Thursday, October 25, 2012

அந்நிய நேரடி முதலீடு - சில குறிப்புகள் (3)

முதல் பகுதி | இரண்டாம் பகுதி

அந்நிய முதலீடுகளின்மீது, அந்நிய நிறுவனங்களின்மீது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் இவை:

1. இந்த அந்நியர்கள் நம்மை அடிமைப்படுத்தவே இந்தியா வருகிறார்கள். கிழக்கிந்தியக் கம்பெனி மாதிரி. கொஞ்சம் கொஞ்சமாக நம்மவர்களை ஏமாற்றி, இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கிக்கொள்வார்கள்.

2. எக்கச்சக்கமாகப் பணம் கையில் வைத்திருப்பவர்கள் இவர்கள். இவர்களுடைய போட்டியை இந்தியக் கம்பெனிகளால் எதிர்கொள்ள முடியாது. பவண்டோ. காலி மார்க் சோடா. பெப்சி, கோக கோலா. தங்கக் கம்பி என்று எடுத்துக் கண்ணைக் குத்திக் கொள்ளாதீர்கள்.

3. அரசால் இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. ஊழல், லஞ்சம் எல்லாம் இவர்களிடமிருந்துதான் ஆரம்பிக்கிறது. என்ரான். வரி கட்டமாட்டார்கள். வோடஃபோன். கொலை செய்துவிட்டு ஊரை விட்டே ஓடிவிடுவார்கள். போபால் விஷவாயு.

***

கிழக்கிந்தியக் கம்பெனி என்பது நம்முடைய உளவியலில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. பிசினஸ் செய்ய என்று வந்துவிட்டு நாட்டைப் பிடித்துக்கொள்வான்; அப்புறம் காலனியம்தான். நாமெல்லாம் அடிமைகள் ஆகிவிடுவோம்.

இந்தக் கருத்தை முற்றிலுமாக அலசி ஆராய்ந்து இதனைத் தாண்டிச் செல்லாவிட்டால் வேறு வழியே இல்லை. இதே குழிக்குள் இறுகச் சிக்கிக்கொள்வோம். கிழக்கிந்தியக் கம்பெனி என்பது அந்தக் காலகட்டத்தில் நடந்த ஒன்று. அதற்கான வாய்ப்புகள் இருந்தன. ராபர்ட் கிளைவ் போன்ற ஒரு முரடன் அந்த வாய்ப்பை எடுத்துக்கொண்டான். முகலாயர்கள் மிகப் பலவீனமான நிலையில் இருந்தனர். பல்வேறு குழுக்களாகச் சிதைந்திருந்த இந்திய அரசர்களுக்கு இடையில் ஒற்றுமை சாத்தியமானதாக இல்லை. ஆனால் இன்று இந்தியா ஒரு நவீன நாடு. ஒற்றுமையான நாடு. அதற்கென மிக வலுவான ராணுவம் இருக்கிறது. ‘ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்’ போன்ற ட்ராஷ் புத்தகங்களைப் படித்துக் கற்பனையைப் பெருக்கடித்துக்கொள்ளாதீர்கள்.

இன்றைய உலகமயமான சூழலில் லட்சுமி மிட்டலாலும் டாடாவாலும் ஐரோப்பாவின் பல நாடுகளில் உருக்குக் கம்பெனிகளை வாங்கமுடிகிறது. அந்த நாடுகளிலும் இதுபோன்ற செயலுக்குக் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. ஆனால் இந்திய காலனிய உளவியல் பிரச்னை அவர்களிடம் இல்லாத காரணத்தால் அவர்கள் அதனை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். இந்த இந்தியர்கள் நம் நாட்டின் பெருமைமிகு நிறுவனங்களை எடுத்துக்கொண்டு, வேலைகளைக் குறைத்து, நாளை ஒரு பிரச்னை என்றால் நிறுவனத்தையே இழுத்து மூடிவிடுவார்கள் - என்பதுதான் அவர்களுடைய கவலை.

இன்றைய பிரச்னை காலனியம் சார்ந்ததில்லை. அந்நியர் கையில் எம்மாதிரியான நிறுவனங்கள் இருக்கலாம் என்பது. ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியமான தொழில்கள்மீது யார் கட்டுப்பாடு இருக்கவேண்டும் என்பது பற்றியது. இதுவும் ஒவ்வொரு தேசத்தின் உளவியல் சார்ந்தது. பெரும்பாலான மேலை நாடுகள் எண்ணெய் வளங்களை முக்கியம் என்று நினைக்கின்றன. அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனங்களை சீனா வாங்க வருகிறது என்றால் முட்டுக்கட்டை போட்டுவிடுவார்கள். அமெரிக்கா, தன் நாட்டின் தொலைக்காட்சி நிலையங்கள்மீதும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனால்தான் ஆஸ்திரேலியரான ரூப்பர்ட் மர்டாக் அமெரிக்கக் குடியுரிமை வாங்கிக்கொண்டார். இல்லாவிட்டால் அவரால் அமெரிக்காவில் தொலைக்காட்சி நிறுவனங்களை நேரடியாகக் கட்டுப்படுத்த முடியாது.

ஆனால், இந்தியாவில் எந்தத் துறையிலுமே அந்நிய முதலீட்டுக்குப் பெரும் எதிர்ப்பு உள்ளது. அந்நிய முதலீட்டின்மீது கடுமையான சந்தேகம். அந்நியர்கள்மீதே கடுமையான சந்தேகம். ஒன்றிரண்டு நிறுவனங்கள் செய்யும் தவறுகளுக்காக நாம் அந்தத் துறைமீதே சந்தேகம் கொள்வதற்கு ஒப்பானது இது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் பழங்காலம் முதலே உலகின் பல பாகங்களுக்கும் இந்தியர்கள் வர்த்தகப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். யவனர்களும் அரபிகளும் இந்தியா வந்து பெரும் வர்த்தகம் செய்துள்ளனர். சிந்து-சரசுவதி நாகரிக காலத்தில் பெருமளவு வர்த்தக்த் தொடர்புகள் உலகெங்கும் பரவியிருந்துள்ளது. ஆனால் காலனிய காலத்தின் மோசமான சூழல் மட்டும்தான் இன்று நம் மனத்தின் அடியில் தங்கியுள்ளது.

இது இப்படியிருக்க உண்மை என்ன என்று பார்ப்போம்.

இன்றைய நவீன உலகுக்குத் தேவையான எந்தப் பொருளையும் அந்நியர்கள் உதவியின்றி நம்மால் தயாரிக்க முடியாது. ஊசி, நூல் முதற்கொண்டு கார் வரை. இந்தியாவின் ஒவ்வொரு தொழிற்சாலையும் உபகரணமும் அந்நிய நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களே. அவற்றை அந்தந்த நாடுகள் தந்திருக்காவிட்டால் நாம் நவீன காலத்துக்கு வந்திருக்கவே மாட்டோம். சுதந்தர இந்தியா இன்றுவரையில் சொல்லிக்கொள்ளத்தக்க எந்தத் தொழிற்சாலை நுட்பத்தையும் உருவாக்கியதில்லை. உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் உச்சபட்ச சாதனை, வெளிநாட்டு இயந்திரங்களை உள்நாட்டில் நகலெடுத்து உற்பத்தி செய்வதுதான். இதனைக் கேவலமாகப் பார்க்கவேண்டியதில்லை. ஆனால் இதுதான் யதார்த்தம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அந்நிய நாட்டில் தொழில்நுட்பம் அனைத்தையும் அனுபவித்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் அந்நியனைக் கரித்துக்கொட்டுவதில் நமக்கு நிகர் இந்த உலகில் வேறு யாருமே இல்லை.

