போபால் விஷவாயுக் கசிவு, 26 வருடங்களுக்குப் பிறகு அளிக்கப்பட்டுள்ள முதல் தீர்ப்பு இவையெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
இதில் அப்போதைய யூனியன் கார்பைட் இந்தியா சேர்மன் கேசுப் மஹீந்திரா முதற்கொண்டு 7 பேருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை அளித்துள்ளது மாவட்ட நீதிமன்றம்.
ஒரு கம்பெனி என்ற அமைப்பில் பங்குதாரர்கள் (Shareholders), இயக்குனர்கள் (Directors), நிர்வாகம் (Management) என்று மூன்று தளங்கள் உள்ளன. பங்குதாரர்கள்தான் பணம் போட்டு நிறுவனத்தை ஆரம்பிப்பவர்கள். கம்பெனியாக இந்தியாவில் நிறுவப்பட்டால் (கம்பெனீஸ் ஆக்ட்டின்படி), அந்த நிறுவனத்தை வழிநடத்த என்று சில இயக்குனர்கள் நியமிக்கப்படுவார்கள். இயக்குனர்கள் இரண்டுவகை. எக்சிகியூட்டிவ் டைரெக்டர்ஸ் - அதாவது செயல் இயக்குனர்கள். மற்றொருவகை நான்-எக்சிகியூட்டிவ் இயக்குனர்கள். எக்சிகியூட்டிவ் இயக்குனர்கள் தினசரி நிர்வாகத்தில் நேரடியாக ஈடுபடுபவர்கள். மற்ற இயக்குனர்கள் தினம் தினம் நடக்கும் அலுவலக வேலைகளில் எந்தவகையிலும் ஈடுபடாதவர்கள். போர்ட் மீட்டிங் எனப்படும் இயக்குனர் சந்திப்பில் மட்டும் கலந்துகொள்பவர்கள். அடுத்ததாக நிர்வாகத்தினர். மேல்மட்ட நிர்வாகத்தினர்தான் தினம் தினம் கம்பெனியை நடத்துபவர்கள். இவர்களில் ஓரிருவர் இயக்குனர்களாகவும் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான நிர்வாகத்தினர் இயக்குனர்கள் கிடையாது.
பிரைவேட் லிமிடெட் கம்பெனி என்றால் இரண்டு இயக்குனர்கள் போதும். வெளியார் யாரையும் இயக்குனர்கள் ஆக்கவேண்டியதில்லை. அப்பா, பிள்ளை அல்லது கணவன், மனைவி என்று குடும்பத்தில் இரண்டு பேரை இயக்குனர்கள் ஆக்கி கம்பெனியை ஆரம்பித்துவிடலாம். அதுபோன்ற நேரங்களில் பொதுவாக பங்குதாரர், இயக்குனர்கள், கம்பெனியின் நிர்வாகிகள் எல்லாமே ஒரு குடும்பத்துக்குள்ளேயே போய்விடும். ஆனால் பப்ளிக் லிமிடெட் கம்பெனிகளின் நிலை வேறு. அங்கு இண்டிபெண்டெண்ட் டைரெக்டர்கள் தேவை. கம்பெனிச் சட்டப்படி, அந்நியர்கள் சிலரை நிறுவன இயக்குனர்களாக ஆக்கவேண்டும். அப்படி யூனியன் கார்பைட் இந்தியாவின் இயக்குனராக வந்தவர்தான் கேசுப் மஹீந்திரா. இப்படி நான்-எக்சிகியூட்டிவ் இயக்குனராக இருந்த கேசுப் மஹீந்திரா, இயக்குனர் குழுமத்துக்குத் தலைவராக, நிறுவன சேர்மனாகவும் இருந்தார். இவர் மஹீந்திரா அண்ட் மஹீந்திரா குழுமத்தை ஆரம்பித்தவர். இந்தக் குழுமம் இன்று டிராக்டர்கள், கார்கள் உற்பத்தியில் முன்னணியில் இருப்பது. நொந்துபோன சத்யம் கம்ப்யூட்டர் குழுமத்தை விலைக்கு வாங்கி மஹீந்திரா சத்யம் என்று நடத்துவது.
