Wednesday, December 31, 2008

புத்தாண்டு உறுதிமொழிகள்

இவையெல்லாம் சொந்த வாழ்க்கைக்கு. தொழில் வாழ்க்கை சமாசாரங்கள் நாளை.

1. உடலைக் குறைத்தல்

இந்த ஆண்டு டார்கெட் 67 கிலோ. உடல் நலம் மட்டும் காரணமல்ல. குண்டானவர்கள் எந்த அளவுக்கு இந்த சமுதாயத்தின் வளங்கள்மீது அழுத்தம் கொடுக்கிறார்கள் என்பது திகிலடைய வைக்கிறது.

கடந்த சில தினங்களாக சென்னையின் குண்டு ஆண்களையும் பெண்களையும் பார்த்து திகிலடைந்துள்ளேன். ஆனால் இந்த குண்டர்கள் நகரங்களில்தான் உள்ளனர். கிராமங்களின் வத்தக்காய்ச்சிகள்தான். என் நண்பர் ஒருவரிடம் நாங்கள் கொண்டுவந்துள்ள குழந்தைகள் புத்தகம் ஒன்றைக் காட்டினேன். அதில் விக்கி என்ற குண்டுப்பையன் கேரக்டர் வருகிறது. அவர் சொன்னார்: “கிராமச் சிறுவர்களுக்கு இதுபோன்ற கேரக்டர்கள் அந்நியம். அவர்கள் யாருமே குண்டாக இருப்பதில்லை.” ஓரிரு விலக்குகள் இருந்தாலும் பெரும்பாலும் இது உண்மையே.

ஹார்மோன் பிரச்னை இல்லாமல், தின்பதால் மட்டுமே குண்டாகும், குண்டர்கள் அதிக உணவை மட்டுமல்ல, அதிகப் பெட்ரோலைச் சாப்பிடுகிறார்கள். அதிக மின்சாரத்தை விழுங்குகிறார்கள். எதிர்காலச் சந்ததியினரிடமிருந்து அதிகம் திருடுகிறார்கள். அவர்களது வேலைத் திறன் நிச்சயம் மோசமாகத்தான் இருக்கும்.

நான் அதிகம் தின்றுவிட்டு, அங்கும் இங்கும் ஓடி, ஜிம் சென்று உடலைக் குறைக்கப் போவதில்லை. உணவு உட்கொள்ளுதலை கடந்த சில மாதங்களில் வெகுவாக மாற்றி அமைத்துள்ளேன். இதைத் தொடர்ந்து செய்யவேண்டும்.

2. பெட்ரோலைக் குறைத்தல்

பெட்ரோல் விலை சரசரவென ஏற்றம் கண்ட சில மாதங்களுக்குமுன் எடுத்த முடிவு, காரைப் பயன்படுத்துவதை வெகுவாகக் குறைப்பது. இப்போது தினம் ஸ்கூட்டர்தான். அதிலும் சில மாற்றங்கள் செய்யவேண்டும். குளிர்காலம் முடிந்ததும் சைக்கிளைப் பயன்படுத்தலாம் என்று எண்ணம். லாப்டாப்பை வைத்துக்கொண்டு வருமாறு வசதிகள் கொண்ட ஒரு நல்ல சைக்கிள் வாங்கவேண்டும்.

சில நீண்டதூரப் பயணங்களுக்கு காரை எடுத்துச் சென்றுள்ளேன். இனி அது எப்போதும் கிடையாது. பஸ் அல்லது ரயில். தேவை என்றால் மட்டுமே விமானம்.

உள்ளூரில் விடுமுறை தினங்களில் பொதுக்கூட்டங்கள் போன்றவற்றுக்குச் செல்ல, மாநகரப் பேருந்து அல்லது மின்ரயிலைப் பயன்படுத்துதல்.

பெட்ரோல் விலை கணிசமாகக் குறைந்தாலும் மேற்கண்டவற்றைச் செய்யவேண்டும் என்ற முடிவு.

3. மாணவர்களுடன் உறவாடுதல்

கடந்த சில தினங்களில் சில பள்ளிக்கூடங்களுக்குச் சென்று அங்குள்ள மாணவர்களுடன் பேசிவருகிறேன். இதனை அதிகப்படுத்தவேண்டும். மாதம் குறைந்தது இரண்டு முறையாவது ஏதேனும் பள்ளிக்குச் சென்று அங்குள்ள மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் பேசவேண்டும்.

வரும் ஆண்டு, அறிவியல், கணிதம் பயிற்றுவித்தல் தொடர்பாக (எப்படிப் பயிற்றுவித்தால் பள்ளி மாணவர்கள் சுவாரசியமாகக் கற்பார்கள் என்று) சில பள்ளிக்கூடங்களில் சோதனை செய்ய உள்ளேன்.

4. பத்திரிகைகளுக்கு எழுதுதல்

அம்ருதா மாத இதழில் அறிவியல் பத்தி எழுத ஆரம்பித்துள்ளேன். இரண்டு எழுதியுள்ளேன். தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் எழுத உத்தேசம். இது தவிர, ப்ராடிஜி மேதை (உள்நாட்டுப் பத்திரிகை - பள்ளி மாணவர்களுக்கானது) தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் அறிவியல் கட்டுரைகள் எழுதப்போகிறேன்.

முடிந்தால் இதைச் சற்றே அதிகமாக்கவேண்டும்.

5. புத்தகம் எழுதுதல், மொழிபெயர்ப்பு

புத்தகம் எழுதுவதில் ஆர்வம் இல்லை. மொழிபெயர்ப்பில்தான் அதிக ஆர்வம் உள்ளது. 2009-ல் சில சுவாரசியமான புத்தகங்களை மொழிபெயர்க்கப் போகிறேன். ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டேன். சில ப்ராடிஜி புத்தகங்கள் எழுதலாம். சில மினிமேக்ஸ் புத்தகங்கள் எழுதலாம். அவ்வளவுதான்.

6. புதிய இந்திய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ளுதல், இந்தியைத் தூசு தட்டுதல்

இது வெகு நாள்களாக நடக்காமல் இருக்கும் ஓர் ஆசை. தீவிரமான முயற்சிகள் எடுக்க வாய்ப்புகள் சென்னையில் இல்லை. மலையாளமா, தெலுங்கா என்று உடனடியாக முடிவெடுத்து, மாலை நேரப் பயிற்சி வகுப்புகள் ஏதேனும் இருந்தால் போகவேண்டும்.

தெலுங்கு அல்லது மலையாளம் கற்றுத்தரும் (படிக்க, எழுத, பேச) வகுப்புகள் சென்னையில் இருந்தால் யாராவது தெரியப்படுத்தவும்.

எப்போதே படித்து மறந்துபோன இந்தியைக் கொஞ்சம் மேம்படுத்தவேண்டும். இப்போது தொலைக்காட்சிச் செய்திகள், சினிமா ஆகியவற்றை மட்டும்தான் பின்பற்ற முடிகிறது. படிக்க முடியும். பேச சுத்தமாக முடியாத நிலை. டில்லியிலோ மும்பையிலோ ஆட்டோ, டாக்ஸி ஆட்களுடன் ஏதோ நாலு வார்த்தை பேசினால் உண்டு. உருப்படியாகப் படிக்க ஆரம்பித்துவிட்டால் மீண்டும் பேசுவது அவ்வளவு கஷ்டமாக இருக்காது என்று நினைக்கிறேன்.

7. கர்நாடக இசையைப் புரிந்துகொள்ளுதல்

சும்மா தலையாட்டிக்கொண்டு இருக்காமல், ராகத்தைக் கண்டுபிடிப்பது எப்படி என்பதில் இறங்குவது. கொஞ்சம் மேற்கொண்டு இசையின் நுணுக்கங்களைத் தெரிந்துகொள்வது.

8. சென்னைக்கு வெளியே தமிழகத்தைச் சுற்றி வருவது

குறைந்தது 10 மாவட்டத் தலைநகரங்கள், 20 சிறு நகரங்கள் கிராமங்களுக்கு 2009-ல் போய்வரவேண்டும்.

என்ன ஏது என்ற இலக்கில்லாமல் ஒரு பார்வை பார்த்துவிட்டு வருதல்.

9. கணிதம், அறிவியலுக்கான வலைப்பதிவு (தனி + கூட்டு) - கணிதச் சமன்பாடுகளுடன் கூடியதாக உருவாக்கி, எழுதுதல்.

ஏற்கெனவே தொடங்கி, வடிவம் சரியாக வராததால் தங்கி நிற்கிறது. இந்த ஆண்டு அதனை நிச்சயமாகச் சரி செய்து எழுதுவேன்.

10. ஆங்கில வலைப்பதிவுக்கு மறுவாழ்வு தருவது

ஒட்டுமொத்தமாகக் கைவிட்டுவிட்ட ஆங்கில வலைப்பதிவை உருப்படியாக்கி, சில குறிப்பிட்ட விஷயங்களைத் தொடர்ந்து எழுதுவது. முக்கியமாக தமிழக அரசியல், கல்வி போன்றவை தொடர்பாக, தொடர்ந்து எழுதுவது.

Sunday, December 28, 2008

கிழக்கு புத்தக அறிமுகம் 6 - ஒலிப்பதிவு

இன்று கிழக்கு மொட்டைமாடியில் நடந்த புத்தக அறிமுகத்தின்போது, எஸ்.எல்.வி.மூர்த்தி சோம.வள்ளியப்பனின் “வாங்க, பழகலாம்!” புத்தகத்தை வெளியிட, குமரேசன் பெற்றுக்கொண்டார்.எஸ்.எல்.வி. மூர்த்தியின் அறிமுக உரை, ஒலிப்பதிவு

பாலு சத்யாவின் “ஜார்ஜ் வாஷிங்டன்” புத்தகத்தை ஆர். வெங்கடேஷ் வெளியிட, சபிதா ஜோசஃப் பெற்றுக்கொண்டார்.ஆர்.வெங்கடேஷின் அறிமுக உரை, ஒலிப்பதிவு

கலந்துரையாடல்

.

Saturday, December 27, 2008

சென்னை புத்தகக் கண்காட்சி - NHM கடை எண்கள்

கிழக்கு பதிப்பகம் (4 stall): P 33
நலம் வெளியீடு (2 stall): 158, 159
வரம் வெளியீடு (1 stall): 162
ஒலிப்புத்தகங்கள் (1 stall): 345

கிழக்கு புத்தக அறிமுகம் 5 - ஒலிப்பதிவு

ஐந்தாம் நாள் அறிமுகத்தன்று, இருளர்கள் ஓர் அறிமுகம் புத்தகத்தை ப்ரவாஹன் வெளியிட, கணேச நாடார் பெற்றுக்கொண்டார். பக்கத்தில் ஆசிரியர் குணசேகரன்.ப்ரவாஹனின் பேச்சு மற்றும் விவாதம், ஒலிப்பதிவு

செங்கிஸ்கான் புத்தகத்தை இகாரஸ் பிரகாஷ் வெளியிட, முத்துராமன் பெற்றுக்கொண்டார். அருகில் ஆசிரியர் முகில்.


இகாரஸ் பிரகாஷின் பேச்சு மற்றும் விவாதம், ஒலிப்பதிவு

ஹரன்பிரசன்னாவின் பதிவு

.

கிழக்கு புத்தக அறிமுகம் - 6

Friday, December 26, 2008

கிழக்கு புத்தக அறிமுகம் 4 - ஒலிப்பதிவு

நான்காம் நாள் கிழக்கு மொட்டைமாடி புத்தக அறிமுகத்தன்று, ராமதுரை எழுதிய விண்வெளி புத்தகத்தை பத்ரி சேஷாத்ரி வெளியிட, முரளி கண்ணன் பெற்றுக்கொண்டார்.பத்ரி சேஷாத்ரி பேசியது, ஒலிப்பதிவு

இரா. முருகனின் எண்.40 ரெட்டைத் தெரு புத்தகத்தை ஜே.எஸ்.ராகவன் வெளியிட, ஸ்ரீகாந்த் பெற்றுக்கொண்டார்.ஜே.எஸ்.ராகவன் பேசியது, ஒலிப்பதிவு

விவாதக்களம், ஒலிப்பதிவு

கிழக்கு புத்தக அறிமுகம் - 5


இன்றைய புத்தக அறிமுகம், க.குணசேகரனின் “இருளர்கள் ஓர் அறிமுகம்”, முகிலின் “செங்கிஸ்கான்”.

இலவச நாடக டிக்கெட்டுகள்

என்னிடம் நான்கு நாடகங்களுக்கு, ஒவ்வொன்றுக்கும் இரண்டு டிக்கெட்டுகள் வீதம், உள்ளன. நாடகங்கள் அனைத்தும் சென்னை, தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள சர் பிட்டி தியாகராயா அரங்கில் நடைபெறுகின்றன.

26 டிசம்பர் 2008, மாலை 7.00 மணி - சாவியின் “வாஷிங்டனில் திருமணம்”, கோவை பத்து குழுவினர்

27 டிசம்பர் 2008, மாலை 7.00 மணி - சுஜாதாவின் “கடவுள் வந்திருந்தார்”, மறைந்த பூர்ணம் விஸ்வநாதனின் குழுவினர்

28 டிசம்பர் 2008, மாலை 4.15 மணி - கிரேஸி மோகனின் “சாக்லேட் கிருஷ்ணா”

28 டிசம்பர் 2008, மாலை 7.00 மணி - டி.வி.வரதராஜனின் “ரியல் எஸ்டேட்”

விரும்புபவர்கள் என்னைத் தொடர்புகொண்டு, டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம். டிக்கெட்டுகளை இன்றே எனது அலுவலகத்தில் (கிழக்கு பதிப்பகம், எல்டாம்ஸ் ரோட், ஆழ்வார்பேட்டை) வந்து பெற்றுக்கொள்ளவேண்டும். முதலில் மின்னஞ்சல் அனுப்புங்கள். உங்களுக்கென எடுத்துவைத்துவிடுகிறேன்.

Thursday, December 25, 2008

கிழக்கு புத்தக அறிமுகம் - 4தமிழில், அறிவியல் புத்தகங்கள் எழுதுவது அவ்வளவாக நடைபெறாத நிலையில் ராமதுரை நமக்குக் கிடைத்த பொக்கிஷம். அவர் எழுதிய ’விண்வெளி’ என்ற புத்தகத்தை, கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பிராடிஜி புத்தகங்கள் வரிசையிலும் சில வந்துள்ளன. மேலும் சில புத்தகங்கள் வரிசையாக வெளிவர உள்ளன. அறிவியல் புத்தகங்கள் ஏன் பொதுமக்களுக்கு அவசியம் என்பதை வலியுறுத்தி, ராமதுரையின் எழுத்துகளை அறிமுகப்படுத்தி இன்று நான் பேச உள்ளேன்.

இரா.முருகனின் பயோபிக், நெ 40, ரெட்டைத் தெரு. அதை அறிமுகம் செய்து, ஜே.எஸ்.ராகவன் பேசுகிறார்.

கிறிஸ்து பிறந்த நாள் விடுமுறையை எங்களுடன் கழிக்குமாறு உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.

கிழக்கு புத்தக அறிமுகம் 3 - ஒலிப்பதிவு

நேற்று மாலை நடந்த கூட்டத்தில் ஒபாமா, பராக்!, ஆயில் ரேகை ஆகிய இரண்டு புத்தகங்களும் அறிமுகம் செய்யப்பட்டன.

