Sunday, August 31, 2003

கிடா வெட்டத் தடை

இரண்டு நாள் பெங்களூரில். வெள்ளி காலை ரெயில்வே ஸ்டேஷனில் தினமலர் பேப்பர் வாங்கினால் முதல் செய்தி: "கோயில்களில் கிடா வெட்ட ஜெயலலிதா தடை". எங்கும் எதிலும் தனது முத்திரையைப் பதித்தே தீருவது என்ற முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் போலும். வேறு எந்த அமைச்சர் பெயரும் வெளியில் வருவதே இல்லை. இந்தக் கிடா வெட்டல் தடை வரும் முன்னர், ஜெயலலிதாவின் மற்ற சட்டங்கள் மற்றும் அணுகுமுறைகளைப் பார்ப்போம்:
  • குருவாயூர் கோயிலுக்கு யானைகள் வழங்கல்
  • இந்துக் கோயில்களில் இலவச உணவுத் திட்டம்
  • இந்துக் கோயில்களில் ஏகப்பட்ட பணத்தை வாரியிறைத்து இலவசத் திருமணங்கள்
  • மத மாற்றத் தடை சட்டம்
  • குழியில் குழந்தைகளை வைத்து மூடி வழிபடும் ஒருசில வழக்கங்களைத் தடை செய்தல்
  • அயோத்தியில் கோயில் கட்ட ஆதரவு
  • கோயில் யானைகளுக்கு விடுமுறை + சத்து உணவு
  • இப்பொழுது கிடா வெட்டத் தடை
இதில் பல பொதுமக்களிடமிருந்து ஆதரவு பெற்றவை. ஆனால் உள்ளூரப் பார்க்கும் போது பிராமணத்துவம் மிகுந்த இந்துத்துவா தொக்கி நிற்பதைக் காணலாம். இது பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தால் கூட நடைமுறைப்படுத்தப் பட்டிருக்குமா என்பது சந்தேகமே.

Saturday, August 30, 2003

மும்பை குண்டு வெடிப்பு மற்றும் பல அழிவுகள்

மும்பை குண்டு வெடிப்பில் 46 பேர் உயிரிழந்தனர். அதற்கு இரண்டு நாள் கழித்து டாமனில் ஒரு பாலம் இடிந்து விழுந்து அதில் பயணம் செய்து கொண்டிருந்த 25 சிறுவர்கள் இறந்துள்ளனர். இதற்கு நிச்சயமாகத் தீவிரவாதிகள் பொறுப்பில்லை.

நம்மிடையே உயிர் இழப்பு பற்றி ஒருவித மரப்புத்தனமை ஏற்பட்டு விட்டது. 100 உயிராவது ஒரேயடியாகப் போனால்தான் ஒரு "த்சொ". 250 உயிருக்கு மேலாகத்தான் கொஞ்சம் வருத்தம். ஒரு 1000 உயிர் என்றால்தான் ஏதாவது செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது.

அலாஸ்டேர் கேம்ப்பெலுக்கு கல்தா

கடைசியாக இந்த "spin doctor" வெளியே போகிறார். இவர் பிரித்தன் பிரதமர் டோனி பிளேரின் தகவல் துறை ஆலோசகராக இருந்தவர். உண்மையான வேலை என்னவென்றால் என்ன தகிடுதத்தம் நடந்தாலும் அதை நல்ல விஷயமாக உருமாற்றி பத்திரிக்கைகளுக்கு புருடா விடுவது.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இராக் மீது சண்டைக்குக் கிளம்பும்போதே பிளேருக்கு சனி பிடித்தது. பிளேர் ஒருவர்தான் புஷ் பக்கம். ஆனால் பிரித்தனில் அமெரிக்கா மாதிரி சும்மா வீர வசனம் பேசி மட்டும் படைகளை வெளி நாட்டுக்கு அனுப்ப இனியும் முடியாது. ஊருக்குள் நிறைய எதிர்ப்பும் வேறு. கேம்ப்பெல் உடனடியாக நிறைய புரட்டு வித்தைகள் செய்து இராக் அணுகுண்டு செய்வதாகவும், நுண்ணுயிரிகளை வைத்து பேரழிவு ஆயுதங்கள் படைப்பதாகவும், வெறும் 45 நிமிடத்தில் பிரித்தன் வரை வந்து அந்த ஆயுதங்கள் மூலம் நாட்டையே அழித்து விடக்கூடும் என்றும் மக்களுக்கு பயங்காட்டினார்.

இந்த "45 நிமிடம்" செய்திக்கு எந்தவித ஆதாரமும் இல்லை, கேம்ப்பெல்லின் இடைச்செருகல் என்று டேவிட் கெல்லி என்னும் பிரித்தன் அரசின் அழிவாயுத நிபுணர் பி.பி.சிக்கு போட்டுக் கொடுக்க, பிளேரின் அரசுக்கு ஆபத்து. உடனே டேவிட் கெல்லியை விடாது தொல்லைப்படுத்த அவர் கொடுமை தாங்க முடியாது தற்கொலை செய்து கொண்டார். இப்பொழுது விசாரணைக் கமிஷன் எதுதான் உண்மை என்று தோண்டித் துருவ ஆரம்பிக்க, முதலாவது பலி கேம்ப்பெல். ராஜினாமா செய்து விட்டார்.

அடுத்து பிளேர் ஒழிய வேண்டும்.

Thursday, August 28, 2003

ராஜ்ய சபா நியமன உறுப்பினர்கள்

மத்திய ரிசர்வ் வங்கியின் வெளியேறும் ஆளுநர் பிமல் ஜலான், ஹிந்தி சினிமாவின் முன்னாள் நடிகை ஹேம மாலினி (கும்பகோணம் பெண் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்), இந்திய விண்வெளி ஆய்வு மையத் தலைவர் கஸ்தூரி ரங்கன், மல்யுத்த வீரர் தாரா சிங், தில்லியிலிருந்து வெளியாகும் 'தி பயனீர்' ஆங்கில செய்தித்தாள் ஆசிரியர் சந்தன் மித்ரா, சமூக சேவகர் நாராயண் சிங் (என்ன சேவை புரிந்தவர் என்று தெரியவில்லை) மற்றும் ஹிந்தி அறிஞர் வித்யா நிவாஸ் மிர்தா ஆகிய ஏழு பேர்களும் பாராளுமன்றத்தின் மேலவைக்கு நியமன உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சுந்தர ராமசாமியும் தினமலரும்

பிரபலத் தமிழ் எழுத்தாளர் சுந்தர ராமசாமிக்கு கதா சூடாமணி விருது, வாழ்நாள் முழுவதும் இலக்கியத்திற்கான சேவைக்காக வழங்கப்பட்டுள்ளது. நாமெல்லாம் இந்த இலக்கியத்திற்கான சேவை தமிழ் இலக்கியத்துக்கு என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் தமிழ் நாளிதழான தினமலர் வேறு ஏதோ சொல்ல முயற்சிக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

அவர்களது இணைய இதழில் இவ்வாறு எழுதியுள்ளனர்.

"இவர் [சு.ரா] பல்வேறு சிறுகதைகள், நாவல்கள், கவிதை, மற்றும் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரது நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் முதலியன மலையாளம் மற்றும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன."

இதைப் படிக்கும் போது, சு.ரா தமிழ் எழுத்தாளரா, இல்லை வேற்று மொழி எழுத்தாளரா என்பது புரியாமல் பொதுமக்கள் திகைக்க வேண்டிவரும்.

"இவர் எழுதிய 'ஒரு புளியமரத்தின் கதை' என்ற நாவல் ஆங்கிலத்திலும், இந்தியிலும், மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ரோனிட் ஙூஸ்ஸி என்பவரால் ஹீப்ரு மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவரின் ஜே.ஜே. என்ற நாவலின் குறிப்புகள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது."

முதல் இரண்டு வரிகளைப் படிக்கையில் சு.ரா தமிழிலும் எழுதியிருக்கலாம் என்பது போன்ற தோற்றம் ஏற்படும். கடைசி வரியைப் படிக்கையில் அவர் எழுதிய மற்றுமொரு புத்தகத்தின் பெயர் "ஜே.ஜே" என்று அறிந்து, சரி, புரட்சித் தலைவி, பொன்மனச் செல்வி, டாக்டர் J.J பற்றி இருக்கும் என்று நினைத்துக் கொண்டு கழகத் தொண்டர்கள் கடைகளுக்குப் புறப்படலாம்.

