Tuesday, January 31, 2012

புதுக்கோட்டை பயணம் - 4

இசையை அழித்து நீதி

லிங்கோத்பவருக்கு அருகில் ஒரு கல்வெட்டு உள்ளது. அதற்கு வருவதற்குமுன், சிவனின் சந்நிதியின் கிழக்குச் சுவரில் ஒரு கல்வெட்டு உள்ளது. பார்க்கவேண்டிய, தெரிந்துகொள்ளவேண்டிய கதை.

சிவன் குடைவரை கட்டப்பட்டது 7-ம் நூற்றாண்டு; விஷ்ணு குடைவரை கட்டப்பட்டது 8-ம் நூற்றாண்டு என்கிறார்கள். இரண்டையுமே பாண்டியர்கள் அல்லது அவர்கள்கீழ் இருந்த சிற்றரசர்கள் தோற்றுவித்தனர். அதன்பின், மேற்கொண்டு கட்டுமானங்கள் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. விரிவாக்கப்பட்ட இரு கோவில்களையும் நிர்வகித்து வந்தவர்கள் இடையே 12-ம் நூற்றாண்டில் சண்டை ஏற்பட்டது. சொத்துத் தகராறு.

இந்தச் சண்டை விரிவாகி ஒரு கட்டத்தில் இரு கோவில்களுமே இழுத்து மூடப்பட்டன. இப்படியே நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்குமேல் கடந்திருக்கும்.

13-ம் நூற்றாண்டு. சோழ சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்து, பாண்டியர்களும் ஹோய்சாளர்களும் இணைந்து தமிழகத்தை அப்போது ஆண்டுவந்தனர். மாறவர்மன் சுந்தரபாண்டியன் மன்னராக இருந்த காலகட்டம். அப்போது ஹோய்சாளத் தளபதிகளான ரவிதேவன், அப்பண்ணன் ஆகியோர் முன்னிலையில் பஞ்சாயத்து செய்யப்பட்டது. அதன் விளைவாக எழுந்த ஒப்பந்தத்தைத்தான் இந்த கிழக்குச் சுவரில் விரிவாகக் காணலாம்.

தீர்ப்பு என்னவென்றால், மொத்த வருமானத்தில் இரண்டு பங்கு சிவனுக்கு. மூன்று பங்கு விஷ்ணுவுக்கு! (திருமகள் எங்கிருக்கிறாளோ, அங்குதான் செல்வம் அதிகமாக இருக்கவேண்டும்! மேலும் பட்சணம், பிரசாதம் எல்லாம் அதிகமாகக் கிடைப்பது விஷ்ணு கோவிலில்தானே? சிவனுக்கு வெறும் உண்டக்கட்டி மட்டும்தானே, எனவே இரண்டு மடங்கு போதும்:-) அத்துடன் இரு கோவில்களுக்கும் இடையில் ஒரு சுவர் எழுப்பப்படும்.

இந்தக் கல்வெட்டு இதனையெல்லாம் விரிவாகப் பேசுகிறது. கல்வெட்டின் இறுதியில், ‘மேற்படி இடத்தில் ஏதோ புரியாத மொழியில் என்னவோ எழுதியிருந்தது. அதனை அழித்துவிட்டு இந்தக் கல்வெட்டைப் பொறித்துவிட்டோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். தீர்ப்பு எழுதப்பட்டிருப்பது தமிழில். அழிக்கப்பட்டிருப்பது, பல்லவ கிரந்தத்தில் எழுதப்பட்ட சமஸ்கிருதக் கல்வெட்டு ஒன்றை. அதன் எச்ச சொச்சங்களை இப்போதும் பார்க்கலாம். (அப்போதே சமஸ்கிருதத்தை அழித்துவிட்டு தமிழில் எழுதுவது நடந்திருக்கிறது!)

அப்படி எதைத்தான் அழித்துள்ளார்கள் என்பதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். அழிக்கப்பட்டதைப் போல அச்சு அசலான ஒரு கல்வெட்டு குடுமியான்மலையில் உள்ளது. அழிபடாமல் இருக்கும் முதல் எழுத்துகளைக் கொண்டு ஒப்பிட்டுப் பார்த்து இரண்டும் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். அது இசை பற்றிய கல்வெட்டு. இதனை குடுமியான்மலை செல்லும்போதுதான் நாங்கள் பார்க்கப்போகிறோம். அப்போது இதைப் பற்றி விரிவாகவே பார்ப்போம்.

மறுபக்கம், லிங்கோத்பவருக்கு அருகில் பல்லவ கிரந்தத்தில் ‘பரிவாதினிதா’ என்று எழுதப்பட்டு அதைச் சுற்றி இரண்டு கட்டங்கள் போடப்பட்டுள்ளன. இது என்ன என்பதையும் பிறகு பார்ப்போம்.

நாயக்கர் காலத்தில் இந்தக் கோவில்கள் இரண்டும் மேலும் அதிகமாக விரிவாக்கப்பட்டு பல்வேறு முன் மண்டபங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

மலையின் மேல் கோட்டை

திருமெய்யம் குன்றின் அடிவாரத்தில் இந்த இரண்டு கோவில்கள் உள்ளன. இதே மலையின் தொடர்ச்சியில் சற்றே மேற்பகுதியில் ஒரு கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. நிச்சயமாக இதனைக் கட்ட பல மாதங்கள்/வருடங்கள் ஆகியிருக்கும். பெரிய மதில் சுவர்கள், அகழிகள் ஆகியவற்றைக் காணமுடிகிறது. ஏழு சுவர்கள் இருந்தன என்கிறார்கள். ஆனால் மூன்று சுவர்களை ஆங்காங்கே காண முடிகிறது. இந்தக் கோட்டையைக் காணச் செல்ல தொல்லியல் துறை 5 ரூபாய் வசூலிக்கிறது. நீங்கள் அரை டிராயர் போட்டுக்கொண்டு தஸ் புஸ் என்று ஆங்கிலத்தில் பேசினால், தொல்லியல் துறைக்கு நீங்கள் இந்தியர்தானா என்று சந்தேகம் வந்துவிடுகிறது. வெளிநாட்டவர் என்றால் மேலே செல்லக் கட்டணம் ரூ. 100. அதே நேரம் சுத்தமான தமிழில் பேசினால் நீங்கள் இலங்கையைச் சேர்ந்தவராக இருக்கலாமோ என்ற சந்தேகம். எனவே தமிழர்களுக்கே உரித்தான அரைகுறைத் தமிழில் பேசுவது நலம்.

இந்தக் கோட்டையில் பார்க்க என்று பெரிதாக ஏதும் இல்லை. இரண்டு விஷயங்களைத் தவிர.

ஒரு குறிப்பிட்ட உயரத்தில் சிவனுக்கு ஒரு குடைவரை கட்டப்பட்டுள்ளது. இதுவுமேகூட ஏழாம் நூற்றாண்டில் வெட்டப்பட்டிருக்கவேண்டும். துவாரபாலகர்கள் யாரும் இல்லை. மிகச் சிறிய கருவறையில் ஒரு லிங்கம் தென்படுகிறது. அருகில் சுவரில் நாம் கீழே பார்த்ததுபோல ‘பரிவாதினிதா’ என்று பல்லவ கிரந்தத்தில் வெட்டப்பட்டு, சுற்றி இரட்டை ஃபிரேம் போடப்பட்ட எழுத்துகள் தெரிகின்றன.

இந்தச் சந்நிதிக்குப் போவதற்கு தொல்லியல் துறை, தரையிலிருந்து இரும்பு ஏணி ஒன்றை இப்போது வைத்துள்ளார்கள். அந்தக் காலத்தில் என்ன செய்திருந்தார்கள் என்பது தெரியவில்லை. வழிபாடே இல்லாத கோவிலோ இது என்றும் எண்ணலாம். அவ்வளவு உயரத்தில் யாருமே நெருங்காதபடிக்கு இப்படி ஒரு கோவிலை வெட்டுவித்தது ஏன்? அதனருகில் இருக்கும், தொடரும் ‘பரிவாதினிதா’ என்ற புதிருக்கு என்ன விடை?

(தொடரும்)

Saturday, January 28, 2012

எக்ஸைல் விமர்சனக் கூட்டம்

4 பிப்ரவரி 2012, சனிக்கிழமை மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 வரை, சாரு நிவேதிதா எழுதியுள்ள எக்ஸைல் பற்றிய விமர்சனக் கூட்டம் தேவநேயப் பாவாணர் நூலகத்தில் நடக்க உள்ளது.

எழுத்தாளர் ஞாநி சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொள்கிறார்.

நாவல் பற்றிய தங்கள் கருத்துகளை வாசகர்கள் யார் வேண்டுமானாலும் வந்து பேசலாம்.

அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.

Friday, January 27, 2012

புதுக்கோட்டை பயணம் - 3

மெய்நிகர் உலகில் இன்னும் நாம் திருமெய்யத்திலிருந்தே கிளம்பியபாடில்லை. ஆனால் மெய்யுலகிலோ, இன்னும் சில நிமிடங்களில் (காலை 5.30 மணி) நார்த்தாமலைக்குக் கிளம்பவேண்டும். காலை சூரிய உதயத்தின்போது நார்த்தாமலை விஜயாலய சோழீசுவரத்தில் இருக்கவேண்டும் என்பது திட்டம். காலை முழுதும் நார்த்தாமலை, கடம்பர் மலை. மதியம் சித்தன்னவாசல். இன்று இவை மட்டும்தான்.

இப்போது திருமெய்யத்துக்கு வருவோம்.

திருமெய்யம் சிவன் கோவில்

இரு கோவில்களில் சிவனுக்கான கோவில்தான் முதலில் குடையப்பட்டிருக்கவேண்டும் என்கிறார் பேரா. சுவாமிநாதன். விண்ணவர் கோவில் அடுத்ததுதான். குகை கிழக்கு நோக்கிய வாசலைக் கொண்டிருந்தாலும் அர்தமண்டபத்தில் ஏறினால் சிவனின் கருவறை தெற்கு நோக்கியுள்ளது. வாசலில் இரு துவாரபாலகர்கள்.

பல்லவ வாயிற்காப்போன்கள் போல் முகத்தில் அந்த அளவுக்கு அழகு இல்லை, என்றாலும் சிற்ப நேர்த்தி வெகு நன்றாகவே உள்ளது. வலதுபுறம் உள்ள வாயிற்காப்போன் ஒரு பெரும் தடியின்மீது கையை ஊன்றியபடி இருக்கிறான். சிவ துவாரபாலகர் அடையாளம் இது. அவனுடைய உருவ அளவையும் வலிமையையும் பறைசாற்றும் வகையில் அந்தத் தடியில் மூன்று சுற்றுகளில் ஒரு மலைப்பாம்பு காட்டப்படுகிறது என்று விளக்கினார் மதியழகன். தமிழ்ப் பேராசிரியர். புதுக்கோட்டை பற்றி நன்கு அறிந்தவர். சிற்பங்களில் காணப்படும் யாளிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்துவருகிறார். இதுவரையில் 28 வெவ்வேறு யாளிகளைப் பற்றி எழுதி வைத்திருப்பதாகவும் 50 ஆனவுடன் ஒரு புத்தகம் எழுதப்போவதாகவும் சொன்னார்.

பிற்காலத்தில் இந்த மலைப்பாம்பு ஒரு யானையைக் கவ்வுவதுபோலக் காண்பிக்கப்பட்டிருப்பதை நீங்கள் கங்கைகொண்ட சோழபுரத்தில் காணலாம். ஆக, வாயிற்காப்போன் வைத்துள்ள தடி எவ்வளவு பெரியது? மலைப்பாம்பைப் போல பல மடங்கு. மலைப்பாம்பு எவ்வளவு பெரியது? ஒரு யானையையே கவ்வி விழுங்கும் அளவுக்குப் பெரியது. அப்படியானால் அந்த வாயிற்காப்போனின் உருவ அளவு?

இடது வாயிற்காப்போன், கையில் ஆயுதம் ஏதும் இன்றி, விஸ்மய முத்திரையைக் காட்டியபடி உள்ளான். இருவரது தலைக்கவசங்களும் மாறுபட்ட வடிவுடையதாக உள்ளன.

கருவறை உள்ளே உள்ள ஆவுடையுடன் சேர்த்த சிவலிங்கம் அந்த மலையிலிருந்தே குடைந்து உருவாக்கப்பட்டது. ஆவுடையும் வட்ட வடிவானது.

லிங்கத்துக்கு நேர் எதிராக லிங்கோத்பவ மூர்த்தியைப் பார்க்கலாம். நல்ல பெரிய சிற்பம். பொதுவாக நீங்கள் சிவத் தலங்களில் பார்க்கும் லிங்கோத்பவரிலிருந்து மாறுபட்டது.

லிங்கோத்பவர் உருவம், சிவனின் அடியையும் முடியையும் தேடி விஷ்ணுவும் பிரம்மாவும் சென்ற காட்சியை விளக்குவது. யார் பெரியவர் என்று பிரமனும் விஷ்ணுவும் விவாதித்துக்கொண்டு சிவனிடம் செல்ல, அவர் யார் முதலில் தன் அடியை அல்லது முடியைக் கண்டறிகிறாரோ அவர்தான் பெரியவர் என்று சொல்ல, விஷ்ணு பன்றி உருவமாகித் தரையைத் தோண்டிக்கொண்டு செல்ல, பிரமன் அன்ன உருவில் வானில் பறந்துசெல்ல, இறுதியில் இருவருமே தோற்கின்றனர்; சிவனே பெரியவன் என்பதை உணர்கின்றனர் என்பதாகச் செல்லும் கதை. இதில் லிங்க வடிவுக்குள் சிவனின் உருவம் செதுக்கப்பட்டிருக்கும். ஆனால் முடியின் உச்சியும் காலில் அடியும் காட்டப்பட்டிருக்காது. அதே நேரம் மேல் இடது ஒரத்தில் அன்னப் பறவை, கீழ் வலது, இடது அல்லது நடுவில் ஒரு வராக உருவம் காட்டப்பட்டிருக்கும். சில இடங்களில் இதைத் தாண்டி இரு பக்கமும் பிரமனும் விஷ்ணுவும் காட்டப்பட்டிருப்பார்கள்.

ஆனால் இங்கே உள்ள லிங்கோத்பவரில் சிவனின் ஜடாமுடி நன்கு தெரியும். கால்கள் தெரியாது. சிவனின் ஆடையலங்காரம் மிக மிக அழகாக இருப்பதைக் காணலாம். லிங்கோத்பவர்களிலேயே மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட சிற்பம் இது. ஆனால் ஆகம வரையறைகள் வருவதற்குமுன் (கதைகள் உருவாவதற்குமுன்) செய்யப்பட்டதாக இது இருக்கவேண்டும் என்கிறார் சுவாமிநாதன். அதனால்தான் அன்னமும் வராகமும் காணப்படுவதில்லை. பல்லவர்களின் கலையில் கைலாசநாதர் கோவிலிலிருந்துதான் லிங்கோத்பவரை நீங்கள் காணமுடியும்.

(தொடரும்)

Thursday, January 26, 2012

புதுக்கோட்டை பயணம் - 2

முதல் நாள் பயணம்: திருமெய்யம் (திருமயம்), ஆவுடையார்கோவில், இரும்பாநாடு

(இந்தப் பயணத்தில் நான் படம் ஏதும் எடுக்கப்போவதில்லை. எனவே வெறும் எழுத்து மட்டும்தான்.)

ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் காலை புதுக்கோட்டை வந்து சேர்ந்தோம். குளித்து, காலை உணவு முடித்தபின், 8.30-க்குக் கிளம்பி திருமெய்யம் செல்வதாக ஏற்பாடு. ஆனால் அது நடக்காது என்பது தெரியும். சுமார் 40 பேர் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் தயாராகுவது எளிதல்ல. தங்குமிடத்திலிருந்து அனைவரும் கிளம்பி பப்ளிக் ஆபீஸ் எனப்படும் அரசு அலுவலகங்கள் உள்ள பகுதிக்கு வரும்போது மணி 9.30. அங்கே நகரின் சில முக்கியஸ்தர்கள் வந்திருந்தனர். இந்தப் பயணத்தின்போது எங்கள் வசதிக்கென ஒரு பேருந்தை அளித்திருக்கும் சுதர்சன் பொறியியல் கல்லூரியின் நிறுவனர் வந்திருந்தார்.

