Tuesday, November 30, 2004

கொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - மூன்றாம் நாள்

தென் ஆப்பிரிக்கா 305, இந்தியா 359/6 (125 ஓவர்கள்) - கார்த்திக் 35, பதான் 21

முன்பெல்லாம் டெண்டுல்கர் விளையாடப்போகிறார் என்றாலே கூட்டம் திரண்டு வரும். தொலைக்காட்சி பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். டெண்டுல்கர் அவுட்டானதுமே உடனே பலர் அரங்கிலிருந்து கிளம்பி விடுவார்கள். தொலைக்காட்சியின் TRP ரேடிங் குறைந்துபோகும்.

சேவாக் டெண்டுல்கரைப் போலக் காட்சி அளிக்கிறாரோ, இல்லையோ; டெண்டுல்கரைப் போலவே விளையாடுகிறாரோ, இல்லையோ; நிச்சயமாக டெண்டுல்கரைப் போல பார்வையாளர்களை ஈர்க்கிறார். இன்றைய ஆட்டம் அதற்கு அத்தாட்சி. நேற்று சேவாக் அரங்கில் இருந்தவரை ஆட்டத்தில் விறுவிறுப்பு இருந்தது. முதல் டெஸ்டிலும் அப்படியே. இன்று காலை சேவாக் அவுட்டானதும் ஆட்டமும் சோபை இழந்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் கடைசி ஓவரில் மிச்சமிருந்த இரண்டு பந்துகளும் இன்று காலை போடப்பட்டன. அந்த இரண்டு பந்துகளில் புதுமையாக ஒன்றும் நடந்துவிடவில்லை. ஆனால் அடுத்த ஓவரில் திராவிட் எண்டினி பந்துவீச்சில் அற்புதமாக இரண்டு நான்குகளைப் பெற்றார். கால் திசையில் வந்த பந்தை மிட்விக்கெட் திசையில் தள்ளிப் பெற்றது முதல் நான்கு. அடுத்தது இரண்டாம் ஸ்லிப்பிற்கும், கல்லிக்கும் இடையே அடித்தது. அடுத்த ஓவரில் போலாக் பந்துவீச்சில் நல்ல அளவில் வீசப்பட்ட - குற்றம் ஒன்றுமே சொல்லமுடியாத பந்தை - அனாயாசமாக லாங் ஆன் மேல் தூக்கி ஆறாக அடித்தார். போலாக் நம்பவே முடியாமல் அதைப் பார்த்துக்கொண்டிருந்தார். காலையில் இரண்டு ஓவர்களில் 14 ரன்கள். இந்த வேகத்தில் எங்குபோய் முடியுமோ என்று தென்னாப்பிரிக்கர்கள் மிகவும் கவலையுடன் காணப்பட்டனர்.

எண்டினி தன் இரண்டாவது ஓவரைத் தொடங்கினார். முதல் பந்தில் திராவிடுக்கு ஒரு ரன். சேவாக் வந்ததுமே எண்டினி அவருக்கு குறைந்த அளவுள்ள பந்துகளாக வீசத்தொடங்கினார். எல்லாமே அளவு குறைந்து, ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசப்பட்டு, உள்நோக்கி, முகத்தைப் பார்த்து வீசப்பட்டவை. முதல் பந்தை சேவாக் விட்டுவிட்டார். இரண்டாவதை சற்று பின்னால் சென்று நன்றாகவே தடுத்தாடினார். மூன்றாவது பந்தோ அவர் எதிர்பார்த்ததை விட வேகமாக வந்துவிட்டது. அதனால் பந்து கைக்காப்பில் பட்டு மேல்நோக்கிச் சென்றது. முதல் ஸ்லிப்பிலிருந்து ஸ்மித் ஓடிச்சென்றுப் பிடித்தார். தென்னாப்பிரிக்கர்கள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. சேவாக் 118 பந்துகளில் 88, 11x4, 2x6. இந்தியா 144/2.

டெண்டுல்கர் உள்ளே வந்ததும் மிகவும் பாதுகாப்பாகவே விளையாடினார். திராவிட் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை மட்டும் பயன்படுத்தி தன் அரை சதத்தை எட்டினார். அதன்பின் இருவரும் எப்படியாவது அவுட்டாகாமல் இருப்பதே நோக்கம் என்பதுபோல விளையாடினர். தாங்களாகவே ரன் அடிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்றே அவர்களுக்குத் தோன்றவில்லை. அடிப்பது போல பந்துவந்தால் அடிப்பார்கள் - அதுவும் 1, 2 ரன்களுக்குத்தான். இல்லாவிட்டால் சந்தோஷமாக தடுத்தாடிவிடுவார்கள். அவ்வப்போது விளிம்பில் பட்டு ஃபைன் லெக்கிலோ, தர்ட்மேனிலோ நான்குகள் கிடைக்கும்.

ஜஸ்டின் ஆண்டாங் பந்துவீச வந்ததும் டெண்டுல்கர் ஒரு ஷாட் தூக்கியடித்து விளையாடினார். ஆகா, மனிதர் இனியாவது நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்த்தால்... வெகு சீக்கிரத்திலேயே டி ப்ருயின் பந்துவீச்சில் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே சென்ற பந்தை வெட்டி ஆடப்போய், உள்விளிம்பில் பட்டு பவுல்ட் ஆனார். டெண்டுல்கர் 20, இந்தியா 189/3. கங்குலி உள்ளே வந்தார். வந்தது முதற்கொண்டே அவசரமாக ரன்களைப் பெறுவதன் மூலம்தான் இந்த ஆட்டத்தை வெல்ல முடியும் என்பதைப் புரிந்துகொண்டவர் போல விளையாடினார். ஆனால் தென்னாப்பிரிக்காவின் பந்துத் தடுப்பு வியூகம் கங்குலிக்கு நிறைய வாய்ப்பைக் கொடுக்கவில்லை. திராவிடோ இந்த முயற்சியைக் கூடச் செய்யவில்லை. தடுத்தாடுவதிலேயே அவரது வாழ்க்கை கழிந்தது. உணவு இடைவேளையின்போது இந்தியா 198/3 என இருந்தது.

இடைவேளைக்குப் பின்னரும் கங்குலி ரன்கள் பெறும் வேகத்தைக் கூட்டினார். ஆனால் திராவிடும், டெண்டுல்கர் வழியிலேயே ஆண்டிரூ ஹால் பந்துவீச்சில் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே சென்ற பந்தை உள்ளே இழுத்து வந்து ஸ்டம்பில் விழவைத்து தன் விக்கெட்டை இழந்தார். திராவிட் 247 பந்துகளில் 80, 8x4, இந்தியா 238/4. அடுத்து லக்ஷ்மண் உள்ளே வந்தார். லக்ஷ்மணும் மிக மோசமான ஃபார்மில் இருப்பதால் தடவித் தடவியே விளையாடினார். கங்குலி மட்டும் ஆஃப் திசையில் சில நல்ல விளாசல்களையும், கால் திசையில் கிடைக்கும் ரன்களையும் சேகரித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையிலேயே, ஆட்டம் கிட்டத்தட்ட சதுரங்கத்தில் 'stalemate' என்பார்களே - அதுபோன்று விட்டது. இந்தியாவால் பந்துவீச்சைத் தகர்த்து ரன்களை வேகமாக சேர்க்க முடியவில்லை. தென்னாப்பிரிக்காவால் இந்தியாவின் மிஞ்சிய விக்கெட்டுகளை கிடுகிடுவென சாய்க்க முடியவில்லை. விளைவு? பார்வையாளர்கள் தூங்கி வழிந்தனர். இந்த நேரத்தில் இதுவரையில் செய்யாத தவறொன்றை நடுவர் டாஃபல் செய்தார். டி ப்ருயின் பந்துவீச்சில் லெக் ஸ்டம்பிற்கு வெளியே விழுந்து, கங்குலியின் காலில் பட்ட பந்தில் கங்குலி எல்.பி.டபிள்யூ என்று தீர்மானித்தார். கங்குலி 73 பந்துகளில் 40 ரன்கள், 5x4, இந்தியா 267/5. இப்பொழுதும் இந்தியாவின் எண்ணிக்கை தென்னாப்பிரிக்காவின் எண்ணிக்கையை விடக் குறைவுதான்.

புதியவர் தினேஷ் கார்த்திக்குடன் லக்ஷ்மண் ரன்களைச் சேர்த்து எப்படியாவது 305ஐத் தாண்டுவது என்று விளையாடினார். லக்ஷ்மணை விட கார்த்திக் சற்று ஆக்ரோஷமான விளையாட்டைக் காண்பித்தார். தேநீர் இடைவேளையின்போது இந்தியா தென்னாப்பிரிக்காவின் ஸ்கோருக்கு அருகில் வந்துவிட்டது. 293/5.

இடைவேளைக்குப் பின், லக்ஷ்மண் சற்று சுதந்திரமாக விளையாடத் தொடங்கினார். எண்டினி பந்தில் அவருக்கு அடுத்தடுத்த ஓவர்களில் மூன்று நான்குகள் கிடைத்தன. இந்தியாவும் தென்னாப்பிரிக்காவின் எண்ணிக்கையைத் தாண்டியது. ஆனால் எண்டினி அகலம் கொடுத்த ஒரு பந்தை அடிக்கப்போய் அதை பாயிண்ட் திசையில் நின்றிருந்த ஆண்டாங் கையில் கேட்சாகக் கொடுத்தார். லக்ஷ்மண் 86 பந்துகளில் 39, 4x4, இந்தியா 308/6.

ஆனால் இந்த நிலையிலும் கூட தென்னாப்பிரிக்காவின் பலம் குறைந்த பந்துவீச்சால் இந்தியாவின் வாலை ஒட்ட நறுக்க முடியவில்லை. இர்ஃபான் பதான் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து இன்றைய ஆட்டம் முடியும்வரை எண்ணிக்கையை 359/6 என்ற நிலைக்குக் - 54 ரன்கள் கூடுதலாகக் - கொண்டு சென்றனர். இன்றும் வழக்கம் போல 4.15க்கே ஆட்டம் முடிந்தது. இன்றைய கணக்கான 90 ஓவர்களுக்கு நான்கு ஓவர்கள் குறைவு.

இனி ஆட்டம் என்ன ஆகும்? இந்திய ஆட்டக்காரர்கள் அனைவரும் மட்டையை முடிந்தவரை வீசி ஓவருக்கு 4 ரன்களுக்கு மேல் சேர்க்க முயல வேண்டும். அவுட்டானாலும் தவறில்லை. இன்னமும் 100 ரன்கள் சேர்த்தபின் பந்துவீச வேண்டியதுதான். தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர்களை 200க்குள் அவுட்டாக்கினால், இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு உண்டு. இல்லாவிட்டால் ஆட்டம் டிரா.

Monday, November 29, 2004

கொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம் நாள்

தென் ஆப்பிரிக்கா 305, இந்தியா 129/1 (38.4 ஓவர்கள்) - சேவாக் 82*, திராவிட் 33*

நேற்று 6.3 ஓவர்கள் பாக்கியிருந்த நிலையில் இன்று ஆட்டம் வெறும் 6 நிமிடங்கள் முன்னால் தொடங்கியது. நேற்று மட்டுமல்ல, இனி ஒவ்வொரு நாளுமே ஆட்ட இறுதியில் நேரம் கிடைக்கப்போவதில்லை எனும்போது ஆட்டம் 9.00 மணிக்கே தொடங்க வேண்டும்.

புதிய பந்தை வைத்துக்கொண்டு ஜாகீர் கானும், இர்ஃபான் பதானும் இன்று காலை அற்புதமாகப் பந்து வீசினர். காலையில் வீசப்பட்ட மூன்றாவது ஓவரிலேயே ஜாகீர் கான் வெளியே போகும் பந்தின் மூலம் டி ப்ருயினை விக்கெட் கீப்பர் கார்த்திக் கேட்ச் பிடிக்க அவுட்டாக்கினார். டி ப்ருயின் தன் முதல் நாள் ஸ்கோரில் மாற்றமெதையும் ஏற்படுத்தவில்லை. டி ப்ருயின் 15, தென் ஆப்பிரிக்கா 230/6. தொடர்ந்து உள்ளே வந்த ஷான் போலாக் துல்லியமான வேகப்பந்து வீச்சில் மிகவும் தடுமாறினார். அடுத்த ஒரு மணி நேரம் கால்லிஸ், போலாக் இருவரும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு விளையாடினர். ரன்கள் பெறுவது விளிம்பு வழியாக தர்ட்மேனில்தான் என்ற நிலைமை. கல்லியில் நின்ற சேவாக் கையருகே ஒரு கேட்ச் போனது. பல பந்துகள் கால் காப்பில் பட்டன. நடுவர்கள் ஹார்ப்பரும், டாஃபலும் எல்.பி.டபிள்யூ கொடுப்பதில்லை என்ற தீர்மானத்தில் இருந்தனர்.

ஜாகீர் கானுக்கு பதில் கங்குலி பந்துவீச வந்தார். ஏன் இப்படி வீணாக, தானே பந்துவீச வருகிறார் என்று தோன்றியது. ஆனால் கங்குலி மிகவும் துல்லியமாக ரன்கள் ஏதும் அளிக்காத வகையில் பந்துகளை ஆஃப் கட்டர்களாக வீசிக்கொண்டிருந்தார். ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் ஆஃப் கட்டர்கள் போலாக் கால்காப்பில் பட்டன. இரண்டுமே அவுட்தான், ஆனால் ஹார்ப்பர் தரவில்லை. அடுத்த கங்குலி ஓவரில் கால்லிஸ் மட்டையில் பட்டு ஒரு கேட்ச் விக்கெட் கீப்பரிடம் சென்றது. ஆனால் கார்த்திக் ஸ்டம்பிற்கு அருகில் இருந்ததால் அந்த கேட்சைப் பிடிக்க முடியவில்லை. கார்த்திக்கின் கைக்காப்பில் பந்து படாதிருந்தால் முதல் ஸ்லிப்பில் இருந்த திராவிட் கையில் எளிமையான கேட்ச் ஆகியிருக்கும். அடடா, இப்படி ஆகிவிட்டதே என்று கங்குலி கார்த்திக்கை சற்று பின்னால் நிற்கச் சொன்னார்.

அடுத்த பந்தைப் போல கங்குலி தன் டெஸ்ட் வாழ்க்கையில் இதுவரை வீசியிருந்திருக்க முடியாது. ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே குத்தியது. கால்லிஸ் அப்பொழுது 121இல் இருந்தார். பந்தினால் தனக்கேதும் தொல்லை வராது என்று பந்தை விட்டுவிட, பந்து சடாரென உள்நோக்கித் திரும்பி, மிடில் ஸ்டம்பின் மேலாகத் தட்டியது. கால்லிஸ் 259 பந்துகளில் 121 ரன்கள், 12x4. தென் ஆப்பிரிக்கா 261/7. அடுத்த சில ஓவர்கள் கழித்து கும்ப்ளே வீசிய கூக்ளியை - உள்நோக்கி வந்த பந்து - சரியாகக் கவனிக்காது போலாக் முன்னதாகவே மட்டையை கால் திசை நோக்கித் திருப்பி விட, பந்து வெளி விளிம்பில் பட்டு முதல் ஸ்லிப்பில் நின்ற திராவிட் கையில் கேட்ச் ஆனது. போலாக் 18, தென் ஆப்பிரிக்கா 273/8.

அவ்வளவுதான், இனி தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் உடனடியாக முடிந்துவிடும் என்று எதிர்பார்த்தால், அதுதான் நடக்கவில்லை. ஜஸ்டின் ஆண்டாங், தாமி சோலிகிலே இருவரும் மேற்கொண்டு விக்கெட் கொடுக்காமல் உணவு இடைவேளை வரை அணியைக் கொண்டுசென்றனர். தென் ஆப்பிரிக்கா 289/8.

உணவு இடைவேளைக்குப் பின்னர், சிறிது சிறிதாக ரன்கள் வந்தவண்ணம் இருந்தன. 300ஐத் தாண்டியது தென் ஆப்பிரிக்கா. இப்படியே போனால் தாங்காது என்று இன்று முதல்முறையாக ஹர்பஜன் சிங் பந்துவீச அழைத்துவரப்பட்டார். முதல் பந்து! ஃபுல் டாஸ். சோலிகிலே தூக்கி அடிக்கப்போய் ஹர்பஜன் சிங்கிற்கே கேட்ச் கொடுத்தார். சோலிகிலே 15, தென் ஆப்பிரிக்கா 305/9. ஒரு பந்து விட்டு, மூன்றாவது பந்தில் - மிதந்து வந்த பந்து - எண்டினி கவர் திசையில் மேலாக அடித்து அங்கு நின்ற பதான் கையில் எளிதான கேட்ச் கொடுத்தார். எண்டினி 0, ஆண்டாங் 16*, தென் ஆப்பிரிக்கா 305 ஆல் அவுட். ஆக ஹர்பஜன் இன்று தான் வீசிய முதல் மூன்று பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளைப் பெற்று, தென் ஆப்பிரிக்கா அணியை ஆல் அவுட்டாக்கினார். நேற்று நான் சொன்னது போல தென் ஆப்பிரிக்கா 300க்கருகே தன் இன்னிங்ஸை முடித்தது.

இந்தியாவிற்கு சேவாகும், கம்பீரும் ஆட்டத்தைத் தொடங்கினர். சேவாக் எப்பொழுதும் போல தடாலடியாகவே தொடங்கினார். கம்பீர் தானும் நல்ல தன்னம்பிக்கையுடன் ஆரம்பித்தார். ஆனால் 7வது ஓவரில் போலாக் பந்துவீச்சில் லெக் ஸ்டம்பில் விழுந்து நடு ஸ்டம்பிற்குச் செல்லும் பந்து கால்காப்பில் பட ஒருவழியாக ஹார்ப்பர் ஆட்டத்தின் முதலாவது எல்.பி.டபிள்யூவைக் கொடுத்தார். கம்பீர் 9, இந்தியா 17/1. திராவிட் சேவாகுடன் ஜோடி சேர்ந்தார். சேவாக் அதுவரை தர்ட்மேன் திசையில் உயரத்தூக்கி அடித்த ஒரு நான்குடன் விளையாடிக்கொண்டிருந்தார். போலாக் பந்தில் (வெவ்வேறு ஓவர்களில்), தர்ட்மேன் திசையில் ஒன்று, மிட்விக்கெட் திசையில் ஒன்று, கவர் திசையில் ஒன்று என மூன்று நான்குகளைப் பெற்றார். இதற்கிடையில் திராவிடும் எண்டினியின் ஓர் ஓவரில் இரண்டு அழகான நான்குகளைப் பெற்றார் - ஒன்று பேக்வர்ட் பாயிண்டில் ஒரு கட் ஷாட், மற்றொன்று தர்ட்மேன் வழியாக ஒரு ஸ்டியர். தேநீர் இடைவேளையின்போது இந்தியா 48/1 என்ற ஸ்கோரில் இருந்தது.

தேநீர் இடைவேளை தாண்டியதும் இந்தியாவால் வேகமாக ரன்களைப் பெற முடியவில்லை. முக்கியமாக திராவிடால் ரன்களைப் பெற முடியவில்லை. சேவாக் அவ்வப்போது நான்குகளும், சில ஒன்று, இரண்டுகளும் பெற்றுக்கொண்டிருந்தார். சேவாக் 79 பந்துகளில் தன் அரை சதத்தைப் பெற்றார். ஆண்டாங் வீசிய ஓவர் ஒன்றில் சேவாக் அவுட்டாகும் நிலைக்கு வந்தார். ஆண்டாங் டெஸ்ட் போட்டிகளில் லெக் ஸ்பின் வீசுவாராம். ஒருநாள் போட்டிகளில் ஆஃப் ஸ்பின்னாம் (!). ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசிய பந்தை சேவாக் அடிக்காது விட, பந்து லேசாக உள்ளே வந்து கால்காப்பில் பட்டது. எல்.பி.டபிள்யூவுக்கான அப்பீலை நடுவர் நிராகரித்தார். திடீரென சுதாரித்துக்கொண்ட சேவாக் அடுத்த நான்கு பந்துகளையும் எல்லைக்கோட்டைத் தாண்டி அனுப்பினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்து ஆஃப் ஸ்டம்பிற்கு வெகு வெளியே சென்றது, அதை கவர் திசையில் இழுத்து அடித்தார். எல்லைக்கோட்டுக்கு அருகே நின்றுகொண்டிருக்கும் ஸ்வீப்பர் கவர் பந்துத் தடுப்பாளரால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை. நான்காவது பந்து ஃபுல்டாஸ், அதை மிட்விக்கெட் திசைக்கு மேல் வளைத்து ஆறாக அடித்தார். ஐந்தாவது பந்து, அளவு அதிகமாக வீசப்பட்டது, அதை இறங்கி வந்து மிட்விக்கெட் மேல் வளைத்து அடித்தார், இம்முறை நான்குதான். ஆடிப்போன அணித்தலைவர் ஸ்மித் இரண்டு நிமிடங்கள் எடுத்துக்கொண்டு பந்துத்தடுப்பாளர்களை மாற்றி அமைத்தார். ஆண்டாங், ஆறாவது பந்தை, வீசும் கை விக்கெட்டை விட்டு விலகி வர வந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே வீசினார். இதை எதிர்பார்த்த சேவாக் அந்தப் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்து பேக்வர்ட் பாயிண்ட் திசையில் நான்கடித்தார்!

இது போதாதென்று அடுத்த ஓவரின் முதல் பந்தை - போலாக் வீசியது - திராவிட் அற்புதமாக பாயிண்ட் திசையில் கட் செய்து நான்கைப் பெற்றார்.

ஸ்மித் மிகவும் தைரியமாக ஆண்டாங்கை அடுத்த ஓவரையும் வீசச் செய்தார். முதல் பந்தை சேவாக் இறங்கி வந்து லாங் ஆன் திசை மேல் அடித்து நான்கைப் பெற்றார். அடுத்த பந்தில் சேவாகிற்கு ஒரு ரன்தான். ஆனால் அதே ஓவரில் திராவிடும் மிட்விக்கெட் திசையில் அழகான ஒரு நான்கை அடித்தார். ஆக, ஆண்டாங் இரண்டு ஓவர்களில் 28 ரன்களைக் கொடுத்துவிட்டார். இந்த அமளி துமளியில் இந்தியா 100 ரன்களைத் தாண்டியிருந்தது. தொடர்ந்தும் ரன்கள் வந்தவண்ணம் இருந்தன. இதற்குள் நேரம் 4.20 ஆகியிருக்க இருட்டத் தொடங்கியது. இன்று மொத்தமாக 76.4 ஓவர்களே வீசப்பட்டிருந்தன. நடுவர்கள் வெளிச்சமின்மை காரணமாக இன்றும் ஆட்டத்தை நிறுத்தி விட்டனர்.

