Sunday, June 30, 2013

மீண்டெழும் பாண்டியர் வரலாறு

செந்தில் மள்ளர் என்பவர் எழுதிய ‘மீண்டெழும் பாண்டியர் வரலாறு’ என்ற புத்தகம் தமிழக அரசால் தடை செய்யப்பட்டதோடு, செந்தில் மள்ளர்மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டு அவரைத் தேடி வருகிறார்கள் என்ற செய்தியை ஒருவேளை நீங்கள் செய்தித்தாளில் படித்திருக்கலாம்.


நேற்றி லயோலா கல்லூரியில் கருத்துரிமை பாதுகாப்பு கருத்தரங்கம் என்ற நிகழ்வு நடைபெற்று, தமிழக அரசின் தடை கண்டிக்கப்பட்டது. நானும் ஒரு பேச்சாளராக அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். கலந்துகொண்ட பிறரை மேலே உள்ள போஸ்டரில் பார்த்துத் தெரிந்துகொள்க.

எந்தப் புத்தகத்தையுமே ஓர் அரசு தடை செய்யக்கூடாது என்பது என் கருத்து. சட்டம் ஒழுங்கு என்பதைக் காரணம் காட்டி, சமூகங்களுக்கு இடையே கலவரம் மூண்டுவிடும் என்று சொல்லி சில புத்தகங்களை மட்டும் தடை செய்தல் நியாயமற்றது. இன்று தமிழில் வெளியாகியுள்ள எண்ணற்ற புத்தகங்களில் பலப்பல, குறிப்பிட்ட மதத்தோருக்கும் சாதியினருக்கும் எதிராக, மிகக் கேவலமான, கீழ்த்தரமான வசை மொழியில் எழுதப்பட்டுள்ளவை. பல மாத, வார இதழ்களேகூட அப்படிப்பட்ட செய்திகளைத் தொடர்ந்து வெளியிடுகின்றன.

கண்டன இலக்கியம் என்பது இந்து, கிறிஸ்தவ மத பிரசாரகர்களால் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அவை எதிர் மதத்தோரை, எதிர்க் கருத்துள்ளோரை நிச்சயமாகக் கடுமையாகத் தாக்கியும் அவர்கள் மனம் புண்படுமாறும்தான் எழுதப்பட்டவை. பத்தொன்பதாம் நூற்றாண்டு முதலே இருந்துவரும் இதுபோன்ற புத்தகங்கள், இன்றும் வெளியாகின்றன என்பதுதான் உண்மை. அமைதிப் பூங்காவாகத் திகழும் புத்தகப் பதிப்புலகில் செந்தில் மள்ளரின் புத்தகம் மட்டும் திடீரென்று அமைதியைக் குலைத்துவிடும் எண்ணம் கொண்டதாக அவதரித்துள்ளது என்பதுபோல் தமிழக அரசு தோற்றுவிக்கும் எண்ணம் நியாயமற்றது. அதைவிட, இப்படிப்பட்ட புத்தகத்தைத் தடை செய்ததுமட்டுமின்றி, அதனை எழுதியவரை தேசத் துரோகக் குற்றச்சாட்டு என்று சொல்லிச் சிறை பிடிக்க முற்படுவது அராஜகமானது.

இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள பலவும் கிட்டத்தட்ட 500 புத்தகங்களில் ஏற்கெனவே சொல்லப்பட்ட விஷயங்கள்தாம் என்று நேற்று பேசிய ஒரிசா பாலு சொன்னார். கூடவே சில புத்தகங்களைக் கையில் கொண்டுவந்திருந்தார். இந்தக் கூட்டத்தில் பேசிய மனுஷ்யபுத்திரன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்துத் தான் பேசியதைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

கூட்டத்தில் பேசிய இருவர் - எழுகதிர் பத்திரிகையாசிரியர் அருகோ என்பவரும் மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சக்திவேல் என்பவரும், மற்றும் பொதுவாகவே கூட்டத்துக்கு வந்திருந்த பெரும்பான்மை மக்களும் ஒரு கருத்தில் உறுதியாக இருந்ததுபோல் இருந்தது. புத்தக ஆசிரியர் செந்தில் மள்ளர், தமிழ்நாட்டின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம் ‘வடுக வந்தேறிகள்’ என்று தன் ‘என்னுரை’யில் சொல்கிறார். இவ்விருவரும் கூட்டத்தினரும் வடுக வந்தேறிகள் என்று தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவரும் தெலுங்கு பேசும் சாதியினரைச் சொல்கிறார்கள். அந்த வார்த்தை பயன்படுத்தப்படும்போதெல்லாம் கூட்டத்தினர் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

புத்தகத்தின்மீதான தடையைக் கண்டித்த அதே நேரம், மேடையிலேயே, ‘வந்தேறிகள்’ என்ற வார்த்தைப் பிரயோகத்தையும் அதனைக் கூட்டம் கை தட்டி வரவேற்றதையும் நான் கடுமையாகக் கண்டித்தேன்.

வந்தேறிகள் என்ற வார்த்தையைக் கொண்டு பார்ப்பனர்கள், முஸ்லிம்கள் என்று ஆரம்பித்துப் பலரைக் கைகாட்டி இனத் தூய்மைவாதம், கலாசார தேசியம் ஆகியவற்றைப் பேசுவோரது அரசியல் எனக்கு ஏற்புடையதல்ல. அதில் இப்போது சேர்ந்துள்ளது ‘திராவிடம்’ என்ற கருத்தாக்கத்தை எதிர்க்கும் தமிழ் தேசியம். அவர்கள் கண்டுபிடித்துள்ள எதிரி ‘வடுகர்கள்’. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் இதைப்பற்றியது அல்ல. அப்படி அந்தப் புத்தகத்தைக் குறுக்கிவிட முடியாது, கூடாது. ஆனால் அந்த இழையோட்டமும் அப்புத்தகத்தில் இருப்பதும், அதே கருத்தைக் கொண்டோர் அக்கருத்தை மேடைமீது கூறுவதும் பொதுவான அறிவியக்கத்துக்கு எதிரானவை.

இவற்றைத் தாண்டி, அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தை தமிழக அரசு தடை செய்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். புத்தகத்தின்மீதான தடை நீக்கப்படவேண்டும். புத்தக ஆசிரியர்மீது போடப்பட்டிருக்கும் அபாண்டமான வழக்கு உடனடியாக விலக்கிக்கொள்ளப்படவேண்டும்.

Tuesday, June 18, 2013

தனியார் பொறியியல் கல்லூரிகளும் கல்விக் கட்டணமும்

எஸ்.ஆர்.எம் குழுமக் கல்வி நிறுவனங்களிலும் அவர்களுடைய பிற நிறுவனங்களிலும் (புதிய தலைமுறை தொலைக்காட்சி சேர்த்து) இன்று வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் கட்டணத்துக்கு மேலாகப் பணம் வாங்கப்படுகிறது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்.

என் நண்பர் ஒருவர், கடந்த பத்து நாள்களுக்குமுன் சென்னையின் ஒரு பொறியியல் கல்லூரியில் ஆறு லட்ச ரூபாய் கொடுத்து  சீட் வாங்கியதாகச் சொன்னார். என் தூரத்து உறவினர்கள் பலரும் தத்தம் பிள்ளை/பெண்களுக்கு கட்டுக் கட்டாகப் பணம் கொடுத்துத்தான் பொறியியல் கல்லூரிகளில் சீட் வாங்கிக்கொடுத்துள்ளனர். 2 லட்சம் முதல் 7-8 லட்சம் வரையில் இருக்கலாம். நான் இரு ஆண்டுகள் முன்புவரை வசித்துவந்த அடுக்ககத்தில் ஒரு பெற்றோர் தன் பெண்ணுக்கு 50 லட்ச ரூபாய் கொடுத்து மெடிக்கல் சீட் வாங்கிக்கொடுத்தனர்.

இதுகுறித்துச் சில கேள்விகளை மட்டும் இங்கே எழுப்ப முனைகிறேன்.

1. இப்போதைய இந்தியச் சட்டங்களின்படி கல்வி நிறுவனங்களை நடத்தும் அறக்கட்டளைகள் லாபநோக்கு அற்றவையாக இருக்கவேண்டும். அப்படியானால், இந்தியாவின் கிட்டத்தட்ட அனைத்துத் தனியார் பொறியியல், மருத்துவ, கல்வியியல் கல்லூரிகளுமே சட்டத்துக்குப் புறம்பாகத்தான் நடந்துகொள்கின்றன.