முன்னாள் மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் (Grand Commander, Indian Empire!) சிலைக்குமுன் நின்று அறிமுக உரையாடல்களை நடத்திக்கொண்டிருக்கும்போது புதுக்கோட்டையில் இருக்கும் பத்திரிகைத் துறை, தொலைக்காட்சி சானல் நண்பர்கள் என பலரும் வந்திருந்தனர். அனைவரும் படம் எடுக்க, வீடியோ எடுக்க கொஞ்சம் நேரம் செலவானது.

நாங்கள் இந்தப் பயணத்துக்காக என்று உருவாக்கியிருந்த கையேட்டை (ஆங்கிலத்தில் உள்ளது) அனைவருக்கும் அளித்தோம். தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் என்றே அனைவரும் சொன்னார்கள். உண்மைதான். ஆனால் இது வெறும் கையேடுதான். விரைவில் ஒரு புத்தகமே தயாராகும்.

இறுதியாக திருமெய்யம் கிளம்பியபோது மணி 10.30.

திருமெய்யம் விண்ணவர் கோவில்

திருமெய்யம் ஒரு குன்று. அந்தக் குன்றின்மேல் பிற்காலத்தில் கட்டப்பட்ட ஒரு கோட்டை உள்ளது. அந்தக் கோட்டையை கெட்டபொம்முவின் தம்பி ஊமைத்துரை ஓரிரவில் கட்டிமுடித்ததாக நம்பவே முடியாத ஒரு புனைகதை இந்தப் பகுதிகளில் உண்டாம். அதன் காரணமாக, ஊமையன் கோட்டை என்று இந்தக் கோட்டை அழைக்கப்படுவதுண்டு. ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோட்டையில் ஊமைத்துரை சிறை வைக்கப்பட்டிருக்கலாம். அதன் காரணமாக இருவான அந்தப் பெயர், பின்னர் புதுக் கதையாகத் திரிந்திருக்கவேண்டும்.

அந்தக் குன்றின் கீழ்ப்புறம்தான் இரண்டு குடைவரைக் கோவில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. யார் கட்டுவித்தது என்று தெரியவில்லை. பாண்டிய மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்த பகுதி இது. அவர்கள் கீழ் ஆட்சி செய்த முத்தரையர்கள் காலத்தில் எட்டாம் நூற்றாண்டில் இந்தக் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

இரு குடைவரைக் கோவில்களையும் பிற்காலத்தில் விஜயநகர, நாயக்க மன்னர்கள், ஆளுநர்கள் விரிவாக்கிக் கட்டியுள்ளனர்.

திருமெய்யம் விண்ணவர் (விஷ்ணு) கோவிலில் காணப்படும் அனந்தசயன மூர்த்தி மிகப் பிரமாதமானது. ‘அனலால் அலறும் அரக்கர்கள்’ என்று குடவாயில் பாலசுப்ரமணியன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவரே எங்களுடன் வருவதாக இருந்தது. ஆனால் அவருக்கு வேறு வேலை என்பதால் வரமுடியவில்லை. அனந்தசயனப் பெருமாள் தமிழகத்தில் பல பகுதிகளில் இருப்பதோடு இந்தியாவின் பல பகுதிகளிலும் காணப்படுகிறார்.

இந்து சிலையமைப்பைப் பொருத்து, சயனமூர்த்தி, யோக, போக, வீர சயனமூர்த்தி என்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறார். யோகமூர்த்தியை வழிபடுவது முக்தியைக் கொடுக்கும்; போகமூர்த்தியை வழிபடுவது செல்வத்தைக் கொடுக்கும். வீரமூர்த்தியை வழிபடுவது வீரத்தைக் கொடுக்கும் என்பது ஐதீகம்.

திருமயம் சயனமூர்த்தி போக சயனமூர்த்தி. மாபெரும் புடைப்புச் சிற்பம். 70 எம்.எம் சினிமாத் திரை போல ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரை ஒரு வளைந்த வட்டத்தில் புடைப்புச் சிற்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை கவின் கலைக் கல்லூரி விரிவுரையாளர் சிவராமகிருஷ்ணன் சுட்டிக் காட்டினார். மாமல்லபுரம் முதற்கொண்டு பல இடங்களில் காணப்படும் சயனமூர்த்தி இப்படிக் கிடையாது. ஏனெனில் அவை சிறு கட்டத்துக்குள் வருபவை. ஆனால் இங்குள்ள விரிந்து பரந்த சிற்பத்தை இப்படித்தான் செதுக்கவேண்டும்!

நித்திரையில் விண்ணவர் படுத்திருக்கிறார். வலது கரம் நாகத் தலையை ஒட்டி நீண்டுள்ளது. இடது கரம் கடக முத்திரையைக் காட்டியுள்ளது. வலது கால் நீண்டிருக்க, இடது கால் சற்றே மேலெழும்பி உள்ளது. கண்கள் பாதி மூடியுள்ளன. திருமகள், நிலமகள் இருவரும் இருக்கவேண்டும். திருமகள் தோள்புறத்திலும் நிலமகள் கால்புறத்திலும் (போக சயனமூர்த்தி என்றால் இதுதான் ஆகம முறை). ஆனால் திருமகளைக் காண முடிவதில்லை. காலடியில் நிலமகள் அமர்ந்திருக்கிறாள்.

மார்க்கண்டேயர், பிருகு என்ற இரு மகரிஷிகளும் காலடியில் உட்கார்ந்திருக்கவேண்டும். ஒரு ரிஷி கண்ணுக்குத் தென்படுகிறார். மற்றொருவர் காணவில்லை. உத்சவ மூர்த்தி அவரை மறைத்திருக்கவேண்டும்.

கருடன் தலைமாட்டில் நின்றுகொண்டிருக்கிறார். அவருக்கு நேர்மேலே சூரியன். மறுகோடியில் சந்திரன்.

நாபிக்கமலத்திலிருந்து பிரமன். அவருக்கு இரு புறமும், தும்புரு, நாரதர், சனத்குமாரர்கள் நால்வர், ஆயுதபுருஷர்கள் ஐவர், சப்தரிஷிகள் எழுவர், அஷ்ட திக்பாலர்கள் எண்மர் என நிறைந்திருக்கவேண்டும். அவர்கள் அனைவரையும் மேலே காண்பீர்கள். ஐந்து ஆயுதபுருஷர்கள் பறக்கும் கோலத்தில் இருப்பார்கள். விஷ்ணுவின் ஆயுதங்கள் சங்கு, சக்கரம், வாள், வில், கதை. (மாமல்லபுரத்தில் இரு ஆயுத புருஷர்களை மட்டுமே காணலாம்.) இந்த ஐந்து ஆயுத புருஷர்களும் யாரை நோக்கிச் செல்கிறார்கள்?

விண்ணவரின் கால்புறத்தில் இரு அரக்கர்கள். மது, கைடபன். இவர்கள் விஷ்ணுவின் காது அழுக்கிலிருந்து உருவானவர்கள் என்கிறது தேவி மகாத்மியம். பூமியை எடுத்துகொண்டு போக வந்தவர்கள். விஷ்ணுவைத் தாக்க வருகிறார்கள். அவர்களை நோக்கித்தான் ஆயுத புருஷர்கள் நகர்வதாக சிற்பி வடித்துள்ளார்.

இதற்கிடையில் ஒரு டிராமா. யாரடா இவர்கள், எம் தலைவனைத் தாக்குவதற்கு வந்துள்ளார்கள் என்று கொதித்தெழும் ஆதிசேஷன் தன் வாயிலிருந்து அனல் விஷத்தைக் கக்குகிறான். அது பறந்து சென்று மது, கைடபர்களைத் தாக்க அதில் ஒருவன் தகிப்பைத் தாங்கமுடியாமல் தலையைச் சாய்த்து, முதுகின்மீது கைகொண்டு மறைத்துத் தப்ப முயல்கிறான்.

மாமல்லபுரத்தில் மது கைடபர்களின் கோலத்தைக் காணலாம். ஆனால் அனலைக் காண முடியாது. இங்கே திருமெய்யத்தில் அனல் ஜுவாலைகளையும் சிற்பத்தில் வடித்துள்ளனர். ஆனால் ஜுவாலையில் தீக்கங்குகளின் திசை பின்னோக்கி இருக்கவேண்டும். இங்கோ சிற்பத்தில் முன்னோக்கிச் செல்கிறது. இதற்கு குடவாயில் பாலசுப்ரமணியனின் விளக்கம் வித்தியாசமானது! அனலைக் கக்கியபிறகு கடும் உஷ்ணக் காற்றையும் அனுப்புகிறானாம் ஆதிசேஷன். அந்தக் காற்று முன்னோக்கிச் செல்வதால் தீக்கங்குகளும் முன்னோக்கிப் போகின்றனவாம்.

இந்தப் பெரிய நாடகம் நம் கண்முன் பனோரமிக் காட்சியாக விரிவடைகிறது.

(c) அசோக் கிருஷ்ணசாமி, தனித்தனியாக எடுத்து
போட்டோஷாப்பில் ஒட்டவைக்கப்பட்டது. நேராகப்
பார்க்கும்போது இடையில் இரு தூண்கள் இருக்கும்.
நமக்கு நெருக்கடி தருபவர்கள் ஏதோ கதையைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கும் பட்டரும், உத்சவர் பெயர் என்ன என்று ஆர்வமாகக் கேட்கும் பிற பக்தர்களும். ஆனால் கோவில் ஒன்றும் நம் சொத்து அல்லவே? எனவே நாம் ஓர் ஓரமாக நின்று இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்குமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பட்டர், கீழே குழுமி நிற்பவர்கள் சித்திரகுப்தனும் தர்மராஜாவும் என்கிறார். முப்பது முப்பத்தொன்னு தேவர்கள், நாப்பது நாப்பத்தொன்னு ரிஷிகள் என்று ஏதேதோ சொல்கிறார். எந்த ஆகமம், எந்த சோர்ஸ் என்றெல்லாம் அவரிடம் கேட்க முடியாது. அவர் கோவில், அவர் கதை. துளசி, தீர்த்தம், சடாரி ஆக ஆக, பஸ் கிளம்பிவிடும் என்று பரபரவென்று ஓடுகிறார்கள் மக்கள்.

நாம் மட்டும் இன்னமும் இருக்கிறோம். அடுத்து சிவனைப் பார்க்கவேண்டும். இரு கோவிலும் சேர்ந்து இருந்த வரலாறையும் பிரிந்த கதையையும் தெரிந்துகொள்ளவேண்டும். இடையில் எழுப்பப்பட்ட சுவர், அழிந்த இசைக் கல்வெட்டு இரண்டையும் பார்க்கவேண்டுமே.

(தொடரும்)

Tuesday, January 24, 2012

மொழிபெயர்ப்புகள்

இந்த ஆண்டு கிழக்கு பதிப்பகம் சில குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புப் புத்தகங்களைக் கொண்டுவந்திருந்தது என்பது என் கருத்து. ஆனால் பொதுவாக நம் வாசகர்கள் மொழிபெயர்ப்புப் புத்தகங்களை அவ்வளவு காதலுடன் பார்ப்பதில்லை. அதற்குச் சில காரணங்கள் உண்டு.

பொதுவாக இந்தப் புத்தகங்கள் ஆங்கிலத்திலேயே 250 பக்கங்களுக்குமேல்தான் இருக்கும். தமிழில் நியாயமாக மொழிபெயர்த்தால் 350 தாண்டிவிடும். அதற்கேற்ப விலை இருக்கும்.

மொழிபெயர்ப்புகள் மிக அரிதாகத்தான் சரளமான நடையில்தான் உள்ளன. எக்கச்சக்கப் பணம் கொடுத்து திராபை மொழிபெயர்ப்புகளை ஏன் வாங்கி உடம்பைக் கெடுத்துக்கொள்வானேன் என்று பலர் இவற்றை வாங்குவதே இல்லை.

சில புத்தகங்கள் தவிர்த்து, ஒரிஜினல் எழுத்தாளர்கள் பற்றி தமிழ் வாசகர்கள் கேள்விப்பட்டிருப்பதில்லை. எனவே ‘பிராண்ட் புல்’ (சுஜாதா, சாண்டில்யன், கல்கி...) கிடையாது.

ஆனால், சில பதிப்பகங்கள் தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புத் தளத்தில் இயங்கிவருகின்றன. அவற்றை அறிமுகம் செய்யவே இந்தப் பதிவு.

1. காலச்சுவடு: சமீப காலங்களில் காலச்சுவடு மிகத் தீவிரமாக மொழிபெயர்ப்பு உரிமங்களை வாங்குவதில் இறங்கியுள்ளது. திருவனந்தபுரம், தில்லி, பிராங்ஃபர்ட் என்று எங்கெல்லாம் மொழிபெயர்ப்பு உரிமங்கள் விற்பனை நடைபெறுகிறதோ அங்கு காலச்சுவடு கண்ணனைக் காணலாம். கார்டன் வெய்ஸின் ‘தி கேஜ்’, அருந்ததி ராய், பஷாரத் பீர் எழுதியவை என்று சிலவற்றைக் குறிப்பிடலாம்.

2. சந்தியா பதிப்பகம்: சமீப காலப் புத்தகங்கள் இல்லாமல், காப்புரிமம் காலாவதியான பல பழைய புத்தகங்களை மொழிபெயர்த்துக் கொண்டுவருகின்றனர். யுவான் சுவாங் பயணம், முகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள் போன்ற சிலவற்றைச் சொல்லலாம்.

இடதுசாரிச் சிந்தனை கொண்ட பதிப்பகங்கள் பல காலமாகவே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றி வருகின்றன.

3. பாரதி புத்தகாலயம்: நேருவின் கண்டுணர்ந்த இந்தியா, உலக வரலாறு, லாப்பியர்/கால்லின்ஸின் நள்ளிரவில் சுதந்தரம் போன்ற சில முக்கியமான நூல்கள், பல கம்யூனிஸ்ட் நூல்கள், பல குழந்தைப் புத்தகங்கள் என்று மிக முக்கியமான பணி.

4. அலைகள்: நான்கு வேதங்கள், பல்வேறு கம்யூனிசப் புத்தகங்கள்.

5. விடியல்: கம்யூனிசப் புத்தகங்கள்

6. என்.சி.பி.எச்: நீலகண்ட சாஸ்திரியின் சோழர்கள் வரலாறு, டி.டி.கோசாம்பியின் இந்திய வரலாறு என்று பல புத்தகங்கள் என்.சி.பி.எச் வாயிலாக வெளியாகியுள்ளன. இந்த ஆண்டும் நிறையப் புத்தகங்களைப் பார்த்தேன்.

7. விகடன் பிரசுரம்: கடந்த மூன்று வருடங்களாக விகடன் பல முக்கியமான புத்தகங்களை தமிழாக்கம் செய்துவருகிறது. மால்கம் கிளாட்வெல்லின் மூன்று புத்தகங்கள், குருசரண் தாஸின் புத்தகங்கள், ரேஷ்மி பன்சாலின் புத்தகங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. பியர்சன், சேஜ் ஆகிய ஆங்கிலப் பதிப்பகங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு பல முக்கியமான புத்தகங்களை தமிழுக்கு இவர்கள் கொண்டுவருகிறார்கள்.

8. கண்ணதாசன் பதிப்பகம்: அனைவருக்கும் நன்கு தெரிந்த அப்துல் கலாமின் அக்கினிச் சிறகுகள் மட்டுமல்ல, பதினைந்து ஆண்டுகளாக சுய முன்னேற்ற நூல்கள் பலவற்றைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர்கள் இவர்கள். கோப்மேயர், நெப்போலியன் ஹில் என்று தொடங்கி நூற்றுக்கும் மேற்பட்ட மொழியாக்கங்களை இவர்கள் செய்துள்ளனர். அகதா கிறிஸ்டி, ஜேம்ஸ் ஹேட்லி சேஸ் போன்ற கொலைக்கதை புத்தகங்களும் இவர்கள் வாயிலாக வெளியாகியுள்ளன. பல ஓஷோ புத்தகங்களும் இவர்களுடைய மொழிபெயர்ப்பின் வழியாக வெளியானவைதாம்.

