்ற எழுத்தாளர்கள் பல்வேறு நாடுகளில், நாடு கடத்தப்பட்டார்கள் அல்லது சிறையில் அடைக்கப்பட்டார்கள் அல்லது (சில சமயங்களில்) கொல்லவும் பட்டார்கள். ஆனால் நான் எழுதிக்கொண்டிருக்கும் சிறு பத்திரிகைச் சூழலில் இருந்துதான் எனக்கு அச்சுறுத்தல் வந்ததே தவிர இதுவரை அரசு அச்சுறுத்தல் ஏதும் இருந்ததில்லை. காரணம்: என்னைப் பற்றி அரசுக்கோ தமிழ்ச் சமூகத்துக்கோ தெரியாது. 200 பேருக்கு மட்டுமே இலவசமாக அனுப்பப்படும் பத்திரிகையில் எழுதும் ஒருவனைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்?" ஜீரோ டிகிரியின் அபாரமான விற்பனைக்கப்புறமும் சாரு இவ்வளவு அவையடக்கத்துடன் பேசக்கூடாது!

நாஞ்சில் நாடன் சொன்னார்: சமகால எழுத்தாளனுக்கு படைப்பிலக்கியம் தவிர பிறவற்றிலும் ஈடுபடவேண்டிய கட்டாயம் இருக்கிறது. வெறுமனே கதை, கவிதை மட்டும் எழுதிவிட்டுப் போய்விடாமல் சமகால இலக்கிய, சமூக, அரசியல் நிகழ்வுகள் மீதான எண்ணங்களைப் பதிவு செய்வதில் சாரு ஈடுபட்டிருக்கிறார். சாரு எதைப்பற்றி வேண்டுமானாலும் கருத்து சொல்கிறார். எவ்வளவு controversial-ஆக இருந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. சொல்லப்போனால், அது controversial-ஆக இல்லாவிட்டால்தான் அவர் கவலைப்படுவதாகத் தெரிகிறது. சாருவின் இருப்பே அவரது எதிர்ப்பின் காரணமாகத்தான் என்று தோன்றுகிறது. "I oppose, therefore I am"

சாரு ஏற்புரையில் சொன்ன சில விஷயங்கள் - நிறைய exaggerations இருந்தாலும் - சிந்திக்க வைத்தவை. தான் உயிர்மையில் கோணல் பக்கங்கள் மூன்றாம் தொகுதிக்கு ஒரு விளம்பரம் எடுத்திருந்ததாகவும், இதுவரை வந்தது ஒரேயொரு Money Orderதான் என்றும் சொன்னார். உயிர்மை சுமார் 5,000 பிரதிகளாவது விற்கும் என்றும், காலச்சுவடு 10-15,000 பிரதிகளாவது விற்கும் என்றும் தாம் எதிர்பார்த்ததாகவும், சமீபத்திய காலச்சுவடு இதழ் ஒன்றில் 1,000வது சந்தாதாரராக கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லகண்ணு சேர்ந்திருப்பதாக வந்த செய்தி தன்னை அதிர்ச்சியடையச் செய்ததாகவும் சொன்னார். கேரளாவில் இதுபோன்ற இலக்கியப் பத்திரிகைகள் 1 லட்சம் பிரதிகள் வரை விற்பதாகச் சொன்னார். அவரது கண்ணாயிரம் பெருமாளும் etc. etc. என்னும் தொடர் நாவல் இப்பொழுது மலையாளத்தில் (கேரள கவுமுதி?) தொடராக வருவதாகவும், பக்கத்துக்கு ரூ. 500 என்று சன்மானம் கிடைப்பதாகவும் சொன்னார். அதற்காகவே, வேண்டுமென்றால் மலையாளத்திலேயே எழுதத் தயாராக இருப்பதாகவும் சொன்னார். ஆனால் தமிழில் சிறு பத்திரிகைகளில் எழுதுவதற்கோ, ஒரு கட்டுரைக்கு தான் ரூ. 2,000 வீதம் செலவு செய்வதாகச் சொன்னார்.

தான் யாசிப்பேன், அதை விடப்போவதில்லை, ஆனால் காசுக்காக தன் கொள்கைகளை மாற்றிக்கொள்ளமாட்டேன் என்று முடித்தார்.

தமிழ்ச்சூழல் மோசமானதுதான். கேரளாவில் படிப்பறிவு 90%க்கும் மேல். தமிழகத்தில் 74%தான். தமிழில் விகடன், குமுதம் ஆளுமை ரொம்ப அதிகம். நடுத்தர இதழ்கள் மிகவும் குறைவு. அமுதசுரபி, கலைமகள், புதிய பார்வை போன்றவை 10,000 பிரதிகள் மட்டும்தான் விற்கின்றன. சிற்றிதழ்கள் 3,000 தாண்டினால் அதிகம். மஞ்சள்பொடி, மசாலாப்பொடி இதழ்கள், சினிமா செய்திகளின் தாளிப்புடன் லட்சக்கணக்கில் விற்கின்றன.

இவை மாற வெகுநாள் பிடிக்கும். பல வருடங்கள் ஆகலாம்.

அதுவரையில் சீரியஸ் வாசகர்கள் சாரு நிவேதிதா போன்றவர்களுக்கு தீவிர ஆதரவு தரவேண்டும். கோணல் பக்கங்கள் - 3 ஐ வாங்குவது அதற்கு உதவி செய்யும்.

பி.கு: விழா தொகுப்பாளர் திவ்யகஸ்தூரி பற்றி நிறைய சொல்லவந்து அடக்கிக்கொள்கிறேன்.

நாராயணன் பதிவு

Sunday, August 07, 2005

ராபின் குக் மறைவு

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ராபின் குக் நேற்று மாரடைப்பால் காலமானார்.

டோனி பிளேர் ஈராக் மீது படையெடுத்ததைக் கண்டித்து தன் வேலையை ராஜினாமா செய்த குக் தொடர்ந்து பத்திரிகைகளில் லேபர் கட்சி அரசின் செயல்பாடுகளை விமரிசித்து வந்தார். 7/7 லண்டன் தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து வெளியான வலதுசாரிக் கருத்துகளுக்கு மத்தியிலே எதிர்க்குரல் எழுப்பிய வெகு சிலரில் ராபின் குக் இருந்தார்.