இன்று இந்தியர்கள் கை நீட்டித் தொடும் எந்தப் பொருளிலும் ஒரு சிறு துளியாவது அந்நிய நாட்டின் உதவி இல்லாமல், உள்ளீடு இல்லாமல் சாத்தியப்பட்டிருக்காது.

சரி, அந்நியத் தொழில்நுட்பம் வேண்டும், ஆனால் அந்நிய முதலீடு வேண்டாம் என்கிறீர்களா, அது ஏன் என்று பார்ப்போம். முதலில் கிழக்கிந்தியக் கம்பெனி மாதிரி இல்லை இன்றைய பன்னாட்டுக் கம்பெனிகள். அவற்றின் மிகப் பெரும்பான்மை ஊழியர்கள் அனைவரும் இந்தியர்கள்தாம். தலைவர்களும் இந்தியர்கள்தாம். மேலும் பன்னாட்டுக் கம்பெனிகளின் பிற நாட்டு நிறுவனங்களில் முக்கியப் பங்கு வகிப்பதும் பல இந்தியர்கள்தாம். இந்தியர்கள் கண்ணாடிக் கூரையை உடைக்க முடியாது என்றிருந்த முந்தைய நிலைமை இன்று மாறியுள்ளது.

அந்நிய முதல் ஏன் தேவை? இந்தியா மிக அதிகமாகச் சேமிக்கும் நாடு என்றாலும்கூட அந்தச் சேமிப்பை ரிஸ்க் உள்ள தொழில்களில் முதலீடு செய்வதில்லை. அந்தப் பாரம்பரியம் இந்தியாவுக்குக் கிடையாது. மிகச் சில தொழிற்குடும்பங்கள் தவிர பெருந்தொழில்களில் பெருமளவு நிதியை முதலீடு செய்யக்கூடிய வழி இருந்தாலும் மனது இல்லாமல்தான் இந்தியர்கள் இருக்கின்றனர். பணம் உள்ளவர்கள் இப்படி. பணம் இல்லாதவர்களை எடுத்துக்கொள்வோம். இந்தியாவில் வென்ச்சர் முதலீடு என்பது அரிச்சுவடியைத் தாண்டியே போகவில்லை. கரூரில் அல்லது கன்னியாகுமரியில் இருக்கும் இரு நண்பர்கள் அற்புதமான ஒரு ஐடியாவை யோசிக்கிறார்கள். மிக நுட்பமான வேதியியல் பரிசோதனையின் விளைவாக அவர்கள் புதிய வேதிப்பொருள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர் என்று வைத்துக்கொள்வோம். அதனைக் கொண்டு கடின நீரை மென் நீராக்க முடியும். உவர் நீரைக் குடி நீராக எளிதில் ஆக்கமுடியும். இந்தியா முழுதும் இதனைக் கொண்டு சென்று விற்று, பெரும் நிறுவனம் ஒன்றை உருவாக்கலாம். ஆனால் அவர்கள் டிவிஎஸ் குடும்பத்தில் அல்லது முருகப்பச் செட்டியார் குடும்பத்தில் பிறந்திருந்தால்தான் அவர்களுக்கு அது சாத்தியம். இல்லாவிட்டால் நாலு பத்திரிகையில் அவர்கள் பற்றிச் செய்தி வரும். அத்துடன் சரி.

பணமும் உண்டு, தொழில்நுட்பமும் உண்டு என்றால் மட்டும் போதாது. ஒரு பெரிய நிறுவனத்தை நடத்தவேண்டுவதற்கான சிஸ்டம், ப்ராசெஸ் என்று எதுவுமே நம் நாட்டில் போதாது. புரஃபஷனல் தலைமை நிர்வாகிகள் நம்மூரில் எளிதில் கிடைக்க மாட்டார்கள். ஒரு சில தீவுகளைத் தவிர, இந்தியா என்பது பெரும்பாலும் ஒரு மீடியாக்கர் நாடு. அந்நியத் தொழில் நிறுவனங்கள் நம் நாட்டில் தொழிற்சாலைகளை நிறுவி, அதில் நம் மக்கள் வேலைக்கு சேர்வதன்மூலமே நம் திறனை நாம் வளர்த்துக்கொள்ள முடியும். ஒரு நல்ல இந்திய நிறுவனத்திலும் ஒரு நல்ல அந்நிய நிறுவனத்திலும் வேலை செய்திருக்கும் உங்களில் பலரால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

நமக்கு அந்நியத் தொழில்நுட்பம் நிறைய வேண்டும். அந்நியப் பண முதலீடு வேண்டும். அத்துடன் அந்நிய நாடுகளில் வெற்றிகரமாகத் தொழில் நடத்தி பிசினஸ் நுட்பங்களைத் தெரிந்துள்ள நிறுவனங்களின் நேரடி ஈடுபாடும் தேவை. அதைத்தான் அந்நிய நேரடி முதலீடு கொண்டுவருகிறது. அது இன்ஷூரன்ஸிலும் தேவை. சில்லறை வணிகத்திலும் தேவை. பலவிதக் கட்டுமானத்திலும் தேவை. கல்வியிலும் தேவை. இவையெல்லாம் இல்லாமலேயே இந்தியா வளரமுடியாதா என்றால், நிச்சயம் வளரலாம். ஆனால் நிறைய ஆண்டுகள் ஆகும். ஆனால் என்ன, குறைந்தா போய்விடுவோம் என்கிறீர்களா? ஆமாம், குறைந்துதான் போய்விடுவோம். 1950-லிருந்து 1990 வரை நாற்பது ஆண்டுகள் குறைந்துதான் போயிருந்தோம். இனியும் இந்தக் குறை இருக்கக்கூடாது.

(தொடரும்)

Thursday, October 18, 2012

பருவமழையில் சென்னை

சொன்னமாதிரியே 18 அக்டோபர் 2012 அன்று வடகிழக்குப் பருவமழை ஆரம்பம். அதற்கு இரண்டு மூன்று நாள் முன்னதாகவே கொஞ்சம் மழை பெய்தது என்றாலும் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய கடும் மழை. கிண்டி பக்கம் தேவலாம். ஆனால் மைலாப்பூர் பகுதியில் பல தெருக்களில் ஒரே வெள்ளம். கார்கள், ஆட்டோக்கள் மிதக்கின்றன. இருசக்கர வாகனங்கள் பாடு திண்டாட்டம். இதில் தெருக்களில் பல இடங்களில் குழிகள் இருப்பதே தெரியவில்லை. தெருவோரம் வேறு சாக்கடைக்காகத் தோண்டி வைத்திருக்கிறார்கள். அதில் யாரெல்லாம் விழுந்து அடிபடப் போகிறார்களோ. படுமோசமான சிவிக் கட்டுமானம். இன்னும் ஒரு மாதத்தைத் தள்ளவேண்டும்.