9. மஞ்சுள்: தமிழுக்குக் கண்ணதாசன் பதிப்பகம்போல ஹிந்திக்கு இவர்கள். சுயமுன்னேற்றப் புத்தகங்களை ஹிந்திக்குக் கொண்டுவந்துள்ள இவர்கள், சமீபகாலமாக பல புத்தகங்களை தமிழாக்கம் செய்தும் வருகின்றனர். இவற்றை கிழக்கு பதிப்பகம் விநியோகிக்கிறது.

10. கிழக்கு பதிப்பகம்: கடந்த 3 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 80 புத்தகங்கள்வரை நாங்கள் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டுவந்துள்ளோம். இவை வாழ்க்கை வரலாறு, சுய முன்னேற்றம், வரலாறு, சமகால அரசியல் ஆகிய தளங்களில் உள்ளன. ஜெஃப்ரி ஆர்ச்சர் புத்தகங்கள் இரண்டையும் வெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழில் கொண்டுவந்துள்ளோம். பியர்சன், சேஜ், பெங்குவின், ஹார்ப்பர் கால்லின்ஸ், ரேண்டம் ஹவுஸ் ஆகியோரின் பல புத்தகங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளோம். குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு புத்தகம் என்றால் ராமச்சந்திர குஹாவின் ‘இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு’ என்பதைச் சொல்வேன். விரிவாகச் சொல்லவேண்டும் என்றால் பல புத்தகங்கள் உள்ளன. வேறு ஓரிடத்தில் அவற்றைப் பார்ப்போம்.

***

யாருடைய பெயராவது விட்டுப் போயுள்ளது என்றால் அதற்கு உள்காரணம் எதுவும் கிடையாது. என் கண்ணில் பட்ட, என் மனத்தைக் கவர்ந்த பதிப்பகங்களை மட்டும்தான் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுள்ள முக்கியமான பதிப்பகம் ஏதாவது விட்டுப்போயிருந்தால் அதனைக் குறிப்பிடுங்கள். சேர்த்துக்கொள்கிறேன்.

Monday, January 23, 2012

ஊருணி நீர் நிறைந்தற்றே - 2

ஞாயிறு காலை டிர்க் வால்த்தர், சாந்தா ஷீலா நாயர் ஆகியோருடன் மாமல்லபுரத்துக்கு அருகில் உள்ள பட்டிகாடு (இப்படித்தான் அங்கு எழுதியிருந்தது) என்ற கிராமம் சென்று அங்கு கட்டப்பட்டிருக்கும் ஊருணியைப் பார்க்கச் சென்றேன். இதன் விரிவான ஒளிப்பதிவை (சுமார் 30 நிமிடங்கள்) கீழே கொடுத்துள்ளேன். விரும்பியவர்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.

சாதாரண ஊர்க்குளம். இதைப்போல ஒரு லட்சம் குளங்கள் தமிழகம் எங்கும் இருக்கும். பல பயனின்றி அழிந்துபோயிருக்கும். ஆனால், இந்த ஊருணிகள் கட்டப்பட்டபோது, மிகத் தெளிவான ஒரு முறை இருந்திருக்கிறது.
  1. ஊருணியின் வடிவமைப்பு. அதாவது அதன் ஆழம், அதன் நீள, அகலங்கள். இது சில கணிப்புகளை உள்ளடக்கியது. அந்தப் பகுதியின் மழை எவ்வளவு, அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கான குடிநீர்த் தேவை எவ்வளவு? இதைக் கொண்டுதான் இந்த வடிவமைப்பு இருக்கும்.
  2. ஊருணியில் ஓரிடத்தில் ஒரு கிணறு இருக்கும். மழை குறைவாக இருக்கும்போது ஊருணி முழுவதும் வற்றிவிட்டாலும் அந்தக் கிணறிலிருந்து நீர் கிடைக்கும். அவ்வப்போது ஊருணி வற்றவேண்டும். அப்போதுதான் அதில் படர்ந்திருக்கும் பாசிகளை நீக்கிச் சுத்தம் செய்ய முடியும்.
  3. நீர்ப் பிடிப்புப் பகுதி. ஊருணி என்பது ஊறும் நிலத்தடி நீரைக் கொண்டதல்ல. அது வான் மழை நீரைக் கொண்டது. அதாவது ரெயின் வாட்டர் ஹார்வெஸ்டிங்:-) ஒரு பெரும் நிலப்பரப்பில் பொழியும் மழை நீரைச் சேமித்து ஊருணிக்குக் கொண்டுசெல்லவேண்டும். அதற்கு ஏற்றார்போல ஊருணி இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும். மழை நீர் ஓடிவந்து சேரும் பாதைகளை உருவாக்கவேண்டும்.
  4. இந்த மழை நீர்ச் சேகரிப்புப் பகுதியில் அசுத்தங்கள், முக்கியமாக மனிதர்களும் கால்நடைகளும் மலம், சிறுநீர் கழிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
  5. இந்த மழைநீர் அப்படியே ஊருணிக்குள் செல்லாமல் ஒரு வடிகட்டி வழியாகச் செல்லவேண்டும். இந்த வடிகட்டியில் பல நிலைகள் இருக்கும். நாம் சிறு வகுப்பில் படிக்கும் முறைதான். பெரிய கற்கள், சிறிய கற்கள், பெரிய மணற்துகள், நன்கு சலிக்கப்பட்ட சிறிய மணற்துகள். இதையெல்லாம் தாண்டி நீர் உள்ளே வந்தால் பெரும்பாலான அழுக்குகள் நீக்கப்பட்டுவிடும்.
  6. மனித உடலுக்குத் தீங்கு செய்யும் நுண்ணுயிரிகள் பரவாமல் இருக்க ஊருணியின் அமைப்பே உதவும். ஊருணியின் ஒரு முனையிலிருந்து நீர் உள்ளே வருகிறது. மறுமுனையிலிருந்து நீர் வெளியே எடுக்கப்படுகிறது. இடப்பட்ட தூரத்தைக் கடப்பதற்குள் நுண்ணுயிரிகள் பெரும்பாலும் இறந்துவிடுகின்றன.
  7. ஊருணியில் யாரும் கால் வைக்கமாட்டார்கள். குளிக்க, துவைக்கமாட்டார்கள். ஆடு மாடுகள் செல்லாதவாறு பார்த்துக்கொள்வார்கள். முன்காலங்களில் எப்படி இதனைச் செய்தார்களோ, ஆனால் இப்போது நான் பார்த்த இடத்தில் நல்ல சுற்றுச் சுவர் எழுப்பி, பூட்டு கொண்டு பூட்டிவைத்துள்ளனர்.
  8. அருகில் இருக்கும் மரங்களில் வசிக்கும் பறவைகள், விலங்குகள் ஊருணி நீரில் அசுத்தம் செய்தால் என்ன ஆகும் என்று தெரியவில்லை. பெரும்பாலும் வடிகட்டிகள் வழியாக நீர் வெளியே வரும்போது இவற்றின் தாக்கம் ஏதும் இருக்காது.
  9. மழைக் காலங்களில் பிடிக்கப்படும் நீர் ஆண்டுமுழுவதற்கும் குடிக்கவும் உணவு சமைக்கவும் பயனாகிறது. இந்த நீரை பிற காரியங்களுக்கு - குளிக்க, துவைக்க, வீடு கழுவ, மாடு கழுவ - பயன்படுத்துவதில்லை. அதற்கு பிற குளங்களைப் பயன்படுத்துவார்கள்.
  10. வெளியே எடுக்கப்படும் நீர் இரண்டு வடிகட்டிகள் தாண்டி வருகிறது. இக்காலத்தில் பம்ப் போட்டு நீரை அடிக்கிறார்கள்.
பட்டிகாடு ஊருணி நீரை தொடர்ந்து சோதனை செய்துபார்த்ததில் அதனை அப்படியே காய்ச்சாமல், ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் என்றெல்லாம் எதுவும் செய்யாமல் குடிக்கும் தரத்தில்தான் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

சில படங்கள்:

பூட்டிய கதவுக்குப் பின் ஊருணி
கொஞ்சம் பாசி படர்ந்துள்ளது
டிர்க் வால்த்தர், தன் ஒரு மகளுடன்
அருகில் உள்ள வானிலை அளக்கும் கருவிகள்,
துரதிர்ஷ்டவசமாக,
இப்போது பயன்பாட்டில் இல்லை
வண்டியில் வந்து குடிநீர் எடுத்துச் செல்கிறார்கள்
அருகில் ஒரு அம்மன் கோவில், ஆலமரம்
ஊருணி எப்படி இயங்குகிறது என்ற விளக்கப்படம்
அருகில் வாலிபால் விளையாடும் இளைஞர்கள்

ஒளிப்பதிவு (சுமார் 30 நிமிடங்கள்)


Saturday, January 21, 2012

புதுக்கோட்டை பயணம் - 1

முன் தயாரிப்பு

தமிழ்ப் பாரம்பரியக் குழுமம் சார்பாக ஒவ்வோர் ஆண்டும் ஒரு பாரம்பரியப் பகுதிக்குச் சென்று சில நாள்கள் தங்கியிருந்து, அங்குள்ள சின்னங்களை, அவற்றின் வரலாறை, கலையைப் படிப்பது, புரிந்துகொள்ள முயற்சிப்பது எங்கள் வழக்கம்.

2010-ல் மாமல்லபுரத்தில் மூன்று நாள்கள் தங்கினோம். 2011-ல் எல்லோரா, அஜந்தாவுக்கு ஒரு வாரம். இப்போது 2012 ஜனவரியில் புதுக்கோட்டைக்குச் செல்கிறோம். இதற்கென கடந்த இரண்டு மாதங்களாக, படிப்பது, கூடுவது, பகிர்வது நடந்துவருகிறது. சுமார் 30 பேர் செல்கிறோம்.

கடந்த இருமுறையும் செய்த பயணங்கள் பற்றி என் பதிவில் நான் விரிவாக எதுவும் எழுதவில்லை. இம்முறை நிகழ்வின்போதே தொடர் பதிவுகளாக எழுதிவிட முடிவு செய்துள்ளேன். தொடக்கத்தில் சில அறிமுகப் பதிவுகளும்.

இந்த புதுக்கோட்டைப் பயணத்தின்போது நாங்கள் செல்லவிருக்கும் இடங்கள்:

1. நார்த்தாமலை, கடம்பர் மலை, ஆளுருட்டி மலை, சுற்றியுள்ள இடங்கள்
2. சித்தன்னவாசல் (அறிவர்கோவில், ஏழடிப்பட்டம்), பனங்குடி
3. குடுமியான்மலை
4. கொடும்பாளூர் (மூவர் கோவில், ஐவர் கோவில், முசுகுந்தேசுவரர் கோவில்)
5. விசலூர், செட்டிப்பட்டி
6. குன்றாண்டார் கோவில், மலையடிப்பட்டி, காளியாப்பட்டி
7. திருமயம், மலையக்கோவில், கண்ணனூர்
8. ஆவுடையார்கோவில், திருப்புன்னைவாயில், திருக்கட்டளை
9. புதுக்கோட்டை நகரம்

சமண, இந்துக் கோவில்கள், சிற்பங்கள், ஓவியங்கள், சமணர் படுக்கைகள், முதுமக்கள் தாழிகளைக் கொண்ட பெருங்கற்கால (மெகாலித்திக்) புதைகுழிகள்.

***

இப்பகுதிகளுக்கு சங்ககாலத்துக்கு முன்பிருந்தே தொடர்ச்சியான ஒரு வரலாறு உள்ளது. பல்லவ, சோழ அரசர்களுக்குக்கீழ் இருந்த இருக்குவேளிர்களும் முத்தரையர்களும் ஆட்சி செய்த பகுதி. பாண்டியர்களின் கட்டுப்பாடும் இருந்துள்ளது. பல்லவக் கலையின் தொடர்பு இருக்கும் அதே நேரம், அதிலிருந்து சற்று விலகி, முற்காலச் சோழர் கலைக்கான முன்மாதிரியாகவும் உள்ளது. (பிற்கால) சோழ சாம்ராஜியம், பாண்டிய, ஹொய்சாள அரசுகளுக்குப்பிறகு, மாலிக் காஃபூரின் தாக்குதல் இப்பகுதியிலும் இருந்தது. அதன்பின் விஜயநகர, நாயக்க, மராத்தா கட்டுப்பாடு. பின் தொண்டைமான்கள்.

தமிழகத்தின் பிற பகுதிகள் போலன்றி, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வளமையாக இருந்த பகுதி இது. ஏனெனில் புதுக்கோட்டை சமஸ்தானம் தனியான ஒரு பகுதியாக, பிரிட்டிஷ் ஆட்சியுடன் நட்பு கொண்ட ஒரு பகுதியாக இருந்துள்ளது. ஒரே ராஜ குடும்பம் (தொண்டைமான்கள்) சுமார் 270 வருடம் தொடர்ந்து ஆட்சி நடத்தியது. அதன்பின் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்தது. இந்த மன்னர்களுக்கு நல்ல திவான்கள் கிடைத்த காரணத்தால் ஆட்சிமுறை நல்லபடியாக நடந்துள்ளது.

அடுத்த சில பகுதிகளில் பல விஷயங்களை விரிவாகப் பார்க்கலாம்.

Friday, January 20, 2012

ஊருணி நீர் நிறைந்தற்றே...

இன்று மதியம், தமிழகத்தின் நீர்ப் பிரச்னையையும் கிராம ஊருணிகளையும் பற்றி இருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒருவர் டிர்க் வால்த்தர் என்னும் ஜெர்மன் நீர்ப் பொறியாளர். கடந்த சில ஆண்டுகளாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நீர்த் துறையில் வேலை செய்தவர். இப்போது தில்லி சென்றுவிட்டார். இன்னொருவர் தமிழக மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர் (ஓய்வுபெற்ற இ.ஆ.ப).

குடிக்க நீர் இல்லை என்று தமிழகத்தின் பல கிராமங்களில் மக்கள் திண்டாடுகின்றனர். அரசுதான் தங்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று எப்போதும்போல கையை அகல விரித்துக் கேட்கின்றனர். ஆனால் உண்மையில் சுமார் ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் நீர் நிர்வாகம் மிகச் சிறப்பாக இருந்தது என்றும் பின்னர் அது முற்றிலுமாக அழிந்துபோயுள்ளது என்றும் சொன்னார் வால்த்தர்.

சென்ற வாரம் தி ஹிந்து செய்தித்தாளில் வந்த ஒரு செய்தி, தமிழகத்தில் சுமார் 70,000 நீர் நிலைகள் உள்ளன என்றும் அதில் கிட்டத்தட்ட 48,000, கிராம ஊருணிகள் (அதாவது சிறியவை, கிராமப் பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் இருப்பவை) என்றும் தெரிவிக்கிறது. (சுட்டி கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் சேர்க்கிறேன்.) அவை பெரும்பாலும் சரியான பராமரிப்பு இன்றி வீணான நிலையில் இருக்கின்றன.

அவற்றை எப்படி பாரம்பரிய அறிவும் நவீன அறிவியலும் கொண்டு மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவது என்பதில்தான் வால்த்தர் வேலை செய்தார். தமிழக அரசு அதற்கான நிதியுதவியை அளித்தது. அந்தந்தப் பகுதி மக்களைக் கொண்டு, அந்தந்த ஊர்ப் பகுதியில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு ஊருணிகளை மீண்டும் செம்மைப்படுத்தி, அதில் கிடைக்கும் நீரை எப்படி ஆண்டு முழுதும் பகிர்ந்து பயன்படுத்துவது என்று சில இடங்களில் நடைமுறைப்படுத்தியுள்ளார். அவற்றில் ஓரிடத்துக்கு இந்த வாரத்துக்குள் அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார்.

அறிவியலால் அழிவு மட்டும்தான் சாத்தியம் என்பதாகப் பல அறிவுஜீவிகள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். மனித சமுதாயம் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளையும் அறிவியலின் உதவிகொண்டு தீர்க்கமுடியும் என்று தீர்க்கமாக நான் நம்புகிறேன். நம் முன்னோர்களும் இதே அறிவியலின் துணை கொண்டு மிகச் சிறப்பான பொறியியல் அமைப்புகளைக் கட்டியிருக்கிறார்கள். அதனைக்கூட புரிந்துகொள்ள சக்தியற்றவர்களாக நம் கிராமத்து மக்கள் மூளை மழுங்கிப் போயுள்ளனர். அந்த மூளையைக் கூர் தீட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது.