அப்புறம் ஏன் இந்தப் புத்தகத்தின் "குறிப்புகள்" மட்டும் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, முழுப் புத்தகத்தையும் மொழிபெயர்க்க மாட்டார்களோ என்ற கேள்விகளும் வரும்.

தினமலர் சப்-எடிட்டரின் தமிழ் மற்றும் தமிழ் இலக்கியத் தொண்டுக்காக அவருக்கு ஏதேனும் விருது கிடைக்குமா?

Wednesday, August 27, 2003

மெரினா கடற்கரை

சென்னைக் கடற்கரையில் குப்பை போட்டவர்களைப் பிடித்து ஆளுக்கு ரூ. 25 அபராதம் போட்டுள்ளார்கள். இனிமே சுண்டல் வாங்கித் தின்னுட்டு அந்தத் தாளையெல்லாம் பத்திரமா வீட்டுக்குக் கொண்டு வந்து படிச்சுட்டு குப்பைத் தொட்டில போடுங்க.

மழைநீர் சேகரிப்பு

* காலையில் அலுவலகம் வரும் வழியில் வழக்கமாக சென்னை FM 2 கேட்டுக் கொண்டு வருவேன் (8.45-9.00 மணி). அதில் செய்திகளை அலசும் விவாதம் ஒன்று நடக்கும். இன்று வித்தியாசமாக ரேடியோ மிர்ச்சி 98.3 FM போட அதில் முதல்வர் ஜெயலலிதா அழகு தமிழில் மழைநீர் சேகரிப்பு பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். இராமநாதபுரத்தில் மழைநீர் சேகரிப்பு + அரசு சார்பில் குளம், குட்டை, சாக்கடை, கால்வாய் எல்லாம் தூர் வாரப்பட்டு தண்ணீர் சேகரித்து வைத்ததில் அங்கு தண்ணீர்ப் பஞ்சம் போயே போய் விட்டது என்றும் வறட்சி சமயத்தில் பிழைப்புக்காக மற்ற ஊர்களுக்கு ஓடும் இராமநாதபுரம் மக்கள் இப்பொழுது' வரலாறு காணாத அளவில்' நிம்மதியாக ஊரோடே இருப்பதாகச் சொன்னார். நம்ப முடியவில்லை. ஆனாலும் மழைநீர் சேகரிப்பு மிக மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. என் குடியிருப்பிலும் இன்றோடு வேலை முடிந்து விடும்.

* வக்கீல் K.M.விஜயன் (VOICE என்னும் அமைப்பு சார்பில்) பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருக்கிறார். இந்த மழைநீர் சேகரிப்புக்கான அமைப்பு இல்லாத வீடுகளுக்கு சென்னைக் குடிநீர் வாரியம் தண்ணீர் வழங்குவதை நிறுத்தி விடும் என்று சொல்வது நியாயமானதல்ல என்கிறார். அதுவும் மிகக் குறைந்த காலகட்டமே மக்களுக்குக் கொடுக்கப்பட்டது என்றும், PVC குழாய்கள் இப்பொழுது ஆனை விலை விற்பதாகவும், இதெல்லாம் சரியில்லை என்றும் அவரது வாதம். என்னுடைய பழைய வலைப்பதிவு ஒன்றையும் பார்க்கவும்.

Monday, August 25, 2003

மும்பையில் குண்டு வெடிப்பு

இன்று மும்பையில் இரு இடங்களில் குண்டு வெடித்துள்ளது. 45 பேருக்கு மேல் மரணமடைந்துள்ளனர். காஷ்மீர், அஸ்ஸாம், முன்னர் பஞ்சாப் போன்ற தீவிரவாதம் அதிகமான இடங்களில் மட்டுமே இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் தீவிரவாதம் உச்சத்தில் இருந்த போது தில்லியில் தொல்லைகள் அதிகமாக இருந்தது. அனால் அங்கு கூட இதுபோன்ற பெரும் அளவில் குண்டு வெடிப்பு நடந்து இத்தனை பேர் பலியானதில்லை.

Thursday, August 21, 2003

நான்கு நாட்களுக்கு விடுமுறை

ஆகஸ்டு 24 வரை இந்த வலைப்பதிவில் ஏதும் ஏறாது. அதுவரை தமிழ் இணையம் 2003 பற்றிய என் வலைப்பதிவைப் பாருங்களேன்? சென்னையில் இத்தனை பெரிய விஷயம் நடக்கிறது, அதை விட்டுவிட முடியுமா, என்ன?

Tuesday, August 19, 2003

சிறுவர் கல்வி, மற்றும் கொடுமை

இன்றைய செய்தித்தாளில் கல்வி பற்றிய சிறு செய்திகள்.

1. சென்னை வேப்பேரியிலுள்ள டவ்டன் மடிக்குழைப் பள்ளியில் தமிழாசிரியர் (பால் தெரியவில்லை, ஆசிரியையாயும் இருக்கலாம்) தமிழ் எழுத்துக்களை சரியாக எழுதவில்லை என்று எல்.கே.ஜி படிக்கும் நான்கே வயதான பிஞ்சுச் சிறுமி ஒருத்தியை சரமாரியாக அடித்துத் தாக்கியதால், பெற்றோர்கள் குழந்தையை வேறு பள்ளிக்கு மாற்றியுள்ளனர். மாநில மனித உரிமைக் கழகத்திடம் புகாரும் கொடுத்துள்ளனர். சில நாட்கள் முன்னர்தான் வேலம்மாள் மடிக்குழைப் பள்ளியின் மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டது பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள்.

செய்தி

2. இன்னும் கொடுமையான செய்தி இது. செயிண்ட் மேரி மடிக்குழைப் பள்ளி, பல்லாவரத்தில், மூன்றாவது படிக்கும் சிறுமிகளை, விளையாட்டுத்துறை ஆசிரியர் வன்புணர்ந்தார் என்று உறுதியாகி உள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு சிறுமிக்கு ரூ. பத்து லட்சம் அபராதம் அந்தப் பள்ளி தரவேண்டும் என்று வசந்தி தேவி தலைமையிலான விசாரணைக் கமிஷன் உத்தரவு இட்டுள்ளது. நஷ்ட ஈடு கொடுத்து சரிக்கட்டக் கூடிய கொடுமையா இது? இது ஒரு பெண் குழந்தையை மட்டும் பாதிக்கவில்லை, இன்னும் பல குழந்தைகளையும் பாதித்திருக்கும் என்று கருத்து நிலவுகிறது.

செய்தி

3. இந்த ஹிந்து நாளேட்டில் வந்த செய்திக்கான சுட்டி இணையத்தில் கிட்டவில்லை. சென்னை மாநகராட்சி, கடற்கரையில் சுண்டல் விற்கும் சிறாருக்காகத் தனிப் பள்ளி தொடங்க இருப்பதாகச் செய்தி. எப்படியாவது இந்தக் குழந்தைகளை படிப்பு பக்கம் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு அவர்கள் வேலை செய்வதையும் நிறுத்த வேண்டும் என்றும் அரசு எதிர்பார்க்கிறது.

கல்வியின் பால் அவர்களை ஈர்ப்பது சரி. ஆனால் அவர்களது வாழ்க்கையைப் பொறுத்த மட்டில் சுண்டல் விற்பதைத் தவிர்த்தால் அவர்களுக்கு சோறு கிடைக்கும் என்று தோன்றவில்லை. மாநகராட்சி மூன்று வேளையும் அவர்களுக்கு சோறூட்டி, தங்க இடம் கொடுக்குமா? இல்லாத நிலையில் அவர்கள் செய்யும் வேலையைச் செய்து கொண்டிருக்கட்டும். மதிய நேரத்தில் சுண்டல் எப்படியும் விற்க முடியாது. அப்பொழுது கல்வி கற்பிக்கட்டும். கொஞ்சம் நல்ல சோறும் ஒரு வேளையாவது போடட்டும்.

Sunday, August 17, 2003

கொழும்பு பயணம்

வேலை நிமித்தமாக இன்று ஒருநாள் கொழும்பு வர வேண்டியிருந்தது.

நேற்று இரவு ஸ்ரீலங்கன் விமானத்தில் பயணம். இப்பொழுது இந்தியப் பயணிகள் இலங்கை வருவதற்கு விசா வாங்க வேண்டிய தேவையில்லை. இறங்கியவுடன் விமான நிலையத்திலேயே கடவுச்சீட்டில் அனுமதி வாங்கிக்கொள்ளலாம்.

