Monday, September 28, 2009

தமிழ்ப் பாரம்பரியக் கலை மூலம் கல்வி: தேவிகா (வீடியோ)

ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை அன்று, தமிழ்ப் பாரம்பரியக் குழுமம் சென்னையில் தக்கர் பாபா வித்யாலயாவில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த மாதம் செப்டெம்பர் 5 அன்று, அசீமா அறக்கட்டளையை நடத்திவரும் வி.ஆர்.தேவிகா கலந்துகொண்டு, பாரம்பரிய நடனத்தைக் கொண்டு கல்வி கற்றுத்தருதலைப் பற்றிப் பேசினார். அந்த வீடியோ (நான்கு துண்டுகளாக கீழே). அக்டோபர் 3 அன்று மாலை 5.30 மணிக்கு, வி.பி.தனஞ்சயன் ‘செவ்வியல் கலைகளும் மனிதப் பாரம்பரியமும்’ என்ற தலைப்பில் பேசுகிறார்.

இனி, தேவிகாவின் நிகழ்ச்சி:


Watch V.R.Devika on Traditional Performing Arts in Education (1/4) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com


Watch V.R.Devika on Traditional Performing Arts in Education (2/4) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com


Watch V.R.Devika on Traditional Performing Arts in Education (3/4) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com


Watch V.R.Devika on Traditional Performing Arts in Education (4/4) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

Sunday, September 27, 2009

கிழக்கு பாட்காஸ்ட்: அப்துல் கலாம் பொய் சொன்னாரா?

இப்படி திகிலூட்டும் தலைப்பு வைத்தால் நீங்கள் இந்த கிழக்கு பாட்காஸ்டை முழுவதுமாக இறக்கிக் கேட்கக்கூடும்.

1998-ல் இந்தியா நிகழ்த்திய அணு ஆயுதச் சோதனையில் ஏதோ குற்றம் உள்ளது என்று அந்தச் சோதனையை DRDO சார்பாக வழிநடத்திய விஞ்ஞானி சந்தானம் சொல்லியிருந்தார். இந்தியா வெடித்த ஒரு குண்டு, எதிர்பார்த்த அளவு பலன் தரவில்லை என்பது அவரது வாதம்.

உடனே அதனை மறுத்து அப்துல் கலாம், எம்.கே.நாராயணன், பிரஜேஷ் மிஸ்ரா, அனில் காகோட்கர், ஆர்.சிதம்பரம் ஆகியோர் மறுப்பு அறிக்கைகளை வெளியிட்டனர். சிதம்பரம் ஒரு முழு பவர்பாயிண்ட் பிரசெண்டேஷனையே காட்டினார். சந்தானம் யார்? பிறர் யாவர்? இந்தியாவிடம் அணு குண்டு உள்ளதா, இல்லையா? அப்துல் கலாம் பொய் சொன்னாரா, இல்லையா?

சகலத்தையும் அறிந்திட நீங்கள் கேட்கவேண்டியது: கிழக்கு பாட்காஸ்ட்
.

கிழக்கு மொட்டைமாடி: இருள் பொருள், இருள் ஆற்றல்

நேற்று மாலை (26 செப்டெம்பர் 2009) முனைவர் த.வி.வேங்கடேசுவரன், ‘இருள் பொருள், இருள் ஆற்றல்’ என்ற தலைப்பில் பேசினார். அதன் வீடியோ இங்கே. (யூட்யூப் ஒரு துண்டில் 10 நிமிடத்துக்கு மேல் தரமாட்டேன் என்று அழும்பு செய்ததால், veoh.com என்ற தளத்தின்மூலம் சேர்த்துள்ளேன். என் கணினியில் இறக்கிப் பார்க்க/கேட்க முடிகிறது. பிரச்னை என்றால் தகவல் சொல்லவும்.)

முதல் பகுதி


Watch Dark Matter, Dark Energy (1/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

இரண்டாம் பகுதி (பேட்டரி மாற்ற எடுத்துக்கொண்ட நேரத்தில் வீடியோவில் இரண்டு நிமிடங்கள் ரெகார்ட் ஆகவில்லை)


Watch Dark Matter, Dark Energy (2/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

வெறும் ஆடியோ மட்டும் போதும் என்றால் கிழக்கு பாட்காஸ்ட்

டீம் எவரெஸ்ட்

நேற்று ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன்.

காக்னசண்ட் டெக்னாலஜி சொலுஷன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் கார்த்தீபன் என்பவர் எவெரெஸ்ட் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இளையவர். 25 வயதுக்குள்தான் இருக்கும். அரசுப் பள்ளிகளில் அதிக வசதிகள் கிடைக்காத ஏழை மாணவர்களுக்கு உதவிகள் செய்வதுதான் இந்த அறக்கட்டளையின் நோக்கம்.

நாளடைவில் கார்த்தீபனுடன் கூட வேலை செய்யும் காக்னசண்ட் ஊழியர்கள் பணம், நேரம் என்று உதவ ஆரம்பித்தனர். தமிழகத்தில் உள்ள பல பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்கித் தருதல், படிக்க சுவாரசியமான பல புத்தகங்கள் வாங்கித் தருதல், பார்வையற்றோருக்கு அருகில் இருந்து படித்தல், அனாதை இல்லங்களில் வசிக்கும் குழந்தைகளோடு விழா கொண்டாடுதல் போன்ற பலவற்றை இவர்கள் செய்கின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும் நல்ல எண்ணங்களையும் சொல்லித்தரும் வாழ்க்கைச் சம்பவங்களைக் கோர்த்து அவற்றை ஒரு நல்ல புத்தகமாக எழுதி மானவர்களுக்குக் கொண்டு சேர்ப்பது என்ற நோக்கம் கார்த்தீபனுக்கு ஏற்பட்டது. காக்னசண்ட் ஊழியர்கள் 23 பேர் ஒன்று சேர, பல்வேறு அரசியல், சமூக, மதத் தலைவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட சுவாரசியமான விஷயங்களைச் சேகரித்து, எழுதினார்கள். இப்படி 100 சம்பவங்களைத் தொகுத்தபின், (முன்னாள் பதிவர்) மீனாக்ஷிசங்கரும் கார்த்தீபனும் என்னைத் தொடர்புகொண்டனர்.

அந்தத் தகவல்களைச் சேர்த்து ஒரு புத்தகமாக ஆக்கித் தருமாறு கேட்டுக்கொண்டனர். நான் கிழக்கு பதிப்பகம் வாயிலாகச் செய்துதந்தேன். (இது கிழக்கு வெளியீடு அல்ல. டீம் எவரெஸ்ட் வெளியீடு.)

புத்தகத்தை நான் வெளியிட, காக்னசெண்ட் தன்னார்வலர் ஒருவர் பெற்றுக்கொள்கிறார். நடுவில் இருப்பது கார்த்தீபன்.

இந்தப் புத்தகத்தை பல பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடத்திலும் கொண்டு சேர்த்து, காலை கூட்டத்தின்போது இதிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையாகச் சொல்லவைக்க கார்த்தீபன் திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக, திருவண்ணாமலை மாவட்டத்தின் அரசுப் பள்ளிகளில் இந்தப் புத்தகத்தை விநியோகிக்க முடிவு செய்து அனுமதி பெற்றுள்ளனர்.

நேற்று சென்னை காக்னசண்ட் அலுவலகத்தில் நடந்த வெளியீட்டு விழாவில் நான் கலந்துகொண்டேன். சில நிமிடங்கள் பேசினேன்.

***

ஐடியினால் இந்தியாவுக்கு நல்லதா, கெட்டதா என்று வலைப்பதிவுகள் முதல் பத்திரிகைகள், சினிமா வரை விவாதங்கள் நடக்கின்றன. என் பார்வையில் ஐடி இந்தியாவுக்கு பல நன்மைகளை வழங்கியுள்ளது.

1. முதலில், உலகத் தரத்தில், உலக நிறுவனங்களோடு போட்டி போட்டுக்கொண்டு இந்திய நிறுவனங்களால் சில காரியங்களைச் செய்யமுடியும் என்று நிரூபித்தது ஐடி துறைதான். அதைத் தொடர்ந்து இன்று பல துறைகளிலும் இந்த நம்பிக்கை பரவியுள்ளது.

2. வென்ச்சர் கேபிடல் முறையில் நிறுவனங்களை உருவாக்குதல், புரொஃபஷனல் நிர்வாகம், பங்குதாரர் தலையீடு (அதிகமாக) இல்லாமல் நிர்வாகிகள் முன்னெடுத்துச் செல்லும் தலைமை ஆகியவை ஐடியினால்தான் இந்தியாவுக்குக் கிடைத்தன.

3. ஊழியர்களுக்கு அதிக சம்பளம் என்பது ஐடி துறையால்தான் இந்தியத் தொழில்துறைக்குள் புகுத்தப்பட்டது. அது நாள் வரை, நீங்கள் டிஸ்கோ, டெல்கோ, எச்.எல்.எல் முதற்கொண்டு எந்தத் தனியார் நிறுவனத்தின் மிக உயர்ந்த பதவியில் இருந்தாலும், சொந்தமாக வீடு வாங்குவது என்பது கைக்கு எட்டாத ஒரு நிலையாகவே இருந்தது.

ஐடி சம்பளங்கள் பெருகப் பெருகவே, பிற தனியார் நிறுவனங்களும், தம் ஊழியர்களுக்கு அதிகச் சம்பளம் தரவேண்டி இருந்தது. தனியார் வங்கிகள், கன்சல்டன்சி நிறுவனங்கள், எஃப்.எம்.சி.ஜி, விளம்பரத் துறை என்று பலவற்றிலும் வேலை செய்தவர்கள் நல்ல பணம் பார்க்கத் தொடங்கினர்.

4. தனி மனித வசதிகள் பெருகப் பெருகத்தான், சமுதாய முன்னேற்றம் பற்றியும் அரசியல் மாற்றம் பற்றியும் யோசிக்கும் நிலை வரும். அரசியல் தலைவர்கள் முன்வைக்கும் மாற்றங்கள், தொழிலாளர் சங்கங்கள்/தலைவர்கள்/தொழிற் சங்கங்கள் முன்வைக்கும் மாற்றங்கள் ஆகியவை ஒரு பக்கம் இருக்க, நன்கு படித்து, நன்கு சம்பாதிக்கும், வசதியான வாழ்க்கை வாழும், லிபரல் எண்ணங்கள் கொண்டவர்கள் முன்வைக்கும் சமுதாய முன்னேற்றம் தொடர்பான கருத்துகள் மிகவும் முக்கியமானவை. இந்திய நடுத்தர வர்க்கம் ஐடிக்கு முன் இதைச் செய்யவில்லை.