இந்தியா என்ன செய்யவேண்டும்? இந்தியாவுக்கு சேவாக் ஒருவர்தான் அதிரடியாக விளையாடுகிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு ஜெயிக்க வாய்ப்புகள் குறைவு. இந்தியா நாளை முழுவதும் பேட்டிங் செய்ய வேண்டும். நான்காவது நாளும் பேட்டிங் செய்ய வேண்டும். நான்காம் நாள் உணவு இடைவேளைக்கு அடுத்து ஒரு மணி நேரமாவது விளையாடி, 520-570 ரன்கள் வரை பெற்றிருக்க வேண்டும். அப்படிச் செய்தால் இந்தியா ஜெயிக்க நிறைய வாய்ப்பு. அதற்கு திராவிட், டெண்டுல்கர், கங்குலி, லக்ஷ்மண் என அனைவரும் சேர்ந்து ரன்கள் பெற வேண்டும்.

Sunday, November 28, 2004

கொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்

தென் ஆப்பிரிக்கா 227/5 (83.3 ஓவர்கள்) - கால்லிஸ் 103*, டி ப்ருயின் 15*

கங்குலி கடைசியாக டெஸ்ட் ஆட்டங்களில் எப்பொழுது டாஸில் வென்றார் என்று யாருக்காவது நினைவிருக்கிறதா? தொடர்ச்சியாக இந்த சீஸனில் இந்தியா விளையாடிய ஆறு டெஸ்ட்களிலும் டாஸ் எதிரணிக்குத்தான்.

கொல்கொத்தா ஆடுகளத்திலும் என்ன செய்தான் ஸ்பின் எடுக்கும் என்று யோசித்து, புல்லை வெட்டி, தண்ணீர் குறைவாக விட்டு வைத்திருந்தனர். ஆனால் கான்பூர் அளவுக்கு செத்த பிட்ச் கிடையாது. இந்தியா முரளி கார்த்திக்கு பதில் இர்ஃபான் பதானை விளையாட வைத்தனர். வேறு எந்த மாற்றமும் இல்லை. நேற்று இரவு தென் ஆப்பிரிக்கா அணித்தலைவர் கிராம் ஸ்மித் கால் மீது அவரை ஹோட்டலில் இறக்கிவிட்ட டாக்சியோ ஏறிச்சென்றது. டாக்சியை விட்டு இறங்கிய ஸ்மித் ஏன் சக்கரத்துக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார் என்பது புரியாத புதிர். அத்துடன் அவர் காலில் ஏறிச்சென்ற டாக்சி சுற்றியிருப்பவர்கள் சத்தம் போட்டதால், என்ன ஏது என்று தெரியாமல் ரிவர்ஸில் வந்து மீண்டும் கால் மீது ஏறி அப்படியே நின்றுவிட்டதாம்! நம்பவா முடிகிறது? இன்று ஸ்மித் விளையாடுவாரா இல்லையா என்பதே தெரியாத நிலை. ஆனால் டாஸ் போட வந்து, டாஸில் வென்று, பேட்டிங் செய்யத் தீர்மானித்தார் ஸ்மித். தென் ஆப்பிரிக்கா அணியில் இரண்டு மாற்றங்கள். இந்திய வம்சாவளி ஹாஷிம் ஆம்லா என்பவரும், ஜஸ்டின் ஆண்டாங் என்பவரும் அணிக்கு உள்ளே வந்தனர். மார்ட்டின் வான் யார்ஸ்வெல்ட், ராபின் பீட்டர்சன் இருவரும் வெளியே.

முதல் ஓவரை வீசவந்தவர் பதான். காலில் டாக்சி ஏறியதன் விளைவோ என்னவோ ஸ்மித் கால்களை நகர்த்தாமல் ஆஃப் ஸ்டம்பிற்கு வெகு வெளியே சென்ற பந்தைத் துரத்திச் சென்று தட்டி தினேஷ் கார்த்திக் கையில் இரண்டாவது பந்திலேயே கேட்சைக் கொடுத்தார். ஸ்மித் 0, தென் ஆப்பிரிக்கா 0/1. அடுத்து உள்ளே வந்தவர் ஜாக் ருடால்ப். மற்றுமொரு இடதுகை ஆட்டக்காரர். முதல் டெஸ்ட் ஆட்ட நாயகர் ஆண்டிரூ ஹாலுடன் சேர்ந்து ரன்களைச் சேர்த்தார். ஹாலும், கான் வீசிய ஆஃப் ஸ்டம்பிற்கு வெகு வெகு வெளியே சென்ற பந்தைத் துரத்தி கார்த்திக்கிற்கு இரண்டாவது கேட்சைக் கொடுத்தார். ஹால் 7, தென் ஆப்பிரிக்கா 21/2.

முதல் அரை மணிநேரத்திற்குள்ளாக இரண்டு தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகளைப் பெற்ற இந்தியா தொடர்ச்சியாக நன்றாகவே பந்து வீசியது. கான், பதான் வீச்சை ஜாக் கால்லிஸ், ஜாக் ருடால்ப் இருவருமே தட்டுத்தடுமாறியே எதிர்கொண்டனர். ஆனால் சிறிது சிறிதாக அவர்கள் கஷ்டமான நிலையிலிருந்து மீண்டு, உணவு இடைவேளைக்கு முன் வேறெந்த விக்கெட்டும் விழாமல் காத்தனர். கும்ப்ளே, ஹர்பஜன் இருவரும் நன்றாகப் பந்து வீசினர். கும்ப்ளே எப்பொழுதும் போலல்லாமல் ஸ்டம்பிற்கு நேராகவே வீசினார். ஹர்பஜன் உணவு இடைவேளைக்கு முன்னர் நான்கு அருமையான ஓவர்களை வீசினார். ஒரு விக்கெட்டும் எடுக்காதது அவரது துரதிர்ஷ்டம். ருடால்ப் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் தன் விக்கெட்டைக் காத்தார் என்று சொல்லவேண்டும். கால்லிஸ் அந்த அளவிற்குத் திண்டாடவில்லை. உணவு இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்கா 28 ஓவர்களில் 60/2 என்ற நிலையில் இருந்தது.

உணவு இடைவேளைக்குப் பின்னர் ஒரு புறத்திலிருந்து வேகப்பந்தும், மறுபுறம் ஸ்பின்னுமாக இருந்தது. ஆனால் கால்லிஸ், ருடால்ப் இருவருமே மிக அருமையாக, நிதானமாக விளையாடினர். எந்த அவசரத்தையும் காண்பிக்கவில்லை. ரிஸ்க் எதுவும் எடுக்காமலேயே ஓவருக்கு 2-3 ரன்கள் பெற்றனர். இருவரும் அரை சதத்தைத் தாண்டினர். ஆட்டம் வெகு சீக்கிரமாக இந்தியாவின் கையை விட்டுப் போய்க்கொண்டிருந்தது. கங்குலி பதானுக்கு பதில் கானைக் கொண்டுவந்தார். இதற்குள் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகத்தொடங்கியிருந்தது.

கான் ருடால்புக்கு வீசிய ஓர் ஓவரில் முதல் பந்து பளபள பக்கம் வெளியே இருந்ததால் ரிவர்ஸ் ஸ்விங் ஆகி ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே விழுந்து இன்னமும் வெளியே போனது. ஆனால் அடுத்த பந்து ஸ்விங் ஆகாமல் குத்திய அதே திசையில் உள்ளெ வந்து பேட், கால் காப்பிற்கான இடைவெளியில் புகுந்து ஆஃப் ஸ்ட்ம்பை எகிற வைத்தது. அற்புதமான பந்து இது. ருடால்ப் 61 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். தென் ஆப்பிரிக்கா 130/3. தொடர்ந்து முதல் டெஸ்டில் விளையாடும் ஹாஷிம் ஆம்லா வந்தார். மனிதர் தலையை மொட்டையடித்து, கறுகறுவென பெரிய முஸ்லிம் தாடி வைத்துள்ளார். அழகாக விளையாடினார். இவர் நிற்கும் ஸ்டைல் சற்று மோசமானது. ஆனால் பேட்டைக் கொண்டுவந்து பந்துடன் சந்திக்கும்போது கால்கள் சரியாக மாறிவிடுகின்றன. இப்படியே தேநீர் இடைவேளை வந்தது. தென் ஆப்பிரிக்கா 152/3 என்ற நிலையில் இருந்தனர்.

தேநீர் இடைவேளைக்குப் பின் கும்ப்ளே, கான் இருவரும் தொடர்ந்து வீசினர். ஹர்பஜன், கும்ப்ளேக்கு பதில் வந்தார். கானுக்கு பதில் பதான் மீண்டும் வந்தார். திரும்பி வந்த முதல் ஓவரிலேயே லெக் ஸ்டம்பில் பந்தைக் குத்தி அதை ஆஃப் ஸ்டம்பிற்கு எடுத்து வந்து ஆம்லாவை பவுல்ட் ஆக்கினார் பதான். ஆம்லா 24, தென் ஆப்பிரிக்கா 176/4. அடுத்து தென் ஆப்பிரிக்காவின் மிகப்பெரும் அறுவை மன்னர் போடா டிப்பெனார் விளையாட வந்தார். கால்லிஸுடன் சேர்ந்து ஆட்டத்தை அழித்தே விடுவார் என நினைத்தோம். ஆனால் மிகக் குறுகிய நேரத்திலேயே பதானின் மற்றுமொரு பந்தில் - இதுவும் லெக்/நடு ஸ்டம்பில் விழுந்து ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே போனது, டிப்பெனார் மட்டையில் விளிம்பில் பட்டு கார்த்திகிடம் கேட்சானது. டிப்பெனார் 1, தென் ஆப்பிரிக்கா 182/5.

இந்த நேரத்தில் இந்தியாவின் கை நிச்சயமாக மேலோங்கியிருந்தது. கால்லிஸ் 74 ரன்களுடன், புதிதாக உள்ளே வந்த ஜாண்டர் டி ப்ருயினுடன் சேர்ந்து அணியைக் காக்க வேண்டிய நிலைமை. அதை அருமையாகச் செய்தார். தடாலடி ஏதும் கிடையாது. அவ்வப்போது இங்கும் அங்குமாக ஒரு நான்கு. மற்றபடி ஒன்று, இரண்டு. ஸ்பின் பந்துவீச்சாளர்கள் கும்ப்ளே, ஹர்பஜன் இருவருமே மிக நன்றாகத்தான் வீசினர். ஆனால் விக்கெட் ஏதும் விழவில்லை. பதான், கான் இருவருமாவது அவ்வப்போது விக்கெட்டுகளைப் பெற்றனர். 81 ஓவர்கள் தாண்டியதும், இந்தியா புதுப்பந்தை எடுத்து கான் கையில் கொடுத்தது. அப்பொழுது கால்லிஸ் 98இல் இருந்தார். அடுத்த பதான் ஓவரில் கவர் திசையில் அடித்த நான்கின் மூலம் கால்லிஸ் இந்தியாவிற்கெதிரான தன் முதல் சதத்தை அடித்தார். ஆனால் அடுத்த ஓவர் - கான் வீசியது - நடந்துகொண்டிருக்கும்போதே சூரிய அஸ்தமனம் நெருங்க, வெளிச்சம் குறைய ஆட்டம் நிறுத்தப்பட்டது. முதல் நாள் இறுதியில் கால்லிஸ் 211 பந்துகளில் 103 ரன்கள், 11x4.

கால்லிஸ் மிக அருமையாக விளையாடினார். திராவிட் விளையாடுவதைப் போன்று. ருடால்ப் - கால்லிஸ் ஜோடி சேர்த்த ரன்கள் மிகவும் முக்கியமானவை. இந்தியாவிற்கு பதான், கான் பந்துவீச்சு நன்றாக இருந்தது. பழைய பந்து, புதுப்பந்து இரண்டையும் வைத்து இருவரும் மிக அருமையாகவே வீசினர். சுழற்பந்து வீச்சாளர்களும் நன்றாகத்தான் வீசினர். சில நாள்கள் நன்றாக வீசியும் விக்கெட் கிடைக்காமல் போய்விடுவதுண்டு. அப்படித்தான் இன்றும். ஹர்பஜன் பந்தில் டி ப்ருயின் மட்டையில் பட்டு பின்னால் கேட்ச் போனது. மீண்டும் மீண்டும் பார்த்ததில் அது கேட்ச் போலத்தான் தோன்றியது. ஆனால் நடுவர் சைமன் டாஃபல் அவுட் கொடுக்கவில்லை.

நாளை இந்தியப் பந்துவீச்சாளர்கள் கிடுகிடுவென கடைசி ஐந்து விக்கெட்டுகளையும் எடுத்து விடுவார்கள் என்று தோன்றுகிறது. தென் ஆப்பிரிக்கா 350ஐத் தொடாது, 300க்கருகில் முடிந்துவிடும் என்று தோன்றுகிறது. கால்லிஸ் போல நிலைத்து நின்று ஆடுவதற்கு யாருமில்லை.

H4 விசாவில் அமெரிக்கா போகும் இந்தியப்பெண்கள் கதி

இன்றைய 'தி ஹிந்து' துணையிதழில் H4 விசாவில் அமெரிக்கா போய் தன் கணவன், அவன் குடும்பத்தாரிடம் மாட்டும் பெண்களின் நிலை பற்றிய கட்டுரை ஒன்று வந்துள்ளது.

இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது, ஒரு வருடத்திற்கு முன்னர் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கத்தின் மகன், மருமகள் தொடர்பாக நடந்த வழக்கு ஞாபகத்துக்கு வருகிறது.

சேதுபதி ராமலிங்கத்தின் மகன் ராஜவேல் சேதுபதி என்பவர் அமெரிக்காவில் வேலை செய்கிறார். (H1B விசாவாக இருக்கும் என நினைக்கிறேன்.) இவர் மணமுடித்த சங்கீதா என்னும் பெண்ணை தன் பெற்றோர் வீட்டிலேயே விட்டுவிட்டு ராஜவேல் அமெரிக்கா சென்றுவிட்டார். வரதட்சணை தராவிட்டால் மகனோடு சேர விடமாட்டோம் என்று துணைவேந்தர் குடும்பம் சங்கீதாவை அச்சுறுத்தியதாகவும், முறைதவறி நடந்துகொள்ள முயற்சி செய்ததாகவும் சங்கீதா வழக்குத் தொடர்ந்திருந்தார். வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கற்பகவிநாயகம் முன்னர் வந்தது.

அவரது அறிவுரையின்படி ராஜவேல் சங்கீதாவை அமெரிக்காவுக்கு அழைத்துக்கொண்டு செல்ல முடிவு செய்தார். ஆனால் விசா கிடைப்பதில் தாமதமானதாகச் சொல்லப்படுகிறது. [இது எனக்கு சற்றே குழப்பம் தருவதாக உள்ளது. H1B விசா வைத்துள்ளவர்களுக்கு மனைவியை/கணவனை அழைத்துவரக் கிடைக்கும் H4 விசாவில் எந்தத் தாமதமும் ஆவதில்லை அல்லவா? பின் ஏன் வருடக்கணக்காக ராஜவேல் இந்த விசா கிடைப்பதைத் தள்ளி வைக்கப் பார்க்கிறார் என்று புரியவில்லை.]

இந்நிலையில் சங்கீதா தனியாக பெண்கள் விடுதி ஒன்றில் தங்கவும், அதற்கான செலவுகளை ராஜவேல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கற்பகவிநாயகம் உத்தரவிட்டிருந்தார்.

சங்கீதாவுக்கு விசா கிடைப்பதில் ஆன தாமதம் தொடர்பாக நீதிபதி ராஜவேலை அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து நீதிமன்றத்தில் ஆஜராகச் சொன்னாராம். ஆனால் இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தடை செய்தது. அதற்குப்பின்னர் இந்த வழக்கில் என்ன ஆனது என்று தெரியவில்லை.

இப்படியே சங்கீதா அமெரிக்கா சென்றாலும், ஷிவாலி ஷா எழுதியுள்ள கட்டுரையைப் படித்தால் சங்கீதாவுக்கு அங்கே நிம்மதி கிடைக்குமா என்பது தெரியவில்லை. பழிவாங்கும் நோக்குள்ள கணவனிடம் மாட்டினால் அமெரிக்காவில் சரியான சட்டபூர்வமான குடிபுகல் அனுமதியில்லாத நிலையில் வீட்டோடு அடைபட்ட அடிமையாக மட்டும்தான் இருக்க முடியும். இதற்கு பதில் இந்தியாவிலேயே இருந்துவிடுதல் நலம். விவாகரத்து பெறுவதன்மூலம், ஜீவனாம்சம் பெறவாவது வழியுண்டு.

தீர விசாரிக்காமல், அமெரிக்க மாப்பிள்ளை கிடைக்கிறான் என்று ஒருமாத காலத்தில் நடக்கும் அவசர அடித் திருமணங்களில் இந்தியப் பெண்கள் மாட்டிக்கொள்ளக் கூடாது. இந்த விகாரங்கள் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த, நன்கு படித்த, நல்ல வேலையில் உள்ள இளைஞர்களால் செய்யப்படுகிறது என்பதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது.

இந்த பிரச்னைகளுக்கு மற்றுமொரு பக்கமும் உள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் டாக்டர் ஜெயகிருஷ்ண அம்பாடி, அவரது அண்ணன், பெற்றோர் ஆகியோர் மீது வரதட்சணை வழக்கு ஒன்று நடைபெற்றது. இது அந்த நேரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு. ஜெயகிருஷ்ணா மிகக்குறைந்த வயதிலேயே - 17 வயது - அமெரிக்காவில் MD படிப்பை நிறைவு செய்தவர். இவர் இந்தியா வந்து மணம் செய்துகொண்ட அர்ச்சனா என்னும் பெண், இந்தியா வந்து அம்பாடி குடும்பத்தினர் மீது வரதட்சணை வழக்குத் தொடுத்தார். அந்த நேரத்தில் அமெரிக்கக் குடிமகன்களாகிய இந்தக் குடும்பத்தினர் இந்தியா வந்திருந்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டனர். பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் 3 1/2 வருடங்கள் நடந்த வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் பொய்யான வழக்கு என்று தள்ளுபடி செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அர்ச்சனாவின் தந்தை USD 500,000 கொடுத்தால் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக தொலைபேசியில் பேசியது ஆதாரமாகக் காட்டப்பட்டது. இதுபற்றிய முழு விவரங்களும் இங்கே உள்ளது.

இம்மாதிரி ஓரிரண்டு விஷயங்களில் பெண்கள் பக்கம் தவறிருந்தாலும் பெரும்பாலும் பாதிப்புக்கு உள்ளாவது பெண்கள்தான்.

Saturday, November 27, 2004

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக...

சென்னை CASஆல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு

* இனி போகோ (POGO) சானல் மாதம் ரூ. 10 ஆகும். செட் டாப் பாக்ஸ் இல்லாத மானிடர்களுக்கு சானல் கிடைக்காது.

* The History Channel - இப்பொழுதைக்கு இலவசமாம். ஆனால் சுமங்கலி கேபிள் விஷனில் (அதாங்க, நம்ம தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரோட குடும்ப நிறுவனம்) ஒரு குறிப்பிட்ட பேக்கேஜ் வாங்குபவர்களுக்குத்தான் இந்த சானல் கிடைக்கும்.

* சுமங்கலி கேபிள் விஷன் வழியாக செட் டாப் பாக்ஸ் வைத்திருக்கும் மாந்தர்களுக்கு ராஜ் டிவி, ராஜ் டிஜிட்டல் பிளஸ் இரண்டும் கிடைக்காது. தேடிப்பார்த்து அலுத்துப்போகலாம். ஆனால் அவர்களிடமிருந்தே செட் டாப் பாக்ஸ் இல்லாமல் கேபிள் இணைப்பு பெறுபவர்களுக்கு இந்த சானல்கள் கிடைக்கின்றன.

* விண் டிவி, தமிழா டிவி போன்றவையும் சுமங்கலி கேபிள் விஷனில் கண்ணுக்குத் தெரிவதில்லை. எங்கோ சமீபத்தில் படித்தது: செயற்கைக்கோள் ஒளிபரப்புக்கு காசு கட்ட முடியாததால் தாற்காலிகமாக இவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று.

* டிஸ்னி சானல்கள் இரண்டு - அதில் ஒன்று சிறுவர்களுக்கு (டூன் டிஸ்னி) - சீக்கிரமே வரப்போகிறது. ஸ்டார் வழியாக வரும் இவை இலவசமாகக் கிடைக்காது.

* ஸ்ப்லாஷ் என்று பெண்டாமீடியா நடத்தி வந்த சானல் சுமங்கலி கேபிள் விஷனில் காணக்கிடைக்கவில்லை. இந்த சானல் மிக மோசமான முறையில் நிர்வகிக்கப்பட்டது என்று கேள்விப்படுகிறேன். இழுத்து மூடிவிட்டார்களா அல்லது சு.கே.வி யால் ஒதுக்கப்பட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. [பெண்டாமீடியாவின் The Legend of Buddha, அனிமேஷன் படங்களுக்கான ஆஸ்கார் விருதுக்கான பரிசீலனைப் பட்டியலில் உள்ளது என்ற விஷயம் தெரியுமல்லவா?]

தமிழோவியம் கிரிக்கெட்

இந்த வாரம் தமிழோவியத்தில் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் கங்குலியின் குற்றமும், தண்டனையும், தொடர்ந்த மேல்முறையீடும், தண்டனையிலிருந்து தப்பித்தலும் பற்றி.

Friday, November 26, 2004

அம்பானி குடும்பத் தகராறு

கடந்த சில நாள்களாக ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரரான அம்பானி குடும்ப சகோதரர்கள் முகேஷ், அனில் ஆகியோருக்கிடையே உள்ள பிரச்னை வெளியே வந்துள்ளது.