Wednesday, October 17, 2012

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - சுப்ரமணியன் சுவாமி

2ஜி விவகாரம் இந்திய நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து, திமுகவைச் சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்களான ஆ.இராசா, தயாநிதி மாறன் ஆகியோருடைய பதவிகளைக் காவு வாங்கியது. திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆ. இராசா ஆகியோரைச் சிறையில் தள்ளியது. கலைஞர் டிவி மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் ஓயவில்லை. அவர்களுக்கு எப்படி 200 கோடி ரூபாய் ஷாஹித் பால்வா மூலமாக வந்தது என்பதுதான் கனிமொழி மீதான வழக்கு. அந்தப் பணம் கடனாகப் பெறப்பட்டது, வட்டியுடன் திரும்பச் செலுத்தப்பட்டுவிட்டது என்பது கலைஞர் தொலைக்காட்சி வாதம். அந்தப் பணம் எப்படித் திரும்பக் கட்டப்பட்டது, பணத்தின் ஊற்று என்ன என்பதில் மேலும் சில குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளன.

2ஜி வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் இப்போது நடந்துவருகிறது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கைக் கண்காணித்துவருகிறது.

இந்த வழக்கு இவ்வளவு தூரம் சென்றிருப்பதற்கு சுப்ரமணியன் சுவாமி ஒரு முக்கியக் காரணம். (பிரஷாந்த் பூஷன் இன்னொருவர்.)

சுப்ரமணியன் சுவாமி 2G Spectrum Scam (Har Anand publication, Delhi) என்ற தன் புத்தகத்தில் இந்த வழக்கின் ஆரம்பக் கட்டத்திலிருந்து தொடங்கி, பல்வேறு ஆவணங்களின் துணையுடன் தன் தரப்பை எடுத்துவைக்கிறார். சென்ற ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான இந்தப் புத்தகத்தின் தமிழாக்கத்தை இப்போது கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது.

இணையத்தில் இந்தப் புத்தகத்தை வாங்க

போன்மூலம் இந்தப் புத்தகத்தை வாங்க 094459-01234 என்ற எண்ணை அழையுங்கள்.

Tuesday, October 16, 2012

அந்நிய நேரடி முதலீடு - சில குறிப்புகள் (2)

முதல் பகுதி

சுதந்தர வர்த்தகம் நடக்காதிருக்க, அரசு பல வழிகளில் கட்டுப்பாடுகளை, தடைகளை விதிக்கிறது என்பதைப் பார்த்தோம்.

இந்தக் கட்டுப்பாடுகள் இருப்பதால் யார் பலன் பெறுகிறார்கள், யார் நஷ்டம் அடைகிறார்கள்? இந்தக் கட்டுப்பாடுகள் எப்போதும் இருக்கவேண்டுமா? அல்லது அவற்றை அவ்வப்போது நீக்கிவிட்டு, தேவை ஏற்பட்டால் மீண்டும் கொண்டுவரலாமா?

ஓரிரு எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

சென்ற பதிவில் பாம் ஆயில் பற்றிச் சொல்லியிருந்தேன். இந்தியாவின் எண்ணெய்த் தேவை ஆண்டுக்கு சுமார் 15 மில்லியன் டன். இதில் 8 மில்லியன் டன்னை (50%-ஐ விட அதிகம்) நாம் மலேசியா, இந்தோனேசியா, பிரேசில், அர்ஜெண்டினா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம். அப்படி இருக்கும்போதும் நாம் இந்த இறக்குமதிமீது வரி விதிக்கிறோம். இந்த வரி, அரசின் வருமானத்தைப் பெருக்கவேண்டும் என்பதற்காக அல்ல. உள்நாட்டுத் தொழில்துறையைப் பாதுகாக்கவேண்டும் என்பதற்காக.

உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியாளர்களின் செயல்திறமின்மைக்காக இந்திய நுகர்வோர் பாதிக்கப்படுகிறார்கள். அரசு சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை நீக்கினால் ஒரு கிலோ எண்ணெயின் விலை சுமார் 40 ரூபாய் குறையும் என்பது என் கணக்கு. இப்போது வெவ்வேறு பிராண்ட் எண்ணெய்களின் விலையைப் பார்த்தால் லிட்டருக்கு சுமார் 80 முதல் 120 ரூபாய் வரை இருக்கிறது. இது 50-80 ரூபாய் என்றுதான் இருக்கவேண்டும்.

குறைந்த விலை என்பது நல்லதுதானே? பிறகு ஏன் இந்த இறக்குமதி வரி? ஏன் நுகர்வோரைப் பற்றிக் கவலைப்படாமல், உள்நாட்டு உற்பத்தியாளரைக் காப்பாற்றவேண்டிய அவசியம்? இதற்கு இரண்டு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

ஒன்று: வெளிநாட்டிலிருந்து இறக்குமதி என்றால் அதற்கான பணம் அமெரிக்க டாலரில் இருக்கும். இறக்குமதியை மட்டுமே நம்பியிருந்தால், நாளை இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாகக் குறைந்தால், நாம் அதிக அளவு அந்நியச் செலாவணியைச் செலவழிக்கவேண்டி வரும். (பெட்ரோல் கச்சா எண்ணெயுடன் ஒப்பிடுங்கள்.)

மற்றொன்று: இறக்குமதி வரி விதிக்கப்படவில்லை என்றால், இந்திய உற்பத்தியாளர்களால் தாக்குப்பிடிக்க முடியாது. விரைவில் அவர்கள் தொழிலை விட்டே போய்விடுவார்கள். அப்போது ஒட்டுமொத்த உற்பத்திக்கும் நாம் அந்நிய நாடுகளை மட்டுமே நம்பவேண்டியிருக்கும். அப்போது அவர்கள் விலையை ஏற்றத்தொடங்கினால் நாம் காலி! (இந்த விவாதத்தைக் கவனத்தில் வைத்திருங்கள். இதைத்தான் நாம் திரும்பத் திரும்பச் சந்திக்கப்போகிறோம்.)

இந்த இரண்டுமே பலவீனமான ஒரு நாடு யோசிக்கவேண்டிய விஷயங்கள். உலகமயமாதலில் அனைவரும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும்போது மிகவும் பின்தங்கியுள்ள நாடுகள் - ஒரு கானாவோ ஒரு மலாவியோ - சிந்திக்கவேண்டிய விஷயங்கள். இந்தியா இப்படி யோசிக்கவேண்டுமா?

இந்திய விவசாயம் உற்பத்தியில் பின்தங்கியுள்ளது. நாட்டுக்குத் தேவையான எண்ணெய் வித்துக்களையும் பருப்பு வகைகளையும் நாம் வேண்டிய அளவு உற்பத்தி செய்வதில்லை. எண்ணெயும் பருப்பும் குறைந்தவிலையில் கிடைக்காததுமே மக்களுக்குச் சத்துணவு கிடைக்காமைக்கு ஒரு காரணம். அரிசியும் கோதுமையும்தான் குறைந்தவிலையில் ரேஷன் கடையில் கிடைக்கும். மீதமெல்லாம் தெருக்கோடி அண்ணாச்சி கடையில் காசு கொடுத்தால்தான் கிடைக்கும். உலகின் பல நாடுகளில் அவர்களுடைய மக்கள் தொகையின் தேவைக்கு மேலாகப் பருப்பும் எண்ணெய் வித்துக்களும் பயிராகின்றன. அவற்றை எவ்வளவு குறைந்த விலைக்குக் கிடைக்குமோ அந்த விலைக்கு வாங்குமாறு செய்வதுதானே நம் அரசின் கடமை? அதைவிடுத்து செயற்கையான தடைகளை நாமே நம் மக்கள்மீது சுமத்தியிருக்கிறோம்.