ஏனெனில் ஐடிக்கு முன், இந்திய நடுத்தர வர்க்கம் ஒரு வீடு வாங்குவதையே வாழ்நாளின் மிகப்பெரிய கனவாக நினைத்து, அதைச் செய்யமுடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தது. அதனால் சமுதாய முன்னேற்றம் பற்றி யோசிக்க முடியாத ஒரு நிலை இருந்தது. வேலை பார்க்கும் காலம் வரை அதைத்தவிர வேறு எதையும் யோசிக்க முடியாத நிலை. வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டால், உடலில் வலு இல்லாத நிலை. அந்த நிலை, இன்றைய ஐடி சம்பளத்தால் மாறியுள்ளது.

அனைவரும் பிஸ்ஸா சாப்பிடும், காசை வீசி எறியும் அக்கறையற்ற ஐடி ஆசாமிகளையே வகைமாதிரிகளாகக் காட்டுகிறார்கள். அப்படிப்பட்ட ஆசாமிகள் நிறைய உண்டு. மாற்றங்கள் அவர்களால் நிகழ்வதல்ல. ஆனால், ஐடியின் வரவுக்குப் பின்னர்தான், இளைஞர்கள் பலர் ஓரளவுக்குப் பணம் சம்பாதித்தபின், 30-களிலேயே வேலைகளைத் துறந்துவிட்டு, சமுதாய முன்னேற்றம் என்னும் செயலில் இறங்குகிறார்கள். இவர்கள் வெறுப்பை வளர்ப்பதில்லை. அன்பை வளர்க்கிறார்கள். இவர்களது நண்பர்கள் வேலைகளில் இருந்துகொண்டு, தமது வருமானத்தில் ஒரு பகுதியை முன்னேற்றப் பணிகளுக்குக் கொடுக்கிறார்கள்.

***
புத்தகத்தை காக்னசெண்ட் CSR நிர்வாகி அர்ச்சனா வெளியிட, ‘பயிர்’ செந்தில் பெற்றுக்கொள்கிறார்.

அப்படி ஓர் இளைஞர்தான் செந்தில். ‘பயிர்’ என்ற அமைப்பை திருச்சிக்கு அருகில் தேனூர் என்ற கிராமத்தில் நிறுவியுள்ளார். அமெரிக்காவில் செய்துவந்த வேலையை உதறிவிட்டு கிராமப்புற மேம்பாட்டில் ஈடுபட்டு வருகிறார். அவரும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். கார்த்தீபனும் அப்படிப்பட்ட ஓர் இளைஞரே. அவருக்கு காக்னசெண்ட் நிறுவனமும், உடன் வேலை செய்யும் 3000-க்கும் அதிகமான தன்னார்வலர்களும் பணமாகவும் நேரமாகவும் ஒதுக்கி உதவுகின்றனர்.

***
அர்ச்சனாவிடமிருந்து கார்த்தீபனின் தாய் (பள்ளி ஒன்றின் தலைமையாசிரியராக இருக்கிறார்) பெற்றுக்கொள்கிறார்.

112 பக்கங்கள் கொண்ட ‘இளம் இந்தியாவுக்கு...’ என்ற இந்தப் புத்தகத்தைப் பெற விரும்பினால், நீங்கள் கார்த்தீபனுக்கு எழுதலாம். அல்லது ஏதேனும் பள்ளிக்கு இந்தப் புத்தகம் போய்ச் சேரவேண்டும் என்று விரும்பினாலும் அவரைத் தொடர்பு கொள்ளலாம். அவரது மின்னஞ்சல் முகவரி: teameverest@yahoo.co.in

Saturday, September 26, 2009

கிழக்கு மொட்டைமாடி + கிழக்கு பாட்காஸ்ட் அறிவிப்பு

இன்று (சனிக்கிழமை), 26 செப்டெம்பர் 2009, மாலை 6.00 மணிக்கு, த.வி.வெங்கடேசுவரன், ‘இருள் பொருள், இருள் சக்தி’ என்ற தலைப்பில் இயல்பியலில் புதிதாக வந்துள்ள கொள்கையை, எளிமையான முறையில் விளக்கிப் பேசுவார்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை), 27 செப்டெம்பர் 2009, மதியம் 12.00 மணி தொடங்கி 1.00 மணி வரை, ஆஹா FM, 91.9 MHz பண்பலை வானொலியில் கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சி 10-வது வாரமாக நடக்கிறது. இந்த வாரம், ‘சித்தர்கள்’ பற்றிய நிகழ்ச்சி. ஸ்ரீநிவாச ராகவன், உமா சம்பத், சித்ரா ஆகியோர் கலந்து பேசுவார்கள்.

Friday, September 25, 2009

இறவா நம்பிக்கை

வெகு நாள்களுக்குப் பின் ஒரு பெண் இன்று என்னை செல்பேசியில் அழைத்தார். ‘சார், என்னை ஞாபகம் இருக்கா? இப்ப நான் நல்ல நிலைல இருக்கேன், சார்’ என்றார்.

நன்றாக ஞாபகம் இருந்தது. இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் அவர். சில ஆண்டுகளுக்குமுன் இலங்கையில் கவிஞர் சு.வில்வரத்தினத்தைச் சந்தித்தபோது, இந்தப் பெண்ணுக்கு உதவுமாறு அவர் என்னைக் கேட்டுக்கொண்டார். இந்தப் பெண் சென்னையில் ஒரு நடனக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தார். அவரது படிப்புக்கு உதவி செய்து வந்த அவரது தந்தை அகால மரணம் அடைய, மேற்கொண்டு பண உதவி செய்ய யாரும் இல்லாத நிலை. இவ்வளவு செலவு செய்தாகி விட்டது. இனி படிப்பில் மீதியையும் முடித்தால்தான் பிரயோஜனம்.

நான் சில நண்பர்களிடம் மின்னஞ்சல் எழுதிக் கேட்டேன். ஒன்றும் நடக்கவில்லை. இடையில் அந்த மாணவியும் இலங்கை அரசிடம் உதவித் தொகை பெறுவதற்கு முயன்றுகொண்டிருந்தார். இலங்கை அரசு கிட்டத்தட்ட பண உதவி செய்யப்போகும் நேரம், அப்போதுதான் இலங்கையில் போர் வெடித்துப் பெரிதானது. உதவித்தொகை கை நழுவிப் போயிற்று.

என்னால் முடிந்த அளவு உதவினேன். அவர் சில தோழிகளுடன் வீடு ஒன்றில் தங்க, சாப்பிட, கல்விக் கட்டணத்துக்கு என்று நிறையப் பணம் தேவைப்பட்டிருக்கும். நான் மாதாமாதம் கொடுத்த கொஞ்சம் பணத்தில் அவர் எப்படிச் சமாளித்தார் என்று தெரியாது. வேறு சிலரும் உதவியிருக்கலாம்.

ஒருவிதமாக அவர் படித்து முடித்தார். அதற்குப் பின் மேற்கொண்டு அவர் எப்படியோ தன்னைச் சமாளித்துக்கொண்டார். கடந்த இரு ஆண்டுகளில் எனக்கு அவருடன் தொடர்பு ஏதும் இல்லை.

இப்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பேசினார். படித்து பட்டம் பெற்றபிறகு, சென்னையில் ஒரு நாட்டியப் பள்ளி தொடங்கியுள்ளாராம். சுமார் 80 பேர் கற்றுக்கொள்கிறார்களாம். இலங்கையிலிருந்து தன் தாயை அழைத்து வந்து இங்கேயே வைத்திருக்கிறாராம். தமிழ்ப் பாரம்பரிய நடனம் தொடர்பாக ஆராய்ச்சி செய்து ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளாராம். அடுத்த மாதம் தன் நாட்டியப் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து ஒரு பெரும் நாட்டிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

தனி மனிதர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் தடைக்கற்கள் ஏராளம். நம்மில் பலருக்கும் எதிர்காலம் தெளிவில்லாமல்தான் உள்ளது. அரசுகள், ராணுவங்கள், போராட்ட இயக்கங்கள் என்று நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத பலரும் நம் வாழ்வைப் பெருமளவு பாதிக்கிறார்கள். இவற்றைமீறி, தனி மனிதச் சோகங்களை மீறி, நம் வாழ்வை முன்னெடுத்துச் செல்வது எளிதானதல்ல.

வெகு சிலரே தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டு, தம் வாழ்க்கையின் லட்சியத்தை அடைகிறார்கள். அப்படிப்பட்டவர்களைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.

நம்பிக்கையை இழக்காமல் இருக்கவேண்டிய காலம் இது.

சினிமா வியாபாரம்

சினிமா தொழிலில் ஈடுபட்டு வரும் கேபிள் சங்கர் அருமையான தொடர் ஒன்றை தன் வலைப்பதிவில் எழுதி வருகிறார். தமிழ் சினிமா தயாரிக்கப்படும் நிலையிலிருந்து எப்படி விற்பனை செய்யப்படுகிறது என்பதை இந்தத் தொடர் எளிமையாக விளக்குகிறது.

இதில் பெரும்பாலானவற்றை அவர் என்னிடம் நேரடியாகவே விளக்கியுள்ளார். இருந்தாலும், மீண்டும் ஒருமுறை பதிவில் படித்துத் தெளிந்துகொள்ள முடிகிறது. தொழில்துறையில் இருக்கும் சிலர் இவ்வாறு வலைப்பதிவுகளுக்கு வருவது இந்த முறையில் நமக்குப் பெரும் பலனைத் தருகிறது.

கரசமங்கலம்

இரு நாட்களுக்கு முன் வேலூர் மாவட்டத்தில் காட்பாடி தாலுக்காவில் உள்ள கரசமங்கலம் என்ற கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு சன்பீம் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்) முகாம் அமைத்திருந்தனர். அந்த கிராமத்தில் சில சுத்த/சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது, அங்குள்ள மக்களிடம் பல தகவல்களைச் சேகரிப்பது போன்றவை அவர்களது வேலைகள். அந்த மாணவர்களிடமும் அங்குள்ள மக்களிடமும் ‘உரை’ ஆற்ற நான் சென்றிருந்தேன்.