இந்தியாவில் குடும்பம் சார்ந்த நிறுவனங்களில் இதுபோன்ற பிரச்னை எழுவது இயல்பே. ஆனால் ரிலையன்ஸ் போன்ற மாபெரும் நிறுவனத்தில் இந்த பிரச்னை எழுந்துள்ளது முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் குடும்பப் பின்னணியில் கட்டப்பட்டுள்ள நிறுவனங்கள்தான் அதிகம். பன்னாட்டு நிறுவனங்களின் இந்தியக் கிளைகள் தவிர்த்து, இந்தியாவின் பெரிய நிறுவனங்கள் அனைத்துமே குடும்பங்களின் வழி வழியாக வருவதுதான். டாடா, பிர்லா என்று சொல்வோமே... இதில் பிர்லா என்பது பல துண்டுகளாக உடைந்த சில பல பிர்லாக்களின் நிறுவனங்கள். இதில்தான் கடைசியாக இறந்துபோன பிரியம்வதா பிர்லாவின் உயில் பற்றிய வழக்கு இன்னமும் தொடர்கிறது. இந்த பிர்லா குடும்ப நிறுவனங்களில் உருப்படியானது என்று பார்த்தால் அது ஏ.வி.பிர்லா நிறுவனங்களே. குமார் மங்கலம் பிர்லா தலைமையில் இயங்கும் குழுமம் இது. டாடா நிறுவனங்கள் துண்டாகிப் போகாமல் ஒரு குடையின் கீழ்தான் இன்னமும் உள்ளன. அதற்கு இந்த நிறுவனங்கள் முழுக்க முழுக்க திறமையான நிர்வாகிகளால் நடத்தப்படுவதும், குடும்பத்தின் ஆசாமிகள் அதிகமாக உள்ளே மூக்கை நுழைக்காது இருப்பதும் காரணமாகும். காந்தியின் நெருங்கிய நண்பர் ஜம்னாலால் பஜாஜ் தொடங்கிய பஜாஜ் நிறுவனம் இன்று அவரது பையன்கள், பேரன்கள் இடையேயான சண்டையில் துண்டுகளாக வெட்டப்படப்போகின்றன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நம்மூர் காவி ஆடிட்டர் குருமூர்த்தி அந்த பிரச்னையில் கட்டப்பஞ்சாயத்து செய்து பெயர் பெற்றார் (ஆனால் பிரச்னை என்னவோ இன்னமும் தீரவில்லை.) ஆதி கோத்ரேஜ் தன் மகள்கள் இருவரையும் அவசர அவசரமாக நிறுவனத்துக்குள் நுழைக்கப் பெரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்.

பார்தி டெலிசர்வீசஸ் சுனில் பார்தி மிட்டலின் குடும்ப நிறுவனம் போலத்தான் தொடங்கியது. மேற்பதவிகளில் இன்னமும் இரண்டு மிட்டல்களைப் பார்க்கலாம். ஆனால் இப்பொழுது சிங்டெல், வார்பர்க்-பிங்கஸ் போன்ற நிறுவனங்கள் செய்துள்ள முதலீட்டினால் வருங்காலத்தில் புரொபஷனல் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.

தகவல் தொழில்நுட்பம், த.தொவினால் வாய்த்த சேவைகள் ஆகிய துறைகளில் குடும்ப நபர்களின் தொல்லை இல்லை. விப்ரோவின் பங்குகள் கிட்டத்தட்ட 80% அசீம் பிரேம்ஜியிடம் இருந்தும், நிறுவனம் முழுதும் வெளியிலிருந்து வந்த நிர்வாகிகள் கையில்தான் உள்ளது. பிரேம்ஜியின் மகன், மகள், மனைவி, மருமகன்கள் என்று கிடையாது. இன்ஃபோசிஸ், சத்யம் கம்ப்யூட்டர்ஸ், டி.சி.எஸ், ஆயிரக்கணக்கான BPO நிறுவனங்கள் அனைத்திலும் நிர்வாகம் முக்கியப் பங்குதாரரின் குடும்பத்தினரிடம் கிடையாது. பழைய நிறுவனங்கள் என்று எடுத்துக்கொண்டால் எல்&டி மட்டும்தான் இதுபோன்று நடக்கும் நிறுவனம்.

சரி, அம்பானி விஷயத்துக்கு வருவோம். ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் என்பது பெட்ரோகெமிகல், எண்ணெய் சுத்திகரிப்பு, எண்ணெய், எரிவாயு தேடுதல், தோண்டுதல், பெட்ரோல் பம்புகளை நாடெங்கிலும் நிறுவுவது ஆகிய வேலைகளைச் செய்யும் மிகப்பெரும் நிறுவனம். ரிலையன்ஸ் எனர்ஜி என்பது மின்சாரம் உற்பத்தி, விநியோகம் ஆகிய துறைகளில் உள்ளது. ரிலையன்ஸ் இன்ஃபோகாம் என்னும் தொலைதொடர்பு நிறுவனம் மொபைல் செல்பேசிகள், பிராட்பேண்ட் இணையம் போன்ற சேவைகள் தருவது. ரிலையன்ஸ் கேபிடல் என்னும் நிறுவனம் பணத்தைப் பணமாக்கும் முதலீடு, பரஸ்பர நிதி ஆகிய வேலைகளைச் செய்வது. ரிலையன்ஸ் சில மாதங்களுக்கு முன்னர்தாம் ஐ.பி.சி.எல் என்னும் அரசின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கியிருந்தது.

திருபாய் அம்பானி உயில் எழுதிவைக்காது இறந்துபோனார். அவர் இறந்தவுடனேயே அவரது மகன்களுக்குள் ஏதேனும் பிரச்னை வருமோ என்று எதிர்பார்த்தனர். ஆனால் தொடக்கத்தில் அப்படி ஏதும் இல்லை. மூத்தவர் முகேஷ் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தையும், ரிலையன்ஸ் இன்ஃபோகாம் நிறுவனத்தையும் நேரடியாகக் கவனித்துக்கொள்ள, இளையவர் அனில் ரிலையன்ஸ் எனர்ஜியில் கவனத்தைச் செலுத்தினார்.

ஆனால் சமீபகாலங்களில் முகேஷ் தான்தோன்றித்தனமாக ரிலையன்ஸ் இன்ஃபோகாம் நிறுவனத்தை நடத்துவது பற்றியும், ரிலையன்ஸ் எனர்ஜிக்கு ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் மூலம் எரிவாயு வழங்குவதில் ஏற்படப்போகும் காலதாமதம் பற்றியும், ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் போர்டில் அனிலுக்குத் தெரியாமல் நுழைக்கப்படும் மாற்றங்கள் பற்றியும் கண்டு கோபமான அனில், முகேஷுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதைத் தொடர்ந்து சி.என்.பி.சி தொலைக்காட்சி சானலில் ஒரு பேட்டியில் முகேஷ் தனக்கும், தன் தம்பிக்கும் இடையில் சில பிரச்னைகள் இருப்பதாகவும், ஆனால் அதனால் நிறுவனங்களில் எந்த பாதிப்பும் இருக்கப் போவதில்லை என்றும் சொன்னார். சொல்லிவிட்டு அமெரிக்காவிற்கு மூன்றுநாள் விடுமுறைக்குப் போய்விட்டார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளில் விலைகள் இறங்கத் தொடங்கின.

இந்த வாரம் திங்களன்று முகேஷ், தான் சொன்னதை தொலைக்காட்சி சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று எல்லாப் பத்திரிகைகளிலும் விளம்பரம் கொடுத்தார். பங்குச்சந்தையில் பங்குகள் விலை முன்னளவுக்கு வந்தது. ஆனால் அடுத்த நாளே ரிலையன்ஸ் ஊழியர்கள் அனைவருக்கும் அனுப்பிய மின்னஞ்சலில் தான்தான் தலைவர் என்று திட்டவட்டமாக முகேஷ் அறிவிக்க, அனிலும் வாய் பேசாது இருக்க, அனைவருக்கும் இந்த பிரச்னை இப்பொழுதைக்குத் தீராது என்று தெரியவந்துவிட்டது. பங்குகள் மீண்டும் இறக்கம்.

அனில், முகேஷ் இருவருக்கும் இரண்டு சகோதரிகள். தாயார் கோகிலாபென் இந்த பிரச்னையில் தலையிடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளாராம். சென்ற வார இறுதியில் குடும்பத்திற்குள்ளாகப் பேசி பிரச்னை தீர்ந்துவிடும் என்று சிலர் எதிர்பார்த்தனர். நடக்கவில்லை.

இதற்குள் நேற்று அனில் அம்பானி சேர்மனாக இருக்கும் ரிலையன்ஸ் எனர்ஜியில் இருந்து ஆறு டைரக்டர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் டைரக்டர் ஒருவரும் ராஜினாமா செய்துள்ளார். அனில் அம்பானி தன் கைகள் கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டபூர்வமாக நடவடிக்கை எடுப்பார் என்று சொல்லப்படுகிறது.

உயில் எழுதாமல் திருபாய் இறந்தது நிஜமென்றால் அவர் பெயரில் நேரடியாக இருந்த சொத்துக்கள் ஐந்தாகப் பிரிக்கப்படும்: மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். முகேஷ், அனில் பெயரில் தனியாக இருக்கும் பங்குகள் அவரவர்களுக்கே. இப்பொழுதைக்கு இந்த வழக்கு தீரப்போவதில்லை என்று தோன்றுகிறது.

சங்கராச்சாரியார் வழக்கு கூட இதற்கு முன்னால் முடிந்துவிடும்.

கான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்

தென் ஆப்பிரிக்கா 510/9 டிக்ளேர்ட் & 169/4, இந்தியா 466. ஆட்டம் டிராவில் முடிவடைந்தது

நான்காம் நாள் ஆட்டம் முடியும்போதே இனி இந்த ஆட்டத்தின் முடிவு டிராவைத் தவிர வேறொன்றும் இல்லை என்பது தெளிவாகி விட்டது. ஐந்தாம் நாள் ஆட்டம் 9.00 மணிக்குத் தொடங்க இருந்தது, ஆனால் 9.30க்குத்தான் ஆரம்பிக்க முடிந்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே திராவிட் எண்டினி வீசிய அவுட்ஸ்விங்கர் ஒன்றில் விளிம்பில் தட்டி விக்கெட் கீப்பர் சோலிகிலேயிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். முதல் நாள் ஸ்கோரில் இரண்டே ரன்கள்தான் சேர்த்திருந்தார். திராவிட் 54, இந்தியா 407/5.

தொடர்ந்து போலாக்கும், எண்டினியும் பிரமாதமாகப் பந்துவீச ஆரம்பித்தனர். சடசடவென விக்கெட்டுகள் விழுந்தன. புதியவர் தினேஷ் கார்த்திக் உள்ளே வரும் பந்தில் ஷாட் ஏதும் அடிக்காமல் கால்காப்பைக் காண்பிக்க எல்.பி.டபிள்யூ ஆனார். தினேஷ் கார்த்திக் 1, இந்தியா 408/5. கும்ப்ளே இரண்டு அருமையான நான்குகளை அடித்தார். ஆனால் எண்டினி பந்து ஆஃப் ஸ்டம்பிலிருந்து வெளியே போனது. அதைத் தட்டி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கும்ப்ளே 9, இந்தியா 419/7. லக்ஷ்மண் அதே ஓவரிலேயே உள்ளே வந்த பந்தை சரியாக விளையாடாமல் , உள்விளிம்பில் வாங்கி ஸ்டம்பில் விட்டார். லக்ஷ்மண் 9, இந்தியா 420/8.

அதைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும், ஜாகீர் கானும் மட்டையை வீச ஆரம்பித்தனர். சில விளிம்பில் பட்டு ரன்கள் சேர்த்தன. சில பிரமாதமான விளாசல்களும் இருந்தன. பீட்டர்சன் கொண்டுவரப்பட்டார். ஹர்பஜன் கண்களை அகல விரித்துக்கொண்டு அவரைத் தூக்கி லாங்-ஆன் மேல் அடித்து ஆறு ரன்களைப் பெற்றார். அதே ஓவரில் தடுத்தாடப் போய், சில்லி பாயிண்டில் கேட்ச் கொடுத்தார். டிப்பெனார் மார்பளவில் வந்த கேட்சை அவர் தட்டி விட்டார், பின் தானே திரும்பி, தாவிப்போய் அருமையாகக் கீழே விழுந்து தரைகு ஓர் இன்ச் மேலே பாய்ந்து பிடித்தார். இந்த ஆட்டத்தின் தலை சிறந்த கேட்ச் இது. ஹர்பஜன் 17 (1x4, 1x6), இந்தியா 456/9.

அடுத்த ஓவரில் ஜாகீர் கான் அடுத்தடுத்த பந்துகளில் ஹாலை 4, 6 என்று அடித்தார். ஒரு பந்து விட்டு நான்காவது பந்தில், இறங்கி அடிக்கப்போக, நடு ஸ்டம்ப் பறந்தது. கான் 30 (3x4, 1x6), இந்தியா 466 ஆல் அவுட். தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 44 ரன்கள் கூடுதலாகப் பெற்றிருந்தது.

உணவு இடைவேளைக்கு முன்னர் நான்கு ஓவர்கள் வீச முடிந்தது. அந்த நான்கு ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 18/0 என்று இருந்தது.

உணவு இடைவேளைக்குப் பின்னர் ஸ்மித், ஹால் இருவருமே நன்றாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். ஹர்பஜன் வீசிய பந்தில் ஹால் வெளி விளிம்பில் தட்டி தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஹால் 26, தென் ஆப்பிரிக்கா 67/1. அதைத்தொடர்ந்து முரளி கார்த்திக் அருமையாகப் பந்து வீசினார். கார்த்திக் காற்றில் மிதக்கவிட்ட பந்து ஒன்றில் மார்ட்டின் வான் யார்ஸ்வெல்ட் எல்.பி.டபிள்யூ ஆனார். வான் யார்ஸ்வெல்ட் 13, தென் ஆப்பிரிக்கா 100/2. ஸ்மித் தன் அரை சதத்தை அடையும் முன்னர் கார்த்திக் வீசிய மற்றுமொரு மிதந்த பந்தில் ஷார்ட் லெக்கில் நின்றுகொண்டிருந்த கம்பீரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஸ்மித் 47, தென் ஆப்பிரிக்கா 110/3. ஜாக் ருடால்ப் முதல் இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகியிருந்தார். மிக நல்ல, வளரும், இடதுகை ஆட்டக்காரர். சற்று கலவரத்துடனேயே ஆடினார். ஹர்பஜன் பந்துவீச்சில் வெளிவிளிம்பில் பட்டு தினேஷ் கார்த்திக்கால் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். ருடால்ப் 3, தென் ஆப்பிரிக்கா 115/4. தேநீர் இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்கா 121/4 என்ற ஸ்கோரில் இருந்தது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஜாக் கால்லிஸ், போட்டா டிப்பெனார் - இரண்டு பேருமே அறுவை மன்னர்கள் - தம் அணிக்கு வேறெந்தச் சேதமும் வராவண்ணம் அறுத்துத் தள்ளினர். 169/4 என்ற நிலையில் ஆட்டம் டிராவாக அறிவிக்கப்பட்டது.

இந்தியப் பந்துவீச்சாளர்களால் தடுத்தாடும் ஆட்டக்காரர்களை அவுட்டாக்க முடியாதது பெருத்த துரதிர்ஷ்டம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும்போது கில்லெஸ்பி தவிர அனைவருமே ஆக்ரோஷமாக ரன்கள் பெற முயற்சிப்பர். டேமியன் மார்ட்டின் கூட. அதனால் விக்கெட் எடுக்க ஏதாவது ஒரு வாய்ப்பு வந்தவண்ணமே இருந்தது. ஆனால் இந்தத் தென் ஆப்பிரிக்க அணி தானாக எந்த விளையாட்டையும் ஜெயிக்க நினைக்கவில்லை. தோற்கக்கூடாது என்பது மட்டுமே அவர்களது ஒரே குறிக்கோள். எனவே கொல்கொத்தா ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லையென்றால் அங்கும் டிராதான்.

Wednesday, November 24, 2004

கான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்

தென் ஆப்பிரிக்கா 510/9 டிக்ளேர்ட், இந்தியா 401/4 (114 ஓவர்கள்) - திராவிட் 52*, லக்ஷ்மண் 4*

மூன்றாம் நாள் இந்தியா விளையாடும்போது, தென் ஆப்பிரிக்கா எத்தனை மெதுவாக, நத்தை, ஆமை போல விளையாடி ஆட்டத்தையே வீணடித்து விட்டனர் என்று தோன்றியது. நான்காம் நாள் ஆட்டத்தைப் பார்க்கும்போது, இந்தியாவும் விதிவிலக்கல்ல, சேவாக்-கம்பீர் ஜோடி மட்டும்தான் விதிவிலக்கு என்று புரிந்தது.

நான்காம் நாள் காலையும் பனிமூட்டத்தால், ஆட்டம் தாமதமாகவே தொடங்கியது. ஆனால் மூன்றாம் நாள் போலல்லாமல் உணவு இடைவேளைக்கு முன்னரேயே ஆட்டம் தொடங்கிவிட்டது. சேவாக் எடுத்த எடுப்பிலேயே ரன்கள் பெற ஆரம்பித்தார். முதலிரண்டு ஓவர்களில் தலா ஒரு நான்கு. இந்தியா இருனூறைத் தாண்ட அதிக நேரம் எடுக்கவில்லை. எண்டினி வீசும் கை விக்கெட்டை விட்டு விலகி வர லெக் ஸ்டம்பைக் குறிவைத்தே பந்துவீசினார். சேவாக் அந்தப் பந்துகளை அடிக்க - அதாவது நான்குகள் அடிக்க - சிரமப்பட்டார். கிட்டத்தட்ட ஷார்ட் மிட்விக்கெட்டுக்கு ஒரு கேட்ச் போலப் போனது. ஆனால் தடுப்பாளர் முன் விழுந்து விட்டது. அடுத்த சில ரன்கள் ஒற்றைகளாகவே வந்தன. எண்டினியின் பந்தை ஃபைன் லெக்கிற்குத் தட்டி ஒரு ரன் பெற்று அதன்மூலம் தன் 8வது சதத்தைப் பெற்றார்.

நேற்றே நான் எழுதியிருந்தது போல, கடந்த எட்டு டெஸ்ட் போட்டித் தொடர்களில் ஏழில், ஒவ்வொன்றிலும் ஒரு சதமாவது அடித்துள்ளார் சேவாக். வேறெந்த இந்திய மட்டையாளரும் செய்யாத சாதனையிது.

மறுமுனையில் கம்பீரும் சதமடித்து, இந்தியாவிற்காக தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதமடிக்கும் நான்காவது ஜோடியாக இருப்பார்கள் என எதிர்பார்த்தது நடக்கவில்லை. [முதல் மூன்று ஜோடிகள்: விஜய் மஞ்ச்ரேகர்-முஷ்டாக் அலி, பங்கஜ் ராய்-வினு மன்கட், கவாஸ்கர்-ஸ்ரீக்காந்த் - இதில் பங்கஜ் ராய்-வினு மன்கட் இருவரும் சென்னையில் சேர்ந்து அடித்தது 413 ரன்கள், இன்றுவரை முதல் விக்கெட்டுக்கான உலக சாதனை.] கம்பீர் தன் சதத்தை நெருங்கும்போது மிகவும் மெதுவாக ரன்கள் பெற ஆரம்பித்தார். அதெ நேரம் போலாக், எண்டினி இருவருமே பந்துவீச்சை நெறியாக்கி, நன்றாக வீச ஆரம்பித்தனர். கம்பீர் 96இல் இருக்கும்போது போலாக் ஆஃப் ஸ்டம்பில் வீசி வெளியே கொண்டுபோன பந்தைத் தட்டி சோலிகிலே கையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்தியா 218/1.

இந்த நேரத்தில் லக்ஷ்மண் வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் உள்ளே வந்தது திராவிட். இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற வேண்டுமானால் ஒரே வழிதான் இருந்தது. கிடுகிடுவென ரன்களைச் சேர்ப்பது, நான்காம் நாள் ஆட்டம் முடியும்போது கிட்டத்தட்ட 550-600 ரன்கள் வரையில் இருப்பது. ஐந்தாம் நாள் காலையில் ஒரு மணிநேரம் விளையாடி 650 வந்ததும் டிக்ளேர் செய்து பந்துவீசி, தென் ஆப்பிரிக்காவை இரண்டாம் இன்னிங்ஸில் அவுட்டாக்குவது. ஆனால் திராவிட் இதுபோன்ற வேலைகளுக்கு சற்றும் லாயக்கல்ல. வந்தது முதலே ஆடுகளத்தில் என்னென்ன குறைகள் உள்ளன என்பதைப் பற்றிய பி.எச்டி தீஸிஸ் செய்வதைப் போல ஆடுகளத்தை மட்டையால் தட்டியும் கொட்டியும் இருந்தார். இந்த ஆடுகளம் மோசமானது, பந்துகள் திடீரென தரையோடு உருளும், திடீரென பிளவில் பட்டு எம்பும். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாதுதான் கம்பீர்-சேவாக் ஜோடி ரன்கள் பெற்றது. ஓவருக்கு 4 ரன்களுக்கு மேல் ரன்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் திராவிட் வந்ததும் மொத்த ரன் ரேட்டே 3.6க்கு வந்தது. பல மெய்டன் ஓவர்கள் பறந்தன. தெய்வாதீனமாக எண்டினி பந்தில் இரண்டு - அடுத்தடுத்த பந்துகளில் - விளிம்பில் பட்டு ஸ்லிப் வழியாக திராவிடுக்கு இரண்டு நான்குகளைப் பெற்றுத் தந்தன. இரண்டுமே கிட்டத்தட்ட உருண்டு போன பந்துகள்தான். மறுமுனையில் சேவாக் ஒரு ரன்னைப் பெற்றால் மீதமுள்ள பந்துகளை திராவிட் ஒழித்துக் கட்டிவிடுவார்.

இப்படியே உணவு இடைவேளையின்போது 235/1 என்ற ஸ்கோர் இருந்தது. சேவாக் 108* (193 பந்துகளில்), திராவிட் 11* (33 பந்துகளில், இரண்டு விளிம்பில் பட்ட நான்குகள் அடக்கம்).

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சேவாக் தடையை உடைத்தார். முதல் ஓவரிலிருந்தே பொறி பறக்க ஆரம்பித்தது. ஆண்டிரூ ஹால் ஓவரில் ஒரு நான்குதான். அதற்கடுத்த ஆண்டிரூ ஹால் ஓவரில் சேவாக் தன் முதல் ஆறையும், தொடர்ந்து ஒரண்டு நான்குகளையும் அடித்தார். அந்த ஓவரில் இந்தியாவுக்கு 18 ரன்கள். அடுத்த டி ப்ருயின் ஓவரில் 14 ரன்கள். அதற்கடுத்த ஹால் ஓவரில் சேவாக் ஒரு ரன் பெற்று இந்த வருடத்தில் (2004) டெஸ்ட் போட்டிகளில் 1,000 ரன்களைத் தாண்டிய ஏழாவது வீரரும், முதல் இந்தியரும் ஆனார்.

இடதுகை சுழற்பந்து வீச்சாளர் பீட்டர்சன் வந்தார். சேவாக் அவரை லாங்-ஆன் மேல் சிக்ஸ் அடித்து தன் 150ஐத் தாண்டினார். மற்றுமிரண்டு நான்குகளுடன் அந்த ஓவரில் 15 ரன்கள் வந்தன. ஆனால் அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ஹால் வீசிய இன் கட்டரில் எல்.பி.டபிள்யூ ஆனார் சேவாக். 164, 228 பந்துகள், 24x4, 2x6. இந்தியா 294/2. அத்துடன் இந்தியா விளையாடிய ஆக்ரோஷமான ஆட்டமும் அடங்கிப்போனது.