டோனி பிளேர் அரசின் ஏகாதிபத்தியக் கொள்கைகளை இனி எதிர்த்து வலுவாகப் போராடக்கூடிய திறமை, ஆளுமை அவரது கட்சிக்குள் யாருக்கும் இல்லை. இது உலகுக்கு நல்லதல்ல.

கார்டியன் இரங்கல்: ஒன்று | இரண்டு | மூன்று

இளையராஜாவின் திருவாசகம் விமரிசனம்

தீம்தரிகிட ஞாநி முதல் சாரு நிவேதிதா வரை எல்லோரும் எழுதிவிட்டார்கள். இதில் ஞாநி அபத்தத்தின் உச்சக்கட்டம். சாரு அவுட்லுக் பேட்டியைச் சரியாகப் புரிந்துகொள்ளாததால் எழுதியது. இதைத்தவிர இணையத்தில் சகலமானோரும் எழுதிவிட்டார்கள்.

ஆனால் முதல்முறையாக உருப்படியாக இளையராஜாவின் திருவாசகம் குறுந்தட்டில் என்னென்ன குளறுபடிகள் உள்ளன என்பதை விஷயம் தெரிந்த நண்பர் நாக.இளங்கோவன் திண்ணையில் எழுதியுள்ளார். எனக்கு திருவாசகம் பற்றி ஒன்றுமே தெரியாது. அதனால் இசையைக் கேட்கும்போது இந்தப் பிரச்னைகள் தெரியவரவில்லை. இளங்கோவன் சொல்வது அத்தனையுமே ஏற்கக்கூடியதாக உள்ளது.

Saturday, August 06, 2005

9990 ரூபாய்க்கு கணினி?

அனுராக் இதைப்பற்றி எழுதியுள்ளார். எனது ஆங்கிலப் பதிவு இங்கே.

நேற்று நான் வாடிக்கையாகக் கணினி வாங்கும் HCL டீலரிடம் பேசினேன். அதன்படியான தகவல்கள் இதோ:

1. இந்தக் கணினிக்கு ஆகும் செலவு ரூ. 12,500/- பத்தாயிரத்துக்குள் கணினி என்று HCL சொல்வது பெரும் புருடா. இதற்கு மத்திய அமைச்சர் ஒருவர் துணை நின்று பெரும் விளம்பரம் ஈட்டித் தந்துள்ளார்.

2. ரூ. 12,500 ஐயும் ஒரே வரைவோலையாக (draft) எடுத்து HCLக்கு அனுப்ப வேண்டும். கணினி கையில் கிடைக்க 25 நாள்கள் ஆகும்.

3. Via Cyrix 1GHz, onboard audio, 128 MB RAM, 40 GB HD... + Linux இந்தக் கணினி வலு குறைந்ததாகத்தான் இருக்கும். நானே இந்த சிப் வைத்து வீட்டில் ஒரு கணினியை வடிவமைத்தேன். அதற்கு எனக்கு ஆன மொத்த செலவு ரூ. 9,000. இரண்டாம் கை திரை ஒன்றை வாங்கி வைத்தேன். ஆடியோ சிடிக்கள் வேலை செய்கின்றன. விடியோ சிடி தடவும். நான் லினக்ஸ் தொகுப்பை நிர்மாணிக்க மிகுந்த சிரமம் எடுத்துக்கொண்டேன். ஆடியோ வேலை செய்யவில்லை. X விண்டோஸ் வேலை செய்யத் தடுமாறியது. திரை மாறி மாறி கலர் கலராக மின்னியது. இப்பொழுது ஒருவேளை சரியான டிரைவர்கள் கிடைக்கலாம். பின் விண்டோஸ் 98 போட்டேன். அது ஒன்றுதான் ஒழுங்காக வேலை செய்தது. விண்டோஸ் எக்ஸ்பி போட நினைக்காதீர்கள். உருப்படாது.

4. கூட ரூ. 1,000 கொடுத்தால், அதாவது ரூ. 13,500 கொடுத்தால், இண்டெல் செலரான் சிப் கொடுப்பார்களாம்.

5. இந்தக் கணினியை ஒரு வருடத்துக்கு சேவை செய்ய டீலருக்குக் கிடைக்கும் பணம் ரூ. 300தானாம். அதனால் டீலர்கள் யாரும் இந்தக் கணினியை காதலுடன் பார்க்கப்போவதில்லை. மேலும் இந்தக் கணினியில் பல பிரச்னைகள் வரும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

இதுவரையில் டீலர்கள் கூட இந்தக் கணினியை கண்ணால் பார்த்ததில்லை. பார்த்த இரண்டு முக்கியஸ்தர்கள் தயாநிதி மாறன், சோனியா காந்தி.

(அரசியல்) போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்! பொய்யான விளம்பரங்களைக் கண்டு மயங்காதீர்கள்!

தட்டிக் கேட்கத் தகவல்கள்

இன்று மாலை 5.00 மணி அளவில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் 'பொன் அரங்கத்தில்' தட்டிக் கேட்கத் தகவல்கள் என்னும் புத்தகத்தின் வெளியீட்டு விழா.

உந்துநர் அறக்கட்டளை சார்பாக வெளியாகும் இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு இது என்று நினைக்கிறேன். இந்தப் புத்தகத்தில் தமிழக அரசின் முக்கியத் துறைகள் வெளியிட்டுள்ள மக்கள் சாசனங்கள் (Citizens Charters) தொகுக்கப்பட்டுள்ளன.

புத்தகத்தை வெளியிடுபவர் Central Vigilance Commissioner P.ஷங்கர். தமிழக அரசின் தலைமைச் செயலர் என்.நாராயணன் தலைமை வகிக்கிறார்.

Right to Information Act இன்னும் சில மாதங்களில் அமலுக்கு வரப்போகிறது. இதுபோன்ற மக்கள் சாசனத் தொகுப்புகள் நமக்கு உதவியாக இருக்கும்.

Friday, August 05, 2005

தமிழ்ச்சங்க விருதுகள் விழா

விருதுகள் கிடைத்தால் வாங்கிக்கொண்டு கொடுத்தவரை வாழ்த்திவிட்டு வருவதுதான் மரபு. ஆனால் அப்படி இருக்க மனம் இடங்கொடுக்கவில்லை.