ஒபாமா, பராக்! புத்தகத்தை சந்திரமௌலி வெளியிட, அரவிந்தன் பெற்றுக்கொண்டார்.சந்திரமௌலியின் பேச்சு + விவாதம்

ஆயில் ரேகை புத்தகத்தை நாராயணன் வெளியிட, சுஜாதா பெற்றுக்கொண்டார்.நாராயணன் பேச்சு + விவாதம்

ஹரன்பிரசன்னா பதிவு

Wednesday, December 24, 2008

கிழக்கு புத்தக அறிமுகம் 2 - ஒலிப்பதிவு

நேற்று மாலை நடந்த கூட்டத்தில் சுண்டி இழுக்கும் விளம்பர உலகம், மால்கம் எக்ஸ் ஆகிய இரு நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

விளம்பர உலகம் புத்தகத்தை சோம வள்ளியப்பன் வெளியிட, நாராயணன் பெற்றுக்கொண்டார்.சோம வள்ளியப்பன் பேச்சின் ஒலிப்பதிவு

மால்கம் எக்ஸ் புத்தகத்தை பா.ராமச்சந்திரன் வெளியிட, ஆர்.வெங்கடேஷ் பெற்றுக்கொண்டார்.பா.ராமச்சந்திரன் பேச்சின் ஒலிப்பதிவு

நேற்று சற்று நீண்டதாகவே இருந்தது விவாதம்.விவாதத்தின் ஒலிப்பதிவு

ஹரன் பிரசன்னாவின் பதிவு

சாகித்ய அகாதெமி விருது 2008

தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது, 2008, நாவலாசிரியர் மேலாண்மை பொன்னுச்சாமிக்குக் கிடைத்துள்ளது. நேற்று கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தின்போதே இதுபற்றிய எஸ்.எம்.எஸ் பலருக்கும் வந்திருந்தது. இன்று செய்தித்தாளில் வெளியாகியுள்ளது.

மேலாண்மை பொன்னுச்சாமியின் படைப்புகள் அனைத்தும் வானதி பதிப்பகம் வழியாக வெளியாகின்றன.

Tuesday, December 23, 2008

கிழக்கு புத்தக அறிமுகம் - 3


நாளை, புதன் கிழமை, 24 டிசம்பர் 2008 அன்று, சென்னை, ஆழ்வார்பேட்டை, கிழக்கு பதிப்பக அலுவலக மொட்டை மாடியில், இரண்டு புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

பா.ராகவனின் ஆயில் ரேகை. அறிமுகம் செய்பவர் நாராயணன்.
ஆர்.முத்துக்குமாரின் ஒபாமா, பராக்! அறிமுகம் செய்பவர் சந்திரமௌலி.

முதல் நாள் ஒலிப்பதிவும் படங்களும் இங்கே.
இரண்டாம் நாள் ஒலிப்பதிவும் படங்களும் நாளை வெளியாகும்.

செயல்வழிக் கற்றல் - ஒரு நேரடி அனுபவம்


சென்ற சனிக்கிழமை, மேக்கரை என்ற கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளிடம் உரையாடினேன். அவர்கள் அனைவரும் மூன்றாவது படிக்கிறார்கள். அந்தப் பள்ளியில் செயல்வழிக் கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1வது, 2வது வகுப்பு மாணவர்கள் ஒரே அறையில் படிப்பார்கள். 3வது, 4வது மாணவர்கள் ஒரே அறையில். மாணவர்கள் தரையில் பாய் போட்டு உட்காருவார்கள். ஆசிரியருக்கு நாற்காலி கிடையாது. அவரும் மாணவர்களுடன் தரையில் உட்காரவேண்டும். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் என நான்கு பாடங்கள் மட்டுமே.

பாரம்பரிய கற்றல் முறைப்படி ஆசிரியர் ஒரு பாடத்தை நடத்த, மாணவர்கள் புரிந்தாலும் புரியாவிட்டாலும், கேள்விகள் இருந்தாலும், வலுக்காட்டாயமாக அடுத்த நாள், அடுத்த பாடம் என்று செல்வார்கள் அல்லவா? அது போல இல்லை. ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாக தங்களால் தாங்கமுடிந்த வேகத்தில் ஒவ்வொரு பாடமாகத் தாண்டவேண்டும். ஒரே நேரத்தில் வகுப்பில் உள்ள பல மாணவர்களும் வெவ்வேறு கட்டத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பாடமும் ஓர் அட்டையில் உள்ளது. (கார்டு என்கிறார்கள் மாணவர்கள்.) அந்த அட்டையின் பின்பக்கத்தில் பாடத்துக்கான கேள்விகள் உள்ளன. கேள்விகளுக்கான விடைகளை மாணவர்கள் சொல்லிவிட்டால் அடுத்த பாடத்தை எடுத்துக்கொள்ளலாம்.

செயல்வழிக் கற்றல் பற்றி பலர் புகழ்ந்து பேசிவிட்டனர். அ.கி.வெங்கடசுப்ரமணியன் (முன்னாள் ஐ.ஏ.எஸ் அலுவலர், குடிமக்கள் முரசு பத்திரிகை ஆசிரியர்) தினமணி இதழில் விரிவான ஒரு கட்டுரையை ஓராண்டுக்கு முன்பே எழுதியுள்ளார். விரைவில் கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியாக இருக்கும் அவரது கட்டுரைத் தொகுப்பில் இந்தக் கட்டுரை இடம்பெறுகிறது. ரவிக்குமார் எம்.எல்.ஏ, காலச்சுவடு இதழில் விரிவான ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதே நேரம், செயல்வழிக் கற்றலுக்கு எதிராக ஆசிரியர்கள், பெற்றோர்கள் போர்க்கொடி என்றும் செய்தித்தாள்களில் பார்த்துள்ளேன்.

நானே நேரடியாகப் பார்த்ததில் பலவற்றைப் புரிந்துகொள்ள முடிந்தது.

முதலாவது, குழந்தைகளுக்கு இருக்கும் தன்னம்பிக்கை. கடந்த சில மாதங்களின் நான் பல பள்ளிகளுக்குச் சென்று பல வகுப்பு மாணவர்களிடம் பேசிவருகிறேன். ஆனால், இந்த மூன்றாம் வகுப்புக் குழந்தைகளின் உடல்மொழியே அலாதியாக இருந்தது. பயம் இல்லை. தைரியமாக - தப்பான பதிலைச் சொல்லும்போது கூட - பயமின்றி பதில் சொன்னார்கள். ஒருவர் பதில் சொன்னபின்பும்கூட மற்ற சில குழந்தைகள் அதைப்பற்றிக் கவலைப்படாமல், தாங்களும் அந்தக் கேள்விகளுக்கான விடைகளைப் போட முயற்சி செய்து, அதில் தவறு இருந்தாலும் கவலைப்படாமல் சொன்னார்கள்.

இரண்டாவது, கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களுக்கும் தமிழில் படிப்பது மிக எளிதாக வந்தது. நான் அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பேசியபோது, அவர் இந்தக் குழந்தைகள் பாரம்பரிய முறையில் ஐந்தாவது, ஆறாவது படிக்கும் மாணவர்களைவிட இந்த செயல்வழிக் கற்றல் திட்டத்தில் உள்ள மூன்றாம் வகுப்பு மாணவர்களால் நன்றாகப் படிக்க முடிகிறது என்றார்.

மூன்றாவது, எந்தக் குழந்தைக்கும் பள்ளிக்கூடம் பற்றிய பயம் இல்லை. அடுத்த நாள் தாங்கள் என்ன படிக்கவேண்டும் என்பதைப் பற்றிய ஆர்வம் கண்ணில் தென்பட்டது. ஆசிரியர்கள்மீதோ, சக மாணவர்கள்மீதோ பயம் இல்லை. மிரட்சி இல்லை.

நான்காவது, நான் மிகக் கடினமான பல கேள்விகளைக் கேட்டபோது அவர்கள் அதனை எதிர்க்கவில்லை. “எங்க சிலபஸ்ல இல்லை சார்” என்று சொல்லவில்லை. பயந்து பின்வாங்கவில்லை. தங்களால் முடிந்த அளவு தெரிந்ததைச் சொன்னார்கள். தெரியாததற்கு வெட்கப்படவில்லை. நான் அந்தக் கேள்விகளுக்கான விடைகளையும் வழிமுறைகளையும் சொல்லச் சொல்ல, நன்கு புரிந்துகொண்டார்கள்.

இதனால் எல்லாம் இவர்கள் மிகச் சிறந்த மாணவர்களாக வருவார்கள் என்று நான் சொல்லவரவில்லை. பள்ளிக்கூடம் பற்றிய அடிப்படை பயம் இவர்களிடம் இல்லை என்பதுதான் முக்கியம். இவர்களிலும் பலர் மோசமான மாணவர்களாக இருப்பார்கள். ஆனால் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள் என்றே நம்புகிறேன். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் இல்லாவிட்டாலும் இவர்களால் சுயமாகப் படிக்கமுடியும் என்பது மிக நம்பிக்கை தரும் விஷயம்.

இந்த செயல்வழிக் கற்றல் பாடத் திட்டம் மீது எனக்கு நிறைய விமரிசனங்கள் வருகிறது. சர்வ சிக்ஷா அபியான் (அனைவருக்கும் கல்வி) திட்டத்தின்கீழ் தயாரிக்கப்படும் பாடங்கள் (கார்டுகள்) எல்லாம் மிகச் சிறப்பானதாக உள்ளதாகச் சொல்லமுடியவில்லை. ஆனால், தமிழ் நாடு பாடநூல் நிறுவன அபத்தக் களஞ்சியங்களைக் காணும்போது, இந்தப் பாடங்கள் கண்ணுக்குக் குளுமையாக, தவறுகள் குறைவானதாகவும், போரடிக்காமலும் உள்ளன.

இதுதான் செயல்வழிக் கற்றல் முறையில் நான் பார்க்கும் முதல் பள்ளிக்கூடம். அடுத்த சில நாள்களில் மேலும் சில பள்ளிக்கூடங்களைப் பார்வையிட உள்ளேன். அதன்பின், இதைப் பற்றி மேலும் விரிவாக எழுதுகிறேன்.

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் கல்வி தொடர்பாக ஏற்பட்டுள்ள மிக முக்கியமான மாற்றம் இது என்று தோன்றுகிறது.

கிழக்கு புத்தக அறிமுகம் - 2

கிழக்கு மொட்டைமாடி புத்தக அறிமுகம் - 1

நேற்று நடந்த கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் மாலன் கேண்டீட் புத்தகத்தை வெளியிட இரா.முருகன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து மாலன் பேசினார்.


மாலன் அறிமுக உரை (ஒலிப்பதிவு)

அடுத்து, ஜே.எஸ்.ராகவன் சூஃபி வழி புத்தகத்தை வெளியிட, மாலன் பெற்றுக்கொண்டார்.தொடர்ந்து பா.ராகவன் பேசினார்.


பா.ராகவனின் அறிமுக உரை (ஒலிப்பதிவு)

அடுத்து கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் புத்தகத்தை ஆக்கியவர்களுடனும், அறிமுகப்படுத்தியவர்களுடனும் கலந்துரையாடினர்.

கலந்துரையாடல் (ஒலிப்பதிவு)

ஹரன்பிரசன்னாவின் பதிவு
.

Monday, December 22, 2008

யானையுடன் சில நிமிடங்கள்

கடந்த இரு நாள்கள், கேரள தமிழ்நாடு எல்லையில் மேக்கரை - அச்சன்கோவில் பகுதியில் தங்கியிருந்தேன். அங்கே ராஜன் என்ற 50 வயது யானை கோயிலில் வேலை செய்கிறது. அது ஆற்றில் குளித்துமுடித்துவிட்டுக் கிளம்பும்போதும், பின்னர் சாப்பிடும்போதும் என் மொபைல் ஃபோன் கேமராவில் எடுத்த படங்கள் யூட்யூப் வழியாக. (சுமாரான தரம்தான்.)
கிழக்கு புத்தக அறிமுகக் கூட்டம் - 1

இன்று தொடங்கி அடுத்த ஆறு நாள்களும் கிழக்கு அலுவலக மொட்டைமாடியில் தினம் இரு புத்தகங்களாக அறிமுகம் செய்யப்படும். முதல் நாள் அறிமுகப்படுத்தப்படுவது, வோல்ட்டேரின் கேண்டீட் எனப்படும் ஃபிரெஞ்ச் நாவலின் ஆங்கிலம் வழியான தமிழாக்கம். மொழிபெயர்ப்பாளர் பத்ரி சேஷாத்ரி (நான்தான்). அறிமுகம் செய்பவர் மாலன். இரண்டாவது புத்தகம் நாகூர் ரூமி எழுதிய சூஃபி வழி, அறிமுகம் செய்பவர், பா.ராகவன்.

இரு புத்தகங்களும் புத்தக அரங்கில் விற்பனைக்குக் கிடைக்கும்.

Friday, December 19, 2008

ஞாநி - கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - ஒலிப்பதிவு

சென்ற செவ்வாய்க்கிழமை, பத்திரிகையாளர் ஞாநி பங்குபெற்ற கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தின் ஒலிப்பதிவை இறக்கிக்கொள்ள சுட்டி கீழே உள்ளது.

பல பார்வையாளர் கேள்விகள் தெளிவாக இருக்காது. அவர்கள் மைக்கில் பேசவில்லை. எனவே ஞாநியின் பதிலைக் கொண்டு, கேள்வி என்ன என்பதை நீங்கள் கண்டுபிடிக்கக்கூடும்.

ஒலிப்பதிவு

.

Monday, December 15, 2008

மும்பை - 4: Piling Pressure on Pakistan (PPP)

[பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3]

மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தான் என்ற தேசத்துக்குப் பங்கு உள்ளது என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. பாகிஸ்தான் அரசாங்கத்துக்குப் பங்கு ஏதும் இல்லை என்று ஆசிஃப் அலி சர்தாரி சொல்கிறார். பாகிஸ்தான் ராணுவமும் ஐ.எஸ்.ஐயும் தங்கள் நெஞ்சைத் தொட்டு இதே பதிலைச் சொல்லமுடியுமா?

பாகிஸ்தானை எப்படித் தண்டிக்கலாம் என்பதுதான் பல இந்தியர்களுடைய உடனடி எண்ணமாக இருந்தது. வலதுசாரிகள் தலைமையில் பலவிதக் கருத்துகள் வெளிவந்தன. “பாகிஸ்தான்மீது போர் தொடுப்போம்” என்றனர் பலர். “ஏன்? அமெரிக்கா அப்படிச் செய்வதில்லையா? நாமும் பாகிஸ்தானுக்குப் பாடம் கற்பிக்கவேண்டும்” என்றனர் பலர்.

புறநானூற்று வீரம் இங்கு உதவாது. பாகிஸ்தானிடமும் ராணுவம் உள்ளது. பாகிஸ்தானிடமும் அணு ஆயுதம் உள்ளது. சிலர் முட்டாள்தனமாக, “இந்தியாவின் சில பகுதிகள் அழிந்தாலும் பரவாயில்லை, பாகிஸ்தானைத் தரைமட்டமாக்கவேண்டும்” என்றனர்.

வேறு சிலர், “பாகிஸ்தானில் நாம் பிரச்னைகளை உருவாக்கவேண்டும்” என்றனர். இது அருன் ஷோரி வாதம். பலூசிஸ்தானிலும் வடமேற்கு எல்லை மாகாணத்திலும் குழப்பத்தை ஏற்படுத்துவோம் என்றார், சென்னையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது. நல்லவேளையாக இவ்வளவு வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் மாநிலங்கள் அவையில் பேசும்போது இதைச் சொல்லவில்லை.

நமது நாட்டில் அந்நியச் சக்திகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என்றால், நாம் தார்மீகக் கோபத்தை வெளிப்படுத்துகிறோம். உலக நாடுகளிடம் முறையிடுகிறோம். ஐ.நாவுக்குச் செல்கிறோம். ஆனால், நாமும் குறைந்த அளவிலாவது அதையே செய்துள்ளோம் என்றால், நம்மிடம் எந்தவித தார்மீக உரிமையும் இருக்காது. வலதுசாரிகள் அதுபோன்ற அழிவுப் பாதையைத்தான் இந்தியாவுக்குக் கொண்டுவருவார்கள்.

அத்வானியும் ஷோரியும் இந்திய அரசைக் கண்டித்தார்கள். அமெரிக்காவிடம், “அம்மா, அவன் என்னை அடிச்சுட்டான்” என்று ஓடாதே என்றார்கள். ஐ.நாவுக்குப் போகாதே என்றார்கள். ஆனால் அது மதியீனம்.