இந்தியாவின் தலைசிறந்த மட்டையாளர் டெண்டுல்கர் வந்து, சிறிது நேரம் தடுமாறிய பின்னர் ஹால் வீசிய ரிவர்ஸ் ஸ்விங் பந்து கால் காப்பில் பட்டு ஸ்டம்பில் போய் விழுந்தது. டெண்டுல்கர் 3, இந்தியா 298/3. திடீரென ஆடுகளம் மோசமாகிப் போனதுபோலத் தோற்றமளித்தது.

கங்குலியும், திராவிடும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு விளையாடுவது போலவே விளையாடினர். விட்டால் நம் அணி ஃபாலோ-ஆன் வாங்கிவிடும் போலவும் அதன் பின் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோற்றுவிடுவது போலவும், இந்தப் பந்துவீச்சு உலகின் தலைசிறந்த பந்துவீச்சு போலவும், ஆடுகளம் மும்பை ஆடுகளம் போலவும் நினைத்துக்கொண்டு பந்துக்குப் பந்து திடுக்கிட்டு திடுக்கிட்டு விளையாடினர். சற்றுமுன்னர் வரைதான் சேவாக் ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் சொல்லிவைத்து அடித்துக் கொண்டிருந்தார்.

சேவாக் அவுட்டான பின், கிட்டத்தட்ட 108 பந்துகளுக்கு மேல் நான்குகள் எதுவும் போகவில்லை. அதன்பின் பீட்டர்சன் பந்தில் திராவிட் மிட் ஆனில் ஒரு நான்கு அடித்தார். அதுதான் திராவிட் உருப்படியாக அடித்த முதல் நான்கு. தொடர்ந்து கங்குலி சற்றே மனதிடத்துடன் விளையாடினார். ரன்களும் அவருக்கு வர ஆரம்பித்தது. ஆனாலும் அவ்வப்போது எண்டினி வீசிய அலவு குறைந்து எழும்பி வரும் பந்துகளில் மிகவும் சிரமப்பட்டார். கையிலும், உடலிலும் பலமுறை அடிவாங்கினார். இந்த ஆடுகளத்தில் இன்னமும் சிறிது உயிர் இருந்திருந்தால் மிகப்பெரும் கங்குலியின் வாழ்க்கை சோகமாகிப்போயிருக்கும். தேநீர் இடைவேளையின்போது இந்தியா 338/3 என்ற எண்ணிக்கையில் இருந்தது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு கங்குலி சற்று அதிகமாக ரன்களைப் பெற்றார். ஆஃப் திசையிலும் சில நான்குகள் பறந்தன. எண்டினி வீசிய அளவு குறைந்த பந்தை ஹூக் கூட செய்து ஒரு நான்கைப் பெற்றார் கங்குலி. இப்படியாக கங்குலி திராவிடைத் தாண்டிப் போய், ஹால் பந்தில் ஒரு நான்கை அடித்து தன் அரை சதத்தைப் பெற்றார். ஆனால் அதற்கு சில ஓவர்கள் தாண்டி டி ப்ருயின் பந்தை ஃபைன் லெக்கிற்குத் திருப்பி அடித்து அங்கு ராபின் பீட்டர்சனுக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார். கங்குலி 57, இந்தியா 394/4. இதுவே டி ப்ருயின் டெஸ்ட் வாழ்வில் முதல் விக்கெட்.

லக்ஷ்மண் உள்ளே வந்தார். திராவிட் அந்த ஓவரிலேயே தன் அரை சதத்தைத் தொட்டார். இந்தியா 400ஐக் கடந்தது. மூன்றாம் நாள் போலவே போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் தடை செய்யப்பட்டது.

இனி இந்த ஆட்டம் டிரா ஆவதைத் தவிர வேறு வழியில்லை. ஆட்டத்தில் இரண்டு அம்சங்கள்தான் இதுவரை பார்க்க சுவாரசியம். ஒன்று சேவாகின் அற்புதமான சதம். இரண்டாவது கம்பீர் சேவாகுக்குக் கொடுத்த துணை. மற்ற இந்திய மட்டையாளர்கள் வெட்கப்பட வேண்டும்.

இரண்டாவது டெஸ்டிலாவது நல்ல, உயிருள்ள ஆடுகளத்தை வைத்து, தயங்கித் தயங்கி விளையாடும் தென் ஆப்பிரிக்காவை ஜெயிக்க இந்தியா முயல வேண்டும். இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்காது. சென்ற வருடம் கூட நியூசிலாந்து விளையாட வந்திருந்த போது அஹமதாபாதிலும், மொஹாலியும் படு திராபையான ஆடுகளங்களை வைத்து இரண்டு டெஸ்ட்களையும் டிராவாக்கிய இந்தியா இப்பொழுதும் அதைப்போலவே நடந்து கொள்ளாமல் இருக்க எல்லாம் வல்ல கிரிக்கெட் இறைவனை வேண்டுவோம்.

Monday, November 22, 2004

கான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம், மூன்றாம் நாள்கள்

இரண்டாம் நாள்: தென் ஆப்பிரிக்கா 459/7 (182 ஓவர்கள்) - போலாக் 31*, சோலிகிலே 5*
மூன்றாம் நாள்: தென் ஆப்பிரிக்கா 510/9 டிக்ளேர்ட், இந்தியா 185/0 (42 ஓவர்கள்) - சேவாக் 85*, கம்பீர் 85*

இரண்டாம் நாள் ஆட்டம், முதல் நாளைப் போலவே ஆமை வேகத்தில் ஊர்ந்தது. முதல் நாளில் 92 ஓவர்களில் 230 ரன்கள். இரண்டாம் நாள் 90 ஓவர்களில் 229 ரன்கள். முதல் நாள் இந்தியா நான்கு விக்கெட்டுகளைப் பெற்றது, இரண்டாம் நாள் மூன்றுதான்.

முதலில் ஆண்டிரூ ஹாலை எடுத்துக்கொள்வோம். ஏற்கனவே சில டெஸ்ட்களில் விளையாடியிருந்தாலும், இந்த டெஸ்டில் முதல் முறையாக தொடக்க ஆட்டக்காரராக விளையாட வந்தார். முதல் நாள் 78* ரன்களில் இருந்து இரண்டாம் நாள் காலையில் சதமடித்தார். ஆனால் அதற்கு முன்னதாக டிப்பெனார் கங்குலி வீசிய பந்தில் விளிம்பில் தட்டி தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். டிப்பெனார் 48, தென் ஆப்பிரிக்கா 241/5. அதையடுத்து தன் முதல் டெஸ்டில் விளையாடும் ஜாண்டர் டி ப்ருயின் ஹாலுடன் ஜோடி சேர்ந்து மெதுவாக ரன்கள் சேர்த்தார். உணவு இடைவேளைக்கு சற்று முன் 300ஐக் கடந்தது தென் ஆப்பிரிக்கா. மேற்கொண்டு விக்கெட் ஏதும் விழவில்லை.

உணவு இடைவேளைக்குப் பின்னர் ஹால் 150ஐத் தாண்டினார். பின் கும்ப்ளே வீசிய லெக் பிரேக்கில் (அதிசயமாக... வெறும் கூக்ளிக்களும், டாப் ஸ்பின்னர்களும் மட்டுமே வீசிக்கொண்டிருந்தார்) கால் திசையில் ஆடப்போய், பந்தை விட்டுவிட, பவுல்ட் ஆனார். கும்ப்ளேயின் ஐந்தாவது விக்கெட். ஹால் 163. இவரது முதல் சதம். இதற்கு முன் இவர் எடுத்திருந்த சர்வாதிக எண்ணிக்கை 99*. தென் ஆப்பிரிக்கா 385/6. ஹால் அடித்த சதம் தென் ஆப்பிரிக்காவிற்கெனப் பெற்ற மிக மெதுவான சதங்களில் இரண்டாவது என்ற ரெகார்ட்!

சரி, இனியாவது வாலாட்டாமல் நம் பந்துவீச்சாளர்கள் ஒட்ட நறுக்கி விடுவார்கள் என்று எதிர்பார்த்தால் அதுவும் நடைபெறவில்லை. ஷான் போலாக், டி ப்ருயின் இருவரும் சேர்ந்து சற்று விரைவாகவே ரன்களைப் பெற்றனர். டி ப்ருயின் ஹர்பஜன் பந்துவீச்சில் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸ் அடித்தார். ஏற்கனவே ஹர்பஜன் பந்தில் இவர் மற்றுமொரு சிக்ஸ் அடித்திருந்தார். தென் ஆப்பிரிக்கா 400ஐத் தாண்டியது. 450ஐ நெருங்கும் வேளையில், டி ப்ருயின் ஹர்பஜன் பந்துவீச்சில் நன்கு தூக்கி வீசப்பட்ட பந்தை ஆஃப் திசையில் டிரைவ் செய்யப்போய், விளிம்பில் பட்டு முதல் ஸ்லிப்பில் இருந்த திராவிடிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். டி ப்ருயின் 83. தன் முதல் இன்னிங்ஸில் சதமடிக்கத் தவறிவிட்டார். தென் ஆப்பிரிக்கா 445/7. புதிதாக உள்ளே வந்தவரும் தன் முதல் டெஸ்டில் விளையாடும் விக்கெட் கீப்பர் தாமி சோலிகிலே. இதன் பின் விக்கெட் ஏதும் விழாமல் ஆட்டம் முடியும்போது 459/7 என்ற நிலையில் இருந்தது.

மூன்றாவது நாள் காலை பனிமூட்டத்தால் ஆட்டம் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை. மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர்தான் ஆட்டமே ஆரம்பித்தது! வெகு சீக்கிரத்திலேயே சோலிகிலே கும்ப்ளேயின் நேரான, வேகமான பந்தில் பின்காலில் சென்று தடுத்தாட முற்பட்டு, ஏமாந்து எல்.பி.டபிள்யூ ஆனார். சோலிகிலே 9, தென் ஆப்பிரிக்கா 467/8. ஆனால் தொடர்ந்து உள்ளே வந்த இடதுகை ஆட்டக்காரர் ராபின் பீட்டர்சன், போலாக்குடன் ஜோடி சேர்ந்து பந்தை விளாச ஆரம்பித்தார். 24 பந்துகளில் 3x4, 1x6 என்ற கணக்கில் கிடுகிடுவென 34 ரன்களைப் பெற்றார் பீட்டர்சன். அணியின் எண்ணிக்கை 500ஐத் தாண்டியது. பின் ஹர்பஜன் லெக் ஸ்டம்பில் வீசிய பந்தைச் சுழற்றி அடிக்க முனைந்து பவுல்ட் ஆனார். போலாக் 44*இல் ஆட்டமிழக்காமல் இருந்தார். எண்டினி விளையாட வரவில்லை. ஸ்மித் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். தென் ஆப்பிரிக்கா 510/9 டிக்ளேர்ட்.

-*-

விரேந்தர் சேவாகும், கவுதம் கம்பீரும் இந்தியாவின் ஆட்டத்தைத் தொடங்கினர். தென் ஆப்பிரிக்காவின் ஆட்டம் போலில்லாமல் இந்தியாவின் ஆட்டம் படு ஜோராகச் சென்றது. சேவாக் மட்டைய சுழற்றி சுழற்றி அடித்தார். அவுட்டாவதைப் பற்றிய துளிக்கவலையும் இன்றி விளையாடினார். பந்துகள் தர்ட்மேன் திசையில் பறந்தன. கம்பீரும் சேவாகிற்கு இணையாக ரன்களைப் பெற்றார்.

போலாக் இரண்டு மட்டையாளர்களையும் சிறிது சிரமப்படுத்தினார். பத்து ஓவர்களில் இந்தியா 25/0 என்றுதான் இருந்தது. ஆனால் அதற்கடுத்து ரன்கள் சரசரவென வர ஆரம்பித்தன. தேநீர் இடைவேளையின் போது 22 ஓவர்களில் இந்தியா 80 ரன்கள் பெற்றிருந்தது. கம்பீர் 39*, சேவாக் 34*. தேநீர் இடைவேளைக்குப் பிறகும் ரன் எடுக்கும் கதி அதிகமாகிக் கொண்டுதான் இருந்தது. இடதுகை சுழற்பந்து வீச்சாளர் பீட்டர்சன் வீசும் பந்துகளை சேவாக் அடிக்க கஷ்டப்பட்டார். இந்தப் பந்துகள் முரளி கார்த்திக் வீசுவது போல வலதுகை ஆட்டக்காரரில் லெக் ஸ்டம்பிற்கு வெளியே குத்தி உள்ளே வந்துகொண்டிருந்தது. இதனால் கால் காப்பையே கேடயமாக வைக்க வேண்டியிருந்தது. ஆனால் இடதுகை மட்டையாளர் கம்பீருக்கு இந்த மாதிரிப் பந்துகளை எதிர்கொள்வதில் சிரமமேயில்லை. இறங்கி வந்து லாங்-ஆன் திசையில் கம்பீர் பீட்டர்சனை சிக்ஸ் அடித்தார். அதன்மூலம் தன் டெஸ்ட் வாழ்க்கையில் முதல் அரை சதத்தையும் பெற்றார். அத்துடன் அணியின் நூறையும் பெற்றுத்தந்தார்.

அடுத்த பீட்டர்சன் ஓவரில் சேவாக் ஸ்டம்பிற்கு முன் வந்த பந்தை கவரில் ஒரு நான்கடித்தார். பின் கம்பீரும் அதெ ஓவரில் மிட்விக்கெட் திசையில் நான்கடித்தார். ஓவரின் கடைசிப்பந்தில் சேவாக் கால் திசைக்கு வெளியே விழுந்த பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து நான்கைப் பெற்று தன் அரை சதத்தையும் தாண்டினார்.

வேகப்பந்து வீச்சாளர்கள் போலாக், எண்டினி, ஹால் ஆகியோர் தொடர்ச்சியாக உதைபட்டனர். 33வது ஓவரில் 150 வந்தது. கம்பீர், சேவாக் இருவரும் அடுத்த சில நிமிடங்களில், சேர்ந்தே 75ஐத் தொட்டனர். இருவரும் 85* இல் இருக்கும் போது, - 4.40 மணியளவில் - மீண்டும் பனிமூட்டம் சூழ, வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் தடைசெய்யப்பட்டது. இந்தியா 42ஏ ஓவர்களில் 185/0 என்ற எண்ணிக்கையைப் பெற்றிருந்தது.

காசு கொடுத்து ஆட்டம் பார்க்க வந்திருந்த சிலர் இன்று சற்றே சந்தோஷத்துடன் வீட்டுக்குப் போயிருப்பார்கள்.

Sunday, November 21, 2004

கான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்

தென் ஆப்பிரிக்கா 230/4 (92 ஓவர்கள்) - ஹால் 78*, டிப்பெனார் 46*

இந்தியா-ஆஸ்திரேலியா அதிரடி ஆட்டங்களைப் பார்த்தபின்னர் தூங்க வைக்கக்கூடிய டெஸ்ட் ஆட்டம் நேற்று கான்பூரில் நடந்தது. இங்கும் கங்குலி டாஸ் தோற்றார். முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார் கிராம் ஸ்மித். மும்பை டெஸ்டுக்குப் பிறகு இந்தியா தன் ஃபார்முலா இனி 3 சுழற்பந்து வீச்சாளர்கள், ஒப்புக்கு ஒரு வேகப்பந்து வீச்சாளர் என்று முடிவு செய்திருந்தது. ஜாகீர் கான் உயிரை விட்டு வீசினாலும் பந்து எழும்பவே இல்லை கான்பூர் ஆடுகளத்தில். மறுமுனையில் கங்குலி பந்துவீசுவதைப் பார்க்கவே கேவலமாக இருந்தது.

தென் ஆப்பிரிக்கா, கிப்ஸ் இல்லாத காரணத்தால் இதுவரை தொடக்க ஆட்டத்தில் பயன்படுத்தாத ஆண்டிரூ ஹாலை தொடக்க ஆட்டக்காரராக அனுப்பியிருந்தனர். ஸ்மித், ஹால் இருவரும் தட்டுத்தடுமாறி ஆடினர். ஆனால் கங்குலியின் மிதவேக 'கழுதை விட்டை' (Donkey drops!) பந்துகள் கிடைத்த சந்தோஷத்தில் அவ்வப்போது நான்கு ரன்களைப் பெற்றுக்கொண்டிருந்தனர். கங்குலி 4-0-21-0 என்று பந்துவீசிய நிலையில் கும்ப்ளேயைப் பந்துவீச அழைத்தார். அதன்பின் ஹர்பஜன்.

ஆனால் முதல் வேளையில் விக்கெட்டே விழாதோ என்ற நிலையில் இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களும் விளையாடிக்கொண்டு இருந்தனர். ஸ்மித் சுழற்பந்து வீச்சை சரியாகவே சமாளித்தார். ஆனால் ஹால் - பழக்கமில்லாத காரணத்தால் - மிகவும் தடுமாறினார். திடீரென, ஆட்டத்தின் போக்குக்கு எதிராக கும்ப்ளே பந்துவீச்சில், ஸ்மித் முன்வந்து தடுத்தாடிய பந்து உருண்டோடி, ஸ்டம்பில் விழுந்தது. தென் ஆப்பிரிக்கா 61/1, ஸ்மித் 37. புதிதாக உள்ளே வந்தவர் மார்ட்டின் வான் யார்ஸ்வெல்ட். இவரும் நல்ல சுழற்பந்தை முன்னே பின்னே சந்தித்து அறியாதவர். கும்ப்ளே வீசிய வேகமான பந்து ஒன்றைப் பின்காலில் சென்று விளையாடப் போய் விட்டுவிட, அது கால்காப்பில் பட்டது. எல்.பி.டபிள்யூ. தென் ஆப்பிரிக்கா 69/2. வான் யார்ஸ்வெல்ட் 2.

ஜாக் கால்லிஸ் அனுபவம் வாய்ந்த விளையாட்டு வீரர். மறுமுனையில் ஹால் நான் அவுட்டாகவே போவதில்லை என்று தடுத்தாடிக் கொண்டிருக்க, கால்லிஸ் நிதானமாக விளையாடினார். உணவு இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்கா 80/2 என்ற கணக்கில் இருந்தது.

கார்த்திக் சரியாகவே பந்துவீசவில்லை. விக்கெட் எடுக்கவேண்டும் என்ற நினைப்பிலே அவர் பந்துவீசியதாகத் தெரியவில்லை. வீசும் கை விக்கெட்டின் மேல்வர, லெக் ஸ்டம்பிற்கு வெளியே பந்துவீசி அதை உள்ளே கொண்டுவந்தால் கால்களாலேயே ஒரு மட்டையாளர் தடுத்துக் கொண்டிருக்கலாம். எல்.பி.டபிள்யூவும் கிடைக்காது. என்னவோ, கார்த்திக் இப்படியான நெகடிவ் லைனில்தான் அதிகமாகப் பந்துவீசிக் கொண்டிருந்தார். ஹர்பஜன் நன்றாகவே வீசினார், ஆனால் விக்கெட் பெறவில்லை.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஹால், கால்லிஸ் இருவரும் மிகவும் மெதுவாக விளையாடினர். கால்லிஸ் விளையாட்டே மெதுவாகத்தான் இருக்கும். ஹால் அவரைவிட ஆமையாக இருந்தார். இரண்டாவது வேளையிலும் இனி விக்கெட்டே விழாதோ என்ற நிலையில் பார்வையாளர்கள் அனைவரும் தூங்கிப்போயிருக்க, திடீரென கும்ப்ளே வீசிய பந்தை ஸ்வீப் செய்யப்போன கால்லிஸ் பந்தை விட்டுவிட, பந்து கால்காப்பில் பட்டது. இதுவும் எல்.பி.டபிள்யூ என்று நடுவரால் முடிவு செய்யப்பட்டது. தென் ஆப்பிரிக்கா 154/3, கால்லிஸ் 108 பந்துகளில் 37. அடுத்து விளையாட வந்தவர் தென் ஆப்பிரிக்காவின் இளைய நம்பிக்கை நட்சத்திரம் ஜாக் ருடால்ப். ஆனால் முதல் பந்திலேயே சரியாகத் தடுத்தாடாததால், ஸ்மித் போலவே பந்து பேட்டில் பட்டதும் உருண்டு ஸ்டம்பில் போய் விழுந்து அவுட்டானார். தென் ஆப்பிரிக்கா 153/4, ருடால்ப் 0. புதிதாக உள்ளே வந்தவர் போத்தா டிப்பெனார்.

இதற்கு சற்று முன்னரேயே ஹால் தனது அரை சதத்தை எட்டியிருந்தார்.

தேநீர் இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்கா 153/4 என்றே இருந்தது.

டிப்பெனார், கால்லிஸ் போன்றே மிகவும் பொறுமையாக ரன் எடுப்பவர். அவசரமே படமாட்டார். டிப்பெனார், ஹால் இருவருமே தேநீர் இடைவேளைக்குப் பிறகு தடுத்தாடுவதே நோக்கமாக விளையாடினர். கும்ப்ளேயும் அவ்வப்போது பந்துகளை லெக் ஸ்டம்பிற்கு வெகு வெளியே வீசினார். இதனால் தினேஷ் கார்த்திக்கின் நிலைமை மோசமானது. (9 பைகள்). முரளி கார்த்திக் (6), ஜாகீர் கானுடன் (5) போட்டி போட்டுக்கொண்டு நோபால் வீசிக்கொண்டிருந்தார். ஒரு ஸ்பின்னருக்கு இந்த அளவுக்கு பந்து வீசுவதில் கட்டுப்பாடு இல்லையென்றால் கஷ்டம்தான். கடைசி வேளையில் ஹால் எடுத்தது 21 ரன்கள்தான். டிப்பெனார் 46 ரன்கள் பெற்றார். ஆக மொத்தம் 274 பந்துகளில் ஹால் 78 ரன்கள் எடுத்துள்ளார். இன்றும் டார்ச்சர் தொடரும் என்று எதிர்பார்க்கிறேன்.

தென் ஆப்பிரிக்காவில் நன்றாக அடித்து ஆடக்கூடியவர்கள் அணித்தலைவர் ஸ்மித், ருடால்ப், அதற்கடுத்து ஷான் பொலாக் தான். இந்தியா தைரியமாக நல்ல ஆடுகளம் (அதாவது நன்றாக வேகப்பந்து வீசலாம், இரண்டு நாள்களில் நல்ல ஸ்பின்னும் எடுக்கும்), இரண்டு ஸ்பின்னர்கள், இரண்டு நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் என்று போயிருந்தால் அருமையாக விளையாடி இந்த ஆட்டத்தை வென்றிருக்கலாம்.

எவ்வளவுதான் போரடித்தாலும் மற்ற நான்கு நாள் ஆட்டங்களையும் விவரித்து எழுதுவேன்.

Wednesday, November 17, 2004

ஏமாறு கண்ணா ஏமாறு!

