Saturday, March 31, 2007

உணவு, விவசாயம், நெருக்கடி - 3

சென்ற பதிவின் தொடர்ச்சி

(7) தண்ணீர்

இந்தியாவில் இருக்கும் நீர்வளங்களைப் பராமரிக்கும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. இந்த நீர்வளங்களை விவசாயம், குடிநீர் மற்றும் வீட்டுத் தேவைகள், மின் உற்பத்தி ஆகியவற்றுக்குப் பயன்படுத்துவது அரசின் கடமை. தொடக்கத்தில் மின் உற்பத்திக்காகவும் பாசனத்துக்காகவும் பெரும் அணைகள் கட்டப்பட்டன. பெரும் அணைகள் நல்லதா கெட்டதா என்ற விவாதம் தொடர்கிறது. நதிகள் திசை திருப்பப்பட்டன. இதனால் நீர்வளம் இல்லாத பகுதிகளுக்கு நீர் சென்றாலும் நாளடைவில் ஒவ்வொரு பகுதி மக்களும் அதிகமாக நீரை எதிர்பார்க்க, மாநிலங்களுக்கிடையே, ஒரே மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கிடையே என்று பிரச்னை நிலவுகிறது.

தண்ணீரை யாருமே கவனமாகச் செலவழிக்காததால் இன்று விவசாயம், குடிநீர் தேவை என்று அனைத்தும் கடுமையான தொல்லைக்கு ஆளாகியுள்ளது. நீர் இலவசமாகக் கிடைக்கிறது என்பதால் வீணாக்கப்படுகிறது. ஆனால் நீருக்குக் காசு என்றால் இது உலக வங்கியின் நரித்திட்டம் என்று திட்ட நாலாயிரம் பேர் வருகிறார்கள். எது இலவசமாகக் கொடுக்கப்படுகிறதோ அது வீணாக்கப்படுகிறது. வீடுகளுக்குக் கொடுக்கப்படும் தண்ணீர், விவசாயப் பாசனத்துக்கான தண்ணீர் - எதெல்லாம் குறைவாக உள்ளதோ, எதற்கு அடிதடி நடக்கிறதோ, அதற்கு ஒரு விலை இருக்கவேண்டும். அந்த விலை எவ்வளவு குறைவாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளலாம்.

அடுத்து என்ன, சுவாசிக்கும் காற்றுக்கு விலை வைக்க வேண்டுமா என்று கேட்டால், இப்பொழுதைக்குத் தேவையில்லை என்று சொல்லலாம். அவ்வளவு பற்றாக்குறை கிடையாது அங்கே.

நகரங்களில் வீடுகளுக்குக் கிடைக்கும் தண்ணீர் வீணாவதைத் தடுப்பது, விவசாயப் பகுதிகளுக்குத் தேவையான நீரை ஏரிகள், குளங்கள், கம்மாய்களில் சேர்த்து வைப்பது, நிலத்தடி நீர் அழிந்துவிடாமல், குறைந்துவிடாமல் காப்பது - இவை தொடர்பாக மத்திய அரசு சீரிய கொள்கை ஒன்றை வகுத்து, அதை அனைவரையும் ஏற்கச் செய்யவேண்டும். இல்லாவிட்டால் விவசாய நிலங்கள் இருந்தாலும், நல்ல விதை இருந்தாலும், மழை இல்லாத காலங்களில் தேவையான உணவை விளைவிக்க முடியாது.

(8) விதைகள், மரபியல் மாற்றங்கள்

மான்சாந்தோ போன்ற நிறுவனங்கள் மரபியல் மாற்றிய விதைகளை (Transgenic Seeds - Genetically Modifed Seeds - GM) உருவாக்கியுள்ளன. இயற்கையிலேயே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆனால் மாறுபட்ட இயல்புகளைக் கொண்ட தாவர வகைகளிடையே ஒட்டு ஏற்பட்டு புதுரகச் செடிகள் உருவாகி வந்துள்ளன. இதையே மனிதர்கள் கண்டறிந்து பல்வேறு ரகச் செடிகளை 'ஒட்டி' (அதாவது ஒன்றின் மகரந்தத்தை மற்றதன் பூவுடன் சேரச் செய்து) தமக்குத் தேவையான ரகங்களை உருவாக்கிவந்துள்ளனர். ஆனால் செயற்கை மரபியல் மாற்று என்பது விதைகளின் டி.என்.ஏவை மாற்றுவதன்மூலம் நடைபெறுகிறது. இத்தகைய மாற்றத்தால் விளைந்த பயிரை உட்கொள்வதால் அல்லது அணிவதால் மனிதனுக்கு எந்தவகையில் நன்மை, தீமை ஏற்படும் என்பது முற்றிலுமாகக் கண்டறியப்படாத ஒன்று.

ஆனாலும் சிலவகைத் தாவரங்களைத் தாக்கும் நோய்களைத் தடுக்க, விளைச்சலைப் பெருக்க, மரபியல் மாற்றம் செய்யப்பட்ட விதைகளைப் பயன்படுத்துகிறார்கள். பல நாடுகளில் மரபியல் மாற்றப்பட்ட உணவுப் பொருள்கள் விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மரபியல் மாற்றப்பட்ட பருத்தியைத் தடை செய்ததில்லை.

இந்தியாவின் விவசாயிகள் தற்கொலையில் மரபியல் மாற்றப்பட்ட பருத்தி பெரும்பங்கு வகிக்கிறது. இயற்கை பருத்தி விதைகள் மிகக்குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஆனால் மான்சாந்தோ போன்ற நிறுவனங்கள் பல கோடி டாலர்கள் செலவுசெய்த ஆராய்ச்சியின் விளைவாகக் கிடைக்கும் விதைகளை மிக அதிகமான விலைக்கு விற்கிறார்கள். அதன்மூலமாவது தங்கள் வாழ்க்கை வளம்பெறாதா என்று ஏங்கும் ஏழை விவசாயிகள் காசை அள்ளிக்கொடுத்து வாங்கினாலும் தண்ணீர் சரியாகக் கிடைக்காத காரணத்தாலும், GM விதைகள் எதிர்பார்த்த அளவுக்கு பூச்சிகளைத் தடுக்காத காரணத்தாலும் கடனில் மூழ்கி, வழிதெரியாது தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

GM விதைகள் தேவையா, அவை இல்லாமலேயே விளைச்சலைப் பெருக்க முடியாதா என்பதி நியாயமான கேள்வி. விளைச்சல் குறைந்திருப்பது ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகளை வகைதொகையின்றிப் பயன்படுத்தியிருப்பதால்தான் என்பது உண்மையானால் முதலில் அதைச் சரிசெய்யத்தான் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். GM விதைகள் மக்களை எப்படி பாதிக்கும் என்பதை முழுவதுமாக அறிவதற்கு முன்னால் அவற்றை இந்தியாவில் பயிரிடுவதைத் தடுக்கவேண்டும். ஆனால் இந்திய அரசு இந்த விஷயத்தில் கவனமாகவோ அக்கறையுடனோ நடந்துகொள்ளவில்லை.

பாரம்பரிய விவசாயத்தில், விவசாயிகள் சற்றே மாற்றுபட்ட வகைகள் பல்லாயிரக்கணக்காணவற்றைப் பயன்படுத்தி வந்தனர். நெல் என்றால் சில ஆயிரம் வகைகள் இருக்கும். வாழை என்றால் பல ஆயிரம் வகைகள் இருக்கும். Seed diversity. ஆனால் இப்பொழுது அனைவரும் 'high yield' என்று அதிக லாபம் தரும் ஒரே வகையை, அதுவும் அதிக விலைக்கு விற்கும் விதைகளை வாங்கிப் பயன்படுத்த, பிற விதைகள் அழிந்துபோகின்றன. அந்தத் தாவரங்களின் நற்குணங்களும் அழிந்துபோகின்றன. மீண்டும் அவை நமக்குத் திரும்பக் கிடைக்குமோ கிடைக்காதோ.

மான்சாந்தோ நிறுவனம் டெர்மினேட்டர் விதைகள் என்ற புதிய வகை விதைகளையும் அறிமுகப்படுத்த விழைகிறது. இயல்பான விவசாயத்தில், ஒரு விவசாயி பயிரிட்டபிறகு, விளைச்சலின்போது அடுத்த முறை பயிரிடத் தேவையான விதை நெல்லை விளைச்சலிலிருந்தே சேமித்து எடுத்து வைத்துக்கொள்வார். ஆனால் மான்சாந்தோ, கார்கில் போன்ற நிறுவனங்கள் ஒவ்வொருமுறையும் விவசாயி தங்களிடமிருந்தே விதைகளை வாங்கவேண்டும் என்று வற்புறுத்துகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் இதனை சட்டப்பூர்வமாக நிலைநாட்டுவது கடினம். (Piracy-யைத் தடுப்பதுபோலவே!) அங்குதான் டெர்மினேட்டர் நுட்பம் அவர்களுக்கு உதவும். இதுவும் மரபியல் மாற்றல் முறைதான். டெர்மினேட்டர் நுட்பம் புகுத்தப்பட்ட விதைகள் செடியாக வளரும்; காயோ கனியோ தானியமோ முளைக்கும். ஆனால் அதிலிருந்து கிடைக்கும் விதைகள் மேற்கொண்டு ஒரு செடியை வளரவைக்கும் திறனற்றவை!

ஆக, விவசாயிகள் நினைத்தாலும் விளைச்சலில் இருந்து அடுத்த போகம் விதைக்கத் தேவையான விதைகளைச் சேமிக்க முடியாது. மீண்டும் கார்கில், மான்சாந்தோவுக்குப் பணம் அழ வேண்டியதுதான்!

விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு என்று தேவை உள்ளது. இந்தியாவில் அரசு ஆராய்ச்சி மையங்கள், விவசாயப் பல்கலைக்கழகங்கள் ஆகியவை இதில் கவனம் செலுத்துகின்றன. ஆனால் கார்கில், மான்சாந்தோ போன்ற மாபெரும் நிறுவனங்கள் எதிர்பார்ப்பது இந்திய விவசாயிகளுக்கு ஏற்புடையதல்ல. உணவில் தன்னிறைவு அடையாத நமக்கு இது பெரும் நாசத்தை விளைவிக்கும்.

எனவே இந்தியாவைப் பொறுத்தமட்டில், மரபியல் மாற்றிய விதைகள், டெர்மினேட்டர் விதைகள் ஆகியவற்றை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.

(9) பிற பயிர்கள்

ஒர் ஏக்கரில் விளையும் உணவு விளைச்சலை அதிகப்படுத்தினால் தானாகவே பல்வேறு பிற பொருள்களை விளைவிக்க அதிகப்படியான இடங்கள் கிடைக்கும். பணப்பயிர்கள், பயோ டீசலுக்குத் தேவையான புங்கை, காட்டாமணக்கு ஆகியவற்றைப் பயிரிடலாம்.

அமெரிக்கா, தான் விளைவிக்கும் மக்காச் சோளத்தை எரிபொருளாக மாற்ற இருப்பதை கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ எதிர்த்திருக்கிறார். இதனால் உலகில் பலர் பட்டினி கிடப்பார்கள் என்கிறார். உலகில் உள்ளவர்கள் வயிறார உணவு சாப்பிட அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் கோதுமையும் சோளமும் விளைவிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. நேற்றைய எகனாமிக் டைம்ஸ், உலகின் கோதுமை உற்பத்தி இந்த ஆண்டு குறைந்துள்ளது என்றும் இந்தியா ஆஸ்திரேலியா, அமெரிக்கா நாடுகளின் விளைச்சலை எதிர்பார்த்துக் கையேந்தவேண்டியுள்ளது என்றும் எழுதியுள்ளது திகிலைத் தருகிறது.

இந்த நிலைக்கு நம்மை நாமே கொண்டுவந்துள்ளோம்.

(தொடரும்)

உணவு, விவசாயம், நெருக்கடி - 2

சென்ற பதிவின் தொடர்ச்சி.