கல்வி என்பதைப் பொருத்தமட்டில், பெரும்பான்மையினர் அதனை ஒரு பேப்பர் சான்றிதழ் பெற்றுத்தருவதாக மட்டுமே பார்க்கிறார்கள். ஒரு டிகிரி, அடுத்து ஒரு வேலை, அது கொடுக்கும் சம்பளம், அதனால் வரும் வசதிகள் என்றோடு மட்டும் கல்வி என்பதைக் குறுக்கிவிட முடியாது.

இதுதான் நான் எடுத்துக்கொண்ட டாபிக். கல்வி என்றால் என்ன என்பதில் ஆரம்பித்து, கல்வியால் எப்படி சமூக மாற்றங்களைக் கொண்டுவரமுடியும், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதன்மூலம் மக்கள் வாழ்வில் மலர்ச்சியைக் கொடுக்கமுடியும் போன்றவற்றை சில உதாரணங்களுடன் பேசினேன்.

அது ஒரு தலித் காலனி. அங்குள்ள வீடுகளில் மக்கள் வாசலில் உட்கார்ந்துகொண்டு, பீடி சுற்றிக்கொண்டே பேச்சைக் கேட்டனர். அவர்களுடனும் என் உரையாடல் தொடர்ந்தது. வாழ்வுக்கு வழி இல்லாத நிலையில், இந்தக் கல்வியால்தான் என்ன பயன் என்று அவர்கள் கேட்கலாம். அவர்களது கிராமத்தில் இருக்கும் ஒரு தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அங்கு வந்திருந்தனர். அவர்களுடன் பேசினேன். அவர்களைப் பார்க்கும்போது திகிலாக இருந்தது. தேவையான ஊட்டச்சத்து இல்லை. அவர்கள் படிக்கும் பள்ளிகளில் எந்தவிதமான கல்வி கற்பிக்கப்படும் என்று நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை.

முத்து என்ற நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் - பார்க்க இரண்டாம் வகுப்பு மாணவனைவிடக் குள்ளமாக வளர்ச்சி அதிகம் இன்றி இருந்தான். “படிச்சப்புறம் என்னவா ஆக ஆசை?” என்று கேட்டேன். “வாத்தியாரா” என்று பதில் சொன்னான். சுற்றி உள்ள அனைத்துக் குழந்தைகளும் கைகொட்டிச் சிரித்தனர்.

ஏன் வாத்தியார்? நல்ல வேலைதான். தப்பில்லை. ஆனால் இந்தப் பையன் அந்த வேலையை விரும்பக் காரணம், அந்த வேலையின் உயர்வால் அல்ல. கையில் பிரம்பு வைத்திருப்பார். அதிகாரத்தின் சின்னம் பிரம்பு. பசங்களை மிரட்டி, உருட்டி வேலை வாங்குவார். அவருக்குக் கோபம் வந்தால் பிரம்பால் விளாசுவார். அந்த அதிகாரம், சக்தி வேண்டும் அந்தச் சிறுவனுக்கு. அவன் பார்வையில் அங்கு அதிகாரம் மிகுதியாக இருக்கும் ஒரே ஒருவர் அந்த ஆசிரியர்.

இந்த மாணவர்களின் எதிர்காலம் பெருத்த கவலையைத் தருகிறது. அடுத்தடுத்த படிநிலைகளைத் தாண்டி, படித்து, பணப் பற்றாக்குறையை எப்படியோ சரி செய்து, கல்விமீது ஆழ்ந்த பற்று கொண்டு, அதிகார அத்துமீறல்களை, வன்கொடுமைகளைத் தாண்டி, நல்ல வேலை ஒன்றை இவர்கள் பெறுவதற்கு என்ன விலை கொடுக்கவேண்டுமோ!

பிரச்னையின் அடி ஆழம் தெரியாமல் தீர்வுகளைச் சொல்லமுடியாது. மேலும் பல கிராமங்களுக்கு அடுத்து வரும் நாள்களில் செல்ல உள்ளேன்.

Thursday, September 24, 2009

கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 9: அம்பானி பற்றி சொக்கன்

கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட முதல் புத்தகம் சொக்கன் எழுதிய அம்பானி. முதல் பதிப்பு வெளியான மாதம் ஏப்ரல் 2004. அதன்பிறகு அந்தப் புத்தகத்தை மூன்று முறை மாற்றம் செய்துள்ளோம். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அதில் கைவைக்கவில்லை. ஆங்கிலத்திலும் கொண்டுவந்துள்ளோம். தமிழில் ஒலிப்புத்தகமாகக் கொண்டுவந்துள்ளோம். தமிழில் இதுவரை 30,000 பிரதிகளுக்குமேல் விற்றிருக்கும். இப்போதும் தொடர்ந்து விற்றுவருகிறது.

சொக்கன் சித்ராவுடன் இந்தப் புத்தகம் பற்றியும், அம்பானி குப்பைமேட்டிலிருந்து கோடீசுவரர் ஆனது பற்றியும், அதற்காக அவர் மேற்கொண்ட வழியைப் பற்றியும், இப்போது அம்பானி குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சச்சரவுகள் பற்றியும் விரிவாகப் பேசுகிறார்.

கிழக்கு பாட்காஸ்ட்

சொக்கன் எழுதியுள்ள புத்தகங்கள்

இந்த பாட்காஸ்டுக்குத் தொடர்புள்ள புத்தகங்கள்:

           

Monday, September 21, 2009

உரையாடல் சிறுகதைப் பட்டறை: சா.தேவதாஸ்

உலகச் சிறுகதைகள் பற்றி சா. தேவதாஸ் பேசினார். கடைசியில் சிறு பகுதி ரெகார்ட் செய்யமுடியாமல் போய்விட்டது (பேட்டரி காலி).

உரையாடல் சிறுகதைப் பட்டறை: பாஸ்கர் சக்தி

உரையாடல் சிறுகதைப் பட்டறையில் முதலில் பேசியவர் பாஸ்கர் சக்தி. நிறைய நேரம் பேசியவரும் இவரே. இதைப் படம் பிடிக்கும்போது கையில் ஒளிப்பதிவுக் கருவியை வைத்திருந்ததால் நிறைய ஆடும்.

ஸ்லைட்ஷேரில் 11 துண்டுகளை அடுத்தடுத்து வைத்துக் கொடுத்துள்ளேன். எனவே ஒரு வீடியோ துண்டு முடிந்ததும் கீழே உள்ள “Next” பொத்தானை இருமுறை அழுத்தி, அடுத்த வீடியோ துண்டையும் பார்க்கவும். ஆடியோ தரம் இப்போதைக்கு அவ்வளவுதான். மேம்படுத்த முடியுமா என்று பின்னர் பார்க்கிறேன்.

உரையாடல் சிறுகதைப் பட்டறை: பா.ராகவன், வீடியோ

ஆடியோ தரம் சுமார்தான் (சிலர் கேட்கவே இல்லை என்றனர்). நான் கேட்டுப் பார்த்ததில் சரியாகவே வந்தது. ஒரிஜினலை சிறிதுபடுத்தி, சற்றே ஃபார்மட் மாற்றி (இல்லாவிட்டால் பல கிகாபைட்கள் போகிறது), இப்படிச் செய்ததில் நிச்சயம் ஆடியோ குவாலிட்டி சற்று குறைந்துதான் போயுள்ளது. இப்போதைக்கு, இவ்வளவுதான்...

Sunday, September 20, 2009

உரையாடல் சிறுகதைப் பட்டறை: யுவன் சந்திரசேகர்

இது ஒரு வீடியோ பதிவு. ஆனால் ஸ்லைட்ஷேரில் செருகப்பட்டது. யூட்யூபில் பத்து நிமிடத்துக்குக் கீழ் என்ற லிமிட் இருப்பதால், தனித்தனியாக 12 பதிவுகளாகப் போடாமல், அனைத்தையும் ஒரே இடத்தில் தொகுத்துக் கொடுக்கச் செய்த கொஞ்சம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் முயற்சி.


.

கிழக்கு மொட்டைமாடி: சாரு நிவேதிதா (பழசு)

சரியாக ஓராண்டுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது. அதுதான் கிழக்கு மொட்டைமாடியில் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் கூட்டம். சரியான முன்னேற்பாடுகள் இல்லை என்றுதான் சொல்வேன். ஆடியோ ரெகார்டிங் செய்ய சரியான வசதிகளைச் செய்யவில்லை. மைக், ஆம்ப்ளிஃபையரிலிருந்து நேரடியாக ஒலிப்பதிவுக் கருவிக்குச் சென்றால் ஒலிப்பதிவின் தரம் துல்லியமாக இருக்கும். ஆனால் அன்று ச.ந.கண்ணன் கையில் இருந்த ஒரு சுமாரான ஒலிப்பதிவுக் கருவியில் மட்டுமே ரெகார்ட் செய்ய முடிந்தது. அதிலும் இடையே (சுமார் 1 மணி நேரம் தாண்டி) கொஞ்சம் ரெகார்ட் ஆகவில்லை.

இதுநாள் வரை அந்த வேவ் கோப்புகளை சும்மாவே வைத்திருந்தேன். பிறகு இன்று ஓராண்டு நிறைவை முன்னிட்டு, அதை ஒருமாதிரி, ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய MP3 கோப்பாக மாற்றி ஏற்றிவிட்டேன்.

இதோ அந்த பாட்காஸ்ட்.

ச.ந.கண்ணனின் பதிவு

(இதுபற்றிய பழைய பதிவு: இந்தப் பதிவில் கேட்டுக்கொண்டபடி, இனி நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள் வீடியோ பதிவாகவும் வரும். என்ன, யூட்யூப் விருப்பத்துக்கு ஏற்ப 10 நிமிடத் துண்டுகளாகக் கொடுக்கவேண்டி வரும். அதற்கு மாற்று வழி என்ன என்று பார்க்கிறேன்.)