திருப்பூர் தமிழ்ச்சங்கம் 1994-லிருந்து தமிழில் வெளிவரும் நூல்களுக்கு விருதுகளைக் கொடுத்துவருகிறது. ஒவ்வொரு வருடமும் டிசம்பரில் விருதுகள் வெளியாகுமாம். 2003-ம் வருடத்துக்கான விருது அளிக்கும் விழா 2004 டிசம்பரில் நடக்க முடியாமல் தமிழகத்தில் சுனாமியின் சோகம். அதனால் 2003, 2004 வருடங்களுக்கான விழாவாக 2005 ஜூலை கடைசியில் நடத்த முடிவு செய்துள்ளனர். இம்முறை விழாவுடன் பத்து நாள்கள் நடக்குமாறு ஒரு புத்தகக் கண்காட்சியையும் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் திருப்பூரில் 500 பேருக்கு மேல் இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பது தெரியவில்லை போல.

திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் தலைவர், செயலர் முறையே டாக்டர், ஆடிட்டர் ஆகியோர். எப்பொழுதாவதுதான் இவர்களது பெயர்களைச் சொல்கிறார்கள். மற்றபடி இவர்கள் டாக்டர் அய்யா, ஆடிட்டர் அய்யா ஆகியோர்தான். சில சமயம் தணிக்கையாளர் அய்யா அவர்கள்.

ஞாயிறு 31 ஜூலை அன்றுதான் விருது வழங்கும் நாள். அன்று காலை 'கருத்தரங்கம்' என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தனர். கருத்தரங்கம் என்று எதுவும் நடக்கவில்லை. ஆளாளுக்கு மைக்கைப் பிடித்துக்கொண்டு 'தான் யார்' என்று சொல்லவேண்டும். 2003, 2004 வருடங்களுக்காக விருதுகளைப் பெற்றவர்கள் சுமார் 38 பேர். ஒன்றிரண்டு பேர் வரவில்லை. மற்ற அனைவரும் தம்மைப் பற்றிப் பேசினர். பலருக்கு தன்னைப் பற்றிப் பேசப் பிடிக்கவில்லை. இன்னும் சிலருக்கோ 'இதுதான் வாய்ப்பு, போடு சாத்து' என்று விளையாடி விட்டனர். ஒருவர் தான் எப்படி கிட்டத்தட்ட 8000 பக்கங்களுக்கு மேல் எழுதிவிட்டேன் என்றும் ("இவரை உழைப்பாளர் தினத்தன்று நினைவு கூர்வோம்", நன்று சுந்தர ராமசாமி) தான் வாங்காத விருதுகளே இல்லை என்றும் சொன்னார். இவர் வயது 80க்கு மேல் என்பதால் மறந்து மன்னித்துவிடுவோம். நிறையப் பொறுமை இல்லாத காரணத்தால் சில நண்பர்களுடன் சற்றுத் தள்ளி அமர்ந்து வெட்டிக்கதை பேசி நேரத்தைப் போக்கினேன். லோக்கல் அரசியல்வாதி, முன்னாள் மந்திரி வேழவேந்தன் - காலையில் பேசித் தள்ளிவிட்டார். இவருக்கும் மாலையில் ஒரு இலக்கிய விருது காந்திருந்தது.

காலையில் பேசியவர்கள் பலரும் எப்படி டாக்டரும் ஆடிட்டரும் தம் நேரத்தையெல்லாம் விட்டுவிட்டு, அதனால் கிடைக்கும் காசையெல்லாம் விட்டுவிட்டு இப்படி தமிழ் இலக்கியத்துக்குச் சேவை ஆற்றுகின்றனர் என்று பேசினர். பின் தமக்கு விருது கொடுத்திருக்கும் தமிழ்ச்சங்கத்தை மனமாரப் பாராட்டினர். டாக்டர் - பி.சி.ராய் விருதுபெற்றவராம். அதையும் சொல்லி சொல்லி வாழ்த்தினர்.

மாலை 6.30க்கு விருது வழங்கும் நிகழ்ச்சி. சரியாக 6.00 மணிக்கு நானும் இரா.முருகனும் அங்கு போய் அமர்ந்தோம். என்ன முட்டாள்தனம்! மெதுவாக 7.00 மணி சமீபமாக பலரும் வந்தனர். இங்கும் பத்மஸ்ரீ, டாக்டர், நல்லி குப்புசாமி செட்டியார், ஏ.நடராஜன் குழுவினர் தலைமையில் விழா. இவர்கள் இல்லாவிட்டால் தமிழகத்தில் இலக்கிய விழாக்களே நடைபெறாது போலிருக்கிறது.

தலைவர், செயலர் இருவரும் மைக்கைக் கையில் எடுத்து ஒரு பிடி பிடித்தனர். பொருளாளரும் சேர்ந்துகொண்டார். தமிழ் கொஞ்சி விளையாடியது.

திருப்பூரில் இரண்டு புனிதப் பசுக்கள். ஒன்று கொடிகாத்த குமரன். இன்னொன்று நூல். அதாவது பஞ்சு நூல். கோபூஜை தொடர்ச்சியாக நடந்தது. 93 வயதான ஒரு மூதாட்டி, சுதந்தரப் போராட்டத்தின் போது காந்திக்கு தன் சொத்தில் பாதியை எழுதிக் கொடுத்தவராம். அவரை முன்னால் ஒரு நாற்காலியில் அமர வைத்திருந்தார்கள். அவரைப் புகழ்ந்து தள்ளிய தள்ளலில் அவருக்கே வெட்கம் தாங்க முடியவில்லை. அவர் திடீரென வீட்டுக்குக் கிளம்ப, கொஞ்ச நேரம் டிராமா. மேடையிலிருந்து நடராஜன் இறங்கிவந்து பொன்னாடை போர்த்தி, சிலர் உணர்ச்சி வசப்பட்டு அவரது காலில் விழுந்து ஆசி வாங்கி, அந்த மூதாட்டி impromptu-வாக ஒரு பேச்சளித்து, கொஞ்ச நேரம் இலக்கிய விழா வேறு திசையில் சென்றது.