இது இந்தியாவின் சோஷலிசப் பின்னணியால் வரும் ஆபத்து. வெளிநாட்டில் பொருள்கள் வாங்குவதாலேயே நாம் நம்முடைய பொருளாதாரத்தைப் பாதிக்கப்போவதில்லை. தேவைகளை வெளிநாடுகளிலிருந்து வாங்கும் அதே நேரம், பிற நாடுகளின் எந்தத் தேவையை நம் நாட்டிலிருந்தபடி பூர்த்தி செய்யவேண்டும் என்பதைச் சிந்திப்பதுதான் புத்திசாலித்தனம்.

***

இதேபோல இன்னொரு பிரச்னைதான், உலகச் சந்தைக்கு இந்தியா ஏற்றுமதி செய்யாதது. ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், மிளகு போன்ற மசாலாப் பொருள்களை உலகுக்கு ஏற்றுமதி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது. இவை நாட்டில் அதிகமாக விளைகின்றன. இந்தியத் தேவைக்கு அதிகமாகவே.

ஆனால் பருத்தியை எடுத்துக்கொண்டால், நமக்குமே பற்றாக்குறைதான். அப்படியானால் விளைந்த பருத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாதா? ஒரு நாடு தன் தேவையை முழுவதுமாகப் பூர்த்தி செய்தபின்னர் உள்ள மிச்சத்தைத்தான் ஏற்றுமதி செய்யவேண்டுமா?

தனி நபர் லாபம் சம்பாதிக்கும் உரிமை, நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையான பொருள்கள் கிடைப்பதற்கான பொது நலம், ஓர் அரசு தன் நாட்டை, பிரச்னைகள் ஏதும் இன்றி வழிநடத்திச் செல்வதற்கான கடமை ஆகிய மூன்றையும் ஏறிட்டுப் பார்த்துதான் சில முடிவுகளை எடுக்கவேண்டும்.

தனி நபர் உரிமைகள்தான் முக்கியம் என்பதை முன்வைத்தால் ஒரு விவசாயி தன் விளைபொருள்களை உலகச் சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்குத்தான் முன்னுரிமை தரவேண்டும். ஓர் அரசு தன்னிடம் வேண்டிய அளவு உணவு தானியக் கையிருப்பு இருக்கவேண்டும் என்று முடிவு செய்தால் அந்தப் பொருள்களை அவற்றுக்கான நியாயமான விலை கொடுத்து இந்தியாவிலும் அதன்பின் வெளிநாடுகளிலும் வாங்கிக் கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டுமே இந்தியாவில் நடைபெறுவதில்லை. இந்திய அரசு விவசாயிகள்மீது அழுத்தம் கொடுத்து, குறைந்த விலையில் பொருள்களை வாங்கி வைத்துக்கொள்கிறது. அவற்றைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளத் தேவையான பண்டகசாலைகளைக்கூட சரியாக அமைப்பதில்லை. நம் கண் முன்னேயே பல லட்சம் டன் தானியங்கள் வீணாகிக்கொண்டிருக்கின்றன.

விளைபொருள்களைத் தனியாருக்கு எந்தத் தடையுமின்றி விற்கலாம் என்ற நிலை வந்தால், உரிய விலையை சந்தை தீர்மானிக்கும். உலகின் வளர்ந்த நாடுகளின் விவசாயிகளைப் போல இந்திய விவசாயியும் வளமான வாழ்க்கையை நோக்கிப் போக இதுதான் ஆரம்பப் புள்ளி. இப்போது இந்திய விவசாயி ஒரு கொத்தடிமை போலத்தான் வாழ்கிறார்.

உடனேயே இடைத்தரகர்கள் பற்றிப் பேச்சு வரும். விவசாயிக்கு ஒன்றும் கிடைக்காது; எல்லாம் இடைத்தரகர்களுக்குத்தான் போய்ச் சேரும் என்பார்கள்.

எல்லாத் தொழில்களிலுமே இடைத்தரகர்கள் முக்கியமானதொரு வேலையைச் செய்துவருகிறார்கள். அவர்கள்தான் கல்யாணத் தரகர்கள். அவர்கள்தான் வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒரு மேடைக்குக் கொண்டுவருகிறார்கள். இவ்விரண்டு தரப்பில் ஒரு பக்கம் இருப்பவர் ஏமாளி என்றால் தரகர்கள் கட்டாயம் அவர்களை ஏமாற்றத் தயங்கமாட்டார்கள். இது மனித குணம். எனவே ஏமாறாமல் இருப்பதற்கு நாம் கற்றுக்கொள்ளவேண்டும். அதற்குக் கல்வி அவசியம் என்றால் அதைக் கற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். உலக கமாடிட்டி சந்தைகளில் ஓடும் விலைகளைப் பார்க்கவேண்டும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிக லாபம் சம்பாதிப்பார்கள். இது தெரியாதவர்கள் தடுமாறுவார்கள். ஓர் அரசு, தடுமாறுபவர்களுக்கு உதவி செய்யவேண்டும். முன்னேறுபவர்களைத் தடுக்கக்கூடாது.

இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்காமல் இருக்க, நமக்கு ஆப்ஷன்ஸ் அதிகம் வேண்டும். அந்த வாய்ப்பை முற்றிலும் தனியார்மயமாக்கப்பட்ட சந்தை மட்டும்தான் கொடுக்க முடியும்.

இங்கு அரசுக்கும் இடம் உண்டு. அதுதான் முக்கியமான பொருள்களுக்கான strategic reserve. பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய முக்கியமான பொருள்கள் ஒவ்வொன்றையும் அரசு கணக்கில் எடுத்து அதற்கான ஒரு குறிப்பிட்ட கையிருப்பைக் கையில் வைத்திருக்கவேண்டும். அந்தப் பொருள் சந்தையில் மிகக் குறைவாக வந்து, அதனால் பொருள்கள் விலை கடுமையாக உயர்ந்தால் அரசு தலையிட்டு தன் ரிசர்விலிருந்து பொருள்களைச் சந்தைக்கு விடுவித்து விலையைக் குறைக்கலாம். அதேபோல உற்பத்தி மிக அதிகமாக ஆகிவிட்டால், விலை வீழ்ச்சியடைந்து விவசாயி நஷ்டப்படாமல் இருக்க, அதிக உற்பத்திப் பொருள்களை அரசு வாங்கிச் சேமித்துக்கொள்ளலாம். இது அர்த்தசாஸ்திரத்திலேயே விரிவாகச் சொல்லப்பட்ட ஒன்று. அமெரிக்க அரசின் கச்சா எண்ணெய் ரிசர்வ் இப்படிப்பட்ட ஒன்றுதான். இந்திய அரசு கட்டாயமாக கச்சா எண்ணெய், உணவு தானியம் இரண்டிலும் ரிசர்வ் வைத்திருக்கவேண்டியது அவசியம்.

***

கொள்கை முடிவுகளை எடுக்கும்போது அரசு முதலில் கவனத்தில் வைத்திருக்கவேண்டியது நுகர்வோரை மட்டுமே. நுகர்வோருக்கு நியாயமான, மலிவான விலையில், தரமான பொருள்கள் கிடைக்கவேண்டும் என்பதுதான் ரூல் நம்பர் ஒன். ஏனெனில் இது நாட்டின் அனைத்து மக்களையும் பாதிக்கக்கூடிய ஒரு செயல்.