Saturday, September 19, 2009

உரையாடல் சிறுகதைப் பட்டறை: பா.ராகவன்

சென்ற வாரம் (13 செப்டெம்பர் 2009) உரையாடல் அமைப்பு நிகழ்த்திய சிறுகதைப் பட்டறையில் கலந்துகொண்டு பா.ராகவன் பேசியதன் ஒலிப்பதிவும் ஸ்லைட்களும் இணைந்த வடிவம் கீழே. (கொஞ்சம் கொஞ்சமாக பிற ஆடியோ, பிற வீடியோ ஆகியவை சேர்க்கப்படும்.)


ஆடியோ மட்டும் வேண்டும் என்றால்... இங்கே.
.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்: அ.கி. வேங்கட சுப்ரமணியன்மறைந்த அ.கி.வேங்கட சுப்ரமணியன், 30 மார்ச் 2009 அன்று கிழக்கு மொட்டைமாடியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாகப் பேசியதின் ஒலி வடிவம்.

கிழக்கு பாட்காஸ்ட்

அஞ்சலி பதிவு

நாளை (20 செப்டெம்பர் 2009) காலை 10.00 - 12.00 மணிக்கு, அன்று தேவநேயப் பாவாணர் நூலக மாடியில் (எல்.எல்.ஏ கட்டடம்) வேங்கட சுப்ரமணியனுக்கு உந்துநர் அறக்கட்டளை சார்பில் அஞ்சலிக் கூட்டம் நடைபெறும்.
.

கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 8: சீனா பற்றி ராமன் ராஜா, மருதன், பிரசன்னா

இந்தியா-சீனா உறவு, சீனா பற்றி அரிய பல தகவல்கள். கம்யூனிசம், குடியாட்சி. தெரிந்துகொள்ள லட்சக்கணக்கான விஷயங்கள். அனைத்தையும் மிகச் சுவாரசியமாகக் கொண்டுவருகிறது இந்த கிழக்கு பாட்காஸ்ட். சீனா: விலகும் திரை என்ற பல்லவி அய்யர் எழுதிய புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்த ராமன் ராஜா, மாவோ, திபெத் போன்ற புத்தகங்களை எழுதிய மருதன், சீனாவில் வேலை செய்த, அவ்வப்போது அங்கு சென்று வரும் பிரசன்னா ஆகியோர் பேசுகிறார்கள். சித்ரா நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்துகிறார். ரமேஷ் இடையில் போனில் பேசி சீன கம்யூனிசம், இந்தியாவில் குடியாட்சி பற்றிய தன் கருத்தையும் சொல்கிறார்.

கிழக்கு பாட்காஸ்ட்

தொடர்பான புத்தகங்கள்:

       

மருதன் எழுதியுள்ள புத்தகங்கள்
.

Thursday, September 17, 2009

இந்திய தேசியம் x திராவிடம்

இந்திய தேசியம் என்ற கருத்தாக்கம் எப்போது ஏற்பட ஆரம்பித்தது என்று அறுதியிட்டுக் கூறமுடியுமா என்று தெரியவில்லை. இந்திய தேசிய காங்கிரஸ் என்று ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம், தாதாபாய் நௌரோஜி ஆகியோர் காங்கிரஸ் கட்சியை 1885-ல் ஆரம்பித்தபோதா? நிச்சயமாக அப்போது இந்திய தேசியம் என்ற கருத்தின் ஆரம்பமாவது இருந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பெயர் கட்சியின் முன்னொட்டாக இருந்திருக்க முடியாது. 1857 கலவரங்களின்போது நிச்சயமாக அந்தக் கருத்து நிலையாக இருந்திருக்க முடியாது. எனவே இந்த இரு ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில்தான் அந்த எண்ணம் வலுப்பெற்றிருக்கவேண்டும்.

தேசிய உணர்வு என்பது ஒருவர்மீது திணிக்க முடியாதது. ஏதோ ஓர் இனம் புரியாத, தெளிவில்லாத, ஆனால் பெருமையைப் பறைசாற்றுகிற ஓர் உணர்வுதான் தேசியம். ‘நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்’ என்றால் எதற்காக அந்தப் பெருமை என்று பிறரிடம் சொல்லத் தெரியாவிட்டாலும், அந்தப் பெருமை உணரப்படவேண்டும். ‘சாரே ஜஹான் சே அச்சா’ என்பது இன்று முற்றிலும் உண்மை அல்ல என்றாலும், அப்படி ஒருவர் உணரவேண்டும்; அல்லது வருங்காலத்தில் ஒரு நாள் (எந்த அடிப்படையிலாவது) உலகிலேயே மிகச் சிறந்த நாடாக இந்தியா ஆகும் என்ற நம்பிக்கை இருக்கவேண்டும். அந்த ஏற்றத்துக்கு ஒரு துரும்பையும் கிள்ளி எறியாவிட்டாலும், இந்தியாவை தன் முதுகில் ஏற்றிச் சுமந்து மலை உச்சிக்கே கொண்டு சென்றதுபோன்ற, வெட்டி முறித்ததுபோன்ற ஓர் உணர்வு ஒருவரிடம் இருக்கவேண்டும்.

ஆனால் இதெல்லாம் 1885-ல் சாத்தியமாகியிருக்காது. அப்படியென்றால் அந்தக் காலகட்டத்தில் இந்திய தேசியம் என்றால் என்ன பொருளாக இருந்திருக்க முடியும்?

ஆரியவர்த்தம், புண்ணிய பூமி, வேதங்கள், உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை, புண்ணிய நதிகள், புண்ணியத் தலங்கள், சிந்து-சரஸ்வதி நாகரிகம், என்றும் உயிர்ப்புடன் இருக்கும் இந்து மதம், சமஸ்கிருதம் என்ற அற்புதமான மொழி, கலை, அறிவியல், இசை ஆகியவற்றில் பிரம்மாண்ட வளர்ச்சி, பிரமிக்க வைக்கும் கட்டடங்கள், வளமான நகரங்கள், அவற்றில் கொட்டிக் கிடந்த செல்வம், அதை வெட்டிச் செல்ல முயன்ற அந்நியப் படையெடுப்புகள், அந்தப் படையெடுப்புகளையும் மீறி, செல்வமும் கைவினைத் திறனும் செழித்த பாரதவர்ஷம்.

இவற்றை ஒருவர் முன்வைக்கலாம். ஆனால் இதையே அனைவரும் ஏற்க முடியுமா? இந்தியாவுக்கு வந்து இதையே தன் நாடாக வரித்த முஸ்லிம்களால் முடியவில்லை. அவர்களைப் பொருத்தமட்டில், இந்து மதம் அழிக்கப்படவேண்டியது. பல நூற்றாண்டுகளாக அவர்கள்தான் (டெல்லியில்) ஆட்சியில் இருந்தனர். அவர்களது கட்டடக் கலை, அவர்களது மசூதிகள், அவர்களது மொழி (பாரசீகமும் அரபியும் கலந்த உருது), அவர்களது இசை என்பது மேலே சொன்ன பலவற்றிலிருந்தும் வேறுபட்டது மட்டுமின்றி, மேலே சொன்ன பலவற்றுக்கும் எதிரானதும்கூட.

அதைப்போலவேதான் திராவிடம் என்னும் கருத்தாக்கமும். இந்து மதத்தின் மிகச் சிறந்த புனிதக் கருத்துகளின் அடிநாதமே வர்ண முறையும், அதன் விளைவாக தெற்கில் ஏற்பட்ட பிராமண x சூத்திர போராட்டங்களும், தீண்டாமைப் பிரச்னையும்.

ஆரியம் x திராவிடம்
சமஸ்கிருதம் (அல்லது அதன் பினாமியான இந்தி) x தமிழ்
பிராமணர்கள் x சூத்திரர்கள்
மனு நீதி x திருக்குறள் நீதி

என்ற எதிர் எதிர் நிலைகள் உருவாக்கப்பட்டு, திராவிடர்கள் (அல்லது ஆதி தமிழர்கள்) காக்கப்படவேண்டும், ஆரிய மாயையிலிருந்து விடுபட வேண்டும், பிராமண ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறவேண்டும், மனுவின் அநீதிக்கு பதில் குறளின் சமதர்ம நீதி முன்வைக்கப்படவேண்டும் என்று சில சூத்திரங்கள் உருவாயின.

இதுவும் குறிப்பிட்டு எந்த ஆண்டில் தோன்றியது என்று எனக்குத் தெரியாது. நிச்சயமாக 19-ம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கவேண்டும். நீதிக் கட்சி, பெரியாரின் திராவிட இயக்கம், பின்னர் உருவான அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை இந்த சூத்திரங்களை முன்வைத்தன.

இதில் பெரியாரின் பங்கு கணிசமானது. திராவிடம் என்பதற்கான வலுவான தத்துவார்த்தப் பின்னணியை உருவாக்கியவர் அவர்தான். அது பெரும்பாலும் எதிர்மறைக் கருத்துகளால் ஆனது. திராவிடம் சிறந்தது என்பதை நிரூபிப்பதற்கு பதில் ஆரியம் மோசமானது என்று காட்டிவிட்டால் போதும். திராவிடம் மோசமானது என்று யாராவது ஓர் உதாரணத்தைக் காட்டினால், ஆரியம் அதைவிடவும் மோசமானது என்று இன்னோர் உதாரணத்தைக் கொண்டு நிரூபித்தால் போதும். ஆரியம், சமஸ்கிருதம் என்றால் வேதம், புராணம் என்று இந்திய தேசியவாதிகள் சொன்னால், அவற்றையே எடுத்துக்கொண்டு, புராண நாயகர்கள் எப்படி மோசமானவர்கள் என்று விளக்கிவிடலாம்.

புராணங்கள் அனைத்திலும் ஆபாசத்தைத் தேடி, பதிப்பித்தபின், பெரியாரின் அடுத்த குறி பிராமணர்கள் மீதாக இருந்தது. மூட நம்பிக்கைகளை விதைத்தல், அப்பாவி மக்களை ஏமாற்றுதல், சோம்பேறிகளாக, உட்கார்ந்த இடத்திலேயே இருந்து கடவுளின் இடைத்தரகர்கள் என்று தங்களைக் காட்டிக்கொண்டு, அப்பாவி சூத்திரர்கள் கஷ்டப்பட்டு உழைத்த உழைப்பை உறிஞ்சி, உண்டு கொழுத்தவர்கள் என்பதோடு மட்டுமின்றி, இந்த பிராமணர்கள், வாய்ப்பு கிடைத்தவுடனேயே ஆங்கிலேயர் கொண்டுவந்த கல்வியைக் கற்று வளமான மாத வருமானம் கொடுக்கும் அரசு வேலைகளை தம் சதவிகிதத்துக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாமல் பெருமளவு பிடுங்கிக்கொண்டனர். அத்துடன் மெரிட் என்ற கருத்தை முன்வைத்து தமது செல்வாக்கு சரியாமல் பார்த்துக்கொண்டனர். இதை எதிர்க்கவேண்டியது பெரியாரின் முக்கிய வேலையானது.

