Friday, December 31, 2010

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை

சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியாக இருக்கும் என் சிறு நூல். பக்கம்: 88, விலை ரூ. 40.பா.ராகவனின் முன்னுரை

Monday, December 27, 2010

கிழக்கு இலக்கியம்

கிழக்கு பதிப்பகத்திலிருந்து இலக்கியப் புத்தகங்கள் வெளியாவது குறைவுதான். இந்த ஆண்டு வெளியான புத்தகங்கள் இவை:

இந்திரா பார்த்தசாரதியின் முழுச் சிறுகதைகளின் தொகுப்பு, இரு பாகங்களாக வெளியானது. ஒவ்வொன்றும் விலை ரூ. 300/- வெளியானவுடன் டாக் செண்டரில் வைத்த நிகழ்ச்சியில், இரு தொகுதிகளும் சேர்ந்து ரூ. 150/-க்கு அதிரடி விலையில் வழங்கப்பட்டது! கிட்டத்தட்ட 300 பிரதிகள் (இரு தொகுதிகளும் சேர்ந்து) அன்று விற்றது என்று நினைக்கிறேன். பின்னர் சிங்கப்பூரிலிருந்து ஒரு நண்பர் 50 பிரதிகள் வாங்கிச் சென்றார். முழுத் தொகுதிகளுக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. ஒட்டுமொத்தமாக ஓர் எழுத்தாளரின் முழுப் பங்களிப்பை, அவரது எழுத்தில் உள்ள மாற்றத்தைக் காண முழுத்தொகுதி அவசியம். விலை எப்போதுமே சிக்கலானது. (கடந்த ஓராண்டில் காகித விலை 20%-க்கும் மேல் ஏறியுள்ளது என்பது இந்தத் தொழிலில் இருப்போருக்குத் தெரிந்த ஒன்று.) இந்தக் காரணத்தால்தான் இரு தொகுதிகளாக அச்சிட்டோம்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த இரு தொகுதிகளுக்கும் முக்கியமான இடம் இருக்கும்.

ஜெயமோகனின் மூன்று புத்தகங்களை இந்த ஆண்டு கொண்டுவருகிறோம். இரண்டு மீள்பதிப்புகள். ஏழாம் உலகம் (நான் கடவுள் சினிமாவுக்கான ஒரு இன்ஸ்பிரேஷன்) தமிழினி வெளியீடாக வந்து அச்சில் இல்லாமல் போனது. அதை ஆண்டின் இடையில் கொண்டுவந்திருந்தோம். விசும்பு என்ற அறிவியல் சிறுகதைகளின் தொகுப்பு எனி இந்தியன் பதிப்பக வெளியிடாக வந்திருந்தது. அதுவும் இப்போது கிழக்கு மீள்பதிப்பாக வெளியாகிறது. இறுதியாக உலோகம், ஜெயமோகனின் இணையத்தளத்தில் வெளியாகி, பரபரப்புடன் பேசப்பட்டது. அதனை பல்ப் ஃபிக்‌ஷன் வெளியீடுபோல, கிரவுன் 1/8 அளவில், அட்டையில் தங்க முலாம் எல்லாம் பூசிக் கொண்டுவருகிறோம். விறுவிறுவெனச் செல்லும் சாகசக் கதை.

வெகு நாள்களாகக் கையில் இருந்த மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மருந்து என்ற புதினம் இந்த ஆண்டின் இடையில் வெளியானது. தமிழாக்கியவர், மலையாள மனோரமாவில் வேலை செய்யும் ராமன்.

பா. ராகவனின் இரு புதினங்கள் வெளியாகின்றன இம்முறை. இலக்கியப்பீடம் பரிசு பெற்ற அலகிலா விளையாட்டு ஒன்று, கல்கியில் தொடர்கதையாக வெளியான கொசு.

கதையாக அன்றி, அனுபவக் கட்டுரைகளாக, ஆனால் சிறுகதைக்கு உரிய சுவாரசியத்தை இழக்காமல் இருப்பது அ. முத்துலிங்கத்தின் கட்டுரைகள். அவரது இணையத்தளம், பல பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகள் என அனைத்தையும் தொகுத்து நாங்கள் கொண்டுவரும் புத்தகம் அமெரிக்க உளவாளி.

ஜே.எஸ். ராகவன் மாம்பலம் டைம்ஸில் தொடர்ந்து எழுதிவரும் தமாஷா வரிகளின் இந்த ஆண்டுத் தொகுப்பு, அன்புள்ள சண்டைக்கோழியே... என்று வெளியாகிறது. இதற்கு முந்தைய தமாஷா வரிகளின் தொகுப்புகள் இங்கே கிடைக்கின்றன.

சுஜாதா புத்தகங்கள் பற்றித் தனியாக எழுதிவிட்டேன். மேலும் இரு பதிவுகள் சுஜாதா புத்தகங்கள் தொடர்பில் வரும். வேறு சில இலக்கியப் புத்தகங்களை இந்த ஆண்டு கொண்டுவர முயற்சித்து, முடியாத நிலையில் உள்ளன. இவை வரும் மாதங்களில் வெளியாகும்.

Saturday, December 25, 2010

எந்திரன்

நேற்று எந்திரன் படம் ஒருவழியாகப் பார்த்தாயிற்று. எல்லோரும் மன்மதன் அம்பைக் குத்திக் கிழிக்கும்போது (நடுவில் ஏதோ நந்தலாலா என்று படம் வந்ததாமே?) விடாது எந்திரனைப் பற்றி எழுதியே தீருவது என்று முடிவெடுத்துவிட்டேன்.

முதலில் ஐஸ்வர்யா ராய்தான் ரோபாட் என்று நினைத்துவிட்டேன். ஆரம்பக் காட்சி முதல், முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது ஏதோ தேசத்து பொம்மை மாதிரி வந்தார். அவரைப் பார்த்தால் இந்தியர் மாதிரியே தெரியவில்லை. முகத்தில் என்னென்னவோ செய்திருக்கிறார்கள் போல. ஆடல் பாடல் காட்சிகளில்கூட ரசிக்கமுடியவில்லை. சிட்டி கட்டிய கோட்டைக்குள் வசீகரன் நுழைந்துவிட்டான் என்று தெரிந்துகொள்ளும்போதும், பின்னர் மின்சாரம் இன்றி சிட்டியும் பிற ரோபாட்களும் விழுந்து தடுமாறும்போதும் ஒரு தேர்ந்த நடிகையாயிருந்தால் பின்னியிருப்பார். ஐஸ்வர்யா ராயின் நடிப்பைப் பார்த்தால் அழுகைதான் வருகிறது. அம்மணி ரிட்டயர் ஆகிவிடலாம்.

திரைக்கதை சொதப்பல்கள் நிறைய. ரோபாட்களைச் செய்ய வசீகரனுக்கு இரண்டே இரண்டு குப்பைப் பசங்கள்தான் உதவியாளர் என்றால் சிரிப்புதான் வருகிறது. அதிலும் ஒருத்தன் வெறும் நட் போல்ட் முடுக்குவானாம், இன்னொருத்தன் உடை மாற்றுவானாம். இதில் எல்லாம் கவனம் வேண்டியதில்லை, நாலு டான்ஸ் போட்டு கொஞ்சம் கிராபிக்ஸ் காட்டினால் மக்கள் வழிந்துகொண்டே பார்த்துவிடுவார்கள் என்ற அலட்சியம்தான் தெரிகிறது. கொஞ்சம் ஒரு நடை நடந்துபோய் ஒரு கார் ஃபேக்டரியில் பார்த்தாலே தெரியும் எத்தனை எஞ்சினியர்கள், சயண்டிஸ்டுகள் தேவை என்று. மருந்துக்கு பக்கத்து அறைகளில் நாற்பது, ஐம்பது பேர் எதையாவது செய்துகொண்டிருப்பதாகக் காட்டக்கூடாதா? அதைவிடக் கொடுமை டாக்டர் போராவின் ஆராய்ச்சிச் சாலை. அங்கே அந்த ஆளைத் தவிர வேறு ஒருவர்கூடக் கிடையாது. வெளிநாட்டு (ஜெர்மன் மொழி பேசும்) குண்டர்களுடன் உறவாடும்போது மட்டும் சில டஃப் ஆசாமிகள் தென்படுகிறார்கள். ஆனால் மற்ற நேரங்களில் அவர்களும் மிஸ்ஸிங்.

வசீகரன் - சனா உறவு புரியவேயில்லை. சொல்லப்போனால் அது காதல் மாதிரியே இல்லை. இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம் இடிக்கிறது. சரி, விட்டுவிடுவோம். வசீகரன் தாடி ஏதோ ஜடாமுனிவர் மாதிரி சகிக்கவில்லை. எத்தனை ஆண்டுகள் முடி வளர்த்தால் அந்த அளவுக்கு தாடி வளரவேண்டும்?

மெர்சிடிஸ் பென்ஸ் கார்மீது ஏகப்பட்ட புல்லட்டுகள் அடித்தாலும் காருக்கு ஒன்றுமே ஆகமாட்டேன் என்கிறது. (சிட்டி முதலில் கார் ஓட்டும்போது டிராஃபிக் நெரிசலில் டிவைடரில் மோதி காரின் வலது முன்பக்கம் கொஞ்சம் நசுங்குகிறது - நிச்சயமாக எந்த காரும் நசுங்கும். ஆனால் அதன் தொடர் காட்சியிலேயே காரில் எந்த நசுங்கலும் காண்பதில்லை. இதுபோன்ற பல சொதப்பல்களும் உள்ளன.)

போலீஸ்காரர்கள், மிலிட்டரி என்று எல்லாமே முட்டாளதனமாக நடந்துகொள்கிறார்கள். அரசியல்வாதிகள், அமைச்சர்கள், ஆட்சியாளர்கள் என்று யாருமே சினிமாவில் காணக்கிடைப்பதில்லை. நாலு போலீஸ் அதிகாரிகள் மாதிரி இருப்பவர்கள், வசீகரன் சொல்கிறான் பேர்வழி என்று ஏகப்பட்ட ஆயுதங்களுடன் நடு ரோட்டில் குண்டுவெடித்து தூள் கிளப்புகிறார்கள். ஹெலிகாப்டர் வருகிறது. மக்களை எவாகுவேட் செய்வது பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் குண்டு வீசுகிறது. சொல்லப்போனால், இந்தப் படத்தில், ஒரு நகரம், அதில் மக்கள் வசிக்கின்றனர் என்றெல்லாம் எந்த உணர்வும் வருவதில்லை. ஊர் சென்னை என்று ஒருமாதிரி ஊகிக்கமுடிகிறது ஆனால், சிந்த்தெடிக்காக வேறு என்னவெல்லாமோ காட்டிக் குழப்பி, முகமற்ற ஒரு நகரமாகச் செய்துவிடுகிறார்கள்.

சிட்டியால் தீயிலிருந்து காப்பாற்றப்படும் உடையில்லாத சின்னப் பெண்ணைத் தொலைக்காட்சிகள் அசிங்கமாக லைவ் ரிலே செய்வதாகவும், அதனால் அந்தப் பெண் ஓடிச் சென்று லாரியில் மோதி இறப்பதாகவும் காட்டி தமிழ்க் கற்பு சீன் ஒன்று வைத்து டைரக்டர் புளகாங்கிதம் அடையலாம். தியேட்டரில் என் பெண் உட்பட பல குழந்தைகள் கண்களை மூடிக்கொண்டனர். இதுபோன்ற காட்சிகள் எப்படி சென்சார் தாண்டி வருகிறது என்று புரியவில்லை. (இந்தியத் தொலைக்காட்சிகள் அந்த அளவுக்கு மோசமும் அல்ல!)

கடைசி கோர்ட் சீன் நல்ல காமெடி. அதாவது எந்தவித ஆதெண்டிசிடியும் தேவை இல்லை தமிழ் சினிமாப் படம் எடுக்க என்பதை அட்டகாசமாக நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

***

ஆனால் இதையெல்லாம் தாண்டி, அரங்கில் சிறு குழந்தைகள் குதித்துக் குதூகலித்தனர். சிட்டி அந்த இரண்டு அஸிஸ்டெண்டுகளையும் பலான இடங்களில் அடித்துத் தொகைப்பது, பின்னர் நெருப்பால் அடிப்பது, அந்த யூஸ்லெஸ் ஆசாமிகள் பேசும் அருவருப்பான வசனங்கள் போன்ற ஸ்லாப்ஸ்டிக் காமெடி எல்லோருக்கும் பிடிக்கிறது. சில இடங்களில் வசனம் நன்றாக இருந்தது. (சனா பிட் அடிக்க உதவ, பிரெக்னன்சி பற்றி ஆடியோ ரிலே முடித்து, உண்மை சொல்லி மாட்டியபிறகு, வெளியேறும்போது சிட்டி, இன்னும் மென்ஸ்ட்ருவேஷன், ஃபெர்டிலைசேஷன் எல்லாம் முடிக்கலையே எனச் சொல்ல, ‘அதெல்லாம் அவங்க பாத்துப்பாங்க’ என்று டாக்டர்கள் போகிற போக்கில் சொல்வது.)

படத்தில் காட்சிக்குக் காட்சி ஏதோ ஒன்று உறுத்திக்கொண்டே இருந்தாலும் பல விஷயங்கள் மிக நன்றாக இருந்தன. உதாரணமாக, சிட்டி வடிவத்தில் ரஜினியின் கலக்கல் நடிப்பு. சிட்டி சனாவுக்கு உதவியாகச் செய்வதெல்லாம் (சமையல் உட்பட) பார்க்க ஜாலியாக இருக்கிறது. ரயிலில் நடக்கும் சண்டை கொஞ்சம் ஜவ்வு. மற்றபடி சுவாரசியம். சிட்டி-வசீகரன் சீண்டல்கள், முரண்பாடுகள்-கோபங்கள் நன்றாக வந்துள்ளன.

ஓர் இயந்திரம் மனிதனாக முயலும்போது ஏற்படும் அறச்சிக்கல்களை நிஜமாகவே ஒரு நாவலாகச் செய்தால் உலக இலக்கியங்களில் உன்னதமான இடத்தை அடையமுடியும். (ஒருவேளை அப்படிச் சில முயற்சிகள் இருக்கக்கூடும். நான் படித்ததில்லை.) சினிமாவிலும் இருக்கலாம்; நான் பார்த்ததில்லை. டெர்மினேட்டர் பார்த்துள்ளேன். ஐ, ரோபாட் படம் நான் பார்க்கவில்லை. வால்-ஈ ஓரளவுக்கு இதைத் தொடுகிறது. ஆனால் அனிமேஷன் வடிவில் இருந்ததாலும், மனித-இயந்திர உறவு இல்லை என்பதாலும் உயர்ந்த இடத்துக்குப் போகமுடியவில்லை.

கொஞ்சம் மெனக்கெட்டு உழைத்திருந்தால், மிக நல்ல கதையாக, உலகத் தரமான, அதே நேரம் இந்தியர்களையும் கவரக்கூடிய படமாக இருந்திருக்கலாம். ஆனால் அது தேவையில்லாமலேயே பெருமளவு தமிழர்களைக் கவர்ந்துள்ளது இந்தப் படம்.

Friday, December 24, 2010

மொழிபெயர்ப்புப் புத்தகங்கள்

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் புத்தகங்களை மொழிபெயர்ப்பது எளிதல்ல. அவை இலக்கியப் புத்தகங்களாகட்டும், சமகால அரசியல், பொருளாதாரப் புத்தகங்களாகட்டும், ஏன், சாதாரண சுய முன்னேற்றப் புத்தகங்களாகட்டும். ஆங்கில வாக்கிய அமைப்புக்கும் தமிழ் வாக்கிய அமைப்புக்கும் தொடர்பே கிடையாது. எளிதான வாக்கியங்கள் என்றால் பரவாயில்லை. ஆனால் வளைத்து, மடித்து எழுதப்படும் வாக்கியங்கள், எண்ணற்ற மேற்கோள்கள், கலாசாரம் சார்ந்த idioms, துறை சார்ந்த குழூஉக்குறிகள் என்று தமிழாக்கம் செய்ய ரொம்பவே கஷ்டப்படுத்தும். இரு மொழிகளிலும் நல்ல ஞானம் தேவை. நிறையப் பொறுமை தேவை.