ஐ.நாவிடமோ, அமெரிக்க/ஐரோப்பிய அரசுகளிடமோ நாம் போய், நமது பலவீனத்தை வெளிக்காட்டி, “எனக்கு உதவி செய்” என்று கெஞ்சவில்லை. ஒரு சில வரலாற்றுத் தவறுகளை மாற்றப் பார்க்கிறோம்.

இதுநாள்வரையில், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், பாகிஸ்தான்மீது காட்டவேண்டிய கடுமையைக் காட்டவில்லை. ஆஃப்கனிஸ்தானில் நடக்கும் போரில் பாகிஸ்தான் தமக்கு நண்பன் என்றே அவர்கள் சிந்தித்து வந்தனர். ஆனால் கடந்த நான்கைந்து வருடங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான்தான் உலக பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் என்னும் புரிதல் பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் தெளிவாக விளங்கியுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் இந்தியர்களை மட்டும் தாக்கவில்லை. அமெரிக்கர்கள், பிற ஐரோப்பியர்கள், யூதர்கள் என்று குறிவைத்துத் தாக்கினார்கள். “நாங்கள் முஸ்லிம்கள்” என்று கத்திய சிலரை மட்டும் விடுவித்துள்ளனர்.

அதுவுமில்லாமல், இன்று பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் சொன்னபடி, பிரிட்டனில் கண்டுபிடிக்கப்படும் முக்கால்வாசி தீவிரவாத முயற்சிகள், பாகிஸ்தானில் ஆரம்பமானவை. அல்லது பாகிஸ்தானில் பயிற்சிபெற்ற தீவிரவாதிகள் செயல்படுத்த முனைபவை.

எனவே இந்தியா, “மம்மி, அவன் என்னை அடிக்கறான்” என்று அழுதுகொண்டு இந்த நாடுகளிடம் செல்லவில்லை. “அட முட்டாள்களே, உங்கள் நாடுகளில் பிரச்னைகளை உண்டாக்கும் தீவிரவாதிகள் புறப்படுவது பாகிஸ்தானில்தான். எனவே என்னுடன் சேர்ந்து போராடுங்கள்” என்று கோடி காட்டுகிறது. அதனால்தான் ஐ.நா சபையின் பாதுகாப்புக் குழு, எந்தவித விவாதமும் இல்லாமல் ஜமாஅத்-உத்-தவாவைத் தடை செய்தது.

அதனால்தான், அமெரிக்கா பாகிஸ்தான்மீது கடுமையான அழுத்தத்தைச் செலுத்தியது. சர்வதேச நிதியத்திடம் 8 பில்லியன் டாலர் கடனுக்காகக் காத்திருக்கும் பாகிஸ்தான்மீது அழுத்தம் தருவது எளிது. பிரிட்டன் முதற்கொண்டு மேற்கு ஐரோப்பிய நாடுகள் கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்பு அது.

***

இந்தியா போரைத் தவிர்க்கிறது என்றால் அதனால், பயப்பட்டுப் பின்வாங்குகிறது என்று பொருளல்ல. போரில்லாமல், தொடர்ந்து சர்வதேச அழுத்தத்தை பாகிஸ்தான்மீது கொண்டுவருவதன்மூலம் இந்தியா நிறைய சாதித்துக்கொள்ள முடியும்.

1. பாகிஸ்தானின் குடியாட்சி முறையில் வெளியிலிருந்து மாற்றங்களைக் கொண்டுவர முடியாது. ஆனால், யார் அந்த மாற்றங்களைக் கொண்டுவர விரும்புகிறாரோ, அவருக்குத்தான் பண ஆதரவு உண்டு என்பதைத் தெரிவிப்பதன்மூலம், பாகிஸ்தான் உள்நாட்டு அரசியலை, ஒரு குறிப்பிட்ட திசையில் செல்லவைக்க முடியும்.

2. இதே காரணத்துக்காகத்தான், பாகிஸ்தானுக்கு இந்தியா டாலர் கடன் கொடுக்கவேண்டும் என்பதை நான் முன்வைக்கிறேன். இதுவரையில் இந்தியாவின் முக்கிய அரசியல்வாதி யாரும் இதைப்பற்றிப் பேசியதாகத் தெரியவில்லை. பாகிஸ்தான் 8 பில்லியன் டாலர் கடன் கேட்டு ஊரெல்லாம் அலைகிறது. டிரில்லியன் கணக்கில் டாலர்கள் வைத்திருக்கும் சீனா கையை விரித்தபின், சர்வதேச நிதியத்திடம் (IMF) பாகிஸ்தான் சென்றுள்ளது. கடனும் சாங்க்ஷன் ஆகியுள்ளது. ஆனால், மும்பை தாக்குதலுக்குப்பின், இந்தக் கடன் “தாமதமாக” வாய்ப்பு உள்ளது.

இந்தியா, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, அதில் பாதித் தொகையை பாகிஸ்தானுக்குக் கடன் கொடுக்க முன்வரவேண்டும். பாகிஸ்தான் ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம்.

3. பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்படும் ராணுவ உதவிகளை முற்றிலுமாக நிறுத்த இந்தியா முயற்சிகள் எடுக்கவேண்டும். காசு கொடுத்தாலும் சீனா முதற்கொண்டு யாரும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் விற்கமாட்டார்கள் என்ற நிலையை இந்தியாவால் கொண்டுவரமுடியும்.

4. வலுவான, போரில்லாத ஆஃப்கனிஸ்தான் இந்தியாவுக்கு நல்லது. ஆனால் இது எளிதான விஷயமல்ல. பராக் ஒபாமா, ஆஃப்கனிஸ்தான் போரில் கடுமையாக ஈடுபடப் போவதாகச் சொல்கிறார். ஆனால் இது சாத்தியமில்லாத ஒன்று என்றே தோன்றுகிறது. ஆஃப்கனிஸ்தானிலிருந்து அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் படைகளை விலக்கிக்கொண்டால், அதனால் கடுமையாகப் பாதிக்கப்படப்போவது பாகிஸ்தான்; அதன்பின், அதன் காரணமாக, இந்தியா.

பாகிஸ்தானுக்கு அந்த நேரத்தில் காஷ்மீர் பிரச்னையெல்லாம் ஒன்றுமே இல்லை என்றாகிவிடும். ஒரு பக்கம் கையில் இருக்கும் வடமேற்கு எல்லை மாகாணம் தனியாகப் பிரிய நேரிடும். பலூசிஸ்தானிலும் பிரச்னைகள் வெடிக்கும். (இந்தியா ஒன்றும் செய்யாமலேயே.)

5. இன்று தி ஹிந்துவில் பாகிஸ்தான் பேராசிரியர் பர்வீஸ் ஹூத்பாய் என்பவருடன் முழுநீள நேர்முகம் ஒன்று வந்துள்ளது. இதை முழுவதுமாகத் தமிழாக்கிப் கொடுப்பது நல்லது என்று நினைக்கிறேன். முடிந்தால் நாளை இதனைச் செய்கிறேன். அவர் சொல்கிறார்: “பாகிஸ்தானில் உள்ள ஜிஹாதிக் குழுக்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பது நியாயமானதே. ஆனால் அந்த நடவடிக்கைகள் சர்வதேச அழுத்தத்தின்மூலம் செய்யப்படவேண்டும்.” அதனைத்தான் இந்தியா செய்கிறது.

நல்லவேளை. இந்த நேரத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்கிறது.

(தொடரும்)

Sunday, December 14, 2008

விஷ்வநாத் பிரதாப் சிங் (1931-2008)

பிரதமராக வி.பி.சிங் பதவியில் இருந்தது ஒரு வருடத்துக்கும் சற்றுக் குறைவுதான். ஆனால் momentous தினங்கள் அவை.

வி.பி.சிங் நிதி அமைச்சராக ஆனபோதுதான் நான் அவரைக் கவனிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் நான் செய்தித்தாள்களை தீவிரமாகப் படிக்கத் தொடங்கியிருந்தேன். முதன்முதலாக தொலைக்காட்சியில் தினமும் செய்திகளைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்திருந்தது. ராஜீவ் காந்தி என்ற இளம் ஹீரோ இந்தியாவை எங்கோ உயரத் தூக்கிக்கொண்டு போகப்போகிறார் என்று இளைஞர்கள் அனைவரும் நினைத்த நேரம் அது.

ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் பல புதிய முகங்கள் இருந்தன. எப்போதும் காங்கிரஸ் அமைச்சரவையில் காணப்படும் சில கிழடுகளும் இருந்தன. வி.பி.சிங் கண்டிப்புக்கும் நேர்மைக்கும் பெயர்போனவர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அந்த நேரத்தில் லைசென்ஸ் கோட்டா ராஜ்ஜியம் உச்சத்தில் இருந்தது. பணம் படைத்த தொழிலதிபர்கள், அமைச்சர்களுக்கும் கட்சிக்கும் லஞ்சம் கொடுத்து, தமக்கு வேண்டியவற்றை சாதித்துக்கொண்டனர். அப்போதுதான் வி.பி.சிங் திருபாய் அம்பானியை முதலில் எதிர்கொண்டார்.

நிதி அமைச்சராக, அந்நியச் செலாவணி, வருமான வரி, ஆயத்தீர்வை, சுங்கம் என எல்லாமே வி.பி.சிங்கின் கையில் இருந்தன. இந்திரா காந்தி காலத்தில் வருமான வரி மிக அதிகமாக இருந்தது. எனவே வருமான வரி ஏய்ப்பும் சர்வசாதாரணமாக நடந்தது. அதேபோல உற்பத்திக்கு கோட்டா இருந்தது. ஆனால் கோட்டாவுக்குமேல் உற்பத்தி செய்வது, ஆனால் கோட்டா அளவுக்கு மட்டுமே ஆயத்தீர்வை செலுத்தி, அதிகமாக உற்பத்தி செய்த பொருள்களை வரி ஏதும் செலுத்தாமல், கள்ளத்தனமாகச் சந்தைக்குள் விடுவது என்பதும் பரவலாக நடந்துவந்தது.

சிங், இந்தச் சமயத்தில் கண்டிப்புடன் நடந்தது அம்பானியின் தொழிலை ஆட்டம்காணச் செய்தது. விளைவாக, பல காய்கள் நகர்த்தப்பட்டு, வி.பி.சிங் நிதித் துறையிலிருந்து ராணுவ அமைச்சராக மாற்றப்பட்டார். ராஜீவ் காந்தி இதைச் செய்ததே அசிங்கம். வி.பி.சிங் மீது எந்தக் குற்றச்சாட்டையும் நேரடியாக வைக்கமுடியாத நிலையில், ராஜீவின் இந்தச் செயலே, சிங்குக்கு பலத்த ஆதரவைக் கொடுத்தது. அப்போதே, ராணுவ அமைச்சகத்தில் சிங் என்ன செய்வார் என்ற ஒரு பரபரப்பு மக்களிடம் இருந்ததை நான் கண்டிருக்கிறேன்.

அதற்கு ஏற்றார்போல, இன்றுவரை முடிவுறாத போஃபர்ஸ் ஊழல் வெளியே வந்தது. சோனியா காந்தி, ராஜிவ் காந்தி இருவரும் ஏதோ வகையில் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்னையில் வி.பி.சிங் எதைக் கண்டுபிடித்தாரோ தெரியாது... அவர் பதவியிலிருந்து எறியப்பட்டார். வி.பி.சிங்கும் தான் இறக்கும்வரை தான் கண்டுபிடித்தவற்றைத் தெளிவாகச் சொல்லவும் இல்லை. ஆனால், சிங்கிடம் எந்தத் தவறும் இல்லை என்பதே மக்கள் கருத்தாக இருந்தது. சிங்கும் அதே வேகத்தில் கட்சியிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார்.

ராஜீவ் காந்தியின் இறங்குமுகம் அதற்கு முன்பிருந்தே ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும், வி.பி.சிங் வெளியேற்றம்தான் ராஜீவ் காந்தியின் ஆட்சிக்கு சாவு மணியாக இருந்தது.

அந்தத் தேர்தல் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வரும்போது, ஐஐடி மூன்றாம் வருடப் படிப்பில் இருந்தோம். Industrial Tour என்ற பெயரில் நாடு முழுவதும் ஐஐடி காசில் சுற்றிப் பார்ப்பது வழக்கம். அந்தப் பயணத்தின்போது பெரும்பாலும் ரயிலில் ரேடியோப் பெட்டியில் செய்திகள் கேட்டு, காங்கிரஸ் தோற்ற செய்தியை மாணவர்கள் அனைவருமே கொண்டாடியது எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஒரு வருடத்துக்குள்ளாக ஐஐடி மாணவர்கள் (பெரும்பான்மையினர்) வி.பி.சிங்கை எதிர்க்கப் போகின்றனர்.

போஃபர்ஸ் பிரச்னையை வைத்துத்தான் ராஜீவ் தேர்தலில் தோல்வியடைந்தார். தேர்தலுக்கு முன்பே ராஜீவ் காந்திக்குத் தெரிந்துவிட்டது. ஒருபக்கம் போஃபர்ஸ் கறை படிந்த தான். மறுபக்கம் ஊழல் கறை படியாத வி.பி.சிங். எனவே அரச இயந்திரங்களை முடுக்கிவிட்டு வி.பி.சிங்மீது அந்நியச் செலாவணிக் குற்றச்சாட்டு ஒன்று கொண்டுவரப்பட்டது. அதற்காக ஆவணங்கள் ஃபோர்ஜ் செய்யப்பட்டன. (செயிண்ட் கிட்ஸ் ஃபோர்ஜரி ஊழல்.) எப்பாடுபட்டாவது வி.பி.சிங்கும் ஊழல் பேர்வழிதான் என்று காண்பித்தாகவேண்டும் என்று ராஜீவ் செய்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.

ஆனால் இந்திய அரசியலின் மிகப்பெரும் பலவீனமே, வலுவான எதிர்க்கட்சி அமைந்தாலும், ஒரு தலைவரை ஏற்காத குழிபறிக்கும் மனப்பான்மை. வி.பி.சின், தேவிலால், சந்திர சேகர் ஆகியோருக்கிடையில் நடந்த போட்டியில், வி.பி.சிங் பிரதமரானார். ஆனால் முதல் நாளிலிருந்தே சந்திர சேகர் அமைச்சரவைக்கு வெளியில் இருந்தபடியும், தேவிலால் அமைச்சரவைக்கு உள்ளிருந்தபடியும் குழி தோண்ட ஆரம்பித்தனர். போதாக்குறைக்கு வி.பி.சிங்குக்கு ஆதரவளித்த ஒரு கட்சி பாஜக. அவர்களது சிந்தனை வேறு திசையில் இருந்தது.

ஒரு வருடத்துக்கும் குறைந்த காலத்தில், வி.பி.சிங், ராஜீவின் பஞ்சாப், இலங்கை உடன்பாடுகளை கவனிக்கவேண்டியிருந்தது. இந்திரா காந்தியின் கொலைக்குப் பிறகு நடந்த டெல்லி சீக்கியப் படுகொலைகளுக்குப் பிறகு, சீக்கியர்களுக்கு காங்கிரஸ்மீதும் ராஜீவ் காந்திமீதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தது. வி.பி.சிங்மீது நியாயமாகவே அந்த நம்பிக்கை வந்தது. வி.பி.சிங் அமைச்சரவையில் இடம் பெற்ற திமுகவின் தூண்டுதலின்பேரில் இலங்கையிலிருந்து, இந்திய அமைதிப்படையைத் திரும்பப் பெறவேண்டியிருந்தது.

இதற்கிடையில் துணைப்பிரதமர் தேவிலால் தனது கரங்களை வலுப்படுத்த மாபெரும் விவசாயிகள் கூட்டம் ஒன்றைக் கூட்டினார். அத்வானி இந்துக்களை ஒன்றுதிரட்ட அயோத்திப் பிரச்னையைக் கையில் எடுத்தார். பெரும்பான்மை இந்திய ஊடகக் கதையாடல்களில் இந்தப் பிரச்னைகளைச் சமாளிக்கத்தான் வி.பி.சிங் மண்டல் கமிஷன் அறிக்கையைக் கையில் எடுத்தார் என்பார்கள். அயோத்தி ரத யாத்திரையும் விவசாயிகள் கூட்டமும் முழுவதும் அரசியல் நோக்கம் கொண்டவை. மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அரசியல் பின்னணி கொண்டதாக இருந்தாலும் ஒரு நிர்வாகம் நியமித்த கமிஷனின் பரிந்துரைகள். இந்தப் பரிந்துரைகளை ஏன் வி.பி.சிங் செயல்படுத்தினார் என்று கேட்பதைவிட, அதுவரையில் அவை ஏன் கிடப்பில் போடப்பட்டன என்ற கேள்வியை யாரும் கேட்க மறுக்கிறார்கள்.

[மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் சட்டமாக்கியபோது மத்திய அரசின் செயலராக இருந்த பி.எஸ்.கிருஷ்ணன் சென்னையில் பேசிய பேச்சின் ஒலிவடிவம் இங்கே உள்ளது.]

வி.பி.சிங் கொண்டுவந்த சட்டம் அவரது பதவியைப் பிடுங்கிக்கொண்டது. ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து வி.பி.சிங் கொண்டுவந்த சட்டம் நியாயமானதே என்று உச்ச நீதிமன்றமே உறுதி செய்தது. எனவே வி.பி.சிங் இந்திய சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்தியவர் என்று இந்தியா டுடே போன்ற பத்திரிகைகள் எழுதுவது உச்ச நீதிமன்றக் கருத்துக்கு எதிரானது என்றுகூடச் சொல்லலாம்.

வி.பி.சிங் 1990-ல் மண்டல் கமிஷனின் ஒரு பரிந்துரையான அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு என்பதை மட்டுமே அப்போது கொண்டுவந்தார். இப்போதுதான் ஐஐடி, ஐஐஎம் ஆகிய இடங்களில் இட ஒதுக்கீடு ஆரம்பித்துள்ளது.

அத்வானி ரத யாத்திரை நிறுத்தப்பட, பாஜக, வி.பி.சிங்குக்குக் கொடுத்த ஆதரவை விலக்கிக்கொள்ள, சிங் ஆட்சி முடிவுக்கு வர, சந்திர சேகர் மிகவும் மகிழ்ச்சியுடன் ராஜீவ் காந்தியின் ஆதரவுடன் பிரதமரானார். பின் சில மாதங்களுக்குள்ளாகவே, ராஜீவின் தொல்லை தாளாமல் ஆட்சியை இழந்தார்.

வி.பி.சிங், பரம்பரை ராஜ குடும்பத்தில் பிறந்தவர். மாந்தா என்ற சமஸ்தானத்தின் மன்னரான பகவதி பிரசாத் சிங், விஷ்வநாத் பிரதாப் சிங்கை தத்து எடுத்துக்கொண்டார். பகவதி பிரசாத் சிங்கின் மறைவுக்குப் பின், 1941 முதல் இந்தியா சுதந்தரம் அடையும்வரை விஷ்வநாத் பிரதாப் சிங் மாந்தாவின் ராஜாவாக இருந்தார். பின்னர், வி.பி.சிங், 1967-ல் வினோபா பாவேயின் பூதான் இயக்கத்தின்போது ஏகப்பட்ட நிலங்களைத் தானமாகக் கொடுத்தார். அதன் பின்னர்தான் அவர் அரசியலில் புகுந்து உத்தரப் பிரதேசத்தின் முதல்வரானார்.

வெகு நாள்களுக்குப் பிறகு அவரது மனைவியே, “என் கணவர் மனநிலை சரியில்லாது இருந்தபோது நிலத்தைத் தூக்கிக் கொடுத்துவிட்டார். எனவே அது செல்லாது என்று அறிவித்து, அந்த நிலங்களைத் திருப்பித் தரவேண்டும்” என்று கேட்ட அசிங்கமும் நடந்தது.

1990-க்குப் பிறகு, வி.பி.சிங் அரசியலைவிட்டு விலகிவிட்டார். அவர் அப்படிச் செய்திருக்ககூடாது. ஆனால் அவர் எதிர்பார்த்த குறைந்தபட்ச நேர்மை அப்போது அரசியலில் இருக்கவில்லை என்பதையும் நாம் ஏற்கவேண்டும்.

கேன்சர் வந்து, அதிலிருந்து மீண்ட சிங், இப்போது இறந்துவிட்டார். பிரதமராக இருந்தது 11 மாதங்களே என்றாலும், இந்தியாவின் மிக முக்கியமான பிரதமர்களுள் இவரது பெயர் எப்போதும் இருக்கும். ஆனால், பெரும்பான்மை ஊடகங்கள் இவர்மீது வெறுப்பைக் கக்குவது கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டும்.

Saturday, December 13, 2008

காக்கைகள் கூடுகட்டும் காலம்?

எங்கள் வீட்டுக்கு வெளியே, பக்கத்து வீட்டில் ஒரு வேப்ப மரம் உள்ளது. கோடை காலத்தில் அங்கே கிளிகள் வசிக்கும். கோடை முடியும்போது காணாமல் போய்விடும். மற்ற எல்லா நேரங்களிலுமே காக்கைகள்தான் அங்கே வாழும். சில குயில்கள் உள்ளன. ஆனால் அவற்றைக் கண்ணால் பார்க்கமுடியாது. அவை கூவுவதைக் கொண்டுதான் அவை இருப்பதையே அறியமுடியும்.

ஒருமுறை குயில் ஒன்று காக்கைக் கூட்டில் முட்டையை இடவோ, அல்லது காக்கையின் முட்டையைத் தள்ளிவிடவோ வந்து, கூட்டின் சொந்தக்காரக் காக்கைகளிடம் மாட்டிக்கொண்டது. குயிலைக் கொத்தித் தள்ளின காக்கைகள். வெகு அபூர்வமாகவே குயில்கள் காக்கையிடம் மாட்டிக்கொள்கின்றன. இப்படித் தொடர்ந்து மாட்டினால், குயில்கள் அழிந்துவிடுமல்லவா?


காக்கைகள் கூடு கட்டுவதில் கைதேர்ந்தவை. கூடுகள் பார்க்க அழகாக இருக்காது. ஆனால், காரே மூரே என்று கையில் கிடைத்ததை எல்லாம் கொண்டு பின்னிவிடும்.

வேப்ப மரத்துக்குப் பக்கத்தில் தென்னை மரம் ஒன்று உள்ளது. தென்னை ஓலைகள் காய்ந்து கட்டடக் கூரையில் விழுந்துகிடக்கும். அந்த ஈர்க்குச்சிகள் காக்கைகளுக்கு மிகவும் பயன்படும். ஆனால் நேற்று ஓர் அசம்பாவிதம் நடந்தது.

திடீரென அந்தக் கூரையின்கீழ் இருக்கும் சலூன் கடைக்காரர், தன் கூரையைச் சுத்தம் செய்ய முடிவெடுத்தார். கிடுகிடுவென நான்கு பேர் மேலே ஏறி, குப்பை, சத்தை எல்லாவற்றையும் திரட்டித் துடைத்துச் சுத்தமாக்கிவிட்டனர். தாங்கள் பிறருக்கு எவ்வளவு துன்பம் அளிக்கப்போகிறோம் என்பதைச் சற்றும் யோசியாமல் செய்த ஒரு செயல் இது.

இன்று காலை, காக்கைகளுக்குப் பெருத்த ஏமாற்றம். எப்போதும் போல ஈர்க்குச்சிகளைத் தேடியவற்றுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. பின், எதிரில் உள்ள காதி கிராமோத்யோக் பவனுக்குச் சென்று, தேடித் திரிந்து, சில மரக்குச்சிகளைக் கொண்டுவந்தன.

இனி அடுத்த சில நாள்கள் வீட்டில் உள்ள விளக்குமாறு பிய்ந்துவிடும். பால்கனியில் நுழைந்து விளக்குமாற்றில் கட்டியிருக்கும் சணலை ஆட்டி ஆட்டிப் பிய்த்து, ஈர்க்குச்சிகளை எடுத்துக்கொண்டு ஓடிவிடும்.

அந்த வேப்பமரத்தின் அடியில்தான் முன்னர் ஒருமுறை காக்கைகள் சண்டையிட்டு, ஒன்றை மற்றவை கொத்திக் குதறிக் கொன்றன. அதே மரத்தில்தான் மாஞ்சாக் கயிறு மாட்டி ஒரு கழுகுக் குஞ்சு சிக்கிக்கொண்டது. காக்கைகள் இட்ட கூக்குரலால்தான் என் மனைவி blue cross-ஐத் தொடர்புகொண்டார். அந்தக் கழுகு பின் காப்பாற்றப்பட்டது.

வேப்ப மரத்தில் இதுவரையில் எத்தனையோ காக்கைக் குஞ்சுகள் பிறந்திருக்கலாம். ஆனால் அவை வளர்ந்ததும் எங்காவது பறந்து சென்றுவிடும். ஆனால் சென்ற ஆண்டு பிறந்த இரண்டு காக்கைக் குஞ்சுகள் அங்கேயே தொடர்ந்து வளர்கின்றன.

இந்த ஆண்டு எவ்வளவு காக்கைக் குஞ்சுகள் வேப்ப மரத்தில் ஜனிக்கப் போகின்றன என்று பார்க்கவேண்டும்.

திருத்தம்: காக்கைகள் முட்டையிட இன்னமும் 2-3 மாதங்கள் ஆகுமாம்.

Friday, December 12, 2008

NHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (2)

[முதல் பதிவு]

இந்தப் புத்தகங்கள் உங்களுக்கு வேண்டுமா?
 1. ஒபாமா, பராக், ஆர்.முத்துக்குமார்
 2. ஸ்ரீமத் பாகவதம், உமா சம்பத்
 3. ஜனகணமன, மாலன்
 4. சே குவேரா, மருதன்
 5. இரவுக்கு முன்பு வருவது மாலை, ஆதவன்
 6. உடல் மண்ணுக்கு, பெர்வீஸ் முஷரஃப், தமிழில் நாகூர் ரூமி
 7. இயேசு என்றொரு மனிதர் இருந்தார், சேவியர்
 8. கரைந்த நிழல்கள், அசோகமித்திரன்
 9. வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு, ஷாராஜ்
 10. அரசூர் வம்சம், இரா.முருகன்
 11. கேண்டீட், வோல்ட்டேர், தமிழில் பத்ரி சேஷாத்ரி
 12. சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி, டாக்டர் எம்.மருதுபாண்டியன்
 13. சித்த மருத்துவம் சொல்லும் கை வைத்தியம், டாக்டர் அருண் சின்னையா
 14. ஆஸ்துமா சித்த மருத்துவம், டாக்டர் துர்க்காதாஸ் எஸ்.கே.ஸ்வாமி
 15. ஸ்ரீ நாராயண குரு, பருத்தியூர் கே.சந்தானராமன்
 16. ஸ்காந்த புராணம், ஸ்ரீ கோவிந்தராஜன்
 17. முனீஸ்வரன் பூஜை, பொன்.மூர்த்தி
 18. Rishi Moolam, Jayakanthan (English)
 19. Sons of the Sun, Sa.Kandasamy (English)
 20. கிருஷ்ணா கிருஷ்ணா, இந்திரா பார்த்தசாரதி, ஆடியோ சிடி
கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டால் போதும்!
 1. உங்களிடம் ஒரு வலைப்பதிவோ, வலைத்தளமோ (தமிழோ, ஆங்கிலமோ) இருக்கவேண்டும்.
 2. கீழே உள்ள புத்தகங்களில் எது உங்களுக்கு வேண்டும் என்று குறிப்பிடுங்கள்.
 3. ஒவ்வொரு புத்தகத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பிரதிகளையே வழங்க உள்ளோம். அதனால் முதலில் தொடர்புகொள்கிறவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
 4. உங்களது அஞ்சல் முகவரியையும் செல்பேசி எண்ணையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இந்தியாவுக்குள் என்றால் எங்கள் செலவில் அஞ்சலில் அனுப்பிவைப்போம். அல்லது நீங்களே எங்களது அலுவலகத்துக்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.
 5. பெற்றுக்கொண்ட புத்தகத்தைப் படித்துவிட்டு, உங்களது வலைப்பதிவில் அதைப்பற்றி 800 வார்த்தைகளுக்குக் குறையாமல் (தமிழிலோ, ஆங்கிலத்திலோ) விமர்சனம் எழுதவேண்டும்.
 6. விமர்சனம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். புத்தகம் நன்றாக இல்லை, பிடிக்கவில்லை என்றால் அதை உள்ளது உள்ளபடியே குறிப்பிடலாம். ஆனால் கட்டாயமாக விமர்சனம் எழுதியாகவேண்டும். 800 வார்த்தைகளுக்குக் குறையாமல்.
 7. புத்தக விமர்சனப் பதிவின்கீழ், அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தின் இணைய வணிகத் தள முகவரி (URL) இருக்கவேண்டும். அந்த முகவரியை உங்களுக்கு நாங்கள் மின்னஞ்சலில் அனுப்பிவிடுவோம்.
 8. விமர்சனம் எழுதிமுடித்தவுடன் அந்தப் பதிவின் முகவரியை எங்களுக்கு அனுப்பிவைக்கவேண்டும். அதனை நாங்கள் எங்களது தளத்தில் சேர்த்துக்கொள்வோம்.
 9. ஒருவர் ஒரு நேரத்தில் ஒரு புத்தகத்தை மட்டுமே பெறமுடியும். ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை ஒரே நேரத்தில் பெறமுடியாது. ஆனால், புத்தகங்களைக் கேட்கும்போது, 2 அல்லது 3 விருப்பங்களை வரிசைப்படுத்திக் கேட்கவும். உங்களது முதல் விருப்பம் முற்றுப்பெற்றுவிட்டால், அடுத்த விருப்பத்தைக் கொடுக்க முயற்சி செய்வோம்.
 10. ஒரு புத்தகத்தைப் படித்து, விமர்சனம் எழுதிய பின்னரே, நீங்கள் அடுத்த புத்தகத்தைக் கேட்டுப் பெறலாம்.
 11. இந்தத் திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் கொண்டுவருவதற்கு நிறுவனத்துக்கு எல்லாவித உரிமையும் உள்ளது. சில காரணங்களுக்காக ஒரு சிலருக்குப் புத்தகங்களை வழங்காமல் இருக்கவும், காரணத்தைப் பொதுவில் சொல்லாமல் இருப்பதற்கும் நிறுவனத்துக்கு உரிமை உள்ளது.
 12. இத்திட்டம் தொடர்பாக மின்னஞ்சலில் மட்டுமே தொடர்புகொள்ள வேண்டும்.
 13. புத்தகம் அனுப்பப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்துக்குள் விமர்சனம் எழுதவேண்டும்.
 14. ஏற்கெனவே விமர்சனத்துக்கென புத்தகங்களை வாங்கியவர்கள், அதற்கான விமர்சனத்தை எழுதி, எங்களுக்கு அனுப்பியிருந்தால் மட்டுமே, அடுத்த புத்தகத்தைப் பெறமுடியும். ஏற்கெனவே புத்தகத்தை வாங்கி, விமர்சனம் எழுதியவர்கள், இந்த முறை புத்தகம் கேட்கும்போது, முன்னர் எந்தப் புத்தகத்தை வாங்கினீர்கள், நீங்கள் விமர்சனம் எழுதிய சுட்டி ஆகியவற்றை மின்ஞ்சலில் குறிப்பிடவும்.
மின்னஞ்சல் அனுப்பவேண்டிய முகவரி: haranprasanna@nhm.in

Thursday, December 11, 2008

காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - தொகுதி 9

சீனி. விசுவநாதன், ஒரு யாகம்போல, பாரதியின் படைப்புகளைத் தொகுத்து, பிரதி சரிபார்த்து, பாடபேதங்களைக் களைந்து, புத்தகங்களாக வெளியிட்டு வருகிறார். அதன் ஒன்பதாவது தொகுதி இன்று நல்லி குப்புசாமி செட்டியார் - பிரம்ம கான சபா நிகழ்ச்சியாக நியூ உட்லண்ட்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.