மீண்டும் வழிக்கு வந்தது. இப்பொழுது நடராஜனும், நல்லி செட்டியாரும் பேசவேண்டும். நடராஜன் நேற்றுதான் தில்லியில் இருந்தாராம். இன்று திருப்பூரில் இருக்கவேண்டும். நடுவே நாகேஷின் புத்தகத்தை வெளியிடவேண்டும். கஷ்டம்தான். இலக்கியம் வளர்ப்பதென்பது அவ்வளவு எளிதான காரியமில்லையே? திடீரென டாக்டர் அய்யா பத்மஸ்ரீ டாக்டர் நல்லி செட்டியாருக்கு 'பல்கலை பாதுகாவலர்' என்ற பட்டத்தைத் தந்தார். அந்தப் பட்டம் எழுதிய பட்டயத்தை அவர் படித்துத் தர, செட்டியாரும் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார். அவ்வப்போது டாக்டர் கூடியிருந்த கூட்டத்தை நன்றாகக் கைதட்டுமாறு கடிந்துகொண்டிருந்தார்.

நடராஜன் பேச்சின்போது எழுத்தாளர்கள் எவ்வாறு வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க இந்த விருதுக்காகக் காத்திருக்கிறார்கள் என்பதைத் தான் நன்றாக உணர்ந்திருப்பதாகவும், தானும் முதல்வர் எம்.ஜி.ஆர் கையால் இப்படி ஒரு முதல் பரிசு வாங்கும்போது வள்ளுவர் கோட்டத்தில் அமர்ந்து காத்துக்கொண்டிருந்தது ஞாபகத்தில் வருகிறது என்றும், இன்னமும் சற்று பொறுத்துக்கொள்ளுங்கள், விருது வந்துகொண்டே இருக்கிறது என்றும் சொன்னார். மற்றொரு முக்கியமான விஷயம்: நடராஜன் தூரதர்ஷன் தவிர வேறெந்த தொலைக்காட்சியையும் பார்ப்பதில்லையாம். அதனால் பா.ராகவனின் கெட்டிமேளம் சீரியலைப் பார்ப்பதில்லை என்றும் சொன்னார். கெட்டிமேளம் பார்க்காவிட்டால் யாருக்கும் குறையொன்றுமில்லை. ஆனால் தூரதர்ஷனைப் பார்த்துக்கொண்டிருந்தால் பைத்தியம் பிடித்துவிடாதோ?

நல்லி செட்டியார் தங்கள் வீட்டில் எந்த பிராண்ட் உள்ளாடைகள் வாங்கிவந்தோம் என்று விளக்கினார். பின் அந்த பிராண்ட் நிறுவனம் உள்ளாடைகளைத் தயாரிப்பதை நிறுத்திவிட்டதாம். அதனால் திருப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிடம் உள்ளாடைகளை வாங்க ஆரம்பித்தார்களாம். அப்படி நெருக்கமானதாம் திருப்பூர் அவருக்கு.

எனக்கும் கூடத்தான்.

அடுத்து 2003, 2004 நடுவர்கள் தங்கள் கருத்துகளைப் பற்றிப் பேச வேண்டும். இரா.முருகன், பா.ராகவன் இருவரும் அன்று இரவே புறப்படுவதற்காக டிக்கெட் வாங்கி வைத்திருந்தனர். போனவுடனே விருதைக் கொடுப்பார்கள், வாங்கிக்கொண்டு போய்விடலாம் என்று இவர்கள் எப்படி நினைக்கலாம்? முருகன் பொறுத்திருந்து பார்த்துவிட்டு, அவருக்கு பதில் என்னை விருதை வாங்கச்சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். ராகவனுக்கு அதற்குப் பிந்தைய ரயில்தான். அதனால் இன்னமும் சிறிது நேரம் பொறுத்திருந்தார்.

2004 நடுவர் குழுவின் தலைவர் செ.கணேசலிங்கம் பேசினார். தங்களிடம் வந்திருந்த புத்தகங்கள், அந்தப் புத்தகங்களைப் பற்றிய பார்வை என்று - அந்த மாலையில் ஒரே உருப்படியான பேச்சு இவரிடமிருந்துதான் வந்தது. நிரம்ப வயதாகிவிட்டது அவருக்கு. அவர் பேசிய இலங்கை accent பலருக்குப் புரியவில்லை. மேலும் இவர் இலக்கியத்தைப் பற்றிப் பேசியதால் பலருக்கும் அலுப்பாக இருந்தது. மேடையில் அமர்ந்திருந்த சில கனவான்கள் துண்டுச் சீட்டு கொடுத்து இவரை சீக்கிரமாகப் பேச்சை முடித்துக்கொள்ளச் சொல்லியதாக எனக்குத் தோன்றியது. ஒருவேளை நான் நினைத்தது தவறாகவும் இருக்கலாம். ஆனால் கணேசலிங்கம் தான் சொல்ல வந்ததைப் பொறுமையாகச் சொன்னார். நன்றாகச் சொன்னார். ஒரு ஐந்து பேராவது அவர் சொன்னதை விரும்பிக் கேட்டிருப்போம். பேச்சை முடித்து அவர் மெதுவாக இறங்கி வந்து தண்ணீர் குடிக்கப் போனார். அப்பொழுது அவரிடம் சென்று எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொண்டேன். அவர் எழுதி வைத்திருந்த தாள்களை ராகவன் வாங்கிக்கொண்டார். ஒரே பிரதிதான் இருக்கிறது, பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் என்றார் கணேசலிங்கம்.

அடுத்து இன்னமும் சில நடுவர்கள் பேசி முடிக்க, ஒருவழியாக பரிசு வழங்கல்.

இரா.முருகனுக்குப் பதில் நான் மேடையேற, தலைவர் டாக்டர் அய்யா அவர்கள், "இவர் சப்ஸ்டிட்யூட்டுதான், சால்வை எல்லாம் வேண்டாம், போட்டோவும் வேண்டாம்" என்று சற்று சத்தமாகவே சொன்னார். பாவம் முருகன், எல்லோருக்கும் கிடைத்த சால்வை, இவருக்குக் கிடைக்காமல் போனது.

விழா இனிதே நடந்து முடிந்தது.