ஆங்கிலப் புத்தகங்கள் பெரும்பாலும் 400-500 பக்கங்கள் தாண்டி இருக்கும். குறைந்தபட்சம் 300 பக்கங்கள். தமிழாக்கம் செய்யும்போது, தமிழின் நீள நீளமான வார்த்தைகளும் inflexional முறையும் சேர்ந்து, ஒன்றரை மடங்கு விரிவாகும். சரியாக மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை என்றால், ஒரு வரியைப் படித்தவுடனேயே தெரிந்துவிடும். மிகவும் அந்நியமாகத் தோன்றும்.

சென்ற ஆண்டு நாங்கள் கொண்டுவந்த சில புத்தகங்கள் மொழிபெயர்ப்பை சிறப்பாகச் செய்தன. முதலாவது ராமன் ராஜா மொழிபெயர்த்த, பல்லவி அய்யரின் சீனா பற்றிய புத்தகம்: சீனா: விலகும் திரை. இதைப் படித்த அனைவரும், ஏதோ தமிழில் எழுதப்பட்ட புத்தகத்தைப் படித்ததுபோலவே இருந்தது என்றார்கள். இரண்டாவது புத்தகம்: இலங்கை இறுதி யுத்தம். இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 1, இதில் பெருமளவு வெற்றி கண்டது என்றாலும் இன்னும் சில இடங்களில் கொஞ்சம் தட்டிச் சரி செய்யவேண்டிய வேலைகள் உள்ளன. இந்த ஆண்டு வெளியாகும் பாகம் 2, இந்தப் பிரச்னைகளைக் கடந்துவிட்டது என்றே நினைக்கிறேன். சென்ற ஆண்டு வெளியான சென்னை மறுகண்டுபிடிப்பு புத்தகமும் திருப்தி தரக்கூடியதே.

இந்த ஆண்டு இன்னும் கொஞ்சம் அகலக்கால் வைத்துள்ளோம். முதலில் கொண்டுவந்தது அப்துல் கலாம், ஆசார்ய மஹாபிரக்ஞாவின் குடும்பமும் தேசமும், சுதா சேஷய்யன் மொழிபெயர்ப்பில் (ஆங்கில மூலம் The Family and the Nation, HarperCollins). இது மிகவும் கடினமான ஒரு துறை பற்றியது. இந்திய ஆன்மிகம் பற்றியது. எனவே அதற்கான மொழி தேவைப்பட்டது. அடுத்தது ராமன் ராஜா மொழிபெயர்ப்பில் வந்துள்ள இரண்டாவது புத்தகம். முதல் புத்தகம் போன்றே இதிலும் ராமன் ராஜா வெளுத்துக்கட்டியுள்ளார். போரஸ் முன்ஷி, 11 நிறுவனங்கள் பற்றி, எப்படி அவை புதுமை படைத்துள்ளன என்பது பற்றி எழுதிய புத்தகம் Making Breakthrough Innovations Happen (HarperCollins). தமிழில் திருப்புமுனை என்ற பெயரில் கொண்டுவந்துள்ளோம்.

பர்மிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த ஒருசில போராளிகளை இந்திய ராணுவ உளவுத்துறையின் ஒரு மோசக்கார மேஜர் எப்படி ஏமாற்றினார்; அதன் விளைவாக அந்தப் போராளிகள் இந்திய ஜெயிலில் எப்படி வாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி அந்தப் போராளிகளின் வக்கீலான நந்திதா ஹக்சர் எழுதிய புத்தகம் Rogue Agent (Penguin). இதனை வஞ்சக உளவாளி என்ற புத்தகமாக குமரேசன் மொழிபெயர்த்துள்ளார். மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்படும் ஐரோம் ஷர்மிளா, இந்திய அரசின் Armed Forces Special Powers Act-ஐ எதிர்த்து, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்துவருகிறார். அவரைப் பற்றி தீப்தி பிரியா மெஹரோத்ரா எழுதிய Burning Bright (Penguin) என்ற புத்தகத்தை ராம்கி மொழிபெயர்த்துள்ளார் - ஐரோம் ஷர்மிளா - மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என்று கொண்டுவருகிறோம்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மூன்று புத்தகங்கள் இந்த வரிசையில் முக்கிய இடம் பெறுகின்றன. ஒன்று அவர் அதிபராவதற்குப் பல வருடங்கள் முன்பு எழுதப்பட்ட Dreams From My Father. இதற்கான மொழிமாற்ற உரிமை அவரிடமே இருந்தது. அவரது ஏஜெண்ட் மூலம் இதனைப் பெற்றோம். அடுத்த இரண்டு புத்தகங்களின் ஒன்று அவர் தன்னை அதிபர் பதவிக்கான பிரைமரி வேட்பாளராக முன்வைத்தபோது பேசிய பேச்சுகளின் தொகுப்பு (Audacity of Hope). மற்றொன்று அவரது பிரெசிடென்ஷியல் கேம்பெய்ன்போது பேசிய பேச்சுகளின் தொகுப்பு (Change We can Believe in). இந்த இரண்டு புத்தகங்களும் Random House வெளியீடு. கடைசி இரண்டு புத்தகங்களையும் தமிழாக்கி வெளியிடுவதன் பயன், அவற்றை யார் வாங்கப்போகிறார்கள் என்ற சந்தேகம் இருந்தது. இருந்தும் செய்துதான் பார்ப்போமே என்று முடிவெடுத்தோம். அவை மிகவும் கடினமான மொழிபெயர்ப்புகள்கூட. அக்களூர் ரவி, நாகூர் ரூமி, அருண் மகாதேவன் ஆகியோர் மொழிபெயர்ப்பில் அவை முறையே என் கதை, நம்மால் முடியும், மாற்றம் என்றொரு மந்திரம் என்று வெளியாகியுள்ளன.

பல ஆண்டுகளுக்குமுன் Penguin வெளியீடாக வந்த A Wasted Death என்ற புத்தகம் பிரிட்டானியா நிறுவனத்தை ஒரு காலத்தில் நிர்வகித்த ராஜன் பிள்ளையின் வாழ்க்கை. ராஜன் பிள்ளையின் தம்பி ராஜ்மோகன் பிள்ளையால் எழுதப்பட்டது. அதன் ஆங்கில மறுபதிப்பை நாங்கள் பதிப்பித்தபோது கூடவே தமிழாக்கத்தையும் - நீதியின் கொலை - வெளியிட்டுள்ளோம். படு சுவாரசியமான, மிக வேகமாக நகரும் கதை இது. நிஜ வாழ்க்கையும்கூட. ஜெயிலில் மரணம் அடைந்த ராஜன் பிள்ளை ஒரு கட்டத்தில் இரு நாட்டுக் காவல் துறையால் தேடப்பட்டார். அவர் செய்த குற்றம்தான் என்ன? இன்று பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள பிரிட்டானியா என்ற நிறுவனம் எப்படி ஆரம்பித்தது?

இன்ஃபோசிஸ் நிறுவனத்தை ஆரம்பித்த மூத்தவரான நாராயண மூர்த்தி, பல பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்களிலும் இன்னபிற இடங்களிலும் அளித்த சொற்பொழிவுகளின் தொகுப்பை பெங்குவின் A Better India, A Better World என்ற பெயரில் நூலாக வெளியிட்டது. அதன் தமிழாக்கத்தை அக்களூர் ரவி செய்ய, அதனை புதிய கனவுகள், புதிய இந்தியா என்ற பெயரில் வெளியிடுகிறோம். உங்களில் பலர் இந்தப் புத்தகத்தை சீரியலாக புதிய தலைமுறை இதழில் படித்து வரக்கூடும். அந்தப் புத்தகமும் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.

கடைசி இரண்டு புத்தகங்களில் ஒன்று இந்தியா-சீனா ஒப்பீடு. சி.என்.என் - ஐ.பி.என் முதல் பல ஆங்கில, இந்தி சானல்களை நடத்தும் தொழில்முனைவர் மற்றும் மூத்த பத்திரிகையாளரான ராகவ் பஹல் எழுதிய Superpower? (Penguin) புத்தகம் சில மாதங்களுக்குமுன் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் ஒரே நேரத்தில் வெளியானது. அந்தப் புத்தகத்தின் தமிழாக்கம் (சரவணன், மகாதேவன்) நீயா நானா? இந்திய சீன வல்லரசுப் போட்டி என்று வெளியாகிறது. இரு நாடுகளையும் நெருக்கமாக ஆராய்ந்து அலசி எழுதப்பட்டுள்ளது இந்தப் புத்தகம்.

மற்றொன்று, குழந்தை வளர்ப்பு தொடர்பானது. உங்கள் குழந்தை சரியாகச் சாப்பிடுவதில்லையா? எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே இருக்கிறார்களா? பெற்றோர்கள் சொன்னதைக் கேட்பதில்லையா? படிப்பில் ஆர்வம் செலுத்துவதில்லையா? ராண்டம் ஹவுஸ் இந்தியா, ஸ்டீவன் ருடால்ப் என்பவரைக் கொண்டு இந்தியக் குழந்தைகள், இந்தியப் பெற்றோர்கள் கண்ணோட்டத்தில் எழுதவைத்த புத்தகம் இது. 10 Laws of Learning என்பது. இது குழந்தை வளர்ப்பு அறிவியல் என்ற பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது (அருண் மகாதேவன்). பெற்றோருக்கு மிகவும் உபயோகமான புத்தகம் இது.

ஆக, இந்த ஆண்டு, பியர்சன் அல்லாமல், 12 புத்தகங்கள், கிழக்கு வெளியீடாக தமிழ் மொழிபெயர்ப்பில் வருகின்றன. இவற்றின் மொழிபெயர்ப்புத் தரத்தில் பல வேறுபாடுகள் இருக்கலாம். அவற்றைச் சரிசெய்து, ஒரே தரமான, உயர் தரமான மொழிபெயர்ப்பைக் கொண்டுவருவதில் முனைந்துள்ளோம். நிச்சயமாக வரும் ஆண்டுகளில் எங்கள் வேலைத்திறன் மேலும் முன்னேற்றமடையும் என்றே நம்புகிறோம். இந்தக் கட்டத்தில் மேலும் 20 புத்தகங்களுக்கான தமிழாக்க வேலைகள் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு அவை வெளியாகும்.

இரு போர்கள், ஒரு கண்டம், பல நாடுகள்

யோசித்துப் பார்த்தால் இரு உலகப்போர்களும் நடந்திருக்கவே கூடாது என்றுதான் தோன்றும். இன்றெல்லாம் எந்த நாடும் சில்லறை விஷயத்துக்கெல்லாம் முணுக் என்று கோபித்துக்கொள்வதில்லை. போர் என்றால் எக்கச்சக்க உயிரிழப்பு என்பது சாதாரண மக்களுக்கும் தெரிந்துள்ளது. முடியாட்சிகளும் சர்வாதிகார ஆட்சிகளும் வெகுவாகக் குறைந்துள்ள காரணத்தால் ஓர் ஆசாமி முடிவெடுத்தால் உடனே போர் என்பதெல்லாம் சாத்தியமல்ல.

அமெரிக்க மட்டும்தான் விதிவிலக்கு. கடந்த இரு பத்தாண்டுகளில் வலிந்து பிற நாடுகள்மீது போர் தொடுத்த ஒரே நாடு அமெரிக்காதான் (உள்நாட்டுப் போர்கள் தவிர்த்து). அதுவும் இந்தப் பத்தாண்டில் ஈராக், ஆஃப்கனிஸ்தான் மீதான போர்கள் முற்றிலுமாகத் தவிர்த்திருக்கவேண்டியவை. அமெரிக்க நாடாளுமன்றங்களும் தேசப்பற்று என்பதை மட்டுமே முன்வைத்து அதிபருக்கு போர் தொடுக்கத் தேவையான சகல உரிமைகளையும் கொடுத்துவிடுகின்றன.

முதல் உலகப்போர் தொடங்க தீவிரமான காரணங்கள் ஏதும் தேவை இருக்கவில்லை. அதற்கு முன்பாகவே ஏகப்பட்ட நெப்போலியன் போர்கள், அதற்கு முன் ஐரோப்பியக் கண்டம் முழுமையிலும் ஒரு ஆயிரம் ஆண்டுகளாக நடந்த போர்கள் ஆகியவற்றை விளக்க இது சரியான இடமல்ல.

இரண்டாம் உலகப்போரை ஹிட்லர் என்ற சர்வாதிகாரியின் ஒற்றைப் பரிமாண அணுகுமுறை, அதற்கான பிரிட்டனின் (பின்னர் ரஷ்யாவின்) எதிர்ப்பு என்பதாகக் கட்டம் கட்டலாம். ஆனால் முதலாம் உலகப்போரை ஒற்றை மனிதனின் வெறியாக மட்டும் சித்திரிக்கமுடியுமா என்பது சந்தேகமே.

முதல் உலகப்போரிலும்கூட ஜெர்மனியின் கைசர் (பேரரசர்) மீதுதான் குற்றம் சாட்டவேண்டியிருக்கும். தன்னைச் சுற்றியுள்ள பிரிட்டனும் பிரான்ஸும் ஏகப்பட்ட காலனி நாடுகளைக் கைப்பற்றிக்கொண்டே இருக்க, தனக்கு ஐரோப்பிய அளவில் மரியாதை இல்லையே என்பது அவருடைய குறையாக இருந்தது. ஒருவித தாழ்வு மனப்பான்மையில் இருந்த அவருக்குத் தன் படைகள்மீது அபார நம்பிக்கை இருந்தது. பிரிட்டனின் கடல்படை மிக மிக வலுவானதாக இருந்தது. அந்த அளவுக்குத் தன் கடல்படையை உருவாக்க விரும்பியிருந்தார் கைசர். ஆனால் அதைச் செய்துமுடிப்பதற்குள்ளாக போர் ஆரம்பித்திருந்தது. பிரிட்டனின் கடல்படையோ சண்டைகளில் தன்னை ஏற்கெனவே நிரூபித்திருந்தது. ஜெர்மனியின் கடல்படை அப்படிப்பட்டதல்ல.

போரின் காரணமாக ஆஸ்திரிய-ஹங்கேரியப் பேரரசின் இளவரசர் ஆர்ச்டியூக் ஃபெர்டினாண்ட் ஒரு செர்பியனால் கொலை செய்யப்பட்டதைச் சொல்வார்கள். வரலாறு படித்த காலத்தில் இது எனக்குப் புதுமையாகவே இருந்தது. யாரோ ஒரு நாட்டின் ஓர் இளவரசனை ஒருவன் கொல்வதால் எப்படி இந்தப் பக்கம் 5 நாடுகள், அந்தப் பக்கம் 5 நாடுகள் சண்டைக்குக் கிளம்பின?

அந்தக் காலத்தில் நாடுகளுக்கு இடையே அபத்தமான ஒப்பந்தங்கள் இருந்தன. அதன்படி, யார் ஒருவர்மீது பகை நாடு போர் தொடுத்தாலும், மற்றவரும் தோழமை நாட்டுக்காகப் போரில் இறங்குவார். ஆஸ்திரியா-ஹங்கேரியப் பேரரசு, ஜெர்மனி இரண்டும் அப்படிப்பட்ட ஓர் ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருந்தன. செர்பியாவும் ரஷ்யாவும் அதேபோன்ற ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருந்தன. ரஷ்யாவும் பிரான்ஸும் அதேபோல. அட, பிரிட்டனும் பிரான்ஸும் அதேபோல மற்றொரு ஒப்பந்தத்தில். ஜெர்மனி, துருக்கியுடன் கிட்டத்தட்ட அதேமாதிரியான ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தது.