(4) குறைந்தபட்சக் கொள்முதல் விலை

இந்திய விவசாயம் இப்பொழுது கடும் நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. விவசாயத்தில் வளர்ச்சி வெகு குறைவாக உள்ளது. ரசாயன உரங்களை மிக அதிகமாகப் பயன்படுத்தியதாலும் தண்ணீர் பற்றாக்குறையாலும் மண் மாசுபட்டு விளைச்சல் வெகுவாகக் குறைந்துள்ளது. பல விவசாயிகள் உணவுப் பயிர்களைவிடுத்து பணப்பயிர்களுக்கு மாறியுள்ளனர்.

பணப்பயிரிலும் பருத்தியில் பிரச்னை. பருத்தியைத் தாக்கும் புழு ஒன்றைத் தடுக்க, மான்சாந்தோ நிறுவனம், மரபணு மாற்றிய பருத்தி விதையை அறிமுகம் செய்தது. அந்தப் பருத்தியை வாங்கி நட்ட பல சிறு விவசாயிகள் (ஆந்திரா, மஹாராஷ்டிரா - முக்கியமாக விதர்பா பகுதி), சரியான தண்ணீர் கிடைக்காத காரணத்தாலும் எதிர்பாராத வகையில் பருத்தி சரியாக விளையாததாலும் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தப் பருத்தியும் பூச்சிகளைத் தடுத்து நிறுத்துவதில்லை என்று பல ஏழை விவசாயிகள் சொல்கின்றனர். ஆனால் தண்ணீர் அதிகமாகக் கிடைக்கும் இடங்களில் இந்தப் பருத்தி அதிக உற்பத்தியத் தருகிறது என்று பணக்கார விவசாயிகள் சொல்கிறார்கள்.

மொத்தத்தில் விதர்பா பகுதியில் பல நூறு ஏழை பருத்தி விவசாயிகள் கடன் தொல்லை தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த விவசாயிகள் அனைவரும் பருத்திக்கு முன்னர் உணவு தானியங்களைப் பயிர் செய்து வந்தவர்கள் என்பது முக்கியமானது.

உணவுப் பயிர்களுக்கு அரசு கொடுக்கும் கொள்முதல் விலை மிகவும் குறைவானது. வளர்ச்சிபெற்ற நாடுகளில் பயிரை விளைவிக்காமல் இருக்க (அதன்மூலம் பொதுச்சந்தையில் உணவு தானியத்தின் விலை அதிக விளைச்சலால் அதளபாதாளத்துக்கு வீழ்ந்துவிடாமல் இருக்க) கிடைக்கும் மானியம் எக்கச்சக்கம். ஆனால் இந்தியாவில் அரசு கொடுக்கும் மானியம் ரசாயன உரங்கள் வாங்குவதற்கு மட்டுமே. சில மாநிலங்கள் இலவச மின்சாரம் அளிக்கிறது.

ரசாயன உர மானியம், இலவச மின்சாரம் ஆகியவற்றுக்குப் பதிலாக அதிகக் கொள்முதல் விலையை அரசு கொடுத்தாலே போதுமானது. இதன்மூலம் subsistence farming என்ற நிலை வெகுவாக மாற வாய்ப்புகள் உள்ளது. ஓர் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். இப்பொழுது அரசு நிர்ணயித்திருக்கும் விலை கோதுமைக்கு ஒரு குவிண்டாலுக்கு (100 கிலோவுக்கு) ரூ. 850. 2001-ல் இதுவே ரூ. 610 ஆக இருந்தது. (நெல்லுக்கு இதைவிடக் குறைவுதான்!). சென்ற ஆண்டு குவிண்டாலுக்கு ரூ. 750 தான் இருந்தது. ஆனால் விவசாயிகள் தனியார் நிறுவனங்களுக்கு விற்கும்போது நிறைய வருமானம் பெற்றனர். இப்பொழுதுகூட வெளிச் சந்தையில் ரூ. 1000 முதல் ரூ. 1400 வரை குவிண்டாலுக்குக் கிடைக்கிறது!

இந்தக் குறைந்தபட்சக் கொள்முதல் விலையை தடாலடியாக 50% ஏற்றுகிறது (ரூ. 1150) என்று வைத்துக்கொள்ளுங்கள். மொத்த கோதுமை விளைச்சல் சுமார் 75 மில்லியன் டன்கள். அரசு இதிலிருந்து சுமார் 15 மில்லியன் டன்களைக் கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ளது.

அப்படியானால் அரசு அதிகமாகச் செய்யும் செலவு = ரூ. 4,500 கோடி

இதேபோல நெல் கொள்முதலுக்கும் 50% விலையை நேரடியாக உயர்த்தலாம். அரசுகள் செய்யும் வீண் செலவைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் மேற்கொண்டு ரூ. 10,000 கோடி என்பது ஒன்றுமே கிடையாது.

விவசாயிகளுக்கு அதிகமாகப் பணம் கொடுப்பதால் மின்சாரத்துக்கான மானியத்தை நிறுத்தலாம். வெளிச் சந்தை விலையும் அதிகமாகும்.

இதனால் ரேஷன் கடையில் பொருள் வாங்குபவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். அவர்களுக்கு ரூ. 2 அல்லது 3 ஒரு கிலோ என்று தானியங்களை விற்கலாம். அதே சமயம் விவசாயிகளுக்கும் ஊக்கத்தொகை கிடைக்கும். தானியங்களைப் பயிர் செய்வது உபயோகமானது, அதிக வருமானம் தரக்கூடியது என்று பல விவசாயிகளும் பணப்பயிர்களை விட்டுவிட்டு மீண்டும் தானிய உற்பத்திக்கு வருவார்கள்.

(5) ஆர்கானிக் ஃபார்மிங் - இயற்கை விவசாயம்

இந்தியாவின் 1970களின் பசுமைப் புரட்சிக்கு மெக்சிகோவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒட்டுரக விதைகள், ரசாயன உரம், எக்கச்சக்கமான தண்ணீர் ஆகியவை காரணமாகக் காட்டப்பட்டன. இவை உணவு வளர்ச்சியை அதிகப்படுத்தினாலும் இப்பொழுது கடும் நெருக்கடிக்கு விவசாயிகளையும் பொதுமக்களையும் ஆளாக்கியிருக்கின்றன. தண்ணீர் வளங்கள் குறைவு. ரசாயன உரம் மண்ணைப் பாழ்படுத்திவிட்டது. பூச்சிமருந்துகளை மீறி கெட்ட பூச்சிகள் வளர்ந்து பயிர்களை அழிக்கின்றன. அதனால் அரசு ஆதரவு ஏதுமின்றி பல விவசாயிகள் ஆர்கானிக் ஃபார்மிங் - இயற்கை வேளாண்மை என்ற பாரம்பரிய வேளான்முறைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

ரசாயன உரங்கள் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் உப பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அதனால் எக்கச்சக்கமாக விலையேறியுள்ளன. மேலும் இதன் நச்சுத்தன்மை உலகில் அனைவரும் அறிந்ததே. ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் ஒரேயடியாக ஒழிக்கமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால் நான் பேசிய சில விவசாய வல்லுனர்கள் 'முடியும்' என்கிறார்கள். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் இல்லாமலேயே, பாரம்பரிய முறைப்படியான விவசாயம்மூலமாக விளைபொருள்களை அதிகமாக்கமுடியும் - sustained farming is possible என்கிறார்கள்.

அப்படியானால் நாம் அதை நோக்கித்தான் போகவேண்டும்.

இதன்மூலம் விவசாயிகள் செய்யும் செலவு குறைவாக இருக்கும். அதனால் அவர்கள் கையில் தங்கும் பணம் அதிகமாக இருக்கும்.

(6) நிலச் சீர்திருத்தம்

நிலச் சீர்திருத்தம் என்றாலே அதிகம் இருப்பவர்களிடமிருந்து பிரித்து துண்டு துண்டாக்கி ஏழைகளுக்குக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. ஆனால் துண்டு துண்டான நிலங்களின் வரப்புகளுக்கு என்று போகும் இடம் அதிகம். ஒவ்வொருவருக்கும் பாசன வசதி செய்து தரவேண்டிய நிலைமை. ஆளாளுக்கு ஆழ்குழாய்க் கிணறுகள் (இது மிக மோசமாகத் தண்ணீர் ஆதாரத்தைப் பாதிக்கும் என்று இப்பொழுது மக்கள் அறிந்துள்ளனர் என்றபோதிலும்...) தோண்டவேண்டும்.

இதற்குபதில் கூட்டுறவு முறையைக் கொண்டுவருதல் அவசியம். பெரு நிலக்கிழார்களிடமிருந்து நிலங்களை அரசு திரும்பிப் பெறுதல் அவசியம். ஆனால் அவ்வாறு பெற்ற நிலத்தை ஆளுக்கு 2 ஏக்கர் என்று துண்டாக்கித் தராமல் 20-30 ஏக்கர்களாகவே வைத்திருந்து 10 குடும்பங்களுக்கு என்று சேர்த்துத் தரவேண்டும். அந்தப் பத்து குடும்பங்களும் சேர்ந்தே விளைவிப்பத்தை மேற்கொள்ளவேண்டும் என்று செய்யவேண்டும். நிலத்தை அரசே வைத்துக்கொண்டு, உழுவதற்கான முழு உரிமையையும் அதிலிருந்து கிடைக்கும் விளைச்சலை முழுமையாக அனுபவிக்கும் உரிமையையும் மக்களுக்குக் கொடுக்கவேண்டும். அந்த நிலத்தை வேறு யாருக்கும் விற்கும் உரிமை அதில் உழுபவர்களுக்கு இருக்கக்கூடாது. அவர்கள் அந்த நிலத்தில் உழும், அனுபவிக்கும் உரிமையை பிறருக்கு மாற்றி எழுதித்தருமாறு (ஒரு விலையைப் பெற்றுக்கொண்டு) வேண்டுமானால் கொடுக்கலாம். இதன்மூலம் நிலம் துண்டு துண்டாகாமல் தடுக்கலாம்.

(இது புதிதாக நிலம் துண்டாக்கப்படுவதைத் தடுக்கவே. பழைய, துண்டாகிய சிறு நிலங்களை ஏதாவது வழியில் சேர்த்து - economies of scale - கொண்டுவரவேண்டும்.)

இதன்மூலம் விளைச்சலைப் பெருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் மக்களுக்கு இடையேயான உறவுகள், சண்டைகள், சச்சரவுகள், அவற்றைத் தீர்க்கும் முறைகள், விளைச்சல் குறைவாக இருக்கும்போது எவ்வாறு அதைப் பகிர்ந்துகொள்வது போன்ற பல விஷயங்கள் பிரச்னைக்குரியதாக இருக்கும். இதை எவ்வாறு எதிர்கொள்வது என்று நான் யோசிக்கவில்லை.

(தொடரும்)

உணவு, விவசாயம், நெருக்கடி - 1

SEZ, விவசாய நிலங்களைக் கையகப்படுத்தல், தண்ணீர், விவசாயிகள் தற்கொலை... போன்ற பல பிரச்னைகளை நம் நாடு தினம்தினம் சந்தித்துவருகிறது.

(1) ஒரு தனி மனிதன் உட்கொள்ளவேண்டிய உணவில் பெரும்பகுதி, அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு போன்ற உணவு தானியமாக உள்ளது. அத்துடன் சமச்சீரான சத்துக்காக பருப்பு, பால், காய்கறிகள், பழங்கள், இறைச்சி, மீன், முட்டை போன்ற பிறவும் சேர்க்கப்படவேண்டும். ஓர் ஆண்டுக்கு சராசரியாக உணவு தானியமாகவே ஒரு மனிதன் உண்ணவேண்டியது 200 கிலோ என்கிறார்கள். சில நிபுணர்கள் இதற்கும் மேல் இருக்கவேண்டும் என்றும் சொல்கிறார்கள். இப்பொழுதைக்கு 200 கிலோ என்றே வைத்துக்கொள்வோம்.