புராணங்களை எதிர்ப்பது போலவே இங்கும், பிராமணர்கள் போற்றுவதெல்லாம் இழிசெயல்களாகக் காட்டப்பட்டன. பிராமணர்கள் தங்களைத் தனித்துக் காட்டிக்கொள்ள பூணூல், பூஜை புனஸ்காரம், நடை, உடை, பாவனை, பேச்சு, வழக்கு ஆகியவற்றை உயர்ந்தவையாகக் காட்டினால் அவையே இழிந்தவையாக கேரிகேச்சர் செய்யப்பட்டன. இதில் பெரியாரும் அவரது தொண்டர்களும் பெருவெற்றி பெற்றனர் என்றே சொல்லலாம்.

பிராமணர்-சூத்திரர் போராட்டம் இட ஒதுக்கீடு என்னும் புள்ளியில் வந்து நின்றது. இட ஒதுக்கீடு என்பது இடைக்காலத் தீர்வு மட்டுமே. அதன்மூலம் ஓரளவுக்குத்தான் பிரச்னைகள் தீருமே தவிர, முழுமையான சாதிக் கலப்பு ஏற்பட்டால்தான் இந்தப் பிரச்னை தீரப்போகிறது. அதற்கு இன்னும் இரு அல்லது மூன்று நூற்றாண்டுகள் ஆகலாம். இதில் தீண்டாமைப் பிரச்னை என்பதற்கு எந்தவிதமான தீர்வும் காணப்படவில்லை. இன்றுவரை தொடர்கிறது.

சமஸ்கிருதம் (இந்தி) என்ற மொழிக்கு எதிரான போர் எளிதில் முடியவில்லை. இன்றுவரை தொடர்கிறது.

இந்திய சுதந்தரத்துக்கு முன்னாவது, இந்திய தேசியவாதிகள் ஓரளவுக்கு சமரசம் செய்துகொள்ளும் மனப்பான்மையைக் கொண்டிருந்தனர். ஆனால்
சுதந்தரத்துக்குப் பின், முரட்டுத்தனத்தை மட்டுமே முன்வைத்தனர். ராஜேந்திர பிரசாத், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் இந்தி வெறி இன்றுவரை கபில் சிபலின் இந்தி வெறியில் வந்து நிற்கிறது. இன்றைய 2009-லும் மக்களவை செக்ரடேரியட், ஒரு மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தமிழில் பேசமுடியாது என்று மறுக்கும் நிலை உள்ளது. பெரியார், அண்ணா, கருணாநிதி வரிசையில் இன்னும் பல தலைவர்கள் ஓங்கிக் குரல் கொடுத்தால் மட்டுமே இந்த அநீதி ஓயும். மக்களாகிய நாமும் இதற்கு நம் பங்கைச் செலுத்தவேண்டும்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பெரும்பாலான அநீதிகளை ஒழித்துவிட்டது. அனைவருக்குமான சம உரிமைகள், சிறுபான்மையினருக்கு அதிகபட்ச உரிமை போன்ற லிபரல் கருத்துகள்தான் இந்தியாவில் புழங்குகிறது. ஆனால் நீதி பரிபாலனம் என்பதில், நீதிபதிகள் எப்படி நீதியை நிறுத்து வழங்குகிறார்கள் என்பதில் திராவிடம் அதிக ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இதுவும் நாளடைவில் மாறவேண்டிய ஒன்றுதான்.

ஆரிய, சமஸ்கிருத புராணங்களை எதிர்க்கும்போதுதான் பகுத்தறிவு என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. ஆரியம் என்றால் மூட நம்பிக்கை. எனவே அதற்கு மாற்றான திராவிடம் என்றால் பகுத்தறிவு. ஆனால், இன்றுவரை மூட நம்பிக்கை ஒழிப்பு என்பது மாறிவிடவில்லை. பெரியார் அனைத்து மூட நம்பிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தாலும் பெரும்பான்மைத் தமிழர்கள் வசதியாக ராகு காலம், எம கண்டம் போன்ற ஆரிய மூட நம்பிக்கைகளை மட்டும் கேலி செய்துவிட்டு, இப்போது வாஸ்து, ஃபெங் ஷூயி, நேமாலஜி, ஜெம்மாலஜி என்று வெளுத்துக்கட்டுகிறார்கள்.

திராவிடக் கருத்தாக்கம், இந்திய தேசியக் கருத்தாக்கத்தை முற்றிலுமாகச் சிதைத்து ஒழித்துவிடவில்லை. மாறாக, இந்திய தேசியத்தை பெருமளவு செழுமைப்படுத்தியுள்ளது. அதன் முரட்டுத்தனங்களை முடிந்த அளவு குறைத்து, ஐரோப்பிய லிபரல் கருத்தாக்கத்தை நோக்கிச் செல்ல வைத்துள்ளது. அதுதான் திராவிடத்தின் வெற்றி என்று கொண்டாடவேண்டும். இனியும் தொடர்ந்து இந்திய தேசியத்தைச் செழுமைப்படுத்தி, சிறுபான்மை மக்களின் நலன்கள் நசுக்கப்படாதவாறு காப்பதிலும், தீண்டாமையை ஒழிப்பதிலும், அனைத்து இந்திய மொழிகளுக்கு சம உரிமை கிடைப்பதிலும்தான் திராவிடத்தின் முழு வெற்றியும் இருக்கப்போகிறது. பெரியாரின் முழு வெற்றியும் கூட.

Wednesday, September 16, 2009

செம்பருத்தி

தன் அண்ணன் கோபாலசாமி அவரது நண்பர் வாங்கிய கடனுக்கு ஜவாப்தாரியாகக் கையெழுத்து போட்டதால் நாசமாகிவிட்டாரே என்று தன் பங்கு நிலத்தையும் பெரியண்ணன் பங்கு நிலத்தையும் ராவுத்தரிடம் விற்ற சட்டநாதன். சுலைமானின் அப்பா ராவுத்தர் வாங்கிய நிலத்தில் ராம, லக்ஷ்மண, சீதா, அனுமத் சமேத விக்கிரகங்கள். தான் காதலித்த (தன்னைக் காதலித்த) பெண் குஞ்சம்மா, தன் சின்ன அண்ணனின் மனைவியாகி, சின்ன அண்ணன் முத்துச்சாமி அகால மரணமடைய சட்டநாதனுக்கும் குஞ்சம்மாவுக்கும் இடையே ஏற்படும் பாலியல் டென்ஷன். சின்ன அண்ணன் சாவதற்குமுன் கைகாட்டிய குடும்பத்தில் புவனா என்ற செம்பருத்திப் பூவை அணிபவளை மணக்கும் சட்டநாதன். (பெயர்க் காரணம்!)

அதன்பின், ஒடிந்துபோன அண்ணன் குடும்பத்தையும் விதவையான அண்ணி குடும்பத்தையும், விதவைத் தாயையும், தன் ஐந்து பிள்ளைகளையும் தூக்கிச் சுமக்கும் சட்டநாதன். அதற்கு முழுதாகத் துணைபுரியும் புவனா. ஆறுதல் அளிக்கும் மாமனார் சண்பகவனம்.

இன்னும் ஏகப்பட்ட பாத்திரங்கள். ஆனால் தி.ஜானகிராமன் முற்றிலுமாகத் தோற்ற நாவல் இதுவாகத்தான் இருக்கும் என்பது என் கருத்து. முதல் பாகம் போன வேகம் இரண்டாம் பாகத்தில் இல்லை. மூன்றாம் பாகத்தில் வலியத் திணிக்கப்பட்ட கம்யூனிசம் முற்றிலும் தோற்கிறது.

பெரிய அண்ணி எப்போதும் தேளாகக் கொட்டுகிறவள். எல்லோரையும் கொட்டுகிறவள். அவள் சட்டநாதனைக் கொட்டியதில் ஆச்சரியமில்லை. ஆனால் திடீரென குஞ்சம்மாவும் சட்டநாதனைக் கொட்டுகிறாள். நெஞ்சை உடைக்கிறாள். அத்தோடு விடாமல், தி.ஜா, புவனாவுக்கு மெனோபாஸைக் கொடுத்து, அவளையும் கொண்டு சட்டநாதன்மீது விஷத்தைக் கக்குகிறார்.

தன் தந்தை விக்கிரகங்களை விற்றுப் பணமாக்கியதை திடீரென ஒப்புக்கொண்டு அந்தப் பணத்தைத் திருப்பித் தந்து சட்டநாதனைக் கலக்கத்துக்கு உள்ளாக்குகிறான் சுலைமான். சட்டநாதனின் வாழ்வில் அடுத்தடுத்து வரும் தொல்லைகளுக்கு ஒருவிதத்தில் அந்தப் பணமே காரணமாகிறது.

கடைசியில் ஒரு கட்டத்தில் சரி, போதும், போ என்று சொல்லி தி.ஜா நாவலை முடித்துவைக்கிறார்.

மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு போன்ற அமர காவியங்களுக்கு இடையே அசிங்கமாகத் துருத்திக்கொண்டு நிற்கிறது இந்த நாவல்.

ஆனாலும் நேற்று காலையில் எடுத்து நேற்று மாலையே படித்துமுடித்துவிட்டேன். போதனை, சோதனை பத்திகளைத் தாண்டி அற்புத மாயாஜாலம் படைக்கும் மொழி அவருக்கு! அது இல்லாவிட்டால் இந்த நாவலைப் படித்தே இருக்கமுடியாது.

கதை நடந்த காலமான சுதந்தர காலத் தமிழகம் சுவையாக இருக்கிறது. அரசியலில் அப்போதே ஏற்பட ஆரம்பித்த ஊழல் சிறிய புன்சிரிப்பை வரவழைக்கிறது.