ஓ.எஸ்.அருண், பாரதி பாடல்களை, கர்நாடக இசைக் கச்சேரியாகப் பாடினார். சுமார் ஒரு மணி நேரம். அடுத்து புத்தக வெளியீட்டு விழா. காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - தொகுதி 9-உடன் நல்லி குப்புசாமி செட்டியார் எழுதிய புத்தகங்கள் இரண்டும் வெளியிடப்பட்டன.

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் புத்தகங்களை வெளியிட வழக்கறிஞர் காந்தி புத்தகங்களைப் பெற்றுக்கொண்டார். நல்லி, விழா ஏற்பாட்டின் பின் நின்ற ஏ.நடராஜன் ஆகியோர் வழக்கம் போலப் பேசினர். காந்தி பேச்சு முழுவதும் அபத்தம். அவர் இத்தனைக்கும் ஏதோ பாரதியார் சங்கம் என்ற அமைப்பின் தலைவராம். ஆர்.எம்.வீரப்பன் பேச்சு ஓகே. கடைசியாக, சீனி. விசுவநாதன் ஏற்புரை வழங்க வந்தபோது, திடீரென மக்கள் பலரும் எழுந்திருந்தனர்.

ஆகா, என்ன மரியாதை... என்று நினைத்தால், அனைவரும் திபுதிபுவென இரண்டாம் மாடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு உணவை நோக்கிப் படையெடுத்தனர்.

சீனி. விசுவநாதன் தொடர்ந்து சில நிமிடங்கள் பேசி முடித்தார். பெரும்பாலான மக்கள் அலைகடலெனத் திரண்டு, அதற்குள்ளாக மாடிக்குச் சென்றிருந்தனர்.

***

சீனி. விசுவநாதனின் உழைப்பு அளவிடற்கரியது. தனக்குப் பொருளுதவியும் ஊக்கமும் கொடுத்தவர்களாக நல்லி குப்புசாமி செட்டியார், நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் முருகானந்தம், பி.கே.சிவகுமார், பிரிட்டனைச் சேர்ந்த விமல் ஆகியோரைக் குறிப்பிட்டார்.

இவர்கள் அனைவருக்கும் நமது நன்றி உரித்தாகுக.

மொட்டைமாடிக் கூட்டம் - ஞாநி, மும்பை பற்றி

16 டிசம்பர் 2008, செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6.00 மணி அளவில், சென்னை, ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் ரோட், கிழக்கு பதிப்பகம் மொட்டை மாடியில் பத்திரிகையாளர் ஞாநி, ‘மும்பை பயங்கரவாதத் தாக்குதல்’ குறித்துப் பேசுவார்.

அதில் முக்கியமாக, ஊடகங்களின் நடத்தை பற்றியும், உளவு ஏஜென்சிக்களின் தோல்வி பற்றியும் பேசுவார். மேற்கொண்டு, பங்கேற்போரின் கேள்விகளுக்கும் பதில் அளிப்பார்.

கட்டாயம் வாருங்கள்.

இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்

நடப்பு நிகழ்ச்சிகள் பற்றி சிறு பிரசுரங்கள் வெளியிடுவது Pamphleteering எனப்படும். முச்சந்தி இலக்கியம் என்று சொல்லப்படுவது. அச்சடித்து, தெரு முனையில் நின்று, கூவி விற்கும் - அல்லது சும்மாவே கொடுக்கும் - பிரசுரங்கள்.

“அல்லேலுயா, இதோ வந்துவிட்டார்” முதற்கொண்டு “அமெரிக்க மாமாவின் அணுக்குடில்” வரையில் மதபோதகர்களும் கம்யூனிச போதகர்களும் மட்டுமே இப்போது தமிழ்நாட்டில் இந்தத் தெருப் பிரசுரங்களைப் பிரசுரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு மாறுபட்ட வடிவமே வலைப்பதிவுகள்.

ஆனால், வலைப்பதிவுகளைத் தாண்டி மக்களைச் சென்றடைய தெருப் பிரசுரங்கள் அவசியம். அவ்வாறு சிலவற்றை எழுத எனக்கு ஆசை. அதில் நான் முதலாவதாக எழுதியிருப்பது

123: இந்தியா - அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம்

என்னும் குட்டிப் புத்தகம். இதில் இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்தை ஆதரித்து, பின்னணியை விளக்கி, ஏன் இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்குத் தேவை என்றும், இதற்கு எதிராக கம்யூனிஸ்டுகள் மற்றும் பாஜகவினரின் எதிர்ப்புகள் சரியல்ல என்பதையும் என் பார்வையிலிருந்து விளக்கி எழுதியுள்ளேன்.

நேரம் கிடைத்தால் அடுத்து எழுத நான் எண்ணியிருக்கும் சில:

1. ஸ்பெக்ட்ரம். ஏன் இப்போதைய கொள்கை தவறில்லை, ஏன் அமைச்சர் ராசா மீதான குற்றச்சாட்டுகள் அபத்தமானவை (இப்போது தயாநிதி மாறன் கூட்டு சேர்ந்த காரணத்தால் சன் டிவி அமுக்கி வாசிக்கும்!)... ஸ்பெக்ட்ரம் ஏலம் தேவையா போன்ற சிலவற்றை விளக்கி எழுதவேண்டும்.

2. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்: தேவையில்லை - அல்லது இப்போது இருக்கும் மாதிரியில் தேவையில்லை. கொடுக்கப்படும் சலுகைகள் அதீதமானவை. விவசாயிகளிடமிருந்து பறிக்கப்படும் நிலங்களுக்கு (சி.பொ.ம மட்டுமல்ல, வேறு எந்தத் தொழிற்சாலைக்காக அல்லது அணைக்காக இருந்தாலும் சரி) எந்த மாதிரியான நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் (இப்போது கொடுக்கப்படும் நஷ்ட ஈடுகள் மிகவும் குறைவானவை. பணமும் உடனடியாக மக்களுக்குக் கிடைப்பதில்லை) போன்ற சிலவற்றை வைத்து, சீனாவையும் இந்தியாவையும் ஒப்பிட்டு எழுதவேண்டும்.

பார்ப்போம்.

Wednesday, December 10, 2008

மும்பை - 3: Civil society in Pakistan

[பாகம் 1 | பாகம் 2]

ஆசிஃப் அலி சர்தாரி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஆப்-எட் எழுதுகிறார். மும்பை தீவிரவாதத் தாக்குதல்கள் அவருக்குக் கண்ணில் ரத்தத்தை வரவழைக்கிறதாம். அவரது மனைவியும் தீவிரவாதத் தாக்குதலில்தான் உயிரை விட்டாராம். உண்மைதான்.

இன்று தன் நாட்டின் தலைமைப் பதவியில் இருப்பவர். தன் மனைவியைக் கொன்றவர்களைப் பழிவாங்க என்ன செய்கிறார்? அதிகம் ஒன்றும் செய்வதாகத் தெரியவில்லை.

பாகிஸ்தானில் இரண்டு தீவிரவாதக் குழுமங்கள் உள்ளன. சர்தாரியும் சரி, பிற பாகிஸ்தானி சிவிலியன்களும் சரி, இதைப் புரிந்துகொள்வதில்லை அல்லது வேண்டுமென்றே தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொள்கிறார்கள்.

ஒரு குழு, தாலிபன்கள், அவர்களது ஆதரவாளர்கள், பாகிஸ்தான் அரசாங்கத்தின் இறையாண்மையை ஏற்காத வடமேற்குப் பிராந்தியத்தினர். இவர்களுடன் முஷரஃப் அரசு ஆரம்பித்த யுத்தம், இன்றும் தொடர்கிறது. பேனசீர் புட்டோ உயிர்விட்டது இவர்கள் கையிலாகத்தான் இருக்கவேண்டும். பல்வேறு தற்கொலைத் தாக்குதல்களை பாகிஸ்தான் மண்ணில் நிகழ்த்துவது இவர்களாகத்தான் இருக்கவேண்டும்.

மற்றொரு பக்கம், ஜெய்ஷ்-ஏ-முஹம்மத், லஷ்கர்-ஈ-தோய்பா (அல்லது ஜமாஅத்-உத்-தவா) போன்றவை பாகிஸ்தான் உளவு ஏஜென்சி ஐ.எஸ்.ஐ ஆதரவில், காஷ்மீரில் பிரச்னையை வலுக்கச் செய்ய உருவாக்கிய தீவிரவாதிகள். இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், மும்பை தாக்குதல் ஆகியவற்றில் ஈடுபட்டவை. இவை பாகிஸ்தானில் எந்தப் பிரச்னையையும் செய்வதில்லை.

ஒரு பக்கம் இந்தியாவில் பிரச்னையைத் தூண்டிவிட்டுக்கொண்டே, மறுபக்கம், நாங்களும் தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் அப்பாவிகள் என்பதுபோல பாகிஸ்தான் பேசினால் அதை யாரும் ஏற்கமாட்டார்கள்.

பாகிஸ்தான் பத்திரிகைகள் இதை விளக்குவதில்லை. பொத்தாம்பொதுவாக தீவிரவாதிகள் என்று சொன்னால் போதாது. இந்தியா வேண்டுமென்றே பாகிஸ்தான்மீது குற்றம் சாட்டுகிறது என்பதுதான் பாகிஸ்தான் பத்திரிகைகள் அனைத்தும் சொல்வது. அதேபோலத்தான் பாகிஸ்தான் அறிவுஜீவிகளும். இதுவரையில் பாகிஸ்தானின் எந்த அரசியல்வாதியோ, சமூகத் தலைவரோ, பாகிஸ்தான் இந்தியாவில் பிரச்னைகளை ஏற்படுத்துவதை நிறுத்தவேண்டும்; பாகிஸ்தான் தீவிரவாத வழியிலிருந்து ஒதுங்கி, உள்நாட்டில் பொருளாதார முன்னேற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்று பேசுவதில்லை.

பாகிஸ்தானின் சிவில் சமூகம், தன்னுடைய கடமையை முற்றிலுமாக விட்டுக்கொடுத்துவிட்டது. தங்களது அரசாங்கத்தின் கையாலாகத்தனம் கண்டு அவர்கள் கொதித்து எழுவதில்லை. தெருவில் போராட்டங்கள் ஏதும் இல்லை. நாடு அன்னியச் செலாவணி இல்லாமல் போண்டியாகும் நிலையில் உள்ளது. ஆனால் மக்கள் கொந்தளிக்கவில்லை. எதிர்க்கட்சி, ஆளும்கட்சி என எல்லாமே டம்மிகளாக உள்ளன.

அரசாங்கத்தில் ஊழலைக் கட்டுப்படுத்தவேண்டும், அழிக்கவேண்டும் என்பதை எடுத்துக்கொண்டு போராட பொதுநல அமைப்புகள் அதிகம் காணப்படுவதில்லை. ராணுவம் சிவிலியன் அரசுக்கு அடங்கி நடக்கவேண்டும் என்பதை வெளிப்படையாகச் சொல்வதற்கு அங்கு யாருமே இல்லை.

தமிழ்நாட்டில் சில வருடங்களுக்குமுன் ஜெயலலிதா ஆட்சி இருக்கும்போது, “சத்தமாப் பேசாதே, ஆட்டோ வரும்” என்று மக்கள் பயம் காட்டினார்களே, அதுபோல, “சத்தமாப் பேசாதே, ராணுவ டிரக் வரும்” என்பதே மக்களின் பயமாக உள்ளது.

அத்துடன், “அரசியல்வாதிகள் என்றால் ஊழல். ராணுவம்தான் நாட்டுக்கு சரி” என்ற எண்ணம் அந்த நாட்டில் பரவியுள்ளது. என்னைக் கேட்டால், ஊழல் மிக்க ராணுவ ஜெனரலைவிட, ஊழல்மிக்க அரசியல்வாதி என்றுமே சிறந்தவன். பின்னவனை, தேர்தலில் தூக்கியாவது எறியலாம். முன்னவன் கேள்வியே கேட்காமல், உன்னைச் சுட்டுக் கொன்றுவிடுவான்.

ஆனால், பாகிஸ்தான் சிவில் சமூகத்தினரிடம் இன்று காணக்கிடைப்பது ஒருவிதமான இயலாமை மட்டுமே. எங்கள் நாட்டுக்கு யாரும் வந்து கிரிக்கெட் விளையாட மாட்டேன் என்கிறார்கள். எங்கள் நாட்டில் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு யாரும் எதிர்ப்பு காட்டமாட்டேன் என்கிறார்கள். இப்படிப் புலம்புவது மட்டும்தான் அங்கே காணக்கிடைக்கிறது.

உங்கள் நாட்டின் அடிப்படைப் பிரச்னைகளை நீங்கள்தான் தீர்க்கவேண்டும். இவ்வளவு மோசமாக பாகிஸ்தான் ஆகியுள்ளதற்குக் காரணம் பாகிஸ்தானிகள்தானே? அந்நியர்கள் கிடையாதே?

பாகிஸ்தான் சிவில் சமூகம் உடனடியாக மாறவேண்டும். போராட்டத்தில் இறங்கவேண்டும். அரசியலைச் சுத்தம் செய்ய. ராணுவத்தின் கொட்டத்தை அடக்க. உள்நாட்டு அரசியல்வாதிகளும் ராணுவத்தினரும் சூழ்ச்சிசெய்து, தீவிரவாதிகளைப் பிற நாட்டின்மீது ஏவாமல் இருக்க.

மும்பை உயிரிழப்பு அதையாவது அந்த நாட்டில் சாதித்தால் நல்லது.

Sunday, December 07, 2008

மாமல்லபுரத்தில் துர்க்கையின் உருவங்கள்

நேற்று, தக்கர் பாபா வித்யாலயா வளாகத்தில், தமிழ்ப் பாரம்பரியம் என்ற அமைப்பின் சார்பில், உமாபதி ஆசார்யா என்னும் பாரம்பரிய கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலை நிபுணர் பேசினார்.

மாதம்தோறும் முதல் சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடக்கும் கூட்டம் இது.

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்தக் காணொளி நிகழ்வில் நான் புரிந்துகொண்டதை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

***

சிற்பிகளில் நான்கு படிநிலைகள் உண்டு. ஸ்தபதி, சூத்ரகாரி, வர்தஹி, தச்சன். தொடக்க நிலையில் இருப்பவர் தச்சன். படிப்படியாக மேலே சென்று, அனைத்துக்கும் உச்சத்தில் உள்ள நிலையை அடைபவர் ஸ்தபதி.

ரிக் வேதத்திலும் அதர்வ வேதத்திலும் ஸ்தபதி என்ற சொல் தலைமையானவர் என்ற பொருளில் இடம்பெறுகிறது.

ஸ்தபதிக்கு என்ன குணங்கள், தகுதிகள் இருக்கவேண்டும்?

* ஸ்தபதி என்றால் கோவில்களைக் கட்டுபவர் என்று பொருள்.
* இவர் விஸ்வகர்மா குலத்தில் பிறந்தவராக இருக்கவேண்டும்
* உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருக்கவேண்டும்.
* வேதங்களில் விற்பன்னராக இருக்கவேண்டும்.
* சிற்ப சாத்திரங்களைக் கரைகண்டவராக இருக்கவேண்டும்.
* கணிதம், சோதிடம், வானியல், பல்வேறு தத்துவங்கள், பல்வேறு பொறியியல் துறைகள் ஆகியவற்றில் நல்ல தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும்.
* பரிவு, பாசம், பிறர்மீது கருணை போன்ற குணங்களை உடையவராக இருக்கவேண்டும்.
* உடலில் எந்த ஊனமும் இருக்கக்கூடாது.
* சூதாட்டம், குடி, பெண்ணாசை போன்ற எதுவும் கூடாது.

சிற்ப சாத்திரங்கள் எவை எவை?