சென்னை விமான நிலையத்தில் இலங்கை ரூபாய்கள் வாங்க பாரத ஸ்டேட் வங்கியை அணுகினால் அங்கு வேலை பார்க்கும் ஊழியர் பத்து நிமிடம் கழித்து வரச்சொன்னார். இருபது நிமிடம் கழித்துச் செல்கையில் அங்கு வேறொரு ஊழியர், மிகக் கண்ணும் கருத்துமாக ஏதோ அமீரகப் பணக்கட்டில் தாள்களை எண்ணிக் கொண்டிருந்தார். அவரும் சொன்னது: "இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு வாங்களேன்." கொஞ்சம் தள்ளி அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கியின் நாணய மாற்றுக் கிளை. அதற்கு முன் பெருங்கூட்டம். அங்கு போய் ஒரு வழியாகக் கொஞ்சம் இலங்கைப் பணத்தாள்களைப் பெற்றுக் கொண்டு வேண்டுமென்றே வம்புக்காக, ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் பாரத ஸ்டேட் வங்கி ஊழியரை அணுகினேன். மீண்டும், "இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு வாங்க."

இரு வங்கிக் கிளைகளிலும் வேலை பார்ப்பது நம்மூர் ஆசாமிகள்தான். ஏன்தான் இப்படி ஒரு உழைப்பில் வித்தியாசமோ?

ஒரே இரைச்சலுடன் ஏர்பஸ் விமானம் சென்னையிலிருந்து கிளம்பி கொழும்பு வந்தடைய வெறும் ஒரு மணி நேரமே பிடிக்கிறது. சும்மா இல்லாமல் விமானத்தில் இருந்த 'தினமுரசு' என்ற வாரப் பத்திரிக்கையைத் திருப்பினால் உள்ளே சுஜாதாவின் தொடர்கதை 'வண்ணத்துபூச்சி வேட்டை' என்று நினைக்கிறேன். புதிதாக எழுதுகிறாரா அல்லது பழைய சரக்கா என்று தெரியவில்லை. வாலி தன் சொந்த வாழ்க்கை பற்றி எழுதுகிறார். நிறைய அரசியல் கட்டுரைகள். இந்தப் பத்திரிக்கை புலி ஆதரவா, எதிரா என்று புரியவில்லை. ரணில் விக்கிரமசிங்கேயின் பிரதம ஆலோசகர் ஸ்ரீலங்கன் நிறுவனத்தில் ஏதோ ஊழல் செய்து விட்டார் என்று ஒரு கட்டுரை. நம்மூர் சமாசாரம்தான். நடுப்பக்கம் திருப்பினால் குறைந்த ஆடைகளோடு கோடம்பாக்கம் "அழகிகள்" அழகு காட்டுகின்றனர். தமிங்கிலம் தலை விரித்தாடுகிறது. ஷாலினி அஜித்துக்கு அறிவுரை சொல்கிறாராம், "ஒழுங்கு மருவாதையா படத்துல நடி, சும்மானாச்சிக்கும் துப்பாக்கி சுடறது, கார் ரேஸ் போறதுன்னு டயத்த வேஸ்டு பண்ணாத". அப்புறம் கருணாஸுக்கும், விவேக்குக்கும் தகராறு, ரதி என்னும் நடிகையை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய தயாரிப்பாளர், பல "ஸ்டில்" படங்கள் என்று கண்ணுக்கு நிறைவாக இருக்கிறது. அடுத்த பìகம் இன்னும் பயங்கரம்: யாரோ ஒரு இலங்கைத் தமிழ் அபிமானி, நடிகர் விஜய் பேரில் எழுதிய அருமையான கவிதை, இன்னும் பல 'புதுக்கவிதை' என்ற பெயரில் சினிமாக்கள் பற்றி எழுதப்பட்ட கொடுமைகள்.

வெளியே வந்தால் குடியேறல் துறை அலுவலர் பொறுமையாக கடவுச்சீட்டில் அச்சடித்து வெளியே அனுப்புகிறார். சுங்க அதிகாரியைத் தாண்டி வெளியே வருகையில் நாளுக்கு நாள் மாறி வரும் கொழும்பு தெரிகிறது.

காரில் தங்குமிடத்துக்குச் செல்லும்போது, போர் நிறுத்தத்தினால் உள்ள தெளிவும், அமைதியும், கேளிக்கையும், சந்தோஷமும் மனதைத் தொடுகிறது. கூட்டம் கூட்டமாக இளம் பெண்களும், ஆண்களும் இரவு பதினொரு மணிக்கு மேல் தெருவில் கை கோர்த்து நடந்து கொண்டிருக்கின்றனர். எங்கு பார்த்தாலும் விளக்குச் சரங்கள் மின்னுகின்றன. எப்பொழுதும் காட்டமாக இருக்கும் தெருவோர செக்போஸ்டுகள், அதிலிருந்து முறைத்துப் பார்க்கும் கையில் துப்பாக்கி ஏந்திய இராணுவ வீரர்கள் என்ற கெடுபிடிகள் மிகவும் தளர்த்தப்பட்டுள்ளன. என் கடவுச்சீட்டைக் காண்பிக்கும்படி யாரும் கேட்கவில்லை.

இன்று காலையில் ஹோட்டல் அறையிலிருந்து வெளியே பார்த்தால் நுரை பொங்கும் கடலும், கரையெல்லாம் கூட்டமும். தெருக்களும், கடற்கரையும் சென்னையை விடப் பலமடங்கு துப்புறவாக உள்ளன.

அமைதி வேண்டும். சந்தோஷம் வேண்டும். தெருவில் கூட்டம் கூட்டமாய்ப் போய்க்கொண்டிருக்கும் இளைஞர்களை நினைத்துக் கொள்கிறேன். நன்றாகக் குடிக்கட்டும். காதலிலும், கலவியிலும் சந்தோஷம் பெறட்டும். அவ்வப்போது வேண்டுமென்றால் புத்தனோ, சிவனோ, சிலுவையோ, மசூதியோ அதன்முன் ஒரு நிமிடம் கண்மூடி நிற்கட்டும்.

அப்பொழுதாவது போர் மீண்டும் மூளாமல் தடுக்கப்படலாம்.

Saturday, August 16, 2003

அருண் ஷோரியின் கட்டுரை

திரு. அருண் ஷோரி மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருப்பவர். அரசு நிறுவனங்களை தனியார் துறையாக்குவதற்கான இலாக்கா பொறுப்பையும் கூட வகிப்பவர். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் ஆசிரியராக இருந்தவர்.

இந்தியா எவ்வாறெல்லாம் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பது பற்றி இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் எழுதியுள்ள கட்டுரை படிக்க வேண்டிய ஒன்றாகும்.

Friday, August 15, 2003

டிஷ்நெட்டின் DSL சேவை

இன்று சுதந்திர தின வாழ்த்துக்கள். என் வீட்டில் உள்ள இணைய இணைப்பு டிஷ்நெட் டி.எஸ்.எல் என்னும் நிறுவனத்தின் தோய் உறுக் கம்பி (digital subscriber line = தோய் உறுக் கம்பி; நன்றி இராம.கி) சேவை. இது 64kbps வேகத்தில் இருந்து வந்தது. இன்றுமுதல் 512kbps வேகத்தில் வருகிறது! இது என்னைப் பொறுத்தவரையில் மின்னல் வேகம்! மாதச் செலவு ரூ. 1,000 மட்டுமே. தொழில் முன்னேற்றம் அடைந்த நாடுகளில் கூட இந்தக் கட்டணத்தில் இதுபோன்ற ஒரு சேவையைக் கொடுக்க முடியும் என்று தோன்றவில்லை!

தமிழில் சமாசார்

சிஃபி.காம் என்னும் இணைய நிறுவனம் சமாசார் என்னும் சேவையை நடத்தி வருகிறது. இந்தத் தளத்தில் இந்தியா பற்றிய அனைத்து இணையச் செய்தித் தளங்களிலிருந்து செய்தித் தலைப்புகளை சேகரித்து ஓரிடத்தில் தொகுத்து வழங்குகின்றனர். இது 1999 முதல் (இந்தியாவோர்ல்டு என்னும் நிறுவனத்தின் கையில் இருக்கும்போது) நடந்து வருகிறது என்று நினைக்கிறேன்.