ஓர் ஆண்டுக்கு, ஒரு மனிதனுக்குத் தேவை குறைந்தது 200 கிலோ உணவு தானியங்கள்.

(2) இந்தியாவின் மக்கள்தொகை 108 கோடியைத் தாண்டிவிட்டது. மேலும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இப்படியே 2050-ல், இந்திய மக்கள்தொகை 160 கோடியைத் தாண்டும் என்றும் அதற்குப்பிறகு மீண்டும் கீழே இறங்குமமென்றும் சொல்கிறார்கள்!

இப்பொழுதுள்ள நிலையிலேயே இந்தியாவுக்குத் தேவையான உணவு தானியங்கள், ஆண்டுக்கு 108 * 200 கோடி கிலோ = 216 மில்லியன் மெட்ரிக் டன்.

இந்த உணவு தானியம் என்பது கடைசியில் மனிதர்கள் உட்கொள்ள வேண்டியது. விளைச்சலிலிருந்து 10 முதல் 15 சதவிகிதம் தானியம் வீணாகிப்போகும் என்று விவசாய நிபுணர்கள் கணிக்கிறார்கள். சேமித்து வைக்கும்போது எலி தின்பதிலிருந்து, புழுத்துப்போவதிலிருந்து, வழியில் கொட்டி நாசமாகிப்போவதிலிருந்து, தண்ணீர், தீ ஆகியவற்றால் அழிந்துபோவது என்று பல பிரச்னைகள். இந்த சதவிகிதத்தைக் குறைக்க முடியும். ஆனாலும் குறைந்தது 10% உணவு தானியம் வீணாகும் என்று வைப்போம்.

இப்பொழுது, ஆடு, மாடு, பன்றி போன்ற வளர்ப்பு மிருகங்கள் தின்பதற்குத் தேவையான தானியங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்வோம்! அப்படிப் பார்த்தால் நமக்குத் தேவையான விளைச்சல் இப்பொழுதைக்கு, குறைந்தபட்சம் 250-270 மெட்ரிக் டன்கள்.

இப்படியான விளைச்சல் இருந்தாலும்கூட கடைசி 25% மக்களுக்கு உணவு முழுமையாகச் செல்ல அரசு இலவசங்களையும் மானியங்களையும் அளிக்க வேண்டும்.

(3) சரி, இந்தியாவில் கடந்த சில வருடங்களில் விளைச்சல் எப்படி உள்ளது? இந்தத் தகவல் இந்திய அரசின் விவசாய அமைச்சகத்தின் இணையத்தளத்திலிருந்து எடுத்து படமாக வரையப்பட்டுள்ளது. இங்கு தானியம் என்பது அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு, சோளம், பார்லி, தினை, பருப்புகள் (துவரை, கடலை) ஆகிய அனைத்தையும் சேர்த்தது!


கடந்த 6-7 ஆண்டுகளில் விளைச்சல் 200 மில்லியன் டன்களைச் சுற்றியே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. 1990-ல் 170 மில்லியன் டன் என்று இருந்துள்ளது. ஆனால் 'பசுமைப் புரட்சி' என்று சொல்லப்பட்ட 1970-களிலும் இந்தியாவின் தானிய உற்பத்தி 170 மில்லியன் டன்களாகவே இருந்தது.

இன்றைய நிலையில் இந்தியாவின் உணவு உற்பத்தி இந்தியர்களின் தேவையைவிடக் குறைவாகவே உள்ளது.

(தொடரும்)

அறுபத்து மூவர் 2007

இன்று தமிழகம் முழுவதுமான கடையடைப்பு. ஆனாலும் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலின் அறுபத்து மூவர் உற்சவத்தில் கூட்டம் பொங்கி வழிந்தது. தெற்கு மாட வீதியில் எடுத்த படம் இது:

Crowd during 63-var


எல்லா வருடங்களைப் போலத்தான் இந்த வருடமும். இந்தக் காளி வாகனம் புதுமையாக இருந்தது. சென்ற வருடங்களில் இதைப் பார்த்த ஞாபகம் இல்லை.

Brilliant Kali


நேற்று தேர் புறப்பாடு இருந்தது.

Temple Ther (car)


2005-ம் ஆண்டு பதிவு
அறுபத்து மூவர் விழா பற்றி ஹரி கிருஷ்ணன்

Tuesday, March 27, 2007

சில்லறை வர்த்தகம்

ரிலையன்ஸ் ஃப்ரெஷ் என்ற பெயரில் காய்கறிகள், மளிகை சாமான்கள் விற்பனை செய்யும் சங்கிலிக் கடைகளை சென்னையில் ரிலையன்ஸ் ரீடெய்ல் தொடங்கியுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினரிடையே கடுமையான எதிர்ப்பு தோன்றியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் ஆரம்பம் முதற்கொண்டே ரிலையன்ஸை எதிர்த்தார். அடுத்து அஇஅதிமுக, விஜயகாந்தின் தேமுதிக ஆகிய கட்சிகளும் எதிர்த்து அறிக்கை விடுத்துள்ளன. திமுக இதுவரை அதிகாரபூர்வமாக எதையும் சொல்லவில்லை. இடதுசாரிகள், புரட்சிகரக் கூட்டமைப்புகள், கோயம்பேடு வணிகர் சங்கங்கள், சில்லறை வணிகர்கள் கூட்டமைப்புகள் ஆகியவை ரிலையன்ஸும் பிற பெரு நிறுவனங்களும் சில்லறை வணிகத்தில் நுழைவதை எதிர்க்கின்றன.

சில உண்ணாவிரதங்கள், நாள் முழுவதுமான கடையடைப்புகள் இதுவரை நடந்துள்ளன.

-*-

ரிலையன்ஸ் நிறுவனம், 'ரிலையன்ஸ் ஃபிரெஷ்' என்ற பெயரில் அக்டோபர் 2006-ல், ஹைதராபாதில் 11 கடைகளுடன் முதலில் ஆரம்பித்தனர். ஆனால் இதற்குச் சில மாதங்கள் முன்னதாகவே வேறு ரூபத்தில் வெள்ளோட்டம் விட்டனர். மஹாராஷ்டிரத்தில் சஹகாரி பண்டார் என்ற பெயரில் இயங்கி வந்த கூட்டுறவு விற்பனைக் கடைகள் பொலிவிழந்து திண்டாடிக் கொண்டிருந்தன. 1968-ல் ஆரம்பித்து நடந்துகொண்டிருந்த சுமார் 23 சில்லறை விற்பனைக் கடைகளை, மே 2006 முதல் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் நடத்த ஆரம்பித்தது. முழுமையாக வாங்கிவிடவில்லை; ஆனால் இந்தக் கடைகளுக்கான பொருள் கொள்முதல், விற்பனை ஆகியவற்றை ரிலையன்ஸ் கவனித்துக் கொள்கிறது.

இதற்கு அடுத்துதான் ஹைதராபாதில் சொந்தமாகக் கடைகள் தோன்றின. பின் நாட்டின் பல பாகங்களிலும் மேற்கொண்டு கடைகளை ஆரம்பித்துள்ளனர். டிசம்பர் 2006-ல், ரிலையன்ஸ் ரீடெய்ல், குஜராத்தின் ஆதானி ரீடெய்ல் என்ற நிறுவனத்தை சுமார் ரூ. 100 கோடிக்கு விலைக்கு வாங்கியது. அத்துடன் குஜராத் முழுவதுமாக 54 சில்லறை விற்பனைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்கள் ஆகியவை ரிலையன்ஸ் ரீடெய்லுக்குக் கிடைத்தன.

சில்லறை விற்பனை இந்தியாவில் வெகு காலமாகச் சின்னச் சின்ன நிறுவனங்களாகவே இருந்துள்ளது. தனித்தனிக் கடைகள் (Mom & Pop stores) - அண்ணாச்சி கடை, நாடார் கடை என்று தமிழகத்தில் அறியப்படுபவை - தெருவில் பல இடங்களில் உள்ளன. இங்கு பெரும்பாலும் மளிகை சாமான்கள் (அரிசி, பருப்பு, எண்ணெய், வெல்லம், வற்றல் மிளகாய், சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்...), பிஸ்கட், பிரெட் முதலான பல FMCG உணவுகள் கிடைக்கின்றன. காய்கறிகள், பழங்கள் ஆகியவை கொத்தவால் சாவடி, கோயம்பேடு மார்க்கெட் போன்ற இடங்களில் மொத்த விற்பனைக்கும், தெருவில் பல இடங்களில் சில்லறை விற்பனைக்கும் கிடைக்கின்றன.

ஆனால் கிட்டத்தட்ட 20 வருடங்களாகவே இந்தத் துறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குளிர்சாதன வசதி கொண்ட, டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள் என்ற பெயர் கொண்ட கடைகள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தோன்ற ஆரம்பித்தன. பழைய தாளில் மடித்துக்கொடுக்கப்பட்ட சீனியும் ரவாவும் பாலிதீன் பாக்கெட்களில் அடைக்கப்பட்டுக் கிடைத்தன. வாசலில் நின்றுகொண்டு கேட்டுவாங்கி அக்கவுண்ட் வைத்ததுபோய் உள்ளே நுழைந்து சிறு பிளாஸ்டிக் கூடையில் வேண்டிய சாமான்களை அள்ளி எடுத்துக்கொண்டு வந்து, பில் போட்டு வாங்கிச் செல்வது நடந்துகொண்டுதான் இருந்தது.

அடுத்து ஓரளவுக்குப் பெரிய நிறுவனங்கள் 1990களில் இந்தத் துறையில் நுழைந்தன. நீல்கிரீஸ், சுபிக்ஷா, புட்வேர்ல்ட் (ஸ்பென்சர்ஸ் டெய்லி), திரிநேத்ரா போன்ற பல தொடர் சங்கிலிக் கடைகள் மளிகை சாமான், காய்கறி, மருந்து ஆகியவற்றை சில்லறை விற்பனை செய்துவருகின்றன.

-*-

ரிலையன்ஸுக்கு என்று ஸ்பெஷலாக யாரும் தனி அனுமதி கொடுத்துவிடவில்லை. ஏற்கெனவே பல நிறுவனங்கள் செய்துவரும் ஆர்கனைஸ்ட் ரீடெய்லைத்தான் அவர்கள் செய்ய வருகிறார்கள். ஆனால் பிரம்மாண்டமாகச் செய்யப் போவதாகச் சொல்கிறார்கள். அதையும் கடந்த இரண்டு வருடங்களாகவே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். திடீரென்று மறைமுகமாக எதையும் செய்துவிடவில்லை. ரிலையன்ஸ் மொபைல் துறையில் நுழைந்ததிலாவது சில 'தில்லுமுல்லுகள்' இருந்தன. ஆனால் ரீடெய்ல் துறையில் நியாயமாக, நேரடியாகத்தான் நுழைந்துள்ளனர்.

ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதைத் தடை செய்வது சாத்தியமில்லாதது. சட்டத்துக்கு உட்பட்டுத்தான் நடக்கிறது.

ரிலையன்ஸ் ரீடெய்ல் துறைக்கு வந்தால் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்? நிச்சயமாக வாடிக்கையாளர்களுக்கு லாபம்தான். அதே நேரம் பல சில்லறை வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதும் உண்மைதான்.

ரிலையன்ஸ் ரீடெய்லை எதிர்ப்பவர்கள் வால்மார்ட், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு ஆகியவற்றையும் சேர்த்துக் குழப்புகிறார்கள். இவற்றைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கவேண்டும்.

-*-

ரிலையன்ஸின் சில்லறை வியாபாரத்தை எதிர்ப்பவர்கள் இவ்வாறு சொல்கிறார்கள்: "இன்று வாடிக்கையாளருக்கு விலை குறைவாகக் கிடைப்பதாகத் தோன்றினாலும், நாளைக்கு விலை ஏறும். சிறு வியாபாரிகள் நசிந்தபிறகு, வியாபாரம் அனைத்துமே நான்கைந்து பெருமுதலைகளிடம் மட்டுமே இருக்கும். அப்பொழுது அவர்கள் வைத்ததுதான் சட்டம். விவசாயிகளுக்கும் சரியாகப் பணம் போகாது; நுகர்வோருக்கும் விலை அதிகமாக இருக்கும்."