* விஸ்வகர்ம பிரகாசா
* விஸ்வகர்ம தர்சனா
* மானசாரா
* மாயாமதா
* சகலாதிகாரா
* சரஸ்வதிய சித்ரகர்ம சாஸ்த்ரா
* சமராங்கன சூத்ரதாரா
* சில்பரத்னகோசா
* சில்ப ப்ரகாசா
* ஸ்ரீ காஷ்யப சில்ப சாஸ்த்ரா
* விஸ்வகர்ம வாஸ்து சாஸ்த்ரா
* கார்கேய ஆகமா
* சில்பவித்யா ரஹஸ்யோபனிஷத்
* மூலஸ்தம்ப நிர்ணயா

இவை பலவும் இன்று சமஸ்கிருத மூல நூல் வடிவில் கிடைக்கின்றன. உமாபதி, பிறருடன் சேர்ந்து ஒரு நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மேலே உள்ள பட்டியலில் ஓரிரு நூல்கள் இன்று கிடைக்காமல் இருக்கலாம்.

ஒரு சிற்பி, சிற்பத்தில் எவற்றையெல்லாம் கொண்டுவருவார்?

* ஆச்சர்ய கர்மா = வியப்பு
* சூக்ஷ்ம கர்மா = நுண்மை
* பஹுரூபா = பல வடிவம்
* சித்ரரூபா = ஒளி
* கௌசலா = மென்மை
* கர்ம கௌசலா = இயக்கம்
* யோகா = தியானம்

ஸ்தபதி எப்படி சிற்பத்தை அல்லது கட்டடத்தை வடிவமைப்பார்?

* முதலில் தியானத்தில் அமர்வார்.
* அடுத்து, பிரார்த்தனை மூலம் சமாதி நிலையை அடைவார்.
* சுயத்தை - ஆத்மனை அறியும் நிலை ஏற்படும். அப்போது கட்டட அல்லது சிற்ப வடிவம் அவருக்குப் புலனாகும்.
* புலனான வடிவத்தை அவர் பருப்பொருளில் வடிப்பார்.
* பக்தர் அந்த வடிவைக் காணும்போது, அவர் சமாதி நிலையை அடைந்து ஆத்ம தரிசனத்தைப் பெறுவார்.

தியானம் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட வழிமுறை உண்டு. விஸ்வகர்மா என்னும் பிரஜாபதி - அவரது மகன் த்வஷ்டா என்னும் விஸ்வரூபா, அவரது மகன்கள் ரிபு, விபவன், வாஜா ஆகியோரை மனத்தில் இருத்தி பிரார்த்தனை செய்யவேண்டும்.

இந்த வழிமுறைகளை உமாபதி விளக்கியபிறகு, மாமல்லபுரத்தில் காணப்படும் சில துர்க்கை சிற்பங்களைக் காண்பித்தார். அவற்றில் நேராக நிற்கும் வடிவம், சற்றே வளைந்து நிற்கும் வடிவம் ஆகியவற்றைக் காண்பித்தார். பிறகு, மஹிஷாசுரமர்த்தினி மண்டபத்தில் இருக்கும் சிற்ப முழுமையைக் காண்பித்து முழு கேன்வாஸையும் விளக்கினார்.

எப்படி திரையில் கிடைமட்டத்திலும், நெடுக்காகவும், மூலைவிட்டத்திலும் பேலன்ஸ் - சம நிலை உள்ளது என்பதை விளக்கினார். சிற்பத்துக்கு மையம் - மர்மஸ்தானம் என்பது எவ்வளவு முக்கியம் (பார்வை அங்குதான் செல்லும்) என்றும் அது திரையின் மையமாக இருக்கவேண்டியது இல்லை என்றும் விளக்கினார். முந்தைய துர்க்கை சிற்பத்தில், துர்க்கையில் தொப்புள்தான் மர்மஸ்தானம். மேலே உள்ள படத்தில் துர்க்கையின் சிங்கம்தான் மர்மஸ்தானம்.

எப்படி சிற்பத்தில், இயக்கம் காண்பிக்கப்படுகிறது - துர்க்கையின் வில் ஏந்திய கையில் கொடுக்கப்படும் அழுத்தம், மஹிஷனின் வளைந்த காலில் கொடுக்கப்படும் அழுத்தம் ஆகியவை இதைக் காண்பிக்க உதவுகின்றன. துர்க்கையும் மஹிஷனும் மற்றவர்களைவிட அளவில் பெரியதாகச் செய்யப்பட்டுள்ளனர். காரணம் குவியம் அவர்கள்மேல் இருக்கவேண்டும் என்பதால். பூதகணங்கள் பலவாகச் செய்யப்பட்டிருந்தாலும் அவை ஒவ்வொன்றும் ஒரேமாதிரியாக இல்லாமல் வித்தியாசமாக உள்ளன.

துர்க்கையிடம் மூன்றுவித ஆயுதங்களும் உள்ளன. அதாவது ஒன்று எய்தபின் மீண்டும் திரும்பி வராது. ஒன்று கையிலேயே இருக்கும். மற்றொன்று, எய்தபின் எதிராளியைக் கொன்று, பின் மீண்டும் திரும்பி எய்தவரிடமே வந்துசேர்வது.

சிற்பத்தில் சில இடங்களில் ஆழத்தை அதிகரிப்பதன்மூலம் emphasis-ஐ அதிகப்படுத்தலாம். அதனால் கவனம் அங்கே அதிகம் குவியும். சிங்கம், மஹிஷனின் கால்களுக்கு அருகில், துர்க்கைக்கு அருகில் - இங்கெல்லாம் ஆழம் அதிகமாக உள்ளது.

சில கோடுகளின் உதவியுடன் சிற்பத்தின் சீரொருமையை (symmetry) நன்கு விளக்கினார். அந்தப் படத்தை வாங்கி, இங்கே சேர்க்கிறேன்.

***

முதல் முறையாக இந்திய பாரம்பரியச் சிற்பத்தை ஒருவர் விளக்கிக் கேட்டதால் புரிந்துகொள்ள சற்றே கடினமாக இருந்தது. மேலும் நேரம் போதாமையால், கடைசியில் அவர் சற்றே வேகமாகச் செல்லவேண்டியிருந்தது.

ஆனால், மீண்டும் அவருடன் சில மணி நேரங்கள் பேச நேரம் கிடைத்தால் மேலும் நிறையப் புரிந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

இந்தத் துறை தொடர்பாக எளிமையான சில புத்தகங்கள் தேவை என்று தோன்றுகிறது.

Saturday, December 06, 2008

மும்பை - 2: Dangers of a Failed State

[பாகம் 1]

அதென்ன failed state? ஆங்கிலத்தில், Country, Nation, State ஆகியவை ஒரே பொருளைத் தரும் சொற்கள் அல்ல. சற்றே மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிக்கும் சொற்கள்.

Country என்பது புவிப்பரப்பு. நாடு. நிலமும் அதன் எல்லைகளும். அந்த எல்லைகள் மாறலாம், விரியலாம், சுருங்கலாம். Nation என்பது உணர்வால் எழுப்பப்படுவது. தேசம். தேசிய உணர்வால் ஒன்றுபடுத்தப்படும் மக்கள். கலாசாரத்தால், மொழியால், இனத்தால் அல்லது இவை அனைத்தையும் மீறிய ஏதோ ஓர் உணர்வால் ஒன்றுபட்ட அல்லது ஒன்றுபடுத்தப்பட்ட மக்கள் குழுமம்.

அப்படியென்றால் State (அல்லது Nation State) என்பது என்ன? அரசியல் அமைப்பு கொண்ட, இறையாண்மை கொண்ட, ஆட்சி அதிகாரம் கொண்ட, குறிப்பிட்ட புவிப்பரப்பை - நாட்டை - ஆளும் பல்வேறு அங்கங்கள் கொண்ட, குறிப்பிட்ட செயலுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் குறிப்பிட்ட தலைமையைக் கொண்ட ஓர் அமைப்பு. அரசாங்கம் என்று குறிப்பிடலாம். அரசாங்கம் என்பது நிர்வாக அமைப்பு, முப்படைகள், பாரா-மிலிட்டரி, காவல்துறை, உளவுத்துறைகள், நீதிமன்றம், சுங்கம், வரி அமைப்பு என ஒன்றுவிடாமல் அனைத்தையும் சேர்த்தது.

பிரிட்டன் என்னும் நாடு மூன்று தேசிய இனங்களைக் கொண்டதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மக்கள் தனித்தனி தேசியக் கொடிகளை வைத்துள்ளனர். சர்வதேச விளையாட்டுகளில் தனித்தனி அணிகளை அனுப்புகின்றனர். ஒலிம்பிக்ஸ் போட்டியில் சேர்ந்த ஒரே அணியை அனுப்புகின்றனர். ஆனால் இவர்களுக்கு ஒரேயோர் அரசாங்கம்தான் உள்ளது.

பாலஸ்தீன மக்கள், ஒரு தேசமாக உணர்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு என்று தனி நாடு இப்போதைக்குக் கிடையாது. போராட்டம் செய்யும் ஈழத்தமிழர்கள், தங்களைத் தனி தேசமாக நினைக்கிறார்கள். இன்னும் தனி நாடு கிடைக்கவில்லை.

பாகிஸ்தான் ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பை உடையது. ஆனால் அங்கு வாழும் மக்களுக்கு ஒருங்கமைந்த தேசிய உணர்வு இருக்கிறதா என்பது சந்தேகமே. அத்துடன் பாகிஸ்தான் சுதந்தரம் பெற்ற அன்றிலிருந்தே இன்றுவரை ஒழுங்காக அமையாத அரசாங்கத்தால், அந்த நாடு எப்போதுமே கொந்தளிப்பில் இருந்துவருகிறது. முஸ்லிம்கள் என்ற ஒரு காரணத்தால் அவர்களுக்கு இடையில் வலுவான தேசிய உணர்வு ஏதும் இல்லை. பஞ்சாபிகள், சிந்திகள், முஹாஜிர்கள் (இந்தியாவிலிருந்து சென்ற உர்தூ பேசுபவர்கள்), பலூச்கள், பஷ்டூன்கள் என்று பிரிந்திருக்கும் இவர்களை இணைப்பது ஒன்றுதான். இந்திய எதிர்ப்பு.

இதுகூட அனைத்து பாகிஸ்தானிகளுக்கும் உள்ளது என்று சொல்லிவிடமுடியாது. எனக்கு பாகிஸ்தானில் பல நண்பர்கள் உள்ளனர். பாகிஸ்தானில் சில நாள்கள் இருந்து, பலரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இருந்தபோது, பாகிஸ்தானியர்களைச் சந்தித்து நிறையப் பேசியுள்ளேன்.

ஆனால், பெரும்பான்மை பாகிஸ்தான் மக்களுக்கு இந்திய எதிர்ப்பு உணர்வு இருக்கவேண்டும் என்பதில்லை. சிலருக்கு இருந்தாலே போதும். அரசியல்வாதிகள், ராணுவ அதிகாரிகள், உளவுத்துறையினர் - இவர்களில் 10 சதவிகிதத்தினருக்கு இந்திய வெறுப்பு இருந்தால் போதும். இவர்களுடன் தீவிரவாத முல்லாக்கள், வேலையில்லாமல் ஏழைமையில் வாடுபவர்கள், காஷ்மீர் போராளிகள் ஆகியோரைச் சேர்த்தால், பயங்கரமான காக்டெயில் உருவாகிறது.

சரி, இதுமட்டும் போதுமா? மேலும் தேவை, தோல்வியுற்ற அரசாங்கம்.

தோல்வியுற்ற அரசாங்கம்தான் தேவை என்றில்லை. பனிப்போர் காலத்தில் அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகியவையும் வேறு பல அரசாங்கங்களும், ஒருவர் மற்றவருக்கு இதைத் தாராளமாகச் செய்துள்ளன. ஆனால், இப்போது, பனிப்போர் காலம் முடிந்துவிட்டது. 9/11-க்குப் பிந்தைய காலகட்டம் இது. ஓர் அரசாங்கமே வெளிப்படையாக அடுத்த நாட்டில் பயங்கரவாதச் செயல்களைச் செய்வதை பிற நாடுகளும் ஐ.நா அமைப்பும் ஏற்காது. சாட்சியம் கிடைத்தால், அதனால், பயங்கரவாதச் செயல்களைத் தூண்டிவிட்ட நாட்டுக்கு பலத்த பின்னடைவு ஏற்படும்.

அப்படியும், பாகிஸ்தானியர்களின் கை மும்பை தாக்குதலில் இருப்பதற்குக் காரணம் என்ன?

பாகிஸ்தானில் வலுவான அரசாங்கம் கிடையாது. ஏன் இந்தியா போன்ற, ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசாங்க அமைப்புகூடக் கிடையாது. அரசாங்கம், பல்வேறு அமைப்புகளைத் தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை. அதனால்தான் பாகிஸ்தானின் அரசாங்கத்தைத் தோல்வியுற்ற அரசாங்க அமைப்பு என்கிறோம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகம், ராணுவம், உளவுத்துறை, பயங்கரவாத அமைப்புகள் ஆகிய இந்த நான்கும் ஒன்றோடு ஒன்று உறவு கொண்டு, ஆனால் ஒன்றுக்கு ஒன்று உட்பட்டதாக இல்லாமல், தன்னிச்சையாகச் செயல்படும் அமைப்புகளாக உள்ளன.

ராணுவம், சட்டப்படி சிவிலியன் நிர்வாகத்தின்கீழ் வருகிறது. ஆனால் எந்த நேரமும் ராணுவம் சிவிலியன் நிர்வாகத்தை டிஸ்மிஸ் செய்து, ஆட்சியைப் பிடிக்கலாம். உளவுத்துறை, சிவிலியன் நிர்வாகத்தின்கீழ் இல்லாமல், ராணுவத்தின்கீழ் வருகிறது. ஆனால் உளவுத்துறை தன்னிச்சைப்படி, தனக்கு வேண்டிய பயங்கரவாதிகளை வளர்க்கிறது. பயங்கரவாதிகள், உளவுத்துறையிடமிருந்து பணம், ஆயுதம், பயிற்சிகளைப் பெறுகிறார்கள். அதே நேரம் தன்னிச்சையாக இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். கட்டுப்படுத்தமுடியாத அரக்கர்களாக விளங்குகிறார்கள்.

இந்தியாமீதான தாக்குதல் என்னும்போது, ஒருவர் மற்றவரைக் கலந்துகொள்ளாமலேயே தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். இதன் விளைவுகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமலேயே. கார்கில் போர் நடந்தபோது, முஷரஃப்பின் பாகிஸ்தான் ராணுவம் சிவிலியன் நிர்வாகத்திடம் சிறிதும் கலந்துகொள்ளாமலேயே இதனைச் செய்திருந்தது. அதேபோல ஐ.எஸ்.ஐயின் பல செயல்கள், பாகிஸ்தான் ராணுவத்திடமோ, சிவிலியன் நிர்வாகத்திடமோ கலந்துகொள்ளாமல் செய்யப்பட்டவை. பயங்கரவாதிகளும் உளவுத்துறையின் ஆசீர்வாதத்துடன், ஆனால் அனுமதி இன்றி, இந்திய மண்ணில் கொடும் செயல்களைச் செய்கின்றனர்.

ஆனால், இதைச் சொல்லியே, non-state actors-தான் இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம் என்று ஜல்லியடித்தே, பாகிஸ்தான் அரசாங்கம், முக்கியமாக அதன் குடியரசுத் தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி, தப்பிக்க முடியாது.

பாகிஸ்தானின் சிவில் சொசைட்டி என்ன சொல்கிறது என்று அடுத்து பார்ப்போம்.

Wednesday, December 03, 2008

பிரபாத் பட்நாயக் - உலகப் பொருளாதாரச் சிக்கல்

நேற்று சென்னை, ராணி சீதை ஹாலில், ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியரும், கேரளா திட்டக் குழுவின் துணைத் தலைவரும், உலகப் பொருளாதாரச் சிக்கல் குறித்து ஐ.நா உருவாக்கியுள்ள செயல்குழுவின் ஓர் உறுப்பினருமான டாக்டர் பிரபாத் பட்நாயக், உலகப் பொருளாதாரச் சிக்கல் குறித்து உரையாற்றினார்.

அந்த உரையின் ஒலிப்பதிவு இங்கே.

Indian School of Social Sciences, Asian College of Journalism, Media Foundation ஆகியவை சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தன.