சாரு நிவேதிதா புத்தக வெளியீடு

இன்று மாலை 6.00 மணிக்கு சென்னை நியூ உட்லண்ட்ஸில் சாரு நிவேதிதாவின் 'கோணல் பக்கங்கள்' மூன்றாவது தொகுதி வெளியிடப்படுகிறது. மாலை 5.30க்கே போனால் தேநீர் கிடைக்கும்.

நல்லி குப்புசாமி செட்டியார் தலைமையில், இமையம், மனுஷ்ய புத்திரன், நாஞ்சில் நாடன், பிரபஞ்சன், ஏ.நடராஜன் ஆகியோர் பேசுகிறார்கள்.

நான் போகிறேன். நாராயணன் வருகிறார்.

சண்டேனா ரெண்டு

இப்ப இது என்னன்னு தெரிஞ்சிருக்கும்... ஆணுறை விளம்பரம் இல்லை. தினமலர். இனி ஞாயிற்றுக்கிழமைகளில் ரெண்டாத் தராங்களாம்... அதுக்கு ஏன் இப்படி முக்கி, முனகி, அடிக்கண் பார்வையோட... ஒரு விளம்பரம்னு தெரியல...

Thursday, August 04, 2005

இட்லி

idli... is sort of white rice cake which they eat by dipping into a red gunge. It is... despicable.
இப்படியாகத்தான் எனது பிரிட்டிஷ் நண்பர் இட்லியைத் தன் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவார். இவர் இந்தியாவுக்குப் பலமுறை வந்திருக்கிறார். இந்திய உணவை விரும்பிச் சாப்பிடுபவர். இட்லியைத் தவிர...

அவர் கிடக்கிறார். தமிழர்கள் வாழ்வில் மிக முக்கியமான உணவு இட்லி. உளுந்து, தேவையான அரிசி என்று முன்னர் ஆட்டுரலிலும், இப்பொழுது ஷாந்தா டில்டிங் வெட் கிரைண்டரிலும் (அல்லது பிற பிராண்ட்களிலும்) தினமும் பல லட்சம் டன்கள் அரைபட்டு, மாவாக வழித்துக் கொட்டப்பட்டு, ரெஃப்ரிஜிரேட்டர் இருந்தால் அவ்வளவாகப் புளிக்காமலும் இல்லாவிட்டால் புளித்து வழிந்தும், அடுத்த நாள் முதல் நீராவியில் இட்டு அவிக்கப்படும் இட்டவி - இட்டலி - இட்லி.

தெருவோர ஆயா கடை, பிராண்டட் முருகன் இட்லிக் கடை என்று எங்கும் நீக்கமற நிறைந்து கிடக்கும் இட்லி. ரயில் பயணங்களில் மிளகாய்ப்பொடியுடன் ஒரு லிட்டர் எண்ணெயில் முழுகி இருக்கும் இட்லிகள், வெங்காயத் துவையலில் பிரட்டப்பட்ட இட்லிகள், சரவணபவனில் கொதிக்கும் சாம்பாரில் முழுகி இருக்கும் மினி இட்லிகள் அல்லது முழு இட்லிகள். வெள்ளை சட்னி, பச்சை சட்னி, சிகப்புச் சட்னி என்று சுற்றிவரப் பல சட்னிகள். சாதி மத பேதம் இன்றி அனைவர் வீடுகளிலும் உருவாக்கப்படும் இட்லிகள்.

காலையில் ஏதாவது உணவகத்துக்குப் போனால் முதலில் ஒரு பிளேட் இட்லி ஆர்டர் செய்துவிட்டு அடுத்து என்ன சாப்பிடலாம் என்று யோசிக்கும் அளவுக்கு தமிழர்கள் வாழ்வில் இட்லியும் தண்ணீர் குடிப்பதைப் போல ஓர் அங்கமாகி விட்டது.

எனக்கு ஒரு விபரீத ஆசை. ஒரு நாளில் தமிழகத்தில் மட்டும் எத்தனை இட்லிக்களை உருவாக்குகிறோம், சாப்பிடுகிறோம் என்று கணக்கிட முடியுமா? புள்ளிவிவரவியல் நிபுணர்கள் இதை எப்படிச் செய்வது என்று வழி சொல்வார்களா? ORG-MARG, TNS-MODE என்று யாரையாவது அணுகினால் சிரிப்பார்களா?

தினமலர் செய்திமலர் ஜூலை 2005

என்னுடைய பதிவு நியூ யார்க், மேட்ரிட், லண்டன், ஜூலை மாத தினமலர் செய்தி மலர் - ஒரு மாதிரியான செய்தித் தொகுப்பு இதழ் போலத் தோன்றுகிறது, அதில் வெளியாகியுள்ளது. இந்த இதழ் எல்லா தினமலர் எடிஷன்களுடன் கிடைப்பதில்லை போலவும் தெரிகிறது. திருநெல்வேலி உள்பட சில ஊர்களுக்கான பதிப்புகளுடன் இடம்பெறுகிறதாம்.

திருப்பூர் முரண்பாடுகள்

அனைவருக்கும் வேலை கிடைக்கும். ஆனால் தினத்துக்கு 12 மணிநேரம் குறையாது வேலை செய்யவேண்டும். அவ்வப்போது அதற்கு மேலும் ஆகலாம். தேவைப்பட்டால் ஞாயிறும் வேலை இருக்கும். ஓவர்டைம் என்று எதுவும் கிடைக்குமா என்று தெரியாது. எல்லாமே ஒப்பந்தக் காரர்கள்தான். பி.எஃப் வசதிகள் கிடையாது.

பிற மாவட்டங்களில் பசிக்குத் திண்டாடுவது போல இருக்காது. எப்படியும் நாளொன்றுக்கு ரூ. 70-80 கிடைத்துவிடும். ஆனால் 45 வயதுக்கு மேல் உடலில் வலு இருக்காது. பஞ்சைச் சுவாசிப்பதால் நுரையீரல் கோளாறுகள். சாயப்பட்டறைகளில் வேலை செய்வோருக்கு கை, கால், உடல் முழுதும் தோல் பிரச்னைகள். ஊரிலோ நொய்யலாறு என்னும் கெமிக்கல் சாக்கடை.

