Wednesday, December 31, 2003

விளம்பரங்களில் வரும் பெண்ணிழிவுக் கருத்துகள்

"மகனுக்கு மேற்படிப்பா? மகளுக்குத் திருமணமா? எங்கள் வங்கி கடன் கொடுக்கத் தயாராயிருக்கிறது." என்று வங்கிகள் சில வருடங்கள் முன்னர் வரை கூட விளம்பரம் செய்து வந்தன. அரசு ஊழியர்கள் தங்கள் வைப்பு நிதியிலிருந்து முன்பணம் கடனாகப் பெற விரும்பினால் இரண்டு காரணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மகனது மேற்படிப்பு, மகளது திருமணம்!

சில வருடங்களாக வங்கிக் கடன் விளம்பரங்களில் பெண்களும் பட்டப்படிப்பு பெறுவது போல் காண்பிக்கப்படுகின்றனர். ஆனால் மற்ற பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விளம்பரங்கள் முழுக்க முழுக்க பெண்களை இழிவு செய்யுமாறும், ஆண்களின் ஆதிக்கத்தை சத்தமின்றி ஏற்றுக் கொள்வது மட்டுமல்லாமல் அதை மேலும் அதிகரிப்பதாகவும் அமைந்துள்ளன.

"சிகப்பழகுக்" களிம்பு

1978 முதல் ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம் 'ஃபேர் அண்ட் லவ்லி' என்னும் சிகப்பழகுக் களிம்பை விற்று வருகிறது. இப்பொழுது இன்னமும் பல நிறுவனங்கள் இவர்களோடு போட்டி போட்டுக்கொண்டு விற்க ஆரம்பித்துள்ளனர். விற்பனை செய்வதில் நமக்கு எந்த சண்டையும் இல்லை. ஆனால் இந்த சிகப்பழகு விற்பனையாளர்கள் தொலைக்காட்சிகளில், அல்லது திரையரங்குகளில் காண்பிக்கும் விளம்பரங்கள் மிகவும் கேடானவை.

1. சிகப்பழகுக் களிம்பைப் பயன்படுத்தும் முன்னர் விளம்பரத்தில் காட்டப்படும் ஒரு இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளையாக ஒரு புகைப்படம் வந்திருக்கும். அதில் வயதான, அழகில்லாத ஆண் வருவார். வீட்டில் அனைவரும் இந்த மாப்பிள்ளையே போதும் என்று எண்ண, ஒரு சிறுவன் மட்டும் கண்ணால் பெண்ணுக்கு சைகை காட்டி இந்த வரன் சரியில்லை என்பான். பெண் தன் முகத்துக்கு இதற்கு மேல் கிடைக்காது என்று வருத்தத்துடன் முடிவு செய்ய, அப்பொழுது விளம்பர அசரீரி 'முகத்தையும் மாற்றலாம், ஜாதகத்தையும் மாற்றலாம்' என்று சிகப்புக் கிரீமை அருளும். அந்தப் பசையை முகத்தில் அப்பிக் கொண்டவுடன் கணினி வரைகலையால் உருவாக்கப்பட்ட அடுத்தடுத்த திரைகளில் அந்தப் பெண்ணின் முகம் புத்துயிர் பெற்று ஒளிரும். அடுத்த காட்சியில் ஒரு அழகான யுவன் அவளது வதனத்தின் ஒளியில் மயங்குவான். வீட்டிலுள்ளோர் அனைவரும் 'ஜாதகமே மாறி விட்டது' என்று ஒத்துக் கொள்வர்.

2. சிகப்பழகுப் பசை பயன்படுத்தும் முன்னர் இளம்பெண் ஒன்றுக்கும் உதவாத வேலையில் இருப்பார். வீட்டில் காப்பிக்கே வழியில்லை. அவளது தந்தையார் சொற்களால் பெண்ணின் மனதை ஈட்டியால் துளைப்பார். பெண்ணின் கண்ணில் விமானப் பணிப்பெண் வேலைக்கான விளம்பரம் விழும். ஆனால் 'இந்த மூஞ்சிக்கு' அந்த வேலையெல்லாம் கிடைக்காது என்று தோன்றும். அப்பொழுது 'விளம்பர அசரீரி'யானது "ஏன் முடியாது? இதோ சிகப்பழகு கிரீம்" என்னும். 'அந்த மூஞ்சி'யில் பசை அப்பியபின் 'அந்த மூஞ்சி' விமானப் பணிப்பெண் நேர்முகத் தேர்வில் கலக்கியடித்து, ஐந்து நட்சத்திர உணவு விடுதியில் அப்பாவுக்குக் காப்பி வாங்கித் தரும்.

3. சிகப்பழகுப் பசைக்கு முந்தைய பெண்ணின் முகம் கிரிக்கெட் நேர்முக வர்ணனையை கண்ணாடிக்கு முன்னால் சொல்லிப் பழகும். நீ ஏன் தொலைக்காட்சி வர்ணனையாளராகப் போகக்கூடாது என்ற தோழியின் கேள்விக்கு 'இந்த மூஞ்சி'யால் இதெல்லாம் முடியுமா என்று ஏக்கம் கொள்ளும். வந்ததே சிகப்பழகுப் பசை. அடுத்த காட்சியில் 'பள பள' முகம் ஓரு முன்னாள் கிரிக்கெட் வீரர், இன்னாள் வர்ணனையாளர் பக்கத்தில் இருந்து நேர்முக வர்ணனை செய்யும்.

ஆக, சிகப்பழகுப் பசை இல்லையேல் - திருமணம் நடக்காது, இல்லை ஒரு கிழவனுக்கு இரண்டாந்தரம், வேலை கிடைக்காது. தகுதி இருந்தாலும்... முகத்தழகு இல்லையெனில் பெண்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை இல்லை. இப்படிப்பட்ட ஒழுக்ககேடான விளம்பரங்கள் இன்னமும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனால் பெண்களின் நிலை சமூகத்தில் கீழிறங்கிக் கொண்டே போகிறது. இந்த விளம்பரங்களை நம்பும் எத்தனையோ பெண்களுக்குத் தங்கள் தோலின் நிறத்தை வைத்துத் தங்களால் வாழ்க்கையில் உயரவே முடியாது என்றதொரு எண்ணம் வரலாம். வந்துள்ளது என்று சிலரிடம் பேசியதில் அறிகிறேன். நிறம் 'மங்கல்' என்பதால் 70 சவரனுக்கு பதில் 150 சவரன் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்களாம்.

இருபாலருக்கும் பொதுவானதில்லை இந்த இழிநிலை செய்யும் விளம்பரங்கள். ஆண்களின் முகத்துக்கு பசை யாரும் விற்பதில்லை. ஆண்களின் நிறத்தைப் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆண்களுக்கான பிரத்யேக விளம்பரங்கள் முகத்தில் முடி மழிப்பதற்கானது. அந்த விளம்பரங்களும் எதிர்மறையாக வருவதில்லை. நன்றாக மழித்த முகமிருந்தால் பெண்கள் ஓடிவந்து முகத்தைத் தடவி வழிவார்கள் என்று சொல்கிறதே தவிர, முகத்தை மழிக்காவிட்டால் பெண்கள் ஓடிப்போவார்கள் என்று சொல்வதில்லை. ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி விளம்பரங்களில். ஏன்?

ஒரே விதிவிலக்கு உடல் நாற்றம் மற்றும் வியர்வை எதிர்ப்பான்களின் (anti-perspirant, deodorant) விளம்பரங்கள். இவ்விளம்பரங்களில் நாற்றமடிக்கும் ஆண்களை ஆடுகள் போல என்று நினைத்துப் பெண்கள் கேலி செய்வது போலவும் காட்சிகள் வரும்.

பெண்களை காட்சிப் பொருளாக மட்டுமே காட்டும் விளம்பரங்கள்

1. "உங்களது நண்பருக்கு ஆளை மயங்கடிக்கும் பெண் மனைவியாய் வாய்த்தால் என்ன? போகட்டுமே" என்கிறது ஒரு சொகுசுக் கார் விளம்பரம். அதாவது அவரிடம் 'அழகான மனைவி' என்னும் சொத்து இருக்கட்டும், உங்களிடம் இந்த அழகான சொகுசுக் கார் இருக்கிறதே என்று சொல்கிறது விளம்பரம். காருக்கு மனைவி சமமா? ஒரு காரைப் போல மனைவி கணவனின் உடைமையா? இது போல ஆண்களைக் காட்சிப்பொருளாக்கும் விளம்பரங்கள் ஏன் இல்லை? பெண் என்றால் கிள்ளுக்கீரையா?

2. ஒரு கண்ணாடி விளம்பரத்தில் இறுக்கமாகக் குட்டையாடை அணிந்து கொண்டு ஒரு பெண், ஒரு அலுவலகக் கட்டிடத்தில், கையில் பல கோப்புகளை எடுத்துக் கொண்டு நடக்கிறார். அவரைப் பார்த்தவுடன் இரு ஆண்கள் வேலையெல்லாவற்றையும் விட்டு விட்டு அவரைப் பின்தொடர்கின்றனர். அவர் 'லிஃப்ட்'டின் உள்ளே நுழையும் போது கோப்பிலிருந்து தாள்கள் சில கீழே விழுகின்றன. அந்தப் பெண் குனிந்து அந்தத் தாள்களை எடுக்கும் போது 'தரிசிக்க' அந்தப் பெண்ணின் உறுப்புகள் ஏதேனும் தெரியுமோ என்று அந்த ஆண்கள் காத்துக் கொண்டிருக்கையில் லிஃப்ட் கதவுகள் மூடிவிடுகிறது. அந்த லிஃப்ட்டுக்குக் கண்ணாடிக் கதவுகள் வைத்திருந்தால் 'எல்லாவற்றையும்' பார்த்திருக்கலாமே என்கிறது விளம்பரம்.

இதை விடப் பெண்களை இழிவு செய்யும் விளம்பரங்கள் ஏதேனும் இருக்க முடியுமா?

3. ஒரு எண்ணெய் விளம்பரம். இந்த எண்ணெய் சர்வரோகநிவாரணியாம். எதை வேண்டுமானாலும் இதன் மூலம் குணப்படுத்தி விடலாமாம். முகம் சிவப்பாக; கால்களில் பித்த வெடிப்பு நீங்க என்று காலிலிருந்து முகம் வரை. ஒரு மனைவி கணவன் 'ஹாய்'யாகக் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு செய்தித்தாள் படிக்கும் போது கொண்டு வந்து காபி தருகிறார். கணவன் மனைவியின் வயிற்றில் உள்ள பிரசவத்தினால் ஆன வரிகளைப் பார்க்கிறார் (வயிறு விரிந்து பிரசவத்துக்குப் பின்னர் திடீரென்று சுருங்குவதால் ஆனது), முகம் சுளிக்கிறார். மனைவியும் வருத்தத்தோடு என்னவெல்லாமோ முயற்சித்து விட்டேன், போகவில்லை என்கிறார். விளம்பர அசரீரி துணைக்கு வருகிறது. வேறென்ன, அதே எண்ணெய்தான், இப்ப வயித்திலயும் தடவுங்க.

நீங்கள் பெண்ணாயிருந்தால் அந்தக் கணவனின் முகம் சுளிக்கும் போது எரிச்சல் வருமா, வராதா சொல்லுங்கள்?

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதில் ஓரிரு பொருட்களைத் தவிர மீதி எல்லாம் பெண்களால் நுகரப்படுவது. பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

1. முதலில் தங்கள் எரிச்சலை வெளிப்படுத்த வேண்டும். இந்த விளம்பரங்களைச் செய்யும் நிறுவனங்கள் பல பங்குச்சந்தையில் உள்ளவை. எனவே அவர்களது வருடாந்திர பொதுக்கூட்டத்துக்கு (annual general meeting) சென்று கோஷமிடுவதோடு மட்டுமல்லாமல், பிராக்ஸி வாக்குகள் வாங்கி இம்மாதிரி விளம்பரங்களைக் கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற முயலுங்கள். தீர்மானம் நிறைவேறாமல் தோற்றாலும், ஊடகங்களில் வரும் எதிர்மறைச் செய்திகளுக்குப் பயந்து இந்த நிறுவனங்கள் தங்கள் செய்கைகளை மாற்றிக் கொள்ளலாம்.

2. இம்மாதிரிப் பொருட்களை விற்கும் நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரி, இணைய தள கருத்துப் பக்கங்கள் ஆகியவற்றில் உங்களது கோபத்தை வெளிப்படுத்துங்கள்.

3. இப்பொருட்களை வாங்காதீர்கள். இப்பொருட்களை விற்கும் நிறுவனங்கள் செய்யும் மற்றப் பொருட்களையும் நிராகரியுங்கள். அவர்களது போட்டி நிறுவனங்கள் பெண்களை இழிவுசெய்யாத வகையில் விளம்பரம் செய்யுமானால் அந்தப் பொருட்களை வாங்குங்கள்.

4. சிகப்பு நிறத்தின் மீது இந்தியர்களுக்கு இருக்கும் உள்ளார்ந்த விருப்பம், மற்றும் அதன் நீட்சியான கருமை நிறத்தின் மீது உள்ள வெறுப்பு ஆகியவை மிகப்பெரிய சமூகப் பிரச்சினை. தீண்டாமைக்கு அடுத்ததாகப் பெரிய பிரச்சினையாக இதைத்தான் சொல்வேன். அதிலும் பெண்கள் மீது மட்டுமே இந்தக் 'குற்றம்' சாட்டப்படுவதால் இந்தப் பிரச்சினை மிகவும் பெரிதாகிறது. இதனை எதிர்கொள்ள ஒரு சமூகப்புரட்சி இயக்கம் தேவை. இதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டியது பெண்களே. இந்தக் கட்டுரையின் நோக்கம் ஒரு கருத்துப் பரிமாற்றத்தை எதிர்பார்த்தே. சாதீயம், சாதீயவாதிகள் என்ற சொற்களைப் போல 'நிறத்தியம்', 'நிறத்தியவாதிகள்' போன்ற சொற்கள் பழக்கத்தில் வரவேண்டும். அப்படிப் பட்டவர்கள் இனங்காணப்பட வேண்டும். அவர்கள் பகிஷ்கரிக்கப்பட வேண்டும்.

விளம்பரங்கள் பற்றிய முந்தைய பதிவுகள்
1. வர்தான் பீடி பற்றிய பதிவு
2. புள்ளி ராஜாவும் திகேன் வர்மாவும்
3. சினிமா தியேட்டரில் தேசிய கீதம்

Tuesday, December 30, 2003

2003இல் தமிழ் இணையம்

சிஃபி தமிழ் இதழுக்காக நான் எழுதிய 2003இல் தமிழ் இணையம் என்னும் கட்டுரையின் யூனிகோடு வடிவம் இங்கே.

மைக்ரோசாஃப்ட் கழிதலும், லினக்ஸ் புகுதலும் - வழுவல

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் தனித்தியங்கும் கணினிக்கல்வி சான்றிதழகம் [Department of Electronics Accreditation of Computer Courses (DOEACC)] தனது பாடத்திட்டத்தில் மைக்ரோசாஃப்ட் தொடர்பான சில பாடங்களை விலக்கிவிட்டு லினக்ஸ் இயங்குதளம் பற்றிய பாடங்களை சேர்த்துக் கொண்டுள்ளது என்கிறது இன்றைய ஃபினான்ஸியல் எக்ஸ்பிரஸ்.

கிட்டத்தட்ட 4.6 லட்சம் மாணவர்கள் இந்த அமைப்பின் கீழ் சான்றிதழ் பெறப் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, December 29, 2003

சிதம்பரம்: வறுமையே.. போ!

ப.சிதம்பரம் - வறுமையே.. போ!
கல்கி 28/12/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 10

* அரசியல் கட்சிகளிலிருந்து மெதுவாக பொருளாதாரத்தின் பக்கம் வருகிறார் சிதம்பரம் தனது கல்கி தொடரில். வறுமை என்றால் என்ன என்பதற்கு நல்ல விளக்கம் தருகிறார்:
வறுமையின் அடையாளங்கள் என்ன?
  • கல்வி இல்லை.
  • கைத்திறன் இல்லை
  • சொத்து இல்லை
  • வேலை இல்லை
  • வருமானம் இல்லை
* ஒரு மனிதனுக்கு மேற்சொன்ன எதுவும் இல்லை என்றால் எப்படி வறுமையிலிருந்து விடுபடுவது? இது கல்வி மற்றும் கைத்திறன் கற்பதிலிருந்துதான் என்கிறார். கல்வி/கைத்தொழில் கற்பதிலிருந்து, வேலையும், வருமானமும் கிடைக்கின்றன, அங்கிருந்து சொத்து சேர்க்க முடிகிறது.

* வறுமையை ஒழித்த காலம் என்று இருபதாம் நூற்றாண்டை மட்டுமே சிறப்பாகக் குறிப்பிட முடியும். 1900இலிருந்து 1950 வரை பல நாடுகளில், பல கோடி மக்களின் வறுமை ஒழிக்கப்பட்டது. இந்த நேரத்தில் உலகப் போர்கள் நடக்காதிருந்தால் இன்னமும் பல கோடி மக்களின் வறுமை ஒழிக்கப்பட்டிருக்கலாம். இந்த நாடுகள் (அதாவது வறுமையை ஒழித்த நாடுகள் - முதலாம் உலக நாடுகள் என்று இப்பொழுது நாம் குறிப்பிடுவது) 1950-1975இல் தங்கள் நாட்டின் செல்வத்தை அதிகரித்தனர் என்கிறார்.

* 1975-2000த்தில் கூட பல ஆசிய நாடுகள் வறுமையை ஒழிப்பதில் சாதனை படைத்துள்ளன. (சிங்கப்பூர், மலேசியா, தென் கொரியா, தாய்லாந்து, தாய்வான், ஹாங்காங், மொரீஷியஸ், மாலத்தீவுகள்)

* வறுமையை ஒழிப்பது என்றால் இந்த நாடுகளில் வறுமையே இல்லை என்பதில்லை. அமெரிக்காவில் கூட ஏழைகள் உள்ளனர், ஆனால் மிகப்பெரும்பான்மையானவர்களுக்குக் கண்ணியமான, வளமான வாழ்க்கை அமைத்திருக்கிறது என்கிறார்.

* வறுமையை ஒழிக்க இந்தியாவிற்கு உள்ள ஒரே வழி முதலாளித்துவப் பொருளாதார முறையை ஏற்பதுதான் என்கிறார். அதே சமயம் இந்தியா விடுதலை பெற்ற நேரத்தில் காங்கிரஸ் (நேரு என்று படிக்கவும்) அரசாங்கம் சோஷலிசத்தை ஏற்றுக் கொண்டதில் தவறொன்றுமில்லை, அப்பொழுது அந்த முறைதான் சிறந்ததாக இருக்கும் என்று கருதப்பட்டது என்கிறார்.

* சிதம்பரம் வழங்கும் சுவையான புள்ளி விவரம்: 1900 முதல் 1950 வரை (வெள்ளைக்காரன் ராச்சியத்தில்!) இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஆண்டுக்கு வெறும் 1% மட்டுமே. 1950-1980இல் ஆண்டுக்கு வளர்ச்சி 3.5%, 1980க்குப் பிறகுதான் 5% க்கு மேல் வளர்ச்சி. 1991இல் புதிய பொருளாதாரக் கொள்கையை ஏற்றபின்னர்தான் வளர்ச்சி 6%த்தைத் தாண்டியது. அடுத்த சில இதழ்களில் புதிய பொருளாதாரக் கொள்கையை விளக்குவதாகவும் சொல்கிறார்.

என் கருத்து:

* எனக்கும் சிதம்பரத்தின் கருத்து - அதாவது விடுதலை அடைந்த நேரத்தில் சோஷலிச முறைதான், முதலாளித்துவ முறையை (திறந்த போட்டிப் பொருளாதார முறையை) விட இந்தியாவை வளம்படுத்தும் என்ற காங்கிரஸின் கொள்கை - சரியென்றே படுகிறது. அப்பொழுது முழு முதலாளித்துவ முறையைப் பின்பற்றியிருக்க முடியாது. நம் நாட்டில் பங்குச் சந்தை முறை வளர்ந்திருக்கவில்லை. அரசைத் தவிர வேறு யாரிடமும் தேவையான மூலதனம் இல்லை. நாட்டில் உயர் கல்வி இல்லாமலிருந்தது - முக்கியமாக மேலாண்மைத் துறை, பொறியியல் துறை ஆகியவற்றில். அப்பொழுது அரசே பலவற்றை ஏற்று நடத்த வேண்டியிருந்தது.