அடுத்து, இந்தியாவின் ஸ்பெஷல் நிலையைக் கருத்தில் கொண்டு, விவசாயிகள் இரண்டாவதாக வருவார்கள். இவர்கள் பெரும்பாலும் subsistence நிலையில் இருப்பவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளைப் பாதிக்காத செயல்கள் அல்லது விவசாயிக்கு அதிக வருமானம் கிடைக்கும் செயல்கள், கொள்கை முடிவுகள் எவை என்பதை அரசு எடுக்கவேண்டும். நுகர்வோருக்கும் விவசாயிக்கும் ஒரு பிரச்னை என்றால், பெரும்பாலும் நுகர்வோர் பக்கம்தான் அரசு சாயவேண்டும். ஆனால் விவசாயிக்கு அநீதி ஏற்பட்டுவிடக் கூடாது.

மூன்றாவதாக சிறு வியாபாரிகள். ஒரு சிறு வியாபாரி பணம் முதலிட்டு ஒரு பொருளை வாங்கி விற்கிறார். அதில் லாபம், நஷ்டம் என்பது சகஜம். அரசின் கொள்கை, முதலில் நுகர்வோருக்கு ஆதரவாகவும், அடுத்து விவசாயிக்கு ஆதரவாகவும், மூன்றாவதாக சிறு வியாபாரிக்கு ஆதரவாகவும் இருந்தால் போதும். வியாபாரி தான் செய்யும் வர்த்தகத்தில் நஷ்டப்படக்கூடும் என்றால் அதனை விட்டுவிட்டு வேறு பொருளை வர்த்தகம் செய்வதற்கு மாறிக்கொள்ளலாம்.

நான்காவதாகப் பெரு நிறுவனங்கள் பற்றிக் கவலைப்பட்டால் போதும். நுகர்வோர், விவசாயி, சிறு வியாபாரி ஆகியோரை அழித்துவிட்டு பெரு நிறுவனங்கள் வளர்வதை நாம் யாரும் விரும்பப் போவதில்லை. அது sustainable-உம் அல்ல.

கொஞ்சம் இருங்கள்... சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்பது அதைத்தானே செய்யப்போகிறது என்கிறீர்களா? அது உண்மைதானா என்பதைப் பார்த்துவிடுவோம்.

(தொடரும்)

Monday, October 15, 2012

அந்நிய நேரடி முதலீடு - சில குறிப்புகள் (1)

ஊழலுக்கு அடுத்து இன்று பொதுத்தளத்தில் விரிவாகப் பேசப்படும் விஷயங்கள் இரண்டு: (1) அணு மின் நிலையங்கள் வேண்டுமா, வேண்டாமா. (2) சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கலாமா, வேண்டாமா.

அந்நிய நேரடி முதலீட்டைச் சற்றே அலசுவோம்.

இன்றைய சந்தைப் பொருளாதார முறையை எதிர்ப்பவர்கள் (இடதுசாரிகள்), கட்டாயமாக எல்லாவிதமான அந்நிய நேரடி முதலீட்டையும் எதிர்க்கிறார்கள். இது தத்துவார்த்த எதிர்ப்பு. அவர்களைப் பொருத்தமட்டில் சந்தைப் பொருளாதாரம் என்பதே மக்களுக்கு எதிரானது. எனவே எல்லா முதலாளிகளும் கெட்டவர்கள். தொழிலாளிகளை நசுக்குபவர்கள். மக்களைச் சுரண்டுபவர்கள். ஆனால் இரண்டு முதலாளிகளுக்கு இடையே என்று பார்த்தால், சிறு/குறு முதலாளியாவது பரவாயில்லை; பெருமுதலாளிதான் அதிகம் கெட்டவன். ஆனால் இந்தியப் பெருமுதலாளியையும்விடக் கெட்டவன் ஒருவன் இருக்கிறான். அவன் சர்வதேசப் பணமுதலை அல்லது பன்னாட்டு நிறுவனத்தான். இவன் நம் நாட்டையே கொள்ளையடித்துப் பணத்தை அள்ளிக்கொண்டு ஓடுவிடுவான்; ஊழல் மிகுந்தவன்; கிழக்கிந்தியக் கம்பெனியின் மறு அவதாரம்; என்ரான், யூனியன் கார்பைடு... போன்றவன்.

இப்படிப்பட்ட கொள்கை கொண்டோரிடம் விவாதம் செய்வது சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன். அவர்கள் ஏற்கெனவே தங்கள் முடிவுகளை எடுத்துவிட்டனர்.

ஆனால் சந்தைப் பொருளாதாரத்தை ஆதரிப்போர் பலரும்கூட அந்நிய நேரடி முதலீட்டை முழுமையாக எதிர்க்கிறார்கள். சிலரோ, சில துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை ஆதரித்தாலும் சில்லறை வணிகத்தில் மட்டும் கூடவே கூடாது என்கிறார்கள்.

இப்படி கருப்பு-வெள்ளை என்று இல்லாமல், இந்த விவாதத்தில் பல சாம்பல் நிறங்கள் பரவியுள்ளன.

சந்தைப் பொருளாதாரத்தை ஆதரிப்போருடனான விவாதமாகவே நான் என் கருத்துகளை இங்கு முன்வைக்கிறேன்.

***

சந்தைப் பொருளாதார முறை என்பது கட்டுப்பாடுகள் அற்ற ஒன்றாக எப்போதுமே இருந்ததில்லை. அமெரிக்காவில்கூட இதுதான் நிலை. பொதுவாக ஓர் அரசு, பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்படுத்திவைத்திருக்கும். இந்தியாவில் நிலவும் சில கட்டுப்பாடுகளைப் பார்ப்போம்:

1. சில துறைகளில் சிறு, குறு அமைப்புகள் மட்டுமே ஈடுபடலாம்.


உற்பத்தித் துறை என்றால், குறுந்தொழில் (மைக்ரோ) என்றால் இயந்திரங்களில் முதலீடு ரூ. 25 லட்சத்துக்கு உள்ளாக இருக்கவேண்டும். சிறுதொழில் (ஸ்மால்) என்றால் இயந்திர முதலீடு ரூ. 25 லட்சத்துக்குமேல், ரூ. 5 கோடிக்குக்கீழ் இருக்கலாம்.

சேவைத் துறை என்றால் குறுந்தொழில் முதலீடு ரூ. 10 லட்சத்தைத் தாண்ட முடியாது. சிறுதொழில் என்றால் ரூ. 10 லட்சத்துக்குமேல், ரூ. 2 கோடிக்குக்கீழ் இருக்கவேண்டும்.

உதாரணமாக சில: ஊறுகாய், கடலை எண்ணெய், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கண்ணாடி வளையல், எவர்சில்வர் அலுமினியப் பாத்திரங்கள் போன்றவற்றை மேற்படி நிறுவனங்கள் மட்டும்தான் செய்யமுடியும். நீங்களும் நானும் ரூ. 100 கோடி முதலீட்டில் இவற்றை உற்பத்தி செய்ய முன்வந்தால் நமக்கு அனுமதி கிடையாது.

2. சில பொருள்களை, உற்பத்தி செய்வோரிடமிருந்து யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ள முடியாது. 

உதாரணம்: விவசாய விளைபொருள்கள்.