2. யூ.ஜி.சி கட்டுப்பாடு, ஏ.ஐ.சி.டி.ஐ/ எம்.சி.ஐ/ என்.சி.டி கட்டுப்பாடு, பல்கலைக்கழகக் கட்டுப்பாடு, மாநில அரசின் கட்டண வசூல் கட்டுப்பாடு என்று எண்ணற்ற கட்டுப்பாடுகளின்கீழ் திண்டாடும் தனியார் கல்லூரிகளால் வெளிப்படையாகத் தங்களுக்கு இவ்வளவு கட்டணம் வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொள்ள முடியாத நிலையே இருக்கிறது. அரசு குறிப்பிடும் கட்டணத்துக்குள்ளாக ஒரு பொறியியல் கல்லூரியை நடத்த முடியாது. பின் ஏன் மத்திய/மாநில அரசுகள் இந்த மோசமான நிலை தொடர்ந்து நடக்கக் காரணமாக உள்ளன?

3. வெளிப்படையாக ரசீது கொடுத்து, காசோலை/வரைவோலையில் கட்டணம் வாங்கிக்கொள்ள முடியாத நிலையில், மேசைக்கு அடியில் பணத்தைக் கட்டுக் கட்டாக வாங்குகிறார்கள். விளைவு, கடுமையான கருப்புப் பணம் உருவாகும் சூழல். இதை எத்தனை ரெய்டுகள் நடத்தினாலும் தடுக்க முடியாது. பிரச்னை கொள்கை அளவில் இருக்கிறது. இதனை வருமான வரித்துறையினால் எதிர்கொள்ளவே முடியாது. கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தவேண்டிய மத்திய அரசு ஏன் இதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது?

4. எத்தனை பணம் கேட்டாலும் கொடுப்பதற்கு மாணவர்களும் பெற்றோரும் என் தயாராக இருக்கிறார்கள்? அவ்வளவு பணம் கொடுத்துப் படிப்பதால் மாணவர்களுக்கு உண்மையிலேயே ஏதேனும் நன்மைகள் கிடைக்கின்றனவா?

5. தனியார் கல்லூரிகளும் தங்களுக்குரிய அனுமதிகளைப் பெறுவதற்குக் கட்டு கட்டாகப் பணம் லஞ்சமாகத் தரவேண்டிய நிலை ஏற்படுகிறது என்று அறிகிறேன். இதை எதிர்த்துப் போராட தனியார் கல்லூரிகள் சிலர்கூடத் தயாராக இல்லையா?

6. ஏன் கல்வியை லாபநோக்கற்ற துறை என்று சொல்லவேண்டும்? இது பொய், பம்மாத்து என்று தெரிந்தே இதனை ஏன் செய்கிறோம்? ஏன் இதனை லாபநோக்குள்ள ஒரு தொழில்துறையாக அறிவித்துவிடக்கூடாது? அப்படிச் செய்தாலாவது, (அ) வெளிப்படைத்தன்மை (ஆ) பெறும் லாபத்தில் நியாயமான வருமான வரி (இ) கருப்புப் பணம் தடுப்பு (ஈ) கல்வி நிலையங்களை வாங்குவதும் விற்பதும் எளிதாவது (உ) வென்ச்சர் கேபிடல் பணம் இந்தத் துறைக்குள் நுழைவதற்கான வாய்ப்பு ஏற்படுதல் ஆகியவற்றைச் சாதிக்க முடியுமே?

Thursday, June 13, 2013

செகுலரிசமும் மோதியும்

(1) செய்து காட்டுவார் மோதி
(2) பாஜகவின் கூட்டாளிகள்

தினம் தினம் மோதியா என்று அலுத்துக்கொள்ளாதீர்கள். சில கேள்விகள் எழுப்பப்படும்போது அவை பற்றி எனக்கே தெளிவு ஏற்படுத்திக்கொள்வதற்காக இந்தப் பதிவுகள். இன்னமும் நிறையக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. எனவே தொடர்ந்து மேலும் சில பதிவுகளும் அவ்வப்போது வரும்.

ஐக்கிய ஜனதா தளம் ஒரு செகுலர் (மதச்சார்பற்ற) கட்சி என்று கருதப்படுகிறது. பாஜக ஒரு மதச்சார்புள்ள கட்சியாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்துத்துவம் அவர்களுடைய நோக்கங்களில் ஒன்று என்று அக்கட்சியைச் சேர்ந்த பலருமேகூடச் சொல்கிறார்கள். சிவ சேனை ஓர் இந்துத்துவக் கட்சியாகவே காணப்படுகிறது. அது தவிர, அகாலி தளம் என்ற கட்சி, சீக்கியம் என்கிற மதத்தின்மீதாகக் கட்டப்பட்டுள்ளதால் அதுவும் மதச்சார்புள்ள கட்சிதான். அதுதவிர முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் மதச்சார்புள்ளவையே. வெளிப்படையாகக் கிறிஸ்தவ மதச்சார்பை வெளிப்படுத்தும் கட்சிகள் என்று ஏதும் இந்தியாவில் இல்லை. மிச்சமுள்ள அனைத்துக் கட்சிகளும் என்ன சொன்னாலும் செய்தாலும், அவர்கள் அனைவருமே, காங்கிரஸ் உள்பட, செகுலர் கட்சிகளாகவே அறியப்படுகிறார்கள்.

இந்துத்துவ அரசியலின் அடிப்படையே, ‘பெரும்பான்மையான இந்துக்கள் ஏதோ ஒருவிதத்தில் வஞ்சிக்கப்படுகிறார்கள்; சிறுபான்மையினர், அதுவும் முக்கியமாக முஸ்லிம்கள், சலுகைகளாகப் பெற்றுத் தள்ளுகிறார்கள்’ என்ற கருத்து. இதற்கு முற்றிலும் மாறாக, முஸ்லிம்கள், தாங்கள் வஞ்சிக்கப்படுவதாக நினைக்கிறார்கள். எந்த ஒரு செகுலர் கட்சியாலும் தங்களுக்கு இதுகாறும் நன்மைகள் கிடைத்ததில்லை என்கிறார்கள். இப்போது கொடுக்கப்படும் சலுகைகள் போதவே போதா என்கிறார்கள். முஸ்லிம்கள் தொடர்ந்து பின்தங்கிய வகுப்பினர்களாகவே இருந்துவருவதாக அவர்கள் புள்ளிவிவரங்களோடு எடுத்துக்காட்டுகிறார்கள்.

பாஜகவுக்கான எதிர்ப்பு முஸ்லிம்களிடமிருந்து மட்டும் வருவதில்லை. மூன்று முக்கியமான இடங்களிலிருந்து வருகிறது. (1) முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர். (2) தலித்துகள். (3) திராவிடவாதிகள் (அல்லது) நாத்திகவாதிகள்.

முஸ்லிம்களின் எதிர்ப்பைப் புரிந்துகொள்வது எளிது. இது பாபர் மசூதி தாண்டியது. குஜராத் கலவரம் தாண்டியது. தாம் சிறுபான்மையினராக இருக்கும் நாட்டில் தமக்குப் பாதுகாப்பு வேண்டும்; தம்முடைய வளர்ச்சிக்கு ஊக்கங்கள் வேண்டும்; தம்முடைய வழிபாட்டுமுறைக்கு எந்தக் குந்தகமும் வரக்கூடாது; தம்முடைய பின்தங்கிய நிலை மாறவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பது மிக நியாயமானதே. இந்த மாற்றங்கள் எவையும் பாஜகவிடமிருந்து கட்டாயமாக வர முடியாது என்ற கருத்து முஸ்லிம்களிடம் ஆழமாக உள்ளது. அப்படிப்பட்ட ஒரு கருத்தை யாராலும் புறந்தள்ளிவிட முடியாது. பாஜகவைவிட காங்கிரஸ் அல்லது மூன்றாவது அணியிடம் தங்களுக்கு அதிக சலுகைகள், வாய்ப்புகள் கிடைக்கும் என்று முஸ்லிம்கள் சொன்னால் அதை எப்படி மறுக்க முடியும்?