* இன்று பலர் அன்றைய காங்கிரஸ் மற்றும் நேருவை சோஷலிசத்தை இந்தியாவுக்குக் கொண்டுவந்தவர் என்று இகழ்கிறார்கள் (முக்கியமாக காவி வண்ணக் கட்சியினர்). இது தவறான அணுகுமுறை. இன்று சந்தைப் பொருளாதார முறை சரியானதாகத் தோன்றலாம். அன்றைக்கு இராஜாஜி/மினூ மசானி (சுதந்திராக் கட்சியினர்) போன்ற ஒரு சிலரைத் தவிர மற்றவர்களிடம் அந்தக் கருத்து நிலவவில்லை.

* இன்றும் நமது அரசினர் பல சோஷலிசக் கருத்துக்களை மனதில் வைத்திருக்க வேண்டும் - முக்கியமாக சோஷியல் செக்யூரிடி (சமூகப் பாதுகாப்பு) என்னும் கருத்தைக் கொண்டுவராது, முழு சந்தைப் பொருளாதார முறைமை வழிபோவது நல்லதல்ல என்று தோன்றுகிறது. அமெரிக்கா முதற்கொண்டு அத்தனை மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இந்த சமூகப் பாதுகாப்புத் திட்டம் முறையில் உள்ளது. இதன்படி, வேலையற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் அரசு அவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை உதவித்தொகை வழங்கி வருகிறது. அந்த உதவித்தொகையில் மூன்று வேளை உணவு நிச்சயம் கிடைக்கும். எப்பொழுது நம் நாட்டில் இந்த நிலைமை வருகிறதோ (அதாவது வேலையற்றோருக்கு அரசு உயிர்வாழத் தேவையான அளவிற்கு உதவித்தொகை வழங்குகிறதோ) அன்றுதான் நம் நாடு ஏழ்மையை ஒழிப்பதில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது எனலாம்.

கல்கி 21/12/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 9

Sunday, December 28, 2003

சங்கம்: மாலன், வைரமுத்து சந்திப்பு

ஏதோ ஒரு பட்சி சொன்னது இந்த வருட சாஹித்ய அகாதெமி பரிசு பெற்ற 'கள்ளிக்காட்டு இதிகாச'த்தின் ஆசிரியர் வைரமுத்துவுடன்தான் , இன்றைய சன் நியூஸ் சங்கம் சந்திப்பு இருக்குமென்று.

இரா.முருகன் ராயர்காபிகிளப்பில் தன் ஆலப்புழை பயணம் பற்றி 'எழுத்துக்காரனின் டயரிக்குறிப்புகள்' என்று ஒரு பயணக்குறிப்பு வரைகையில் (அற்புதமான கட்டுரை இது), தான் ஒரு மலையாளத் தொலைக்காட்சியில் பார்த்த எழுத்தாளரின் நேர்முகம் ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார்:
"நிகழ்ச்சி முடிந்து இன்னொரு மலையாளச் சானல். மலையாள எழுத்தாளர் சாரா ஜோசஃப் கூட அபிமுக சம்பாஷணம். சின்னச் சின்ன மலையாள நகரங்களும், வீடுகளும், பள்ளிகளுமாகத் திரையில் நகர்கின்றன. எல்லாம் சாரா வாழும், வாழ்ந்த, புழங்கிய இடங்கள். ஒவ்வொரு காட்சி வரும்போதும் தன்னுடைய எந்தப்படைப்பில் அந்த இடமும், அவிடத்து மனிதர்களும் வருகிறார்கள் என்று விவரிக்கிறார் சாரா. பேட்டி கண்டவர், எழுத்தாளர் எழுதிய படைப்புகளை எல்லாம் படித்தவர் என்பதால் மேலும் கருத்துப் பரிமாற்றம் நிகழ இயல்பாக வழிசெய்தபடிக்குப் பேட்டியைத் தொடர்கிறார்."
முருகன் மாலனிடமும் போனவாரம் இதைப்பற்றிப் பேசினார். மாலன் உடனடியாக இதனை இந்த வாரப் பேட்டியில் செயல்படுத்தியிருக்கிறார் என்று தோன்றுகிறது!

நிகழ்ச்சி தொடக்கத்தில் வைரமுத்து வைகை நதியணைக்கு அருகிலிருந்து பேசுகிறார். "சிலருக்கு தந்தையைப் புதைத்த நினைப்பிருக்கும், சிலருக்கு தாயைப் புதைத்த நினைப்பிருக்கும், எனக்கு தாய் மண்ணைப் புதைத்த நினைப்பு" என்று கம்பீரமான குரலில் மனம் கலங்கப் பேசும் திறன் அவருக்கு மட்டுமே. கள்ளிக்காட்டு இதிகாசம் - வைகை அணை கட்டுவதற்காக பதினெட்டு கிராமங்களின் மக்களை இடம்பெயர்க்கச் செய்த கருவிலிருந்து உருவாகிறது. அப்படி கண்ணில் நீர் பொங்க இடம்பெயர்ந்த ஒரு தாயின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்த நாலரை வயதுச் சிறுவன் வைரமுத்துவின் காவியம்தான் சாஹித்ய அகாதெமியினால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தக் கதைச் சித்திரம்.

"பல பேர்களின் வாழ்வில் நிகழ்ந்ததை ஒருங்கிணைத்து பேயத்தேவன் என்ற ஒருவனின் குடும்பத்தில் நிகழ்ந்ததாகச் சொன்ன ஒன்றை மட்டும்தான் நான் செய்தேன்" என்று அடக்கத்துடன் சொன்ன வைரமுத்து, அந்த இடப்பெயர்வில் பங்குபெற்ற இருபது பேர்களுடன் இரண்டு நாள் முழுக்கத் தங்கியிருந்து அவர்களது கதை முழுவதையும் கேட்டறிந்து, அதனைத் தன்னுடைய குடும்பத்தில் நிகழ்ந்ததுடன் இணைத்துச் செய்திருக்கிறார் இந்தக் கதையை. "இது முழுக்க முழுக்கக் கற்பனையும் அல்ல" என்கிறார்.

மாலன் நச்சென்று "மண் பேசுகிறது" என்று இந்தப் புத்தகத்துகான விமரிசனத்தை முன்வைத்தார். மண்ணில் தொடங்கி, ஆறு நிலத்தை மூழ்கடிக்குமுன்னர் அந்த மண்ணை எடுக்க முயன்று மூழ்கிப்போனவனின் கதை. வயிற்றுக்கு உணவு மட்டுமின்றி, புண்ணுக்கும் மருந்தான மண். அந்த மண்ணைத் தவிர வேறெதையும் அறியா அப்பாவி மக்களுக்கு சரியான நஷ்ட ஈடு தராத அரசின் மீதுள்ள கோபத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தினார் வைரமுத்து. வீடு கட்டுவதற்கு முன்னால் சொல்லப்படும் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தினை மேற்கோள் காட்டி - "மரங்களே, எங்களை மன்னித்து விடுங்கள், உங்களை அழித்துதான் நாங்கள் வீடுகளைக் கட்ட வேண்டும், மரத்தின் மீது கூடு கட்டியுள்ள பறவைகளே, எங்களை மன்னித்து விடுங்கள்" என்றெல்லாம் மரங்களிடமும், பறவைகளிடமும் மன்னிப்பு கேட்ட மனிதர்கள் வாழ்ந்த நாட்டில் இன்று புது நாகரிகத்தின் தேவையான அணைகளைக் கட்டும்போது அதனால் பாதிக்கப்படும் மக்களுக்குச் சரியான நீதி கிடைப்பதில்லை, அவர்கள் வசிப்பதற்கு மாற்றிடம் கிடைப்பதில்லை, நஷ்ட ஈடு சொற்பமே என்று வைரமுத்து சொன்னது மனதைத் தைத்தது. நர்மதா அணைத்திட்டம் கொண்டுவரும் அரசுகள் இன்றும்கூட அதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு சரியான ஈடு கொடுப்பதில்லை.

நிகழ்ச்சி முழுதும் ஆங்காங்கே கதையின் காட்சிக்கு இணையாக ஒரு படத்துண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இளம்பெண் வண்டியில் ஏறி ஊரை விட்டுப் போகும்போது, முகச்சவரம் செய்யும்போது கீறியதால் வந்த இரத்தம் துடைத்த பஞ்சை அந்தப்பெண் எடுத்து வைத்துக்கொள்வது என்று. அந்தக் காட்சி காண்பிக்கபடும்போது பின்னணியில் வைரமுத்துவின் குரலில் இந்தக் காட்சியை அவர் எழுதியது பற்றி, அவரது சொந்த அனுபவத்தைப் பற்றி அவர் சொல்வது என்று வெகு நேர்த்தியாக செல்லுகிறது நேர்முகம். இதுவரையில் நான் பார்த்த சங்கம் நேர்முகங்களில் நன்கு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சி இது. இது சன் டிவி போன்ற முக்கியச் சானலில் வரவேண்டியது.

விவரமான புத்தக விமரிசனம் யாராவது எழுதியிருக்கலாம். நான் இன்னமும் புத்தகத்தைப் படிக்கவில்லை. விகடனில் தொடராக வந்தபோதும் படிக்கவில்லை. அபுல் கலாம் ஆசாத்தின் கள்ளிக்காட்டு இதிகாசத்தையும், சுந்தர ராமசாமியின் சிறுகதைகளையும் ஒப்புநோக்கிய கட்டுரை இங்கே.

மாலன் - சிவ.கணேசன் சந்திப்பு

நீதியின் பாதையில் - வலைப்பதிவு பற்றி ஒரு அறிமுகம்

பிரபு ராஜதுரை மும்பையில் வழக்கறிஞராகப் பணியாற்றுபவர். தமிழ் யாஹூ! குழுக்களில் சட்டம் பற்றியும் (பிறவற்றைப் பற்றியும்) எழுதுவார். நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, ஒருவழியாகத் தன் வலைப்பதிவை ஆரம்பித்து விட்டார்.

படித்துப் பயன் பெறுங்கள்.

Saturday, December 27, 2003

இந்தியக் கல்வித்துறை பற்றி

பாலா சுப்ராவின் வலைப்பதிவு மூலம் நியூயார்க் டைம்ஸ் கட்டுரை படிக்கக் கிடைத்தது (உள்ளே நுழையப் பதிவு செய்ய வேண்டும்).

இந்தியாவிலும் கல்வித்துறை பெரும் தொல்லையில் உள்ளது. என் நண்பன் சத்யநாராயணுடன் பலமுறை கல்விமுறை பற்றி விவாதித்திருக்கிறேன். எனக்குள் பல குழப்பமான கருத்துகள் உள்ளன. எழுத எழுதத்தான் தெளிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் என் கருத்தினை சுருக்கமாக முன்வைக்கிறேன்.

இப்பொழுதுள்ள கல்விமுறையின் சில பிரச்சினைகள்:

1. ஆரம்பக் கல்வி கூட பலருக்குக் கிடைப்பதில்லை.

2. பொருளாதார உயர் வர்க்கத்தினர், மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் குழந்தைகளை அனுப்பும் நகர்ப்புறப் பள்ளிகளில் அரைகுறைப் படிப்புதான் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. எப்படியாவது தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே குறியாக இருக்கிறது. அறிவு பெறுவது என்பது இரண்டாம் பட்சமோ, மூன்றாம் பட்சமோ. பல கலைகளையும் கற்பது, முக்கியமாக வாழ்க்கைக்குத் தேவையான பொது அறிவு பெறுவது என்பது இம்மியளவும் இல்லை.

3. நகரல்லா மற்ற இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளும், அரசினர் பள்ளிகளும் ஒன்று சேர, தரமற்றதாகவே உள்ளன.

4. தப்பித் தவறி மேல்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்து வெளியே வருபவர்கள் அனைவருக்கும் கல்லூரிகளில் இடமில்லை. மிஞ்சிப் போனால் அஞ்சல்வழிக் கல்வி கற்கலாம். அவ்வாறு இளங்கலைப் படிப்பிற்கு அஞ்சல் வழிக் கல்வியில் சேருபவர்களால் சரியாகப் மனதை செலுத்திப் படிக்க முடியுமா என்று தெரியவில்லை.

5. எல்லாப் படிப்பும் முடித்தாலும் வேலை என்று வரும்பொழுது கல்விக் கூடங்கள் சரியான முறையில் பயிற்சி கொடுக்காததனால் மாணவர்களால் 'வேலைக்கு லாயக்கற்றவர்களாக' இருக்கின்றனர். இதனை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். என் அலுவலகத்தில் வேலைக்கு ஆளெடுக்கும்போது நேர்முகத்தேர்வுக்கு வருபவர்களைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.

இத்தனையையும் மீறி இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் துடிப்புடன் நாட்டை முன்னோக்கி செலுத்தி வருகிறார்கள். அந்நியச் செலாவணி இருப்பிலிருந்து, பல்வேறு பொருளாதார அளவுகோல்களிலும் 'இந்தியா ஜொலித்துக் கொண்டுதான்' இருக்கிறது. ஆனால் நம் நாட்டின் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தொடங்கினால் இன்னமும் எவ்வளவு ஜொலிப்பு கூடலாம்?

என்னுடைய சில (முற்றுப்பெறாத) விடைகள்:

1. மேல்நிலை வரை கட்டாய இலவசக் கல்வி

மத்திய, மாநில அரசுகள் இதற்கான முழுச்செலவையும் ஏற்க வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் ஒன்றிலிருந்து பனிரெண்டாவது வரையான கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் புத்தகங்கள், உடை, உணவு ஆகியவை அனைத்தையும் இலவசமாக வழங்க வேண்டும். வீடுகளில் தங்கிப் படிக்க வசதியில்லாத அனைவருக்கும் இலவசமாகத் தங்குமிடமும் அளிக்க வேண்டும்.

பணம் இருப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து, போஷாக்கான உணவும், புத்தாடைகளும், கல்வியையும் வழங்கலாம். இல்லாவிட்டால் அரசினர் கல்விக்கூடங்களில் மற்றவர்களுடன் சேர்ந்து படிக்கவும் வைக்கலாம். அவர்கள் இஷ்டம். ஆனால் மொழி, மத, சாதி, பொருளாதார வித்தியாசம் பார்க்காது, யார் வேண்டுமானாலும் அரசு பள்ளிக்கூடங்களில் இலவசமாகக் கல்வி, உடை, உணவு, புத்தகம் ஆகியவற்றையும், வேண்டுபவர்களுக்குத் தங்குமிடமும் கொடுக்கப்பட வேண்டும்.

2. தனியார் மூலம் அரசின் கல்வி நிலையங்கள் நடத்துதல்

அரசினால் மேற்சொன்ன அளவிற்கு ஆசிரியர்களை நியமித்து வேலை செய்ய வைக்க முடியுமா என்று தெரியவில்லை. அமெரிக்காவில் இருப்பது போல, தனியார் நிறுவனங்களைக் கொண்டு அரசின் பள்ளிகளை நடத்த வைக்கலாம். அதாவது அரசு பள்ளிக்கூடக் கட்டிடங்களைக் கட்டித் தந்து, ஒவ்வொரு பள்ளிக்கூடத்தையும் நடத்துவதற்கு நீண்ட கால அளவிலான குத்தகைக்குத் தனியார் நிறுவனங்களிடம் விடலாம். இந்தத் தனியார் நிறுவனங்களுக்கான தேர்வு ஏலத்தின் மூலம் முடிவு செய்யப்படும். எந்த நிறுவனம் சிக்கனமாக, அதே நேரத்தில் செழுமையாக, குறைந்த பட்சக் கல்வியறிவைப் புகட்டும் என்பதை மனதில் வைத்து நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இந்தப் பள்ளிகளில், ஒரு குழந்தைக்கு வருடத்திற்கு படிப்புக்கு என்ன செலவாகிறதோ, அதே பணத்துக்கான 'கல்வி வரவு' (education credit) இப்பள்ளிகளில் படிக்காமல் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். மீதிச் செலவினை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வர். இதன்மூலம் யாரும் தங்கள் வரிப்பணம் பிறர் குழந்தைகளை மட்டும் படிக்க வைக்கிறது என்று அலுத்துக்கொள்வதைத் தடுக்கும்.

இந்தத் திட்டத்தை பஞ்சாயத்துகள், நகரமன்றம் ஆகியவற்றின் மூலமாக நடத்த வேண்டும்.

3. மேல்நிலைப் பள்ளிகளுக்கு மேலான கல்வி அனைத்தையும் தனியார் நிறுவனங்கள்தான் முக்கியமாக நடத்த வேண்டும். ஒருசில மாநில அரசுகள் விரும்பினால் கல்லூரிகளைக் கட்டலாம். கல்லூரிப் படிப்பிற்கு மிகக் குறைந்த வட்டியில் வேலை கிடைக்கும் போது திருப்பிக் கட்டுமாறு கடன் வழங்கப்பட வேண்டும்.

அதாவது மேல்நிலைப் பள்ளிக் கல்வி வரை இலவசக் கல்வி. அதற்கு மேல் கட்டணக் கல்வி. அந்தக் கட்டணத்தையும், மற்ற செலவுகளையும் கட்ட முடியாதவர்களுக்கு மிக எளிதாக கடன் வழங்கப்பட வேண்டும்.

இந்த முறை அமெரிக்காவில் திறம்பட இயங்கி வருகிறது. கடன் வாங்கிய மாணவர், வேலைக்கு சேர்ந்த பிறகு கடனைத் திருப்பிக் கட்ட ஆரம்பித்தால் போதும்!

4. மாறுபட்ட கல்வியினை வளர்த்தல்

மேல்நிலைப் பள்ளிக் கல்வி வரை ஒரு நாளைக்கு மூன்று மணிநேரத்திற்கு மேல் பள்ளிக்கூடத்தில் கல்வி புகட்ட வேண்டியது அவசியமில்லை என்று தோன்றுகிறது. அப்படி படித்துக் கிழிக்க உண்மையில் ஒன்றுமே இல்லை! ஆதலால் ஒரே பள்ளிக்கூடக் கட்டிடத்தில் மூன்று அடுக்குகளாக ஷிஃப்ட் முறையில் பாடம் நடத்தலாம். காலை 7-10, 11-14, 15-18 என்று மூன்று வகுப்புகள் நடத்தலாம். இரவு நேரத்தில், அதாவது 19.00 மணி முதல் 22.00 வரை வயது முதிர்ந்தோர், படிப்பறிவில்லாத பிறர் ஆகியோருக்கு தொழில்முறைப் பாடம் நடத்த இதே கட்டிடங்களைப் பயன்படுத்தலாம். இதனால் கட்டிடம், நூலகம், கணினி மையம், சோதனைச் சாலைகள், விளையாட்டுப் பயிற்சிக்கூடம் மற்றும் களங்கள் முதலியனவற்றைத் திறம்பட உபயோகிக்கலாம்.

அதைத் தவிர்த்து, சிறு குழுக்களாக அரசின் கல்வித் திட்டத்தின் கீழல்லாது, தேர்ச்சி பெற்ற ஆசிரியரின் கீழ் சொந்தமாகக் கல்வி கற்க விரும்புபவருக்கும் அரசின் கல்விக்கூடங்களில் உள்ள நூலகம், கணினிகள், சோதனைச் சாலைகள் ஆகியனவற்றைப் பயன்படுத்த ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும். குருகுலக் கல்வி போல ஒரு ஆசிரியர், அவரிடம் 20 மாணவர்கள் ஆரம்பத்திலிருந்து 12ஆவது வகுப்பு வரை படிக்கலாம். 10ஆவது, 12ஆவது பாடங்களின் தேர்வுகளை அவர்கள் தேசியத் திறந்த வெளிக் கல்விமுறையின் கீழ் எழுதலாம். இவ்வாறு தேர்வெழுதித் தேர்ந்தவர்கள் கல்லூரிகளில் சேரத் தடையெதுவும் இல்லை.