இப்பொழுது அதே நிறுவனம் இந்த சேவையை தமிழில் துவக்கி இருக்கிறது. இதன் மூலம் தமிழில் இருக்கும் பல்வேறு இணையத் தளங்களின் தமிழ்ச் செய்திகளை ஓரிடத்தில் இருந்தவாறே பார்க்க முடிகிறது. விரும்பும் இடங்களுக்குப் போகவும் முடிகிறது. ஒவ்வொரு செய்தி(த்தாள்) நிறுவனமும் தன் விருப்பப்படி ஒரு எழுத்துக்குறி+உருவைப் பயன்படுத்தியபடி இருக்க அவையனைத்தையும் உரு/குறி மாற்றி ஓரிடத்தில் தொகுப்பது என்பது மிகப்பெரிய விஷயம். திறம்பட நிர்வகிக்கும் வெங்கடேஷிற்குப் பாராட்டுக்கள். IEஇல்தான் பார்க்க முடிகிறது. மொசில்லாவில் தகறாறு. இதனை யூனிகோடுக்கு மாற்ற முடிந்தால் இன்னும் நலமே.

தமிழ் இணையம் 2003

தமிழ் இணையப் பல்கலைக் கழகமும், சென்னை அண்ணா பல்கலைக் கழகமும் இணைந்து தமிழக அரசு மற்றும் உத்தமம் அமைப்பின் ஆதரவோடு சென்னையில் ஆகஸ்டு 22-24, 2003இல் "தமிழ் இணையம் 2003" என்னும் மாநாட்டை நடத்துகின்றன.

இது உலகத் தமிழ் இணையக் கருத்தரங்கு வரிசையில் ஆறாவதாகும்.

நான் முதலாவதாக சிங்கப்பூரில், 1997இல் நடந்த "தமிழ்நெட் '97"இல் கலந்து கொண்டேன். அங்கு "Presentation of the Tamil Nadu Budget 1997 Live via the Internet" என்னும் தலைப்பில் பேசினேன். நான் அப்பொழுது சைபர் குளோப் இந்தியா என்னும் நிறுவனம் நடத்தி வந்த "நெட்கஃபே" என்னும் இணைய மையத்தில் தொழில்நுட்ப ஆலோசகனாக வேலை செய்து வந்தேன். தமிழக நிதிநிலை அறிக்கை 1997 தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டபோது அதின் சாரத்தை இணையத்தில் அச்சிட்டோம். அப்பொழுது என்ன எழுத்துக் குறியீட்டையும், உருவையும் பயன்படுத்தினோம் என்றெல்லாம் இப்பொழுது நினைவுக்கு வரவில்லை.

சிங்கப்பூர் மாநாடு பற்றி இப்பொழுது நினைவுக்கு வருவதெல்லாம் மறைந்த திரு கோவிந்தசாமியின் அயராத உழைப்பும், அன்பும்தான்.

1998 முதல் என் கவனம் கிரிக்கெட் திசையில் முழுவதுமாகத் திரும்பியது. தமிழ்நெட் '99 சென்னையில் நடந்த போது அங்கு ஓரிரு மணிநேரம் செலவு செய்திருப்பேன் என்று நினைக்கிறேன். பின்னர் மீண்டும் கணினித்தமிழ் பற்றிப் புரிந்து கொள்ள ஆரம்பித்தது மார்ச் 2003இல்தான். இடையில் இரண்டு கிரிக்கெட் உலகக்கோப்பைகள், மூன்று உலகத் தமிழ் இணையக் கருத்தரங்குகள், எண்ணற்ற முன்னேற்றங்கள்.

ஆறாவது கருத்தரங்கில் ஒரு ஓரத்தில் பார்வையாளனாக இருப்பேன். இங்கு நடக்கும் கருத்தரங்கின் முக்கியப் பரிமாற்றங்களை எனது வலைப்பதிவில் நேரடியாகப் பதிவு செய்வேன். ஆம், அந்த அளவிற்கு கணினி, இணைய இணைப்பு, கணினித்தமிழ், வலைப்பதிவு ஆகியவை முன்னேறி விட்டது.

இன்னும் பல முன்னேற்றங்கள் காண வாழ்த்துக்கள்.

Monday, August 11, 2003

சீரணி அரங்கம் பற்றிய தமிழக அரசின் விளக்கம்

மிகவும் புதிரான, புதிதான விளக்கம் தமிழக அரசிடம் இருந்து வந்துள்ளது. சீரணி அரங்கத்தில் கூட்டம் கூடுவதால் போக்குவரத்து நெரிசல் என்று மாநகராட்சி மற்றும் காவல்துறை கூறியனராம்; அந்தக் கட்டிடம் இடிந்து விழுந்துவிடும் அற்றுப்போன நிலையில் உள்ளது என்று பொதுப்பணித் துறையினர் கூறினராம். உடனே இரவோடு இரவாக உடைக்க வேண்டிய கட்டாயம் என்ன?

இந்த விஷயத்தை வெளியே தெரியப்படுத்தி அதன் பின்னர் செய்திருந்தால் யாருக்கும் எந்த சந்தேகமும் வராதே? ஏன் இந்த மூடிமறைத்தல்? இரகசியக் கட்டிடம் இடித்தல் எல்லாம்?

இடித்தல் நடந்துமுடிந்து விட்டது. இனி அங்கு ஏதும் கட்டப்படப் போவதில்லை. இது சிறு விஷயம்தான். ஆனால் நடைமுறையைப் பார்க்கும் போது அதிர்ச்சி தரக்கூடியது. இந்த அரசு வந்தது முதல் தன்போக்குக்கு என்ன தோன்றுகிறதோ அதைத்தான் செய்து வருகிறது. தட்டிக்கேட்க ஆள் இல்லை, தட்டிக்கேட்டாலும் அதைப் பற்றிக் கவலைப் படப்போவதில்லை என்ற சர்வாதிகாரத்தனம்தான் தெரிகிறது. இந்தமாதிரியான அதிகார துஷ்பிரயோகம் மிகவும் கண்டிக்கத்தக்கது, இதுபோன்ற முதல்வர்கள் மீண்டும் வரக்கூடாது. பதவியிலிருந்து தூக்கி எறியப்படவேண்டும்.

வேலை நிறுத்தம் பற்றிய சோலி சொராப்ஜியின் கருத்து

அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி, உச்ச நீதிமன்றம் [தமிழக] அரசு ஊழியர் வேலை நிறுத்தம் பற்றிய தீர்ப்பு பற்றி தன் கருத்துக்களைக் கூறுகையில் தேவையில்லாமல் ஒரு சில கருத்துக்களை வெளியிட்டிருக்கிறது என்கிறார். முக்கியமாக அரசு ஊழியர்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட எந்தவித நியாயமான உரிமையும் இல்லை என்று சொல்லியிருப்பது தேவையற்றது, மற்றும் புரிந்துகொள்ள முடியாதது என்கிறார். இது அவரது சொந்தக் கருத்து என்றே தோன்றுகிறது. மத்திய அரசு தலையிட்டு தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் உரிமையை - முக்கியமாக கூட்டு சேர்ந்து சம்பளத்திற்காகப் பேரம் பேசுவது (collective bargaining), தன் உரிமைகளுக்காக [தேவையான] வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது (industrial action, striking) போன்றவை - நிலைநாட்டுமா என்பது புரியவில்லை. மத்திய சட் அமைச்சர் அருண் ஜெயிட்லி இதுவரை கருத்து எதுவும் கூறவில்லை. பிரதமர், மற்றும் துணைப்பிரதமரும் கருத்தொன்றும் கூறவில்லை.

Sunday, August 10, 2003

சீரணி அரங்கம் இடிப்பு

இப்பொழுது வார இறுதி விடுமுறையில் ஸ்ரீரங்கத்தில் இருக்கிறேன். இன்று காலை தொலைக்காட்சி செய்தியில் சென்னைக் கடற்கரை சீரணி அரங்கம் இரவோடு இரவாக பொதுப்பணித்துறையினரால், காவலர் உதவியுடன் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டுள்ளது காண்பித்தனர். ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு ஏன் இப்படி நடந்து கொள்கிறது என்று புரியவில்லை. மக்களுக்கு ஒரு விளக்கமும் காணோம். கண்ணகி சிலை, இப்பொழுது சீரணி அரங்கம் - நடுவில் இராணி மேரி கல்லூரி இடிக்கமுடியாது போய்விட்டது.

அடுத்தமுறை ஆட்சிப்பக்கமே வராதவாறு ஜெயலலிதாவை மக்கள் தூக்கி எறிய வேண்டும்.