பாஜகவில் உள்ள ஒரு சில டோக்கன் முஸ்லிம் அரசியல்வாதிகள் (ஷாநவாஸ் ஹுசைன், முக்தார் அப்பாஸ் நக்வி, நஜ்மா ஹெப்துல்லா, இறந்துபோன சிக்கந்தர் பக்த்) தாண்டி சமீபத்தில் குஜராத்தில் சில புதிய இளம் முஸ்லிம் தலைவர்கள் உருவாகியுள்ளனர். இவர்களுடைய கருத்து: ‘மோதியின் ஆட்சியில் முஸ்லிம்கள், இந்துக்கள் என்று அனைவருமே முன்னேறுகிறார்கள்; இதுதான் உண்மையான வளர்ச்சி; அடையாள அரசியல்தான் ஆபத்தானது; இந்த அடையாள அரசியலால்தான் முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களைப் பின்தங்கியவர்களாகவே வைத்துள்ளனர்.’ ஆனால் இந்தக் கூற்றுகளை இன்று ஒரு செகுலர் நபர் எளிமையாக ஒதுக்கிவிட முடியும். ஏனெனில் நம் கருத்துகள் நம் நம்பிக்கையிலிருந்தே உருவாகின்றன. தெளிவான சான்றுகளிடமிருந்து அல்ல. நாம் சான்றுகளைத் தேடிப் போவதில்லை. அதற்கான நேரமோ வலுவோ நம்மிடம் கிடையாது.

இன்று முஸ்லிம் கட்சிகளும் தனிப்பட்ட முஸ்லிம்களும் பாஜகவுக்கு, அதுவும் முக்கியமாக மோதிக்கு, வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இத்தனை ஆண்டுகள் கழித்துத்தான் அத்வானிக்கு ஸ்பெஷலாக செகுலர் முத்திரை கிடைத்துள்ளது. இதற்குமுன் வாஜ்பாயிக்குக் கொஞ்சமாகக் கிடைத்தது. எனவே மேலும் பத்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மோதிக்கும் இந்த முத்திரை கிடைக்கலாம். அல்லது கிடைக்காமலேயே போகலாம்.

மோதி முஸ்லிம்களின் ஆதரவு என்ற முத்திரையைப் பெற்றபிறகுதான் பிரதமர் ஆகலாம் என்ற வீட்டோ இருந்தால் அவரால் என்றுமே இந்தியாவின் பிரதமர் ஆக முடியாது. இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டம் அப்படிப்பட்டதல்ல. உண்மையில் பாஜகவில் யாருக்குமே - ஏன் நாளை ஷாநவாஸ் ஹுசைன் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டாலுமேகூட - இந்த முத்திரை கிடைக்காது. இன்றைய நிலையில் பாஜகவுக்கு வெகு சில முஸ்லிம்களே வாக்களிப்பார்கள். மோதி தலைவராக இருந்தாலும் சரி, தலைவராக இல்லாவிட்டாலும் சரி.

இந்தக் காரணங்களாலேயே மோதி ஆட்சிக்கு வரக்கூடாது என்று சொல்லிவிடலாமா? அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் பொதுவாக கருப்பினத்தோரின் (ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்) வாக்குகள் டெமாக்ரடிக் கட்சிக்குத்தான் கிடைக்கும். இது ஒபாமா இப்போது வந்ததால் அல்ல. டெமாக்ரடிக் கட்சி சிறுபான்மையினர் நலனை முன்வைக்கும் என்ற கருத்து அங்கே உள்ளது. ரிபப்ளிகன் கட்சி ஒருவிதத்தில் அடிப்படைவாதம் பேசக்கூடியது. தீவிரவாத எவாஞ்செலிகல் கிறிஸ்தவர்களின் ஆதரவு கொண்ட கட்சி அது. அதேபோல லத்தீனோக்கள், ஆசியர்கள் ஆகியோரும் பொதுவாக டெமாக்ரடிக் கட்சிக்கு ஆதரவு அளிப்பவர்கள். தம் நலன் பொதுவாக டெமாக்ரட்டுகள் ஆட்சியில் பாதுகாப்பாக இருக்கும் என்ற காரணத்தாலேயே ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் லத்தீனோக்கள், ஆசியர்கள் ஆகியோர் தொடர்ந்து டெமாக்ரட்டுகளுக்கே அதிக வாக்கை அளித்துவருகின்றனர். ரிபப்ளிகன் கட்சியிலும்கூட இந்தக் குழுவினரிலிருந்து சில டோக்கன் ஆட்களைப் பார்க்கலாம். எப்படி பாஜகவில் சில டோக்கன் முஸ்லிம்கள் இருக்கிறார்களோ, அப்படி.

ஆனாலும் ரிபப்ளிகன் கட்சி அவ்வப்போது ஜெயித்துக்கொண்டுதான் வருகிறது. ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வீட்டோ ஏதும் கிடையாது. எப்போது பெரும்பான்மை அமெரிக்கர்கள் ஒட்டுமொத்தமாக ரிபப்ளிகன் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கிறார்களோ அப்போது அவர் வெற்று பெறுகிறார். எனவே முஸ்லிம்கள் ஓட்டு விழாவிட்டாலும்கூட அல்லது மிகக் குறைவாக விழுந்தாலும்கூட பாஜகவும் மோதியும் வெல்ல முடியும்.

பாஜகவுக்கு தலித்துகளிடமிருந்தும் திராவிடவாதிகளிடமிருந்தும் எதிர்ப்பு உள்ளது என்று சொல்லியிருந்தேன். இதற்கான காரணங்கள் வேறானவை.

பாஜகவும் அதன் ஆத்மாவாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் உயர்சாதி, பிராமணியக் கருத்துகளை முன்வைக்கும் அமைப்பு என்பது பொதுவான இடதுசாரி லிபரல் சிந்தனையாளர்களின் கருத்து. இதில் உண்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது. பாஜக என்ற அரசியல் கட்சி காங்கிரஸுடன் ஒப்பிடும்போது இளம் கட்சிதான். அது ஒரு குறிப்பிட்ட சித்தாந்தப் பார்வையிலிருந்து ஜன சங்கமாக உருவாகி, பின் ஜனதாவுடன் ஐக்கியமாகி, பின்னர் மீண்டும் பாரதிய ஜனதாவாக மறு உருவெடுத்தது. அதன் சித்தாந்தப் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக inclusive-ஆக மாறிவருகிறது என்றே நான் கருதுகிறேன். இக்கட்சியில் பிற்படுத்தப்பட்டவர்களின், தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதித்துவம் என்ன என்று கணக்கு எடுக்கக்கூடிய நிலையில் இப்போது நான் இல்லை. ஆனால் இது ஒரு சுவாரசியமான ஆய்வாக இருக்கும்.

இன்று காங்கிரஸ் கட்சியில் பாஜகவைவிட அதிகமான எண்ணிக்கையில் மேல்மட்டத்தில் பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் இருப்பார்கள் என்று யூகிக்கிறேன். ஆனால் நரேந்திர மோதியே பிற்படுத்தப்பட்ட ஒரு சாதியைச் சேர்ந்தவர்தான் என்பதை இங்கே கவனிக்கவேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பழங்குடியினருக்கும் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் இட ஒதுக்கீடு இருக்கும் ஒரே காரணத்தால்தான் அவர்களால் இன்று ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இந்தச் சட்டம் இயற்றும் மன்றங்களுக்குச் செல்ல முடிகிறது. இன்றும்கூட பொதுத் தொகுதியில் நிற்பதற்கு இந்தச் சாதிகளைச் சேர்ந்தோருக்கு பெரும் அரசியல் கட்சிகளிடமிருந்து பெரும்பாலும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் பிற்படுத்தப்பட்டோர் தம் எண்ணிக்கை காரணமாகவும் தம் அரசியல் வலு காரணமாகவும் ஆட்சியில் தமக்குரிய இடத்தை வெகுவாகப் பிடித்துவிட்டனர். சொல்லப்போனால் இன்றைய இந்திய அரசியலில் மிக முக்கியமான பங்கைச் செலுத்திக்கொண்டிருப்பது இடைநிலைச் சாதிகள் என்று சொல்லப்படுவோரே.