'கல்வி வரவு' முறை மூலம் ஒவ்வொரு மாணவருக்காகவும், போதனை செய்யும் ஆசிரியருக்கு ஒரு குறிப்பிட்ட பணமும், மாணவர் படிப்புக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் கிடைத்து விடும்.

5. இளங்கலைக் கல்லூரிப் படிப்பினை அஞ்சல் வழிக் கல்வி மூலம் அதிகரித்தல்

ஒவ்வொரு ஊரிலும் 'டுடோரியல்' கல்லூரிகள் போலத் தனியார் கல்லூரிகள் அமைக்கலாம். இந்தக் கல்லூரி ஒருவரது வீட்டு மாடியிலேயே நடத்தப்படலாம். மாணவர்கள் அஞ்சல் வழிக் கல்வித்திட்டத்தில் சேர வேண்டும். அதற்கு மேல், இந்த 'மாடிவீட்டுக் கல்லூரியில்' பதிவு செய்து கொண்டு, அங்குள்ள ஆசிரியரிடம் அஞ்சல் வழிக் கல்விக்கான பயிற்சி பெறலாம். கல்வி பயிலும் நேரம் வசதிக்கேற்ப வைத்துக் கொள்ள முடியும்.

6. தனியார் கல்லூரிகள் அமைக்க இடர்பாடுகளைக் குறைத்தல்

தற்பொழுது கல்விக்கூடங்கள் அமைக்க அறக்கட்டளைகளால்தான் முடியும் என்ற நிலைமை இருக்கிறது. அதனால் லாபம் செய்ய நினைக்கும் நியாயமான தொழில்முனைவோரால் கல்லூரிகளை அமைக்க முடியாது. திருட்டுத்தனமாக பணத்தைக் கொள்ளையடிக்க நினைப்பவரால்தான் அறக்கட்டளை என்ற பெயரால் கல்லூரிகள் அமைத்து, 'நன்கொடை' என்ற பெயரால் வசூல் செய்ய முடிகிறது. இந்தக் குறைபாட்டினை நீக்க, லாப நோக்கு நிறுவனங்களும் கல்லூரிகளை அமைக்கலாம், அதில் லாபம் ஏற்பட்டால் அதைப் பங்குதாரர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று சட்டமாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.

இதன்மூலம் மிக அதிக அளவில் மூலதனம் கல்லூரிகள் அமைப்பதில் வரும். இந்தக் கல்லூரிகளும் கல்வி அமைச்சகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில்தான் இயங்கும். ஒவ்வொரு படிப்பிற்கும் அதிகபட்சம் எவ்வளவு தொகை கட்டணமாக வசூலிக்கப்படலாம் என்று நிர்ணயிப்பது கல்வித்துறையின் வேலையாகும். இப்பொழுது மின்சாரம் கிட்டத்தட்ட இந்த முறையில்தான் கட்டுப்படுத்தப் படுகிறது. மும்பை, தில்லி போன்ற பெருநகரங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் தனியார், விநியோகிப்பதும் தனியார். அரசு, மின்சாரத்தின் அதிகபட்ச விலையை மட்டும் நிர்ணயிக்கிறது. தொலைதொடர்புத் துறையிலும் இவ்வாறே. கல்வித்துறையிலும் இதைச் செய்ய முடியும்.

இப்பொழுது சிறுபான்மையினருக்கு மட்டுமே (கிறித்துவ, இஸ்லாமியர்) அறக்கட்டளை மூலம் கல்விக்கூடங்கள் அமைப்பது எளிதாக இருக்கிறது. இந்தச் சிக்கல்களை நீக்குவது உடனடி அவசியமாகிறது.

---

இதனாலெல்லாம் இந்தியாவில் கல்விக்குறைபாடுகள் ஒரேயடியாக நீங்கி விடும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஓரளுவுக்குப் பிரச்சினை குறையும் என்று தோன்றுகிறது. உங்களது கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

மீண்டும் திசைகள்?

பாரா பெரிய மனது பண்ணி என்னையும் ஒரு முக்கியமான எழுத்தாளராக்கி விட்டார். அதெல்லாம் ஒன்றுமில்லை.

சிலநாட்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த ஒரு இலக்கிய சந்திப்புக்கு என்னைக் கூப்பிடவில்லை என்று பெரிய ரகளை செய்துவிட்டேன். அப்பொழுது நான் செய்த அழும்பைப் பார்த்து அதிர்ந்தவர்கள் இப்பொழுது 'இலக்கியம்+சென்னை' என்று எது நடந்தாலும் என்னை அழைக்காமல் இருப்பதில்லை.

போனவாரம் ஒருசில படைப்பாளிகள் மாலனின் வீட்டுக்குப் போனபோது, ஒட்டிக் கொண்டு சென்றேன். கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களில் சிலர் இணையத்தை ஒருபோதும் தொட்டிருக்காதவர்கள். ஒருசிலர் சென்னைக்கு வெளியேயிருந்து இந்தக் கூட்டத்திற்கெனப் பிரத்தியேகமாக வந்திருந்தனர்.

இந்தக் கூட்டத்திற்கு என்ன பின்புலம்? என்ன அவசியம்? மாலனுக்கும், வந்த மற்றவர்களுக்கும் வெவ்வேறு கருத்துகள் இருக்கலாம். ஒரு வாசகனாக என்னுடைய கருத்துகளை இங்கு பதிவு செய்கிறேன்.

சிறுவயதில் பள்ளிச்சிறுவனாய் இருந்தபொழுது தமிழில் படிப்பது ஆரம்பித்தது. முதலில் காமிக்ஸ் புத்தகங்கள். அற்புதமாக தமிழில் பல காமிக்ஸ் புத்தகங்கள் அப்பொழுது கிடைத்து வந்தன. முழுக்க முழுக்க தமிழ்க்கதைகள் (சுட்டிக்குரங்கு கபீஷ்!), முழுக்க முழுக்க ஆங்கிலக் கதைகள் தமிழிலே மொழிபெயர்க்கப்பட்டவை (இரும்புக்கை மாயாவி, முகமூடி அணிந்த வேதாளம், மந்திரவாதி மாண்டிரேக்!). இப்பொழுது இவையெல்லாம் எங்கே போயினவென்றே தெரியவில்லை. பின்னர் வாரப்பத்திரிகைகள், மாத நாவல்கள் என்று வெகுஜன இதழ்கள் ஒன்றை விட்டது கிடையாது. [அதற்கப்புறம் பெருமாள் கோயில் வெளிச்சுற்றில், பிற நண்பர்கள் வீட்டில் என்று மறைத்துவைத்துப் படித்த சரோஜாதேவி முதலான உன்னத இலக்கியங்களை வெளியே சொல்ல வேண்டாம்!]

அதையடுத்து அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய நூலகத்தில் ஒரு பொக்கிஷத்தைக் கண்டுபிடித்தேன். அப்பொழுதுதான் மௌனி, தி.ஜா என்று ஆரம்பித்தேன். பின்னர் கிரிக்கெட் என்னை ஆக்ரமித்துக் கொண்டது. எட்டு வருடங்களுக்கு மேலாகத் தமிழ் படிப்பது முழுதும் நின்றுபோனது. தமிழில் எழுதுவது என்பது வீட்டிற்கு எழுதும் கடிதங்களாக மட்டுமே இருந்து, அதுவும் நின்றுபோய்ப் பத்து வருடங்களாகி இருந்தது. மீண்டும் தமிழ் உலகில் வாசகனாகப் புகுந்தது ஏப்ரல் 2003இல்தான். அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்ப் புத்தகங்கள், அச்சில் வெளிவரும் இதழ்கள் (சிறிது, பெரிது), இணைய இதழ்கள், ராயர்காபிகிளப், மரத்தடி என்று நிறையப் படிக்க ஆரம்பித்தாயிற்று.

இந்த ஒன்பது மாதங்களில் ஒன்பது சந்தேகங்கள் எழுந்தன.

1. விகடன், குமுதம் போன்ற வெகுஜன இதழ்களில் ஏன் நல்ல படைப்புகள் மிகக் குறைவாகவே வருகின்றன? கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத்தான் தேடவேண்டும் போல் இருக்கின்றது?

2. ஏன் ஒவ்வொரு சிற்றிதழிலும் குறிப்பிட்ட ஒரு சிலரே எழுதிக் கொண்டிருக்கிறார்கள்? ஒரு சிற்றிதழில் வாடிக்கையாக எழுதுபவர்கள் அடுத்த சிற்றிதழுக்குக் கூட மாற்றி எழுதுவதில்லை? ஒவ்வொரு சிற்றிதழிலும், வாடிக்கை ஆசாமிகளைத் தவிர வேறு யாரும் எழுதுவதில்லை? (எழுதப்பட விடுவதில்லை?)

3. ஏன் சிற்றிதழ்களில் எழுதும் யாரும் வெகுஜன இதழ்களில் எழுதுவதே இல்லை?

4. சிற்றிதழ்கள் என்று சொல்லப்படுவன ஏன் சிலநூறுகளுக்கு மேல் செல்லுபடியாவதில்லை?

5. இணையத்தில் எழுதும் அற்புதமான ஒருசில எழுத்தாளர்கள் ஏன் வெகுஜன இதழ்கள் அல்லது சிற்றிதழ்களில் காணக் கிடைக்கவே மாட்டேன் என்கிறார்கள்? இது இந்த எழுத்தாளர்களில் பிரச்சினையா அல்லது இதழாசிரியர்களின் பிரச்சினையா?

6. ஒரு அருமையான படைப்பை (அது அச்சிலாகட்டும், இணையத்திலாகட்டும்) ஒருவர் படித்து விட்டு, இணையத்தில் 100-200 பேர் இருக்கும் ஒரு யாஹூ குழுமத்தில், 10-20 மட்டுமே பேசிக் கொண்டால் போதுமா?

7. சுவையான வாசிப்பு அனுபவத்தை பெரும்பான்மைப் பொதுமக்களிடம் கொண்டுபோகவே முடியாதா? அதென்ன அவர்களுக்கு வாய்த்தது வெகுஜன இதழ்களில் வரும் குப்பைகள்தானா? (எல்லாமே குப்பைகள் இல்லை, ஆனால் பெரும்பான்மையானவை குப்பைகள் என்பது என் எண்ணம்.) ஏன் இரா.முருகன் போன்றவர்கள் இப்பொழுது விகடன் போன்ற இதழ்களில் எழுதுவதில்லை, இவர்களை எழுதச் சொல்லி யாருமே கேட்பதில்லையா? இல்லை, இவர்கள் எழுதி அனுப்பினாலும் அவர்கள் தூக்கி எறிந்து விடுகிறார்களா?

8. இணையத்தில் பரவியிருக்கும் உலகத்தமிழர்களை (படைப்பாளிகள்/வாசகர்கள்), தமிழகத்தில் குறுக்கப்பட்டிருக்கும் படைப்பாளிகள்/வாசகர்களுடன் இணைக்க முடியுமா?

9. தமிழ் பேசும், படிக்கும் பெரும்பான்மை மக்களுக்குத் தற்காலத் தமிழில் சிறந்த படைப்பாளிகள் பலரைத் தெரியுமா?

ராகாகி மூலமாக ராகவன், முருகன், வெங்கடேஷ் என்று ஆரம்பித்து சில படைப்பாளிகளின் பழக்கம் கிடைத்தது. பதிப்பகங்கள், சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் ஆகியவை பற்றி பல விஷயங்கள் தெரிய ஆரம்பித்தன.

வாசகனாக, ஒத்த கருத்தினருடன் ஒன்று சேர்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. என்னென்ன செய்ய வேண்டும்?

1. படைப்பாளிகளை வாசகர்களுடன் நெருக்கமாக இணைக்க வேண்டும்.

2. சிற்றிதழ், வெகுஜன இதழ் என்ற பேதம் என்னைப் பொறுத்தவரை செயற்கையாகத் தோன்றுகிறது. ஒரு படைப்பாளி படைப்பை வெளிக்கொணரும் முன்னால், 'இது சிற்றிதழுக்கென, இது வெகுஜன இதழுக்கென' என்று நினைத்துச் செயல்படும்போது அந்த படைப்பு குறைபடுகிறது என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் ஒவ்வொரு இதழுக்கும் என ஒரு துல்லியமான நோக்கும், குறிக்கோளும் இருப்பதனால் (நிஜமாகவே இது இருக்கிறதா?) சில ஒழுங்குகளும், வரைமுறைகளும் ஏற்படுத்தப் பட்டிருக்கலாம். எல்லா படைப்புகளுமே எல்லா இதழ்களுக்கும் பொருந்துமெனச் சொல்ல முடியாது என்றும் புரிகிறது. ஆனாலும் ஒரு படைப்பாளியின் அனைத்துப் படைப்புகளையும் முழுவதுமாக மக்களிடம் கொண்டுபோக வேண்டும். இதற்கு வெகுஜன இதழ், சிற்றிதழ்களுக்கிடையேயான பிளவினைக் குறைக்க வேண்டும்.

3. தற்பொழுது சிறு வட்டத்தில் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளை, பெரும்பான்மை மக்களிடம் கொண்டுபோக வேண்டும்.

4. வெளித்தெரியாமல் இருக்கும் திறமை மிக்க படைப்பாளிகளை வெளியே கொண்டுவர வேண்டும். புதிய, இளைய படைப்பாளிகளைக் கண்டுபிடித்து, அவர்களுக்குக் களம் அமைத்துத்தர வேண்டும்.

5. இணையம் (வலைப்பதிவுகள், இணையக் குழுக்கள், மின் புத்தகங்கள்), அச்சுப் பதிப்பகம், இதழ் வெளியீடு ஆகிய பலவற்றையும் ஒருங்கிணைத்து, படைப்புகளுக்கான சந்தையை விரிவுபடுத்தி,
(அ) தங்கள் படைப்புகளை வெளிக்கொணர, படைப்பாளிகளுக்கு, ஒரு நல்ல மேடையும், நல்ல வருமானமும்
(ஆ) வாசகர்களுக்குத் தரமான படைப்புகளும்
கிடைக்குமாறு செய்ய வேண்டும்.

வரும் நாட்களை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

Friday, December 26, 2003

பெர்வீஸ் முஷாரஃப் மீது மற்றுமொரு கொலை முயற்சி

பாகிஸ்தான் அதிபர் பெர்வீஸ் முஷாரஃப் மீது கடந்த 11 நாட்களில் இரண்டாவது முறையாக கொலைமுயற்சி நடந்துள்ளது. இரண்டாவது தடவையும் முஷாரஃப் தப்பித்துள்ளார். முதல் முறையை விட இரண்டாவது முறை கொலைகாரர்கள் மிக அருகில் நெருங்கியுள்ளனர். முதல்முறை பாலத்தில் அடியில் வைத்திருந்த வெடிகுண்டு வெடிக்காததால் தப்பித்துள்ளார். இரண்டாவது முறை தற்கொலைப்படையினர் முஷாரஃப்பின் கார் மீது இரண்டு வெடிமருந்துகள் நிரம்பிய கார்களைக் கொண்டு மோத வந்துள்ளனர். ஆனால் என்ன நடந்தது என்று சரியாகத் தெரியவில்லை, முஷாரஃப்பின் காரின் கண்ணாடி மீது வெடித்துச் சிதறிய பொருட்கள் விழுந்துள்ளன. முஷாரஃப்பிற்குக் காயம் ஏதும் படவில்லை.

பா.ராகவன் இது நிஜமா, நாடகமா என்று சந்தேகப்பட்டு விளக்கமாக ஆராய்ந்துள்ளார். [ஏற்கனவே தெரியாதவர்களுக்கு: பா.ராகவன் கதையெழுத்தாளர் மட்டுமல்ல, தீவிர உலக அரசியல் விமரிசகரும் கூட. குமுதம் ரிப்போர்டரில் இவரது 'டாலர் தேசம்' என்னும் அமெரிக்கா பற்றிய தொடர் கட்டுரைகள் கடந்த 64 இதழ்களாக வந்துகொண்டிருக்கிறன. பாகிஸ்தான் பற்றி நிறைய எழுதியுள்ளார். சதாம் ஹுஸேன் பிடிபட்டபோது அதைப்பற்றிய இவரது விரிவான கட்டுரைகள் குமுதம் ரிப்போர்டரில் வெளியாகியுள்ளன.]

எனக்கு முதல் கொலைமுயற்சி நாடகம் போல் தோன்றினாலும், இரண்டாவதில் உள்ள தீவிரம் இது நிஜமாக இருக்கலாமோ என்று நம்பும்படியுள்ளது. இன்னமும் விவரங்கள் தேவை.

Thursday, December 25, 2003

சைபர்-பாஜக

பாஜக வெறும் ஸீரோன்னு சொல்லலீங்கோ. அவங்க தலைவர் வாஜ்பாயியோட 79ஆவது பொறந்த நாளைக்காக அந்தக் கட்சியோட இணைய தளத்துல ஒங்களோட கணினிக்காக ஒரு 'ஸ்க்ரீன் சேவர்' கொடுக்கறாங்களாம். அதுல கவிஞர் வாஜ்பாயி தன்னோட கவிதைகள படிக்கறாராம்!

திமுக எப்பங்கண்ணா சைபர்-திமுக ஆவும்? தலைவரு முரசொலில ஜெயமோகனப் பத்தி எளுதின கவிதையப் படிக்கிறாப்பல ஒரு ஸ்க்ரீன் சேவர் கெடைக்குமுங்களா?

Wednesday, December 24, 2003

தினமலர் கம்ப்யூட்டர் மலர்

நல்ல பகுதி. ஆனால் அவர்கள் ஆங்கிலத்தை அள்ளித் தெளிக்கும் விதம் கொடுமையாக இருக்கிறது. இதற்குபதில், இந்தப் பகுதியை முழு ஆங்கிலப் பகுதியாகச் செய்து விடலாம். இன்னமும் கம்ப்யூட்டர்தான். கணினியல்ல. நல்ல வேளையாக இணையம் புகுந்து விட்டது. இண்டெர்நெட் அல்ல.

எடுத்துக்காட்டாக இந்தப் பத்தியைப் பாருங்கள்.
பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் நிறுவப் படுகையில் உங்களை ஏமாற்றிவிடும். Startup போல்டரில் அவற்றின் பெயர்கள் தெரியாது. ஆனால் விண்டோஸ் இயங்கும்போது இவையும் இயங்கும். அதனால் விண்டோஸ் செயல்பட நேரம் பிடிக்கும். இந்த அப்ளிகேஷன்களை வெளியேற்ற வேண்டும். அதற்கு Start=>Run கட்டளையை கொடுங்கள். MSCONFIG என டைப் செய்து என்டர் கீயை அழுத்துங்கள். System Configuration utility என்ற டயலாக் பாக்ஸ் தெரியும். அதிலுள்ள Startup டேபை கிளிக் செய்யுங்கள். உங்களுக்குத் தெரியாமல் பின்புலத்தில் இயங்குகிற அப்ளிகேஷன்களின் பெயர்களைக் காணலாம். தேவையற்ற அப்ளிகேஷன்களின் செக் பாக்ஸ்களில் உள்ள டிக் அடையாளங்களை நீக்கி விட்டு OK செய்யுங்கள்.
இதை இப்படி மாற்றிப் பார்ப்போமா?
பல செயலிகள் நிறுவப் படுகையில் உங்களை ஏமாற்றிவிடும். Startup கோப்புத்தொகுதியில் அவற்றின் பெயர்கள் தெரியாது. ஆனால் விண்டோஸ் இயங்கும்போது இவையும் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும். அதனால் விண்டோஸ் ஆரம்பிக்க நேரம் பிடிக்கும். இந்தச் செயலிகளை வெளியேற்ற வேண்டும். அதற்கு Start=>Run என்னும் கட்டளையைக் கொடுக்கவும். அங்கு MSCONFIG எனத் தட்டி Enter பொத்தானை அழுத்தவும். System Configuration utility என்ற சாளரம் தோன்றும். அதிலுள்ள Startup பொத்தானை அழுத்தவும். உங்களுக்குத் தெரியாமல் பின்புலத்தில் இயங்குகிற செயலிகளின் பெயர்களைக் காணலாம். தேவையற்ற செயலிகளுக்கு முன்புறம் இருக்கும் சதுரப் பெட்டியில் உள்ள 'டிக்' அடையாளங்களை நீக்கி விட்டு OK பொத்தானை அழுத்தவும்.
கட்டளைகளை அப்படியே ஆங்கில எழுத்துகளில் கொடுத்தால்தான் பயனருக்கு வசதியாக இருக்கும். அதுபோல விண்டோஸ் என்பது இயங்குதளத்தின் பெயர். சரியான பெயர் அதுவல்ல என்றாலும் அதுதான் வெகுமக்கள் புழக்கத்தில் உள்ளது, அதனால் அதை அப்படியே விட்டுவிடலாம். மற்றபடி போல்டர், அப்ளிகேஷன், என்டர் கீ, டேப், டயலாக் பாக்ஸ், செக் பாக்ஸ், டைப் செய்து ஆகிய சொல்லாக்கங்களை விடுத்தல் அவசியம்.