ஆஸ்திரியா செர்பியாவை மிரட்ட, செர்பியா கொலைகாரனை ஒப்படைக்க மறுக்க, ஒரு நாள் காலை முகூர்த்தத்தில் ஆஸ்திரியா செர்பியாமீது போரை அறிவிக்க, உடனே ரஷ்யா ஆஸ்திரியாமீது போரை அறிவிக்க, உடனே ஜெர்மனி ரஷ்யாமீது போர் தொடுக்க, பிரான்ஸ் ஜெர்மனிமீது போர் தொடுக்க... அதகளம் ஆரம்பம். எல்லாம் ஆரம்பித்தது ஒரு ஆகஸ்ட் மாதத்தில். ஜெர்மனி ரஷ்யப் படைகளைப் புறமுதுகிட்டு ஓட வைத்து, பிரான்ஸைக் கதறவைத்து ஆட்டத்தையே முடித்துவிடும் என்றால், அதுதான் இல்லை. கொஞ்சம் தாமதித்து பிரிட்டன் களத்தில் குதித்தது. இதற்குள் பிரான்ஸில் வெகுதூரம் நுழைந்திருந்த ஜெர்மனியால் சப்ளை, லாஜிஸ்டிக்ஸ் விஷயங்களைச் சரியாகக் கவனிக்கமுடியவில்லை. இரண்டு மாதங்களுக்குள் பிரான்ஸில் அதிரடியாக வெகுதூரம் புகுந்திருந்த ஜெர்மானியப் படைவீரர்கள் அடுத்த பல மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்த இடத்தைப் பாதுகாக்கவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் சிக்கி, கடைசியாக ஜெர்மனி தோற்றது.

இதனால் ஐரோப்பாவின் முகமே மாறியது. மீண்டும் சில ஆண்டுகளிலேயே இரண்டாம் உலகப்போர் ஆரம்பம் ஆவதற்குமான அடி அப்போதுதான் போடப்பட்டது.

***

மருதன் எழுதிய இரண்டாம் உலகப்போர் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு நூல். கம்யூனிஸ்ட் வாசம் அதில் கொஞ்சம் ஜாஸ்தி என்பது என் கருத்து. ஆனால் அந்தச் சிக்கல் இருந்திருக்காது மருதனின் முதல் உலகப்போர் புத்தகத்துக்கு. வாசகர்கள் இந்தப் புத்தகம் எப்போது வரும் என்று வெகு நாள்களாகக் கேட்டுவந்தனர். இப்போது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அறிமுகமாகும் இந்தப் புத்தகம்.

எழுத்துலக சூப்பர் ஸ்டார் சுஜாதா - 1

சென்ற புத்தகக் கண்காட்சியில்தான் முதன்முதலாக சுஜாதாவின் சில புத்தகங்களைப் பதிப்பித்து விற்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. ஐந்து புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தோம். ஆஸ்டின் இல்லம், தீண்டும் இன்பம், மீண்டும் ஜீனோ, நில்லுங்கள் ராஜாவே, நிறமற்ற வானவில்.

புத்தகக் கண்காட்சியின்போதுதான் இந்தப் புத்தகங்களில் சில பிரதிகள் அச்சாகி வந்திருந்தன. அவை அடுக்கப்படும் முன்னரேயே விற்பனையும் ஆகிக்கொண்டிருந்தன. நில்லுங்கள் ராஜாவே, மீண்டும் ஜீனோ தவிர மற்றவை அதிகம் கேள்விப்படாத புத்தகங்கள். அதன்பின் தொடர்ந்து 60-க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்டுவந்துவிட்டோம். இவை அனைத்தும் பிரம்மாண்டமாக இந்தப் புத்தகக் கண்காட்சியில் காண, வாங்கக் கிடைக்கும்.

கடந்த சில மாதங்களிலேயே சுஜாதாவின் ஈர்ப்பு சக்தி எத்தகையது என்பதை அறிந்துகொண்டுள்ளோம். சுஜாதா இன்னும் தமிழக மக்களுக்கு ஒழுங்காகப் போய்ச்சேரவே இல்லை. புத்தகக் கடைகள் தாண்டி தெருவோரக் கடைகளில், டிபார்ட்மெண்டல் கடைகளில் எல்லாம் வைக்கப்படும்போது அங்கு வரும் மக்கள் ஆர்வத்தோடு வாங்குகிறார்கள்.

இந்த ஆண்டில் நான் வேலை செய்த பல புத்தகங்களுக்கிடையே சுஜாதா புத்தகங்கள் அனைத்தும் என்னைப் பொருத்தவரையில் திருப்தி தரக்கூடியவை. கடுமையான மொழி கொண்ட மொழிமாற்றல் புத்தகம் ஒன்றுடன்தான் என் காலை வேளை தினமும் ஆரம்பிக்கும். இரண்டு மணி நேரத்துக்குப்பின் மண்டைக் குடைச்சல். அப்போது சுஜாதா புத்தகத்தைக் கையில் எடுத்து மெய்ப்பு பார்க்கத் தொடங்கினால், வேலைக்கு வேலையும் ஆயிற்று, ரிலாக்சேஷனும் ஆயிற்று.

அப்படித்தான் நான் படித்தே இராத பல கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். சுஜாதாவின் பலமே உரையாடல்கள் மூலம் படு வேகமாகக் கதையைக் கொண்டு செல்வது. எப்போதே படித்திருந்தாலும் இப்போது கையில் எடுக்கும்போதும் மீண்டும் மீண்டும் படிக்கவைக்கும் கதைகள். முடிவுகள் பெரும்பாலுமே திருப்தியற்றவையே. ஆனால் தொடர்கதைகளை எழுதும்போது வேறு வழி இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். பெரும்பாலான கதைகள் தொடர்கதைகள் என்றால், சில மாத நாவல்களும் உண்டு. சுஜாதா என்றாலே கணேஷ் - வஸந்த் என்றுதான் பெரும்பாலானோர் நம்பிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவற்றையும் தாண்டி பல மர்மக் கதைகள் முதல் மனித மனங்கள் பற்றிய கதைகள் உண்டு.

மீண்டும் ஜீனோ கொண்டுவந்தபோது ‘என் இனிய இயந்திரா’ இல்லையா என்றார்கள் (திருமகள் நிலையம் வெளியீடு). விரைவில் வந்துவிடும் என்றோம். இப்போது அதுவும் வந்துவிட்டது. என் கணக்கின்படி, சுஜாதா புத்தகங்கள் மொத்தம் 76 இந்தப் புத்தகக் கண்காட்சியில் கிழக்கு வெளியீடாகக் கிடைக்கவேண்டும். சில அச்சாகி வருமா என்பதில் சந்தேகம் உண்டு. கண்காட்சியில் கிடைக்கக்கூடிய முக்கியமான சில:

நில்லுங்கள் ராஜாவே
நைலான் கயிறு
என் இனிய இயந்திரா
மீண்டும் ஜீனோ
நில், கவனி, தாக்கு!
பிரிவோம் சந்திப்போம் (இரு பாகங்களும் சேர்த்து ஒன்றாக)
கனவுத் தொழிற்சாலை
கரையெல்லாம் செண்பகப்பூ
காயத்ரி
ப்ரியா
திசை கண்டேன் வான் கண்டேன்
சொர்கத்தீவு
வைரங்கள்
இருள் வரும் நேரம்
உள்ளம் துறந்தவன்
ஆ...!
ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்

பின்வரும் நாள்களில் ஒரு பதிவில் 76 நூல்களையும் பட்டியலிடுகிறேன்.

Thursday, December 23, 2010

பியர்சனுடன் சில புத்தகங்கள்

சுமார் 18 மாதங்களுக்குமுன் ஆரம்பித்த உறவு இது. பியர்சன் என்ற உலகின் நம்பர் ஒன் பதிப்பக நிறுவனம், கல்வித்துறைப் புத்தகங்களில் முன்னணியில் உள்ளது. தி எகானமிஸ்ட், ஃபினான்ஷியல் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள் இந்தக் குழுமத்துடையதே. பெங்குவின் என்ற பதிப்பக நிறுவனமும் இவர்களுடையதே.

பியர்சனிடம் உள்ள ஒரு குறிப்பிட்ட தொடர் புத்தகங்களைத்தான் முதலில் மொழிமாற்றத் தொடங்கினோம். The Rules of Work (வேலை விதிகள்), The Rules of Management (நிர்வாக விதிகள்), The Rules of Wealth (செல்வம் சேர்க்கும் விதிகள்), The Rules of Life (வாழ்க்கை விதிகள்) என்ற நான்கு புத்தகங்கள் அவை. ஆசிரியர் ரிச்சர்ட் டெம்ப்ளர். இவை பார்க்க சுவாரசியமான சுய முன்னேற்ற வகைப் புத்தகங்கள். சுருக்கமான சூத்திரங்கள், ஒவ்வொன்றும் இரண்டு பக்கம் வரக்கூடிய அளவில் விவரித்து எழுதப்பட்டிருக்கும். ஆசிரியரின் சொந்த அனுபவங்கள் பல இருக்கும். ஆசிரியர் வென்ற இடங்கள் மட்டுமல்ல, தோற்ற இடங்களும் இருக்கும். உங்களுக்கு அருகில் நெருங்கி வரக்கூடிய புத்தகங்கள் இவை. இதை எழுதியவர் தன் சொந்தப் பெயரில் எழுதவில்லை. கணவன், மனைவி ஜோடி சேர்ந்து எழுதிய புத்தகங்கள் இவை. பின்னர் கணவர் இறந்தபின்னும் மனைவியின் எழுத்தில் ஆனால் ரிச்சர்ட் டெம்ப்ளர் என்ற பெயரில் மேலும் நான்கு புத்தகங்கள் வந்துள்ளன: The Rules of Parenting (பெற்றோருக்கான விதிகள்), The Rules of Love (காதல் விதிகள்), How to Spend Less without Being Miserable (செலவைக் குறைப்பது எப்படி), How to Get Things Done without Trying Too Hard (நினைப்பதை செய்துமுடிப்பது எப்படி). இவற்றையும் தமிழில் கொண்டுவந்துள்ளோம்.

ஆரம்பத்தில் இவை எப்படி விற்கும் என்பதில் சந்தேகம் இருந்தது. ஆனால் ரூல்ஸ் புத்தகங்கள் முதலில் அச்சான 2,000 விற்று, அடுத்து அச்சான 3,000 விற்று, அடுத்து அச்சான 5,000 கிட்டத்தட்ட விற்று முடிந்துவிட்டது. அடுத்த அச்சுக்கும் போய்விட்டது என்றுதான் ஞாபகம். ஆங்கிலத்தில்கூட இந்தப் புத்தகங்கள் கடந்த ஒரு வருடத்தில் இந்தியாவில் இவ்வளவு விற்றிருக்குமா என்பது சந்தேகமே. ஹிந்தியில் ஒரு பதிப்பில் 5,000 போட்டது அவ்வளவுதான். அதற்குமேல் அச்சிடப்படவில்லை என்பது எனக்குத் தெரியும்.

தொடர்ந்து, பியர்சனின் இதேபோன்ற சில புத்தகங்களை வெளியிட ஆரம்பித்தோம். பொதுவான சுய முன்னேற்றப் புத்தகங்களிலிருந்து சற்றே விலகி, கொஞ்சமாவது நவீன மேனேஜ்மெண்ட் கருத்துகள் இருக்கக்கூடிய புத்தகங்களாக மொழிபெயர்த்துக் கொண்டுவர ஆரம்பித்தோம். அப்படிக் கொண்டுவந்துள்ள சில புத்தகங்கள் இவை:

The Truth about Managing your Career (வேலையில் முன்னேற சக்சஸ் ஃபார்முலா)
The Truth about Being a Leader (தலைமை தாங்க சக்சஸ் ஃபார்முலா)
The Truth about Managing People (மனிதர்களை நிர்வகிக்க சக்சஸ் ஃபார்முலா)
The Truth about Making Smart Decisions (சரியாக முடிவெடுக்க சக்சஸ் ஃபார்முலா)
The Truth about Confident Presenting (சிறந்த பேச்சாளராக சக்சஸ் ஃபார்முலா)
The Truth about Getting your Point across (எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்த சக்சஸ் ஃபார்முலா)
The Truth about Hiring the Best (சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்க சக்சஸ் ஃபார்முலா)
The Truth about Getting the Best from People (பணியாளர் திறனை முழுதாகப் பெற சக்சஸ் ஃபார்முலா)
The Truth about Negotiations (பேச்சு வார்த்தைகளில் வெற்றிபெற சக்சஸ் ஃபார்முலா)

இந்தப் புத்தகங்கள் எல்லாமே co-publishing என்ற முறையில் கொண்டுவரப்படுபவை. பியர்சன், கிழக்கு என இரு பிராண்ட்களும் இணைந்து பதிப்பிக்கும் புத்தகங்கள் இவை. இந்தியாவின் எந்த மொழியுடன் ஒப்பிட்டாலும், தமிழில் மட்டும்தான் இந்த அளவுக்கு பியர்சனால் புத்தகங்களைக் கொண்டுவர முடிந்துள்ளது. இதே உறவின் அடிப்படையில் மேலும் சில புத்தகங்களைக் கொண்டுவந்துள்ளோம். அதில் மிக முக்கியமானது டோனி பூஸானின் புத்தகங்கள். மன வரைபடம் (Mindmap) என்ற கருத்தாக்கத்தை முன்வைத்த பூஸான், ஒவ்வொரு மனிதனும் தன் மூளையை மேலும் சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்கிறார். பள்ளிக்கூடத்தில் படிக்கும் பையனாக இருக்கட்டும், வேலையில் ஈடுபடும் பெரியவராக இருக்கட்டும், ஞாபக சக்தியைக் கட்டவிழ்த்துவிட, பலதரப்பட்ட விஷயங்களுக்கு இடையேயான தொடர்புகளை வேகமாகப் புரிந்துகொண்டு நினைவகத்தில் சேமித்துவைக்க மன வரைபடம் என்ற உத்தியைக் கையாளலாம் என்கிறார் இவர். அதன் அடிப்படையில் அவர் எழுதியுள்ள இரு புத்தகங்களைத் தமிழாக்கம் செய்துள்ளோம்: Use Your Head (மூளையை முழுதாகப் பயன்படுத்து), The Mind Map Book (மன வரைபடம்). இவை இரண்டுமே பள்ளிக்கூட ஆசிரியர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகங்கள் என்பேன் நான்.

ஐ.ஏ.எஸ் பரீட்சைக்குத் தயாராகுபவர்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு புத்தகம் பியர்சன் வெளியிட்டுள்ள Concise GK. இதனைத் தமிழாக்கி ‘பொது அறிவு தகவல் களஞ்சியம்’ என்று வெளியிட்டுள்ளோம். UPSC மட்டுமின்றி, TNPSC முதலான பல நுழைவுத் தேர்வுகளுக்கு இந்தப் புத்தகத்தை பயன்படுத்தலாம்.

பியர்சன் இன்னபிற புத்தகங்கள் இதுவரை அச்சுக்குப் போயிருப்பவை:

Winning at Interviews (நேர்முகத் தேர்வுகளில் வெற்றிபெற)
Winners Never Cheat (வெற்றியாளர்கள் ஏமாற்றுவதில்லை)
Body Language (உடல் மொழி)
Smart Retail - Turn Your Store into Sales Phenomenon (வெற்றிகரமான சில்லறை வியாபாரம்)
Change your Life with NLP (வெற்றிக்கு ஒரு வரைபடம் - NLP)
Brilliant Start-up (ஈஸியாத் தொடங்கலாம் பிசினஸ்)

மேலும் சில புத்தகங்கள் மொழிமாற்றத்தில் உள்ளன. கடந்த ஓராண்டில் இத்தனை புத்தகங்கள் இந்தத் துறையில் வரிசையாகக் கொண்டுவந்ததே ஒரு பெரும் சாதனை என நினைக்கிறேன். இவற்றுக்கு உங்கள் ஆதரவு பெரிதும் தேவை.

இரு பெரும் பிரச்னைகள்? இரு முக்கியமான புத்தகங்கள்

இன்றைய இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன? யாரிடம் கேட்கிறீர்கள் என்பதைப் பொருத்து ஏகப்பட்ட பதில்கள் கிடைக்கும்.

ஊழல்? இந்து மதவாதம்? இஸ்லாமிய தீவிரவாதம்? மாவோயிச பயங்கரவாதம்? உலகமயத்தாலும் தாராளமயத்தாலும் ஏற்படும் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், பழங்குடியினர் வாழ்வாதாரப் பிரச்னை? காஷ்மீர் பிரச்னை, அதன் விளைவாக ஏற்படும் இந்தியா-பாகிஸ்தான் போர் அபாயம்? அஸ்ஸாம், பிற வட கிழக்கு இந்தியப் பிரச்னைகள்?

இன்னும் பலவற்றையும் பலர் சொல்வீர்கள். அவற்றில் இரண்டை மட்டும் பார்ப்போம்.