இது ஏற்றுக்கொள்ளமுடியாத வாதம். இந்த ஒலிகோபொலி (Oligopoly) என்பது சரியாக இயங்கும் சந்தையில் சாத்தியமில்லாதது. இந்தியச் சந்தை விரிவாக விரிவாக, இதுபோன்ற பிரச்னைகள் குறைந்துகொண்டே வரும். இப்பொழுதேகூட எடுத்துக்கொள்ளுங்கள்... எந்தத் துறையில் இன்று இந்தியாவில் இதுபோன்ற ஒலிகோபொலி நிலவி வருகிறது?

கஷ்டப்பட்டுத் தேடினாலும் சிமெண்டைத் தவிர வேறு எந்த உதாரணமும் கிடைக்காது. பட்ஜெட்டுக்குப் பிறகு சிமெண்ட் நிறுவனங்கள் ஒன்றுசேர்ந்து விலையை உயர்த்தின. அதற்கு அவர்கள் காட்டும் காரணமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. சிமெண்ட், சர்க்கரை போன்றவை சுழற்சிப் பொருள்கள். தொடர்ந்து சில வருடங்கள் நல்ல லாபம் சம்பாதிக்கும். அப்பொழுது உற்பத்தியைக் கூட்டுவார்கள். அதனால் சரக்கு ஏராளமாக இருக்கும். அதனால் விலை குறையத் தொடங்கும். அதைத் தொடர்ந்து இந்த நிறுவனங்கள் நஷ்டத்துக்குப் போகும். பிறகு இதுவே மீண்டும் தொடரும்.

இப்பொழுது சர்க்கரைக்கு இறங்குமுகம். சிமெண்டுக்கு ஏறுமுகம். கட்டுமானத்துறை எக்கச்சக்கமாக வளர்ச்சி காணும் நேரம் இது. சிமெண்ட் நிறுவனங்கள் கடந்த இரண்டு வருடமாகத்தான் லாபம் காணும் நிலையில் உள்ளனர்.

பிற எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் போட்டி என்பது விலையைக் குறைத்துக்கொண்டேதான் வந்துள்ளது. தொலைத்தொடர்பு, கணினி, தொலைக்காட்சிப் பெட்டிகள் என்று எல்லாமே இந்த வகையைச் சேர்ந்தவை. இந்தத் துறைகளில் நான்கு, ஐந்து பெரிய நிறுவனங்கள் மட்டும்தான் உள்ளன.

மேலும் இதுபோன்ற தொழில்துறைகள் அல்லாத விளைபொருள் விற்பனையில் ஒலிகோபொலி செயல்படவே முடியாது. ஏனெனில் இங்கு தொழிலில் நுழைவதற்கான தடுப்பு (entry barrier) பெரிய அளவில் கிடையாது.

மேலும் எதிர்ப்பாளர்கள் இவ்வாறு சொல்கிறார்கள்: "சிறு சில்லறை வியாபாரிகளது தொழில் நசித்துவிடும். அவர்கள் தெருவுக்கு வந்துவிடுவார்கள். இதை நம்பி வேலை செய்யும் பல லட்சம் (அல்லது கோடி) மக்கள் வாழ்வு நாசமாகிவிடும்."

இதை ஓரளவுக்குத்தான் ஏற்றுக்கொள்ள முடியும். பவர்லூம் வந்தவுடன் கையால் நூல் நூற்பவர்கள் செய்துவந்த தொழில் நசிவுற்றது. பல குடிசைத்தொழில்கள் இயந்திரமயமாக்கலின்போது அடிவாங்கின. ஆனால் இயந்திரமயமாக்கல் அவசியம் என்பதை மார்க்சிஸ்டுகளும்கூட ஏற்றுக்கொள்கின்றனர். (அதன்வழியேதான் புத்தொளிபெற்ற தொழிலாளர் வர்க்கம் உருவாகி, நாளை ஆட்சியைக் கைப்பற்றப் போகிறார்கள்.)

முதல் கேள்வி - விவசாயிகள் பாதிக்கப்படுவார்களா? இல்லை என்றே தோன்றுகிறது. விவசாயத்தில் நிறைய முதலீடு வேண்டும். விளைபொருள்களைச் சேர்த்துவைக்க குளிர்பதனச் சாலைகள் வேண்டும். விவசாயிக்கு, விற்ற பொருள்களுக்கு உடனடியாகப் பணம் வேண்டும். இதெல்லாம் ரிலையன்ஸ் போன்றவர்கள் சில்லறை வியாபாரத்தில் வருவதால் ஏற்படும் என்று தோன்றுகிறது. ஏற்கெனவே ஐ.டி.சி போன்ற நிறுவனங்கள் பொருள்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் ஈ-சவுபால் போன்ற வழியாக விவசாயிகளுக்கு நல்ல வருமானம் வருகிறது.

பொருள்களை அரசிடம் விற்கும்போதுதான் எப்பொழுது பணம் கைக்கு வரும் என்று திண்டாடவேண்டியுள்ளது. தமிழகத்தில் அரசுக்கு நெல் விற்கும் விவசாயிகளிடம் கேட்டு இதனை உறுதி செய்துகொள்ளலாம். அதேபோல தமிழக அரசு பட்ஜெட்டில் குளிர்பதனக் கிடங்குகளுக்கு என்று பெயரளவில் ஏதோ பணத்தைக் காட்டுகிறதேதவிர, நிஜத்தில் நடப்பது ஒன்றும் கிடையாது.

ஏற்கெனவே சில்லறை வணிகத்தில் ஈடுபடும் பலர் தொழிலில் நசிக்கக்கூடும். ஒரு ரிலையன்ஸ் ஃபிரெஷ் கடைக்கு அருகில் இருக்கும் பத்து பெட்டிக்கடைகள் அடிவாங்கலாம். இதை எதிர்கொள்வது எளிதல்ல. பெட்டிக்கடைகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு பெரிய நிறுவனத்தின் ஃபிராஞ்சைஸி ஆகலாம்.

சில துறைகளில் மாற்றங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். அந்த மாற்றங்களை எதிர்ப்பதைவிட மாற்றங்களுக்குத் தக்கவாறு மாறிக்கொள்வதுதான் தேவை.

வாடிக்கையாளரைப் பொருத்தவரை பிரச்னைகள் ஏதும் இருக்காது என்றே நினைக்கிறேன். பெரு நிறுவனங்களுக்கிடையேயான போட்டியில் விலைகளில் ஏற்றம் இருக்காது. சேவையில் சிறப்பான, விரும்பத்தக்க மாற்றம் இருக்கும்.

-*-

அந்நிய முதலீடு தேவையா, கூடாதா? சில்லறை விற்பனையிலோ, வேறு எந்தத் துறையிலோ அந்நிய முதலீட்டை எதிர்க்கக்கூடாது என்பதே என் கருத்து. ஆனால் தேவையான safeguards இருக்குமாறு செய்யவேண்டும். வால்மார்ட் அனைவரும் வெறுக்கும் ஒரு நிறுவனமாக இன்று உள்ளது! அமெரிக்காவிலேயே பல செனட்டர்கள் வால்மார்ட்டின் கொள்கைகளை, செயல்பாட்டை எதிர்க்கிறார்கள். அமெரிக்காவில் வால்மார்ட் அடிமட்ட ஊதியம் கொடுக்கிறார்கள்; அதிக நேரம் வேலை வாங்குகிறார்கள்; பொருள்களைக் கொள்முதல் செய்யும் நாடுகளில் வேலை செய்யும் ஊழியர்கள் மிகக் கொடுமையான நிலையில் நடத்தப்படுகிறார்கள் போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.

வால்மார்ட் இந்தியாவுக்கு வந்தால் அதே முறையைக் கையாள்வார்களா இல்லையா என்பதை அரசுதான் எதிர்கொள்ளவேண்டும். ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தபட்ச ஊதியம், சரியான வேலை நேரம், வேலைக்கேற்ற வசதிகள் ஆகியவற்றைச் செய்துதருமாறு வற்புறுத்தவும், தவறிழைக்கும் நிறுவனங்களைத் தண்டிக்கவும் அரசுக்கு அதிகாரம் உண்டு.

ஆனால் அதற்காக வளரும் துறை ஒன்றில் அந்நிய முதலீடு தேவையில்லை என்று சொல்லக்கூடாது.

கிரிக்கெட்: யாருக்கு எவ்வளவு இழப்பு?

இந்தியா உலகக்கோப்பையின் முதல் சுற்றில் படுதோல்வி அடைந்து வெளியேறியதும் யார் யாருக்கு எவ்வளவு பணம் இழப்பு என்று சில (தவறான) ஹேஷ்யங்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் பொருளாதாரம் பற்றிப் புரிந்துகொள்ள சில குறிப்புகள்.

உலகக்கோப்பையைப் பொருத்தமட்டில் முதன்மை உரிமையாளர் ஐசிசி. ஐசிசி கீழ்க்கண்ட வகைகளில் பணத்தைப் பெறுகிறது:
1. தொலைக்காட்சி, வானொலி, இணைய ஒலி/ஒளிபரப்பு உரிமம்
2. ஸ்பான்சர்ஷிப் ('நிகழ்ச்சி வழங்குவோர்' உரிமம்)
3. அதிகாரபூர்வ சப்ளையர் (பொருள் வழங்குனர்) உரிமம்
4. விளையாட்டு அரங்கில் விளம்பரம்
5. பார்வையாளர் அனுமதிச் சீட்டு (இந்த வருமானம் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்துக்குச் செல்லும்)
6. வேறு சில மிகக்குறைவான வருமான வாய்ப்புகள்

மிக அதிகமான வருமானம் தொலைக்காட்சி, வானொலி, இணைய ஒலி/ஒளிபரப்பு உரிமத்தை விற்பதால் வருவது. இதனையும் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தையும் 8 ஆண்டுகளுக்கு முன்னரே ஐசிசி குளோபல் கிரிக்கெட் கார்பொரேஷன் (ஜிசிசி) என்ற நிறுவனத்துக்கு விற்று, பணத்தைப் பெற்றுக்கொண்டது. இந்த ஜிசிசி என்ற நிறுவனம் வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப் (WSG) மற்றும் ரூபர்ட் மர்டாக்கின் நியூஸ் கார்பொரேஷன் ஆகியவை இணைந்து உருவாக்கியது. WSG இதற்கிடையில் திவாலாகிவிட்டது. ஆனால் மர்டாக் ஏற்கெனவே பணத்தைப் போட்டிருந்ததால் ஜிசிசி தாங்கி நின்றது.

ஜிசிசி தான் பெற்ற தொலைக்காட்சி உரிமத்தை வெட்டி, துண்டுகளாக்கி பலருக்கும் விற்றதில் பெரும்பங்கு இந்தியாவின் சோனி தொலைக்காட்சி நிறுவனத்திடமிருந்து வந்தது. அத்துடன் ஸ்பான்சர்ஷிப் வாங்கிய நான்கு பெரும் நிறுவனங்கள் - பெப்சி, எல்.ஜி, ஹீரோ ஹோண்டா, ஹட்ச் ஆகியவை இந்திய நிறுவனங்கள். இவை அனைத்துமே இந்தியா ஓரளவுக்கு நன்றாக விளையாடினால்தான் போட்ட பணத்தின் அளவுக்கு நன்மையைப் பெறும்.

தென்னாப்பிரிக்காவில் நடந்த உலக்கோப்பையின்போது இந்தியா இறுதி ஆட்டம் வரை வந்ததால் இந்த ஸ்பான்சர்களுக்கும் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் நல்ல அறுவடைதான். இந்தியா கோப்பையை வென்றிருந்தால் எங்கேயோ போயிருப்பார்கள். ஆனால் இந்த முறை இந்தியா முதல் சுற்றில் அடிவாங்கியதால் பாதிக்கப்படுவது அத்தனை ஸ்பான்சர்களும்.