சரி, எதிர்பார்த்தது நடந்துவிட்டது. கலாநிதி மாறனாகவே இருந்தாலும், அடி சறுக்கத்தானே செய்கிறது? கொஞ்சம் கூட உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தாமல் வெறும் இலவசப்பொருட்களால் மட்டும் வண்டி ஓட்ட முடியாது என்று பலர் சொல்லிவிட்டனர்.

என் வீட்டின் கீழே உள்ள கடையில் சென்ற வாரம் வரை குங்குமம் கண்ணிலேயே பட்டதில்லை. ஆனால் இந்த வாரமோ எங்கு போனாலும் குங்குமம் இதழ்கள் சீந்துவாரற்றுக் கிடந்ததைப் பார்த்தேன். இந்த வாரம் BPL MOTS ப்ரீபெய்ட் சிம் கார்டு, ரூ.99 க்கானது இலவசம் என்று போட்டிருந்தது ("பேசு கண்ணா பேசு"). இதற்கு முந்தைய வாரம் வரை சோப்பு, ஷாம்பூ, மஞ்சள் பொடி, மிளகாய்ப்பொடி என்று ஏதோ ஒன்று கையில் உடனடியாகக் கொடுத்தார்கள். இந்தமுறை குங்குமம் வாங்கினால் கையில் ஒரு கூப்பன் கிடைக்குமாம். அதை எடுத்துக்கொண்டு BPL நிறுவனம் சென்று கொடுத்தால், அவர்கள் சிம் கார்டு கொடுப்பார்களாம்.

கூப்பனை எடுத்துக்கொண்டு BPL மொபைல் நிறுவனத்தின் வாயிலில் கூட்டம் கூட்டமாக நின்றவர்களுக்கு அதிர்ச்சி. ரூ. 150க்கு ப்ரீபெய்ட் கார்டு வாங்கினால்தான், இந்த ரீசார்ஜ் கூப்பன் உபயோகமாகுமாம். இதனால் பலர், பல ஊர்களில் தர்ணா செய்துள்ளனர். "தவறான விளம்பரத்தைக் காண்பித்து ஏமாற்றி விட்டனர். ரூ. 7 (குங்குமத்தின் விலை) வீணாகி விட்டது" என்று பலர் ஜெயா டிவியில் புலம்பினர். உண்மையைச் சொல்லாமல், ரூ. 99 மதிப்புள்ள சிம் கார்டு இலவசம் என்று சொல்லி "ஏமாறு கண்ணா ஏமாறு" என்றாக்கி விட்டார்கள் என்று ஒருவர் புலம்பினார்.

வேறு சிலரோ, ரூ. 99 என்று இருந்தாலும், அதன் 'பேசக்கூடிய' மதிப்பு வெறும் ரூ. 10தான் என்றும், அப்படியே இருந்தால் கூட ரூ. 7 கொடுத்து குங்குமம் வாங்கியதால், ரூ. 3ஆவது லாபம் கிடைக்கும் என்று இங்கு வந்து வரிசையில் நின்றேன். (என்ன கேவலம் பாருங்கள்! ரூ. 3க்காக நேரத்தை இப்படியா வீணடிப்பது?) ஆனால் இப்பொழுது அதுகூடக் கிடைக்காது போலிருக்கிறது என்றார்.

சிலர் பச்சையாக, குங்குமம் கொடுக்கும் இலவசப் பொருட்களுக்காக மட்டும்தான் அதை வாங்குகிறோம், படிக்க அல்ல. இம்முறை மொத்தமாக ஏமாற்றிவிட்டனர் என்று குமுறினர். ஏமாற்றப்பட்ட நாங்கள் புகார் கொடுக்கப்போகிறோம், இதுபோல் பொய் விளம்பரங்கள் வரக்கூடாது என்றனர் பலர்.

நுகர்வோர் நீதிமன்றங்களில் இது பற்றி ஏதேனும் வழக்கை எடுத்துச் செல்லமுடியுமா?

கலாநிதி மாறன் போன்ற மதிக்கத்தக்க தொழில்முனைவர் இதுபோல மோசடி விளம்பர வார்த்தைகளைப் பயன்படுத்தித்தான் தன் இதழை விற்கவேண்டுமா? இல்லை அவரே BPL மொபைல் நிறுவனத்திடம் ஏமாந்துபோனாரா?

Tuesday, November 16, 2004

புஷ்ஷின் புதிய கேபினெட்டும், அடுத்த போர்களும்

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் (US Secretary of State) காலின் பவல் பதவி விலகியுள்ளார். அவருக்கு பதில் கண்டோலீசா ரைஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கேபினெட்டில் நிதி, உள்துறை, இராணுவம், வெளியுறவு, வர்த்தகம், மற்றும் பல்வேறு தொழில்துறைகளுக்கும் போட்டா போட்டி நிலவும். ஆனால் அமெரிக்க கேபினெட்டைப் பொருத்தவரை மிக முக்கியமான துறை வெளியுறவு மட்டும்தான். மற்றதெல்லாம் - இராணுவம், நீதி, உள்துறை கூட - அதற்குப் பின்னால்தான். நிதி பற்றி யாரும் அவ்வளவாகக் கவலைப்படுவதேயில்லை. (வேண்டுமென்றால் பவல், இராணுவ அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட், நீதித்துறையின் ஜான் ஆஷ்கிராஃப்ட், உள்துறை டாம் ரிட்ஜ் ஆகியோர் பெயர்கள் தவிர வேறெந்த கேபினெட் அமைச்சர் பெயரையாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்பதைச் சொல்லவும்.)

வெறியரான டொனால்ட் ரம்ஸ்பெல்ட் இன்னமும் உள்ளே இருக்கும்போது, ஈராக் போர் கூடாது என்று கொஞ்சமாவது வாதாடிய காலின் பவல் வெளியே போவது புஷ்ஷின் இரண்டாம் ஆட்டம் எப்படி இருக்கப்போகிறது என்பதைத் தெள்ளத் தெளிவாக்கியுள்ளது. கண்டோலீசா ரைஸ், ரம்ஸ்பெல்ட் (அடிப்பொடி உல்போவிட்ஸ்), டிக் செனி அனைவரும் ஒன்றுசேர்ந்து அடுத்து யாரோடு சண்டை போடப்போகலாம் என்று ஒவ்வொரு கேபினெட் மீட்டிங்கிலும் பேசலாம்.

இன்னமும் Project for the New American Century கோஷ்டியிலிருந்து யாரை என்ன பதவிக்குப் போடலாம் என்று புஷ் யோசிக்கிறாரோ என்னவோ?

ஹிட்லர், தன் புத்தகம் Mein Kampf இல் நன்கு எழுதிவைத்ததை மட்டும்தான் செயல்படுத்தினார். யாருமே அவர் முன்னெச்சரிக்கை இல்லாமல் எதையாவது செய்தார் என்று குற்றம் சாட்ட முடியாது. அதைப்போலவே புது அமெரிக்க நூற்றாண்டைக் கொண்டுவர முனைபவர்களும் தங்களது இணையத்தளத்தில் அறிவித்துவிட்டேதான் செய்கிறார்கள். யாரும் அவர்களைக் குறை சொல்லவே முடியாது. உதாரணத்திற்கு ஈராக்கில் அமெரிக்கா என்ன செய்யவேண்டும் என்பதை பால் உல்போவிட்ஸ் விளக்கிச் சொல்லியிருப்பதை இங்கே காணலாம். (தேதி: 18 செப்டெம்பர் 1998) பின், தான் இராணுவ உதவியமைச்சரானதும் இந்தத் திட்டங்களை இன்னமும் விரிவாக்கிப் படையெடுக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்துவிட்டது.

சரி, ஈராக் எந்த அளவுக்கு முக்கியம்? எதனால்? இதைப்பற்றி PNAவின் வில்லியம் கிறிஸ்டல் 22 மே 2002 அன்றே நன்றாக எழுதிவிட்டார்.

"9/11க்குப் பிறகு சவுதி அரேபியாவை இனியும் நம்ப முடியாது. ஆனால் சவுதியில் உடனடியாக 'ஆட்சி மாற்றங்களை' ஏற்படுத்த முடியாது. ஈராக் எண்ணெய்வளங்களை உலகச் சந்தைக்குக் (அதாவது அமெரிக்காவுக்கு) கொண்டுவந்து விட்டால் சவுதி அரேபியா அவ்வளவு முக்கியமில்லாமல் போய்விடும். மேலும் ஈராக்கில் 'மக்களாட்சி'யைக் கொண்டுவந்துவிட்டால் - அரபு நாடுகளில் மக்களாட்சி வேலை செய்யும் என்பதை நிரூபித்துவிட்டால் - சவுதியிலும் அதை வைத்தே ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவரலாம்."

இந்த நான்கு வருடங்களுக்குள்ளேயே இதைச் செய்ய முயல்வார்களா, இல்லை அடுத்து ஜெப் புஷ்/டிக் செனி ஆட்சியில் செய்வார்களா என்று பார்க்கலாம்.

எனக்கென்னவோ, அடுத்த குறி சவுதிதான்; சிரியா, ஈரான், வடகொரியா ஆகியவை மீது ஒன்றும் நடக்கப்போவதில்லை என்று தோன்றுகிறது.

Sunday, November 14, 2004

யாசர் அராபத், புஷ், பிளேர், ஷாரோன்

யாசர் அராபத் பற்றி பாஸ்டன் பாலாஜி தமிழோவியத்தில் எழுதிய கட்டுரை இங்கே. அந்தக் கட்டுரை பொதுவாக பிரச்னையில் மூலகாரணம் அராபத்தும், பாலஸ்தீனியர்களுமே என்று எழுதப்பட்டிருந்ததால் என் மறுப்பைப் பின்னூட்டமாகத் தெரிவித்தேன். அதையொட்டி பாலாஜி சில கேள்விகளைக் கேட்டிருந்தார்.

சர்வதேச பிரச்னைகளில் இப்பொழுதைக்கு மிகவும் குழப்பமானது பாலஸ்தீன், இஸ்ரேல் பிரச்னை. இந்த பிரச்னை குறித்து பல்வேறு கருத்துகள் பல்வேறு நாட்டவரிடையே இருப்பது இயல்பு. அமைதி வழியில் இந்திய சுதந்திரப் போராட்டத்தை நடத்திச் சென்ற மோகனதாஸ் காந்தி மேலே கூட எக்கச்சக்கமான கேள்விகள் வைப்பது வழக்கம். அவர் ஒரு சர்வாதிகாரி என்பது அதில் ஒன்று. (காந்தி தன் கொள்கைகளை தன் சீடர்கள் மீது திணித்தார். ஆனால் கொள்கை ரீதியாக அவர்களை ஜெயித்துத்தான் திணித்தார்.) யாசர் அராபத்தும் சர்வாதிகாரியாகத்தான் நடந்துகொண்டிருக்கிறார். ஈழப்போராட்டத்தில் பிரபாகரனும் சர்வாதிகாரியாகத்தான் நடந்துகொண்டிருக்கிறார்.

இது எல்லா விடுதலைப்போராட்டங்களிலும் நடப்பதுதான். விடுதலை பெற, மக்கள் ஒன்று திரண்டு ஒருவர் கீழ் போராட வேண்டும். போராடும் குழுக்கள் பலவாகத் துண்டுபட்டால் ஆக்கிரமிப்பாளர்கள் ஒருவரை மற்றொருவருக்கு எதிராகத் தூண்டி விட்டு குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பார்கள். ஆனால் எந்த வழியில் தன் அணியை வலுப்படுத்துவது என்பது முக்கியம். காந்தி வன்முறையற்ற வழியில், தன் charisma மூலம் தன் வழிக்கு அனைவரையும் (பெரும்பான்மையினரைக்) கொண்டுவந்தார். அப்படியும் கூட சுபாஷ் சந்திர போஸ் போன்றவர்கள் பிரிந்து சென்றனர். கம்யூனிஸ்டுகள், இந்துத்துவ வாதிகள் ஆகியோர் தனித்தனியாக காந்தியை எதிர்த்தனர். பின் முஸ்லிம் லீக் அவருக்கு எதிராகச் சென்றது. அப்படியும் காந்தியின் பின்னால் கூட்டம் அதிகமாக இருந்ததால் பிரிட்டிஷ் அரசு காந்தியையே இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தலைவராகக் கருதியது.

பிரபாகரன் வேறொரு வழியைப் பயன்படுத்தி தன் மக்கள் அனைவரும் தன்னைத் தவிர வேறு யாரையும் பின்பற்ற முடியாது செய்தார்.

அராபத் காந்தி அல்ல. வன்முறையை அவர் அடியோடு விட்டொழிக்கவில்லை. ஆனால் ஹமாஸ் போல முழுதும் வன்முறையைப் பின்பற்றவுமில்லை. இஸ்ரேலுடன் நிறைய சண்டை போட்டிருக்கிறார். சாகும் வரை இராணுவ உடையிலேயே இருந்தார். சர்வாதிகாரியாகத்தான், தனக்கு எந்தவிதப்போட்டியுமில்லாமல்தான் Palestine Liberation Organization-யும், பின் Palestinian Authority எனப்படும் இஸ்ரேல் கீழான பாலஸ்தீனியப் பிராந்தியத்தின் அதிபராகவும் நடந்துகொண்டார். ஆனால் கொடுங்கோலன்? ஆட்சி முழுதும் கையில் இருந்தால்தானே கொடுங்கோலனாக முடியும்? தன் மக்கள் இன்னமும் விடுதலை அடையாத நிலையில் யாரை அவர் கொடுங்கோலாட்சி செய்து துன்புறுத்தினார்? கடைசிவரை இஸ்ரேலின் குண்டுகள் தன்னைச் சுற்றியும் வெடிக்க, உடைந்து நொறுங்கிய கட்டடத்தில் ரமாலாவில் வாழ்ந்து வந்தார். மாட மாளிகையிலா வாசம் செய்தார்?

அவர்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. பணத்தை உருவி தான் கடைசிநாளில் மணம் செய்துகொண்டவருக்குக் கொடுத்துவிட்டார் என்று. இதில் உண்மை இருக்கலாம். பொதுவாழ்வில் இருக்கும் பலருக்கும் தனி வாழ்வில் சில சபலங்கள் உண்டு. ஆனால் அதே சமயம் அமெரிக்க, இஸ்ரேலி மீடியாக்கள் யாரைக் குறை சொல்ல வேண்டுமோ அவர் மீது பொய்ச்செய்திகளைப் பரப்புவதில் வல்லவர்கள் என்பதை இஸ்ரேலிய யூதப் பேராசிரியர் ஒருவரே சொல்கிறார்:

"But in Israel the public denigration of Arab culture was historically acceptable, since, like all colonial movements, Zionism had to dehumanise the indigenous inhabitants of its country of settlement in order to legitimise their displacement. Thus, as many studies have shown, depictions of the Arabs as conniving, dishonest, lazy, treacherous and murderous were commonplace in Israeli school textbooks, as in much of Israeli literature in general."

"அராபத் திருடன், எனவே அவனை நம்பாதே". சரி. அடுத்து பாலஸ்தீனியர்கள் யாரை நம்புவது? புஷ், பிளேர், ஷாரோன் யாரைச் சொல்கிறார்களோ அவரைத்தான் நம்ப வேண்டும். சரி. நம்பினால் நாடு கிடைக்குமா? பார்க்கலாம்.

நான் பாலஸ்தீனத்தை இஸ்ரேல் சட்டவிரோதமாகப் பிடித்து வைத்துள்ளது என்று எழுதியிருந்தேன். அதற்கு பாலாஜி "இது குறித்து விபரமாக எழுதினால் (அல்லது இணையத் தொகுப்பு கிடைத்தால்) கொடுக்க வேண்டும், பத்ரி. இஸ்ரேலை ஏன் அண்டை நாடுகள் படையெடுத்தது; தற்காப்புக்காக பாலஸ்தீனம் இஸ்ரேல் வசம் இருக்கிறதா; தற்போது ஷரோன் ஆரம்பித்திருக்கும் 'withdrawal' (a word he avoids) ஆகியவற்றின் பின்னணியில் விளக்கினால் எனக்கு(ம்) ரொம்பப் பயனுள்ளதாக இருக்கும்."

விவரமாக எழுத இந்த இடம் பத்தாது. எனக்குத் தெரிந்ததை வைத்து சில விஷயங்கள் சொல்கிறேன்.

1. பாலஸ்தீனியர்களை அக்கம்பக்கத்தில் உள்ள அரபு நாடுகளோடு இணைத்துப் பார்க்கக்கூடாது. 1940களில் பாலஸ்தீனியர்களுக்கு என்று சரியான தலைமை கிடையாது. 1947இல் பிரிட்டன், ஐ.நா சபையில் இஸ்ரேல், பாலஸ்தீனம் என்று இரண்டு பாகங்களாகப் பிரித்து விடுவதாகச் சொன்னது. இந்தத் திட்டத்துக்கு அமெரிக்காவும் ஆதரவு கொடுத்தது. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைபோதாவது இந்தப்பக்கம் நேரு, அந்தப்பக்கம் ஜின்னா என்று யார் கையிலாவது நிர்வாகத்தைக் கொடுக்க முடிந்தது. இரண்டு பக்கமும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இருந்து உதவி செய்தனர். இஸ்ரேலுக்கு டேவிட் பென்-குரியன் தலைவராக இருந்தார். பாலஸ்தீனத்துக்கென்று ஒரு தலைவரும் இல்லை. பிரிட்டிஷ்காரர்கள் 1948இல் இடத்தைக் காலி செய்ததும் இஸ்ரேல் தன் சுதந்திரத்தை அறிவித்தது. அப்பொழுது ஜோர்டான், சிரியா, ஈராக், எகிப்து, லெபனான் ஆகிய நாடுகளும், பாலஸ்தீனியர்களும் ஒட்டுமொத்தமாக இஸ்ரேல் மீது படையெடுத்தனர். இதைப் போன்ற முட்டாள்தனமான செயல் ஏதும் இருந்திருக்க முடியாது. ஆனால் இதற்கான முழு தண்டனையைப் பெற்றதோ பாலஸ்தீனியர்கள்.

இந்த சண்டையின்போது பிரிட்டன் ஜோர்டானை பாலஸ்தீனியர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலங்களையும் கையகப்படுத்தத் தூண்டியது. ஜோர்டானும் அதை சரியாகச் செய்தது. சண்டை முடிந்தபோது ஈராக் தன் கையில் இருந்த பாலஸ்தீனிய இடங்களையும் ஜோர்டான் கையில் கொடுத்து விட்டது. சிரியா, எகிப்து, ஜோர்டான், லெபனான் ஆகியவை சண்டையை முடித்துக்கொண்டு இஸ்ரேலுடன் சமாதானம் செய்து கொண்டன. இஸ்ரேல் தான் கைப்பற்றிய பாலஸ்தீனியப் பகுதிகளை தன் கையில் பத்திரமாக வைத்துக் கொண்டது. ஆக நடுவில் மாட்டிக்கொண்டது பாலஸ்தீனியர்கள்தான். அவர்களது நிலம் பாதி இஸ்ரேலிடமும், மீதி ஜோர்டானிடமும் மாட்டிக்கொண்டது.

சரி, சுற்றியுள்ள அரபு நாடுகள் பாலஸ்தீனியர்களுக்கு என்ன உதவி செய்தன? ஒன்றும் இல்லை. சிரியா பாலஸ்தீனியர்களை அகதிகளாகவே வைத்துக் கொண்டது. எகிப்திலும் அகதி முகாம்கள் மட்டும்தான்.

1967இல் மீண்டும் ஜோர்டான், சிரியா, எகிப்து ஆகியவை இஸ்ரேலிடம் வம்புக்குச் சென்றன. முதலில் இஸ்ரேல் எகிப்து, சிரியா மீது படையெடுத்து அவர்களது இடங்களைக் கைப்பற்றியது. காஸா எகிப்திடமிருந்து கைப்பற்றப்பட்டது. சிரியாவிடமிருந்து சினாய். ஜோர்டான் இஸ்ரேல் மீது படையெடுத்து, வெஸ்ட் பேங்க் பகுதியையும், ஜெருசலேம் நகரின் பகுதிகளையும் இழந்தது. ஆக இப்படித்தான் ஜோர்டான், எகிப்து கையில் இருந்த சில பாலஸ்தீனியப் பகுதிகள் இஸ்ரேல் கைக்கு வந்தது.

1970இல் ஜோர்டானில் பாலஸ்தீனியப் போராளிகள் சில குழப்பங்கள் விளைவிக்க (சில விமானங்களைக் கைப்பற்றினர்), ஜோர்டான் அரசர், பாகிஸ்தானின் ஜியா-உல்-ஹக் (அப்பொழுது வெறும் இராணுவத் தளபதிதான்) தலைமையில் பாலஸ்தீனியர்களை உதைத்துத் துரத்தி அராபத்தை நாடுகடத்தினர் (கறுப்பு செப்டெம்பர்).

ஆக பாலஸ்தீனியர்களின் பெரும் சாபக்கேடு சுற்றியுள்ள ஒன்றுக்கும் உதவாத அரபு நாடுகளான ஜோர்டான், எகிப்து, சிரியா, ஈராக். ஜோர்டானிலிருந்து ஓடிவந்த பாலஸ்தீனியர்கள் லெபனான் சென்றனர். அங்கிருந்து இஸ்ரேலுக்கு பிரச்னை கொடுக்கத் தொடங்கியதும் இஸ்ரேல் லெபனானை ஒட்டுமொத்தமாக சீரழித்தது!

இன்றெல்லாம், பாலஸ்தீன பிரச்னை என்றால் அது வெஸ்ட் பேங்க், காஸா என்றுதான் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் ஜோர்டான் கையிலும் பாலஸ்தீன இடங்கள் உள்ளன. பாலஸ்தீன அகதிகள் லெபனான், சிரியா, எகிப்து ஆகிய நாடுகளில் உள்ளனர்.

அராபத் என்று ஒருவர் வரும் வரையில் பாலஸ்தீனியர்களுக்கு சரியான தலைமை இல்லை. பாலஸ்தீனியர்கள் நலனுக்காக சுற்றியுள்ள அரபு நாடுகள் உருப்படியாக ஒன்றுமே செய்ததில்லை. அரபி நாடுகள் யூத எதிர்ப்பாளர்களாகவும், அதே சமயம் தேவைப்படும்போது இஸ்ரேலுடன் உறவு வைத்துக்கொண்டும், அரசியல் காரணங்களுக்காக பாலஸ்தீன் பிரச்னைக்கு விடிவுகாண வேண்டும் என்று அவ்வப்போது மேடையிலிருந்து பேசியும் தங்கள் மனசாட்சியை சுத்தமாக வைத்துக்கொண்டிருக்கின்றன. 1948, 1967இல் இந்த சுற்றி உள்ள அரபி நாடுகள் இஸ்ரேலுடன் சண்டைக்குப் போயிருக்காவிட்டால் பாலஸ்தீனியர்கள் இன்று அமைதியான முறையில் தம் நாட்டில் இருந்திருக்கலாம்.