அண்ணாதுரை நூற்றாண்டு

இந்திய அரசியலில் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரை மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கிறார். அவரது பங்களிப்பு சரியாக ஆராயப்படவேண்டும். ஒட்டுமொத்தப் புகழ் பாடுதலும் தேவையில்லை; ஒட்டுமொத்த நிராகரிப்பும் அல்ல.

அண்ணாவின் பங்களிப்பாக நான் கீழ்க்கண்டவற்றைப் பார்க்கிறேன்:

1. இந்திய தேசியம் என்ற கொள்கையை முழுமையாக ஏற்காத நிலையிலும் குடியாட்சி முறையில் அனுமதிக்கப்பட்ட வழிகள்மூலம் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பெறமுடியும் என்று போராடிக் காண்பித்தவர் அண்ணா. இந்தித் திணிப்புக்கு எதிரான அண்ணாவின் போராட்டமே இந்தியா என்ற நாடு உடையாமல் இன்று இருப்பதற்குக் காரணம். ராமச்சந்திர குஹா போன்ற வரலாற்றாளர்கள் இதனை வலியுறுத்துகின்றனர்.

2. பிராந்தியக் கட்சி என்ற ஒன்று உருவாகி ஆட்சியைப் பிடிக்கலாம் என்பதை இந்தியாவில் சாதித்துக் காட்டிய முதல் தலைவர் அண்ணா. திமுகவுக்கு முன்னதாகவே காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகள் மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளன. ஆனால் அவை கம்யூனிஸ்டுகள் (கேரளாவில்), அல்லது காங்கிரஸிலிருந்து பிரிந்த குழுக்கள், அல்லது சுதந்தரத்துக்கு முன்பிருந்தே இந்தியாவில் இருந்த பல மாநிலங்களில் பரவியிருந்த தேசியக் கட்சிகள் என்றே சொல்லலாம். (காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சியை சில காரணங்களுக்காக விட்டுவிடுவோம்.) பிராந்திய நலனை முன்வைக்க தேசியக் கட்சிகள் தடுமாறும்போது பிராந்தியவாதத்தை முன்வைத்து, அதைமட்டுமே முன்வைத்து மக்களைத் தம் பக்கம் கவரலாம் என்று காண்பித்தவர் அண்ணா.

3. வலுவான உட்கட்சி அரசியலை முன்வைத்து கட்சியை உருவாக்கியவர் அண்ணா. அந்தக் கட்டத்தில் பெரியாரின் பாசறையிலிருந்து பிரிந்துவந்தபோதும், பெரியாரின் சர்வாதிகார இயக்க அமைப்பை ஏற்காமல், அனைவரது கருத்துகளுக்கும் இடம் கொடுக்குமாறு திமுகவை அவர் உருவாக்கியது ஒருவிதத்தில் இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரி.

4. அரசியல் எதிர்ப்பு என்று இருந்தாலும், அதற்கு அப்பால் அனைவருடனும் மனித நேயத்தோடு, குறைந்தபட்சக் கண்ணியத்தோடு பழகவேண்டும் என்று காட்டியவர் அண்ணா. இன்று தமிழக அரசியல் கட்சிகளுக்குள்ளே அந்தப் பண்பு இல்லாமல் இருப்பது வெட்கக்கேடு.

5. பதவி இருந்தாலும், கடைசிவரை அப்பழுக்கற்ற வாழ்வு வாழமுடியும் என்று காட்டியவர் அண்ணாதுரை. காசு சேர்க்காமல், திருடாமல், கொள்ள அடிக்காமல், புகழை மட்டும் சேர்த்துவிட்டுச் சென்றவர். இன்றைய அரசியல் அசிங்கங்களைப் பார்க்கும்போது அன்றைய அண்ணாவின் நடத்தை மேலும் சிறப்புடையதாகிறது.

***

அண்ணாவின் பொருளாதாரக் கொள்கை, சமூகக் கொள்கை, இலக்கியத் தரம் ஆகியவற்றில் எனக்கு நிறைய மாற்றுக் கருத்துகள் உண்டு. மேடைப் பேச்சு என்பதில் மட்டுமே அதிக கவனம் செலுத்திய அண்ணாவின் எழுத்து வேண்டுமென்றே தரம் குறைந்துபோனது என்பது என் கருத்து. ஆரிய மாயை, கம்ப ரசம் போன்ற புத்தகங்கள் ஒரு தேர்ந்த முறையில் விவாதிக்கப்படாத, ரெடாரிக் நிறைந்த மோசமான எழுத்து வகையைச் சார்ந்தவை.

இன்று அண்ணாவின் நூற்றாண்டு விழா நடக்கும் நேரத்தில் ‘Essential Anna' என்ற தலைப்பில் அண்ணாவின் பல்வேறு அரசியல், சமூக, பொருளாதாரக் கருத்துக்களை தெளிவாக வகைப்படுத்தி, அவற்றின்மீது கிரிடிக்கலான பார்வையையும் செலுத்தவேண்டிய அவசியம் உள்ளது. இதற்கு அரசு எந்த முயற்சியும் எடுக்காவிட்டாலும் ‘அண்ணா நிபுணர்கள்' முன்வரவேண்டும்.

பதிப்பிக்க நான் தயார்.

Monday, September 14, 2009

நதிநீர் இணைப்பு

ராகுல் காந்தி தமிழகம் வந்தார். நதிநீர் இணைப்பு அபாயகரமானது என்றார்.

தமிழகத்தைப் பொருத்தமட்டில் ‘நதிநீர் இணைப்பு’ என்பது ஒரு புனிதப்பசு. சேது சமுத்திரத் திட்டம் மாதிரி. யாருமே அதற்கு எதிராகக் கருத்து சொல்லக்கூடாது. சொன்னால் அடி உதைதான்.

தா.பாண்டியன், வைகோ ஆகியோர் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சி (முட்டாள்) வக்கீல்கள் பதிலுக்கு அவர்களது உருவ பொம்மைகளை எரித்தனர். முதல்வர் கருணாநிதி பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘இந்திரா காந்தியே இந்தத் திட்டத்துக்கு ஆதரவாக இருந்தார்’ என்றார்.

இந்திரா காந்தி ஆதரவு அளித்தாரா, இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அப்படியே அவர் ஆதரவு அளித்திருந்தால்தான் என்ன? அதனால் பேரன் ராகுல் காந்தி அதனை எதிர்க்கக்கூடாது என்பது பொருளா? பெரியாரும் அண்ணாவும் சொன்னால் மறு அப்பீலே கிடையாது என்ற மகத்தான பகுத்தறிவுத் திட்டத்தின் நீட்சிதான் இது.

தாய், தந்தை, பாட்டி, கொள்ளுத்தாத்தா சொன்னார்; எனவே நான் ஆதரிக்கிறேன் என்று சொல்லாமல், ஒவ்வொருவரும் தனக்குரிய கருத்துகளை தானே முன்வைப்பதுதானே பகுத்தறிவின் லட்சணம்?

பாஜக நதிநீர் இணைப்பை ஆதரிக்கிறது என்பதால் ராகுல் காந்தி எதிர்க்கவில்லை என்றே நினைக்கிறேன். சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் பலருமே இதுபோன்ற மெகா திட்டங்கள்மீது கவலை கொண்டுள்ளனர். நீர் ஆதாரங்களை வளர்க்க பல நல்ல, லோக்கல் திட்டங்கள் உள்ளன. அவற்றில் கொஞ்சமும் கவனம் செலுத்தாமல், பல லட்சம் கோடி செலவாகும், சூழலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய மெகா திட்டங்களில் இறங்குவது மதியீனம்.

தமிழகம் ஒன்றில்தான் நதிநீர் இணைப்பு என்ற திட்டத்துக்கு மக்களிடையே பரவலான ஆதரவு உள்ளது. ரஜினி காந்த் என்றோ ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என்று தூக்கிக் கொடுத்தார். பாஜக, மதிமுக, திமுக என்று அனைவரும் ஆதரிக்கிறார்கள். ஆனால், இங்கு பெரும்பான்மையினர் கேட்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக இதுபோன்ற திட்டத்தில் இறங்குவது சரியாகத் தோன்றவில்லை.

தைரியமாக மாற்றுக் கருத்தைச் சொன்ன ராகுல் காந்திக்கு வாழ்த்துகள்.

முந்தைய சில பதிவுகள்: ஒன்று | இரண்டு | மூன்று

Friday, September 11, 2009

கிழக்கு மொழிபெயர்ப்பு பற்றி ஹரன்பிரசன்னாவுடன்...

ஹரன்பிரசன்னா தன் மொபைல் கேமராவுடன் என்னைப் பேட்டி கண்டது. கேமரா மிகவும் ஆடுகிறது.புத்தகம்: வர்ச்சுவல் மர்டாக்

Virtual Murdoch: Reality Wars on the Information Highway
Neil Chenoweth
Vintage
Published in 2001

எப்போதோ வாங்கிப் படித்த புத்தகம். பழுப்பேறிப் போயிருந்தது. மீண்டும் எடுத்து தூசி தட்டிப் படித்தேன். முதலில் படித்தபோது புரிந்ததைவிட இப்போது அதிகம் புரிந்தது.

பல நாடுகளிலும் பரவி, பல முக்கியமான ஊடகங்களைத் தன்னக்த்தே வைத்திருக்கும் ரூபர்ட் மர்டாக் என்பவர் ஆரம்பித்தது எங்கே, அவர் வளர்ந்த விதம் எப்படி, அடுத்தடுத்து பல நிறுவனங்களை வாங்குவதற்கோ, தொடங்குவதற்கோ ஆன பணம் எங்கிருந்து வந்தது, எப்படிப் பெறப்பட்டது, மர்டாக் பல நாடுகளில் சட்டங்களுடன் விளையாடுவது எப்படி, பிற ஊடக முதலாளிகளுடன் மர்டாக்குக்கு உள்ள தொடர்பு, வெறுப்பு போன்ற பலவற்றையும் ஆழ்ந்து அலசுகிறது இந்தப் புத்தகம்.

இதுபற்றி சற்றே விரிவான ஒரு கட்டுரையை எழுதி ஒரு இதழுக்கு அனுப்பியிருக்கிறேன். பிரசுரமானால், இங்கே மறுபிரசுரம் செய்கிறேன். பிரசுரம் ஆகாவிட்டாலும் இங்கே சேர்ப்பேன்!