தலித்துகள் தனியாக பாஜகமீது பயம் கொள்வார்களா, பாஜகவை ஒதுக்குவார்களா என்று தெரியவில்லை. இன்றைய default நிலையில் அவர்கள் பாஜகவைப் பெரிதாக ஒன்றும் ஆதரிக்கவில்லை. எனவே பாஜக இதற்கும் கீழே போய்விட முடியாது. மாறாக, பாஜக அவர்களுடைய ஆதரவை எதிர்காலத்தில் அதிகமாகப் பெறக்கூடும்.

இறுதியாக திராவிடவாதிகள். பொதுவாக இந்துமதத்தை எதிர்க்கும் இவர்களுக்கு இந்துத்துவவாதம் பேசுவோரை எதிர்ப்பதுதான் default position. திமுக சிறிதுகாலம் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது என்றாலும் பொதுவாக பாஜகவுடன் கொள்கைரீதியில் ஒட்டுறவு இல்லாதவர்கள். தமிழ்நாட்டில் பாஜகவுக்குச் சுத்தமாக ஆதரவு இல்லாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் மோதிமீது நிறையத் தமிழர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பல கருத்துக் கணிப்புகள் காண்பிக்கின்றன. இதனால் பாஜகவால் ஒரு சீட்டுகூடப் பெற முடியாது என்பதுதான் நிதர்சனம். அதற்கான கட்டமைப்பு இன்று பாஜகவுக்கு இல்லை.

கடைசியாக இடதுசாரி லிபரல் கருத்தியல் கொண்டவர்கள். இவர்கள் பாஜகவை எதிர்ப்பதற்கான முதன்மைக் காரணம் பாஜக ஒரு மதவாதக் கட்சி என்பதே. அதற்கு பாபர் மசூதி, குஜராத் கலவரம் ஆகியவை உதாரணமாகக் காண்பிக்கப்படுகின்றன. எனவேதான் அத்வானியும் மோதியும் வில்லன்கள். (இப்போது மோதி பெரிய வில்லன். அத்வானி கொஞ்சம் தேவலாம்.)

ஆக, இந்துத்துவத்தை வெறுத்து செகுலரிசத்தை முன்வைக்கும் இடதுசாரி லிபரல்கள், செகுலர் கட்சி ஆட்சியில் இருந்தால் மட்டுமே தமக்கு நன்மை என்று நினைக்கும் சிறுபான்மை மதக் கட்சிகள், இந்துத்துவம் என்பது உயர் சாதித்துவம் என்று நினைக்கும் தலித்துகள், இந்து மதம் என்பதே புரட்டு, எனவே இந்துத்துவ பாஜக எதிர்க்கப்படவேண்டியது என்று கருதும் திராவிடவாதிகள். இப்படி இவர்கள் எல்லோரும் எதிர்க்கும்போது பாஜகவை நான் ஏன் ஆதரிக்கவேண்டும்? அதுவும் முக்கியமாக மோதிக்கு ஏன் ஆதரவு தெரிவிக்கவேண்டும்?

என் காரணங்கள் தெளிவானவை. நான் என்னை மதச்சார்பற்றவன் என்றே நினைத்துக்கொள்கிறேன். கடவுள் நம்பிக்கை அற்றவன். பாஜக அரசியல்வாதிகளின் விசித்திரமான பல கருத்துகள் எனக்குக் குமட்டலை ஏற்படுத்துபவை. சமீபத்தில் ஒரு மகானுபாவர் உதிர்த்த கருத்துகள் (“கல்யாணம் ஆவதற்குமுன்பு பெண்கள் ஜீன்ஸ் போட்டுக்கொள்ளக்கூடாது. மொபைல் போன் வைத்துக்கொள்ளக்கூடாது.”) போன்று பெரும்பாலும் பிற்போக்கான கருத்துகள் பலவற்றை பாஜகவினரிடம் நான் பார்க்கிறேன். மும்பையில், உள்ளாடைகளைப் போர்த்தும் நிர்வாண பொம்மைகளைக் காட்சிக்கு வைக்கக்கூடாது என்பதை முன்மொழிந்த ஜோக்கர்கள், அல்லது வேலண்டைன் டே கொண்டாடக்கூடாது, பெண்கள் ஆண்களுடன் பாருக்குச் சென்று குடிக்கக்கூடாது போன்ற முட்டாள்தனமான கருத்துகளை முன்வைப்பவர்கள் இக்கட்சியில் அல்லது கூட்டணியில் உள்ளனர். அடிப்படைவாதத் தூய்மைவாத உணர்வு என்பது மிக அபாயமானது என்பது என் கருத்து. ஆர்.எஸ்.எஸ்மீது எனக்கு மிகுந்த சந்தேக உணர்வு உண்டு. வி.எச்.பி போன்ற அமைப்புகள்மீது கடும் வெறுப்பு உண்டு.

என் கருத்துகள் பொருளாதாரத் தளத்தில் வலதுசாரிப் பார்வை கொண்டவை. நாட்டின் பாதுகாப்பு, தேசத்தின் தன்மானம், தேசத்தின் கௌரவம் ஆகியவையும் எனக்கு முக்கியம். ஆனால் சமூகத் தளத்தில் அதிகபட்ச தனிநபர் சுதந்தரம் வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கலாசாரப் போலீஸ்களைக் கடுமையாக வெறுக்கிறேன். என் பார்வையில் என் கருத்துகளுடன் முழுமையாக ஒத்துப்போகும் அரசியல் கட்சி ஏதும் இல்லை. எனவே நான் சமரசம் செய்துகொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறேன். சமூகத் தளம் முக்கியமா, பொருளாதாரத் தளம் முக்கியமா என்று சிந்திக்கவேண்டிய நிலையில் இருக்கிறேன்.

காங்கிரஸின் பொருளாதாரப் பார்வை எனக்கு ஏற்புடையதாக இருந்து (நரசிம்ம ராவ்-மன்மோகன் சிங்), அதன் உட்கட்சி ஜனநாயகம் சிறப்பானதாக இருந்து, ஊழல் குறைவாக (அல்லது இல்லாததாக) இருந்தால் நான் கட்டாயம் அக்கட்சியையே ஆதரிப்பவனாக இருந்திருப்பேன். ஆனால் அப்படிப்பட்ட நிலை இன்று இல்லை. என்முன் இருக்கும் வாய்ப்புகள் என்ன என்று பார்க்கும்போது, மோதி தலைமையிலான பாஜக அதிக நம்பிக்கை அளிக்கிறது. கவனியுங்கள், பாஜக அதிக நம்பிக்கையளிக்கிறது என்று நான் சொல்லவில்லை; மோதியின் தலைமையிலான பாஜக அதிக நம்பிக்கையளிக்கிறது என்று சொல்கிறேன். வலுவான தொழில் வளர்ச்சி, வலிமையான பொருளாதாரம், தொலைநோக்குள்ள உள்கட்டமைப்பு, அழுத்தங்கள் அற்ற கல்விக்கொள்கை போன்றவற்றை முன்வைக்கும், தனிநபர் சுதந்தரத்தைக் கட்டிக்காக்கும் ஓர் அமைப்பாக, அதே நேரம் உலக அரங்கில் இந்தியாவுக்குச் சிறப்பான ஓரிடத்தைப் பெற்றுத்தரும் ஓர் அரசை மோதியால் அமைக்க முடியும் என்றும் நான் நம்புகிறேன். இந்த அமைப்பின்கீழ் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்று நம்புகிறேன். கலாசார போலீஸ்கள் கட்டுப்பாட்டில் வைக்கப்படுவர் என்று கருதுகிறேன். அப்போதும்கூட தினம் கருத்து முத்துகளை ஆர்.எஸ்.எஸ் ஆசாமிகளும் பாஜக அரசியல்வாதிகளும் உதிர்த்துக்கொண்டிருப்பர். அது எனக்குப் பிரச்னை இல்லை. அது என் வாழ்வையோ பிற குடிமக்களுடைய வாழ்வையோ பாதிக்கக்கூடாது. அமெரிக்காவின் அதி தீவிர கிறிஸ்தவ வலதுசாரிக் கருத்துகள் எப்படி அமெரிக்கப் பொதுமக்களுடைய வாழ்க்கையை பாதிக்காதவகையில் எதிர்க்கப்படுகின்றனவோ அதைப்போல பாஜக/ஆர்.எஸ்.எஸ் அல்லது பிற அதிதீவிர அடிப்படைவாதிகளின் தூய்மைவாதக் கருத்துகள் கட்டுக்குள் வைத்திருக்கப்படும் என்று நம்புகிறேன்.