ஒவ்வொரு மாநிலமும் Agricultural Produce Marketing Committee Act (விவசாய விளைபொருள் சட்டம்) என்ற ஒரு சட்டத்தைத் தன் கையில் வைத்துள்ளது. மத்திய அரசு இந்தச் சட்டத்தில் சில மாறுதல்களை கொண்டுவந்து, Model APMC Act என்ற ஒன்றை இயற்றியது. கடந்த சில வருடங்களில் 16 மாநிலங்கள் இதனைப் பின்பற்றித் தத்தம் சட்டங்களை ஓரளவுக்கு மாற்றிக்கொண்டுள்ளன. இருந்தாலும் அவை இந்தத் துறையில் கட்டுப்பாடுகளை முற்றிலுமாகத் தளர்த்திக்கொள்ளத் தயாராக இல்லை.

பொதுவாக, இந்தச் சட்டத்தின் அடிப்படை, விவசாய விளைபொருள்களை அரசு விரும்பினால் அரசு மட்டும்தான் வாங்கலாம் என்பதே. அடுத்ததாக, அரசு அனுமதி அளிக்கும் வியாபாரிகள் மட்டும்தான், அரசு அமைக்கும் சந்தையில் மட்டும்தான் மேற்படிப் பொருள்களை வாங்கலாம். அரசு தனக்கு வேண்டிய பொருள்களை வாங்கியபின்னரேயே தனியார் வர்த்தகர்களுக்கு இந்தப் பொருள்களை வாங்க அனுமதி தரும். உணவு தானியங்கள், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், கரும்பு, பிற பணப்பயிர்கள், காய்கள், கனிகள் என்று அனைத்தையுமே இந்தச் சட்டங்கள் கட்டுப்படுத்தும். இதனால் சந்தை என்பது விலையை நிர்ணயிப்பதில்லை. அரசுதான் விலையை நிர்ணயிக்கிறது. பெரும்பாலான பொருள்களை அரசு கொள்முதல் செய்யும்போது அவர்களுக்கு விற்காமல் காத்திருந்து பிறகு தனியாரிடம் விற்று அதிக விலை பெறலாமா என்றால் அதற்கு உத்தரவாதம் இல்லை. அரசு வாங்கிச் சென்றபிறகு தனியார் வர்த்தகர்கள் யாருமே வாங்கத் தயாராக இல்லை என்றால் கோவிந்தாதான். எனவே பெரும்பாலான விவசாயிகள் அரசு கேட்கும் பொருள்களை அரசு சொல்லும் விலைக்கு விற்றுவிட்டு, பணம் எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். (அரசு கேட்கும் விலையில் நூலகத்துக்குப் புத்தகங்களை வழங்கிவிட்டுக் காத்திருக்கும் பதிப்பாளர்கள்போல.)

உங்களால் நேரடியாக முன்கூட்டியே விவசாயிகளிடம் கொள்முதல் ஒப்பந்தம் செய்துகொள்ள முடியாது. ஒப்பந்த விவசாயத்தில் எளிதில் இறங்கமுடியாது. சந்தைக்குப் பொருள்கள் வந்து அங்கே கொள்முதல் செய்ய உங்களுக்கு உரிமம் இருந்தால்மட்டுமே உங்களால் அங்கே பொருள்களை வாங்க முடியும். இல்லாவிட்டால் வாங்கிய இடை நபரிடமிருந்து அவர் சொல்லும் விலைக்குத்தான் வாங்கிக்கொள்ள முடியும்.

3. சில துறைகளில் கார்பொரேட் நிறுவனங்கள் நுழைய அனுமதி இல்லை.

சில்லறை வணிகம் அப்படிப்பட்ட நிலையில்தான் சில ஆண்டுகளுக்குமுன்வரை இருந்தது. பின்னர் இதில் மாற்றம் செய்யப்பட்டது. அதன் விளைவாகத்தான் ரிலையன்ஸ் ஃப்ரெஷ், மோர் போன்ற நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் இறங்கின.

4. சில வகைப் பொருள்களை இறக்குமதி செய்வதற்குக் கடும் வரி விதிக்கப்படும்.


இந்தியப் பொருள்களுக்கான சந்தை அழிந்துபோய்விடாமல் இருக்க அந்நியப் பொருள்கள் மீதான வரி (tariff) அதிகரிக்கப்படும். உதாரணமாக பனை எண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள். ஆகஸ்ட் 1, 2012 தேதியிட்ட எகனாமிக் டைம்ஸ் இதழ் சொல்லும் செய்தி இது:
சமையல் எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும் உள்நாட்டுத் தொழில் துறையை அழியாது பாதுகாக்கவும் ஒரு டன் பனை எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 484 டாலர் என்பதிலிருந்து 1,053 டாலர் என்று இந்தியா உயர்த்தியுள்ளது.
அரசின் இந்த ஆணைமூலம் பனை எண்ணெய் விலை முன்னர் இருப்பதைவிட லிட்டருக்கு ரூ. 30 அதிகமாகியுள்ளது. இறக்குமதி வரியை ஒட்டுமொத்தமாக ஒழித்தால் இந்த விநாடியே பனை எண்ணெய் விலை லிட்டருக்கு 55 ரூபாய் குறையும்.

5. சில பொருள்களை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று அரசு கட்டுப்பாடுகளை விதிக்கும்.

சில மாதங்களுக்குமுன் பருத்தி ஏற்றுமதி செய்யப்படாது என்று அறிவித்தது மத்திய அரசு. பின் இரண்டே வாரங்களில் தன் கருத்தை மாற்றிக்கொண்டது. பருத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் விவசாயிகளுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் லாபம். செய்யாவிட்டால் உள்ளூர் துணி ஆலைகளுக்கு லாபம். அவர்கள் குறைந்த விலையில் விவசாயிகளை நசுக்கித் தங்களுக்கு வேண்டிய பருத்தி இழைகளை வாங்கிக்கொள்ளலாம்.

6. உரிமங்கள், உற்பத்திக்கான கோட்டா ஆகியவற்றைக் கையில் வைத்துக்கொண்டு சில துறைகளை அரசு கட்டுப்படுத்தும்.

உரிமங்கள் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். 2ஜி ஸ்பெக்ட்ரம் குறைவாக இருப்பதால் ஒரு மாநிலத்தில் இத்தனை மொபைல் போன் நிறுவனங்கள்தாம், உரிமம் பெற்றுத் தொழிலை நடத்தலாம் என்று அரசு தீர்மானிக்கிறது.

அதேபோல முன்பெல்லாம், ஒரு துறையில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நிறுவனமும் எத்தனை மீட்டர் துணி உற்பத்தி செய்யலாம், எத்தனை டன் உருக்கு உற்பத்தி செய்யலாம் என்பதற்குக் கோட்டா பெறவேண்டியிருந்தது. பெற்ற கோட்டாவைவிட அதிகமாக நீங்கள் உற்பத்தி செய்யமுடியாது. நல்லவேளையாக அந்தச் சனியனிலிருந்து இன்று முற்றிலுமாக விடுதலை கிடைத்துவிட்டது.

உரிமங்கள் சில துறைகளில் இருக்கவேண்டியது அவசியம். இவை இரண்டு விதமானவை. ஒன்றில், அரசு மட்டுமே உற்பத்தியை, சேவையைச் செய்யலாம் (ராணுவத் தளவாடங்கள் முதலியன). இன்னொன்றில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டும்தான் இருக்கலாம் (தொலைத்தொடர்பு).