Friday, August 08, 2003

தமிழில் வலைப்பதிவு செய்வது எப்படி? - 2

வலைப்பதிவு என்ன அப்படி ஒரு பெரிய விஷயம் என்று நீங்கள் கேட்கலாம். 2-3 வருடங்கள் முன்னதாக எல்லாரும் தனக்கென ஒரு இணையத்தளம் அமைக்க ஆசைப்பட்டனர். யாஹூ ஜியோசிட்டி, டிரைபாடு என்றெல்லாம் இருந்தன. இதில் இணையத்தளம் அமைக்க HTML அறிவு தேவைப்பட்டது. இருந்தாலும் இங்கெல்லாம் ஆங்கிலத்தில் எழுதுவதுதான் எளிதாக இருந்தது. மற்ற மொழியானால் ஒரே பாடு. கனடாவிலிருந்து மகேன் தான் பட்ட பாட்டைப் பற்றி எழுதியிருந்தார். பாமினியிலிருந்து, திஸ்கி 1.6, தாம், தாப், திஸ்கி 1.7, இப்பொழுது யூனிகோட் என்று தொந்தரவு. சாதாரண மக்கள் தமக்குத் தோன்றியவற்றை எழுத
- கணினி தேவை
- இணைய இணைப்பு தேவை
- HTML அறிவு தேவை
- அதற்கு மேல் தமிழ் எழுத்துருக்கள் தேவை

இப்படி அலைக்கழிக்கப்படும்போது ஒருவன் இதெல்லாம் அப்புறமாப் பாத்துக்கலாம் என்றுதான் ஓடி விடுவான்.

இப்பவும், கணினியும் தேவை, இணைய இணைப்பும் தேவை. ஆனால் இந்த வலைப்பதிவுகள்ல் வந்த பின், HTML பற்றி ஒன்றும் அறிந்திருக்க வேண்டியதில்லை. கணினியின் உள்ளுரைச் செயல்திட்டம் பற்றி அறிந்திருக்க வேண்டியதில்லை. Graphics, design அறிவு ஏதும் தேவையில்லை. வெறுமே பெயரைப் பதிவு செய்து, ஒரு design templateஐத் தேர்ந்தெடுத்து எழுத ஆரம்பிக்க வேண்டியதுதான். உங்கள் கவனம் எல்லாம் சுய எண்ண வெளிப்பாட்டிலே (self-expression) இருந்தால் போதும், மற்ற சுற்று தேவதைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.

எழுத்துரு என்னும் தொல்லை இருக்கவேதான் செய்கிறது. இங்குதான் யூனிகோட் உதவி செய்யும் என்று எதிர்பார்ப்பு. பலரும் கூறுவது போல் தமிழ் யூனிகோடில் ஒரு சில தொல்லைகள் இருந்தாலும், அது மற்ற எல்லாவற்றையும் விட எவ்வளவோ மேல் என்பது எனது தாழ்மையான எண்ணம்.

எங்கிருந்து ஆரம்பிப்பது? எப்படி ஆரம்பிப்பது?

பல கேள்விகள். விடைகள் இன்னும் வரப்போகும் தொடரிலே.

அதற்கு முன் மதி அவர்கள் பராமரித்து வரும் தளத்துக்குச் சென்று அங்கு உள்ள தமிழ் வலைப்பக்கங்களைப் பாருங்கள். எல்லாமே யூனிகோடில் இருக்காது - ஒரு சில மட்டுமே. மற்றவைகளையும் பார்த்தால் உங்களுக்கே பல விளங்கும். உடனடியாக வலைப்பதிவு ஆரம்பிக்க ஆசையா - இங்கு செல்லுங்கள்.

இல்லையா, கவலையே படாதீர்கள் - உங்கள் அத்தனை பேரையும் வலைப்பதிவு செய்ய வைப்பது நானாயிற்று. படித்துக்கொண்டே இருங்கள்.

தமிழில் வலைப்பதிவு செய்வது எப்படி? - 1

வலைப்பதிவு என்பது weblogs (மருவி blogs ஆகியது) என்பதன் தமிழாக்கம். மணி மணிவண்ணன் வலைப்பூ என்று பெயர் சூடினார். இதைப்பற்றி மாலன் திசைகளில் எழுதி நிறையவே பரப்பியுள்ளார்.

கற்காலம் முதலாகவே மனிதன் தன் எண்ணங்கள் பிறருக்குப் போய்ச் சேர வேண்டும் என்று எண்ணி குகையில் ஓவியங்கள் தீட்டினான், சிற்பமாய் செதுக்கினான், பின்னர் களிமண் வட்டைகளை (clay tablets) வடித்தான். ஓலைகளில் எழுத்தாணி கொண்டு எழுதினான். பேப்பரில் அச்சு செய்யக் கற்றான், அதன் பின் புத்தகங்கள் மலிந்தன. பின்னர் இணையம் வந்தது.

இணையத்தில் தமிழில் எழுத எவ்வளவோ முயற்சிக்குப்பின் இப்பொழுது சாத்தியப்படுகிறது. முதலில் தனித் தனியாக ஒருவரோடு ஒருவர் அஞ்சலாட முடிந்தது. பின்னர் குழுவாகப் பேசி (சண்டை போடவும்) முடிந்தது. இவையெல்லாம் பரிணாம வளர்ச்சியாக வலைப்பதிவில் வந்து முடிந்துள்ளது. ஒரு சில அறிவாற்றலும், திறமையும், நேரமும் உள்ளவர்களால்தான் அச்சிலோ அல்லது இணையத்திலோ இதழ்கள் (magazine) நடத்த முடிகிறது, அதில் பங்கேற்கவும் முடிகிறது. யாஹூவில் பல குழுமங்களை உருவாக்கினால், ஒவ்வொன்றிலும் ஒரு சிலவற்றைப் பற்றித்தான் பேச முடிகிறது. மேலும் இவ்வாறு இங்கு விவாதிக்கையில், பல குடுமிப்பிடி சண்டையாய் முடிகிறது. சிலவற்றைச் சொல்கையில் யாரும் பதில் கூடப் போட மாட்டேன் என்கிறார்கள். பலருக்கு இந்த யாஹூ குழுமங்கள் இருப்பதே தெரிவதில்லை. எந்த ஒரு தமிழ் யாஹூ குழுமத்திலும் (தினம் ஒரு கவிதை நீங்கலாக) 400 பேருக்கு மேல் பங்கு கொள்வதில்லை. உலகில் வெறும் 400 தமிழ்ர்கள்தான் இணையத்தில் உள்ளனரா?

Thursday, August 07, 2003

நான் படிக்கும் ஒரு சில வலைப்பதிவுகள் - 1

ராஜேஷ் ஜெயின் என்பவர் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இவர் India World என்றொரு இணைய தளத்தைத் துவங்கி, தனது தொழிலை இப்பொழுது SIFY Ltd (முன்னர் Satyam Infoway என்ற பெயர்) என்ற நிறுவனத்திடம் விற்றவர். இந்திய இணையப் புரட்சியில் பெரும் பணம் செய்தவர்! இவர் இப்பொழுது Netcore என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது வலைப்பதிவு படிக்க வேண்டிய ஒன்றாகும்.

பள்ளிக்குழந்தைகள் பற்றி...

சில நாட்களுக்கு முன் சென்னை வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவன் அபினவ் என்பவன் பள்ளியில் ஆசிரியர் கொடுமை தாங்காது தற்கொலை செய்து கொண்ட செய்தியினைப் பற்றி படித்திருப்பீர்கள். இது பற்றி The Hindu நாளிதழின் ஞாயிற்றுக்கிழமை இதழில் வெளிவந்த கட்டுரை இதோ.

உச்ச நீதிமன்றமும் வேலை நிறுத்தமும்

உச்ச நீதிமன்றம் நேற்றைய தனது தீர்ப்பில் வேலை நிறுத்தம் செய்ய அரசு ஊழியர்களுக்கு துளிக்கூட அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளது. இது ஒரு தவறான முடிவாகும் என்றே தோன்றுகிறது. மத்திய, மாநில அரசுகள் இந்தத் தீர்ப்பை முன்வைத்து அரசு ஊழியரின் உரிமைகளைப் பறித்துக் கொண்டே இருக்கலாம். எதிர்த்துப் போராட முடியாது ஊழியர்களின் கைகளைக் கட்டிப்போட்டுள்ளது இந்தத் தீர்ப்பு. இதனைக் கண்டித்து, ஊழியர் சங்கங்கள் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

Tuesday, August 05, 2003

Global-Tamils - யாஹூ குழுமம்

இதுவரை உள்ள யாஹூ தமிழ் குழுமங்கள் எல்லாம் TSCII என்னும் தகுதர எழுத்துக்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தன. குளோபல்-தமிழ் என்னும் குழுமம் இப்பொழுது யூனிகோட் எழுத்துக்களைப் பாவிக்க உள்ளது. பங்குபெற Win2k அல்லது WinXP உள்ளவர்களால் எளிதில் முடியும். லினக்ஸ் வைத்துள்ளவர்களும் பங்குபெறுவது அவ்வளவு கடினமில்லை. Win98 உள்ளவர்கள் கொஞ்சம் தடுமாற வேண்டியிருக்கும். இதில் பங்குபெற செல்லவும்.