ஐசிசிக்கான காசு ஜிசிசியிடமிருந்து வந்துவிட்டது. ஜிசிசிக்கான காசு பெரும்பாலும் சோனி, ஸ்பான்சர்கள், பிற நாட்டுத் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆகியோரிடமிருந்து வந்துவிட்டது.

அடுத்து இந்தியாவின் சோனி தொலைக்காட்சி. சோனி பெற்றது இரண்டு உலகக்கோப்பைகள், நான்கு ஐசிசி சாம்பியன்ஷிப் ஆட்டங்கள். இதில் பெரும்பான்மை வருமானம் உலகக்கோப்பையின்போது வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தென்னாப்பிரிக்க உலகக்கோப்பையின்போது எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே வருமானம் வந்திருக்கும்.

தொலைக்காட்சி நிறுவனம் மூன்று வகைகளில் வருமானத்தைப் பெறுகிறது:
1. ஒளிபரப்பை வழங்கும் ஸ்பான்சர்கள்
2. தனித்தனியாக ஸ்பாட் வாங்கும் விளம்பரதாரர்கள்
3. சொந்தச் சானலின் நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்தி அதற்குக் கிடைக்கும் அதிகமான பார்வையாளர்கள்மூலம் பெறும் அதிகமான வருமானம் (House ads)

நான்கு அல்லது ஐந்து நிறுவனங்கள்/பிராண்ட்கள் ஒளிபரப்பை வழங்கும் ஸ்பான்சர்களாக வருவார்கள். (This cricket broadcast is brought to you by....). பெரும்பாலும் இவர்கள் உலகக்கோப்பை ஸ்பான்சர்களாக இருப்பார்கள்; ஆனால் அப்படித்தான் இருக்கவேண்டும் என்றும் இல்லை. சோனி முதலில் ஹீரோ ஹோண்டாவிடம் செல்ல வேண்டும். அவர்கள் ஸ்பான்சர்ஷிப்பை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் அடுத்து டிவிஎஸ் நிறுவனத்திடம் செல்லலாம். அப்படித்தால் ஐசிசியின் ஆம்புஷ் மார்க்கெட்டிங் கொள்கை கூறுகிறது. அதைப்போலவே சோனி முதலில் பெப்சியிடம் பேசவேண்டும். ஒத்துவராவிட்டால்தான் கோக் நிறுவனத்துக்குப் போய் பேசலாம்.

இந்த வகையில் ஸ்பான்சர்களை சோனி ஏற்கெனவே முடிவு செய்திருக்கும். ஒவ்வொரு ஸ்பான்சரும் இத்தனை பணம் கொடுப்பது என்று உலகக்கோப்பை ஆரம்பிக்கும் முன்னதாகவே முடிவுசெய்து ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டிருப்பார்கள்.

ஆனால் அதைத்தவிர தனித்தனியாக 10 விநாடி ஸ்பாட் (ஓவருக்கி இடையில் இப்பொழுதெல்லாம் இரண்டு ஸ்பாட்கள் வருகின்றன) பல இருக்கும். இதில் பெரும்பாதி ஸ்பான்சர்களுக்கு என்று கொடுக்கப்பட்டிருக்கும். இதுபோக மீதம் உள்ளதை யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம். ஒரு 10 செகண்ட் ஸ்பாட் கிட்டத்தட்ட ரூ. 1.5 லட்சம் வரை போவதாகச் சொன்னார்கள். ஆனால் இந்தியா வெளியேறியதால் இதே 10 செகண்ட் ஸ்பாட் ரூ. 15,000 வரை விழுந்துவிடும்.

எனவே மீதம் உள்ள ஸ்பாட்கள் அனைத்தும் சீந்துவாரின்றிப் போக நேரிடும்.

அதைத்தவிர ஏற்கெனவே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிறுவனங்கள் பின்வாங்க விரும்பும். சட்டபூர்வமாக அதைச் செய்யமுடியாது என்றாலும் மீண்டும் மீண்டும் இதே நிறுவனங்களையே தொலைக்காட்சி சானல்கள் நம்பியிருப்பதால் இருவருக்கும் சமரசம் ஏற்படும். ஸ்பான்சர்களுக்கு அதிகமாக வேறு ஏதாவது செய்துகொடுக்கவேண்டும். இது ஒருவகையில் தொலைக்காட்சி சானலுக்கு நஷ்டம்தான்.

எனவே முதல் அடி சோனி தொலைக்காட்சி சானலுக்கு. அதேபோல அடி தூரதர்ஷனுக்கும் உண்டு. தூரதர்ஷனின் லாபமும் குறைவு, எனவே நஷ்டமும் குறைவுதான். ஜிசிசியிடமிருந்து தூரதர்ஷனுக்கான உரிமையை வாங்கி நடத்துவது, விளம்பரங்களைப் பெறுவது நிம்பஸ். எனவே நிம்பஸுக்கும் பண நஷ்டம் கொஞ்சம் இருக்கும்.

சோனியின் இழப்பு: சுமார் ரூ. 100 கோடி
தூரதர்ஷன் + நிம்பஸ் இழப்பு: சுமார் ரூ. 50 கோடி

அடுத்து விளம்பரதாரர்கள். உலகக்கோப்பை ஸ்பான்சர்கள், தொலைக்காட்சி ஸ்பான்சர்கள் ஆகிய அனைவருக்கும் நேரடியாக நஷ்டம் இல்லை; அவர்கள் பணத்தைப் போட்டு பணத்தை எடுப்பவர்கள் அல்லர். பணத்தைப் போட்டு பிராண்டை வளர்க்க விரும்புபவர்கள். பிராண்ட் எக்ஸ்போஷர் குறைவாகத்தான் இருக்கும்.

மேற்கிந்தியத் தீவுகள் எதிர்பார்த்த சுற்றுலா வருமானம் குறையும். இந்தியா அடுத்த சுற்றுக்குப் போயிருந்தால் நிறைய விமான நிறுவனங்கள்முதல் மேற்கிந்தியத் தீவுகளின் ஹோட்டல்கள் அதிக வருமானம் பார்த்திருக்கும். இப்பொழுது பல ஆட்டங்களுக்குப் பார்வையாளர்கள் குறைவார்கள். நுழைவுச்சீட்டு வாங்க ஆளில்லாமல் போகலாம். தென்னாப்பிரிக்காவில் நடந்த அனைத்து ஆட்டங்களும் ஹவுஸ் ஃபுல். இங்கே அது இருக்காது.

பிற இழப்புகள்: சுமார் US$ 5 மில்லியன்

-*-

இந்தியக் கிரிக்கெட் பாதாளத்தில் இருப்பதால் உடனடியாக பாதிக்கப்படுவது நிம்பஸ்தான். ஏற்கெனவே நிம்பஸ் தொலைக்காட்சி உரிமம் தொடர்பாக இந்திய அரசோடு சண்டை போட்டுக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் நடக்கும் ஆட்டங்களுக்கான உரிமையை பிசிசிஐ-இடமிருந்து எக்கச்சக்கமான விலைகொடுத்து நிம்பஸ் வாங்கியுள்ளது. அவற்றை நியோ ஸ்போர்ட்ஸ் சானல்மூலம் ஒளிபரப்பிவருகிறது.

இந்திய அரசு, இந்த ஆட்டங்களை தூரதர்ஷனிலும் காட்டவேண்டும் என்றும், அதற்கென தூரதர்ஷன் தனியாகக் காசு கொடுக்காது; அதில் வரும் விளம்பரங்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் (75%) வருமானத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் சட்டம் இயற்றியுள்ளது. இதனால் நிம்பஸ் எக்கச்சக்கமாக வருமானத்தை இழக்க வேண்டிவரும். அத்துடன் இப்பொழுது இந்தியாவின் ஃபார்ம் இருப்பதைப் பார்த்தால் இந்த ஒளிபரப்புகளுக்கு எப்பொழுதும் கிடைக்கும் வருவாய்கூட இந்த ஆண்டு கிடைக்காது என்று தோன்றுகிறது.

இந்திய அணி மீண்டும் ஒழுங்காக விளையாடும்வரை நிம்பஸ் ஆசாமிகளுக்குச் சரியாகத் தூக்கம் வராது!

நிம்பஸ் இழப்பு - அடுத்த ஒரு வருடம்: சுமார் ரூ. 100 கோடி

-*-

இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்கும் வருமானம் பாதிக்கப்படும். ஆட்டக்காரர்கள் ஒவ்வொருவரும் விளம்பரங்களில் நடிப்பதன்மூலம் கோடிகோடியாகச் சம்பாதிக்கிறார்கள். அடுத்த ஒரு வருடமாவது இவர்கள் சம்பாதிக்கும் தொகை குறையும். புதிய பிராண்ட்கள் கிரிக்கெட் வீரர்கள்மீது பணம் கட்ட பயப்படுவார்கள்.

கிரிக்கெட் வீரர்கள் இழப்பு: சுமார் ரூ. 20 கோடி (அனைவரும் சேர்ந்து)

-*-

கிரிக்கெட்மீது ஏற்பட்டுள்ள வெறுப்பினால் நாட்டின் பொருளாதார உற்பத்தி அடுத்த ஒரு வருடத்துக்காவது அதிகமாகும்!

பொருளாதாரத்துக்குக் கிடைக்கும் அதிக உற்பத்தி: சுமார் ரூ. 10,000 கோடி!

Tuesday, March 20, 2007

கிரிக்கெட்: தென்னாப்பிரிக்க ரிபெல் பயணங்கள்

லக்கிலுக் தன் பதிவில் பாப் வுல்மர் நிறவெறி, இனவெறிக்கு எதிராகப் போராடிய மாவீரன் என்று எழுதியுள்ளார். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது.

தென் ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா சிறையில் இருந்த காலத்தில் வெள்ளை இனத்தோர் மட்டும்தான் கிரிக்கெட் விளையாட முடியும். கறுப்பினத்தவர் கிரிக்கெட்டில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள். அது மட்டுமன்று. கலப்பின, கறுப்பு நாட்டவரோடு அவர்கள் கிரிக்கெட் விளையாடியதுகூடக் கிடையாது.

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை செய்யப்பட்டபோது (1971), அவர்கள் 172 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தனர். ஆனால் அவை அனைத்துமே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடியவை. அப்பொழுது உச்சத்தில் இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா ஒரு டெஸ்ட் போட்டியில்கூட விளையாடவில்லை. இந்தியா, பாகிஸ்தான் போன்ற கறுப்பு நாடுகளுடனும் விளையாடியதில்லை.

பேசில் டி'ஒலிவேரா என்ற கிரிக்கெட் வீரர் தென்னாப்பிரிக்காவில் கலப்பினத்தவராகப் பிறந்தவர். மிக நன்றாகக் கிரிக்கெட் விளையாடுவார். ஆனால் முதல் தர விளையாட்டுப் போட்டிகளில் விளையாட அவருக்கு அனுமதி கிடையாது. இதனால் பேசில் இங்கிலாந்து (பிரிட்டன்) நாட்டுக்குச் சென்றுவிட்டார். சில வருடங்கள் அங்கு வசித்து, குடியுரிமை பெற்று, அந்த நாட்டு அணிக்கு விளையாடத் தகுதி பெற்றார். இங்கிலாந்து டெஸ்ட் அணியிலும் விளையாடினார்.