7. அந்நிய முதலீட்டை அரசு கட்டுப்படுத்தும்.

மேலே சொன்ன அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தாண்டி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களை யார் வைத்திருக்கலாம் என்பதில் கட்டுப்பாடு. அதாவது யார் யார், எந்த எந்தத் துறைகளில், எந்த அளவுக்கு முதலீடு செய்யலாம், செய்யக்கூடாது என்பது பற்றியது. அதன்மூலமும் அரசு கட்டுப்படுத்துதலைச் செய்கிறது.

இந்திய நிறுவனங்கள், அந்நிய நிதி நிறுவனங்கள், அந்நிய நேரடி நிறுவனங்கள் என்ற மூன்று வெவ்வேறு நபர்களை/அமைப்புகளை நாம் பார்க்கிறோம்.

அந்நிய நேரடி நிறுவனங்களுக்கும் அந்நிய நிதி நிறுவனங்களுக்குமான வித்தியாசம் என்ன? வால்மார்ட் இந்தியா வந்து சில்லறை வியாபாரம் செய்ய விரும்புவது அந்நிய நேரடி முதலீடு. ஒரு நிறுவனம் தனக்கு எந்தத் தொழிலில் அனுபவம் இருக்கிறதோ அதே தொழிலில் இந்தியாவில் முதலீடு செய்வது. மாறாக கலிஃபோர்னியா அரசுத் தொழிலாளர்கள் ஓய்வூதிய நிதி என்ற அமைப்பு ரிலையன்ஸ் ஃப்ரெஷ் நிறுவனத்தின் 10% பங்குகளை வாங்குவது அந்நிய நிதி நிறுவன முதலீடு. இதில் அந்நிய நிறுவனத்தின் கட்டுப்பாடு இருக்காது. அதன் முதலீடு, வருமானத்தைப் பெருக்குவது என்பதற்காக மட்டுமே. நிறுவனத்தின் கட்டுப்பாடு முழுக்க முழுக்க இந்தியர்கள் கையில் இருக்கும்.

உதாரணமாக மத்திய அரசின் கோல் இந்தியா லிமிடெட் என்ற நிலக்கரி வெட்டி எடுக்கும் கம்பெனியில் பிரிட்டனைச் சேர்ந்த தி சில்ரன்ஸ் இன்வெஸ்ட்மெண்ட் ஃபண்ட் (டி.சி.ஐ) என்ற நிதி நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இது இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்ட்மெண்ட் என்ற வகையைச் சாரும். அதே, பி.எச்.பி பில்லிடன் என்ற உலகிலேயே பெரிய கரி மற்றும் தாது நிறுவனம் கோல் இந்தியாவில் முதலீடு செய்ய வருகிறது என்றால் அது டிரெக்ட் இன்வெஸ்ட்மெண்ட்.

ஒரு துறையில் யார் முதலீடு செய்யமுடியும் என்பதைக் கட்டுப்படுத்துவதோடு, எத்தனை சதவிகிதம் பங்கு வைத்திருக்கலாம் என்பதையும் அரசு கட்டுப்படுத்துகிறது. சில துறைகளில் ஒரு நிறுவனத்தின் 100% பங்குகளையும் அந்நிய நிறுவனங்கள் தம் கையில் வைத்திருக்கலாம். சில துறைகளில் 74%, 51%, 49%, 26% என்றெல்லாம் கட்டுப்பாடுகள் இருக்கும். அவ்வப்போது அரசு இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி அந்நிய முதலீட்டின் சதவிகிதத்தை அதிகரிக்கும்.

(தொடரும்)

Monday, October 08, 2012

ஸ்ரீ வைஷ்ணவம் என்சைக்ளோபீடியா

இந்த ஆண்டு கிழக்கு பதிப்பகம் இதுவரையில் அதிகம் புத்தகங்களை வெளியிடவில்லை. பெரும்பாலான நேரத்தை கல்வி சார்ந்த சில புத்தகங்களையும் பொதுத்தேர்வு சார்ந்த சில புத்தகங்களையும் வெளியிடுவதில் செலவிட்டோம். இனி மாதாமாதம் சில புத்தகங்கள் தொடர்ந்து வெளியாகும்.

சமீபத்தில் வெளியான கிழக்கு பதிப்பகப் புத்தகம்: ஸ்ரீ வைஷ்ணவம் என்சைக்ளோபீடியா. 360 பக்கங்கள், ரூ. 200.

ஸ்ரீ வைஷ்ணவம் என்பது தென்னிந்தியாவில், முக்கியமாகத் தமிழ்நாட்டில், பின்பற்றப்பட்டுவரும் ஒரு வைணவ மரபு. இராமானுசரின் வேதாந்த தரிசனத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. ஐயங்கார்கள் எனப்படும் பிராமணப் பிரிவினர் மட்டுமின்றி பிற சாதியினரும் இந்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள்.

வேணு சீனுவாசன் எழுதியுள்ள இந்தப் புத்தகம் இந்த மதத்தின் அடிப்படைகளை முழுமையாக விவரிக்க எடுக்கப்பட்டிருக்கும் மிக நல்ல முயற்சி.

இந்தப் புத்தகத்தில் நான்கு பகுதிகள் உள்ளன. பகுதி ஒன்று வைணவ வழிபாட்டு முறையை விளக்குகிறது. பகுதி இரண்டு, இராமானுசரின் விசிஷ்டாத்வைத அடிப்படையை விளக்குகிறது. பகுதி மூன்று பன்னிரு ஆழ்வார்களைப் பற்றியது. பகுதி நான்கு, விசிஷ்டாத்வைத ஆச்சாரியர்களையும்  மடங்களையும் பற்றியது.

இதன் விற்பனை குறுகிய காலத்திலேயே மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது.

புத்தகத்தை இணையத்தில் வாங்க

டயல் ஃபார் புக்ஸ் வழியாக வாங்க அழையுங்கள்: 94459-01234, 94459-79797

கேளாய் திரௌபதி(தை)(தாய்)!

சென்ற ஆண்டு (2011) செப்டெம்பர் மாதம் தென்னிந்தியத் திரைப்படச் சங்க அரங்கில் சஷிகாந்தின் ‘கேளாய் திரௌபதாய்!’ என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். அப்போதே அதைப்பற்றி விவரமாக எழுதியிருந்தேன். இதனை முதலில் படித்துவிடுங்கள்.

இந்தப் படத்தை அக்டோபர் 6, 2012 அன்று தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை மாதாமாதம் நிகழ்த்தும் கூட்டத்தில் திரையிட்டோம். சென்ற வடிவத்திலிருந்து ஏழெட்டு நிமிடங்கள் வெட்டியுள்ளார் என்று தெரிந்தது. கொஞ்சம் வேகம் அதிகரித்துள்ளது. சிவ-அர்ஜுன சண்டையின்போதான சில profanities நீக்கப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன்.

கல்யாணராமன் படத்துக்கான முன்னுரையை வழங்குகிறார்.
இரண்டாவது முறையாகப் பார்க்கும்போதும் gripping என்றே சொல்வேன். இன்னும் பலமுறை பார்த்தாலும் சலிக்காது. ஓர் ஆவணப்படம் இந்தத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைத்துப் பார்த்ததில்லை.