கொசு, மோசமான சாலைகள், பார்க்கச் சகிக்காத ஊர். ஆனால் தமிழகத்தில் மிக அதிகமான பெர் கேபிடா வருமானம் கிடைக்கும் ஊர். 7,000-8,000 கோடி ரூபாய்கள் ஏற்றுமதி வருமானம். எங்கே போகிறது இத்தனைப் பணமும்? திருப்பூர் தொழிற்சாலை முதலாளிகள் எத்தனை வரி கட்டுகிறார்கள். வரி கட்டுகிறார்களா இல்லையா? வரி கட்டுவதாக இருந்தால் ஏன் சாலைகளின் நிலையைப் பற்றியோ நகரின் மோசமான நிலையைப் பற்றியோ சண்டை போடுவதில்லை? இல்லை, இந்தச் சீர்கேட்டுக்குக் காரணம் தாங்கள்தான் என்பதால் சத்தம் போடாமல் இருக்கிறார்களா?

தொழிற்சங்கங்கள் என்ன செய்கின்றன? ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் இவ்வளவு என்று ஒப்பந்தமிட்ட பின்னரும் அதைப் பின்பற்றுவதில்லை என்று கேள்விப்படுகிறேன். ஆனால் இடதுசாரிகள் ஏன் குரல் கொடுப்பதில்லை? இடதுசாரி தொழிற்சங்கங்களில் முக்கியப் பதவி வகிப்பவர்களின் உறவினர்களே தொழிற்சாலை சொந்தக்காரராக இருப்பது காரணமா? லஞ்சம் காரணமா?

சிவகாசியில் மட்டுமல்ல, திருப்பூரிலும்தான் குழந்தைகள் வேலைக்குச் செல்லக் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்று கேள்வி. சில மக்கள் நல அமைப்புகள் மாலை நேர வகுப்புகளை நடத்துகிறார்கள். அதற்குமேல் போனால் பெருமுதலாளிகள் கையைக் காலை உடைத்துவிடுவார்கள் என்று கேள்வி. ஊர் முழுக்க தேவைக்கு அதிகமாகவே சினிமா தியேட்டர்கள் உள்ளன. இந்த ஊரில்தான் மக்கள் தொலைக்காட்சி சீரியல்களுக்கு பதில் சினிமாப்படங்களை அதிகம் பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

திருப்பூரில் மத்தியதரக் குடும்பங்களே வெகு குறைவு என்று தோன்றுகிறது. முதலாளிகள், அவர்களுக்கு மருத்துவம் பார்க்க மருத்துவர்கள், இவர்களுக்கெல்லாம் வரியை ஏய்க்க சேமிக்க உதவும் ஆடிட்டர்கள். இவர்கள் உயர்மட்டத்தினர். இவர்களைத்தாண்டி சிறு கடைகள், வங்கிகளில் வேலை செய்பவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் மட்டும்தான் மத்தியதரம். பஞ்சாலைகளிலும் சாயப்பட்டறைகளிலும் துணி தைப்பதிலும் வேலை செய்பவர்கள் அடிமட்டத்தினர்.

பக்கத்து மாவட்டங்களிலிருந்து, மாநிலங்களிலிருந்து கூட்டமாக இளம்வயதுப் பெண்கள் கொண்டுவரப்பட்டு கொட்டடியில் அடைக்காத குறையாக வேலை செய்ய சக்கையாகப் பிழியப் படுகிறார்கள். இவர்களுக்கான சம்பளம் இவர்களிடம் கொடுக்கப்படுகிறதா, இல்லை இவர்களது பெற்றோர்களுக்கு நேரடியாகச் செல்கிறதா என்று தெரியவில்லை. பெற்றோராலேயே சுரண்டப்படுவதை கார்ல் மார்க்ஸ் எப்படி வகுத்திருப்பார்? இந்தப் பெண்களுக்கு கல்யாணம் ஆகும்போது ஒரு தொகை தருவதாகச் சொல்லி மாதாமாதம் ஒரு தொகை முதலாளிகளால் சேமிக்கப்படுகிறதாம். ஐந்து வருடம் கழித்து மொத்தமாகக் கிடைக்கும் என்று நம்பிக்கை. ஆனால் ஐந்து வருடத்துக்கு முன்னாலேயே இவர்களை வேலையிலிருந்து தூக்கி அடித்து விட்டு வேறு சில ஏமாளிப் பெண்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள்.

முதலாளிகளின் சுரண்டலுக்கு unlimited supply of labour உதவுகிறது.

திருப்பூர் பற்றிய முழுமையான socio-economic ஆராய்ச்சி தேவை. ஏற்கெனவே ஏதேனும் இருக்கிறதா?

Wednesday, August 03, 2005

உலகம் தட்டையானது - Part Deux

சித்தார்த் வரதராஜன் - தி ஹிந்துவில் பல கருத்துப் பத்திகள் எழுதுபவர் - நேற்றைய ஹிந்துவில் "The World is Flat" புத்தகத்தை மதிப்பிட்டுள்ளார். சிரிப்பை வரவழைத்த வாக்கியம்:
'Flatman' is to globalisation, what Dr. Pangloss was to Candide's world, a breathless narrator of how good the going is."
விரும்புபவர்கள் அவரது பதிவிலேயே பின்னூட்டமிடலாம்.

(உலகம் தட்டையானது பற்றிய என் முந்தைய பதிவு)

மற்றொரு புறம், வி.எஸ்.என்.எல் சமீபத்தில் விலைக்கு வாங்கிய டெலிக்ளோப் நிறுவனம் முன்னர் வாங்கியிருந்த ITXC என்னும் VoIP நிறுவனத்தை உருவாக்கிய டாம் எவ்ஸ்லின் இந்தியா பற்றிய தனது கருத்துக்களைப் பதிவு செய்கிறார். இந்தப் பதிவுக்கு அவர் கொடுத்துள்ள தலைப்பு: The World is Flat: VSNL in Definitive Agreement to Acquire Teleglobe

(தொலைதொடர்பு பற்றிய எனது ஜோதிடக் குறிப்புகள்)

Tuesday, August 02, 2005

திருப்பூர் தமிழ்ச்சங்க விருதுகள் 2004

கீழ்க்கண்ட புத்தகங்களுக்கு திருப்பூர் தமிழ்ச்சங்க விருதுகள் 2004 கிடைத்துள்ளன.