Monday, August 04, 2003

திட்டல் வெண்பா

தெருப்புழுதி நாயே திருட்டுக் குரங்கே
செருப்பால் அடிப்பேன் உனை

Sunday, August 03, 2003

கிரிக்கெட் அனுபவம் - 1: ஆட்டமோ ஆட்டோ

எனக்கு சென்னையில் ஆட்டோவில் ஏறுவது என்றாலே கதி கலங்கும். சென்னைத் தெருக்கள் பற்றி உங்களுக்குத்தான் தெரியுமே? எங்கே, எப்பொழுது, யார் குழி தோண்டுவார்கள் என்று தெரியாது. நம் நாட்டின் "தகவல் நெடுஞ்சாலை" வெறும் தார் சாலைகளின் அடியே தோண்டி எடுக்கப்பட்ட பள்ளங்களின் ஊடே செல்லும் ஒளிநார்க் குழாய்களின் வழியேதான். தகவல் நெடுஞ்சாலையில் தகராறு இல்லாமல் பிட்டும், பைட்டும் ஓடும்போது மேலே பல்லவனும், ஆட்டோக்களும் தடக்-தடக் என்று தட்டுத் தடுமாறித்தான் போகும்.

சர்ரென்று ஓடும் ஆட்டோவை கிறீச்சென்று சத்தம் போட்டு நிறுத்தி, "ஏண்டா கசுமாலம், வூட்டுல சொல்லிக்கினு வந்தியா" என்று கெட்ட வார்த்தையை உதிர்த்துவிட்டு, ஓட்டுனர் நம்மிடம் திரும்பி நாடு கெட்டுப்போய்விட்டதைப் பற்றி ஒரு பிரசங்கத்தை ஆரம்பிப்பார். நானும் உயிரை கெட்டியாகக் கையில் பிடித்துக்கொண்டு எப்படியாவது வீடு போய்ச் சேர வேண்டுமே என்ற கவலையில் அசிங்கமாகப் புன்னகை செய்து கொண்டும், "உம்" கொட்டிக்கொண்டும் இருப்பேன்.

இரண்டு வருடத்திற்கு முன் ஃபோர்ட் ஐக்கனும், அதன்கூட ஒரு திறமை மிக்க ஓட்டுனரும் கிடைத்தனர். அவர் ஓட்டும்போது எனக்கு உயிர்மீது ஒரு கவலையும் இருந்ததே இல்லை. கிழக்குக் கடற்கரைச் சாலையில் 130kmphஇல் போகும் போதும், அண்ணா சாலையில் இடைஞ்சல்களுக்கிடையில் புகுந்து புகுந்து வெளியே வரும்போதும், லாரித்தண்ணி வழிந்து வழிந்தே ரோடே குண்டும் குழியுமான கோடம்பாக்கம் ஹைரோட்டில் முன்னேறும் போதும், எதுவானாலும் என் ஓட்டுனர் ஓட்டும்போது மேகத்தில் பறக்கும் கதிரவனின் தேர் வழுக்கிக் கொண்டு போவது போல் இருக்கும்.

இனிமேல் ஆட்டோ தொல்லை ஏதுமில்லை, விட்டது கவலை என்றிருந்தேன்.

எனக்கு சனி கொழும்புவில் வந்தது.

ஐசிசி சாம்பியன் கோப்பை ஆட்டங்களைப் பார்க்க செப்டம்பர் 2002இல், மனைவியுடன் கொழும்பு சென்றிருந்தேன். இறுதியாட்டம் வரை எங்கோ காணாமல் போயிருந்த மழை இந்தியாவைப் பழிவாங்க வேண்டுமென்றே மெனக்கெட்டுக் காத்துக்கொண்டிருந்தது. இறுதியாட்டத்துக்குக் குறித்திருந்த முதல் நாள் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 244 ஓட்டங்களுக்கு 5 விக்கெட் இழப்புடன் முடித்தது. பிரேமதாசா அரங்கில் இரவில் விளக்குகள் எரிய தினேஷ் மோங்கியாவும், விரேந்திர சேவாக்கும் களம் இறங்கினர். முதல் ஓவரில் மோங்கியா ரொம்பவே தடவினார். எண்ணிக்கை பூஜ்யத்திலேயே. ஏண்டா இந்த திராபையைத் துவக்க ஆட்டத்துக்கு இறக்கினர் என்ற கடுப்பில் இந்தியர்கள் வெறுத்துப் போயிருக்க, புலஸ்தி குணரத்னே பந்து வீச்சைத் துவங்கினார். லேசாகத் தூறல். முதல் இரண்டு பந்துகளில் பெரிதாக ஒன்றும் இல்லை, ஆளுக்கொரு ஓட்டம். மூன்றாவது பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெகு வெளியே. வானில் பளிச்சென்று மின்னல். நான்காவது பந்து சற்றே அளவு குறைவாக வீசப்பட்டது. சேவாக் கொஞ்சம் பின்வாங்கிப் பந்தைத் தட்ட அது பாயிண்ட் திசையில் பறக்கிறது. நான்கு ஓட்டங்கள். இந்தியப் பார்வையாளர்கள் பாங்கரா நடனம் ஆடத்துவங்கினர். அடுத்த பந்து அதே மாதிரி அளவு குறைவாக வீசப்பட்டது, மீண்டும் நடராஜர் பின்கால் நடனம், ஒத்தி அடித்த பந்து பாயிண்டுக்குப் பின் பறக்கிறது. வானில் இடி, இன்னும் கொஞ்சம் மழைத்தூறல். குணரத்னேக்கு வயிற்றைப் பிசைகிறது. இரண்டு மோசமான பந்துகள், இரண்டும் நான்குகள். கடைசிப் பந்தை எப்படியாவது ஓட்டம் கொடுக்காமல் வீச வேண்டும். கால் திசையில் அளவு அதிகமாக வீசுகிறார், சேவாக்கோ மயிலிறகால் தொடுவது போல் மட்டையால் பந்தை ஒத்துகிறார், வீசப்பட்ட வேகத்தில் பந்து ஃபைன் லெக்குக்குப் பறக்கிறது. நாங்கள் குதிக்கிறோம், வருணனும் கொட்டத் தொடங்குகிறான்.

ஜயசூரியாவுக்கு நிம்மதி. இந்த மாதிரி மழை பெய்தால் இனி விளையாட்டு காலி என்று அவருக்கும் தெரியும், ஆடுகளத்தைக் காக்கும் பணியாளர்களுக்கும் தெரியும். தார்ப்பாலின் போட்டு ஆடுகளத்தை மூடுகின்றனர். நாங்கள் மழையில் நனைந்தபடி ஒரு ஆட்டோவில் ஏறி ஒருமாதிரி விடுதியைச் சென்றடைகிறோம்.

ஊருக்கே தெரிகிறது அடுத்த நாளும் மழை கொட்டும் என்று. ஆனால் மழை சாயந்திரம் ஆறு மணிக்குதான் ஆரம்பமாகும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஐசிசிக்கு மட்டும் இது எப்படியோ தெரியவில்லை. ஆட்ட விதிகளின் படி, முடியாத இறுதியாட்டம் அடுத்த நாள் விட்ட இடத்திலிருந்து தொடரப்படக் கூடாதாம். மற்றுமொரு புதிய ஆட்டம், அதே களத்தில், அதே நேரத்தில் துவக்கப்பட வேண்டும். காலை முழுதும் கொளுத்தும் வெய்யில். முதல் நாள் மழை பெய்ததா என்றே தெரியாத மாதிரி ஈரமே இல்லாத மைதானம். ஆனால் ஆட்டம் மதியம் 2.30க்குத்தான் தொடங்குகிறது. இந்த முறையும் முதலில் மட்டையெடுத்து ஆடுவது இலங்கை. முதல் நாளைவிட மோசமாக ஆடி வெறும் 222 ஓட்டங்களே எடுக்கின்றனர், 7 விக்கெட் இழப்பிற்கு.