ஆண்டுக்கு நான்கு முறை (அல்லது ஆறு முறை) இயக்குனர்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருப்பார் கேசுப் மஹீந்திரா. நிறுவன லாபத்தில் அவருக்கு எந்தப் பங்கும் இருந்திருக்காது. போர்ட் மீட்டிங்கில் கலந்துகொள்ள போகவரச் செலவு கொடுத்து, ஒரு சந்திப்புக்கு இவ்வளவு என்று கொஞ்சம் பணம் கொடுத்திருப்பார்கள். அதற்காகவா அவரை ஜெயிலுக்கு அனுப்பவேண்டும்?
கம்பெனிச் சட்டப்படி, பொதுவாக ஒரு நிறுவனத்தின் குற்றங்களுக்கு அதன் இயக்குனர் குழுமம்தான் பொறுப்பு. பங்குதாரர்களுக்கு நேரடியான பொறுப்பு கிடையாது. அப்படிப் பார்த்தால் விஷவாயுச் சம்பவம் நடந்தபோது யூனியர் கார்பைட் (அமெரிக்கா) நிறுவனத்தின் சேர்மனும் மேனேஜிங் டைரெக்டருமாக இருந்த வாரன் ஆண்டர்சனுக்கு என்ன பொறுப்பு?
வாரன் ஆண்டர்சனை ஓடிப்போக விட்டுவிட்டார்கள் என்று பிலாக்காணம் படிக்கிறோம். விஷவாயுவைப் பரப்பு என்று அவர் எங்காவது சொன்னாரா?
***
உண்மையில் யார் மீதுதான் குற்றம்? வாரன் ஆண்டர்சன், கேசுப் மஹீந்திரா ஆகியோர் மீது குற்றமே இல்லை என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் உண்மையான குற்றவாளிகள் யார், அவர்களுக்கு என்ன தண்டனை என்பதை ஆராயாமல் ‘ஹை புரொஃபைல் ஆட்கள்’ என்ற காரணத்தாலேயே அவர்கள்மீது குற்றம் சாட்டுவது இந்தியக் குணம்.
கார்பாரில் என்ற பூச்சிக்கொல்லியைத் தயாரிக்க, மீதைல் ஐசோசயனேட் என்ற (விஷப்) பொருளைப் பயன்படுத்தாமல் வேறு சில வழிகளும் உள்ளன. ஆனால் அந்த வழிகள் அதிகச் செலவு பிடிப்பவை. அபாயம் வரக்கூடும் என்ற நிலையிலும் மீதைல் ஐசோசயனேட்டைத் தொடர்ந்து பயன்படுத்தியது யூனியன் கார்பைட் செய்த தவறு. இந்தத் தவறுக்கு யூனியன் கார்பைட் (அமெரிக்கா) காரணமா? அல்லது யூனியன் கார்பைட் (இந்தியா) காரணமா?
இதை அடுத்து, மாநில, மத்திய, நகராட்சி அமைப்புகளின் தொழிற்சாலைக் கண்காணிப்பாளர்கள் மீதும் நாம் குற்றம் சொல்லவேண்டும். விஷப் பொருள்கள், எரியக்கூடிய, வெடிக்கக்கூடிய பொருள்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் இருக்கவும் இந்தியாவில் குறைந்தபட்சம் 20 சட்டங்கள் உள்ளன. (The Indian Explosives Act, 1884, The Explosive Substances Act, 1908, The Destructive Insects and Pests Act, 1914, The Poisons Act, 1919, The Drugs and Cosmetics Act, 1940, The Factories Act, 1948, The Industries (Development & Regulation) Act, 1951, The Inflammable Substances Act, 1952, The Air (Prevention and Control of Pollution) Act, 1981 ஆகியவை ஒருசில. 1984-க்குப் பிறகு மேலும் பல சட்டங்கள் வந்துள்ளன.) இந்தச் சட்டங்களை எல்லாம் ஒழுங்காக நடைமுறைப்படுத்தாத அரசாங்கத்தின்மீது குற்றம் இல்லையா?