பட்நாயக் மிக அருமையாகப் பேசக்கூடியவர். இந்தப் பேச்சை தமிழில் மொழிபெயர்த்துச் சொல்ல ஏற்பாடு செய்திருந்தவருக்கு உடல் நிலை சரியில்லாததால் அவர் வரவில்லை. தமிழில் சுருக்கமான விளக்கம் கொடுக்கப்பட்டபோது நான் கிளம்பிவிட்டேன். அதனால் இந்தப் பேச்சின் சாரம் முழுமையாக வெளியானதா என்று சொல்லமுடியாது. தொடர்ந்து கேள்வி-பதில்கள் இருந்தன. அதற்கும் நான் இருக்கவில்லை.

கேய்னீசியன் பொருளாதாரம், குமிழும் வெடித்தலும் தொடர்ந்து நடக்கும், சர்வதேச நிதியால் இழுத்துச் செல்லப்படும் முதலியல் வளர்ச்சி, இப்போதைய உலகப் பொருளாதாரச் சிக்கலை எதிர்கொள்வது எப்படி - புஷ் சொல்வது போல சும்மா இருப்பதா, அல்லது 20-25 நாடுகள் ஒருங்கிணைந்து, தங்களது நிதிப் பற்றாக்குறையை அதிகரித்து, செலவு செய்வதா? அப்படிச் செய்தால் போதுமா? இதுபோன்ற பல கேள்விகளுக்கு இடதுசாரிப் பொருளியல் வாதங்களை அழகாக எடுத்து வைத்தார்.

Tuesday, December 02, 2008

ஒபாமா, பராக்!புத்தகத்தை இணையத்தில் வாங்க

அருன் ஷோரி - பயங்கரவாதம் பற்றி

நேற்று விஜில் சார்பில் சென்னையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவரும், முன்னாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியருமான அருன் ஷோரி கலந்துகொண்டு பேசினார். விஜில் அமைப்பின் கல்யாணராமன், தினமணி ஆசிரியர் வைத்யநாதன் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினர்.

கல்யாணராமன் - சரஸ்வதி ஆறு, சேதுசமுத்திரம் ஆகியவை தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொண்டுவருபவர். தெற்காசியா என்பது இந்திய கலாசாரம் பரவியுள்ள பகுதி. இந்தப் பகுதியின் மக்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து இயங்கவேண்டும் என்ற தனது கருத்தை வெளியிட்டார். தினமணி ஆசிரியர் வைத்யநாதன் ஏன் பேசினார் என்று தெரியவில்லை. தமிழ்ல் பேசியிருக்கலாம். ஆங்கிலத்தில்தான் பேசுவேன் என்று அடம்பிடித்து, எதையோ சொன்னார்.

கடைசியாக அருன் ஷோரி பேசினார். அந்தப் பேச்சின் ஒலிப்பதிவை இங்கே கொடுத்துள்ளேன்.

அருன் ஷோரியின் வாதம்:

* காங்கிரஸ் அரசு கையாலாகாத அரசு.

* ஷிவ்ராஜ் பாடிலுக்கும் மன்மோகன் சிங்குக்கும் கடல் வழியாகத் தாக்குதல் நடக்கும் என்று தெரியும். இதைப் பல இடங்களில் பேசியுள்ளனர். ஆனால் தற்காப்பு நடவடிக்கைகள் எதையும் செய்யவில்லை.

* பாகிஸ்தான், இஸ்லாத்தால் ஒன்றுபட்ட தேசமல்ல. இந்திய எதிர்ப்பால் ஒன்றுபட்ட தேசம்.

* லஷ்கார்-ஈ-தோய்பா, வெளிப்படையாகவே பாகிஸ்தானில் இயங்கிவருகிறது. இஸ்லாமாபாதுக்குப் பக்கத்தில் 300 ஏக்கர் நிலத்தில் அதன் அலுவலகம் உள்ளது. “அரசமைப்புக்கு வெளியே உள்ளவர்கள்” இந்தக் குற்றத்தைச் செய்திருக்கலாம் என்று சொல்வது அபத்தம்.

* பாகிஸ்தானின் உள்நாட்டடுப் பிரச்னைகளால் காஷ்மீரில் வன்முறை குறைந்துள்ளது. இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? பாகிஸ்தானில் உள்நாட்டுப் பிரச்னைகளை அதிகரிக்குமாறு செய்யவேண்டும். பலூசிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு தரவேண்டும். ஆஃப்கன்ஸ்தான் - பஷ்டூன் பழங்குனியினருக்கு ஆதரவு தரவேண்டும். நரசிம்மராவ் பாராட்டப்படவேண்டியவர். அவர் வடக்குக் கூட்டணிப் படையினருக்குக் கொடுத்த ஆதரவால்தான் தாலிபன்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

* இந்தியாவைச் சுற்றி ஆறு “failed states” உள்ளன. (அதாவது பாகிஸ்தான், ஆஃப்கனிஸ்தான், பங்களாதேசம், நேபாளம், மையான்மார், இலங்கை?)

* பாகிஸ்தானைக்கூட இந்தியாவால் சமாளித்துவிட முடியும். ஆனால் சீனா இந்தியாவை நசுக்கப் பார்க்கிறது. சீனா இந்தியாவை “நண்டில் ஒரு கொடுக்கு” என்று வர்ணிக்கிறது. அமெரிக்கா என்ற நண்டின் கொடுக்குகள் - இந்தியா, தைவான், ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா போன்றவையாம்.

* சீனா மையான்மாருக்கு வேண்டிய ஆயுதங்களைக் கொடுத்து, அந்த நாட்டைத் தன் பிடியில் வைத்துள்ளது. பங்களாதேசத்துடன் ராணுவ ஒப்பந்தம் ஒன்றைச் செய்து, சிட்டகாங்கில் கப்பல் தளம் அமைக்கிறது. பாகிஸ்தானில் க்வத்தார் என்ற இடத்தில் கப்பல் தளத்தை அமைக்கிறது. திபெத்தில் ராணுவத்தைக் குழுமியுள்ளது. அருணாசலப் பிரதேசத்தைத் தனது என்கிறது. இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, அடுத்த நாள் முதலாக அந்த ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து ஷரத்துகளையும் மறுதலித்துள்ளது.

* மக்கள் தேசப்பற்று உள்ளவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும். அந்த வாய்ப்பு அவர்களுக்கு இப்பொது கிடைக்க உள்ளது.

* தீவிரவாதிகளுக்கு எதிராகக் கடுமையான சட்டதிட்டங்கள் வேண்டும். 1990களில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இன்னமும் தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளனர். 2001 நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டவருக்கு இன்னமும் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை.

Monday, December 01, 2008

மும்பை - 1: Audacity of Terror

இதுநாள் வரை நாம் பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஆட்பட்டுள்ளோம். நகர பயங்கரவாதத்தில் பெரும்பாலும் நாம் கண்டது, மறைவிடங்களில் வைக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் குண்டுகள். இவை RDX-ல் ஆனவை என்றால் கடும் சேதம் இருக்கும். உள்ளூர் வெடிமருந்து என்றால் சேதம் குறைவு. கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்கள் என்றால் சேதம் அதிகம். உதாரணம்: மும்பை ரயில். கூட்டம் இல்லாத இடங்கள் என்றால் உயிர்ச்சேதம் குறைவு.

கலவரம் மிகுந்த பூமியான காஷ்மீர், அசோம், முன்னாள்களில் பஞ்சாப் ஆகிய இடங்களில்தான் கைகளில் துப்பாக்கியுடனும் கிரெனேடுகளுடனும் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுப்பார்கள். அழிவை ஏற்படுத்தியபின்னர், ஓடி ஒளிவார்கள், அல்லது பாதுகாப்புப் படையினரால் கொல்லப்படுவார்கள் அல்லது கைது செய்யப்படுவார்கள். இரு பக்கமும் சேதம். இடையில் மாட்டிய மக்கள் பலர் மடிவார்கள்.

28 டிசம்பர் 2005 அன்று, பெங்களூரு ஐ.ஐ.எஸ்சியில் நடந்த அறிவியல் மாநாட்டின்போது, நான்கைந்து பேர் உள்ளே நுழைந்து சுட்டதில் ஐஐடி டெல்லி பேராசிரியர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் லஷ்கர்-ஈ-தோய்பா - சிமி பெயர்கள் அடிபட்டன. அதற்கு சில மாதங்கள் முன்பு, 5 ஜூலை 2005 அன்று அயோத்தியின் சர்ச்சைக்குரிய ராமஜன்மபூமி தலத்துக்கு அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கித் தாக்குதலில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்டனர்.

இதற்குமுன் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் அது 2001, நாடாளுமன்றத்தின் மீதான துப்பாக்கித் தாக்குதல். அது நாடாளுமன்றம் என்பதால் கடுமையான பாதுகாப்பு இருந்ததால், படையினரால், உறுப்பினர்கள் யாருக்கும் எந்த அபாயமும் இன்றிப் போரிட்டு எதிரிகளைக் கொல்ல முடிந்தது.

அந்த வகையில், 26-28 நவம்பர் 2008 தாக்குதல்கள் மிக பயங்கரமானவை. இவை படையெடுப்புக்குச் சமானம். கப்பல்கள், படகுகளில் சர்வ சாதாரணமாக வந்து, வழியில் தென்படும் அப்பாவிகளைக் கொன்று, ஹாலிவுட் சினிமாக்களில் காண்பிப்பதுபோல, வாயில் சுயிங்கம் மென்றபடி, சில இளைஞர்கள் எந்தவிதப் பதற்றமும் இன்றி, குறிப்பிட்ட இலக்குகளைக் கைப்பற்றி, வரைமுறையின்றி சுட்டு, கிரெனேடுகளை வீசி, பிணைக்கைதிகளைத் துன்புறுத்தி, பின் கொன்றுள்ளனர்.

குண்டு வைத்துவிட்டு, ஓடி ஒளியவில்லை. பாதுகாப்புப் படையினருடன் போரிட்டுள்ளனர்.

இதை வெறும் பயங்கரவாதமாக மட்டுமே கருதாமல், போராகக் கருதிச் செயல்படவேண்டும்.

எதையெடுத்தாலும் பாகிஸ்தான் என்று குற்றம் சாட்டுகிறது இந்தியா என்பது பாகிஸ்தானின் வாதம். பாகிஸ்தானின் பங்கு என்ன, பாகிஸ்தான் என்ற ‘தோல்வியுற்ற தேச அமைப்பு’ இந்தியாவுக்கு என்னென்ன ஆபத்துகளைக் கொடுக்கும் என்பதை நாம் கவனமாகப் பார்க்கவேண்டும்.

(தொடரும்)

மும்பை தாக்குதல்: ஞாநியின் கட்டுரை

மும்பை தாக்குதல் தொடர்பாக ஞாநி எழுதிய ஆங்கிலக் கட்டுரை.

முழுவதுமாக உடன்படுகிறேன். கடைசிப் பத்தி மட்டும் இங்கே, தமிழாக்கத்தில்:
30 மணி நேரமாக தொலைக்காட்சி கவரேஜைப் பார்த்தபிறகு, கடும் கோபத்திலும் விரக்தியிலும் அனைத்து செய்தி சானல்களுக்கும் ஒரு தகவலை அனுப்பினேன். அவர்கள்தானே, தொடர்ந்து, எதைப்பற்றி வேண்டுமானாலும் எங்களுக்குத் தகவல் அனுப்புங்கள் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்? நான் அனுப்பிய தகவல் இதுதான்: “இதை நான் மிகுந்த வேதனையுடன் அனுப்புகிறேன். மத்திய ரயில்வே நிலையத்தின் படுகொலையை உங்களது சானலையும் சேர்த்து அனைத்து சானல்களும் காண்பிக்கவே இல்லை. அங்குதான் உண்மையான மும்பை மக்களும் இந்தியாவின் சாதாரணர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதற்காக நீங்கள் அனைவரும் மன்னிப்பு கேட்கவேண்டும். ஐந்து நட்சத்திர மேட்டுக்குடியினர் மீதான உங்களது அதீதக் காதல், அருவருப்பைத் தருகிறது. அச்சு ஊடகங்களிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.”

எந்த சானலுமே இதைக் கண்டுகொள்ளவில்லை. ஸ்ரீனிவாசன் ஜெயின் மட்டும் பதில் அனுப்பினார். “நீங்கள் சொல்வது சரிதான். இன்று சம நிலையைக் கொண்டுவர முயற்சிக்கிறோம்.”

இந்தக் கட்டுரையை எழுதும் விநாடிவரை, தாக்குதல் ஆரம்பித்து 66 மணி நேரத்துக்குப் பிறகும், ஒன்றும் நடக்கவில்லை.
[பின்குறிப்பு: இன்று மாலை கிளம்பி நாளை - 2 டிசம்பர் 2008 - அன்று மும்பை டிரைடெண்ட் ஹோட்டலில் நடக்க இருந்த ஒரு நாள் கான்ஃபரன்ஸ் ஒன்றில் கலந்துகொள்ள நானும் சத்யாவும் செல்வதாக இருந்தது. அந்தக் கூட்டம் ரத்தாகியுள்ளது என்பதை சொல்லத் தேவையில்லை. அதன்பின் 3 டிசம்பர் 2008 காலை சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கிளம்பி பூனா செல்லவேண்டும்.

இரண்டு இடங்களையுமே தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். கூடவே தாஜ், இன்னும் சில இடங்கள். ஆனால் ரயில்வே ஸ்டேஷனில் என்ன ஆனது, யார் இறந்தார்கள், எத்தனை நேரம் தாக்குதல் நடந்தது. எதுவுமே தொலைக்காட்சிகளில் காணோம்:-( இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இல்லையில்லை, அருவருக்கத்தக்கது.]

Sunday, November 30, 2008

மும்பை பயங்கரவாதம் - ஆலோசனைக் கூட்டம்

வரும் புதன் கிழமை, 3 டிசம்பர் 2008 அன்று, மதியம் 3.00 மணிக்கு சென்னை ராயப்பேட்டை YMIA கட்டடத்தில் ஒரு கூட்டம் நடக்க உள்ளது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு பி.எஸ்.ராகவன் தலைமை தாங்குகிறார்.

மும்பையில் நடந்தது சாதாரண பயங்கரவாதம் அல்ல. இந்தியா மீதான ஒரு போர் என்றே எடுத்துக்கொள்ளவேண்டும். பாதுகாப்பு ஏஜென்சிகள் கோட்டைவிட்டுள்ளன. எதனால்? இந்த ஏஜென்சிகள் ஒழுங்காக இயங்குவதில் என்ன பிரச்னைகள் உள்ளன? பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் அரசிடம் வலுவான கொள்கைகள் இல்லை என்று தோன்றுகிறது. உலகெங்கிலும் இருந்து எதிர்வினைகள் வரும் நிலையில் இந்திய அதிகாரிகளிடமிருந்து நிசப்தமே நிலவுகிறது. ஊடகங்களின் நிலைப்பாடு, அவர்களது ஒளிபரப்பு.

முன்னாள் அரசுத்துறை நிர்வாகிகள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் பங்குபெற உள்ளனர். நான் செல்வதாக உள்ளேன். முடிந்தவரை ஒலிப்பதிவு செய்கிறேன்.

அதேபோல, நாளை (திங்கள், 1 டிசம்பர் 2008) மாலை 6.15 மணிக்கு கோடம்பாக்கம் மீனாக்ஷி கல்லூரியில் அருன் ஷோரி பேசுகிறார். இதையும் முடிந்தால் ஒலிப்பதிவு செய்து பதிவில் வெளியிடுகிறேன்.

Saturday, November 29, 2008

வானவில்

Rainbow in Gopalapuram

ஏழைக்கேத்த எள்ளுருண்டையாக எனது நோக்கியா E-51-ல் இன்று காலை பிடித்த வானவில்.

சூரியனிலிருந்து வரும் வெண்மையான ஒளி, ஒரு குறிப்பிட்ட வண்ண ஒளி கிடையாது. பல வண்ண ஒளிகள் கலந்து கொடுக்கும் வண்ணமே இந்தப் பளிச்சிடும் வெண்மை. வெள்ளை ஒளி என்ற ஒன்று கிடையவே கிடையாது.

இது சிலருக்கு அதிர்ச்சியைத் தரலாம்!