காஷ்மீர் பிரச்னையை நாம் முழுவதுமாகப் புரிந்துகொண்டிருக்கிறோமா என்று தெரியவில்லை. காஷ்மீர் (அல்லது ஜம்மு காஷ்மீர்) என்பது இந்தியாவின் பிரிக்கமுடியாத ஒரு பகுதி, இதில் மறு பேச்சுக்கே இடமில்லை என்பது ஒரு தரப்பு. இந்தியாவில் பெரும்பான்மையினரின் தரப்பும் இதுதான். ஆனால் இது நியாயமான ஒரு வாதமா? மறுபக்கம் அருந்ததி ராய் போன்றோரின் தரப்பு. எந்தப் பகுதி மக்களுக்கும் நியாயமான சுய நிர்ணய உரிமை இருக்கவேண்டும்; அப்படி அவர்களுக்கு அந்த உரிமையைத் தராமல் ராணுவத்தை அனுப்பி அவர்களை நசுக்குவது மனித உரிமை மீறல் என்னும் வாதம். உலகின் எந்த ‘ஆக்ரமிப்பு’ ராணுவமுமே கற்களுக்கு பதில் புல்லட்டையும் நியாயமான எதிர்ப்புக்கு பதில் சித்திரவதையையுமே கொடுத்துள்ளனர். இந்திய ராணுவம் இதற்கு விதிவிலக்கல்ல. மணிப்பூர் முதல் காஷ்மீர் வரை நாம் இதைத்தான் பார்த்துள்ளோம்.

காஷ்மீரிகள் நியாயமாக எதனை விரும்பினர்? ஹரிசிங் யார்? அவரது ‘லெகசி’ என்ன? 1947-ல் காஷ்மீருக்குள் ஊடுருவிய பதான்கள் ஏன் அங்கு வந்தனர், என்ன செய்தனர்? அதன் பின்விளைவுகள் என்ன? நேரு, சாஸ்திரி, இந்திரா முத;ல் இன்றுவரை இந்திய ஆட்சியாளர்கள் காஷ்மீர் பற்றி எந்தக் கொள்கைகளைக் கொண்டிருந்தனர்? நேருவுக்குப் பின் அது எப்படி மாற்றம் அடைந்தது? காஷ்மீர் இஸ்லாமியத் தீவிரவாத அலைக்குள் எப்படிச் சிக்கிக்கொண்டது? ஜம்மு பகுதியில் தீவிரமாக உள்ள ஆர்.எஸ்.எஸ் காஷ்மீர் பிரச்னையில் எடுத்துள்ள நிலை என்ன? ஷ்யாமா பிரசாத் முகர்ஜி என்பவர் யார்? அவருக்கு காஷ்மீரில் என்ன ஆனது?

இதற்கெல்லாம் முன்னதாக ஜம்மு காஷ்மீர் என்று நாம் அழைக்கும் பகுதியின் புவியியல் அமைப்பு என்ன? காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக், வடக்குப் பகுதிகள், பாக் ஆக்ரமிப்பு காஷ்மீர் அல்லது ஆஸாத் காஷ்மீர், சீனாவிடம் போன துண்டு துணுக்குப் பகுதிகள், இவை பற்றிய புரிதல்.

ஷேக் அப்துல்லா, காஷ்மீரின் சிங்கம் எனப்படுபவர். அவர் நேரு காலத்திலிருந்து ஏன் சிறையில் அடைக்கப்பட்டபடி இருந்தார்? காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும்தான் அவருக்கு செல்வாக்கு உண்டு என்பது தெரியுமா? அவரிலிருந்து தொடங்கி இன்று அவர் பேரன்வரை காஷ்மீர் பிரச்னையில் என்ன சொல்கிறார்கள்?

போராட்டம் அல்ல நாங்கள் செய்வது, விடுதலை அல்ல எங்கள் இலக்கு, எங்கள் இலக்கெல்லாம் ஜிஹாத் ஜிஹாத் ஜிஹாத் என்று காஷ்மீர் போராட்டத்தின் திசையையே மாற்றிய ஆஃப்கனிலிருந்து இந்தியா வந்த இஸ்லாமிய கூலிப்படை பற்றி நாம் என்ன தெரிந்துகொள்ளவேண்டும்?

சரி, இனி அடுத்து என்ன ஆகப்போகிறது? தீர்வுதான் என்ன?

பா.ராகவனின் காஷ்மீர் பற்றிய புத்தகம் உங்களுக்கு இந்தப் பிரச்னை பற்றிய நல்ல ஒரு புரிதலைத் தரும் என்று நம்புகிறேன்.

---

சமீபத்தில் ராகுல் காந்தி - விக்கிலீக்ஸ் ஒரு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ராகுல் காந்தி அமெரிக்கத் தூதரிடம் பேசியதை அவர் ஓர் அறிக்கையாக அமெரிக்கா அனுப்ப, அங்கிருந்து அது ஜூலியன் அஸாஞ்ச் மார்க்கமாக இணையவெளியில் பரவ, இந்தியப் பத்திரிகைகள் அதைக் கைமா செய்துவிட்டன. ராகுல் காந்தி என்னவோ இந்துக்கள்தான் இந்தியாவில் தீவிரவாதச் செயலைச் செய்கின்றனர், லஷ்கர்-ஈ-தோய்பாவை விட மோசமானவர்கள் அவர்கள்தான் என்று சொன்னதுபோலச் செய்திகள் பரவின. ராகுல் காந்தி சொன்னது இவ்வளவுதான்:
Responding to the Ambassador's query about Lashkar-e-Taiba's activities in the region and immediate threat to India, Gandhi said there was evidence of some support for the group among certain elements in India's indigenous Muslim community. However, Gandhi warned, the bigger threat may be the growth of radicalized Hindu groups, which create religious tensions and political confrontations with the Muslim community.
லஷ்கர்-ஈ-தோய்பா, இந்தியாவுக்குப் பிரச்னைதான். அதனால் உந்தப்பட்டு சில இந்திய முஸ்லிம்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவது பிரச்னைதான். ஆனால்... அதையெல்லாம் விடப் பெரிய பிரச்னை தீவிரவாதச் சிந்தனை கொண்ட இந்துக் குழுக்கள் உருவாகி, முஸ்லிம் சமூகத்துடன் அவை அரசியல்ரீதியாக மோதி, அதன் விளைவாக மதக் கலவரங்கள் ஏற்படுவதுதான்.

இது மிகச் சரியான சிந்தனை. இவ்வாறு பேசியதற்காக நாம் ராகுல் காந்தியைப் பாராட்டவேண்டும். மதரீதியாக இந்தியாவில் பிரச்னைகள் ஏற்பட்டு, இந்தியாவின் இதயத்தைக் கிழித்து ரத்தம் சிந்தவைத்துள்ளன. தேசப் பிரிவினைக்கு முன்பிருந்து தொடங்கி, பின் பிரிவினையில் அதன் உச்சத்தைத் தொட்டு, பின் கொஞ்சம் கொஞ்சமாக ஆறிய ரணம், அயோத்திப் பிரச்னையில் கொழுந்துவிட்டு எரிந்தது. அங்கிருந்து தொடங்கி, மும்பையில் ஏற்பட்ட தாவூத் கோஷ்டி குண்டுவெடிப்புகள், மும்பைக் கலவரங்கள், பின் கோத்ரா ரயில் எரிப்பு, தொடர்ந்து குஜராத்தில் நடந்த திட்டமிட்ட படுகொலைகள், இந்தியாவின் பல பெரு நகரங்களில் வைக்கப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகள், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் மும்பையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்... என்று இது இன்றும் தொடர்கிறது.

இந்த போலரைசேஷனுக்கு யார் காரணம்? தீவிரச் சிந்தனைகள்தான் தீவிரச் செயல்களுக்கு இட்டுச் செல்கிறது.

இந்தியா என்பது இந்து தேசமா? இங்கு இந்துக்களுக்கு மட்டும்தான் இடமா? தேசப் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்குச் சென்றிருக்கவேண்டியவர்கள் என்று முஸ்லிம்களை இன்றும் தொடர்ந்து ஊசிபோலக் குத்துவது யார்? முஸ்லிம்களை அவர்களுக்குரிய இடத்தில் வைக்கவேண்டும் என்ற எண்ணம் யாரிடமெல்லாம் இருக்கிறது?

ஆர்.எஸ்.எஸ் என்ற ஓர் அமைப்பு எதற்காகத் தொடங்கப்பட்டது? அதன் குறிக்கோள் என்ன? தேசம் என்பதற்கான அதன் வரையறைகள் என்ன? அதன் குறிக்கோளுக்கும் காந்தியின் கருத்துகளுக்கும் என்ன தொடர்பு அல்லது விலகல்? நவீன இந்திய தேசத்தின் வலுமிக்க அமைப்புகளை (அரசியல் அமைப்புச் சட்டம், நாடாளுமன்றக் குடியாட்சி முறை) உருவாக்கிய அம்பேத்கர், நேரு கருத்துகள் பற்றி ஆர்.எஸ்.எஸ் என்ன சொல்கிறது?

இன்று ஆர்.எஸ்.எஸ் எனப்படும் ராஷ்டிரிய சுவயம்சேவக் சங்கம் இந்தியாவில் அசைக்கமுடியாத ஓர் அமைப்பு. அதன் கருத்துகள் பழமைவாதம் பேசுபவையா? அல்லது வலுவான இந்திய தேசத்தை அமைக்க உதவுபவையா? இந்து-முஸ்லிம் பிரச்னைகள் அனைத்துக்கும் அடிப்படையில் இருப்பது ஆர்.எஸ்.எஸ்ஸா? ஆர்.எஸ்.எஸ் இருக்கும்வரை இந்த நாட்டில் அனைவரும் அமைதியாக இருக்கமுடியுமா?

கேள்விகள் என்னுடையவை. பா.ராகவனின் புத்தகத்தில் பதில்கள் இருக்கும். கட்டாயமாக வாங்கிப் படித்துவிடுங்கள்.

*

இரு புத்தகங்களும் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியாகும். ஜனவரி 4 முதல் ஜனவரி 17 வரை.

Wednesday, December 22, 2010

ஒரு புத்தகம் எப்படி பாப்புலர் ஆகிறது?

ஒரு புத்தகப் பதிப்பாளனுக்குத் தெரியாத ஒரு விஷயம் இது. எந்த அறிவியலுக்கும் கட்டுப்படாத விஷயம் இது. பொதுப்புத்தி எப்படி இயங்குகிறது என்பதை முன்கூட்டியே கண்டுபிடிப்பது கடினம். அந்தச் செயல் நடந்துமுடிந்ததும் பிறகுதான் இது இப்படித்தான் நடந்திருக்கவேண்டும் என்று சொல்லமுடிகிறது. இந்த சூட்சுமம் ஒருசிலருக்கு மட்டும் எப்படியோ தெரிந்துவிடுகிறது.

ரஜினி படம் என்றால் ஊரில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும் அல்லவா? அதைப் பற்றி ஊரில் எல்லோரும் பேச ஆரம்பிப்பார்கள். பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதும். இணையத்தில் விமரிசனம் தூள் பறக்கும். தொலைக்காட்சியில் பேட்டிகள்.

புத்தகங்களுக்கு அப்படி எல்லாம் ஆவதில்லை. ஏதோ 100, 200 பிரதிகள் சடசடவென விற்றாலேயே பதிப்பாளர்கள் அகம் குளிர்ந்துவிடுவார்கள். புத்தகத்துக்கு விளம்பரம் தரும் அளவுக்கு எந்தப் பதிப்பகமும் காசு பார்ப்பதில்லை. விகடன் பிரசுரம் போன்றவர்கள் தங்களிடம் உள்ள சொந்த மீடியாவில் நன்றாக விளம்பரம் செய்யமுடிகிறது. கிழக்கு உட்பட, வேறு யாருக்கும் இந்த அற்புதமான வாய்ப்பு கிடையாது. புத்தகங்களுக்கு தமிழில் ரிவ்யூவே ஒழுங்காக வருவதில்லை. இதில் ஒரு புதிய புத்தகம் வந்துள்ளது என்பது எப்படி மக்களுக்குத் தெரியவரும்? அப்புறம் எப்படி ஒரு புத்தகம் சூப்பர் செல்லர் ஆவது?

ஆனால் அபூர்வமாக அப்படி ஒரு புத்தகம் வந்துவிடுகிறது. சில மாதங்களுக்குமுன் பாலசுப்ரமணியம் என்ற சிரியஸ் ரஜினி ரசிகர், ரஜினி பற்றி ஒரு புத்தகம் எழுதுவதாக சில பக்கங்களை அனுப்பினார். ரஜினி சினிமாக்களின் பஞ்ச் வசனங்களைக் கொண்டு எழுதப்பட்ட ஒரு மேனேஜ்மெண்ட் வாசனை கொண்ட புத்தகம். ஆங்கிலத்தில் இருந்தது. தமிழ் சினிமாக்கள் பலவற்றில் நடித்திருகும் கிட்டு என்ற ராஜா கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து புத்தகத்தை எழுதியிருந்தார். அதை நாங்கள் பதிப்பிக்க முடிவு செய்தோம். அப்படியே தமிழிலும் செய்துவிடலாம் என்று முடிவு செய்தோம். அதன் விற்பனை எப்படியிருக்கும் என்பது பற்றி அதிகமாக யோசிக்கவில்லை. சினிமா வாசனை கொண்ட புத்தகங்கள் பலவற்றை நாங்கள் பதிப்பித்துள்ளோம். ஆனால் அவை அதிகம் விற்றதில்லை. அதிகம் என்றால் பல ஆயிரங்கள். இவை அதிகபட்சம் 2,000 - 3,000-க்குள் முடிந்துவிடும்.

ரஜினியின் பன்ச் தந்திரம், Rajini's Punch Tantra என்ற இந்தப் புத்தகம் ரிலீஸ் ஆனது ஒரு ஞாயிற்றுக்கிழமையில். 12 டிசம்பர் 2010, ரஜினியின் பிறந்தநாள் அன்று. முதலில் இந்தப் புத்தகத்துக்கு என்று ரிலீஸ் நிகழ்ச்சி எதுவும் வைப்பதாக இல்லை. கடைசி நேரத்தில்தான் முடிவானது. ஒடிஸி புத்தகக் கடையில் சிறு நிகழ்ச்சி. கே.பாலசந்தரும் ராதிகா சரத்குமாரும் வந்திருந்தனர். ரஜினியின் மகள் வந்திருந்தார். நானும் சத்யாவும் ஊரிலேயே இல்லை. வேறு நிகழ்ச்சிக்கு முன்னதாகவே ஒப்புக்கொண்டிருந்ததால் சென்னையில் அன்று இருக்கமுடியவில்லை.

இதற்கிடையில் ஏகப்பட்ட செய்தி நிறுவனங்களுக்கு புத்தகம் ஒரு பிரதியும் ஒரு செய்திக்குறிப்பும் அனுப்பியிருந்தோம். ரேடியோ ஒன் எஃப்.எம் சானல் ஒரே சந்தோஷத்தில் ஏகப்பட்ட புரமோஷன் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். (எல்லாம் ஃப்ரீ!). அடுத்து குங்குமம் பத்திரிகையில் ஐந்து பக்கத்துக்கு ஒரு பேட்டி! அத்தோடு விட்டார்களா! இந்த வாரக் குங்குமம் வாங்கிவிட்டீர்களா என்று சன் குழும சானல்கள் அனைத்திலும் செய்யும் விளம்பரத்தில் ‘ரஜினியின் பன்ச் வசனங்கள் நிர்வாக வழிகாட்டி’ (அல்லது இப்படி ஏதோ) என்று நொடிக்கு நூறு தரம் வரத்தொடங்கியது.

லாண்ட்மார்க் அவர்களது கஸ்டமர்களுக்கு அனுப்பும் மின்னஞ்சலில் இந்தப் புத்தகத்தை முதலில் வைத்து, ஸ்பெஷல் ஆஃபர் அனுப்பியுள்ளனர்.

ரஜினிகாந்த் தானே பல புத்தகங்கள் வாங்கி சினி இண்டஸ்ட்ரியில் பலருக்குக் கொடுத்துள்ளார். விஷயம் கேள்விப்பட்டு பல சினிமாத்துறையினர் 50, 100 என்று புத்தகங்களை வாங்கி மேலும் பலருக்குக் கொடுக்கின்றனர்.