யாசர் அராபத் பல தவறுகளைச் செய்துள்ளார். அதில் முக்கியமானது வளைகுடாப் போரின்போது சதாம் ஹுசேனுக்கு முழு ஆதரவைக் கொடுத்தது. வாயைப் பொத்திக்கொண்டு பேசாமல் இருந்திருக்கலாம்.

2. Palestine Liberation Army என்பது அராபத் தலைமையில் இயங்கிய Palestine Liberation Organizationஇன் படை. சண்டை போட்டு, பல இஸ்ரேலிகளைக் கொன்றுள்ளனர். ஆனால் ஹமாஸ் என்பது அராபத் தீவிரமாக யூதர்களைக் கொல்வதில்லை என்பதனால் தனியாகச் செயல்படும் தீவிரவாத அமைப்பு. அமைதியில் அவர்களுக்கு விருப்பம் எதுவும் இருப்பதாகத் தெரிவதில்லை. இஸ்ரேலை ஒழிப்பதுதான் அவர்களது நிலை. ஹமாஸை அராபத்தின் கைக்கூலிகள் என்று சொல்வது நியாயமாகாது என்பது என் கருத்து. பலமுறை அராபத் - யிட்சாக் ரேபின் இருவருக்குமிடையே நடந்த அமைதி ஒப்பந்தத்தை அழிக்கும் முகமாக பல செயல்களை ஹமாஸ் செய்துள்ளது.

3. இஸ்ரேல் தற்காப்புக்காக பாலஸ்தீனை தன் கையில் வைத்திருக்கிறது என்று சொல்வது பெரிய ஜோக். அமெரிக்கா கூட தன் தற்காப்புக்காகத்தான் ஈராக்கை தன் கையில் வைத்துள்ளது போலும். இந்தியா தன் தற்காப்புக்காக அடுத்து இலங்கை, நேபாள், பங்களாதேஷ், பாகிஸ்தான் ... ம்ஹூம், அந்த அளவுக்கு இந்தியாவிடம் இராணுவ பலம் இல்லை. தற்காப்புக்குச் சிறந்த வழி பாலஸ்தீனிய இடங்களிலிருந்து விலகுவது, தன் எல்லைக்குள் கண்காணிப்புகளைத் தீவிரமாக வைத்திருப்பது. ஆனால் இஸ்ரேல் வலதுசாரி யூத அமைப்புகள் அபகரிக்கப்பட்ட பாலஸ்தீனிய இடங்களில் யூதக் குடியிருப்புகளைக் கட்ட முயற்சிக்கின்றன. காஸா பட்டையிலும் இதுதான் நடக்கிறது. வெஸ்ட் பேங்க் பகுதியிலும் பாலஸ்தீனியர்களைத் துரத்தி விட்டு யூதக் குடியிருப்புகளைக் கட்டவே பல யூத அமைப்புகள் விரும்புகின்றன. இப்பொழுது காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் பின்வாங்குவதை பல யூத அமைப்புகள் எதிர்க்கின்றன. யிட்சாக் ரேபின், அராபத்திடம் அமைதி ஒப்பந்தம் செய்த காரணத்துக்காகவே யிகால் அமீர் என்னும் யூத வெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாளை ஷாரோன் முழுதுமாக பாலஸ்தீனியப் பகுதிகளிலிருந்து பின்வாங்கினால் அவருக்கும் கண்டம்தான். யாரிடமிருந்து வரும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

4. புஷ், பிளேர் அராபத் செத்தபின் பாயசம் வைத்துச் சாப்பிட்டது. இதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? இருவரும் இஸ்ரேல் நண்பர்கள். ஆனால் அதே சமயம் பாலஸ்தீன் ரோட்மேப் என்று 9/11க்குப் பின் அதிகமாகவே பேசுகிறார்கள். ஆனால் இந்த 'ரோட்மேப்'பில் இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பாலஸ்தீனியப் பகுதிகளிலிருந்து பின்வாங்கும் என்று தெரிகிறது. அராபத் இதனை எதிர்த்தார். 1947 ஐ.நா போட்ட கோடுதான் வேண்டும் என்றார். ஆனால் இஸ்ரேல் அந்த நிலையிலிருந்து மாறிவிட்டது. 1948இல் சண்டை நடந்த காரணத்தால் 1947 ஐ.நா திட்டம் கிடப்பில் போடப்படவேண்டியது என்பது இஸ்ரேல் கருத்து. மேலும், 1948இல் பாலஸ்தீனிய இடங்கள் பலவும் ஜோர்டான் கையில். எனவே எப்படியானாலும் பாலஸ்தீனியர்களுக்கு 1947 ஐ.நா திட்டத்தை விடக் குறைந்த இடங்களே கிடைக்கப்போகின்றன. அதிலும் அடிப்படைவாத யூத அமைப்புகள் என்ன குழப்பம் செய்யுமோ.

ஆனாலும் பாலஸ்தீனத்தில் ஏதோவொரு விதத்தில் அமைதி ஒப்பந்தம் ஒன்று கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்காவுக்கு (அதனால் அதன் அடிவருடி பிரிட்டனுக்கும்) எப்பொழுதுமே சில தீவிரவாத அமைப்புகளால் ஆபத்து என்பது புஷ், பிளேர் இருவருக்கும் தெரியும். ஆனால் அராபத் முழுவதுமாக விரும்பும் ஒரு தீர்வை இஸ்ரேல் இனி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அமெரிக்காவின் பல முக்கிய யூத அமைப்புகளும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இஸ்ரேல் என்பது ஒரு தலைவர் சார்ந்ததில்லை. ஆனால் பாலஸ்தீனியர்கள் அப்படியில்லை. அராபத்தை ஒதுக்கிவிட்டால் அடுத்த தலைமுறைத் தலைவர் ஒருவரை சாம, தான, பேத, தண்டம் என்று ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி சுமாரான ஒரு திட்டத்தில் கையெழுத்து வாங்கி நோபல் பரிசும் வாங்கிவிடலாம். அதனால்தான் அராபத் போன உடனேயே "இனி பாலஸ்தீனத்துக்கு விடிவு வந்துவிடும்" என்று புஷ், பிளேர் இருவரும் சந்தோஷப்பட்டிருக்கிறார்கள்.

பார்க்கலாம்.

Saturday, November 13, 2004

தமிழோவியம் கிரிக்கெட்

இந்த வாரம் தமிழோவியத்தில் கிரிக்கெட் ஆட்டத்தில் வரும் பல்வேறு அடிகள் (shots) பற்றி.

'சிலிகான் வேலி' இந்தியப் பெருந்தலைகள்

Silicon Valley Greats, Indians who made a difference to technology and the world, S.S.Kshatriy, 2003, Vikas Publishing, Rs. 180 [Fabmall]

மேற்கண்ட புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் புத்தகத்தில் கே.பி.சந்திரசேகர், பி.வி.ஜகதீஷ், கன்வல் ரேக்கி, நரேன் பக்ஷி, பிரதீப் கார், ராஜ் சிங், சபீர் பாட்டியா, உமங் குப்தா, என்.ஆர்.நாராயண மூர்த்தி ஆகிய ஒன்பது பேர்களின் சிறு வாழ்க்கைக்கதை வெளியாகியுள்ளது. இதில் பிரதீப் கார், நாராயண மூர்த்தி ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருக்கவே கூடாது. இவ்விருவரும் சிலிகான் வேலியில் ஒன்றையும் சாதிக்கவில்லை. கார் சில நாள்கள் அங்கு வேலை செய்துள்ளார், ஆனால் அதுவும் சாதாரண வேலைதான். நாராயண மூர்த்தியின் பெயர் ஏன் இந்தப் பட்டியலில் உள்ளது என்று தெரியவில்லை. புத்தகம் விற்பனைக்காக சந்திரபாபு நாயுடு (அப்ப அவர் ஓஹோன்னு இருந்த காலம்) இடமிருந்து வாங்கி ஓர் உப்புச் சப்பில்லாத முன்னுரை போட்டிருக்கிறார்கள்.

இது தவிர்த்து, புத்தகம் சுவாரசியமாகக் கதை சொல்கிறது. என்னை மிகவும் கவர்ந்தவர் ராஜ் சிங். இவரது வாழ்க்கை, இவர் சாதித்தது எல்லாம் ஒரு பெருங்கனவு போல் உள்ளது. ஆனாலும் 'போஸ்டர் பசங்கள்' சபீர் பாட்டியா, கே.பி.சி போல ராஜ் சிங்கின் பெயரை நீங்கள் அவ்வளவாக மீடியாக்களில் பார்த்திருக்க முடியாது. ஆனால் மனிதர் கலக்கியிருக்கிறார். மேலே உள்ளவர்களையும் தவிர பல இந்தியர்கள் சிலிகான் வேலியில் இருந்துகொண்டு அதிகம் வெளியே தெரியாமல் தகவல் தொழில்நுட்ப உலகையே மாற்றி அமைத்துள்ளனர்.

அப்படிப்பட்டவர்களின் பெயர்கள் உங்களுக்குத் தெரிந்தால் எனக்கு மின்னஞ்சலிலோ, அல்லது இந்தப் பதிவின் பின்னூட்டத்திலோ தெரிவிக்கவும். அவர்களது தொழில்நுட்ப வாழ்க்கையைத் தோண்டித் துருவி அவர்கள் என்ன சாதித்தனர் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அத்துடன் நான் அறிந்து கொண்டதை என் பதிவில் எழுதிப்போடுகிறேன்.

வரும் நாள்களில் மேற்கண்ட புத்தகத்தில் சொல்லப்பட்டவர்களின் வாழ்க்கைகளை, சற்று தொழில்நுட்பம் கலந்து, அவர்கள் என்ன சாதித்தனர் என்பதையும் சேர்த்து எழுதுகிறேன். முதலில் ராஜ் சிங்தான் வருவார்.

Friday, November 12, 2004

ஜயேந்திரரும், வீரப்பனும்

ஜயேந்திரர் அக்டோபர் 30 அன்று: என்னை வீரப்பன் கடத்திக்கொண்டு போய், தமிழக, கர்நாடக அரசுகளிடமிருந்து பணம் பறிக்க முயற்சி செய்தான் என்று வெளியான தகவல்கள் பற்றி எனக்குத் தெரியும்...

வீரப்பன் (இன்று): சாமியோவ், நானெல்லாம் யாரையாவது கொலை செய்யணும்னா நேரா துப்பாக்கி எடுத்து டுபுக்குன்னு சுட்டுருவேனுங்க. ஒங்கள மாதிரி மெட்ராஸ்லேர்ந்து கூலிக்கு ஆளுகள கொணாந்து செய்ய மாட்டேனுங்க! ஒங்களக் கடத்திக் கொணாந்தேன்னா, நீங்கள்ள சாமி என்ன ஆள வச்சுப் போட்டுத் தள்ளிருப்பீங்க!

இன்றைய செய்தி: காஞ்சிபுரம் சங்கர ராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜயேந்திரர் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜெயேந்திரரின் cultural dictatorship பற்றிய என் முந்தைய பதிவுகள்: ஒன்று | இரண்டு

Thursday, November 11, 2004

கோடம்பாக்கம் அம்மாவுக்குக் கொடுத்த பரிசு

நேற்று மாலை ஜெயா டிவியில் திரையுலகப் பிரமுகர்கள் முதல் கொசுறுகள் வரை ஒன்றுசேர்ந்து முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி எடுத்த கலைவிழாவின் துகள்கள் ஒளிபரப்பாகின.

'அம்மா' என்று அழைக்கப்படும் ஜெயலலிதா ஒரே கையெழுத்தால் திரையுலகத்தின் தலையெழுத்தையே மாற்றிவிட்டதாகப் புகழ்ந்தனர் பலர். பாட்டெழுதும் பாவலர்கள் 'வீரப்பனைக் கொன்றவள் நீயே', 'தங்கத் தாரகையே' என்றெல்லாம் எழுத, இதுபோன்ற பாடல்களுக்கு இசையமைத்து நாலைந்து பேர் மேடையில் வந்து இடுப்பைக் குலுக்கினர். முதல் வரிசையில் தனி நாற்காலி போடப்பட்டு அதில் 'அம்மா' மட்டும் அமர்ந்து தன்னைப் பற்றிப் புகழ் வரும்போதெல்லாம் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். (இப்பல்லாம் திரையரங்குகள்ள 'ஜே ஜே'ன்னு கூட்டம் வருது)

பார்வையாளர்கள் வரிசையில் விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மூவரும் அருகருகே அமர்ந்திருந்தனர். மேடையில் இயக்குனர்கள் வசந்த், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் மாறி மாறிப் புகழ் பாடினர். விவேக் தன் வழிசலைத் தொடர்ந்தார். ஓரளவுக்கு மேல் பார்க்க முடியாமல் உடனடியாக பிபிசி, அனிமல் பிளானெட் என்று சானலை மாற்றவேண்டியதாயிற்று.

பழங்காலத்தில் அரசர்கள் ஆட்சி நடக்கும்போது பக்கத்தில் உள்ள சின்னக் குன்றை அரசன் வென்று வந்தபின், பிச்சைக்காரப் புலவர்கள் நமக்கும் நாலு கிலோ அரிசி கிடைக்கும் என்பதால் 'இமயத்தை வென்றவன் நீயே', 'இரும்பைத் தங்கமாக்கியவன் நீயே' என்றெல்லாம் பாடி புறநானூறு படைத்தது ஞாபகத்தில் வருகிறது.

Wednesday, November 10, 2004

ரஞ்சிக் கோப்பை ஆட்டம் பாழ்

இன்று, சென்னையில் நடந்து கொண்டிருக்கும் தமிழ்நாடு - ஹைதராபாத் ரஞ்சிக் கோப்பை ஆட்டம் நான்காவது/இறுதி நாள். இப்பொழுது சென்னையில் மழை காரணமாக இன்று ஆட்டம் நடப்பது மிகவும் கடினம். தமிழகத்துக்குக் கிடைக்க இருந்த ஒரு வெற்றி பறிபோகப் போகிறது. சென்னை மழையால் அன்று இந்திய வெற்றி காலி, இன்று தமிழக வெற்றியும்.

மும்பை அணி விளையாடும் ஆட்டமும் டிராவில்தான் முடியும் என்று தோன்றுகிறது.

ஒவ்வொரு சுற்று ஆட்டம் முடிந்ததும், ரஞ்சிக் கோப்பை பற்றி என் பதிவில் விவரமாக எழுதுகிறேன்.

Sunday, November 07, 2004

மந்திரவாதி ஆனந்த்

நேற்று மாலை குடும்பத்துடன் 'ஜாதூகர் ஆனந்த்' நடத்திய மாயவித்தைகளைக் காணச் சென்றிருந்தேன். முக்கிய நோக்கம், என் ஐந்து வயது மகளை ஆச்சரியத்தில் திக்குமுக்காட வைப்பது. மற்றொரு நோக்கம், இன்னொரு முறை கண்களால் இதுபோன்ற விஷயங்களைப் பார்த்து, சிறிதுநேரம் பகுத்தறியும் திறனை மறந்து சிறு குழந்தைகளைப் போல கைகொட்டி குதூகலிப்பது.

மந்திர வித்தைகள் என ஓர் அரங்கத்தில் நிகழ்த்திக்காட்டுவதில் முக்கால்வாசி விஷயங்கள் ஏதேனும் வழியில் அறிவியலால் விளக்கிக் கூறக்கூடியதுதான். உதாரணமாக நேற்று யானை ஒன்றை ஸ்டேஜில் மறைய வைத்தார் ஆனந்த். ஆனால் வெளியே இருந்த சிலர் யானை ஒன்று அரங்கின் பின்னாலிருந்து வெளியே வந்தது என்றனர். அதே யானையைத்தான் தினமும், ஒவ்வொரு காட்சியிலும் பயன்படுத்துகின்றனர். ஆகவே ஸ்டேஜில் நடந்தது 'காட்சிப்பிழை'யாக மட்டும்தான் இருக்க முடியும். ஆனால் இன்னமும் சில காட்சிகளில் தன் குழுவினரிலிருந்து யாராவது ஒருவரை ஆழ்நிலைத் தூக்கத்துக்குக் கொண்டுபோய் படுக்கவைத்து நாலடி மேலே அந்த உருவத்தைக் கொண்டுபோவது (levitation), பின் திடீரென அந்த உருவத்தைக் காணாமல் போக்குவது; அரங்கில் பார்க்க வந்திருக்கும் ஒரு பெண்ணையும் ஆழ்நிலைத் தூக்கத்திற்குக் கொண்டுபோய் கத்தியின் மேல் படுக்க வைத்து, அதன் பின் கீழிருந்து அந்தக் கத்திகளையும் உருவி அந்தப் பெண்ணை அந்தரத்தில் நாலடி உயரத்தில் வெறும் காற்றில் படுக்க வைப்பது ஆகியவை ஆச்சரியம் தரத்தக்கதாகவே இருக்கின்றன.

கடைசியாக மந்திரவாதி ஆனந்தே முழு உணர்வுடன் இருந்துகொண்டே நின்ற நிலையிலே கொஞ்சம் கொஞ்சமாக கிட்டத்தட்ட ஐந்தடிக்கும் மேலாக மிதந்து போனார். மேலாக ஏதேனும் கயிறுகள் இருந்த மாதிரியே தெரியவில்லை. ஒருவேளை இருந்திருக்கலாம்.

இந்த லெவிடேஷன் விஷயத்தைச் சின்னவனாக இருந்தபோது நாகப்பட்டிணம் தெருவில் பார்த்திருக்கிறேன். சிறுவன் ஒருவனை ஆழ்நிலைத் தூக்கத்தில் ஆழ்த்தி அவனைப் படுக்கவைத்து அவன்மீது அழுக்குத் துணியைப் போர்த்தி அப்படியே அந்தத் துணி போர்த்திய உருவத்தை படுத்த நிலையிலேயே மேல்நோக்கி எழும்ப வைப்பது. இன்றும் கூட ஆச்சரியத்தை வரவழைக்கும் விஷயம் இது.

அதுதவிர எந்த மந்திரவித்தைக் காட்சியிலும் இருக்கும் சின்னச்சின்ன விஷயங்கள் இருந்தன. காலியான, பூட்டப்பட்ட கூண்டுக்குள் திடீரெனத் தோன்றும் முயல், புறாக்கள், வெறும் காற்றிலிருந்து தோன்றும் 'செயற்கைப்' பூங்கொத்துகள். இதே பூங்கொத்துகள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவதால் அழுக்காகிப் போயுள்ளன. இந்தப் பூங்கொத்துகளையே கையில் வைத்துக்கொண்டு மற்றொரு காட்சியில் சில பெண்கள் நடனமாடுகின்றனர். ஆனால் அதே சமயம் வியக்கத்தக்க சில காட்சிகளும் உண்டு. பெட்டியில் பார்வையாளர் ஒருவர் உள்ளே போய்ப் பார்க்கிறார். அந்தப் பெட்டியிலிருந்து வெளியே வர மேல்புறம் உள்ள ஒரு வழிதான் என்று முடிவு செய்கிறார். பின் அந்தப் பெட்டியில் கையில் விலங்கு பூட்டப்பட்ட ஓர் ஆண் தள்ளப்படுகிறார். பெட்டி இறுக்கப் பூட்டப்படுகிறது. சாவிகள் இரண்டும் பார்வையாளர் கையில். சிறிது நேரத்தில் பெட்டியைத் திறந்து பார்த்தால் உள்ளே இருப்பது கையில் விலங்கில்லாத ஒரு பெண்! அரங்கின் வெளி வாசல் வழியே கையில் விலங்குடன் இருக்கும் அந்த ஆண் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறார். (Houdini act by Harry Houdini)

அதேபோல ராபர்ட் ஹார்பின் (Robert Harbin) உருவாக்கிய Zigzag girl என்னும் காட்சிப்பிழை வித்தையில் தன் சொந்த சரக்கையும் சேர்த்து செய்து காட்டினார். அதுவும் பார்த்து வியக்கத்தக்க வண்ணம் இருந்தது.

சின்னஞ்சிறு பையனைக் (அரங்கில் என் முன்வரிசையில் உட்கார்ந்திருந்தவன், அவன் பெற்றோர்கள் பக்கத்தில் இருந்தனர்) கூட்டிக்கொண்டு வந்து நிற்கவைத்து அவனுக்கு ஒரு தம்ளர் பாலைக் கொடுத்து அதில் பாதியை அவன் குடித்ததும், அவனது கால்சட்டையின் ஜிப்பைக் கழற்றி, அங்கு ஒரு funnellஐ வைத்து 'அந்தப் பாலை' ஒரு வாளியில் பிடித்து அரங்கிலேயே பெருஞ்சிரிப்பை ஏற்படுத்தினார்.

பகுத்தறிவுடன் பார்த்தால், மொத்தம் மூன்று விஷயங்கள் நடக்கின்றன.
  • சட்டென்று நடந்து முடிந்துவிடும் பல 'எளிமையான' வித்தைகள். இதில் மந்திரம் எதுவுமில்லை. எவ்வளவு வேகமாக அழகாகச் செய்கிறார் என்பதில்தான் இந்தத் திறமை அடங்கியுள்ளது. இதுபோன்ற பலவற்றை அவ்வப்போது செய்வதன்மூலம் பார்வையாளர்களைக் கட்டிப்போடுகிறார். இணையத்தில் இருக்கும் சில பக்கங்களைப் படித்தே நீங்களும், நானும் கூட இதில் பலவற்றை எளிதாகச் செய்யமுடியும்.
  • சில காட்சிப்பிழை (illusion) சார்ந்த வித்தைகள். இதில் மிகக் கவனத்துடன் ஈடுபட வேண்டும். இதை இணையப் பக்கங்களையோ, புத்தகங்களையோ படித்து தானாகச் செய்வது முடியாத காரியம். ஒரு மாஸ்டர் மந்திரவாதியிடம் சிஷ்யனாகச் சேர்ந்து கற்றுக்கொள்வதன் மூலம்தான் முடியும் என்று தோன்றுகிறது.
  • ஆழ்நிலைத் தூக்கத்திற்கு ஒருவரைக் கொண்டுபோவதன்மூலம் லெவிடேஷன் (காற்றில் உடம்பை உயரப் பறக்க வைப்பது) செய்வது. இது வெறும் காட்சிப்பிழை என்று சில சாதனங்களின் உத்தியுடன் செய்யக்கூடிய செயலல்ல என்று தோன்றுகிறது.
மீண்டும் மீண்டும் இந்த மூன்றுதான் இந்த மந்திரவித்தைக் காட்சியிலும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் பார்த்த பி.சி.சொர்கார் காட்சியிலும் இதேதான். ஒரே வித்தியாசம் அப்பொழுது என் மூன்று வயது மகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. நேற்று, ஐந்து வயதுக்கு மேலிருந்த காரணத்தால், ஓரளவுக்கு என்ன நடக்கிறது என்று புரிந்ததால், விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

மொத்தத்தில் இரண்டரை மணிநேரம் மிகவும் சந்தோஷமாகக் கழிந்தது. நீங்கள் சென்ன்னையில் இருந்தால், குழந்தைகளுடன் சென்று பாருங்கள்.