(சில மாதங்களுக்குமுன் வேம்பார் சென்றிருந்தபோது அருகில் இருக்கும் தங்கம்மாள்புரம் என்ற கிராம மக்கள், PAD என்ற தொண்டு நிறுவனத்தோடு இணைந்து எப்படி தங்கள் ஊரின் நீர் நிலையை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தனர் என்பதுபற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.)

சில மாதங்களுக்குமுன் நான் இலங்கையில் அனுராதபுரம் சென்றிருந்தபோது அங்கே கண்ட ஒரு குளத்தின் அமைப்பு கீழே படங்களாக. (சுமார் 11-12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று ஞாபகம்.)



இந்த மாதிரியே தமிழகத்திலிருந்து பல நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆனதாக வேறு ஒரு ஜெர்மன் ஆராய்ச்சியாளர் தன்னிடம் சொன்னதாக வால்த்தர் என்னிடம் சொன்னார். சில நூறு ஆண்டுகளுக்குமுன், தமிழகத்திலிருந்து (நீர் நிர்வாகம் போன்றவற்றுக்கான) பொறியியல் மாதிரிகள் ஆப்பிரிக்க, கீழை ஆசிய நாடுகளுக்கெல்லாம் சென்றதாக அந்த ஜெர்மன் ஆராய்ச்சியாளர் எழுதியுள்ளாராம். (அதற்கான தரவுகளை எனக்கு அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார்.) இதே மாதிரியைத்தான் இப்போது காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் வால்த்தர் நடைமுறைப்படுத்தியுள்ளார்.

நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து வரும் நீர் நேராக குளத்தில் சேமிக்கப்படாது. மாறாக சில மணற்சல்லடைகள் வழியாக வடிகட்டப்பட்டு பின், அந்த நீர்தான் குளத்தில் சேமிக்கப்படும். அதிலிருந்து நேராக நீர் வெளியே எடுக்கப்படாது. மாறாக இரட்டை வடிகட்டிகள் தாண்டி கை அடி பம்ப் மூலமாகப் பிடிக்கப்படும். வடிகட்டிகள் எல்லாமே இயற்கை வடிகட்டிகள். ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் எல்லாம் கிடையாது. மின்சாரம் தேவையில்லை. நீர் நிலையில் அசுத்தம் கலக்காமல் பாதுகாக்கவேண்டும். நீர் நிலையின் ஆழம் எவ்வளவு இருக்கவேண்டும், சுற்று மதில் எதனால் அமைக்கப்படவேண்டும் ஆகியவற்றுக்கு சில கால்குலேஷன்களைச் செய்யவேண்டும். பொதுவாக நம் முன்னோர்கள் கட்டியுள்ள ஊருணிகளுக்கு உள்ளாக கிணறு ஒன்றை அமைத்திருப்பார்கள். இல்லாவிட்டால் அதையும் அமைக்கவேண்டும்.

மேலோட்டமாகப் பார்த்தால் மிக எளிதாகத் தோன்றும் இதில் மேற்கொண்டு நிறைய அறிவியல் பின்னணி உள்ளது. ஆனால் இப்போதைக்கு இது போதும்.

இந்த முறைப்படி, மக்களின் நேரடி ஈடுபாட்டுடன் உள்ளூர்க் குடிநீர் நிர்வாகத்தை அந்தந்தப் பகுதி மக்களே எடுத்துக்கொள்ளுமாறு செய்ய மாநில திட்டக் குழு உந்துதல் தரும் என்று சாந்தா ஷீலா நாயர் தெரிவித்தார்.

ஐஐடி விந்து

சில தினங்களுக்குமுன் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வரி விளம்பரம் ஒன்று வந்திருந்தது. ‘ஆரோக்கியமான, கெட்ட பழக்கம் ஏதும் இல்லாத, உயரமான, சிவப்பு நிறமான ஓர் ஐஐடி மாணவருடைய விந்து தேவை. ரூ. 20,000 தருகிறோம். சரியான நபராக இருந்தால், உயரம், நிறத்தில் சமரசம் செய்துகொள்ளலாம்.’

இப்படியெல்லாமா விளம்பரம் செய்வார்கள் என்ற அதிர்ச்சி பலருக்கு. இயற்கையா வளர்ப்பா, எது ஒரு குழந்தைக்கு அறிவைத் தருகிறது என்ற கேள்வியில் பலர் இறங்கினார்கள். பெயர் பெற்ற விஞ்ஞானிகளின், கணித மேதைகளின் சந்ததிகள் எல்லாம் என்ன பெரிதாக சாதித்துள்ளார்கள் என்று அவர்கள் கேள்வி கேட்டார்கள்.

மேற்படி தம்பதிகள் இப்படி விளம்பரம் எடுத்திருப்பது சமூகரீதியில் மோசமானதா, இல்லையா என்ற ஆராய்ச்சிக்குள் நான் இறங்கப்போவதில்லை. ஆனால் உயிரியல்ரீதியில், மரபணுவியல்ரீதியில் இதனைப் பார்ப்பது நலம் என்று நினைக்கிறேன்.

முதலில் இயற்கையா, வளர்ப்பா (nature or nurture?) என்ற கேள்விக்கு வருவோம். இயற்கை இல்லை, வளர்ப்புதான் அனைத்தையும் செய்கிறது என்பது தவறான வாதம். ஆனால், இயற்கை மட்டுமே, வளர்ப்பால் எதையும் பிரமாதமாகச் சாதிக்க முடியாது என்பதும் தவறான வாதம்.

ஒரு குழந்தையின் மரபணுவில் அதன் உடல் வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்குமான பாதைகள் ஏற்கெனவே வகுக்கப்பட்டுள்ளன. இயல்பிலேயே நுண்ணிய முளைத் திறன் அற்ற குழந்தைகளை எப்படியும் ஐன்ஸ்டைனாக மாற்றிவிட முடியாது. ஆனால் அந்தக் குழந்தைகளின் உச்சபட்சத் திறனை வெளிப்படுத்த என்ன செய்ய முடியுமோ அவற்றை சரியான வளர்ப்பால் செய்யமுடியும்.

அதேபோல, ஒரு குழந்தையின் வளர்ச்சிக் காலத்தில் அதற்குத் தேவையான போஷாக்கும், சரியான வழிகாட்டுதலும், சரியான சூழலும் இல்லாவிட்டால் என்னதான் மிகச் சிறந்த மரபணுக் கலவை இருந்தாலும் விளைவு விரும்பத்தக்கதாக இருக்காது.

பாலூட்டிகளிலும் பறவைகளிலும் பெண்கள்தான் குழந்தைப் பிறப்பையும் வளர்ப்பையும் உறுதி செய்பவர்கள். அவர்கள்தான் எந்த ஆணின் விந்தைக் கொண்டு தம் குழந்தையை உருவாக்கிக்கொள்வது என்பதை முடிவு செய்பவர்கள். இவ்வகை உயிரினங்கள் பலவற்றில் பெரும்பாலான ஆண்கள் தம் மரபணுவை அடுத்த தலைமுறைக்குக் கடத்தாமலேயே உயிர் துறக்க நேரிடுகிறது. சில உயிரினங்களில் தலைமை ஆண், பிற ஆண்களை ஒழித்துக் கட்டுவதில் அல்லது துரத்துவதில் குறியாக உள்ளது. தன் கூட்டத்தில் உள்ள பெண்களுக்கு தன் விந்தைத் தவிர வேறு எந்த ஆணின் விந்தும் கிடைத்துவிடக்கூடாது என்பதே அதன் குறிக்கோள் (உதாரணம்: சிங்கம்).

மனித இனத்தில் இந்த அளவுக்கு மோசம் இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி போன்ற சமூகக் கட்டுப்பாடு மூலம் அனைத்து ஆண்களுக்கும் தத்தம் மரபணுக்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஒரு பெண் உடன்பட்டால்தான் இதனைச் செயல்படுத்த முடியும். (என் கணிப்பில், ஒருவனுக்கு ஒருத்தி என்பது பெண்களின் பாதுகாப்புக்காகச் செய்யப்பட்டதல்ல; பலவீனமான ஆண்களின் பாதுகாப்புக்காக!)

இங்கே ஃபீனோடைப், ஜீனோடைப், அல்லீல் என்ற ஆங்கில வார்த்தைகளை அறிமுகப்படுத்துகிறேன்.

ஒரு பட்டாணிச் செடியில் உள்ள ஒரு காயை உடைத்துப் பார்த்தால், குண்டு குண்டாக, மொழுக் மொழுக் என்று, சுருக்கமே இல்லாமல் இருக்கும் பட்டாணிகள் கிடைக்கின்றன. இப்போது கொழுக் மொழுக் என்று கண் பார்வைக்குத் தெரியும் இந்தக் குணாதிசயம்தான் ஃபீனோடைப். இந்தக் குணத்தை அந்தப் பட்டாணி விதைகளுக்குக் கொடுத்த அடிப்படை மரபணுக் கொத்துதான் ஜீனோடைப். ஒரு குறிப்பிட்ட பண்பைக் கட்டுப்படுத்தக்கூடிய மரபணுக் கொத்துகள் பல இருக்கும். அவை அனைத்தும் அல்லீல்(கள்) எனப்படும்.

பாலினப் பெருக்கம் செய்யும் அனைத்து உயிரினங்களுடைய டி.என்.ஏவிலும் ஒரு குணாதிசயத்துக்கு ஒரு ஜோடி அல்லீல்கள் இருக்கும். ஒன்று தாயிடமிருந்தும் மற்றொன்று தந்தையிடமிருந்தும் வந்திருக்கும்.

சுருங்கிய பட்டாணியை உருவாக்கும் மரபணுக் கொத்து ஒன்று. மொழுக் மொழுக் பட்டாணியை உருவாக்கும் மரபணுக் கொத்து ஒன்று. ஒரு பட்டாணிச் செடியில் இந்த இரண்டு அல்லீல்களும் சேர்ந்தே இருக்கலாம். அப்படி இருந்தும், விளைவு அனைத்துமே மொழுக் மொழுக் பட்டாணியாக இருக்கும். இதற்குக் காரணம் அந்தக் குறிப்பிட்ட மரபணுவின் ‘ஓங்கு’ தன்மை (dominant). மற்றைய அல்லீல் ஒடுங்கு தன்மை (recessive) கொண்டதாக இருக்கிறது என்று பொருள்.

சரி, இந்தக் கதையெல்லாம் எதற்கு?

புத்திசாலிக் குழந்தை வேண்டும் என்று ஐஐடி விந்தை வாங்க முற்படும் எதிர்காலத் தாயின் மரபணு ‘மந்தமான’ குழந்தையை உருவாக்கக்கூடியதாக இருந்து, அந்த அல்லீல் ஓங்கு தன்மை கொண்டதாக இருந்தால், 20,000 ரூபாய் வீணாகப் போய்விடும்.

மற்றொரு பிரச்னை, வெவ்வேறு மரபணுக்கள் ஒன்றுசேரும்போது, விளைவுகள் ஒட்டுமொத்தமாக மாறிப்போகலாம். சம்பந்தப்பட்ட ஐஐடி மாணவர் மரபணுவில் எல்லாம் சரியாக இருப்பதாக வைத்துக்கொண்டாலும், சரிசமமாக ஆண், பெண் மரபணுக்கள் கலக்கும்போது ஒன்று மற்றொன்றை வேறு பாதையில் பயணிக்க வைக்கலாம். உதாரணத்துக்கு அந்தக் குழந்தைக்கு ‘பிடிவாத’ குணமும் வந்து, அதற்கு மிகச் சிறந்த திறமைகள் இருந்தாலும் அதனைச் செயல்படுத்த மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து, அது நாசமாகப் போகலாம்.

ஒரு காலத்தில் யூஜெனிக்ஸ் என்று ஒரு போலித் துறையை வளர்க்கச் சில விஞ்ஞானிகளும் அறிவுஜீவிகளும் முற்பட்டார்கள். தம் சமூகத்தில் உள்ள மக்கள் சிலரை அவர்கள் கீழானவர்களாகக் கருதினார்கள். அவர்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமை இருக்கக்கூடாது; அவர்களுடைய மரபணுக்கள் முற்றிலுமாக அழிக்கப்படவேண்டும் என்றெல்லாம் இந்த அறிவாளிகள் கருதினார்கள். நல்லவேளையாக அப்படி ஏதும் நடக்கவில்லை. யூதர்களைப் பொருத்தமட்டில், ஹிட்லர்கூட இதுபோன்ற கருத்துகளைத்தான் கொண்டிருந்தார்.

ஆனால் உண்மையில் உலகில் உள்ள நான்கு பெரும் மனித இனங்களான காகேசியன், நீக்ராய்ட், ஆஸ்ட்ரலாய்ட், மங்கோலாய்ட் என அனைத்திலுமே (யூதர்கள், ஜெர்மானியர்கள், இந்தியர்கள், ஆப்பிரிக்கர்கள், சீனர்கள் என அனைவரையும் சேர்த்து) கிட்டத்தட்ட ஒரே மரபணுக்கள்தான் திரும்பத் திரும்ப வருகின்றன. வெகுசில மாறுபாடுகள்தான் காணப்படுகின்றன. அந்த மாறுபாடுகள்தான் தோலின் நிறமாக, முடியின் சுருளாக, முகத்தின் அகலமாக, உடலின் உயரமாகவெல்லாம் தோற்றம் கொள்கின்றன. ஆனால் மூளைத் திறனை (மொழித் திறன், கணிதத் திறன், பொறியியல் திறன்)  பொருத்தமட்டில் பெரும் மாற்றங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. கடந்த ஐந்நூறு ஆண்டுகளில் உலகின் பல நாடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைக் கொண்டு வெள்ளையினம் என்றால் அப்படி, கருப்பினம் என்றால் இப்படி, இந்தியன் என்றால் வேறு மாதிரி, அதிலும் இந்தச் சாதியினர் என்றால் இன்னொரு மாதிரி என்று கருதுவது மதியீனம். இங்குதான் இயற்கையைவிட வளர்ப்பு ஏற்றம் பெறுகிறது.

குறிப்பிட்ட சமூகப் பின்னணி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை ஒரு குறிப்பிட்ட பாதையில் வேகமாகச் செல்லவைக்கிறது. ஆனால் இந்தக் காலகட்டத்தில் மரபணுக்களின் எந்தக் குறிப்பிடத்தக்க மாற்றமும் ஏற்படுவதில்லை.

சொல்லப்போனால், உலகமயமாதல் காரணமாக, முன்னைவிட அதிகமாக இப்போது இனங்களுக்கு இடையேயான மரபணுக் கலப்பு அதிகம் நிகழ்கிறது.

மரபணுக் கலப்பு - shuffling - என்பது நீண்டகால நோக்கில், மரபணுத் தூய்மையைவிட அதிகம் பயனுடையது. சில காலம் மட்டுமே ஓடி, காலுடைந்தால் துப்பாக்கிக் குண்டுமூலம் சொர்க்கம் பிராப்திக்கும் ரேஸ் குதிரைகளுக்குத்தான் மரபணுத் தூய்மை அவசியம். மரபணுக்கள் கலக்கக் கலக்கத்தான் மனித சமுதாயத்தை அழிக்க முயற்சி செய்யும் நுண்ணுயிரிகளை டபாய்க்கும் திறனை மனிதர்கள் தொடர்ந்து பெறுவார்கள்.

ஆகவே இஷ்டத்துக்கு மாற்றி மாற்றித் திருமணம் செய்துகொள்ளுங்கள். பிற சாதியினரை மட்டுமல்ல, பிற மாநிலத்தவரை, பிற நாட்டவரை!  கலப்புக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்!

*

இது இப்படி இருக்க, குறிப்பிட்ட அந்த தம்பதியினருக்கு தமக்கு விருப்பமான விந்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை உள்ளதா, என்றால் நிச்சயம் உண்டு. ஆனால் அதனால் அவர்கள் விரும்பும் விளைவுகள் ஏற்படுமா என்றால் அழுத்தம்திருத்தமாகப் பதில் சொல்வது கடினம்.