கிரன் கார்னிக் - 2003ஆம் ஆண்டின் முகம்

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை 2003ஆம் வருடத்தைய "முகமாக" இந்தியாவின் கிரன் கார்னிக்கைத் தேர்ந்தெடுத்துள்ளது. இவர் யார்?

இந்தியாவில் கணினி மென்கலன் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான சேவைகள் அளிக்கும் நிறுவனங்களுக்கென ஒரு கூட்டமைப்பு உள்ளது. இதற்கு National Association of Software and Service Companies என்று பெயர். சுருக்கமாக நாஸ்காம் (NASSCOM) என்று அழைப்பர். இந்த நாஸ்காமின் தற்போதைய தலைவர்தான் கிரன் கார்னிக். இதற்கு முந்தைய தலைவராக இருந்து நாஸ்காமையும், இந்திய மென்கலன் நிறுவனங்களையும் உலகறியச் செய்ததில் பெரும் பங்கு வகித்தது தேவாங் மேஹ்தா என்பவர். இவர் மென்கலன் நிறுவனங்களுக்காக அரசிடம் எப்பொழுது பார்த்தாலும் தூது சென்று, மத்திய அரசின் அமைச்சர்களுடன் தொடர்பு வைத்திருந்து, இந்திய மென்கலன் நிறுவனங்களுக்கெனப் பல சலுகைகளை வாங்கித் தந்தவர். ஆஸ்திரேலியாவில் ஒரு விடுதி அறையில் யாருமே கவனிக்காத நிலையில் 12 ஏப்ரல் 2001 அன்று இறந்து போயிருந்தார். தேவாங் மேஹ்தாவின் மறைவுக்குப் பின்னர் அந்தக் கூட்டமைப்பை யாராலும் மேஹ்தாவைப் போலத் திறம்பட நடத்த முடியாது என்ற நிலையில் அந்தப் பதவிக்கு வந்தவர் கிரன் கார்னிக்.

கிரன் கார்னிக் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் (ISRO) 20 வருடங்களுக்கு மேலாகப் பணிபுரிந்திருக்கிறார். பின்னர் ஐ.நா.சபையின் யூனிஸ்பேஸ்-82 என்னும் வெண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகளை இணைக்கும் ஒரு திட்டத்தில் சில காலம் பணியாற்றியிருக்கிறார். இந்தியாவில் டிஸ்கவரி மற்றும் அனிமல் பிளாநெட் தொலைக்காட்சி நிறுவனத்தை நிர்மாணித்தவர் இவரே. அங்கிருந்து நாஸ்காமின் தலைவர் பதவிக்கு வந்தவர்.

ஏன் ஃபோர்ப்ஸ் இவரை இந்த ஆண்டின் முகமாகத் தேர்ந்தெடுத்துள்ளது?

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆகிய இடங்களில் இப்பொழுது பெரிதும் பேசப்படுவது புறவூற்று (outsourcing), அக்கரைப்படுத்தல் (offshoring) ஆகியவையே. இவையெல்லாம் என்ன என்று கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சாரா மக்களுக்குக் குழப்பம் ஏற்படலாம். வளர்ந்த நாடுகளில் பெருவாரியான தொழில் செயல்களும் முறைகளும் (business processes), கணினி வழியாகத்தான் நடக்கிறது. அந்த நாடுகளில் அரசுகளாக இருந்தாலும் சரி, பெரிய, நடுத்தர அளவிலான நிறுவனங்களானும் சரி, கணினி வழியாகத்தான் அலுவலர்களின் ஊதியக் கணக்கு போடப்படுகிறது. நிறுவனத்தின் வரவு-செலவுக் கணக்குகள் பதித்து வைக்கப்படுகின்றன. அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் (social security), நலத் திட்டங்கள் ஆகியவை கணினி மூலம் கண்காணிக்கப் படுகின்றன. நிறுவனங்களின் பொருட்களின் விற்பனை பற்றிய தகவல், நுகர்வோர் பற்றிய தகவல் ஆகியன கணினிக்குள் செலுத்தப்பட்டு காப்பாற்றப்படுகின்றன. நுகர்வோருக்கு ஏதேனும் தொல்லை ஏற்பட்டால் அவர் தனக்குச் சேவையளிக்கும் நிறுவனத்தைத் தொலைபேசியில் கூப்பிட்டு அதுபற்றி கேள்விகள் கேட்கும்போது நிறுவன ஊழியர் உடனடியாக கணினியைத் தட்டிப்பார்த்து தன்னிடம் பேசிக் கொண்டிருக்கும் நுகர்வர் எந்த பொருளை அல்லது எந்த சேவையினை வாங்கியிருந்தார் என்பதைக் கண்டறிந்து, நுகர்வரின் குறையைக் கேட்டு அதனையும் கணினியில் உள்ளிட்டு, பின்னர் கணினியின் உதவி கொண்டு நுகர்வருக்குச் சரியான விடையைத் தொலைபேசி மூலமாக அளிக்க முடியும். இவையெல்லாம் ஒருசில எடுத்துக் காட்டுகளே.

இதில் இந்தியா எப்படி மூக்கை நுழைத்தது என்பதை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

Tuesday, December 23, 2003

ஹஜ் உதவித்தொகை பற்றிய மத்திய அரசின் நிலைப்பாடு

இதுநாள் வரையில் மத்திய அரசு ஹஜ் புனிதப் பயணம் செல்லவிருக்கும் முஸ்லிம்களுக்கு உதவித்தொகை வழங்கிக் கொண்டிருந்தது. இப்பொழுது இந்த ஹஜ் உதவித்தொகை கொடுப்பதற்கு மூன்று புதிய விதிகளை ஏற்படுத்தியுள்ளதாம். அவையாவன:

1. முதல்முறையாக ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
2. வருமான வரி செலுத்துபவர்களுக்கு இந்த உதவித்தொகை வ்ழங்கப்படாது.
3. உதவித்தொகை பெறுபவர்கள், ஹஜ் கமிட்டி அல்லது அரசு சொல்லும்/கொடுக்கும் இடங்களிலே மட்டும்தான் தங்க வேண்டும்.

இந்த விதிகளை எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் எதிர்த்துள்ளனர். பாஜகவின் முஸ்லிம் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியும் நேரிடையாக எதிர்க்காமல், 2004ஆம் வருடத்திற்கு மட்டும் இந்த விதிகளைக் கடைபிடிக்க வேண்டாமே என்று கேட்டுக் கொண்டுள்ளாராம்.

நான் இந்த ஹஜ் உதவித்தொகை வழங்குவதையே எதிர்க்கிறேன். அரசு இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடக் கூடாது. சமதா கட்சியின் ரகுநாத் ஜா, இந்துக்களுக்கும் அமர்நாத் யாத்திரை செய்ய உதவித்தொகை வழங்க வேண்டுமென்கிறார். அடுத்து கிறித்துவர்கள் வாடிகன் செல்ல, ஜெருசலம் செல்ல உதவித்தொகை கேட்பர். புத்த வழியினர், கயா செல்ல, கண்டி செல்ல உதவித்தொகை கேட்பர்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர் லாஸ் வேகாஸ் சென்று சூதாட்டக் கிடங்கில் பணம் செலவழிக்க அடுத்து உதவித்தொகை கேட்கலாம். எனக்கு ஆஸ்திரேலியா போய் பாக்ஸிங் நாள் கிரிக்கெட் பார்க்க யாரும் உதவித்தொகை தருவதில்லை.

அவரவர் வருவாய்க்குள் அடங்குமாறு அவரவர் கடவுளை வழிபட்டுக் கொள்ளட்டும்.

ஆனால் இப்பொழுது ஹஜ் யாத்திரைக்கான உதவித்தொகையை உடனடியாக நிறுத்த முடியாது. இந்தப் பிரச்சினை அரசியல் பிரச்சினையாக்கப்பட்டு வெட்டு குத்தில் முடியும். ஆனால் நான்கைந்து வருடங்களுக்குள் இந்த உதவித்தொகை அளிப்பதை ஒட்டுமொத்தமாக நிறுத்தியே ஆக வேண்டும். முஸ்லிம்கள் தங்களுக்குள்ளாக ஒரு இயக்கத்தை ஏற்படுத்தி, பணம் வசூல் செய்து, அதன் மூலம் ஏழை முஸ்லிம்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிக் கொள்ளட்டும்.

பின்குறிப்பு: பாலா சுப்ரா ஹஜ் உதவித்தொகை பற்றி பிறர் எழுதியுள்ள இரண்டு சுட்டிகளை அனுப்பியுள்ளார். உங்களுக்காக: அரவிந்த் லவாகரே, ரீடிஃப், 13 மார்ச் 2001 | சையத் சஹாபுத்தீன், தி மில்லி கெஸட், 15 செப்டம்பர் 2002

மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம்

போனவாரம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து ஒரு சட்டத்தை முன்வைக்க பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் முடிவெடுத்துள்ளார் என்ற செய்தி வந்திருந்தது. இதனை நான் கடுமையாக எதிர்த்து இதைப்பற்றி அப்பொழுதே என் வலைப்பதிவில் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் நேற்று வெறுமனே இந்த சட்டத்தின் வரைவை மட்டும் முன்வைத்து விவாதத்தை அமைச்சர் துவக்க நினைக்க, பாஜக எம்பிக்கள் இந்த சட்டத்தை உடனடியாக விவாதித்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி, எதிர்ப்பு ஏதும் இல்லாமல் இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளனர்.

இதைவிடக் கொடுமை ஏதும் இருக்க முடியாது.

நிறைவேறாமல், விவாதம் கூட நடக்காமல் எத்தனையோ சட்ட வரைவுகள் தேங்கிக் கிடக்கின்றன. தங்களுக்கு ஆதாயம் என்பதால் சிறிதும் யோசிக்காமல் ஒரு சட்டத்தை முன்மொழிந்து அதனை அப்படியே ஏற்றுக் கொள்ளும் கேவலமான நிலையில் இருக்கிறார்கள் நம் பிரதிநிதிகள். பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்டு) சோம்நாத் சாட்டர்ஜீ மட்டும்தான் இந்த சட்டம் பற்றி கவலை தெரிவித்தவர்!

வெறும் பத்து நிமிடங்கள்தான் இந்த சட்டத்தை ஏற்றுக் கொள்ள எடுத்துள்ளது.

என் கருத்து:

1. பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் தருவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். அவர்கள் இந்த மன்றங்களின் உறுப்பினர்களாக இருக்கும்போது கொடுக்கும் ஊதியத்தை அதிகமாக்குவதில் எனக்கு சிறிதும் வருத்தமில்லை, எதிர்ப்புமில்லை. இப்பொழுது இருக்கும் ஊதியத்தை இரட்டிப்பு வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். ஆனால் ஓய்வூதியம் தவறான கொள்கை. ஓய்வூதியம் என்பது பல வருடங்கள் விடாது உழைத்த ஒரு ஊழியருக்கு அவர் வேலை செய்த நிறுவனம் வழங்குவது. அப்படிப்பட்ட ஒரு நிறுவனம் எத்தனை ஊழியர்கள் வேலையிலிருந்து ஓய்வு எடுத்த பின்னர், உயிருடன் இருப்பார்கள், எத்தனை காலம் உயிருடன் இருப்பார்கள் என்றெல்லாம் தீர்மானிக்க முடியும், அதற்கு ஏற்ப திட்டமிட முடியும். ஆனால் பாராளுமன்றத்தில் ஒருமுறை உறுப்பினராக இருப்பவருக்குக் கூட ஓய்வூதியம் என்று ஆரம்பித்தால், அடுத்து சட்டமன்றங்களும் இந்தச் செயலைத் தொடரும். இதனால் எத்தனை பணம் செலவாகும் என்று யாராலும் திட்டமிட முடியாது.

2. மேலும் எந்தவொரு தனியார் நிறுவனத்திலும் 20-30 வருடத்துக்கு மேல் உழைத்தவர்களுக்கும் இந்தியாவில் ஓய்வூதியம் தருவதில்லை. பல மாநில அரசுகளுக்கு உள்ள பெரிய பிரச்சினையே ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில்தான். ஒரு காலகட்டத்தில் இப்படிப்பட்ட ஓய்வூதியத்தின் அளவு மிக அதிகமாக நேரிடும். மக்களின் 'life expectancy' அதிகமாகிக் கொண்டே வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் நடந்த தமிழக அரசு ஊழியர் போராட்டமே இந்த ஓய்வூதியத்தில் தமிழக அரசு கைவைத்ததால்தான். ஏன் தமிழக அரசு அந்த நிலைக்கு வந்தது? சில வருடங்களில் பல மாநில அரசுகள் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை ஒட்டுமொத்தமாக ரத்து செய்யலாம். அப்படி இருக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் தங்களுக்கென ஓய்வூதியம் வழங்கிக் கொள்வது ஒழுக்கக் கேடல்லவா?

3. வேண்டுமென்றே ஒரு கட்சி யாரையாவது பாராளுமன்றத்துக்கு அனுப்பி, அவரும் ஒரு மாதம் உறுப்பினராக இருந்து விட்டு, பின்னர் தன் பதவியை ராஜினாமா செய்து, மீண்டும் தேர்தல், மீண்டும் ஒருவர் அந்த உறுப்பினர் பதவிக்கு, என்று ஐந்து வருட காலத்தில் ஒரு தொகுதியிலிருந்து 40-50 பேர்களை உறுப்பினர்களாக்கி, அத்தனை பேருக்கும், வாழ்நாள் முழுவதும் மாதத்திற்கு ரூ. 3000 கிடைக்குமாறு செய்யலாம். இன்று ரூ. 3000 இருக்கும் ஓய்வூதியம், நாளை ரூ. 10,000 ஆகலாம். யாரும் தடுக்க மாட்டார்கள். இப்படியே போய்க்கொண்டிருந்தால் என்னாவது?

4. இவர்களுக்குக் கொடுக்கும் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கு இவர்கள் என்ன வேலை செய்து கிழித்தார்கள் என்பதை யாரும் கண்காணிப்பதில்லை. ஒருநாள் கூட சட்டமன்றம் போகாத கருணாநிதிக்கும், எப்பொழுது பார்த்தாலும் வெளிநடப்பு செய்யும் எம்.எல்.ஏ/எம்.பிக்களுக்கும் ஊதியத்தைக் குறைக்க வேண்டும். ஒரு கேள்வியும் கேட்காமல் பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும் போய் தூங்கிக் கொண்டு, கொறடா சொல்லும்போது வாக்குப் பதிவு செய்து (அதிலும் பலர் தவறாக வாக்களிக்கிறார்களாம்) வாழ்க்கை நடத்துபவர்களுக்கும், உருப்படியாக வேலை செய்பவர்களுக்கும் ஒரே சம்பளம், ஓய்வூதியம். இப்படி எந்த நிறுவனத்தில் செல்லுபடியாகிறது? ஏன் இவர்களுக்கு மட்டும் இத்தனை சலுகைகள்?

Monday, December 22, 2003

நியூஸ்மான்ஸ்டர்

நியூஸ்மான்ஸ்டர் என்னும் ஒரு செயலி பல்வேறு RSS தரவில் கொடுக்கப்படும் செய்தித் துகள்களை ஒருங்கிணைத்து மொசில்லா உலாவியில் படிப்பதற்கு வசதியாகச் செய்கிறது.

பல்வேறு செய்தி இணைய தளங்கள் தங்கள் ஆர்.எஸ்.எஸ் செய்தியோடைகளைத் தர ஆரம்பித்துள்ளனர். பி.பி.சி, சிநெட், சி.என்.என், யாஹூ!, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய பல செய்தியூற்றுகளின் ஆர்.எஸ்.எஸ் ஓடைகள் மூலமாகத்தான் நான் அவைகளை இப்பொழுது பின்தொடருகிறேன்.

அதே நேரத்தில் ஆங்கில, மற்றும் தமிழ் வலைப்பதிவுகளும் இந்த முறையைப் பின்பற்ற ஆரம்பித்து விட்டன. என்னுடைய வலைப்பதிவிற்கும் இந்த ஆர்.எஸ்.எஸ் ஓடை வசதியினைச் செய்துள்ளேன். இவைகளின் மூலம் புதிதாக ஒரு தளம் எப்பொழுதெல்லாம் இற்றைப்படுத்தப் படுகிறதோ, அந்த மாறுதல்கள் நம்மை வந்தடைகின்றன.

நீங்களே பயன்படுத்திப் பாருங்களேன்?

எம்.ஜே.கோபாலன் மறைவு

எம்.ஜே.கோபாலன், இந்தியாவிற்காக கிரிக்கெட் மற்றும் ஹாக்கி இரண்டிலும் விளையாடியவர். நேற்று சென்னையில் காலமானார். நேற்றைய தேதிவரை சர்வதேச கிரிக்கெட் விளையாடியவர்களிலேயே அதிக வயதானவராக இருந்தவர். விளையாடியதென்னவோ ஒரு டெஸ்டு போட்டிதான். அதிலும் எடுத்தது ஒரு விக்கெட்டுதான். சென்னையின் ரஞ்சிக் கோப்பை அணிக்கு அணித்தலைவராகப் பல வருடங்கள் இருந்திருக்கிறார்.

மொழித்தூய்மை, தனித்தமிழ் பற்றி பாரதியார்

[முன்னுரை: நாகூர் ரூமி தமிழோவியத்தில் 'தமிழ்ப்படுத்துதலும் தமிழ் மனமும்' என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். வெங்கட் தன் வலைக்குறிப்பில் மேற்கண்ட கட்டுரையை விமரிசித்து எழுதியது இங்கே: ஒன்று | இரண்டு. இதுபற்றிய காசியின் கருத்துகள். வெங்கட் கருத்தைப் படித்து நாகூர் ரூமி எழுதியது இங்கே.]

பாரதியார் 'தென்ஆப்பிரிக்காவில் பெண்கள் விடுதலை' என்ற செய்தியை 'காமன்வீல்' என்னும் ஆங்கில இதழிலிருந்து மொழியாக்கம் செய்து கட்டுரையாக்கும் போது இப்படி எழுதியுள்ளார்.
"நடுவிலே ஒரு ரசமான வார்த்தை. "மெம்பர்" என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் எனக்கு அகப்படவில்லை. இது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். "அவயவி" சரியான வார்த்தையில்லை. "அங்கத்தான்" சரிகட்டி வராது. "சபிகன்" சரியான பதந்தான். ஆனால் பொதுஜனங்களுக்குத் தெரியாது. யாரேனும் பண்டிதர்கள் நல்ல பதங்கள் கண்டுபிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு. அரைமணி நேரம் யோசித்துப் பார்த்தேன். உறுப்பாளி! ஏதெல்லாமோ நினைத்தேன். ஒன்றும் மனத்திற்குப் பொருந்தவில்லை. என்ன செய்வேன்! கடைசியாக "மெம்பர்" என்று எழுதி விட்டேன். இன்னும் ஆரஅமர யோசித்துச் சரியான பதங்கள் கண்டுபிடித்து மற்றொரு முறை சொல்லுகிறேன்."
இதழாளர் பாரதி, பா.இறையரசன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1995, விலை ரூ. 60. பக் 94-95

இந்தப் புத்தகத்திலேயே, இன்னும் பல அறிவுரைகள் பாரதியாரிடமிருந்து வருகின்றன.
"கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமமென்பது என்னுடைய கட்சி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம், எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது."