ஜப்பானிலிருந்து எங்கள் இணையத்தளத்துக்கு இந்தப் புத்தகத்துக்கு சில ஆர்டர்கள் வந்துள்ளன. (நிஜமாவேங்க!)

அப்படி என்ன இந்தப் புத்தகத்தில் இருக்கிறது, இதனை வாங்கலாமா, கூடாதா என்பது பற்றி நான் ஒன்றுமே சொல்லப்போவதில்லை. நீங்களே வாங்கி முடிவு செய்துகொள்ளுங்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். சில புத்தகங்களுக்குத் தானாகவே இறக்கைகள் முளைக்கும். அவை அப்படியே பறந்து செல்லும். எந்த மார்க்கெட்டருக்கும் இதற்கான காரணங்கள் புரியப்போவதில்லை.

நானும் அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யப்போவதில்லை.

உலகத் தலைவர்கள் என்ன சொன்னார்கள்?


கடந்த ஆறு மாதங்களின் உலகின் முக்கிய தலைவர்கள், ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள், வீட்டோ அதிகாரம் கொண்டவர்கள் அனைவரும் இந்தியா வந்தனர். அப்போது அவர்கள் சொன்னவை, செய்தவை.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரான், 27-29 ஜூலை 2010

இந்திய-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தங்கள்: $1.1 பில்லியன்
ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: தரப்படவேண்டும்.
“பாகிஸ்தான் இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் எதிராக பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதை பொறுத்துக்கொண்டிருக்க முடியாது.”

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, 6-9 நவம்பர் 2010

இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தங்கள்: $10 பில்லியன்
ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: தரப்படவேண்டும்.
“பயங்கரவாத வலைப்பின்னல்கள், முக்கியமாக லஷ்கர்-ஈ-தோய்பா, தோற்கடிக்கப்படவேண்டும். மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை பாகிஸ்தான் தண்டிக்கவேண்டும்.”

பிரான்ஸ் அதிபர் நிகோலாஸ் சார்கோஸி, 4-7 டிசம்பர் 2010

இந்திய-பிரான்ஸ் வர்த்தக ஒப்பந்தங்கள்: யூரோ 7 பில்லியன்
ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: தரப்படவேண்டும்.
“அண்டை நாட்டில் இருந்து செயல்படும் பயங்கரவாதக் குழுக்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது அனுமதிக்கமுடியாதது. பயங்கரவாதத்தை முறியடிக்க பாகிஸ்தான் தன் முயற்சிகளை அதிகப்படுத்தவேண்டும்.”

சீனப் பிரதமர் வென் ஜியாபோ, 15-17 டிசம்பர் 2010

இந்திய-சீன வர்த்தக ஒப்பந்தங்கள்: $16 பில்லியன்
ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: பேச்சு ஏதுமில்லை
பாகிஸ்தான் பற்றி: பேச்சு ஏதுமில்லை. இரு நாடுகளும் தீவிரவாதத்தை எதிர்க்கின்றன என்று கூட்டு அறிக்கை மட்டுமே.

ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வெதேவ், 21-22 டிசம்பர் 2010

இந்திய-ரஷ்ய வர்த்தக ஒப்பந்தங்கள்: $30 பில்லியன்
ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: தரப்படவேண்டும்.
“பயங்கரவாதத்துக்கு உதவும், தூண்டிவிடும், பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் தரும் நாடுகள், பயங்கரவாதச் செயல்களைப் புரிவோர் அளவுக்கே குற்றம் செய்தவர்கள் ஆகிறார்கள். மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டோருக்கு பாகிஸ்தான் தண்டனை அளிக்கவேண்டும்.”

Tuesday, December 21, 2010

அமரத்துவம் பெற்ற சித்திரக் கதைகள்

  
  


சென்னை புத்தகக் கண்காட்சி 2011-ல் நாங்கள் பெருமையுடன் வழங்க உள்ள புத்தகங்கள் இவை. சென்ற ஆண்டு இவை இருக்கவில்லை. இந்த முயற்சி ஆரம்பித்தது மார்ச் 2010-ல்தான்.

அமர சித்திரக் கதைகள் (அமர் சித்ர கதா), ஆனந்த் பாய் என்பவர் வழிகாட்டுதலில் இந்தியா புக் ஹவுஸ் நிறுவனத்தால் கொண்டுவரப்பட்ட வரலாறு, புராண, இதிகாச, காப்பிய படக்கதைகள் மட்டுமல்ல, நிஜ மனிதர்களைப் பற்றியும் உருவாக்கப்பட்ட படக்கதைகள். பஞ்ச தந்திரம், தெனாலி ராமன், பீர்பால் படக்கதைகளும் உண்டு.

பின்னர் இந்தியா புக் ஹவுஸ் நிறுவனத்திடமிருந்து ஒரு பிரைவேட் ஈக்விடி குழுமம், அமர சித்திரக் கதைகளை மட்டும் தனியாக வாங்கிக்கொண்டது. இந்தியாவில் மிக அதிகமாகப் படிக்கப்பட்ட புத்தக பிராண்ட் என்றால் கண்ணை மூடிக்கொண்டு அமர சித்திரக் கதைகள் என்று சொல்லிவிடலாம்.

பெரும்பாலும் ஆங்கிலத்திலும், சில புத்தகங்கள் மட்டும் பிற மொழிகளிலுமாக இவை கிடைக்கின்றன. காமிக்ஸ் விரும்பிகள், இரு வண்ணத்தில் தமிழில் சுமார் 70-80 வெளியானதாகச் சொல்கிறார்கள். ஆங்காங்கு தேடினால் எங்கேனும் கிடைக்கலாம். முழு வண்ணத்திலேயே 15 புத்தகங்கள் வரை தமிழில் அமர சித்திரக் கதைகள் நிறுவனத்தாலேயே வெளியாகியிருந்தன. அவையும் இப்போது அச்சில் இல்லை. அதில் எழுத்துகள் கையாலேயே எழுதப்பட்டிருக்கும். கணினியுகத்துக்கு முந்தைய காலகட்டம் அது.

மார்ச் 2010 முதல், அமர சித்திரக் கதைகள் நிறுவனத்துடன் நியூ ஹொரைஸன் மீடியா நிறுவனம் போட்டிருக்கும் ஒப்பந்தப்படி, அவர்கள் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள அனைத்து புத்தகங்களையும் தமிழில் இணைந்து கொண்டுவரப்போகிறோம். அவை அமர சித்திரக் கதைகள் பிராண்டிலேயே வெளியாகும்.

இதுவரையில் 24 புத்தகங்களைக் கொண்டுவந்துள்ளோம். அனைத்தும் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். மேலும் சில புத்தகங்களில் வேலை நடந்துகொண்டிருக்கிறது. அடுத்த சென்னை புத்தகக் கண்காட்சி 2012-ன்போது நிச்சயம் 100 புத்தகங்களாவது இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.

இந்தப் புத்தகங்களில் நாங்கள் வெளியிட்ட முதல் எட்டை நான்தான் தமிழாக்கம் செய்தேன்! அதில் எனக்கு மிகுந்த திருப்தி. அடுத்தவற்றை எல்லாம் ப்ராடிஜி எடிட்டர் சுஜாதா மொழியாக்கம் செய்ய, அவற்றை நான்தான் எடிட் செய்கிறேன். என் பிற அனைத்து வேலைகளையும்விட எனக்கு மிகுந்த சந்தோஷம் தருபது இந்த வேலைதான்.

நான் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்ததே காமிக்ஸ் வழியாகத்தான். முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என்று தொடங்கி, பின்னர் அம்புலிமாமா, ரத்னபாலா வந்து, பெரிய எழுத்து மந்திரவாதக் கதைகளைப் படித்து அங்கிருந்து விகடன், குமுதம் படிக்க ஆரம்பித்தேன் நான். அதேபோல இன்று என் மகளுக்குப் புத்தகம் படிக்கப் பழக்கிவைப்பதில் மிகுந்த சிரமப்பட்டு, ஆங்கில அமர சித்திரக் கதைகளிடம் தஞ்சம் புகுந்தேன். இப்போது அவள் அமர சித்திரக் கதைகள் தாண்டி, ஆஸ்டெரிக்ஸ் காமிக்ஸ்களைப் படிக்க ஆரம்பித்திருக்கிறாள்.

புத்தக வாசிப்பு குறைந்துவருகிறது என்று குறைப்படுவோர் பலர். தொலைக்காட்சியின் ஆதிக்கம்தான் எங்கும் என்று முறையிடுவோர் பலர். வாசிப்பு எவ்வளவு அவசியம் என்பதைத் தெரிந்துவைத்துள்ள பலரும் எப்படித் தங்கள் குழந்தைகளுக்குப் படிப்பின் சுவையை ஊட்டுவது என்று தெரியாமல் இருக்கிறார்கள். அதனால் பதற்றமும் அடைகிறார்கள். என் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன். இதற்கான ஒரு விடை: அமர சித்திரக் கதைகள். கண்ணை மூடிக்கொண்டு இந்தப் புத்தகங்களை வாங்கிக்கொடுங்கள். உங்கள் பிள்ளைகள் புத்தகம் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

விலையும் மலிவுதான். 32 பக்கங்கள் கொண்ட (கிரவுன் 1/4) ஒவ்வொரு முழுவண்ணப் புத்தகமும் வெறும் ரூ. 35 மட்டுமே!

இதுவரை வந்துள்ள அனைத்து அமர சித்திரக் கதைகள் (தமிழ்) புத்தகங்களை வாங்க

இதற்குமுன் நான் அமர சித்திரக் கதைகள் பற்றி எழுதிய பதிவுகள் ஒன்று | இரண்டு

சாகித்ய அகாதெமி விருது 2010: நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடனுக்கு 2010-ன் தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது. மகிழ்ச்சியான செய்தி. ஒரு வாரம் முன்புதான் தில்லி தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் கருத்தரங்கில் கலந்துகொள்ள அவர் வந்திருந்தார். நானும் சென்றிருந்தேன்.

நாவல் இலக்கியம் பற்றிய கட்டுரை ஒன்றை நாஞ்சில் நாடன் வாசித்தார். (இந்த நிகழ்வில் வெளியான கட்டுரைகள் அனைத்தும் அடங்கிய தொகுப்பு ஒன்றை தில்லி தமிழ்ச்சங்கம் வெளியிட்டுள்ளது. இந்தத் தொகுப்பு சென்னை புத்தகக் கண்காட்சியின்போது கிழக்கு பதிப்பகம் அரங்கில் விற்பனைக்குக் கிடைக்கும்.) நாஞ்சிலுக்கே உரித்தான் கிண்டல், கேலி அதில் இருந்தது.

அப்போது பேசும்போது தான் மீண்டும் தில்லி வருவது பற்றிச் சொன்னார். உடனே அரங்கிலிருந்து ‘பத்மஸ்ரீ விருது பெறவா?’ என்று கேட்டார்கள் என்று ஞாபகம். ‘ஏன்? பாரத ரத்னா விருது வாங்கக்கூடாதோ?’ என்று நாஞ்சில் எதிர்க்கேள்வி கேட்டதாக ஞாபகம். (கிட்டத்தட்ட இந்த ரீதியில்தான் இருந்தது. ஞாபகமறதி அதிகமாகிவிட்டது!) அப்போது சாகித்ய அகாதெமி விருதுபற்றி நாஞ்சில் நாடனுக்கு தகவல் தெரிந்திருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

இந்த விருது தொடர்பாக வெளியான அவரது கருத்துகளில் ஓர் ஏக்கம் வெளிப்படுகிறது. அது அவரைப் பற்றிய ஏக்கமல்ல. தமிழ் இலக்கியத் துறை பற்றியும் தமிழுக்குக் கிடைக்கும் சாகித்ய அகாதெமி விருதுகள் பற்றியுமான ஏக்கம். ஒரு கலைஞன் அவன் வாழ்நாள் சாதனையின் உச்சத்தில் இருக்கும்போது விருது கொடுக்கப்படவேண்டுமா அல்லது ரிடயர் ஆகிப் போகும்போது பென்ஷன்போலக் கொடுக்கப்படவேண்டுமா? மிகச் சரியான கேள்வி. (அப்படிப் பார்த்தால் பெரும்பாலும் சரியாகக் கிடைக்கும் கேரள எழுத்தாளருக்கான விருதில் இம்முறை நாஞ்சிலைவிட வயது அதிகமான வீரேந்திர குமாருக்குக் கிடைத்துள்ளதே?)

நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்தபின் தமிழுக்குக் கிடைத்துள்ள சாகித்ய அகாதெமி விருதுகளை இந்தச் சுட்டியில் காணலாம். அதிலிருந்து எப்படிப்பட்ட ஏற்ற இறக்கங்களை நாம் பார்த்துவந்துள்ளோம் என்று தெரியும்.

நாஞ்சில் நாடனின் ஒரு நாவலை - எட்டுத் திக்கும் மதயானை - ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாங்கள் வெளியிட்டுள்ளோம். Against All Odds

நாஞ்சில் நாடனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

சூடிய பூ சூடற்க - சாகித்ய அகாதெமி 2010 விருது பெற்ற நாஞ்சில் நாடன் புத்தகத்தை வாங்க

நாஞ்சில் நாடனின் பிற புத்தகங்களை வாங்க

பா.ராகவனின் பதிவு
தி ஹிந்து செய்தி
தினமணி செய்தி

Monday, December 20, 2010

காந்திக்குப் பிறகான இந்தியா

ஒருமாதிரியாக இன்றோடு முடிந்தது. ராமச்சந்திர குஹாவின் India After Gandhi புத்தகத்தின் தமிழாக்கத்தை நாங்கள் ஆரம்பித்தது கிட்டத்தட்ட 30 மாதங்களுக்கு முன்பு. இது முடிவதற்கு இவ்வளவு காலம் ஆகும் என்று அப்போது நினைத்தும் பார்த்திருக்கவில்லை. முதலில் புத்தகத்தை இரண்டு பாகங்களாக உடைத்துக்கொள்வது என்று முடிவெடுத்தோம்.

முதல் பாகத்தின் மொழிபெயர்ப்பு கைக்கு வந்துசேர்ந்து அதில் நிறைய வேலை செய்யவேண்டியிருந்தது. ஆகஸ்ட் 2009-ல் புத்தகத்தை வெளியிட நாள் குறித்தாயிற்று. ராமச்சந்திர குஹா சென்னைக்கு வரும் தேதி நிச்சயம் ஆயிற்று. லாண்ட்மார்க்கில் நேரத்தை நிச்சயம் செய்தாயிற்று. அதனால் கடைசி சில நாள்களில் கடுமையான வேலைப்பளுவில் புத்தகத்தை முடிக்க வேண்டியதாயிற்று. புத்தகத்தில் சில குறைபாடுகள் நிச்சயம் உள்ளன. சரிசெய்யவேண்டும்.

இரண்டாம் பாகத்தை விரைவில் கொண்டுவந்துவிடலாம் என்றுதான் அப்போதைய கற்பனை இருந்தது. முடிந்தால் 2010 சென்னை புத்தகக் கண்காட்சியின்போதே என்றுதான் நினைத்தோம். சான்ஸே இல்லை என்று தோன்றியதும், சரி விட்டுவிட்டு அடுத்த ஆகஸ்டில் - ஆகஸ்ட் 2010-ல் வெளியிடலாம் என்று நினைத்தோம். மொழிபெயர்ப்பு கைக்கு அதற்குள்ளாக வந்துவிட்டது. ஆனால் அதில் செய்யவேண்டிய வேலைகள் மலைப்பைத் தந்தன. அப்படியே காலம் நழுவி நழுவி, ஆகஸ்டும் வந்தது, போனது.

சென்னை புத்தகக் கண்காட்சி 2011-ல் கொண்டுவந்தே ஆகவேண்டும் என்று மீண்டும் வேலைகளை ஆரம்பித்தோம். இன்று புத்தகம் அச்சுக்குப் போகத் தயார். அடுத்த சில நாள்களில் அச்சாகி, சுடச்சுட புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்போது வந்துள்ளது. நிச்சயம் இந்தத் தொகுதி திருப்திகரமாகவே வந்துள்ளது.

அடுத்த சில மாதங்களில் ஒரு ஸ்பெஷல் எடிஷன் கொண்டுவருவோம் - இரண்டு தொகுதிகளையும் ஒன்றுசேர்த்து, ஒரு லெதர் பவுண்ட் ஸ்பெஷல் வால்யூமாக.