1970-ல் இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்கா செல்லவேண்டும். அந்த அணியில் பேசில் டி'ஒலிவேரா சேர்க்கப்படவில்லை! அதற்கு எவ்வளவோ காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால் உண்மையில் தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் போர்ட் பேசிலை இங்கிலாந்து அணியில் சேர்க்கக்கூடாது என்று தீவிரமாக முனைந்து எம்.சி.சியின் மனத்தை மாற்றியுள்ளது. பிற்காலத்தில் பேசில், தனக்கு நிறையப் பணம் கொடுப்பதாகச் சொன்னார்கள் என்றும் சொல்லியிருக்கிறார். இந்த விஷயம் இங்கிலாந்தில் பெரும் எதிர்ப்பைத் தோற்றுவித்தது. பலரும் சேர்ந்து போராடி இங்கிலாந்து அணியின் தென்னாப்பிரிக்கா பயணத்தை ரத்து செய்யவைத்தனர்.

அதைத் தொடர்ந்து நிறவெறி காரணமாக தென்னாப்பிரிக்கா அணி கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து ஐசிசியால் தடை செய்யப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் தென்னாப்பிரிக்கா தன் நிறவெறிக் கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை. ஆனால் அலி பேக்கர் தலைமையிலான தென்னாப்பிரிக்காவின் வெள்ளை கிரிக்கெட் வீரர்கள் நிறையப் பணத்தைக் காண்பித்து இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை தென்னாப்பிரிக்கா வரவழைத்து விளையாட்டுப் போட்டிகளை நடத்தினார்கள். அப்படியான கிரிக்கெட் போட்டிகளுக்கு 'ரிபெல் டூர்ஸ்' என்று பெயர். இப்படி ரிபெல் பயணங்களில் சென்றவர்களை அந்தந்த நாட்டின் கிரிக்கெட் போர்டுகள் தம் அணியில் சேர்த்துக்கொள்ளவில்லை. சில போர்டுகள் அந்த விளையாட்டு வீரர்கள்மீது வாழ்நாள் தடையை விதித்தனர். ஆனால் சில போர்டுகள் (வெள்ளை இன நாட்டவர்...) சில வருடத் தடையை மட்டுமே விதித்தன.

1970களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளிலிருந்து ரிபெல் பயணங்கள் நடைபெற்றன. 1980களில் இந்த ரிபெல் பயணங்களில் கறுப்பின நாடுகளும் பங்கேற்றன. உதாரணத்துக்கு இலங்கையிலிருந்து பந்துல வர்ணபுரா தலைமையில் ஓர் அணி சென்றது. மேற்கிந்தியத் தீவுகள் பக்கமிருந்தும்கூட அணிகள் சென்று அங்கு விளையாடியுள்ளன. (அதில் பங்கேற்ற மேற்கிந்தியத் தீவுகள் (கயானா) வேகப்பந்து வீச்சாளர் காலின் க்ராஃப்டுடன் இதுபற்றி நான் கொஞ்சம் பேசியிருக்கிறேன்.)

நிறவெறிக் காரணத்துக்காகத் தடைசெய்யப்பட்ட ஒரு நாட்டுக்கு, பணம் காரணமாகச் சென்று கிரிக்கெட் விளையாடுவது ஒருவிதத்தில் நிறவெறிக்கு ஆதரவானது என்றுதான் கொள்ளவேண்டும். இதுபோன்ற ஒரு பயணத்தில்தான் பாப் வுல்மர் இங்கிலாந்து ரிபெல் அணிக்காக விளையாடினார். கிரஹாம் கூச், மைக் கேட்டிங் போன்ற பெரும் ஆசாமிகளெல்லாம் இந்த ரிபெல் டூர்களில் கலந்துகொண்டு மூன்று வருடம் தடையைப் பரிசாகப் பெற்று அதற்குப்பிறகு சந்தோஷமாக இங்கிலாந்துக்காக சர்வதேசக் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். ஆனால் பாப் வுல்மர் சுமாரான கிரிக்கெட் வீரராக இருந்ததால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை ரிபெல் டூருக்குப் பிறகு முடிவடைந்தது.

அதன்பிறகு அவரது பயிற்சியாளர் வாழ்க்கை ஆரம்பித்தது.

இதற்கிடையில் மண்டேலா விடுதலைக்குப் பிறகு 1991-ல் தென்னாப்பிரிக்கா மீண்டும் கிரிக்கெட் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதல் பயணமாக இந்தியா தென்னாப்பிரிக்கா சென்றது. அடுத்து தென்னாப்பிரிக்கா 1992-ல் உலகக்கோப்பையில் பங்கேற்றது. பாப் வுல்மர் அந்தச் சமயத்தில் வார்விக்ஷயர் கோச்சாக இருந்தார். பிரையன் லாரா டர்ஹாமுக்கு எதிராக 500 ரன்கள் பெற்றது அப்போதுதான்! 1994-ல் வுல்மர் தென்னாப்பிரிக்க அணிக்குக் கோச் ஆனார்.

வுல்மர் இலங்கை அணிக்கு 'இனவெறி' காரணத்தைக் காட்டி கோச்சாக மறுத்தார் என்பதிலும் எந்த உண்மையும் இல்லை.

-*-

பாப் வுல்மர் நல்ல கிரிக்கெட் கோச். நல்ல மனிதர். ஆனால் நிறவெறி, இனவெறி ஆகியவற்றுக்கு ஆதரவாக, எதிராக என்றெல்லாம் மாபெரும் கொள்கைகளை அவர் வைத்திருந்ததாக எந்த ஆதாரங்களும் இல்லை. அபார்த்தீட் முடிந்தபிறகு தென்னாப்பிரிக்க அணியில் முதலில் வெள்ளை நிறத்தவரே பெரும்பான்மையாக இருந்தனர். கறுப்பினத்தவர், கலப்பினத்தவர் தொடர்ச்சியாக விளையாட வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. அலி பேக்கர் காலத்துக்குப் பிறகு இப்பொழுது கறுப்பினத்தவர் தலைமையில் அதிகமான எண்ணிக்கையில் கறுப்பர்கள் மற்றும் கலப்பினத்தவர் தென்னாப்பிரிக்க அணியில் விளையாடுகின்றனர்.

மகாயா ந்டினி, ஆஷ்லி பிரின்ஸ், ஹெர்ஷல் கிப்ஸ், ரோஜர் டெலிமாக்கஸ் ஆகியோர் இப்பொழுதைய உலகக்கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் இருக்கும் கறுப்பு/கலப்பினத்தவர் ஆவர்.

Monday, March 19, 2007

உலகக்கோப்பை - 2

முதலில் ஒரு பகிரங்க மன்னிப்பு. உலகக்கோப்பை தொடர்பான என் முதல் பதிவில் 'ஒன்றுக்கும் லாயக்கில்லாத' அணிகளை ஐசிசி சேர்த்துள்ளது என்றும் அதனால் உலகக்கோப்பை முதல் சுற்று ஆட்டங்கள் போரடிக்கின்றன என்றும் எழுதியிருந்தேன். பங்களாதேசத்தை 'மோசமான' அணி என்று நான் கருதவில்லை. ஆனால் அயர்லாந்தை அப்படித்தான் நினைத்திருந்தேன். ஸ்காட்லாந்து, நெதர்லாண்ட்ஸ், பெர்முடா போன்ற அணிகளின் ஆட்டத்தைப் பார்த்து அவ்வாறே இதுவும் என்று நான் நினைத்தது தவறுதான்.

அயர்லாந்து பாகிஸ்தானை வீழ்த்தியது இப்பொழுது அனைவருக்குமே தெரியும். அற்புதமான ஆட்டம். அயர்லாந்தின் பந்துவீச்சாளர்கள் லாங்போர்ட்-ஸ்மித், ராங்கின், போத்தா ஆகியோர் அற்புதமாக பந்தை ஸ்விங் செய்தனர். லாங்ஃபோர்ட்-ஸ்மித் வேகமாகவும் வீசினார். மற்ற இருவரும் மிதவேகம்தான். ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தைவிட பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்தின் பந்துத் தடுப்பு மிக அருமையாக இருந்தது. அவர்கள் பிடித்த கேட்ச்களில் பலவற்றை இந்திய அணி வீரர்கள் பிடித்திருக்க மாட்டார்கள். ஸ்லிப்பில் பிடிக்கப்பட்ட கேட்ச்கள் உலகத்தரம் வாய்ந்தவை. அதையெல்லாம் மிஞ்சியது கேப்டன் ஜான்ஸ்டன் மிட்விக்கெட்டில் பிடித்த கேட்ச்.

அயர்லாந்து பேட்டிங்கில் சிரமப்பட்டாலும் விக்கெட்கீப்பர் ஓ'பிரையன் தயவில் தேவையான ரன்களைப் பெற்று வென்றனர்.

இந்த உலகக்கோப்பையில் இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெறும் முதல் நாடு அயர்லாந்து! அதேபோல உலகக்கோப்பையின் முதல் சுற்றிலே வெளியேறும் முதல் நாடு பாகிஸ்தான்! Minnows sink whales என்ற தலைப்பு எவ்வளவு பொருத்தமானது!

-*-

அடுத்து சோகமான நிகழ்வு. பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பாப் வுல்மர் நேற்று மாலை மரணமடைந்துள்ளார். தோல்வி தந்த அதிர்ச்சியா? அல்லது வேறு ஏதாவதா என்று புரியவில்லை. இன்று காலை செய்தித்தாளைப் பார்த்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தேன்.

முக்கியமான கிரிக்கெட் பயிற்சியாளர்களில் ஒருவர். இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் வார்விக்ஷயர் என்னும் சுமாரான ஆட்டக்காரர்கள் கொண்ட அணியை தொடர்ச்சியாக பல கோப்பைகளை ஜெயிக்க வைத்தவர். தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக இருந்து ஹன்ஸி குரோன்யேவுடன் சேர்ந்து ஒரு ஜெயிக்கும் மெஷினாக மாற்றியவர். பயிற்சியில் பல புதுமைகளைப் புகுத்தியவர். பாகிஸ்தான் அணிக்குத் தேவையான சில கிரிக்கெட் புள்ளிவிவரங்களைக் கொடுப்பதற்காக அவருடன் ஓரிருமுறை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டுள்ளேன்.

பாகிஸ்தான் கோச் வேலை என்பது மிகவும் கஷ்டமானது. (அதற்கு அடுத்தது இந்தியாவின் கோச்சாக இருப்பது!) பயிற்சியாளருக்குக் கொஞ்சமும் ஆதரவு தராத தலைக்கனம் கொண்ட ஆட்டக்காரர்கள். அவர்களை ஒன்றிணைத்து வேலை வாங்குவதைப் போல கஷ்டமான வேலை வேறு எதுவும் இல்லை. வுல்மர் பாகிஸ்தான் வேலையை ஒரு சேலஞ்சாக எடுத்துக்கொண்டு போராடினார். ஆனால் அவரால் திண்ணமாக எதையும் சாதிக்க முடியவில்லை.

இன்று பாகிஸ்தானில் உச்சநீதிமன்ற நீதிபதி தொடர்பாக நடந்துவரும் போராட்டம் ஒன்றுதான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களைக் காப்பாற்றியுள்ளது. இல்லாவிட்டால் அவர்கள் வீடுகள் எரிக்கப்பட்டிருக்கும்.

-*-

ஆனால் இந்திய அணி வீரர்களின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டுள்ளன; தோனியின் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வீட்டின் சுவர் இடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கிரிக்கெட் - அதுவும் உலகக்கோப்பை தொடர்பாக - இருக்கும் ஹைப் தாங்கமுடிவதில்லை. தொழில் நிறுவனங்கள் ஒன்றுசேர்ந்து பணத்தைக் கொட்டுகின்றன. பங்களாதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா மோசமாகத்தான் விளையாடியது. கங்குலி, யுவராஜைத் தவிர அனைவரும் படு கேவலமாக விளையாடினர். பந்துவீச்சில் அகர்கர் தடுமாறினார்.

மாறாக பங்களாதேச ஆட்டக்காரர்களின் பந்துவீச்சு பிரமாதமாக இருந்தது. மூன்று இடக்கை சுழற்பந்து வீச்சாளர்களும் ரன்களை நெருக்குவதன்மூலம் இந்தியாமீது கடுமையான அழுத்தத்தைக் கொண்டுவந்தனர். மஷ்ரஃபே மொர்தாஸா நல்ல வேகமாகவும் துல்லியமாகவும் பந்து வீசினார். அந்த அளவுக்குத் துல்லியம் ஜாகீர் கானிடமோ முனாஃப் படேலிடமோ கூட இல்லை.