"நீ எழுதப்படுகிற விஷயத்தை இங்கிலீஷ் தெரியாத ஒரு தமிழனிடம் வாயினால் சொல்லிக்காட்டு. அவனுக்கு நன்றாக அர்த்தம் விளங்குகிறதா என்று பார்த்துக் கொண்டு பிறகு எழுது. அப்போதுதான் நீ எழுதுகிற எழுத்து தமிழ்நாட்டிற்குப் பயன்படும்."
கலைச்சொல்லாக்கம் பற்றி எழுதும் போது இப்படிச் சொல்கிறார்:
"இயன்ற இடத்திலெல்லாம் பதார்த்தங்களுக்குத் தமிழ்ப் பெயர்களையே உபயோகப்படுத்த வேண்டும். திருஷ்டாந்தமாக "ஆக்ஸிஜன்; ஹைட்ரஜன்" முதலிய பதார்த்தங்களுக்கு ஏற்கனவே தமிழ்நாட்டில் வழங்கப்பட்டிருக்கும் பிராணவாயு, ஜலவாயு என்ற நாமங்களையே வழங்க வேண்டும். தமிழ்ச் சொற்கள் அகப்படாவிட்டால் சமஸ்கிருத பதங்களை வழங்கலாம். பதார்த்தங்களுக்கு மட்டுமேயன்றிக் கிரியைகளுக்கும் அவஸ்தைகளுக்கும் (நிலைமைகளுக்கும்) தமிழ் சமஸ்கிருத மொழிகளையே வழங்குதல் பொருந்தும். இந்த இரண்டு பாஷைகளிலும் பெயர்கள் அகப்படாத இடத்தில் இங்கிலீஷ் பதங்களையே உபயோகப்படுத்தலாம். ஆனால் குணங்கள், செயல்கள், நிலைமைகள் - இவற்றுக்கு இங்கிலீஷ் பதங்களை ஒருபோதும் வழங்கக் கூடாது."
இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது எனக்குத் தோன்றுவது இவைதான்:

1. பாரதிக்கு தமிழில் ஆங்கில மொழிக்கலப்பு பிடிக்கவில்லை. ஆனாலும் அவசரமாக மொழிமாற்றித் தன் இதழில் பதிப்பிக்க நேரமில்லாமல் போனதனால் ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்துகிறார். அதைப் பற்றி மருகி, மருகி ஒரு பத்தி எழுதவும் செய்கிறார். கிட்டத்தட்ட இன்று புழங்கும் ஒரு சொல்லுக்கு வெகு அருகிலே வந்திருக்கிறார். மெம்பர் = உறுப்பினர்

2. ஆனால் தன் உரைநடையில் "எளிதான" வடமொழிச் சொற்களைச் செருகுவதில் சிறிதும் கவலைப்பட்டாரில்லை. ஒருவேளை அவர் புழங்கிய வடமொழிச் சொற்கள் படிக்கக் கூடிய அனைவருக்கும் தெரிந்திருக்கலாம் என்று நினைத்திருப்பாரோ என்னவோ?

3. வடமொழிச் சொற்களைப் புழங்கும் போது கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துகிறார். அது தமிழ் மொழி இலக்கணத்துக்கு மாறாக இருக்கும் போதும் கூட. சொல்லின் முதலெழுத்து ஒற்றெழுத்தாகப் பலவிடங்களில் வருகிறது. (ப்ரிய, ஸ்வராஜ்யம்)

4. ஆங்கிலச் சொற்களை மொழிமாற்றுகையில் பலவிடங்களில் அவருக்கு முதலில் கைக்கு வருவது வடமொழிச் சொல்தான். நகரசபை, ஜனசபை, மசோதா (இந்தச்சொல் இன்றும் கூடப் புழக்கத்தில் உள்ளது), பிராணவாயு, ஜலவாயு!

வடமொழியைப் பலவிடங்களில் அள்ளித் தூவுவதற்கு அன்றைக்கு இணையான தமிழ்ச் சொற்கள் புழக்கத்தில் இல்லாமையும், 'மக்களுக்குப் புரிய வேண்டும், போய்ச்சேர வேண்டும்' என்ற முக்கியக் குறிக்கோளும் சேர்ந்த சமரசமே என்று தோன்றுகிறது. இன்னும் சிலவருடங்கள் உயிருடன் இருந்திருந்தால் தமிழ் உரைநடையில் வடமொழிச் சொற்களைத் தவிர்த்து, அதே நேரத்தில் கொச்சையையும் தவிர்த்து, எளிதில் புரியக்கூடிய வெகுமக்கள் மொழியாக, ஒரு நடையை உருவாக்கியிருப்பார்.

அதுதான் நமது குறிக்கோளாகவும் இருக்க வேண்டும்.

கொடுந்தமிழ், தனித்தமிழ் என்று பண்டிதத்தமிழாக இருக்கக் கூடாது. ஆங்கிலக் கலப்பு கூடாது. வடமொழிக் கலப்பையோ, பிறமொழிக் கலப்பையோ முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் எளிமையாகவும், படிப்பவர்களைப் போய்ச் சேரும் வகையிலும் அமைந்திருக்க வேண்டும்.

Sunday, December 21, 2003

சிதம்பரம்: தேவை இரு வலுவான கட்சிகள்

ப.சிதம்பரம் - அரசியல் தலைவலி!
கல்கி 21/12/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 9

* பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் அனைத்து நாடுகளிலும் இரண்டு வலுவான கட்சிகள் உள்ளன. மூன்றாம், நான்காம் கட்சிகளுக்கு இடமிருக்கக் கூடாது என்பதில்லை, ஆனால் இரண்டு வலுவான கட்சிகள் இருக்க வேண்டும், மற்றவைகள் சிறியதாக இருத்தல் நலம் என்கிறார்.

* இந்தியாவில் அந்த இரண்டு வலுவான கட்சிகள் காங்கிரஸ், பாஜக ஆக நிகழ்ந்துள்லது என்பதை மகிழ்ச்சியுடன் குறிக்கிறார். அதே சமயம், இந்த இரண்டு கட்சிகளும் தாராளகுணத்தை (liberal என்பதற்கு தாராளகுணம் என்னும் சொல்லைக் கையாளுகிறார்) அதிகமாக்கிக் கொள்ள வேண்டுமென்கிறார். காங்கிரஸ் ஜனநாயக முறையில் கட்சித் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும், பாஜக மதம், மொழி என்னும் கூண்டுக்குள் அடைபட்டுவிடக் கூடாது என்கிறார். இப்படி அமைந்தால் இந்திய அரசுகளின் தன்மையும், தரமும், செயல்பாடும், வேகமும் பிரமிக்கத் தக்க மாற்றத்தை அடைந்துவிடும் என்பது சிதம்பரத்தின் கருத்து.

* இதைப் போலவே மாநிலத்திலும் இரண்டு பெரிய கட்சிகள் இருந்தால் போதும் என்கிறார். மூன்று முக்கிய கட்சிகள் இருப்பதுதான் தமிநாட்டுக்குப் பெரிய தலைவலி என்கிறார். (மூன்றாவது முக்கிய கட்சி என்று இவர் குறிப்பிடுவது காங்கிரஸையா? :-) உத்திரப் பிரதேசத்தில் நான்கு முக்கியக் கட்சிகள் இருப்பது இந்னமும் குழப்பத்தை விளைவிக்கிறது என்கிறார்.

* பலமுறை மேடைகளில் பேசியதை மீண்டும் இங்கு சொல்கிறார்: ஆளும் கட்சி கிரியா சக்தி, எதிர்க்கட்சி இச்சா சக்தி. ஒரு சில நாடுகளில் இருக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முக்கியக் கொள்கையாக வைத்திருக்கும் 'பச்சை கட்சிகள்', ஞான சக்தியாம்.

என் கருத்து:

1. இரண்டு வலுவான கட்சிகள் மத்தியிலும், மாநிலங்களிலும் இருப்பது வரவேற்கத் தக்கது. இதனால் அரசாளும் கட்சிக்கு ஒரு ஸ்திரத்தன்மை இருக்கும். ஆனால் தமிழகம் போன்றவிடங்களில் உருவான மாநிலக் கட்சிகள் மிகவும் முக்கியமானவை. இவைதான் ஐக்கிய இந்தியாவில் மாநிலங்களுக்குத் தன்னாட்சி அதிகாரத்தை (federal structure) அதிகமாக்கக் காரணமாயிருந்தன. இப்பொழுதும் தமிழகத்தில் கழகங்கள், ஆந்திராவில் தெலுகு தேசம், பஞ்சாபில் அகாலி தளம், அஸ்ஸாமில், பீஹாரில், மஹாராஷ்டிரத்தில் என்று பல மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகள் இல்லாவிட்டால் இந்தியா போன்ற பல்வேறு மொழிகளை உள்ளடக்கிய நாட்டில் தேசியக் கட்சிகள் பொறுப்பில்லாமல், ஹிந்தித்துவமாக செயல்படத் தொடங்கி விடும். நேற்றுகூட பிரதமர் வாஜ்பாயி ஹிந்திதான் தேச ஒருமைப்பாட்டின் சின்னம் என்று முழங்கியிருக்கிறார். ஏன் இன்னமும் இந்தியாவில் உள்ள அத்தனை பேரும் ஆங்கிலத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறார்கள், ஹிந்தியை அள்ளி வாரி அனைத்து நெஞ்சோடு சேர்த்துக் கொள்ளவில்லை என்று வருத்தப்படுகிறார். 1960களில் தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் மாதிரி எதிர்ப்பு இப்பொழுதெல்லாம் இல்லை என்று மகிழ்கிறார்.

இந்த ஹிந்தியை முன்வைக்கும் எண்ணம் மாறினால்தான் இரண்டு தேசியக் கட்சிகளோடு நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

இந்தியா போன்ற நாட்டுக்கு வலுவான மாநிலக் கட்சிகள் அவசியம் தேவை. அவை இருந்தால்தான் தேசியக் கட்சிகள் வாலாட்டாமல் ஒழுங்காக இருக்கும்.

2. தமிழகத்தில் உள்ள நிலைமை சற்றே குழப்பமானது. இங்கு இரண்டு வலுவான கழகங்கள் இருப்பது; காங்கிரஸ், பாஜக என்னும் இரண்டு தேசியக் கட்சிகளும் வலுவற்று இருப்பது - இவ்விரண்டுமே குழப்பத்தை அதிகரிக்கிறது. இந்தக் கட்சிகளில் ஏதேனும் ஒன்று வலுவிழந்து காணாமல் போவதும், காங்கிரஸ் போன்ற ஒரு தேசியக் கட்சி வலுவடைவதும் மிக நல்லது. ஆனால் இது நடப்பதற்கு இன்னமும் பத்து வருடங்களுக்கு மேல் பிடிக்கும். காங்கிரஸில் உள்ள உட்கட்சிப் பூசல் கொடுமையானது. அந்த நிலை மாறினால்தான் அந்தக் கட்சி வலுவடையத் தொடங்கும்.

உத்திரப் பிரதேச நிலைமையும் குழப்பம் நிறைந்ததுதான். இந்தக் குழப்பம் தீரவும் இன்னுமொரு பத்து ஆண்டுகள் பிடிக்கும் என்று தோன்றுகிறது. அங்கு வலுவான பாஜகவும், முலாயம் சிங்கின் கட்சியும், வலு மிகக் குறைந்த காங்கிரஸும் ஆக மூன்று கட்சிகள் வரும் என்று தோன்றுகிறது. முலாயம் சிங், மாயாவதி இருவரும் தங்கள் கட்சிகளை இணைப்பது நலம், ஆனால் செய்ய மாட்டார்கள்.


கல்கி 7/12/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 7

சத்யேந்திர துபே மட்டுமல்ல, பிற பலரும்...

ஹிந்துஸ்தான் டைம்ஸ், துபே கொலை பற்றி மேலும் திடுக்கிடும் தகவல்களைச் சொல்கிறது. துபேவைப் போல் உத்திரப் பிரதேசத்தில் குறைந்தது இன்னமும் ஆறு பொதுப்பணித் துறையில் வேலை செய்த பொறியாளர்கள் கொலை செய்யப்பட்டுளனராம்.

துபே கொலை பற்றிய மத்திய அரசின் விளம்பரத்தகவல் | பீஹார் அரசின் விளம்பரத்தகவல்

சங்கம்: மாலன், சிவ.கணேசனோடு சந்திப்பு

'கவிமணியும் கலைவாணரும்' என்னும் புத்தகத்தின் ஆசிரியர் சிவ.கணேசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பேரன். இவருடன் மாலன் சன் நியூஸ் சங்கம் நிகழ்ச்சியில் உரையாடினார். வழக்க்கம் போலவே கிரிக்கெட் பார்ப்பதிலும், மற்றதிலும் நேரத்தைச் செலவிட வேண்டியிருந்தது. அங்கங்கே பார்த்ததிலிருந்து குறிப்புகள்.

* பலர் தவறாக தேசிய விநாயகம் பிள்ளை என்று இவரது பெயரைக் குறிப்பிடுகின்றனர். 'தேசிக விநாயகம்' என்பது விநாயகப் பெருமானின் ஒரு பெயர். இவரது பாட்டனாருக்கும் தேசிக விநாயகம் என்றுதான் பெயர். இவர்கள் குடும்பத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு ஆண்மகனுக்காவது தேசிக விநாயகம் என்று பெயர் இருக்குமாம்.

* புத்தக ஆசிரியருக்கும் தேசிக விநாயகம் என்றுதான் முதலில் பெயர் வைத்திருந்தனராம். ஆனால் இவருக்குப் படிப்பு அறிவு குறைவாக இருந்ததால், கிராமத்திலிருந்து நகரத்திற்குப் படிக்க அனுப்பும்போது, பெயரை மாற்றி சிவ.கணேசன் என்று வைத்துவிட்டாராம். அதற்காகத் தான் வருந்துவதாகச் சொன்னார்.

* ஒருமுறை போற்றிக்கண் என்பவர் கவிமணியிடம் பணம் வாங்கிக் கொண்டு கவிமணியில் குருவுக்கு உருத்திராட்சக் கொட்டை வாங்கப் போனவர், திரும்பி வரவேயில்லையாம். அப்பொழுது பக்கத்திலிருந்தவர் தூண்டுதலினால் அவன்மீது ஒரு பாட்டு எழுதி விட்டாராம். "நெஞ்செறிய, என் குருவின் வயரெறிய" காசை எடுத்துக் கொண்டு போன நீ "இனி இவ்வூரில் கால் வைக்காய்" என்ற அப்பாடல் இயற்றப்பட்ட சில நாட்களில் போற்றிக்கண் இறந்து விட்டாராம். இனியும் இதுபோன்ற பாடல்களை இயற்றப்போவதில்லை என்று அப்பொழுது முடிவு செய்தாராம் கவிமணி.

* உமர்கய்யாம், ஆசியஜோதி ஆகிய புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்தவர், குழந்தைகளுக்கான பல பாடல்களையும் இயற்றியுள்ளார்.

* அதிகமாக யாருடனும் வெளியே வந்து பழக மாட்டார். ஆனால் இவரைப் பார்க்க எளியவரும் வருவர், ஆர்.கே.சண்முகம் செட்டியார், தி.க.சிதம்பரம் முதலியார், கல்கி கிருஷ்ணமூர்த்தி, இராஜாஜி, எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி ஆகியோர் வருவர்.

* இரங்கற்பா எழுதுவதில் வல்லவர். தி.க.சி மறைவுக்கு மிக அருமையான ஒரு பாடலை எழுதியிருந்தார்.

* கல்கி, அமுதசுரபி, விகடன் ஆகிய பத்திரிக்கைகளுக்கு எப்பொழுதும் எழுதிக் கொண்டிருப்பார். கல்கியில் இவரது அட்டைப்படம் போட்டே இதழ்கள் வந்திருக்கின்றன.

மாலன், நன்னனொடு சந்திப்பு

தலித் கிறித்துவர்கள் தனி ஒதுக்கீடு

நேற்று, மத்திய அமைச்சர் சத்யநாராயண் ஜாதீயா, தலைமைப் பதிவாளரது கூற்றுகள் சிலவற்றை முன்னிறுத்தி தலித் கிறித்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டியதில்லை என்று சொன்னதைப் பற்றி பதித்திருந்தேன். அப்பொழுது கிறித்துவ, முஸ்லிம் தலைவர்கள் இதனை எதிர்க்க வேண்டும் என்றும் (பெரும்பான்மையினரும் கூட இதனை எதிர்க்க வேண்டும்) சொல்லியிருந்தேன்.

அனைத்திந்தியக் கிறித்துவ மக்கள் மன்றச் செயலர் பிரிந்தாவன் மோசே நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தலித் கிறித்துவர்களுக்கு அட்டவணைப் பிரிவில் இந்து, சீக்கிய, புத்த தலித்துகளைப் போலவே இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். நான் நேற்று சொன்னது போலவே, கிறித்துவர்களுக்குடையில் ஏற்கனவேயே சாதிகள் ஆழமாகப் பதிந்துள்ளன, 60%க்கும் மேற்பட்ட கிறித்துவர்கள் தீண்டாமை போன்றவற்றை எதிர்த்து மதம் மாறிய தலித்துக்களே என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமைச்சர், தலைமைப் பதிவாளரது கூற்றை முன்வைத்து பாராளுமன்றத்தையும், இந்திய மக்களையும், பன்னாட்டு மக்களையும் தவறான வழியில் திசை திருப்பப் பார்க்கிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மீண்டும் நாம் வலியுறுத்த வேண்டியது - சாதிப்பிரிவினைகளைக் களைவது சுலபமல்ல. அது பல்லாயிரக் கணக்கான வருடங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தீண்டாமை, மேல்-கீழ் சாதி வேறுபாடுகளைக் களையலாம். முதலாவது இந்து மதத்திற்குள் மட்டுமே இருப்பது. இரண்டாவது மதங்களைக் கடந்து இருப்பது. உயர்வு தாழ்வுகளைக் களைந்தவுடன், தானாகவே சாதிகள் கலக்கும். பெருநகர்ப் பகுதிகளில் இது ஏற்கனவே நடக்க ஆரம்பித்து விட்டது.

Saturday, December 20, 2003

திமுக வெளிப்படையாக மத்திய அரசிலிருந்து விலகல்

மாறன் இறந்தபின் சுயமாக சிந்தித்து கருணாநிதி எடுத்திருக்கும் முதல் முடிவு இது என்று தோன்றுகிறது. மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக வெளியேறும். இது வரும் மக்களவைத் தேர்தலை முன்வைத்து எடுக்கப்பட்ட முடிவு என்று தோன்றுகிறது.

இதனால் தமிழக அரசியலில் அதிகக் குழப்பமே ஏற்படும். யார் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்று புரியாமல் முழிப்பர் என்றே தோன்றுகிறது. வைகோ கருணாநிதியுடன் கூட்டு சேர்ந்து பாஜக உறவை வெட்டிக் கொள்வாரா? பாமக ராமதாஸ் என்ன செய்வார்? பாஜக, ஜெயலலிதாவோடு கூட்டணி அமைக்குமா? இல்லை, ஜெயுடன் கூட்டணி வைத்து பட்ட கஷ்டம் போதாதா, இதற்குத் தனியாகவே போய்விடலாம் (பாமக, மதிமுக மட்டும் ஒருவேளை கூட இருக்கலாம்) என்று தோன்றுமோ என்னவோ?

தமிழகக் காங்கிரஸ் இப்பொழுது திமுகவுடன் இணைய இது வழிவகுக்கும். தமிழகத்தில் பாஜக, காங்கிரஸ் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? தனியாகப் போட்டியிட்டால் காங்கிரஸால் ஓரிடத்திலும் இப்பொழுது பாராளுமன்றத் தேர்தலில் ஜெயிக்க முடியாது. பாஜகவால் ஓரிரு இடங்களில் ஜெயிக்க முடியும் என்று தோன்றுகிறது. ஆனால் காங்கிரஸுக்கு தமிழகம் முழுவதையும் சேர்த்து பாஜகவை விட அதிக வாக்குகள் கிடைக்கும். எனவே பாஜகவை விட காங்கிரஸ் திமுகவுக்கு அதிக வாக்குகளைக் கொண்டுவரும். ஆனால் காங்கிரஸ் மத்தியில் ஜெயிக்க வாய்ப்பு குறைவு என்று தோன்றுகிறது. அப்படியே ஜெயித்தாலும், கூட்டணி அமைச்சரவை அமையுமா, அதில் திமுகவுக்கு ஏதேனும் இடம் கிடைக்குமா என்பதும் சந்தேகமே.