***

இந்தியாவின் கதை என்ன அற்புதமான கதை! இந்தியா என்றொரு தேசம் சாத்தியமே இல்லை என்று அனைவரும் ஆரூடம் கூறியபின், எப்படி அத்தனை எதிர்மறைக் கருத்துகளையும் தாண்டி இந்தியா என்ற தேசம் சாத்தியமாகியுள்ளது என்பதைக் காட்டுகிறது குஹாவின் எழுத்து.

சிக்கல்கள் இல்லாமல் இல்லை. ஏழைமை, சுகாதார வசதிகள் போதாமை, கல்வியின்மை, பிரிவினைவாதம், ஊழல், மதவாதம், விரைவான உலகமயமாதலால் பாதிக்கப்படும் பழங்குடியினர் என்று எண்ணற்ற பிரச்னைகள். ஆனால் இவற்றுக்கு ஏதோ ஒரு வழியில் விடைகள் கண்டுபிடிக்கப்படும் என்ற நம்பிக்கை இப்போதுதான் வந்துள்ளது.

இதனைச் சாதிக்க இந்தியா என்ன விலை கொடுக்கவேண்டியிருந்தது என்பதைக் கதையாக விளக்குகிறார் குஹா.

அடுத்த சில தினங்களில் குஹா புத்தகத்திலிருந்து சில சில (சிறு) பகுதிகளைக் கொடுக்க உள்ளேன். ஒவ்வொருவர் வீட்டிலும் கட்டாயம் இருக்கவேண்டிய இரு தொகுதிகள் இவை.

புத்தகத்தை மொழிபெயர்த்த ஆர்.பி.சாரதி பாராட்டுக்குரியவர். நிறையப் பொறுமை அவருக்கு. முதல் பாகம் மொழிபெயர்த்ததற்காக திசை எட்டும் விருது பெற்றுள்ளார்.

இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு: பாகம் 1, பாகம் 2

பாகம் 2, சென்னை 2011 புத்தகக் கண்காட்சியில் வெளியாகும்.

Monday, December 13, 2010

மாடு வளர்ப்பு

ஒரு பசு மாட்டின் சராசரி வயது எவ்வளவு? 15 ஆண்டுகள்தானாம். அதாவது நம்மூரில் இருக்கும் கலப்பினப் பசுக்கள்.

மாடு வளர்ப்பவர்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள் பல உள்ளன.

மாடு கன்றுக்குட்டி ஈனும்போது கூடவே சீம்பால் என்ற ஊட்டச்சத்து மிகுந்த பாலைச் சுரக்கும். இந்தப் பால் முழுவதையும் கன்றுக்குட்டி குடிக்கக் கொடுக்கவேண்டுமாம். ஆனால் பெரும்பாலானோர் இதைச் செய்வதில்லை. சிலர் அதைத் தாங்கள் உண்டிட எடுத்துச் செல்கின்றனர். வேறு சிலர் ஏதோ மூட நம்பிக்கைகளை மனத்தில்கொண்டு குளத்தில் கொட்டிவிடுகின்றனராம். இதன் விளைவாக, அந்தக் கன்றுக்குட்டி ஆரம்பத்திலேயே வளர்ச்சி குன்றிப் போய்விடுகிறது.

எனவே சீம்பாலை முழுமையாகக் கன்றுக்குட்டிக்குக் கொடுக்கவேண்டும்.

அடுத்து அதன் தொப்புள்கொடியை வெட்டுவது; மருந்துபோட்டுக் காப்பது. எப்படி மனிதக் குழந்தைகளுக்கு கவனமாக தொப்புள்கொடியை அரிந்துவிட்டு பிளாஸ்திரி போட்டுக் கட்டிவைக்கிறோமோ, அப்படிப் பெரும்பாலும் மாடுகளுக்குச் செய்வதில்லை. கன்று மண்ணில் புரண்டு அங்கு இன்ஃபெக்‌ஷன் வர நேரிடுகிறது.

எட்டு நாள் தாண்டிய உடனேயே கன்று வயிற்றில் (ஜீரண மண்டலத்தில்) பூச்சி வராமல் இருக்க மருந்து கொடுக்க ஆரம்பித்துவிடவேண்டுமாம். அதன்பின் 15 நாள்களுக்கு ஒருமுறை இதனை முறையாகச் செய்துவரவேண்டும்.

சுமார் 2.5 ஆண்டுகளில் ஒரு கன்று வயதுக்கு வந்து, சினை பிடிக்கத் தயாராக உள்ளது. உடனடியாகவே அதற்குச் சினையூட்டலாம். கன்றை ஈன்றதும், கவனமாக முன் சொன்னதுபோல, அதன் குட்டிக்கு சீம்பாலை கொடுக்கவேண்டும். அடுத்த சுமார் 10 மாதங்களுக்கு மாடு பால் தரும். அதன் பால் வற்றிப்போகும் காலத்தைக் கணித்து அதற்கு ஏற்றவாறு அதனை மறுபடியும் சினையூட்ட வைக்கவேண்டும். அதன் வாழ்நாளில் அதனை 10 முறை சினையூட்டி, கன்றுகளை ஈன வைத்து, அதன் பால் தரும் காலத்தை அதிகப் படுத்தமுடியும்.

மாடுகளுக்கு உணவு அளிப்பதை அக்கறையுடன் செய்யவேண்டும். பசுந்தழை (புல்), காய்ந்த தழை (வைக்கோல் முதலியன) ஆகியவற்றுடன் சரியான அளவு probiotic நுண்ணுயிரிகள் கலந்த கலவையைக் கொடுக்கவேண்டும். (மனிதர்கள் சாப்பிடும் தயிர் probiotic வகையைச் சேர்ந்தது.) அப்போதுதான் மாடுகள் உட்கொள்ளும் உணவை முழுமையாக உள்வாங்கி, செரித்து, அதன் சத்து முழுவதும் பாலாக ஆகும் நிலை ஏற்படும். எந்த மாதிரியான உணவைத் தரவேண்டும் என்பதை ஒரு கால்நடை மருத்துவரிடம் முறையாகக் கேட்டு அதனைப் பின்பற்றவேண்டும்.

கன்றுகள் பால் சாப்பிடும் காலம் வரையிலும், கன்றின் எடையில் பத்தில் ஒரு பாகம் அளவுக்கு அதற்குப் பால் தரவேண்டும். பலரும் இதனைச் செய்வதில்லை. இதெல்லாம் கன்றின் வளர்ச்சியைப் பாதிக்கும். இதனால் அந்தக் கன்று பின்னர் வளர்ந்ததும் அதன் பால் தரும் அளவு நிச்சயமாக பாதிக்கப்படும்.

மாடுகள் வசிக்கும் இடத்தைப் பராமரிப்பது, மாடுகளுக்கு நோய் வராமல் பார்த்துக்கொள்வது, அவற்றின் உடலில் ஈக்கள், உண்ணிகள், பிற மொய்க்காமல், தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்வது, இவை அனைத்தும் முக்கியம். அவற்றுக்கும் நோய்கள் வரும்போது உடனடியாக மருத்துவர்களைப் பார்ப்பதும் முக்கியம். பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டால் மனிதனுக்கு எந்த அளவுக்கு தொந்தரவோ, அதே அளவுக்கு மாட்டுக்கும் தொந்தரவுதான். வருமானமும் பாதிக்கப்படும் என்பது முக்கியம்.

இந்தியாவைப் பொருத்தவரை வெளிநாட்டுப் பசுக்களை வளர்ப்பது சரியல்ல. கலப்பினப் பசுக்கள், அதில் சுமார் 62-63% வெளிநாட்டு (ஜெர்ஸி?) பசுவின் மரபணு இருந்தால் போதும்.

***

சென்ற வாரம் சென்னையிலிருந்து காரில் ஊர் சுற்றும் பயணத்தின்போது மாறி மாறி எஃப்.எம் வானொலிகளைக் கேட்டு, பின் கவரேஜ் இல்லாத இடத்தில் ஆல் இந்தியா ரேடியோ கேட்டபோது கிடைத்த தகவல்கள் இவை. இந்த அதிமுக்கியமான விஷயத்தை உடனடியாகப் பதிவு செய்ய விரும்பினேன். ஆனால் அதற்குள் தில்லி செல்லவேண்டிய வேலை வந்துவிட்டது. பிறகு மறக்கவும் ஆரம்பித்துவிட்டது. எனவே ஞாபகம் இருக்கும்வரை இங்கே!

இனி, தொடர்ச்சியாக ஏ.எம் - ஆல் இந்தியா ரேடியோ வானொலி கேட்கப்போவதாக முடிவு செய்துள்ளேன்.

Tuesday, December 07, 2010

புகளூர் கல்வெட்டுகள்

நேற்று கரூர்/புகளூர் செல்லவேண்டியிருந்தது. அலுவலக வேலைகளை முடித்ததும் அங்குதான் சரித்திரப் பிரசித்தி பெற்ற சில கல்வெட்டுகள் உள்ளன என்ற எண்ணம் மனத்தில் தோன்ற அதைத் தேடிச் சென்றேன்.

புகளூரில் முதலில் கேட்டுப் பார்த்ததில் யாருக்கும் அப்படி ஒன்று இருப்பதாகத் தெரியவே இல்லை. இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஒரு சிலர் மலைமீதிருக்கும் முருகன் கோயிலைக் காட்டினர். ஏதோ ஓர் எண்ணத்தில், கோயிலில் நான் தேடும் கல்வெட்டு இருக்காது என்று தெனாவெட்டாக வேறு இடங்களைத் தேடிச் சென்றுவிட்டு, கடைசியில், அங்கிருந்து மீண்டும் சென்னை கிளம்ப நினைத்தபோது, வேலாயுதம்பாளையம் அருகே பைபாஸ் சாலையில் ஏற முற்படும்போது ஒரு தட்டி தென்பட்டது. அதில் இரண்டாயிரம் ஆண்டுப் பழைமை வாய்ந்த கல்வெட்டு பற்றிய குறிப்பு இருந்தது. முருகன் இருக்கும் மலையில்தான்.


ஒரு சிறு மலை. அந்த மலையுச்சியில் முருகனுக்குக் கோயில் ஒன்று உள்ளது. வாசலிலேயே தொல்லியல் துறையின் அறிவிப்பு காணப்படுகிறது.


ஆனால் அருகில் கண்ணுக்குத் தெரிந்த யாருக்கும் அந்தக் கல்வெட்டுகள் எங்கே உள்ளன என்று தெரியவில்லை. சந்நிதியில் இருக்கும் ஐயரிடம் கேட்கச் சொன்னார்கள். உச்சிகால பூஜை முடிந்து கோயில் சார்த்தும் நேரம் என்பதால் அவசர அவசரமாக மேலே செல்லச் சொன்னார்கள். செங்குத்தான 315 படிகள். மூச்சு இரைக்க இரைக்க மேலே சென்று முருகன் சந்நிதியில் இருந்த ஐயரிடம் கேட்டேன். அவருக்குத் தெரிந்திருந்தது. மலைக்கு வெளிப்புறத்தில்தான் அந்தக் குறிப்பிட்ட கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் ஓராண்டுக்கு முன், அங்கு செல்லும் வழியை மூடி மறைத்து, வேலி எழுப்பி, பூட்டு பூட்டியுள்ளனர் என்றார். அதற்கான சாவி கீழே கீழே இருக்கும் கோயில் காவலர் சந்திரசேகரன் என்பவரிடம் உள்ளது என்றார். அந்தப் பகுதியில் இருக்கும் இளைஞர்கள் புராதனப் பழைமை வாய்ந்த சமணர் படுகைகளை சீட்டாட, மது குடிக்க, பெண்டிரை அழைத்து வந்து, கிடத்தி (யார் அறிவர்! சமணர் படுகைமீதே கூடக் கிடத்தி?) கொண்டாட என்று பயன்படுத்தினராம். இதனால் தில்லியிலிருந்து வந்து பார்த்த உயரதிகாரிகள், உடனடியாக பூட்டு/சாவி போட்டுவிட்டனராம்.

ஆ! மீண்டும் 315 படிகள் கீழே இறங்கி மேலே ஏறவேண்டுமா என்று தயக்கம். ஆனாலும் இந்த வாய்ப்பை விடமுடியுமா? கீழே இறங்கி வந்தால் சந்திரசேகர் இருந்தார். ஐயப்பன் மலைக்கு மாலை போட்டிருந்தார். காலில் செருப்பு இல்லை. மேலே வந்து கல்வெட்டுகளைக் காட்ட முடியுமா என்று கேட்டேன். ஒப்புக்கொண்டார். அவ்வப்போது ஆராய்ச்சி மாணவர்கள் வருவதாகவும், அவர்களும் அங்கே உள்ள கல்வெட்டுகள் என்ன சொல்கின்றன, அவற்றின் பொருள் என்ன என்று கேட்பதாகவும், அதற்கான தகவல் கையேடுகள் ஏதும் இல்லாததால் அவற்றைக் கொடுக்க முடிவதில்லை என்றும் சொன்னார்.

மீண்டும் மூச்சிரைக்க மூச்சிரைக்க ஏறினோம். சந்நிதிக் குருக்கள் பூஜையை முடித்துவிட்டு, உணவுடன் கீழே வந்துகொண்டிருந்தார். எனக்கு இடத்தைக் காண்பித்தபின் பூட்டுமாறு சொல்லிவிட்டுச் சென்றார். இடும்பன் சந்நிதி அருகே கதவு பூட்டியிருந்தது. அங்கே ஒரு யுவதியும் இரு இளைஞர்களும் உட்கார்ந்திருந்தனர். அந்தப் பெண் சற்று சத்தமாகவே ‘நீ என்ன லவ் பண்றியா இல்ல வேற யாரையாவது லவ் பண்றியான்னே தெரியலையேடா’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் மேலே வரும்போதே ஓர் இளைஞர் சற்றே ஜகா வாங்கி, ‘சாமி கும்புடப் போறேன்’ என்று சந்திரசேகரனிடம் சொன்னார். ‘கோயில் கதவு மூடியாயிற்று, அதனால் கிளம்பிச் செல்லுங்கள்’ என்று அவர்களைத் துரத்திவிட்டு, கதவைத் திறந்துகொண்டு என்னை அழைத்துக்கொண்டு கல்வெட்டுகளைக் காண்பிக்கச் சென்றார்.

கிபி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் இவை. அங்கே சமணப் படுகைகள் சில உள்ளன. படுகைகளை ஒட்டி சில தமிழ் பிரமி எழுத்துகள் உள்ளன. மலை முகப்பில் சில இடங்களில் எழுத்துகள் வெட்டப்பட்டுள்ளன. அவற்றின்மேல் சாக்கட்டியால் அழுத்தி எழுதியுள்ளனர். பார்த்தவுடன் படிக்கமுடியுமாறு.

இதில் ஒரு கல்வெட்டில்தான், ‘ஆதன் செல் இரும்பொறையின் மகனான பெருங்கடுங்கோனின் மகனான கடுங்கோன் இளங்கடுங்கோ வெட்டுவித்த படுகை, யாற்று செங்காயபன் என்ற சமண முனிவருடையது’ என்ற தகவல் வருகிறது. இதில் குறிப்பிடப்படும் அரசர்கள் எல்லோருமே சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் சேர மன்னர்கள். இவர்களில் இரும்பொறை (கல்வெட்டில் இரும்புறை என்று எழுதப்பட்டுள்ளது) அடித்த காசுகள் கரூர் பகுதியில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன.


அருகில், வேறு பல படுகைகளை வெட்டுவித்தவர்களின் பெயர்களும் அங்கு படுத்திருந்த சமண முனிவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. 