இந்தியர்கள் பாதுகாப்பு பற்றி சிறிதும் கவலைப்படுவதே இல்லை. சாலையைக் கடக்கும்போது, தெருவில் சர் புர்ரென்று வண்டிகளை ஓட்டிச் செல்லும்போது, வீட்டில் நெருப்பைக் கையாளும்போது என்று எங்கும் அந்த கவனக்குறைவு தெரிகிறது. யூனியன் கார்பைட் இந்தியாவின் போபால் ஆலையில் வேலை செய்த ஊழியர்களின் கவனக்குறைவுக்கு யாரைக் குறை சொல்வது?
இவை அனைத்தையும் தாண்டி யூனியன் கார்பைட் இந்தியா நிர்வாகிகள்மீது குற்றம் சாட்டியாகவேண்டும். ஆனால் அந்தக் குற்றம் சிறையில் அடைக்கக்கூடிய ஒன்றா?
நிறுவனங்களின் செயல்பாடுகளை சரியான வழியில் கொண்டுசெல்ல, முக்கியமான ஆயுதம் ஒன்று உள்ளது. அதுதான் கடுமையான அபராதம். இந்தியச் சட்டங்கள் எல்லாம் பல ஆண்டுகாலமாக மாற்றப்படாமல் தூசு படிந்து உள்ளவை. அதனால்தான் 2 ஆண்டுகாலச் சிறை + சில ஆயிரம் ரூபாய் அபராதம் என்றெல்லாம் உள்ளது. மாறாக அபராதம் பல லட்சங்கள் அல்லது சில கோடிகள் என்று ஆகிவிட்டால், நிறுவனங்கள் கொஞ்சம் கவனமாக இருக்கத் தொடங்கும். மோசமான நடத்தை கொண்ட நிர்வாகத்தை அபராதத்தின்மூலமே திவாலாக்க முடியும். திவால் ஆகிவிடுவோம் என்ற பயம் இருந்தால் அது ஒன்றே அந்த நிறுவனத்தை சரியான பாதையில் பயணிக்க உதவும். ஆனால் அத்துடன் லஞ்ச லாவண்யத்தையும் ஒழிக்கவேண்டும். இல்லாவிட்டால் லஞ்சம் கொடுத்துத் தப்பிக்கவே நிறுவனங்கள் முயற்சி செய்யும்.
போபால் விஷவாயு வழக்கில் என் கணிப்பில் மிகப்பெரிய குற்றவாளி இந்திய அரசுதான். 1984-ல் யூனியன் கார்பைடிடம் 3.3 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு கேட்ட இந்திய அரசு, 1999-ல் 450 மில்லியன் டாலர் போதும் என்று ஒப்புக்கொண்டது. மாறாக, இந்திய அரசு, 3.3 பில்லியன் டாலருக்கு ஒரு துளியும் குறையாமல் யூனியன் கார்பைடிடம் கறந்திருக்கவேண்டும். அப்படி அந்தப் பணத்தைப் பெற்று - அல்லது அந்தப் பணத்தைக் கையில் வாங்குவதற்கு முன்னமேயே - பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கிடைக்குமாறு செய்திருக்கவேண்டும். செத்த ஒவ்வொருவர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் (இன்றைய பணத்தில்); உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 25 லட்சம் முதல் 50 லட்சம் வரையில்... என்றால் ஓரளவுக்கு அது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்.
அதைச் செய்யாமல், இன்று ப.சிதம்பரம் தலைமையில் மற்றொரு கமிட்டி போட்டு ஒரு பிரயோசனமும் இல்லை.
எரிக்கப்படவேண்டியது வாரன் ஆண்டர்சனின் கொடும்பாவி அல்ல, ராஜீவ் காந்தி முதற்கொண்டு மன்மோகன் சிங் வரையிலான பிரதமர்களின் கொடும்பாவிகளை.