இந்த என் நம்பிக்கை ஓர் இந்துவாக, ஒரு பிராமணனாக நான் பிறந்திருப்பதால்தான் எனக்குச் சாத்தியமாகியிருக்கிறது என்று ஒருவர் கருதக்கூடும். அவரை நான் குற்றம் சொல்ல முடியாது. ஒரு முஸ்லிமாக, ஒரு தலித்தாக மோதியின் ஆட்சியிடமிருந்து என்னதான் பெற்றுவிட முடியும் என்பதை அவரவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் ஒரு தலித்தோ, ஒரு முஸ்லிமோ மோதியிடமிருந்து மோசமான ஒரு எதிர்காலத்தை மட்டுமே பெறுவார்கள் என்ற கருத்து தவறானது என்பது மட்டும் எனக்கு உள்ளுணர்வில் தோன்றுகிறது. எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் ஒரு முஸ்லிமுக்கும் ஒரு தலித்துக்கும் சமமாகவே கிடைக்கும் என்றே நான் நம்புகிறேன்.

அந்த நம்பிக்கை உள்ளவரையிலும் நான் மோதியை ஆதரிப்பேன்.

Wednesday, June 12, 2013

பாஜகவின் கூட்டாளிகள்

இட்லிவடையில் நான் நேற்று எழுதிய பதிவு

2014 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலைக் குறிவைத்து பாஜக நகரத்தொடங்கிவிட்டது. காங்கிரஸ் இதைப்பற்றி அவ்வளவு கவலைப்படவேண்டியதில்லை. ஆனால் பாஜகவுக்கு உண்மையிலேயே அவசரம். அதனை அவர்கள் பல வாரங்களாக உணராமல் இருந்தார்கள். அதன்பின் மூன்று முக்கியமான விஷயங்கள் நடந்தேறியுள்ளன.

(1) நிதின் கட்காரி கட்சித் தலைவர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். ராஜ்நாத் சிங் அந்த இடத்துக்கு வந்தார்.
(2) ஒருவர்பின் ஒருவராக நரேந்திர மோதிதான் கட்சியின் தேர்தல் பணிகளை முன்னெடுத்துச் செல்லச் சரியான நபர் என்று முடிவெடுத்தனர். கட்சியின் பிரசாரக் குழுத் தலைவர் பதவி அவருக்குத் தரப்பட்டது. தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் சக்தியாக இவர் ஆகியுள்ளார்.
(3) ராஜினாமா என்று அழிச்சாட்டியம் பண்ணிய கட்சியின் மூத்த தலைவர் அத்வானி அடக்கிவைக்கப்பட்டுள்ளார்.

மோதி முதலில் பாஜக உட்கட்சிப் பிரச்னைகளைச் சமாளிக்கட்டும், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றார்கள் பல நோக்கர்கள். உட்கட்சி விஷயம் பெரும்பாலும் முடிவாகிவிட்டது. அடுத்த சிக்கல் தேசிய ஜனநாயக முன்னணி என்ற நாமகரணம் சூட்டப்பட்ட நெல்லிக்காய் மூட்டையைப் பற்றியது.

பாஜகவின் இன்றைய கூட்டாளிகள் யார் யார்?
  1. பிகாரின் நிதிஷ் குமார், அவருடைய ஐக்கிய ஜனதா தளம்.
  2. மகாராஷ்டிரத்தின் சிவ சேனை, இப்போது பால் டாக்ரேயின் மகன் உத்தவ் டாக்ரே கட்டுப்பாட்டில்.
  3. பஞ்சாபின் ஷிரோமனி அகாலி தளம், பிரகாஷ் சிங் பாதல் தலைமையில்
  4. இதுதவிர இங்கே ஒன்று, அங்கே ஒன்று என்று உருப்படியில்லாத கட்சிகள்.
முதல் மூவரிடமும் சேர்ந்து 35 எம்.பிக்கள் இருக்கின்றனர். பிற கூட்டாளிகள் சேர்ந்து 5 எம்.பிக்கள்.

இதுதவிர, பாஜக ஒரு மதவெறிக் கட்சி என்று சொல்லிக்கொண்டு அவர்களோடு சேராமல், அதே சமயம் கடுமையான காங்கிரஸ் எதிர்ப்பு நிலையிலும் இருக்கும் சில கட்சிகள் உள்ளன. சந்திரபாபு நாயுடுவின் தெலுகு தேசம், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஆகியவை. இதுதவிர, ஜெயலலிதாவின் அஇஅதிமுகவும் நேரடியாக தேசிய ஜனநாயக முன்னணியில் இல்லை. தெலுகு தேசமும் பிஜு ஜனதா தளமும் காங்கிரஸ் கூட்டணியில் ஒருபோதும் இருக்காது. ஆனால் அதே நேரம் பாஜகவை நேரடியாக ஆதரித்தால் முஸ்லிம் வாக்குகள் போய்விடுமோ என்ற தேவையற்ற பயமும் உண்டு. எனவே பாஜகவால் இவர்களை நம்ப முடியாது. ஆனால் ஜெயலலிதாவின் ஆதரவு தேர்தலுக்குப்பின் பாஜகவுக்கு இருக்கும். அதேபோல உத்தரப் பிரதேசத்தின் சமாஜவாதி கட்சியும் பகுஜன் சமாஜவாதிக் கட்சியும் தேர்தல் நேரத்தில் பாஜகவையும் ஆதரிக்க மாட்டார்கள்; காங்கிரஸையும் ஆதரிக்க மாட்டார்கள். ஆனால் தேர்தலுக்குப்பின், இப்போதைப்போல் காங்கிரஸுக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவார்கள். பாஜகவுக்கு அதுவும் தர மாட்டார்கள்.

சரி, இருக்கும் கூட்டாளிகளைப் பார்ப்போம் என்றால், ஐக்கிய ஜனதா தளம் இன்றோ நாளையோ கூட்டணியிலிருந்து வெளியேறிவிடும் என்று தெரிகிறது. நிதிஷ் குமாருக்கு மோதியைப் பிடிக்கவில்லை. அதற்கு பாஜக ஒன்றும் செய்ய முடியாது. நிதிஷ் குமார் வெளியேறட்டும் என்று விட்டுவிடவேண்டியதுதான். பாஜக ஆட்சியிலிருந்து விலகினாலும் நிதிஷ் குமாரால் ஒரு மைனாரிட்டி ஆட்சியை பிகாரில் தரமுடியும். அங்கே உள்ள மொத்த இடங்கள் 243. ஐக்கிய ஜனதா தளத்தின் கையில் இருக்கும் இடங்கள் 115. பாஜக 91. ஐக்கிய ஜனதா தளத்தின் தேவை 122. எனவே மேற்கொண்டு தேவைப்படும் 7 இடங்களை காங்கிரஸ் (4), கம்யூனிஸ்ட் (1), மீதம் சுயேச்சைகள் என்று ஒப்பேற்றிவிடலாம். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் பிகாரில் பாஜகவின் வாய்ப்புகள் குறையும்.

மகாராஷ்டிரத்தில் சிவ சேனை, பால் டாக்ரே மறைவுக்குப்பின் வலு குறைந்துபோயுள்ளது. உத்தவ் - ராஜ் டாக்ரே குடும்பச் சண்டையும் காரணம். மகாராஷ்டிரத்தில் பாஜக கட்சி வளர்ச்சிக்கென்று ஒன்றும் பெரிதாகச் செய்யவும் இல்லை.

பஞ்சாப் கூட்டாளி தேவலாம். ஏதோ மோதியின் தேர்வைப் பெரிய பிரச்னையாக ஆக்கவில்லை என்பதால். ஆனால் பஞ்சாபில் உள்ள இடங்கள் மிகவும் குறைவு.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், காங்கிரஸ் தன் ஆட்சியைத் தக்கவைக்க அதிகம் சிரமப்படவேண்டியதில்லை. ஆனால் மாற்றத்தைக் கொண்டுவர நரேந்திர மோதி மிகக் கடுமையாக உழைக்கவேண்டும். சொந்தமாகவே 200-210 இடங்கள் வருமாறு வேலை பார்க்கவேண்டும். இது மிக மிகக் கடினமான வேலை என்பதை நினைவில் கொள்ளுங்கள். மார்ஜினல் தொகுதிகள் அனைத்தையும் பாஜக வசம் சாய்க்கவேண்டும். அதற்கு இன்றிலிருந்தே ‘தீயாக’ வேலை செய்யவேண்டும்.