Thursday, September 10, 2009

ராகுல் காந்தியின் தமிழக வருகை

காங்கிரஸ் கட்சியின் ஒரே நம்பிக்கை ராகுல் காந்திதான். அடுத்த பத்தாண்டுகளுக்குள் அவரால் மட்டுமே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த முடியும். அதைச் செய்யும் காரியத்தில் அவர் இறங்கியுள்ளது நன்கு தெரிகிறது.

அரசியலில் பத்தாண்டுகள் என்பது மிகக் குறுகிய காலம். ஆனால் அடுத்து வரும் பத்தாண்டுகள் தமிழகத்தில் மிகவும் சுவாரசியமான காலகட்டம்.

திமுக கட்சி கருணாநிதிக்குப் பிறகு எவ்வளவு வலுவாக இருக்கும் என்ற கேள்விக்குறி உள்ளது. உள்ளார்ந்த குடியாட்சி முறையில் கட்டப்படாத, தனி நபர் விசுவாசம் சார்ந்த கட்சிகள் அனைத்துமே தள்ளாடும். கருணாநிதியின் வாரிசுகள் ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொண்டால், கட்சி உடைவதை யாரும் தடுக்கமுடியாது.

அதிமுக, மேலும் மோசமான நிலையில் உள்ளது. ஜெயலலிதாவுக்கு என தெளிவான கொள்கைகள், செயல்திட்டம் என்று எதுவும் இல்லை என்று தெரிகிறது. என் கணிப்பில் திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளில் அதிமுகதான் முதலில் உடைந்து சிதறும் என்பேன்.

பாமக, விடுதலைச் சிறுத்தைகள் இரண்டும் தம் கட்சிகளை வலுப்படுத்தும் முயற்சியில் நான் எதிர்பார்த்த அளவுக்கு இறங்கவில்லை. தேமுதிகவுக்குக் கிடைக்கும் வாக்குகள் எல்லாமே திமுக/அதிமுக எதிர்ப்பு வாக்குகள். காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் பட்சத்தில் இந்த வாக்குகள் காங்கிரஸுக்குச் செல்லும்.

ஈழப் பிரச்னை சில ஆண்டுகளில் மறக்கப்பட்டு, காங்கிரஸ் மன்னிக்கப்பட்டுவிடும். கருணாநிதி பொறுப்பில் திமுக இருக்கும்வரை காங்கிரஸ் அடக்கியே வாசிக்கும் என்று தோன்றுகிறது.

கம்யூனிஸ்டுகள் இப்போது இருப்பதற்குமேல் வலுப்பெற வாய்ப்புகள் இல்லை. பாஜக தமிழகத்தில் வளர்வதற்கும் அடுத்த பத்தாண்டுகளில் வாய்ப்பு இல்லை.

சில ஹேஷ்யங்கள்:

2011 சட்டமன்றத் தேர்தல்: திமுக/காங்கிரஸ் கூட்டணி வெல்லும். ஸ்டாலின் முதல்வர் (அதற்கு முன்னரே அவர் முதல்வர் ஆகியிருக்கலாம்). ஆனால் மிகக் குறைந்த இடங்களே முன்னணியில் இருப்பர். எதிர்க்கட்சிகள் உடைந்து சிதறி இருக்கும். கூட்டணி ஆட்சி எப்படி நீடிக்கும் என்று சொல்வது கடினம்.

2014 நாடாளுமன்றத் தேர்தல்: திமுக/காங்கிரஸ் கூட்டணி ஏற்படாமல் போகலாம். இந்தப் பிரச்னை காரணமாக, பெரும்பான்மை வலு இல்லாத ஆட்சி கவிழலாம்.

2014 (அல்லது) 2016 சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ் ஆட்சிக்கு வரக்கூடும்?

Wednesday, September 09, 2009

இருள் பொருள்? இருள் சக்தி?

டார்க் மேட்டர் (இருள் பொருள்?), டார்க் எனர்ஜி (இருள் சக்தி?) என்னும் கருத்துகள் இன்று அறிவியலாளர்களை ஆட்டி வைக்கிறது. இந்தப் புதிய கருத்தாக்கத்தின்படி, உலகின் 96% பொருளும் சக்தியும் இந்த இருள் பொருள், இருள் சக்தி வடிவைச் சேர்ந்தவை என்று சொல்லப்படுகிறது.

சாதாரணப் பொருள் மட்டும் இருந்தால், அண்டங்கள் (கேலக்ஸிகள்) உருவாகி இருக்கவே முடியாது. எனவே ‘இருள் பொருள்’ என்ற ஒன்று இருக்கவேண்டும்; இந்த இருள் பொருள், சாதாரணப் பொருள்களை இழுத்து ஒட்டவைக்கும் கோந்துபோலச் செயல்படுகிறது என்று ஒரு கருத்தாக்கம் உள்ளது.

இன்று பிரபஞ்சம் பயங்கர வேகத்தில் விரிவாகிக்கொண்டே இருக்கிறது. பொருள்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்கின்றன. பொருள்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசையையும் தாண்டி இவ்வாறு பொருள்கள் விலகிச் செல்லக் காரணம் ஒருவேளை ‘இருள் சக்தி’ என்ற சக்தி ஈர்ப்புக்கு எதிராகச் செயல்படுவதாலோ என்ற ஒரு கருத்தாக்கமும் உள்ளது.

இந்த இருள் பொருள், இருள் சக்தி போன்றவற்றின் தன்மை இன்னமும் அறிவியலாளர்களுக்கே விளங்காமல்தான் உள்ளது.

இவற்றின் அறிவியல் பின்னணியை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் எளிமையாக விளக்க உள்ளார் டாக்டர் டி.வி.வெங்கடேசுவரன். இவர் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விக்யான் பிரசார் என்ற தன்னாட்சி அமைப்பில் அறிவியலாளராகப் பணியாற்றுகிறார்.

இடம்: கிழக்கு மொட்டைமாடி, எல்டாம்ஸ் ரோடு, சென்னை
நாள்: 26 செப்டெம்பர் 2009, சனிக்கிழமை
நேரம்: மாலை 6.00 மணி


பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்ளத் தவறாமல் வாருங்கள்.

அண்ணா எஃப்.எம்மில் என் நேர்முகம்

பல மாதங்களுக்கு முன் (7 மார்ச் 2009 அன்று) அண்ணா எஃப்.எம் 90.4 மெகாஹெர்ட்ஸில் விஜயகுமாருடன் பதிப்புத் துறை பற்றி நான் பேசியதன் ஒலிவடிவம்.
.

கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 7: டயட் உணவு பற்றி அருணா ஷ்யாம்

உணவே மருந்து என்பார்கள். கன்னா பின்னாவென்று சாப்பிட்டால் உடம்பு குண்டாவது மட்டுமின்றி, நோய்களும் வந்து சேரும். எந்த உணவைச் சாப்பிடவேண்டும், ஏன், எந்த நோய் இருப்பவர்கள் எந்த மாதிரியான உணவு வகைகளைச் சேர்க்கவேண்டும், விலக்கவேண்டும் போன்ற பலவற்றைப் பற்றியும் உணவு நிபுணர் அருணா ஷ்யாம் விளக்குகிறார். கூடப் பேசுபவர் சித்ரா.

அருணா ஷ்யாம் நலம் வெளியீடு மூலமாக பத்திய உணவு என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

பாட்காஸ்ட்

இது ஒரு பக்கம் இருக்க, மினிமேக்ஸ் வழங்கும் பலவிதமான சமையல் புத்தகங்களைப் பெற இங்கே செல்லுங்கள்!

கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 6: மார்க்கெட்டிங் பற்றி சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

மார்க்கெட்டிங் மாயாஜாலம் புத்தக ஆசிரியரும் பல நிர்வாகவியல் கல்லூரிகளில் பாடம் நடத்துபவருமான சதீஷ் கிருஷ்ணமூர்த்தியுடன் கிழக்கு பதிப்பகத்தின் சத்யநாராயண் உரையாடுகிறார்.

பாட்காஸ்ட்

வாரா வாரம் ஆஹா எஃப்.எம் 91.9 மெகாஹெர்ட்ஸில் ஞாயிறு மதியம் 12.00 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சியில் வரும் வாரம் (13 செப்டெம்பர் 2009) மிக சுவாரசியமான நிகழ்ச்சி ஒன்று காத்திருக்கிறது.

சீனா: விலகும் திரை என்ற பல்லவி அய்யரின் புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ராமன் ராஜா, மாவோவின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதிய மருதன் ஆகியோருடன் சித்ரா உரையாடுகிறார். கூடவே சீன நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும், சீனாவுக்குத் தொடர்ச்சியாகச் சென்று வரும் பிரசன்னா என்பவரும் போன் மூலம் கலந்துகொள்கிறார்.

மேலே உள்ள பாட்காஸ்டுடன் தொடர்புள்ள புத்தகங்கள்:

       

நீங்க தமிழா?

சென்ற வாரம் நானும் சத்யாவும் திருநெல்வேலி சென்றிருந்தோம். திருநெல்வேலியில் கிழக்கு பதிப்பக ஷோரூம் திறக்கும் விழா. ரயில் நிலையத்திலிருந்து நேராக ஹோட்டல் சென்றோம். தொலைக்காட்சியில் ஒவ்வொரு சானலாக மாற்றி, லோக் சபா என்ற அருமையான சானலில் வந்து நின்றோம்.

சரோஜ் பாண்டே என்ற மத்தியப் பிரதேச பாஜக (பெண்) எம்.பியுடன் ஒரு பேட்டி நடந்துகொண்டிருந்தது. பேட்டி இந்தியில். நான் ஷேவிங் செய்துகொண்டிருக்கும்போது ஹோட்டல் பையன் அறைக்குள் நுழைந்தான். எதோ புரியாத பாஷை டிவியில் ஓடிக்கொண்டிருந்ததால் சத்யாவிடம் ‘இது என்ன பாஷை?’ என்று விசாரித்தான். சத்யா ‘இந்தி’ என்று பதில் சொன்னான்.

சிறிது நேரம் கழித்து நான் வெளியே வந்து டீ குடித்துவிட்டு கம்ப்யூட்டரைக் குடைந்துகொண்டிருந்தேன். அதே பையன் திரும்பி வந்தான். அப்போதும் லோக் சபா சானல்தான் ஓடிக்கொண்டிருந்தது. பையன் என்னுடன் பேச ஆரம்பித்தான்.