Saturday, November 06, 2004

ஆசாரகீனனின் தியோ வான் கோ இரங்கல்

ஆசாரகீனன் திண்ணையில் எழுதிய கட்டுரையை ரவி ஸ்ரீனிவாஸ் விமர்சித்து எழுதிய பதிவு இங்கே.

ரவி ஸ்ரீனிவாஸின் கருத்துக்களோடு நான் ஒத்துப்போகிறேன். ஆசாரகீனன் கட்டுரைகளைப் படிக்கும்போது எனக்கும் கிட்டத்தட்ட அதே உணர்வுகள்தான். ('மவுண்ட் ரோட் மாவோ' என்று கேவலப்படுத்தப்படும்) 'தி ஹிந்து' தியோ வான் கோ படுகொலையைப் பற்றி சிறியதாகவாவது செய்தி வெளியிட்டது. ஐரோப்பிய ஊடகங்களுக்கு மேற்படி விஷயம் அடுத்த நாட்டில் நிகழ்ந்த ஒன்று. அதனால் அவர்கள் இதைப்பற்றி அதிகமான செய்திகளைத்தான் வெளியிடுவார்கள்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் என்று சொல்லப்படுவது கூட ஒரேமாதிரியான விஷயமில்லை.

1. இஸ்லாமிய இனக்குழுக்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் பெரும்பான்மை ஆட்சியாளர்கள் கையில் மாட்டிக்கொண்டு முழிக்கும்போது ஏற்படும் எதிர்ப்பு வாதம், அதையொட்டிய தற்கொலைத் தாக்குதல் முயற்சிகள், ஆயுதப் போராட்டம் - பாலஸ்தீனம், செச்னியா போன்ற இடங்களில் ஏற்படுவது. இங்கு, போராளிகள் மதத்தின் சில கூறுகளைப் பயன்படுத்தி தம் எதிர்ப்புக்கு வலு சேர்க்கிறார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது திலகர் பிள்ளையாரைத் துணைக்கு அழைத்ததைப் போல.

2. இஸ்லாமிய நாடுகளில் - பெரும்பான்மை மக்களும் இஸ்லாமியர்களே - சில இஸ்லாமியப் பிரிவுகளையோ, இனங்களையோ அல்லது வேறு மதத்தவரையோ அச்சுறுத்துவது, அழிக்க முனைவது. சூடான் டார்ஃபர் பகுதியில் அராபிய முஸ்லிம்கள் ஆப்பிரிக்க முஸ்லிம்களைத் துன்புறுத்துவது, பாகிஸ்தானின் சன்னி, ஷியா சண்டை போன்றவை.

3. இஸ்லாமிய நாடுகளில் அரச/ஆளும் வர்க்கம் தாம் எப்படி திரைமறைவில் நடந்துகொண்டாலும், வெளியில் பெண்கள் மீது, பொதுவான மக்கள்மீது கொண்டுவரும் அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள், ஜனநாயக விரோதச் செயல்கள். சவுதி அரேபியா முதல், சோமாலியா வரை, இன்னமும் பல இடங்களில் இதைக் காணலாம்.

4. ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியா என்று ஒளிந்து கொண்டு பிற இடங்களில் - அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாடுகள், மத்தியக் கிழக்கு நாடுகள் - அவ்வப்போது அமெரிக்கர்கள் (பக்கத்தில் இருக்கும் பிற நாட்டவர்கள்) மீது நடத்தும் தாக்குதல்கள். அந்தத் தாக்குதல்களில், ஒரு பாவமும் செய்யாதவர்கள் பலியாகும்போது வீடியோ டேப் மூலம் அந்தச் செயல்களையெல்லாம் சரிதான் என்று நிலைநாட்ட முயற்சிப்பது.

5. ஒருசில நட்டு கேஸ்கள் தியோ வான் கோ போன்றவர்களை வெறிகொண்டு கத்தியால் குத்துவது.

எல்லாவற்றையும் ஒரே பிரஷ்ஷால் ஒரேமாதிரியான இஸ்லாமிய அடிப்படைவாதம் என்று சொல்வது எந்த விதத்திலும் நியாயமாகத் தெரியவில்லை. அத்துடன் இதுபோன்ற மேற்படி அடிப்படைவாதிகளுக்கெல்லாம் (ஐரோப்பிய மற்றும் இந்திய) இடதுசாரிகள் என்னவோ கையில் ஆயுதம் எடுத்துக் கொடுத்து, 'போ, போய்த் தாக்கு' என்று சொல்வது போல ஆசாரகீனன் எழுதியிருப்பது சரியல்ல.

இடதுசாரிகளை ஒட்டுமொத்தமாக, வீணாகக் குறைசொல்வதில் என்ன பயன் என்று புரியவில்லை. இடதுசாரிகளின் கொள்கைகளின் ஆதாரமாக சிலரைக் கொலை செய்வதில் தவறில்லை என்று ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

Friday, November 05, 2004

மும்பை டெஸ்ட் - மூன்றாம் (இறுதி) நாள்

இந்தியா 104 & 205, ஆஸ்திரேலியா 203 & 93. இந்தியா 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்று நான் எதிர்பார்த்த சில விஷயங்கள் இன்று நடைபெறவில்லை. டெண்டுல்கரும், லக்ஷ்மணும் தேற மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். இன்று அவர்கள் காலையில் விளையாடிய பிரமாதமான ஆட்டத்தால்தான் இந்தியா வெற்றி பெற முடிந்தது. உண்மையில் ஆட்ட நாயகர்கள் அவர்கள் இருவரும்தான். திராவிடும், காயிஃபும் தான் இந்தியாவைக் காப்பாற்றுவார்கள் என்று நினைத்திருந்தேன். மோசம் செய்யவில்லை, ஆனாலும் டெண்டுல்கர், லக்ஷ்மண் அளவுக்கு இவ்விருவரும் விளையாடவில்லை. 150 ரன்கள் கையில் இருந்தால்தான் இந்தியாவால் ஜெயிக்க முடியும் என்று நினைத்திருந்தேன், ஆனால் 106ஐக் கையில் வைத்துக்கொண்டே இந்தியா ஜெயித்து விட்டது.

இன்று காலை முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே மெக்ராத், கவுதம் கம்பீரை இரண்டாவது ஸ்லிப்பில் கிளார்க் மூலமாக கேட்ச் பிடிக்க வைத்து அவுட்டாக்கினார். கம்பீர் 1, இந்தியா 5/1. திராவிட் தான் உள்ளே வராமல் லக்ஷ்மணை அனுப்பினார். சரியான காரணம் புரியவில்லை. ஆடுகளம் மோசமாக இருப்பதால், தடுத்தாடினால் தேறாது, அடித்து ரன்களைப் பெற்றால்தான் பிழைக்க முடியும் என்று நினைத்திருப்பாரோ, என்னவோ. ஆனால் லக்ஷ்மண் மிகவும் மோசமான ஃபார்மில் இருக்கிறார் என்பதும் தெரிந்ததுதான். கடந்த 6 இன்னிங்ஸில் லக்ஷ்மண் 54 ரன்களைத்தான் மொத்தமாகச் சேர்த்துப் பெற்றிருந்தார். வந்தவுடனேயே லக்ஷ்மண் கில்லெஸ்பியின் பந்தில் ஸ்லிப் வழியாக எட்ஜ் செய்து ஒரு நான்கைப் பெற்றார், பின் அதே ஓவரில் நல்ல ஆன் டிரைவ் மூலம் ஒரு நான்கைப் பெற்றார். ஆனால் அடுத்த ஓவரிலேயே சேவாக் மெக்ராத்தின் பந்தில் கால்களை சிறிதும் நகர்த்தாமல் மட்டையைத் தூக்கி பந்தை விட முயல, பந்து ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே குத்தி உள்ளே நுழைந்து கால் காப்பில் பட்டது. லெக் ஸ்டம்பிற்கு வெளியே போயிருக்கலாம். ஆனால் இம்மாதிரியான சமயங்களில் நடுவர்கள் மட்டையாளருக்குப் பாதகமான தீர்வையே தருகிறார்கள். சேவாக் எல்.பி.டபிள்யூ 5, இந்தியா 14/2. இப்பொழுது மற்றுமொரு ஃபார்மில் இல்லாத மட்டையாளர் டெண்டுல்கர் உள்ளே வருகிறார்.

இதுதான் ஆட்டத்தின் முக்கியமான கட்டமாயிற்று. இரண்டு மட்டையாளர்கள். லக்ஷ்மண் படு மோசமாக விளையாடி வருகிறார். டெண்டுல்கரோ இரண்டு மாதங்களுக்கு மேல் கிரிக்கெட்டில் இல்லாமல் வந்த முதல் மூன்று இன்னிங்ஸில் பந்தை சரியாக அடிக்க வராமல் தடுமாறுகிறவர். எதிரணியோ, உலகின் தலை சிறந்த அணி. ஆடுகளமோ, அமெரிக்கா குண்டு போட்ட ஈராக் மாதிரி உள்ளது. பந்து எங்கு விழுந்தாலும் கண்ணி வெடி வெடிப்பது போல மண் பிய்த்துக் கொண்டு கிளம்புகிறது. ஆட்டம் ஆரம்பித்து முதல் மூன்று ஓவர்களில் இரண்டு விக்கெட் விழுந்தாகி விட்டது.

நிபுணர்களைப் பொய்யாக்கி, இதுபோன்ற மோசமான சூழ்நிலையிலிருந்து முற்றிலுமாக விடுபடுவோர்தான் சாம்பியன்கள். டெண்டுல்கரும், லக்ஷ்மணும் சாம்பியன்களாக விளையாடினர். அடுத்த நான்கு ஓவர்கள் இருவருமே மிகவும் சாவதானமாக விளையாடினர். அதன்பின் அடுத்தடுத்து இரண்டு ஓவர்களில், தம்மைக் கட்டியிருந்த தளைகளை உடைத்தனர். கில்லெஸ்பியின் ஓவர் ஒன்றில் டெண்டுல்கர் அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகளைப் பெற்றார். முதலாவது கால் திசையில் வந்த பந்தை லெக் கிளான்ஸ் செய்து ஃபைன் லெக்கிற்கு அடித்தது. அடுத்த பந்தில் தர்ட்மேன் திசையில் தட்டி நான்கைப் பெற்றார். ஆனால் இந்த இரண்டு நான்குகளை விட அகலம் அதிகமாக இருந்த பந்தை கவர் திசையில் வெட்டி ஆடி பெற்ற நான்குதான் டெண்டுல்கர் தன் இழந்த ஆட்டத்தை சிறிது சிறிதாக மீட்க முயல்கிறார் என்பதைக் காட்டியது. அந்த ஓவரில் டெண்டுல்கருக்கு 14 ரன்கள் கிடைத்தன. அதற்கடுத்த மெக்ராத் ஓவரில் லக்ஷ்மண் மூன்று நான்குகளைப் பெற்றார். முதலாவது விளிம்பில் பட்டு தர்ட்மேன் திசையில் சென்றது. அடுத்தது மிக அருமையாக கவர் திசையில் அடிக்கப்பட்டது. அதற்கடுத்தது தர்ட்மேன் திசையில், இம்முறை முழு நிதானத்துடனேயே அடிக்கப்பட்டது. இப்படியாக இரண்டு ஓவர்களில் 26 ரன்கள் வந்ததுமே இரண்டு மட்டையாளர்களும் ஒருவித தெளிவுடன், நம்மாலும் நன்றாக விளையாட முடியும் என்ற நம்பிக்கையுடன் விளையாடத் தொடங்கினர்.

லக்ஷ்மணை விட டெண்டுல்கரே அதிக நிதானத்துடனும் திறமையுடனும் விளையாடினார். லக்ஷ்மண் அவ்வப்போது சில தவறுகள் செய்தார். டெண்டுல்கரிடம் அது இல்லை. காஸ்பரோவிச் பந்துவீச வந்தார். ஆனால் ரன்கள் வருவதைத் தடுக்க முடியவில்லை, விக்கெட்டுகளும் விழவில்லை. மூன்றாம் விக்கெட் ஜோடிக்கு 50 ரன்கள் வந்தது. பாண்டிங், இப்பொழுது ஷேன் வார்ன் இல்லாததை உணர்ந்தார். நேதன் ஹவ்ரிட்ஸைப் பந்து வீச அழைத்தார். ஆனால் முதல் இன்னிங்ஸ் போலல்லாது இப்பொழுது ஹவ்ரிட்ஸை எதிர்கொண்டது இரண்டு நம்பிக்கையுடன் விளையாடும் மட்டையாளர்கள். லக்ஷ்மண் ஹவ்ரிட்ஸை புல் செய்து நான்கைப் பெற்றார். ஆனால் டெண்டுல்கர் ஹவ்ரிட்ஸைப் பயமுறுத்தும் விதமாக ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் 4, 6, 4 என்று அடித்தார். முதலாவது ஷாட் இறங்கி வந்து கவர் திசையில் அடித்தது. அடுத்து, மீண்டும் இறங்கி வந்து லாங் ஆன் மேல் சிக்ஸ். அதற்கடுத்த பந்து டீப் மிட் ஆனில் எல்லைக்கோட்டுக்கு சற்று முன் விழுந்து நான்கானது. அடுத்த ஓவரில் காஸ்பரோவிச் பந்தை பேக்வர்ட் ஸ்கொயர் லெக் திசையில் அடித்து இரண்டு ரன்களைப் பெற்றதன் மூலம் தன் அரை சதத்தை எட்டினார் டெண்டுல்கர். 62 பந்துகளில், 6x4, 1x6 என்ற கணக்கில் அடித்தது. அதற்குப் பிறகு ரன்கள் வருவது சற்று தடைப்பட்டது. மெதுவாகவே இந்தியா 100ஐத் தாண்டியது.

உணவு இடைவேளை நெருங்கும்போது டெண்டுல்கர் ஹவ்ரிட்ஸ் வீசிய பந்தை ஸ்வீப் செய்யப்போய் அதை மேல்நோக்கி அடிக்க, கிளார்க் ஓடிச்சென்று ஸ்கொயர் லெக்கில் அற்புதமான கேட்சைப் பிடித்தார். டெண்டுல்கர் 55, இந்தியா 105/3. மூன்றாவது விக்கெட் சேர்த்தது 91 ரன்கள். லக்ஷ்மணும், திராவிடும் தொடர்ந்தனர். உணவு இடைவேளைக்கு முன்னரே லக்ஷ்மண் தன் அரை சதத்தைப் பெற்றார். இடைவேளையின்போது இந்தியா 114/3, லக்ஷ்மண் 50*, திராவிட் 3*. 15 ரன்கள் முன்னணியில்.

உணவு இடைவேளைக்குப் பின்னரும், ஹவ்ரிட்ஸ் பந்துகளில் ரன்கள் சுலபமாகவே வந்தன. அடுத்தடுத்து இரண்டு நான்குகளை அடித்த திராவிட், டெஸ்ட் போட்டிகளில் 7000 ரன்களைக் கடந்தார். ஹவ்ரிட்ஸ் ஓவரில் லக்ஷ்மண் அடுத்தடுத்து இரண்டு நான்குகளைப் பெற்றதும், மூன்றாவது பந்திலும் அதையே முயற்சி செய்யப்போய், பந்துவீச்சாளர் கையிலேயே ஒரு கேட்சைக் கொடுத்தார். அதையும் ஹவ்ரிட்ஸ் மிக அருமையாகப் பாய்ந்து பிடித்தார். லக்ஷ்மண் 69, இந்தியா 153/4. அதன்பின்னர் திராவிட், காயிஃப் இருவருமே நிதானமாகவே விளையாடி ரன்களைப் பெற்றனர். தேநீர் இடைவேளை நெருங்கிக் கொண்டிருந்தது. வேறு வழியின்றி பாண்டிங் மைக்கேல் கிளார்க்கைப் பந்துவீச அழைத்தார். கிளார்க் இடதுகை சுழற்பந்து வீச்சாளர். (முரளி கார்த்திக் போல). ஆனால் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர் பந்துவீசுபவர். இந்த ஆடுகளத்தில் அவரைக் கொண்டுவருவதன் மூலமாவது விக்கெட்டுகளைப் பெற முடியுமா என்று பார்த்தார் பாண்டிங். அவரே கூட இனி நடக்கப்போவதைப் பற்றி கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

கிளார்க் தன் இரண்டாவது ஓவரில் திராவிடின் கையுறையில் ஒரு பந்தை உரசி, கில்கிறிஸ்ட் அதைக் கேட்ச் பிடிக்க, தன் டெஸ்ட் வாழ்க்கையின் முதல் விக்கெட்டைப் பெற்றார். திராவிட் 27, இந்தியா 182/5. தன் மூன்றாவது ஓவரில் தினேஷ் கார்த்திக் கிளார்க் பந்தை கால் திசையில் திருப்பப் போக, பந்து வெளி விளிம்பில் பட்டு சில்லி பாயிண்ட் திசை நோக்கிச் சென்றது. பாண்டிங் அனிச்சையாகக் கைகளை நகர்த்தி, பிரமாதமான கேட்ச் ஒன்றைப் பிடித்தார். தினேஷ் கார்த்திக் 4, இந்தியா 188/6. கிளார்க்கின் ஐந்தாவது ஓவர் தேநீர் இடைவேளைக்கு முந்தைய கடைசி ஓவராக இருக்க வேண்டும். அந்த ஓவரில் கும்ப்ளே முதல் பந்தை தர்ட்மேன் திசையில் அடித்தார். இரண்டு ரன்களைப் பெற்றிருக்கலாம். ஆனால் காயிஃப் தான் மீதமுள்ள ஐந்து பந்துகளை சந்திப்பதே அணிக்குப் பாதுகாப்பு என்பதால் ஒரு ரன்னுடன் நிறுத்திக் கொண்டார். ஆனால் மூன்றாவது பந்து நேராக வீசப்பட்ட பந்து. இந்தப் பந்து ஸ்பின்னாகும் என்று நினைத்த காயிஃப் மட்டையை விலக்கி, கால்காப்பினால் ஸ்டம்ப்களுக்கு நேராகத் தடுத்தார்! எல்.பி.டபிள்யூ! காயிஃப் 25, இந்தியா 195/7. தேநீர் இடைவேளை எடுக்கப்பட்டது.

மீண்டும் வந்தவுடன் இரண்டாவது பந்தில், அதாவது கிளார்க்கின் ஐந்தாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் முதல் ஸ்லிப்பில் ஹெய்டனால் கேட்ச் பிடிக்கப்பட்டு புதிதாக உள்ளே வந்த ஹர்பஜன், வந்த வேகத்திலேயே மீண்டும் வெளியே போனார். ஹர்பஜன் 0, இந்தியா 195/8. கிளார்க் ஐந்து ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள், ஏழு ரன்களைக் கொடுத்து. தனது ஆறாவது ஓவரில் இடது கை ஆட்டக்காரர் முரளி கார்த்திக்கை பவுல்ட் ஆக்கி கிளார்க் தன் ஐந்தாவது விக்கெட்டைப் பெற்றார். இந்தப் பந்து ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே விழுந்து, லெக் ஸ்டம்பை நோக்கிச் சென்றது. முரளி கார்த்திக் 2. இந்தியா 199/9. தன் ஏழாவது ஓவரில் கிளார்க் ஆர்ம் பால் ஒன்றை வீச (பந்து ஸ்பின் ஆகாமல் தன் திசையை அப்படியே தொடர்வது), கால்காப்பில் பட, ஜாகீர் கான் எல்.பி.டபிள்யூ ஆனார். கான் 0, இந்தியா 205 ஆல் அவுட். கிளார்க் பந்துவீச்சு 6.2 ஓவர்கள், 9 ரன்கள், 6 விக்கெட்டுகள்!

விக்கெட் இப்பொழுது மிகவும் மோசமாகவே ஸ்பின் ஆனது. பந்தை சற்றே காற்றில் மிதக்க விட்டு எறிந்தால் பந்து விழுந்ததும் எதிர்பாராத அளவுக்கு சுழன்றது. ஆயினும் ஆஸ்திரேலியா தான் எடுக்க வேண்டிய 107 ரன்களைப் பெற்று வென்று விடும் என்றே எதிர்பார்த்தேன். ஆனால் நடந்தது பெரிய டிராமா.

ஜாகீர் கான் முதல் ஓவரில் இரண்டாவது பந்தில் லாங்கர் விளிம்பில் தட்டி தினேஷ் கார்த்திகிற்கு எளிதான கேட்ச் ஒன்றைக் கொடுத்தார். லாங்கர் 0, ஆஸ்திரேலியா 0/1. ஆனால் அடுத்து உள்ளே வந்த பாண்டிங் அடுத்தடுத்து அதே ஓவரிலேயே இரண்டு நான்குகளை அடித்தார். இரண்டாவது ஓவரை ஹர்பஜன் வீசினார். அந்த ஓவரில் ஹெய்டன் ஒரு நான்கைப் பெற, இரண்டாவது ஓவரின் கடைசியில் ஆஸ்திரேலியா 15/1 என்ற ஸ்கோரில் இருந்தது. மூன்றாவது ஓவரில் ஹெய்டனுக்கு கான் பந்தில் மற்றுமொரு நான்கு. ஓவர் முடியும்போது ஆஸ்திரேலியா 21/1. நான்காவது ஓவர் முடிவில் 24/1.

திராவிட் முரளி கார்த்திக்கைப் பந்துவீச அழைத்தார். தன் முதல் ஓவரின் முதல் பந்தில் கார்த்திக் மிடில் ஸ்டம்பிலிருந்து ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே போகுமாறு பந்தைச் சுழற்றினார். பாண்டிங் மட்டையின் விளிம்பில் பட்டு கல்லியில் நின்ற லக்ஷ்மண் கையில் கேட்சானது. பாண்டிங் 12, ஆஸ்திரேலியா 24/2. அதே ஓவரின் கடைசிப் பந்தில் கார்த்திக் ஆர்ம் பால் ஒன்றை வீச, புதிதாக உள்ளே வந்த ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான, ஃபார்மில் உள்ள மார்ட்டின் எல்.பி.டபிள்யூ ஆனார். மார்ட்டின் 0, ஆஸ்திரேலியா 24/3. இந்த ஓர் ஓவர்தான் ஆட்டத்தின் திசையை மாற்றியது.