நடக்கும் அல்லது நடக்காது!

Thursday, January 19, 2012

இசையும் கதையும்

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள, கபிலன்வைரமுத்து எழுதிய உயிர்ச்சொல் புத்தகம் பற்றி என் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அப்போது இந்தப் புத்தகத்துடன் ஒரு பாடலும் எழுதப்பட்டு, இசையமைக்கப்பட்டு குறுவட்டாக வருகிறது; இது ஒரு புதுமை என்று குறிப்பிட்டிருந்தேன்.

‘பாதை’ என்ற குழு, இதற்கு முன்னதாகவே, பாடல்களும் கதையும் சேர்த்து இரு புத்தகங்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

ரணம் சுகம் - பத்து பாடல்களை கொண்டது.
நியான் நகரம் - பதினேழு பாடல்களை கொண்டது.

இது தொடர்பான தகவல், பாதை இணையத்தளத்தில் கிடைக்கும்.

Tuesday, January 17, 2012

திருவள்ளுவர் எப்போது பிறந்தார்?

இன்று திருவள்ளுவர் தினம் என்று தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.

திருவள்ளுவர் கிமு 31-ம் ஆண்டில் பிறந்ததாகவும் (கிறிஸ்துவுக்கு 31 ஆண்டுகளுக்கு முன்), 60 ஆண்டு சுழற்சி முறையிலான ஆண்டு முறை தமிழருக்கு ஏற்புடையதன்று என்பதால் தொடர்ச்சியான ஓர் ஆண்டு முறை வேண்டும் என்றும் பல தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி முடிவெடுத்ததாகவும் நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

தில்லைக்குமரன் எழுதியுள்ள இந்தக் கட்டுரை இதன் பின்னணியை விவரிக்கும்.

தை முதல் நாள்தான் ஆண்டின் முதல் நாளாக இருக்கவேண்டும்; ஏனெனில் அது solstice-க்கு அருகில் உள்ள நாள் என்பது அறிஞர் கூற்று. சோல்ஸ்டைஸ் என்பது கதிரவன் கடக அல்லது மகரக் கோட்டுக்கு நேர் மேலே வந்துவிட்டு திசைமாறிச் செல்லும் நாள். அது 22 டிசம்பர் 2011-ல் நடந்தது.

நம் வாழ்நாளில் இது ஜூன் 20-21; டிசம்பர் 21-22 ஆகிய தினங்களில்தான் திரும்பத் திரும்ப நடந்துகொண்டிருக்கப்போகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் என்று பார்த்தால், பூமியின் அச்சு கொண்டுள்ள கோணம் மாறிக்கொண்டே இருக்கும். அந்த மாற்றத்துக்கு ஏற்ப சோல்ஸ்டைஸ் மாறிக்கொண்டே இருக்கும்.

கிறிஸ்துமஸ் திருவிழாவே, பழைய பேகன் திருவிழாவான சோல்ஸ்டைஸ் திருவிழாவை அபகரித்துக்கொண்டதுதான் என்றும் சொல்வார்கள்.

பழந்தமிழர் எத்தனை ஆண்டுகளுக்குமுன் என்ன காரணம் கொண்டு சோல்ஸ்டைஸை ஆண்டின் முதல் நாளாகத் தீர்மானித்தார்கள் என்பதற்கான அறிவியல்பூர்வமான காரணங்கள் தெளிவாக இல்லை. அதுவும் இன்று சோல்ஸ்டைஸிலிருந்து கிட்டத்தட்ட 25 நாள்கள் தள்ளிப்போயிருக்கும் நிலையில் அதன் காரணமாகத்தான் தை முதல் நாள் என்பது ஆண்டின் முதல் நாள் என்று ஒருவர் அழுத்திச் சொல்வது அறிவியலுக்கு உகந்ததாக இல்லை. சோல்ஸ்டைஸுக்கு நெருக்கமானது என்றால், மார்கழி 1-ம் தேதியை ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது? (அதுவும் மாதங்களில் நான் மார்கழி என்றுவேறு கண்ணபிரான் சொல்லியிருக்கிறான் என்று சொல்லி இந்துக்களை தாஜா பண்ணிவிடலாமே?)

இது ஒரு பக்கம் என்றால், திருவள்ளுவரின் பிறந்த ஆண்டை எந்த அடிப்படையில் அவ்வளவு துல்லியமாக கிமு 31 என்று குறித்துள்ளார்கள்? பகுத்தறிவான வழியில் சித்திரையையும் 60 ஆண்டுச் சுழற்சியையும் கேள்வி கேட்கும்போது முன்வைக்கப்படும் மாற்றும் பகுத்தறிவுக்கு ஏற்றவகையில் இருக்கவேண்டுமல்லவா?

இது குறித்து யாரேனும் பயனுள்ளதாக ஏதேனும் சொல்லமுடியுமா?

Monday, January 16, 2012

புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்

இம்முறை அதிகம் வாங்கவில்லை. எப்போதும்போல, போனமுறை வாங்கிய புத்தகங்களையே இன்னமும் படித்து முடிக்கவில்லை...
  1. The Great Temple at Thanjavur, One Thousand Years, 1010-2010, George Mitchell and Indira Viswanathan Peterson, Photographs by Bharath Ramachandran, Marg, Rs. 2,500/- (Coffee table book)
  2. World History, Parragon, Rs. 250 (Nice book for young children. Hardbound, large font, pictures)
  3. The Orient BlackSwan Primary School Atlas, Rs. 130
  4. Temples of India, Myths and Legends, Mathuram Boothalingam, Publications Division, Rs. 115
  5. Mahatma Gandhi, A Great Life in Brief, Vincent Sheean, Publications Division, Rs. 80
  6. Mahatma Gandhi, Romain Rolland, Publications Division, Rs. 60
  7. சங்கச் சித்திரங்கள், ஜெயமோகன், தமிழினி, ரூ. 110
  8. மாமல்லபுரம் புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும், சா. பாலுசாமி, காலச்சுவடு, ரூ. 140
  9. பாம்புத் தைலம், பேயோன், ஆழி, ரூ. 100
  10. Elements of Hindu Iconography, T.A. Gopinatha Rao, (2 volumes, in 4 books), Motilal Banarsidass, Rs. 2,500 (Bought in the beginning)
-*-

Friday, January 13, 2012

கூகிள் - ஃபேஸ்புக் - தில்லி உயர்நீதிமன்றம்

கூகிள், பேஸ்புக் போன்றவை தத்தம் தளங்களில் உள்ள ‘ஏற்கத்தகாத விஷயங்களை’ (Objectionable materials) நீக்குவதற்கு ஒரு முறையை ஏற்படுத்தாவிட்டால், சீனாவில் நடப்பதைப் போல அவர்களுடைய தளங்கள் தடை செய்யப்படும் என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் இப்போது நடந்துகொண்டிருக்கும் வழக்கு ஒன்றில் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

நீதிபதிக்கு தொழில்நுட்பம் பற்றிய புரிதல் இல்லை என்று நினைக்கிறேன். கூடவே, கூகிள், ஃபேஸ்புக் இன்னபிற சோஷியல் தளங்கள் பற்றிய புரிதலும் குறைவாக உள்ளது என்றே கருத வாய்ப்புள்ளது. அவர் எதிர்பார்ப்பதைச் செய்வது என்பது தொழில்நுட்ப ரீதியில் மிகக் கடினமானது. சொல்லப்போனால் செய்யவே முடியாத ஒன்று.

இப்படிப் பேச்சு வரும்போதெல்லாம் சீனாவில் செய்கிறார்களே என்ற கேள்வி எழுகிறது. சீனாவில் எம்மாதிரியான தணிக்கை முறை இணையத்தில் நிலவுகிறது என்பதை விக்கிபீடியாவில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

மேற்கண்ட பக்கத்திலிருந்து, சீனாவில் என்னவெல்லாம் தடை செய்யப்பட்டது என்று பார்ப்போம்:
  1. அரசியல் அமைப்புச் சட்டத்தை, அரசு விதித்துள்ள சட்டங்களை, நிர்வாக ஆணைகளை எதிர்க்க அல்லது உடைக்கத் தூண்டுவது
  2. அரசையோ, சோஷலிச முறையையோ தூக்கி எறியத் தூண்டுவது
  3. தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்குமாறு அல்லது நாட்டைத் துண்டாடுமாறு தூண்டுவது
  4. தேசியங்களுக்கு இடையில் வெறுப்பை ஊட்டுவது, பாரபட்சம் காட்டுவது அல்லது தேசியங்கள் ஒன்றிணைந்து இருப்பதற்கு ஊறு விளைவிப்பது ஆகியவற்றைத் தூண்டுவது
  5. பொய் பேசுதல், உண்மையைத் திரித்தல், வதந்திகளைப் பரப்புதல், சமூக ஒழுங்கைக் குலைத்தல்
  6. பழங்கால மூட நம்பிக்கைகள், பாலுணர்வைத் தூண்டும் விஷயங்கள், சூதாட்டம், வன்முறை, கொலை ஆகியவற்றை ஊக்குவிப்பது
  7. பயங்கரவாதத்தை அல்லது குற்றச் செயல்களை ஊக்குவித்தல், பிறரை வசைபாடுதல், உண்மையைத் திரித்து பிறரை அவதூறு செய்தல்
  8. அரசு அமைப்புகளின் பெருமைக்கு பங்கம் வருமாறு செய்தல்
  9. அரசியல் அமைப்புச் சட்டத்துக்கும் அரசு சட்டங்களுக்கும், நிர்வாக ஆணைகளுக்கும் எதிரான பிற நடவடிக்கைகள்
  10. பெயரை மறைத்துக்கொள்ளுதல் - அநாமதேயம்
இதுபோன்ற சட்டங்களும் தணிக்கை முறையுமா நமக்குத் தேவை?

இப்போது நம் நாட்டில் அரசியல்வாதிகளும் சில ப்யூரிட்டன்களும் என்ன எதிர்பார்க்கிறார்கள்? மேலே உள்ளதில் இரண்டு விஷயங்களைத்தான். ஒன்று, பாலுணர்வைத் தூண்டும் விஷயங்களைத் தடைசெய்வது குறித்து. இரண்டாவது பிறரை வசைபாடுதல், அவதூறு செய்தல் ஆகியவற்றைத் தடை செய்வது குறித்து. இவை இரண்டைப் பற்றியுமே எனக்கு மாற்றுக் கருத்துகள் உள்ளன.

1. பாலுணர்வைத் தூண்டக்கூடிய விஷயங்கள், மனிதர்களுக்கு அவசியமான ஒன்று என்று நினைக்கிறேன். அதற்கான வசதிகள், வாய்ப்புகள் அனைவருக்கும் சட்டபூர்வமாகவே தரப்படவேண்டும். ‘அனைவருக்கும்’ என்றால் சிலரையும் சிலவற்றையும் தவிர்த்து. உதாரணமாக, 18 வயது நிரம்பாதோருக்கு இவை சென்று சேரக்கூடாது. அதேபோல 18 வயது நிரம்பாதோரை வைத்து எடுக்கப்படும் படங்கள்/வீடியோ, சுய அனுமதியின்றி சுரண்டி எடுக்கப்படும் படங்கள்/வீடியோ, வன்முறையையும் பாலுறவையும் சேர்த்துக் காட்டும் படங்கள்/வீடியோ... இப்படி சட்டத்தால் ஏற்கெனவே விலக்கப்பட்டவை. அதே நேரம் ஒருபால் சேர்க்கை, பிற ‘பிறழ்’ விஷயங்கள் இருப்பதில் கருத்துரீதியாக எனக்குப் பிரச்னை இல்லை. அவையும் அனுமதிக்கப்படவேண்டும்.

இங்கே, இந்த விஷயங்கள் 18 வயதுக்குக் கீழே உள்ளவர்களை எப்படிச் சென்று சேராமல் இருக்கவேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தேவை. இதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள நுட்பச் சிக்கல்களை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இது தனி டாபிக். எனவே இங்கே பேசப்போவதில்லை.

2. வசை, அவதூறு. இதில் முதலாவது முழுமையாகவே அனுமதிக்கப்படவேண்டும் என்ற கருத்தை வந்தடைந்துள்ளேன். எனவேதான் நான் வினவை, அதன் வசவை ஆதரிக்கிறேன். வகைதொகையின்றி, என்னையும் சேர்த்து, வசை பாடுவதில் அவர்கள் வல்லவர்கள். வசையை ஏற்பது, மறுப்பது, கொதித்துக் களத்தில் இறங்குவது, கத்திச் சண்டை போட்டு ஒருவர் உயிரை விடுவது என்பதெல்லாம் பழங்காலம். பெரும்பாலும் வசை என்பது பாலுறுப்புகளில் தொடங்கி, உறவுமுறையினரை இழுத்து, ஒருவர் செய்யும் வேலையை, ஒருவர் புனிதமாகக் கருதுவனவற்றை எல்லாம் இழுத்து அசிங்கப்படுத்துவது. அடுத்து, ஒருவர் தான் எது இல்லை என்று சொல்கிறாரோ அதுதான் அவர் என்று சித்திரிப்பது.

வசை ஒரு கட்டத்தில் அவதூறாகிறது. எப்போது என்றால், அதனால் அவரது புகழுக்கும், கௌரவத்துக்கும், அவரது வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் குறை ஏற்படும்போது. அப்போது சட்டரீதியான நடைமுறை அவசியமாகிறது. குறைந்தபட்சம் அதன்மூலம் பிறரை நம்பவைப்பதற்காவது.

இந்தியாவில் அவதூறை எதிர்கொள்ளக்கூடிய வழக்காடுமன்றச் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்ததில்லை. எனவே மான நஷ்ட வழக்கு போன்றவை நீங்கள் முதல்வர் ஜெயலலிதாவாக இருந்தால் மட்டுமே செல்லுபடியாகும்.

வேண்டுமானால், இந்த இடத்தில் சட்டம் கொஞ்சம் கடினமாக ஆவது நல்லது. அவதூறு என்று நிரூபிக்கப்பட்டால், அதனால் அவதூறு செய்தவர் தண்டனையாக அடையவேண்டிய பொருளாதார நஷ்டம் கடுமையானதாக இருக்கவேண்டும். இங்கும், அவதூறு என்பது உயர்தரத்தில் நிரூபிக்கப்படவேண்டும். வசையா, அவதூறா; மனம் நோகவேண்டும் என்பதற்காக மட்டும் செய்யப்பட்டதா அல்லது எதிராளியின் புகழ் பாதிக்கப்பட்டு அவர் பணரீதியாக நஷ்டம் அடையவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செய்யப்பட்டதா என்று கவனமாகப் பிரித்துப் பார்க்கவேண்டும்.

*

இப்போது மீண்டும் கையில் உள்ள பிரச்னைக்கு வருவோம். இணைய நிறுவனங்கள் இதற்காக தொழில்நுட்பத்தைக் கிண்டி எதையாவது செய்தாகவேண்டுமா?

என் கணிப்பில், தேவை இல்லை. இது தொழில்நுட்பம் உருவாக்கிய ஒரு பிரச்னை இல்லை. எனவே தொழில்நுட்பம் இதைத் தீர்க்கவேண்டாம். திட்டுவது மனிதர்தான். மனிதர்கள் ஒருவரை ஒருவர் வசைபாட நிறையக் காரணங்கள் உள்ளன. என்னைத் திட்ட வினவுக்கு நிறையக் காரணங்கள் உள்ளன. அவர்களுக்கு இணையம் ஒரு கருவி. இணையத்தில் திட்டக்கூடாது என்று சட்டம் இருந்தால் போஸ்டர் அடித்து ஒட்டுவார்கள். செலவு கொஞ்சம் அதிகமாகும். இங்கே இணையம் செலவைக் குறைக்கிறது. எளிதாகப் பரவ வழிவகை செய்கிறது. ஆனால் ஆதாரமான வசை/அவதூறு மனநிலையை அது உருவாக்குவதில்லை. எனவே பழியை இணையத்தின்மீது போடுவதில் நியாயம் இல்லை.

இணையத்தில் செய்தாலும் வேறு எங்கு செய்தாலும் அவதூறு அவதூறுதான். அதனை சம்பந்தப்பட்ட நபர்கள் சட்டரீதியாகத்தான் தீர்த்துக்கொள்ள முடியும். அதுவும் இந்தியாவில் அதற்கு ஒரு மாமாங்கம் ஆகிவிடும்.