‘தமிளு தெரியுமா?’

‘ஏம்ப்பா, நல்லா தெரியுமே?’

‘இல்ல, ஒங்களைப் பாத்தா தமிளு மாதிரி தெரியல...’

‘அப்படின்னா என்னப்பா அர்த்தம்? பார்த்தாலே தமிழ்னு எப்படிப்பா சொல்லமுடியும்?’

‘சுத்தி உள்ள ஆளுங்களப் பாருங்களேன்? உங்களப் பாத்தா வேற ஆளுங்க மாதிரி இருக்கீங்க. தமிளங்க வேற மாதிரி இருப்பாங்க.’

பையன் சொல்லவந்தது தோல் நிறத்தை என்று நினைக்கிறேன். ஆனால் தமிழகத்தில், தென் தமிழகத்திலும் சேர்த்து, வெளுத்த தோல் முதல் கறுத்த தோல் வரையிலும், இடைப்பட்ட பல்வேறு ஷேட்களிலும் கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.

பையனுக்கு நம்பிக்கை பிறக்கவே இல்லை. அடுத்த அறையில் எங்கள் சேல்ஸ் மேனேஜர் மணிவண்ணன், ரீஜனல் சேல்ஸ் மேனேஜர் சசி ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் சென்று, ‘சார் அவங்க, அவங்களா இல்ல வேறயா’ என்று விசாரித்திருக்கிறான். (நாங்கள் நிஜமாகவே தமிழர்கள்தானா என்பதுதான் அந்தப் பையனுடைய கேள்வி என்று நான் நினைக்கிறேன்.) மணிவண்ணன் முற்றிலுமாகக் குழம்பிப்போய் விட்டார்.

கடைசிவரை அந்தப் பையன் என்னைப் பார்க்கும்போதெல்லாம் ஒருவித முகபாவத்துடன் சிரித்தபடியே இருந்தான்.

அடுத்தமுறை திருநெல்வேலி போகும்போது அவனிடம் ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி’ என்று பாடி, நான் தமிழன்தான் என்று நிரூபிக்கவேண்டும்.

Tuesday, September 08, 2009

சிகரம் நோக்கி...

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் இடையே 4 செப்டெம்பர் 2009 அன்று, ‘சிகரம் நோக்கி...’ என்ற தலைப்பில் நான் பேசியதன் ஒலி வடிவம் இங்கே.

Wednesday, September 02, 2009

அஞ்சலி: அ.கி. வேங்கட சுப்ரமணியன்

கிழக்கு பதிப்பக எழுத்தாளர், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் ஆபீசர், தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர், குடியாட்சிமீது அக்கறை கொண்டவர், ஒரு நல்ல மனிதர், வேங்கட சுப்ரமணியன், தனது 69-வது வயதில், நேற்று (1 செப்டம்பர் 2009) மாரடைப்பால் இறந்தார்.

எல்லா சாவுகளுமே அதிர்ச்சி தரக்கூடியவை. அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கும் அவரது உறவினர்களுக்கும் இது தாங்கமுடியாத இழப்பு. அனைத்துக்கும் மேலாக, இந்தியாவில் குடியாட்சி முறை சீர்மையுடன் நடக்கவேண்டும், லஞ்சம் அழியவேண்டும், மக்கள் வளத்துடன் வாழவேண்டும் என்று விரும்பும் ஆர்வலர்களுக்கு இந்த இழப்பு ஈடுசெய்யவே முடியாதது.

இந்திய ஆட்சிப் பணியில் இருந்த வெகு சிலரே, ஓய்வுபெற்றபின், வேங்கட சுப்ரமணியன் அளவுக்கு பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிலும் வேங்கட சுப்ரமணியன் grassroots அளவில் அமைப்புகளை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தார். ஆங்கிலத்துக்கு பதிலாக தமிழில் எழுதுவது, தமிழ் மூலம் பெருவாரியான கிராம மக்களைச் சென்றடைவது, கிராம மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவற்றில் தன் முழுக் கவனத்தையும் செலுத்தினார். ‘குடிமக்கள் முரசு’ என்ற மாதப் பத்திரிகையை அவர் நடத்திவந்தார்.

திருக்குறளில் நல்ல பரிச்சயம் கொண்டிருந்த இவர், அற்புதமான தமிழில் எழுதக்கூடியவர், பேசக்கூடியவர். தினமணியில் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குக் கட்டுரைகள் எழுதிவந்தார். அவ்வாறு தேர்ந்தெடுத்த சில கட்டுரைகளைத்தான் கிழக்கு பதிப்பகம் இரு தொகுதிகளாக [கட்சி ஆட்சி மீட்சி | மக்களாகிய நாம்] கொண்டுவந்தது. அவர் தானாகவே வெளியிட்ட இரு புத்தகங்களை அடுத்து மறு வெளியீடு செய்யவேண்டும் என்று பேசி, முதலில் ‘தட்டிக்கேட்க தகவல்கள்’ என்ற புத்தகத்தையும் அடுத்து, ‘மன்னரா, மனுதாரரா’ என்ற புத்தகத்தையும் கொண்டுவருவது என்று சொல்லியிருந்தேன்.

குடிமக்கள் முரசு பத்திரிகையுடன் இலவச இணைப்பாக வந்த சில நெடுங்கட்டுரைகளைப் புத்தகமாகத் திரட்டிக் கொண்டுவரும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன். முனைவர் வா.செ.குழந்தைசாமி இட ஒதுக்கீடு பற்றி எழுதியதை ஆங்கிலத்தில் மொழிமாற்றி சிறு வெளியிடாகக் கொண்டுவருவது பற்றி வேங்கட சுப்ரமணியன் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அந்த ஆங்கில மேனுஸ்க்ரிப்டை இரு வாரங்களுக்கு முன்னர்தான் அனுப்பியிருந்தார். அந்த வேலையை ஆரம்பிக்கவேண்டும் என்றும் நினைத்திருந்தேன்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் கலந்துகொண்டு வேங்கட் சுப்ரமணியன் அற்புதமாகப் பேசினார். (அதன் ஒலிப்பதிவைத் தேடி எடுத்து, வலையில் ஏற்றுகிறேன்.)

வேங்கட சுப்ரமணியனிடம் பேசி பல பாட்காஸ்ட்கள் செய்யவேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் காலம் கடந்துவிட்டது.

அவர் குடிமக்கள் மையம் (Citizens' Centre) என்று பல கிராமங்களில் தொடங்கி, கிராம மக்களுக்குத் தேவையான அடிப்படை தலைமைப் பண்புகளைப் பயிற்சியின்மூலம் அளிக்க ஏற்பாடுகளைச் செய்துவந்தார். அந்தப் பணி, அவரது நினைவாக விடாது தொடரும் என்று நம்புகிறேன்.

தேர்தலில் நடக்கும் தில்லுமுல்லுகளைப் பற்றி நிறைய வருத்தம் கொண்டிருந்த அவர், அவற்றை எப்படிக் களையலாம் என்பது தொடர்பாகப் பல கருத்துகளைக் கொண்டிருந்தார். அந்தக் கருத்துகளை பயமின்றி எழுதியும் வந்தார். தமிழர்கள் தேவையின்றி அச்சப்படுகிறார்கள் என்றும் அவர் நினைத்தார். பயமில்லாத மனிதர்களே ஒரு குடியாட்சியில் நல்ல குடிமகன்களாக இருக்கமுடியும் என்பது அவரது கருத்து. நான் எந்தக் காரணத்துக்காகவும் அச்சப்பட மாட்டேன்; பயமின்றி என் கருத்துக்களை வெளியிடுவேன் என்று இந்த நாளில் மனத்துக்குள்ளாக உறுதி கூறிக்கொள்கிறேன்.

ஒரு நல்ல நண்பரை இழந்த வருத்தத்தை எப்படி ஆக்கப்பூர்வமாக மாற்றுவது என்று யோசிக்கிறேன். அவரது கருத்துக்களை எப்படி முன்னெடுத்துச் செல்லமுடியும் என்பதையும் யோசித்துப் பார்க்கிறேன்.

கல்லூரி மாணவர்களுடன்...

கடந்த இரு மாதங்களாக வேலைப் பளு காரணமாக பள்ளிகள், கல்லூரிகளில் சென்று பேசுவது தடைப்பட்டது. வரும் சில நாள்களில் கீழ்க்கண்ட இடங்களில் பேசுகிறேன்:

1. வெள்ளிக்கிழமை (4-9-2009) அன்று திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கலை அறிவியல் கல்லூரியின் இளைஞர் நலத் துறை மாணவர்களிடம் ‘சிகரம் நோக்கி...’ என்ற தலைப்பில் பேசுகிறேன்.

2. திங்கள்கிழமை (7-9-2009) மதுரை இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயன்சஸ் கல்லூரியில் ஒரு தினம் முழுதும் அங்குள்ள மாணவர்களுடன் கழிக்கிறேன். தகவல் தொழில்நுட்பத்தைக் கொண்டு மாணவர்கள் எப்படிப் பயன்பெறலாம்; தகவல் தொழில்நுட்பம் கொண்டு ஒரு சமூகம் எப்படி முன்னேறலாம் ஆகியவை பற்றி காலை, மாலை இரு வேளைகளிலும் பேசுகிறேன். அத்துடன் செயல்வழிப் பயிற்சியும் இருக்கும்.

3. செவ்வாய்க் கிழமை (8-9-2009) சென்னை ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசத்தில், New Media Journalism பற்றிப் பேசுகிறேன். சென்ற ஆண்டும் இதே தலைப்பில் பேசியிருந்தேன். இப்போது வேறு புது மாணவர்களிடம் பேசவேண்டும். இந்தக் கல்லூரி மாணவர்கள் மிகவும் புத்திசாலிகள். கூர்ந்து கவனிப்பது, தீர்க்கமான கேள்விகள் கேட்பது என்று ஆர்வத்தோடு பங்கு பெறுவார்கள்.

(இதில் சிலவற்றை ஒலிப்பதிவும், சிலவற்றை ஒளிப்பதிவும் செய்யமுடியுமா என்று பார்க்கிறேன்.)