ஹெய்டனும், காடிச்சும் இணைந்து சிறிது ரன்களைப் பெற்றனர். காடிச் ஹர்பஜன் பந்தை இறங்கி வந்து அடிக்க முனைந்தவர், வெளி விளிம்பில் பட்டு முதல் ஸ்லிப்பின் மேலாகச் சென்றது. அங்கு நின்றிருந்த திராவிட் உயர எம்பி நல்ல கேட்ச் ஒன்றைப் பிடித்தார். காடிச் 4, ஆஸ்திரேலியா 33/4. ஹர்பஜன் இந்த டெஸ்டில் பெறும் முதல் விக்கெட். ஆனால் ஹெய்டன் உள்ளே இருக்கும்வரை மீதம் எடுக்க வேண்டிய மிகக்குறைந்த ரன்கள் போயே போய்விடும் என்ற பயத்திலேயே இருந்தனர் இந்திய அணி வீரர்கள். இந்நிலையில் ஹர்பஜன் வீசிய பந்தை ஸ்வீப் செய்யப்போன ஹெய்டனின் கையில் பந்து பட்டு, கால்காப்பில் பட்டு அவரை பவுல்ட் செய்தது. ஹர்பஜனின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதற்கு இரு பந்துகளுக்கு முன்தான் ஹெய்டன் ஹர்பஜனைத் தூக்கி லாங் ஆஃப் மேல் அடித்து நான்கு ரன்களைப் பெற்றிருந்தார். ஹெய்டன் 24, ஆஸ்திரேலியா 48/5.

அடுத்த ஓவரில் கார்த்திக் மற்றுமொரு ஆர்ம் பால் வீச, அந்தப் பந்தை வெட்டி ஆடச் சென்ற கிளார்க் பவுல்ட் ஆனார். கிளார்க் 7, ஆஸ்திரேலியா 48/6. அவ்வளவுதானா? இந்தியா ஆட்டத்தை வென்று விட்டதா? கில்கிறிஸ்ட் அவுட்டாகாத வரை அப்படிச் சொல்ல முடியாதே?

ஆஸ்திரேலியாவின் எண்ணிக்கை 50ஐத் தொட்டது. ஆனால் கில்கிறிஸ்ட் ஹர்பஜனை அரங்கை விட்டு அடிக்க முயன்று டீப் ஸ்கொயர் லெக்கில் நின்ற டெண்டுல்கரைக் குறிபார்த்து அடித்தார். கில்கிறிஸ்ட் 3, ஆஸ்திரேலியா 58/7.

இனி ஆட்டம் நிச்சயம் இந்தியாவுக்குத்தான் என்று அனைவருமே முடிவு செய்தனர். கிரிக்கெட் என்ன அவ்வளவு எளிதா? கில்லெஸ்பியும், ஹவ்ரிட்ஸும் ஒன்று சேர்ந்து ரன்களைச் சேர்க்க ஆரம்பித்தனர். 60 வந்தது. 70ம் வந்தது! திராவிடுக்குப் பயமும் வந்தது. கும்ப்ளே பந்துவீச வந்தார். தன் இரண்டாவது ஓவரில் வீசிய கூக்ளியில் ஹவ்ரிட்ஸ் எல்.பி.டபிள்யூ ஆனதாக நடுவர் அலீம் தர் முடிவு செய்தார். இந்தப் பந்து ஒருவேளை லெக் ஸ்டம்பிற்கு வெளியே சென்றிருக்கலாமோ என்று தோன்றியது. ஹவ்ரிட்ஸ் 15, ஆஸ்திரேலியா 78/8. எட்டாவது விக்கெட்டுக்கு 20 ரன்களைப் பெற்றிருந்தனர். இனியாவது ஆட்டம் இந்தியாவுக்கா?

அடுத்து வந்தார் காஸ்பரோவிச். அங்கும், இங்குமாக ஓரிரு ரன்கள் வந்தவண்ணம் இருந்தன. ஆஸ்திரேலியா 80, பின் கார்த்திக் விட்ட இரண்டாவது பை நான்கு ரன்களோடு 87/8. இன்னமும் வேண்டியது 20 ரன்கள். ஏதாவது செய்து விக்கெட்டைப் பெற்றாக வேண்டும். கும்ப்ளே தன் முதல் விக்கெட்டுக்குப் பின் எதையும் எடுக்கவில்லை. கார்த்திக்கோ வெகு நேரமாக வீசுகிறார். இந்நிலையில் இன்றைய ஓவர்களும் முடிவடைந்தன. இருட்டவும் தொடங்கியிருந்தது. ஆனால் ஆட்டம் முடிவடைய இன்னும் இரண்டு விக்கெட்டுகளே பாக்கி என்னும் நிலையில் திராவிட் ஆட்டத்தை 30 நிமிடங்கள் நீட்டிக்க நடுவர்களிடம் கேட்டுக் கொண்டார். கேட்டதுடன், ஹர்பஜனை கார்த்திக்குக்கு பதில் வீசவும் அழைத்தார். ஆஸ்திரேலியா 93இல் இருந்தது. தேவை 14 ரன்கள். ஹர்பஜன் தன் புது ஸ்பெல்லில் இரண்டாவது ஓவரில் வீசிய பந்து ஆஃப் ஸ்டம்பில் விழுந்து காஸ்பரோவிச் எதிர்பாராத வகையில் எழும்பி, லெக் ஸ்டம்பை நோக்கித் திரும்பியது. போகும் வழியில் கைக்காப்பில் பட்டு லெக் ஸ்லிப்பில் நின்ற திராவிடிடம் சென்றது. காஸ்பரோவிச் 7, ஆஸ்திரேலியா 93/9. முதல் இன்னிங்ஸ் போல மெக்ராத், கில்லெஸ்பியுடன் சேர்ந்து ரன்கள் பெறுவாரா?

இரண்டே பந்துகளில் ஆட்டம் முடிந்தது. மெக்ராத் டிரைவ் செய்யப்போக, பந்து வெளி விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் நிற்கும் லக்ஷ்மண் கையில் விழுந்தது. மெக்ராத் 0, ஆஸ்திரேலியா 93 ஆல் அவுட். கில்லெஸ்பி 9*.

இந்தப் பக்கமா, அந்தப் பக்கமா என்ற நிலையில் ஆஸ்திரேலியா போன்ற அணியை 100 ரன்களுக்குள் சுருட்ட இதுபோன்றதொரு ஆடுகளம், மூன்று ஸ்பின்னர்கள், லக்ஷ்மண், டெண்டுல்கர் ஆகியோரது ஆட்டம் ஆகியவை தேவைப்பட்டுள்ளது. என்னதான் ஆடுகளத்தைக் குறை சொன்னாலும், இந்த வெற்றி இந்தியாவின் சிறப்பான ஆட்டத்தால்தான் என்பதை யாரும் மறைக்க முடியாது. ஷேன் வார்ன் இல்லாததும் ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு முக்கியமான காரணம். முரளி கார்த்திக் ஆட்ட நாயகனாகவும், டேமியன் மார்ட்டின் தொடரின் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். ஆஸ்திரேலியா பார்டர்-கவாஸ்கர் கோப்பையை 2-1 என்ற கணக்கில் வென்றது.

இந்த வெற்றி இந்திய வீரர்களுக்கு கொஞ்சம் மன நிம்மதியைக் கொடுக்கும். ஆஸ்திரேலியாவின் திறமை இல்லாவிட்டாலும், இந்தியா அடுத்த நிலையில் உள்ள முக்கியமான அணி. இப்பொழுதைக்கு (எப்படிப்பட்ட ஆடுகளமாக இருந்தாலும்) இந்தியா மட்டும்தான் ஆஸ்திரேலியாவை சற்றாவது கஷ்டப்படுத்துகிறது என்பதும் உண்மையே. சென்னையில் மழை பெய்யாதிருந்தால், ஒருவேளை இந்தியா 2-2 என்ற கணக்கில் இந்தத் தொடரை டிரா செய்திருக்கலாம். அப்படி இருந்தாலும் ஆஸ்திரேலியாவே இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை ஆடியதாக இருக்கும்.

இந்தத் தொடரைப் பற்றியும், இந்தியாவி்ன் சில பலவீனங்களைப் பற்றியும் நிறையப் பேச வேண்டியுள்ளது. இனிவரும் நாள்களில் அதைச் செய்கிறேன்.

தமிழோவியம் கிரிக்கெட்

இந்த வாரம் தமிழோவியத்தில் பந்துத் தடுப்பு வியூகங்கள், தடுக்கும் இடங்களின் பெயர்கள் ஆகியவை பற்றி. அடுத்த வாரம் இதைத் தொடர்வேன். கடைசியாக எந்தப் பந்துவீச்சாளர் பந்து வீசுகிறார் என்பதைப் பார்த்து எந்த மாதிரியான தடுப்பு வியூகங்கள் அமைக்கப்படும் என்பதையும் பார்க்கலாம்.

Thursday, November 04, 2004

மும்பை டெஸ்ட் - இரண்டாம் நாள்

இந்தியா 104 & 5/0 (3 ஓவர்கள்) - கம்பீர் 1*, சேவாக் 4*, ஆஸ்திரேலியா 203.

நேற்று மழை. இன்று விக்கெட்டுகள்.

காலை ஆட்டத்தைத் தொடங்கிய இந்தியா வெகு சீக்கிரத்திலேயே திக்குத் தெரியாமல் தடுமாறியது. டெண்டுல்கர் ஒரு ஸ்டிரெயிட் டிரைவ் அடித்தார். அந்த அடியும் எல்லைக்கோட்டுக்கு முன்னாலேயே நின்று விட்டது. மூன்று இன்னிங்ஸ்களில் டெண்டுல்கர் இன்னமும் ஒரு நான்கும் அடிக்கவில்லை. அட, விளிம்பில் பட்டுக்கூட நான்கு கிடைக்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! கையில் வலு இல்லை, மனதிலும் வலு இல்லை. கில்லெஸ்பியின் பந்து ஆஃப் ஸ்டம்பில் விழுந்து சற்று வெளியே போனது, விளிம்பில் பட்டு கில்கிறிஸ்டிடம் கேட்சானது. டெண்டுல்கர் 5, இந்தியா 29/3. அடுத்து வந்த லக்ஷ்மண் டெண்டுல்கர் அவுட்டானது போலவே ஆனார். கில்லெஸ்பியிடமிருந்து கிட்டத்தட்ட அதே போன்ற பந்து, மிக மெல்லிய விளிம்பு. கில்கிறிஸ்டிடம் கேட்ச். லக்ஷ்மண் 1, இந்தியா 31/4. காயிஃப் கடந்த இரண்டு டெஸ்ட்களில் ஓர் அரை சதத்தையாவது எடுத்தார். இங்கு சடாரென உள்ளே வரும் பந்தை விட்டுவிட எண்ணி பேட்டை உயரத் தூக்க, பந்து கால்காப்பில் பட்டது. எல்.பி.டபிள்யூ. காயிஃப் 2, இந்தியா 33/5. கில்லெஸ்பி நான்கு விக்கெட்டுகள்.

அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் தன் முதல் டெஸ்டில், இதைவிடக் கொடுமையான ஒரு நிலையை எதிர்பார்த்திருக்க முடியாது. திராவிட் உடன் ஜோடி சேர்ந்து நின்று விளையாட வேண்டியவர். கில்லெஸ்பியின் பந்தில் ஸ்லிப் வழியாக ஓர் எட்ஜ் நான்கு ரன்களுக்கு. அவரது பந்திலேயே மிட் விக்கெட் திசையில் நல்ல அடியோடு ஒரு நான்கு. ஆனால் காஸ்பரோவிச்சின் ஒரு ரிவர்ஸ் ஸ்விங் யார்க்கர் நேராக நடு ஸ்டம்பில் விழுந்து கழற்றியது. கொஞ்சம் நிதானித்துப் பார்த்திருந்தால் இந்தப் பந்தை நான்கு ரன்களுக்கு அடித்திருக்கலாம். தினேஷ் கார்த்திக் 10, இந்தியா 46/6.

திராவிட் ரன்களே அடிப்பதில்லை என்று முடிவு கட்டியிருந்தார் போல. கல்லாக இருந்தார் மறுமுனையில். உள்ளே வந்த கும்ப்ளே மட்டையைச் சுழற்றி கவர், பேக்வர்ட் பாயிண்ட் ஆகிய திசைகளில் நான்கு பவுண்டரிகளைப் பெற்றார். ஆனால் புதியவர் நேதன் ஹவ்ரிட்ஸ் வீசிய லால்லிபாப் பந்து ஒன்றை மிட்-ஆஃபில் நின்ற பாண்டிங்கின் கையில் தூக்கியடித்து அவருக்கு முதல் விக்கெட்டை, அவர் வீசிய முதல் ஓவரிலேயே பெற்றுத் தந்தார். இதைவிடப் பொறுப்பில்லாத ஷாட் இருக்க முடியாது. கும்ப்ளே 16 (4x4). இந்தியா 68/7. அதே நேரத்தில் திராவிட் 81 பந்துகளில் 18 ரன்களுடன் யாகம் புரிந்து கொண்டிருந்தார். அடுத்து ஹர்பஜன் வந்தார். மெக்ராத்தின் பந்துகளில் ஸ்லிப் வழியாக ஒரு நான்கும், ரிவர்ஸ் ஸ்விங் ஆன ஒரு ஃபுல் டாஸை நேராக பந்துவீச்சாளரின் கால்களுக்கு அருகில் அடித்து லாங் ஆஃபில் ஒரு நான்கும் பெற்றார். ஓவர் முடிந்த பொழுது இருவரும் ஒருவரை ஒருவர் தங்கள் பிரத்யேக மொழியில் குசலம் விசாரித்துக் கொண்டனர். தொடர்ந்து ஹர்பஜன் பாண்டிங்குடனும் வாய்ச்சண்டை போட்டார்.

திடீரென தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட திராவிட் குனிந்து முட்டி போட்டு ஹவ்ரிட்ஸ் பந்தை லாங் ஆன் மேலாக அடித்து ஆறு ரன்களைப் பெற்றார். யாரோ சொல்லியிருகக் வேண்டும், அடுத்த பக்கத்தில் விக்கெட்டுகளாக விழுந்து கொண்டிருக்கிறது என்று. ஆனால் ஹர்பஜன் ஹவ்ரிட்ஸை தர்ட்மேனில் ஒரு நான்கை அடித்ததும், அடுத்த பந்தை இறங்கி வந்து திராவிட் போல அடித்து சிக்ஸ் பெற நினைத்தார் போலும். ஆனால் ஷாட்டை கடைசி நேரத்தில் நிறுத்தியதால் அல்வா போல ஒரு கேட்ச் ஃபார்வர்ட் ஷார்ட் லெக் காடிச் கையில் விழுந்தது. ஹர்பஜன் 14, இந்தியா 100/8. முரளி கார்த்திக் வெகுநேரம் நிற்கவில்லை. ஹவ்ரிட்ஸ் வீசிய பந்தில் பேட்டில் உரசி, கில்கிறிஸ்ட் கையில் விழுந்தது. முரளி கார்த்திக் 0, இந்தியா 102/9.

ஜாகீர் கான் காஸ்பரோவிச் வீசிய ரிவர்ஸ் ஸ்விங் யார்க்கரில் ஸ்டம்பை இழந்தார். கான் 0, இந்தியா 104 ஆல் அவுட். திராவிட் 104 பந்துகளில் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆடுகளம் கன்னாபின்னாவென்று ஸ்பின் எடுத்தது. ஹவ்ரிட்ஸ் வீசிய பந்துகள் தீபாவளி அணுகுண்டுகளைப் போல வெடித்தன. எனவே கும்ப்ளே, ஹர்பஜன், முரளி கார்த்திக் ஆகியோர் ஒரு கை பார்த்துவிடுவர் என இந்திய அனுதாபிகள் நினைத்தனர். முதல் ஓவரை கான் வீசினார். இரண்டாவது ஓவரை வீச ஹர்பஜன் வந்தார். லாங்கர் சுலபமாக இரண்டு நான்குகளைப் பெற்றார். புத்தம் புதுப் பந்தைக் கூட ஹர்பஜன் பயங்கரமாக ஸ்பின் செய்தார். லாங்கர் ஸ்வீப் செய்த பந்தை சேவாக் சரியாகப் பிடிக்காததால் லாங்கர் பிழைத்தார். அப்பொழுது அணியின் எண்ணிக்கை 11/0. ஆனால் லாங்கர் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கான் பந்துவீச்சில் முதல் ஸ்லிப்பில் இருக்கும் திராவிடிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். லாங்கர் 12, ஆஸ்திரேலியா 17/1. பாண்டிங் வந்தது முதற்கொண்டே நன்றாக விளையாடினார். ஆனால் கும்ப்ளே வீசிய பந்தை 'புல்' செய்யப்போய், கால்காப்பில் பட்டதால் எல்.பி.டபிள்யூ ஆனார். பந்தின் உயரம் சற்றே அதிகமாகத் தோன்றியது. பாண்டிங் 11, ஆஸ்திரேலியா 37/2.

இரண்டு பக்கத்திலிருந்தும் ஸ்பின்னர்கள் இப்பொழுது மாறி மாறி வீசினர். ஆனாலும் மார்ட்டினும் ஹெய்டனும் அவ்வப்போது நான்குகளையோ, ஆறுகளையோ பெற்றுக்கொண்டுதான் இருந்தனர். ஹெய்டன் ஒவ்வொரு ஸ்பின்னர் பந்திலும் ஒரு சிக்ஸ் அடித்தார். ஆனால் கார்த்திக் பந்தில் இறங்கி அடிக்க வந்தவர் தன் ஷாட்டை நிறுத்தி தடுத்தாட முற்பட, கிடைத்த கேட்சை ஷார்ட் லெக்கில் காயிஃப் நன்றாகவே பிடித்தார். ஹெய்டன் 35, ஆஸ்திரேலியா 81/3.

ஆனால் மார்ட்டினும், காடிச்சும் ஆஸ்திரேலியா எண்ணிக்கையை நூறைத் தாண்ட வைத்தனர். காடிச் கும்ப்ளே வீசிய லெக் பிரேக்கில், மட்டை, கால் காப்பு வழியாக ஷார்ட் லெக்கில் நின்ற காயிஃப் கையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். காடிச் 7, ஆஸ்திரேலியா 101/4.

கிளார்க் கும்ப்ளே பந்தில் இரண்டு அமர்க்களமான சிக்ஸ்கள் அடித்தார். ஹர்பஜன் பந்தில் உயரத்தூக்கி அடித்த ஷாட்டை சேவாக் ஸ்கொயர் லெக்கில் கோட்டை விட்டார். இது சேவாக் விடும் இரண்டாவது கேட்ச். ஆனால் கும்ப்ளே பந்தில் இறங்கி அடிக்க வந்த கிளார்க் பந்தை விட்டுவிட தினேஷ் கார்த்திக் அருமையாகப் பிடித்து நொடியில் ஸ்டம்பிங் செய்தார். பார்த்திவ் படேல் இதைத் தடவியிருப்பார் என்றே நினைக்கிறேன். கிளார்க் 17, ஆஸ்திரேலியா 121/5. அடுத்து கில்கிறிஸ்ட் கொஞ்சம் வேடிக்கை காட்டினார். அதிகமாக உதை வாங்கியது கும்ப்ளேதான். ஒரு சிக்ஸ், இரண்டு நான்குகள் அவரது பந்துகளில். கார்த்திக் பந்துவீச்சில் மற்றுமொரு மட்டை, கால் காப்பு கேட்ச் ஷார்ட் லெக்கில் நின்ற காயிஃப் கையில். கில்கிறிஸ்ட் 26, ஆஸ்திரேலியா 157/6.

இதுபோல அதிரடியாக ரன்கள் பெற இந்தியாவில் யாருமே இல்லை என்பது வருத்தம் தரக்கூடியது.

கில்லெஸ்பி வந்தார். அசையாமல் நின்றார். இதற்கிடையே மார்ட்டின் சிறிது சிறிதாக ரன்கள் சேர்த்து தன் அரை சதத்துக்கு வெகு அருகில் வந்துவிட்டிருந்தார். கும்ப்ளே மற்றுமொரு மட்டை, கால்காப்பு முறையில் காயிஃப் வழியாக கில்லெஸ்பியை அவுட்டாக்கினார். இது காயிஃப் ஷார்ட் லெக்கில் பிடித்த நான்காவது கேட்ச். அடுத்த ஓவரில் மார்ட்டின் தன் அரை சதத்தைப் பெற்றார். அதற்கடுத்த கும்ப்ளே ஓவரில் ஹவ்ரிட்ஸ் தூக்கி அடிக்க, ஹர்பஜன் மிட் ஆஃபில் அதைப் பிடிக்க, கும்ப்ளே தன் ஐந்தாவது விக்கெட்டைப் பெற்றார். ஹவ்ரிட்ஸ் 0, ஆஸ்திரேலியா 171/8. மார்ட்டினும், காஸ்பரோவிச்சும் எப்படியாவது முடிந்தவரை ரன்களைச் சேர்க்க முயன்றனர். ஆளுக்கொரு நான்குகளைப் பெற்றனர். மார்ட்டின் கார்த்திக் பந்தை கால் திசையில் கிளான்ஸ் செய்ய முயல, பந்து மட்டையில் பட்டு, ஸ்டம்பில் விழுந்தது. மார்ட்டின் 55, ஆஸ்திரேலியா 184/9. அதன் பின் மெக்ராத் வீணாக விக்கெட்டை விடாமல் கடைசி விக்கெட்டுக்கு 17 ரன்களைச் சேர்த்தார். மிக முக்கியமான ரன்கள் இவை. இறுதியாக கார்த்திக் பந்தை காஸபரோவிச் அடித்து, டீப் மிட்விக்கெட்டில் எல்லைக்கோட்டில் நிற்கும் கும்ப்ளே கையில் கேட்ச் கொடுத்தார். காஸ்பரோவிச் 19, ஆஸ்திரேலியா 203 ஆல் அவுட். மெக்ராத் 9 ரன்கள் ஆட்டமிழக்காமல்.

ஆஸ்திரேலியா 99 ரன்கள் அதிகம் பெற்றுள்ளது.

நாளின் இறுதியில் மீதமிருந்த மூன்று ஓவர்களில் இந்தியா விக்கெட் ஏதும் இழக்காமல் 5 ரன்களைப் பெற்றிருந்தது. நாளை இந்தியா என்ன செய்யவேண்டும்? சேவாக் எப்பொழுதும் போல மட்டையை அங்கும் இங்கும் சுழற்றி முடிந்தவரை ரன்களைப் பெற வேண்டும். கம்பீரோ முடிந்தவரை விக்கெட்டை இழக்காமல் உள்ளேயே இருக்க முயல வேண்டும். திராவிட் முதல் இன்னிங்ஸில் விளையாடியதைத் தொடரலாம். டெண்டுல்கர் பத்து ரன்களைத் தாண்டுவது கடினம். லக்ஷ்மண் பிரயோசனமில்லை. காயிஃப் ஒழுங்காக விளையாடி, திராவிட் உதவியுடன் அணியை 250 வரை கொண்டு சென்றால் இந்தியா ஜெயிக்க வாய்ப்புள்ளது. இந்தியா 300ஐத் தொட்டால் இந்த மேட்சை இந்தியாதான் ஜெயிக்கும்.