ஆனால் மிக முக்கியமான இன்னிங்ஸ் தமீம்தைக்பால் விளையாடியது. இப்பொழுதுதான் முதல்முறை இவர் விளையாடிப் பார்க்கிறேன். சின்னப் பையன். இறங்கி இறங்கி வந்து அடித்தார். தைரியமாக அடித்து ஆடினார். விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகுர் ரஹீமும் நின்று நிதானமாக விளையாடினார்.

பங்களாதேசமும் இரண்டாவது கட்டத்துக்குப் போக நிறைய வாய்ப்புகள் உள்ளன.

-*-

இவ்விரண்டு அணிகளைத் தவிர பிற 'சிறு மீன்கள்' அவ்வளவு சிறப்பாகப் போராடும் என்று தோன்றவில்லை. கனடா நேற்று இங்கிலாந்துக்கு நிறைய கஷ்டங்களைக் கொடுத்தாலும் கடைசியில் தோற்கத்தான் செய்தது. பெர்முடா, நெதர்லாந்து ஆகியவை சிறப்பாக எதையும் செய்யும் என்று தோன்றவில்லை.

உலகக்கோப்பை - 1

Saturday, March 17, 2007

நந்திகிராமம், SEZ தொடர்பாக...

* நேற்றைய 'தி ஹிந்து' தலையங்கம் மிகக் கேவலமான முறையில் எழுதப்பட்டிருந்தது. 'தீக்கதிர்' கூட இப்படி ஜால்ரா அடித்திருக்காது. முக்கியமாக, கீழ்க்கண்ட வரிகள்:
"More disconcertingly, a usually sagacious Governor, Gopalkrishna Gandhi, stepped out of line in publicly airing his philosophical and tactical differences with the State government while expressing high-minded anguish over the Nandigram deaths. Under the Indian Constitution, it is surely not the job of a Governor to offer public judgments on how an elected government should have handled a tricky situation."
சரி, அப்படி கவர்னர் கோபால்கிருஷ்ண காந்தி என்ன சொல்லிவிட்டார்? துப்பாக்கிச்சூடு நடந்திருக்கக்கூடாது என்றார்.
[T]he governor of West Bengal Gopal Krishna Gandhi expressed shock over the incident. Without mincing words, Gandhi spoke about the state government's inability to handle the situation. In a press statement he said that the firing on Wednesday has filled him with a sense of cold horror. "Force was not used against terrorists or anti-national elements. I trust that the government will ensure that there is a no repetition of the trauma witnessed," Gandhi said.
பின் தடியடியில் காயமடைந்தவர்களைப் பார்க்கச் சென்ற காந்தி இவ்வாறு கூறியுள்ளார்:
"I was saddened at what I saw here. People are in shock. They are not getting proper treatment. Some of them need to be shifted to Kolkata."
* சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக நிலம் கையகப்படுத்தும்போது வலுக்கட்டாயமாக மக்களை அப்புறப்படுத்தக்கூடாது என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளதாக இன்று காலை சன் நியூஸ் செய்தியில் வந்தது. இந்த விவாதம் வருவதற்கு நந்திகிராம மக்கள் உயிரிழக்க வேண்டியிருந்தது பரிதாபம்.

* இது இப்படியிருக்க மத்திய அரசின் விவசாய அமைச்சகமும் (!), ASSOCHAM-ம் (தொழில்நிறுவனங்களின் கூட்டமைப்பு) இணைந்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக நிலம் கையகப்படுத்தல் தொடர்பான ஒரு கருத்தரங்கை தில்லி லெ மெரிடியன் ஹோட்டலில் நடத்த உள்ளதாக நேற்றைய செய்தித்தாளில் ஒரு விளம்பரம் வந்துள்ளது. அது தொடர்பான ASSOCHAM இணையத்தளத்தின் பக்கம் இதோ.

விவசாய அமைச்சகம் (அமைச்சர்: ஷரத் பவார்), விளைநிலங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களாக மாற்றப்படுவதைக் கண்டிக்கவோ தடுக்கவோ இதுவரை முனையவில்லை. வர்த்தக அமைச்சகம் (அமைச்சர்: கமல்நாத்), சி.பொ.மண்டலங்கள் அமைவதைப் பெரிதும் வரவேற்கிறது. அதனால் நிறைய வேலைவாய்ப்புகள், முதலீடுகள் வரும் என்று வர்த்தக அமைச்சகம் கருதுகிறது. நிதி அமைச்சகம் வரி வருமானம் வெகுவாகக் குறையும் என்று சொன்னதோடு சரி. வேறு எந்த எதிர்ப்பும் இல்லாமல், எந்த நாடாளுமன்ற விவாதமும் இல்லாமல் SEZ Act நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று நடக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் விவாதமே இல்லாமல் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதுதான்.

கடந்த சில வருடங்களாக நாட்டின் உணவு உற்பத்தி அதிகமாவதில்லை; சொல்லப்போனால் குறைந்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்யும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் விளைநிலங்கள் - அவை எவ்வளவு குறைவான அளவுள்ளதாக இருந்தாலும் சரி - சிறப்புப் பொருளாதார மண்டலங்களாக மாறுவது நாட்டின் உணவு உற்பத்திக்கு ஆபத்தானது. இதனை ஒட்டுமொத்தமாக எதிர்க்காமல் விவசாய அமைச்சகம், அசோசாமோடு சேர்ந்து ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கருத்தரங்கை நடத்துகிறார்கள். இதில் யார் கலந்து கொள்கிறார்கள் தெரியுமா?

* Policy makers & regulators
* Government Officials
* Diplomats
* State Governments
* CEOs & CFOs
* Business Development heads
* Operations Heads
* Commercial Managers
* Legal Heads
* Strategic Managers
* Real Estate Companies
* Exporters & Importers
* Investors & Developers
* Service Providers
* Banks and financial Institutions
* Researchers & Information Providers
* Consultants

விவசாயிகளைத் தவிர பிற அனைவரும்.

* எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு, மாநில ஆளுநரின் எதிர்ப்பு, 15 பேர் கொலை, மாநிலமே கொந்தளிப்பு, அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள் தாங்கள் பெற்ற விருதுகளைத் திருப்பித் தருதல், ஆளும் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பு ஆகியவற்றுக்குப் பிறகு மேற்கு வங்க அரசு சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான நிலம் கையகப்படுத்தலைத் தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இது தொடர்பாக நாடு முழுவதும் விவாதங்கள் தேவை. அவசரமாக.

Friday, March 16, 2007

நிலம் கையகப்படுத்தல்

சில நாள்களாகவே மனத்தில் போட்டு உழப்பிக்கொண்டுவரும் விஷயம் இது. நந்திகிராமத்தில் நடந்த போராட்டம், துப்பாக்கிச்சூடு, தொடர்ந்து இன்று நடந்த பஸ் எரிப்பு ஆகியவை வேதனை தரவைக்கின்றன.

ஆளும் கட்சிகள் - கம்யூனிஸ்டுகளோ, காங்கிரஸோ, பாஜகவோ, திமுகவோ - மக்களுக்கு விருப்பமில்லாததைக் கட்டாயமாகப் புகுத்த முயற்சி செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

நிலம் கையகப்படுத்தல் என்பது உணர்ச்சிகளைத் தூண்டும் விஷயம். மத்திய, மாநில அரசுகளுக்கு "Eminent domain" என்ற அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, 'ஓர் அரசு, தனியார் நிலங்களை பொது உபயோகத்துக்காக, அந்த நிலத்துக்குரிய நியாயமான விலையைக் கொடுத்துவிட்டு எடுத்துக்கொள்ளும்' அதிகாரம் என்று பொருள்.

தனி மனிதர் ஒருவரிடம் அதிகபட்சமாக இவ்வளவுதான் நிலம் இருக்கலாம் (நில உச்சவரம்பு) என்ற சட்டத்தின்படி அதிகமாக உள்ள நிலங்களைக் கையகப்படுத்தி அவற்றைப் பிரித்து பிறருக்குக் கொடுப்பது வேறு. இந்த eminent domain விஷயத்தில் ஒரு தனி நபரிடம் எவ்வளவு குறைவாக நிலம் இருந்தாலும் அந்த நிலம் பொது உபயோகத்துக்குத் தேவை என்று ஓர் அரசு தீர்மானித்தால்போதும்.

சாலைகள் அமைக்க அல்லது விரிவாக்க, அணைகள் கட்ட என்று பல பொதுக்காரியங்களுக்காக அரசுகள் தனியார் நிலங்களை ஆக்ரமித்துள்ளன. இவ்வாறு செய்யும்போது தனி நபர்கள் நீதிமன்றங்களை அணுகினால் நீதிமன்றங்கள் தனி நபர்களுக்குச் சாதகமான தீர்ப்புகளை இதுவரை வழங்கியதில்லை. இப்பொழுது நடக்கும் நர்மதா அணை போராட்டம்வரையில் பல தனி நபர்களது வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுகின்றன.

பொதுவாக நிலம் கையகப்படுத்தப்படும்போது என்னென்ன பிரச்னைகள் இருக்கலாம்?

1. அந்த நிலத்திலே காலம் காலமாக விவசாயம் செய்துவரும் மக்கள் வேறு எங்கும்போய் வாழ்ந்து பிழைக்க வழியற்றவர்களாக ஆகி, பிச்சைக்காரர்களாகவும் சொந்த நாட்டிலேயே அகதிகளாகவும் ஆகிவிடலாம். அதுதான் அரசு பணம் தருகிறதே என்று நீங்கள் கேட்கலாம். நம்மைப் போன்ற, அலுவலகங்களில் வேலை செய்வோர் வசிக்கும் இடங்களை அரசு எடுத்துக்கொண்டு அதற்குரிய நியாயமான விலையைக் கொடுத்தால் அது வேறு விஷயம். வேறு இடத்தில் வீட்டை வாங்கி/கட்டி/வாடகைக்கு எடுத்து நாம் பிழைத்துக்கொள்ளலாம். ஆனால் வைகை ஆற்றங்கரையிலோ நர்மதா ஆற்றங்கரையிலோ விவசாயம் செய்பவனைத் துரத்தினால், அவனது வாழ் நிலமும் உழு நிலமும் அழிகிறது. வேறு நல்ல இடத்தில் விவசாய நிலம் கிடைக்குமா? அப்படிப்பட்ட நிலம் கிடைக்கும் இடம் எங்கோ ஒரு கோடியில் என்றால் இதுநாள்வரையில் வாழ்ந்துவந்த இடத்தைவிட்டு எந்த அறவியல் அடிப்படையில் அந்த மனிதனைத் துரத்தமுடியும்? ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி பல நூறு மனிதர்களின் வாழ்வை அழிப்பதிலிருந்துதானா கிடைக்க வேண்டும்?

2. அரசு கொடுக்கும் நஷ்ட ஈடு - இதைப்பெறத் தேவையான கடுமையான சட்டதிட்டங்கள், அடிமட்ட அரசு அலுவலர்களின் மெத்தனமான அல்லது மோசமான போக்கு, லஞ்சம் ஆகியவை சட்டங்களைக் கண்டு மிரளும் சாதாரண மனிதர்களை எவ்வளவு மோசமாக பாதிக்கும்?