தலித் கிறித்துவ, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது

கடந்த வாரத்தில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள்: போடா, கட்சித்தாவல் சட்டங்களில் சட்டத்திருத்தம், போடா மற்றும் ஊழல் வழக்குகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றி, செத்துப்போன சத்யேந்திர துபேவை இடையில் நிறுத்தி மத்திய அரசும், பீஹார் அரசும் செய்யும் அரசியல். இதற்கு நடுவில் அதிகம் பேசப்படாத, தி ஹிந்துவில் ஒரு மூலையில் கண்ட செய்தி, தலித் கிறித்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் (தலித் இந்துக்களைப் போல) என்னும் கேள்விக்கு சமூகநீதி அமைச்சர் (எதுக்கெல்லாம் அமைச்சருங்க இருக்காங்க, பாருங்க!) சத்ய நாராயண் ஜாதீயா சொன்ன பதில்.

இந்தியாவின் தலைமைப் பதிவாளர் (Registrar General of India) இப்படிச் சொன்னாராம்:

"முஸ்லிம்களையும், இந்து சாதிகளுக்கு இணையாகப் பிரித்தால், தங்கள் மீது இந்துக்களின் பிற்போக்கான வழக்கத்தைப் புகுத்துவதாக முஸ்லிம்கள் அமைதியிழந்து கோபம் கொள்வர்."

"கிறித்துவர்களை சாதி அடிப்படையில் பிரித்துப் பதித்தால், பன்னாட்டளவில் இது பிரச்சினையில் முடியும். வெளிநாடுகளில், இந்தியா தனது சாதிப்பிரிவினையை கிறித்துவர்கள் மேல் திணிக்கிறது என்ற ஒரு கருத்தை இது தோற்றுவிக்கும்."

இதைக் காரணம் காட்டி அமைச்சர் முஸ்லிம், கிறித்துவர்களின் மனம் கோணாமலும், சர்வதேச அளவில் பிரச்சினை வராமலும் இருக்க, தலித்துகளாக இருந்து இந்து மதத்திலிருந்து இஸ்லாம், கிறித்துவ மதங்களுக்கு மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.

இந்த விஷமத்தனமான கருத்து கண்டிக்கப்பட வேண்டியது.

1. முதலில் இந்தியாவைப் பொறுத்தவரையில் சாதியும், மதமும் தனித்தனி தளங்களில் இயங்கி வந்துள்ளன, வருகின்றன. தலித்துகளை இந்து மதத்திற்குள்ளேயே அடைத்து வைக்க என்றே இந்த இட ஒதுக்கீட்டினைப் பயன்படுத்துகின்றனர் அரசியல்வாதிகள். "அவமானத்தோடு சேர்ந்த இட ஒதுக்கீடு வேண்டுமா, இல்லை உன்னிஷ்டப்படி மதம் மாறிக்கொள், ஆனால் இட ஒதுக்கீடு கிடையாது" என்னும் உள்நோக்கம் மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது.

2. பெருநகர் அல்லாதவிடங்களில் இந்திய முஸ்லிம்களும், கிறித்துவர்களும் தங்களுக்குள்ளே தாங்கள் எந்த சாதியிலிருந்து வந்திருக்கிறோம் என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள். சாதிப் பிரிவினை வேறு, தீண்டாமை வேறு. இந்துக்களின் இடையில்தான் 'தீண்டாமை' தலை விரித்தாடுகிறது. ஒரு சில சாதியினரைத் தொடத்தகாதவர்கள், கோயிலுக்குள் புக அனுமதி இல்லாதவர்கள், நாலு வர்ணங்களுக்கும் அப்பாற்பட்டவர்கள், டீ குடிக்கத் தனிக்குவளை, கதிமோட்சம் இல்லாதவர்கள், ஆனாலும் இந்துவாகவே இருக்க வேண்டும் என்று மேல்சாதி இந்துக்கள் கருதுகின்றனர். கிறித்துவ, முஸ்லிம்கள் இடையே சாதி வித்தியாசம் இருந்தாலும், இந்த 'சர்ச்சுக்குள் நுழையாதே, தீட்டுப் படிந்து விட்டது', 'உனக்குத் தனி டீ டம்ளர், எனக்குத் தனி' என்பது இல்லை என்று தோன்றுகிறது.

இப்பொழுதைக்கு முக்கியமானது தீண்டாமையை ஒழிப்பது. அதன் பிறகு சாதிப் பிரிவினைகள் பற்றிப் பார்த்துக் கொள்ளலாம்.

3. இன்று பார்ப்பனர்களில் பொருளாதாரக் கீழ்நிலையில் இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்போம் என்று சொல்லும் அரசியல்வாதிகள் தலித்தாக இருந்து கிறித்துவனாகவோ, முஸ்லிமாகவோ மாறினால் இட ஒதுக்கீடு கிடையாது என்றால் அது பெரும் கேலிக்கூத்து.

இந்திய முஸ்லிம்களும், கிறித்துவர்களும் துண்டு துண்டாக இருக்கிறார்கள். இதுமாதிரி விஷமத்தனமான விவாதங்கள் பாராளுமன்றத்தில் நடக்கும்போது உடனடியாக அதனை எதிர்த்து, தங்கள் மதம் சாதிப்பிரிவினைகளை அங்கீகரிக்காவிட்டாலும், பரம்பரை பரம்பரையாக பொருளாதார, சமூகக் கீழ்நிலையில் இருப்பவர்கள் கிறித்துவ, இஸ்லாம் மதங்களைப் பின்பற்றினாலும் அவர்களுக்கு அரசு தரும் சலுகைகள் இந்து மதத்தினருக்கு ஒத்ததாக இருக்க வேண்டும் என்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

இதில் புத்த மதத்திற்கு மாறும் தலித்துகளுக்கு என்ன சலுகைகள் கிடைக்கும் என்று தெரியவில்லை. இந்து தலித்துகளுக்குக் கிடைக்கும் அதே சலுகைகள் புத்த மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கும் கிடைக்குமா? இல்லை இந்தியத் தலைமைப் பதிவாளர், இலங்கையில் உள்ள புத்த குருமார்கள் கோபித்துக் கொள்வார்கள் என்று புருடா விடுவாரா?

Friday, December 19, 2003

பல்லூடகக் கணினி எத்தனை மலிவு?

இதைப்பற்றி நான் முன்னமே எழுதியுள்ளேன். என் நான்கு வயது மகள் பிரியா வீட்டிலிருக்கும் கணினியைப் பயன்படுத்த ஆரம்பித்ததிலிருந்து வீட்டில் தகராறுதான். பிரியா விரும்புவது லயன் கிங், டாய் ஸ்டோரி, பக்ஸ், சிண்டிரெல்லா, ஜங்கிள் புக் போன்ற அருமையான படங்களைப் பார்ப்பது, பூவா & க்வாலா தளம் சென்று அங்கு விளையாடுவது, மென்தட்டு மூலம் விளையாட்டுகள் விளையாடுவது, மழலையர் பாடல்கள் கேட்பது ஆகியன. இதற்காகவென்று எத்தனை பணம் செலவழிக்க முடியும்?

வயா சைரிக்ஸ் பற்றிக் கேள்விப்பட்டதும், அதனை வைத்து ஒரு கணினியை சேர்த்தேன். வயா சைரிக்ஸ் சில்லு, 733 MHz, 128 MB RAM, அதில் 8MB வீடியோ மெமரியாக எடுத்துக் கொள்ளப்படும். மதர்போர்டிலேயே ஒலி அமைப்பு உள்ளது. என்னிடம் ஒரு கடினவட்டு இருந்தது. 52x CDROM, floppy drive, mouse, keyboard, ethernet card எல்லாம் சேர்த்து ரூ. 8000 ஆனது. ஒரு பழைய மானிட்டர் திரை ரூ. 1,500க்குக் கிடைத்தது (15"). ஒலிபெருக்கி ரூ. 500 ஆனது. ஆக ரூ. 10,000 க்கு ஒரு பல்லூடகக் கணினி தயார். இது சரியாக வேலை செய்யுமா என்று தெரிந்திருக்கவில்லை அப்பொழுது. முதலில் மாண்டிரேக் லினக்ஸ் போட்டேன். அதில் ஒலிச்செயல்பாடு சரியாக இல்லை. பின்னர் என்னிடம் இருந்த பழைய Windows 98 போட்டேன். அருமையாக உள்ளது. இணையத்தில் உலாவ, விசிடி போட்டுப் பார்க்க (இப்பொழுது லயன் கிங் ஓடிக் கொண்டிருக்கிறது).

உங்களுக்குத் தேவை நான் மேலே சொன்னது மட்டுமே என்றால் அதற்கு ரூ. 12,000க்கு மேல் ஆகாது (புது கடினவட்டோடு சேர்த்து). இன்னுமொரு ரூ. 1,000க்கு கணினி விற்பனையாளரிடமிருந்து ஒரு வருட அணுக்கம் (assistance, support) கிடைக்கும்.

லினக்ஸை இதில் ஓட வைக்க முடியும். அதற்கு என்னிடம் நேரம் இல்லை இப்பொழுது. அப்படி யாரேனும் லினக்ஸ் போட நினைத்தாலும் இப்பொழுதுள்ள கொழுத்துப் பெருத்த லினக்ஸ் (ரெட் ஹாட்டோ, மாண்டிரேக்கோ) சரியாயிருக்காது. மிகவும் இலேசான ஒரு லினக்ஸ் தேவை.

போடா வழக்கில் நக்கீரன் கோபாலுக்கு ஜாமீன்

நக்கீரன் கோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் கொடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம், இன்று. உச்ச நீதிமன்றத்தின் விளக்கத்துக்குப் பின்னர் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த நெடுமாறன் முதற்கொண்டு மூன்று பேருக்கு நேற்று ஜாமீன் கிடைத்தபின்னர், இன்று மற்றுமொரு வழக்கில் கோபாலுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

இந்தியா ஒளிர்கிறது!

இதுதான் தற்பொழுது மத்திய அரசின் "சுய-தம்பட்ட" விளம்பரங்களுக்குப் பெயர். "India Shining!" என்று ஆங்கிலத்தில் பெயரிட்டு, ஒவ்வொரு மொழியிலும் மாற்றப்பட்டு, தமிழில் மேற்கண்ட பெயரில் வெளிவருகிறது. வானொலியில், செய்தித்தாள்களில் எங்கும் ஒரு சிரிக்கும் பஞ்சாபி விவசாயி, பொங்கும் மலர்ச்சியுடன் ராஜஸ்தானத்துப் பெண், கையில் செல்பேசியுடன் ஒரு தொழில்முனைவர் என்று 'ஒளிமிகுந்த பாரதத்தின்' மக்கள் காட்டப்படுகின்றனர்.

இவையெல்லாம் தற்போதைய மத்திய அரசின் சாதனைகளாகக் காண்பிக்கப்படுகின்றன. இந்த விளம்பரங்கள் அனைத்தையும் பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வருமுன்னர் செய்து விட வேண்டும் என்று இறக்கை கட்டிக்கொண்டு செயல்படுகிறது அரசு இயந்திரம். ஒவ்வொரு மலர்ந்த முகத்தைக் காண்பிக்கும் போதும் அதற்கு இணையாக பசித்து, ஒட்டிய வயிரையும், வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்க்கை முழுவதையும் கழிக்கும் சுருக்கம் விழுந்த முகத்தையும், கோடிக் கணக்கான ஊழல்களையும், மதக்கலவரங்களையும், நக்சல்கள் உருவாகக் காரணமான வறட்சியையும் காண்பிக்கலாம்.

இந்த 'ஒளிரும் இந்தியா' யாரை மயக்குவதற்கு? நிச்சயமாக தற்போதைய அரசின் காலத்தில் பல வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன. அதற்காக அரசின், மக்களின் வரிப்பணத்தை இப்படியா விரயம் செய்வது? அந்தப் பணத்தில் எத்தனை பேருக்கு சோறூட்டலாம்? இன்னமும் எத்தனை வளர்ச்சிப் பணிகளுக்குப் பணம் கொடுக்கலாம்?

ஜெயலலிதா மீதான வழக்குகள் நிலவரம்

ஜெயலலிதா மீது பத்து வழக்குகள் தொடரப்பட்டது. அந்த முழுப் பட்டியலும் இங்கே. அதில் இரண்டு வழக்குகள் டான்ஸி நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள். இவை கடைசியாக உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இப்பொழுது ஸ்பிக் பங்கு ஊழல் பற்றிய வழக்கு சிபிஐ விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் உள்ளது. ஜெயலலிதா நேற்று நீதிமன்றத்தில் சாட்சி அளித்தார். முழு விவரம் தினமலரில்.

இதற்கிடையில் "வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கு" தமிழ்நாட்டிற்கு வெளியே நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, கர்நாடகாவுக்கு மாற்றச் சொன்னது. ஜெயலலிதா கர்நாடக மக்கள் தனக்கு எதிரானவர்கள் (காவிரிப் பிரச்சினையை முன்வைத்து), அதனால் வழக்கை பாண்டிச்சேரிக்கு மாற்ற வேண்டும் என்று முறையீடு செய்தார். பின்னர் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் வேறு எந்த மாநிலமாக (கேரளா, ஆந்திரா...) இருந்தாலும் பரவாயில்லை என்று கேட்டுக்கொள்ள, அவர்களது மனுவை மாற்றி அனுப்ப உச்ச நீதிமன்றம் அனுமதித்து உள்ளது. மேலும் உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசிடம் ஜெயலலிதாவின் முறையீட்டின் மேலான அவர்களது பதிலை அனுப்பக் கோரியுள்ளது.

நீதி வழங்கப்படுவதுடன், நீதி வழங்கப்பட்டது போன்ற தோற்றமும் இருக்க வேண்டும். எனவே, உச்ச நீதிமன்றம், இந்த சொத்துக் குவிப்பு வழக்கை கேரளாவுக்கு (பாண்டிச்சேரி கூடாது!) மாற்ற வேண்டும். நேரத்தை விரயமாக்கக் கூடாது.

போடா வழக்கில் நெடுமாறனுக்கு ஜாமீன்

நெடுமாறனுக்கு 17 மாதங்களுக்குப் பின்னர் போடா வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது. நீதிபதிகள் "நாங்கள் முழுக் குற்றப் பத்திரிக்கையையும் படித்ததில் புகார் வெறும் நெடுமாறன் பேசியுள்ள பேச்சுக்கள் பற்றி மட்டுமே உள்ளது" என்று சொல்லியுள்ளனர். மேலும் 'தடை செய்யப்பட்ட புத்தகங்கள்' இவர்களிடமிருந்து கிடைத்தது அன்று குற்றம் சாட்டி விட்டு, அந்தப் புத்தகங்கள் யாவும் தமிழ்நாட்டில் அல்லது வேறு எந்த இடங்களிலும் தடை செய்யப்படவில்லை என்றும் அரசு தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது! தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டிற்கு, அந்தத் தொடர்பு தீவிரவாதச் செயலைச் செய்யத் தூண்டுகோலாயிருந்திருக்கிறது என்று ஒரு நிரூபணமுமில்லை. ஆக சென்னை உயர்நீதிமன்றம் கிட்டத்தட்ட இந்த வழக்கு ஜோடனை செய்யப்பட்ட பொய் வழக்கு என்ற அளவிற்கு சற்று குறைவாக கருத்தைச் சொல்லி, நெடுமாறனுக்கு ஜாமீன் கொடுத்துள்ளது.

நெடுமாறன் மீதுள்ள வழக்கு போடா நீதிமன்றத்தில்தான் நடைபெற வேண்டும். உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் தலையிடாது, ஆனால் ஜாமீன் வழங்கி இந்த நீதிபதிகள் சொன்ன கருத்தை போடா நீதிமன்ற நீதிபதி கருத்தில் வைத்தல் வேண்டும். மேலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மனதில் வைக்க வேண்டும்.

இதர போடா பற்றிய செய்திகள்:

ஒரு மாநிலம் ஒருவர் மீது சாற்றியுள்ள போடா வழக்கினைத் தானாகவே திரும்பிப் பெற இயலாது, மத்திய அரசும் இசைந்தால்தான் அவ்வாறு செய்ய முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியுள்ளது.

போடா சட்டத்திருத்தம் மாநிலங்கள் அவையிலும் வாக்கெடுப்பில் வென்றது. ஆனால் எதிர்க்கட்சிகள், போடாவை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, வெளிநடப்பு செய்தன.. இங்கு சுவாரசியமானது: சோ ராமசாமி மாநிலங்கள் அவையில் நியமன உறுப்பினர். இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக அஇஅதிமுக மட்டும்தான் மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் வாக்கெடுப்பில் வாக்களித்தன. மற்ற எதிர்க்கட்சிகள் இரண்டு அவைகளிலும் வெளிநடப்பு செய்தன. சோ எப்படி வாக்களித்தார் மாநிலங்கள் அவையில்? வாக்கெடுப்பின் போது மாநிலங்கள் அவையிலேயே இல்லையா? அல்லது ஆதரவாக வாக்களித்தாரா? இல்லை எதிர்ப்பெல்லாம் துக்ளக்கிலும், ஹிந்துஸ்தான் டைம்ஸில் எழுதுவதற்கு மட்டும்தானா?

மேலும் நேற்று அத்வானி மாநிலங்கள் அவையில் போடா சட்டம் (திருத்தத்துடன்) இருக்க வேண்டும் என்று ஆதரித்துப் பேசிய படத்துண்டு ஒன்று பார்த்தேன். அதில் "I agree that this (POTA) law is draconian" என்று கைகள் இரண்டையும் மடித்தவண்ணம் சொன்னார். "draconian" என்றால் மிகவும் கடினமான சட்டம். டிராகோ என்பவர் கிமு 7ஆம் நூற்றாண்டில் ஏதென்ஸ் நகரப் பாராளுமன்ற உறுப்பினர். இவர் இயற்றிய சட்டங்கள் எல்லாம், கிட்டத்தட்ட எந்தக் குற்றம் புரிந்தாலும் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று கடைசியில் முடியும். காசைத் திருடினால் மரணம், அடுத்தவனைத் திட்டினால் மரணம்! இப்படிப்பட்ட சட்டமா ஒரு நாகரிகக் குடியாட்சி முறையில் வாழ விரும்பும் மக்களுக்குத் தேவை? அதை நாட்டின் துணைப்பிரதமர், உள்துறை அமைச்சர் ஒத்துக் கொள்ளவும் செய்கிறார்! ஒருவேளை அத்வானிக்கு "டிராகோனியன்" என்பதன் பொருள் முழுதாகப் புரியவில்லையோ, என்னவோ?

Thursday, December 18, 2003

சோவின் போடா ஆதரவு

சோ ராமசாமி, துக்ளக்கின் ஆசிரியர், போடா சட்டத்தின் தீவிர ஆதரவாளர். அது மட்டுமல்லாமல், வைகோ, நெடுமாறன் ஆகியோரை போடா சட்டத்தின் கீழ்க் கைது செய்து சிறையில் அடைத்ததை ஆதரிப்பவர். போடா சட்டத் திருத்தம் இரண்டு நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அதனை தனக்கே உரிய கேலியான முறையில் எதிர்த்து "The Prevention of Terrorism Act is gone and has been substituted by the Protection of Terrorism Act. POTA is dead. Long live POTA." என்கிறார் தன்னுடைய ஹிந்துஸ்தான் டைம்ஸ் கட்டுரையில்.