ஆனால் இதனைத் தாண்டி இன்னொரு பிரச்னை இருக்கிறது. அதுதான் அநாமதேயம். மெய் உலகில் அவதூறு செய்தவரைக் கண்டுபிடித்து அவர்மீது நடவடிக்க எடுக்க முயற்சி செய்யமுடியும். ஆனால் இணையத்தில் அநாமதேயங்கள் அவதூறைப் பரப்பி, பரவவிட்டு, காணாமல் போய்விடுவார்கள். இதுதான் அரசியல்வாதிகளுக்கும் பிரபலங்களுக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

ஆனால், மாறிவரும் உலகில் இதனையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என நினைக்கிறேன். ஒருவர் நம்மை அவதூறு செய்வதால் ஏற்படும் பண நஷ்டங்களையும்கூட நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இன்று மோசமான அரசு பதவியில் இருப்பதன் காரணமாக நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பண நஷ்டம் ஏற்படுகிறதல்லவா? அதனை ஏற்றுக்கொள்கிறோம் அல்லவா? அதேபோல, இணையம் தரும் வசதிகளை அனுபவிக்கும் நாம், அவதூறு காரணமாக நம்மில் சிலருக்கு ஏற்படும் தொல்லைகளையும் ஏற்கவேண்டியிருக்கும்.

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி தன் கருத்தை மாற்றிக்கொள்வார் என்றே நினைக்கிறேன். இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றம் சென்று கருத்துரிமையை நிலைநாட்டவேண்டியதுதான். வசையுரிமை, அவதூறு உரிமை ஆகியவற்றையும் சேர்த்துத்தான்.

Wednesday, January 11, 2012

உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? 2-ம் நாள் ஒலிப்பதிவு

திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் கூட்டத்தின் முதல் நாள் ஒலிப்பதிவு இங்கே. இரண்டாம் நாள் கீழே.

சேத்தன் பகத்தின் வழியில்...

பண்புடன் - இணைய இதழுக்காக நான் எழுதியுள்ள கட்டுரை. அதிலிருந்து ஒரு சிறு மேற்கோள்:

நான் புத்தகங்களை வெறும் பண்டமாகத்தான் பார்க்கிறேன். இதை வெளிப்படையாகச் சொல்வதில் எனக்கு வெட்கமே இல்லை. தமிழின் இலக்கிய வானில் சில பதிப்பாளர்கள் அற்புதமான பணியாற்றி, சிறந்த இலக்கியத்தை வெளியே கொண்டுவர உதவுகிறார்கள். நான் அப்படிப்பட்டவன் அல்லன். புத்தகம் உருவாக்கி விற்பது எனக்கு ஒரு தொழில் மட்டுமே. நான் ஒரு வணிகன். எல்லாவிதமான புத்தகங்களையும் பதிப்பிக்க விரும்புகிறேன். அவை நன்றாக விற்கும் என்றால். நன்றாக விற்பனை ஆகாது என்றால் அவற்றைப் பதிப்பிக்க நான் விரும்புவதில்லை. சில புத்தகங்களை என் சொந்த ஆசைக்காகப் பதிப்பிப்பதும் உண்டு. கமெர்ஷியலாகப் பார்க்கும்போது அவை தவறான முடிவுகள் என்று நன்கு தெரிகிறது. வரும் காலங்களில் இந்தத் தவறைக் குறைத்துக்கொள்வேன். எங்கள் புத்தகங்களை மட்டும் விற்பனை செய்வதற்காக என்று நான் உருவாக்கியுள்ள கட்டுமானத்தை இப்போது அனைவருடைய புத்தகங்களையும் விற்பனை செய்ய என்று பயன்படுத்த ஆரம்பித்துள்ளேன்.
முழுவதையும் அங்கு சென்று படித்துவிடுங்கள்.

Tuesday, January 10, 2012

பன்முக அறிவு

குழந்தைகளை ‘படி படி’ என்று நசுக்கும் காலம் இது. அவர்கள் முதுகில் ஐந்து கிலோ, பத்து கிலோ என்று பொதி சுமக்க வைக்கிறோம். வீட்டுப் பாடம் எக்கச்சக்கம். பள்ளியில் ஆசிரியர்கள் கடனே என்று எதையோ சொல்லிவைக்க, புரிகிறதோ, புரியவில்லையோ, குழந்தைகள் அரைத் தூக்கத்துடனும் ஆர்வமின்றியும் அதனைப் பின்பற்றவேண்டிய கட்டாயம்.

பிறகு தேர்வு, அதில் மதிப்பெண்கள், அடுத்து மேற்கொண்டு எஞ்சினியரிங் என்று குழந்தைகளை ஆரம்பத்திலேயே பொசுக்கிவிடுகிறோம்.

ஆனால், குழந்தைகளின் ஆர்வம் என்னவென்று நாம் கேட்பதே இல்லை. அவர்களின் திறன் எதில் உள்ளது என்பதையும் நாம் கவனிப்பதில்லை. ஹாவர்ட் கார்ட்னெர் முன்வைத்த Multiple Intelligence என்ற கருத்தாக்கத்தின்படி, எட்டுவிதமான அறிவுகள் உள்ளன. அதில் சிலதான் அல்லது ஒன்றுதான் ஒரு மனிதருக்கு அதிகமாக இருக்கும். அவை எவை என்று கண்டுபிடித்தால், அதில், அந்தத் துறையில் அந்த மனிதரால் உச்சங்களை அடையமுடியும்.

இன்று எல்லாத் துறைகளிலுமே வாய்ப்புகள் இருக்கும்போது ஒரு குழந்தையை எதை நோக்கிச் செலுத்துவது? முரட்டுத்தனமாக, படி, படி என்று சொல்லிக்கொண்டே இருப்பதா, அல்லது எதில் ஆர்வமும் திறனும் உள்ளதோ அதை நோக்கி ஒரு குழந்தையைச் செலுத்துவதா?

எந்த அடிப்படையில் நம் குழந்தையிடம் இந்தத் திறன் உள்ளது என்று கண்டறியமுடியும்?

*

கிழக்கு வெளியீடாக வரும் ‘பன்முக அறிவு: உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள்’, இந்த விஷயத்தைப் பற்றிய ஒரு அறிமுகத்தை உங்களுக்குத் தருகிறது. புத்தக ஆசிரியரான ஜி. ராஜேந்திரன், சில பத்தாண்டுகளாக பள்ளிக்கூட ஆசிரியராக இருப்பவர். பள்ளி ஆசிரியர்களுக்கு ஆலோசகராக இருப்பவர். குழந்தைகளோடு நெருங்கிப் பழகுபவர். நம் கல்விமுறைமீது கடுமையான விமரிசனங்களை வைப்பவர். அவர் நேரடியாக நடைமுறைப்படித்தியுள்ள அனுபவங்களிலிருந்து இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.

சிறிய புத்தகம்தான். ஆனால் உங்கள் குழந்தையின் வாழ்க்கையையே நல்ல வழிக்குக் கொண்டுசெல்லக்கூடிய புத்தகமாக இது அமையலாம்.

Monday, January 09, 2012

+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?

பள்ளி ஆண்டிறுதிப் பரீட்சைகள் நெருங்கிவிட்டன. பத்தாம் வகுப்புத் தேர்வுகள் எப்போது என்று அறிவித்துவிட்டார்கள். +2 தேர்வுகள் பற்றி விரைவில் அறிவித்துவிடுவார்கள்.

+2 படிக்கும்போது முதல் நோக்கம் நல்ல மதிப்பெண் பெறுவது. அடுத்து, பெற்ற மதிப்பெண்ணைக் கொண்டு என்ன செய்யலாம் என்பது பெரும் கேள்வி ஆகிவிடுகிறது. பெரும்பாலானோர் பொறியியல் அல்லது மருத்துவம் படிக்க விரும்புகிறார்கள். மருத்துவ இடங்கள் குறைவாக இருப்பதால், மிக அதிகமானோர் செல்வது பொறியியல் படிப்புக்குத்தான்.

முன்புபோல் இல்லாது இப்போது மிகச் சிலரே அறிவியலை ஆர்வத்துடன் படிக்கிறார்கள்.

மேற்படிப்பில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதே பலருக்கத் தெரிவதில்லை. என்னென்ன படிப்புகள், எங்கெல்லாம் அவற்றைப் படிக்கலாம் என்று பெற்றோர்களும் மாணவர்களும் குழம்பாமல் இருக்க, இந்தப் புத்தகம் உதவும்.

கே.சத்யநாராயண், என்னைப் போன்றே ஐஐடி சென்னை, கார்னல் பல்கலைக்கழகங்களில் படித்தவர். கிரிக்கின்ஃபோவில் என்னுடன் இருந்தார். நாங்கள் சேர்ந்துதான் கிழக்கு பதிப்பகத்தை ஆரம்பித்தோம்.

கல்வித்துறைமீது மிகுந்த நாட்டம் கொண்டவர். அவருடைய வலைப்பதிவில் கல்வி பற்றிய பல கட்டுரைகளை நீங்கள் காணமுடியும்.

அவர் எழுதியுள்ள இந்தப் புத்தகம் முதல் பாகம்தான். இதில் பொறியியல், மருத்துவம், அறிவியல்/கணிதம், சட்டம் ஆகிய துறைகளில் மேல்படிப்புக்கு என்ன செய்யலாம் என்பது பற்றி உள்ளது. இரண்டாவது பாகத்தில் காமர்ஸ், கலை, மொழி, பொருளாதாரம், மற்றும் பிற துறைகள் பற்றி வரும். விரைவில் அந்தப் புத்தகமும் வெளியாகும்.

வாங்கிப் பயனடையுங்கள்.

டேவிட் ஒகில்வியின் confessions. தமிழில்

டேவிட் ஒகில்வி, உலகில் நன்கு அறியப்பட்ட விளம்பரத்துறை மேதை. அவருடைய விளம்பரங்கள் பல இன்றும் கவனமாகப் படிக்கப்படவேண்டியவை. சென்ற ஆண்டு (2011), அவர் பிறந்து நூறு ஆண்டுகள் முடிந்ததைக் கொண்டாடும் விழா ஆண்டாக இருந்தது. அப்போதுதான் அவர் உருவாக்கிய விளம்பர ஏஜென்சியான ஒ அண்ட் எம்மின் சென்னை நிர்வாகிகள், அவர் எழுதிய புத்தகமான ‘கன்ஃபெஷன்ஸ் ஆஃப் அன் அட்வெர்டைசிங் மேன்’ என்ற புத்தகத்தைத் தமிழ்ப்படுத்தி ஏன் வெளியிடக்கூடாது என்று யோசித்தனர்.

அதையடுத்து அவர்கள் எங்களைத் தொடர்புகொள்ள, நாங்கள் ஒ அண்ட் எம் நியூ யார்க்குடன் பேசி, தமிழாக்க உரிமம் பெற்று, இப்போது அதனைப் புத்தகமாகக் கொண்டுவந்துள்ளோம்.

விளம்பரத் துறையில் இருப்போர், விஸ்காம் படிப்போர், மார்க்கெட்டிங் துறையில் இருப்போர் ஆகியோருக்கு இந்தப் புத்தகம் மிகவும் உதவியாக இருக்கும்.

புத்தகத்தைத் தமிழாக்கம் செய்தது நான்தான். எனவே தவறுகள் இருந்தால் என்னைத் திட்டுங்கள்.

உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா?

திராவிடர் கழகம் சென்னையில் ஏற்பாடு செய்திருந்த ‘உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா?’ முதல் நாள் நிகழ்வின் ஒலிப்பதிவு கீழே:



தரவிறக்கிக்கொள்ள விரும்புபவர்கள் செல்லவேண்டிய இடம் இது.

உடையும் இந்தியா அறிமுகம் - ஒளிப்பதிவுத் துண்டுகள்

ஜடாயுவின் வரவேற்புரை




பத்ரி சேஷாத்ரியின் புத்தக அறிமுகம்




சாமி தியாகராஜன்




எழுத்தாளர் ஜோ டி க்ரூஸ்




கிருஷ்ண பறையனார்




கல்வெட்டியலாளர் ராமச்சந்திரன்




தொல்லியலாளர் சத்தியமூர்த்தி




தமிழக பாரதிய ஜனதா கட்சி துணைத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்




நூலாசிரியர் அரவிந்தன் நீலகண்டன்


சென்னைப் புத்தகக் கண்காட்சியில் மே 17 இயக்கம் ஆர்ப்பாட்டம்

நேற்று சென்னை புத்தகக் கண்காட்சியில் மே 17 இயக்கத்தினர் உள்ளே வந்து மலையாள மனோரமா கடையை மூடவேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளதாகக் கேள்விப்பட்டேன் கேட்டுக்கொண்டார்களாம். இன்றும் வருவார்கள் எனவும் கடையை மூடாவிட்டால்... என்றும் சொல்லியிருக்கிறார்கள் என்பதும் தகவல். இதனை நேரடியாக உறுதி செய்துகொள்ள எனக்கு சோர்ஸ் கிடையாது. மே 17 இயக்கத்தைப் பற்றித் தெரிந்துள்ள நபர்கள் தகவல் சொல்லவும்.

காரணம், முல்லைப் பெரியாறு தொடர்பான விவகாரத்தில் பொதுவாக கேரளப் பத்திரிகைகளும் குறிப்பாக மலையாள மனோரமாவும் எடுத்துள்ள நிலைப்பாடு. இதற்காக புத்தகக் காட்சி அரங்கில் அவர்களுடைய கடையை அவர்களாகவே மூடிவிட்டுப் போய்விடவேண்டும் என்று சொல்வது அநியாயமானது. துண்டுப் பிரசுரம் விநியோகியுங்கள். எதிர்ப்புக் கடிதம் எழுதுங்கள். வேறு வகையில் அவர்களைப் புறக்கணியுங்கள். ஆனால் இந்த ஃபாசிச நடவடிக்கை ஆபத்தானது.

அடுத்து மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட புத்தகங்களை ஒழித்துக்கட்டுங்கள் என்பார்களா? அடுத்து, கேரளா என்ற சொல்லோ, மலையாளம் என்ற சொல்லோ வரும் புத்தகங்களை ஒழிக்கவேண்டுமா?

இதே நேரம் மற்றொரு தகவலும் முக்கியமானது. சனிக்கிழமை அன்று நக்கீரன் பிரச்னை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நக்கீரன் ஜெயலலிதாமீது அவதூறான செய்தி ஒன்றை வெளியிட்டது. அதனால் வெகுண்டெழுந்த அதிமுக முரடர்கள் நக்கீரன் அலுவலகத்தைத் தாக்கிச் சேதப்படுத்தினார்கள். நக்கீரன் ஸ்டால் புத்தகக் கண்காட்சியில் அமைந்திருந்தது. நக்கீரன் கடையை மூடிவிட்டார்கள் என்று பிரசன்னா எனக்குக் குறுஞ்செய்தி அனுப்பினார். பின்னர் மீண்டும் திறந்துவிட்டார்கள் என்று மற்றொரு செய்தி அனுப்பினார்.

ஞாநி இன்று என்னிடம் பேசும்போது, நக்கீரன் கடையைத் தாக்க அல்லது தொந்தரவு கொடுக்க அதிமுகவினர் சுமார் 60 பேர் அங்கு வந்ததாகவும், காவல்துறையினர் இடைமறித்து அவர்களைத் திரும்ப அனுப்பிவிட்டதாகவும் சொன்னார். அந்த இடைப்பட்ட நேரத்தில்தான் நக்கீரன் கடை மூடப்பட்டுள்ளது.

ஆக, ஆளும் கட்சிக்கும் முதல்வருக்கும் எதிரான, பொதுவாகவே உண்மை பற்றிக் கவலைப்படாமல் சென்சேஷனலாக எழுதக்கூடிய ஓர் அமைப்பின் கடைக்கும் புத்தகக் காட்சியில் இடம் உண்டு; இருக்கவேண்டும். அதுதான் சரியான நடைமுறை. இந்தப் பின்னணியில் மே 17 இயக்கத்தின் அராஜகம் செயல் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

மலையாள மனோரமா கடை தொடர்ந்து இருக்கவேண்டும். சட்டத்துக்குப் புறம்பாக அதை மூட முயற்சி செய்பவர்கள் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்படவேண்டும்.