நரேந்திர மோதி இதனை எப்படிச் செய்யப்போகிறார் என்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். உத்தரப் பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மூன்று மாநிலங்கள் முக்கியமாக அமையும். இங்குதான் பாஜகவுக்கு லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவை தவிர, சில போனஸ் மாநிலங்களாக ஆந்திரம், ஒரிஸா, மேற்கு வங்கம் ஆகியவை இருக்கலாம். 3-4 இடங்கள் இந்த ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் கிடைத்தால் ஒரு பத்து தேறலாம். நிதிஷ் குமாரை எப்படியும் இழக்கப்போவதால் பிகாரில் பின்னடைவு ஏற்படும். ஆனால் மோதியை முன்னிறுத்தி அதிகபட்சமாக எவ்வளவு இடங்களை அங்கே கைப்பற்ற முடியும் என்பதைப் பார்க்கவேண்டும். உத்தரப் பிரதேசத்தில் நான் கேள்விப்படுவதுவரை பாஜகவின் கட்டமைப்பு மிக வலுவற்றதாக உள்ளதாம். எப்படி அதனைக் கொண்டு அந்த மாநிலத்தில் பெரும் மாற்றத்தை மோதியால் ஏற்படுத்த முடியும் என்பதையும் பார்க்கவேண்டும்.

Friday, June 07, 2013

என் வீட்டுக் கூரைமீது சூரிய ஒளி மின்சார உற்பத்தி

இது சுருக்கமான பதிவு மட்டுமே. விரிவான பதிவு(கள்) தயாராகிக்கொண்டிருக்கின்றன. பின்னர் வெளியாகும்.

சில மாதங்களுக்குமுன், என் வீட்டுக் கூரைமேல் சூரிய ஒளி மின் உற்பத்தித் தகடுகளைப் பதித்து மின் உற்பத்தி செய்து, அதிலிருந்து என் வீட்டுத் தேவைகளை ஓரளவுக்காவது பூர்த்தி செய்துகொள்ளவேண்டும் என்று முடிவெடுத்தேன். இறுதியில் S & S Flow Engineering என்ற அம்பத்தூர் நிறுவனம் ஒன்றின்மூலம் இதனைச் செய்வது என்று தீர்மானித்தேன். அந்நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி சதீஷுடன் பேசியபின், என் வீட்டிலும் அலுவலகத்திலும் மின் இணைப்புகளைப் பராமரிக்கும் பாஷாவுடனும் கலந்து ஆலோசித்து, எம்மாதிரியான மின் இணைப்பு மாற்றங்களைச் செய்யவேண்டியிருக்கும் என்று குறித்துக்கொண்டேன்.

விரிவான ஆய்வுகளைப் பின்னர் தருகிறேன். ஆனால் சுருக்கமாக, சென்னை போன்ற இடத்தில், சூரிய மின் உற்பத்தியினால், போட்ட காசு அளவுக்குச் சேமிப்பு ஏற்படும் என்று நினைப்பது இப்போதைக்குத் தவறு. நீங்கள் அதிகம் செலவழிக்கிறீர்கள். இதுதான் இன்றைய நிலை. ஆனால் இந்த நிலை வரும் ஐந்தாண்டுகளில் மாறலாம் என்பது என் கருத்து. எனவே சென்னை போன்ற நகரங்களில் சமூக உணர்வு இருந்தால் மட்டுமே நீங்கள் இதில் இறங்கப்போகிறீர்கள். ஆனால் மிக அதிக மின்வெட்டு இருக்கும் சிறு நகரங்களில் அல்லது கிராமங்களில் நிலைமை வேறு. அங்கெல்லாம் தரமான மின்சாரம் வேண்டும் என்ற காரணத்தால் நீங்கள் இந்த முதலீட்டில் இறங்கலாம். என் கணிப்பில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க நீங்கள் யூனிட் ஒன்றுக்கு கிட்டத்தட்ட ரூ. 20 வரை செலவழிக்கிறீர்கள். தமிழ்நாடு மின் உற்பத்தி & விநியோக கம்பெனியிடமிருந்து கிடைக்கும் மிக விலையதிக மின்சாரம், வீடுகளுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 5.75/- ஆகிறது. ஆனால் நீங்கள் டீசல் ஜெனரேட்டர்போலப் பயன்படுத்தினால் யூனிட் ஒன்றுக்கு ரூ. 30/-க்கு மேல் ஆகிவிடும்.

என் வீட்டில் ஒரு இன்வெர்ட்டர் இருந்தது. இரண்டு மணி நேர மின்வெட்டை அதனால் சமாளிக்க முடிந்தது. ஒரு சில விளக்குகள், சில மின்விசிறிகள், சில பிளக் பாயிண்டுகளை மட்டும் இந்த இன்வெர்ட்டரில் இணைத்திருந்தேன். மாதம் ஒரு நாள் 8 மணி நேர மின்வெட்டைச் சமாளிக்க இந்த இன்வெர்ட்டரால் முடியாது. பெரும்பாலும் அந்த தினத்தன்று வீட்டில் உள்ளோர் அனைவரும் அலுவலகம்/பள்ளி சென்றுவிட்டால் பிரச்னை இல்லை. இல்லாவிட்டால் சிக்கல்தான். எனவே இன்வெர்ட்டரை வலுப்படுத்தி, மேலும் சில பேட்டரிகளைச் சேர்க்கலாமா என்று எண்ணியபோதுதான், வேண்டாம், பேசாமல் சூரிய மின் சக்திக்குத் தாவிவிடலாம் என்ற யோசனையை முன்னெடுத்தேன்.

எம்மாதிரியான வடிவமைப்பு?
  • 5 x 230 W சூரிய மின்தகடுகள் (Manufactured by EMMVEE)
  • 4 x 12V உயரவாக்கு பேட்டரிகள் (Manufactured by Southern Batteries)
  • இன்வெர்ட்டர்/கண்ட்ரோலர் (Manufactured by S & S Flow Engineering)
நான் இருப்பது பல வீடுகளைக் கொண்ட அடுக்ககம். ஆனால் அடுக்குமாடி என்றெல்லாம் இல்லாமல் நீள வாக்கில் பல வீடுகளைத் தன்னகத்தே கொண்டது. ஒவ்வொரு அமைப்பிலும் மொத்தம் மூன்று வீடுகள். தரைத்தளத்தில் ஒரு வீடு; டியூப்ளே முறையிலான இரு வீடுகள் அதன்மேல் அமைந்தவை. மேலே அமைந்துள்ள இரு வீடுகளுக்கும் சற்றே பெரிய (400 சதுர அடி) திறந்தவெளி மாடி உண்டு; அதற்குமேல் மொட்டைமாடியும் உண்டு. ஒரு பகுதியில் சரிவான கூரையும் உண்டு. எனவே சூரிய மின்தகடுகளை வைப்பதற்குச் சிக்கல் இருக்கவில்லை. யாருடைய முன் அனுமதியையும் வாங்கவேண்டி இருக்கவில்லை. மேலும் என் வீட்டின் மாடியில் உள்ள கூரை மிக வாட்டமாக அமைந்துபோனது.

கூரையின்மீது சூரிய மின்தகடுகள்
சூரிய மின்தகடுகளை நாம் இருக்கும் வெப்பமண்டலப் பகுதியில், வடக்கு தெற்காக சுமார் 20 டிகிரி கோணத்தில் சாய்ந்தவாறு அமைக்கவேண்டும். எங்கள் மாடியின் ஒரு பகுதியின் கூரை கிட்டத்தட்ட இதே சாய்மானமாக, வடக்கு தெற்காக அமைந்திருப்பது தற்செயலானது. எனவே அதையே பயன்படுத்தி அதன்மேலேயே அமைத்துவிடலாம் என்று முடிவெடுத்தார் பொறியாளர் சார்லஸ். இல்லாவிட்டாலும் ஒன்றும் பாதகமில்லை. அந்தச் சாய்மானம் இருக்குமாறு அமைப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

கூரை என்றாலும் அதன்மேல் மின்தகடுகளை அப்படியே சும்மா வைத்துவிட முடியாது. காங்க்ரீட்டால் ஓரடி உயரத்துக்கு ஆறு தூண்களை எழுப்பி, அவற்றின்மீது இரு நீண்ட இரும்பு பிராக்கெட்டுகளை வைத்து அவற்றின்மீது ஐந்து மின்தகடுகளையும் போல்ட் கொண்டு முறுக்கி அமைக்கவேண்டும். முதலில் காங்க்ரீட் தூண்களை எழுப்பி, அதன்மீது சிமெண்ட் பூசி, அது க்யூர் ஆக இரண்டு நாள்கள் ஆனது. அதற்கு அடுத்த நாள் வெகு வேகமாக, இரும்புக் கம்பிகளை அமைத்து, அவற்றின்மீது மின்தகடுகளைப் பொருத்திவிட்டார்கள்.