சுப்ரமணியம் சுவாமியும் இதே கருத்தை முன்மொழியக் கூடும். அதாவது உச்ச நீதிமன்றம் - வெறும் சொல்லளவில் கொடுக்கும் ஆதரவு போடாவின் கீழ் வர முடியாது, செயலும் இருந்தால்தான் - என்றதனால் இனி இந்தியா முழுவதும் மக்கள் தாவூத் இப்ராஹிம் மற்றும் பிற இந்திய நாட்டின் எதிரிகளுக்கும், ஈழ விடுதலைப் புலிகளுக்கும் மற்றும் பிற இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் "கேடு விளைவிப்பவருக்கும்" ஆதரவாகக் குரல் எழுப்பலாம், கருத்தரங்கங்கள் நடத்தலாம் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டத் தொடங்கி விட்டார்.

அப்படித்தான் நடக்கட்டுமே? என்ன கெட்டுப் போய் விட்டது? ஒரு எழுவரல் குடியாட்சி (liberal democracy) முறையில் மாற்றுக் கருத்துகளுக்கு இடம் எப்பொழுதும் இருக்க வேண்டும். சொல்லளவில் எத்தகைய தீவிரவாதக் கருத்துகளுக்கும் இடம் கொடுக்கலாம். கனடாவில் பிரிவினைவாதம் பேசும் பலர் உள்ளனர். அமெரிக்காவில் பல சிறு குழுக்கள் அரசினை வெறுக்கின்றன. ஆயுதப் புரட்சி செய்ய வேண்டுமென்றெல்லாம் பேசுகின்றன. அவர்கள் அனைவரையும் அள்ளிக் கொண்டுபோய் உள்ளே போட வேண்டும் என்று யாரும் சொல்வதில்லை.

பத்திரிக்கைக் கருத்து சுதந்திரம் பற்றிக் கொட்டி முழங்கும் சோ, தனி நபர் கருத்து சுதந்திரத்தில் கட்டுப்பெட்டித்தனத்துடன், பிற்போக்காளராகவும் இருப்பதேன்?

போடா பற்றிய என் பதிவுகள்: ஓன்று | இரண்டு

மத்திய அரசின் விளம்பரத்திற்கு பீஹார் மாநில அரசு பதில்

இது மாநில, மத்திய அரசுகள் டென்னிஸ் ஆடுவது போல ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி முழுப்பக்க விளம்பரம் செய்யும் நேரம். சத்யேந்திர துபே கொலை பற்றி கடைசியாக மத்திய தரைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரகம் ஒரு விளம்பரம் மூலம் தன் நிலையை விளக்கியது. அதில் பீஹார் மாநில அரசை இந்தக் கொலைக்கு முழுப் பொறுப்பாளி என்றது. இதற்கு பதிலாக பீஹார் மாநில அரசு தன் நிலையை விளக்கி ஒரு முழுப்பக்க விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

சாரம்:

* தங்க நாற்கோணத் திட்டத்திற்கு, பீஹார் மாநில அரசு, எங்கெங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் பாதுகாப்பு அளித்து வருகிறது.
* துபே தனது கடிதம் எதிலும் பீஹார் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் விட்டதென்று குற்றம் சாட்டவேயில்லை.
* துபேயின் குற்றச்சாட்டு அனைத்துமே தேசிய நெடுஞ்சாலைகள் வாரியத்தில் ஒப்பந்தம் வழங்குவதில் ஊழல் மலிந்திருக்கிறது என்பதுதான். இதில் முழுப்பங்கு மத்திய அரசிடம் மட்டுமே. பீஹாரின் சட்டம் ஒழுங்கைக் குறை கூருவது ஏன்?
* துபேயுடன் கூடப் படித்த ஐஐடி மாணவர்தான் கயாவின் காவல்துறை ஆணையராக உள்ளார். துபே அவரைப் பலமுறை சந்தித்துள்ளார். ஒருமுறை கூடத் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று சொன்னதில்லை.

ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சுமத்தினாலும், மக்களிடம் தங்களது நிலையை விளக்க வேண்டும் என்ற இருவரது எண்ணமும் அந்த அளவில் வரவேற்கத் தக்கதே.

இனி அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

போடா பற்றி

இன்றைய தி ஹிந்து தலையங்கம் "POTA reinterpreted" படிக்க வேண்டிய ஒன்று. அதன் கருத்துக்களோடு முழுதும் ஒத்துப் போகிறேன்.

எனது நேற்றைய பதிவையும் கவனிக்கவும்.

வைகோ ஆனால் போடா தனி நீதிமன்றத்தை அணுகி வழக்கைத் தள்ளுபடி செய்யக் கேட்டுக் கொள்ளப் போவதில்லை என்கிறார்.

மேலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பார்க்கும்போது தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகப் பேசுவது மட்டுமே போடா குற்றமாகாது. இது மிகவும் வரவேற்கத் தக்க தீர்ப்பு.

Wednesday, December 17, 2003

போடா மற்றும் கட்சித் தாவல்

நேற்று இந்தியா, ஆஸ்திரேலியாவை டெஸ்டில் தோற்கடித்தது. நேற்று மற்ற சில முக்கியமான நிகழ்வுகளும் இருந்தன.

1. தீவிரவாதத் தடுப்புச் சட்டம் போடா (POTA) பற்றிய வழக்கின் மீது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வை.கோபால்சாமி (வைகோ) உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் "சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது மாநிலங்களின் கடமை. அப்படி இருக்கையில் நாட்டின் பாராளுமன்றம் போடா சட்டத்தை இயற்றியிருக்க முடியாது. அது மாநிலங்களின் சட்டமன்றங்களில்தான் இயற்றப்பட்டிருக்க வேண்டும்" என்னும் வகையில் அமைந்திருந்தது போலும். ஆனால் உச்ச நீதிமன்றம் இதனை ஏற்கவில்லை; "தீவிரவாதம் மாநிலங்களின் எல்லைகளைத் தாண்டி, நாடு முழுவதையும் உள்ளடக்கி நிகழ்கிறது. எனவே இதனைத் தடை செய்யுமாறு சட்டம் இயற்ற நாட்டின் பாராளுமன்றத்திற்கு அனுமதி உண்டு" என்று கூறியுள்ளது. மேலும் ஏற்கனவே இருக்கும் சட்டங்களால் தீவிரவாதத்தைத் தடை செய்ய முடியாது என்பதனை ஆராய்ந்த பின்னரே பாராளுமன்றம் இச்சட்டத்தை இயற்றியுள்ளது என்பதனையும் நீதிபதிகள் விளக்கியுள்ளனர்.

முதலில் வைகோ ஏன் இந்த 'டெக்னிகாலிட்டி'யைக் காரணம் காட்டி உச்ச நீதிமன்றம் சென்றார் என்று புரியவில்லை.

ஆனால் மிக முக்கியமாக, மேற்குறிப்பிட்டுள்ள தீர்ப்பில், நீதிபதிகள் இவ்வாறும் சொல்லியுள்ளனர்: "தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கத்துக்கு ஒருவர் கருத்து ரீதியாக ஆதரவு காட்டினார் என்பதனால் மட்டுமே போடாவின் பிடிக்குள் வர முடியாது. போடாவின் கீழ் கைது செய்யப்பட வேண்டுமானால், ஒருவர் ஒரு தீவிரவாதச் செயலைச் செய்யத் தூண்ட வேண்டும், அல்லது அந்தத் தீவிரவாதச் செயலைச் செய்வதற்குத் துணைபோக வேண்டும்.

இதனைக் காரணம் காட்டி வைகோ போடா தனி நீதிமன்றத்திடம் தான் நிச்சயமாக தீவிரவாதச் செயலைச் செய்யத் தூண்டவுமில்லை, தீவிரவாதச் செயலுக்குத் துணைபோகவுமில்லை என்று வாதாடலாம்.

செய்வார், விடுவிக்கப்படுவார் என்று நம்புவோம்.

2. பாராளுமன்றத்தில் போடா சட்டத்திருத்தம் வாக்கெடுப்பில் வென்றது. ஆனால் இதற்கு முன்னர், எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெளிநடப்பு செய்தன. அஇஅதிமுக உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். இந்த சட்டத் திருத்தம் மாநில அரசுகள் போடாவைத் தவறாகப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டுகிறது என்பது மத்திய அரசின் வாதம். எதிர்க்கட்சிகள் போடா தவறாகப் பயன்படுத்தப்படும் என்பது தெரிந்துதான் நாங்கள் இந்த சட்டம் நடைமுறையாகக் கூடாது என்று எதிர்த்தோம். இப்பொழுது சட்டம் தவறாகப் பயன்படுத்தப் படுகிறது என்று நீங்களே சொல்கிறீர்கள் என்று குற்றம் சாட்டின.

ஆனால் துணைப் பிரதமர் அத்வானி, தீவிரவாதத்தை எதிர்க்க போடா அவசியம் தேவை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

என்னைப் பொறுத்தவரை போடா அநாவசியமான சட்டம். இந்த சட்டத்தை இதுவரை மாநில அரசுகள் தவறாகத்தான் பயன்படுத்தியுள்ளன என்று தோன்றுகிறது. இந்த சட்டத்தை நீதிமன்றங்களால் தூக்கி எறிய முடியாது. அரசே முன்வந்து விலக்கிக் கொள்ள வேண்டும். அது இப்பொழுதைக்கு நடக்காது. இந்த சட்டத்தின் தேவையின்மையை எதிர்க்கட்சிகள்தான் தீவிரமாக விளம்பரப் படுத்த வேண்டும். வாக்கெடுப்பின் போது வெளியேறுவது கையாலாகாத் தனத்தையே குறிக்கிறது.

3. கட்சித் தாவல் தடை சட்டத் திருத்தம்: மக்களவையில் இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலங்கள் அவையில் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் இந்த சட்டம் அமலுக்கு வரும். இதன்படி சட்டமன்றங்கள், பாராளுமன்றத்தில் இடைக்காலத்தில் கட்சி மாறினால் அப்படி மாறுபவருக்கு பணம் கிடைக்கும் அரசியல் பதவிகளுக்கான வாய்ப்பு போய்விடும். அதாவது கட்சி மாறுபவருக்கு அமைச்சர் பதவியோ, வாரியத் தலைவர் பதவியோ இனிமேல் கிடைக்காது.

Tuesday, December 16, 2003

இந்தியா வெற்றி

இந்தியா ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து விட்டது! இந்தத் தொடர் ஆரம்பிக்கும் போது நான் இப்படி நடக்கும் என்று துளியும் நம்பவில்லை. இந்த டெஸ்டு போட்டி ஆரம்பிக்கும்போதும் நம்பவில்லை. திருப்பு முனையே நான்காவது நாள் ஆட்டமும், அகர்காரின் பந்து வீச்சும்தான்.

ராஹுல் திராவிட்... இவரது ஆட்டத்தைப் பற்றி எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம். இந்த டெஸ்டு போட்டியின் மூலம் இந்தியாவின் தலை சிறந்த ஆட்டக்காரர்களில் இவரே முதன்மையானவர் என்பதை நிரூபித்துள்ளார். வெங்கட் லக்ஷ்மண் பெயரையும் மறக்காது குறிப்பிட வேண்டும். ஜாகீர் கான் அடுத்த போட்டியில் விளையாட வருவாரெனில் இந்திய அணிக்கு இந்தத் தொடரை வெல்ல அதிக வாய்ப்புகள் இப்பொழுது தென்படுகின்றன.

இந்திய அணிக்கு வாழ்த்துகள்.

ராஹுல் திராவிட் பற்றிய முந்தைய வலைப்பதிவு

Monday, December 15, 2003

துபே கொலை பற்றி மத்திய அரசின் தன்னிலை விளக்கம்

இன்று 'தி ஹிந்து' செய்தித்தாளில் மத்திய அரசின் தரைப் போக்குவரத்து அமைச்சரகமும், தேசிய நெடுஞ்சாலை வாரியமும் இணைந்து சத்யேந்திர துபே கொலை பற்றிய தன்னிலை விளக்கமாக ஒரு "விளம்பரச் செய்தியை" வெளியிட்டுள்ளன.

இதன் சாரம்:

* பிரதமர் அலுவலகத்துக்கு துபே எழுதிய கடிதம் வெளியானதன் மூலமாகத்தான் துபேயின் பெயர் வெளியே தெரிந்து அவர் கொல்லப்பட்டார் என்பது தவறான கருத்து. பிரதமர் அலுவலகத்துக்கு வந்த கடிதத்தின் நகல் நெடுஞ்சாலைத் துறையின் விஜிலன்ஸ் கமிஷனருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் அலுவலகம் துபேயின் கடிதத்தை வைத்துக் கொண்டு நேரிடையாக எந்தச் செயலிலும் ஈடுபட முடியாது. அதனை சம்பந்தப்பட்ட அமைச்சரகத்துக்கு அனுப்புவதே பிரதமர் அலுவலகத்தின் கடமையாகும். அவ்வாறு முழுத்தகவலையும் (பெயரும் சேர்த்து) தரைப் போக்குவரத்து அமைச்சரகத்திடம் அனுப்பியது ரகசியத்தை வெளியே சொல்வதாக ஆகாது.

* துபேயின் கடிதத்தின் பலனாக ஒரு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஒரு சில ஒப்பந்தக்காரர்களின் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். சாலை ஓரிடத்தில் மீண்டும் பாவப்பட்டது. துபே பிரதமருக்கு நேரிடையாகக் கடிதம் அனுப்பியது தவறு (?) என்றாலும் அவரை தண்டிக்காது, அவரது நேர்மையைப் பாராட்டி அவருக்கு பணி உயர்வும் கொடுக்கப்பட்டது.

* பீஹாரின் சட்டம் ஒழுங்கின்மையே இந்தக் கொலைக்குக் காரணம். இதுபற்றிப் பலமுறை அமைச்சர் கந்தூரி பீஹாரின் முதல்வர் ராப்ரி தேவிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

* மற்ற எல்லாவிடங்களிலும் வேலை நன்கு நடந்து வருகிறது. ஆனால் பீஹாரில் மட்டும்தான் எல்லா வேலையிலும் நிறையத் தடங்கல் ஏற்பட்டுள்ளது (அட்டவணையைப் பார்க்க)

===

பீஹார் சட்டம் ஒழுங்கில்லாத மாநிலம் என்பது அனைவரும் ஓரளவுக்கு அறிந்ததே என்றாலும், இந்த அரசின் செய்தி விளம்பரம் மூலம் எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைத்ததாகத் தெரியவில்லை.

1. ஒரு கடிதத்தில் துபே தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று சொல்கிறார். "என் பெயர் வெளியில் தெரிந்ததனால் நான் தேவையற்ற பிரச்சினைகளுக்கும், மிரட்டல்களுக்கும் உள்ளாகியிருக்கிறேன்" என்கிறார். ஆனால் அவருக்கு சரியான பாதுகாப்பு கொடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

2. பீஹார் அரசுக்குப் பல கடிதங்கள் அனுப்பியிருப்பதாகச் சொல்கிறார் தரைப் போக்குவரத்து அமைச்சர் கந்தூரி. ஆனால் நேற்று NDTV விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட பீஹார் சட்ட அமைச்சர் அதுமாதிரி ஒன்றும் வரவில்லை என்பது போலப் பேசினார். உண்மை என்ன? மத்திய அரசு ஏன் சும்மா இருக்கிறது? மத்தியப் படைகளின் (CRPF) மூலம் பாதுகாப்பு கொடுக்க முடியாதா?

3. துபே பெயர் குறிப்பிட்டு நான்கு ஒப்பந்தக்காரர்களை ஊழல் பேர்வழிகள் என்கிறார்: சென்டிரோடோர்ஸ்டோய் (ரஷ்யா), சைனா கோல் (சீனா), எல்ஜி (கொரியா) - இந்த மூன்று நிறுவனங்களும் அனுபவமும், திறமையும் இல்லாத உள்ளூர்க் காரர்களுடன் சேர்ந்து அவர்கள் மூலம் வேலைகளைச் செய்கின்றன, இந்த வேலைகள் தரமில்லாது இருக்கின்றன என்கிறார். பிராக்ரஸ்ஸிவ் கன்ஸ்டிரக்ஷன்ஸ் என்னும் நிறுவனம் சரியாகத் தொழிலை நிர்வகிக்கக் கூடியதில்லை என்று தான் கருதுவதாகச் சொல்கிறார். இந்த நான்கு நிறுவனங்களும் NH-2 (தில்லியையும், கொல்கத்தாவையும் இணைக்கும் பாதை) வில் வேலை செய்கின்றன. இந்த நான்கும் கூட்டாகவோ, தனியாகவோ துபே மீது கொலையாட்களை ஏவியிருக்கலாம். அதுபற்றி CBI விசாரணை செய்யும் என்றாலும், தேசிய நெடுஞ்சாலை வாரியம் அந்த ஒப்பந்தங்களை மீள்-ஆய்வு செய்யலாமே?

இன்னமும் கேள்விகள் நிறைய இருக்கின்றன.

சத்யேந்திர துபே பற்றிய என் பிற வலைப்பதிவுகள் ஒன்று | இரண்டு

Sunday, December 14, 2003

சதாம் ஹுசேன் பிடிபட்டார்

தொலைக்காட்சியில் சூடான செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் விளைவுகள் என்ன என்பது போகப்போகத்தாண் தெரியும்.

சங்கம்: மாலன், நன்னனொடு சந்திப்பு

'தமிழ் உரைநடை எங்கே போகிறது?' என்னும் புத்தகத்தின் ஆசிரியர் பேரா.நன்னன் உடன் மாலன் இன்று சன் நியூஸில் உரையாடல் நிகழ்த்தினார். கடந்த ஓரிரு வாரங்களில் யாஹூ குழுமங்கள் ராயர்காபிகிளப், மரத்தடி ஆகியவற்றில் நடந்த விவாதங்களை மனதில் வைத்த மாதிரி இருந்தது இந்த உரையாடல். கிரிக்கெட் போட்டி வெகு சுவையானதாகப் போய்க்கொண்டிருந்ததால் அங்கும், இங்குமாக தொலை-இயக்கியைத் தட்டிக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று. எழுத்தில் தவறுகள் புகுவதை எப்படி தடுப்பது என்பது பற்றியது புத்தகம் என்று புரிந்தது. தவறான ஒருமை-பன்மை, உயர்திணை-அஃறிணை புழக்கம், சொற்களின் தவறான பொருள்கள் நாளடைவில் பயன்படுத்தப் படுவது (இறும்பூதுதல் என்ற சொல்லினை எடுத்துக்காட்டினார்), ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழாக்கம் செய்வதில் வரும் குழப்பங்கள் என்று சுவையாகச் சென்றது உரையாடல். [அங்கு இரண்டு பந்துகள் பார்ப்பேன், இங்கு ஒரு நிமிடம்...]

[தெரிந்து கொள்ள விழைபவருக்கு: இறும்பூதுதல் என்றால் ஆச்சரியப்படுதல். "நீங்கள் சட்டமன்றத் தேர்தலில் வென்றதை நினைத்து இறும்பூது எய்துகிறேன்" என்றால் "நீ எப்படிய்யா கெலிச்சே? தோத்துடுவேனில்ல நெனச்சேன்" என்று பொருள், ஜெயித்தவரைப் பாராட்டுவது அல்ல.]

ஆங்கில மொழித்தாக்கத்தால் இயல்பாக வினையைப் புழங்காமல், வினையெச்சத்தைப் பெயர்ச்சொல்லாக்கி அதன் கடைசியில் மற்றுமொரு வினையைப் போட்டுக் குழப்புவதைப் பற்றியும் நன்னன் பேசினார். ('பேசினார்' என்பதற்குப் பதில் 'பேச்சுவார்த்தை நடத்தினார்', 'புரிந்து கொண்டார்' என்பதற்குப் பதில் 'புரிதலைச் செய்தார்' ஆகிய பிரயோகங்கள்.)