கவிதை

தேவதையின் காலம், அழகு நிலா, குமரன் பதிப்பகம்
வானம் என் அலமாரி, குகை.மா.புகழேந்தி, குமரன் பதிப்பகம்
இரண்டாவது சந்திப்பு, மு.மாறன், குமரன் பதிப்பகம்

நாவல்

சோளகர் தொட்டி, ச.பாலமுருகன், வனம் வெளியீடு
அரசூர் வம்சம், இரா.முருகன், கிழக்கு பதிப்பகம்
மெல்லினம், பா.ராகவன், கிழக்கு பதிப்பகம்

கட்டுரை

இருபதாம் நூற்றாண்டின் 100 தமிழ்க் கவிஞர்கள், பா.முத்துக்குமாரசாமி, பழனியப்பா பிரதர்ஸ்
இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம், நாகூர் ரூமி, கிழக்கு பதிப்பகம்
இடிபாடுகளுக்கிடையில், வெளி.ரங்கராஜன், காவ்யா வெளியீடு

சிறுகதைத் தொகுப்புகள்

மலரின் மெல்லிது, விழி.பா.இதயவேந்தன், காவ்யா வெளியீடு
மாடன்மார் கதை, மோகனன், தமிழ்ச்சோலை பதிப்பகம்

மொழிபெயர்ப்பு நூல்கள்

தமிழில் கவிதை மொழிபெயர்ப்பு, சா.சாகுல் ஹமீது, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இராக்கியக் கவிதைகள், நிர்மலா சுரேஷ், இதயம் பதிப்பகம்
இயற்பியல் தாவோ, பொன்.சின்னத்தம்பி முருகேசன், சந்தியா பதிப்பகம்

நாடகம்

நடிகரும் மனிதர்தான், டாக்டர் கமலம் சங்கர், வசந்தா பதிப்பகம்
விடுதலை, விடுதலை, அ.உசேன், உ.ஷாஜஹான் புதுகை சகோதரர்கள்

சிறுவர் இலக்கியம்

சின்னச்சின்னக் கதைகள், மலையமான், ஒளிப்பதிப்பகம்
விளையாட்டுகள் அன்றும் இன்றும், கா.பொ.இளம்வழுதி, பரிதி பதிப்பகம்

மருத்துவம்
இரசாயனம் - பாம்பு விசங்களுக்கான முதலுதவிகளும் சிகிச்சைகளும், டாக்டர் முத்துச் செல்வக்குமார், அருண் நிலையம்
என் கேள்விக்கு என்ன பதில், எஸ்.ராஜா, ஆகம் பதிப்பகம்

நடுவர்கள்: செ.கணேசலிங்கம், பிரளயன், மனா

இந்திய கம்யூனிஸ்டுகள் பற்றி ராமச்சந்திர குஹா

சத்யா வழியாக, Good practice, bad theory among Left politicians

சுவையான கட்டுரை. 1977-ல் ஸ்பானிய கம்யூனிஸ்ட் தலைவர் சாண்டியாகோ கேரில்லோ எழுதிய "Eurocommunism and the State" என்ற புத்தகத்தை இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் B.T.ரணதிவே கடுமையாக விமரிசித்து எழுதினார். ஆனால் இன்று பார்க்கும்போது கேரில்லோவின் கொள்கைகள்தான் இந்தியச் சூழலில் சரியாக இருக்கும் என்று தெரிகிறது.

"இந்திய கம்யூனிஸ்டுகள் பிற கட்சிகளில் உள்ளவர்களை விட அறிவாளிகள். சந்தேகமே இல்லாமல் பிற கட்சியினரை விட நாணயமானவர்கள். பிற கட்சியினர் சமூகத்தின் உயர்மட்டத்தவரோடு மட்டும் உறவாடும்போது கம்யூனிஸ்டுகள்தான் இன்றும் உழைக்கும் வர்க்கத்தவரோடு உறவு வைத்திருக்கிறார்கள்.

அப்படி இருந்தாலும் காலாவதியான கொள்கைகளை இன்னமும் விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருப்பது வருத்தத்தைத் தருகிறது. 20-ம் நூற்றாண்டில் நாம் கற்றுக்கொண்டிருப்பது என்னவென்றால், குடியாட்சி முறை, அதன் எல்லாவிதக் குறைபாடுகளிடனூடாகவும், இடதுசாரி, வலதுசாரி சர்வாதிகாரங்களை விட எவ்வளவோ மேலானது; சந்தை, அதன் எத்தனையோ குறைபாடுகளின் இடையேயும் கூட, பணத்தையும், உழைப்பையும் அரசை விட நேர்த்தியாகவும், குறைந்த செலவிலும் விநியோகிக்கிறது. வரலாற்றிலிருந்து நாம் மேலும் தெரிந்து கொள்ளும் முக்கியமான மூன்றாவது விஷயம்: தாகோர், காந்தி, நேஹ்ரு, அம்பேத்கார் ஆகியோர் எவ்வளவுதான் குறைகளுடையவர்களாக இருந்தாலும், மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் போன்றவர்களைவிட - இந்தியாவைப் பொறுத்தமட்டில் - அதிகம் தேவையானவர்கள்."

Monday, August 01, 2005

8% விகிதத்தில் வளருமா இந்தியா?

வெள்ளிக்கிழமை அன்று மாண்டேக் சிங் அஹ்லுவாலியா ஐஐடி மெட்ராஸ் 42வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.

தொடக்கத்தில் வழக்கமான ஐஐடி புகழ்பாடல். அமெரிக்க காங்கிரஸே அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியர்களும், குறிப்பாக ஐஐடியினரும் ஆற்றிய தொண்டைக் குறிப்பிட்டு ஒரு ஸ்பெஷல் 'ஓ' போட்டதாகச் சொன்னார். ஆனால் இந்திய நாடாளுமன்றம் இதுவரையில் இந்தியாவுக்காக ஐஐடி ஆற்றிய அருந்தொண்டு பற்றி எதுவும் சொன்னதா என்று ஞாபகமில்லை. ஒருவேளை சொல்லிக்கொள்ளுமாறு இந்தியாவுக்காக ஐஐடியினர் எதையும் செய்யவில்லையோ என்னவோ. அப்புறம் ஜவாஹர்லால் நேஹ்ருவின் temples of modern India மேற்கோளும் அவசியமாக இருந்தது.