படத்தின் இயக்குனர் சஷிகாந்த்
எச்சூரில் நடக்கும் மகாபாரதக் கூத்துதான் ஆவணப்படத்தின் கரு. இதனைத் தொடர்ந்து மேலும் சில படங்களை எடிட் செய்வதில் இறங்கியிருக்கிறார் சஷிகாந்த். இரண்டாவது, ‘நினைவின் நகரம்’. இதன் முதல் கட் எடிட் வடிவத்தை ஏற்கெனவே தமிழ் பாரம்பரிய நிகழ்வு ஒன்றில் திரையிட்டிருந்தோம். மூன்றாவது பகுதி, மகாபாரதக் கூத்தின் அழகியல் பற்றியது.

ஆவணப்படத்தில் முத்துக்குமாரசாமி சில விளக்கங்களைத் தருகிறார்.
படத்தின் இறுதியில் பேசிய சஷிகாந்த், உண்மையில் தான் இதன் இயக்குனர் அல்லன், அந்த கிராமத்து மக்கள்தான் படத்தை இயக்கினார்கள் என்றார். முதல் இரண்டு நாள்களுக்குப் பிறகு அவர்கள்தான் எங்கு கேமராவை வைத்தால் எந்தக் காட்சி நன்றாக வரும், எது எங்கு நடக்கிறது என்று படப்பதிவுக்கு வழி காட்டத் தொடங்கினராம்.

காந்தி மையத்தின் இயக்குநர் அண்ணாமலை நிகழ்ச்சியின் இறுதியில் தன் கருத்துகளை முன்வைக்கிறார்.
சனிக்கிழமை திரையிடலின்போதும் பெரும் கூட்டம் ஒன்றும் இல்லை. என் பதிவிலும், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோருடைய பதிவுகளிலும் இதுபற்றிய தகவல் இருந்தது. சஷிகாந்த் இந்தப் படத்தின் டிவிடியை அரங்கில் விற்பனை செய்தார். சிலர் வாங்கிக்கொண்டனர். அவரிடமிருந்து இதனை வாங்கிக்கொள்வது எப்படி என்று தகவல் கேட்டு எழுதுகிறேன்.

Saturday, October 06, 2012

நல்லி திசை எட்டும் 2012 மொழியாக்க விருதுகள் விழா

நாளை 7 அக்டோபர் 2012 மாலை 6.00 மணி தொடங்கி, நல்லி திசை எட்டும் மொழியாக்க விருதுகள் விழா சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடைபெறுகிறது.

விருதுகள்:

வாழ்நாள் சாதனையாளர் விருது:

(1) கல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி (தமிழிலிருந்து வங்காளத்துக்கும் வங்காளத்திலிருந்து தமிழுக்கும்)
(2) பேராசிரியர் (மறைந்த) ஆர். ராஜரத்தினம் (ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும்)

நூல்களுக்கான விருது பெறுவோர்:

(1) தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு: Kurunthokai, ஆங்கிலமாக்கம்: அ. தட்சணாமுர்த்தி
(2) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு (புனைவு): சோஃபியின் உலகம், தமிழாக்கம்: ஆர்.சிவகுமார்
(3) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு (புனைவு): பாகிஸ்தான் போகும் ரயில், தமிழாக்கம்: ராமன் ராஜா
(4) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு (அ-புனைவு): யுவான்சுவாங் இந்தியப் பயணம் (பாகம் ஒன்று | இரண்டு | மூன்று), தமிழாக்கம்: பொன். சின்னத்தம்பி முருகேசன்
(5) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு (அ-புனைவு): காஷ்மீர்: முதல் யுத்தம், தமிழாக்கம்: பி.ஆர்.மகாதேவன்
(6) கன்னடத்திலிருந்து தமிழுக்கு: சர்வக்ஞர் வெண்பா, தமிழாக்கம்: தா.கிருட்டிணமூர்த்தி
(7) வங்காளத்திலிருந்து தமிழுக்கு: திஸ்தா நதிக்கரையின் கதை, தமிழாக்கம்: பி.பானுமதி
(8) அஸ்ஸாமியிலிருந்து தமிழுக்கு: தென் காமரூபத்தின் கதை, தமிழாக்கம்: அ.மாரியப்பன்
(9) தமிழிலிருந்து இந்திக்கு: பரம வாணி, இந்தியாக்கம்: பி.கே.பாலசுப்ரமணியன்
(10) மலையாளத்திலிருந்து தமிழுக்கு: உண்மையும் பொய்யும், தமிழாக்கம்: குளச்சல் மு. யூசுப்
(11) மலையாளத்திலிருந்து தமிழுக்கு: ஒற்றைக்கதவு, தமிழாக்கம்: கே.வி.ஜெயஸ்ரீ
(12) தமிழிலிருந்து மலையாளத்துக்கு: மணியபேர, மலையாளமாக்கம்: ஸ்டான்லி

மேலே உள்ள 12 நூல்களில் இரண்டு கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியானது: பாகிஸ்தான் போகும் ரயில் மற்றும் காஷ்மீர் முதல் யுத்தம்.

ஊடகம் பற்றி, பார்வையற்றோருக்கான ஒரு நாள் பயிலரங்கு

இன்று காலை 9.00 மணி முதல் மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் பார்வையற்றோருக்கான ஒரு நாள் பயிலரங்கு ஒன்று நடைபெறுகிறது.  ரோட்ராக்ட் திருஷ்டி மற்றும் சென்னை கோரமண்டல் ரோட்டரி குழு இணைந்து நடத்தும் நிகழ்ச்சி இது. ‘நவீனத் தமிழ் ஊடகங்களில் பார்வையற்றோரின் பங்கேற்பு’ என்பது இதன் தலைப்பு.

காலை 9.00 மணி முதல் 9.30 வரையிலான தொடக்கவிழாவில் ச.சக்திவேல் (ஆசிரியர், பரிவு) தலைமையுரை ஆற்றுகிறார். மாலன் (ஆசிரியர், புதிய தலைமுறை) சிறப்புரை. கரிமல சுப்ரமணியம் (உதவி முதன்மை ஆசிரியர், தி ஹிந்து) வாழ்த்துரை.

9.30 முதல் 11.00 வரை மனுஷ்யபுத்திரன் (ஆசிரியர், உயிர்மை) ‘செய்தி: சேகரிப்பும் பதிவும்’ என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கிறார்.

11.15 முதல் 12.00 வரை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ‘ஊடகமும் அறமும்’ என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

12.00 முதல் 12.45 வரை பழ. அதியமான் (ஆய்வாளர் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர், அகில இந்திய வானொலி நிலையம்) ‘ஒலி ஒளி ஊடகம்’ என்ற தலைப்பில் பேசுகிறார்.

1.30 முதல் 3.00 வரை பத்ரி சேஷாத்ரி (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்), ‘செய்தி: தேர்வும் எடிட்டிங்கும்’ என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கிறார்.

3.15 முதல் 4.00 வரை நிறைவு விழா. அதில் அறிஞர் ஔவை. நடராசன் கலந்துகொண்டு தலைமையுரை ஆற்றுகிறார். பாண்டிராஜ், திரைப்பட இயக்குனர் சிறப்புரை ஆற்றுகிறார்.

மயிலாப்பூர் பக்கமாக யாராவது சென்றுகொண்டிருந்தால் இந்த நிகழ்ச்சியில் தலை காட்டிப் பாருங்கள்.