மாலன் முடிக்கையில் தமிழ் மாநிலக் காங்கிரஸ், காங்கிரஸுடன் இணைந்தது என்பது தவறான பிரயோகம், 'ஒன்றானது' என்பதுதான் சரி என்று தான் எண்ணுகிறேன் என்றார். நன்னன் அதனை மேற்கொண்டு விளக்குகையில் 'இணைவது' என்பது தனியாக இருக்கும் இரண்டோ, அதற்கு மேற்பட்டதோ சேர்ந்தவாறு இருப்பது என்றும், அவை விரும்பும்போது பிரியலாம் என்றும், 'ஒன்றாவது' என்பது இரண்டறக் கலந்து விடுவது, புதிதாக ஒன்றை உருவாக்குவது என்றும் விளக்கினார். பாலும் தண்ணீரும் கலந்து தண்ணீர்ப்பால்; உளுந்து மாவும் அரிசி மாவும் கலந்து தோசை மாவு ஆகியவை ஒன்றாவது. ஐந்து விரல்களும் இணைந்து இருப்பது என்பது ஒன்றோடொன்று ஒட்டி நிற்பது.

தமிழில் பிழையின்றி எழுத விரும்புவோர் புத்தகத்தைத் தவறாமல் வாங்கிப் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. வாங்கிப் படித்தபின் எழுதுகிறேன்.

மாலன் - மன்னர்மன்னன் சந்திப்பு

மிகை நாடும் கலை

காலச்சுவடு இதழ்கள் 1993-2000 களில் இதுவரை வந்துள்ள திரைப்படத் துறை தொடர்பான கட்டுரைகளை ஒன்றிணைத்து காலச்சுவடு பதிப்பகம் 'மிகை நாடும் கலை' என்றொரு புத்தகத்தை வெளியிட்டுள்ளது. விலை ரூ. 115. இப்பொழுது உயிர்மை, தீம்தரிகிட ஆகிய இதழ்களிலும் தமிழ்த் திரைப்படங்கள் பற்றி சுவையான, சிந்தனையைத் தூண்டும் வகையிலான கட்டுரைகள் வருகின்றன. அ.ராமசாமி என்பவர் இந்த இரு இதழ்களிலும் எழுதியுள்ள கட்டுரைகள் படிக்க வேண்டியவை.

சட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 3 & 4

துக்ளக் 10/12/2003 & 17/12/2003 இதழ்களிலிருந்து:

* சட்டமன்றங்கள் மற்றும் பாராளுமன்றத்திற்கு உரிமைகளே இல்லையா? இருக்கின்றன - அதாவது சட்டமன்றங்களின் கடமைகளை யாரும் தடுக்காவண்ணம் நடத்த சட்டமன்றத்தின் அவைத்தலைவருக்கு உரிமை உள்ளது. அப்படி கடமைகளை நிறைவேற்றுவதற்கு இடையூறாக இருப்பது உரிமை மீறல்.

* சட்டமன்றங்களில் நடைபெறுவது அனைத்தும் சட்டமன்ற நடவடிக்கைகள் ஆகுமா? கிடையாது, உதாரணமாக ஒருவரை ஒருவர் திட்டி அடித்துக் கொள்வது, "வேட்டியை, புடைவையை அவிழ்ப்பது" போன்றவை நிச்சயமாக சட்டமன்ற நடவடிக்கைகள் ஆகாது.

* சட்டமன்றங்களில் நடைபெறும் குற்றவியல் சட்டத்தின் கீழான குற்றங்கள் (அடிதடி ஆகியவை) சட்டமன்றங்களின் நடவடிக்கைகளின் கீழ் இருக்க முடியாது. அக்குற்றம் செய்தவரை நீதிமன்றங்களில்தான் தண்டிக்க முடியும். சட்டமன்றத்தில் கண்டிக்க மட்டும்தான் முடியும். (பரிதி இளம்வழுதி வழக்கும் இப்படிப்பட்டதே. இவர் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு வெளியில் நடந்து தண்டனையும் அளிக்கப்பட்டது, பின்னர் சட்டமன்றமும் இவருக்கு மேற்கொண்டு தண்டனை கொடுத்தது. அது தவறென்று மற்றொரு விவாதம்...)

* உரிமை மீறல் வேறு, அவமதிப்பு வேறு. சட்டமன்ற நடவடிக்கைகளை நிறைவேற்றத் தடையாயிருப்பது மட்டும்தான் உரிமை மீறல். அவ்வாறு இல்லாமல் நடவடிக்கைகளுக்கு எந்த பங்கமும் வராமலும் சட்டமன்றத்தின் அதிகாரம் மீறப்படலாம். அது வெறும் அவமதிப்பு மட்டுமே. அப்படி அவமதிப்பு நிரூபணமானாலும் அதற்கு சட்டமன்றங்களால் தண்டனை வழங்க முடியுமா என்பதும் எழுப்பப்பட வேண்டிய கேள்வி.

* அது உரிமை மீறல் என்பதற்கு சில உதாரணங்கள்: (அ) சட்டமன்ற உறுப்பினரை மிரட்டி அவர் இப்படித்தான் பேச வேண்டும் என்பது, (ஆ) சட்டமன்ற உறுப்பினரைக் கடத்திக் கொண்டு போய் ஒளித்து வைத்திருப்பது, அவர் சட்டமன்றத்தின் இயங்காமல் செய்வதற்கான நிலைமையைக் கொண்டுவருவது, (இ) சட்டமன்ற உறுப்பினருக்கு லஞ்சம் கொடுத்து அவரது நிலைப்பாட்டினை மாற்ற முயலுவது, (ஈ) சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர் பேசிக் கொண்டிருக்கும் போது அவரது பேச்சைத் தடுக்க முயலுவது... இப்படியானவை.

* ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகளை சட்டமன்றத்தின் உரிமைகளுக்கு உட்பட்டது அல்ல. இரண்டுக்கும் பங்கம் வருமாறு நேரும்போது எதற்கு முன்னுரிமை என்று முடிவு செய்வது நீதிமன்றங்களே.

சட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 2
சட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 1

[பி.கு: இந்த வாரம் சிதம்பரம் கட்டுரை பற்றியும், குருமூர்த்தி கட்டுரை பற்றியும் எதுவும் எழுதப்போவதில்லை. இந்த வாரக் கல்கி வீட்டுக்கு வரவேயில்லை! பத்திரிக்கை போடுபவர் மறந்து விட்டார். குருமூர்த்தி அமெரிக்காவில் குடும்பங்கள் பல 'அப்பா இல்லாத குடும்பங்களாக' இருக்கின்றன என்பது பற்றிக் கவலைப்படுகிறார். அதில் எனக்கு ஒன்றும் அதிகம் கருத்து இப்பொழுதைக்குக் கிடையாது.]

தெற்காசிய நாடுகளுக்குப் பொது நாணயம் இப்பொழுது சாத்தியப்

ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் வாஜ்பாயி இரண்டு கருத்துகளை முன்வைத்தார்: (1) சார்க் எனப்படும் தெற்காசியக் கூட்டமைப்பு நாடுகள் திறந்த எல்லைகளை வைத்துக் கொண்டு வர்த்தகம் செய்ய வேண்டும் (2) இந்த நாடுகள் புழங்குவதற்கெனப் பொதுவானதொரு நாணயம்/பணம் (currency) வேண்டும். இதுதான் சாக்கு என்று பாகிஸ்தானும் தாமும் இவை நடக்கக் கூடியவைகளே என்று நம்புவதாகச் சொன்னது.

ஐரோப்பாவில் பல வருடங்களாகவே தனித்தனி நாடுகள் ஒன்றிணைந்து ஒரு பொதுச்சந்தையை உருவாக்கின. ஐக்கிய ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பு (European Economic Union) 1973இல் 9 நாடுகள் இணைந்து ஆரம்பித்த இந்தச் சந்தை விரிவாகி 2003இல் 15 நாடுகளை உள்ளடக்கி, 2004இல் 25 நாடுகள் சேர்ந்த ஒரு குழுமமாக இருக்கப்போகிறது. ஒரு நாட்டில் விளைவித்த, உருவாக்கிய பொருட்களை பொதுச்சந்தையின் மற்ற நாடுகளில் விற்பதற்கு எந்தத் தடையும் கிடையாது, தனி வரிகள் எதுவும் கிடையாது. இந்த நாடுகளுக்கிடையில் பொதுமக்கள் கடவுச்சீட்டு இல்லாமல் சுலபமாகப் போய் வர முடியும். ஒரு நாட்டைச் சேர்ந்தவர் குழுமத்தின் மற்ற நாடுகளில் தடைகள் ஏதுமின்றி வேலைக்குப் போக முடியும். இந்த நாடுகளுக்கிடையே குத்து-வெட்டுக் கொலை-பழி கிடையாது. அடுத்த நாட்டை அடுத்துக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.

முதலில் பொதுச்சந்தையாகத் தொடங்கிய இந்தக் கூட்டமைப்பு பல வருடங்களுக்குப் பிறகே பொது நாணயம் (யூரோ) ஒன்றை உருவாக்கின. எல்லையில்லாத சந்தை என்பது ஒன்று, பொது நாணயம் என்பதோ மிகவும் வேறுபட்டதொன்று. பிந்தையதைச் செயல்படுத்த அத்தனை நாடுகளுக்கும் இடையே ஒரேமாதிரியான பொருளாதாரக் கொள்கை வேண்டும். வங்கியின் சேமிப்பு வட்டி விகிதம் எல்லா நாடுகளிலும் சமமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குறைந்த வட்டி உள்ள நாட்டில் கடன் வாங்கி, அதிக வட்டியுள்ள நாட்டில் அதை வங்கியில் சேமித்து வெறும் காற்றில் முழம் பூ அளக்கலாம். பண வீக்கம் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்க வேண்டும் எல்லா நாடுகளிலும். அத்தனை நாடுகளுக்கும் சேர்த்து பணம் அச்சடிக்க ஓர் இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டின் மைய வங்கியும் (இந்தியாவில் ரிசர்வ் வங்கி போன்றது) தங்களது பணக்கொள்கையை தங்கள் இஷ்டத்திற்கு வைத்துக் கொள்ள முடியாது.

சார்க் நாடுகள் என்பன இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாள், பூடான் மற்றும் மாலத்தீவுகள் அடங்கியது. இதில் முதல் மூன்றுதான் அளவிலும், மக்கள் தொகையிலும் ஒப்பிடக் கூடியவை. இந்த மூன்று நாடுகளிடையே முதலில் மருந்துக்குக் கூட ஒற்றுமை கிடையாது. அதனினும் மேலாக ஒருவரை ஒருவர் ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற ஆசை உள்ளூர இருப்பது போலத் தெரிகிறது. பாகிஸ்தான் கள்ள நோட்டு அடித்து இந்தியாவில் புழங்க விடுகிறது என்று இந்தியா நேரம் கிடைக்கும் போதெல்லாம் குற்றம் சாட்டிக் கொண்டேயிருக்கிறது. பொது நாணயம் வந்துவிட்டால் அடுத்த நாட்டைக் கெடுக்க இப்படிக் கள்ள நோட்டு அடிப்பது சுலபமாகிப் போய்விடும்.

முதலில் தேவை அமைதியும், நாடுகளுக்கிடையேயான பரஸ்பர நம்பிக்கையும். எல்லையில்லா பொதுச்சந்தைப் உருவாக்கிக் கொள்வதில் தவறில்லை. தடாலடியாகப் பொது-நாணயம் என்று குதிக்க வேண்டிய அவசியமில்லை. சார்க் நாடுகள் முதிர்ச்சி அடையாத புது நாடுகள் (நமக்கு வயது வெறும் ஐம்பதுகளில்). பொது-நாணயத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய திறன் நம்மிடையே இல்லை. அது குறித்த ஆரோக்கியமான சிந்தனை கூட நம்மிடைய இல்லை. எனவே ஆகவேண்டிய காரியங்களை முதலில் பார்ப்பது நல்லது. அவையாவன:
  1. நாடுகளுக்கிடையேயான எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது
  2. பக்கத்து நாடுகளுக்குத் தேவையான பண உதவியை மான்யங்கள் மூலம் அளிப்பது
  3. உயர் கல்வி வளர்ச்சிக்காக நாடுகளுக்கிடையே மாணவர்கள் பரஸ்பர மாற்றம், ஒரு நாட்டின் மாணவர்கள் அடுத்த நாட்டில் படிக்க எந்தத் தடையும் இல்லாமை
  4. கடவுச்சீட்டு இல்லாப் பயண அனுமதி
  5. ஒரு நாட்டவர் அடுத்த நாட்டில் வேலை பார்க்கத் தடையின்மை (ஆமாம், இங்கே பீஹாருக்கும், அஸ்ஸாமுக்கும் இடையேயே தகராறு... அந்த பிரச்சினையைத் தீருங்கள் பிரதமரே!)
  6. ஒரு நாட்டவர் அடுத்த நாட்டில் தொழில் தொடங்கத் தடையின்மை
  7. எல்லையில்லா, தனி-வரிகளில்லா வர்த்தகம்

இவற்றை சரியாக நடைமுறைப்படுத்த நமக்கு இன்னமும் 30 வருடங்கள் ஆகலாம். அதன் பின்னர் பொது-நாணயத்தைப் பற்றிப் பேசுவோம்.

Saturday, December 13, 2003

வெங்கட்டின் மின்புத்தகங்கள் பற்றிய கட்டுரை

நேற்றைய செய்தியாக சாரு நிவேதிதாவின் மார்தட்டல் ("இந்திய மொழிகளிலேயே முதன் முதல் மின்-நாவல் என்னதுதான்!") பற்றிய உண்மையின்மையைப் பார்த்தோம். விருப்பம் இருப்பவர்கள் சாருவின் கோணல் பக்கங்கள் தளத்தில் அவரது மின்புத்தக முயற்சியைப் பற்றியும், அதில் அவர் பட்ட தொல்லைகளையும், ஒரு கூட்டமே அவருக்கு உதவியதையும் பற்றி எழுதியுள்ளார். அப்படி உழைத்தவர்களைக் கொச்சைப் படுத்துவது என் நோக்கமில்லை. ஆனால் இந்த "முதலாவது" என்கிற பீலா வேண்டாமே? மேலும் PDF கோப்பு ஆக்க இவ்வளவு கஷ்டப்பட வேண்டாம். ஓப்பன் ஆஃபீஸ் என்றொரு மென்பொருள் - இலவசமாகக் கிடைக்கிறது. அதில் ஒழுங்காக TSCII அல்லது யூனிகோடு எழுத்துரு கொண்டு அடித்து, சேமிக்கும் போது PDF ஆக சேமிக்கலாம். சாருவுக்கு உதவி செய்ததாகக் குறிப்பிடப்பட்ட பெங்களூர் அரவிந்தனுக்கு நானே ஓப்பன் ஆஃபீஸ் மென்பொருளைக் கொடுத்திருக்கிறேன். மேலும் தமிழில் சொற்பிழை களைய, ஒற்றுப்பிழை களைய மென்பொருள்கள் உள்ளன. அதனால் திரு சாரு நிவேதிதா ஒன்றும் இல்லாததை ஊதிப் பெரிது பண்ண வேண்டாமே?

பல விவரங்களுடன் வெங்கட் தனது வலைப்பதிவில் இப்பொழுது இருக்கும் எவையுமே நியாயமாக மின்புத்தகங்கள் என்ற அடைமொழியினைத் தாங்கி வர முடியாதது என்கிறார். வெறும் PDF கோப்புகளோ, HTML கோப்புகளோ (கடவுச்சொல்லுடனோ, இல்லாமலோ) மின்புத்தகங்கள் ஆகிவிட முடியாதென்கிறார். ஓப்பன் ஈபுக் தளத்தில் ஒரு மின்புத்தகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு வரைமுறையினைக் கொடுத்துள்ளார்கள்.

Friday, December 12, 2003

ஸீரோ நேர்மை

இன்று காலை தினமலரில் ஒரு செய்தி வந்திருந்தது. விளம்பரம், செய்தியாக வந்துள்ளது.

"இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக தமிழில் 'மின்-நாவல்' படைக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட்டில் டவுன்லோடு செய்து இந்த நாவலை முழுமையாகப் படிக்கலாம்.

பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா புதுமை முயற்சியாக 'ஸீரோ டிகிரி' என்ற இந்த மின்-நாவலை (இ-நாவல்) எழுதியுள்ளார். இன்டர்நெட்டில் http://shopping.chennaionline.com/zerodegree என்ற வெப்சைட் முகவரிக்கு போனால் 'கிளிக் டு பை தி புக்' என்று வரும். அங்கு 'கிளிக்' செய்தால் பெயர் மற்றும் வங்கி கார்டு எண் கேட்கும். அந்த விவரங்களை தந்த பிறகு முழு நாவலையும் டவுன் லோடு செய்து படிக்கலாம்.

இந்த தமிழ் நாவல் தான் இந்திய மொழிகளிலேயே படைக்கப்பட்டுள்ள முதலாவது 'மின்-நாவல்' ஆகும்.

இந்த மின்-நாவல் சென்னையில் நேற்று முன்தினம் துவக்கி வைக்கப் பட்டது."
முதலில் படித்தபோது 'என்னடா, இப்படிக் கதையடிக்கிறார்கள்' என்றுதான் தோன்றியது. நான் போன மாதம்தான் சுலேகா, தமிழோவியம் எல்லாம் போய் மின்-புத்தகமெல்லாம் வாங்கிவிட்டு அதைப்பற்றி வலைப்பதிவிலும் (1, 2), ராயர்காபிகிளப்பிலும் எழுதினேன், இதென்ன கரடி விடுகிறார்கள் இங்கே? 'உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக' என்று சன் டிவியில் வருமே (பின்னே கஸக்ஸ்தான் டிவிலயா கேவலமான தமிழ்ப்படத்த போடப்போறான்?) அதுமாதிரி இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக என்று ஆரம்பிக்கும்போதே ஒரு மாதிரி நெளிய வைத்தது. அதன் பிறகு சிந்தித்ததில், 'மின்-நாவல்' என்ற சொல் கண்ணில் பட்டது. சுலேகா, தமிழோவியம் ஆகியவிடங்களில் எல்லாம் சிறுகதைத் தொகுப்பு, அல்லது கட்டுரைகள் தான் இருந்தன, நாவல் இல்லை. ஒருவேளை அதைக் காரணம் காட்டி இந்தக் "கதையை" விடுகிறார்களா? என்றால் கொஞ்சம் தேடியதில் முழுப் பொன்னியின் செல்வனும் 'ஈ-புக்'காக வந்துள்ளது. என்னிடம் டிஸ்கியில் முழுப் பொ.செ மைக்ரோசாஃப்ட் வோர்டில் உள்ளது. எந்தப் புண்ணியவான் செய்தாரோ, தெரியாது, ஆனால் நிச்சயம் 'ஸீரோ டிகிரி' முதல் மின்-நாவல் கிடையாது.

தமிழோவியத்தில் பல நாட்களாகவே மூன்று நாவல்கள் மின்-புத்தகங்களாக வரப்போகின்றனவென்று சொல்லியிருக்கிறார்கள்.

மற்றபடி தமிழ் மின்-நூல்கள் என்றால் கவிதாசரண் பழைய இதழ்கள் எல்லாம் PDF கோப்புகளாகப் பல நாள்களாகக் கிடைத்த வண்ணம் உள்ளன. தீம்தரிகிட வும் இப்படி சந்தாதாரர்களுக்குக் கிடைக்கிறது என்று தகவல். நண்பர் பாரா அவரிடம் ஒரு தென்னமெரிக்கக்காரர் எழுதிய நாவலின் தமிழ் மொழியாக்கம் மின் வடிவில் இருக்கிறது, நாகூர் ரூமி கொடுத்தார் என்று சொன்னார் (எனக்கு இன்னமும் ஒரு பதிவு தரவில்லை).

ஆக, சாருவுக்கு எதற்கிந்த "இந்திய மொழிகளிலேயே முதலாவது" பட்டமெல்லாம்? ஏன் தினமலர் இந்த நேர்மை-தவறுதலுக்குத் துணை போகிறது?

பிற்சேர்க்கை: மின்-நூல்களாக கல்கியின் பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம், மதுரைத் திட்டத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன.

பொன்னியின் செல்வன்: பாகம் 1, அத்தியாயங்கள் 1-30, 31-57 | பாகம் 2, அத்தியாயங்கள் 1-26, 27-53 | பாகம் 3, அத்தியாயங்கள் 1-23, 24-46 | பாகம் 4, அத்தியாயங்கள் 1-23, 24-46 | பாகம் 5, அத்தியாயங்கள் 1-25, 26-50, 51-75, 76-91
சிவகாமியின் சபதம்: பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3