அவற்றைப் பார்த்தபின், மறுபக்கம் சென்று அங்கே சித்தர்கள் வாழ்ந்த இடத்தைக் காண்பிக்கிறேன் என்றார் சந்திரசேகரன். மலையில் பின்புறத்தை நோக்கிச் செல்லும்போது சந்திரசேகரன் திடீரென்று நின்றார். பாறைக்கு அடியில் சரசரவென சத்தம். ‘ஏய், போ, போ, சூ’ என்று விரட்டினார். ‘சாரைப்பாம்புங்க, அதான் சரசரன்னு போகுது. நாகம்னா அப்படியே நிக்கும்’ என்றார். எனக்கு நடுங்க ஆரம்பித்துவிட்டது. கல்வெட்டைத் தேடி வந்து, பாம்பைச் சீண்டி, வம்பெதற்கு என்று ‘வேண்டாங்க, போதும் கிளம்பிடலாம்’ என்றேன். திரும்பி வரும்போது, ‘இங்க எல்லாமே பாம்புங்க இருக்குங்க’ என்று பீதியைக் கிளப்பினார். வழியில் ஏதேனும் தென்படுகிறதா என்று கவனமாகப் பார்த்தபடி, அங்கிருந்து வெளியே வந்துவிட்டேன்.


ஒரே ஒரு கல்வெட்டை (மேலே உள்ளது), தமிழ் பிரமி எழுத்துகளைப் பார்த்துப் பார்த்து நானே எழுதிப் பார்த்தேன். முதல் வரி:

ந லி பி ஊ ர அ பி ட ன கு ற ம ம க ள

என்று வந்தது. ஐராவதம் மகாதேவனின் புத்தகத்தில் ‘பி’ என்பதை (3-ம் எழுத்து) ‘ய’ என்பதாகப் படிக்கவேண்டும் என்று குறிப்பு உள்ளது. நான் ‘அ’ என்று படித்ததை (6-வது எழுத்து) அவர் ‘ஆ’ என்கிறார். நான் ‘ற’ என்று படித்ததை (11-வது எழுத்து) அவர் ‘று’ என்று படிக்கிறார். இரு வரிகளையும் சேர்த்தால், வருவது:

‘நலியூர் ஆ பிடன் குறும்மகள் கீரன் கொறி செயிபித பளி’.

அதாவது,

‘நல்லியூர் பிட்டனின் இளைய பெண் கீரன் கொற்றி செய்வித்த பள்ளி’.

‘ல்லி’ என்பதற்கு ‘லி’ மட்டும், ‘ட்ட’ என்பதற்கு ‘ட’ மட்டும், ‘ற்றி’ என்பதற்கு ‘றி’ மட்டும்தான் உள்ளன. மெய் எழுத்துக்கும் அகர உயிர்மெய்க்கும் வித்தியாசம் இல்லை. ஆனாலும்... 1800 ஆண்டுகளுக்கு முன் யாரோ ஒருவர் எழுதியதை நாமே படிக்கமுடியும், ஒரு மாதிரி பொருளும் புரிந்துகொள்ள முடியும் என்பது கிளர்ச்சி தருவதாக உள்ளதல்லவா!

வியாழக்கிழமை, 9 டிசம்பர் 2010 அன்று, கிழக்கு மொட்டைமாடியில், மாலை 6.30 மணிக்கு, பேரா. சுவாமிநாதன், ஐராவதம் மகாதேவனின் 'Early Tamil Epigraphy: From the earliest times to the sixth century AD' என்ற புத்தகத்தின் பொருள் பற்றிப் பேசுகிறார். (இது உலக எழுத்துகள் என்ற தொடரில் பேரா. சுவாமிநாதன் நிகழ்த்திவரும் பேச்சுகளில் இந்த மாதத்துக்கானது...)

***

நீங்கள் இந்தக் கல்வெட்டுகளைக் காண விரும்பினால், (பாம்புகளைக் கண்டு பயப்படாதவர் என்றால்,) செல்லவேண்டிய இடம்: கரூர்/புகளூர் அருகில் உள்ள வேலாயுதம்பாளையம், மலைமீதுள்ள முருகன் கோயில். கோயில் காவலர் சந்திரசேகரனின் செல்பேசி எண்: 98650-13050. முன்னதாகவே பேசி, கீழிருந்தே அவரைப் பிடித்து மேலே அழைத்துச் செல்லச் சொல்லுங்கள். கரூரிலிருந்து நேராக பஸ் ஸ்டாப் கோயில் அருகிலேயே உள்ளது.

Thursday, November 25, 2010

நிதீஷ் குமாருக்கு மீண்டும் வாழ்த்துகள்

கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் ஏதேனும் ஒரு மாநிலத்தில் மிக அதிகமான அளவில் வளர்ச்சி நடந்திருந்தது என்றால் அது பிகார்தான்.

அதன் காரணமாகவே, மைக்கைப் பிடித்து அடித்து அசத்திப் பேசத் தெரியாத நிதீஷ் குமார் + பாஜக கூட்டணி அபார அளவில் வெற்றிபெற்று பிகாரில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

வெற்றிக்குக் காரணமாக அனைவரும் சொல்வது: சட்டம் ஒழுங்கை நேர்ப்படுத்தினார்; சாலைகளைப் போட்டார்; ஊழலை முடிந்தவரை கட்டுப்படுத்தினார்; கல்விக்கான வாய்ப்புகள் அதிகப்படுத்தப்பட்டது.

சரியாக, ஐந்து ஆண்டுகளுக்குமுன் நான் எழுதிய பதிவு

இரண்டு தேர்தல்களுக்குமுன் நடந்த தேர்தலில் லாலு பிரசாத்தின் கூட்டணிக்கு சரியாக மேண்டேட் கிடைக்கவில்லை. நிதீஷ் ஒரு கூட்டணியை உருவாக்கிக்கொண்டு ஆட்சியை அமைத்தார். ஆனால் காங்கிரஸ் தன் டகால்டி வேலைகளைச் செய்து மாஸ்கோவில் இருக்கும் அன்றைய ஜனாதிபதி அப்துல் கலாமிடம் கையெழுத்து வாங்கி அந்த ஆட்சியைக் கலைத்தது. தொடர்ந்து நடந்த தேர்தலில் நிதீஷ் குமார் + பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கமுடிந்தது.

நிதீஷுக்கும் பாஜகவினருக்கும் உரசல்கள் இருந்தாலும், ஆட்சி நடத்துவதில் சிக்கல் ஏதும் இல்லை.

ஆனால் ஒன்றுமே இல்லாத இடத்தில் சில முன்னேற்றங்களைக் காட்டுவது எளிது. வரும் ஐந்தாண்டுகளில் நிதீஷ் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் சவாலே. இந்த ஐந்தாண்டுகளில் கிட்டத்தட்ட தென் மாநிலங்கள் அளவுக்கு வளர்ச்சியைக் காண்பிக்கவேண்டி இருக்கும். அதற்குத் தேவையான மனித வளம் அவர்களிடம் இல்லை. இந்தியாவில் பல மாநிலங்களில் பரவியிருக்கும் பிகாரிகள் அனைவரும் அந்த மாநிலத்துக்குச் சென்றால்கூட இது மிகவும் கடினமானது.

பார்ப்போம், என்ன செய்கிறார்கள் என்று.

***

காங்கிரஸ் படுபயங்கரமாக அடிவாங்கியதும் ஒருவிதத்தில் நல்லதே. நிதீஷ் குமாரின் யோசனையைக் கேட்டு ராகுல் காந்தி ஒன்று செய்யவேண்டும். பேசாமல் உத்தரப் பிரதேசத்துக்குச் சென்று, அடுத்த மாநிலத் தேர்தலில் தன்னை முதலமைச்சர் பதவிக்கு முன்வைத்து பிரசாரத்தை ஆரம்பிக்கவேண்டும். ஒருவேளை அவரும் காங்கிரஸும் ஜெயிக்க வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து ஐந்தாண்டுகள் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலத்தை ஆட்சி செய்து, பிரச்னைகளைச் சமாளித்து, வளர்ச்சியைக் கொண்டுவந்தால், இந்தியப் பிரதமராக அவரை நினைத்துப்பார்ப்பதில் பெரும்பாலானோருக்கு சிக்கல் இருக்காது.

***

ஆந்திராவுக்கு அற்புதமான முதல்வர் கிடைத்துள்ளார். இன்று தொலைக்காட்சியைப் பார்க்கும்போது எல்லாக் கேள்விகளுக்கும் ‘மேலிடத்துடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்பேன்’ என்று காங்கிரஸ் முதல்வர்களிடம் எதிர்பார்க்கப்படும் பதிலை அழகாகச் சொன்னார்.

அவரது பெயர் - மற்றுமொரு ரெட்டி. கிரன் குமார் ரெட்டி. துணை முதல்வராக கீதா ரெட்டி என்று ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்கிறார்கள். ராயலசீமா ரெட்டி முதல்வர், தெலுங்கானா ரெட்டி துணை முதல்வர். பழைய ரெட்டியின் கோபம்கொண்ட மகன் ரெட்டி, பிரதான வில்லன். இதுதாண்டா ரத்த சரித்திரம்!

***

யெட்டியூரப்பா நகரில் இன்று ஒருநாள் இருக்கிறேன். அவருக்கு வெட்கம் சுத்தமாக இல்லை என்பது மட்டுமல்ல; நிறைய chutzpah-வும் உள்ளது. (தமிழில் என்ன சொல்லலாம்? தில்லு?!) ஊழலை எதிர்க்கட்சிகள்மீதே திருப்பிவிடுகிறேன் என்கிறார். அப்படியென்றால் என்ன என்று புரியவில்லை. இப்போது நடந்துகொண்டிருப்பது, கர்நாடகத்துக்கு நல்லதல்ல.

***

அடுத்த உ.பி தேர்தல்(கள்) இரண்டுமே ருசிகரமானவை. ஒன்று உத்தரப் பிரதேசத் தேர்தல். மற்றொன்று உடன் பிறப்பு(கள்) தேர்தல். தமிழக உடன் பிறப்புகள், உடன் பிறவாச் சகோதரிகள் என இன்னும் நான்கு மாதத்தில் படு குழப்பமான நிலையை தமிழகம் அடையப்போகிறது. திமுக விரைவாக உள்கட்சிப் பிரச்னையை முடித்தாகவேண்டும். ஆனால், மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்தச் சிக்கலுக்குத் தீர்வே இல்லை என்று தோன்றுகிறது. ஸ்டாலின் - அழகிரி - கனிமொழி - மாறன்(சன் டிவி) - கருணாநிதி என்ற இந்த ஈக்வேஷன் எப்படி செட்டில் ஆகும்? யார் யாரைத் துரத்தப் போகிறார்கள்?

யாதவர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள்.

Saturday, November 20, 2010

காங்கிரஸ் - திமுக கூட்டணி

நீரா ராடியா “ஒலிப்பதிவுகள்” மூலம் கிடைக்கும் காங்கிரஸ்-திமுக கூட்டணி dynamics, தெரிந்துகொள்ள சுவாரஸ்யமாக உள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் துறைகளைப் பிரித்துக்கொள்வதில் பெரிதாக சீன் போட்டு அடித்துப் பிடித்து இடங்களை வாங்கியது திமுக. சரத் பவாரோ மமதா பானர்ஜியோ இந்த அளவுக்குச் சண்டை போடவில்லை.

திமுக இடங்கள் வாங்கியதில் என்னவெல்லாம் குழப்படிகள் இருந்தன என்பது அப்போதே யூகிக்கக்கூடியதாக இருந்தாலும், இப்போது சம்பந்தப்பட்டவர்களின் பேச்சுகள் இதனை மேலும் சுவாரஸ்யமாக்குகின்றன.

1. டி.ஆர். பாலுவுக்கு எந்த அமைச்சர் பதவியையும் தருவதில் காங்கிரஸ் கட்சிக்கு விருப்பம் இல்லை. (ஏன் என்ற கேள்வி எழுகிறது.)

2. தயாநிதி மாறன், தான்தான் திமுகவின் முக்கியமான ஆள் என்று காங்கிரஸிடம் தன்னை அற்புதமாக புரமோட் செய்துள்ளார் என்றும் அதனை காங்கிரஸ் தலைமை (சோனியா, ராகுல், அகமத் படேல், பிரணாப் முகர்ஜி, குலாம் நபி ஆசாத், மன்மோகன் சிங்?) ஆரம்பத்தில் நம்பியிருக்கிறது என்றும் தெரிகிறது.

3. கனிமொழிதான் கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய ஒரே interlocutor என்று புரிகிறது. ஆனால் கனிமொழி ஏதோ காரணத்தால் தன்னை முழுவதுமாக assert செய்யவில்லை என்றும் புரிகிறது. கனிமொழியின் negotiation skills மீது கருணாநிதிக்கோ கட்சிக்கோ நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம்.

4. ஆ.இராசாவுக்கு நிச்சயம் ஏதோ மந்திரி பதவி (ஏனெனில் தலித்...) என்பது முடிவாகியுள்ளது. ஆனால் தொலைத்தொடர்பு கொடுக்கப்படவேண்டுமா, கூடாதா என்பதில் அரசியல்வாதிகளுக்கு மட்டுமின்றி, சுனில் பார்த்தி மிட்டல், ரத்தன் டாடா, அனில் அம்பானி முதல் பலருக்கு முக்கியமான கருத்துகள் இருந்துள்ளன. சிலருக்கு இராசா வேண்டும்; அப்போதுதான் தாங்கள் விரும்பியதைச் சாதிக்கலாம். சிலருக்கு இராசா கூடாது!

5. மாறனுக்கு கேபினட் என்றால் தனக்கும் கேபினட் அந்தஸ்து என்று அழகிரி அழும்பு பிடித்துள்ளார்.

6. அழகிரி ஒரு ரவுடி, ஆங்கிலம் பேசத் தெரியாதவர், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்று தயாநிதி மாறன் காங்கிரஸ் மேலிடத்தில் சொல்லியுள்ளார்.

7. கருணாநிதிக்குப் பிறகு கட்சி ஸ்டாலின் கைக்கு வரும்; ஸ்டாலினை நான்தான் கண்ட்ரோல் செய்வேன் என்று தயாநிதி மாறன் தில்லியில் பலரையும் நம்ப வைத்துள்ளார் என்றும் புரிகிறது.

8. அமைச்சர் பதவிகள் கேட்டு அதில் தன் உறவினர்கள் மூன்று பேரை உள்ளே நுழைப்பது அறச் செயலாக இருக்காது என்று கருணாநிதி உணர்ந்து, கடைசியில் கனிமொழிக்கு வேண்டாம் என்று முடிவாகியுள்ளது.

9. தயாநிதி மாறன் கருணாநிதியிடம், தான் கட்டாயமாக கேபினட் மினிஸ்டர் ஆக்கப்படவேண்டும் என்று அகமது படேலே (சோனியா காந்தியே) விரும்புகிறார் என்பதாகக் கதை கட்டி இருக்கிறார் என்றும் தெரிகிறது.

10. கருணாநிதி நேரடியாக காங்கிரஸ் தலைமையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தால், இந்தப் பிரச்னைகள் பல இருந்திரா என்று தோன்றுகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு, வேறு யாரையும் அழைத்துக்கொள்ளாமல், கருணாநிதி தன் மகள் கனிமொழியுடன் மட்டும் சென்றிருக்கலாம்.

11. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை மத்திய மந்திரி போனில் கூப்பிட்டு மிரட்டினார் என்ற செய்தி வெளியானபோது, அவசர அவசரமாக, அந்த மிரட்டல் மந்திரி இராசாதான் என்று பலரையும் நம்ப வைத்து வதந்தி பரப்பியவர் தயாநிதி மாறன் என்று தெரியவருகிறது. (ஜெயலலிதாவும் அதையேதான் சொன்னார் என்பது வேறு விஷயம்.)

***

இந்தத் தகவல்கள் எல்லாம் நமக்கு இப்போதுதான் தெரிய வருகின்றன. ஆனால் நிச்சயம் இவையெல்லாம் கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் கனிமொழிக்கும் தெரியாமல் இருந்திருக்காது. இப்போது உலகுக்கே தெரிந்துவிட்டதால், ஏதேனும் புது மாற்றங்கள் நிகழுமா?

Monday, November 15, 2010

நட்புலகம்

நண்பர் அன்புச் செழியனை சில ஆண்டுகளாகவே அறிவேன். சிங்கப்பூரில் வேலை பார்த்துவந்தார். சிறுவர்களுக்காக ஒரு நூலகம் அமைக்கவேண்டும் என்பது பற்றி அவரது திட்டங்களை அவ்வப்போது எனக்கு மின்னஞ்சலில் எழுதுவார். விரைவில் இந்தியாவில் தன் வீட்டைக் கட்டும்போது அதில் ஒரு பகுதி சிறுவர்கள் பயன்பாட்டுக்கென நூலகமாக இருக்கும் என்று சொல்லியிருந்தார். சிங்கப்பூரில் வசித்துவந்த காரணத்தால், அங்கு பல இடங்களைப் பார்த்துப் பழகிய காரணத்தால், என்ன மாதிரியான இடமாக அது இருக்கவேண்டும் என்பது பற்றி அவருக்கு பல உயர்ந்த அபிப்ராயங்கள் இருந்தன.