[சில மாற்றங்கள் செய்துள்ளேன். ரகளை என்பதை ஆர்ப்பாட்டம் என்று தலைப்பில் மாற்றியுள்ளேன். உள்ளே சில வரிகளை மாற்றியுள்ளேன்.]

உடையும் இந்தியா? புத்தக அறிமுக நிகழ்வு வீடியோ

3 ஜனவரி 2012 அன்று தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்ற ‘உடையும் இந்தியா?’ புத்தக அறிமுக நிகழ்வில் பேசியவர்களின் ஒளிப்பதிவு இங்கே. ஒரே கோப்பாக உள்ளது. இதனை உடைத்துத் தனித்தனியாகவும் போட ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறோம்.


கடலூர் புயலும் காப்பீடும்

கடலூரைத் தாக்கிய புயல் கடுமையான சேதத்தை விளைவித்துள்ளது. எங்கள் கடலூர் விற்பனை அலுவலர் சரவணன், ஒரு மரம்கூடப் பிழைக்கவில்லை என்றார். வீசிய காற்றில் குடிசை வீடுகள் பிய்ந்துபோய்விட்டன. ஓடுகள் பறந்துவிட்டன. காங்கிரீட்டால் கட்டிய அபார்ட்மெண்ட்கள் பிழைத்துள்ளன. ஆனால் அங்கும் ஜன்னல் கண்ணாடிகள் எல்லாம் சுக்கு நூறாக உடைந்துவிட்டன என்றார்.

கடலூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ புகழேந்தி (என்னோடு புதிய தலைமுறை டிவி நிகழ்ச்சியில் வருபவர்), இது வரலாறு காணாத பொருள் நாசம் என்றார். ‘சுனாமி உயிரைக் கொண்டுபோனது. பொருள்களுக்கு அவ்வளவு நாசம் இல்லை. ஆனால் இந்தப் புயலோ அதிகம் உயிரை எடுக்கவில்லை என்றாலும் ஒட்டுமொத்த கடலூருக்கே அழிவைக் கொண்டுவந்துவிட்டது’ என்றார்.

முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டர்மூலம் சென்று பத்திருபது நிமிடம் பார்வையிட்டுவிட்டுச் சென்றார். முன்னாள் முதல்வர் கருணாநிதி சில மணி நேரங்கள் சுற்றிப் பார்த்திருக்கிறார். கிட்டத்தட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் - மதிமுக, தேமுதிக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், பாஜக என்று ஒருவர் விடாமல் சென்று பார்த்துவிட்டு வந்துவிட்டனர்.

மின்சாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு டிரான்ஸ்ஃபார்மர் பிழைக்கவில்லை. ஏகப்பட்ட பொருள் செலவில் தமிழ்நாடு மின்சார வாரியம் இதனைச் சீர் செய்யவேண்டும். தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பங்குச்சந்தையில் பட்டியல் இடப்பட்டுள்ள நிறுவனங்கள் அனைத்தும் தாம் இன்ஷூர் செய்யப்பட்டிருப்பதாகவும் ஓரிரு வாரங்களில் நிலைமையைச் சரியாக்கி உற்பத்தியை ஆரம்பித்துவிடுவோம் என்றும் தகவல் சொல்லியிருக்கின்றன. சிறு தொழில்களின் நிலைமைதான் கவலைக்கிடம். அதேபோல தினக்கூலிகளின் நிலைமையும் கவலைக்கிடம். மாதச் சம்பளக்காரர்களுக்கு, முக்கியமாக அரசு ஊழியர்களுக்கு, எப்படியோ சம்பளம் வந்துவிடும்.

ஆனால், ஏற்கெனவே அழிவைச் சந்தித்துக்கொண்டிருக்கும் விவசாயிகளின் நிலைமை என்ன ஆகியுள்ளது என்று தெளிவாகப் புரியவில்லை.

***

பெரும்பாலானோர் வீடுகளுக்குக் காப்பீடு எடுப்பதே இல்லை. வீடுகளுக்கான காப்பீட்டுக்கு ஆகும் பிரீமியம் தொகை மிக மிகக் குறைவே.

விவசாயிகளுக்கும் காப்பீடு பற்றி எந்தப் புரிதலும் இல்லை. மாதச் சம்பள மத்திய வர்க்கத்துக்கே இது புரியவில்லை என்றால் subsistence விவசாயிகளுக்குப் புரிந்தும் செலுத்தக் காசு இருக்காது.

புயல் அடிக்கும்போது மரங்களை உங்களால் காக்கவே முடியாது. சுழன்று வீசும் புயல் காற்று மணிக்கு 140 கிலோமீட்டர் வரை வீசும். நாகப்பட்டினத்தில் நான் இதுபோன்ற ஒரு புயலையும் இதைவிடச் சிறிய இரண்டு புயல்களையும் நேரில் பார்த்திருக்கிறேன். பொதுவாக செங்கல், காரை, சிமெண்ட் சுவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. மரங்கள் இந்தச் சுவரின்மீது விழும்போது இவை உடையலாம். உடைந்துள்ளன. மண் சுவர்கள் மழையில் கரைந்து விழுவதும் உண்டு. மிக மிகப் பாதுகாப்பானவை கருங்கல்லால் கட்டப்பட்ட கோவில்களே.

விவசாயச் சேதத்தைத் தடுக்கவே முடியாது. காப்பீடு ஒன்றே வழி.

உயிர்ச் சேதம் குறைவுதான் என்றாலும் இன்னுமேகூடக் குறைத்திருக்க முடியும்.

பொருள் சேதத்தைக் குறைக்கலாம். அல்லது சொந்தவீடு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சம் காப்பீடு எடுத்து, அதனால் சேதத்தைப் பெருமளவு சரிக்கட்டலாம். வாடகை வீடுகளில் வசிப்போர் பேரிடரின்போது பொருள்களை இழப்பதற்குக் காப்பீடு உண்டா என்று எனக்குத் தெரியவில்லை. விசாரித்துத் தெரிந்துகொள்ளவேண்டும்.

எனவே புயல் பகுதிகளில் வசிப்போர் ஒருமுறை காப்பீட்டு நிறுவனங்களிடம் பேசி, சேதத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். வங்காள விரிகுடாவில் ஒவ்வோர் ஆண்டும் பல புயல்கள் உருவாகின்றன. சிலதான் கரையைக் கடக்கின்றன என்றாலும், எது, எப்போது கடக்கும் என்று முன்கூட்டியே சொல்லமுடியாது.

வருமுன் காப்போம்.

Sunday, January 08, 2012

அண்ணா ஹசாரே - வேறு பார்வை

சந்திரமௌளீஸ்வரன் எழுதியுள்ள ‘அறியப்படாத அண்ணா ஹசாரே’ என்ற புத்தகத்தை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

அண்ணா ஹசாரே பற்றியும் ஜன்லோக்பால் வரைவு பற்றியும் ஆசிரியர் கடுமையான எதிர்கோணத்தை வெளிப்படுத்துகிறார்.

ஆனால் சந்திரமௌளியின் பார்வை, வெறும் வெறுப்பு உமிழ்தல் இல்லை. இந்தாளு ஒரு மோசக்காரன்; இவனே திருடன், இவனா ஊழலை ஒழிக்கப்போகிறான்; இவன் ஒரு இந்துத்துவா என்ற பாணியில் இல்லை.

அண்ணா ஹசாரே இயக்கம் பற்றி முழுமையாக, அனைத்துக் கோணங்களையும் அறிந்துகொள்ள விரும்புபவர்கள் படிக்கவேண்டிய புத்தகம்.

உயிர்ச்சொல் - கபிலன்வைரமுத்து

நவம்பர் இறுதியில் வெளியான கபிலன்வைரமுத்துவின் நாவல் உயிர்ச்சொல்.

இது பெரும்பாலும் நிஜக்கதை ஒன்றில் கொஞ்சம் கற்பனை கலந்து எழுதப்பட்டது.

இயற்கையாகக் குழந்தை பிறக்கச் சாத்தியம் இல்லை என்று தெரிந்த தம்பதிகள் முதலில் தத்து எடுத்துக்கொள்ளலாமா என்று பார்க்கிறார்கள். அது ஒன்றாமல் போகவே fertility treatment மூலம் மிகுந்த பிரயாசைக்குப் பிறகு கருத்தரிக்கிறார்கள்.

குழந்தையை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அவர்கள் வாழ்வில் ஒரு சோதனை. குழந்தை பிறக்கும்போது post natal depression-ஆல் பாதிக்கப்படுகிறார் தாய்.

அந்தக் குடும்பத்தில் நிகழும் குழப்பத்துக்கு இணையாக தமிழக அரசியல் சூழல் மாற்றம் அடைவதாகக் கதை பிண்ணியிருக்கிறார் கபிலன்வைரமுத்து.

Post-natal depression-லிருந்து குழந்தையின் தாய் மருத்துவ சிகிச்சைமூலம் குணமாகும் அதே நேரம், தமிழக அரசியல் சூழலிலும் குழப்பம் ஓரளவுக்கு நீங்குகிறது!

மருத்துவ சப்ஜெக்ட் என்றாலும், கதை தொய்வதில்லை. வேகமாக நகர்வதற்காக கபிலன் பயன்படுத்தும் உத்தி, சிறு சிறு அத்தியாயங்கள், ஸ்க்ராப் புக் வடிவில் கணவனும் மனைவியும் பதியும் பதிவுகளின் தொகுப்பு. மனைவி ஓவியம் வரைபவர். அதற்கேற்றாற்போல கதை நெடுகிலும் அவர் வரையும் ஓவியங்கள். மனைவியின் மனம் மாறுவதற்கேற்ப ஓவியக் கோடுகளில் மாற்றம். இவற்றையும் நீங்கள் கதையுடன் காணலாம்.

அடுத்த ஒரு புதுமை, இந்தக் கதைக்காக என்றே கபிலன் ஒரு பாட்டெழுதி, அதற்கு இசையமைக்கப்பட்டு, பாடல் professional-ஆகப் பதிவாக்கப்பட்டுள்ளது. அந்தப் பாடல் அடங்கிய சிடி-யும் புத்தகத்துடன் கிடைக்கிறது.

இந்தப் புத்தகம் வெளியான நவம்பர் மாதம் உங்களில் பலர் சென்னை முழுதும் பல சுவரொட்டிகளைப் பார்த்திருப்பீர்கள். பலர் இது ஒரு சினிமாப் படம் என்றே நினைத்துவிட்டார்கள்!

இந்தப் புத்தகத்துக்கான பல விமரிசனங்களில், இந்த வாரம் கல்கியில் ஒரு மருத்துவர் எழுதியுள்ள நீண்ட விமரிசனம் ஒன்று வந்துள்ளது. படியுங்கள்.

மிக நல்ல முயற்சி இந்தப் புத்தகம்.

(அட்டைப்படத்தில் நீங்கள் பார்ப்பது, நிஜத் தாய், நிஜக் குழந்தை படங்களை. இவர்களுடைய கதைதான் கற்பனை கலந்து புத்தகமாக வந்திருப்பது.)

பாகிஸ்தான் போகும் ரயில் - குஷ்வந்த் சிங்

1950-களில் குஷ்வந்த் சிங் எழுதிய ஆங்கில நாவல் இது. இதன் தமிழாக்கம் (ராமன் ராஜா) இப்போது கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியாகியுள்ளது.

நாடு இந்தியா, பாகிஸ்தான் என்று இரு தேசங்களாகப் பிரிக்கப்படுகிறது. இங்கிருந்து முஸ்லிம்கள் பாகிஸ்தான் நோக்கிச் செல்கிறார்கள். அங்கிருந்து இந்துக்களும் சீக்கியர்களும் இந்தப் பக்கம் வருகிறார்கள்.

இது மிகவும் துயரமான ஒரு செயல்தான். வீட்டையும், நிலத்தையும், பொருள்களையும் விட்டுவிட்டு, வாழ்ந்த இடத்திலிருந்து வேரோடு பிடுங்கப்பட்டு பல ஆயிரம் மைல் கிடைத்த வாகனங்களில் ஏறி, நடந்து, திண்டாடி இடம் பெயர்வது கோரமான ஒரு விஷயம்.

ஆனால் இத்துடன் சேர்ந்துகொள்கிறது படுகொலைத் தாக்குதல். அது இரு பக்கங்களிலிருந்தும் நடக்கிறது. ஒரு தாக்குதல் மிகைப்படுத்தப்பட்டு, மற்றொரு கூட்டத்தினரை ‘நாமெல்லாம் ஆண் பிள்ளைகளா, மறுதாக்குதல் நடத்துவோம்’ என்று செய்யவைக்கிறது.

இப்படிப்பட்ட களத்தை எடுத்துக்கொண்டுள்ள குஷ்வந்த் சிங், எல்லையில் இருக்கும் ஓர் அமைதியான கிராமத்தில் கதையை அமைக்கிறார். அந்த சீக்கியப் பெரும்பான்மை கிராமத்தில் சில இந்துக்கள் உள்ளனர். ஒரு முஸ்லிம் குடும்பமும் உள்ளது. தாயாய், பிள்ளையாய், சகோதரர்களாய்ப் பழகியவர்கள் மனம் எப்படி விகாரமடைந்து மாறுகிறது என்பதுதான் கதை. இதில் காதல் கொஞ்சம், கம்யூனிசம் கொஞ்சம்.

ஒரு நாள், பாகிஸ்தானிலிருந்து வரும் ஒரு ரயில் அந்தக் கிராமத்தில் நிற்கும்போது அதிலிருந்து கொட்டுகின்றன இந்து, சீக்கியப் பிணங்கள். பதிலுக்குப் பழிவாங்க முடிவெடுக்கிறார்கள் அந்த கிராமத்தவர்.

பாகிஸ்தான் போகும் ஒரு ரயிலில் முஸ்லிம் அகதிகள் செல்லப்போகிறார்கள். அவர்கள் உயிருடன் செல்வார்களா?

ஓப்பன் சோர்ஸ் - செந்தில் குமரன்

காசு கொடுத்துத்தான் மென்பொருள் வாங்கவேண்டுமா? அல்லது பைரேட் செய்துதான் ஒரு மென்பொருளைப் பயன்படுத்தவேண்டுமா?

இரண்டுமே இல்லை. காசே இல்லாமல் நாம் பயன்படுத்த என்று ஏகப்பட்ட இலவச - திறமூல - மென்பொருள்கள் உள்ளன என்பது பலருக்குத் தெரியவே தெரியாது.

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தில் திறமூல மென்பொருள்கள் பற்றிய ஒரு வரலாறு, பல சர்வர், கிளையண்ட் பக்க மென்பொருள்கள் பற்றிய விளக்கம் ஆகியவை உள்ளன. உபுண்டு லினக்ஸ் இயக்குதளம் பற்றிய விளக்கமும் கதையும் உண்டு.

அத்துடன், அதற்கெல்லாம் மேலாக, கூடவே ஒரு சிடியில் அனைத்து மென்பொருள்களையும் சேர்த்துக் கொடுத்துள்ளோம். புத்தகத்தை வாங்குபவர்கள் இவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இவை அனைத்தும் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றாலும், பலரிடம் அதற்குத் தேவையான பேண்ட்விட்த் இல்லாமல் இருக்கலாம்.

எழுதிய செந்தில் குமரனுக்கு இதுதான் முதல் புத்தகம். பாராட்டுகள்.

Saturday, January 07, 2012

வில்லாதி வில்லன் - பாலா ஜெயராமன்

தமிழ் பேப்பரில் பாலா ஜெயராமன் தொடராக எழுதிவந்தது வில்லாதி வில்லன். உலகின் மோசமான ஆசாமிகளைப் பற்றிய தொடர். சின்னச் சின்ன வாழ்க்கை வரலாறு மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

இன்றுமுதல் கிழக்கு பதிப்பக ஸ்டால்களில் கிடைக்கிறது. F-7 கூட்டம் அதிகமாக அம்முகிறது என்று கேள்விப்பட்டேன். எனவே F-20 செல்லுங்கள்.