3. அரசு கொடுக்கும் நியாயமான விலை - இது எந்த அடிப்படையில் நியாயம் எனத் தீர்மானிக்கப்படுகிறது? நிலம் என்பது வெறும் அதற்கான சந்தை விலை மட்டும்தானா? நிலம் என்பது டீமேட் செய்யப்பட்ட பங்கு கிடையாது. அதன் விலை அதிலிருந்து கிடைக்கும் வாழ்வு. அந்தக் கண்ணியமான வாழ்வை அரசு கொடுக்கும் நஷ்ட ஈடு கவனித்துக்கொள்ளுமா? மற்றொன்று உளவியல் சம்பந்தமானது. தான் வாழ்ந்த வீட்டை, தான் படித்த பள்ளியை, தான் வேலை செய்த அலுவலகத்தை விட்டுப் பிரியும்போது பலர் கண்கலங்குகிறார்கள். அதைப்போலத்தானே இந்த நிலத்தைவிட்டுப் பிரியும் / கட்டாயமாக பிரிக்கப்படும் மக்களும்?

இதனால் விவசாயப் பாசன மற்றும் குடிநீர் தேவைகளுக்காக அணைகள் கட்டுவதே கூடாது, சாலைகள் போடப்படவே / விரிவாக்கப்படவே கூடாது என்று நான் சொல்லவில்லை. இவற்றைச் செய்யும்போது அதிகபட்ச இரக்கத்துடன் நடந்துகொள்ளவேண்டும். மக்களோடு பேசி, அவர்களே ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்களை முன்வைக்க வேண்டும். எவ்வளவு அதிகபட்சமான நஷ்ட ஈடு தரமுடியுமோ அவ்வளவு தரவேண்டும். அந்த மக்களுக்குத் தேவையான கல்வி, வேலை, காப்பீடு போன்ற பிற உதவிகளைத் தரவேண்டும். இதற்கெல்லாம் காலதாமதம் ஆகிறது என்று அலுத்துக்கொள்ளக் கூடாது.

ஒரு கல்யாண மண்டபத்தை இடிக்கிறார்கள் என்று புலம்பிக்கொண்டு நீதிமன்றம் செல்கிறார் எக்கச்சக்கமாகப் பணம் படைத்த ஒரு புதுக்கட்சித் தலைவர். கையில் உள்ள அத்தனையையும் இழக்கப்போகும் மக்கள் எவ்வளவு துடிதுடிப்பார்கள் என்பதை யோசிக்க வேண்டும்.

அடுத்தது தனியார் நிறுவனங்களுக்கான நிலம் கையகப்படுத்தல். சிங்கூர், நந்திகிராமம் முதற்கொண்டு தனியார் தொழிற்சாலைகளுக்காகவோ, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காவோ ஓர் அரசு முன்னின்று நிலத்தைக் கையகப்படுத்துவது. பின் அந்த நிலத்தை இலவசமாகவோ அல்லது மிகக்குறைந்த விலையிலோ தனியார் நிறுவனங்களுக்குக் கொடுப்பது. இது மிகவும் தவறான முடிவு.

தனியார் நிறுவனங்கள் உருவாக்கும் வேலைவாய்ப்புகளை மதிக்கிறேன். தனியார் முதலீடுகள் பெருமளவு நம் நாட்டுக்குத் தேவை. ஆனால் பிரச்னைக்குரிய இடங்களைத் தனியார் தவிர்க்கவேண்டும். சிங்கூரில் பிரச்னை என்றதுமே (நான் மிகவும் மதிக்கும்) ரத்தன் டாடா அந்த இடத்தைத் தவிர்த்திருக்க வேண்டும். ஓர் அரசியல்வாதிபோல தன்னுடைய எதிரிகள்தாம் இந்தப் பிரச்னையைத் தூண்டிவிடுகிறார்கள் என்று பேசியிருக்கக்கூடாது. புத்ததேவ் பட்டாச்சார்யா அகங்காரத்தைக் கைவிட்டு ("நான் டாடாவுக்கு என்ன பதில் சொல்வேன், எப்படி அவர் முகத்தில் முழிப்பேன்" என்றெல்லாம் பேசக்கூடாது!) என் மக்கள் இந்த இடத்தில் நிலத்தைக் கையகப்படுத்த அனுமதிக்கவில்லை, அதனால் வேறு இடம் தேடுவேன் என்று சென்றிருக்க வேண்டும்.

நெருக்கமான மக்கள்தொகைப் பரவல் மிகுந்த இந்தியாவில், அதுவும் பெருநகரங்கள் அருகில், பெரிய அளவில் இடம் கிடைப்பது மிகக்கடினம். விளைநிலங்களைக் கவனமாகத் தவிர்த்து, மக்கள் வசிக்கும் இடங்களாகப் பார்த்து, அங்குள்ள மக்களை வேறு இடங்களுக்கு மாற்றிவிட்டு அதன்பிறகே அந்த இடங்களை தொழிற்சாலைகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஆகியவற்றுக்குத் தரவேண்டும்.

எதிர்க்கட்சிகளையும் மாநில சட்டமன்றங்களையும் கருத்தில் கொண்டு, அவர்களோடு முழுமையாக விவாதித்து, மக்களைத் தயார்படுத்தியபின்னரே இதில் இறங்கவேண்டும். மூடிமறைத்து, நிறுவனங்களுடன் செய்துகொண்ட உடன்பாடுகள் என்ன என்பதை வெளியே தெரிவிக்காது இருந்தால் கடுமையான பிரச்னைகள் ஏற்படும்.

(சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் குறித்துத் தனியாக எழுதுகிறேன்.)

இப்பொழுது மேற்கு வங்கத்தில் நடைபெறுவதை நாடே உன்னிப்பாகக் கவனிக்கிறது. இதுதான் ஹரியானாவிலும், தமிழகத்திலும், மும்பையிலும், நர்மதா பள்ளத்தாக்கிலும் நடக்கும். மக்கள் தெருவில் இறங்கிப் போராடுவார்கள். துப்பாக்கிச் சூடு, மக்களைக் கொல்வது ஆகியவற்றின்மூலமாக எந்த அரசுமே தன் மக்களுக்கு வளர்ச்சியைக் கொண்டுவர முடியாது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கோ, வேலைகளை உருவாக்கும் தொழிற்சாலைகளுக்கோ, சாலைகள், மேம்பாலங்களுக்கோ நிலம் வேண்டுமானால் ஓர் அரசு அதிரடியாக இறங்கி, மக்களை மிரட்டிப் பணியவைத்து, கையகப்படுத்தக்கூடாது. மீறினால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்பதையே நாம் காண்கிறோம்.

கம்யூனிஸ்டுகளின் (CPI-M) பிரச்னை

CPI-M demanding that Tamil Nadu government not take people's land


கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்ட்கள் போஸ்டர் அடித்து திமுக தலைமையிலான தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கு பொழிச்சலூர், கவுல் பஜார், பம்மல், அனகாபுத்தூர் பகுதி மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தாதீர்கள் என்று வேண்டுகோள் விடுக்கின்றனர்.

CPI-ML or sympathetic groups attacking CPI-M's stance in West Bengal


மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்டுகள் ஆட்சிதான் நடக்கிறது. அங்கு நந்திகிராமம் எனுமிடத்தில் விளைநிலங்களைக் கையகப்படுத்தி மலேசியாவைச் இந்தோனேசியாவைச் சேர்ந்த சலீம் குழுமத்துக்குக் கொடுத்து சிறப்புப் பொருளாதார மண்டலம் ஒன்றை உருவாக்க மேற்கு வங்க அரசு முயற்சி செய்கிறது. ஆனால் நந்திகிராம மக்கள் நிலங்களை விட்டுத்தர மறுக்கின்றனர். இரண்டு நாள்களுக்கு முன் நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி நந்திகிராமத்தில் நிலம் மக்களின் அனுமதியின்றி கையகப்படுத்தப்படாது என்று மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா வாக்கு கொடுத்துள்ளார் என்கிறார். இப்பொழுது கிளப்பப்பட்டிருக்கும் பிரச்னை அரசியல் காரணமானது. திரினாமுல் காங்கிரஸ், மாவோயிஸ்டுகள் சேர்ந்து கிளப்பி விடுகிறார்கள் என்கிறார்.

கிட்டத்தட்ட ஒரே பிரச்னை. ஒரே கட்சி. இருவேறு மாநிலங்கள். இருவேறு கொள்கைகள்.

Thursday, March 15, 2007

உலகக்கோப்பை - 1

ஆட்டங்கள் நடக்கும் நேரம் மோசம். இரவு 8.00 மணிக்கு ஆரம்பிப்பதால் அதிகபட்சம் ஓர் இன்னிங்க்ஸ் மட்டும்தான் பார்க்க முடிகிறது.

சோனி சானல்களை உலகக்கோப்பை பார்க்கவென்றே காசுகொடுத்து வைக்கவேண்டிய கட்டாயம்.

மேற்கிந்தியத் தீவுகள் - பாகிஸ்தான் ஆட்டம் முதல் இன்னிங்க்ஸ் கொஞ்சம் கொஞ்சம் பார்த்தேன். நேற்று ஆஸ்திரேலியா - ஸ்காட்லாந்து ஆட்டம் மனத்தில் ஒட்டவேயில்லை. ஸ்காட்லாந்து பையன்களுக்கு பந்தைத் தடுத்து, திரட்டக்கூடத் தெரியவில்லை. கென்யா - கனடா ஆட்டம் தூக்கத்தை வரவழைத்தது. HBO-வில் நல்ல படம் ஒன்றைப் பார்த்துவிட்டு தூங்கச் சென்றுவிட்டேன்.

சாரு ஷர்மா, மந்திரா பேடி, டீன் ஜோன்ஸ் கூட்டணி ஆஸ்திரேலியா ஆட்டம் மழையின்போது ஏதோ பேசினார்கள். அதுவும் மனத்தில் நிற்கவில்லை. மந்திரா பேடி ஏதோ சொல்ல முயற்சி செய்வதும், அதைச் சரியாகக் கவனிக்காமல் பிறர் பேசிக்கொண்டே இருப்பதுமாக இருந்தது கொஞ்சம் உறுத்தியது. இவ்வளவு வருடங்களுக்குப் பிறகும்கூட மந்திரா பேடியை செட் பீஸாக மட்டுமே கருதுகிறார்களோ?

முதல் சுற்றில் உருப்படியான ஆட்டம் என்று விரல்விட்டு எண்ணிவிடலாம். அவை:

மார்ச் 13: மேற்கிந்தியத் தீவுகள் - பாகிஸ்தான் (குரூப் D)
மார்ச் 16: இங்கிலாந்து - நியூசிலாந்து (குரூப் C)
மார்ச் 23: இந்தியா - இலங்கை (குரூப் B)
மார்ச் 24: ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா (குரூப் A)

அவ்வளவுதான்!

சூப்பர் 8 என்பது ஆஸ்திரேலியா - நியூசிலாந்து நாடுகளில் 1991-ல் நடைபெற்ற உலகக்கோப்பையை ஒத்ததாக உள்ளது. மழையால் பிரச்னைகள் ஏதும் இல்லாவிட்டால் இந்த இரண்டாம் கட்டம் வெகு சுவாரசியமாகப் போகும்.

Wednesday, March 14, 2007

விவேகானந்தா கல்லூரி ஸ்டிரைக்



சத்யப்பிரியானந்தாவை கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியுள்ளதாம்.

முந்தைய பதிவுகள்:
விவேகானந்தா கல்லூரி பிரச்னை
விவேகானந்தா கல்லூரி திறப்பு

Thursday, March 01, 2007

பச்சைக்கிளி முத்துச்சரம் ஜோத்திக்கா



15 நாள் ஓடினதால சந்தோஷமாம்! சரத்குமாரை போஸ்டர்ல கூட காணோமே?

பிற படங்கள்: இன்னொரு பாதி | முழுசாக

விவேகானந்தா கல்லூரி திறப்பு



கடந்த இரண்டு நாள்களாக விவேகானந்தா கல்லூரி திரும்பத் திறக்கப்பட்டு நடந்துகொண்டிருக்கிறது.

புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி ஒட்டியுள்ள சுவரொட்டி, "மாணவர்களுக்கு வெற்றி" என்று அறிவிக்கிறது.

இதுவரையில் மைய ஓட்ட ஊடகங்கள் இந்தப் பிரச்னை பற்றி மக்களுக்கு எதையுமே சொல்லவில்லை.