தான் பட்டம் பெற்று கல்லூரியை விட்டு வெளியே வந்தபோது இருந்த நிச்சயமற்ற சூழல் இப்பொழுது இல்லையென்றும், இன்று பட்டத்துடன் வெளியேறும் மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடிய சூழ்நிலை உள்ள இந்தியாவில் காலடி எடுத்து வைக்கிறார்கள் என்றார். இப்பொழுது 6% வளர்ச்சியில் இருக்கும் இந்தியா ஒருசில அரசின் செயல்திட்டங்களால் 8% வளர்ச்சியை எட்டுவது கடினமல்ல என்றார். மேலும் அவர் சொன்னது:

அடுத்த 30 வருடங்களில் இந்தியா தொடர்ச்சியாக 8% வளர்ச்சியில் இருந்தால் நாடு எப்படியிருக்கும்? இந்தியா அப்பொழுது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும். (சீனா, அமெரிக்காவுக்கு அடுத்ததாக). உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு இப்பொழுதிருக்கும் 0.8%-லிருந்து கிட்டத்தட்ட 3% ஆகும். இப்பொழுது இருக்கும் 25% நகர மக்கள் தொகை கிட்டத்தட்ட 40% ஆகும். அந்த அளவுக்கு மக்கள் கிராமங்களிலிருந்து குடிபெயர்ந்து நகரங்களுக்குச் செல்வார்கள். இனி பிறக்கும் ஒவ்வொருவரும் அடிப்படைக் கல்வியுடன் மட்டும் இல்லாமல் உயர்நிலைக் கல்வியும் பெறுவார். (!!)

ஆனால் இதெல்லாம் நடக்க வேண்டுமானால் அரசு சில செயல்திட்டங்களில் முதலீடு செய்யவேண்டும். அவை:
  1. கல்வி + சுகாதாரம்
  2. விவசாயம்
  3. அடிப்படைக் கட்டுமானம்
கல்வி, சுகாதாரம் இரண்டிலும் நாம் பல வளரும் நாடுகளை விட மோசமான நிலையில் இருக்கிறோம். அடிப்படைச் சுகாதாரத்தை எடுத்துக்கொண்டால் சீனாவை விடவும், பல கிழக்காசிய நாடுகளை விடவும் நம் நாட்டில் சிசு மரணம் (infant mortality) அதிகமாக உள்ளது. அதைப்போலவே கருவுற்ற தாய் மரணம் (maternal mortality ratio) என்னும் அலகிலும் நம் நாடு மோசமாகவே உள்ளது. கல்வி, சுகாதாரம் இரண்டையும் மேம்படுத்த அரசிடமிருந்துதான் முதலீடு வரவேண்டும்.

விவசாயம்... 1980களில் இந்தியாவில் விவசாயம் 3.5% என்ற விகிதத்தில் வளர்ந்தது. ஆனால் 1990களில் இது 1.5% என்று குறைந்துவிட்டது. இந்தியா 8% வளர்ச்சி காணவேண்டுமென்றால் விவசாயம் 3.5-4.0% வளர்ச்சியில் இருக்கவேண்டும். வெறும் உணவு தானியங்களை அறுவடை செய்வதால் மட்டுமே இந்த வளர்ச்சியை நாம் அடையமுடியாது. அதனால் விவசாயத்தில் நாம் உணவு தானியங்களைத் தாண்டி உலகச்சந்தையில் விற்கக்கூடியதாக பழவகைகள், பூக்கள், காய்கள் (horticulture) என்று பயிரிடவேண்டும். பால் உற்பத்தியில் ஈடுபடவேண்டும். இங்கு பெரும் பண முதலீடு தேவைப்படுகிறது. இங்கு தனியாரின் தேவை இருக்கிறது. ஒப்பந்தச் சாகுபடி முறை (contract farming) வரவேண்டும். இதன்மூலம் தனியார் மூலதனம் அதிக அளவில் விவசாயத்தில் விளைச்சலை அதிகப்படுத்தவும் விளைபொருளை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தவும் உபயோகப்படும்.

அடுத்ததாக அடிப்படைக் கட்டுமானம். நகரங்கள் அதிகமாகும் மக்கள் தொகையை நிர்வகிக்கமுடியாமல் தடுமாறும். இந்தியாவில் அடிப்படைக் கட்டுமானத்தை புதுப்பிக்க, அடுத்த பத்து வருடங்களில் கிட்டத்தட்ட $ 200 பில்லியன் தேவைப்படும் என்று மதிப்பிடுகிறார்கள். இத்தகைய பணம் அரசிடமிருந்தோ, பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்தோ வரமுடியாது. தனியாரும் இந்த முயற்சியில் ஈடுபடவேண்டும். பொதுத்துறை-தனியார் துறை இணைந்து செயலாற்றும் public private partnership - ppp (build-operate-transfer bot) மூலம் மட்டும்தான் இதைச் சரியாகச் செய்யமுடியும். (உ.ம்: துறைமுகங்கள், விமான நிலையங்கள், நகர சுங்கச்சாலைகள்.) ஆனால் அதே நேரத்தில் லாபம் இல்லாத பல இடங்களில் (உ.ம்: கிராமப்புறச் சாலைகள், விவசாயப் பாசனம்) தனியார் பங்கேற்பு இருக்காது. அங்கு அரசுதான் எப்படியாவது பணத்தைக் கொண்டுவரவேண்டும்.

இந்தக் கட்டுமானத்தின் முக்கியத்துவம் கருதி, பிரதமர் தலைமையில் ஓர் உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. திட்டக்குழுவும் தேவையான நிதியை எங்கிருந்து கொண்டுவருவது என்பது பற்றி யோசித்து வருகிறது.

-*-

உப்புச் சப்பில்லாத தி ஹிந்து கவரேஜ்
கொஞ்சம் உசத்தியான நியூஸ் டுடே கவரேஜ்