சாரல் இலக்கிய விருது

இன்று (7 ஜனவரி 2012)  மாலை (6.00 மணி), தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் சாரல் இலக்கிய விருது வழங்கப்படுகிறது. பெறுவோர் வண்ணநிலவன், வண்ணதாசன்.

இந்த விழா அரங்கில் கிழக்கு பதிப்பகம் வெளியிடும் வண்ணநிலவனின் சிறுகதைத் தொகுப்பு கிடைக்கும். இன்று மதியம்தான் புத்தகம் சுடச் சுட அச்சாகி வருகிறது.

வண்ணநிலவன் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு

வண்ணநிலவனின் ஒட்டுமொத்தச் சிறுகதைகளின் தொகுப்பை இந்த ஆண்டு கொண்டுவருவதில் பெருமை அடைகிறோம். கடைசியாக இந்தத் தொகுப்பை வெளியிட்டது சந்தியா பதிப்பகம் என்று நினைக்கிறேன். அதன்பின் அவர் எழுதியுள்ள சிறுகதைகளையும் சேர்த்து இந்தத் தொகுப்பு வருகிறது.

அவர் எழுதியுள்ள பிற புத்தகங்களை ஏற்கெனவே சென்ற இரு ஆண்டுகளில் நாங்கள் வெளியிட்டிருந்தோம். அவையும் கிழக்கு பதிப்பகம் அரங்குகள் F-7, F-20 ஆகியவற்றில் கிடைக்கும்.


நீல. பத்மநாபனின் இரு புத்தகங்கள் - மறுபதிப்பு

சாகித்ய அகாதெமி விருதுபெற்ற நீல. பத்மநாபனின் இரு சிறுகதைத் தொகுப்புகள் மறுபதிப்பாக கிழக்கு பதிப்பகம் வழியாக வெளியாகின்றன.
  1. நாகம்மாவா?
  2. இரண்டாவது முகம்

யுவன் சந்திரசேகர் புத்தகங்கள் மறுபதிப்பு

யுவன் சந்திரசேகரின் கீழ்க்கண்ட நாவல், சிறுகதை புத்தகங்கள் மறுபதிப்பாகின்றன.
  1. குள்ளச் சித்தன் சரித்திரம்
  2. பகடையாட்டம்
  3. ஏற்கனவே

வலைவிரிக்கும் இந்துத்துவம்

உத்தரப் பிரதேசத் தேர்தல்கள் நெருங்கிவிட்டன. அங்கே நான்கு கட்சிகள் களத்தில் நிற்கின்றன. பாரதிய ஜனதா கட்சி, இந்து மத மீட்பை முன்வைத்து மக்களைத் தன்பின் வரச் செய்யப் பார்க்கிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, தலித் மக்களை ஒன்றுதிரட்டப் பார்க்கிறது. சமாஜ்வாதி கட்சி, பிற்பட்ட சாதியினர் சிலரைத் தன் பின் இழுக்கப் பார்க்கிறது. காங்கிரஸுக்குத் தெளிவான திட்டம் ஏதும் இல்லை.

கட்சி, சாதி, மதம். இந்த மூன்றும் எப்படி இணைகின்றன?

பத்ரி நாராயண் திவாரியின் புத்தகம் இதனை ஆராய்கிறது. முக்கியமாக பாஜகவின் செயல்திட்டத்தைச் சற்று விரிவாகவே ஆராய்கிறது. கூடவே பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகள் எப்படித் தங்கள் ஆட்டத்தை விளையாடுகின்றனர் என்பது பற்றியும் ஒரு புரிதல் கிடைக்கிறது.

குறிப்பிட்ட சமூகக் குழுக்கள், பெருஞ்செயல் புரிந்த தம் சமூக நாயகர்கள் சிலரைப் போற்றிப் பாராட்டுகிறார்கள். அவர்களுக்குச் சிலைகளும் கோவில்களும்கூட உள்ளன. அவர்கள்மீது தொன்மக் கதைகள் உள்ளன. இந்தக் கதைகளுக்கு மதச்சாயம் பூசி, இவர்களை இந்து சமுதாயத்தை ரட்சிக்க முஸ்லிம்களுக்கு எதிராகப் போராடியவர்கள் என்றோ, அல்லது ராமரின் அவதாரம் என்றோ ஏதோ ஒருவகையில் கதைகளைத் திரித்து, அந்தக் குறிப்பிட்ட சமுதாயத்தைத் தம் வசம் இழுக்கப் பார்க்கிறது பாஜக. இதன் விளைவாக இந்தக் குறிப்பிட்ட சமூகக் குழுக்களை முஸ்லிம்களுக்கு எதிரானவர்களாகச் சித்திரித்து, மத நல்லிணக்கத்தைக் குலைக்கவும் செய்கிறார்கள். மற்றொரு பக்கம், தலித் சாதிகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல், அவர்களை இந்து மதக் காவலர்களாக மட்டும் சித்திரித்து, அவர்கள் நோக்கமே எப்போதாவது மதக் கலவரம் ஏற்பட்டால், அப்போது முதல் வரிசையில் நின்று இந்துக்கள் சார்பாகச் சண்டை போடுவதுதான் என்பதுபோன்ற கதையாடலை உருவாக்குகிறார்கள்.

சுமார் ஒரு நூற்றாண்டுக்குமுன், இந்தச் சாதிகளுக்கான புராணங்களை உருவாக்குவதில் ஆரிய சமாஜம் எவ்வாறு ஈடுபட்டது என்பதைப் பற்றியும் மேலோட்டமான தகவல்கள் இந்தப் புத்தகத்தில் கிடைக்கிறது.

ஒரே பாஜக தலைவர், மேல்சாதி மக்களிடம் தேர்தல் பிரசாரம் செய்யும்போது என்ன வாக்குறுதிகளைத் தருகிறார், அதுவே தலித் சாதிகளிடம் பேசும்போது எப்படி மாற்றம் அடைகிறது என்பதைப் பின்தொடர்ந்து விவரிக்கிறார் ஆசிரியர்.

மாயாவதியின் சிலை அரசியல் பற்றித்தான் நாம் செய்தித்தாள்களில் படிக்கிறோம். ஆனால் உத்தரப் பிரதேச சிலை அரசியலில் மாயாவதி மட்டும் அல்ல, ஏகலைவன், சுஹால் தேவ் என்று எண்ணற்றோர் உள்ளனர்.

தமிழக அரசியலுக்கும் உத்தரப் பிரதேச அரசியலுக்கும் மாபெரும் வித்தியாசங்கள் உள்ளன. எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்த நூல் இது. சரவணனின் மொழிபெயர்ப்பு படிக்க மிக எளிதாக உள்ளது.

Friday, January 06, 2012

பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் பண்ணை

கம்யூனிஸம் மீதான இரு விமரிசனப் புத்தகங்களை இந்த ஆண்டு கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது.

ஒன்று 1945-ல் எழுதப்பட்டது. எழுதியவர் ஜார்ஜ் ஆர்வெல் என்ற புனைப்பெயர் கொண்ட பிரிட்டிஷ் எழுத்தாளர். அவர் எழுதிய புத்தகமான அனிமல் ஃபார்ம் என்பது, ஸ்டாலினிய ரஷ்யாவை நையாண்டி செய்த புத்தகம். கம்யூனிஸ ஆதரவாளர்களே ஸ்டாலினின் செயல்பாட்டால், அடக்குமுறையால் அதிர்ந்துபோயினர். ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப் பண்ணையில், விலங்குகள் மனித அடக்குமுறைக்கு எதிராகப் போராடும். ஒரு குறிப்பிட்ட பண்ணையில், விலங்குகள் மனிதரைத் துரத்திவிட்டு ‘ஆட்சி’யைப் பிடிக்கவும் செய்யும். ஆனால் பின்னர் அந்த விலங்குகளில் பன்றிகள் மட்டும் பிறவற்றை அழுத்திக் கீழே தள்ளிவிட்டு தாம் மட்டும் சுகபோகத்தில் வாழும். மாற்றுக்குரல் எடுபடாமல் இருக்க, துரோகிப் பட்டம் கொடுத்துத் துரத்தும். படுகொலைகள் செய்யும். பஞ்சம் ஏற்படாவிட்டாலும் பசித் துயரம் ஏற்படும். சுரண்டல் அதிகரித்துக்கொண்டே போகும். ஒரு கட்டத்தில் பன்றிகள், தாம் எதிர்த்துப் போராடிய மனிதர்களுடனேயே கூட்டணி அமைத்துக்கொள்ளும். பிற விலங்குகளுக்கு, பன்றிக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் தெரியாமலேயே போய்விடும் என்பதாகக் கதையை முடித்திருப்பார் ஆர்வெல்.

இது ஏற்கெனவே தமிழில் பிறரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட மொழிபெயர்ப்பைச் செய்திருப்பவர் பி.வி.ராமஸ்வாமி. இதுதான் இவரது முதல் மொழிபெயர்ப்பு. படித்துப் பாருங்கள். ஆச்சரியம் அடைவீர்கள். அடுத்த பதிவில் இந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகளைக் கொடுக்கிறேன்.

*

பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் என்ற புத்தகத்தில் அரவிந்தன் நீலகண்டன், கம்யூனிஸம் அதன் அடிப்படையிலேயே அழிவைக் கொண்டிருக்கிறது என்று வாதிடுகிறார். மார்க்ஸிலிருந்து தொடங்கி, எங்கெல்ஸ் வழியாக, இன்றுவரை கம்யூனிஸம் எங்கெல்லாம் பேசப்பட்டுள்ளதோ, எங்கெல்லாம் செயல்முறையில் இருந்துள்ளதோ, அங்கெல்லாம் அது திரிந்து, அங்குள்ள மக்களுக்குப் பேரழிவைத் தவிர வேறு எதையும் கொடுத்ததில்லை என்பதை ஆதாரங்களுடன் விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.

பின்னர் ஒரு கேள்வி எழலாம். ஆனாலும் ஏன் பல நல்ல உள்ளங்களை கம்யூனிஸம் வசீகரிக்கிறது. சக மனிதனின் துன்பத்தையும் அவன் சுரண்டப்படுவதையும் எதிர்ப்பவர்கள்தானே கம்யூனிஸச் சித்தாந்தத்தால் வசீகரிக்கப்படுகிறார்கள்? ஆனால் அதன்பின் என்ன ஆகிறது? இதற்கான பதிலையும் அரவிந்தன் விளக்குகிறார்.

இந்தப் புத்தகமும் சர்ச்சையை எழுப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.

Thursday, January 05, 2012

எக்ஸைல்

டிசம்பர் மாதத்தில் சாரு நிவேதிதா ரசிகர்களின் கோலாகல ஆதரவுடன் வெளியான புத்தகம் எக்ஸைல்.

ஒரே மாதத்துக்குள், முதல் பதிப்பான 2,000 பிரதிகள் விற்றுமுடியும் நிலையில், அடுத்த அச்சுக்குச் சென்றுள்ளது இந்தப் புத்தகம்.

அடுத்த ஆறு மாதத்தில் புத்தகம் 10,000 - 15,000 பிரதிகள் விற்பனை ஆக அனைத்து சாத்தியங்களும் உள்ளன.

கிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு

எனக்குப் பல காலமாகவே இருந்துவந்த கேள்வி, எப்படி ஒரு வணிக நிறுவனம் இந்தியா என்ற மாபெரும் நாட்டைப் பிடித்தது என்பது. என்னதான் வலிமை குறைந்துபோனது என்றாலும் முகலாய அரசர்களின்கீழ் பெரும் படைகள் இருந்தன. நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்த பல அரசர்களின்கீழும் பெரும் படைகள் இருந்தன. முகலாய அரசர்களிடமே பீரங்கிகள் இருந்தன. திப்பு உள்பட, இந்தியாவில் உள்ள பல்வேறு அரசர்களிடமும் துப்பாக்கிப் படைகளும் பீரங்கிகளும் இருந்தன.

ஆனாலும் கிழக்கிந்தியக் கம்பெனியால் இந்தியாவின் பெரும் பகுதியை எளிதில் சுருட்டிச் சாப்பிட முடிந்தது.

இது ஒரு குழப்பம்.

மற்றொன்று, கம்பெனி இந்தியாவுக்கு வந்தது வியாபாரம் செய்யத்தானே? அதை கிட்டத்தட்ட நூறாண்டுகளாக ஒழுங்காகச் செய்துவந்தவர்கள் ஏன் திடீரென நாடு பிடிக்க ஆரம்பித்தார்கள்? நாடு பிடிக்கத் தொடங்கியதும் வியாபாரத்துக்கு என்ன ஆனது? வியாபாரம் இன்னும் நன்றாக நடந்ததா? (என்றால் இல்லை என்பதுதான் பதில்!)

எந்த நிமிடத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி நாட்டைக் கைப்பற்ற ஆரம்பித்ததோ அந்த நிமிடத்திலிருந்தே அதன் அழிவு ஆரம்பித்தது. அதே நேரம் இந்தியா சந்தித்த அழிவோ பேரழிவாக இருந்தது.

இது இரண்டாவது குழப்பம்.

அடுத்து, பிரிட்டனில் என்னதான் நடந்துகொண்டிருந்தது? எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் ஒரு நாட்டைக் கைப்பற்றவேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்றமோ அரசியோ/அரசரோ திட்டமிடவில்லை. ஆனால் அது நடக்க ஆரம்பித்ததும், அவர்கள் எப்படி ரியாக்ட் செய்தார்கள்? பிரிட்டிஷ் அறிவுஜீவிகள் இதனை எதிர்த்தார்களா? பொதுமக்கள் இதனை ஆதரித்தார்களா அல்லது எதிர்த்தார்களா? ஏதேனும் விவாதம் நடந்ததா? பத்திரிகைகள் என்ன சொன்னார்கள்?

இந்தியாவிலிருந்து செல்வம் கொள்ளையடிக்கப்பட்டு பிரிட்டனுக்கு வந்தது என்றால் யாருக்குப் போனது? பிரிட்டன் முடியாட்சிக்கா, நாடாளுமன்றத்துக்கா, மக்களுக்கா, அல்லது கம்பெனியின் பங்குதாரர்களுக்கா?

நிச்சயமாக பிரிட்டிஷ் மக்கள் அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் பயன் அடைந்திருக்கின்றனர். அதில் இந்தியர்களின் ரத்தம் தோய்ந்துள்ளது. ஆரம்பகட்டத்தில் கம்பெனியின் செயல்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து எதிர்ப்பு இருந்தாலும், அதிலிருந்து அரசுக்கு நேரடியாகக் கிடைக்கும் பணம் முக்கியத் தேவையாக இருந்ததால், அறவுணர்வுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதுபற்றிய தகவல்கள் மிகவும் சுவாரசியமாக உள்ளன.

கார்ப்பரேட் ஊழல் என்பதன் அடிப்படையை கிழக்கிந்தியக் கம்பெனியின் செயல்பாடுகளில் காணலாம். ஆனாலும், பெரும்பாலான பிரிட்டிஷ் அறிவுஜீவிகள், ஊழல் என்பதே இந்தியாவில்தான் உருவானது என்பதுபோலவும் இந்தியர்கள் அனைவருமே வெறுக்கத்தக்க ஊழல்வாதிகள் என்பதுபோலவும் பேசியுள்ளனர்.

நிக் ராபின்ஸ் ஆங்கிலத்தில் எழுதியிருந்த இந்தப் புத்தகத்தை சென்ற புத்தகக் கண்காட்சியில் ஒரியண்ட் பிளாக்ஸ்வானில் வாங்கிப் படித்தேன். அதன்பின் எழுத்தாளரையும் பதிப்பாளரையும் தேடிப் பிடித்து இந்தப் புத்தகத்தை மொழிமாற்றும் உரிமையைப் பெற்றோம். ராமன் ராஜா மொழிமாற்றம் செய்துள்ளார். (சீனா விலகும் திரை, திருப்புமுனை, பாகிஸ்தான் போகும் ரயில் ஆகியவற்றுக்கு அடுத்து...)

கொஞ்சம் கனமான புத்தகம். பிரிட்டிஷ் பார்வையிலிருந்து எழுதப்பட்டது. பொருளாதாரம் சார்ந்து எழுதப்பட்டது. இந்திய வரலாற்றின் மிக முக்கியமான பக்கங்களைச் சொல்வதால் இந்தப் புத்தகம் மிகவும் முக்கியமாகிறது.