அது வெறும் புத்தகங்கள் மட்டும் இருந்த நூலகமாக இருந்துவிடக்கூடாது என்பது அவர் விருப்பம். படிக்கப் புத்தகங்கள், பார்க்க சிறுவர் படங்கள், வீடியோக்கள், விளையாடப் பொம்மைகள், இணைய வசதிகொண்ட கணினிகள், புதிர்கள், சிக்கல்கள், கூடி விளையாட ஓரிடம், ஒருவேளை கதைகள் கேட்க, தரையில் உட்கார்ந்து தாளில் கிறுக்க... என முழுமையாக குழந்தைகள் மகிழ்ச்சியுடன் இருக்க ஓரிடமாக அது இருக்கவேண்டும் என்று விரும்பினார்.

அப்படி அவர் உருவாக்கியிருப்பதுதான் மேடவாக்கத்தில் அவரது வீட்டின் தரைத்தளத்திலும் இரண்டாம் மாடியிலும் உள்ள நட்புலகம் (ஆங்கிலத்தில் BuddiesWorld). அனைத்து அறைகளுக்கும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. மினி தியேட்டர் உள்ள அறையில் சுமார் 20 குழந்தைகள் உட்கார குஷன் வைத்த படிகள் உள்ளன. எல்லா அறைகளுக்கும் இதமான வண்ணம் பூசப்பட்டு, குழந்தைகள் விரும்பும் கார்ட்டூன் படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நேற்று அதன் திறப்பு விழாவுக்காக நான் சென்றிருந்தேன். அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி கணினித்துறை உதவிப் பேராசிரியர் மதன் கார்க்கி, அவரது மனைவி, குழந்தையுடன் வந்து, ரிப்பன் கத்திரித்து தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் மேடவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ப.ரவி, திமுக மாணவர் அணி மாநிலச் செயலாளர் இள.புகழேந்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சம்பிரதாயமான பேச்சுகள் இருந்தன. நான் பேசும்போது, குழந்தைகளுக்கு ஒரு கதை சொல்லி (பாட்டி - வடை - காக்கா), கதை கேட்பதை (அல்லது பார்ப்பதை)விட, கதை படிப்பதில் மேலதிகச் சாத்தியக்கூறுகள் என்னென்ன உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டினேன். குழந்தைகள் ஆர்வமாகக் கேட்டாற்போல எனக்குத் தோன்றியது.

அந்தப் பகுதியில் உள்ள பல குழந்தைகளும் தங்கள் வீட்டில் இதுபோன்ற வசதிகளைச் செய்துகொள்ள முடியாத நிலையில் இருப்பவர்கள் என்று நான் யூகிக்கிறேன். மத்திய வகுப்பினர் பலராலேயே இது சாத்தியப்படாதது. அந்நிலையில் இதுபோன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்த பல பேற்றோர்களும் கொஞ்சம் பணம் செலவழிக்க முன்வரவேண்டும். இணையம், புத்தகங்கள் ஆகியவை உயர் நடுத்தர வகுப்பினருக்கு மட்டுமே என்ற நிலை இருக்கக்கூடாது.

அன்பு உருவாக்கியுள்ள இந்தத் திட்டம் அவருக்கு லாபகரமானதாக இருக்கவும் சுற்றுப்புற குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்பை அளிப்பதாக இருக்கவும் வாழ்த்துகிறேன். குழந்தைகள் தினத்தன்று தொடங்கப்பட்டுள்ள இந்த முயற்சி பெரும் வெற்றியை எட்டட்டும்.


முகவரி:

நட்புலகம், கம்பர் தெரு, இரண்டாவது பிரதான சாலை, விஜயநகரம், மேடவாக்கம், சென்னை 600100
போன்: 91764-04391
மின்னஞ்சல்: bwchennai@gmail.com
இணையம்: http://www.buddiesworld.net/

Saturday, November 13, 2010

இராசா நல்ல உரோசா

தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.இராசா மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் இவை.

1. விலை மதிப்பற்ற 2ஜி அலைக்கற்றையை, ஸ்பெக்ட்ரத்தை, ஏல முறை இல்லாமல் வரிசையில் வந்து, மெகாஹெர்ட்ஸுக்கு இத்தனை காசு என்று கொடுத்து வாங்கிச் செல்லலாம் என்று சொன்னார். இதனை நிதி அமைச்சகமும் சட்ட அமைச்சகமும் எதிர்த்தன. ஆனாலும் இப்படித்தான் செய்வேன் என்று திட்டவட்டமாகச் செய்தார். (இப்போது துறைச் செயலர் ஒருவரும் இதனை ஏற்க மறுத்ததாகச் செய்தி வந்துள்ளது.)

2. அத்துடன், இறுதி தினம் எதுவோ அதற்குச் சில நாள்கள் முன்னதாகவே ஸ்பெக்ட்ரம் விற்பனையை முடித்துக்கொள்வதாக அறிவித்தது.

3. (1)-ல் சொல்லப்பட்ட காரணத்தால் கணக்கர்கள் கணிப்பில், இந்தியாவுக்கு ஏற்பட்ட நஷ்டம் 1,75,000 கோடி ரூபாய். (2)-ல் சொல்லப்பட்டதை வைத்துப் பார்க்கும்போது, வேண்டுமென்றே சிலருக்குச் சாதகம் செய்ய, பிறருக்குப் பாதகம் செய்ய, முன்கூட்டியே தகவலைச் சிலருக்கு மட்டும் கொடுத்துவிட்டு, தேதியையும் முன்தள்ளி வைத்துவிட்டார்.

4. இதன்படி, ஒருசில கம்பெனிகள் சட்டுப்புட்டென்று காசு கொடுத்து ஸ்பெக்ட்ரம் வாங்கிவிட, அதே நிறுவனங்களில் அந்நிய நிறுவனங்கள் ஏகப்பட்ட பணத்தைச் செலுத்தி பங்குகளை வாங்கியுள்ளன. இதிலிருந்தே ஊழல் நடந்துள்ளது என்று தெரியவில்லையா?

அடுத்து என் நண்பர்களான சில அனானிமஸ்களும் மற்ற நான்-அனானிமஸ்களும் விளையாட்டாகவும் விளையாடாமலும், நான் ஆ.இராசாவுக்கு ‘ஜிஞ்சா’ அடிப்பது, என் பதிப்பக நிறுவனம் நூலக ஆணைகளைப் பெறுவதற்கே என்று கருத்து தெரிவிக்கிறார்கள். இதை ஒரு பொருட்டாக மதித்து பதில் சொல்வதே அபத்தம். என்றாலும், நீங்கள் என் வலைப்பதிவை மிக அதிகமாக மதிப்பீடு செய்கிறீர்கள் என்றே சொல்வேன். என்னவோ இதில் வருவதைப் பார்த்துத்தான் தமிழக அமைச்சர்கள் தங்கள் கொள்கை முடிவுகளை எடுப்பார்கள் என்பதாக நீங்கள் நினைப்பது ஆச்சரியம்தான். ஒவ்வொருமுறை நான் கருணாநிதியைத் திட்டும்போதும் கிழக்கு பதிப்பக நூலக ஆர்டர் அடிவாங்குகிறது; புகழும்போதும் நூலக ஆணை தூக்கலாக உள்ளது. சபாஷ்! உள்நோக்கம் கற்பிப்பதுதான் என்றால் ஏன் இன்னமும் கற்பனை கலந்து அடிக்கக்கூடாது? ஆ.இராசா எனக்கு 10 கோடி ரூபாய் கொடுத்து, என் சார்பில் நீ பி.ஆர்.ஓ வேலைகளைச் செய் என்று சொல்லியிருக்கிறார் என்றே வைத்துக்கொள்வோமே?

அடுத்து, விஷயத்துக்கு வருவோம்.

ஆ.இராசா ஊழல் செய்யவில்லை என்று நான் அடித்துச் சொல்லவில்லை. ஆனால் அவர் ஊழல் செய்துள்ளார் என்பதற்கு எந்தவிதத்திலும் தெளிவான சாட்சியம் இப்போதைக்கு இல்லை என்றுதான் சொல்கிறேன். நம் மக்கள் எப்படி அபத்தமாக இதைப் புரிந்துகொள்கின்றனர் என்பதற்கு சில மாதிரிகளைப் பார்ப்போம்.

இந்திய அரசுக்கு 1,75,000 கோடி ரூபாய் இழப்பு என்று கணக்கீட்டாளர் சொல்கிறார். இதையே உண்மையா என்று நாம் கேள்வி கேட்கவேண்டும். அதற்குள்ளாக, அது, ஆ.இராசா 1,75,000 கோடி ரூபாயை அமுக்கிவிட்டார் என்று மாறுகிறது! இரண்டும் ஒன்றா? இந்த ‘மாயப்பணம்’ இருப்பதுபோலவும் அது அரசின் கஜானாவிலிருந்து மந்திரமாக ஆ.இராசாவின் பைக்குள் (அல்லது திமுக பைக்குள்) போனதுபோலவும் சொல்லப்படுகிறது. ஒருவர் எழுதுகிறார்: அதில் ஒரு சிறு சதவிகிதத்தை மக்கள் நலத்துக்குப் பயன்படுத்தினாலும் போதுமே... ஆக, இல்லாத பணம் இருப்பதாக ஆகி, அதை எப்படிச் செலவழிப்பது என்றுகூட மக்கள் யோசித்துவிட்டனர். ஆ.இராசா மட்டுமல்ல, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் சொத்தும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அதிகரித்துக்கொண்டே போகிறது. இது எனக்கும் கவலையையும் பயத்தையும் தருகிறது. கட்டாயம் இன்வெஸ்டிகேட் செய்யப்படவேண்டிய விஷயம்தான் இது. ஆனால் இந்தக் கொள்கை முடிவால் இராசா நிதிரீதியில் எப்படி லாபம் அடைந்துள்ளார் என்பதைக் காண்பிக்காவிட்டால் ஊழல் குற்றச்சாட்டு ருசுவாகாது.

ஆனால் அரசுக்கு வரவேண்டிய பணத்தை இல்லாமல் பண்ணிவிட்டார் என்று இராசாமீது திறமைக்குறைவு என்ற குற்றச்சாட்டைக் கொண்டுவரலாம். அதை கேபினெட்டும் பிரதமரும் ஏற்றுக்கொண்டால், இராசாவைப் பதவிநீக்கம் செய்யலாம் அல்லது வேறு துறைக்கு மாற்றலாம். (கூட்டணிக் கட்சி அழும்பு பிடித்தால், அதை எப்படிச் சமாளிப்பது என்பது சோனியாவின், மன்மோகனின் பிரச்னை. நமக்குக் கவலை இல்லை.)

ஏன் நான் கணக்கீட்டாளர் கணக்கை ஏற்க மறுப்பேன்? 3ஜி ஏலம் நடந்தது. அப்போது இந்திய அரசுக்குக் கிடைத்த தொகை ரூ. 70,000 கோடி. 3ஜி என்பதைக் கொண்டு பல வித்தைகளைச் செய்யலாம். எனவே இவ்வளவு பணமாவது வந்தது. இருக்கும் ஸ்பெக்ட்ரத்தை ஒரு மெகாஹெர்ட்ஸுக்கு இத்தனை என்று பெருக்கி ஒரு கணக்கைக் கொடுப்பது அபத்தம். அதே ஸ்பெக்ட்ரத்தை 2ஜி ஏலம் என்று விட்டிருந்தால், அதிகபட்சம் 10,000 கோடி ரூபாய்க்கு மேல் கிடைப்பது கடினம். ஏனெனில் ஏற்கெனவே ஏகப்பட்ட கம்பெனிகள் இந்தச் சேவையை அளித்துவந்தன. நிறையப் பணம் கொடுத்து லைசென்ஸ் வாங்கி, ஸ்பெக்டரம் வாங்கி இந்தத் துறைக்குள் நுழைந்தால் ஆரம்பத்திலேயே அந்த நிறுவனம் போண்டி ஆகவேண்டியதுதான்.

தேதியை முன்னுக்குத் தள்ளிப்போட்டதில் ஏதேனும் கிரிமினல் நோக்கம் உள்ளதா, பணம் கைமாறினதா என்பதை சிபிஐதான் தீவிரமாகக் கண்டுபிடிக்கவேண்டும். ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் இது சாத்தியம்தானா என்பது சந்தேகமே. அந்த ஒரு காரணத்தாலேயே இராசா பணம் வாங்கியிருக்கிறார் என்று ஹேஷ்யமாகச் சொல்வது நியாயமற்றது. Where is the evidence?

கடைசியாக, ஸ்பெக்ட்ரம் பெற்ற நிறுவனங்கள் அனைத்துக்கும் வேல்யுவேஷன் அதிகமாகிவிட்டது என்ற குற்றச்சாட்டு...

இதில் என்ன பிரச்னை? வாங்கிய ஸ்பெக்ட்ரத்தை மற்றொருவருக்கு விற்று இந்த ‘இடைத்தரகர்கள்’ ஏகப்பட்ட பணம் பார்த்துவிட்டதுபோல, புரிதல் அற்ற மக்கள் எழுதுகின்றனர். இந்த மதிப்புகள் எல்லாம் பேப்பர் மதிப்புகள். புரமோட்டர்களுக்கு இன்னும் கைக்குப் பணம் வரவில்லை. நான் 1 லட்ச ரூபாய் போட்டு ஒரு நிறுவனம் தொடங்குகிறேன். ஒரு பங்கு ரூபாய் 10 என்று, 10,000 பங்குகள். 100 சதவிகிதப் பங்குகளும் என்னிடம். எனக்கு 1 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் கிடைக்கிறது. அதை வாங்க 20 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அதை என் நிறுவனம், வங்கி ஒன்றிடம் கடனாக வாங்கித் தருகிறது என்று வைத்துக்கொள்வோம். ஸ்பெக்ட்ரம் கிடைத்தவுடன் ஒரு அந்நிய நிறுவனம், என் நிறுவனம் புதிதாக வெளியிடும் 10,000 பங்குகளை, பங்கு ஒன்றுக்கு 1,00,000 ரூபாய் என்று கொடுத்து (அதாவது மொத்தம் 100 கோடி ரூபாய் கொடுத்து) வாங்குகிறது. இப்போது இருவரிடமும் ஆளுக்கு 50% பங்குகள் உள்ளன. என்னிடம் இருக்கும் பங்குகளின் மதிப்பு இப்போது 100 கோடி ரூபாய். ஆனால் நான் முதலீடு செய்ததோ ஒரு லட்சம் ரூபாய். ஆனால் என் பங்கை உடனே யாரிடமாவது விற்று 100 கோடியைத் தள்ளிக்கொண்டு நான் ஓடிவிடமுடியுமா?

நிச்சயம் முடியாது. என் கம்பெனிக்குள் வந்திருக்கும் 100 கோடியைக் கொண்டு நான் டவர்கள் அமைத்து, சிம் கார்டுகள் விற்று, லாபம் சம்பாதித்து, கடனை அடைத்து, என்றாவது ஒரு நாள் என் பங்குகளை யாரிடமாவது விற்று, அல்லது நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிட வைத்து, பொதுமக்களிடம் விற்று... என்று ஒரு பெரிய நீண்ட கதை.

யூனிநாரும் வீடியோகானும் இன்று எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கவேண்டும் தெரியுமா லாபம் பெற? பெருமுதலைகளான ஏர்டெல்லும் வோடஃபோனும் டாடாவும் ஐடியாவும் ரிலையன்ஸும் இருக்கும் துறையில் நிறையவே கஷ்டப்படவேண்டும், லாபம் செய்ய.

நம் மக்கள் கார்பரேட் ஃபினான்ஸ் பற்றி ஓரளவுக்காவது தெரிந்துகொண்டு இதைப்பற்றியெல்லாம் பேசினால் நன்றாக இருக்கும்.

ஸ்பெக்ட்ரம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால், என் பழைய பதிவு ஒன்றைப் படிக்கலாம்.