நான்கு மின்கலங்களும் இன்வெர்ட்டரும்
அடுத்து வீட்டினுள் மின் இணைப்புகள். ஏற்கெனவே இன்வெர்ட்டரில் இயங்க என்று சில விளக்குகள், மின்விசிறிகள் தனிச் சுற்றில் இருந்தன அல்லவா? அவற்றையும் மேலும் பல கருவிகளையும் இப்போது ஒன்றுசேர்த்து, புதிய சூரிய இன்வெர்ட்டருடன் இணைக்கவேண்டியிருந்தது. ஏனெனில் இப்போது நிறுவப்பட்டிருக்கும் நான்கு மின்கலங்களைக் கொண்டு மேலும் பல மின்கருவிகளை இயக்க முடியும். இன்வெர்ட்டர் 1.5 KVA திறன் கொண்டது. 1,100 வாட் அளவுக்கான மின் கருவிகள் ஒரே நேரத்தில் இயங்கலாம். சில கருவிகள் நீங்கலாக கிட்டத்தட்ட வீட்டில் உள்ள அனைத்து மின்கருவிகளையும் இந்த இன்வெர்ட்டர் இணைப்பின்கீழ் கொண்டுவந்தோம்.

எந்தக் கருவிகளை இணைக்கவில்லை? ஏசி, ரெஃப்ரிஜிரேட்டர், மைக்ரோவேவ் அவன், கிரைண்டர், இண்டக்‌ஷன் ஸ்டவ் ஆகியவற்றை இணைக்கவில்லை. இவை அதிக மின்சக்தியை உறிஞ்சக்கூடியவை. ஆனால் வாஷிங் மெஷின், ரைஸ் குக்கர், மிக்ஸி போன்ற குறைந்த சக்தி கொண்ட கருவிகளுக்கான இணைப்பை இன்வெர்ட்டரில் கொடுத்தாயிற்று. மற்றபடி, டிவி முதற்கொண்டு அனைத்தும் இன்வெர்ட்டரில்.

இடமிருந்து வலம்:
பொறியாளர் சாலமன், உதவியாளர்கள் காந்தி, யோகேஸ்வரன்,
மின்னாளர் பாஷா, விற்பனையாளர் சதீஷ்
மின் பொருள்கள் பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு உதவியாகக் கீழ்க்கண்ட பட்டியல்:

1. சி.எஃப்.எல் விளக்கு: 10-20 வாட் மின்சக்தி
2. டியூப் லைட்: 40 வாட்
3. மின்விசிறி: 80-100 வாட்
4. டிவி: 150 வாட் (சிறியதாக இருந்தால் குறையலாம். மிகப் பெரியதாக இருந்தால் அதிகமாகலாம்.)
5. வாஷிங் மெஷின், மிக்ஸி, ரைஸ் குக்கர்: சுமார் 500 வாட்

லாப்டாப், மொபைல் போன் போன்றவற்றுக்கெல்லாம் மிகக் குறைவான மின்சக்தியே தேவைப்படும். டெஸ்க்டாப் கணினிக்கு அதிகம் தேவை. என் வீட்டில் அப்படிப்பட்ட ஒரு ஜந்து இருக்கிறது. அதற்கு ஒரு குட்டி யு.பி.எஸ்ஸும் இருக்கிறது. பிரிண்டர் ஒன்று இருக்கிறது. அதனை இன்வெர்ட்டரில் சேர்க்கவில்லை. அதுவும் அதிக கரண்டை இழுக்கக்கூடியதே. விரைவில் வீட்டில் உள்ள டெஸ்க்டாப்பை ஒழித்துவிடுவேன்.

மின் இணைப்புகளை வேண்டியபடி மாற்றிவிட்டதும், அனைத்தையும் இன்வெர்ட்டர்/கண்ட்ரோலரில் இணைத்தனர். அவ்வளவுதான், சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தியாக ஆரம்பித்துவிட்டது. இது தொடங்கியதும் வீட்டில் ஏற்கெனவே இருந்த இன்வெர்ட்டரைக் கழற்றி வேறு ஒருவருக்குக் கொடுத்துவிட்டேன்.

மொத்தமாக மூன்று நாள்கள் வேலை நடந்தது. அவ்வளவுதான்.

இந்த கண்ட்ரோலர் பற்றிச் சிறிய குறிப்பு. இது கீழ்க்கண்ட வேலைகளைச் செய்கிறது:

1. சூரிய மின்தகடுகள் உற்பத்தி செய்யும் டிசி (DC - Direct Current) மின்சாரத்தைப் பெற்று, அதைக் கொண்டு பேட்டரிகளை சார்ஜ் செய்கிறது.
2. பேட்டரியிலிருந்து டிசி மின்சாரத்தை எடுத்து ஏசி (AC - Alternating Current) மின்சாரமாக ஆக்கி அதன் இணைப்பில் உள்ள அனைத்து மின் கருவிகளையும் இயக்குகிறது.
3. பேட்டரியில் உள்ள சார்ஜ் மிகவும் குறைவாகப் போனால், உடனே மெயின்ஸிலிருந்து (வீட்டுக்கு உள்ளே வரும் தமிழ்நாடு மின் உற்பத்தி & விநியோக நிறுவனத்தில் இணைப்பு) மின்சாரத்தை எடுத்து மேலே சொன்ன கருவிகளை இயக்குகிறது.
4. ஒரு குட்டித் திரையில் பல்வேறு எண்ணிக்கைகளைக் காண்பித்துக்கொண்டே இருக்கிறது. உதாரணமாக:
    (அ) தற்போது உற்பத்தியாகும் சூரிய ஒளி மின்சாரம் என்ன பவர் (வாட்), எத்தனை ஆம்பியர் கரண்ட்?
    (ஆ) தற்போது மெயின்ஸிலிருந்து வரும் மின்சாரத்தின் வோல்டேஜ், பேட்டரியின் வோல்டேஜ், மின்கருவிகளுக்குச் செல்லும் மின்சாரத்தின் வோல்டேஜ்.
    (இ) இதுவரையில் (அதாவது கருவி இயங்க ஆரம்பித்ததுமுதல் இந்தக்கணம் வரை) உருவாக்கப்பட்ட சூரிய ஒளி மின்சாரத்தின் அளவு (யூனிட்டுகளில் அதாவது கிலோவாட் ஹவர்களில்)
    (ஈ) இதுவரையில் பேட்டரிமூலம் வீட்டின் மின்கருவிகள் இழுத்திருக்கும் பவர் (யூனிட்டுகளில்). இந்த எண்ணிக்கையும் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தியான அளவும் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கும். இதுதான் நீங்கள் சேமித்திருக்கும் பணமும்.
5.தொடர்ந்து நான்கைந்து நாட்களுக்கு சூரியன் மங்கலாக இருக்கும் (கடும் மழை, புயல்), கூடவே மின்சாரமும் வெட்டுப்படலாம் என்று முன்கூட்டியே நீங்கள் தீர்மானித்தால், இன்வெர்ட்டரின் ஒரு பட்டனைத் தட்டி, மெயின்சிலிருந்து மின்சாரத்தை எடுத்து பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்துகொள்ளலாம். மற்றபடி இதனைப் பயன்படுத்தாமல் இருத்தலே சிறந்தது. ஏனெனில் சூரியனால் மட்டுமே சார்ஜ் ஆகும் பேட்டரி அதிக காலம் வரும் என்கிறார் பொறியாளர்.