இன்றும் மோங்கியாதான் சேவாக்கோடு ஆட்டத்தைத் துவக்குகிறார். ஆனால் கடவுள் புண்ணியத்தில் ஓட்டமெதுவும் எடுக்காமல், பந்துகளை வீணாக்காமல் ஒழிகிறார். உள்ளே நுழைவது சச்சின் டெண்டுல்கர். டெண்டுல்கர் இந்தப்போட்டி முழுவதுமே கொஞ்சம் தடவல். வந்து கொஞ்சம் பந்துகளை வீண் செய்கிறார். சேவாக் அவ்வப்போது ஒரு நான்கை அடித்துக் கொஞ்சமாவது ஓட்டம் சேர்க்கிறார். ஆனாலும் 8 ஓவர்களில் வெறும் 28 ஓட்டங்களே. ஒன்பதாவது ஓவர் பந்து வீசப்போவது வர்ணகுலசூரிய பதபெந்திகே உஷாந்தா ஜோசப் சமிந்தா வாஸ் (அம்மாடி!). அவரது பெயரைக் கண்டும், பந்தைக் கண்டும் பயப்படக்கூடியவரல்ல சேவாக். முதல் பந்து அளவு குறைந்து நடு ஸ்டம்பை நோக்கி வருகிறது. சேவாக் பந்தை லாவகமாகத் தூக்கி மிட்விக்கெட் திசையில் அடிக்கிறார், போடு ஒரு நான்கு! இன்னும் இரண்டு பந்துக்குப் பிறகு ஆஃப் திசையில் அளவு குறைந்து வீசப்பட்ட பந்து: அல்வா கிண்டுபவர் திருப்பியை வளைத்துக் கிளறுவது போல் பந்துக்கு அடியில் மட்டையை வைத்துத் திருப்பிக் கிண்டுகிறார், பந்து பறக்கிறது பாயிண்ட் திசையில்! எல்லைக்கோட்டுக்கு வெளியே ஆறு ஓட்டங்கள். (இந்த அல்வா கிண்டும் ஆறு இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை ஆட்டத்தில் பிரசித்தம். டெண்டுல்கர், பெரிய வாய் ஷோயப் அக்தருக்கும், சேவாக், வக்கார் யூனிஸுக்கும் கொடுத்த பரிசு)

எங்கள் சந்தோஷம் போன இடம் தெரியாமல் மழை கொட்டத் தொடங்குகிறது.

வெறுப்போடு ஆட்டோவில் நானும் மனைவியும் ஏறுகிறோம். மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. தெருவெங்கும் தண்ணீர்ப் பிரளயம். நம்மூர் ஆட்டோக்காரர்களை விட மோசம் கொழும்பு ஆட்டோ ஓட்டுனர்கள். இத்தனைக்கும் தெருவில் ஒன்றும் போக்குவரத்தே இல்லை. வெற்றுச் சாலை, கொட்டும் மழை, திடீரென்று எங்கள் கண் முன் மற்றுமொரு ஆட்டோ . எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை. ஒரு நொடியில் எனக்கு வயிற்றைக் கலக்க ஆரம்பித்தது. ஓட்டுனர் பிரேக் பிடிக்க, பிரேக்தான் ஒத்துழைக்க மறுத்தது. நாங்கள் பயணம் செய்த ஆட்டோ நேரடியாக முன்னால் இருந்த ஆட்டோவில் மோத, ஒரு விநாடி எனக்கு என்ன ஆனதென்றே புரியவில்லை. எங்கள் ஆட்டோ குடைசாய்ந்தது. ஆட்டோவோடு நானும் மனைவியும் சாய்ந்தோம். முதலில் என் மனைவி கீழே விழ, நான் அவள் மீது விழுந்தேன். திறமையான ஆட்டோ ஓட்டுனர் துள்ளி வெளியே குதித்து விட்டார். யாருக்கும் உயிர் போகவில்லை. எனக்குக் காயம்கூட இல்லை. மனைவிக்கு மட்டும் கொஞ்சம் சிராய்ப்பு. பக்கத்தில் ஒரு ஆட்டோ நிறுத்துமிடம் இருந்தது. அதிலிருந்த எல்லா ஆட்டோ ஓட்டுனர்களும் ஓடி வந்து எங்களைத் தூக்கி எழுப்பினர். மற்றுமொரு ஆட்டோக்காரர் எங்களை ஓட்டிக்கொண்டு விடுதியில் வந்து சேர்த்தார்.

நானும் என் மனைவியும் இதைப்பற்றிப் பேசுவதேயில்லை.

மீண்டும் கொழும்புவுக்கு கிரிக்கெட் பார்க்கப் போவோம். ஆனால் ஆட்டோவில் ஏறுவதேயில்லை என்று உறுதியெடுத்துள்ளேன்.

நாளை மற்றுமொரு நாளே

ஜி.நாகராஜனின் "நாளை மற்றுமொரு நாளே" - குறுநாவல் படித்தேன். Gone with the Wind கதையில் ஸ்கார்லட் ஓஹாரா "After all, tomorrow is another day!" என்று "நாளை" என்னும் வருங்காலத்தை நம்பிக்கையோடு பார்ப்பாள். ஆனால் கந்தன் - கதையின் நாயகன் - வாழ்க்கை வேறு தளத்தில் உள்ளது.

கந்தன் மொடாக்குடிகாரன். அதோடு விபசாரம், ஏமாற்றுவேலை, கட்டப் பஞ்சாயத்து என்று பணம் சம்பாதிப்பவன். அவனது தளத்தில் பெண்களும், ஆண்களும் திருமணம் என்ற கட்டுப்பாட்டுக்குள் இயங்குவதில்லை. தேவைக்கேற்ப வாழ்கிறார்கள். சமூகத்தில் உள்ள தேவைகளைத் தீர்த்துவைப்பதில்தான் பணம் சம்பாதிக்க முடியும் என்ற தத்துவத்தின் அடிப்படையில்தான் எந்தத் தேவையாக இருப்பினும் அதைத் தீர்த்துவைத்து அதில் பணம் செய்து அவர்கள் வாழ்கிறார்கள்.

காலையில் எழுந்திருக்கும் கந்தன் போதையோடு நாளை ஆரம்பித்து நாளின் இறுதியில் யாரோ செய்த கொலையைப் பார்த்த சாட்சியாக காவல் நிலையம் வரை போய்க் கைதியாய் லாக்-அப்பில் முடிவடைகிறான். ஒரு நாள் முழுவதும் அவன் செயல்களும் அவன் வாழ்க்கையின் கடந்த கால நினைவோடல்களுமாகச் செல்லும் கதை.

கதாசிரியர் சர்வசாதாரணமாகக் கதையைச் சொல்லிக்கொண்டு போகும்போதும், எனக்கு பக்கமெங்கும் அதிர்ச்சிதான். இப்படிப்பட்ட மக்களும் இருக்கிறார்களா என்று. எனது 33 வருடங்களில் ஜி.நா காட்டும் உலகத்தை நான் பார்த்ததில்லை. ஆனால் இதில் வரும் மக்கள் வெகு இயல்பாக நடக்கிறார்கள், துளி செயற்கை இல்லை. அதிர்ச்சியாயிருந்தாலும் நம்ப முடிகிறது.

"தொழில்" செய்யும் மீனாவைக் கட்டிய கந்தன், "தொழில்" செய்து கொண்டே கந்தன் மீது பாசத்தோடு இருக்கும் மீனா, யாராவது பசையான பார்ட்டியோடு கந்தன் தன்னை ஒட்டவைப்பானா என்று எதிர்பார்க்கும் சொர்ணா, கைம்பெண்ணாகக் கைக்குழந்தையோடு இருப்பவளை வளைத்துப்போடப் பார்க்கும் மேஸ்திரி முத்துசாமி, பதினைந்து வயதில் யாராலோ ஏமாற்றப்பட்டு வயிற்றில் குழைந்தையோடு இருக்கும், அதைக் கலைக்க முயற்சிக்கும் சித்தாள் பெண் (கல்யாணமான பெண்ணுக்குக் கலைக்க 100 ரூபாய், கல்யாணமாகாத பெண்ணுக்கு 200 ரூபாய், சித்தாள்னா 300 ரூபாய் என்னும் பெண் டாக்டர்!), எல்லாவித புரோக்கர் வேலையும் பார்த்து பெரிய ஆளான அந்தோணி, ஆங்கில இந்தியப் பெண்மணியை வைப்பாக்க ஆசைப்பட்டு, நிறைவேற்றிய செட்டியார், ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை பேசும் ஆங்கிலோ-இந்திய வேசி, சாராயக் கடையில் வேலை பார்க்கும் சிறுவர்கள், லாட்ஜுகள், வியாதி, சாவு, கொலை, ஏமாற்றல் ...