வானவில்லில் ஏழு வண்ணங்கள் தெரியும். ஆங்கிலத்தில் இதனை VIBGYOR என்று குறிப்பிடுவார்கள். வயலட், கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்ச், சிவப்பு என்பதே இந்த வண்ணங்கள். இதில் பொதுவாக, மனிதக் கண்களால் பார்க்கும்போது, வயலட் (அல்லது நீலம்), மஞ்சள், சிகப்பு என்ற மூன்று வண்ணங்கள்தான் ஓரளவுக்குத் தெளிவாகத் தெரியும்.

நியூட்டன் ஒரு கண்ணாடி முப்பட்டகத்தை (Prism) வைத்து ஒளியை இந்த ஏழு வண்ணங்களாகப் பிரித்தார். பின் அதே முப்பட்டகத்தை தலைகீழாக அருகில் வைத்து, மீண்டும் ஏழு வண்ணங்களையும் கலந்து வெள்ளை ஒளியாக்கினார்.

ஒவ்வொரு வண்ண ஒளிக்கும் வெவ்வேறு அலை நீளம், அதிர்வெண் உண்டு. (பார்க்க: ஸ்பெக்ட்ரம் தொடர்பான பதிவு. அலை நீளத்தையும் அதிர்வெண்ணையும் பெருக்கினால் கிடைப்பது மாறிலியான ஒளியின் வேகம்: விநாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்.)

வெவ்வேறு அலை நீளம் இருப்பதால்தான், ஒரு கண்ணாடிப் பட்டை வழியாக ஊடுருவிச் செல்லும்போது, ஒவ்வொரு வண்ண ஒளி அலையும் வெவ்வேறு கோணத்தில் வளைகிறது. அதனால் வெளியேறும்போது தனித்தனியாக வருகின்றன.

நீர்த் திவலைகளிலும் சூரிய ஒளி பிரதிபலிக்கும்போது வானவில் தோன்றுகிறது. ஆனால் இதற்குப் பின்னாலான அறிவியல் அவ்வளவு எளிதானதல்ல! மழை பெய்யும்போதெல்லாம் வானவில் தோன்றாது. என்றாவதுதான்.

என் மகள் தான் வானவில்லைப் பார்ப்பது இது மூன்றாவது முறை என்றாள். இதற்கு முன்பு பார்த்ததும் இங்கே வீட்டில் இருந்துதான்.

***

கோபாலபுரத்தில் உள்ளவர்கள் பாக்கியவான்கள். தெருவில் அதிகம் தண்ணீர் தேங்கவில்லை. அதனால் ஒரு விநாடிகூட மின்சாரம் வெட்டப்படவில்லை. தினசரி ஆவின் பால் கிடைத்தது. மாநகராட்சி தண்ணீர் தினமும் கிடைத்தது. ஹெரிடேஜில் காய்கறி கிடைத்தது. ஓயாமல் பெய்த மழையில் என் பெண்ணுக்கு பள்ளி விடுமுறை விட்ட ஒன்றுதான் disruption.

ஆனால், பிற சென்னை மக்கள் அவ்வளவு பாக்கியம் செய்யவில்லை. Storm water disposal சாக்கடைகள் இன்னமும் பல இடங்களில் அமைக்கப்படவில்லை. நமது மாநகரம் திட்டமிட்டு அமைக்கப்பட்டதல்ல. பிரச்னை வந்தால் அப்போது அந்த விநாடி, என்ன முடியுமோ அதைச் செய்துகொள்ளலாம் என்பதுதான் இந்தியப் பண்பாடு. அது சென்னை மழையானாலும் சரி, மும்பைத் தாக்குதலானாலும் சரி.

இதற்கு அரசுகளை மட்டும் குற்றம் சொன்னால் போதாது. அது நியாயமே கிடையாது. சிவில் சமூகமான நாம்தான் நம்முடைய அரசியல்வாதிகளிடம் பேசி, நம் அஜெண்டாவை அவர்கள்முன் வைக்கவேண்டும்.

Wednesday, November 26, 2008

புயல்

தமிழகக் கடற்கரை ஓரங்களில் புயல் அடிப்பது அல்லது பயங்காட்டுவது தொடர்ச்சியாக நடக்கும் ஒன்று. எப்போதாவது நிஜமாகவே கடுமையான புயல் கரையைக் கடக்கும்.

எனக்கு சிறு வயதில் இது தொடர்பாக நிறையவே கேள்விகள் இருந்தன. ஆனால் பள்ளிக்கூடங்களில் இதைப் பற்றியெல்லாம் உருப்படியான பதில்கள் வந்ததே கிடையாது. நான் பார்த்த மிகக் கடுமையான புயல் 1977-ல் என்று நினைக்கிறேன். அப்போது நான் இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நாகப்பட்டினம் தமிழகத்தின் பிற பாகங்களிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதம் பள்ளிக்கூடம் இல்லை என்று ஞாபகம். எங்கள் வீட்டின் ஓடுகள் அனைத்துமே பறந்துவிட்டன. அப்போது அவ்வளவாக காங்க்ரீட் வீடுகள் கிடையாது. வீட்டின் ஒரு மூலையில் என் அம்மா, அப்பா, அத்தை, நான், என் 2 வயதுத் தங்கை, வீட்டிலேயே இருந்த ஒரு பூனைக்குட்டி என அனைவரும் ஒண்டிக்கொண்டிருந்தது ஞாபகம் உள்ளது.

புயலுக்கு முன் அமைதி என்பதைப் போல, அன்றைய மாலை நிசப்தமாக இருந்தது. அன்று இரவு புயல் கரையைக் கடக்கும் என்று ஆல் இந்தியா ரேடியோ செய்தியில் சொல்லியிருந்தார்கள். கரையைக் கடந்த புயல், கடும் நாசத்தை விளைவித்திருந்தது. கரையோர மீனவர் குடிசைகள் அனைத்தும் அடித்துப் பறந்துபோய்விட்டன. ஊருக்குள் இருந்த ஓட்டு வீடுகள் அனைத்தும் மொட்டையாகக் காட்சியளித்தன. பல இடங்களில் சுவர் இடிந்து விழுந்து, முழு வீடுகள் உடைந்து நொறுங்கியிருந்தன.

தெருவெங்கும் பெரும் மரங்கள் பிய்த்து எறியப்பட்டிருந்தன. உயிர்ச்சேதம் எத்தனை என்று ஞாபகம் இல்லை. பலர் முன்னதாகவே கோயிலின் பத்திரத்தில் வந்து தங்கிவிட்டனர். அடுத்த சில நாள்கள், தாழ்வான பகுதியிலிருந்து மக்கள் எல்லோருமே கோயில்களிலும் பள்ளிகளிலும்தான் தங்கியிருந்தனர். ஒரு வாரத்துக்குப் பின்னரே மாவட்ட நிர்வாகம் கொஞ்சம் ஊருக்கு உள்ளே வந்து நிவாரணப் பணிகளை ஆரம்பிக்க முடிந்தது.

அதற்குப் பின், இன்றுவரை அதுபோன்ற கடுமையான புயல் தமிழகத்தில் அடித்ததில்லை. ஆனால், தமிழகத்தை பயமுறுத்திவிட்டு ஆந்திரா அல்லது ஒரிஸ்ஸா சென்று அங்கு நாசத்தை விளைவிக்கும்.

இன்று நாகப்பட்டினத்துக்கு அருகே வேதாரணியத்தில் கரையைக் கடக்கும் என்கிறார்கள். [பார்க்க: இந்திய வானிலை அமைப்பின் தகவல் அறிக்கை; பக்கத்தில் புயலின் இன்றைய காலை படம்]

***

வங்காள விரிகுடாவில் ‘புயல்’ என்று நாம் குறிப்பிடுவது, ஆங்கிலத்தில் Cyclone எனப்படுவது. சுழற்புயல் என்று சொல்லலாம். சூறாவளி என்று சொல்லலாம்.

நில நடுக்கோட்டுக்கு இரண்டு பக்கங்களிலும் ஒரு குறிப்பிட்ட தூரம் (23.4 டிகிரி வடக்கு அட்ச ரேகை, தெற்கு அட்ச ரேகை) வரை உள்ள பகுதிகள்தான் வெப்ப மண்டலப் பகுதிகள். இந்தியாவைப் பொருத்தமட்டில், தென்னிந்தியா மட்டும்தான் இதில் மாட்டும். வட இந்தியா, இதற்கு வெளியே உள்ளது.

தென்னிந்தியாவின் வங்காள விரிகுடாக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதாக ரேடியோவில், தொலைக்காட்சியில் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். அதென்னது?

பொதுவாக, ஒவ்வொரு நாளுமே கடல் காற்று (Sea Breeze), நிலக் காற்று (Land Breeze) என்பன வீசும். காலையில் சூரியக் கிரணங்கள் படும்போது, மண் தரை வேகமாகச் சூடாகிறது; கடல் நீர் மெதுவாகச் சூடாகிறது. (இதற்குக் காரணம் specific heat என்ற தன்மை. அதை இப்போது பார்க்கவேண்டாம்.) இதனால், தரைக்கு மேல் உள்ள காற்று வேகமாகச் சூடாகி, அதன் அடர்த்தி குறைந்து, மேலே செல்கிறது. அதனால் ஏற்படும் காற்றழுத்தக் குறைவைப் போக்க, சற்றே குளிர்ந்த காற்று கடலுக்கு மேலிருந்து நிலத்தை நோக்கி வீசுகிறது. இதுதான் கடல் காற்று.

அதேபோல மாலையில் சூரியன் மறைந்ததும், தரை வேகமாகக் குளிர்கிறது. கடல் குளிர்வதில் நேரம் எடுத்துக்கொள்கிறது. இதனால் கடலுக்கு மேல் உள்ள காற்று சூடாகி மேலே செல்கிறது. நிலத்திலிருந்து காற்று கடலை நோக்கி வீசுகிறது. நிலக் காற்று.

இது கடலோரத்தில் தினம் தினம் நடக்கும் நிகழ்வு. ஆனால் இதற்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்துக்கும் வித்தியாசங்கள் உண்டு.

அக்டோபர், நவம்பர் மாதங்களில் வங்காள விரிகுடாக் கடலில் தொடர்ச்சியாக இது ஏற்படும். சுற்றியுள்ள காற்றின் வெப்பம் குறைகிறது. ஏனெனில் இந்த மாதங்களில் வடக்கு அரைக்கோளம் சூரியனிலிருந்து தொலைவில் இருப்பதால், சூரியனின் கிரணங்கள் சாய்வாக விழுகின்றன. ஆனால் கடலின் வெப்பம் சட்டென மாறுவதில்லை. கடலில் உள்ள வெப்ப நீரோட்டம் காரணமாக வங்காள விரிகுடாக் கடலில் நீரின் வெப்பம் 26-27 டிகிரி செண்டிகிரேட் என்ற அளவிலேயே உள்ளது. இதனால், கடலில் மேல் உள்ள காற்று சூடாகிறது. அத்துடன் கடல் நீர், நீராவியாகி காற்றுடன் சேர்ந்து மேலே போகிறது.

பொதுவான கடல் காற்று, நிலக் காற்று விஷயத்தில் இந்த சூடான காற்று மேலே சென்று சூட்டை இழந்துவிடும். ஆனால் இப்போது நாம் பார்ப்பதில் மட்டும் ஒரு வித்தியாசம் ஏற்படுகிறது.

தினசரி போல் அல்லாது, அக்டோபர், நவம்பர் மாதம் கடலுக்கு மேலே செல்லும் வெப்பக் காற்றில் எக்கச்சக்கமான நீராவி இருக்கிறது. ஒரு பக்கம் காற்று மேலே சென்று குளிரத் தொடங்குகிறது. அப்போது நீராவி, தன் வெப்பத்தை விடுத்து, நீராகி மேகத்துக்குள் சென்று தங்குகிறது. நீராவி வெளிவிட்ட வெப்பம், காற்றைச் சூடாக வைத்திருக்கிறது. இதனால், மையத்தில் சூடான காற்றும் அதைச் சுற்றிக் குளிர்ந்த காற்றும் கொண்ட சுழல் உருவாகிறது. இந்தச் சுழலின் மையத்தில் காற்றழுத்தம் குறைவாக இருக்கிறது.

இதுதான் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.

இந்தத் தாழ்வு மண்டலத்தின் காற்றழுத்தம் குறைவாக இருப்பதால் அது தன்னை நோக்கி வெளியிலிருந்து காற்றை இழுக்கிறது. அப்படி உள்ளே வரும் காற்றும் நிறைய நீராவியுடன் இருந்தால், அந்த நீராவி குளிர, அதனால் மேலும் வெப்பம் வெளியாக, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் விரிவடைந்துகொண்டே போகிறது.

இதற்கிடையில் இந்த சுழல் அள்ளிக்கொண்டுபோன தண்ணீரால், கடல் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெருமழை பெய்யும். இந்த மழை கனமானதாக, இடியுடன் கூடியதாக இருக்கும். ஆங்கிலத்தில் Thunderstorm என்பார்கள்.

இங்கே கொரியாலிஸ் விசை என்பதை மேலோட்டமாகப் பார்ப்போம்.

பூமி தன் அச்சில் சுழலும்போது, அதன் மேல் நிற்கும் நாம் அனைவரும் பூமியுடன் சேர்ந்து சுழல்கிறோம். நமக்கு நாம் சுழல்வதே தெரிவதில்லை. ஆனால் பூமியில் பரப்புக்கு சற்று மேலே இருக்கும், மிதக்கும் வஸ்துக்களுக்கு என்ன ஆகும்? அவை பூமியுடன் சேர்ந்து சுழலும்; ஆனால் பூமியுடன் ஒத்தபடிக்குச் சுழலா. உதாரணமாக, நாம் பார்த்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஏற்கெனவே நீராவி சேர்ந்த காற்றினால் ஒரு சுழற்சியைக் கொண்டுள்ளது. அத்துடன் அது இடமிருந்து வலமாகவும் (clockwise) சுழலும். இந்தச் சுழற்சி, நாம் வட அரைகோளத்தில் இருப்பதால் இப்படி இடமிருந்து வலமாக இருக்கிறது. இதை உருவாக்குவது கொரியாலிஸ் விசை. இதையும் இப்போதைக்கு சாய்ஸில் விட்டுவிடுவோம்.

ஆகமொத்தம் சுழன்றுகொண்டிருக்கும் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மையம் கொண்டிருக்கும். அந்த மையத்தை cyclonic eye என்று குறிப்பிடுவர்.

இப்படிப் பெரிதான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறலாம் அல்லது பிசுபிசுத்துப் போகலாம். கடல் நீரின் வெப்பம் குறைந்தால், தாழ்வு மண்டலத்தைத் தக்க வைத்துக்கொள்ளத் தேவையான நீராவி கிடைக்காது. அப்போது தாழ்வு மண்டலம் குலைந்துபோகும். அப்படி இல்லாமல், தாழ்வு மண்டலம் மிகப் பெரியதாக ஆகிவிட்டால், அடுத்து அது நகர்ந்தபடியே வந்து கரையைக் கடக்க முயற்சி செய்யும்.

கரையைக் கடக்கும்போது சூறாவளிக் காற்று வீசும். மணிக்கு 70-150 கி.மீ வேகத்தில் இந்தக் காற்று கரையை அடிக்கும். கூடவே இந்தப் புயல் அள்ளிக்கொண்டுவரும் நீரும் மழையாகக் கொட்டும். கடலை விட்டு விலகி கரைக்குள் வந்ததால், அதைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நீராவி மேற்கொண்டு கிடைக்காமல் போய்விடும். எனவே புயல் ஓய்ந்துவிடும்.

ஆனால் அதற்குள்ளாகக் கடும் அழிவை ஏற்படுத்திவிடும்.

***

இதை எழுதிமுடிக்கும்போது சென்னை அமைதியாக, மழை கொட்டாமல், காற்றடிக்காமல் உள்ளது. இன்று மாலை சிறிது நேரம் சுழன்று சுழன்று காற்றடித்தது. நேற்றும். நேற்று முழுவதும் கடுமையான மழை.

இன்று இரவு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.