கடந்த பத்து நாள்களாக என் வீட்டில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. விந்தை என்னவென்றால் ஆரம்பித்த நாள் முதலாக இன்றுவரை சென்னையில் வானம் மேகமூட்டமாக அல்லது மழையாக உள்ளது. இதனால் ஒரு நாள்கூட அதன் உச்சபட்சத் தயாரிப்பு அளவை இது எட்டவில்லை. என் கணிப்பில் சென்னை வெயில் ஒழுங்காக அடித்தால் ஒரு நாளைக்கு 5 முதல் 6 யூனிட்டுகள் மின்சாரத்தை இது உற்பத்தி செய்யவேண்டும். ஆனால் இதுவரையில் அதிகபட்சமாக சுமார் 4 யூனிட்டுகளை மட்டுமே ஒரு நாள் உற்பத்தி செய்தது. மற்ற நாள்கள் பெரும்பாலும் 3.3 முதல் 3.7 யூனிட்டுகள்தான். (ஆனால் ஆண்டுக்கு 330 நாட்கள் சென்னை வெயில் சுள்ளென்றுதான் அடிக்கும் என்பது என் கணிப்பு. நான் சூரிய ஒளி மின் அமைப்பை நிறுவியதற்காகவென்று சூரியன் தன் இயல்பையா மாற்றிக்கொள்ளப்போகிறது?)

6.00 மணி முதல் சூரிய உதயத்திலிருந்தே மின் உற்பத்தி ஆரம்பித்துவிடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக உற்பத்தி அதிகமாகி, மதிய வெயிலில்தான் மிக அதிகமான உற்பத்தி, பிறகு அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மங்கி, மாலை 6.00 மணிக்கு முற்றிலும் நின்றுவிடும். இந்தக் காலகட்டத்தில் உற்பத்தியான மின்சாரத்தை இரவு முழுதும், பிறகு அடுத்தநாள் காலைக்கும் பயன்படுத்துகிறோம். மீண்டும் அடுத்தநாள் காலை மின்சாரம் உற்பத்தி ஆரம்பித்துவிடும். வானம் மேகமூட்டமாக இருக்கும்போதும்கூடக் கொஞ்சம் உற்பத்தி நடந்துகொண்டுதான் இருக்கிறது. நீங்கள் தொடர்ந்து இந்த எண்ணிக்கைகளைப் பார்த்துக்கொண்டே இருந்தால் வெயிலின் தன்மையை வைத்தே இப்போது 200 வாட், இந்த வெயிலில் 700 வாட் என்று மாறும் வெயிலின் அளவைக்கொண்டே உற்பத்தியைக் கணித்துவிடலாம்.

***

இதனை நிர்மாணிக்க எனக்கு எவ்வளவு செலவானது? மொத்தச் செலவு, வரியையும் சேர்த்து கிட்டத்தட்ட ரூ. 1.8 லட்சம். உங்களுக்கு இதைவிடக் கூட அல்லது குறையலாம். நீங்கள் எந்த நிறுவனத்திடம் போகிறீர்கள் என்பதைப் பொருத்து.

அடுத்து மானியம். மத்திய, மாநில அரசுகள் சூரிய மின் ஒளியை நிறுவுவதற்கு உங்களுக்கு மானியம் தருகிறார்கள். நான் இந்த மானியத்தைப் பெறப்போவதில்லை.

1. மானியம் பெற நீங்கள் விழைந்தீர்கள் என்றால், தமிழ்நாட்டில் இதற்கு ஒரு நடைமுறை உள்ளது. பிற மாநிலங்களில் வேறுபடும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறுவனமேகூட இதனை உங்களுக்குப் பெற்றுத்தரும், அல்லது விலையைக் குறைத்துக்கொண்டு மானியத்தைத் தாங்கள் பெற்றுக்கொள்வார்கள். நீங்களும்கூட மானியத்துக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

2. உங்களுக்காக வேலை செய்யும் நிறுவனம் தாங்கள் மானியத்தைப் பெற்றுத் தருவதாகச் சொல்லிவிட்டால் நீங்கள் மேற்கொண்டு கவலைப்படவேண்டாம். இல்லாவிட்டால் மேற்கொண்டு படியுங்கள்.

3. தமிழ்நாட்டில் TEDA (TamilNadu Energy Development Agency) என்ற அமைப்புதான் இதற்குப் பொறுப்பு. www.teda.in என்ற தளத்தில் சென்று நீங்கள் வீட்டுக்கூரை சூரிய மின் அமைப்பைப் பொருத்துவதாக விண்ணப்பிக்கவேண்டும். 1 கிலோவாட் அமைப்புக்கு மட்டும்தான் மானியம் என்று நினைக்கிறேன். அதற்குமேலான அமைப்புகளுக்கு மானியம் கிடையாது. நீங்கள் இணையம்மூலம் விண்ணப்பித்தபின் 15 நாள்களுக்குள் உங்களுக்கு அனுமதி கிடைக்கும் (என்று சொல்கிறார்கள்).

4. அனுமதி கிடைத்தபின், மத்திய அரசின் Ministry of New and Renewable Energy (MNRE) என்ற அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களைக் கொண்டு உங்கள் சூரிய ஒளி மின் அமைப்பினை நிறுவினால் மட்டுமே உங்களுக்கு மானியம் தரப்படும். நான் பயன்படுத்திய S & S Flow Engineering நிறுவனம் இப்போதைக்கு இந்த அங்கீகாரம் இல்லாத நிறுவனம். விரைவில் அதற்கு விண்ணப்பார்களாம்.

5. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தைக் கொண்டு அங்கீகரிக்கப்பட்ட பொருள்களைக் கொண்டு மின் நிர்மாண வேலைகளை முடித்துவிட்டால், அடுத்து இந்த வேலைகள் முடிந்துவிட்டன என்று TEDA-வுக்கு நீங்கள் எழுதவேண்டும். தொடர்ந்து அவர்கள் உங்கள் வீட்டுக்கு ஆள் அனுப்பி, பரிசீலிப்பார்கள்.

6. அதன்பின் ஆன செலவை நிரூபணங்களுடன் அவர்களுக்கு வழங்கினால், அவர்கள் மத்திய அரசுக்கு உங்கள் சார்பில் எழுதி, சில மாதங்களுக்குள் உங்களுக்கான மானியத் தொகையைப் பெற்றுத் தருவார்கள். இந்த மானியத் தொகை ஆன செலவில், 30% ஆகும்.

7. மாநில அரசு ரூ. 20,000 என்ற தொகையை மேற்கொண்டு தரப்போவதாக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தார். ஆனால் நான் TEDA-வில் கேட்டபோது (பதினைந்து நாட்களுக்குமுன்) இது அரசு ஆணையாக இன்னும் வரவில்லை என்றார்கள். எனவே இது எப்போது ஆணையாக ஆகும், இதற்கான eligibility என்ன என்பதுபற்றி மேற்கொண்டு ஒன்றும் சொல்ல இயலாது. (இந்த மான்யம் ஒவ்வோர் ஆண்டும் முதல் 10,000 நிர்மாணங்களுக்கு மட்டுமே என்பதாற்போலச் செய்தியில் படித்தமாதிரி ஞாபகம்.)

எல்லா மானியங்களும் கிடைத்து, நீங்களும் நன்றாக நெகோஷியேட் செய்தால் உங்களுக்கு மொத்தச் செலவு ஒரு லட்சத்துக்குள் முடியலாம். ஆனால் இப்போதைக்கு அது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. மேலும் நான் விசாரித்தவரையில் (அ) மானியம் பெற்றுத் தருபவர்கள் செலவையும் சற்றுக் கூட்டிச் சொல்கிறார்கள் (ஆ) மானியம் பெறுவதற்குக் கையூட்டு தேவைப்படுகிறது (இ) மானியம் கைக்கு வந்துசேரப் பல மாதங்கள் ஆகின்றன (ஈ) மானியம் வராமலேயே போவதும் நடக்கிறது. இவையெல்லாம் நேரடித் தகவல்கள், சொந்த அனுபவம் ஆகியவை அல்ல என்ற காரணத்தால் ஒரு துளி உப்புடன் சேர்த்தே எடுத்துக்கொள்க.

மிக நீண்டுவிட்டது, எனவே இப்போதைக்கு இது போதும். கேள்விகள் ஏதும் இருந்தால் பதில் சொல்கிறேன். S & S Flow Engineering நிறுவனத்தின் சதீஷைத் தொடர்புகொள்ள செல்பேசி எண் 87544-06127.