ஒருவித இருள் சூழ்ந்த உலகத்தில் வாழும் இவர்கள் - கந்தனைத் தவிர - ஒரு நம்பிக்கையோடுதான் இருக்கிறார்கள். கந்தனுக்குதான் இந்த உலகம் தன்னை விட்டுவிட்டு எங்கோ போய்விட்டதாகத் தோன்றுகிறது. அவனது பாதையில் அடுத்து எங்கு போகப் போகிறோம் என்று தெரியாத போது தனது மனைவிக்கு (அதாவது கூட வாழும் பெண்ணுக்கு, அவளோடு அவனுக்கு இரண்டு குழந்தைகள் - பெண் இறந்து போகிறது, பையன் வீட்டை விட்டு ஓடிப்போய்விடுகிறான்) ஏதாவது "ஏற்பாடு" செய்ய வேண்டும் (அதாவது அவளுக்கு வேறு ஒரு ஆண் துணை தேடி அவனோடு "செட்டில்" பண்ணி விடவேண்டும்) என்ற பரிவும், ஆதங்கமும் வெளிப்படுகிறது.

இப்படிப்பட்ட ஒரு இருளான கதை பற்றி எழுதும்போதும் ஆசிரியரின் நகைச்சுவை இழையோடுகிறது.

நாளை மற்றுமொரு நாளே - காலச்சுவடு பதிப்பகம் - விலை ரூ. 50

Friday, August 01, 2003

ஸ்டார் நியூஸ் - பாகம் 2

ஸ்டார் நிறுவனம் எப்படி அரசின் விதிமுறைக்கு உட்பட முயன்றது? முதலில் "மீடியா கண்டெண்ட் அண்ட் கம்யூனிகேஷன் சர்வீசஸ் லிமிடெட்" (MCCS) என்ற ஒரு ஓடு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தது. ஓடு நிறுவனம் என்றால் அந்த நிறுவனத்தில் யாரும் வேலை பார்க்கமாட்டார்கள், வரவும் இல்லை, செலவும் இல்லை. அலமாரியில் தூசுபடிந்து இருக்கும் வெறும் ஒரு கோப்பு. கம்பெனிப்பதிவாளர் (Registrar of companies) அலுவலகத்தில் மட்டும் உயிருடையதாக இருக்கும் வெற்று நிறுவனம்.

இந்த நிறுவனத்தைத் தூசு தட்டி எடுத்து ஸ்டார் நிறுவனம், ஸ்டார் நியூஸ் கன்னலை (TV Channel) இந்த நிறுவனத்தின் சொத்தாக மாற்றியது. அதன் பின்னர், முதல் பாகத்தில் குறிப்பிட்டது போல இந்தியர் பலரை இந்த நிறுவனத்தில் பங்கு வாங்க வைத்தது. போட்டி நிறுவனங்கள் - முக்கியமாக டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் மற்றும் இந்தியா டுடே குழுமம் (இது பற்றித் தனியாக இன்னொரு பாகத்தில் பார்ப்போம்) - இதைப் பெரிதாக்கி எழுதத் தொடங்கின. ஒரு தொலைக்காட்சியை நடத்த வேண்டுமானால் பல கோடி ரூபாய்கள் தேவை. ஆனால் MCCS நிறுவனத்தின் பங்குத் தொகையே வெறும் ஒரு லட்சம் ரூபாய்தான், எனவே இந்த MCCS வெறும் ஓடு நிறுவனம், இதன் பின்னணியில் இருந்து கொண்டு பொம்மலாட்டம் ஆட வைப்பது ரூப்பர்ட் மர்டாக்தான் என்றன. இதற்கு பதிலளித்த ஸ்டார் நிறுவனம், "இப்பொழுதுள்ள பங்குத் தொகை வெறும் ஒரு லட்சம் ரூபாய்தான், ஆனால் இதை மூன்று கோடிக்கு உயர்த்த Foreign Investment Promotion Board (FIPB) என்னும் அரசு வாரியத்திடம் அனுமதி கேட்டுள்ளோம், அவர்கள் அனுமதி கொடுத்தவுடன் இந்த மாற்றம் நிகழும்" என்றது.

இதற்கிடையில் குமார மங்கலம் பிர்லா தன்னுடைய பங்கை சுஹேல் சேத்திடம் விற்று விட்டார். பிர்லாவுக்குப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனங்கள் (கணிமம், ஆடைகள், சிமெண்டு எனப் பலவேறு துறைகளில் - இப்பொழுதுதான் L&T என்னும் நிறுவனத்தின் சிமெண்டு உற்பத்தி செய்யும் துறையை வாங்கித் தன்னுடைய சிமெண்டு நிறுவனங்களோடு சேர்க்க ஒரு உடன்பாட்டைச் செய்திருந்தார்) உண்டு. அவர் இந்தமாதிரியான குழப்பம் நிறைந்த, மற்றும் அவதூறு வரவைக்கக் கூடிய ஒரு விவகாரத்தில் மாட்டிக் கொள்ள விருப்பம் இல்லை போலும். ஆனால் இதன் மூலம் ஸ்டாருக்கும் ஒரு நன்மை: சுஹேல் சேத் 30% பங்குடன் தனிப்பெரும்பான்மையுடன் இருந்ததால், தாங்கள்தான் MCCSஐ ஆட்டிப்படைக்கிறோம் என்ற குற்றச்சாட்டிலிருந்து தப்பி விட்டோம் என்று.

ஆனால் இன்னும் பல விஷயங்கள் வெளிவரத் துவங்கின:

  • ஸ்டார் நிறுவனம் MCCSஐ வெறும் செயற்கைக்கோள் மேலேற்றும் வேலையை மட்டும் செய்யுமாம். இந்த நிறுவனத்தில் ஹாங்-காங்கின் ஸ்டார் டெலிவிஷன் புரடக்ஷன் (STPL) என்னும் நிறுவனம்தான் 26% பங்கு வைத்துள்ளது. மேலும் MCCS க்கும், STPL க்கும் உள்ள உடன்பாட்டுப் பத்திரத்தின் மூலம்தான் MCCSக்கு ஸ்டார் என்னும் பெயரைப் பயன்படுத்த அனுமதியும், அதற்கு ஈடாக MCCS தனது நிருபர்கள், ஆசிரியர்கள் என்று வேலை பார்க்கும் அத்தனை பேரையும் பணியில் அமர்த்தவோ, பணியிலிருந்து நீக்கவோ STPLஇன் முன் அனுமதி பெற வேண்டும் என்றெல்லாம் நிபந்தனை உள்ளது.
  • ஸ்டாரின் மற்றொரு நிறுவனமான "டச் டெலிகண்டெண்ட்", ஸ்டுடியோ மற்றும் எடிடிங் சேவைகளை அளிக்கும்.
  • ஸ்டாரினால் ஆளப்படும் ஹ்யூஸ் நெட்வொர்க் என்னும் நிறுவனம் தேவையான infrastructureஐ கொடுக்கும்.
  • ஸ்டாரின் விற்பனையாளர்களே விளம்பரத்தை விற்பார்கள்.

இப்படி எல்லாமே ஸ்டாரின் கையில். அரசுக்கும் இது தெரியாமல் இல்லை. அதனால் மீண்டும், மீண்டும் அரசு விளக்கம் அளிக்கக் கோரி ஸ்டாரிடம் கடிதங்கள் அனுப்புகிறது. ஸ்டாரும் மீண்டும், மீண்டும் பதிலனுப்பி ஒவ்வொரு வாரமாக நீட்டிப்பு செய்து கொண்டு வருகிறது.

ஸ்டார் பலகோடி ரூபாய்களை முதலீடு செய்து பல தொலைக்காட்சிக் கன்னல்களை நடத்தி வருகிறது. திடீரென்று கொண்டுவரப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, ஆனால் எப்படியாவது தன் சொத்துக்களைத் தன்னிடமே தக்க வைத்துக்கொள்ள சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தவே அனைவரும் முயற்சி செய்வர். யாரும் பலகோடி ரூபாய்களை விட்டெறிந்து விட்டு ஓடிப்போய்விடப் போவதில்லை.

இன்னும் தொடரும்